Sign in to follow this  
shanthy

கப்டன் ரவி காலம் எழுதிய வரிகளில்...!

Recommended Posts

கப்டன் ரவி காலம் எழுதிய வரிகளில்...!

 

captanRavi_zps0a957217.jpg

 

இந்திய ராணுவம் ஈழமண்ணுக்குத் தந்து சென்ற வடுக்கள் எங்கள் மனங்களில்
நூற்றாண்டுகள் போனாலும் கரையாத துயரங்கள்; அவை. ஓவ்வொரு ஊருக்குள்ளும் ஒரு
குடும்பமேனும் இந்தியப் படைகளால் சிதைவுற்ற கதைகளைச் சுமந்து கிடக்கிறது
வரலாறு. அந்தக் கொடிய நாட்களில் எங்கள் ஊர்களில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த
புலிவீரர்கள் பலரது கதைகளையும் காலம் மௌனமாகச் சுமந்து கொண்டு நகர்கிறது.


1989ம் ஆண்டின் ஓரிரவு எங்கள் வீடுகளில் அத்துமீறி நுளைந்து
நிரந்தரமாய் எங்களோடு உறவாகி நினைவுள்ளவரை தங்கள் ஞாபகங்களைத் தந்து
சென்றவர்களுள் கப்டன் றவியண்ணாவும் ஒருவர்.


ஊரில் உலாவிய போராளிகளுள் றவியண்ணா வித்தியாசமான போராளி. அமைதியென்றால்
அது றவியண்ணாதான். அதிகம் கதையில்லை அலட்டலில்லை. அத்திபூத்தாற்போல ஏதாவது
பகிடிகள் அப்படித்தான் அவரது சுபாவம். எப்போதுமே எதையோ கடுமையாய்
யோசிக்கிறவர் போலவே இருப்பார். தனக்கு ஏதாவது தேவையென்றாலும் உடனே கேட்கிற
பழக்கமில்லை. சாப்பாடென்றாலென்ன தேனீரென்றாலென்ன கையில் கொடுத்தால் மட்டுமே
வாங்குவார்.


அமைதியான அந்த முகமும் மெல்லவே கதைக்கிற அந்தக் குரலும் ஒரு
வித்தியாசமான போராளியை எங்கள் ஊரில் உலாவ வைத்தது. அமைதியே உருவான அந்த
உருவம் கருணையே வடிவான அந்தக் கண்கள் எப்போதும் தனது இலட்சியக்கனவையும்
ஈழத்தின் விடியலையுமே கண்களில் சுமந்து திரிந்தது.


சிலரை வருடக்கணக்காகச் சந்தித்திருப்போம் பழகுவோம். ஆனால் அவர்கள்
மீதான கரிசனை அல்லது பாசம் ஒரு வழிப்போக்கரை சந்தித்தது போலவே இருக்கும்.
சிலர் காரணம் சொல்ல முடியாதபடி அவர்களுடனான பரிச்சயம் , உறவு சிலநாளாகவோ
அல்லது சிலகாலங்களாகவோ இருக்கும்  ஆனால் நெஞ்சுக்குள் நிரந்தரமாய்
இடம்பிடித்து விடுவார்கள். எங்கள் வாழ்வின் நீளத்தில் அவர்களது நினைவும்
அன்பும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதுபோலவே றவியண்ணாவின் அமைதியும்
எதையும் தனக்காக கேட்டுப் பெறாத குணமும் எல்லோரையும்விட றவியண்ணா மீதான
அன்பை அதிகமாயிருந்தது.


வீட்டில் சமைக்கப்படுகிற சிறப்பான  உணவுப்பண்டம் வரை ஒரு பங்கு
றவியண்ணாவுக்காகக் காத்திருக்கும். அந்த அமைதியான மனிதனைக் காலம்
பிரித்துவிடாதிருக்க சாமியிடம் பிரார்த்தனை  சத்தமில்லாத் தொடராய்.....!
ஒருநாள் றவியண்ணா வராது போனாலும் றவியண்ணாவைத் தேடும் கண்கள். ரவியண்ணா
எப்போதும் சாய்ந்திருக்கும் இலுப்பைமரம் கூட அந்த இலட்சிய வீரனை இதயத்தில்
சுமந்திருந்தது. அந்து வீரன் எல்லா உயிர்களிடத்தும் செலுத்திய அன்பின்
சாட்சியாய் இயற்கை கூட றவியண்ணாவுக்காய் காத்திருந்தது.


