Sign in to follow this  
nunavilan

கலித்தொகை காட்டும் சங்ககாலத் தொழில்கள்

Recommended Posts

கலித்தொகை காட்டும் சங்ககாலத் தொழில்கள் – சு. அரங்கநாதன்
 

முன்னுரை: ஆதிகால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இயற்கை உணவின் உற்பத்திக் குறைவைப் போக்க அல்லது அதன் தேவையினை அதிகரிக்க, தானே உற்பத்தி செய்யும் முறையினை மேற்கொண்டான். கால ஓட்டத்தில் பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். மேலும் ஆநிரைகளை மேய்த்தவர்கள் அதில் கிடைக்கும் பால், வெண்ணெய், மோர் இவற்றை விற்கக் கற்றுக் கொண்டனர். கற்றுக் கொண்ட தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றிபெற அவரவர் திறமைகளைக் காட்டத் துவங்கினர். இவ்வாறு பல்வேறு தொழில்கள் வளர்ந்த நிலையில், இருந்த சங்ககாலத் தொழில்கள் பற்றியும், அத்தொழில்கள் அவரவர் பயன்படுத்திய நுட்பங்கள் பற்றியும் கலித்தொகை மூலம் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கட்டடத் தொழில்: குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்த மனிதன் தனக்கென இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதன் வளர்ச்சியே மாளிகைகளும், அரண்மனைகளும், வீடுகளும் ஆகும். கலித்தொகை பாடல்களில் இவை குறித்த செய்திகள் அறியக் கிடைக்கின்றன.

”நிலன் நாவில் திரிதரூஉம் நீள்மாடக் கூடலார்” (கலி.35:17)

என்ற வரியில் நீண்ட மாடங்களுடன் அமைக்கப்பட்ட மாளிகை குறிக்கப்படுகின்றது.

”ஆய்சுதை மாடத்து அணிநிலா முற்றத்துள்” (கலி. 96:19)

என்பதில் அழகுடைய சாந்து பூசப்பட்ட மாடமும் அழகுடைய நிலா முற்றமும் குறிக்கப்படுகின்றன.

”சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர்சீர்த்தி” (கல்.83-13)

”பெருந்திரு நிலைஇய வீய்கு சோற்று அகல்மனை

பொருந்தி நோன்கதவ ஒற்றிப் புலம்பியாம் உலமா” (கலி.83:1-2)

ஆகிய வரிகளில் சாளரம் அமைக்கப்பட்டு, இரட்டைக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ள வீடு பற்றிய செய்தி கூறப்படுகின்றது.

ஆடைத் தொழில்: இலைகளையும், மரப்பட்டைகளையும் ஆடைகளாக அணிந்த மனிதன், நூலினாலான ஆடைகளை உடுத்தத் தொடங்குகிறான். வளர்ச்சி அடைந்த நிலையில் பல்வேறு வண்ணங்களையும் சிறப்புக் கூறுகளையும் உருவாக்கத் தொடங்கி மனிதன் அதில் பல்வேறு தொழில் நுட்பங்களைக் கையாண்டுள்ளான் என்பதனைக் கீழ்க்காணும் கலித்தொகை பாட்ல்வரிகள் காட்டுகின்றன.

அணிகலன்கள்: உலோகத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் பற்றியும், இவ்வணிகலன்கள் செய்யக் கையாளப்பட்ட நுட்பங்கள் பற்றியும் கலித்தொகையில் பல்வேறு பாடல்கள் சுட்டுகின்றன.

”அளிமாற பொழுதின் இவ்ஆயிழை கவினே (கலி-25)

நறா இதழ் கண்டன்ன செவ்விரற்கு ஏற்ப”

”சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்”

”புனை இழை நோக்கியும்” (கலி.76)

”மாணிழை ஆறாகச் சாறு” (கலி.102)

”கடியவே கனங்குழாஅய் காடுஎன்றார்” (கலி-11)

”ஞால்இயல் மென்காதின் புல்லிகைச் சாமரை” (கலி-96)

”கிண்கிணித் தாரொடு ஒலித்து ஆர்ப்பு ஒண்தொடிப்” (கலி-74)

என அமைந்த கலித்தொகை வரிகளால் ஆண் சுறாமீன் வடிவத்தில் உள்ள மோதிரம் அணிந்தமை பற்றியும், ஒளியை உடைய அணிகலன்கள் பற்றியும், பொன்னால் செய்த கனமான காதணி பற்றியும், கிழே தொங்கும் தன்மையுடைய புல்லிகை என்ற அணி பற்றியும், மணிகள் சேர்க்கப்பட்ட மாலை பற்றியும் அறிய முடிகிறது. மேலும், கைக்கவசம், தொடி, பொலன், கோதை, முத்தாரம், கழுத்தணி, வயந்தகம் போன்ற அணிகள் பற்றியும் அதில் செய்யப்பட்ட நுட்ப வேலைப்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

குவளை மலர் விற்றல்: பெண்கள் சூடும் மலர்களைக் கொய்து விற்பனை செய்யும் தொழில் பற்றிக் கலித்தொகை கூறுகின்றது.

”வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட” (கலி.11)

சலவைத்தொழில்:

”சலவைத் தொழிலில் சங்ககால மக்கள் ஈடுபட்டுள்ளதை,

……………………………………………………………ஊரவர்

ஆடை கொண்டு ஒலிக்கும்நின் புலைத்தி

என்ற கலித்தொகை வரி காட்டுகின்றது.

வள்ளிக்கிழங்கெடுத்தல், தேனெடுத்தல்”

குறிஞ்சிநில மக்கள் வள்ளிக்கிழங்கினைத் தோண்டியெடுத்தலும், தேனெடுத்தலும் பற்றிய குறிப்பினைக் கலித்தொகை

”வள்ளி கீழ்வீழா, வரைமிசைத் தேன்தொடா” (கலி.39)

என்று கூறுகின்றது.

ஆநீரை மேய்த்தல்: முல்லைநில மக்கள் ஆடு, மாடுகளையும் அவற்றைக் காத்து வைத்திருத்தலையும் முக்கியச் செயலாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பதனை முல்லைக்கலிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

”தத்தம் இனநிரை

பொழுதோடு தோன்றிய கார்நனை வியனிட புலத்தார்” (கலி-106)

”மேயும் நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் (கலி-108)

”பாங்கரும் பாட்டாய்கால் கன்றோடு செவ்வோம்யாம்” (கலி-116)

என்பதன் மூலம் கோவலர்கள் மனைக்கு அருகில் உள்ள புல்வெளிகளுக்குக் கன்றோடு பசுவினையும் சேர்த்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர் என்பதையும் அதனைக் காக்க வேண்டிக் கோலூன்றி நின்றனர் என்பதையும் அறியமுடிகின்றது.

மோர் விற்றல்: ஆநிரையால் பெற்ற பாலை மோராக மாற்றி விற்கும் தொழிலில் மகளிர் ஈடுபட்டனர்.

”அகலாங்கண் அளைமாறி அலமந்து பெயருங்கால்

அளைமாறிப் பெயர் தருவாய்” (கலி-108)

என்ற வரிகளினால் பெண்கள் அருகில் உள்ள சிற்றூரில் மோர் விற்றுத் திரும்பியதைத் தெரிய முடிகிறது.

வெண்ணெய் விற்றல்: முல்லை நிலத்துப் பெண்கள் மோரில் இருந்து வெண்ணெய் எடுத்து அதனையும் விற்றனர்.

”வெண்ணெய்க்கும் அன்னள்எனக் கொண்டாய் ஒண்ணுதல்” (கலி-110)

வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே” (கலி-115)

பனங்குருத்தால் பெட்டி புனைதல் : பனை ஓலை, தென்னை ஓலைகளைக் கொண்டு அன்றாடத் தேவைகளுக்குப் பொருட்களைச் செய்தனர். ஓலைகளைப் பயன்படுத்தி பலவிதமான கூடைகள் செய்தனர். அவை புட்பில் எனப்பட்டது என்பதனை முல்லைக்கலியல் உள்ள

”போழின் புனைந்த வலிப்புட்டில்” (கலி-117)

”வரிகூழ வட்டி தழீஇ” (கலி-109)

என்ற இவ்வரிகளினால் பெட்டிகள் செய்து அவற்றில் நெல்லினைக் கொண்டு சென்றதனையும் அறிய முடிகின்றது.

தினைப் புனங்காத்தல்: விளைந்த தினைக்கதிரைப் பறவைகள் வந்து உண்டுவிடாமல் இருக்க தினைப்புனங் காக்கின்ற தொழிலை தலைவியும் தோழியும் செய்தனர்.

”ஒளிதிகழ் ஞெகிழார் கவணையார் வில்லர்

களிறுஎன ஆ‘ப்பவர் ஏனல் காவலேரே” (கலி-52)

”படிகிளி பாயும் பசுங்குரல் ஏனல்” (கலி-50)

தினைப்புனங் காக்கும் மகளிர் கவனையும், வில்லையும் கொண்டு களிற்றினை விரட்டி ஆரவாரம் செய்தமையும் தினைப்புனத்திற்கு வருகின்ற கிளிகளைக் கவன் கொண்டு ஓட்டியமையும் கூறப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல்: சங்க காலத்தில வேட்டைத்தொழில் சிறப்பாக நடந்தது. வேட்டைக்குச் செல்வோர் அதற்குத் தேவையான கருவிகளுடன் சென்று காட்டில் எல்லாத் திசைகளிலும் அலைந்து வேட்டையாடுவதற்குரிய விலங்குகள் உள்ள இடத்தை அறிந்து தாக்கினர். அவர்கள் வெள்ளை யானை, மான் போன்றவற்றை வேட்டையாடியதனை,

”இலங்கொளி மருப்பின் கைம்மா உளம்புநர்

புலங்கொடி கவனையின் பூஞ்சினை உதிர்க்கும்

கொலைவெம் கொள்கையோடு நாயஅகப் படுப்ப

வலைவர்க்கு அமர்ந்தே மடமான்”

என்ற பாலைக்கலி வரிகளின் மூலம் அறியலாம்.

ஆறலைக்கள்வர்: பாலை நிலம் வழியாகச் செல்லும் வழிப்போக்கர்களிடம் அவர்தம் உடைமைகளைப் பறித்துச் செல்லும் ஆற்றலைக் கள்வர்கள் பற்றிய செய்தி கலித்தொகையில் இடம் பெறுகின்றது.

”அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர்தாம்

கொள்ளுப் பொருள் இலர்ஆயினும் வம்பலர்

துள்ளுநர்க் கண்மார் தொடர்ந்து உயிர் வெளவலின்” (கலி.4)

தோற்பைகள் செய்தல் : கொல்லன் பட்டறையில் பயன்படுத்தப்பட்ட ஊதுலைக் கருவி தோலால் செய்யப்பட்டது. இது மெல்லிய தோலால் செய்யப்பட்டது.

”கழுவொரு சுடுபடை சுருக்கிய தோற்கண்” (கலி.106)

என்பதனால் ஆநிரைகள் மேய்க்கச் செல்லும் போது முல்லை நிலக் கோவலர் கழுவோடு சூட்டுக் கோலையும் தோற்பையில் இட்டுச் சுருக்கிக் கட்டிக்கொள்வர் என்பதைத் தெரியமுடிகின்றது.

தச்சுத் தொழில்: சங்க காலத்தில் மரத்தினால் கட்டில்களையும் பொம்மைகளையும் செய்தனர் என்பதைப் பின்வரும் பாடல்வரிகள் மூலம் அறியமுடியும்.

”படைஅமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ

இணைபட நிவந்த நீலமென் சேக்கையுள்” (கலி: 72)

புரிபுனை பூங்காற்றில் பையல வாங்கி (கலி: 80)

கமயரணம் பாயாநின் கைபுனை வேழம் (கல்: 86)

முடிவுரை: சங்க காலத்தில் மக்கள் பல்வேறு தொழில்கள் செய்துவந்துள்ளனர், அத்தொழில்களில் அக்கால மக்கள் காட்டிய ஆர்வமும் செயல்திறனும் சிறப்புடையன. ஆண்களோடு இணைந்து அவர்கள் அறிந்த தொழிலைச் செய்து தம்குடும்ப பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொண்டனர். சங்க கால மக்கள் தோல், நூல், பொன், மண்டபம், மரம் போன்ற பொருட்களினால் செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் தெரியமுடிகின்றது.

