Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கப்டன் றோய் 22 வது வருட நினைவுகளில்....!

shanthy

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கப்டன் றோய் 22 வது வருட நினைவுகளில்....!

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Monday, December 31, 2012 comments (0)

royanna01_zpsfb2a0ab0.jpg

"ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே....இசைநெஞ்சே"  இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும்.

அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :-
'வானுயர்ந்த காட்டிடையே
நான் இருந்து பாடுகின்றேன்
வயல் வெளிகள் மீது கேட்குமா-இது
வல்லை வெளி தாண்டிப் போகுமா
வயல் வெளிகள் மீது கேட்குமா'

இந்தப்பாடல் எனக்கு அறிமுகமான காலம் இந்திய இராணுவகாலம். ஈழத்தில் இந்தியப்படைகள் ஆக்கிரமித்திருந்த காலங்களில்  விடுதலைப்புலிப் போராளிகள் ஊர்களில் ஒவ்வொரு வீடுகளின் பிள்ளைகளாகவும் பிரியமானவர்களாகவும் அவர்களைக் காப்பாற்றிய கோவில்களாகவும் பல ஊர்கள் இருந்திருக்கிறது. அத்தகையதொரு காப்பிடமாக எனது ஊரும் இருந்திருக்கிறது.

பனைமரக்கூடல்களிலும் தோட்டங்களில் பசுமைவிரித்த மறைவுகளிலும் போராளிகள் உறங்கிய காலங்களில் எங்கள் ஊருக்குள் வந்து எங்கள் ஊரின் பிள்ளையாக வாழ்ந்த கப்டன் றோய் அல்லது றோயல் என்ற மாவீரனை எங்களுக்கு ஞாபகமாய்த் தந்த பாடல் இது.

இப்பாடல் தேனிசை செல்லப்பாவின் குரலில் பாடப்பட்டிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தப்பாடல் எனக்குள் நினைவில் நிறுத்தியிருப்பது றோயண்ணாவின் குரலையே.

அது 1989 – 1990 காலப்பகுதி. இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளே ஊர்களை ஆண்டவேளை. சயிக்கிள்களில் சாரம் கட்டிய புலிகள் உலாவிய காலமது. பெரும்பாலும் இரண்டு பேராகவே சயிக்கிளில் வருகிறவர்களின் கைகளில் இன்னொரு சாரத்தால் அல்லது உரப்பையால் மூடிமறைத்தபடியிருக்கும் துப்பாக்கி. உறக்கம் மறந்த விழிகளில் தெரிகிற பசிக்களைப்பும் நித்திரைக்களைப்பும் போக நம்பிக்கையான வீடுகளில் சிலமணிகள் உறங்கிவிடுகிற அந்த உறங்காத கண்களைக் காவல் காக்கிற வீடுகளில் அவர்கள் அப்போதைய கடவுளர்கள்.

ஒரு இரவு திடீரென நாய்கள் குரைக்க எங்கள் சமாதிகோவிலடி வீடுகளில் மெல்லிய அழுகைச் சத்தங்களும் ஆரவாரமுமாக இருந்தது. அம்மம்மாவோடு ஒட்டியிருந்த என்னை விட்டுவிட்டு அம்மம்மா கதவைத் திறந்து அடுத்தவளவில் இருந்த சின்னம்மா வீட்டை எட்டிப்பார்த்தா. அதற்கடுத்த அன்ரி வீட்டிலிருந்து அன்ரியின் பிள்ளைகள் அழுவது கேட்டது. அன்ரியும் பிள்ளைகளும் சின்ன அம்மம்மாவும் பாய்களோடு சின்னம்மா வீட்டுக்குள் வந்தார்கள்.

அன்று புதிதாக வந்திருந்த போராளிகளில் 20பேர்வரையில் எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து அன்றைய இரவு அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். எப்போதுமே இறஞ்சி எதனையும் எங்கள் இனத்திடம் பெறமுடியாத நிலமை. அன்றும் அந்தப் போராளிகளின் கெஞ்சல் எதுவும் எடுபடாது போக கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குறித்த சில போராளிகள் புகுந்தார்கள்.

திடீர் திடீரென வருகிற இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவோமென்ற பயத்தில் அவர்களை ஏற்க மறுத்தவர்களின் கதைகளை உள்வாங்காமல் வெற்று நிலத்தில் படுக்கையை விரித்தார்கள்.
பின்வீட்டிலிருந்து அத்தை ஓடிவந்தா. காரணம் எங்கள் வீட்டுக்குள்ளும் 3போராளிகள். 2பேர் மலேரியாக்காச்சலோடு. அன்று பயத்தில் எல்லா வீடுகளும் சிவராத்திரி நித்திரை முளிப்பாகவே இருந்தது.

காலமை போயிடுவார்கள் என்ற நினைப்பும் போய் அத்தையின் வீட்டில் மலேரியாவோடு இருந்த போராளிகளுக்கு அன்று பகல் 11மணிவரையும் சுடுதண்ணீரும் குடுக்காமல் அத்தை விரதமிருந்தா.  அன்று காலையில் குப்பிளான் சந்திக்கு தெற்காக இந்தியப்படைகள் சுற்றிவழைத்து தேடுதலில் ஈடுபட்டார்கள். வடக்குப்பக்கம் வந்தார்களானால் எல்லா வீடுகளும் சுற்றிவழைக்கப்பட்டாலென்ற பயம் எல்லாருக்கும். தம்பியவை எப்ப போவியள் ? இதுதான் அத்தையின் தொடர் கேள்வி.

அப்போதான் உயர்ந்த மெல்லிய உருவமாக முதுகில் துப்பாக்கியைக் கொழுவியபடி வந்தார் றோயண்ணை. மலேரியாவில் இருந்த இருவருக்கும் குளிசை கொடுத்தார்.

அதற்கு மேல் அத்தை கல்லாயிருக்காமல் தேனீர் ஊற்றிக் கொடுத்து பாணும் வாங்கி வந்து குடுத்தா. இனி அவர்கள் எங்கள் பிள்ளைகள் என்ற நிலமைக்கு ஒவ்வொரு வீடும் தங்களை நம்பி இரவு அடாத்தாக புகுந்த போராளிகளை மறுநாள் உறவாக ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு றவியண்ணாவும் (மாதகல் புலனாய்வுப்பிரிவு) வந்திருந்தார். றவியண்ணா 1990இல் விபத்தில் சாவடைந்தார்.

அன்று எங்கள் வீட்டில் காலடி வைத்த  போராளி எங்களுக்கு றோயண்ணாவாகினார். பாடக்கொப்பிகளில் தனது அழகான கையெழுத்தால் பெயர் எழுதிவிடுவார்.

தியாகி திலீபன் அவர்கள் சொல்லிச் சென்ற 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்' போன்ற வசனங்கள் உட்பட பல போராளிகளின் நினைவுகள் தாங்கிய வசனங்களை ஓவியம் போல கொப்பிகளில் வரைந்து விடுவார்.