ஓவ்வொரு போராளியும் ஏதாவதொரு பொருளை அல்லது தனது நினைவை மறக்காதிருக்க
ஏதாவதொன்றை விட்டுச் சென்றது போல றவியண்ணாவும் விட்டுச் சென்ற ஞாபகங்கள்
ஏராளம். அதில் ஒன்று றவியண்ணா எப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல் 'ஓ
மரணித்த வீரனே'. இந்தப்பாடல் தியாகி.திலீபன் அவர்கள் மரணித்த நல்லூர்
வீதியில் தியாகி திலீபன் அவர்களது அஞ்சலி நிகழ்வில் அதிகம் ஒலிக்கவிடப்பட்ட
பாடல். அதையே றவியண்ணாவும் அடிக்கடி விரும்பிக் கேட்பார். சிறப்பான காரணம்
ஏதாவது உண்டா என்பதை றவியண்ணா யாரோடும் பகிர்ந்து கொள்ளவில்லை. எதைக்
கேட்டாலும் ஒரு புன்னகையால் சொல்லிவிடுகிற அல்லது மறைத்துவிடுகிற
வல்லமையைக் கொண்டிருந்த அந்த விழுதின் நினைவுகளை எழுதிவிட சொல்லிவிட
காலத்தாலும் முடியாத கதைகளை அந்த அமைதியான மனிதன் கொண்டிருந்தது
அதிசயம்தான்.


வோக்கி ரோக்கியையும் தனது துப்பாக்கியையும் எங்கேயிருந்தாலும்
கழற்றியதையே காணவில்லை. வோக்கி ரோக்கி இரைச்சலோடு குரல்கள் வரும்.
மாமரத்தில் அல்லது ஏதாவதொரு உயரத்தில் ஏறிநின்று கதைக்கிற போது மட்டுமே
வோக்கியை கையில் எடுப்பார்.


துவக்குத் தவறி வெடிச்சா என்ன செய்வீங்கள் ? ஒருநாள் கேட்ட போது அந்த
ஆயுதத்தின் பெறுமதியையும் அதன் தேவையையும் வளமை போல அமைதியான சிரிப்போடு
ஒரு கதையாகவே சொல்லி முடித்தார். ஒரு ரவையும் ஒரு கைக்குண்டும் எத்தனை
பெறுமதியானவை என்பதனை றவியண்ணா சொல்லும் வரை அறிந்திருக்கவில்லை. அப்படி
எல்லாவற்றிலும் நிதானமும் கவனமும் மிக்க ஒரு அற்புத மனிதன்.


தனது சொத்துக்களாக வைத்திருந்த சில உடுப்புக்களோடு ஒரு நாட்குறிப்புப்
புத்தகம் சிவப்பு, நீலம் றொனோட் பேனாக்கள் , சில புத்தகங்கள் , சில
ஒலிநாடாக்கள். சின்னம்மான் வளவுப் பெரிய பெரியபுளிமரத்தடியில்
அந்தப்புத்தகங்களில் எதையாவது வாசித்துக் கொண்டிருப்பார்.


சக போராளிகள் ஆளாளுக்கு அடிபட்டு கும்மாளமடிப்பார்கள் அமைதியாகச்
சிரித்தபடி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பார். சிலர்
பகிடிச்சண்டைகளில் கோபித்து ஆளையாய் பார்க்காமல் பேசாமல் இருந்ததைக்
கண்டிருக்கிறேன் ஆனால் றவியண்ணா அப்படி யாருடனும் கோபித்துக் கதைக்காமல்
இருந்ததைக் கண்டதே நினைவில் இல்லை.


