Jump to content

'காந்தள்பூவும், சோழக்காடும்'


Recommended Posts

'காந்தள்பூவும், சோழக்காடும்' : வளர்ந்து வரும் இலங்கை கலைஞர்கள் பற்றிய ஓர் ஆய்வு!

 

SL_Artists.jpg

அண்மையில் கடல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய இலங்கை பாடகர் ஆர்யன் தினேஷ் முதல் வளர்ந்து வரும் மேலும் பல உள்ளூர் தமிழ் இசைக்கலைஞர்கள் வரை அவர்களது தேடல்கள், முயற்சிகள், வளர்ச்சிப்படிகள் பற்றி அலசுகிறது இக்கட்டுரை.

 

                   கல்யாண வீடுகள், கோவில் திருவிழாக்கள், தேனீர் கடைகள் என்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த இசையும்- பாடல்களும் கணனிகளுக்குள்ளும், ஐபோட்டுக்குள்ளும், எம்.பி.3 சுழலிகளுக்குள்ளும் சுருங்கிவிட்ட காலம் இது. புதிய பாடல்களின் வரவை அறிய வானொலிகளைச் சுற்றிக்கொண்டிருந்த நாட்கள் மலையேறிவிட்டன. போட்டிபோட்டுக் கொண்டு ‘முதலில் புதிய படங்களின் பாடல்களை உங்களுக்கு தருவது ஏதோவொரு எப்.எம்’ என்கிற விளம்பர யுத்தியெல்லாம் சுவாரஸ்யமற்று போய்விட காரணமான ‘இணையங்களின்’ இணைப்பு வீச்சம் விரிந்துவிட்டது. இப்படியானதொரு காலத்தில் எம்மவர்களின் இசை ஆளுமை பற்றி கொஞ்சமாக பார்க்கலாம். இந்த கட்டுரையின் பகுதியில் புதியவர்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறார்கள். இலங்கையின் தமிழ் மெல்லிசைக்கு என்றொரு வரலாறு வானொலிகள் கோலொச்சிய காலத்திலேயே இருக்கிறது. அதுபோல, பைலா கலந்த பொப்பிசைக்கும் கனதியான பெறுமானம் உண்டு. அவைபற்றி பிறிதொரு தருணத்தில் பார்க்கலாம்.

Aryan_Dinesh.jpg

ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்

யார் இந்த ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்? என்கிற கேள்வி தமிழ் இணையவெளியில் பரவலாக அடிபட்டுக்கொண்டிருந்தது அண்மைய நாட்களில். குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘கடல்’ படப்பாடல்கள் வெளியான பின்னர். சமூக வலைத்தளங்களில் தினேஷ் பற்றிய தேடல்களைப் பார்க்கிற போது எனக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி. சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிற ரஹ்மானினால் எம்முடைய இசைக்கலைஞர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு அற்புதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அதுவும்,  தமிழ்சொல்லிசை வடிவிலான பாடலை பாட வைத்ததும் இல்லாமல்- பாடலின் வரிகளை எழுத அனுமதித்தது வரை தினேஷின் தனித்துவத்தை உணர்ந்து பயன்படுத்தியிருக்கிறார். 

தினேஷூக்கு கடலின் ‘மகுடி மகுடி’ பாடல் மாபெரும் வெற்றியாக அமைந்தது. அவரின் தென்னிந்திய சினிமா இசையுலகத்துக்கான பயணத்தில் ‘மகுடி மகுடி’ பெரிய அடையாளமும்- சாதனையும். அண்மைய நாட்களில் வானொலி தரப்படுத்தல்களில் முதல் ஐந்து பாடல்களுக்குள் ‘மகுடி மகுடி’யும் வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற அடையாளத்தைத் தாண்டி தினேஷ_ம் கொண்டாடப்படுகிறார். ‘நம்மூரை மறந்து போயி பட்டணம் ஓடிப்போன….’ என்று ஆரம்பிக்கும் தமிழ்- சிங்கள கலப்பு பாடலின் மூலமே தினேஷ்- கஜனுடன் சேர்ந்து வானொலிகளினூடு அறிமுகமானார் எனக்கு. அதன் பின்னரான நாட்களில் சிங்கள கலைஞர்களுடன் இணைந்தும்- தனித்தும் தினேஷின் பாடல்கள் சில வெளியாகி கவனிக்கப்பட்டது. ஆனாலும், ‘நம்மூரை மறந்துபோயி பட்டணம் ஓடிப்போனா’ அளவுக்கு என்னை அவை அவ்வளவுக்கு கவரவில்லை.  

