• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

nunavilan

விநாயகர்.......................!

Recommended Posts

விநாயகர்.......................!
 

 

 

281999_524362604247421_914545975_n.jpg
விநாயகரை கரைப்பது ஏன்?
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

குட்டு என்றால் என்ன?

விநாயகர் முன்னால் நின்று குட்டுகிறோம் அல்லவா! குட்டு என்பது தமிழ்ச்சொல் அல்ல. இந்த கன்னடச் சொல்லுக்கு ரகசியம், மர்மம், புதிர் என்று பொருள். மறைத்து வைத்த விஷயம் வெளிப்படும் போது குட்டு உடைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. வியாசர் பாரதக்கதையைச் சொல்லச்சொல்ல விநாயகர் எழுதினார். அவரது எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத வியாசர், இடையிடையே சிக்கலான ஸ்லோகங்களைச் சொல்லி விநாயகரை யோசனையில் ஆழ்த்தினார். அந்த ஸ்லோகங்களுக்கு பாரத குட்டு என்று பெயர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி அடுத்த ஸ்லோகங்களைச் சொல்ல தன்னைத் தயார்படுத்திக் கொள்வார் வியாசர். விநாயகனே! நான் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்திருக்கலாம். அந்தக் குட்டு (ரகசியம்) உடையாமல், என் தன்மானத்தைக் காப்பாற்று, என்ற பொருளிலும் தலையில் குட்டி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள்.

முதன் முதலில் தோப்புக்கரணம் போட்டவர்
தோப்புக்கரணம் என்ற சொல் தோர்பிகரணம் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து ஏற்பட்டது. தமிழில் ஒன்றைக் குறிப்பதை ஒருமை என்றும், ஒன்றுக்கு மேற்பட்டதை பன்மை என்றும் கூறுகிறோம். சமஸ்கிருதத்தில் ஏகவசனம், த்வி வசனம், பஹு வசனம் என்று மூன்றாக இதைப் பிரித்துள்ளனர். ஏகவசனம் என்பது ஒன்று. த்வி வசனம் என்பது இரண்டு. பஹு வசனம் என்றால் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பது. கை என்பதை சமஸ்கிருதத்தில் தோஸ் என்பர். தோஷா என்றால் ஒரு கை. தோர்ப்யாம் என்றால் இரண்டு கைகள். மனிதனுக்கு மட்டுமே இரண்டு கைகள். தெய்வங்கள், தேவர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் உண்டு. அப்படியானால், தோப்புக்கரணத்தை தோர்ப்யாம் கர்ணம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், தோர்பி என்ற சொல்லுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் என்று பொருள். அப்படியானால், நான்கு கைகளையுடைய திருமால் தான் முதன்முதலில் தன் மருமகனான விநாயகருக்கு காதுகளை மாற்றிப்பிடித்து தோப்புக்கரணம் போட்டு வேடிக்கை காட்டி சிரிக்க வைத்தார்.

நமக்கு கிடைத்த பாக்கியம்
கலாசாரத்தில் பாஷை மிக முக்யம். அதை வைத்துத்தானே சமய சம்பந்தமான நூல்கள், அறிவை வளர்த்துக் கொள்ளும் நூல்கள், மனசுக்கு விருப்பமான மற்ற கதை, கவிதை, காவ்யம் எல்லாமே? அப்படியிருக்கப்பட்ட தமிழ் பாஷைக்கு விக்னேச்வரர் ரொம்ப முக்யம். எது ஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு சாமான் லிஸ்ட் எழுதினால் கூட சரி, முதலில் என்ன பண்ணுகிறோம்? பிள்ளையார்சுழி என்று தானே போடுகிறோம். எடுத்துக் கொண்ட கார்யம் சுழித்துப் போகாமல் ரக்ஷித்துக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார்சுழி! பிள்ளையார்சுழி என்ற அர்த்தத்தில், ஸம்ஸ்கிருதம் உள்பட இந்ததேச பாஷைகளில் வேறே எதிலும் இப்படி மங்களாரம்ப ஸிம்பலாக ஒன்று இல்லை. இது நம் தமிழ்மொழியின் பாக்யம். பிள்ளையாருக்கென்று ஏகப்பட்ட கோயில்கள் கட்டி வைத்திருப்பதும் தமிழ்நாட்டில் தான். வேறு எந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு பிள்ளையாருக்குத் தான் மூலைக்கு மூலைகோயில்! காணபத்யத்துக்கு (விநாயகர் வழிபாட்டிற்கு) மகாராஷ்டிரம் தான் ராஜதானி(தலைநகர்) என்று சொல்வார்கள். ஆனால், கோயில் கணக்குப் பார்த்தால் அது, தமிழ் நாட்டுக்கு ரொம்பவும் பின்தங்கி எங்கேயோ தான் நிற்கும். -காஞ்சிபெரியவர் 