அயலில் உள்ள வீடுகளிற்கெல்லாம் போய்வருகிற நேரங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பிள்ளைகளின் கொப்பிகளின் கடைசி அல்லது கடைசிக்கு முதல் பக்கத்தில் றோயண்ணாவின் கையெழுத்தில் ஏதாவதொரு வசனமாவது இருக்கும். அந்த வசனங்கள் எல்லாமே போராளியொருவனின் நினைவாக அல்லது அவனது நினைவுக்கல்லாக றோயண்ணா கீறிய ஓவியமாகவுமே அமைந்திருக்கும்.

றோயண்ணாவின் கையெழுத்தை எனது கொப்பிகளில் பார்த்துப் பார்த்து நானாகவே அந்த அழகான கையெழுத்தின் சாயலில் எனது எழுத்தை மாற்றி எழுதப்பழகினேன். ஓரளவு றோயண்ணாவின் எழுத்தா என மற்றவர்கள் கேட்கும்படி எனது கையெழுத்தினை மாற்றிக் கொண்டேன்.

கவிதைகள் மீது ஈடுபாடு கொண்ட றோயண்ணா தனது கவிதைகளையும் கிடைக்கிற கொப்பிகளில் எல்லாம் எழுதிவிடுவார். எனது சமூகக்கல்வி , தமிழ் கொப்பிகள் றோயண்ணாவின் கவிதைகளையும் தாங்கியிருக்கிறது.

முதல் முதலில் இயக்கப்பாட்டு கேட்டது கூட றோயண்ணா கொண்டு வந்த களத்தில் கேட்கும் கானங்கள் ஒலிநாடாவில் தான். சுற்றிவர நின்ற இந்திய இராணுவத்தின் காதுகளுக்குக் கேட்காமல் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்கள் எங்கள் மனங்களில் பதியமானதும் றோயண்ணாவினால்தான்.

இப்படி எங்கள் ஊரில் வாழ்ந்த எல்லாருக்குள்ளும் றோயண்ணாவின் ஞாபகம் எங்கோவொரு மூலையில் நிச்சயம் ஒட்டியிருக்கும். இந்திய இராணுவத்தின் கண்களுக்கால் தப்பித்து றோயண்ணாவும் அவருடன் வாழ்ந்த போராளிகள் பலருக்கும் அந்த நெருக்கடியான காலத்தில் கிடைத்த அனுபவங்கள் நிறைய.
அத்தகைய ஒரு அனுபவத்தை றோயண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார்:-
குப்பிளான் சந்தியிலிருந்து ஏழாலை செல்லும் வீதியில் முதலாவதாக பெரியசங்கக்கடையின் அருகால் வடக்காகப் போகிற சொக்கர் வளவுப்பிள்ளையார் கோவிலடிக்குக் கிட்டவான வீடொன்றில் நித்தியகல்யாணி மரங்கள் அதிகமாக இருந்தது.

கோட்டார்மனைக்கால் சொக்கர்வளவுப்பிள்ளையார் பின் வீதியை அடைந்த றோயண்ணாவிற்கு அங்கே இந்திய இராணுவம் படுத்திருந்தது தெரியாது. திடீரென நிலமையை உணர்ந்த றோயண்ணாவிற்கு தப்பிக்க காப்பிடமாய் அமைந்தது அந்த வீடொன்றில் இருந்த நித்தியகல்யாணி மரமொன்றே.
கையில் இருந்த தனது ஆயுதத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை. ஏதிரி கண்டுவிட்டால் தன்னை அழித்துக் கொள்ள சயனைட்டையும் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார். எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்த இந்திய இராணுவம் திடீரென மறைந்த றோயண்ணாவையே தேடிக் கொண்டிருக்க பகைவரே நினைக்காத வகையில் தனது காப்பிடத்தை ஒரு நித்தியகல்யாணிக் கூடலுக்குள் படுத்திருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.

இராணுவம் முழுமையாக ஊரைவிட்டு புன்னாலைக்கட்டுவன் முகாமுக்குப் போய்விட்டதாக உறுதியாகி வீதியில் ஆட்கள் நகரும் வரை 6மணித்தியாலங்களுக்கு மேலாக நித்தியகல்யாணி மரத்தின் கீழ் படுத்திருந்து வெளியில் வந்த போதுதான் அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவைக் கண்டார். குடும்பத்தோடை செத்திருப்பம் தப்பீட்டம் என சொக்கர்வளவுப்பிள்ளையாரை வேண்டிய அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவுக்கு தேனிரும் உணவும்  கொடுத்து அனுப்பி வைத்தார்.

எத்தனையோ இடர்களையும் சிரமங்களையும் தாங்கிய இந்திய இராணுவ காலம் முடிவுற்ற 1990. அப்போது விடுதலைப்புலகளின் மகளீர் அணிக்கான போராளிகள் சேர்ப்பு றோயண்ணா மூலமே முதலில் எங்கள் ஊரில் தொடங்கியது. றோயண்ணாவும் அவரது தோழர்களும் இருக்கின்ற புளியடியில் வருகிற வாகனங்களில் ஏறிச்சென்ற ஏழாலை , மல்லாகம் , சுன்னாகம் இருந்தெல்லாம் இயக்கத்தில் சேர வந்த பிள்ளைகளை போராளிகளாக்கியது றோயண்ணாவின் ஆழுமையும் முயற்சியுமே.

அப்போது யாழ்நகர் பகுதி , கோண்டாவில் ,திருநெல்வேலி, நல்லூர் என விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் உருவாகியிருந்தது. திடீரென ஒருநாள் எங்கள் ஊரிலிருந்த போராளிகள் காட்டுக்குப் போகப்போவதாகவும் புதிய போராளிகள் வரப்போவதாகவும் செய்தி வந்தது. செய்தி வந்த மறுநாள் மதியம் றோயண்ணா உட்பட அங்கிருந்த அனைவரும் எங்களைவிட்டு போய்விடப்போவதாக தயாராகினார்கள். ஒவ்வொரு வீடாக போய் நன்றி சொல்லி விடைபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

'அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் உங்கள் அன்புக்கு புலிகள் நன்றி.' அன்ரி வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டு பாடியது கேட்டது. அந்தக் குரல் வேறு யாருமல்ல எங்கள் நெஞ்சங்களில் நிறைந்த றோயண்ணாவே.
எங்களைவிட்டுப் போகிற அவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்கள் போய்விடப்போகிற நேரத்தை தள்ளிப்போட முடியாது நேரம் மாலையாகியது.

அன்று எதையும் கதைக்க முடியாத மனநிலை எல்லோருக்கும். ஏதாவது எழுதித்தாங்கோ எனக் கொடுத்த கொப்பியின் பின் தாளில் இப்படித்தான் ஓவியம் போல சிவப்பு , நீல நிறங்களால் எழுதியிருந்தார்.
நான் சரியும் மண்ணில் நாளை
பூ மலர்ந்து ஆடக் கூடும்
தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம்
தேடி வந்து பாடக் கூடும்
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க் கூடுமோ?