நன்றி: கட்டுரை மாலை.

Share this post


Link to post
Share on other sites

கலித்தொகை காட்டும் மகளிர் – அ. கீதாரமணி

 
 

சங்க காலத்தில் மகளிர் ஆடவருக்கு நிகராக விளையாட்டிலும், திருவிழாக்களில் கலந்து கொள்வதிலும் உரிமைப் பெற்றிருந்தனர் என்ற செய்தியைக் கலித்தொகை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சங்ககால மகளிர் இல்லற வாழ்க்கையில் சிறந்தும் விளங்கியிருக்கின்றனர். ஆடவரைப் போலவே மகளிரும் கடற்கரைச் சோலைகளுக்கும் ஆற்றின் எக்கரைக்கும் சென்று விளையாட உரிமை பெற்றிருந்தனர். கோயில் திருவிழாக்களிலும் கலந்து கொண்டனர் என்று எம்.ஆரோக்கியசாமி குறிப்பிடுவர்.

விளையாட்டு:-

அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்து மாலையாகத் தொடுத்தும், பல இலைகளைக் கோர்த்தும் விளையாடினர் என்று மருதக்கலி மூலம் அறியமுடிகிறது. ”மடக்குறு மாக்களோடு ஓரை அயரும்” (82.5) எனச் சிறுமியர் கோரைப் பொம்மை செய்து விளையாடியச் செய்தியை மருதநில நாகனார் கூறியுள்ளார். மகளிர் தழைகளைக் கொய்து விளையாடியதைக் ”கொய்குழை அகை காஞ்சிதத் துறை அணி” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊசல் ஊர்ந்தாடல் மகளிர்க்குரிய இனிய பொழுதுபோக்குகளாகும். இச்செய்தியினை நெய்தல்கலி குறிப்பிடுகிறது. தாழையின் விழுது கயிறாகவும், நெய்தல் மாலை அக்கயிற்றில் கட்டிய மாலையாகவும், சுறாவினது மருப்புக் கோத்த பலகை அமரும் பலகையாகவும் அமைக்கப்பெற்ற ஊசலில் மகளிர் ஊசலாடுவர். ஊசலாடும் போது மகளிர் பாடவும் செய்வர். இக்கருத்தமைந்த பாடல் பின்வருமாறு.

”இனமீன் இகன்மாற வென்ற சினமீன்

எறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த

நெய்தல் நெடுநார்ப் பிணித்து யாத்துக் கையுளர்வின்

யாழிசை கொண்ட இனவண்டு இமிர்ந்து ஆர்ப்பத்

தாழாது உறைக்கும் தடமலர்த் தண்தாழை

வீழ்ஊசல் தூங்கப் பெறின்

மாழை மடமான் பிணைஇயல் வென்றாய் நின்ஊசல்

கடைஇயான் இகுப்ப நீடுஊங்காய் தடமென்தோள்

நீத்தான் திறங்கள் பகர்ந்து (131. 6-14)

பழக்க வழக்கம்:-

பழக்கம் என்பது தனிமனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வாழ்க்கைக்குத் தேவையானதாகக் கருதப்படுகிறது. அவரவர்க்கு விரும்பிய மனநிறைவையும் அது தருகிறது. பழக்கத்தின் தொடர்நிலை வழக்கம் எனப்படுகிறது. இது சமூகம் சார்ந்த ஒன்று. பழக்கமாகிவிட்ட செயல்களைச் சமூகத்தில் வழக்கம் என்கிறோம். வழக்கம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் சமூகச் செயல்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியம் வழக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், ”முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்று கூறுகின்றது. பண்டை மகளிரின் பழக்கவழக்கங்களைச் சில முல்லைக்கலிப் பாடல்கள் காட்டுகிறது.

ஆயமகளிர் புனத்தில் கன்றுகளை மேய்த்துக் கட்டுவர். ஆநிரை மேய்க்கும் தந்தைக்கும் தமர்க்கும் உணவும், பாலும் கொண்டு செல்வர். தாம் மணக்க விரும்பிய காதலன் மாலையைக் கூந்தலுக்குள் மறைவாகச் சூடிக்கொள்வர். கூந்தலில் வெண்ணெய் தேய்த்துக் கொள்வர். சிற்றூரிலும், பேரூரிலும் மோர் விற்பர். மோருக்கு மாறாக மாங்காயை ஊறுகாயாகக் கூட்டி நுகர்வர். தெய்வங்களுக்கும் பால்மடை கொடுப்பது வழக்கம். மேலும், குறமகளிர் பாறை உரலிலும் சந்தன உரலிலும் யானைக் கொம்பிலான உலக்கை கொண்டு தினை, மூங்கில்நெல் ஆகியவைகளைக் குத்தும்போது வள்ளைப்பாட்டுப் பாடுவர். சேம்பின் இலையை முறமாகவும் பயன்படுத்தினர். இவ்வள்ளைப் பாட்டு முருகனைப் பாடுவதுபோலக் காதலனைப் பாடுவதாகவும் அமையும். திருமணம் கைகூடின் தெய்வத்திற்குப் பலியிடுவர். இதனை,

”சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்

ஐவன வெண்நெல் அறை உரலுள் பெய்து இருவாம்

ஐயனை ஏத்துவாம் போல” (43. 5-7) என்றும்

”நிலை உயர் கடவுட்குக் கடம்பூண்டு, தன்மாட்டுப்

பலசூழும் மனத்தோடு பைதலேன் யான்” (46.15-17)

என்றும் பாடல் வரிகளால் அறியலாம்.

திருமணம்:-

அக்கால மகளிர் தமக்கு வாய்க்கும் கணவன் வீரம் உடையவனாகவும், அஞ்சாநெஞ்சினனாகவும் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்தனர். இக்குறிப்பு கலித்தொகையில் காணமுடிகிறது. காளையை அடக்கிய ஆடவனைக் கைப்பிடிக்கும் ஆயமகளின் திருமணம் கலித்தொகையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றினைத் தழுவிய பொதுவனுக்கே தலைமகளை தமர்கொடை நேர்வர். மணத்தைக் கூட்டுவிப்பது தெய்வம் என்று கருதப்பட்டது. பூவாலூட்டிய இல்லின் முற்றத்தில் மணம் தாழப்பரப்பி எருமைக்கொம்பை நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெறும். ஆனால் காளையை அடக்காத வீரர்களை மகளிர் ஒருபோதும் மணந்ததில்லை. இக்கருத்தினை,

”நேரிழாய் கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்

காரிகதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே

ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார்” (104, 73-76)

என்ற பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

நம்பிக்கை:-

நாளும் கோளும் பார்த்தாலும் நன்மை தீமைக்கான நிமித்தம் பார்த்தாலும் குறிகேட்டலும் மக்கள் வாழ்வோடு ஒன்றி போய்விட்டன எனலாம். நம்பிக்கை நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. கபிலர் பாடல்கள் அவர் காலத்திலிருந்த சில நம்பிக்கைகளை உணர்த்துகின்றன. கற்புடைய மகளிர் தம் மன ஒருமைப்பாட்டால் மழையையும் வரவழைக்க முடியும் என நம்பினர். குறிஞ்சிக் கலியில் தலைவியின் பெருமையைக் குறிக்கும் போது, அவள் உலகிற்கு மழை வேண்டுமெனின் அதனை வருவித்துப் பெய்விக்கும் ஆற்றல் சான்ற பெருமையள் என்று கூறப்படுகின்றது. ”அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே” இக்கருத்தினை ”வான்தரும் கற்பின் மனையுறை மகளிர்” என மணிமேகலையில் கூறியிருத்தலைக் காணலாம்.

”அறம் பிறழ்ந்து அல்லவை செய்பவன் வாழும் நாட்டில் வளம் குன்றும்” என்பது சான்றோர் நம்பிக்கை. வள்ளுவரும்.

”வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்” (குறள். 23-9) என்பார்.

அல்லல் புரிந்தொழுகும் குடிமக்கள் வாழும் மலைநாட்டில் வள்ளிக்கொடியும் நிலத்தடியில் கிழங்கு இடாது, மலைமேல் தேனீக்களும் கூடுகட்டாது கொல்லையில் திணையும் கதிர்விட்டுப் பயன் விளைவிக்காது என்றுரைப்பர்.

”வள்ளி கீழ்விழா, வரைமிசைத் தேன்தொடா

கொல்லை குரல்வாங்கி ஈனா மலை வாழ்நர்

அல்ல புரிந்தொழுக லான்” (36. 12-14)

மலைப்பக்கத்து வாழும் குறவர்தம் மடந்தைமார் தவறாது தம் கணவரைத் தொழுதெழுவதால் அக்குறவர் தொடுக்கும் அம்புகள் குறிதவறிச் செல்லாதாம். ஒருவர் செய்யும் நல்வினை அவரைச் சேர்ந்தோர்க்கும் பயன் விளைவிக்கும் என்ற நம்பிக்கை,

”வாங்கமை மென்தோள் குறமட மகளிர்

தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும்

தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்”

என்னும் பாடலடிகளால் புலனாகிறது.

முடிவுகள்:-

கலித்தொகையில் காணக்கூடிய மகளிர் ஆடவர்களுக்கு நிகராக உரிமை பெற்றிருந்தனர். அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்தும் விளையாடினர். ஊசல் விளையாட்டில் சுறாவினது எலும்பை அமரும் பலகையாக மேற்கொண்டனர். மகளிர் சந்தன மரத்தாலான உரலில் யானைக் கொம்பாலான உலக்கையைக் கொண்டு நெல் குத்தினர் என்று தெரியவருகிறது. சங்க மகளிர் வீரம் உடைய ஆண்மகனை மணந்ததாக முல்லைக்கலி கொண்டு அறியமுடிகிறது. கற்புடைய மகளிரால் மழை வரவழைக்க முடியும் எனக் கலித்தொகை குறிப்பிடுகிறது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

Share this post


Link to post
Share on other sites

கலித்தொகையில் அறக்கருத்துக்கள் – சி. தமிழ்ச்செல்வி

 

மக்கள் நல்ல முறையில் வாழப் புலவர்கள் அறநெறிகளை வழங்கினர். அறக்கருத்துக்களைக் கூறும் தனி நூல்கள் தனியாக தோன்றாத காலத்தில் அகப்பாடல்களின் மூலம் அறக்கருத்துக்களை எடுத்து ஓதினர். இவ்வாறு அகப்பாடல்களின் மூலம் கூறும் கருத்துக்கள் அகமாந்தர்களுக்கு மட்டுமின்றிச் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்துமாறு அறிவுறுத்திய நூல் கலித்தொகை ஆகும். அறம் என்பது ஒழுக்க நெறியாகும். பிற உயிர்களுக்கு உதவுவதும், துன்பம் செய்யாமையுமே அறம் ஆகும். மேலும் அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெரு வழக்கமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அறத்தின் தோற்றம்:

மக்கள் பசி, பிணி, வறுமை, இருப்பிடம் ஆகிய வாழ்க்கைப் போராட்டங்களிடையே இன்பமும், பொருளும் பெற பல வழிகளைப் பின்பற்றினர். பிறருக்குத் துன்பம் தராத நல்ல நெறியிலேயே இவற்றைப் பெற வேண்டும் என்ற உணர்வே அறநெறியாகும். வாழ்வின் அடிப்படை நிலைக்களன்களாக காதல், போர், சமுதாயம், அரசியல் முதலியன அமைந்திருந்தன. இவ்வாறு சிக்கல்கள், முரண்பாடுகள் தோன்றியபோது வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் அறக்கருத்துக்கள் தோன்றின.

