Jump to content

மோதகம்


Recommended Posts

1989 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஒரு நாள்.

 

கோப்பாய் இந்திய இராணுவத்தின் முகாமுக்கு அந்தோணி அழைக்கப்படிருந்தான்.

 

அந்தோணி:

காக்கை தீவிலே அல்லது நாவாந்துரையிலே மீன்களை வாங்கி பெட்டியில் கட்டி கொண்டு கொக்குவில், கோண்டாவில், உரும்பிராய், கோப்பாய், இராசபாதை வழியாக நீர்வேலி, சிறுபிட்டி, ஈவினை நவக்கிரி வரை கையிலே ஒரு ஊது குழலியை வைத்து,

பா.. பாய்...ப் பாய் என்று ஊதியபடி அன்றாடம் மீன் வியாபாரம் செய்யும் ஒரு குடும்பசுமை மிக்க உழைப்பாளி.

 

அது அவனது பிரதான தொழில், உப தொழிலாக இந்திய இராணுவத்தின் வருகைகளையும், பதுங்கி இருத்தல்களையும், அக்காச்சி தலைமையிலான கெரில்லா போராளிகளுக்கு சங்கேத மொழி மூலம் வழங்கி கொண்டிருந்தான்.

 

சில நாட்களில் அரக்குளா, சில நாட்களில் செவ்விளை, சில நாட்களில் கூனி இரால் ....இந்திய இராணுவத்தை குறிக்கும் சங்கேத சொல்லாக பயன்பட்டது. இவன் தனது ஊது குழலில் பாப்..ப்ப ..பாய் என்று ஊதி கொண்டு தன்னிடம் இருக்கும் மீன் வகைகளை சொல்லுவான். அதில் மேற்குறித்த சங்கேத சொல்லு இருந்தால் இந்திய இராணுவம் பதுங்கி இருக்கிறது என்று அர்த்தம். அதை புரிந்து கொண்டு கெரில்லாக்கள் பாதை மாற்றுவார்கள்.

 

சில வேளைகளில் இவன் குறிபிட்ட சங்கேத சொல்லு மீன்வகை இவனிடம் இருக்காது, சனம் வந்து அது தான் வேணும் என்று கூப்பிட்டு ஏமாற்றத்துடன் இவனை திட்டினவையும் உண்டு. அந்தோணிக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. தேசத்தின் மைந்தர்கள் காக்கப்பட வேண்டும்.

 

இன்று இந்திய இராணுவ அதிகாரி சபீந்தர் சிங், இவனை கோப்பாய் முகாமுக்கு அழைத்திருந்தார்.

 

இவனுக்குள் ஒரே குழப்பம்.

 

என்னடா ஆராவது போட்டு குடுத்திட்டாங்களோ...

அல்லது தங்களுக்கு கெரில்லாக்களின் நிலைகளை காட்டி தர சொல்லி கேட்க போறானோ..

இல்லை ஒவ்வொருநாளும் தங்கட முகாமுக்கு மீன் சப்பளை செய்ய சொல்ல போறானோ ..

 

தன்னை போடுறது என்றால், நாயை சுடுற மாதிரி சுட்டு விட்டு போயிருபான்கள். முகாமுக்கு வர சொன்னதாலே ஏதோ விஷயம் இருக்கு என்று தனக்குள்ளே ஜோசிச்சு கொண்டு முகாம் வாசலை அடைந்தான்.

 

வாசலுக்கு காவலுக்கு நிண்ட இந்தியன் ஆமி,  பெட்டி சைக்கிளையும் மடிச்ச சரத்தையும் கண்டிட்டு பயத்திலே 

 

சலோ சலோ ..போ ..போ ..என்று கத்தினான்.

 

இல்லை சார் தான் வர சொன்னவர் என்று கையை முகாமை நோக்கி காட்ட.

 

சென்றியிலே இருந்து கீழே இறங்கிவந்த சீக்கியன் அவனது பெட்டியை திறந்து பார்த்து, மீன்களை கிளறி பார்த்தான், அவனது உடலையும் செக் பண்ணி போட்டு உள்ளே போ என்று சொன்னான்.

 

அதுவரைக்கும் அவனுக்கு இருந்த தைரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சது, ஸ்டாண்ட் இல்லாத அந்த சைக்கிளை ஒரு மரத்தை பார்த்து சாத்தும் போது கைகள் நடுங்க ஆரம்பிச்சது.

 

அந்த முகாமின் கதவடியில் நிண்டவனிடம் சாரை பார்க்கோணும் என்று சொல்ல. உள்ளே விட்டான் .

