Jump to content

IPT (வரதன்) - அழிந்த வாழ்க்கையும் அழியாத நினைவுகளும்


Recommended Posts

IPT (வரதன்)

அழிந்த வாழ்க்கையும் அழியாத நினைவுகளும்

கருணாகரன்

IPT-Photo.jpgIPT வரதனை நான் சந்தித்தது, 1984லேயே. முட்டைரவி தான் IPTஐ  அறிமுகப்படுத்தினார். தலைமறைவும் அந்தரங்கமுமாக நாங்களும் எங்கள் காரியங்களும் நடந்து கொண்டிருந்த காலம் அது. தெல்லிப்பழை, காங்கேசன்துறை, ஏழாலை, ஊரெழு, மயிலணி, நாவாந்துறை, இயக்கச்சி, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி என மறைவிடங்களில் திரிந்து கொண்டிருந்தோம். இங்கெல்லாமே புதிய புதிய தோழர்கள் அறிமுகமாகினார்கள். பிறகு பயிற்சி முகாம்களில். IPTயை யாழ்ப்பாணத்தில் வைத்தே சந்தித்தேன்.

ரவியின் அறிமுகத்தத்தைத் தொடர்ந்து என்னைப் பார்த்துக் கையை நீட்டினார் IPT. பற்றிக் குலுக்கினேன். சிரித்தபடி மறுகையால் என்னுடைய தோளைப் பற்றி அணைத்து, “நல்லது. தொடர்ந்து சந்திப்பம். உங்கட பக்கத்தால நல்லா வேலை செய்யுங்கோ. பிறகு அங்காற் பக்கம் வரேக்க சந்திப்பம்“ என்று கூறி விடைபெற்றார்.  ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரம். ஒரு மின்னலைப்போல பிரகாசமான, ஆனால், சட்டென மறைந்து போனதக்கணம்.

IPT வரதன் என்ற பெயரைக் கேட்டபோது எனக்குள் ஆச்சரியம் பொங்கியது. அதற்குக் காரணம் அந்த நாட்களில் கொழும்பில் ஈரோஸினால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரியாக IPT, IPT வரதன் என்ற பெயர்களில் அவர் அறியப்பட்டிருந்தார். முக்கியமாக “ஒபரோய் ஹொட்டேல்“, தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையம் (இந்தத் தாக்குதலுக்கும் IPT க்கும் சம்மந்தமில்லை. என்றாலும் அதையும் IPT யுடன் சேர்த்தே பார்த்தார்கள்) ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள். வரதனின் தலையை அன்றைய ஜே.ஆர் ஜெயவர்த்தனா அரசாங்கம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு விலைபேசியது. IPT யைப் பற்றிய சுவரொட்டிகள் எங்கும் ஒட்டப்பட்டிருந்தன. பத்திரிகைகளிலும் வானொலியிலும் வரதன் தலைப்புச் செய்தியானார். ஒரு நாயகனைப் போன்ற பிம்பம் அவருக்கு உருவாகியிருந்தது.

இவ்வளவுக்கும் வரதன் மிகச் சாதாரணமான தோற்றத்தில் இருந்தார். மெலிந்து ஒடுங்கிய உடல். துருதுருக்கும் கண்கள். அடர்த்தியான சுருள்முடி. கறுத்துத் திரண்ட உதடுகள். புகை பிடித்ததால் அப்படிக் கறுத்திருக்கலாம் அவை. நான் காணும்போதும் புகைத்த படியே இருந்தார். அடித்தாற்போலப் பேசும் பேச்சு. ஆனால், நட்பின் நெருக்கமும் உரிமையும் அதில் உண்டு. அவருடைய கண்களைப் போலவே மனமும் துருதுருத்துக் கொண்டிருக்கிறது என உணர்ந்தேன். “மனதின் கோலம் கண்களில் வெளிப்படும்“ என்று எங்கோ படித்திருந்தது நினைவுக்கு வந்தது அக்கணத்தில். ஒரு இடத்தில் நிலைகொள்ளாமல் எதையெல்லாமோ செய்து கொண்டும் அங்குமிங்கும் நடந்து கொண்டும் ஆட்களுக்கு வேலைகளை ஏவிக் கொண்டுமிருந்தார். “ஒரு பிஸியான பேர்வழிதான் இந்த ஆள்“ என நினைத்தேன்.

மட்டக்களப்புக்குப் போவதற்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் IPT. ஆனால், இதை அவர் எனக்குச் சொல்லவில்லை. சில நாட்களின் பின்னர் கிழக்கில் நடந்த தாக்குல் ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டபோதே IPT அங்கே நிற்கிறார், அங்கே போவதற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போதே நானும் அவரைச் சந்தித்திருக்கிறேன் என்று தெரிந்தது.

IPT என்னையும் விட மூத்தவர். அந்த நாட்களில் இயக்கத்திலிருந்தவர்களில் அநேகர் என் வயதொத்தவர்கள். எங்களை விட மூத்தவர்கள் பெரும்பாலும் ஏதாவது முக்கிய பணிகளில் அல்லது முக்கிய பொறுப்புகளில் இருந்தார்கள். எங்களுக்கு முதல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் செயற்பட்டவர்களாக அவர்களிருந்தது ஒரு முக்கிய காரணம்.  IPT யும் அப்படித்தான். அவர் பிறந்தது 26.01.1956 வவுனியாவில். கட்டுப்பெத்தை - மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 1976,77 காலப்பகுதியில் NDT (National DIploma Technology யில் (electric and electronics) துறையில் படித்தார். பிறகு இலங்கை  தபால் மற்றும் தொலைத் தொடர்புச் சேவையில் அதிகாரியாக (Inspecotr of Postal ana Telecomminication) இணைந்தார். ஆனால் அதில் அவர் நீண்டகாலம் வேலை செய்யவில்லை. அந்த நாட்களில்  முளைத்திருந்த வெளிநாட்டுக் கனவில் ஜேர்மனிக்குச் சென்றார். அங்கேயே அவருக்கு ஈரோஸ் உடன் தொடர்பு ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் பரா, முகிலன் போன்றவர்களும் ஈரோசுடன் இணைந்தனர். ஈரோஸின் தொடர்பையடுத்து, அங்கிருந்து பலஸ்தீனத்துக்குச் சென்றார் IPT. PLO.jpg

பலஸ்தீனத்தில் பயிற்சி பெற்ற ஈழப்போராளிகளுக்கு அந்த நாட்களில் இயக்கங்களில் தனியான மதிப்பும் மரியாதையும் இருந்தது. குறிப்பாக EROS, PLOT, EPRLF போன்ற இயக்கங்களில் PLO வில் பயிற்சி பெற்ற போராளிகள் இருந்தனர். PLO க்காரர் என்று ஒரு வகையான மென் கௌரவத்துடன் அவர்கள் அழைக்கப்பட்டனர். சிலர் இதை ஒரு மேலான கௌரவமாகக் கருதினர்.  பட்டப்படிப்புப் படித்தவர்கள் ஊர்களுக்குள் இருப்பார்களே, 80 பாகையில் பின்னுக்குச் சரிந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, அதைப்போல. ஆனால் IPT ஒரு போதும் தன்னை ஒரு PLO க்காரனாகக் காட்டிக் கொண்டதில்லை. மிகச் சாதாரணமான ஆளாக, ஒரு மூத்த போராளியாக மிகப் பக்குவமாகவும் உணர்வு புர்வமாகவும் இருந்தார். என்றாலும் ஏனையவர்களை விட IPT சில விசயங்களில் வேறுபட்டிருந்தார். இது IPTயுடன் என்னைப் போன்ற பிற இளநிலைப் போராளிகளிடத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அவருடன் தொடர்ந்து பழகவோ, நெருங்கி உறவாடவோ வாய்க்கவில்லை.

