Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"மேஜர் இளநிலவன்"


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

''ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்." ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை.

 

இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன்.

 

 

இடுப்பில் ரவைதாங்கிக்குக் கீழே எப்போதும் கட்டப்பட்டிருக்கும் 'சறம்' ஒன்றை மட்டுமே நம்பி வன்னியின் கானகங்களுக்குள் மாதக்கணக்கில் அவன் திரிந்திருக்கிறான். விடுதலைப்போரைத் தொய்ந்துபோக விடாது மக்களைப் போராட்டத்தின்பால் அணி திரட்டிச் செல்லும் பணியில் வன்னியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவன் மிதி வண்டிப் பயணம் செய்திருக்கிறான். கஞ்சியும், கத்தரிக்காயும்தான் சாப்பாடாய் இருந்த காலத்தில் கண்டதில் எல்லாம் 'அயிற்றம்' போட்டு வயிறு நிரப்பும் போராளிகளுள் ஒருவனாய் அவனும் இருந்திருக்கிறான். எல்லாச் சோதனைகளுக்குள்ளாலும் போராட்டத்தையும் தனது ஆற்றலையும் வளர்த்துச்சென்ற ஒரு அற்புதமான போராளி அவன்.

 

வெள்ளை நிறத்தில் ஒரு வட்டமுகம் அவனுக்குச் சொந்தமானது. தலை எப்போதும் சீராக மேவி இருக்கும். அளவான உயரம். வலது கன்னத்தில் இருக்கும் சிறிய பருவைக் கையால் உருட்டி உருட்டி வாசித்தபடி யோசிக்கும்போது மட்டுமே அவனில் அமைதி குடிகொண்டிருக்கும். ஏனைய நேரங்களில் எல்லாம் அவன் கலகலப்பாகவே இருப்பான்.

 

 

154443_311740918929827_681467183_n.jpg

 

 

நிலவனின் போராட்ட வாழ்வில் பெருமளவிலான காலங்கள் புதிய போராளிகளைப் புடம்போடும் தொடக்கப் படையப் பயிற்சிக் கல்லூரிகளிலேயே கழிந்திருக்கின்றன. பல் வேறுபட்ட பணிகளை அவன் ஆற்றியிருந்தாலும் கூட முதன்மை வாய்ந்த இந்தப் பணிபற்றியே நான் அதிகம் கூறவேண்டியிருக்கிறது.

 

ஏனெனில் பயிற்சிக் கல்லூரிகளில் அன்று அவன் ஆற்றிய பணிகள் அக்காலத்தில் எமது ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு மிகவும் காத்திரமான பங்காற்றின

வன்னிப் போர்க்களம் இறுக்கமாக இருந்தது. நாளாந்தம் சராசரியாகப் பத்திற்கும் மேற்பட்ட போராளிகள் காயமடைந்தும் வீரச்சாடைந்தும் களத்தைவிட்டு அகற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் போரோ மேலும் மேலும் தீவிரம் பெற்றுக்கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் வன்னியிலிருந்த சில இலட்சம் மக்களுக்குள் இருந்து இந்தக் கள இழப்பீட்டை நிரப்பீடு செய்வது மட்டுமல்லாமல் மேலதிகமான படையணிகளையும் உருவாக்க வேண்டும். இப்படியானதொரு காலகட்டத்தில் வேகமாக இயங்கிக்கொண்டிருந்த எமது பயிற்சித் தளங்களில் குறுகிய காலங்களுக் குள்ளேயே தெளிவும், உறுதியும், வீரமும் மிக்க போர்வீரர்களை உருவாக்குவதில் நிலவன் ஆற்றிய பணி மிகவும் உன்னதமானது.

 

காடுகளுக்குள் இருக்கும் அந்த உலகம் வித்தியாசமானது. வேதனைகளுடன் கூடியதொரு இனிமையான கலவை வாழ்வு அங்கிருக்கும். தமது குடும்பங்களைவிட்டு அப்போதுதான் புறப்பட்டு வந்திருந்த போராளிகள் தமது வாழ்வில் சந்திக்கும் மிகவும் கடினமான கணங்களை அந்தக் கானக உலகத்துள்தான் உணருவார்கள்.