Asmin.jpg

கவிஞர் அஸ்மின்

இப்படியான நேரத்தில் தான் இராஜ், தினேஷ், கவிஞர் அஸ்மின் என்று தொடர்ச்சியாக இலங்கை கலைஞர்கள் சிலரை இசையப்பாளர் விஜய் ஆண்டனி தமிழக பக்கம் அறிமுகப்படுத்தினார்.  அப்படியான தருணமொன்றில் ‘ஆத்திசூடி ஆத்திசூடி’ என்று ஆரம்பிக்கும் பாடலொன்றின் மூலம் தமிழ் திரையிசைப்பக்கம் அறிமுகமான தினேஷ் வரவேற்பு அளவுக்கு, விமர்சனங்களையும் பெற்றிருந்தார். பின்னரான நாட்களில் சில வாய்ப்புக்களை அவர் பெற்றுக்கொண்டிருந்தார். குறிப்பாக, ‘ரெனிகுண்டா’ படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் தான் இயக்கிய இரண்டாவது படமான ‘18வயது’ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை தினேஷூக்கும்- பொஸ்கோவுக்கும் வழங்கியிருந்தார். அதில், ‘உன்னை ஒன்று நான் கேட்க வா…’ என்று ஆரம்பிக்கும் மெலடிப்பாடலொன்று ரொம்பவே அற்புதமாக இசையமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும், படம் கால தாமதமாகி வெளியாகி காணாமல் போனது. இப்படியான நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் பெரிய அங்கீகாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தினேஷின் மூலம் இலங்கை கலைஞர்கள் பக்கம் இன்னுமின்னும் தென்னிந்திய சினிமா இசைத்தளத்தின் பார்வை திரும்பியிருக்கிறது. ஆக, சந்தப்பங்களின் அளவு கூடியிருக்கிறது. சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம்பவர்களின் பொறுப்பு.

இந்த இடத்தில் பெரிய கேள்வியொன்று எழலாம். அது இப்படியிருக்கலாம். இசை அடையாளம் என்பது சினிமாவினூடு சாதிக்கப்படுவது மாத்திரமா? என்பது. இந்த கேள்விக்கு ‘இல்லை’ என்கிற பதிலை உடனடியாக எழுதிவிடலாம். ஆனால், யதார்த்தம் அதிக நேரம் வேறுமாதிரியாக இருக்கின்றது. எம்முடைய இசைச்சூழல் என்பது சினிமா சம்பந்தப்பட்டே வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அல்லது அதுவே அதிக வீச்சத்துடன் எம்மிடையே இருக்கின்றது. அப்படியானதொரு நேரத்தில் மெல்லிசை கலைஞர்களின் கனவு என்பது அதிகம் தென்னிந்திய சினிமா இசையின் பங்களிப்பு என்பதாகவே இருக்கின்றது. இந்திய சினிமா இசை என்பது கலைந்து கிடக்கிற சந்தை மாதிரி. நல்லதும்- கெட்டதுமாக நிறைந்து கிடக்கிறது. அதிலிருந்து எதை எடுக்க வேண்டுமென்பதை இயக்குனர் தீர்மானிக்கிறார். ஆனால், எதை ரசிக்க வேண்டும் என்கிற இறுதி முடிவை ரசிகன் எடுத்துக்கொள்கிறான். ஆக, சினிமா இசையை நோக்கிய பயணம் என்றாலும்- அதுவும் ரசிகர்களை நோக்கியதாக பெரிய பாய்ச்சலுடன் பயணம் தான்.

க.ஜெயந்தனின் ‘காந்தள் பூக்கும் தீவிலே’

காந்தள் பூக்கும் தீவிலே..- உன்

காந்தப் பார்வை தீண்டுமா..?

பூங்காற்று எந்தன் பாடலை

உன் காதில் சேர்க்குமா....?

