Jump to content

பால்யத்துத் திருட்டுக்களும் இன்றைய பரவசங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ எனக்கு 10 - 12 வயதிருக்கும். விடுமுறைக்கு விடுதியிலிருந்து வீடுவந்திருந்தேன்.

அம்மா எனது கையெழுத்து ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காய் தனக்குத் தெரிந்த தமிழையெல்லாம் எழுது எழுது என்றும் சொல்வதெழுதல் எழுது என்றும் பாடாய்படுத்திக்கொண்டிருந்தார். அப்பாவோ தமிழின்பால் திரும்பியும் பாராதவர். அது ஒன்று தான் அவர் தமிழுக்குச் செய்த தொண்டு. ஆங்கிலமும், கணிதமும் அவர் கரைத்துக் குடித்த பாடங்கள். என்னையும் கரைத்துக்குடி குடி என்று என் உயிரை எடுத்துக்கொண்டிருப்பார். அவரால் முடியாது போன காரியங்களில் இதுவும் ஒன்று.

விடுமுறைக்கு வந்தால் அப்பாவின் சகோதரிகளிடம் அழைத்துப்போவார்கள். நெடுந்தூரப்பயணம் அது. பஸ், ரயில், இறுதியில் அப்பய்யாவின் சோமசெட் கார் என்று அப்பயணம் முடிவுறும். இம்முறையும் அப்படியே முடிவுற்றிருந்து எங்கள் பயணம்.

அப்பாவின் தங்கைகளின் ஒருவர் ஆங்கில ஆசிரியை. அவர் சமயபாடம் கற்பித்திருக்க வேண்டியவர் தவறி ஆங்கிலம் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்பப்பா.. விடிந்து இரவு தூங்கும்வரையில் கடவுள் பக்தியில் உருகிக்கொண்டிருப்பார். என்னைக் கண்டால் அவருக்கு தனது ஆங்கலப் புலமை ‌தலைக்கேறிவிடும். ஆங்கிலத்தில் சொல்வதெழுதல் எழுதச்சொல்வார். எனது ஆங்கிலப் புலமை மட்டுப்படுத்தப்பட்டதாயே இருந்தது, இருக்கிறது. எனது ஆங்கிலப் பேரறிவைக் கண்ட அப்பாவின் அக்கா எனது அப்பாவிடம் ”தம்பி! இவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது” என்று ‌கூறுவார். அப்பாவின் எதிர்வினை எப்படியிருக்கும் என்பது அவர் அன்று பாவித்திருக்கும் பதார்த்தத்தைப் பொறுத்திருக்கும். அவர் என்னை ”கவனிக்காது” விட்டால் அவரின் அன்பு அக்கா அப்பாவுக்கு ”தம்பி! நீதான் இவனுக்கு செல்லம்கொடுத்துக் கெடுக்கிறாய்” என்பார். இதைக் கேட்டு அப்பர் சிலிர்த்தெழும்பினால் அதன் பின் என்கதி அதோகதியாகும் வரை நிறுத்தமாட்டார்.

cleardot.gif

அந்த விடுமுறையில் ஒரு நாள் மாமியுடன் நாம் ஒரு கோயிலுக்குச் செல்வதென்று முடிவாகியது. அம்மாவும் வந்தார். அப்பா வரவில்லை. அன்று அவர் வராதது தண்டவாளத்தில் நான் படுத்திருக்கும் போது ரயில் வராதது போன்ற அதிஸ்டம் என்றே நினைக்கிறேன்.

அப்பாவின் இரு தங்கையர், அக்கா, அவரின் மகள், அம்மாவும், தம்பியும், நானும் கோயிலுக்குப் புறப்பட்டோம். அது ஏறத்தாள 1 -2 மணி நேரத்துப் பயணம். பஸ்ஸில் ஏறியபின் அம்மாவினருகே குந்திக்கொண்டேன். தம்பியிடம் இருந்து யன்னலோரத்தையும் கைப்பற்றிக்கொண்டேன். எவ்வளவு நேரம் தான் ஒரு டெக்னீஷியன் புதினம் பார்ப்பான். எனவே கையில் பட்டதையெல்லாம் நோண்டிக்கொண்டிருந்தேன்.