விநாயகரின் திருமணம்
பிரம்ம தேவனுக்கு புத்தி, சித்தி இரண்டு புத்திரிகள் இருந்தனர். பிரம்ம தேவர் அவர்களை விநாயகருக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். உடனே அவர் நாரதரைக் கூப்பிட்டு விஷயத்தைக் கூறி விநாயகரிடம் தூது அனுப்பினார். நாரதரும் விநாயகரிடம் சென்று தன் இயல்பான கலகமூட்டும் வேலையைச் செய்யாமல் ஒழுங்காக வந்த விஷயத்தைக் கூறினார். பிள்ளையாரும் மணமுடிக்க சம்மதித்தார். நாரதர் நேராகச் சென்று விஷயத்தை பிரம்மனிடம் கூறிவிட்டார். பிரம்மனும் முறைப்படி சிவபெருமானையும் பார்வதியையும் பார்த்து விஷயத்தைக் கூறவே அவர்களும் தங்களது சம்மதத்தைத் தெரிவித்து விட்டனர். திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. விஸ்வகர்மா (தேவதச்சன்) திருமணத்துக்கு என்று சொர்க்க லோகத்தை விட சிறப்பான ஒரு நகரத்தை நிர்மாணித்தான். திருமணத்தைக் காண அனைத்து லோகங்களிலிருந்தும் கூட்டம் கூடிவிட்டது. அவர்களின் பசியைத் தணிக்க காமதேனு அவர்களுக்கு உணவு அளித்துக் கொண்டே இருந்தது. திருமண நாளும் வந்தது. சித்திக்கு லட்சுமி தேவியும், புத்திக்கு இந்திராணியும் அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். நூறாயிரம் கோடி தேவர்கள் மந்திரம் முழங்க சித்தி, புத்தி இருவரின் கழுத்திலும் விநாயகர் மங்கள நாண் பூட்டினார்.

விநாயகரின் பெண்வடிவம்
விநாயகரின் பெண் வடிவமே விநாயகி. யானைமுகம், கழுத்துக்குக் கீழ் பெண் வடிவம், 12 கரங்கள், 3 கண்கள் கொண்டு, தலையில் பிறைசூடி, நாகாபரணம் தரித்துக் காணப்படும் இந்த விநாயகியை வணங்கி வந்தால் கலை ஞானம், அறிவு ஆகியவைகள் கிட்டும்.

பூமியில் சிறந்த பூ எந்த பூ?

விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ. இதனை அர்க்க புஷ்பம் என்பர். அர்க் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போலவே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது. சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயருண்டு. சூரியனார் கோயிலின் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடி தான். எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவித்தால் விக்னங்கள் (தடைகள்) நீங்குவதோடு சூரியனின் அருளால் ஆத்மபலம், ஆரோக்கியம் உண்டாகும்.

வீட்டில் பிள்ளையார் சிலை இருக்கிறதா?

பெரும்பாலான வீடுகளில் விநாயகர் சிலை வைத்து உள்ளனர். அது அளவில் பெரிதோ, சிறிதோ...அதுபற்றி கவலையில்லை. அந்தப் பிள்ளையாருக்கு கட்டாயம் ஏதாவது ஒரு நைவேத்யம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பழமாவது வைக்க வேண்டும். சதுர்த்தி திதிகளில் முடிந்தவரை மோதகம், கோதுமை அப்பம், பழவகைகள், பொரி ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். அப்பா சிவனுக்கு அபிஷேகம் என்றால் பிரியம். மாமா திருமாலுக்கு அலங்காரம் என்றால் பிரியம். அதுபோல, விநாயகருக்கு நைவேத்யம் என்றால் பிரியம். பானை வயிற்றோனுக்கு பசித்துக் கொண்டே இருக்குமல்லவா! அவர் போஜனப்பிரியர் என்பதற்கு அவ்வையாரும், அருணகிரியாரும் சான்று கூறியுள்ளனர். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்று ஆரம்பிக்கிறாள் அவ்வையார். இவையெல்லாம் கலந்த நைவேத்யத்தை உனக்கு நான் தருகிறேன். எனக்கு நீ முத்தமிழ் அறிவையும் தா, என வேண்டுகிறாள். தமிழில் அதிகமார்க் பெற விரும்பும் மாணவர்கள் இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். அருணகிரியார் தனது பாடலில் கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி என்று விநாயகருக்கு பிடித்த நைவேத்யத்துடன் தான் திருப்புகழை ஆரம்பிக்கிறார்.