 

வா..வா..அந்தோணி உன்னை தான் பார்த்து கொண்டு நிற்கிறேன், என்று ஊரே குலை நடுங்கும் சபீந்தர் சிங் அவனை பெயர் சொல்லி கூப்பிட்ட போது,

 

ஆண்டவரே ஜேசுவே என்னை காப்பாத்தும் என்று மனசுக்குள் வேண்டி கொண்டான் அந்தோணி.

 

அடோ அந்தோணி..எப்படி தொடங்கிறது எண்டு... எனக்கு ..தெரியவில்லை. ஆனால் உன்னை விட்டால் வேற யாரும் இல்லை என்று ஆரம்பித்தான் சபீந்தர் சிங்.

 

என்னடா இது காதலிக்கிறவன் மாதிரி வசனம் பேசுறான். இவன் அவனோ .. என்று மனம் அலை பாய்ஞ்சாலும்.

 

கள்ளு கிள்ளு இறக்கி தர சொல்லி கேக்க போறானோ என்றும் தோணிச்சு அந்தோணிக்கு.

 

ஒண்டுக்கும் ஜோசிக்காதே ... நீ எங்களுக்காக கெரில்லாக்களிடம் தூது போக வேணும்.

 

என்னடா இது என்னை வைச்சு அக்காச்சிக்கு ஏதாவது பொறி வைக்க போறாங்களோ.?

 

அக்காச்சியை காட்டி கொடுத்தால் ஊரே அடிச்சு சாக்கொண்டு போடும் ..பலவிதமான எண்ண ஓட்டங்ககள்.

 

ஒண்டும் இல்லை அந்தோணி... நீ வந்து... அக்காச்சியோட கதைக்க வேணும்.

 

எங்கட ஆமிக்கு அவங்கள் அடிக்க கூடாது, நாங்களும் அவங்களுக்கு அடிக்க மாட்டோம்.

 

கோப்பாய் ஆமிக்கும் அக்காச்சிக்கும் மட்டும் தான் இந்த ஒப்பந்தம்.

 

அக்காச்சியிட்ட கேள், ஓம் எண்டால் எங்களுக்கு மோதகம் செய்து அனுப்ப சொல்லு சந்தோசத்தை காட்ட.

 

எது என்னடா நாசமா போச்சு... இதை போய் அக்காச்சியிட்ட சொல்ல அவன் துவக்கு பிடியால தான் அடிப்பான்.

 

எதுக்கும்  அவன் சந்தோசமா இருக்கிற நேரம் கேப்பம் எண்டு, கிளி அக்காவிடம் சொல்லி வைச்சான் அந்தோணி.

கிளி அக்கா வீடுக்கு கிழமையில் ஒரு நாளாவது அக்காச்சியிண்ட ஆட்கள் வருவாங்கள்.

 

அண்டைக்கும் அந்தோணி கிளி அக்கா வீட்டை காவல் இருந்தான்.

அந்தோணியின் நல்ல நேரம் அக்காச்சியே நேர்ல வந்தான்.

 

அக்காச்சி ...

 

ம்ம் ..

 

தம்பி அக்காச்சி ..

 

என்ன அண்ணே சொல்லுங்கோ...

 

உவங்கள் ஆமிக்காரங்கள்....., உன்னட்டை ஒண்டு கேட்க சொன்னவ..... சொல்லி முடிக்கவும் இல்லை.

அக்காச்சி பார்த்த பார்வை அந்தோணியை மேலே பேச விடவில்லை.

 

இல்லை தம்பி... சமாதானம் தான் ....சாப்பிட்டபடி  கையை தூக்கி நிப்பாட்ட சொன்னான்.

 

அதுக்கு மேலே பேச வரவில்லை அந்தோணிக்கு.

 

சாப்பிட்டு முடிய மறுபடியும் 

 

தம்பீ....

 

என்ன அண்ணே சொல்லி துலையுங்கோ ..

 

சந்தோசமா சொல்ல தொடங்கினான் அந்தோணி.

 

அது வந்து தம்பி... அவங்கள் உங்களை சுடமாட்டாங்களாம், நீங்கள் அவங்களை சுட கூடாதாம்.

நீங்கள் ஓம் எண்டால் மோதகம் சுட்டு தரட்டுமாம் நல்லெண்ண சமிக்கையாக.

 

கிளி அக்கா .. அக்காச்சி கொஞ்சம் உரக்க தான் கூப்பிட்டான்.