-வவுனியாவைச் சேர்ந்த க.ஜெயந்தனின் இசையில் கடந்த வருடம் வெளியாகி பரவலாக கவனிக்கப்பட்ட பாடல் இது. பாடலின் வரிகளை கவிஞர் அஸ்மின் எழுதியிருந்தார். இலங்கையின் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய பெண் குரலான க.ஜெயப்பிரதா, ஜெயந்தனுடன் இணைந்து பாடியிருப்பார். கேட்ட கணத்திலேயே பிடித்துக்போகக் கூடிய பாடல். அதுவும் எம்முடைய அடையாளங்களை வெளிப்படுத்தும் வரிகள் என்று சிறப்பு சேர்ந்திருந்தது. ஆனாலும், அந்தப் பாடல் இன்னும் பெரிய வரவேற்பை பெற்றிருக்க வேண்டும். அப்படியெதுவும் நடக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது பாடலின் ஒலிப்பதிவின் தரமும்- இசைக்கோர்ப்பின் போது கையாளப்படாத நேர்ந்தியும். இந்த இரண்டு பெரிய குறைகளும் கழையப்பட்டிருந்தால் மிக முக்கிய பாடலாக ‘காந்தள் பூக்கும் தீவிலே’ கவனிக்கப்பட்டிருக்கும். ஜெயந்தனும்- ஜெயப்பிரதாவும்- கவிஞர் அஸ்மினும் இன்னும் பெரிய அளவில் அடையாளப்படுத்தப்பட்டிருப்பார்கள்.

K.Jeyanthan.jpg

க.ஜெயந்தன்

இதில், கவிஞர் அஸ்மின் பற்றி குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. விஜய் ஆண்டனியின் இசையிலும்- நடிப்பிலும்- தயாரிப்பிலும் வெளியாகி ஓரளவுக்கு வெற்றிபெற்ற ‘நான்’ என்கிற படத்தின் முக்கிய பாடலான ‘தப்பெல்லாம் தப்பு இல்லை…’ என்று ஆரம்பிக்கும் பாடலை அஸ்மின் எழுதி பரவலாக கவனிக்கப்பட்டார். அந்தப்பாடல் படத்தின் கதையை நகர்த்திச் செல்லும் தீம் பாடலாக அமைந்திருக்கும். விஜய் ஆண்டனி இணையத்தில் மெட்டுக்களை வழங்கிவிட்டு நடத்திய போட்டியொன்றின் மூலம் அஸ்மின் தேர்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கவிஞர் அஸ்மினுக்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர்கள்- பாடகர்கள் மாத்திரமல்ல பாடலாசிரியர்களும் தங்களது முயற்சிகளை செய்ய தூண்டலாக அஸ்மினின் முயற்சி இருக்கிறது. 

இசையமைப்பாளர் ஜெயந்தனின் இசையில் ‘தாமரையே செந்தாமரையே..’ என்று ஆரம்பிக்கும் பாடலும் அண்மைய நாட்களில் ஓரளவு கவனிக்க வைத்திருந்தது. சதீஷ்காந்த் பாடலினை எழுதியிருக்கிறார். ஜெயப்பிரதாவும்- மனோஜ் என்கிற புதியவரும் இணைந்து பாடியிருப்பார்கள். 

க.ஜெயப்பிரதா போன்று அண்மைய நாட்களில் நல்ல குரலினூடு கவனிக்கப்பட்ட இன்னொருவர் கீர்த்தனா குணாளன். ‘தேகம் உன்னருகில் சுடும் தீயில் மெழுகாக உருகும்....’ என்று ஆரம்பிக்கும் சிங்கள வாடையுடனான பாடலின் மூலம் கடந்த ஆண்டில் அதிகம் இலங்கையின் இசை ஆர்வலர்களினாலும்- ரசிகர்களினாலும் கவனிக்கப்பட்டவர். தேர்ந்த பாடகிக்குண்டான குரல் வளமும்- மொழியின் ஆளுகையும் அவரிடம் தெரிந்தது. பாடுவதோடு மட்டுமில்லாமல், பாடலினையும் கீர்த்தனாவே எழுதியுமிருக்கிறார். பாடலின் ஒருங்கிணைப்பு- இறுதி வடிவத்தை ரூபன் மேற்கொண்டிருக்கிறார். இசையமைப்பை கபில் கவனித்திருப்பார். குறித்த பாடலின் சிங்கள வடிவமும் பெரிய வெற்றிபெற்றிருந்தது. 