நாளை தமிழ் ஈழ மண்ணில்
நாங்கள் அரங்கேறக் கூடும்
மாலை கொடியோடு எங்கள் மன்னன்
சபை ஏறக் கூடும்
இந்த நிலை வந்து சேருமோ-அதை
எந்தன் விழி காணக் கூடுமோ.....
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க கூடுமோ?

அடியில் அன்புடன் றோயண்ணா என தனது கையெழுத்தால் எழுதித்தந்தார். ஏற்கனவே என்னிடமிருந்த அந்தப்பாடலின் ஒலிநாடாவைத் திருப்பிக் கேட்க மறந்தாரோ தெரியாது நானும் சொல்லவில்லை. றோயண்ணாவின் ஞாபகமாய் கொடுக்காமல் வைத்துவிட்டேன்.

அவர்களை ஏற்றிப்போக வாகனம் வந்தது. றோயண்ணா போகும்போதும் எப்போதும் பாடுகிற „'வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் „'பாடலைப் பாடிக்கொண்டே வெளிக்கிட்டார். எங்களோடிருந்த உறவுகளை இழந்தது போல றோயண்ணாவும் அவரோடு கூடப்போனவர்களும் ஊரைவிட்டுப்போன பின்னர் புதியவர்கள் வந்தார்கள். ஆனால் பிரிந்து போன பழையவர்களின் ஞாபகங்களைத் தருகிறவர்களாக அதே உறவு சொல்லிய அழைப்புகளோடு....!

அவர்கள் தான் றோயண்ணா இப்போது நல்லூரடியில் ஒரு முகாமில் இருப்பதாகச் சொன்னார்கள். இந்த இடைவெளியில் சிலதடவைகள் றோயண்ணா எங்கள் ஊருக்கு வந்து போனார். பிறகு வரவேயில்லை. அதற்குள் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. 1990 யூன் 16 எனது பிறந்தநாளில் நாங்கள் மீண்டும்; இடம்பெயரத் தொடங்கினோம். எங்களோடு சிலகாலம் வரை வாழ்ந்து எங்கள் வீடுகளில் சகோதரர்களாக பிள்ளைகளாக வாழ்ந்தவர்களே எங்கள் ஊரையும் காக்கும் புனிதப்போரில் காவலரண் அமைத்து கடமையில் இருந்தார்கள்.

மீண்டும் றோயண்ணா வசாவிளான் , கட்டுவன் ,குரும்பசிட்டி பகுதிகளில் கடமைக்கு வந்திருந்தார். பலாலியிலிருந்து முன்னேறிவரும் இராணுவத்தை எதிர்த்து சண்டையிடும் களவீரனாக மாறியிருந்தார். களங்களில் நிற்கின்றவர்களின் வாழ்வும் உத்தரவாதமில்லாதது. அவர்களுக்காக சாமிகளிடம் நேத்தி வைத்து அவர்கள் வாழ செய்த பிரார்த்தனைகளை அந்தச் சாமிகள் மட்டுமே அறியும்.

இப்போது றோயண்ணா சண்டைக்காரனாக....1990 தீபாவழி நாளில் இராணுவம் பலாலியிலிருந்து பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கியது. றோயண்ணாவும் அவர்போன்ற பலநூறு போராளிகளும் இரவுபகல் பாராமல் அமைத்த தொடர் பதுங்குகுளிகளுக்கு பின்புறமாக இராணுவத்தினரின் துப்பாக்கிகள் இயங்கியது. சென்றியிருந்த போராளிகளைத் தாண்டி சில நூறுமீற்றர்கள் முன்னுக்கு வந்து உள்ளிருந்தவர்களை வளைத்ததில் பலர் காயமடைந்தார்கள் வீரச்சாவணைத்தார்கள். அத்தகைய பலருள் றோயண்ணாவும் கடும் காயமுற்று மானிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

றோய்க்கு காயமாம்....செய்தி காற்றாய் றோயண்ணாவை நேசித்த எல்லோரையும் சென்றடைந்தது. மானிப்பாய் மருத்துவமனையில் சென்று பார்த்த போது றோயண்ணா பேச்சு மூச்சின்றிக் கிடந்தார். எங்கள் முன் உலாவிய அழகன் றோயண்ணாவின் அழகிய முகம் வெளுறியிருந்தது. உயர்ந்த அந்த உருவம் என்றும் கண்ணுக்குள் நிறைகிற சிரிப்பு எல்லாம் ஒடுங்கி ஒற்றைக்கட்டிலில் விழுந்து கிடந்தது.

நாட்கள் செல்லச் செல்ல றோயண்ணா உயிர்தப்பும் நம்பிக்கையும் குறைந்து கொண்டு போனது. றோயண்ணா யாழ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது யாழ் மருத்துவமனைக்கு போராளிகளைப் பார்வையிட எல்லோரையும் புலிகள் அனுமதிப்பதில்லை. அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்தியசாலைக்கு எதிர் வீதியில் சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் பதிவு செய்தே போக முடியும். பதிவுப் பிரச்சனையால் அடிக்கடி போக முடியாது.

அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு 4தடவை றோயண்ணாவை பார்த்திருக்கிறேன். 4வது முறை போனபோது றோயண்ணாவுக்கு படுக்கைப்புண் வந்துள்ளதாகச் சொன்னார்கள். அந்த முறை றோயண்ணாவின் ஒரு அண்ணன் றோயண்ணாவை பராமரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் றோயண்ணா தங்கள் வீட்டின் கடைக்குட்டியென்றதையும் அவர்மீதான தங்கள் குடும்பத்தின் நம்பிக்கையையும் அந்த அண்ணா சொன்னார்.

வசதியான குடும்ப வாழ்வு உயர்தரம் வரையான படிப்பு மேற்கொண்ட படிப்பைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல்கலைக்கழகம் போயிருக்க வேண்டிய றோயண்ணா தாயகக்கனவோடு போராளியாகி எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கேயோ பிறந்த எங்களோடு உறவாகி அன்று பேச்சின்றி மூச்சின்றி நினைவுகள் தவறிக் கிடந்ததைப் பார்க்க அழுகைதான் வந்தது.
அம்மம்மா அந்த அண்ணாவிடம் றோயண்ணா பற்றி கதைத்துக் கொண்டிருந்தா. றோயண்ணாவின் தலைமாட்டில் நின்றபடி றோயண்ணா றோயண்ணா என அழைத்தேன். சின்ன அசைவு தெரிந்தது. ஆனால் கண்திறக்கவேயில்லை. கத்தியழ வேண்டும் போலிருந்தது. எனினும் உயிர் தப்புவாரென்றே உள் மனம் நம்பியது.

பார்வையாளர்கள் நேரம் முடிந்து எல்லோரையும் வெளியேறும்படி அறிவித்தார்கள். அந்த இடத்தைவிட்டு அசையவே முடியாதிருந்தது. அம்மம்மா வரும் வழியெங்கும் றோயண்ணா பற்றியே சொல்லிக் கொண்டு வந்தா. றோயண்ணா அதிகம் பகலில் இருப்பது எங்கள் பிள்ளையார் தேரடிதான். அந்தப் பிள்ளையார் றோயண்ணா காப்பாற்றுவாரென அம்மம்மா நம்பினா.