 

கை விளக்குமாறு எடுத்து தர சொல்ல போறானோ, இல்லை தும்புதடியோ, இண்டைக்கு துலைஞ்சன் என்று அந்தோணி பதபதைக்க ..

 

அக்கா உங்களுக்கு மோதகம் சுட தெரியுமோ என்று கேட்டான் அக்காச்சி.

 

அந்தோணிக்கு நெஞ்சிலே பால் வார்த்த மாதிரி இருந்தது.

 

பொட்டண்ணை தான் இப்ப பொறுப்பு, அவரிட்ட கேட்டிட்டு சொல்லுறன், ஓம் எண்டால் நூறு மோதகம் அவிச்சு அந்தோணியிட்ட குடுத்து விடுங்கோ என்று பம்பலாக சொன்னான்.

 

அந்தோணியை இரண்டு நாளிலே வரச்சொன்னான்.

 

இரண்டாம் நாள், நூறு மோதகத்தோட கிளி அக்கா வாசலில் நிண்டா.

 

ஒரு சிவப்பு பிளாஸ்டிக் வாளி, அதுக்குள்ளே மோதகங்கள். கடைசி நேரத்திலே வந்த அக்காச்சியும் ஏதோ பேப்பர்ல எழுதி போட்டு அதுக்குள்ளே வைச்சு குடுத்தான்.

 

அந்தோணி அண்ணே திறந்து பாக்காமல் கொண்டே குடுக்க வேணும் விளங்கிச்சோ..

 

இதென்னடா வில்லங்கம். என்னத்தை எழுதி வைச்சானோ, குண்டை கிண்டை வைச்சு விட்டானோ.

 

திறந்து வேற பார்க்க வேணாம் என்று சொல்லுறான், இராசபாதை வாழை தோட்டத்தை கடக்கும் போது அந்தோணிக்கு மனசுக்குள்ளே ஒரு என்னாம் திறந்து பார்ப்போமா .

 

வாளி மூடியிலே நடுங்கி நடுங்கி சுத்திவர பார்த்திட்டு கையை வைக்க,

 

அடோ அந்தோணி...

 

அவ்வளவு தான் திரும்ப மூடி விட்டான். அவனோட தொழில் செய்கிற சிவபிரகாசம் தான் வந்து கொண்டிருந்தான்.

 

என்னடா வேர்க்க விறுவிறுக்க நிக்கிறாய். வாளிக்குள்ளே என்னடா .??

 

மோதகம்.

 

என்னடா தொழிலை மாத்திட்டியா .??

 

இவன் வேற நிலைமை விளங்காமல் பகிடி விட்டு கொண்டிருக்கிறான்.

 

இல்லை மச்சான்... நான் உனக்கு பிறகு சொல்லுறேன் எண்டு நேராக விட்டான் சைக்கிளை கோப்பாய் ஆமி காம்புக்குள்ளே.

 

 

 

 

அந்தோணிக்கு நல்ல வரவேற்பு. (இப்பத்தை எரிக் சொல்கெய்ம் வரவேற்பு)

 

ஆமிக்காரங்கள் எல்லாம் சுத்தி வந்திட்டாங்கள்.


பெரியவன் வரும் மட்டும் பார்த்து கொண்டிருந்தாங்கள்

பெரியவன் வந்தவுடன், சந்தோசமாக அந்தோணி நீ கெட்டிகாரன் தாண்டா என்று கட்டி பிடிச்சான்.

 

அந்தோணிக்கோ ஈரக்குலை நடுங்குது, இவன் அக்கச்சி திறக்க வெடிக்கததாக குண்டை கூட வைச்சிருப்பான்.

இண்டைக்கு நான் சரி எண்டு மட்டும் திரும்ப திரும்ப மனசுக்குள் ஒலித்தது அந்தோணிக்கு  .

 

வாளியை குடுத்திட்டு ஓட்டுவமா எண்டு கூட ஜோசித்தான் அந்தோணி.

 

ச்சே ..ஓடினால் இவங்களுக்கு சந்தேகம் வந்து சுட்டாலும் சுட்டு போடுவாங்கள்.

 

என்ன ஆனாலும் சரி அவங்கள் போக சொன்ன பிறகு போவம்.

 

வாளியை திறந்தான் பெரியவன்.

 

வேர்வையை துடிக்கிற சாக்கிலே காதை பொத்தினான் அந்தோணி.

 

வெடிக்கவில்லை ..

அப்பாடா..

 

உள்ளுக்குள்ளே ஒரு பேப்பர் துண்டிலே "நாங்கள் தயார் " என்று அக்காச்சி  எழுதி இருந்தான்.

