Jump to content

எதை எழுதுவேன் நான்...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கவியலா

வெறுமைகளில் அமிழ்ந்து

விழிகளில் நீர்வர

நினைவுகள் கரைந்தழிகிறது...

எழுதுகோலும்

வெற்றுத்தாளுமாய்

என் எதிரிலே...

எதை எழுதுவது...?

முகவரி இழந்து

முகமிழந்து

முற்றத்து நிழல் இழந்து

ஊர் சுமந்த கனவிழந்து

உள்ளே வலி சுமந்து

அகதியாய்

உருக்குலைந்து கிடக்கும்

கதை எழுதவா..?

ளித்து ஒளித்து - தன்

இணையுடன் விளையாடும்

ஒற்றைப்பனை அணிலுக்கும்

விரத விருந்துண்டு

களைத்து

முற்றத்தில்

துருத்திக்கொண்டு நிற்கும்

வேம்பில்

கரகரத்த குரலில்

கரையும்

காக்கைக்கும்

கிடைத்த சுதந்திரம்

என் மண்ணில்

என் முற்றத்தில்

எனக்கு மறுக்கப்பட்டதை

எழுதவா..?

என் பாடு பொருளாய்

பலகாலம் இருந்த

கொலுசொன்றின் ஒலிக்காக

மனசெல்லாம் காத்திருந்து

காலங்கள்

உருக்குலைந்து

உள்ளே துருப்பிடித்து

மனச்சுவர்களில்

உக்கி உதிர்ந்து போனதை

எழுதவா..?

என் தேசத்தின்

தெருக்களில் நிற்கும்

எருக்கலைக்கும்

நாயுருவிக்கும் கூட

எல்லாமாய்

எதுவுமாய்

வெளித்தெரியாமல்

உள்ளே ஒட்டி இருப்பவை

வேர்கள்...

ஊட்டி வளர்த்து - என்

உள்ளிருக்கும் ஆன்மாவை

உருவாக்கிய பாட்டியை

எங்கள் வீட்டின்

வெளித்தெரியா வேரை

விட்டுப்போகும்படி

பிடுங்கி எறிந்த போரை

நீழ்கின்ற இரவினிலே

நினைவுகளினூடே

கொப்பளிக்கும்

அது தந்த வலிகளை

எழுதவா..?

உறவுகள் அறுபட

அகதியாய்

ஊர் விட்டு வந்து

பனி உதிர்ந்த வீதிகளில்

பாதை தெரியாமல்

கனவுகளை பரணில்

காயப்போட்டுவிட்டு

வயிற்றுக்கும்

வாழ்க்கைக்குமாய்

போராடும்போது

செருக்குடன் கடந்துபோகும்

செல்வந்த மனிதர்களின்

இரக்கமற்ற வார்த்தைகளை

புழுவைப்போல் எமைப்பார்க்கும்

எள்ளல்களை

எழுதவா..?

சுமை அமத்தும்

அகதி வாழ்க்கையில்

ஊற்றெடுக்கும்

விழி நீரை துடைக்க

ஒரு உறவும் இன்றி

உருக்குலைந்து

நிற்கதியாய் நின்றிருக்கும்

பொழுதுகளில் எல்லாம்

நாமிருக்கிறோம் என்று

தானாடாவிட்டாலும்

தமிழனென்ற தசையாடிய

ஓடி வந்து தூக்கிவிடும்

ஊரில் பார்த்தறியா

உடன்பிறவா இரத்தங்களை

நினைக்கும்பொழுதெல்லாம்

பனி இரவிலும்

கண்கள் பனிக்க

உள்ளம் விம்மி அழும்

கதை எழுதவா..?

நெஞ்சுள் இருக்கும்

கறுத்த பக்கம்கள்

தெரியாமல்

உரித்துள்ள ரத்தங்கள் என்று

உரிமையுடன் எதிர்பார்த்த

உறவுகள்

கழுத்தறுத்த

கதை எழுதவா..?

இவை எல்லாம் பார்த்த

கொதிப்பில்

தொல்லைகளை துடைத்தழித்து

எல்லைகள் வரையப்பட்ட

என் சுதந்திர மண்ணில்

ஒரு நாள் இறப்பேன் என்று

நெஞ்சுக்குள்

நெருப்பாய் வளர்த்த

கனவை

கடைசியாக தின்று முடித்த

முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த

காலமும்

கண்ணீரும்

எம் வலிகளைப்போக்காத

கதை எழுதவா..?