5வது முறையாக றோயண்ணாவை பார்க்க தோழி மேனகாவோடு ஏழாலை களவாவோடை அம்மனிற்குச் செய்த அரிச்சனை விபூதியுடன் போய் அனுமதிக்கு பதிவு செய்யக் காத்திருந்த போது அங்கே பதிவு செய்யும் போராளி சொன்னான் றோயண்ணா மேலதிக மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக. இந்தியாவிலிருந்து றோயண்ணா சுகமாகி வருவரென்ற நம்பிக்கையில் காத்திருந்தோம்.

31.12.1990 இரவு புலிகளின் குரல் இரவுச்செய்தியில் கப்டன்.றோயல் வீரமரணம் என்ற செய்தியை வாசித்தார்கள். மீண்டும் வருவாரென்ற நம்பிக்கை பொய்யாகி றோயண்ணா மாவீரனாகி.....

இதேபோலொரு 31ம் திகதி பல நூறு போராளிகள் உலாவிய எங்கள் ஊருக்குள் மறக்கப்படாமல் நினைவுகளில் இருக்கிற குறிப்பிட்ட சில மறக்க முடியாதவர்களுள் றோயண்ணாவும் ஒருவராய்....ஒவ்வொரு வருட முடிவிலும் றோயண்ணாவின் நினைவோடு முடிகிற வருடங்கள் இன்றோடு றோயண்ணாவின்  நினைவுகள் சுமந்து 22வருடங்களைக் காலம் கவுரவப்படுத்தியிருக்கிறது.

றோயைத் தெரியுமா ? உங்கடை ஊரில இருந்த பொடியன் ? அண்மையில் நண்பர் ஒருவர் கேட்டார். ஓம் ஏன் ? அந்த றோயை விரும்பின பிள்ளை இன்னும் கலியாணம் கட்டேல்ல இங்கைதான் இருக்கு போனமாதம் சந்திச்சனான் என்றார்.

அழகன் முருகனென்பார்கள் ஆனால் றோயண்ணாவின் அழகை முருகன் கூட பொறாமைப்படுவான். அத்தகைய அழகும் உயரமும் சுருள் முடியும் எல்லாரையும் கவர்கிற கதையும் ஓர் அழகனாய் எங்கள் ஊரில் உலவியவர். அந்த அழகன் பலரது நெஞ்சுக்குள் சின்னக் காதலாக அரும்பியிருந்ததை ஊரில் கேட்டிருக்கிறேன்.

இன்று றோயண்ணா இல்லாது போய் 22ஆண்டுகள் நிறைவாகிறது. ஆனால் றோயண்ணாவின் காதலை இன்றுவரை கௌரவப்படுத்தித் தனது வாழ்வை தனிமையாகக் கழிக்கிற அந்த அக்கா மீதான மதிப்பு மேலுயர்கிறது.
எங்களோடு எங்கள் ஊரோடு நினைவாகிப் போன றோயண்ணா 22வது வருட நினைவு நாளில் மீண்டும் உங்களை நினைக்கிறேன்....

வணங்குகிறேன்....காலம் தோறும் பலர் வருவார்கள் சிலர் மட்டும் காலங்கள் பல கடந்தாலும் நினைவுகளோடும் உறவுகளோடும் வாழ்வார்கள்...றோயண்ணா இன்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றும் உங்கள் முகமும் சிரிப்பும் நீங்கள் பாடுகிற வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் பாடலும் உங்கள் ஞாபகங்களைத் தந்தபடி... உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள்....உங்கள் கனவுகள் நனவாகும் கனவோடு உங்கள் நினைவுநாளில்..... உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள் றோயண்ணா.
31.12.2012

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

துயரமான நினைவுகள்......

இவர் கோமாவில் இருக்கும்போது மானிப்பாய் ஆஸ்பத்தரியில் பார்த்திருக்கிறேன். 
எனது உறவினர் ஒருவரும் காயமுற்று அதே நேரத்தில் அங்கு இருந்தார். இவர் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் வரை கோமாவில் இருந்ததாக ஞாபகம்.
 
இவரை இந்தியா கொண்டு செல்ல முயற்சிப்பதாக எனது நண்பர் ஒருவர் சொன்னார். ஏன் கொண்டு செல்லவில்லை என்பது தெரியவில்லை.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

துயர் மீட்டும் நினைவுகள்!

வீர வணக்கங்கள்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.

போராளியின் நினைவை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்த சாந்திக்கும் பாராட்டுக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

நான் சரியும் மண்ணில் நாளை
பூ மலர்ந்து ஆடக் கூடும்
தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம்
தேடி வந்து பாடக் கூடும்
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க் கூடுமோ?நாளை தமிழ் ஈழ மண்ணில்
நாங்கள் அரங்கேறக் கூடும்
மாலை கொடியோடு எங்கள் மன்னன்
சபை ஏறக் கூடும்
இந்த நிலை வந்து சேருமோ-அதை
எந்தன் விழி காணக் கூடுமோ.....
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க கூடுமோ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

...உங்கள் கனவுகள் நனவாகும் கனவோடு உங்கள் நினைவுநாளில்..... உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
நினைவு மீட்டலுக்கு மிக்க நன்றி.எனக்கும் கப்டன் றோயை தெரிந்திருந்தது.நீண்ட நாட்களுக்குப்பின் அவனை நினைக்கிறேன்.
அவனது சொந்த இடம் மயிலிட்டியாய் இருக்க வேண்டும் ( எனது ஞாபகத்தில் ). அவன் கொஞ்சகாலங்கள் யாழ் வைத்தியசாலையின் 
இயக்கம் சார்பான நிர்வாகப் பொறுப்பாளனாகவும் ( 1990 ) இருந்தான்.  பின் 
அவனது பெயரில் யாழில் ஒரு மருத்துவமுகாம்( யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் ) இயங்கிற்று.
 
இந்தப்பாடல் வரிகள் பழைய ஞாபகங்களையும் துக்கங்களையும் 
தருகின்றன 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் எல்லாம் தெரிந்தவரிட்ட ஒருக்க கேளுங்கோ. பிறகு வருவார் தகவல்கள் பிழையானவை என்டு. http://www.veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=103&cid=2569

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

சாந்தியக்கா உங்கள் நினைவுகளை பதிவாக்குவதற்கு நன்றி. தொடருங்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான இளைஞனாக இருந்தவர் றோய் அண்ணா. சாரத்துடன் திரிந்த போராளிகள் 89ல் (விடுதலைப்புலிகளின்) சீருடைக்கு மாறிய பின்பு நான் பார்த்த முதல் சீருடை அணிந்த போராளி றோய் அண்ணா.