அறத்தின் பிரிவுகள்:

தமிழர் காதலையும் வீரத்தையும் தம் கண்களாகப் போற்றினர். காதல் உணர்வை அகம் என்றனர். வீரத்தைப் புறம் என்றனர். அகவாழ்விலும் புறவாழ்விலும் அறநெறி கொண்டு வாழ்க்கை நடத்தினர். அறத்தினை அக அறம், புற அறம் என்றும் புற அறத்தினைப் போரறம், சமுதாய அறம் என்றும் பிரிப்பர்.

அகத்திணையில் அறநெறிகள்:

ஆணும் பெண்ணும் காதல் உணர்வு கொண்டு இன்புற்று வாழும் வாழ்வு ”அகம்” என்பர். இதை அகத்திணை என்றும் கூறுவர். அகத்திணை மாந்தர்களான தலைவன், தலைவி, தோழி, செவிலி, தந்தை, தமையன் ஆகியோர் அறஒழுக்கம் கொண்டு ஒழுகினர்.

கலித்தொகைப் பாடல்களில் வரும் தலைமகன், தலைமகள், தோழி என்போர் புலவர்களாற் படைத்துக் கொள்ளப் பெற்றோரே எனினும் அக்காலத்து நன்மக்களின் இயல்புகளும் வாழ்க்கைக் கூறுகளுமே அவர்கள் மேல் வைத்து விளக்கப்படுகின்றன. ஆகவே கலித்தொகை இன்பச் சுவையை கொடுப்பதுடன் அந்தணர், அரசர், அமைச்சர், வணிகர் வேளாளர்களும், பிறருமாகிய ஆடவரும் மகளிரும் இளமையிலும் முதுமையிலும் அறியவேண்டிய நன்னெறிகளை எடுத்தியம்புகிறது.

அகவாழ்வில் அறத்தோடு பொருந்தி இல்லற வாழ்வினை மேற்கொண்டனர். ஓர் ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் வறுமை நிலையிலும் மனம் ஒன்றி வாழும் ஒத்த அன்பு வாழ்க்கையே சிறந்த இல்லறம் என்பதை,

”ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” (9.23-24)

என்ற கலித்தொகை வரிகள் விளக்குகின்றன. கற்புடைய பெண்டிர் பிற தெய்வங்களைத் தொழுதல் இல்லை. கற்புடைய பெண்டிர் பிழையின்றி வறட்சி நிலவிய காலத்தும் மழையைப் பெய்விக்கும் ஆற்றல் வாய்ந்தவராக விளங்கினர். கற்புடைய பெண்ணினது கணவன் சென்ற வழியில் ஏற்படும் வெயிலின் வெம்மையை அறக்கடவுள் முன்னின்று விலக்கித் துணை செய்தது என்று கற்புத் திறம் போற்றப்படுகிறது. இதனை,

”வறனோடின் வையத்து வான்தரும் கற்பினாள்” (16. 18-12) என்ற வரி விளக்குகிறது.

புறத்திணையில் அறநெறிகள்:

புறத்திணையில் அறம் என்னும் பொழுது மக்கள் நல்வாழ்வுக்கு அரசு இன்றியமையாததால் அறத்தின் வழியே ஆட்சிபுரிந்து அரசின் தலையாய கடமையாகும். மன்னன் அறவழியில் ஆட்சி செய்ய வேண்டும் என்றும், மன்னன் மட்டுமின்றி மன்னன் பயன்படுத்தும் செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறம் செய்பவையாக அமைகின்றன. அரசனது வெண்கொற்றக் குடை அறம் செய்யும் என்பதை,

”அறன்நிழல் எனக்கொண்டா ஆய்குடை அக்குடை” (99.8)

மன்னன் கையில் உள்ள செங்கோல் நடுநிலைமை தப்பாது உலகம் புகழும்படி விளங்குகின்றதை

”பொய்யாமை நுவலுகின் செங்கோலச் செங்கோலின்” என்னும் வரி விளக்குகிறது.

முரசானது மக்களின் பாதுகாப்பிற்குரிய அரணாக அமைகிறது. எனவே வேந்தனது செம்மையால் மாரி சுரக்கும். வெண்கொற்றக்குடை அறனிழவாகும், செங்கோல் பொய்யாமை நுவலும் முரசம் பாதுகாப்பை ஒலிக்கும் என்பன கலித்தொகை உணர்த்தும் அரச அறங்களாகும்.

போர்க்களத்தில் வலிமை இல்லாதவரோடு போர் செய்வது அறமாகக் கொள்ளப்படுவதில்லை. பகைவன் கருவியின்றி நிற்குமிடத்துத் தனக்கு நிகராகான் என்று அவனிடம் போர் செய்யாது விடுவதும் வீழ்ந்தவன் மேல் செல்வதும் வீரமன்று என்று கலித்தொகை உணர்த்துகின்றது.

சமுதாயவியல்:

சமுதாயத்தில் பின்பற்ற வேண்டிய ஈகை, இன்னா செய்யாமை, நிலையாமை ஆகிய கருத்துக்கள் சமுதாய அறமாக விளங்குகின்றன. ஈதலின் சிறப்பாக ”இரந்தோர்க்கு இல்லையென்னாது ஈதலும், பயன் கருதாது ஒருவருக்கு ஒரே பொருளைக் கொடுத்தலே ஈகையறமாகும். இதனை,

”ஆற்றுதல் என்பது அலர்ந்தவர்க்கு உதவுதல்” (133.6)

என்று நெய்தற் கலிப்பாடல் மூலம் அறியமுடிகிறது. ஈகை செய்து இல்லறம் நிகழ்த்தும் தீவினை இல்லாதவனுடைய செல்வம் பெருகும் என்பதை,

”ஈதலின் குறைகாட்டாது அறனறிந்து ஒழுகிய

தீதிலான் செல்வம் போல்” (27.2)

என்ற வரிகள் அறிவுறுத்துகின்றன. மேலும் செய்த வினைப்பயன் பற்றுவிடாது பயன் தறுதல், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றில் அறத்தின் திறஞ்சேரார் மடலூர்தல் ஆகியவை கலித்தொகை கூறும் சமுதாய அறங்களாகும்.

மனவியல்:

”மகிழ்ச்சியினால் அறிவு பொலிவு பெறும்” மன ஒழுக்கத்தினால் வாழ்நாள் சிறக்கும்” ”உண்கடன் வழிபொழிந்து இரக்குங்கால் முகனுந்தாங்கொண்டது கொடுக்குங்கால் மகனும் வேறாகும்”, ”நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை”, என்பவை மனவியல் வழங்கும் உண்மைகளாகும்.

பறவை விலங்குகளின் வாழ்வை விளக்குவதன் மூலம் கலித்தொகை பல அறக்கருத்துக்களைக் கூறுகின்றது. மேலும் இறைவனின் படைப்பு ஓருயிர் மற்றொருயிரை செகுத்துண்ணுமாறு அமைக்கும் நோக்கமில்லாதது என்னும் உயரிய அறம் புலப்படுகின்றது.

நிலையாமை:

மன்னர் உலகத்து மன்னுதல் குறித்தோர் உணர வேண்டிய நிலையாமையை நெஞ்சில் நின்று நிலைபெறுமாறு கலித்தொகை கூறுகின்றது. வாழ்நாள், அழகு, இளமை, பொருள், காமம், ஆகிய ஐம்பெரும் நிலையாமை அழகான உவமைகளின் மூலம் விளக்கப்பெற்றுள்ளது.

”வளியினும் வரைநில்லாதது வாழுநாள் ஆகவே,

கடைநாள் இதுவென்று அறிந்தாரில்லை” (கலி. 20.9)

அழகு, நீள்கதிர், அவிர்மதி நிறைவு போல் நிறையாது நாள்தோறுந் தன் நிலை குலைந்து விடும் என்பன இளமை பற்றிய செய்திகளை கலித்தொகை அறிவுறுத்துகிறது. கலித்தொகையில் ஆங்காங்கே பல அறக்கருத்துக்கள் சிதறிக் கிடைக்கின்றன. இவ்வாறில்லாமல் ஒரேவொரு பாட்டாலும் பல அறவுரைகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

”ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பெனப் படுவது தன்கிளை செறா அமை

அறிவெனப்படுவது பேதையர் சொல்நோன்றல்

செறிவெனப் படுவது மறைபிற ரறியாமை

முறையெனப் படுவது கண்ணோட்டா துயிர்வெளவல்

பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”, (133-14)

என்றிவ்வாறு அறநெறிக் கருத்துக்களைக் கலித்தொகை முதன்மைப்படுத்திக் கூறுகின்றது.

மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் இப்பாடலில் மக்கள் பின்பற்ற வேண்டிய அறவுரைகள் ஒரே பாடலில் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளை அகப்பாடலின் வாயிலாக மென்மையாக எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினர். உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண், செல்வந்தர், வறியவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் அறிவு புகட்டும் வகையில் கலித்தொகையில் அறநெறிகள் மிகுந்து காணப்படுகிறது.

”ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் பொருளேபோல் தமியவே தேயும்” என்று கலித்தொகையில் அறிவுரைக்கு அறவுரையே உவமையாக கூறப்பட்டுள்ளது. இதைக் காணும் பொழுது,

”அழுக்கா றுடையான்கண் ஆக்கம் போன்றில்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு” (குறள்.35)

என்னும் நீதிக்கு நீதியையே உவமை காட்டும் திருக்குறளை எண்ண வைக்கின்றது. ஆகவே நீதி இலக்கியப் பண்புகள் சங்க காலத்தில் தோன்றிய கலித்தொகையில் அரும்பத் தொடங்கியுள்ளது என்பதை அறியமுடிகின்றது.

நீதி இலக்கியங்களில் காணப்படும் கருத்துச் செறிவைப் போலவே கலித்தொகையிலும் அறக்கருத்துக்கள் மிகுந்துள்ளதை அறியமுடிகின்றது. கலித்தொகைப்பாடல்கள் அறநெறிகளோடு வாழவேண்டும் என்கின்ற பொதுவான கருத்துக்களைத் தெளிவுபட விளக்குகின்றன. அறவாழ்க்கையின் நோக்கத்தைச் செம்மையாகவும் அழுத்தமாகவும் கலித்தொகைப் பாடல்கள் தெளிவிக்கின்றன.

நன்றி: கட்டுரை மாலை

Share this post


Link to post
Share on other sites

கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள்

 
கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள்
-முனைவர். மா. தியாகராசன்.
முன்னுரை
சங்கத் தொகை நூல்களாகிய எட்டுத் தொகை நூல்களுள் ஆறாவது நூலாக அமைந்திருப்பது கலித்தொகை ஆகும். கற்றறிந்தார் ஏத்தும் கலிஎன்று போற்றப்படுகின்ற சிறப்புக்குரிய இந்நூலில் மதுரையாசிரியர் நல்லந்துவனார் இயற்றிய கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒரு பாடல். சேரமான் பாலை பாடிய பெருங்கருங்கோ பாடிய பாலைக் கலிப் பாடல்கள் முப்பத்தைந்து கபிலர் இயற்றிய குறிஞ்சிக்கலிப் பாடல்கள் இருபத்தொன்பது. மதுரை மருதன் இளநாகனார் புனைந்துள்ள மருதக் கலிப்பாடல்கள் முப்பத்தைந்து,, சோழன் நல்லுருத்திரன் இயற்றிய முல்லைக் கலிப் பாடல்கள் பதினேழு. கடவுள் வாழ்த்துப்பாடிய மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரே எழுதி முடித்துள்ள நெய்தற் கலிப் பாடல்கள் முப்பத்து மூன்று ஆக மொத்தம் நூற்றைம்பது பாடல்கள் இந்நூலின் கண் அழகுற அமைந்துள்ளன.
இந்நூலின் மூலமாகப் பண்டைய தமிழர் தம் வாழ்வியல். பழக்க வழக்கங்கள், பண்பு நலன் முதலியவற்றைத் தெள்ளிதின் உணர முடியும். இக்கட்டுரையின் வழியாகக் கலித்தொகை காட்டுகின்ற பண்பு நலன்களில் சிலவற்றை ஆய்ந்தறிவோம்.

