Sign in to follow this  
ஜீவா

அவள் பெயர் இளவரசி...

Recommended Posts

jewess.jpg

 

 

அமுதா.. எணேய் பிள்ளை எழும்பணை ராசாத்தி பள்ளிக்குடத்துக்குப் போகவேணுமெல்லே இன்னும் என்ன படுக்கை வேண்டிக்கிடக்கு, கெதியா எழும்பணை.
ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்.. காலங்காத்தாலையே புலம்ப ஆரம்பிச்சிட்டியேம்மா, போங்கோ போய் அப்பாவை வரச் சொல்லுங்கோ எப்ப உங்கண்டை முகத்திலை முழிச்சனான் இண்டைக்கு புதுசா எழும்ப .. அப்பாவை வரச்சொல்லணை.
எத்தனை நாளைக்குத்தான் இப்படி அப்பா முகத்திலை முழிக்கப் போறியோ, குமரா விட்டாய் கலியாணம் கட்டி போற இடத்திலை என்ன பாடுபடப்போறியோ... என்னங்க, உங்கண்டை ஆசை மகள் கூப்பிடுறாள் போங்கோ நான் ஏதும் சாப்பாடு தேடவேணும், பாவம் அவள் பசி இருக்க மாட்டாள், அப்படியே உவன் மதனையும் எழுப்பி விடுங்கோ பள்ளிக்குடம் போற பஞ்சியிலை படுத்திருக்கிறான்.

கணபதிப்பிள்ளை,சரஸ்வதியின் மூத்த மகள் அமுதா,இளையவன் மதன். பத்து பிள்ளை பெத்தாலும் பார்க்க வசதியிருந்தாலும், நாமிருவர் நமக்கிருவர் என்பதற்கிணங்க ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்றென்று பெற்ற பிள்ளைகள்.
கணபதிப்பிள்ளையர் போஸ்ட்மாஸ்டரா இருந்ததாலையும் கனக்க நிலபுலன்கள் இருந்ததாலையும் தறையளைக் குத்ததைக்கு விட்டும், வளவுக்குள்ளை இருந்த தென்னை,மாமரம்,தேசிக்காய் என்று எல்லாத்தாலையும் வருவாய்க்கு குறைவில்லை, அதே போல ஊருக்கு உதவி செய்வதிலையும் வஞ்சகமில்லாதவர்கள். அமுதா உயர்தரமும், மதன் பத்தாம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தார்கள்.

அமுதா என்ன ஆச்சணை ஏன் இண்டைக்கு நேரத்துக்கே வந்திட்டாய் பள்ளிக்கூடத்திலை ஏதும் விஷேசமோ?
இல்லையணை ஆமிக்காரன் யாழ்ப்பாணத்துக்குள்ளை வந்திட்டானாம், முன்னேறிக்கொண்டிருக்கிறானாம், இயக்கப்பொடியள் அறிவிச்சுக்கொண்டு வாறாங்கள் கெதியா பாதுகாப்பான இடத்தை தேடி ஓடட்டாம், றோட்டெல்லாம் ஒரே வாகனமும், அம்புலன்ஸுமா கூவிக்கொண்டு பறக்குது. அறிவிச்சுக்கொண்டு இஞ்சாலையும் வரப்போறாங்கள் கெதியா எடுக்கிறதை எடுத்து அடுக்கணை எல்லாச்சனமும் போகுது அதுகளோடை நாங்களும் போக.!
எங்கையடி போக? எங்களுக்கு ஆர் தெரிஞ்ச சனம் இருக்குது, இரு அப்பாவும் வரட்டும். அது சரி எங்கை மதனைக்  காணேல்லை அவன் வருவனம்மா நீங்கள் கெதியா சாமானை அடுக்குங்கோ அப்பா வர முடிவெடுப்பம் ஆனால் அதுக்குள்ளை ரெடியா இருந்தால் நல்லது தானே.

"என்ன இஞ்சை சத்தம்? என்ன சரசு உடுப்பெல்லாம் அடுக்கிறாய் எங்கை போறியள்?"
அப்பா, ஆமி யாழ்ப்பாணத்துக்கு வந்திட்டானாம் முன்னேறிக்கொண்டிருக்கிறானாம், இடம்பெயரச்சொல்லி இயக்கம் அறிவிச்சுக்கொண்டு இருக்கிறாங்களப்பா.
"அதுக்கு எங்கை போகச் சொல்லுறாய்? இவ்வளவத்தையும் விட்டிட்டுப் போகவோ? நான் செத்தாலும் என்ரை கட்டை இங்கை தான் வேகுமே தவிர எங்கையும் போக மாட்டேன். நல்ல கதை கதைக்கிறியள்."

