Jump to content

எஸ்.ஜானகி - பத்மபூஷன் இழந்த கெளரவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.ஜானகி - பத்மபூஷன் இழந்த கெளரவம்

விக்கி
 


1962-ம் ஆண்டு… எஸ்.எம்.எஸ் எனப்படும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு ஒரு சிக்கல். ‘கொஞ்சும் சலங்கை’ படத்துக்கு சிங்கார வேலன் சந்நிதியில் ஒரு நாதஸ்வர வித்வானும், ஒரு கை தேர்ந்த பாடகியும், பக்தியும் காதலும் பொறாமையற்ற போட்டியுமாய் இணைந்து இசைக்கும் ஒரு பாடல். கீர்த்தனைகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆபேரியில் அக்மார்க் தமிழிசை மரபில் அசத்தலாக ஒரு மெட்டும் ரெடி செய்துவிட்டார் எஸ்.எம்.எஸ். நாதஸ்வர சக்கரவர்த்தியாகிய ராஜரத்தினம் பிள்ளையின் சிஷ்யர் காருக்குறிச்சி அருணாசலமும் சிரத்தையுடன் ரிகர்சல் முடித்து தன் பங்கிற்கு ரெடி. தமிழ்த்திரையுலகின் கலைவாணியாகிய பி.சுசீலா பாட அழைக்கப்படுகிறார். எப்பேர்ப்பட்ட மலையையும் சாதாரணமாகத் தாண்டும் அவருக்கு அன்றைய தினம் ராசி இல்லாதது. எஸ்.எம்.எஸ் எதிர்பார்த்த அளவிற்கு நாதஸ்வர பிருக்காகளை அவரால் பாட முடியவில்லை. பின் பி.லீலா வருகிறார். தன் பங்கிற்கு முயற்சி செய்கிறார். முடியவில்லை. மெட்டின் தரத்திற்கு தலைவணங்கி விலகிக் கொள்கிறார். இருந்த எல்லா துருப்புச் சீட்டும் கை நழுவி இப்பொழுது யாரை பாட வைக்கலாம் என்பதே அந்த சிக்கல்.


sj_1.jpg

 

கடந்த சில ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பாடல்களை மட்டுமே பாடி தனக்கென இன்னும் தனி இடம் தேடிக் கொண்டிருக்கும் எஸ் ஜானகியின் பெயரை பி.லீலா அவர்களே பரிந்துரைக்கிறார் (அக்காலத்து பொறாமையற்ற தொழில்முறைத் தோழமையை இங்கே கவனிக்க வேண்டும்.)ஜானகி வரவழைக்கப்படுகிறார். மெட்டு போட்டுக் காட்டப்படுகிறது. “இந்த நாதஸ்வர சங்கதிகள் எல்லாம் ‘ப த நி ச.. க ம த நி..’ என கால்அளவும் அரையளவுமாக இருக்கிறதே. முழுவதுமே சரளியாக பாடினால் சரியாயிராது. நான் இதை ராகமாக ஆகாக்காரத்தில் பாடிவிடுகிறேன்” என்கிறார். “இதை ஸ்வரமாகப் பாடுவதே பலருக்கு சிம்ம சொப்பனம். வெறும் ராகமாகப் பாடுவது இன்னும் கஷ்டமே அம்மா” என்கிறார் எஸ்.எம்.எஸ். “இல்லை சார். இந்த பாட்டுக்கு இதுதான் சரியாக வரும். நான் பாடுகிறேன்” என ஜானகி உறுதியாகக் கூறுகிறார். புதிதாக வந்த கத்துக்குட்டி எனக்கென்ன புத்தி சொல்வது என உதாசீனப்படுத்தாமல் எஸ்.எம்.எஸ்ஸும் ஆதரவு வழங்க, நாதஸ்வரமா குரலா எனத் தெரியாத அளவுக்கு அப்பாடலில் ஜானகி சோபிக்கிறார். அதே படத்தில் தவில் கலைஞராக வரும் மூத்த நாடகக் கலைஞர் சாரங்கபாணி மூலம் சினிமாத் துறையில் நுழைந்து அந்தப் படத்தின் எடிட்டராக அப்போது வேலை செய்த என் தந்தையிடம் ரெக்கார்டிங் முடிந்து அருணாசலம் இரண்டு விஷயங்களைக் கணிக்கிறார். முதலாவது, ‘இந்தப் பொண்ணு பிற்காலத்துல பெரிய பாடகியாக வரும்’ என்றது. இரண்டாமாவது “டேய் மணி.. நான் உயிரோட இருந்தா உன் கல்யாணத்துல வந்து வாசிக்கிறேண்டா” என்றது. படம் வந்த இரண்டாண்டுகளில் அருணாச்சலம் மறையவே அவரின் முதல் வாக்கு மட்டும் அமோகமாக பலித்தது.


காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் ஆசி பெற்ற ஜானகிக்கு அவருடைய 75-ஆம் வயதில் இந்திய அரசு பத்மபூஷண் கொடுத்து கெளரவிக்க நினைத்ததையும், அந்த விருதைப் பெற்றுக்கொள்ள ஜானகி மறுத்துவிட்டதையும்  ேள்விப்பட்டபோது ஒரு திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்தது. ‘ஷாஷன்க் ரிடம்ப்ஷன்’ என்கிற ஆங்கிலப் படத்தில் மார்கன் ஃப்ரீமேன் அறியாப் பருவத்தில் செய்த தவறுக்காக ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பார். நாற்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் தண்டனையை அனுபவிக்கும் அவர் திருந்தி விட்டாரா, அவரை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யலாமா எனப் பரிசீலிக்க வருடாவருடம் ஒரு ஆய்வுக்குழு வருகிறது. ஒப்புக்குக் கேள்விகளைக் கேட்டுவிட்டு அவரையும் பிற சக கைதிகளையும் நிராகரித்துவிடுகிறது. அடுத்த வருடமும் வந்து “நீ திருந்திவிட்டாய் என நினைக்கிறாயா?” என வழக்கம்போல அவர்கள் அதே கேள்வியைக் கேட்க, “போடாங்க..” என மார்கன் கடுப்பாகி “நீங்கள் எதிர்பார்க்கும் பதிலைத் தரட்டுமா, இல்லை உண்மையிலேயே திருந்திவிட்டேனா இல்லையா எனத் தெரிய வேண்டுமா” என அவர்களுக்கே உபதேசித்துவிட்டு வெளியேறுகிறார்.


வரிவரியாகப் பாடி அதை வெட்டி ஒட்டி ஸ்ருதி விலகி இருந்தாலும்

போன்ற மென்பொருள் மூலம் சரி செய்து  ஒரு பாட்டை முடிக்க ஒரு மாதம் எடுத்துக்கொள்ளும் இன்றைய தலைமுறை, தன் எழுபத்தைந்தாவது வயதில் இருபதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி (அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் வீதம் வைத்தாலும் அதுவே தன் வாழ்நாளில் தொடர்ந்து ஐம்பத்தைந்து ஆண்டுகள் கால அளவிற்கு வருகிறது) என் போன்ற கணக்கற்ற ரசிகர்களின் ஆதர்சமாய் விளங்கும் ஜானகிக்கு இப்போது கொடுத்திருக்கும் பத்மபூஷணை அவர் கொடுக்காமலேயே இருந்திருக்கலாம் என நாசூக்காய் மறுத்திருப்பது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடிய முடிவாகவே எனக்குப் படுகிறது.

ஜானகியின் சாதனைகளை நாம் பலவாறாக எடை போடலாம். ஆனால் அதில் முதலும் கடைசியுமாய் நான் கூறுவது அவரின் வெர்சடாலிட்டி (versataility) மட்டுமே. ‘சகலகலாவல்லி’ என்றெல்லாம் இந்த வார்த்தையை நாடகத்தனமாய் தமிழில் மொழி பெயர்க்காமல் நான் சொல்ல வருவது இதுதான்: எந்த ஒரு இசை சார்ந்த, உணர்வு சார்ந்த, வெவ்வேறு விதமான குரல் சார்ந்த பாடலையும் அவரால் அட்சர சுத்தமாகப் பாட முடிந்திருக்கிறது. அவருடைய சம காலத்திய ஜாம்பான்களாக விளங்கிய கலைஞர்களோடு அவரை ஒப்பிட்டுப் பார்த்தால் கூட இது தெளிவாகிவிடுகிறது.