ஒரு மழைநாள்.  பிள்ளையார் கோவில் வீதியிலிருந்து பஞ்சுமாமா வீடுவரை
வெள்ளம். பெஞ்சன் வடலிப் பற்றைகளில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பு
வெள்ளத்தில் இருக்கிறதென்று வதனிமாமி சொல்லியிருந்தா. ரியூசன் முடிஞ்சு
பிள்ளையார் கோவில் மடத்தடி வரையும் போய் அதனைத் தாண்டிப்போகப் பயத்தில்
கொஞ்சம் முன்னே போவதும் பின்னே நிற்பதுமாக நிற்க ஜீன்சை முளங்காலளவு
மடித்துவிட்டு நடந்து வந்தார் றவியண்ணா. என்ன பாம்பு வருமாமோ ? எல்லா
வீரமும் போய் பாம்புதான் காலைச்சுற்றும் போலிருக்க அந்தப் புலிவீரன்
அதெல்லாம் சும்மா வாங்கோ நான் வாறன் என வந்தது இன்றும் நினைவில் நிற்கிறது.


வதனிமாமி சொன்ன கொம்பேறிமூக்கன் பாம்பு பின்னர் ஒருநாள்;
நல்லாரப்பாவால் அடிக்கப்பட்டு ஒன்றரை மீற்றர் நீளமான பெரிய உருப்படியான
அந்தப் பாம்பை பெஞ்சன் வடலி இலுப்பைக்கு மேற்கு வேலிக்கரையை அண்டியிருந்த
முட்கிழுவையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த வீதியால் நடந்து
வந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு வேகமெடுக்கிற ஓட்டத்தையும் சயிக்கிளையும்
பார்த்து அதேயிடத்தால் எந்தப்பயமும் இல்லாமல் சென்று வரும் றவியண்ணா
சொல்லுவார். செத்தபாம்பு உயிர்க்காது....!


இப்படிப் பல நினைவுகள் றவியண்ணா பற்றி....! பயத்தையகற்றிய பாரதியாய்
தன் பார்வையால் , சிரிப்பால் , தன் பேச்சால் தந்த துணிச்சலை என்றும் மறக்க
முடியாத மனிதனாய் எங்கள் ஊருக்குள் உலவிய றவியண்ணாவும் அவரது தோழர்களும்
ஒருநாள் எங்கள் ஊரைவிட்டுப் போனார்கள்.


போகும் போது ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்த நினைவுப் பொருட்களில் ஒன்று
றவியண்ணா போட்டிருந்த கறுப்பு பிளாஸ்டிக்காப்பு. எல்லோரோடும் அமைதியாகவே
போனார் றவியண்ணா. சொல்லில் வடிக்க முடியாத துயரை அந்தப்பிரிவு தந்து போனது.
ஊரே வெறிச்சுப் போனது போல அதற்குப் பிறகு வந்த நாட்கள் அவர்களில்லாமல்
கலகலப்பை இழந்த உணர்வு.


திரும்பி வருவேன் எனச்சொல்லிப் போனவர்களுள் சிலர் மட்டுமே வந்து
போனார்கள். றவியண்ணா எங்களிடம் வரவில்லை. 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த
காலமது. காற்றில் பறந்துவிடுமாப்போல அந்த மெல்லிய உருவம் அணிகிற
சேட்டிற்குள் ஆயிரம் கிலோ காற்றை அடைத்துவிட்டது போல காற்றள்ளி நிற்க ,
காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் வீதியில் சில தடவைகள் வேகமாய் ஓடும்
மோட்டார் சயிக்கிளின் சாரதியாய் யாரோ ஒரு போராளியை ஏற்றியபடி அல்லது
தனியாகப் போனதைக் கண்டிருக்கிறேன். இன்னும் உங்களையெல்லாம்
மறக்கவில்லையென்பதைச் சொல்லுமாப் போல ஒரு பன்னகை , ஒரு கையசைப்பு அதுவே
றவியண்ணாவின் அன்பின் வெளிப்பாடாக அமையும்.