பிறகு நான் IPT யைச் சந்தித்தது, 1985 இல் இயக்கச்சியில் இயங்கிய பயிற்சி முகாமில். அங்கே நாங்கள் தங்கியிருந்த போது முட்டை ரவி ரவிதாசையும் IPT யையும் அழைத்துக் கொண்டு ஒரு காலை நேரம் வந்தார். வருவதற்கு முன், எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது, “நாங்கள் மூன்றுபேர் தண்ணிப்பக்கமாக வருகிறோம்“ என்று. அவர்கள் வருவதாகச் சொன்ன திசையி்ல் நாங்கள் குளிக்கிற குளம் இருந்தது. குளத்தையே “தண்ணிப்பக்கம்“ என்று குறிப்பிட்டிருந்தார் முட்டை ரவி.

அப்போது இயக்கச்சியிலும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டிலும் ஈரோஸ் இரண்டு பயிற்சி முகாம்களை வைத்திருந்தது. இயக்கச்சியில் இயங்கிய முகாமுக்கு மூதூர்ச் சிவாவும் ஐயக்கோன் என்ற பாலாஜியும் பொறுப்பாக இருந்தனர். இவர்களை மையப்படுத்தி முட்டை ரவி இருந்தார். அவர்தான் முகாமின் பொறுப்பாளரும் பயிற்சிக்கான ஆட்கள் மற்றும் வளங்களை ஏற்பாடு செய்பவரும். பயிற்சி முகாமை அமைக்கும் இடங்களைத் தேர்வு செய்தது, திட்டமிட்டது, அதை அமைத்தது எல்லாமே ரவியில் பொறுப்பிலேயே நடந்தன. முகாமில் பயிற்சிக்குப் பாலாஜி பொறுப்பு. பாலாஜிக்கு உதவி சிவா. நான் பயிற்சியுடன் முகாமுக்கான பொருள் விநியோகம், வெளித்தொடர்பு, மருத்துவம் உள்ளிட்ட பிற காரியங்களை நான் செய்தேன். ஊர்வாசியாக இருந்ததால் அப்படியொரு ஏற்பாடு.

அந்த முகாமுக்கு வந்த IPT “எங்கே நிற்கிறோம்?“ என்று கேட்டார். அந்தக் கேள்வி ஏன் வந்ததென்றால், முகாமில் இருக்கும்போது அண்மையாக வாகன இரைச்சல்கள் அடிக்கடி கேட்டன. அந்த நாட்களில் இராணுவம் ரோந்து செல்வதும் சுற்றி வளைப்புகளைச் செய்வதும் சாதாரணம். இந்த நிலையில் இப்படி வாகனச் சத்தம் கேட்பது அபாயத்தை உண்டு பண்ணக் கூடியது. சாதாரண வாகனங்களோடு வாகனமாக படையினரும் ரோந்து வரக்கூடும். அல்லது சுற்றிவளைப்புகளைச் செய்யக் கூடும். எனவே முழுமையான எச்சரிக்கையோடு IPT இருந்தார். அது அவர் பழகாத இடமென்பதால் இந்த எச்சரிக்கை இன்னும் கூடியிருந்தது. மட்டுமல்ல IPT கிழக்கில் கொடுவாமடுவில் விஷேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தி, முதன் முதலில் M16 றைபிள்களை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். அந்தத் தாக்குதலில் அன்று அந்தப்பிரதேசத்தில் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த மேஜர் வீரதுங்க என்ற அதிரப்படைத் தளபதி கொல்லப்பட்டிருந்தார். அதில் மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஒரு சிலவற்றையே யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக எடுத்து வந்திருந்தார். கூடவே ஒரு றிப்பிற்றர் கண்ணும்.

யாழ்ப்பாணத்துக்குப் போகும் வழியில் இயக்கச்சியில் ஒரு தங்கல். eros.jpgபோகிற வழியில் பயிற்சி பெறுகிற போராளிகளுக்கு ஒரு உற்சாகமாக இந்த றைபிள்களும் தாக்குதல் செய்தியும் இருக்கட்டும் என்ற எண்ணத்தில் IPT யை அங்கே – பயிற்சி முகாமுக்கு அழைத்து வந்திருந்தார் முட்டை ரவி. முறைப்படி இப்படிப் பயிற்சி முகாமை எல்லோருக்கும் காண்பிப்பது தவறு. இதை அடிக்கடி கண்டிப்பாக வலியுறுத்தும் ரவி, அதிலிருந்து விலகி, IPTயை அழைத்துவந்தது, எங்களுக்குக் கேள்வியை எழுப்பியது. ஆனாலும் IPT கொண்டு வந்த ஆயுதங்கள் அந்தக் கேள்விகள் எல்லாவற்றையும் அப்படியே தூக்கி எங்கோ வீசிவிட்டன. எல்லோரும் அந்தப் புதிய M16 றைபிள்களை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். IPT அவற்றை எடுத்ததைப் பற்றியும் அந்த றைபிள்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சுருக்கமாக விளக்கினார். சிவாவும் பாலாஜியும் அதை எடுத்து இயக்கிப் பார்த்தனர். ஆனால், யாரும் சுட்டுப்பார்க்கவில்லை.

பாதுகாப்புத் தொடர்பில் IPT மிக விழிப்பாக இருந்தார். கிழக்கிலிருந்து எத்தனையோ தத்துகள், கண்டங்களையெல்லாம் கடந்து வந்து இங்கே – யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் வழியில் இப்படிச் சிக்கலாமா?

“ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை. படையினர் சந்தேகப்படாத இடத்தில்தான் இருக்கிறோம்“ என்று உறுதியளித்த ரவி, அன்று மதியமே யாழ்ப்பாணத்துக்கு IPTயையும் ரவிதாசையும் அனுப்பும் ஏற்பாடுகளைச் செய்தார். வெளிவேலைகள் என் பொறுப்பு என்பதால், பளையிலிருந்து ஒரு A 40 காரை பயிற்சி முகாமுக்கு வெளியே ஊரின் இன்னொரு பகுதிக்கு வரவழைத்தேன். அந்தப் புதிய ஆயுதங்களுடன் IPTயும் ரவிதாசும் யாழ்ப்பாணம் சென்றனர்.

அதன்பிறகு அடிக்கடி IPT யைச் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. நெருக்கமான தோழர்களானோம். பல விசயங்களைப் பற்றி விவாதிப்பதும் பேசுவதும் பல இடங்களுக்குச் செல்வதும் சில வேலைகளை இணைந்து செய்வதுமாக IPT யுடனான உறவு வளர்ந்தது. கொழும்பு நடவடிக்கைகளால் பிரபலமடைந்திருந்தது ஈரோஸ் இயக்கமென்றால், அதில் புகழடைந்தவராக IPT இருந்தார். ஏனையவர்களை விட IPTயைச் சுற்றிப் பல கதைகளிருக்கும். அந்தக் காலத்தில் ஒவ்வொரு இயக்கத்திலும் சில சாகஸக்காரர்களிருந்தார்கள். புலிகளில் கிட்டு இருந்ததைப் போல அல்லது கிட்டுவைச் சுற்றி ஒளிவட்டங்கள் உருவாக்கப்பட்டதைப்போல IPTயைச் சுற்றியும் புனைவுகளும் உண்மையும் கலந்த ஒளிவட்டங்கள் உருவாகியிருந்தன. நான்கூட IPT யிடம் ஒரு காலத்தில் கொழும்புத்தாக்குதல்களைப் பற்றித் தயங்கித் தயங்கி விவரம் கேட்டிருக்கிறேன்.