வலம் வந்தால் பலம்: குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் இடுவது, சிதறுகாய் உடைப்பது, எருக்கம்பூ மாலைஅணிவது, அருகம்புல்லால் அர்ச்சிப்பது, கொழுக்கட்டை படைப்பது அனைத்தும் விநாயகருக்கு உகந்த வழிபாடுகள். ஆனால், இதையெல்லாம் விட மிக எளிய வழிபாடு விநாயகரை வலம் வருவதாகும். அவரே இதற்கு உதாரணமாக நடந்து பலன் பெற்றார். அம்மையப்பரே உலகம்! உலகமே அம்மையப்பர்! என்று சொல்லி பெற்றோரை வலம் வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். குறைந்தபட்சம் மூன்றுமுறை விநாயகரை வலம் வரவேண்டும். 21முறை, 108முறை விநாயக மந்திரமாகிய ஓம் சக்தி விநாயக நம என்று ஜெபித்தபடி வலம் வந்தால் தேகபலம், புத்திபலம், பணபலம் என்று வாழ்விற்குத் தேவையான எல்லா பலங்களையும் பெற்று வாழலாம்.

ஜ்யேஷ்டராஜ சுவாமி: ரிக்வேதம் பழமையானது. இதில், விநாயகரைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. வேதகாலம் முதல் வழிபடப்பட்டு வரும் பழமையான கடவுள் இவர் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. ரிக்வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில் கணபதீம் என்ற குறிப்பு உள்ளது. இப்பெயரோடு ஜ்யேஷ்ட ராஜன் என்ற பெயரும் இவருக்குண்டு. இதற்கு முதலில் பிறந்தவன் என்பது பொருள். பார்க்கவபுராணத்தில் லீலா காண்டத்தில் விநாயகரின் அவதாரங்களும் அவருடைய திருவிளையாடல்களும் கூறப்பட்டுள்ளன. கடவுள் மறுப்பு கொள்கை உடைய புத்த, சமண கோயில்களிலும் இவருக்கு இடமுண்டு. தைத்ரீய ஆரண்யகம் இவரை தந்தி என்ற சொல்லால் அழைக்கிறது. தந்தோ தந்தி ப்ரசோதயாத் என்றே காயத்ரி மந்திரம் விநாயகரை குறிப்பிடுவதைக் காணலாம்.

உலகின் முதல் குமாஸ்தா: மகாபாரதக்கதையை வியாசர் சொல்ல விநாயகர் எழுதினார். பழங்காலத்தில் ஒரு நூலை உருவாக்கும் கிரந்தகர்த்தா ஒருவராகவும், அதனை எழுதுபவர் வேறொருவராகவும் இருப்பதுண்டு. ஓங்கார வடிவமாகவும், உலக இயக்கத்திற்கு காரணமாகவும், சிவசக்தி தம்பதியரின் மூத்த பிள்ளையாகவும் விளங்கிய விநாயகர் தன் நிலையில் இருந்து இறங்கி ஒரு குமாஸ்தாவைப் போல வியாசர் முன் அமர்ந்து, பாரதக்கதையை எழுதினார். தன் யானை முகத்துக்கு அழகு சேர்க்கும் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி கொண்டார். மகாபாரதம் ஒரு தர்ம காவியம். உலகில் தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக இந்த தியாகத்தைச் செய்தார். அலுக்காமல் சலிக்காமல் பாரதத்தின் லட்சம் ஸ்லோகங்களையும் எழுதி முடித்தார். 

குழந்தைகளின் தெய்வம்
வீதியில் மணியோசை கேட்டால், ஆஹா! யானை வருது! என்று பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் ஓடுவர். யானையின் கம்பீரமான தோற்றம், வளைந்த துதிக்கை, நீண்ட பெரிய காதுகள் காண்பவரை ஈர்க்கும். விநாயகருக்கு வெள்ளை மனமும், பிள்ளை குணமும் மிகவும் பிடிக்கும். குழந்தை முதல் பெரியவர் வரை யாவரும் விரும்பும் ஒரே தெய்வம் இவர். படிக்கும் குழந்தைகளின் இஷ்ட தெய்வமாகவும் விளங்குகிறார். தேர்வை தடையின்றி எழுத உதவுபவர். குழந்தைகளுக்கு பிடித்த மோதகத்தை (கொழுக்கட்டை) விரும்பிச் சுவைப்பவர்.