இஞ்சை பாருங்கோ நாங்கள் வச்சிருக்கிறதே ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளை அதுக்கு ஒண்டு நடந்திட்டால் நாங்கள் உயிர் வாழுறதிலை அர்த்தம் இல்லை உங்களுக்குத் தெரியும் தானே இந்தியன் ஆமியும், சிறீலங்கன் ஆமியும் முந்தி பொடி பெட்டையளை என்ன பாடுபடுத்தினவங்கள் என்டு, தெரிஞ்சுகொண்டும் அதுகளைக் காவுகுடுக்கப் போறிங்களே, உந்தச் சனம் முழுக்கத்தானே போகுது, ஆண்டவன் மேலை பாரத்தைப் போட்டிட்டு வாங்கோ போவம். நடக்கிறது நடக்கட்டும், பிறந்தனாங்கள் எண்டைக்கோ ஒரு நாள் சாகத்தானே போறோம், அதுகள் பிள்ளைகளாவது சந்தோசமா இருக்கட்டும்.

"சரசு....."
வாங்கோ அப்பா, மதனும் வந்திட்டான்.  நகைகளையும்,முக்கிய ஆவணங்களையும் கையில் சிக்குப்பட்ட உடுப்புக்களையும் எடுத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக நடக்கிறார்கள் விடியலில்லா பொழுதுகளை வரவேற்க. கணபதிப்பிள்ளையற்றை மனமோ அந்த மண்ணிலேயே தொலைந்துவிடுகிறது, ஒரே செல்ல மகளுக்காக ஆசையாகப் பார்த்துப்பார்த்துக் கட்டிய வீடு அது வெறும் கல்லும் மண்ணும்,சீமெந்துமல்ல அவரின் இரத்தமும்,கண்ணீரும்,வியர்வையும் கலந்து கட்டிய வீடு அது ஒவ்வொரு மரஞ்செடியும் கூட பிள்ளையப் போல பாசமாக வளர்க்கப்படவை, உயர்றிணைகளுடன் மட்டுமல்ல அஃறிணைகளுடனும் கூட அவ்வளவு அன்னியோன்யம் அனைத்தையும் துறந்து ......"உயிர் பிரியும் வலியை உணர்ந்த நொடிகள் அவை". கண் முன்னே சாவுகள், விழுப்புண்களை எல்லாம் கடந்து காலம் காலாறிய இடம் முத்தையன் கட்டு.

பானைக்குள்ளிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக வந்த இடமோ வாழ்ந்த இடத்திற்கே திரும்பப் போகலாமோ என்ற வலிகள் நிறைந்த பூக்களின் வித்துக்களைத் தான் விதைத்துத் தள்ளின. பிள்ளைகளின் படிப்பும் போச்சு,எந்த வேலையும் இல்லை என்ன செய்வது என்று தெரியாத சூன்ய வெளியில் தினக்கூலிக்குப் போனார் கணபதிப்பிள்ளை. பிள்ளைகளையாவது கரையேற்றி விட்டால் செத்தாலும் பரவாயில்லை இதுகளை வச்சுக்கொண்டு உயிரைப் பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டி இருக்கே கணபதிப்பிள்ளையின் புலம்பலுக்கு ஆறுதல் கூறினாள் சரசு..
"இருக்கிற நகையளை வித்து, கொஞ்சம் கடன் வாங்கியாச்சும் உவன் மதனை லண்டனுக்கு அனுப்பி விடுவம் உங்கண்டை பெறாமகன் பொடியன் ஒருத்தன் அங்கை இருக்கிறான் தானே அவன் பார்ப்பான் தானே"!
 ம்ம்ம்... இது நல்ல யோசனையாத் தான் இருக்கு சரி அவனை அனுப்பி விடுவம்.