 “அதெல்லாம் சும்மாதான். சந்தர்ப்பம் வாய்த்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்விதான். ஆள் மட்டும் பிடிபடாமல் விட்டால் என்னவும் செய்யலாம். அவங்களும் (படையினரும் – அரசும்) கலங்கிக் கொண்டிருப்பாங்கள்“ என்று சமாளித்து விடுவார். விவரத்தைச் சொல்லவே மாட்டார்.

கொழும்பு நடவடிக்கைகளில் சற்று இறுக்கமும் IPT தொடர்பான கதைகளும் பரவலாகப் பகிரங்கமாகத் தொடங்க, IPTக்கு இயக்கத்தின் தொலைத் தொடர்புப் பரிவர்த்தனையைக் கட்டமைக்கும் பணிகள் கொடுக்கப்பட்டன. தளத்தில் ஈரோஸின் தளபதியாக கரன் இருந்தார். கரனுடனிணைந்து IPT தொலைத் தொடர்புப் பணிகளில் ஈடுபட்டார். இந்தப் பணியில் காங்கேசன் சீமெந்துத் தொழிற்சாலையின் தொலைத் தொழில்நுட்பப் பிரிவில் வேலைசெய்திருந்த சர்மா என்ற தோழரும் கூடமாட ஒத்தாசையாக இருந்து செயற்பட்டார். ஆனால் IPT க்கு அவர் படித்த துறையும் வேலை செய்த துறையும் ஒத்துழைத்ததால் அது வாய்ப்பாக இருந்தது. தொலைத் தொடர்புப் பயிற்சிக்காக புதிய போராளிகள் சிலரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களுக்கான சங்கேத மொழி, தொழில்நுட்ப அறிவு உட்படப் பல பயிற்சிகள் IPT வழங்கப்பட்டன. இதற்காக சில இடங்களில் சிறு முகாம்கள் இயங்கின. ஆனால், IPT இதோடு தொடர்ந்து தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கெனச் சிலரை உருவாக்கி, தொலைத் தொடர்புப் பணிகளையும் பயிற்சியையும் ஒரு கட்டம் வரையில் அவர்களுக்கு பழக்கி விட்டு அவர் களமாடுவதற்குச் செல்ல முயன்றார்.

இதனால் அவர் வன்னியில் கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவுக்கும் வவுனியாவுக்கும் என பணிகளை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டார். ஒரு இடத்தில் நிற்கமாட்டார் என்று சொன்னேனே, அது அவரை ஒரு இடத்திலும் நிலைப்படுத்தவில்லை. காலிலே சக்கரங்களும் தோளிலே சிறகும் முளைத்த ஒரு போராளியாக திரிந்து கொண்டிருந்தார். இறுதிவரையில் அப்படித்தான் நடந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே வன்னிக்கும் கிழக்கிற்கும் செல்லும் தோழர்கள் இயக்கச்சி வழியாகத்தான் பயணிப்பர். ஆனையிறவில் பெரிய படை முகாம் இருந்ததால் இயக்கச்சி ஊடாக வண்ணாங்குளம் – கொம்படி வழியே போராளிகளின் – இயக்கங்களின் பாதையும் பயணமும் அமைந்தன. இதற்கான ஏற்பாடுகளை நானும் “இயக்கச்சிச் சிறி“யும் சில வேளைகளில் மொசாட் என்ற தோழரும் செய்வதுண்டு. இதனால் IPTயை அழைத்துக் கொண்டு அடிக்கடி பயணித்தோம். அநேகமாக பிற தோழர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. பல தோழர்களோடும் பழகும் வாய்ப்பு. IPTயுடனும் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்பட்டன. அப்பொழுது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஜீவன், பவானந்தன், பொன் என்ற கீத பொன்கலன், கைலாஸ், வைகுந்தன் போன்ற தோழர்கள் முன்னணிப் போராளிகளாக வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்களை விட சற்று வேறுபட்டவராக IPT இருந்தார். மற்றவர்கள் எதையும் அரசியல் ரீதியாகவே சிந்திப்பர். அப்படித்தான் முடிவுகளையும் எடுப்பர். அவர்களுடைய அணுகுமுறையும் அதற்குத் தோதாக மென்நிலையுடையதாகவேயிருக்கும். ஆனால், IPTயிடம் அதெல்லாம் குறைவு. அவர் இராணுவ ரீதியான தாக்குதல், விரைவாகக் காரியங்களை முடித்தல் என்றமாதிரியே சிந்தித்தார். நான் முன்னர் சொன்னதைப் போல கிட்டுமாதிரி ஒரு சாகஸக்காரனான இருக்கும் அவரால் வேறு எப்படிச் சிந்திக்க முடியும்? ஆனால், IPT வெறுமனே தாக்குதலில் மட்டும்தான் கண்ணும் கருத்தும் கொண்டவர் என்றுமில்லை. அரசியல் ரீதியாகவும் சிந்திக்கக் கூடியவர். எனவே ஈரோஸிடம் தற்துணிச்சலுடன் தீவிரமாக இயங்கிய ஒரு சிலரில் IPT யும் ஒருவர்.

1986 என நினைக்கிறேன். முல்லைத்தீவுக்கு வந்திருந்த பிரிட்டிஷ் eros-1.jpgஉளவாளி என்று சொல்லப்பட்ட பெனிலோப் ஈவா வில்லிஸ் என்ற பெண் ஈரோஸினால் கடத்தப்பட்டிருந்தார். IPT யே இதில் முக்கிய பாத்திரத்தை வகித்தார். பெனிலோப் ஈவா வில்லிஸைக் கடத்துவதற்கு ஏனைய இயக்கங்களும் வியுகம் வகுத்திருந்தன. ஆனால், . IPT முந்தி விட்டார். கடத்தப்பட்ட ஈவா அங்கிருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட வேணும். IPT யே அதற்கும் ஏற்பாட்டைச்செய்திருந்தார். இயக்கச்சியிலிருந்த எங்களுக்குத் தகவல் வந்தது. முல்லைத்தீவிலிருந்து சின்னபாலாவை அனுப்பியிருந்தார். முன்னர் யாழ்ப்பாண எம்.பியாக இருந்த யோகேஸ்வரனின் சித்தப்பா தர்மலிங்கம் டொக்ரரின் தோட்டத்தில் நின்ற உழவு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு, நானும் மொசாட்டும் சிறியும் கொம்படி நோக்கிப் பயணித்தோம். சின்னபாலா யாழ்ப்பாணம் சென்று விட்டார். அங்கிருந்து வாகன ஏற்பாடுகளுடன் இரவு இயக்கச்சிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு.

கொம்படி நோக்கிச் செல்ல முன் வண்ணாங்குளம் போகவேணும். அதுவரைதான் ட்ரக்ரர் போகும். அதற்கப்பால் தண்ணீர் உள்ள ஆனையிறவுக் கடனீரேரி. அது வற்றும்வரையில் தண்ணீருக்குள் 4, 5 கிலோ மீற்றருக்குள் நடக்க வேண்டும். இதற்காக அங்கே நாங்கள் ஒரு சிறிய படகினை வைத்திருந்தோம். அந்தப் படகில் பொருட்களை ஏற்றி அதை இழுத்துக் கொண்டு நடந்து போவது. அல்லது மறுகரையிலிருந்து அதை இழுத்துக் கொண்டு வருவது. அப்படி அங்கே வைக்கப்பட்டிருந்த படகை எடுத்துக்கொண்டு சிறியும் மொசாட்டும் கொம்படி நோக்கிப் போனார்கள். கொம்படிக்குப் போய், பிறகு அங்கிருந்து கண்டாவளைக்குச் சென்று எமது ஆதரவாளர்கள் வீட்டிற்குச் சென்று அங்கே வரும் ஆட்களைக் கூட்டிக் கொண்டு வருவது என ஏற்பாடு. நான் வண்ணாங்குளத்தில் கடற்கரை ஓரமாக ட்ரக்ரரை நிறுத்தி விட்டு அங்கேயே காத்திருந்தேன். அது ஒரு நிலாக்காலம். கடுமையான பனி வேறு. மாசிப்பனி மூசிப் பெய்து கொண்டிருந்தது.