வானம் பார்த்து

வரும் கண்ணீரில்

வடுக்களைத்

தடவிக்கொள்கிறேன்..

ஓ கடவுளே..

எதை எழுதுவேன் நான்..?

எல்லாக் கண்ணீரும்

என் வேலிகளை

அரிக்கையில்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தொல்லைகளை துடைத்தழித்து
எல்லைகள் வரையப்பட்ட
என் சுதந்திர மண்ணில்
ஒரு நாள் இறப்பேன் என்று
நெஞ்சுக்குள்
நெருப்பாய் வளர்த்த
 

 

எதை எழுதுவது எனக் கேட்டுவிட்டு இத்தனையையும் எழுதி வீட்டீங்க்கள் சுபேஸ்.

இது மட்டும் எனது நிலைப்பாடு

 

இந்த நாள் வரும்வரை என் உயிர் இருக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகவரி இழந்து

முகமிழந்து 
முற்றத்து நிழல் இழந்து
ஊர் சுமந்த கனவிழந்து
உள்ளே வலி சுமந்து
அகதியாய்
உருக்குலைந்து கிடக்கும்
கதை எழுதவா..?
 

 

எல்லோரும் ஒருநாள் கனவையே இழக்க போகிறோம். அதில் ஊரும் இல்லை உறவும் இல்லை ஒரு உருவமும் இல்லை. அதுவரைக்கும்தான் (எல்லா) ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமும், ஆணவமும் அகங்காரமும்.

வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ பிறக்கையில்,

முதலில் எட்டிப்பார்த்தது முகம்!

உனது சிறுகால்கள்,

எட்டி உதைத்தது,

உனது மண்! 

நீ உதிர்த்த முதல் வார்த்தை,

உனது மொழி!

நீ இருக்கும் வரை,

இவையும் இருக்கும்!

 

மண் தந்த நினைவுகள்,

உன்னோடு பிணைந்தவை!

 

விடியும் ஒருநாள் என்று,

விழி திறந்து,

காத்திருப்போம்!

 

கவிதை,கனக்கிறது, சுபேஸ்!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரின் ஆதங்கங்களும் உங்கள் கவிதைகளாக. நன்றாக இருக்கு கவிதை சுபேஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தம்பி  கவிதைக்கும்  நேரத்திற்கும்.....

 

 

 

அடுத்த தலைமுறை 

சுகமாய் வாழ

அனைத்தையும் தந்தவர்

அநியாயமாய்

அழிக்கப்பட்ட விதியை  நொந்தாலும்

 

சோர்வு வரும்போதெல்லாம்

என் தம்பிகளை  நினைப்பதுண்டு

என் நினைவுகளை

என் கனவுகளை

என் தேசத்தை

உன்னுள் விதைத்த தெளிவு எனக்கு...

 

இப்பொழுதைக்கு நீதான் எனது 

நம்பிக்கை நட்சத்திரம்

பிரபாகரன் 

புறப்பட்ட போது

புலிகளை யாரறிவார்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்ல வார்த்தைகள் இல்லை சுபேஸ் அண்ணா.

 

உங்கள் எழுத்து என்னைப் பிரம்மிக்க வைக்கிறது. எழுத்து நடையும், வார்த்தைகளின் கோர்ப்பும் அருமை.

நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு கவிதை படித்த திருப்தி நெஞ்சுக்குள்.

 

தொடர்ந்து எழுதுங்கள் .. :)

Link to comment
Share on other sites

வானம் பார்த்து
வரும் கண்ணீரில்
வடுக்களைத்
தடவிக்கொள்கிறேன். 
 
 
அழகான வார்த்தைகளின்  கோர்ப்பு  நன்றி   சுபேஷ்  கவிதைக்கு 
Link to comment
Share on other sites

போகப்போக பழகிவிடும்..:blink: கவிதைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கனமாய் இருக்கின்றது !   சுபேஷ் !!

Link to comment
Share on other sites

கண்ணீர் மயமான கவிதைக்கு நன்றிகள் சுபேஸ்

 

ஒரு காலத்தில் நானும் இப்படியான எதிர்மறையான கவிதைகளை, ஆக்கங்களை எழுதி எனக்குள் மறுகி வெறுத்துப் போயிருந்தேன். ஆனால் எல்லாத்தையும் இழந்தும் நம்பிக்கையை இழக்காத வன்னி மக்களில் ஒரு சிலருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்த பின் இவ்வாறு எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

Link to comment
Share on other sites

 ஒரு புள்ளியில் ஒவ்வொருவரும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். என்ன ஆளாளுக்கு புள்ளியின் மீதான வர்ணங்கள் வேறுபடுகின்றன. இதுதான் தமிழனின் தலைவிதியோ ?

