Jump to content

இவள் சுமங்கலியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image.jpg

சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள்.


அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார்.

" ம்..." 
நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வந்தது.

'அப்பா செத்து ஐந்து வருடமாச்சு' 
தனக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் நினைவுகளில் மீண்டும் புதைந்துகொண்டாள் அவளை அறியாமலேயே.....
அவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. O/L எழுதி A/L படிக்க ஆரம்பித்த கொஞ்ச நாள். அவள் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்து பார்க்கிறாள், வீடு பரபரப்பாக காணப்படுகிறது. இவளுக்கு மூத்தவள் சர்மிளாவும், அவள் தாயாரும் அடுப்படியில் ஏதோ வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வீட்டு ஹோலில் சில விட்டு சாமான்கள் தங்கள் தங்கள் மூட்டைகளில் இருந்து இவளை எட்டி பார்த்தன. இவள் பின்னால் வந்த இவள் அப்பா 

" சந்தியா கெதியா சாப்பிட்டுட்டு வெளிகிட்டு வந்து உண்ட சாமான்கள் எதாவது விடுபட்டிருக்கோ எண்டு பார்" 
என்றார். ஏதும் புரியாமல் பின் பக்கம் திரும்பி அப்பாவை பார்த்தாள். 

" ஓம் பிள்ளை இங்க இனி இருக்கேலாது. ஆமிக்காரங்கள் வெளிக்கிட்டு வாரங்களாம். நாங்களும் வன்னிக்கு போகவேணும்... " 

" கெதியா சாப்பிட்டுட்டு குசினியில வந்து ஒரு கை தா பாப்பம்.." 
அடுப்படியில் இருந்து அம்மாவின் குரல் ஒலித்தது.
எடுத்தது பாதி எடுக்காதது பாதி என்று வன்னிக்கு பயணம் வெளிக்கிட்டு, வந்து கிளிநொச்சியில ஒரு தெரிஞ்சாக்கள் காணியில ஒரு கொட்டில் வீடு போட்டு இருந்தது வரை..... அவள் மனத் திரையில் ஓட விட்ட CD படம் மாதிரி வந்து போனது. 
கிளிநொச்சிக்கு வந்து கிளிநொச்சி மகா வித்தியாலயத்தியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தாள். பள்ளிக்கூடம் போகையிலும் வருகையிலும் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் கராச்சில நிற்கிற சந்திரன் இவளை பாக்கிறதை முதல்ல பெரிசா கணக்கில எடுக்காதவள், நாளாக நாளாக அவள் மனம் அவனை தேடுவதை அவளால் தடுக்க முடியவில்லை. 
சந்திரனும் சந்தியாவும் கண்களின் சந்திப்பில் இருந்து முன்னேறி 'ஸ்பெசல் கிளாஸ்' எண்டு அம்மாவுக்கு பொய் சொல்லி சந்திரனோட புளிய மரத்தடியில இருந்து கதைகிறது வரை வந்தாச்சு.
அப்பாவுக்கு எப்படியோ விஷயம் எட்டி அப்பா ருத்திர தாண்டவம் ஆடி அடங்கி ஒரு வழியாக சந்திரனை கை பிடிச்சாச்சு. சந்திரனும் சும்மா இல்ல. கராச்சில வேல செய்யிறவன் என்ட நிலை மாறி இப்ப சொந்த கராச்சுக்கு முதலாளி எண்டநிலைக்கு முன்னேறி இருக்கான்.
சந்திரன் மிக விரைவிலேயே மாமனார் மாமியாருக்கு பிடித்த மருமகன் என்ற பெயரை பெற்றுவிட்டான். நல்ல உழைப்பாளி. குடி வெறி என்று எந்த கெட்ட பழக்கமும் அவனுக்கு இருக்கவில்லை. சந்தியாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். வேறு என்ன வேண்டும் அவள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்? அப்பா இப்பெல்லாம் பல முறை அவளிடம் கூறுகின்றார்,

" நான் இல்லாட்டிலும் பரவால்ல பிள்ள. மருமகன் இந்த குடும்பத்த வடிவா பாப்பார். எனக்கு ஆம்பிள பிள்ள இல்லாத குறை தீர்ந்துது பிள்ளை."
சந்திரன் தன் உழைப்பில் சொந்தமாக ஒரு காணி வாங்கி இப்ப அதிலேயே குடியேறியாயிற்று. இடையில் அக்கா சர்மிளா நாட்டுக்காக தன்னை ஒப்படைத்திருந்தாள். அக்கா போராடப் போனதில் சிறிய வருத்தம் தாய் தந்தையருக்கு இருந்தாலும் நாட்டுக்கு தாங்களும் பங்களிப்பு செய்திருக்கிறம் என்ற நிம்மதி இருந்தது. அதோடு சந்தியாவுக்கு ஒரு குட்டி சந்திரனோ, சந்தியாவோ வர இருக்கிறது என்ற செய்தியும் நிம்மதிக்கு ஒரு காரணம்.
யுத்தம் தன் கோர முகத்தை பலமுறை தமிழர்கள் மேல் காட்டி இருந்தாலும், இந்த முறை சற்று அதிக அகோரத்துடன் காட்ட ஆரம்பித்தது. சந்தியா குடும்பம் மட்டும் என்ன விதிவிலக்கா? மீண்டும் இடப்பெயர்வு. அனால் இம்முறை மூட்டை முடிச்சுகள் கட்ட காலம் இடம் கொடுக்கவில்லை. விசுவமடுவிக்கு சென்று தங்கி இருக்க, இந்த சந்தோஷ குடும்பத்துக்கு முதல் இடி விழுந்தது.
ஆம்! சர்மிளா புலிக்கொடி போர்த்த பெட்டியில் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டாள். குடும்பமே கதறி அழுதது. மிக விரைவிலேயே அவள் வித்துடல் விசுவமடு துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. துக்கத்தை கொண்டாடக் கூட காலம் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் புதுக்குடியிருப்புக்கு இடம் பெயர்வு.

'பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்' என்று முன்னவர்கள் சொன்னது உண்மைதான் என்பது போல வந்து விழுந்தன எறிகணைகள்.

" ஐயோ அம்மா..."
என்ற கூக்குரலின் மத்தியில் புகை மூட்டம் ஓய்ந்ததும் தலையை நிமிர்த்தி பார்த்தாள் சந்தியா. எதிரே இரத்த வெள்ளத்தில் அவள் அப்பா. கண்ணோரம் கண்ணீர் வழிவது போல் ஓர் உணர்வு. தொட்டுப் பார்த்தால். பிசுபிசுப்பாக உணர்ந்தாள். கையை சடாரென எடுத்துப் பார்த்தாள். அது அவள் அப்பாவின் இரத்தம். சதைத் துண்டுகள் சிதறி இருக்க குடல் வெளியே தள்ளிய நிலையில் கண்களைத் திறந்து அவள் இருந்த பக்கம் பார்த்த படியே இறந்திருந்தார் அவள் அப்பா. சற்று தள்ளி.... யார் அது... ஒரே புழுதியின் நடுவில்...

"ஐயோ அவரல்லோ... ஆராவது வாங்கோவன்...ஐயோ.... அவற்ற வலது கால் பாதத்த காணேல்ல... ஆராவது இருக்கியலோ? வாங்கோவன்..."
கண்கள் இருண்டு வந்தது. காதுக்குள் இரைச்சல் மட்டும் கேட்டது.
கண் விழித்துப் பார்த்த போது அவள் அப்பா அடக்கம் செய்யப்பட்டு இருந்தார். அவள் கணவன் தற்காலிக மருத்துவமனையில் கால் அகற்றப்பட்ட நிலையில் இருந்தான்.
மீண்டும் இடப்பெயர்வு. அவள் அம்மாவிடமும் அவளிடமும் சந்திரனை தூக்கிகொண்டு இடம் பெயர மனதிலும் உடலிலும் சக்தி இல்லை. அங்கேயே தங்கினர்.

'வெற்றி வாகை(?) சூடி' வந்த இராணுவம் இவர்களைப் பிடித்து வவுனியா அனுப்பியது. அவள் கணவன் மேலதிக சிகிச்சைக்கு என அனுராதபுரத்துக்கு அனுப்பப்பட்டான். 
அவளுக்கு பக்கத்தில் படுத்திருக்கும் அவள் மகன் ராஜு உதைத்ததில் தன் நினைவு அறுபட மீண்டாள் நிகழ்காலத்திற்கு.
மகனை தடவிக் கொடுத்தாள். தட்டி விட்டுக்கொண்டே தூங்கினான் அவன். அப்படியே உரித்து வைத்தது போல் அவன் தன் அப்பாவின் சாயலைக் கொண்டு வந்திருந்தான். படுக்கும் போது அவன் கேட்டது இப்பவும் அவள் காதில் எதிரொலித்தது. 

" அம்மா எண்ட அப்பா எப்ப வருவார்? அவர் ஏன் என்னை பாக்கேல்ல? அவருக்கு என்னை பிடிக்கிறதோ? நேசரில எல்லாரும் அவையட அப்பவ பத்தி சொல்லுறாங்கள்... எனக்கு எண்ட அப்பாவை தெரியாதே... அம்மா... சொல்லுங்கோ...."

" நீ படு தம்பி.... உண்ட அப்பாவும் வருவார்..."
ஏதேதோ சொல்லி படுக்க வைத்தால் ராஜுவை. 'அனுராதபுரம் என்று ஏற்றப்பட்டவர் இப்ப எந்த புரத்தில் இருக்கிறார் என்று எந்த கடவுளுக்கு தெரியுமோ தெரியல்ல...'
எதோ பொட்டு வைத்துக்கொண்டு பிழைப்புக்கு இடியப்பம் அவித்து விற்கும் இவளுக்கு தெரியவில்லை, தான் பொட்டு பூ வைக்ககூடிய சுமங்கலியா.... இல்லையா என்று......?!?!?!?!
 
வல்வையூரான்.

 

 
http://valvaiyooraan.blogspot.ca/2012/04/blog-post.html

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 வல்வை , பகிர்விற்கு நன்றிகள்  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 வல்வை , பகிர்விற்கு நன்றிகள்  

 

 வணக்கம் ஆசாமி. கதை எப்படி என்று கூறவே இல்லையே ???

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் ஆசாமி. கதை எப்படி என்று கூறவே இல்லையே ???

இது கதையல்ல பலரின் நிலை இதுதான். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கதையல்ல பலரின் நிலை இதுதான். 

 

 நீங்கள் சொலல்வதிலும் நியாயமிருக்கிறது.

Link to post
Share on other sites
  • 5 weeks later...

எதோ பொட்டு வைத்துக்கொண்டு பிழைப்புக்கு
இடியப்பம் அவித்து விற்கும் இவளுக்கு தெரியவில்லை, தான் பொட்டு பூ
வைக்ககூடிய சுமங்கலியா.... இல்லையா என்று......?!?!?!?!

 

 

மனதை வலிக்கும் கேள்விகள் .....படைப்பிற்குப் பாராட்டுக்கள் வல்வையூரான் . தொடருங்கள் .

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.