திடீரென நினைவில் தோன்றும் தனது அன்பைக் கொட்டி வைத்திருந்த அம்மாவை, அழுது கண்ணீர் வடிப்பதுபோல் தோன்றும் தனது கம்பீரமான அப்பாவை, தன் பிரிவால் துடித்துப்போயிருக்கும் சகோதரர்களை, நண்பர்களோடு கூடித்திரிந்த வாழ்வை என அப்போது தான் பிரிந்து வந்தவற்றின் நினைவுகளால் ஒவ்வொருவரும் வேதனையுற்றிருப்பர். தாம் பிரிந்தவற்றிற்கும் புதிதாக வகுத்துக்கொண்ட இலட்சியத்திற்கும் இடையே அவர்கள் அப்போதும் போராடிக்கொண்டே இருப்பார்கள். அத்தகையதொரு காலப்பகுதியைக் கடப்பதற்கு, அந்தக் கணங்களில் நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு அருகிருந்து துணை நின்றிருக்கிறான் நிலவன்.


பயிற்சித் தளங்களில் பயிற்சி ஆசிரியனாய் மட்டுமல்லாது பயிற்சியாளனாய், ஒரு விளையாட்டு வீரனாய், சமையலாளனாய், கலைஞனாய், தொழில்நுட்ப வல்லுனனாய், போராளிகளின் அறிவுத் தேடலுக்குத் தீனி போடக்கூடிய நூலகமாய்... என எல்லா ஆளுமைகளும் நிறைந்த கவர்ச்சிகரமாக ஒரு ஆசிரியன் அவன்.


அவனது அந்த அற்புதமான பணியாற்றலுக்கு அவனின் அடிப்படை இயல்புகளும் ஒரு காரணமாய் இருந்தது. நிலவனின் குடும்பத்தில் அவன் மூத்தபிள்ளை. ஏனையவர்கள் மூவரும் பெண்கள். இவன் வீட்டிலிருந்த காலங்களிலேயே தங்கைகள் இருவர் போராடப் புறப்பட்டுவிட்டார்கள். இவையெல்லாம் அவனுள் ஒரு ஆழமான பொறுப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததுடன் கடுமையான அன்பு வலைக்குள் இருந்த அவனை ஏனையவர்கள் மீதும் அன்பு செலுத்தும் ஒரு மனிதனாகவும் ஆக்கி இருந்தது.

 

திருகோணமலையிலிருந்து தமிழீழத்தின் பெரும்பாலான இடங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்த குடும்பம் அவனுடையது. அயல்நாடான இந்தியாவரை கூட அவர்கள் இடம்பெயர வேண்டியிருந்தது. இந்த வாழ்வு மூலமும் அவன் பெற்றிருந்த சமூக அறிவும் விரிந்த பார்வையை அவனுள் வளர்த்திருந்தது. எல்லா இன்னல்களுக்குள்ளும் தம் ஒரே மகனைப் படிப்பித்து ஆளாக்கவேண்டும் என அவனது பெற்றோர்கள் எடுத்த முயற்சியால் அவன் சிறந்த கல்வியறிவைப் பெற்றிருந்தான். அவனது குடும்பத்திற்கென இயல்பாகவே இருந்த சமூக ஈடுபாடும் வாசிப்புப் பழக்கமும் கூட இவனுள் நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன. பரந்த அரசியல், அறிவியல் அனுபவம் அவனுள் இருந்தது.


நிலவனின் ஆசிரியப்பணி தனியே பயிற்சி முகாம்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு போராளி புதிதாக இணைந்த குறுகிய நாட்களில் இருந்து அவன் போராடும் போர்க்களத்தின் முன்னணி நிலைவரை நிலவன் சுழன்றுகொண்டே இருப்பான். போராளிகள் குறுகிய காலத்துக்குள்ளேயே சடுதியான சூழல் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்த களச்சூழல் அவனது இந்தப் பணியை மிகமுதன்மையாக்கியது.

 

தான் உருவாக்கும் போராளிகளைத் தேடிப் பயிற்சி முகாம்களில் இருந்து வன்னியில் பரந்து விரிந்த போர்க்களங்கள் எங்கும் கால் நடையாகத் திரிவான் அந்த ஆசிரியன். அந்தக் காலத்தில் நாம் பயணிக்கும் முதன்மையான போக்குவரவு கருவியாக இருப்பது "அண்ணை வரட்டோ" என்பதுதான். வீதியால் போய்வரும் எந்த ஊர்தியையும்யும் மறித்து அப்படிக் கேட்டுக்கேட்டு போய்ச்சேருவதையே போராளிகள் அவ்வாறு பகிடியாக அழைப்பார்கள். ஆனால் வன்னியின் போர்க்களங்களுக்கு 'அந்த ஊர்தியில்' மட்டும் போய்ச்சேர முடயாது. எந்தவொரு ஊர்திப் போக்குவரத்து மற்ற பல பத்துக் கிலோமீற்றர்களைக் கடப்பது 'நடராசா'வில்தான். அத்தகைய காலங்களிலெல்லாம் ஓய்வற்று இயங்குவான் நிலவன்.