 

என்ர வேளாங்கண்ணி மாதாவே நீதான் காப்பாத்தினாய். என்று அந்தோணி போக வெளிக்கிட.

 

சபீந்தர் கூப்பிட்டான்.

 

அந்தோணி மோதகம் சாப்பிட்டு போ..

வாளியை 

இப்போ தான் அந்தோணிக்கு ஒன்று புரிஞ்சுது.

 

ஒருவேளை அக்காச்சி, மோதகத்துக்குள்ளே நஞ்சை கிஞ்சை கலந்து விட்டாங்களோ.

 

இல்லை சார் வேண்டாம். நான் இப்ப தான் சாப்பிட்டு வந்தனான்.

 

நோ..நோ .. அந்தோணி நீ எவ்வளவு பெரிய வேலை செய்திருக்கிறாய். எங்களோட சாப்பிட்டு தான் போகவேணும்.

 

மூடிய திறக்கும்போது இருந்ததை விட இப்ப தான் அந்தோணிக்கு வயித்தை கலக்கிச்சு.

 

மூடியை திறந்து நீட்டினான் சபீந்தர் சிங்.

 

ஏசுவே என்னை காப்பாத்து என்று கண்ணை மூடி கொண்டு ஒரு மோதகத்தை எடுத்தான் அந்தோணி.

 

எவ்வளவு ஆசையா சாப்பிட வேண்டிய மோதகத்தை அந்தளவு கேவலமாக அந்தோணி வாழ்கையில் சாப்பிட்டது இல்லை.

 

ஒரு கடி கடிச்சான், பயித்தம் பருப்பு வாய்க்குள்ளே வந்து தொண்டைக்குள்ளே இறங்கிச்சு.

 

டைசி நிமிடங்கள் ..கரகரத்த மாதிரி இருந்தது. இனிக்குதா கசக்குதா என்று கூட தெரியவில்லை.

 

1..2...3.. செக்கன்கள் கூட நிமிடங்களாக கழிந்தன.

 

அப்பாடா ஒண்டும் நடக்கவில்லை.

 

 

 

சார் ..நான் அப்ப போட்டு வரட்டே. கழருவம் எண்டு பார்த்தான் அந்தோணி.

 

இல்லை அந்தோணி. இன்னொரு மோதகம் சாப்பிட்டு போ..

 

இதென்னடா வில்லங்கம் ..

 

சபீந்தர் சிங், அந்த மோதக வாளியை எடுத்து தலைகீழாக கவிட்டு நிமித்தி , உள்ளை கையை விட்டு கிடாவி, வாளியை  போட்டு குலுக்கி, இப்போ ஒன்று எடுத்து சாப்பிடு எண்டான்.

 

ஏசுவே ..இப்படி எல்லாமா ஜோசிப்பான்கள் ..

 

ந்த அறுவாங்கள் வேற மேல நல்ல மோதகத்தை வைச்சிட்டு உள்ளே, நஞ்சை கலந்திருப்பான்களே.

 

எனக்கு ஏதாவது ஒண்டு நடந்தால் என்ர பிள்ளைகளை காப்பாத்து ஜேசுவே..

 

கையெல்லாம் உதறல் எடுத்தது. இது உண்மையிலேயே சாவு உதறல்.

 

சாப்பிடு சாப்பிடு என்று பெரியவன் வேற முதுகிலே தட்டுறான்.

 

இந்த் முறை ஒரே எடுவை ஒரே விழுங்கல் தான்.

 

முழி பிதுங்க பிதுங்க சாப்பிட்டான் அந்தோணி.

 

சாவு வந்தால் வரட்டும்.

 

கண்ணீர் கூட வந்தது. ஒரு நிமிடம் கழிந்திருக்கும்.

 

பின்னாலே ஒரே சத்தம்.

 

மிச்ச மோதகத்துக்கு ஆமிக்காரங்கள் அடிபடுறாங்கள்.

கனவா என்று கிள்ளி  பார்க்க போன அந்தோணியிடம் ...

 

ரொம்ப நன்றி.... அந்தோணி கையை குலுக்கினான் சபீந்தர் சிங்.