பண்பு பற்றிய விளக்கம்
பொதுவாகப் பண்புஎன்னும் சொல்லுக்குக் குணம்என்பது பொருள், பலவகையான குணங்களையும் பண்புஎன்னும் சொல் குறிக்கும் எனினும் பண்பு என்னும் சொல்லுக்குத் தனிப்பட்ட ஒரு பொருளையும் கலித்தொகை விளக்கி கூறுகிறது. மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் புனைந்துள்ள நெய்தற் கலியில் மாமலர் முண்டகம்” (கலித்தொகை பாடல் எண் 133, நெய்தற்கலி பாடல் எண் 16) என்று தொடங்கும் பாடலில் பலவகையான குணநலன்களுக்குரிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. ஆற்றுதல் என்ப தொன்று அலந்தவர்க்கு உதவுதல்என்னும் அடி. இல்லறம் நடத்துதல் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது. வறுமையுற்றவர்க்கு ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதேயாகும்என்னும் பொருள் அமையப் புணையப்பட்டுள்ளது. அடுத்ததாகப் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமைஎன்னும் தொடர். இது பாதுகாத்தல்என்று சிறப்புறக் கூறத்தக்கது தன்னுடன் கூடியவரைப் பிரியாமல் இருப்பதுவே யாகும்என்னும் பொருளில் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பண்புஎன்னும் சொல்லுக்குரிய விளக்கமாகப் பண்பெனப்படுவது பாடறிந்தொழுதல்எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கட்பண்பு என்று சிறப்பித்துக் கூறப்படுவது. உலக நடையை அறிந்து அதற்கேற்ப நடத்தல்என்பது அதன் பொருளாகும்.

இதனை அடுத்து அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை பொறை ஆகிய சொற்களுக்குரிய பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. அன்பு என்று கூறப்படுவது தன் சுற்றத்தாரைத் துன்புறுத்தாமல் பாதுகாத்தல். அறிவு எனப்படுவது. அறிவிலார் தன்னைப் பழித்துப் பேசியவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல், செறிவு என்பது, கூறிய ஒன்றை மறுத்துக் கூறாமல் இருத்தல். நிறை என்பது, ஒரு செயலைப் பிறர் அறியாதாவாறு மறைந்து செய்தல். முறை என்பது நியாயம் வழங்கும்போது வேண்டியவர், வேண்டாதவர் என்னும் கண்ணோட்டம் இல்லாமல் அவர் செய்த தவறுக்கேற்ற தண்டணை வழங்குதல் பொறை எனப்படுவது பகைவரை வீழ்த்துவதற்கு உரிய காலம் வரும் வரையில் பொறுத்திருத்தல் என்று விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. எனினும் இந்தக் கலித்தொகைப்பாடல் பண்புஎன்பதற்குத் தனிப்பட்ட விளக்கம் வழங்கியுள்ளது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும்.

போற்றி உரைத்த பண்புகள்
 “அருள் செய்து வந்த அறவோர், தாபதர் முதலியோர்க்குத் தலைவன் அறவுணர்வுடன் வேண்டுவன கொடுக்கக்கூடயவன்என்னும் கருத்து. பாலைக்கலி 11ஆம் பாடலில். அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்என்று கூறப்பட்டுள்ளது. கொடை கொடுக்கும் அறவுணர்வு கொண்டவன் தலைவன் என்பதால், கலித்தொகையில் கொடைப்பண்பு பாராட்டிக் கூறப்பட்ட ஒரு பண்பாக விளங்குகிறது. அறத்திறனைப் பாராட்டி கலித்தொகை அடுத்த அடியில் பெரிதாய பகை வென்று பேணாரைத்தெறுதலும்எனத் தலைவனது. மறத்திறன் பாராட்டப் பெற்றுள்ளது. கொடைப் பண்பு போற்றுதற்குரியது. மேலும் கொடையளிப்போர் தம் செல்வம் தழைத்துச் செழிக்கும் என்னும் நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்ததைக் கலித்தொகை எடுத்தியம்புகிறது. இதோ கலித்தொகை கூறும் கருத்து நீர்வளம் மிக்க ஓர் ஆற்றங்கரையில் மரங்கள் செழித்துத் தழைத்திருந்தன. அந்தக் காட்சிக்கு உவமையாகக் கலித்தொகை, “ஈகைத்திறம் மிக்க தீதற்றோர் செல்வம் வளர்ந்து செழிப்பதைஎடுத்துக் காட்டியுள்ளது. ஈதலிற் குறைகாட்டாது அறனறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல் தீங்கரை மரநந்த” (பாலைக்கலிபாடல் எண் 27) என்பன கலித்தொகைப் பாடல் வரிகளாகும்.

உலகம் நிலையாமை உடையது; அந்த நிலைமையை உணர்ந்தோர், தம்மிடம் உள்ள செல்வங்களை வாரி வாரி வழங்குவார்கள். அதுபோல மரங்கள் மலர்ந்த மலர்களைச் சொரிந்தன. என்பதனை. உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்’ (பாலைக்கலி-31) என்று கலித்தொகை கூறியுள்ளது.

கல்வி, கேள்வி, ஒழுக்கங்களால் சிறந்த ஆன்றோர் அடக்கம் உடையவர்களாக இருப்பார்கள் என்னும் கருத்து. ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லாச் சினையொடும்” (பாலைக்கலி-31) கிளைகளில் உள்ள அரும்புகள் மலராகின்ற வரையில் அடக்கமாக இருக்கும் காட்சிக்கு ஆன்றோர் அடக்கமாக இருத்தல் உவமை கூறப்பட்டுள்ளது.

மேலோர் தம்முடைய புகழை மற்றவர் கூறக்கேட்கும் போது நாணத்தால் தலை குனிந்து இருப்பார்கள். அதுபோல இரவில் மரங்கள் தலை சாய்த்து உறங்கினஎன்றும் கருத்தினைத் தம்பு கழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச” (நெய்தற் கலி பாடல்-2) எனக் கலித் தொகை விளக்கிக் கூறுவது சான்றோர் தம் அடக்கப் பண்பை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

சான்றோர் பிறர் துன்பத்தையும் தம் துன்பமாகக் கருதி அதனைப் போக்க அறம் செய்யும் பண்பு உடையவர்என்பதைப் பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றோர்க்கு எல்லாம் கடன்.” (நெய்தல் கலிப்பாடல் 22) என கலித்தொகை எடுத்துக் கூறியுள்ளது.

வேண்டியவர் வேண்டாதவர் என்னும் கண்ணோட்டம் இல்லாமல் நடுநிலையாக நின்று நீதி வழங்கும் பண்பு கலித்தொகையில் போற்றி கூறப்பட்டுள்ளது. ஓர்வுற் றொருதிறம் ஒல்காத நேர்கோல் போல் அறம் புரி நெஞ்சத்தவன்” (குறிஞ்சி கலிப்பாடல் எண்.6) என்பது கலித்தொகைத் தொடர். ஒரு பக்கம் சாயாமல் நடுநின்று தன்பால் வைக்கப்படும் பொருளுக்கேற்ப சாய்கின்ற துலாக்கோல் போல நடுநிற்கின்ற அறிவுணர்வு கொண்டவன் தலைவன்என்பது இத்தொடரின் பொருளாகும்.

பகைத்து வருபவன் கூற்றுவன் ஆனாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கின்ற வீரமும், நட்புக் கொண்டவர்களிடம் தோற்பதற்கு நாணம் அடையாத பெருந்தன்மையும் உயர்ந்த பண்புகள் என கலித்தொகையில் சுட்டிக் காட்டியுள்ளது. பகை எனின் சுற்றம்வரின் தொலையான்றவன் நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன்” (குறிஞ்சிக் கலிப்பாடல் எண். 7) என்பவை கலித்தொகையின் வரிகள்.

மேலும் தலைவன்தன் மீது பொறாமைக் கொண்டவர்கள் தன்னைப் பற்றி குறைகளை கூறினாலும், தான் யார் மீதும் குறை கூறாதவன்என்று தலைவன் பண்பு பாராட்டப்பட்டுள்ளது.

மாறு கொண்டாற்றாரெனினும் பிறர் குற்றம் கூறுதல் தேற்றாதோன்” (குறிஞ்சி கலிப்பாடல் எண்.7) என்பவை கலித்தொகை வரிகள்.

வெறுத்து ஒதுக்கிய பண்புகள்
 ஒருவர் தம் அருகில் இருக்கும்போது அவரை புகழ்ந்து பாராட்டுவதும், அவர் எதிரில் இல்லாதபோது அவரைப் பற்றிய பழி தூற்றிக் கூறுவதும் இன்று பரவலாக நாம் பார்க்கக்கூடிய பண்பு இதனைக் கலித்தொகை எடுத்துக் காட்டுவதற்கும் இழித்து கூறுவதற்கும் தயங்கவில்லை. சிறப்பு செய் துழையராப் புகழ் போற்றி மற்றவர் புறக்கொடையே பழி துற்றும் புல்லியார்” (பாலைக்கலி பாடல் எண்.24) என கலித்தொகை புறங் கூறுபவர்களை புல்லியர் எனக் கூறியுள்ளது.

ஒருவர் செல்வராக இருக்கும்பொழுது அவருடன் சேர்ந்து அவர் செல்வத்தை எல்லாம் துய்த்து மகிழ்ந்து, பின்னர் அவர் வறுமையை அடைந்தபோது அவருக்கு உதவாமல் புறக்கணித்து பிரிகின்ற பண்பைப் கலித்தொகை, குற்றமென்று குறித்து காட்டுகிறது.

செல்வத்துல் சேர்ந்தவர் வளனுண்டு மற்றவர் ஒல்கிடந்து உலப்பிலா உணர்விலார்” (பாலைக்கலிப் பாடல் எண்.24) என்பது கலித்தொகை.

ஒருவருடன் மனம் ஒன்றி நட்புக் கொண்டு அதன் காரணமாக அவர் நம்மைப் பற்றிய மறைபொருளையெல்லாம் கூறக் கேட்டறிந்து கொண்டு அவரைப் பிரிந்து பின்னர் தம் கேட்டறிந்தவற்றை பிறருக்கு எடுத்துக் கூறுகின்ற பண்பை கலித்தொகை இழித்துக் கூறுகிறது.

பொருந்திய கேண்மையின் மறையுணர்ந்து அம்மறை பிரிந்தகால் பிறருக்கு உரைக்கும் பீடிலார்” (பாலைக்கலிப் பாடல் எண். 24) கூடியிருந்தபோது அறிந்து கொண்ட மந்தணச் செய்திகளை பிரிந்தவுடன் பிறர்க்கு எடுத்துக் கூறுபவரை பெருமையற்றவர் என்று கலித்தொகை இழித்து கூறியுள்ளது.

நெய்தல் கலி 32ம் பாடலில் தனக்கு கற்பித்த ஆசிரியருக்கு பொருளளிக்காமல் அவரை வருத்தமுற செய்தவன் கற்ற கல்வியை தவறாக பயன்படுத்துபவன் ஆகியோர் செல்வம் அழியும் தக்க நேரத்தில் தனக்கு உதவியவனுக்கு திரும்ப உதவாதவன் செல்வம் அவன் பிள்ளைகளிடத்து சென்றாலும் அச்செல்வம் அவர்களையும் துன்புறுத்தாமல் விடாது. சுற்றத்தார் மனம் வருந்துமாறு சேர்ந்த செல்வமும் அழியும். ஒருவன் தான் கொடுத்த வாக்குறுதியை தவற விட்டு விட்டால் அவன் அப்போது வெற்றி பெற்றாலும் பின்னர் அத்தவறுதல் அவனை அழிக்காமல் விடாதுஎன்பவை நெய்தற்கலி இடித்துரைக்கும் பண்புகள்.

இதோ நெய்தற்கலிப்பாடலில் மேறகூறிய கருத்தமைந்த பகுதி.

கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகிர்ந்து உண்ணான். ருவிச்சைக்கண் தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்இப்பகுதியில் கற்ற கல்விக்கு மாறாக நடப்பவன் பொருள் அழியும் என்னும் கருத்து சிந்திக்கத்தக்கது. கற்று அறியாதவன் அறியாமையால் தவறு செய்தால் அது மன்னிக்கப்பட்டாலும், அறிந்தவன் செய்யும் தவறு அறவே மன்னிக்க இயலாது. அதனால்தான் கடந்த நூற்றாண்டு கவிஞன் மகாகவி பாரதியாரும் படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான்! போவான்! ஐயோவென்று போவான்என்று சீற்றத்துடன் பாடினார். எனவே கற்றக் கல்விக்கு மாறாக நடப்பதை கலித்தொகை சாடுகிறது - அவர் செல்வம் அழியும் என்று கவிதை பாடுகிறது.

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதவன் மற்று அவன் எச்சத்துள் ஆயினும். அஃது எறியாது விடாதே காண்; கேளிர்கள். நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தான் இலான் குடியே போல் தமியவே தேயுமால் சூள்வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் வாள்வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்என்பவவை கலித்தொகை பாடல் அடிகள்.

முடிவுரை
கடைப் பிடித்தற்குரிய உயரிய பண்புகளும் வாழ்வில் கடைப்பிடிக்கக் கூடாத தீய பண்புகளும் கலித்தொகையில் அகப்பொருளை எடுத்துக் கூறும் பாடல்களுக்கு இடையிடையே ஏற்றவகையில் கற்போர்க்கு ஏற்றம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பண்புகள் கவினார்ந்த உவமைகள் வழியாகவும் கவர்ச்சி மிகு நிகழ்ச்சிகள் வாயிலாகவும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இவற்றால் பண்டைத் தமிழர் தம் பண்பாட்டு நலனை நாம் அறிந்தும் மகிழவும். அவற்றை நம் வாழ்விலும் கடைப்பிடித்து ஒழுகவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