நாட்களும் ஓடின அமுதாவுக்கு ஒரு சம்மந்தம் வந்திருந்தது , குறிப்புப் பார்த்து  பத்துக்கு ஒன்பது பொருத்தமாம் பொடியன் வாத்தியார், வவுனியாவிலை தான் படிப்பிக்கிறான் போட்டோ பார்த்து அமுதாக்கும் பொடியனுக்கும் பிடிச்சுப்போட்டுது, வாங்கோ போய் கொழுக்கட்டை மாத்திப்போட்டு வரும்.
இது தான் அவர்களின் கடைசி நாள் என்பதை எப்படி அறிவார்கள்? கொழுக்கட்டை மாத்திவிட்டு வவுனியாவில் இருந்து திரும்பும் போது ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் பஸ்ஸில் வந்த அத்தனை பேரும் உடல் சிதறிப்பலி என்ற அடுத்த நாள் தலைப்புச் செய்தி தான் கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதியர்களை அடையாளப் படுத்தியது.
தனிமரமாகி விட்டாள் அமுதா, இறுதிக்கிரியை செய்யும் அளவுக்குக் கூட உடல் கிடைக்கவில்லை. அத்தனை பேரின் எலும்புகளும்,சதைகளும் செஞ்சிலுவைச்சங்கத்தின் மேற்பார்வையில் புலிகளால் விதைக்கப்பட்டது என்ற நாழிதழ் படம் மட்டுமே அவளின் கைகளில் வந்து சேருகிறது. சில கணங்களுக்கு முன்னே சீவித்த உயிர்கள் அட்டைப்படமாய் அந்த வீட்டின் சுவர்களில் காலத்தின் கதைகளாய் ஆணி அடிக்கப்பட்டுவிட்டது.

செல்லமாகவே வளர்ந்தவள் அமுதா, எவ்வளவு கஸ்டம் வந்த போதும் அவளை எந்தக் கெடுதலும் தீண்டவிடாமல் பார்த்தவர்கள் இன்று யாருமே இல்லாத அநாதை போல் ஆகிவிட்டாள், தூக்கங்களைத் தொலைத்தவள் மௌனங்கள் மட்டுமே பேசும் கானகத்தின் நடுவே காட்டேரிகளும், கொள்ளிவால்ப் பேய்களும் மட்டுமே குடித்தனம் நடத்துவதாய் கனவினில் கண்டாள். யாரிடம் போக? மதனின் நிலை கூட என்னவென்று தெரியாது, லண்டன் போய்ச் சேர்ந்து விட்டானோ இல்லை எங்கும் இடையில் நிக்குறானோ எந்தத் தொடர்பும் இல்லை, தாய் தந்தையரின் இழப்புச் செய்தி கூட அறிவானோ என்ன ஏது என்றே தெரியாது அவனை அனுப்பவென்று ஊரில் வாங்கிய கடன் வேறை இருக்கு, மூளைப்பரப்பில் அமிலங்களாய் அரித்துக்கொண்டிருந்தது வலிகளின் வடுக்கள்.
என்ன செய்வதென்றே அறியாதவள் அலரி விதையை அரைத்துத் தின்றுவிட்டாள். அவளது நல்ல காலமோ,கெட்ட காலமோ எதிர்வீட்டு கனகம்மாக்கா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போய் காப்பாற்றி விட்டார்.

"என்னடி லூசுத்தனமாப் பண்ணிப்போட்டாய்? உனக்காக நாங்கள் இருக்கிறம் நீ ஏன் கவலைப்படுறாய், என்னை உன்ரை அம்மாவா நினைச்சுக்கொள். பார் எத்தனை சனம் தாய்,தந்தை இல்லாம பிள்ளையள் இல்லாமல் இருக்குதுகள், அதுகள் எல்லாம் வாழேல்லையா? இப்படி எல்லாரும் நினைச்சால் இஞ்சை ஒருத்தருமே மிஞ்ச ஏலாது, பார் என்ரை அவர் எல்லைப்படைக்குப் போய் ஆமியின்ரை சினைப்பரிலை வீரச்சாவு, நான் என்ன செத்தா போட்டேன்? நானும் போனால் என்ரை இந்த குருமனை யார் பார்க்கிறது சொல்லு? ஒரு நாளும் இப்படி மொக்கு வேலை பார்க்காதை சரியோ, நான் உனக்கு இருக்கிறேன். உனக்குத் தான் கல்யாணம் முற்றாயிட்டுதே ஒரு வருசம் கழியட்டும் போய் அவையோடை கதைச்சு உன்னை ஒப்பேத்தி விடுறன் நீ சந்தோசமா வாழு சரியே"!