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனைப் பகிர்வுக்கு நன்றி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விப்பட்ட கதை போல இருக்குது :) ...அந்தோனிக்கு என்ன நடந்தது?...இந்தியன் ஆமி போனப் பிறகும் உயிரோடு இருந்தவரோ :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நல்ல பகிர்வு. என்பத்தி ஒன்பதாம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 
வேறு சில இடங்களிலும் / பகுதிகளிலும் எழுதாத சண்டை நிறுத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. கால மீட்டலுக்கு நன்றி பகலவன்.
Link to comment
Share on other sites

வீரத் தமிழரின் பெயர் சொல்லும் பதிவு வாழ்த்துக்கள். இப்பிடியும் தேசியத்தை கேவலப் படுத்தாமல்  உண்மைக் கட்டுரை எழுதலாம் என்று  பாடம் எடுக்கும் உங்களுக்கு இன்னுமொரு தடவை வாழ்த்துக்கள்  :icon_idea:

Link to comment
Share on other sites

கற்பனைப் பகிர்வுக்கு நன்றி :D

 

நன்றி அக்கா கருத்து பதிவிற்கு. கற்பனைக்கும் நிஜத்துக்கும் ஒரு நூல் இழை தான் அக்கா வேறுபாடு.

 

நான் கேள்விப்பட்ட கதை போல இருக்குது :) ...அந்தோனிக்கு என்ன நடந்தது?...இந்தியன் ஆமி போனப் பிறகும் உயிரோடு இருந்தவரோ :unsure:

 

ரதி அக்கா, நீங்கள் கேள்விபடாத கதையே இருக்காது போல  :D. அந்தோணி தன் வாழ்நாள் முடியும்வரை வாழ்ந்தார். :lol:

 

நன்றி உங்கள் பதிவிற்கு.

 

நல்ல பகிர்வு. என்பத்தி ஒன்பதாம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 
வேறு சில இடங்களிலும் / பகுதிகளிலும் எழுதாத சண்டை நிறுத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. கால மீட்டலுக்கு நன்றி பகலவன்.

 

நன்றி லியோ.  உண்மைதான் லியோ, ஆக குறைந்தது இருபத்தைந்த்து வருட கால மீட்டலாவது நாங்கள் செய்யாமல்  போனால், வருங்காலத்திற்கு எங்களால் வரலாற்றை கடத்த முடியாமல் போகும்.

 

வீரத் தமிழரின் பெயர் சொல்லும் பதிவு வாழ்த்துக்கள். இப்பிடியும் தேசியத்தை கேவலப் படுத்தாமல்  உண்மைக் கட்டுரை எழுதலாம் என்று  பாடம் எடுக்கும் உங்களுக்கு இன்னுமொரு தடவை வாழ்த்துக்கள்  :icon_idea:

 

நன்றி  யாழ்அன்பு. விடயங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும். 

 

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றிகள் பகலவன்.. அந்தோணி அவர்கள் போன்றவர்கள் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்..

போராளிகளுக்கு உணவும் மோதகமும் வழங்கிய கிளியக்காவும் நன்றிக்குரியவர்..

அதுசரி.. கிளியக்கா கோண்டாவிலா?

Link to comment
Share on other sites

இரண்டாவது ஆழுமையைக் காட்டும் பகலவனுடைய கதைக்கு எனது இதயங்கலந்த வாழ்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக .

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றிகள் பகலவன்.. அந்தோணி அவர்கள் போன்றவர்கள் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்..

போராளிகளுக்கு உணவும் மோதகமும் வழங்கிய கிளியக்காவும் நன்றிக்குரியவர்..

அதுசரி.. கிளியக்கா கோண்டாவிலா?

அன்னங்கை 

நானும் அக்காச்சி காலத்தை நினைத்துப் பார்க்கிறேன் கோப்பாய் ,நீர்வேலி, கல்வியங்காடு என்று பல திகில் அனுபவங்கள் நாங்கள் அப்ப சிறியவர்கள்  நிறைய கதைகள் நினைவு வருகிறது நேரம் கிடைத்தால் எழுதலாம். நீங்க இன்னும் எழுதணும் வரவேற்கிறேன் 

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றிகள் பகலவன்.. அந்தோணி அவர்கள் போன்றவர்கள் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்..

போராளிகளுக்கு உணவும் மோதகமும் வழங்கிய கிளியக்காவும் நன்றிக்குரியவர்..

அதுசரி.. கிளியக்கா கோண்டாவிலா?

 

நன்றி இசை உங்கள் கருத்துக்கும் வருகைக்கும். நீங்கள் சொல்லும் கிளியக்கா வேறு நான் சொன்ன கிளியக்கா வேறு.

 

பொதுவில் எத்தனையோ கிளியக்காக்கள் போராட்டத்தின் பக்கபலமாக இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

 

இரண்டாவது ஆழுமையைக் காட்டும் பகலவனுடைய கதைக்கு எனது இதயங்கலந்த வாழ்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக .

 

நன்றி கோ. உங்களை போன்றவர்களின் ஊக்கமும் கருத்துகளும் எங்களை மேலும் எழுத தூண்டுகின்றன.

 

அன்னங்கை 

நானும் அக்காச்சி காலத்தை நினைத்துப் பார்க்கிறேன் கோப்பாய் ,நீர்வேலி, கல்வியங்காடு என்று பல திகில் அனுபவங்கள் நாங்கள் அப்ப சிறியவர்கள்  நிறைய கதைகள் நினைவு வருகிறது நேரம் கிடைத்தால் எழுதலாம். நீங்க இன்னும் எழுதணும் வரவேற்கிறேன் 

 

நன்றி ரமணன். உங்களுக்கு தெரிந்தவற்றையும் எழுதுங்கள், திகிலும் நகைச்சுவையும், தியாகமும் கலந்த எத்தனையோ அனுபவங்கள் இன்னும் எழுதப்படாமல் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

சாத்திரிக்கு தொரியுமா இப்படி ஒரு சம்பவம் நடந்ததென்று?


 

நன்றி பகலவன் பகிர்வுக்கு. இந்தியன் ஆமியில் இருந்த தமிழ்நாட்டுக்காரர் பலர் உதவி செய்துள்ளார்கள், அவர்களை என்றும் மறக்க முடியாது

Link to comment
Share on other sites

ஒரு  சீரியசாக விடயத்திற்குள் நகைச்சுவையை புகுத்தி வாசகரை வசியப்படுத்தும் (தம்பிக்கு வசியம் இலகுவான விடயம் :lol: ) எல்லா எழுத்தாற்றல் மிக்கவர்களாலும் முடியாது. ஒன்றில் அழுகை அல்லது சிரிப்பு இரண்டில் ஒன்றில்தான் நிற்பார்கள் பல எழுத்தாளர்கள். ஆனால் சோகம் சந்தோசம் எல்லாவற்றையும் பொருத்தமாக கலந்து எழுதக்கூடிய ஆற்றல் உங்கள் எழுத்துக்கு உள்ளது பகலவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை சுவாரஸ்யமாக நகர்த்திய பகலவனுக்குப் பாராட்டுக்கள். இப்படி எல்லாம் யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் நடந்தது எல்லாம் தெரியாத புதினமாகத்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

உண்மையான நிகழ்வை பகலவன் பாணியில் தந்தது அருமை.

 

நன்றி நுணாவிலான் உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும்.

 

சாத்திரிக்கு தொரியுமா இப்படி ஒரு சம்பவம் நடந்ததென்று?

 

நன்றி பகலவன் பகிர்வுக்கு. இந்தியன் ஆமியில் இருந்த தமிழ்நாட்டுக்காரர் பலர் உதவி செய்துள்ளார்கள், அவர்களை என்றும் மறக்க முடியாது

 

தமிழ்நாட்டுக்காரர் பல சந்தர்ப்பங்களில் மொழிபெயர்ப்பாளர்களாக மட்டுமே தொழிற்பட்டார்கள். சில இடங்களில் நேருக்கு நேராக மோத வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்தபோது இரு தரப்பினருமே தவிர்த்துள்ளனர். சில இடங்களில் ஆயுதங்களை வாங்கிவிட்டு ஓட சொல்லியும் இருக்கின்றனர்.

 

ஒரு  சீரியசாக விடயத்திற்குள் நகைச்சுவையை புகுத்தி வாசகரை வசியப்படுத்தும் (தம்பிக்கு வசியம் இலகுவான விடயம் :lol: ) எல்லா எழுத்தாற்றல் மிக்கவர்களாலும் முடியாது. ஒன்றில் அழுகை அல்லது சிரிப்பு இரண்டில் ஒன்றில்தான் நிற்பார்கள் பல எழுத்தாளர்கள். ஆனால் சோகம் சந்தோசம் எல்லாவற்றையும் பொருத்தமாக கலந்து எழுதக்கூடிய ஆற்றல் உங்கள் எழுத்துக்கு உள்ளது பகலவன்.

 

அக்கா உங்களிடமும் சாத்திரி அண்ணாவிடமும் இருந்து தான் நான் கற்றுகொண்டேன் என்று சொல்வதில் எனக்கு எந்தவிதத்திலும் சங்கடம் இல்லை. உங்கள் இருவரின் எழுத்துக்களும் கதைகளை நகர்த்தும் விதமும் தான் என்னை எனக்கான பாணியை உருவாக்கியது.