பத்தடி உயர கடுகு! இருபதடி உயர கடலை!
அணுவுக்கு அணுவாகவும், அகிலாண்ட கோடியாகவும் இருப்பவர் விநாயகர். விநாயகர் அகவலில் அவ்வையார், அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்று அவரது தன்மையை குறிப்பிடுகிறார். விநாயகரின் உருவம் மிகப்பெரிதாக இருப்பதால்,மகாகாய என்ற பெயர் அவருக்கு உண்டு. பெரிய உருவத்தைக் காட்டும் விதத்தில் கர்நாடக மாநிலம் ஹம்பியில் இரண்டு விநாயகர் சிலைகள் உள்ளன. ஒருசிலை பத்தடி உயரம் கொண்டது. இதை சசிவுகல்லு என்பர். கடுகளவு ஆனவர் என்று பொருள். இருபது அடி உயரம் கொண்ட மற்றொரு விநாயகருக்கு கடலைக்கல்லு என பெயர். கடலை பருப்பு அளவுகொண்டவர் என்று பொருள். விநாயகரின் நிஜவடிவத்தோடு ஒப்பிட்டால், இச்சிலைகள் கடுகாகவும், கடலையாகவும் இருக்கும் என்று நமக்கு இந்தச்சிலைகள் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இவர் இருக்கும் இடம் மிக உயரம்
உலகிலேயே மிக உயரத்தில் இருக்கும் பிள்ளையார் எங்கிருக்கிறார் தெரியுமா? இமயமலைத் தொடரில் லடாக் பகுதியில் இருக்கும் லே என்ற இடத்தில் தான். லே லடாக் பகுதியில் உள்ளது. இங்கு பணியாற்றிய ஒரு குடும்பத்தினரின் கனவில் யானை அடிக்கடி துரத்துவது போல இருந்தது. ஒருமுறை அவர்கள் அங்குள்ள ஸபித்துக் காளிமாதா கோயிலுக்கு சென்றபோது, பிள்ளையாருக்கு கோயில் கட்டும் எண்ணம் உதித்தது. அதன்பின், யானை கனவில் துரத்துவது நின்றுவிட்டது. பின் காஞ்சிப் பெரியவரின் ஆசி பெற்று கோயில் திருப்பணியைத் துவக்கினர். கட்டுமானப் பொருட்களும், விக்ரஹமும் சென்னையில் இருந்து சென்றது. கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி உயரம் உள்ள இக்கோயிலை ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டுமே தரிசிக்க முடியும். 2006 ஆகஸ்ட் 4ல் இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கமிஷன் கணபதி
மதுரையிலிருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் அப்பன் திருப்பதி கிராமத்திலுள்ள விநாயகர் தரகு விநாயகர் எனப்படுகிறார். இப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்கள் தங்கள் விளைநிலங்களில், விளைச்சல் சிறந்த இருந்தால் ஒரு குறிப்பிட்ட அளவு தானியத்தை கமிஷனாக (தரகு) தருவதாக வேண்டிச் செல்வர். விளைச்சலுக்கு பின் தாங்கள் வேண்டியபடி இங்கு வந்து காணிக்கை செலுத்துவர்.

பாலச்சந்தருக்கு அர்த்தம் தெரியுமா?
பாலச்சந்தர் என்ற பெயருக்கு அர்த்தம் கேட்டால், குழந்தை சந்திரன் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், உண்மையில் இந்தப் பெயருக்குரியவர் விநாயகர். விநாயகருக்குரிய பதினாறு நாமங்களில் (பெயர்கள்) பதினோராவது நாமமாக வருவது பாலச்சந்தர். வடமொழியில் ப வரிசையில் நான்குவித எழுத்துகள் உண்டு. இதில் நான்காவதாக வரும் பவில் தொடங்குவது பாலச்சந்தர். இதற்கு நெற்றியில் நிலாவைச் சூடியவர் என்று பொருள். விநாயகர் பார்வதியில் இருந்து தோன்றியவர் என்றாலும், தந்தையின் குணாதிசயமும் வேண்டும் என்பதற்காக, சிவனைப் போல் நெற்றியில் பிறைநிலா சூடியுள்ளார்.