நிலவனுக்கு தான் ஆற்றும் பணியில் ஈடுபாடு அதிகம் இருந்தாலும் மனரீதியாக அடைந்த வேதனைகளும் நெருக்கடிகளும் ஏராளம். அந்தத் துன்பகரமான உணர்வுகளுக்குள் அவன் அடிக்கடி உழல்வதைப் பார்த்திருக்கிறேன். தான் வளர்த்தெடுத்த போராளிகள் மிகக் குறுகிய காலத்திலேயே களங்களில் வீழ்ந்து உயிர்விடும் வேளைகளில் எல்லாம் அவன் துன்பத்தில் துவண்டு போவான்.

 

வெறுமனே சாவுகள் தரும் வேதனைகளுக்கும் அப்பால் ஒவ்வொரு போராளியிலும் அவன் ஆழமாகக் கொண்டிருக்கும் உறவு அதை மேலும் அதிகப்படுத்தும்.

 

பல போராளிகள் தமது தனிப்பட்ட துயர்களை ஒப்புவிக்கும் இடமாக நிலவனின் நெஞ்சம் இருக்கும். அவற்றையெல்லாம உள்வாங்கி ஆறுதல்படுத்திவிட்டுத் தனியே இருந்து வதைபடும் அவனை அருகிலிருந்தவர்கள் அறிவார்கள். அப்படியான இதயம் படைத்தவனாக அவன் இருந்ததால்தான் தனது பணிக்கும் மேலதிகமாக இன்னுமொரு பணியையும் அவன் ஆற்றினான். வீரச்சாவடைந்த தனது போராளிகளின் வீடுதேடிச் சென்று அவர்களை ஆறுதல் படுத்துவதுதான் அது. அதற்காக அவனது பயணிக்கும் தூரம் இன்னுமின்னும் அதிகரித்தது.


அவனது வலிய கால்கள் சலிப்பின்றி எங்கும் நடந்து திரிந்தன. மென்மையான இதயம் வலிமையான துயர்களையெல்லாம் தாங்கியது. துப்பாக்கிகளோடு மட்டும் இயங்கும் மனிதனாக இல்லாது ஏனையவர்களின் துயரங்களைத் தாங்கும் போராளியாகவும் அவன் இருந்தான். தனது மனதில் குடிகொள்ளும் துயரங்களை அகற்றிவிடும் எந்தவொரு 'மந்திரத்தையும்' அவன் வைத்திருந்ததாக நான் அறியவில்லை. எல்லாவற்றையும் அவனது இதயம் தனக்குள் அடக்கி அடக்கிக் கொண்டே இருந்தது.

 

அதனால்தான் எங்காவது சண்டைகள் என்றால் களத்தின் முன்னணிக்குச் சென்று சமரிடும் வாய்ப்பிற்காக தனது பொறுப்பாளருடன் சண்டைபிடிப்பான். அதன்மூலம் அவன் பல வாய்ப்புக்களையும் பெற்றான்.

 

நாடோடியாக எங்கும் அலைந்து திரியும் நிலவன் முகாமுக்கு வந்துவிட்டால் அங்கிருப்பவர்களுக்கெல்லாம் குதூகலம் தான். அவன் அங்கிருந்தால் நல்ல சமையல் இருக்கும். இனிமையான சண்டைகள் இருக்கும். ஆரோக்கியமான பகிர்வுகள் இருக்கும். எல்லாவற்றையும் தரும் 'அட்சய பாத்திரம்' அவன்.


அப்போது நாங்கள் பத்துப்பேர் கற்கைநெறி ஒன்றிற்காக ஒரு முகாமில் தங்கியிருந்தோம். எங்களைப் பொறுத்தவரை நிலவன் ஒரு மூத்த சகோதரன். எல்லோரை விடவும் அவன்தான் வயதில் மூத்தவன். அறிவாலும் அனுபவத்தாலும் கூடவேதான். அப்போதெல்லாம் எமக்கு ஆறுதலாகவும், ஆலோசகனாகவும் இருந்தவன் அவன்தான்.