கலித்தொகை காட்டுகின்ற பண்புகளுக்குள் சில பண்புகள் மட்டுமே கட்டுரையின் அளவு கருதிக் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுரையின் போக்கினையும் நோக்கினையும் தொடர்ந்து கலித்தொகை நூல் முழுவதையும் ஆழ்ந்து கற்றால் எல்லாப் பண்புகளையும் படித்தறிந்து இன்புறலாம். பண்பாடு மிக்க சங்க காலத் தமிழர் வாழ்வு மீண்டும் தழைக்கவும் அதனால் அன்பும் அறனும் செழிக்கவும் புதிய உலகம் பூக்கவும் வழிபிறக்கும்! இந்த வழிக்குரிய கதவுகளை நம் தமிழ் மொழி திறக்கும்!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • சிங்கங்களை இழக்கும் காடுகள் முகம்மது தம்பி மரைக்கார்   / 2020 ஜூன் 02 அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், மலையகத் தமிழ் மக்களின் 'தலைவனாக' அவர் இருந்தார் என்பதை, மறுத்து விட முடியாது. தனது தாத்தாவின் வழியில், அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் இறந்து போனமை, இரட்டிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகனின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் நினைவுக்கு வந்தது. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி, நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில்தான், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், அதே வருடம் செப்டெம்பர் 16ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார். ஆறுமுகன் இறக்கும் போது, அவருக்கு வயது 55. அஷ்ரப் மரணித்தபோது, அவருக்கு 52 வயது. இருவரின் மரணமும் அகாலமானவை. நடுத்தர வயதில், இருவரும் மறைந்து போனார்கள். அஷ்ரப்பும் ஆறுமுகனும் எங்கு 'முளை'த்தார்களோ, அந்த மண்ணின் மக்கள்தான் அவர்கள் இருவரையும் தத்தமது அரசியல் தலைவர்களாக்கிக் கொண்டனர். அஷ்ரப்பும் ஆறுமுகனும் வேறொரு நிலத்தின் 'வாடகைத் தலைவர்'களாக இருக்கவில்லை என்பதுதான் அவர்களின் பெருமிதங்களாகும். 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான மக்கள் முன்னணியுடன் கூட்டிணைந்து, அம்பாறை மாவட்டத்தில் கதிரைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. எம்.எச்.எம். அஷ்ரப், ஏ.எல்.எம். அதாவுல்லா (தற்போதைய தேசிய காங்கிரஸ் தலைவர்) யூ.எல்.எம். முகைதீன் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, அந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தனர். ஆனால், தேர்தல் நடைபெறுவதற்கு முன்னராகவே, அஷ்ரப் மரணித்து விட்டதால், அவரின் இடத்துக்கு அவருடைய மனைவி பேரியலை வேட்பாளராக, முஸ்லிம் காங்கிரஸ் நியமித்தது. அந்தத் தேர்தலில், அஷ்ரப்பின் மனைவி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். கிட்டத்தட்ட அதேபோன்ற நிகழ்வுகள்தான், ஆறுமுகன் தொண்டமானின் மரணத்திலும் நடந்துள்ளன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணியமைத்துப் போட்டியிடுகிறது. அதற்கிணங்க, நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஆறுமுகன் களமிறங்கி இருந்தார். அவரின் திடீர் மரணத்தையடுத்து, அன்னாரின் வேட்பாளர் இடத்துக்கு, அவருடைய மகன் ஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார். அஷ்ரப்பின் மரணத்தின் பிறகுதான், அவருடைய பெறுமானத்தை அவரின் மண்ணின் மக்கள் முழுவதுமாக உணர்ந்தனர். அஷ்ரப் என்கிற அரசியல் தலைவரின் இழப்பை, முஸ்லிம்கள் இன்னும் வலியுடன் நினைவுகூருகின்றனர். அஷ்ரப்பின் 'இல்லாமை', அவரின் மண்ணுக்கு வாடகைத் தலைவர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. ஆறுமுகனின் இழப்பால், மலையகத்துக்கு அவ்வாறானதொரு நிலை நேர்ந்து விடக்கூடாது. ஒரு நிலத்தின் மக்களுக்காகப் போராடுவதற்கும், தலைமை வகிப்பதற்கும் அந்த நிலத்தில் பிறந்த ஒருவரால்தான் முழுவதுமாக முடியும் என்பதை, வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. நிலமொன்றில் வாழும் மக்களின் கண்ணீரை, வியர்வையை, கோபத்தை மட்டுமல்ல, தூஷண வார்த்தைகளைக் கூடப் புரிந்துகொள்வதற்கு, வாடகைத் தலைவர்களால் முடிவதில்லை. தலைவர்கள், தமது சொந்த நிலத்து மக்களின் வழியாகத்தான், மரணத்தின் பின்னரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அஷ்ரப்பின் பெயரையும் உருவத்தையும் தவிர்த்து, அவரின் பிறந்தகமான கிழக்கு மாகாணத்தில், 'முஸ்லிம் அரசியல்' இன்றுவரை சாத்தியப்படாமைக்குக் காரணம், அவருடைய நிலத்து மக்களின் மனங்களில், அவர் வாழ்ந்து கொண்டிருப்பதால் ஆகும்.  ஒவ்வொரு தேர்தலிலும், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, கிழக்கில் அஷ்ரப் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கின்றார். அஷ்ரப் உயிரோடிருந்த போது, அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் கூட, இப்போது அஷ்ரப்பைப் போற்றிப் புகழும் அரசியலைச் செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அஷ்ரப்பின் பெயரை வைத்து, ஏமாற்று அரசியலும் தாராளமாகவே நடக்கின்றன. தேர்ந்ததோர் அரசியல் தந்திரியாக,  அஷ்ரப் இருந்தார். அதேவேளை, தனது சமூகத்தையும் குறிப்பாக, தனது நிலத்து மக்களையும் அவர் ஆழமாக நேசித்தார். அதனால், தனது சமூகத்தை அடகு வைக்கும் 'அரசியலை', ஒருபோதும் அவர் செய்யவில்லை. ஆனால், வாடகைத் தலைவர்கள் அப்படியல்ல. தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமக்கு வாக்களித்த சமூகத்தையே, 'விற்றுப் பிழைத்த' வரலாறுகள் ஏராளமுள்ளன. சிறுபான்மை அரசியல் தலைவர்களில், ஆறுமுகன் தொண்டமானுக்கும் 'தந்தை' எனத் தமிழர்கள் அழைக்கும் செல்வநாயகத்துக்கும் மட்டுமே உள்ள பெருமையொன்று பற்றி, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், அண்மையில் சிலாகித்து எழுதியிருந்தார். 'அரசியல் கட்சியொன்றின் தலைவராகத் தந்தை செல்வா பதவி வகித்த நிலையில், அவர் அமைச்சராகாமல் அவரின் கட்சிக்குள், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த செனட்டர் திருச்செல்வத்தை அமைச்சராக்கினார். இவ்வாறே, ஆறுமுகன் தொண்டமான், தான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த முத்து சிவலிங்கத்தை, ஒருமுறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஆக்கினார். அரசாங்கங்களுடன் இணைந்திருந்த, வேறெந்தச் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களும், இந்தப் புகழ்மிக்க தைரியமான முடிவை எடுக்கவில்லை. ஆறுமுகன் தொண்டமான், அவருடைய சமூக மக்களுக்குள் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்திருந்தமையும் மக்கள் மீது அவரும் அவர் மீது மக்களும்  பரஸ்பரம் கொண்டிருந்த செல்வாக்கும் நேசமுமே இந்தத் தைரியமான முடிவை எடுப்பதற்குக் காரணமாக அமைந்திருக்க வேண்டும். தான் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கத்தக்கதாக, தனது கட்சியிலுள்ள வேறொருவர் அமைச்சரானாலும், தனது தலைமையை அவ்வமைச்சரால் பறித்துக்கொள்ள முடியாது என்ற நம்பிக்கை ஆறுமுகனுக்கு இருந்தமையால், அவர் யுக புருஷராகிறார்'' எனத் தெரிவித்துள்ளார் பஷீர் சேகுதாவூத். ஆறுமுகன் தொண்டமானின் மரணம் ஏற்படுத்தியுள்ள 'வெற்றிடத்தை', மலையகம் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான காலம் இன்னுமிருக்கிறது. ஆறுமுகனின் மரணம் காரணமாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தலைமைப் பதவி நிரப்பப்படும் போது, அந்தக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் மறந்து விடலாகாது. அஷ்ரப்பின் மரணத்தை அடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பதவியை நிரப்புவதில் ஏற்பட்ட மிகப்பெரும் தடுமாற்றங்களும் அதன் காரணமாக, இரட்டைத் தலைவர்கள் அந்தக் கட்சிக்கு நியமிக்கப்பட்டமையும் இங்கு கொள்ளத்தக்கது. 'சிங்கங்களின் கர்ஜனைகளால்தான், காடுகள் கம்பீரம் பெறுகின்றன' என்பதை, சிங்கங்களின் இழப்புகள்தான் அநேகமாகப் புரிய வைக்கின்றன. அஷ்ரப்பின் 'இல்லாமை'தான், அவரின் 'இருத்தலின்' அவசியத்தை, கிழக்கு முஸ்லிம்களுக்கு அதிகம் உணர்த்தியது. அதேபோன்று, ஆறுமுகன் இல்லாத மலையக அரசியலில், இப்போதைக்குச் சோபை இருக்கப் போவதுமில்லை. இனி, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதற்கும் திட்டுவதற்கும், ஆறுமுகன் இல்லை. எனவே, அவரின் புகழ் பாடுவதன் ஊடாக, அவரின் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் வளைத்துப் போடும் அரசியலைச் செய்ய வேண்டிய 'கையறு' நிலைக்குள், எதிர்க்கட்சிகள் தள்ளப்படும் நிலை ஏற்படும். அஷ்ரப் மரணித்த பின்னர், அவருக்கு எதிரான கட்சிகள், இப்படித்தான் நடந்து கொண்டன. எது எவ்வாறாயினும், மலையகத் தமிழர்களின் ஏராளமான தேவைகள், உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தலைவனாக, ஆறுமுகன் தொண்டமான் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. ஆனால், சிறுபான்மைச் சமூகங்களை அரவணைக்கும், மனநிலையற்ற தற்போதைய ஆட்சியாளர்களை,  ஆறுமுகன் இல்லாத அரசியலரங்கில், மலையகத் தமிழர் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது, மிக முக்கியமான கேள்வியாகும். இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது, ஆறுமுகன் தொண்டமான் வசமிருந்த சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்ற செய்தி வெளியாகியுள்ளது. மிகவும் குறைவான, அடிப்படை வசதிகளுடன் வாழ்க்கையைச் சிரமத்துடன் எதிர்கொள்ளும் மலையக மக்கள், சில நன்மைகளை இலகுவில் பெற்றுக் கொள்வதென்றால், அவர்களைச் சார்ந்த ஒருவர் அமைச்சுப் பொறுப்பை வகித்தல் அவசியமாகும். இந்த ஆட்சியில், ஆறுமுகன் மூலம் மலையகத் தமிழர்களுக்கு ஓர் அமைச்சர் கிடைத்தார். அவரின் மறைவுடன் அதுவும் இல்லாமல் போயிற்று. ஒவ்வொன்றையும் இழக்கும் போதுதான், அவற்றின் 'அருமை'கள் புரியத் தொடங்கும். அஷ்ரப் இல்லாமல் போனபோது, முஸ்லிம் சமூகம் தனது கம்பீரத்தை அரசியலரங்கில் இழந்தது. சிறுபான்மை அரசியல் தலைவர் ஒருவர் அகால மரணமடையும் போது, அவர் சார்ந்த அரசியல் கட்சியும் அவரின் சமூகமும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கும், அஷ்ரப்பின் மரணத்தின் பின்னரான சம்பவங்கள், உதாரணங்களாக இருக்கின்றன. சிந்திக்கத் தெரிந்தோருக்கு, வரலாற்றில் ஏராளமான பாடங்கள் உள்ளன. ஆறுமுகன்: ஓர்மை யாத்திரீகன் (ஆறுமுகன் தொண்டமான் மறைவை அடுத்து, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்  எழுதிய குறிப்பொன்றின் சில பகுதிகள்) 01 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது, தொழிற் சங்கம் என்றும் அரசியல் கட்சி எனவும் இரண்டு தடங்களில் பயணிக்கும் அமைப்பாகும். இவ்விரட்டை அமைப்புக்கு, ஆறுமுகன் தலைமை தாங்கத் தொடங்கிய ஆரம்பகாலத்தில், 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற அவ்வமைப்பின் வருடாந்த பேராளர் மாநாட்டுக்கு, விருந்தினர்களில் ஒருவராக என்னை அழைத்திருந்தார். அவ்வருடம் காங்கிரஸின் தலைவர், செயலாளர் என அதிகாரம்மிக்க இரண்டு பதவிகளுக்கும் ஆறுமுகன் ஒருவரே தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதற்காகக் கட்சி யாப்பும் மாற்றப்பட்டிருந்தது. அதேவேளை, அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். இம்மாநாட்டில் நான் பேசுகையில், ''தொண்டமான் அவர்களுக்கு கட்சியில் தலைவர், செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் மட்டுமல்ல, கட்சியில் இன்னும் மூன்று பதவிகளை அதிகமாகவும் வழங்கலாம். ஏனென்றால், அவர் 'ஒரு முகன்' அல்ல, 'ஆறு முகன்' அல்லவா''  என்றேன். கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கட்சி நிர்வாகிகளும் ஒன்று சேரக் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து, மகிழ்ச்சியோடு சிரித்தார்கள். பேசி முடித்து, மேடையில் இருந்து இறங்கி வந்து, நண்பர் ஆறுமுகனின் அருகில் அமர்ந்த போது, ''எனக்கு தெரியும், இது குத்திக்காட்டுண்ணு'' என்று கூறி, எனது இடுப்பில், அவரது முழங்கையால் செல்லமாகக் குத்தினார். காலப் போக்கில், அவரோடு இணைந்து செயற்படுகையில், ஆறுமுகன் உண்மையில் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர் என்பதை, ஐயந்திரிபுற அறிந்துகொள்ள முடிந்தது. இதை இலங்கைக்கே புரியவைத்துவிட்டுப் போயிருக்கிறார். 'பன்மை திரளத் தன்மை சூழ்ந்த' ஓர்மையான யாத்திரீகன் ஆறுமுகன். 