தடங்கல் நீக்கும் மந்திரம்
பழங்காலத்தில் சுவடிகள் எழுதத் துவங்கும்போது பிள்ளையார்சுழிக்குப் பதிலாக விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று எழுதினர். இவ்வாறு சொல்லியோ அல்லது எழுதியோ தொடங்கும் பணிகள் விநாயகர் அருளால் தடங்கலின்றி விரைவில் நிறைவேறும் என்பர்.

வலம்புரி விநாயகருக்கு என்ன விசேஷம்?
விநாயகரின் தும்பிக்கை இடதுபக்கமாகத்தான் வளைந்திருக்கும். ஒரு சில இடங்களில் மட்டுமே வலப்புறமாக வளைந்த வலம்புரி விநாயகரைத் தரிசிக்கலாம். கும்பகோணம் அருகிலுள்ள ஒரு தலத்துக்கே திருவலஞ்சுழி என்ற பெயர் இருக்கிறது. இங்கு வலம்புரி விநாயகர் சந்நிதி உள்ளது. வலம்புரி விநாயகர் வடிவத்தில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இந்த வளைவு ஓம் என்ற மந்திரத்தை ஒத்துள்ளது. இடதுபக்கமாக தும்பிக்கை சுழிந்திருந்தால் ஓம் என்ற பிரணவ வடிவம் கிடைக்காது. வலம்புரிக்கு இத்தகைய சிறப்பு உண்டு. அவரது வாயின் வலதுஓரம் ஆரம்பித்து, கன்னம், மத்தகம் (சிரசு) ஆகியவற்றை சுற்றிக் கொண்டு, இடதுபக்கம் தும்பிக்கை வழியாக இறங்கி, அதன் சுழிந்த முடிவுக்கு வருவது ஓம் என்பதை ஒத்திருக்கும். இதனால் தான் வலம்புரி விநாயகருக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

தொந்திக்கு இன்னொரு வார்த்தை
டுண்டி என்ற சொல்லுக்கு தொந்திவயிறு என்று பொருள். காசியில் இருக்கும் விநாயகரை டுண்டி ராஜகணபதி என்பர். வடக்கே டுண்டி என்ற சொல் போல, தெற்கே ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்ற ஊர் இருக்கிறது. இங்கிருக்கும் விநாயகர் ராமரால் வழிபாடு செய்யப்பட்டவர். இலங்கைக்கு தொண்டியிலிருந்து பாலம் கட்ட திட்டமிட்ட ராமர், முதலில் விநாயகரை பூஜித்தார். அவருக்கு காட்சியளித்த விநாயகர் தொண்டியில் இருந்து கட்டாமல் இன்னும் தெற்காக சேதுக்கரையில் கட்டினால் இலங்கை கோட்டையின் வாசலை அடையலாம் என்று யோசனை வழங்கினார். வாழ்வில் வரும் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கும் வழி காட்டியாக தொண்டிவிநாயகர் இருக்கிறார். வெயில், மழை என பாராமல் மனைவியை தேடி அலைந்து திரிந்த சிரமப்பட்ட மாமாவின்(திருமாலின் அம்சமான ராமர்) மீது கொண்ட அன்பின் காரணமாக, இங்கு விநாயகரும் கூரை இல்லாமல் வெட்டவெளியில் அமர்ந்திருப்பதாக ஐதீகம். இந்த தொண்டிவிநாயகர் மீது ஆதிசங்கரர், கணேச பஞ்ச ரத்தினம் என்னும் பாடலைப் பாடினார்.

பெண்களுக்கு துன்பம் செய்தால்....
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகரை பிரம்மஹத்தி விநாயகர் என்பர். இந்த உலகத்திலேயே கொடிய பாவங்கள் எனக்கருதப்படுபவை பசுவையும், பிராமணர்களையும், சாதுக்களையும் கொலை செய்வது, நம்பிக்கை துரோகம் செய்வது, பெண்களை ஏமாற்றியோ, வலுக்கட்டாயமாகவோ கெடுப்பது ஆகியவை. இந்தச் செயல்களைச் செய்தோருக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் பாவம் தீராது. அவர்களது சந்ததியும் நன்றாக இருக்காது. இத்தகைய கொடிய பாவங்களுக்கும் தீர்வளிக்கிறார் பிரம்மஹத்தி விநாயகர். எங்கள் முன்னோரில் யாரோ செய்த தவறுக்காக எங்களை சோதிக்காதே என இவரிடம் மனமுருகி கேட்டு பிரார்த்திக்கலாம். முன்னோர்களால் பாதிக்கப் பட்ட குடும்பங்களின் வாரிசு இருந்தால் அவர்களுக்கு வேண்டிய உதவி செய்யலாம். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தோஷம் விலகும்.