இந்திய அளவில் பின்னணிப் பாடகிகள் என யோசித்துப் பார்த்தால் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகளே. ஜானகியும் முறையாக சங்கீதம் பயின்றவர் என்றாலும், தான் பாட ஆரம்பித்த காலத்தில் இவர்கள் பாடிய இந்தி பாடல்களைதான் முன்னுதாரணமாக, வாய்ப்புகள் பெற ஒத்திகைகளில் பாடியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட இந்த சகோதரிகள் இருவருமே சாஸ்த்ரீய அடிப்படையில் அமைக்கப்பட்ட எவ்வளவு கடினமான பாடல்களையும் அசகாயமாக பாடக் கூடியவர்கள்.


சங்கர்-ஜெய்கிஷனின் ‘ரசிக் பல்மா’வையோ, மதன் மோகனின் “ஆப் கீ நசரோன் மே”வையோ, சி.ராமச்சந்திராவின் “ஏ ஜிந்தகி உஸி கி ஹை”யையோ லதாஜியின் குரலின் இடத்தில் வேறொருவரை நினைப்பதே பாவம். ஆனால் ஜீனத் அமன், பர்வீன் பாபி போன்ற நவீன நாயகிகள் நளினத்துடன் பாடும் பாடல்களையோ அல்லது கேபரே வகை கிளப் பாடல்களையோ அல்லது இன்றைக்கு நாம் குத்துப் பாடல் என வகைப்படுத்தும் பாடல்களை பாடும்போது தனக்கென ஒரு வரம்பை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள்ளேயே லதாஜி தங்கி விடுவார். இந்த வகையில் “ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்” போன்ற பாடல்களே அந்த விஸ்தீரணத்தின் எல்லை எனலாம்.


ஆனால் பாப் மற்றும் ஹிப்பி கலாச்சாரத்தில் தன்னை அடையாளம் கண்ட நகர்ப்புற எழுபதுகளின் இந்தியா பாடிய அனைத்து பாடல்களுமே ஆஷாஜிக்கு சொந்தமானவை. ‘சுராலியா’வாக இருந்தாலும்,

புகைத்தாலும்,
மோனிக்கா-வாக ஆர்ப்பரித்தாலும்,
என தேடினாலும் அதைத் தகுந்த உணர்வுடன் ஆஷா-ஜியால் மட்டுமே வழங்க முடிந்தது.

அதேபோல் இங்கே தமிழ்நாட்டில் ஜானகியின் சம காலத்தை பார்த்தால் - பட்டத்து ராணி, இலந்தப்பழம் போன்ற எல் ஆர் ஈஸ்வரி பாடிய பாடல்கள் சுசீலா அம்மாவிற்கு பொருந்தாது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.


அதனால் இந்தியப் பெண் பின்னணி பாடகிகளில் இந்த வகை பாடல்கள் மட்டுமே பாடக் கூடியவர் என்றோ, இந்த வகை பாடல்களை பாட இயலாதவர் என்றோ கைசுட்டி காட்டும்படி இடைவெளி இல்லா திறமை உள்ளவர் ஜானகி மட்டுமே என்பது என் கருத்து.


sj_2.jpg

 