02 பெரியவர்  சௌமியமூர்தி தொண்டமான் ஐயாவிடம், அரச அனுமதிப் பத்திரம் உள்ள 'சொட் கண்'  துப்பாக்கி இருந்தது. 1976ஆம் ஆண்டு ஒரு நாள், 12 வயது ஆறுமுகன், அப்போது பொலிஸ் அதிகாரியாகவும் பெரியவரின் அன்புக்குரியவராகவும் இருந்த கந்தசாமி ஐயாவிடம் வந்து, ''ஐயா, துப்பாக்கியால் சுடுவதைப் பார்க்க, எனக்கு ஆசை; சுட்டுக் காட்டுங்கள்'' என்று கேட்டார். கந்தசாமியார் துப்பாக்கியை எடுத்து ளுபு  தோட்டாவைப் புகுத்தி, மரக்கிளையில் நின்ற காகம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தினார். இதைப் பார்த்த சிறுவன் ஆறுமுகன், ''நானும் சுடணும் நானும் சுடணும்'' என்று அடம்பிடித்துத் துள்ளினான். பெரியவரின் கண்ணுக்குத் தெரியாதபடிக்கு, வேறு ஓர் இடத்துக்குச் சிறுவனை அழைத்துச் சென்று, துப்பாக்கியால் அதிர்வு குறைந்த வகையில், 'பொறி'யும் நாலாம் நம்பர் தோட்டா ஒன்றையும் நிரப்பினார் கந்தசாமி. மரத்தில் இருந்த ஒரு காகத்தைக் காட்டி, இலக்கு வைத்துச் சுடுமாறு கூறி, துப்பாக்கியை ஆறுமுகனிடம் கொடுத்தார். சரியாக காகத்தை இலக்கு வைத்த 'தம்பி', துப்பாக்கியின் குழலை, காகம் இருந்த இடத்துக்கு அப்பால் வலப்புறமாக, ஓர் அடி அளவு நகர்த்தி, 'றிகறை' அழுத்தினார். 'டுமீல்', காகம் கரைந்தபடி எழும்பிப் பறந்தோடிச் சென்றது. ''ஏன் தம்பி, நீங்கள் காகத்தைச் சுடாமல் தப்ப விட்டீங்க''? என்று கேட்ட ஐயாவிடம், ''காகம் பாவம், இப்ப அது, அதுட கூட்டுக்கு பிள்ளைகளப் பார்க்க போயிருக்குமில்ல..'' என்று சொன்னார் தம்பி ஆறுமுகன். இப்படிப்பட்ட இனிய 'உயிரபிமானி'யாக ஆறுமுகன் இருந்தார். ஆறுமுகனின் இழப்பின் பின்னர், மலையகத்து மக்களின் எதிர்காலம் பற்றிய கவலையும் சந்தேகமும் இருந்தாலும், காலத்துக்குக் காலம் யுக புருஷர்களை, தமக்குத் தலைவர்களாகப் பெற்றுவந்த அந்த மக்கள், புதிய தலைவர் ஒருவரை விரைவில் பெறுவது நிச்சயமாகும். வாழுங்காலம் முழுவதும் வாழ்க்கைக்காகப் போராடுகிற, தொழிற் சங்கப் போராட்டங்களுக்குப் பழக்கப்பட்ட தேர்ந்த போராளிகளான அம்மக்கள், தமக்கான புதிய தொண்டரை விரைவில் தெரிவார்கள்.             http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிங்கங்களை-இழக்கும்-காடுகள்/91-251265
    • கற்கை நன்றே கற்கை நன்றே... காரை துர்க்கா   / 2020 ஜூன் 02 இருவர் கவலையுடன் பகர்ந்த விடயங்களைக் கொண்டு, இன்றைய பத்தியைத் தொடர விளைகிறேன். ஒருவர், 39 வயதுடைய பெண். இவரது தலைமையிலேயே அந்தக் குடும்பம் சீவியம் நடத்துகின்றது. அதாவது, பெண் தலைமைத்துவக் குடும்பம். அந்தப் பெண்னுக்கு 17, 15 வயதுகளில், முறையே பெண்ணும் ஆணும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மற்றையவர், ஆங்கில ஆசிரியர். ஒரு நாள் ஆசிரியர், ஆங்கில வினைச் சொற்களைக் கற்பித்துக் கொண்டிருந்தாராம். அவ்வேளையில், Learning (கற்றல்), Earning (உழைத்தல்) ஆகிய சொற்களின் தமிழ்க் கருத்தை விளங்கப்படுத்திய வேளை, "இந்த இரு சொற்களிலும் முதன்மையானது எது" என, மாணவர்களிடம் கேட்டாராம். "Earning" (உழைத்தல்) என்ற சொல்லே முக்கியமானது என, ஏகோபித்த குரலில் மாணவர்களிடமிருந்து பதில் வந்ததாம். அடுத்து, அந்தப் பெண்ணின் கதை. அவர், நாளாந்தம் கூலி வேலைக்குச் சென்றே, குடும்பத்தை நடத்தி வருகின்றார். ஒரு நாளுக்குரிய கூலியாக, 700 ரூபாய் வரையிலேயே பெறுகின்றார். இந்த வருமானத்தில், குடும்பச் செலவுடன் பிள்ளைகளது கல்வி நடவடிக்கைகளையும் முன்கொண்டு செல்வதில், பலத்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றார். அத்துடன், தனது உடல் உபாதைகள் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக மாதாந்தம், அரச வைத்தியசாலைக்கு 'கிளினிக்' சென்று வருகின்றார். இதனால், ஒழுங்காக வேலைக்குச் செல்வதிலும் இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றார்.  "அம்மா! எங்களுக்காக நீங்கள் ரொம்பவும் கஷ்டப்படுகின்றீங்கள். நான் படித்தது போதும்; இன்னும் ஒரு வருடம் பொறுத்திருங்கள். 'ஓஎல்' சோதனை முடிந்தவுடன், நான் உழைக்கப் போறன். நான் உழைச்சு, குடும்பச் செலவையும் அக்காவின்ர படிப்பையும் பார்த்துக் கொள்கின்றேன்". தனது நெருக்கடிகளைத் தினசரி பார்த்து வருகின்ற 15 வயதுடைய மகன், இவ்வாறு தெரிவித்ததாக அந்தப் பெண் கூறினார். தனது துன்பங்களைப் புரிந்து கொண்ட மகனை நினைத்து, ஒருபக்கம் பெருமைப்படுவதாகவும் மறுபக்கம், பிள்ளையின் கற்றலுக்கான மனநிலை, எங்கள் குடும்ப நிலைவரத்தால் குழம்பி விட்டதே எனக் கவலைப்படுவதாகவும் அப்பெண்மணி தெரிவித்தார். 'ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் போல', வடக்கு-கிழக்கில் வாழும் பல்லாயிரக்கணக்கான பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் கணிசமானோர், இதே நிலையிலேயே இன்று உள்ளனர். இரண்டாம் கட்ட ஈழப் போர் என்று கூறப்படுகின்ற ஆயுதப் போர், பிரேமதாஸ அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே, 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பமானது. அக்காலப் பகுதியில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பிரதேசம், 'பாதுகாப்பு வலயம்' எனச் செஞ்சிலுவைச் சங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. இதை அடையாளப்படுத்தும் முகமாக, வலயத்தைச் சூழ, சகவடிவில் (+) மின்சாரக் குமிழ்கள் ஒளிரவிடப்படும். அந்தக் காலப் பகுதியில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மின்சார விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. அதேவேளை, எரிபொருள் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பிரதேசத்தில், ஒளிரவிடப்பட்டிருந்த மின்குமிழ்களின் வெளிச்சத்தில், இரவில், வீதியோரத்தில் இருந்து, பல மாணவர்கள் கல்வி கற்றார்கள்; சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார்கள்; தங்களுக்கும் தாங்கள் சார்ந்த சமூகத்துக்கும் பெருமை சேர்த்தார்கள். இவ்வாறாக, அன்று வெடியோசைகளுக்கும் வேட்டொலிகளுக்கும் இடையேயும் உணவுத் தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் நாளை உயிருடன் இருப்போமோ,  கந்தகக் குண்டுக்கு இரையாகி விடுவோமோ என்ற ஐயப்பாடுகள், நிச்சயமின்மைகளுக்கு இடையேயும், தெரு விளக்கில் படித்து எம்மவர்கள் சாதித்துக் காட்டினார்கள். அன்று, கடும் யுத்தத்துக்குள்ளும் படித்து முன்னேற வேண்டும் என, அன்றைய சந்ததி கருதியது. இன்று, உழைத்து முன்னேற வேண்டும் என, இன்றைய சந்ததி கருதுகின்றது. இதற்கு, இன்றைய சந்ததியைக் குற்றம் சொல்லிப் பிழை இல்லை. ஏனென்றால், இன்றைய சந்ததி கடந்து வரும் பாதைகள், முற்றிலும் பிழைத்துப்போய் விட்டன. இந்நிலையில், பெரும்பாலான பெற்றோர், என்ன விலை கொடுத்தேனும் தங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் என்றே உள்ளனர். ஆனாலும், அவர்களில் பெரும்பான்மையினர் பொருளாதாரப் பிரச்சினையுடன் தினசரி போரிட்டு வருவதால், பிள்ளைகளுடன் சமாதானமாக வாழ்வது, சவாலான விடயமாகி வருகின்றது. அதேவேளை, பட்டம் பெற்றவுடன் அரசாங்கம், தங்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் தன்மை, ஏனைய இனங்களைவிடத் தமிழ் மக்கள் (மாணவர்கள்) மத்தியில் அதிகமாக உள்ளது. அதற்காகத் தங்கள் மாவட்டச் செயலகம் முன்னால், தகரக் கொட்டகை அமைத்து, பட்டதாரிகள் போராட்டம் நடத்துகின்றனர். இவற்றைப் பார்க்கின்ற 15 வயதுடைய மாணவன் ஒருவன், 'படித்துப் பட்டம் பெற்றும் வேலை இல்லையே! இப்போதே ஏதாவது உழைக்கலாம்' என, அப்பாவித்தனமாக மனதில் நினைக்கலாம். இவ்வாறானதொரு நிலையில், ''வடக்கு மாகாணத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிக்க வேண்டுமானால், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், பெற்றோர் மத்தியில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் கரிசனையை ஏற்படுத்த வேண்டும்" என, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு, சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு தொடர்பிலேயே, பேராசிரியர் இவ்வாறாகக் கருத்து வெளியிட்டு உள்ளார். வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், ஆசிரியர் வளம் உட்பட அனைத்து வளங்களும் சிறப்பாகக் காணப்படுகின்றன. அதேவேளை, அரசாங்கம், தனியார் தொண்டு நிறுவனங்கள ஊடாகவும்; பாடசாலைகளுக்கு வளங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்படாது இருப்பதற்குக் காரணம், பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்தாமையே எனச் சுட்டிக்காட்டுகின்றார் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை. இந்நிலையில், பெற்றோர், தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்தாமை மட்டுமே, வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் என்ற கருத்து, குழப்பமானதாகவே உள்ளது. ஏனெனில், மாணவர்களின் கல்வி அறுவடை, பெற்றோருடன் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக சமூகம் ஆகியோரிலும் தங்கியுள்ளது. இதில், சிலருக்கு நோயைக் குணப்படுத்த வேண்டும். அத்துடன், சில விடயங்களில் ஆளையே குணப்படுத்த அல்லது, மாற்ற வேண்டிய தேவைப்பாடுகள், தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் நிறையவே உள்ளன. இதற்கிடையே, 1981ஆம் ஆண்டு, இது போன்றதொரு (ஜுன் 01) நாளிலேயே, தமிழ் மக்களின் பொக்கிஷமான யாழ்ப்பாணம் பொது நூலகம் (அறிவாலயம்) தீயுடன் சங்கமமானது. அந்தத் தீ அணைந்தாலும், அதன் உக்கிரம், எங்கள் மனங்களில் கனன்று கொண்டிருக்கின்றது. இவ்வாறாகத் தமிழ் மக்களின் கல்விக்குக் கல்லறை கட்ட, காலங்காலமாகப் பல தரப்புகளாலும் பல தடவைகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இன்னமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, பல்வேறு தடைகளையும் உடைத்தெறிந்தே, தமிழ்ச் சமூகம் கல்வியைத் தொடருகின்றது; தொடர வேண்டிய நிலையில் உள்ளது. நடைமுறைக்குச் சாத்தியம் எனப் பிறர் கருதுகின்ற நிலையை, நாம் அதையும் தாண்டிச் செல்வதற்கும் வெல்வதற்கும், ஒரு தரப்பை மாத்திரம் சுட்டிக்காட்டலாமா?  இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் கல்விப் பின்னடைவுக்கு, எமது ஒட்டுமொத்த சமூகமும் அதன் கூறுகளும் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதே நியாயமானது. நாம் முன்னோக்கிப் பார்க்க வேண்டிய விடயங்கள், ஏராளம் உள்ளன. எமது சொந்தப் பலவீனங்களைக் கூர்ந்து கவனிப்போம்; தவறுகளிலிருந்து பாடம் கற்போம். கல்வியின் ஊடாக ஏற்படுகின்ற, தாக்குப் பிடிக்கும் திறனே, எமக்குப் பல வழிகளிலும் உதவப் போகின்றது. எமது இளஞ்சந்ததியின் கல்வியே, எமது கைகளில் போடப்பட்டிருக்கும் அடிமைச் சங்கலியை உடைக்கப் போகின்றது. வீழ்ந்து கிடக்கும், எமது பொருளாதாரத்தை நிமிர்த்தப் போகின்றது. இது இவ்வாறு நிற்க, ''சரி! உங்கள் மகன் அடுத்த ஆண்டு உழைக்கப் போறான். உங்கள் பஞ்சம் பறந்தோடப் போகுது. இனி, நீங்கள் வீட்டிலிருந்து சமைத்து ஆறின சோறு சாப்பிடலாம் தானே'' என, அந்த அம்மாவைக் கேட்டபோது, ''உந்தச் சின்னப் பொடியன்ர கதையை விடுங்கோ. நான் பிச்சை எடுத்தாவது, என்ர ஆம்பிளைப் பிள்ளையைப் படிப்பிக்க வேண்டும்'' என்ற பதிலில் பொதிந்திருந்த வைராக்கியம், மெய் சிலிர்க்க வைத்தது. 'கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற, தமிழ்ப் பாட்டியின் வரிகளும் வைரமானவையே!       http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கற்கை-நன்றே-கற்கை-நன்றே/91-251264