நாட்களும் வருடங்களாயின..
அட.. அமுதாவே வா பிள்ளை, எப்படி இருக்கிறாய்? குறை நினைக்காதை உன்ரை அம்மா,அப்பான்ரை விசயம் கேள்விப்பட்டனாங்கள் வரமுடியேல்லை உனக்குத் தெரியும் தானே வாறது எவ்வளவு கஸ்டம் என்று ஏதும் ஒன்று நடந்திட்டால் நாங்களும் உன்ரை அம்மா,அப்பா போன இடத்துக்குத்தான் போக வேணும். ஏன் உந்த தேவையில்லாத வேலை என்று தான் வரேல்லை.
அது சரி திடீரென்று இந்தப்பக்கம்?
அது வந்து அவளோடை அம்மா,அப்பா இருக்கேக்குள்ளை முற்றாக்கின விசயம் அது தான் என்ன மாதிரி என்று பேசிப்போட்டுப் போவம் என்று வந்தனாங்கள் தனிச்சுப்போனாள் அமுதா அவளோடை வாழ்க்கை சந்தோசமா இருக்கட்டும் என்று தான் , வந்த விடையத்தைச் சொல்லி முடித்தாள் கனகம்மா.

"என்னது கலியாணமோ? என்ரை பொடியனுக்கு வேறை இடத்திலை பொம்பிளை பார்த்திருக்கிறம், இந்தப்பெட்டை ராசி இல்லாதது அது தான் கொழுக்கட்டை மாத்தின அண்டைக்கே தாய்,தேப்பனை காவு வாங்கிப்போட்டுது. அதை விட பேசின படி நகையும், சீதனமும் தருவிங்களோ? சும்மா கந்தறுந்ததுகளுக்கு எல்லாம் என்ரை பொடியனைக் கட்டிக்குடுக்கலாமே? வந்ததுக்கு ஏதும் குடிச்சிட்டுப் போங்கோ வெளிய போய் சொல்லிடாதையுங்கோ"
 அவளின்ரை தம்பி தான் லண்டனுக்கு என்று போயிருக்கிறானே. போனதும் நீங்கள் கேட்டதை விட அதிகமாகவே செய்யிறம், அநாதையா நிக்கிற பொண்ணுக்கு வாழ்வு குடுங்கோவன் என்று தன் பங்குக்கு கெஞ்சினாள் கனகம்மாக்கா.
"அதுவரைக்கும் என்ரை பொடியன் என்ன நெத்துக்கு விடவே? அது தான் சொல்லிப் போட்டேனெல்லே போங்கோ போய் வேலையைப் பாருங்கோ"
மாப்பிள்ளையின் முகத்தைப் பார்த்த அமுதா "இவனெல்லாம் ஒரு ஆம்பிளை சீ... தூ.. மனசுக்குள் காறித்துப்பிவிட்டு, கல்யாணச் சந்தையில் விலை போகவில்லைய என்ற வேதனையோடு வீடு திரும்பினாள்".

பட்ட கால்லையே படும், கெட்ட குடியே கெடும் என்ற வாக்கு மட்டும் ஏனோ அமுதா வாழ்வில் பொய்க்கவில்லை. விழுந்து எழலாம் என்று நினைக்கும் போதெல்ல்லாம் சாணேற முழம் சறுக்கும் கதையாய் மதனும் மலேசியாவில் வைத்து ஏஜென்சியால் ஏமாற்றப்பட்டு திரும்ப ஊருக்கே வந்துவிட்டான் அமுதா வாழ்வில் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தோசமும் பறிபோய்விட்டது.
அவன் வந்தது தான் தாமதம் கடன் குடுத்தவர்களும் கடன் கேட்டு வாசலுக்கு வந்துவிட்டார்கள், தம்பி அடுத்த மாதம் காசு அனுப்புவான் தாறேன் என்று சொல்லி வந்தவளுக்கு இன்று வார்த்தைகள் கூட வரவில்லை எஞ்சியிருந்த மூக்குத்தியையும் தோட்டையும் கழற்றி அடைவு வைத்து விட்டு வேப்பங்குச்சியைச் சொருகிக்கொண்டாள் காதுகளில்.