Link to post
Share on other sites

அன்றைய நாளின் நினைவுகளுக்கு மீண்டும் நீரூற்றிய சாந்திக்கு நன்றிகள். இந்திய இராணுவப் பேய்களும், புலிகளுமான 89/89 காலங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத காலங்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

றோய்  அண்ணா வீரச்சாவடைந்து அடுத்த நாள் அவரின் படம் (ஒரு மரத்தில் சாய்ந்தபடி )ஒன்று வந்தது . இப்போதும் மனக் கண்ணில் நிற்கின்றது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

றோயண்ணாவின் நினைவுகளில் பங்கேற்ற இசைக்கலைஞன், சுண்டல் ,அகஸ்தியன் ,மருதங்கேணி ,புங்கையூரான், ஈழப்பிரின் , நந்தன் ,டாம் , புத்தன், உடையார், லியோ , டொங்கி,  பகலவன், நுணாவிலான், கந்தப்பு , நிழலி , ஜில் , அனைவருக்கும் நன்றிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

துயரமான நினைவுகளை சுமந்து எழுதியிருக்கிறீர்கள் சாந்தி. 

"அடைக்கலம்  தந்த வீடுகளே போய்வருகிறோம் நன்றி..
நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கிறோம் உங்கள் அன்புக்கு புலிகள் நன்றி.." இப்பாடலை முணுமுணுக்கும் போதே எமது இதயம் துயரில் கரைகின்றது.
வீரவணக்கங்கள்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

றோய்  அண்ணா வீரச்சாவடைந்து அடுத்த நாள் அவரின் படம் (ஒரு மரத்தில் சாய்ந்தபடி )ஒன்று வந்தது . இப்போதும் மனக் கண்ணில் நிற்கின்றது 

றோயண்ணாவின் படம் யாரிடமாவது இருந்தால் தந்துதவுங்கள்.

Link to post
Share on other sites
 • 8 months later...
 • கருத்துக்கள உறவுகள்

royanna01_zpsfb2a0ab0.jpg

எங்களது றோயண்ணா. எவ்வளவு இனிமையான காலங்கள் அவை. 22வருடங்கள் தேடித்திரிந்த றோயண்ணாவின் நிழற்படம். றோயண்ணாவின் உறவினர் ஒருவர் மூலம் நேற்று கையில் கிடைத்தது. மீண்டும் எங்கள் அண்ணாவை உயிரோடு தந்தது போல இருக்கிறது.நிழற்படம் தந்துதவிய உறவே உங்களுக்கு நன்றிகள்.

roy4_zps1e89c901.jpg

Link to post
Share on other sites
 • 2 months later...
 • 8 months later...
 • கருத்துக்கள உறவுகள்

கப்டன் றோய் 22 வது வருட நினைவுகளில்....!

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Monday, December 31, 2012 comments (0)

royanna01_zpsfb2a0ab0.jpg

"ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே....இசைநெஞ்சே"  இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும்.

அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :-

'வானுயர்ந்த காட்டிடையே

நான் இருந்து பாடுகின்றேன்

வயல் வெளிகள் மீது கேட்குமா-இது

வல்லை வெளி தாண்டிப் போகுமா

வயல் வெளிகள் மீது கேட்குமா'

இந்தப்பாடல் எனக்கு அறிமுகமான காலம் இந்திய இராணுவகாலம். ஈழத்தில் இந்தியப்படைகள் ஆக்கிரமித்திருந்த காலங்களில்  விடுதலைப்புலிப் போராளிகள் ஊர்களில் ஒவ்வொரு வீடுகளின் பிள்ளைகளாகவும் பிரியமானவர்களாகவும் அவர்களைக் காப்பாற்றிய கோவில்களாகவும் பல ஊர்கள் இருந்திருக்கிறது. அத்தகையதொரு காப்பிடமாக எனது ஊரும் இருந்திருக்கிறது.

பனைமரக்கூடல்களிலும் தோட்டங்களில் பசுமைவிரித்த மறைவுகளிலும் போராளிகள் உறங்கிய காலங்களில் எங்கள் ஊருக்குள் வந்து எங்கள் ஊரின் பிள்ளையாக வாழ்ந்த கப்டன் றோய் அல்லது றோயல் என்ற மாவீரனை எங்களுக்கு ஞாபகமாய்த் தந்த பாடல் இது.

இப்பாடல் தேனிசை செல்லப்பாவின் குரலில் பாடப்பட்டிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தப்பாடல் எனக்குள் நினைவில் நிறுத்தியிருப்பது றோயண்ணாவின் குரலையே.

அது 1989 – 1990 காலப்பகுதி. இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளே ஊர்களை ஆண்டவேளை. சயிக்கிள்களில் சாரம் கட்டிய புலிகள் உலாவிய காலமது. பெரும்பாலும் இரண்டு பேராகவே சயிக்கிளில் வருகிறவர்களின் கைகளில் இன்னொரு சாரத்தால் அல்லது உரப்பையால் மூடிமறைத்தபடியிருக்கும் துப்பாக்கி. உறக்கம் மறந்த விழிகளில் தெரிகிற பசிக்களைப்பும் நித்திரைக்களைப்பும் போக நம்பிக்கையான வீடுகளில் சிலமணிகள் உறங்கிவிடுகிற அந்த உறங்காத கண்களைக் காவல் காக்கிற வீடுகளில் அவர்கள் அப்போதைய கடவுளர்கள்.

ஒரு இரவு திடீரென நாய்கள் குரைக்க எங்கள் சமாதிகோவிலடி வீடுகளில் மெல்லிய அழுகைச் சத்தங்களும் ஆரவாரமுமாக இருந்தது. அம்மம்மாவோடு ஒட்டியிருந்த என்னை விட்டுவிட்டு அம்மம்மா கதவைத் திறந்து அடுத்தவளவில் இருந்த சின்னம்மா வீட்டை எட்டிப்பார்த்தா. அதற்கடுத்த அன்ரி வீட்டிலிருந்து அன்ரியின் பிள்ளைகள் அழுவது கேட்டது. அன்ரியும் பிள்ளைகளும் சின்ன அம்மம்மாவும் பாய்களோடு சின்னம்மா வீட்டுக்குள் வந்தார்கள்.

அன்று புதிதாக வந்திருந்த போராளிகளில் 20பேர்வரையில் எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து அன்றைய இரவு அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். எப்போதுமே இறஞ்சி எதனையும் எங்கள் இனத்திடம் பெறமுடியாத நிலமை. அன்றும் அந்தப் போராளிகளின் கெஞ்சல் எதுவும் எடுபடாது போக கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குறித்த சில போராளிகள் புகுந்தார்கள்.

திடீர் திடீரென வருகிற இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவோமென்ற பயத்தில் அவர்களை ஏற்க மறுத்தவர்களின் கதைகளை உள்வாங்காமல் வெற்று நிலத்தில் படுக்கையை விரித்தார்கள்.

பின்வீட்டிலிருந்து அத்தை ஓடிவந்தா. காரணம் எங்கள் வீட்டுக்குள்ளும் 3போராளிகள். 2பேர் மலேரியாக்காச்சலோடு. அன்று பயத்தில் எல்லா வீடுகளும் சிவராத்திரி நித்திரை முளிப்பாகவே இருந்தது.