ஒலிப்பதிவின் தரமும்- இசைக்கோர்ப்பும்

ஒலிப்பதிவின் ‘தரமின்மையே’ எம்முடைய இசைக்கலைஞர்கள் தோற்றுப்போகும் முதலாவது புள்ளி. பாடலொன்றை கேட்க தூண்டுகின்ற வகையில் எரிச்சலூட்டாத தெளிவான ஒலிப்பதிவு அவசியமானது. அதுவே, பாடலொன்றை ரசிப்புத்தன்மை- பகுப்பாய்வு- கொண்டாட்டம் என்கிற அடுத்த நிலைகளுக்கு எடுத்துச் செல்லும். ஆனால், அது அதிகமாக கவனிக்கப்படுவது இல்லை. மேலே குறிப்பிட்டது போல ஜெயந்தன் ‘காந்தள் பூக்கும் தீவிலே’ பாடலினூடு இன்னும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டியவர். ஆனால், ஒலிப்பதிவின் தரமின்மை அந்தப்பாடலினை பலரை நிராகரிக்கத்தூண்டியது. 

பத்து வருடங்களுக்கு முன்னர் வரையில் இலங்கை கலைஞர்கள் கூறும் ஒலிப்பதிவு- இசைக்கோர்ப்பு தொழிநுட்ப குறைபாடுகள் பற்றிய காரணங்களை ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. ஆனால், இன்றைய இணையத்தின் வீச்சமும்- சில அடிகளுக்குள் சுருங்கிவிட்ட கணனியை முக்கியமாக வைத்த  அதிநவீன ஒலிப்பதிவுக்கூடங்களும் அதை ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில், தென்னிந்தியாவிலிருந்து வெளிவருகிற பாடலொன்று கொண்டிருக்கிற ஒலிப்பதிவு தரத்தை இங்கேயே செய்துகொள்ளும் வசதிகளும்- வாய்ப்புக்களும் வந்துவிட்டது. அப்படியான நிலையில் நேர்த்தியின் உச்சம் என்கிற அளவை தொட்ட பின்னரே மக்களிடம் பாடலொன்றை சேர்ப்பிக்க வேண்டும். இப்போதுள்ள ரசிகர்கள் ரொம்பவும் புத்திசாலிகள். அதிலும் தொழிநுட்ப ரீதியில் அதிக கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாடலொன்றின் ஒரு நொடியில் தெறிக்கிற ஒலியின் பின்னணி குறித்தே ஆராய்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியான நிலையில் இசையமைப்பாளர்கள்- ஒருங்கிணைப்பாளர்கள்- ஒலிப்பதிவாளர்களுக்கான பொறுப்பு அதிகம். ஏனெனில், உலகத்தின் எல்லா பக்கத்து இசைகளையும் கேட்டறியக்கூடிய வசதிகளும் வாய்ப்புக்களுமுள்ள காலம் இது. 

ஒலிப்பதிவின் தரமின்மை போல, முக்கியமாக பிரச்சினைக்குள்ளாகும் இன்னொரு இடம் இசைக்கோர்ப்பு. பாடலொன்றின் மெட்டுக்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அந்தப்பாடலை இன்னும் அழகாக்குவது இசைக்கோர்ப்பும்- ஒருங்கிணைப்பும். அவ்வாறான பாடல்களே நிலைத்து நிற்கும். தமிழ் சினிமா இசையின் ஜாம்பவானான இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பதிவின் தரமின்மை- ஒருங்கிணைப்பின் குறைபாடுகளை முன்வைத்து நிராகரிக்கிற ரசிகர்கள் பெருகிவிட்ட காலம் இது. இளையராஜாவின் மெட்டுக்கள் காலங்கடந்து வீச்சம் பெறக்கூடியவை. ஆனாலும், அவரின் முக்கிய பாடல்கள் சில தற்கால ரசிகர்களினால் விமர்சிக்கப்படுவதற்கு தொழிநுட்ப குறைபாடுகள் காரணமாக இருக்கின்றது. கடைசி முப்பது வருடங்களில் இளையராஜாவின் இசையினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் அதிகம். அப்படியிருக்கிற நிலையில் அவரின் இசைக்கே இப்படியொரு இக்கட்டான நிலை இருக்கும் போது, புதிதாக வருகிறவர்களின் நேர்த்தி என்பது அதிகமாக வேண்டும். மெட்டுக்களின் அழகு மட்டுமே இப்போது போதுமானதாக இல்லை. அதை சரியான முறையில் ஒருங்கிணைந்து வழங்கும் இறுதி வடிவம் மிகவும் ஆர்வமூட்டும் வகையில இருக்க வேண்டும். ஆனால், நம்மவர்கள் அதிகம் சறுக்கும் இடம் இது.