 

நெருக்கடியான அந்தக் காலம் உணவுக்கு மிகவும் மோசமான காலம். வாய் கொடுப்பதற்குக் கடினமான கஞ்சியுடன் தொடங்கும் உணவை மூன்று வேளையும் உண்டு முடிப்பதே பல சமயங்களில் பெரும் பாடாகி விடும். நிலவன்தான் எமக்கு உள்ளூரில் கிடைக்கும் மலிவான பொருட்களுடன் உணவுக்கு மேலதிக சுவையூட்டும் தந்திரங்களைக் கற்றுத்தந்தான். காலைக் கஞ்சிக்கு இலை குழைகளில் சம்பல் அரைத்தும், பனம் பழத்தைப் பிழிந்துவிட்டுச் சுவையூட்டியும் அந்த உணவை வயிற்றுள் இறக்க வழி சொல்லித் தந்தான். வேட்டைக்குப்போய் இறைச்சி கொண்டுவந்து அதை நாம் என்றுமே அனுபவித்திராத சுவைதரும் கறியாக்கித் தருவான். நிலவன் சமையலில் கெட்டிக்காரன் என்று அவனை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.


நிலவனின் வளர்ச்சி ஆறு ஆண்டு கால போராட்ட வாழ்வில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அனுபவத்தில் அவன் முதிர்ச்சியானதொரு நிலையை எட்டிக் கொண்டிருந்தான் நூற்றுக்கணக்கான மனித மனங்களை நெருக்கமாகக் கையாண்ட அனுபவம் அவனைப் பாரிய அளவில் வளர்த்துவிட்டிருந்தது. அவனது பொறுப்பாளரின் எதிர்கால நம்பிக்கைகளுள் ஒருவனாய் அவன் இருந்தான். அவனது முதிர்ச்சி நிலைக்கும் காலத்தின் தேவைக்கும் ஏற்ப வேறு ஒரு பணி காத்திருந்தது.

 

அது 2001ஆம் ஆண்டு காலப் பகுதி. 'ஓயாத அலைகள் - 03' முடிந்து எதிரியின் நடவடிக்கைகள் வட போர்முனையில் தீவிரம் பெற்றிருந்தன. தீச்சுவாலையின் பின்னும் ஆனையிறவு போர்முழக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அரசியல்துறையில் இருந்து போராளிகள் திரட்டப்பட்டுச் சண்டையணியொன்று தயார்படுத்தப்பட்டது. புதிய பணியொன்றைப் பொறுப்பேற்பதற்காக அப்போது தான் அரசியல்துறை பொறுப்பாளரால் அழைக்கப்பட்டிருந்த நிலவன் உடனடியாக அணியொன்றின் தலைவனாக நியமனம் பெற்று களத்திற்குச் சென்றான். எதிரியின் நடவடிக்கை விரைவிலேயே முடிந்துபோக போராளிகளை பணிகளுக்காக மீள எடுப்பதே திட்டமாக இருந்தது.


போர்க்களம் பெரும் எதிர்ச் சமருக்காகத் தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. எப்போதும் போலவே ஓய்வின்றி உழைத்தான் நிலவன். 2001.08.16 அன்று அதிகாலை. பெரும் ஆரவாரத்துடன் எறிகணைகள் எமது நிலைகளை நோக்கிச் சரமாரியாகப் பொழியப் பட்டுக்கொண்டிருந்தன. பெரும் எறிகணைச் சமர் ஒன்று எதிரிக்கும் எமக்குமிடையே மூண்டுவிட்டது. எதிரி அணிகளின் வரவை எதிர்பார்த்திருந்தனர் போராளிகள். ஆனால் சிறிது நேரத்தில் அந்த ஆரவாரம் அடங்கிப் போனது. முன்னேறும் தனது திட்டத்தை எதிரி கைவிட்டிருந்தான். எமது எல்லா வீரர்களும் உயிரோடு இருந்தார்கள், நிலவனைத் தவிர. அந்தச் செய்தி எமது முகாமிற்கு வந்தபோது எவரும் இன்றியிருந்த அந்தப் 'பேய் வீட்டில்' ஓயாத அந்த உழைப்பாளிக்காகச் சிறிது நாட்களின் முன்னர்தான் வந்திருந்த மிதிவண்டி மட்டும் அழுதுகொண்டிருந்தது.

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் இளநிலவனுக்கு, வீர வணக்கங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலவனின் நினைவுகள் என்றும் எம்மில் இருக்கும்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் இளநிலவனுக்கு, வீர வணக்கங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் இளநிலவனுக்கு வீரவணக்கங்கள்..!

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.