காலமை போயிடுவார்கள் என்ற நினைப்பும் போய் அத்தையின் வீட்டில் மலேரியாவோடு இருந்த போராளிகளுக்கு அன்று பகல் 11மணிவரையும் சுடுதண்ணீரும் குடுக்காமல் அத்தை விரதமிருந்தா.  அன்று காலையில் குப்பிளான் சந்திக்கு தெற்காக இந்தியப்படைகள் சுற்றிவழைத்து தேடுதலில் ஈடுபட்டார்கள். வடக்குப்பக்கம் வந்தார்களானால் எல்லா வீடுகளும் சுற்றிவழைக்கப்பட்டாலென்ற பயம் எல்லாருக்கும். தம்பியவை எப்ப போவியள் ? இதுதான் அத்தையின் தொடர் கேள்வி.

அப்போதான் உயர்ந்த மெல்லிய உருவமாக முதுகில் துப்பாக்கியைக் கொழுவியபடி வந்தார் றோயண்ணை. மலேரியாவில் இருந்த இருவருக்கும் குளிசை கொடுத்தார்.

அதற்கு மேல் அத்தை கல்லாயிருக்காமல் தேனீர் ஊற்றிக் கொடுத்து பாணும் வாங்கி வந்து குடுத்தா. இனி அவர்கள் எங்கள் பிள்ளைகள் என்ற நிலமைக்கு ஒவ்வொரு வீடும் தங்களை நம்பி இரவு அடாத்தாக புகுந்த போராளிகளை மறுநாள் உறவாக ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு றவியண்ணாவும் (மாதகல் புலனாய்வுப்பிரிவு) வந்திருந்தார். றவியண்ணா 1990இல் விபத்தில் சாவடைந்தார்.

அன்று எங்கள் வீட்டில் காலடி வைத்த  போராளி எங்களுக்கு றோயண்ணாவாகினார். பாடக்கொப்பிகளில் தனது அழகான கையெழுத்தால் பெயர் எழுதிவிடுவார்.

தியாகி திலீபன் அவர்கள் சொல்லிச் சென்ற 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்' போன்ற வசனங்கள் உட்பட பல போராளிகளின் நினைவுகள் தாங்கிய வசனங்களை ஓவியம் போல கொப்பிகளில் வரைந்து விடுவார்.

அயலில் உள்ள வீடுகளிற்கெல்லாம் போய்வருகிற நேரங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பிள்ளைகளின் கொப்பிகளின் கடைசி அல்லது கடைசிக்கு முதல் பக்கத்தில் றோயண்ணாவின் கையெழுத்தில் ஏதாவதொரு வசனமாவது இருக்கும். அந்த வசனங்கள் எல்லாமே போராளியொருவனின் நினைவாக அல்லது அவனது நினைவுக்கல்லாக றோயண்ணா கீறிய ஓவியமாகவுமே அமைந்திருக்கும்.

றோயண்ணாவின் கையெழுத்தை எனது கொப்பிகளில் பார்த்துப் பார்த்து நானாகவே அந்த அழகான கையெழுத்தின் சாயலில் எனது எழுத்தை மாற்றி எழுதப்பழகினேன். ஓரளவு றோயண்ணாவின் எழுத்தா என மற்றவர்கள் கேட்கும்படி எனது கையெழுத்தினை மாற்றிக் கொண்டேன்.

கவிதைகள் மீது ஈடுபாடு கொண்ட றோயண்ணா தனது கவிதைகளையும் கிடைக்கிற கொப்பிகளில் எல்லாம் எழுதிவிடுவார். எனது சமூகக்கல்வி , தமிழ் கொப்பிகள் றோயண்ணாவின் கவிதைகளையும் தாங்கியிருக்கிறது.

முதல் முதலில் இயக்கப்பாட்டு கேட்டது கூட றோயண்ணா கொண்டு வந்த களத்தில் கேட்கும் கானங்கள் ஒலிநாடாவில் தான். சுற்றிவர நின்ற இந்திய இராணுவத்தின் காதுகளுக்குக் கேட்காமல் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்கள் எங்கள் மனங்களில் பதியமானதும் றோயண்ணாவினால்தான்.

இப்படி எங்கள் ஊரில் வாழ்ந்த எல்லாருக்குள்ளும் றோயண்ணாவின் ஞாபகம் எங்கோவொரு மூலையில் நிச்சயம் ஒட்டியிருக்கும். இந்திய இராணுவத்தின் கண்களுக்கால் தப்பித்து றோயண்ணாவும் அவருடன் வாழ்ந்த போராளிகள் பலருக்கும் அந்த நெருக்கடியான காலத்தில் கிடைத்த அனுபவங்கள் நிறைய.

அத்தகைய ஒரு அனுபவத்தை றோயண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார்:-

குப்பிளான் சந்தியிலிருந்து ஏழாலை செல்லும் வீதியில் முதலாவதாக பெரியசங்கக்கடையின் அருகால் வடக்காகப் போகிற சொக்கர் வளவுப்பிள்ளையார் கோவிலடிக்குக் கிட்டவான வீடொன்றில் நித்தியகல்யாணி மரங்கள் அதிகமாக இருந்தது.

கோட்டார்மனைக்கால் சொக்கர்வளவுப்பிள்ளையார் பின் வீதியை அடைந்த றோயண்ணாவிற்கு அங்கே இந்திய இராணுவம் படுத்திருந்தது தெரியாது. திடீரென நிலமையை உணர்ந்த றோயண்ணாவிற்கு தப்பிக்க காப்பிடமாய் அமைந்தது அந்த வீடொன்றில் இருந்த நித்தியகல்யாணி மரமொன்றே.

கையில் இருந்த தனது ஆயுதத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை. ஏதிரி கண்டுவிட்டால் தன்னை அழித்துக் கொள்ள சயனைட்டையும் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார். எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்த இந்திய இராணுவம் திடீரென மறைந்த றோயண்ணாவையே தேடிக் கொண்டிருக்க பகைவரே நினைக்காத வகையில் தனது காப்பிடத்தை ஒரு நித்தியகல்யாணிக் கூடலுக்குள் படுத்திருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.

இராணுவம் முழுமையாக ஊரைவிட்டு புன்னாலைக்கட்டுவன் முகாமுக்குப் போய்விட்டதாக உறுதியாகி வீதியில் ஆட்கள் நகரும் வரை 6மணித்தியாலங்களுக்கு மேலாக நித்தியகல்யாணி மரத்தின் கீழ் படுத்திருந்து வெளியில் வந்த போதுதான் அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவைக் கண்டார். குடும்பத்தோடை செத்திருப்பம் தப்பீட்டம் என சொக்கர்வளவுப்பிள்ளையாரை வேண்டிய அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவுக்கு தேனிரும் உணவும்  கொடுத்து அனுப்பி வைத்தார்.