கொம்படிக்குப் போன சிறியையும் மொசாட்டையும் IPT தரப்புச் சந்திக்கவில்லை. தகவல் தொடர்பிலும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. இரவு கழிந்து விட்டதால் மறுநாள் மாலைவரை காத்திருந்து ஈவா அழைத்து வரப்பட்டார். பிறகு யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டு, அங்கே சில மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக விடுதலை செய்யப்பட்டார்.

IPT இராணுவ ரீதியான தாக்குதல்களிலும் அதிக ஈடுபாடுடையவர் என்று சொன்னேன். 1987 இல் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் மற்றும் இராணும் என்ற கூட்டு முகாம் மீதான தாக்குதலின் மையத்தில் IPT யே இருந்தார். தாக்குதலின் பொறுப்பு கரனிடமிருந்தாலும் அதற்கு முன்னான வேவு பார்த்தல், தகவல் மற்றும் தரவு சேகரிப்பு, பிற ஏற்பாடுகள் போன்றவை IPTயின் பொறுப்பிலேயே நடந்தன. அந்தத் தாக்குதல் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட போதும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை. அந்தத் தாக்குதலை IPT தலைமையேற்று நடத்தியிருந்தால் வெற்றிவாய்ப்புகள் கிட்டியிருக்கும் என அந்த நாட்களில் பல தோழர்கள் பேசியதுண்டு. தோழர்களின் உயிரிழப்பைத் தவிர்ப்பதைப்பற்றி அதிகமாகக் கரன் சிந்தித்ததாகவும் அதனால் அந்தத் தாக்குதல் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகமாகக் கொண்டிருந்தும் வீணாக இழக்கப்பட்டதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட தோழர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். கரனுக்குப் பதிலாக IPTயாக இருந்திருந்தால் நேரடியாகவே களத்திற்குள்ளிறங்கி, தாக்குதலை வெற்றிகரமாக முடித்திருப்பார் என்றும் சொல்லிக் கொண்டனர்.

IPTயைப் பொறுத்தவரையில் எதையும் வேகமாகச் செய்ய வேண்டும் என்ற தீவிர முனைப்பை இயல்பாகக் கொண்டவர். இதனால் அவருக்கும் ஏனைய மூத்த தோழர்களுக்கிடையிலும் முரண்பாடுகள் உருவாகியிருக்கின்றன. திடீரென முறித்துக் கொண்டு தன்னிச்சையாகச் செயற்பட முனையும் போக்கை அவரிடம் அவதானித்திருக்கிறேன். இது அவர்மீது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. ஆனால், சகதோழர்களுடன் குறிப்பாக இளைய தோழர்களுடன் நெருக்கமாக நடந்து கொள்வதிலும் அவர்களுடைய உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து கொள்வதிலும் IPT முதல்நிலை வகித்தார். அவர்களுடைய பிரச்சினைகளுக்காகவே அமைப்பினுள் விவாதித்திருக்கிறார். தன்னுடைய செலவில் பல தோழர்களுடைய தேவைகளை நிறைவேற்றியிருக்கிறார். செலவழிப்பதில் நடந்து கொள்வார். இதற்காக அவர் தன்னுடைய உளவினர்கள், நண்பர்களிடம் கூட உதவிகளையோ பணத்தையோ பெற்றிருக்கிறார். யாராக இருந்தாலும் அவர்களிடம் அதீத உரிமையெடுத்து, அவர்களை இணங்கச் செய்து உதவிகளைப் பெற்று இயக்கத்துக்கும் சக தோழர்களுக்கும் உதவியிருக்கிறார்.

IPTயின் ஒரு சகோதரர் வட்டக்கச்சியில் இருந்தார். பெயர் மயில்வாகனம். அவர் வீட்டில் உழவு இயந்திரம் ஒன்றிருந்தது. அதை தன்னுடையது என்ற அளவில் உரிமையெடுத்து இயக்கத்தின் தேவைகளுக்காகப் பயன்படுத்தினார் IPT. IPT மூலமாக ஏற்பட்ட உறவினால் மயில்வாகனத்தாரின் வீட்டுக்குச் செல்லத் தொடங்கிய தோழர்கள் IPTயின் அதீத நடத்தையையிட்டு அவருக்கு நேரில் தங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்தனர். நான்கூட IPTயின் இந்தப் போக்கினைக் கண்டித்தேன். “நீங்கள் ஒண்டும் கதைக்கத் தேவையில்லை. ஊராக்களிட்டைப் போய் உதவி கேட்கிறதுக்கு முதல் நாங்கள் உதவியைச் செய்து காட்ட வேணும். அப்பதான் மற்றவையும் தாங்களும் ஏதாவது செய்ய வேணும் எண்டு நினைப்பினம். மயில்வாகனத்தாருக்கு இப்ப என்ன நட்டம்  வந்தது? ஏதாவது பிழைச்சால் அதுக்குப்பிறகு பாப்பம்“ என்று எங்களுக்குச் சமாதானம் சொன்னார். மயில்வாகனத்தாரின் ட்ரக்ரரில் ஏறாத, அதை ஓட்டிப்பார்க்காத ஈரோஸ் போராளிகள் அந்த நாட்களி்ல் வட்டக்கச்சி - கிளிநொச்சிப் பகுதியில் இருக்கவில்லை.

இன்னொரு கட்டத்தில் இன்னொரு சகோதரரின் உழவு இயந்திரத்தை அவருடைய வீட்டுக்குச் சென்று எடுத்து வந்து இயக்கத்தேவைக்குப் பயன்படுத்தினார் IPT. இதனால் அந்தச் சகோதரர் IPTயைப் பற்றி இயக்கத்திடம் முறையிட்டார். பின்னர் இதைப்பற்றி IPTயிடம் விசாரித்ததாக நினைவுண்டு.  இப்படியான ஒரு பிறவியாக அவர் இருந்தார்.

அந்த நாட்களி்ல் (1984, 85, 86, 87 காலப்பகுதியில்) அவரிடம் எப்பொழுதும் ஹொண்டா 200 மோட்டார் சைக்கிள்களே நின்றன. கறுப்பு, நீலம், சிவப்பு என நிறம் மாறினாலும் ரகம் மாறாது. அந்த ரக மோட்டார் சைக்கிளில் ஒரு மெல்லிய உருவம் சீறிப் பாய்ந்து கொண்டு போகும். “உருவத்தையும் விட உங்களுக்கு உக்கிரம் கூட“ என்று அவரைப் பார்த்து வவுனியாவைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் அடிக்கடி சொல்வார். பதிலாக ஒரு வெட்கம் கலந்த புன்னகையை IPTயிடமிருந்து வரும். இது IPTயை உசார்ப்படுத்துற வேலை என்ற எங்களுடைய பிற தோழர்கள் சொல்வார்கள். ஒரு வகையில் IPT ஒரு உஷார்ப்பேர்வழிதான். மெல்லிதாக அவரை உஷார்ப்படுத்தி விட்டாற் போதும் அந்தக் காரியத்தைத் தலையால் நடந்தாவது முடித்து விடவேணும் என்று முறிந்து செய்து கொண்டேயிருப்பார். போதாக்குறைக்குத் தனக்கிசைவான ஏனையவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு அந்த வேலையைச் செய்வார். “ஆள் சுள்ளி எண்டாலும் சுறுசுறுப்புக்குக் குறையில்லை“ என்று சொல்வார்கள்.