போர் உச்சமடைந்திருந்த நேரம் வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் போராட்டத்தில் இணைய வேண்டும்  என்ற சூழ்நிலை யாரையும் விட்டுவைக்கவில்லை.
அமுதாவிற்கும் மதனுக்கும் நடந்த பாசப் போராட்டத்தில் மதனே ஜெயித்துப் போர்க்களம் போனான். அவன் போய்விட்டான் அமுதாவோ?????
பாவம், எத்தனை மன்மதன்களின் காதல்க்கடிதங்களையும், காம அம்புகளையும் கடந்து, வறுமையைக் காட்டி படுக்கைக்கு அழைக்கும் வல்லூறுகளின் வலையிலும் சிக்காது, தான் தையல் செய்தும், சின்னப்பிள்ளைகளுக்கு ரியூசன் சொல்லிக்கொடுத்தும் பெரும்பகுதி கடனை அடைத்து விட்டாள். இன்னும் கொஞ்சம் தான் அதுக்காக இரவு பகலாக கால்கள் தையல் இயந்திரத்தின் பெடல்களை மிதித்துக் கொண்டே இருக்கிறது தனக்கான நாள் வரும் என்று.

என்ரை ராசாத்தி எப்படி இருந்த நீ? உன்னை இந்தக்கோலத்திலை பார்க்க எனகே இரத்தக்கண்ணீர் வருது..!! உன்னை ஒருத்தனட்டைப் பிடிச்சுக்குடுக்க மாட்டேனா என்ற கவலை தான் என்னை வாட்டுது.
"விடுங்கோ கனகம்மாக்கா இன்னும் இழக்க என்னிடம் என்னணை இருக்கு? எல்லாம் பழகிப்போட்டுது வாழ்க்கை என்னைப் புடம் போட்டிட்டுது இப்ப எல்லாம் எதையும் தாங்கும் மனம் வந்திட்டுது தலை தான் போனால் என்ன? இந்தக் கையும் காலும் இருக்கும் வரைக்கும் பார்ப்பம் அங்காலை கடவுள் விட்ட வழி"
அப்படி எல்லாம் பேசாதையணை, அவர் கட்டின தாலியும் கொஞ்ச நகையும் இருக்கு எனக்கு என்ன பொம்பிளைப் பிள்ளையே இருக்கு இந்த ஒரு பொடியன் தானே அவன் பிழைச்சிடுவன் நான் என்ரை நகையைத் தாறேன்.
கண்களில் நீர்வழிய கட்டியணைத்துக் கொண்டாள் கனகம்மாக்காவை.

காலம் எவ்வளவு கொடியது ..
களமாடப் போன மதனும் வீரச்சாவு என்ற செய்தி புலிகளின் குரல் வானொலியில் காற்றலை வழியே வருகிறது, இருந்த ஒரே நம்பிக்கையும் தவிடு பொடியாக உறவென்று சொல்லிக்கொள்ள இருந்த ஒரே சொந்தமும் போய் அநாதை என்ற பட்டம் மட்டும் மேலதிகமாக ஒட்டிக்கொள்கிறது.
யாரை நோவாள் அந்த அப்பாவி? கடைசிச் சொட்டுக் கண்ணீர் கூட வற்றிவிட்டது அவள் வாழ்வில்.

அம்மா.. அம்மா..!! அமுதாம்மா எழும்பணை பள்ளிக்கூடம் போக வேணும் .
கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருகும் அமுதாவை எழுப்புகிறான் குட்டி "வசந்தன்"... போரில் தாய், தந்தையை இழந்த அனாதைக் குழந்தை வசந்தனை
தத்தெடுத்து வளர்க்கிறாள் அமுதா. அவன் கை பிடித்து  நடக்கிறாள் பாடசாலை நோக்கி.

முற்றும்.

( யாவும் கற்பனையே )

ஜீவா
18.06.2013  12:35

Edited by ஜீவா
  • Like 11

Share this post


Link to post
Share on other sites

நல்ல  கரு

தொடரட்டும் தங்கள் எழுத்து...

Share this post


Link to post
Share on other sites

ஆரம்பம் அமுதாவை வழமையான பள்ளிப் பிள்ளைகளை மாதிரி காட்டுவதால் தலைப்புடன் அவள் கதை இணைவது போல் தோற்றம் தரவில்லை. முடிவு அருமை.