எத்தனையோ இடர்களையும் சிரமங்களையும் தாங்கிய இந்திய இராணுவ காலம் முடிவுற்ற 1990. அப்போது விடுதலைப்புலகளின் மகளீர் அணிக்கான போராளிகள் சேர்ப்பு றோயண்ணா மூலமே முதலில் எங்கள் ஊரில் தொடங்கியது. றோயண்ணாவும் அவரது தோழர்களும் இருக்கின்ற புளியடியில் வருகிற வாகனங்களில் ஏறிச்சென்ற ஏழாலை , மல்லாகம் , சுன்னாகம் இருந்தெல்லாம் இயக்கத்தில் சேர வந்த பிள்ளைகளை போராளிகளாக்கியது றோயண்ணாவின் ஆழுமையும் முயற்சியுமே.

அப்போது யாழ்நகர் பகுதி , கோண்டாவில் ,திருநெல்வேலி, நல்லூர் என விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் உருவாகியிருந்தது. திடீரென ஒருநாள் எங்கள் ஊரிலிருந்த போராளிகள் காட்டுக்குப் போகப்போவதாகவும் புதிய போராளிகள் வரப்போவதாகவும் செய்தி வந்தது. செய்தி வந்த மறுநாள் மதியம் றோயண்ணா உட்பட அங்கிருந்த அனைவரும் எங்களைவிட்டு போய்விடப்போவதாக தயாராகினார்கள். ஒவ்வொரு வீடாக போய் நன்றி சொல்லி விடைபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

'அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் உங்கள் அன்புக்கு புலிகள் நன்றி.' அன்ரி வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டு பாடியது கேட்டது. அந்தக் குரல் வேறு யாருமல்ல எங்கள் நெஞ்சங்களில் நிறைந்த றோயண்ணாவே.

எங்களைவிட்டுப் போகிற அவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்கள் போய்விடப்போகிற நேரத்தை தள்ளிப்போட முடியாது நேரம் மாலையாகியது.

அன்று எதையும் கதைக்க முடியாத மனநிலை எல்லோருக்கும். ஏதாவது எழுதித்தாங்கோ எனக் கொடுத்த கொப்பியின் பின் தாளில் இப்படித்தான் ஓவியம் போல சிவப்பு , நீல நிறங்களால் எழுதியிருந்தார்.

நான் சரியும் மண்ணில் நாளை

பூ மலர்ந்து ஆடக் கூடும்

தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம்

தேடி வந்து பாடக் கூடும்

எந்த நிலை வந்து சேருமோ-அதை

இந்த விழி பார்க்க் கூடுமோ?

நாளை தமிழ் ஈழ மண்ணில்

நாங்கள் அரங்கேறக் கூடும்

மாலை கொடியோடு எங்கள் மன்னன்

சபை ஏறக் கூடும்

இந்த நிலை வந்து சேருமோ-அதை

எந்தன் விழி காணக் கூடுமோ.....

எந்த நிலை வந்து சேருமோ-அதை

இந்த விழி பார்க்க கூடுமோ?

அடியில் அன்புடன் றோயண்ணா என தனது கையெழுத்தால் எழுதித்தந்தார். ஏற்கனவே என்னிடமிருந்த அந்தப்பாடலின் ஒலிநாடாவைத் திருப்பிக் கேட்க மறந்தாரோ தெரியாது நானும் சொல்லவில்லை. றோயண்ணாவின் ஞாபகமாய் கொடுக்காமல் வைத்துவிட்டேன்.

அவர்களை ஏற்றிப்போக வாகனம் வந்தது. றோயண்ணா போகும்போதும் எப்போதும் பாடுகிற „'வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் „'பாடலைப் பாடிக்கொண்டே வெளிக்கிட்டார். எங்களோடிருந்த உறவுகளை இழந்தது போல றோயண்ணாவும் அவரோடு கூடப்போனவர்களும் ஊரைவிட்டுப்போன பின்னர் புதியவர்கள் வந்தார்கள். ஆனால் பிரிந்து போன பழையவர்களின் ஞாபகங்களைத் தருகிறவர்களாக அதே உறவு சொல்லிய அழைப்புகளோடு....!

அவர்கள் தான் றோயண்ணா இப்போது நல்லூரடியில் ஒரு முகாமில் இருப்பதாகச் சொன்னார்கள். இந்த இடைவெளியில் சிலதடவைகள் றோயண்ணா எங்கள் ஊருக்கு வந்து போனார். பிறகு வரவேயில்லை. அதற்குள் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. 1990 யூன் 16 எனது பிறந்தநாளில் நாங்கள் மீண்டும்; இடம்பெயரத் தொடங்கினோம். எங்களோடு சிலகாலம் வரை வாழ்ந்து எங்கள் வீடுகளில் சகோதரர்களாக பிள்ளைகளாக வாழ்ந்தவர்களே எங்கள் ஊரையும் காக்கும் புனிதப்போரில் காவலரண் அமைத்து கடமையில் இருந்தார்கள்.

மீண்டும் றோயண்ணா வசாவிளான் , கட்டுவன் ,குரும்பசிட்டி பகுதிகளில் கடமைக்கு வந்திருந்தார். பலாலியிலிருந்து முன்னேறிவரும் இராணுவத்தை எதிர்த்து சண்டையிடும் களவீரனாக மாறியிருந்தார். களங்களில் நிற்கின்றவர்களின் வாழ்வும் உத்தரவாதமில்லாதது. அவர்களுக்காக சாமிகளிடம் நேத்தி வைத்து அவர்கள் வாழ செய்த பிரார்த்தனைகளை அந்தச் சாமிகள் மட்டுமே அறியும்.

இப்போது றோயண்ணா சண்டைக்காரனாக....1990 தீபாவழி நாளில் இராணுவம் பலாலியிலிருந்து பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கியது. றோயண்ணாவும் அவர்போன்ற பலநூறு போராளிகளும் இரவுபகல் பாராமல் அமைத்த தொடர் பதுங்குகுளிகளுக்கு பின்புறமாக இராணுவத்தினரின் துப்பாக்கிகள் இயங்கியது. சென்றியிருந்த போராளிகளைத் தாண்டி சில நூறுமீற்றர்கள் முன்னுக்கு வந்து உள்ளிருந்தவர்களை வளைத்ததில் பலர் காயமடைந்தார்கள் வீரச்சாவணைத்தார்கள். அத்தகைய பலருள் றோயண்ணாவும் கடும் காயமுற்று மானிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

றோய்க்கு காயமாம்....செய்தி காற்றாய் றோயண்ணாவை நேசித்த எல்லோரையும் சென்றடைந்தது. மானிப்பாய் மருத்துவமனையில் சென்று பார்த்த போது றோயண்ணா பேச்சு மூச்சின்றிக் கிடந்தார். எங்கள் முன் உலாவிய அழகன் றோயண்ணாவின் அழகிய முகம் வெளுறியிருந்தது. உயர்ந்த அந்த உருவம் என்றும் கண்ணுக்குள் நிறைகிற சிரிப்பு எல்லாம் ஒடுங்கி ஒற்றைக்கட்டிலில் விழுந்து கிடந்தது.