எல்லா இயக்கங்களிலும் உள்ளதைப்போல ஈரோஸிலும் அணிகள், குழுக்கள் என சார்பு நிலைப்பட்டு இயங்கும் போக்கிருந்தது. IPT கரன், சங்கர் ராஜி தரப்பிற்கிசைவான தரப்புடன் இசைந்திருந்தார். சங்கர், கரன், ஜீவன் IPT என இந்தப் பட்டியல் நீளும். ஆனாலும் பாலகுமாரனுடன் அவர் நேரடியாக முரண்பட்டுக்கொண்டதில்லை. சங்கர், கரன் போன்றவர்களின் அணிக்குச் சார்பாக இருந்த காரணத்தினால் IPTயிடம் புலிகளை எதிர்க்கும் – அவர்களைக் கடுமையாக விமர்சிக்கிற, அவர்களுடைய நடவடிக்கைகளுக்குச் சவாலாக மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுகிற ஒரு இயல்பு IPTயிடமிருந்தது. இதனால் வன்னியில் பல இடங்களி்ல் விடுதலைப்புலிகளின் போராளிகளுடன் IPT முரண்பட்டிருக்கிறார். சில இடங்களில் மோதல் என்ற அளவுக்குக் கூட சில சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. IPTயின் இராணுவமுனைப்பும் எதையும் வேகமாகச் செய்ய வேணும், பேரலைகளை உருவாக்க வேணும் என்ற ஆர்வம் இதற்குக்காரணம். எனவே புலிகளுக்கும்  IPTக்குமிடையில் இப்படியான விளைவுகளை அது உருவாக்கியது. இப்படி உருவாகும் நெருக்கடி நிலையை பராவோ அல்லது பாலகுமாரனோ, சின்னபாலாவோதான் பிறகு தணிவு நிலைக்குக் கொண்டு வருவார்கள். IPT இதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டார். பதிலாக “உங்களுக்கு தேவையில்லாத பயம்தான். என்ன பிரச்சினையெண்டாலும் வரட்டும்பார்ப்பம். போராட்டம் என்றால் எல்லாருக்கும் பொதுவானது. அவனவன் அந்தப் பங்கைச் செய்யட்டும். ஆருக்கும் நாங்கள் எதுக்காக விட்டுக்கொடுக்க வேணும்? என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது..” என்பார். சில சந்தர்ப்பங்களில் IPT கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவார். ”சுள்ளிக்குக் கோவம் வந்தால் சுடுதண்ணிதான்” என்பார்கள். ஆனால், அந்த அளவுக்கு விரைவாக அவர் அதிலிருந்து இறங்கியும் விடுவார். எதையும் மனதில் வைத்துக் கொண்டு யாரையும் பழி தீர்த்ததோ, பேசியதோ கிடையாது. எல்லாவற்றையும் வெளிப்படையாக, நேரடியாகப் பேசுவதும் செய்வதும் IPTயின் இயல்பும் சிறப்புமாகும். 

மற்றவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கின்ற, உதவுகின்ற, செய்கின்ற, தன்னை விட்டுக்கொடுக்கின்ற ஒரு சிறந்த பண்பை அவர் எப்பொழுதும் கொண்டிருந்தார்.

ஒரு வகையான பணி மட்டும் என்றில்லாமல் ஈரோஸ் அமைப்பு மேற்கொண்ட அனைத்து வகையான பணிகளிலும் முயற்சிகளிலும் IPTயின் பங்களிப்பும் முயற்சியும் பாத்திரமும் கலந்திருக்கிறது. ஈரோஸ் ஆரம்பித்த பொருளாதார நடவடிக்கைகள், ஆய்வு முயற்சிகள், அரசியல் நடவடிக்கைகள், பண்ணைத்திட்டங்கள், மக்களுக்கான நேரடிப்பணிகள், உதவித்திட்டங்கள், குடியேற்ற நடவடிக்கைகள், கற்பித்தற் செயற்பாடுகள், பின்தங்கிய பிரதேசங்களுக்கான – அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வேலைகள் என எல்லாவற்றிலும் IPT இணைந்திருக்கிறார். இதனால், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, நெடுங்கேணி, யாழ்ப்பாணம் என எல்லா இடங்களிலும் அவரைப் பலரும் அறிந்திருந்தனர்.

1987 இல் IPT முல்லைத்தீவு மாவட்டத்தில் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தார். இலங்கை இந்திய உடன்படிக்கை எட்டப்பட்ட சமயத்தில் உருவாகிய சமாதானச் சூழ்நிலையை அடுத்து, அந்தந்தப் பகுதிகளில் உள்ள இயக்கங்களின் தளபதிகள், பொறுப்பாளர்களை இலங்கை இராணுவத்தின் தளபதிகள் சந்தித்தனர். முல்லைத்தீவில் அப்போது இலங்கை இராணுவத்துக்குப் பொறுப்பாக மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ இருந்தார். (அப்பொழுது அவர் மேஜர் ஜெனரல் தரத்தைப் பெறவில்லை). அவர் IPTயைச் சந்திக்க விரும்பி IPTக்குத் தகவல் அனுப்பினார். அந்த அளவுக்கு கொப்பே கடுவவிடம் ஒரு ஆர்வத்தை IPT தன்னுடைய செயற்பாடுகளின் மூலமாக ஏற்படுத்தியிருந்தார். முல்லைத்தீவில் சில ஆண்டுகள்தான் செயற்பட்டபோதும் IPT என்று அறியக் கூடிய ஆர்வத்தை உண்டு பண்ணும் விதமாக அவர் ஓர் ஆளுமையாகச் செயற்பட்டிருக்கிறார். IPT யைச் சந்தித்த கொப்பே கடுவ “உங்களைப் பற்றி பல விசயங்கள் அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒரு சாதாரணமான ஆளைப்போல இருக்கிறீங்கள்” என்று சொன்னார்.

“சாதாரண ஆட்களை பலசாலிகளாக்கியது நீங்கள்தான்“ என்று பதில்சொன்னார் IPT.

ஒரு தடவை சந்தேகத்தின் பேரில் நாங்கள் சிங்களவர் ஒருவரை விசாரிக்க வேண்டியேற்பட்டது. இந்த விசாரணையை IPT யே தலைமையேற்று நடத்தினார். விசாரணையின் போது அவர் விசாரணை முறையின் வழமைக்கு மாறாக மிகப் பண்பாக நடந்து கொண்டது மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட அந்த மனிதரிடம் நடந்த சம்பவத்துக்கும் விசாரணை செய்ய நேர்ந்ததற்கும் மன்னிப்பையும் கேட்டு அவரை வழியனுப்பி வைத்தார் IPT. இதேவேளை இன்னொரு சம்பவத்தில் ஒரு பெண், சந்தேகத்துக்குரிய மாதிரி நடந்தார் என்று விசாரணைக்காக உட்படுத்தப்பட்டிருந்தார். அவரை IPT கடுமையாகத் தாக்கிப் பேசினார். சில வார்த்தைகள் மரியாதைக் குறைவாகவும் அமைந்து விட்டன. இதையிட்டுச் சில தோழர்கள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.. ஆனால், தான் அப்படி நடந்து கொள்ள வேண்டியிருந்த சூழலை IPT அவர்களுக்கு விளக்கினார். என்றாலும் அது, அந்த முறைமை தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டபோது தன்னுடைய தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பைக் கோரினார். இப்படிப் பல கலவைகளையுடைய அந்த போராட்ட – போராளி வாழ்வில் IPT மறக்கவே முடியாத பல காரியங்களின் மையப்பிரதிநிதியாக இருந்திருக்கிறார்.