அப்போதெல்லாம் புலனாய்வுப்பிரிவு என்பதன் அர்த்தமே புரியாது. ஆனால்
றவியண்ணா ஒரு புலனாய்வுப்போராளியென்றும் அவர் புலனாய்வுப்பணியில்
இருப்பதாகவும் சொல்லப்பட்டது.புலனாய்வாளனுக்குரிய அனைத்துத் திறமைகளையும் அந்த வீரன் தனக்குள் ஒளித்து
வைத்திருந்த திறமைகளை வெளியார் யாருமே காணாது காத்து ரவியண்ணா படைத்த
வெற்றிகளை சாதனைகள் பலவென்று சொல்வார்கள். சாதனைப்புலியொன்று சத்தமில்லாமல்
எங்களோடு வாழ்ந்து எங்கள் ஊரோடு உறவாடி எங்களைப் பிரிந்து போனது ஒரு
பொழுது.....!


காற்றள்ளிக் கொண்டு போகும் வேகத்தில் போகும் றவியண்ணாவின் மோட்டார்
சயிக்கிளில் றவியண்ணாவைக் கொண்டு போன காலத்தின் சதி நடந்த தினம்
02.09.1990. அன்று றவியண்ணாவின் கதையை அவர் ஓடித்திரிந்த மோட்டார்
சயிக்கிளில் வந்தே காலன் முடித்து வைத்தான். கப்டன்.ரவியாக எங்கள் ரவியண்ணா
இரத்தத்தில் தோய்ந்து மரணித்துப் போனார்.றவியண்ணாவின் போராளித் தோழனொருவனே அந்தத்துயரச் சேதியைச் சொல்லிவிட்டுப்
போனான். சாவின் வலியை எங்களின் குடும்பத்தில் ஒரு உறவாய்
அண்ணாவென்றழைக்கும் உரிமையைத் தந்த அந்த மாமனிதனை இழந்த துயரத்தை கண்ணீரால்
கரைத்த துயரம் இன்றும் அந்த மாவீரனை மனக்கண் முன்னே நிறுத்தி
வைத்திருக்கிறது.


தாயகக்கனவோடு தமிழின விடுதலைக்காகவே ஓயாது உழைத்த அமைதியே உருவான
றவியண்ணாவின் மூச்சுக்காற்று அதே கனவோடு எங்கள் மனங்களிலும் தாயக மண்ணோடும்
கலந்து போனது.


தையிட்டி மண்ணில் திரு.திருமதி.மாசிலாமணி தம்பதிகளின் மடியில் தவழ்ந்த
ரவீந்திரன் என்ற குழந்தையை ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு
புலனாய்வுப்போராளியாய் ஒரு சிறந்த போராளியாய் எமக்குத் தந்து ஈழவரலாற்றில்
கப்டன் ரவி என்ற கௌரவத்தோடு பதிவு செய்து கொண்டது.


2003இல் ஊர் போன போது றவியண்ணா அதிகம் நடந்த எங்கள் பிள்ளையார் கோவில்
மேற்கு வீதியால் நடந்து நான் பிறந்த வீட்டைப் பார்க்கப் போனேன். பெரிய
வாகனம் போகும் அளவு பெரிய வீதி ஒன்றையடிப் பாதையாய் ஒடுங்கியிருந்தது.
றவியண்ணா  , றோயண்ணா , நெல்சம்மான் ,  அப்பாண்ணாவென பல போராளிகள் உலாவிய
அந்தத் தெரு பற்றைகளாலும் மதிவெடிகளாலும் நிறைந்திருந்தது.


கனவுகளில் பிள்ளையார் மேற்குவீதி கண்ணில் தெரிகிற போது றவியண்ணாவும்
அந்த வீதியில் வருவது போலவே பலமுறை கனவுகள் வந்திருக்கிறது. காலம் எங்கள்
றவியண்ணாவையும் மறக்காமல் தன்னோடு கொண்டு செல்வதை அந்த வீதியில்
மிஞ்சியிருந்த எச்சங்கள் நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.


காலம் 2003...,ஆடிமாதம்.....,
வன்னியில் மாவீரர்களின் நிழற்படங்கள்
அவர்களது ஞாபகங்கள் தரும் பொக்கிசங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின்
காப்பகத்திற்குச் சென்ற போது பலரது படங்கள் கேட்டிருந்தேன். நெடுநாள் தேடிய
கிடைத்தற்கரிய ஒரு பொக்கிசம் போல ஒரு போராளியிடமிருந்து ஒரு தொகை
மாவீரர்களின் படங்கள் கிடைத்தது. 1981 – 2002 வரையில் புலனாய்வுத்துறையில்
வீரச்சாவடைந்த மாவீரர்களின் படங்கள் யாவையும் ஆவணப்படுத்துமாறு ஒரு
போராளித் தோழன் இறுவட்டுக்களில் பதிவு செய்து தந்தான்.