அந் நாட்களில் இருக்கைக்கு அருகில் ஒரு மின்சாரவிளக்கு இருந்ததாகவே நினைவில் இருக்கிறது. அவ்விளக்கினைச் சுற்றி ஒரு கம்பி வலை இருந்தது. அவ்வலையினை இரு ஆணிகளைக் கொண்டு பொருத்தியிருந்தார்கள். அவற்றில் ஒரு ஆணி வெளியே வந்திருந்து. மெதுவாய் இழுத்தேன். அசைந்தது. சற்றுப்பலமாய் இழுத்தேன் கழன்றுவந்தது. கம்பி‌வலையை அகற்றி மின்குமிழைக் களற்றி எடுத்தேன். அம்மா தூங்கிக்கொண்டிருந்தார். ஆங்கில ஆசிரியையோ பஸ்ஸின் முகட்டைப் பாத்தபடியே குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார். மின்குமிழை மெதுவாய்க் களற்றியெடுத்து காற்சட்டை பையினுள் வைத்துக்கொண்டேன்.

பயணம் முடிவுற்றதும் அம்மாவும், அப்பாவின் அருமை சகோதரிகளும் தூக்கம் கலைந்து எழும்பி எம்மை இழுத்துக்கொண்டு இறங்கினார்கள். கோயிலுக்குச் சென்று தேவைக்கு அதிகமாகவே தேவாரம் பாடியபடியே மாமி நடந்துகொண்டிருந்தார். அம்மா, ஏனைய மாமிமார் என்று ஒரு நீண்ட வரிசை மாமிக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தது. நான் கடைசியாக வந்துகொண்டிருந்தேன். அந்த மின்குமிழ் என்து முழுக்கவனத்தையும் ஈர்த்திருக்க அதை கையில் வைத்துப்பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தேன். அந்த மின்குமிழை வீட்டில் பூட்டி அது எப்படி ஒளிர்கிறது என்று கற்பனையில் பார்த்தபடியே நடந்துகொண்டிருந்தேன். திடீர் என்று பல்ப் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. நிமிர்ந்து பார்த்தேன். அருகில் அப்பாவின் அழகிய ராட்சசி நின்றுகொண்டிருந்தார். அவரருகில் அப்பாவின் அன்புச் சகோதரி (அப்பாவின் அக்கா).

அம்மா ”இதை எங்கயடா எடுத்தனீ ?”என்றார்

நானாவது பதில் சொல்வதாவது என்பது போல் வாயை திறக்காதிருந்தேன்.

அம்மா குரலை உயர்த்தினார். (எனக்குள் சிரித்துக்கொண்டேன்)

அப்பாவிடம் சொல்லுவேன் என்றார் (சொல்லவே மாட்டார் என்று தெரியுமாதலால் அமைதியாயிருந்தேன்)

அப்போது தான் அப்பாவின் அக்கா தனது கடைசி ஆயுதத்தை எடுத்தார். நீ இப்ப சொல்லாவிட்டால் அப்பாவிடம் சொல்வேன் என்றார். இனியும் மெளனம் காப்பது உயிருக்கு ஆபத்து என்பதால் ”பஸ்ஸில் இருந்து களட்டினேன்” என்றேன். அம்மா அதிர்ந்துவிட்டார். மாமியோ ”டேய் உன்ட கொப்பன் ஒரு போலீஸ், நீ களவெடுக்கிறியோடா” என்றார். அப்பாவிடம் சொல்வதாகவும் கூறியதனால் எனது உடல் மெதுவாக ஆட்டம்காணத் தொடங்கியிருந்தது.

கோயிலில் இருந்து பஸ் நிலையத்துக்கு வந்ததும் அம்மா என்னை அழைத்துக்கொண்டு பேருந்துநிலயத்தின் காரியாலயத்திற்கு அழைத்துப்போனார். மின்குமிழைக் கையில் தந்து அங்கிருந்த ஒரு அதிகாரியை காண்பித்து அவரிடம் மின்குமிழைக் கொடுத்து களவெடுத்தற்கு மன்னிப்புக் கேள் என்று கூறிவிட்டு அங்கிருந்த கதிரையில் உட்கார்ந்துகொண்டார்.

நிமிர்ந்து அந்த அதிகாரியைப் பார்த்தேன். கறுப்பு நிறமான யானைக்கு காக்கி உடை அணிவித்தது போன்று கதிரையையும் அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரின் மீசை அவரைவிடப் பெரிதாகவிருந்தது. வெற்றிலை சப்பியபடியே எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.