ஜானகி தன்னுடைய குரலில் சாகசம் செய்த பாடல்கள் என அனேகப் பாடல்களை மேற்கோள் காட்டலாம். ஆனால் குரலை தான் நினைத்த அச்சில் அப்படியே வார்ப்பது மட்டுமல்லாது இசை நுட்பத்திலும் ஒரே நேரத்தில் மேதமையை வெளிப்படுத்தும் வகையில் இவர் பாடிய பாடல்களே இவரை ஒரு தன்னிகரில்லாத மேதை என நான் இவரைப் பற்றி சொல்லக் காரணம். அவரே தன்னுடைய ஒரு நேர்காணலில் தான் இதுவரை பாடிய பாடல்களிலேயே கடினமானதென “சிவ சிவ என்னத” என்ற கன்னடப் பாடலை குறிப்பிடுகிறார். காரணம், அந்த பாட்டில் அடுத்தடுத்த வரிகள் ஆபோகியிலும் தோடியிலும் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு ஸ்பூனில் குலோப் ஜாமுனும் மறு ஸ்பூனில் சுக்கு மிளகு திப்பிலி அளவுக்கதிகமாய் போட்ட தீபாவளி லேகியமும் சாப்பிடுவது போல. போதாக்குறைக்கு வயலினுக்கு ஈடாக இந்தப் பாட்டில் இவர் பாடியிருக்கும் ஸ்வரங்கள் ‘சிங்கார வேலனே தேவா’வையே ஒன்றும் இல்லாமல் செய்கிறது. இதை இன்று கேட்கும்போது ஒரே டேக்கில் இதைப் பதிவு செய்வது எக்காலத்திலும் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இவரால் முடிந்திருக்கிறது. இவை போன்ற தருணங்கள், நாதியா கோமனேசி 1976-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வாங்கிய “பெர்ஃபெக்ட் 10″ போன்றவை. ஆண்டாண்டு காலத்திற்கும் இன்னொருவரால் தாண்டிச் செல்ல முடியாதவை.


குரல் கட்டுப்பாடு என்கிற அடிப்படையில் சொன்ன பேச்சை அப்படியே கேட்க வைப்பதில் கடவுள் ஜானகிக்கு கொஞ்சம் ஓரவஞ்சனை செய்திருக்கிறார் எனும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையே. ‘உதிரிப் பூக்கள்’ படத்தில்

என்கிற பாடலை வயதான கிழவியைப் போல் பாடியிருப்பார். அப்படிப் பாடுவதற்கு தேவையான குரல் மாற்றம் செய்திருக்கிறார் என்கிற விஷயத்தை விடுங்கள். Just for Gags நிகழ்ச்சியில் இவரை ஒரு திரைக்கு பின்னல் இருந்து இந்த பாட வைத்து, இது தமிழ் நாட்டுபுறத்திலேயே பிறந்து வளர்ந்த பெண்மணிதான் என்கிற உணர்வை ஏற்ப்படுத்திவிட்டு கடைசியில் திரையை விலக்கி, “இல்லை இது ஆந்திரா நமக்கு தந்த ஜானகி” என கேட்பவர்களை திக்கு முக்காட வைக்கலாம். தலை சுற்றுபவர்களுக்கு சோடா கொடுத்து தெளிய வைத்து அதே படத்தில்தான் இவர் “நான் பாட வருவாய்” என கல்யாணியில் ஜிம்னாஸ்டிக் செய்திருக்கிறார் என திரும்ப மயக்கத்துக்கு இட்டுச் செல்லலாம். தப்பி தவறி யாரவது எழுந்துவிட்டால் திரும்ப அதே படத்தின் “அழகிய கண்ணே” என்கிற உயிரை உருக்கும் பாட்டை போட்டுக் காட்டி இதை பாடியவரும் அவரே என பார்ட்டியை கோமாவில் தள்ளிய புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம்.

என் ஸ்லாப்ஸ்டிக் காமெடி ஒருபுறமிருக்க, நான் சொல்ல வருவது - ஒரே படத்தில் சாஸ்த்ரீய பாணியில் ‘தூங்காத விழிகள் ரெண்டை’ அமிர்தவர்ஷினியாய் பொழியும் அதே ஜானகிதான் ‘ஒரு பூங்காவனம், புதுவனம்’ என இளமை ததும்பி ‘ரோஜாப்பூ ஆடிவந்தது’ என ஏரோபிக்ஸும் செய்கிறார். அக்னி நட்சத்திரம், உதிரிப் பூக்கள் என இந்த இரு திரைப்பட பாடல்களின் உதாரணங்களில் இருந்து மட்டுமே நினைத்ததை அவரின் சொந்த எதிர்பார்ப்பிற்கு மேலாகவே நடத்தி முடிக்கும் திறன் உள்ளவர் ஜானகி என்பது புரியும். பாட்டி குரலில் பாடிய அதே ஜானகி