Share this post


Link to post
Share on other sites
ஜீவா கதையின் கரு நன்றாக உள்ளது ஆனால் அவசரப்பட்டு கதையை எழுதின மாதிரி எனக்குப்படுகின்றது.எனக்கு உங்கள மாதிரி எழுதத் தெரியாது ஆனாலும் என்னுடைய கருத்தை சொன்னேன் :)
 

Share this post


Link to post
Share on other sites

ஜீவா தொடருங்கள். 

Share this post


Link to post
Share on other sites

கற்பனை கலந்த உண்மைக்கதைக்கு நன்றிகள் ....தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.....

Share this post


Link to post
Share on other sites

பெயரும் கதை எழுதியவிதமும் அழகு.தொடருங்கள் ஜீவா.

Share this post


Link to post
Share on other sites

மௌனங்களுக்குள் மறைந்து போன கதைகள் ஏராளம், ஜீவா!

 

வெறும் ஏக்கங்களுக்குள் புதைந்து போன வாழ்வுகளும் ஏராளம்!

 

எமது அடுத்த தலைமுறைகளுக்காக, இவை வெளிக்கொண்டு வரப்படவேண்டும்!

 

எமக்கு எதற்காக ஒரு தீர்வு வேண்டும் என்பதை இப்படியான கதைகள் எப்போதும் நினைவில் தக்க வைத்துக்கொண்டிருக்கும்!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

Share this post


Link to post
Share on other sites

 கதை எழுதியவிதம் அழகு, தொடருங்கள் ஜீவா!

Share this post


Link to post
Share on other sites

பக்கம்,பக்கமாக எழுதும் கதையை விட இப்படி  எழுதுவது நன்றாக பிடித்திருக்கிறது ஜீவா..ஜீரணக்க முடியாததாகவும் இருக்கிறது...இப்படியான விடையங்களில் நம்மவர்களை திருத்துவதோ இல்லை திருந்துவார்கள் என்று நினைப்பதோ தப்பு...
எழுத்துப் பிழைகளை கவனத்தில் கொள்ளவும்..

Edited by யாயினி

Share this post


Link to post
Share on other sites

தம்பிக்கு என்ரை வாழ்த்துக்கள் .உங்கடை கதை முறிஞ்சு முறிஞ்சு போகுது கொஞ்சம் கவனியுங்கோ .

Share this post


Link to post
Share on other sites

நல்ல  கரு

தொடரட்டும் தங்கள் எழுத்து...

நன்றி விசுகு அண்ணா,

நீங்கள் எல்லாரும் தரும் ஊக்கம் தான் எழுத வைக்கிறது. எமக்கு தெரிந்த வழிகளூடு இணைந்திருக்கிறோம் அண்ணா, நன்றி வரவுக்கும், கருத்துப் பகிர்விற்கும். :)

Share this post


Link to post
Share on other sites

ஆரம்பம் அமுதாவை வழமையான பள்ளிப் பிள்ளைகளை மாதிரி காட்டுவதால் தலைப்புடன் அவள் கதை இணைவது போல் தோற்றம் தரவில்லை. முடிவு அருமை.

 

இது வரையும் அனுபவங்களை மாத்திரமே கிறுக்கிக் கொண்டிருந்தேன், என் வாழ்வில் நான் அனுபவித்தவையும், என்னைச்சுற்றி நடந்தவையுமே தான், முதன் முதலாக ஒரு கற்பனையாக தொடர்கதை போல் இல்லாமல் குறித்த பந்திகளுக்குள் அடக்கி விடவேண்டும் என்று எழுதிய போது சிலவற்றில் தவறுகள் வந்துள்ளது, நல்லா இருக்கு தொடருங்கோ என்பதை விட தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது தான் அடுத்த முறை எழுதும் போது திருந்(த்)த வாய்ப்பாக இருக்கும் அந்தவகையில்

 

வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி மல்லையண்ணா. :)

Share this post


Link to post
Share on other sites

 

ஜீவா கதையின் கரு நன்றாக உள்ளது ஆனால் அவசரப்பட்டு கதையை எழுதின மாதிரி எனக்குப்படுகின்றது.எனக்கு உங்கள மாதிரி எழுதத் தெரியாது ஆனாலும் என்னுடைய கருத்தை சொன்னேன் :)

 

 

இதுவரை நான் எழுதிய எந்த ஒரு கிறுக்கலும் முதலில் எழுதி சரி பார்த்து விட்டு தட்டச்சு செய்ததில்லை அக்கா. ஏதும் எழுத வேண்டும் என்று மனம் உந்தித்தள்ளும் போது ஒரே மூச்சாக எழுதிவிடுவது தான் வழமை அப்படித்தான் இந்தப் பதிவும், நிச்சயமாக உங்கள் கருத்தைக் கவனத்தில் எடுக்கிறேன் அடுத்து வரும் பதிவுகளில் திருத்தி எழுத முயற்சிக்கிறேன் அக்கா.