அடுத்து, பாடலின் இன்னொரு குறைபாடு உச்சரிக்கப்படும் தமிழின் வடிவில் வருகிறது. அதிகமான பாடல்களில் ‘ழ’ என்கிற எழுத்து உச்சரிக்கப்படுவதே இல்லை. ‘ழ’க்கு பதிலாக ‘ல’ உச்சரிக்கப்பட்டு எரிச்சலூட்டப்பட்டுவிடும். தமிழே தெரியாதவர்கள் தமிழை குதறி வைக்கும் சினிமா பாடல்களை கேட்கிறீர்கள் ஒரு எழுத்து சரியாக உச்சரிக்கப்படாத இடத்தில் என்ன குறை வந்துவிடப்போகிறது? என்கிற கேள்வி வரலாம். ஆனால், எங்களிடம் பிற வீட்டுக்குழந்தை செய்கின்ற அட்டகாசங்களை மன்னித்துவிடும் குணம் எப்போதுமே உண்டு. ஆனால், அந்த அட்டகாசங்களை எங்களின் வீட்டுக்குழந்தைகள் செய்கின்ற போது கண்டித்து வைப்போம். அதுதான் சரியான முறை. தப்புக்கள் திருத்தப்பட வேண்டியது. அப்படியே கொண்டாட முடியாது. அதுபோக, ‘எம்மவர்களின் இசை’ என்றதும் எங்களிடையேயே ஒரு இளக்காரம் எப்போதுமே உண்டு. அது, வெளிநாட்டு மோகம் என்கிற தமிழனில் பற்றிக்கொண்டு எரிகின்ற மனநிலையின் வடிவம். அதை திருத்திக் கொள்ள வேண்டியது ரசிகர்களுக்கு அவசியமானது. இப்படியானதொரு நிலையில் பாடல்களில் ஒலிக்கின்ற சின்ன மொழி பிழையும் அதிகமாக கவனிக்கப்பட்டு நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. ஆக, அவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டியது நம்முடைய இசைஞர்களின் கடமை.

டிரோனின் ‘சோழி சோழி சோழக்காடு நீ’

தைத்திருநாள் அன்று காலை பேஸ்புக்கினூடு அறிமுகமான பாடல் டிரோன் பெர்னாண்டோ இசையமைப்பிலும்- ஒருங்கிணைப்பிலும் வெளிவந்திருக்கிற ‘சோழி சோழி சோழக்காடு நீ சும்மா பொரிஞ்சு தள்ளுற...!’ என்று ஆரம்பிக்கும் காதல் பாடலொன்று. விஜய் ரீவி சூப்பர் சிங்கர் ஜூனியர் சுகன்யாவின் தாலாட்டும் குரலில் பாடல் அழகாக ஒலிக்கின்றது. நம்பவர்கள் விஜய்- நிரோஷ், சுகன்யாவோடு இணைந்து பாடியிருப்பதுடன், பாடலை அவர்கள் இருவருமே தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். வருண் துஷ்யந்தன் எழுதியிருக்கிற தென்னிந்திய மொழி நடையிலான பாடல் வரிகள் என்று புதிய வடிவிலான பாடல். சிலவேளை வீடியோ வடிவம் கிடைக்காமல் தனித்து ஒலிவடிவம் மாத்திரம் கிடைத்திருந்தால் ‘சோழி சோழி சோழக்காடு நீ’ ஏதொவொரு படத்தின் பாடல் என்ற ரீதியில் தேடியிருப்பேன். அவ்வளவு நேர்த்தி அந்தப்பாடலில் இருந்தது. ஆனால், ஆண்குரல்களில் ஒன்றில் பிசிறல் இருந்தது. ஒலிப்பதிவின் தரம், இசைக்கோர்ப்பின் நேர்த்தியுடன் வெளியான எம்மவர்களின் பாடலாக இந்தப்பாடலைக் அண்மைய நாட்களில் கொள்ள முடியும். டிரோன் பெர்னாண்டோ தன்னுடைய இசைப்பயணத்தின் அடுத்த கட்டத்துக்கு நகரும் முயற்சிகளைக் கொண்டிருக்கிறார். அதை பாடல் உணர்த்துகிறது. 