    • இனவெறித் ’தீ’ என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூன் 01 அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், 20 டொலர் போலிப் பணத்தாளைப் பயன்படுத்திய சந்தேகத்தில், கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற நபர், வௌ்ளையின பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்படும் போது, கைவிலங்கு பூட்டப்பட்டு, நிலத்தில் தலைகுப்புறப் படுக்கவைக்கப்பட்டு, குறித்த பொலிஸ் அதிகாரி, தனது முழங்காலால் ஃபுளொய்டின் கழுத்தை, நீண்ட நேரம் அழுத்திப் பிடித்திருந்ததன் காரணமாக, மூச்செடுக்க முடியாது ஃபுளொய்ட் உயிரிழந்தார். வௌ்ளையினப் பொலிஸ் உத்தியோகத்தர்களால், கறுப்பினத்தவர்கள் மீது, இனவன்மம் கொண்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது, அமெரிக்க வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கண்டனத்துக்கும் கவலைக்குமுரிய இனவெறியாட்டமாகும். அந்த இனவெறியின் அண்மைய பலிதான் ஜோர்ஜ் ஃபுளொய்ட். இந்த இனவெறிப் படுகொலை, அமெரிக்கர்களைக் கோபமுறச் செய்திருக்கிறது. அதன் எதிரொலியாக, அமெரிக்காவின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் பொலிஸாருக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான வன்முறைத் தாக்குதல்களும் பொதுச் சொத்துகளை நாசம் செய்வதும் கடைகளைச் சூறையாடுவது போன்ற குற்றங்களும் இடம்பெற்று வருகின்றன. இதுவும் கூட, அமெரிக்காவுக்குப் புதியதொன்றல்ல. மனித வரலாறு முழுவதும், இனவாதம் நிலவி இருக்கிறது; இன்னமும் நிலவிக் கொண்டிருக்கிறது. தோலின் நிறம், மொழி, பழக்கவழக்கங்கள், பிறந்த இடம் போன்ற நபர்களின் அடிப்படைத் தன்மையை வெளிப்படுத்தும் எந்தவொரு காரணிகளால், ஒரு நபர், இன்னொரு நபரைவிடத் தரங்குறைந்தவர் என்ற நம்பிக்கையே இனவாதமாகிறது. இனவாதமானது போர்கள், அடிமைத்தனம், நாடுகளின் உருவாக்கம் ஆகியவற்றுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மனிதனே மனிதனைத் துன்புறுத்துவதற்கும், அழிப்பதற்குமான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. இனவாதம் பற்றிப் பேசும் போது, அடிப்படையில் அதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தனிநபர் இனவாதம்; இரண்டாவது, ஒழுங்கு முறைசார்ந்த இனவாதம். தனிப்பட்ட இனவெறி என்பது, ஒரு நபரின் இனவெறி அனுமானங்கள், நம்பிக்கைகள், நடத்தைகளைக் குறிக்கிறது. இது பற்றிக் கருத்துரைக்கும் ஹென்றி, டேடர் ஆகியோர், ''இது 'நனவானதும் மயக்கமுள்ள தனிப்பட்ட தப்பெண்ணத்திலிருந்து உருவாகும் இனப் பாகுபாட்டின் ஒரு வடிவம்'' என்கின்றனர். இருப்பினும், தனிநபர் இனவெறி, ஒரு வெற்றிடத்தில் உருவாக்கப்படவில்லை. மாறாக, ஒரு சமூகத்தின் அடித்தள நம்பிக்கைகள், விடயங்களைப் பார்த்தல், அவற்றைச் செய்வதற்கான வழிகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது. மேலும், இது நிறுவனங்கள், அவற்றின் கட்டமைப்புகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது. மறுபுறத்தில், ஒழுங்குமுறைசார் இனவெறி என்பது, நிறுவப்பட்ட நிறுவனங்களில் நிலைநிறுத்தப்பட்ட கொள்கைகள், நடைமுறைகளை உள்ளடக்கியது. இவற்றின் விளைவாக, நியமிக்கப்பட்ட குழுக்களை விலக்குவது, ஊக்குவிப்பது போன்ற செயற்பாடுகளின் ஊடாக, ஒழுங்கு முறைசார்ந்த இனவெறி முன்னெடுக்கப்படுகிறது. ஒழுங்கு முறைசார்ந்த இனவெறியானது, தன்னை இரண்டு வழிகளில் வௌிப்படுத்துகிறது. முதலாவது, நிறுவன மயப்படுத்தப்பட்ட இனவெறி; மற்றையது, கட்டமைப்புச் சார்ந்த இனவெறி. இனவெறி (இனவாதம்), ஒரு சமூகத்தின் ஆட்சிக் கட்டமைப்புக்குள் ஊடுருவி, அதைக் கைப்பற்றும்போது, அது நிறுவன மயப்படுத்தப்பட்டதும் கட்டமைப்பு சார்ந்த இனவெறியை ஸ்தாபிக்கிறது. இத்தகைய ஒழுங்குமுறைசார் இனவெறியால் பீடிக்கப்பட்ட சமூகத்தில் இருக்கும் தனிநபர்களிடம், அவர்களை அறியாமலேயே இனவெறி ஊறிவிடுகிறது. இன்று, அமெரிக்காவில் பற்றி எரியும் இனவெறிக்கெதிரான குரல்கள், இலங்கையிலும் ஒலிக்கின்றன; அது பாராட்டத்தக்கதே. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னது போல, ''ஓர் இடத்தில் இடம்பெறும் அநீதியினாது, அனைத்து இடங்களிலும் உள்ள நீதிக்கு ஆபத்தானதாகும். ஆகவே, உலகின் எந்த மூலையில் அநீதி நிகழ்ந்தாலும் மனிதனாகச் சக மனிதனின் நீதிக்காகக் குரல்கொடுப்பது எமது கடமை ஆகிறது''. ஆனால், இலங்கையர்களின் 'நியாயத்தவம்', 'நீதிக்கான குரல்' அமெரிக்காவுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. இதைச் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு. இன்றைய தினமானது, யாழ்ப்பாண நூலகம் இனவெறித் தீயால் சாம்பலாக்கப்பட்ட துயரம் நிகழ்ந்து, 39 ஆண்டுகள் நிறைவடையும் துயர தினமாகும். ''ஓர் இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் அடையாளத்தை, வரலாற்றை அழித்து விடுங்கள்; அந்த இனம், தானாக அழிந்துவிடும்'' என்பது, மிகப் பிரபலமாக அறியப்பட்ட ஒரு கூற்றாகும். உலக வரலாற்றில், ஓர் இனத்தை, சாம்ராட்சியத்தை அழிக்கும் போர்களின் போது, அந்த இனத்தின், அந்த சாம்ராட்சியத்தின் நூல்களையும் நூலகத்தையும் அழித்த செயற்பாட்டைப் பல சந்தர்ப்பங்களிலும் காணலாம். ஓர் இனத்தின் பலமாக, அறிவுச்செல்வம் இருக்கும் பொழுது, ஓர் இனத்தின் அடையாளமாக நூல்களும் நூலகங்களும் இருக்கும் போது, அவற்றை அழிப்பதனூடாக அந்த இனத்தை அழிக்கும் கொடூர வரலாறு, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலமளவுக்குப் பழைமையானது. கி.மு 213இல், சீனாவின் சின் பரம்பரையின் முதலாவது சக்கரவர்த்தி என்று அறியப்படும் சின் ஷூ ஹூவாங், கவிதை, வரலாறு, தத்துவம் உள்ளிட்ட புத்தகங்களைக் கையகப்படுத்தி எரித்திருந்தார். கி.மு 300இல் ஸ்தாபிக்கப்பட்ட, அன்றைய உலகின் மிகப்பெரிய நூலகமாகக் கருதப்பட்ட 'அலெக்ஸாண்ட்ரியா' நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இது தீக்கிரையாக்கப்பட்ட காலமும் சந்தர்ப்பமும் மிகத் தெளிவாக அறியப்படவில்லை. எனினும், இது ஜூலியஸ் சீஸரால் அல்லது, ஓரீலியனால் அல்லது, அலெக்ஸாண்ட்ரியாவின் பாப்பரசர் தியோஃபீலியஸால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் ஆய்வாளர்களால் அதிகமாக முன்னிறுத்தப்படுகிறது. 'ஞானத்தின் இல்லம்' என்று அறியப்பட்ட பாக்தாத் நூலகம், கி.பி 1,258இல் மொங்கோலியப் படையெடுப்பின்போது, மொங்கோலியப் படைகளால் அழிக்கப்பட்டது. மத்திய கிழக்கின் அறிவுச் செல்வத்தின் பெரும்பகுதி, இதில் அழிந்துபோனது. 1930களில் ஜேர்மனியில், ஹிட்லரின் நாஸிப் படைகள், தமது கொள்கைக்கு மாற்றான நூல்களைக் கைப்பற்றித் தீக்கிரையாக்கினார்கள். 1992இல் பொஸ்னியாவின் பழைமை வாய்ந்த நூலகம், சேபியர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இந்தத் துயர் மிகு biblioclasm எனப்படும் புத்தக அழிப்பின், அறிவு அழிப்பின் தொடர்ச்சியாகத்தான் நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பையும் நினைவுகூர வேண்டியதாக இருக்கிறது. யாழ். நூலக எரிப்பு 'காடையர்'களால் நடத்தப்பட்டது என நம்ப வைக்கப்பட்டாலும், அதில் அரசாங்கத்தின், பொலிஸாரின் நேரடியானதும் மறைமுகமானதுமான பங்களிப்பு இல்லை என்று, எவராலும் மறுத்துவிட முடியாது. யாழ். நூலகம் எரிக்கப்பட்ட போது, மிகப் பெரும் இனத்து வேசியாகவும் பேரினவா தத்தின் முரசொலி யாகவும் காணப்பட்ட அமைச்சர் சிறில் மத்யூ, அவரது தளபதி என்றறி யப்பட்ட அமைச்சர் காமினி திஸாநாயக்க, அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு முக்கிய குழு யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தது. அதுமட்டுமல்ல, ஏறத்தாழ 500 பொலிஸாரைக் கொண்ட பெரும் பொலிஸ் படையொன்றும், தேர்தல் பணிகளுக்காக யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தது. 1981 மே 31, யாழ். நாச்சிமார் அம்மன் கோவிலடியில், அன்றைய யாழ்ப்பாண நகரபிதாவான ராஜா விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பாதுகாப்புக் கடமையில் நின்றிருந்த மூன்று பொலிஸ் கொன்ஸ்டபிள்கள், அடையாளம் தெரியாத இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதன் எதிரொலியாக, அவ்விடத்துக்கு விரைந்த ஆயுதமேந்திய பொலிஸ் படையொன்று, அவ்விடத்தில் தமது வெறியாட்டத்தை ஆடத் தொடங்கியது. அருகிலிருந்த கோவிலுக்கு தீவைத்த அவர்கள், தொடர்ந்து அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கினார்கள். இங்கு தொடங்கிய பொலிஸ் வன்முறைகள், யாழ். நகரின் மத்தியை நோக்கிப் பரவத் தொடங்கியது. யாழ்ப்பாணத்தின் சந்தைக் கடைத்தொகுதியும் புதிய சந்தைக் கட்டடமும் வர்த்தக, வணிக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர் மண்ணில், மீண்டும் ஒரு திட்டமிட்ட கலவரத்தை, பொலிஸார் நடத்திக் கொண்டிருந்தனர். மேலும், யாழ்ப்பாணத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தருமான வி. யோகேஸ்வரனின் வீட்டைச் சூழ்ந்து கொண்ட பொலிஸ் குழுவொன்று, அந்த வீட்டுக்குத் தீ வைத்தது. தீ வைக்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அவரது குடும்பமும் அந்த வீட்டிலேயே இருந்தனர். அவரும் குடும்பமும் விரைந்து வெளியேறியதால், மயிரிழையில் உயிர் தப்பினர். இதேநேரத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய முக்கிய பத்திரிகையான 'ஈழநாடு' பத்திரிகைக் காரியாலயமும் அச்சகமும் அங்கு நுழைந்த பொலிஸ் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதுடன், முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டது. 'ஈழநாடு' பத்திரிகையின் ஆசிரியரான கோபாலரட்ணம், கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமைடைந்தார். நான்கு பொதுமகன்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். மேலும், 31ஆம் திகதி இரவோடிரவாகத் தெற்கிலிருந்து பெருமளவு காடையர்கள் யாழ். நகரில் கொண்டு வந்து இறக்கப்பட்டதாக, இந்தக் கறுப்பு வரலாற்றைப் பதிவு செய்த பலரும் குறிப்பிடுகிறார்கள். இந்தக் காடையர் கூட்டம், யாழ்ப்பாணத்திலிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் காரியாலயத்துக்குள் நுழைந்து, அதைத் தீக்கிரையாக்கியதுடன், நகரிலிருந்த வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து, கொள்ளைகளிலும் ஈடுபட்டது. அத்தோடு, யாழ். நகரை ஆங்காங்கே அலங்கரித்த தமிழ்ப் பெரியார்களின் சிலைகளும் அடித்துடைக்கப்பட்டன. இவ்வாறு தொடர்ந்த வன்முறையின் விளைவாக, 1981 ஜூன் முதலாம் திகதி இரவு, பொலிஸ் கும்பலும் காடையர் கூட்டமும் தமிழர்களின் அடையாளமாகப் பரிணமித்த, யாழ். பொது நூலகத்துக்குள் புகுந்து, அதற்குத் தீ மூட்டினார்கள். ஓலைப் பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள், மூலப்பிரதிகள் உள்ளிட்ட ஏறத்தாழ 97,000 நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 'யாழ்ப்பாண வைபவ மாலை' என்ற வரலாற்று நூலின் ஒரேயொரு பிரதியும், இதில் அழிந்து போனது பெருஞ்சோகம். சுருங்கக் கூறிவதாயின், தமிழர்களின் அடையாளமும் வரலாறும் அரசாங்கத்தின் ஆதரவுடைய இனவெறிக் கூட்டத்தால் அழித்தொழிக்கப்பட்டது. இரவோடிரவாக இந்த இனரீதியான, புத்தக அழிப்பு (ethnic biblioclasm) நடத்தி முடிக்கப்பட்டது. பலம் வாய்ந்த இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்த போது, அவர்களின் கண்முன்னால் பொலிஸாரினாலும் காடையர்களாலும் பெரும் இனரீதியான வன்முறையும் இனரீதியான புத்தக அழிப்பும் நடத்தப்பட்டது என்றால், அது நிச்சயமாக அவர்கள் அறியாமல் நடந்திருக்க முடியாது. அமெரிக்காவின் இனவெறித் தீக்கு கண்டனம் தெரிவிக்கும் இலங்கையர்கள், தமிழ் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒவ்வோர் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் கூட, கண்டனத்தையாவது தெரிவிப்பதுதான் நியாயமாகும். கருகிய நூலகக் கட்டடத்துக்கு நீங்கள் வௌ்ளையடித்து விடலாம். ஆனால், அது மக்களின் மனங்களில் ஆறாத ரணமாகக் காணப்படும், இனவெறிக் காயத்துக்கு மருந்தாகிவிடாது; அழிந்துபோன பொக்கிஷங்களை மீட்டுத்தராது; இழந்த உயிர்களை மீட்பிக்காது. இந்த நாட்டில், மிகுந்த இரக்கமிக்க மனிதர்கள் இருக்கிறார்கள். அநியாயமாகக் கொல்லப்படும் ஒரு சிறுத்தைப் புலிக்காகக் கண்ணீர் வடிக்கும் இரக்கமிகு இதயங்கள் அவை. ஆனால், இந்த நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு முறைசார் இனவெறி, தம்மோடு வாழும் சக மனிதனை வெறுக்குமளவுக்கான வன்மத்தைப் பெரும்பான்மையானவர்களின் மனதில் விளைவித்திருக்கிறது; விளைவித்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ளவர்கள் உணரக்கூடிய அடிப்படை விடயமொன்றுள்ளது; தன் சகமனிதன் மீது, கடும் வெறுப்பை வைத்துக்கொண்டு, ஐந்தறிவு ஜீவனுக்காக இரங்குவதெல்லாம், ஜீவகாருண்யமாகிவிடாது. அது பெரும் போலிப்பாசாங்காகும் (hypocrisy). எந்தத் தீயையும் போல, இனவெறித் தீயும் அணைக்கப்படக் கூடியதே. ஆனால், தகுந்த காலத்தில் அது அணைக்கப்படாவிட்டால், நாம் முயற்சித்தாலும் அணைக்க முடியாத பெருந்தீயாக அதுவளர்ந்துவிடும். எவ்வளவு விரைவாக நாம், இதை உணர்கிறோமோஇ அவ்வளவு தூரத்துக்கு அது, எமக்கு நல்லது.    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனவெறித்-தீ/91-251193