இதைத் தவிர,  1987 இலங்கை இந்திய உடன்படிக்கையை அடுத்து ஏற்பட்ட சூழலைப் பயன்படுத்தி, நெடுங்கேணிப்பகுதியிலிருந்து வெளியேறியிருந்த தமிழர்களை அந்தக் கிராமங்களில் கொண்டு போய் மீளக் குடியேற்றும் பணிகளிலும் பிற தோழர்களுடன் சேர்ந்து IPT உழைத்திருக்கிறார். வெலிஓயா என்ற பெயரில் மணலாற்றுப் பிரதேசம் சிங்களக் குடியேற்றமாக்கப்படுவதையொட்டி அப்பொழுது ஈரோஸ் ஒரு ஆவணத்தை முறைப்படியான ஆதாரங்களுடன் தரவுகளைச் சேகரித்து வெளியிட்டது. அந்த ஆவணத்தை உருவாக்குவதிலும் அந்தப் பிரதேச மக்களின் அனுபவங்களையும் அறிவையும் சேகரிப்பதிலும் IPTயின் பங்களிப்புப் பெரியது. அந்த ஆவணம் வெலிஓயாப் பிரதேசத்தின் அரசியல் மற்றும் குடியேற்றப் பிரச்சினைகளில் மிகுந்த முக்கித்தவத்தையுடையது. இப்படி ஏராளம் மையங்களி்ல் IPT இணைந்தும் கலந்துமுள்ளார்.

ஈழப்போராட்ட வாழ்விலும் வரலாற்றிலும் பல பாத்திரங்கள் இப்படி உள்ளன. அவற்றில் IPT மறக்க முடியாத ஒரு வரலாற்றுப் பாத்திரம்.

 

IPT யுடன் நெருங்கிப் பழகிய பல தோழர்களுண்டு. அவருடன் நெருங்கிப்பழகாத தோழர்களே இல்லை எனலாம். ராம், சுதன், கர்ணன், பரா, பாண்டி, சின்னப்பரா, நேசன், சின்னபாலா, சுந்தர்(கி.பி.அரவிந்தன்) பவானந்தன், கரன், சண், நாதன், பிரபா, கராட்டி பாலா, முகிலன், கபிலன், சின்னச்சண், இறையனார், கொட்டாஸ், மனோ, சிறி, யுட், குமார், ஜேம்ஸ், பாம்பு, அக்காச்சி, மைக்கல், வீரகுமார், திலக், பொன்னம்பலம், விநாயகமூர்த்தி, ஜெகன், மஜீத், ரமேஸ், கொடி, கைலாஷ் (மாதவன்) ரவிதாஸ், பீற்றர், சூரி, பொன், சந்திரன், ஜீவன் என ஒரு நீண்ட பட்டியல் இது. சிலருடன் மிக நெருக்கமாக, இருந்திருக்கிறார். அவர்களில் சிலர் ரவிதாஸ், துஸ்யந்தன், ராம், கர்ணன், பரா, பாண்டி, யோசெப், கரன், ஜீவன் போன்றவர்கள். ஒரு காலத்தில் ரவிதாசும் IPTயும் இரட்டையர்களைப் போலவே திரிந்ததும் உண்டு. இதற்குக் காரணம், இவர்கள் இருவரும் கட்டுப்பெத்தை - மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 1976,77 காலப்பகுதியில் NDT (National DIploma Technology யில் (electric and electronics) துறையில் படித்ததாக இருக்கலாம். இவர்களுடன் தற்போது இதயச்சந்திரன் என்ற பெயரின் அரசியற் பத்திகளை எழுதிவரும் பார்த்திபன் என்பவரும் ஒன்றாகப் படித்தவர். பின்னர் ஈரோஸிலும் ஒன்றாக ஒரு கட்டம்வரையிற் செயற்பட்டவர்.

ஈழப்போராட்டம் உட்சிதைவுகளையும் நெருக்கடிகளையும் துயரார்ந்த நிலைகளையும் தன்னுள் கொண்டு வெந்து தணிந்த காடாக இன்று மாறியுள்ளது. உள்ளே தணல் புத்த சாம்பர் மேடு அது. இலங்கை இந்திய உடன்படிக்கை ஈரோஸ் இயக்கத்தின் செயற்பாடுகளிலும் பல மாற்றங்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தியிருந்தது. அதன்பிறகான அரசியற் சூழலும் கள நிலையும் முற்றாக மாறின. புலிகளுடன் சமாளித்துப் போகவேண்டிய ஒரு நிலை ஈரோசுக்கும் உருவாகியது. ஒரு கட்டத்தில் அதுவும் முடியாததாகியது. இலங்கை இந்திய உடன்படிக்கைக்குப் பிந்திய சூழலில் தாக்குப் பிடித்து, ஈரோஸ் மேற்கொண்ட பல பணிகளில் தன்னை ஐக்கியப்படுத்திச் செயற்பட்டு வந்தார் IPT. அந்தக் காலத்தில்தான் அவருடைய திருமணமும் நிகழ்ந்தது. சக தோழராக இருந்த சாந்தி என்பவரை காதலித்து இருவரும் மனமொப்ப நிகழ்ந்த திருமணம் அது.

1990 இல் ஈரோஸ் இயக்கம் உத்தியோகபுர்வமாகக் கலைக்கப்பட்டபோது IPT தனித்தார். சிலர் புலிகளுடன் இணைந்தனர். பலர் இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்குமாகப் புலம்பெயர்ந்தனர். ஒரு சிறிய அணி கொழும்பில் நின்றது. IPT கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தார். பிறகு அவர் கொழும்புக்குப் போகவில்லை. யாருடனும் இணைந்து கொள்ளவும் இல்லை.

இந்த நாட்களில் எனக்கும் IPT யுடன் தொடர்புகள் குறைந்து விட்டன. பின்னர் ஒரு நாள் பாலகுமாரனின் வீட்டில் IPTயைச் சந்தித்தேன். தான் ஒரு கிராம சேவகராக G.S (GRAMA SEVAKA)  வேலை செய்வதாகவும் அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்த படியால் அது கிடைத்ததாகவும் சொன்னார். சும்மா இருப்பதை விட அது பரவாயில்லாமல் இருக்கிறது என்றும் கூறினார்.

“ஏன் நீங்கள் மறுபடியும் அந்தப் பழைய IPT வேலையை எடுக்க முடியாதா?“ என்று கேட்டேன்.

“எதுக்கு வீண் வம்பெல்லாம். அதைக் கேட்கப்போனால் இப்ப கிடைச்சிருக்கிற இந்த வேலையும் இல்லாமற் போயிடும். இதைக் காப்பாற்றினாலே போதும்“ என்று பதிலளித்தார்.

என்னால் அதை நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாதிருந்தது. IPT என்ற பெயருக்கும் G.S (GRAMA SEVAKA) என்ற சொல்லுக்கும் இடையில் இருக்கும் குண வேறுபாட்டை விட IPT என்ற அடையாளத்துடன் செயற்பட்ட ஒரு முன்னிலைப் போராளி, ஒரு தோழர், இப்படி வந்து அரச உத்தியோகத்தில் இணைந்து G.S ஆக பணியாற்றுவதை எண்ணி ஆச்சரியப்பட்டேன். அவர் தான் ஒரு G.S ஆக மாறிவிட்டேன். இனி முந்தியதையெல்லாம் நினைச்சு ஒரு பிரயோசனமும் இல்லை என்று சொன்னாலும் நான் அதை ஏற்காமலே இருந்தேன். என்னுடைய மனதில் அவர் IPT யாகவே இருந்தார்.

