Jump to content

இனங்களும் இனக் கொள்கையும் - மி.நெஸ்தூர்ஹ்


Recommended Posts

“உயர்ந்த” இனங்கள் “செயலூக்கம் மிகுந்தவை” என்றும், வரலாற்றில் தலைமைப் பாத்திரம் வகிப்பதாகவும், அடிப்பட்டு இருப்பதையே விதியாகக் கொண்ட “தாழ்ந்த” “செயலூக்கம் அற்ற” இனங்களின் அடிமை உழைப்பைப் பயன்படுத்தி, பண்பாடு, நாகரிகம் அனைத்தையும் அவையே நிறுவியதாகவும் இனக் கொள்கையினர் வலிந்து உரைக்கிறார்கள்.

பெரும்பாலான இனக் கொள்கையினரின் கருத்துப்படி, சமூகத்தின் வளர்ச்சி இனச் சிறப்புத் தன்மைகள் மீது பாதிப்பு நிகழ்த்துவது இல்லை.

மாறாக, இனச் சிறப்புத் தன்மைகளே மனித குலத்தின் சமுதாயக் குழுக்களது முன்னேற்றத்திற்கோ பிற்போக்கிற்கோ காரணம் ஆகின்றன.

இவ்வாறு, மனித இனங்களின் உடலியல், உளவியல் சமத்துவமின்மை பற்றிய ஆதாரமற்ற போதனை, வரலாற்று வளர்ச்சி குறித்த, விஞ்ஞானத்துக்கு முரணான “இனக் கொள்கைச் சித்தாந்தமாக” உரு எடுத்துவிடுகிறது.”

1969ல் மாஸ்கோவில் நடந்த கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச மகாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: “மக்கள் இனங்களைத் தனிப் பிரிப்பதற்காகவும் தனது ஆதிபத்தியத்தை நிலை நிறுத்தி வைத்துக் கொள்வதற்காகவும் ஏகாதிபத்தியம் இனக் கொள்கையைப் பயன்படுத்துகிறது.

விரிவான மக்கள் திரள்கள் இனக் கொள்கையை மறுத்து ஒதுக்குகின்றன. அதற்கு எதிரான செயல்முறைப் போராட்டத்தில் இவை ஈர்க்கப்படலாம். இனக் கொள்கையை வேரறுப்பது ஏகாதிபத்தியம் முழுவதற்கும், அதன் கொள்கைவாத அஸ்திவாரங்களுக்கும் எதிரான போராட்டத்துடன் நெருக்கமாக இணைந்திருக்கிறது என்பதைத் தங்கள் போராட்ட நடவடிக்கைகளின் போது மக்கள் புரிந்து கொள்ளலாம்.”

இனக் கொள்கையினர் வரலாற்றை மட்டுமீறி உயிரியல் சார்பு உள்ளது ஆக்குகிறார்கள், “இனம்” , “நாட்டினம்” என்ற சொற்களை ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள்.

உண்மையிலோ, “இனம்”, என்ற கருதுகோள் உயிரியலைச் சேர்ந்தது. “நாட்டினம்” என்ற கருதுகோளோ, சமூகம் பற்றிய விஞ்ஞானத் துறையைச் சேர்ந்தது. இவற்றைக் கலப்பவர்கள் படு மோசமான தவறு செய்கிறார்கள்.

பண்பாடு ஏதோ ஓர் “உயர்ந்த” இனத்தால் மட்டுமே தோற்று விக்கப்படுகிறது என்ற கருத்தை அறவே மறுக்கும் ஏராளமான மெய் விவரங்களை மானிட இயல் நமக்குத் தருகிறது.

பண்பாட்டு வளர்ச்சியின் அதிக உயர் தரம் மூளையின் பெருத்த அளவையே பொறுத்திருப்பதாக இனக் கொள்கையினர் வாதிப்பது தெரிந்ததே. இந்த வாதத்தை நம்பகமான விதத்தில் நிராகரிக்கிறது பண்டை எகிப்தியர்களின் மிக உயர்ந்த நாகரிகம்.