சிறி விஜய், ஷமீல், கஜன், கிருஷான் என்று எம்முடைய இசைஞர்கள் பலர் தொடர்ந்தும் இசைத்துறையில் விடாது முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வெற்றி புதியவர்களுக்கு உத்வேகத்தை வழங்கும். இவர்களுக்கு சற்று காலத்துக்கு முந்தியவர்களான சிறிபிருந்தன், சிறி சியாமளாங்கன் உள்ளிட்டவர்களின் முயற்சிகளும் கவனிக்கப்படத்தக்கவை. அதிலும், சியாமளாங்களின் இசையில் வெளிவந்த பாத்தியா- சந்தூஸின் பாடல்கள் சில பெரிய பெற்றி பெற்றவை. அண்மையில் அவரின் இசையில் சங்கர்மகாதேவன் பாடிய ‘அழகிய தென்றலே ஆடைகட்டும் மின்னலே’ என்கிற பாடல் ஆட்டம் போட வைத்தது. அதுபோல, சிறிபிருந்தனின் இசையில் ‘காதல் பிசாசு’ என்றொரு படம் வெளிவந்தது. ஆனாலும், அது அவ்வளவாக கவனிப்படவில்லை.

சினிமா, ஒலி- ஒளிபரப்பு ஊடகங்கள், இணையம் என்கிற மூன்று புள்ளிகளைச் சுற்றியே இசை சுற்றிக்கொண்டிருக்கிறது. பாடல்களின் வெற்றியையும்- கொண்டாட்டத்தையும் அதிகம் தீர்மானிப்பவையாக இவையே இருக்கின்றன. ஏனெனில், இந்த மூன்று ஊடக வடிவங்களுமே மக்களுடன் நெருக்கத்தில் இருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் பாடலொன்றை உருவாக்குவதை விட அதை சரியான வழியில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் கலைஞர்களிடத்திலேயே இருக்கின்றது. மிக நல்ல பாடல்கள் பல சரியான அடையாளப்படுத்தல்களும்- வெளியீடும் இன்றி காணாமல் போயிருக்கின்றன. ஆக, இசைக்கலைஞர்கள் சரியான விளம்பரப்படுத்தல் யுத்திகளையும் கற்றுக்கொண்டு இயங்கவேண்டிய கட்டாயத்துக்கு தற்போதைய இசைச்சூழல் வந்திருக்கிறது. அதையும் கற்றுக்கொண்டு அடுத்த நிலையை நோக்கி பயணிக்க வேண்டும். நம்மவர்கள் அடுத்தவர்களினால் கொண்டாடப்படுவது ‘தாய்க்கு தன்னுடைய குழந்தை இன்னொருவரால் மெச்சப்படுகின்ற போது கிடைக்கின்ற சந்தோசத்தை தரும்.’ அப்படியான சந்தோசத்தை அதிகமாக கொண்டாடவும்- தயாராகவும் இருக்கிறோம். இந்த கட்டுரையில் வரும் பெயர்கள்- பாடல்களின் விபரங்கள், மற்றும் புகைப்படங்கள் சில முன்னூதாரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டவை. இதை, மற்றவர்களை நிராகரித்ததாக கொள்ள தேவையில்லை. 

 

Photo Source : Social Websites

கட்டுரை மூலம் : தினக்குரல்

கட்டுரையாளர் : புருஷோத்தமன் தங்கமயில்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.