நல்ல கவிதை. புலம்பெயர் போட்டுகேடுகளை சுட்டிபோகும் வரிகள் யதார்த்தம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் மயமான கவிதைக்கு நன்றிகள் சுபேஸ்

 

ஒரு காலத்தில் நானும் இப்படியான எதிர்மறையான கவிதைகளை, ஆக்கங்களை எழுதி எனக்குள் மறுகி வெறுத்துப் போயிருந்தேன். ஆனால் எல்லாத்தையும் இழந்தும் நம்பிக்கையை இழக்காத வன்னி மக்களில் ஒரு சிலருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்த பின் இவ்வாறு எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

 

உண்மை நிழலி

நான் போன கிழமை வன்னியிலிருந்து தற்பொழுது தான் வந்த ஒருவருடன் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அவருக்கு 2 பெண் பிள்ளைகள்

அதில் ஒருபெண் குமர்ப்பிள்ளை

அதைப்பற்றி  கதைக்கும்போது அவரது கண்களில் கண்ணீர்.

எந்த நேரமும் என்னவும் நடக்கலாம் என்கின்ற நிலை.

இங்க வைக்கப்படும் சில கேள்விகளை மாற்றுக்கருத்து பார்வையில் வைத்தேன்

அவரது பதில்களும் உரமும் என்னை அழ வைத்துவிட்டன.

 

அதை இங்கு எழுதலாம் என்று   இருக்கின்றேன்.

நேரம் தான் கிடைக்குதில்லை.

பார்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லா இருக்குது. ஆனால்.. துன்பத்தைக் கண்டு துவண்டு கொண்டே இருந்தால் இன்பத்தை அடைய முடியாது. வேறு யாரும் எமக்கான இன்பத்தை பெற்றுத் தரவும் மாட்டார்கள். இன்பமோ துன்பமோ எல்லாம் எம் கையால் தான்..எம் முயற்சியால் தான் அறுவடை செய்தாகனும்..! இது தான் இப்பூமிப்பந்தில் மனித வாழ்வின் நியதி இன்று.  :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இங்கு வந்து என் வலிகளுக்கு ஒத்தடம் தந்து சென்ற ஒவ்வொரு உறவுக்கும் என் இதயத்தில் இருந்து நன்றிகள்...பெருவலி உள்ளுக்குள்ளே..இயலவில்லைவாழ்த்துக்களை சுமக்க...
வாழ்த்த வந்த உங்களுக்கு என் அன்புகள்...
 
உடைந்து போன 
சிறகொன்றின்
வலிசுமந்து
விழும் வார்த்தைகளைப்
பின்னும் சிலந்தியாய்
நான்...
எல்லா வேதனைகளையும்
சொற்கள் தீர்க்குமெனில்
அந்த சொற்களை
கவிதைகளாய் நெய்துகொண்டிருக்கலாம்...
 
 
 
Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி.

ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்கள், வலிகள் என்றும் மறக்க முடியாதவை.  எவ்வாறெனினும் அனைத்தையும் தாண்டி செல்ல வேண்டியுள்ளது.

 

ஒருநாள் துன்பங்கள் நீங்கலாம் அல்லது இறுதிவரை துன்பங்கள் தொடரலாம். எதையும் எதிர்கொள்ளும் மனதிடத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். :rolleyes::)

Link to comment
Share on other sites

வானம் பார்த்து
வரும் கண்ணீரில்
வடுக்களைத்
தடவிக்கொள்கிறேன்..
ஓ கடவுளே..
எதை எழுதுவேன் நான்..?
எல்லாக் கண்ணீரும்
என் வேலிகளை 
அரிக்கையில்...
 
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

எழுதி முடியுமா நாம் ஏதிலிகளாய் அலைந்த கதை. நாம் வாழும் காலம்வரை எம்முடன் தொடரும் நினைவுகளை அழிக்க முடியாது. நல்லதொரு கவிதை இன்றுதான் பார்த்தேன். கவிவரிகள் பிரமாதமாய் அமைந்துள்ளன. எம்மவர் அவலங்கள் இன்னும் தீராதபோது எப்படி எதை சொல்லி நாம் எம்மைத் தேற்றிக்கொள்வது. நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை. நம் உள்ளக் கிடக்கைகளை சொல்லுக்குள் அடக்க முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.