ஆனால், என்னதானிருந்தாலும் யதார்த்தம் என்பது மிக வலிமையானது. அது எப்படி IPT யை G.S ஆக மாற்றியதோ அப்படி அவரை ஒரு புலிகளின் ஆதரவாளரகவும் அவர்களுக்கு உதவும் ஆளாகவும் மாற்றியது. அதற்கு அவருடைய G.S என்ற உத்தியோகமும் ஒரு காரணம். தொடக்கத்தில் IPT ஐ சந்தேகத்துக்குரிய ஒருவராகக் கருதுவதாக அடிக்கடி தம்மிடம் அழைத்த புலிகள் அவர் மீது கேள்விகளைத் தொடுப்பதும் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் இருந்தனர். ஒரு கட்டத்தில் IPTயை பரீட்சித்துப் பார்ப்பதைப்போல அவரிடம் தமக்கான சில வேலைகளைக் கொடுத்துப்பார்த்தனர். வன்னியி்ல் பணி. என்பதால், நெடுகலும் இழுபறிப்படுவதை விட எதையாவது செய்து கொடுத்துச் சமாளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் IPT.

அவர்களுக்குத் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய  ஒரு நிலை, ஒரு தேவை IPTக்கு ஏற்பட்டது. பின்னர் இந்து வளர்ச்சியடைந்து அவர்களுடைய வேலைகளைச் செய்து கொடுக்கும் ஒரு ஆளாக மாறியது. ஆனாலும் IPT தன்னுடைய அடிப்படையான இயல்பிலிருந்து, பணிநோக்கிலிருந்து மாறவில்லை. ஏழைச்  சனங்களுக்கு தன்னுடைய உத்தியோகத்தின் மூலமாக முடிந்த அளவுக்கு உதவினார். நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் தன்னுடைய சக்திக்குட்பட்ட வகையில் தாராளமாக முடிந்தவற்றைச் செய்தார். ஆனால், இந்தக் காலத்தில் அவர் குடிக்கத் தொடங்கியிருந்தார். குடியும் புகைத்தலும் அவரை பலவீனப்படுத்தியது. அடிக்கடி நான் IPTஐப் பல இடங்களிலும் காணுவேன். ஆர்வத்தோடு விசாரிப்பார். நானும் அவரை விசாரிப்பேன். மூன்று பிள்ளைகள். வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகள் தொடர்பாகக் கதைப்பார். பிள்ளைகளைப் பற்றிய கற்பனைகளையும் எதிர்பார்ப்புகளையும் சொல்வார். சிலவேளைகளில் இருந்தாற்போல அரசியல் உரையாடல்களும் வரும். இப்படியே இருந்தவருக்கு காலப்போக்கில் புலிகளிடம் ஒரு மெல்லிய மதிப்பும் உருவானது. ஆனாலும் IPT முழுதாக புலிகளோடு இணையவில்லை. அதை அவர் விரும்பவுமில்லை. சனங்களைப் பற்றியே சிந்தித்தார். சனங்களின் பிரச்சினைகள் தொடர்பாக புலிகளின் நிர்வாகப் பிரிவினருடன் அவருக்கு முரண்பாடுகளும் மோதல்களும் உண்டாகியுமுள்ளன.

அவர் தன்னை புலிகளிடமிருந்து ஒரு எல்லையில் நிறுத்திக் கொள்வதற்காகத்தான் குடிக்கத்தொடங்கினாரோ என நான் நினைத்தேன். அதற்காக நியாயங்களும் அவரிடமிருந்தன. எப்படியோ அவர் வன்னியில் 2007 வரையில் இயங்கிக் கொண்டேயிருந்தார். பின்னாளில் பலருக்கும் அவர் “வரதன் G.S“. எங்களுக்கோ அவர் “IPT வரதன்“ என்றே இருந்தார்.

2009 மேயில் வன்னியிலிருந்து வெளியேறி நாங்கள் அகதி முகாமுக்கு வந்திருந்த காலத்தில் மருத்துவமனைக்குச் சென்ற வேளை IPT யுடன் தொலைபேசியில் கதைப்பதற்கு வாய்த்தது. அவர் பிரான்ஸிலிருந்தார். எப்படியோ என்னுடைய தொலைபேசி எண்ணைத் தேடிப் பெற்றுச் சிரமப்பட்டுத் தொடர்பு கொண்டு கதைத்தார். சனங்களின் நிலையைப்பற்றி, பாலகுமாரனைப்பற்றி, பராவைப்பற்றி, பிற தோழர்களைப் பற்றி என எல்லோரையும் விசாரித்தார். “கவலைப்படாதே, உனக்கு உதவுவேன். மற்ற ஆக்களுக்கும் எதாவது செய்யவேணும். நான் மற்றத் தோழர்மாருடன் எல்லாம் இதைப் பற்றிக் கதைக்கிறன்.... “ என்றெல்லாம் ஆறுதலளித்து நம்பிக்கையுட்டினார். நாங்கள் உடைந்து நொறுங்கிச் சிதைந்து வந்திருந்த நிலைமையி்ல் IPTயின் அந்த வார்த்தைகள் பெரும் தெம்பை, நம்பிக்கையை ஊட்டின.

 

எனக்கு IPTயின் நிலைமை தெரியும் என்பதால் நான் அவரிடமிருந்து அந்த வார்த்தைகளைத் தவிர, அருடைய அன்பைத்தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. அந்த அன்பு, அவரிடமிருந்த அந்த அக்கறை எனக்குப் போதுமாக இருந்தது. இப்பொழுது, இந்தக் கணத்திலும் அதையே நான் நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்கிறேன். IPT பிரான்சுக்குப் போய் பிற தோழர்களின் தயவிலும் உதவியிலும் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அந்த நிலையில் அவரால் யாருக்கும் உதவ முடியாது. ஆனால், மற்றவர்கள் துன்பப்படுவதைக் கண்டு அவரால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. தன்னிடம் கொடுப்பதற்கு பொருளோ பணமோ இல்லையென்றாலும் அவர் அதைச் சொல்லிக் காட்ட மாட்டார். செய்யலாம். கிடைக்கும் என்றுதான் அவரிடமிருந்து வார்த்தைகள் வரும். இப்படி சும்மா சொல்லி நம்பிக்கையளிப்பது IPTயைப் பலவீனப்படுத்தும் விசயம் என்றாலும் அவருடைய இதயம் பொய்சொல்ல விரும்புதில்லை. அப்படி அது திட்டமிடுவதுமில்லை. அதேவேளை வன்னியில் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களுக்கு வந்த தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் சனங்களுக்கும் ஏதாவது செய்ய வேணும், உதவ வேணும் என்று பிரான்சில் உள்ள தோழர்களுடன் விவாதித்ததாகப் பின்னர் அறிந்தேன். உதவுவதற்காக பல முயற்சிகளையும் எடுத்திருக்கிறார். ஆனால் அவை பெரிய வெற்றிகளைக் கொடுத்ததில்லை.