என்கிற மலையாள படத்தில் ஒரு முழு நீளப் பாடலை சிறு குழந்தையின் குரலில் பாடியிருப்பார். நெஞ்சத்தை கிள்ளாதே கேஸட்டில் “மம்மி பேரு மாரி” என்ற பாடலுக்கு நேர் இருக்கும் எஸ்.ஜானகி என்கிற பெயர், இன்றளவும் நான் அச்சுப்பிழை என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

(சிவசங்கரி சிவானந்த லகரி புகழ்) பெந்த்யால நாகேஸ்வர ராவ், எஸ்.எம்.சுப்பையா நாயுடு தொடங்கி, மெல்லிசை மன்னர்கள், எம்.பி.ஸ்ரீநிவாசன், சலீல் சௌத்ரி, ஜி.கே.வெங்கடேஷ் வழியாக இளையராஜாவிற்குப் பாட வரும்போது ஜானகி ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர பாடகி. தன் இசையில் அவரைப் பாட வைக்க வேண்டும் என்பது இளையராஜாவுக்குக் கனவாக இருந்திருக்கிறது. அது அவர் ஜானகிக்கு கொடுத்த ஒவ்வொரு பாடலிலும் எப்போதும் தெரிகிறது. அன்னக்கிளியில் ஆரம்பித்த இவர்கள் இருவரின் பயணம் படிப்படியாக அடைந்த பரிணாம வளர்ச்சியை ஜானகியின் பாடல்கள் மூலமாக மட்டுமே எடுத்துக்காட்ட முடிகிறது. இளையராஜாவின் ஆரம்பப் பாடல்கள் மொத்தமும் பாடிய ஜானகி, அதுவரை சுசீலா தக்க வைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் முதன்மைப் பாடகி என்ற பெயரைத் தட்டிச் செல்கிறார். 16 வயதினிலேவின் ‘செந்தூரப் பூவே’ இளையராஜாவை மறுபேச்சின்றி மொத்தமாக அனைவரும் இசை மேதையாக ஒப்புக்கொள்ளும் இடத்தில் வைத்தது என்றால், அது ஜானகிக்கும் முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது. ராதா, ராதிகா, ரேவதி என பாரதிராஜா அறிமுகப்படுத்திய எல்லா முன்னணி நாயகிகளின் பாடல்களிலும் நமக்கு தோன்றும் குரல் ஜானகியுடயதாகவே ஒலிக்கிறது. அவர் பாடிய “நல்ல நேரம் நேரம்” (கன்னடத்தில் “யாரி காகா”) என்ற பாடல் ரெக்கார்டிங்கை நேரில் பார்த்த ஆர்.டி.பர்மன் குட்டி போட்ட பூனை போல் இருப்பு கொள்ளாமல், அங்கும் இங்குமாய் நடனம் ஆடி ராஜாவை “என்னய்யா நீ இருபது வருஷம் கழிச்சி கொடுக்க வேண்டிய இசையை இப்பவே கொடுதிட்டிருக்கே” என கட்டிப்பிடித்து கொண்டாடுகிறார். இவ்வளவு நீண்ட பயணத்தில் இவ்விருவருக்கும் தொழில் ரீதியாக பிரச்சனை இல்லாமல் இல்லை. தன்னை விட்டுச் சென்ற யாரையும் தேடிப்போகாத இளையராஜா, ஜானகியுடன் மட்டும் பிளவு வந்த போதெல்லாம் நல்லவேளையாக சமரசம் செய்து கொண்டுள்ளார் . இல்லையென்றால் (மற்ற பாடல்களை விட ஏனோ கேட்பவரிடம் மிகவும் பாதிப்பை உண்டாக்கும் வகையில் அமையும்) சிறு பொன்மணி அசையும், மெட்டி ஒலி காற்றோடு, நான் தேடும் செவ்வந்தி பூவிது, அடி ஆத்தாடி, பூ மாலையே தோள் சேரவா, தென்றல் வந்து தீண்டும் போது என இளையராஜாவும் அவரும் சேர்ந்து பாடிய டூயட்டுக்களை நாம் கேட்காமலேயே போயிருப்போம்.