நாட்கள் செல்லச் செல்ல றோயண்ணா உயிர்தப்பும் நம்பிக்கையும் குறைந்து கொண்டு போனது. றோயண்ணா யாழ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது யாழ் மருத்துவமனைக்கு போராளிகளைப் பார்வையிட எல்லோரையும் புலிகள் அனுமதிப்பதில்லை. அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்தியசாலைக்கு எதிர் வீதியில் சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் பதிவு செய்தே போக முடியும். பதிவுப் பிரச்சனையால் அடிக்கடி போக முடியாது.

அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு 4தடவை றோயண்ணாவை பார்த்திருக்கிறேன். 4வது முறை போனபோது றோயண்ணாவுக்கு படுக்கைப்புண் வந்துள்ளதாகச் சொன்னார்கள். அந்த முறை றோயண்ணாவின் ஒரு அண்ணன் றோயண்ணாவை பராமரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் றோயண்ணா தங்கள் வீட்டின் கடைக்குட்டியென்றதையும் அவர்மீதான தங்கள் குடும்பத்தின் நம்பிக்கையையும் அந்த அண்ணா சொன்னார்.

வசதியான குடும்ப வாழ்வு உயர்தரம் வரையான படிப்பு மேற்கொண்ட படிப்பைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல்கலைக்கழகம் போயிருக்க வேண்டிய றோயண்ணா தாயகக்கனவோடு போராளியாகி எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கேயோ பிறந்த எங்களோடு உறவாகி அன்று பேச்சின்றி மூச்சின்றி நினைவுகள் தவறிக் கிடந்ததைப் பார்க்க அழுகைதான் வந்தது.

அம்மம்மா அந்த அண்ணாவிடம் றோயண்ணா பற்றி கதைத்துக் கொண்டிருந்தா. றோயண்ணாவின் தலைமாட்டில் நின்றபடி றோயண்ணா றோயண்ணா என அழைத்தேன். சின்ன அசைவு தெரிந்தது. ஆனால் கண்திறக்கவேயில்லை. கத்தியழ வேண்டும் போலிருந்தது. எனினும் உயிர் தப்புவாரென்றே உள் மனம் நம்பியது.

பார்வையாளர்கள் நேரம் முடிந்து எல்லோரையும் வெளியேறும்படி அறிவித்தார்கள். அந்த இடத்தைவிட்டு அசையவே முடியாதிருந்தது. அம்மம்மா வரும் வழியெங்கும் றோயண்ணா பற்றியே சொல்லிக் கொண்டு வந்தா. றோயண்ணா அதிகம் பகலில் இருப்பது எங்கள் பிள்ளையார் தேரடிதான். அந்தப் பிள்ளையார் றோயண்ணா காப்பாற்றுவாரென அம்மம்மா நம்பினா.

5வது முறையாக றோயண்ணாவை பார்க்க தோழி மேனகாவோடு ஏழாலை களவாவோடை அம்மனிற்குச் செய்த அரிச்சனை விபூதியுடன் போய் அனுமதிக்கு பதிவு செய்யக் காத்திருந்த போது அங்கே பதிவு செய்யும் போராளி சொன்னான் றோயண்ணா மேலதிக மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக. இந்தியாவிலிருந்து றோயண்ணா சுகமாகி வருவரென்ற நம்பிக்கையில் காத்திருந்தோம்.

31.12.1990 இரவு புலிகளின் குரல் இரவுச்செய்தியில் கப்டன்.றோயல் வீரமரணம் என்ற செய்தியை வாசித்தார்கள். மீண்டும் வருவாரென்ற நம்பிக்கை பொய்யாகி றோயண்ணா மாவீரனாகி.....

இதேபோலொரு 31ம் திகதி பல நூறு போராளிகள் உலாவிய எங்கள் ஊருக்குள் மறக்கப்படாமல் நினைவுகளில் இருக்கிற குறிப்பிட்ட சில மறக்க முடியாதவர்களுள் றோயண்ணாவும் ஒருவராய்....ஒவ்வொரு வருட முடிவிலும் றோயண்ணாவின் நினைவோடு முடிகிற வருடங்கள் இன்றோடு றோயண்ணாவின்  நினைவுகள் சுமந்து 22வருடங்களைக் காலம் கவுரவப்படுத்தியிருக்கிறது.

றோயைத் தெரியுமா ? உங்கடை ஊரில இருந்த பொடியன் ? அண்மையில் நண்பர் ஒருவர் கேட்டார். ஓம் ஏன் ? அந்த றோயை விரும்பின பிள்ளை இன்னும் கலியாணம் கட்டேல்ல இங்கைதான் இருக்கு போனமாதம் சந்திச்சனான் என்றார்.

அழகன் முருகனென்பார்கள் ஆனால் றோயண்ணாவின் அழகை முருகன் கூட பொறாமைப்படுவான். அத்தகைய அழகும் உயரமும் சுருள் முடியும் எல்லாரையும் கவர்கிற கதையும் ஓர் அழகனாய் எங்கள் ஊரில் உலவியவர். அந்த அழகன் பலரது நெஞ்சுக்குள் சின்னக் காதலாக அரும்பியிருந்ததை ஊரில் கேட்டிருக்கிறேன்.

இன்று றோயண்ணா இல்லாது போய் 22ஆண்டுகள் நிறைவாகிறது. ஆனால் றோயண்ணாவின் காதலை இன்றுவரை கௌரவப்படுத்தித் தனது வாழ்வை தனிமையாகக் கழிக்கிற அந்த அக்கா மீதான மதிப்பு மேலுயர்கிறது.

எங்களோடு எங்கள் ஊரோடு நினைவாகிப் போன றோயண்ணா 22வது வருட நினைவு நாளில் மீண்டும் உங்களை நினைக்கிறேன்....

வணங்குகிறேன்....காலம் தோறும் பலர் வருவார்கள் சிலர் மட்டும் காலங்கள் பல கடந்தாலும் நினைவுகளோடும் உறவுகளோடும் வாழ்வார்கள்...றோயண்ணா இன்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றும் உங்கள் முகமும் சிரிப்பும் நீங்கள் பாடுகிற வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் பாடலும் உங்கள் ஞாபகங்களைத் தந்தபடி... உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள்....உங்கள் கனவுகள் நனவாகும் கனவோடு உங்கள் நினைவுநாளில்..... உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள் றோயண்ணா.

31.12.2012

நன்றி சாந்தி. இன்றுதான் படித்தேன். மனம் கனக்கிறது. இவரைப் போன்றே, எனக்குப் பரிச்சயமான சோல்ட் முரளியண்ணா, கோப்பாய் காந்தியண்ணா......................எத்தனைபேரை இழந்துவிட்டோம். இவர்களின் இழப்பு எமக்கு எதையுமே கொடுத்துவிடப்போவதில்லை என்றால், அதைவிடத் துயரம் வேறிருக்கப்போவதில்லை.

என்ன நடந்தாலும், இவர்களின் கனவுகள் வீண்போகாது நனவாகிவிட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

அடைக்கலம் தந்த வீடுகளே !!!!! கேட்கும் ஒவ்வொரு பொழுதும் நெஞ்சை அடைத்து அழுகை பீரிடும் நினைவுகளுடன்............!!!! நீங்கள் எங்கே போனீர்கள் தெய்வங்களே !!!!!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.