ஒலி வடிவானவர்: ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள்; நவம் என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம், ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.

விநாயகர் சதுர்த்தியை அறிமுகப்படுத்தியவர்: விநாயகர் சதுர்த்தி விழா ஆதிகாலம் முதல் இருந்துவந்தாலும், அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர்தான். 1893-ல் விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பூனாவில் அமைந்துள்ள தகடுசேத் கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா முதன்முதலாக விசேஷமாக கொண்டாடப்பட்டது.

விநாயகரின் பஞ்ச பூதத் தலங்கள்: பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐந்து தலங்களில் எழுந்தருளியுள்ளார் விநாயகர். காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலிலுள்ள விநாயகர் நிலத்தையும், திருவானைக்கா விநாயகர் நீரையும், திருவண்ணாமலை விநாயகர் நெருப்பையும், திருக்காளத்தி பாதாள விநாயகர் வாயுவையும், தில்லை சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர் ஆகாயத்தையும் குறிக்கின்றனர். இவர்களை வழிபட ஐம்பூதங்களால் ஏற்படும் அல்லல் விலகும்.

 

நன்றி - இணையம்

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி நுணா .

Share this post


Link to post
Share on other sites

வலம்புரி விநாயகருக்கு என்ன விசேஷம்? விநாயகரின் தும்பிக்கை இடதுபக்கமாகத்தான் வளைந்திருக்கும். ஒரு சில இடங்களில் மட்டுமே வலப்புறமாக வளைந்த வலம்புரி விநாயகரைத் தரிசிக்கலாம். கும்பகோணம் அருகிலுள்ள ஒரு தலத்துக்கே திருவலஞ்சுழி என்ற பெயர் இருக்கிறது. இங்கு வலம்புரி விநாயகர் சந்நிதி உள்ளது. வலம்புரி விநாயகர் வடிவத்தில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இந்த வளைவு ஓம் என்ற மந்திரத்தை ஒத்துள்ளது. இடதுபக்கமாக தும்பிக்கை சுழிந்திருந்தால் ஓம் என்ற பிரணவ வடிவம் கிடைக்காது. வலம்புரிக்கு இத்தகைய சிறப்பு உண்டு. அவரது வாயின் வலதுஓரம் ஆரம்பித்து, கன்னம், மத்தகம் (சிரசு) ஆகியவற்றை சுற்றிக் கொண்டு, இடதுபக்கம் தும்பிக்கை வழியாக இறங்கி, அதன் சுழிந்த முடிவுக்கு வருவது ஓம் என்பதை ஒத்திருக்கும். இதனால் தான் வலம்புரி விநாயகருக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
ஆகவே வினாயகர் ஒரு சுழியன்.......

இங்கிருக்கும் விநாயகர் ராமரால் வழிபாடு செய்யப்பட்டவர். இலங்கைக்கு தொண்டியிலிருந்து பாலம் கட்ட திட்டமிட்ட ராமர், முதலில் விநாயகரை பூஜித்தார். அவருக்கு காட்சியளித்த விநாயகர் தொண்டியில் இருந்து கட்டாமல் இன்னும் தெற்காக சேதுக்கரையில் கட்டினால் இலங்கை கோட்டையின் வாசலை அடையலாம் என்று யோசனை வழங்கினார்.
ஆகவே வினாயகர் ஒரு சிறந்த இராணுவ புலானாய்வு தளபதி...அதாவது தல......

அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர்தான்
ஆகவே வினாயகர் சர்வதேசிய நாயகன்......காரணம் புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்தேசியம் தெரியாத சிறுவர்கள் உண்டு ஆனால் வினாயசதூர்த்தி தெரியாத இந்துசிறுவர்கள் இல்லை..........மொத்தத்தில் வினாயர் ஒரு உலகநாயகன்.....இணைப்பிற்கு thanks

Share this post


Link to post
Share on other sites

முந்திமுதல் விநாயகனின் அருமைபெருமைகளை இணைத்த தம்பி நுணாவிலுக்கு நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites