Jump to content

அக்கா நீங்களுமா....?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா நீங்களுமா....?

Jul 3, 2013
 

வாழ்வு வசமாச்சுதென்று பாடிச் சென்றான் ஒருவன்

நாசமாப் போச்சுதென்கிறேன் நான்

இருதலைக் கொள்ளியாய் எம் தேசம்

நம்பிக்கைகள் நரம்பறுந்து போயின எனக்கு

ஊமைக்கனவுகள் தொடர்கின்றன.

வெள்ளை மாளிகையையும் செங்கோட்டையையும் நம்பி எங்கள் வாழ்வு

துக்கத்திலும் ஏக்கத்திலுமாய் கழிகிறது இரவுகள்

வெடியோசைகள் கேட்கவில்லை

விசும்பல்கள் தொடர்கின்றன.

அழுதாலும் புனர்வாழ்வாம்

நிமிர்ந்து நிற்றல் குற்றமென்றா சொல்கிறார்கள்

உறைந்து கிடந்த ஊத்தைகள் எல்லாம் உன்மத்தம் கொண்டு ஆடுகின்றன.

சாதிச் சங்கங்கள் பிரதேசப் பெயர்க் குழுக்கள்

மூலை முடுக்கெங்கும் வக்கிரங்கள்

என்ன இழிவடா எங்கள் இனத்துக்கு

அன்று முளாசியெரிந்த நெருப்பில்

இந்தக்குப்பைகள் எரியாமல் போன மாயம் என்ன?

பாதிக்கிணறும் கடக்காமல் நடுக்கிணற்றில் நின்று அல்லாடும் வாழ்க்கை

அக்கா...!

நேர்த்தியாய் ஒப்பனை செய்து

கச்சிதமாய் கதை வசனம் எழுதி

நடிப்பிக்கிறார்கள்

நாடகத்தில் மெய் மறந்தால் அழிவு யாருக்கு அக்கா .....!

பயணங்கள் பாதி வழியில்

நடக்கத் துவங்கவேண்டாமா அக்கா

நிலவு பார்க்கும் ஆசையில் இரவெல்லாம் விழித்திருந்தோம்

இழவுதான் வந்தது நிலவேதும்; வரவில்லை

அக்கா

தலைவாரிப் பூச்சூடியுள்ளோம்தான் 

மணிமுடி மண்ணிடையே புதைந்து மக்கிவிட்டதே

முறிந்த தேரைவைத்துக்கொண்ட நகர்வலம் எப்படி அக்கா

புழுதித்தலை கழுவி பூச்சூடுவதா அக்கா வாழ்க்கை

சாதனங்கள் பல கண்ட அக்கா

அழகுசாதனம் தூக்கி

அடிமை சாசனம் எழுதிவிட்டீர்களே அக்கா

நீண்ட தூரத்திற்கு விழியெறிந்து திரும்பிப் பார்க்கிறேன் நான்

நீங்களும் பாருங்கள் அக்கா

எல்லாவற்றையும் இழந்து இப்புள்ளியில் நிற்கிறோம்

வந்தது வாழ்வாவென்று உங்கள் நெஞ்சைக் கேளுங்கள் அது சொல்லும்

காலிரண்டுமற்ற மனிதன் கைகளிழந்த கைம்பெண் ஒருத்தி

ஒற்றைக் குடிலேனும் இல்லாது மரநிழலில் மூக்கொழுகும் ஒரு குழந்தை

அவர்கள் உங்கள் உறவுகள்; அக்கா

அதோ தெருவின் முகப்பில் எங்கள் வீடு

கண்ணெட்டும் தூரத்தில் இருக்கிறது

இன்னும்தான் போக முடியவில்லை

இரவல் குடிலில் நான்.

இதெல்லாம் அழிவுப்போரின் பரிசுகள் என்று இன்று நீங்கள் சொல்லலாம்

கடந்த காலத்தை மறந்ததாய் கூறலாம்

விடுதலைக்கு நாம் கொடுத்த விலையென்று அன்று நீங்கள் சொன்ன ஞாபகம்

கைவிட்டுப் போனவர்கள் வந்து காணி வாங்குகின்றனர்

விலகி நின்று ரசித்தவர்கள் இன்று வந்து அடுக்குமாடிகள் கட்டுகின்றனர்.

படுக்கைப்புண்விழுந்த வீதிகள் காப்பற் பட்டுடுத்தியுள்ளன

எங்கள் வாழ்விலேதும் மலர்ச்சியை காணவில்லையே அக்கா

அலங்காரக்கண்ணாடி முன்னால் மயங்கி இங்குசிலர் இருப்பது உண்மை

வாழ்வைப் பறித்தவரிடம் தலைவாரச் சீப்பும்

எண்ணெயும் கண்ணாடியும் இரந்து பெறுகின்றோம் இல்லையா அக்கா

கொஞ்சம் நின்று நிதானித்து நின்று பாருங்களக்கா

நாம் கொடுத்த விலைகளுக்கு சுவடேதும் இருக்கிறதா அக்கா

சந்தைக்கு வருபவர்களிற்கு கொண்டாட்டம்

கசூரினாவும் நாகதீபமும் சாட்டியும் நல்லூரும் களைகட்டின

அவர்களுக்கு எல்லாம் முடிஞ்சு போச்சென்று முசுப்பாத்தி

உனக்கும் அதுவா அக்கா

தாங்கமுடியவில்லை அக்கா

தின்ன சோறில்லையென்றாலும் திமிரோடு இருந்தோமே அக்கா

மறந்தா போனோம்

மலைவரினும் தலைசுமக்கும் துணிவோடு இருப்போம் அக்கா

எங்கள் வானிலும் ஒருநாள் நிலவு வரும்

அதுவரை மின்மினிப் பூச்சிக்கனவுகளோடு வாழ்வோம்.

 

ச. நித்தியானந்தன்

யாழ்............

நன்றி - பதிவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.