 

அக்காவின் எழுத்துகளும் ஆற்றலும் தம்பியிடம் வருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை தானே அக்கா. (வளர்த்தவர்கள் ஒன்றாக இருக்கும் போது) :lol:

 

என்னை ஒரு மலையாள மாந்திரீகர் ரேஞ்சிலே ஒரு வசியக்காரன் என்று வேற சொல்லுறீங்கள் அக்கா  :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில்  திணிக்காமல் இயற்கையாகவே ஓடும் நகைச்சுவை ரசம் குழைத்து சொல்லும் போது நன்றாக உள்ளது.

இப்படியான ஆயிரமாயிரம் கதைகளைச் சுமக்கும் காவிகளாகவே எல்லோரும் இருக்கிறார்கள், அதை எல்லாரும் பகிர்வதுமில்லை.. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.. :)

Link to comment
Share on other sites

கதையை சுவாரஸ்யமாக நகர்த்திய பகலவனுக்குப் பாராட்டுக்கள். இப்படி எல்லாம் யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் நடந்தது எல்லாம் தெரியாத புதினமாகத்தான் இருக்கு.

 

 நன்றி கிருபன், இப்படி எத்தனையோ அறிவிக்கபடாத யுத்தநிறுத்தங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு நீடித்து இருந்தன.

 

உண்மையில்  திணிக்காமல் இயற்கையாகவே ஓடும் நகைச்சுவை ரசம் குழைத்து சொல்லும் போது நன்றாக உள்ளது.

இப்படியான ஆயிரமாயிரம் கதைகளைச் சுமக்கும் காவிகளாகவே எல்லோரும் இருக்கிறார்கள், அதை எல்லாரும் பகிர்வதுமில்லை.. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.. :)

 

நன்றி ஜீவா, நினைவுகளை சுமப்பவர்கள் எழுதவேண்டும் என்பதே என் அவாவும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் எல்லாமே நன்றாக இருக்கிறது பகலவன். கண்முன்னே காட்சியைக் காட்டுகிறீர்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோதகத்தில் இவ்வளவு உள்ளடக்கம் இருக்கோ?.......பகலவன் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா வெடிக்குது வெடிக்குது என்று பார்த்தால் வெடிக்காமலேயே

கதையை  அழகாக முடித்துவிட்டீர்கள் பகலவன் 


குறைந்தது  இரண்டு இந்தியன் ஆமியாவது போயிருந்தால் ......  

Link to comment
Share on other sites

அக்காச்சி பற்றி சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக  சில வருடங்களிற்கு முன்னர் ஒரு பதிவு  எழுதியிருந்தேன் அதை இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை.   நீர்வேலி கண்ணாடி தொழிற்சாலைக்கு பின்னால்  நடந்த மோதலில் அதுவும் தன்னை தாக்க வந்த குழுவினை சேர்ந்தவன் என்று தெரியாமல்  அவனை  யாரோ  பாடசாலை மணவன்  என நினைத்து காப்பாற்றப் போய் அவனின் துப்பாக்கியால்  அக்காச்சி இறந்து போனான்.  அந்த தாக்குதலை  ஈ. என். டி எல்.எவ்.  அமைப்பு  பாபுஜியும்(தற்சமயம் கனடா)  ஈ. பி. மண்டையன் குழுவும் இணைந்து  இந்திய இராணுவத்தின் உதவியொடு  நடாத்தியிருந்தார்கள்.

Link to comment
Share on other sites

 

பகலவன், உங்கள் கதைகள் அனைத்தும் சுவாரசியம் நிறைந்தவையாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.
 
இந்திய இராணுவ காலத்தில் இருந்த வேறொரு மீன் விற்பனையாளரை இப்பதிவு எனக்கு ஞாபகப்படுத்திச் சென்றது. நன்றி

 

Link to comment
Share on other sites

இப்படியெல்லாம் கூட நடந்ததா?.

பகலவன் எழுத்து மிக அருமை .

யார் கிளியக்கா ?

 

 

Link to comment
Share on other sites

இந்த மோதகக் கதையை எழுதுவதற்கு ஏன்  23 வருடங்கள் ஆனது? அல்லது எடுத்தது???