கிடைத்த படங்களை ஒருமுறை பார்த்துவிடும் ஆவலில் சிலவேளை நான் தேடுகிற
படங்கள் அதில் பதிவாகியிருக்கலாமென்ற நம்பிக்கையில் அந்தத் தோழனின்
மடிக்கணணியை வாங்கி அதில் ஆண்டுவாரியாகத் தேடினேன். நம்பிக்கை பொய்க்காது
றவியண்ணாவின் படமும் அந்த இறுவட்டில் பதிவாகியிருந்தது. மீண்டும்
றவியண்ணாவை கண்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கண்களிலிருந்து வழிந்த
கண்ணீர்த் துளிகளில் றவியண்ணா மீண்டும் பிறந்து வந்திருப்பது போல ஓர்
சந்தோசம்....!


வருடாவருடம் றவியண்ணாவின் பிறந்தநாள் , நினைவுநாள் ,மாவீரர்நாள்
நாட்களில் நினைவுகளைத் தந்து சென்ற பலரது படங்களோடு றவியண்ணாவின் படத்தின்
முன்னாலும் ஒரு மெழுகுவர்த்தி எரிந்தபடியிருக்கிறது.

27.11.2012

 

http://mullaimann.blogspot.de/2013/02/blog-post.html

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றிகள் சாந்தி......எத்தனை தளபதிகளை நாம் இழந்துவிட்டோம்....

Share this post


Link to post
Share on other sites

 உன்னதமான பதிவு   

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றிகள் சாந்தி .

Share this post


Link to post
Share on other sites

அக்கா உங்களிடம் இருக்கும் நினைவு பதிவுகளை தொடர்ந்து பகிருங்கள். கப்டன் ரவி அண்ணாவுக்கு வீர வணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றிகள் சாந்தி......எத்தனை தளபதிகளை நாம் இழந்துவிட்டோம்....

 

இவர்களெல்லாம் ஒருவேளை உயிருடன் இருந்திருந்தால் மாற்றங்கள் வந்திருக்கவும் கூடும்.

 உன்னதமான பதிவு   

 

கருத்துக்கு நன்றிகள் லியோ.

 

பகிர்வுக்கு நன்றிகள் சாந்தி .

 

கருத்துக்கு நன்றிகள் கோமகன்.

 

அக்கா உங்களிடம் இருக்கும் நினைவு பதிவுகளை தொடர்ந்து பகிருங்கள். கப்டன் ரவி அண்ணாவுக்கு வீர வணக்கங்கள்

பலரது நினைவுகள் பத்திரப்படுத்த வேண்டியவை. கொஞ்சம் கொஞ்சமாய் எழுத வேண்டும் பகலவன்.

 

Share this post


Link to post
Share on other sites

ஆண்டுகள் 23 இன்றுடன் நிறைகிறது
ஆயினும் எங்கள் நினைவுகளில்
றவியண்ணா....!
வளமை போல இன்றும் உங்களுக்காய்
ஒரு மெழுகுவர்த்தியும் பூக்களும்
உங்கள் நினைவுகளில் கரைகிறது ஞாபகங்கள்....!

083.gif

Kapdan-Ravi-Thesakkaru-600x849.jpg

 

Edited by shanthy

Share this post


Link to post
Share on other sites

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Share this post


Link to post
Share on other sites

நினைவுநாள் வீரவணக்கங்கள் 

Share this post


Link to post
Share on other sites

நினைவு வீரவணக்கங்கள் 

Share this post


Link to post
Share on other sites

கருத்திட்டு றவியண்ணாவை அஞ்சலித்த அனைவருக்கும் நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

காலம் எழுதிய வரிகளில் எங்கள் நினைவுகளோடு தொடர்ந்து வரும் காவியமே றவியண்ணா உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்.

captan+Ravi.jpg

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this