என்றாலும் IPT சும்மா இருந்ததில்லை. எதையாவது செய்ய வேணும் என்று சொல்லிக்கொண்டும் முயன்று கொண்டும் இருந்திருக்கிறார். இவ்வளவுக்கும் IPTயின் மனைவி பிள்ளைகள் அவரைச் சேர முடியாமல் லண்டனில் இருந்தனர். மூத்தமகன் ஏற்கனவே லண்டனுக்குப் போயிருந்ததால் அவர் அவர்களை அங்கே வரவழைத்ததாக அறிந்தேன். IPT பிரான்சுக்குப் போயிருந்ததால் அங்கிருந்து லண்டனுக்குப் போவதில் சட்டரீதியான சிக்கல்களுக்குள் மாட்டுப்பட்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

ஆனால், பிரான்ஸில் அவர் பல தோழர்களின் மத்தியில் விருப்பத்துக்கும் கடுமையான சீற்றத்துக்கும் மத்தியிலிருந்திருக்கிறார்.

இப்படியிருக்கும்வேளையில் சில தோழர்கள் போரினால் பாதிக்கப்பட்ட ஈழ மாணவர்களுக்கான கல்விக்கான உதவியைச் செய்ய முன்வந்த போது IPT அதில் ஆர்வத்தோடு இணைந்து கடுமையாக உழைத்திருக்கிறார் என தற்போது அறிய முடிகிறது. பிற தோழர்களை வற்புறுத்தி, வலியுறுத்தி, அவர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தி ஒரு பெரும் பங்களிப்பை உருவாக்கியிருக்கிறார் என்று சொல்கின்றனர் தோழர்கள்.

காலம் மாறி. களம் மாறி, நிலைமை மாறி, பல மாற்றங்கள் ஏற்பட்டு அவர் தூரதேசத்திற்குப் பெயக்கப்பட்டிருந்தாலும் அவருடைய எண்ணங்களும் இயல்பும் செயலும் ஒன்றாக, ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் பக்கமாக. அவர்களுக்காக.

இப்படியெல்லாம் இருந்த IPT கடந்த 21.05.2013 அன்று பிரான்ஸில் தனியாக இருந்த வேளை, இரவு இறந்திருக்கிறார். எப்பொழுதும் பிறருடன் கூடி அவர்களுடன் விவாதித்து,சண்டைபிடித்து, கலகலப்பாகவே இருக்கும் IPT இப்படித் தனியனாக தன்னுடைய கடைசித்தருணத்தைச் சந்தித்திருக்கிறார் என்பது மிகக் கொடுமையானது. அவருடைய குடும்பத்தினர் கூட அருகிலிருக்கக் கிடைக்கவில்லை.

IPT யின் இழப்புச் செய்தியை எனக்கு அவருடைய உறவினரான வைகுந்தன் தெரியப்படுத்தினார். உடனே ரவிதாசைத் தொடர்பு கொண்டு என்ன நடந்தது? என்று கேட்டேன். ரவிதாஸின் குரல் வேதனையில் தவித்துக் கொண்டிருந்தது. அவரும் முழுமையான விவரங்களை அறியத் துடித்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் லண்டனிலிருக்கும் பாண்டி என்ற தோழர் தொடர்பு கொண்டு விவரங்களைச் சொன்னார். IPT யை இழந்த தவிப்பைப் பாண்டியிலும் உணர்ந்தேன்.

அவர் மரணித்த அன்றிரவு IPT ரவிதாசுடன்தான் இறுதியாகக் கதைத்ததாக பிரான்ஸிருக்கும் சில நண்பர்கள் சொல்கிறார்கள்.  IPT யின் தொலைபேசியில் உள்ள அழைப்பு எண் அப்படித்தான் உள்ளது என்றார்கள். இறுதிக் கணத்திலும் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

 

IPT யின் உயிர் பிரிந்து இன்று ஐந்து நாட்களாகின்றன. தமிழ் அரசியல், ஊடக, இணைய வெளி எதிலும் IPT யைக் குறித்த எந்தச் சலனத்தையும் காணவில்லை. ஒரு காலம் பத்திரிகைகளிலும் வானொலியிலும் தலைப்புச் செய்திக்குரியவராக இருந்தவர் IPT. இன்று யாராலும் கவனிக்கப்படாத ஒருவரான நிலை. காலம் என்னமாதிரித்தான் மாறி விட்டது. இன்று IPTயின் மரணம் அது நிகழ்ந்ததைப்போன்று யாருமின்றிய வெளியொன்றில் நிகழ்ந்திருப்பதைப்போலுள்ளது.

ஆனால், எதையும் அறியும் மனமும் மனிதர்களும் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அறியக் கூடியதை, அறிய வேண்டியதை, அறிய வேண்டியவர்களை அறிந்தே தீருவர். உணர்கொம்புகள் உள்ளவர்களுக்கு அலைவரிசைகளை இனங்காண்பது எளிது. IPTயின் இழப்புப் பற்றிய பதிவை முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தேன். அங்கே ஷோபாசக்தி இப்படிப் பதிவிட்டிருந்தார்.

“IPT தோழரையும் இன்று இழந்துபோனோம். சில வருடங்களிற்கு முன்பு ஒரு கல்லூரியில் நானும் தோழரும் துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்தோம். எங்களிருவருக்கும் கங்காணி அழகிரித் தோழர் என்பதால் வேலையில் அறவே கெடுபிடிகளில்லை. நானும் IPT தோழரும் ஆளுக்கொரு துடைப்பத்தைக் கையில் வைத்தபடியே கதைகள் பேசியபடி கல்லூரியை வலம் வருவோம். சிலநாட்கள் வேலை முடிந்ததன் பின்னாக பூங்காவில் அமர்ந்து குடித்திருக்கிறோம். அவர் ஈரோஸ் இயக்கத்திலிருந்தவர் என்பது எனக்குத் தெரிந்தேயிருந்தது. ஆனால் அவருக்குப் பின்னே இவ்வளவு கதைகள் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. அவரும் சொன்னதில்லை. தோழரின் உடலைப் பார்க்கும் மனத்தைரியம் எனக்கு வாய்க்க வேண்டும். தோழருக்கு அஞ்சலிகள்!“

 

வரலாறு யாரையும் எதையும் மறப்பதில்லை.

http://thesamnet.co.uk/?p=45869

 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் குடும்பத்தாருக்கு. 
 
மிகச்சிறந்த படகோட்டிகள் ஈரோஸ் இயக்கத்தில் இருந்ததாக அறிந்திருக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரது ஆன்மா சந்ததி அடைய பிராத்திக்கிறேன்

 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

கிழக்கில் சிறப்பாகச் செயற்பட்ட SAS பயிற்சி அதிரடிப்படை  மீது இவர் மற்றும் 'கராட்டி பாலாநடாத்திய  கொடுவாமடு தாக்குதலின் பின்னர்தான் மட்டக்களப்புப் பகுதிகளில் அவர்களின் நடமாட்டம் ஒரு கட்டுக்குள் வந்தது.  பல இளைஞர்களின் கொலைக்கு காரணமாக இருந்த, கல்லடி முகாம் பொறுப்பதிகாரி வீரதுங்க இறுதி மட்டும் சண்டை பிடித்து உயிருடன் பிடிக்கப்பட்டார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

 

Link to comment
Share on other sites

86 இல் முல்லைத்தீவில் வேலை செய்த அயலவர் ஒருவரின் வீட்டிற்கு இவரும் ஈரோஸ் ஐயர் போன்றவர்களும் வந்து போவார்கள். மிகவும் மதிப்பாகப் பார்ப்போம். கடைசியில் இவர் நிலை இப்படி தாழ்ந்து போனது மிகுந்த துய‌ரத்தைத் தருகிறது (ஃபிரான்ஸில்).
 
வாழ்க்கைகளால் எழுதப்பட்ட வரலாறு.. :(
 
கண்ணீர் அஞ்சலிகள். 
Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.