நான் இப்ப தான் இப்பிடிக் கதையைக் கேள்விப்படுகின்றேன். (1994 / தை மாதம் வரை யாழ்ப்பாணத்தில் தான் இருந்தனான்)

Link to comment
Share on other sites

அக்காச்சி பற்றி சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக  சில வருடங்களிற்கு முன்னர் ஒரு பதிவு  எழுதியிருந்தேன் அதை இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை.   நீர்வேலி கண்ணாடி தொழிற்சாலைக்கு பின்னால்  நடந்த மோதலில் அதுவும் தன்னை தாக்க வந்த குழுவினை சேர்ந்தவன் என்று தெரியாமல்  அவனை  யாரோ  பாடசாலை மணவன்  என நினைத்து காப்பாற்றப் போய் அவனின் துப்பாக்கியால்  அக்காச்சி இறந்து போனான்.  அந்த தாக்குதலை  ஈ. என். டி எல்.எவ்.  அமைப்பு  பாபுஜியும்(தற்சமயம் கனடா)  ஈ. பி. மண்டையன் குழுவும் இணைந்து  இந்திய இராணுவத்தின் உதவியொடு  நடாத்தியிருந்தார்கள்.

 

நன்றி சாத்திரி அண்ணா. இயலுமானால் அக்காச்சியின் பதிவை இணைத்துவிடுங்கள். மக்களாலும் எதிரியாலும் நேசிக்கபட்ட ஒரு வீரன். அவனது இறுதிச்சடங்கில் கண்ணீர்விட்டழுத பலரில் இந்திய இராணுவத்தின் அதிகாரிகளும் உளர்.

 

சாத்திரி அண்ணா, உங்களால் இதைவிட ஆயிரம் நினைவுகளையும் பதிவுகளையும் எழுத முடியும். நீங்கள் சர்ச்சைகள் அற்ற நினைவு பகிர்வுகளை எழுத வேண்டும் என்று ஒரு அன்பான ரசிகனாக உங்களிடம் வேண்டி நிற்கிறேன்.

 

 

 

பகலவன், உங்கள் கதைகள் அனைத்தும் சுவாரசியம் நிறைந்தவையாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.
 
இந்திய இராணுவ காலத்தில் இருந்த வேறொரு மீன் விற்பனையாளரை இப்பதிவு எனக்கு ஞாபகப்படுத்திச் சென்றது. நன்றி

 

 

நன்றி இன்னுமொருவன். எனது பதிவுகளுக்கு உங்களின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று நான் நிறைய நாட்கள் எதிர்பார்த்ததுண்டு. இன்று தான் நிறைவேறி இருக்கிறது.

 

மீன் விற்பனையாளர்கள், சிகை அலங்கரிபாளர்கள், உணவு மேசை சுத்திகரிபாளர்கள்  என்று எத்தனையோ பேர் பலவேளைகளில் உதவி இருக்கிறார்கள். அவர்களையும் நினைவுபடுத்த வேண்டிய தேவையும் கடமையும் எங்களுக்கும் உண்டு.

 

இப்படியெல்லாம் கூட நடந்ததா?.

பகலவன் எழுத்து மிக அருமை .

யார் கிளியக்கா ?

 

நன்றி அர்ஜுன் அண்ணா, இன்னும் எவ்வளவோ நடந்தது அண்ணா. என்னுடைய அடுத்த பதிவையும் அதை ஒட்டி எழுத இருக்கிறேன். இவ கோண்டாவில் கிளி அக்கா இல்லை. நீர்வேலி கிளி அக்கா. உண்மையான பெயர் புனிதவதி என்று நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை.

 

இந்த மோதகக் கதையை எழுதுவதற்கு ஏன்  23 வருடங்கள் ஆனது? அல்லது எடுத்தது???

நான் இப்ப தான் இப்பிடிக் கதையைக் கேள்விப்படுகின்றேன். (1994 / தை மாதம் வரை யாழ்ப்பாணத்தில் தான் இருந்தனான்)

 

அலை அக்கா நன்றி உங்கள் பதிவுக்கு. உங்கள் கேள்வி நியாயமானது. முதலில் இந்த கதைக்கு எந்தவித அரசியல் நோக்கமும் கிடையாது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை.

சில ஆழ்மன பதிவுகள் வெளிவருவதற்கு சில நினைவுபடுத்தல்கள் தேவையாக இருக்கிறது. அண்மையில் ஒரு பதிவு (அர்ஜுன் அண்ணாவின் கறுப்பு பெட்ஷீட்) எனது  ஆழ்மனதில் இருந்த இந்த கதையின் கருவை வெளிக்கொணரவைத்தது. இந்த கதையை எழுதி முடிக்கும் போது எனக்குள் இன்னொரு நினைவும் அசைபோடுகிறது. கூடியவிரைவில் நேரம் இருக்கும்போது அதை பதிவாக்க எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.