கொடுக்காவிட்டால் அப்பாவிடம் அடியுதை, கொடுத்தால் இம்மனிதர் என்ன செய்வாரோ என்று தெரியாததால் முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு அம்மாவைப் பார்த்தேன். அதிகாரியிடம் போ என்று கையைநீட்டிக்காட்டினார். அழுதேன். அம்மா மசியவில்லை. இப்படியே நேரம் சென்றுகொண்டிருந்தது. இறுதியில் அம்மா என்னை அழைத்துப் போனார், காக்கிச்சட்டை யானையிடம்.

அவரும் அம்மாவின் வாக்குமூலத்தை கேட்டபின் என்னை நோக்கி கையை நீட்டினார். எனக்கேதோ தும்பிக்கையொன்று நீண்டுவந்தது போலிருந்தது. மின் குமிழ் கைமாறியது. என்னை நிமிர்ந்து பார்த்தார். போலீசுடன் தொடர்பு கொள்ளப் போகிறேன் என்றார். நான் அழுதபடியே அம்மாவை கட்டிக்கொண்டேன்.

களவு கூடாது என்று அறிவுரை கூறி, அம்மாவைப் பாராட்டி அனுப்பினார். வெளியில் அப்பாவின் சகோதரி தங்கள் பரம்பரையிலே கள்ளன் இல்லை என்றும், பரம்பரையின் மானம் கப்பலேறிவிட்டது என்றும் புலம்பிக்கொண்டிருந்தார்.

எனது தம்பியின் கையிலும், மச்சாளின் கையிலும் ஐஸ்கிறீம் இருந்தது. அது எனது மனநிலையை மிகவும் பாதித்தது. கௌரவத்துக்கும் ஏற்றதாயிருக்கவில்லை. அம்மாவிடம் அடம்பிடித்து ஐஸ்கிறீம் கேட்டேன். இல்லை என்றார். அழுது அழிச்சாட்டியம் பண்ணினேன். வாங்கித்தராவிட்டால் வீட்டிற்கு வரமாட்டேன் என்று அறிக்கை விட்டேன். எனது அரசியல் அறிக்கைய‌ை அம்மா கவனத்திலேயே எடுக்கவில்லை.

பஸ் வந்ததும் எல்லோரும் ஏறி உட்கார்ந்தார்கள். நான் வெளியில் நின்றேன். அம்மா வருவார், ஜஸ்கிறீம் வாங்கித்தருவார் என்ற நம்பிக்கையில். அவர் வரவில்லை. பஸ்புறப்பட்ட போது ஏறி அம்மாவின் மடியில் குந்திக்கொண்டேன். அணைத்தபடியே இனி களவெடுக்கக்கூடாது என்றார். அப்பாவிடம் சொல்லவேண்டாம் என்று மாமியிடம் கூறும் படி கேட்டுக்கொண்டேன். அம்மா சிரித்தபடியே மாமியைப் பார்த்தார். மாமி வாயைப்பளந்தபடியே குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார். மாமியின் பற்கள் பயத்தை உண்டுபண்ணின.

வீடு வந்ததும் நான் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால் அப்பாவின் அக்காவின் கணவர் (மாமா), பின்பொருநாள் மாலை, சோமபானததின் மயக்கத்தில் ”அடேய்! எடுத்தால் பஸ் இன்ஜினை களவெடுக்கணும். பல்ப் ஒன்றுக்கும் உதவாதுடா” என்று கூறியபோதுதான் உணர்ந்தேன் எனது பிரச்சனை சர்வதேசப்பிரச்சனையாக உருவெடுத்திருப்பதை.

அன்று வீடு வந்ததும் அப்பாவின் இன்னொரு தங்கை இரகசியமாக என்னை அழைத்து ஜ்ஸ்கிறீம் வாங்கவும், சகோதரன் முறையான ஒருவருடன் படம் பார்க்கவும் பணம் தந்தார். அன்று இந்தப் பூலோகத்தில் அவர் மட்டுமே அன்பான மனிதராக இருந்தார்.

அன்றிரவு நாகம்ஸ் திடய்டரில் ஜக்கம்மா பார்த்தோம். வீடு வரும் போது அந்த கறுப்பு யானை போன்ற மனிதரை ஜக்கம்மா படத்தில் வருவது போல மரத்தில் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடவேண்டும் என்று கற்பனையோடியது.

......

அப்பாவின் அக்காளாகிய எனது புவனேஸ் மாமிக்கு இது சமர்ப்பணம்.

இன்றைய நாளும் நல்லதே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.