ஷ்மித் தந்துள்ள விவரங்களின் படி எகிப்திய மண்டையோடுகளின் கபாலங்களுடைய சராசரி அளவு ஆண்களுக்கு 1,394 கன சென்டிமீட்டரும் பெண்களுக்கு 1,257 கன சென்டிமீட்டருமே இருந்தது. எனவே மூளை இன்னும் சிறியதாய் இருந்திருக்கும், பண்பாட்டில் தாழ்ந்த சில அண்டை மக்களுடைய மூளையின் சராசரி அளவைவிடக் குறைவாகவே இருந்திருக்கும்.

பண்பாட்டுத் தரத்துக்கும் மண்டையோட்டின் வடிவத்துக்கும் தொடர்பு இருப்பதையும் மானிட இயல் விவரங்கள் மறுத்து ஒதுக்குகின்றன.

பண்பாட்டுக்கும், இனத்துக்கும் உள்ள சார்பு இன்மையை ஜெர்மானியர்களின் உதாரணம் மிகத் துலக்கமாகக் காட்டுகிறது. அவர்களுடைய முன்னோர், ரோம சாம்ராஜ்யம் தழைத்து ஓங்கிய காலத்தில் காட்டு மிராண்டிகளாய் இருந்தார்கள்.

பிற்பாடு, அதிகச் சாதகமான நிலைமைகள் வாய்த்ததும் ஜெர்மானியர்கள் உயர்ந்த பண்பாட்டுத் தரத்துக்கு ஏற்றம் அடைந்தார்கள். எனவே, பண்பாடு ஒரு மக்கள் குழு எந்த இனத்தைச் சேர்ந்தது என்பதைப் பொறுத்திருக்கவில்லை, சமூக பொருளாதாரக் காரணிகளாலேயே வரையறுக்கப்படுகிறது. விலங்குத் தன்மையிலிருந்து காட்டுமிராண்டித் தனத்துக்கும் பின்பு மேல் நிலைகளுக்கும் மனித குலத்தின் வளர்ச்சி நிகழ்முறையில் இன அடையாளங்கள் எவ்வித முக்கியத்துவமும் பெற்றிருக்கவில்லை.

இனக் கொள்கையினர் தங்கள் தவறான கருத்துக்களை விடாப்பிடியாக வலியுறுத்துவது ஏன்? இதற்கு விடை எளிது. “உயர்ந்த” இனங்களையும் “தாழ்ந்த” இனங்களையும், ஓர் இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்த வேறு ஓர் இனத்துக்கு உரிமை உண்டு என்பதையும் பற்றிய போலிச் சித்தாந்தத்தின் வாயிலாக அவர்கள் நாட்டினங்களுக்கு இடையே போர்கள் முறையானவை என்று காட்ட முயல்கிறார்கள்.

இந்தப் போலிச் சித்தாந்தத்தை ஏகாதிபத்தியக் கொள்கைக்கு மறைப்பாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

மனித சமூகத்தின் நிலைமைகளில் நிகழும் வர்க்கப் போராட்டத்தை விலங்குலகில் நிகழும் போராட்டத்துக்கு ஒப்பானதாகக் காட்ட இனக் கொள்கையினர் சமூக-டார்வினிஸப் பிற்போக்குப் போதனையைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த போதனை 19ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி அடைந்தது. விலங்குலகில் நிலவும் விதிகளே தற்கால மனித சமுதாயத்திலும் அமலில் இருக்கின்றன என்கிறது இந்த போதனை. அதாவது, உயிர் பிழைத்து இருப்பதற்கு விலங்குத்தரமான போராட்டம், அதிகத் தகவமைப்பு பெற்றவை பிழைத்து இருப்பதும் குறைந்த தகவமைப்பு பெற்றவை செத்து ஒழிவதும், இவையே மனித சமுதாயத்திலும் ஆட்சி செலுத்தும் விதிகளாம். இயற்கைத் தேர்வின் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரியல் சமமின்மையின் விளைவாகவே சமூகம் வர்க்கங்களாகப் பிரிவுபட்டிருக்கிறது என்று சமூக-டார்வினிஸ்டுகளோடு சேர்ந்து இனக் கொள்கையினரும் வலிந்து உரைக்கிறார்கள். இவ்வாறு, முதலாளித்துவ சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை இயற்கை விதிகளின்படி முறையானவை என்று காட்ட இனக் கொள்கை முயல்கிறது.