இதுவரை மேற்கோள் காட்டிய இயற்கையாக அமையப்பெறும் குரலும், இசைத்திறனும் மட்டுமல்லாது இசையமைப்பாளர் என்ன எதிர்பார்க்கிறார் என்ற கிரகிப்புத்தன்மையும் பாடகர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது. அசாதாரணமான மேதைகள் அனைவரும் ‘நான் இப்படி இருப்பதற்கு ஸ்பெஷலாக எதுவுமே செய்வதில்லை’ என வழக்கமாகச் சொல்வதுதான். ஜானகியுமே அப்படித்தான். ஒரே பாடலை உணர்ச்சி இல்லாமல் பாடினால் எப்படி இருக்கும் எனவும் உணர்ச்சியோடு பாடினால் எப்படி இருக்கும் எனவும் ஒரு முறை அவர் பாடிக் காட்டினார். அதைப் பார்த்தபோது, ஜானகி மாடுலேஷனுக்கு ஒன்று, எக்ஸ்ப்ரஷன்களுக்கு ஒன்று, வாய்ஸ் ரேஞ்சுக்கு ஒன்று எனப் பலப் பல திருகுவிசைகளை (knob) வைத்திருக்கிறார் என்றே எனக்குத் தோன்றியது. இசையமைப்பாளர் தன் தேவைகளைச் சொன்னவுடன், அதை அப்படியே உள்வாங்கிக்கொண்டு ஒவ்வொரு விசையையும் ரோபோ போலத் தேவையான அளவு செட் செய்துகொண்டு அப்படியே பாடுகிறார். ஆமாம், அப்படித்தான் இருக்கமுடியும் என என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ளும் வேளையில் அவர் மனிதர்தான் என்கிற உண்மை ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. கமலஹாசன் ஒருமுறை நகைச்சுவையாக சொன்ன விஷயம் இது: “இவர் என்னமோ பின்னணிப் பாடகிதான். ஆனால் இவர் பாடும்போது பார்த்தால் இவருக்கே யாரோ பின்னணி பாடுவது போல தோன்றும். அந்த அளவிற்கு அவர் பாடும்போது பார்த்தால் உதடு அசைகிறதா இல்லையா என்பது கூட தெரியாது”. ஆனால் அவருடைய பாடல்களை இன்று டேலன்ட் ஷோக்களில் பாடும் குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்கள் நடிக்கிறார்களா அல்லது பாடுகிறார்களா என தெரியாத அளவிற்கு அலட்டும்போது, சிரிப்பதா அழுவதா எனத் தெரிவதில்லை.


இன்னொரு வகை உதாரணமாக ஜானகியின் விரகப் பாடல்கள் என எடுத்துப்பார்த்தால் “பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்”, “மீண்டும் மீண்டும் வா” போன்ற மேல்தட்டு கர்னாடக ராகங்களில் அமைக்கப்பட்ட பாடல்களும் இருக்கும். “பொன்மேனி உருகுதே”, “பூப்போட்ட தாவணி” என்ற நவீனத்துவ பாடல்களும் இருக்கும். “கண்ணத் தொறக்கணும் சாமி” போன்ற பாடல்களும் இருக்கும். ஒரு ரசிகனாய் இப்பாடல்களை விரும்புவதும் வெறுப்பதும் நமது ரசனை சார்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் ஒரு கலைஞராக சொந்த விருப்பு/வெறுப்பு, பலம் - பலவீனங்களை அப்புறப்படுத்தி வேலையின் மேல் கவனம் செலுத்த அபார தொழில்முறை நேர்த்தியும், மனதை ஒருமைப்படுத்தும் ஆன்ம வலிமையும் வேண்டும்.  ‘காற்றில் எந்தன் கீதத்தில்’ பாடலுக்குத் தேவைப்படும் அதே அளவு முயற்சி ‘நேத்து ராத்திரி யம்மா’விற்கும் தேவைப்படுகிறது. சந்தேகம் இருந்தால் இவ்விரு பாடல்களையும் அவரைப் போலவே ரகசியமாய் பாடிப் பாருங்கள்.


sj_3.jpg

 

ஜானகி பாடிய பல முக்கியமான பாடல்களை, பெரும்பாலானோரின் தனி விருப்பப் பாடல்களை நான் சொல்லாமலே விட்டிருக்கிறேன். காரணம் ஜானகி என்பவர் ஒரு சகாப்தம், சரித்திரம் என்றெல்லாம் மார் தட்டுவதோ, அவருடைய வாழ்க்கை, தொழில் வரலாற்றை அலசி ஆராய்வதோ, இதுவரை வாங்கிய விருதுகளைப் பட்டியலிடுவதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தியாவின் மூன்றாவது பெரிய கௌரவத்தைப் புறக்கணிக்கும் அவருடைய நிலைப்பாட்டைக் குறித்தது மட்டுமே. ஜானகி நிச்சயமாக பாரத ரத்னா விருது வாங்கத் தகுதி உடையவர்தான். இத்தனைக்கும் தாய் மொழியான தெலுங்கோ, பிரபலமாக விளங்கிய தமிழோ அல்லாது மலையாளம் மற்றும் கன்னடத் திரையிசை உலகிலும் கூட இதுவரை அதிகப் பாடல்கள் பாடியவர் என்று தென்னிந்திய அளவில் சாதனை புரிந்தவர் இவர். ஆனால் வாங்கினால் பாரத ரத்னா மட்டுமே வாங்குவேன் என அவர் சொன்னதில் http://www.youtube.com/watch?v=G2y-7kGs90Y. நிதானமான வேறொரு தருணத்தில் நிச்சயமாக அவர் இந்த நிபந்தனையைத் தவிர்த்திருக்கக்கூடும். அதே சமயம் பத்ம பூஷணை அவர் மறுத்ததும் நியாயமே. அந்த நிராகரிப்பில் நிச்சயமாக ஆணவம் இல்லை. தென்னிந்தியக் கலைஞர்களை தொன்றுதொட்டே அந்நியப்படுத்தி இருக்கிறார்கள் என்கிற பரவலான ஆதங்கத்தை கேட்பவர்களுக்கு உரைக்கும் வகையில் தன் நிலமையை தெளிவு படுத்தியிருக்கிறார்.


ஜானகி போன்ற கலைஞர்களுக்கு நடிகர்/நடிகைகளைப் போல குறுகிய கால நட்சத்திர அந்தஸ்து கிடைப்பதில்லை. ஆனால் அதை விட ஆர்ப்பாட்டம் இல்லாத நிரந்தர அங்கீகாரத்தை ரசிகர்கள் மனதில் நிச்சயமாக பெறுபவர்கள். இதையேதான் அவரும் “என் ரசிகர்களின் மனதில் நான் பிடித்திருக்கும் இடமே எனக்கு பெரிய விருது” என சிரித்துக்கொண்டே சொல்கிறார்.


கடைசியாக அந்த நிலைப்பாட்டை கௌரவப்படுத்தும் வகையில், “பால் மரியா” போன்ற ஒரு மேற்கத்திய மெல்லிசையமைப்பாளர் பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை, தமிழகத்தின் அனைத்து ஆர்க்கெஸ்ட்ராக்களும் தேசிய கீதமாக கருதும் இந்த பாடலை, “காற்றில் குழலோசை” என்ற அந்த இரு வார்த்தைகளில் மட்டும் ஆயிரம் நகசு வேலைகளை ஜானகி செய்திருக்கும் இந்தப் பாடலின் என் வடிவத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.


 

 

http://solvanam.com/?p=24387

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சத்தை கிள்ளாதே கேஸட்டில் “மம்மி பேரு மாரி” என்ற பாடலுக்கு நேர் இருக்கும் எஸ்.ஜானகி என்கிற பெயர், இன்றளவும் நான் அச்சுப்பிழை என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடகி சந்தேகமே இல்லை.அவர் பத்மபூஷன் விருதை புறக்கணித்ததும் நியாயம்தான். ஆனால் பாரதரத்னா விருது வேண்டும் என்று சொல்வதுதான் கொஞ்சம் இடிக்குது.

Link to comment
Share on other sites

 
எந்த விருதும் ஜானகி அவர்களின் திறமைக்கு இணையாக இல்லை.
இவருக்கு இது வரை விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றால் விருது வழங்குவர்களில் ஏதோ கோளாறு இருப்பதாக தான் பார்க்க முடிகிறது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.