 

எப்போதும் எல்லா பதிவுகளையும் படித்து ஊக்கம் தரும் ஒருவர். நன்றி அக்கா உங்கள் கருத்துப் பகிர்விற்கு.

Share this post


Link to post
Share on other sites

ஜீவா தொடருங்கள். 

வரவிற்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி லியோ அண்ணா. :)

கற்பனை கலந்த உண்மைக்கதைக்கு நன்றிகள் ....தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.....

 

நன்றி புத்தன் அண்ணா, எல்லாம் உங்கள் எழுத்துக்களைப் படித்த நம்பிக்கையில் கிறுக்குவது தான். :)

Share this post


Link to post
Share on other sites

பெயரும் கதை எழுதியவிதமும் அழகு.தொடருங்கள் ஜீவா.

 

நன்றி ராசம்மாக்கா, உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும். :)

Share this post


Link to post
Share on other sites

வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள். கதையின் தலைப்பிற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்றதொரு தேற்றப்பாடும் இறுதியில் அவசரமாக கதையை முடித்தது போலவும் உள்ளது.  ஆனாலும் தொடர்ந்து எழுதுங்கள்.அடுத்த கதையில் இன்னமும் கலக்குங்கள்.

Edited by sathiri

Share this post


Link to post
Share on other sites

வழக்கமாகக் கதை எழுதும் ஜீவாவிடம் இருந்து ஓர் மாறுபட்ட கதை வந்ததிற்கு முதலில் எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . ஒரே நேரத்தில் இரண்டு செய்திகளை சொல்ல முற்பட்டிருக்கின்றீர்கள் . ஒன்று , செல்வச்செளிப்பிலே வளர்ந்த அமுதாவினது வாழ்க்கை போர்அவலங்களினால் எவ்வாறு சிதைந்தது என்பது . இரண்டாவது செய்தி , தனதுவாழ்வு உருக்குலைந்தாலும் அதே போரினால் பாதிப்படைந்த ஓர் குழந்தையை தத்து எடுத்து வளர்கும் மனிதநேயம் . இந்த இரண்டு செய்திகளையும் சரியான கலவையில் கலந்து கதை சொல்லப்படவில்லை . ஒன்றிற்கு மேற்பட்ட செய்திகளை கதைசொல்ல முற்படும்பொழுது  மிகுந்த அவதானத்துடன் சம்பவங்கள் ஒன்றிற்கொன்று கோர்வையாகச் சொல்லப்படவேண்டும் . அப்பொழுதுதான் அதில் ஒரு உயிர்த்துடிப்பு இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து .

 

இங்கு சம்பவங்களுக்கிடையே பல இடங்களில் தொங்குபறிநிலையே காணப்படுகின்றது . மேலும் 'அவள்பெயர் இளவரசி ' என்று தலைப்பிட்டு கதாநாயகியை ஒரு ' பணிப்பெண்ணாகவே ' காட்டியிருக்கின்றீர்கள் . மதனுடைய இடத்தில் அமுதாவை இருத்தியிருந்தால் இளவரசி மகாராணியாக வாசகர் மனதில் நிறைந்திருப்பாள் என்றே நினைக்கின்றேன் . இரண்டாவது செய்தியான மனிதநேயத்தை மேலும் கூர்மைப்படுத்தி மதனுடைய பொறுப்பில் விட்டிருந்தால் தலைப்பின் கனதி மிகவும் அதிகமாயிருக்கும் .  இருந்தபோதிலும் கிணற்றைக் கலக்கிக் கலக்கி இறைத்தால்த் தான் நல்லநீர் வரும் எனபதற்கு இணங்க , மேலும் பல வித்தியாசமான கதைகளை படைக்க வாழ்த்துகின்றேன் emot-eek.gif.gifemot-eek.gif.gif  .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this