தனது வர்க்க ஆதிபத்தியத்தின் பொருட்டு பூர்ஷ்வாக்கள் நடத்தும் போராட்டத்தில் அவர்களுடைய கொள்கைவாத ஆயுதமாகப் பயன்படுகிறது இது.

ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த இனச் சிறப்புத் தன்மைகள் கொண்டிருப்பதாக சமூக-டார்வினிஸக் கருத்தை விரிவுபடுத்துகிறார்கள் இனக் கொள்கையினர். பணக்காரர்கள் பெரும்பாலும் நீள் மண்டையினர் என்றும் ஏழைகள் நடுத்தர அல்லது குட்டை மண்டை உடையவர்கள் என்றும் இந்தச் சித்தாந்தத்தைப் போற்றுபவர்கள் எண்ணுகிறார்கள்.

இந்த வலிந்துரை முற்றிலும் ஆதாரம் அற்றது என்பதைத் தெரிந்து கொள்ள மெய் விவரங்களைக் கவனித்தாலே போதும். உதாரணமாக, சுவீடனில் இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டவர்கள் பரிசோதிக்கப்பட்ட போது, நல்ல வாழ்க்கை வசதிகள் உள்ளவர்கள் (பூர்ஷ்வா வர்க்கத்தினர்), நல்ல வாழ்க்கை வசதிகள் இல்லாதவர்கள் (தொழிலாளர், குடியானவர் வர்க்கத்தினர்), இரு சாராருடையவும் தலைச் சுட்டு எண் 77.0 என்று நிலைநாட்டப்பட்டது.

இந்தப் பரிசோதனை விவரங்களின்படி, நல்ல வாழ்க்கை வசதிகள் பெற்றவர்களுடைய சராசரி உயரம் 173.1 சென்டிமீட்டர், வசதிகள் அற்றவர்களது சராசரி உயரமோ 171.9 சென்டிமீட்டர்தான். எனினும் உடல் நீளம் இனத்துடன் எவ்விதத் தொடர்பும் உள்ளது. அல்ல. இந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு வகையான ஊட்டம்-முதல் குழுவினர் நல்ல ஊட்டமும் இரண்டாவது குழுவினர் மோசமான ஊட்டமும் - பெற்றதையே அது காட்டுகிறது. இங்கு காட்டப்பட்ட விவரங்களிலிருந்து, “இனம்”, “வர்க்கம்” என்னும் கருது கோள்களை ஒன்று கலப்பது கூடாது என்பது தெளிவாகிறது.

மனித சமூக வளர்ச்சியின் வரலாற்றை விளக்கும் போது எதார்த்தமான வர்க்கப் போராட்டத்தின் இடத்தில் கற்பனையான “இனப் போராட்டத்தை” உபயோகிக்கக் கூடாது.

“இனம்” என்னும் உயிரியல் கருதுகோளையும் “நாட்டினம்”, “வர்க்கம்” என்ற சமுதாயக் கருதுகோள்களையும் முறை இன்றி, வேண்டுமென்றே கலந்து குழப்புவது இனக் கொள்கைக்கு இயல்பானது என்பதைக் காண்கிறோம்.

மக்கள் இனங்களுக்கு இடையே போரை நியாயப்படுத்த வேண்டி வரும் போது நாட்டினத்தையும், சொந்த நாட்டிற்குள் சுரண்டலை முறையானது என்று காட்டத் தேவைப்படும் போது வர்க்கத்தையும் இனம் என்று குறிப்பிடும் இந்த நேர்மையின்மை இனக் கொள்கை விஞ்ஞானத்தன்மை அற்றது, பிற்போக்கானது என்பதை மிகவும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஆளும் வர்க்கத்தினராகிய சுரண்டுவோர்களின் சமுதாயக் கட்டளையை நிறைவேற்றும் போது இனக் கொள்கையினர் உண்மையை விரும்பியபடி எல்லாம் திரிக்கிறார்கள்.

மொழிகள் இனத் தன்மை கொண்டவை என்றும் உளப்பாங்கு இன ஆன்மாவிலிருந்து பிறந்தது என்றும் கூறும் அளவுக்கு அவர்கள் போய்விடுவார்கள்.

நன்றி - தமிழ்ச்சான்றோர் பேரவை செய்திமடல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.