Sign in to follow this  
கோமகன்

F இயக்கம்

Recommended Posts

F இயக்கம்

 

நான் இந்தக் கதைக்கு முதலில் ‘X இயக்கம்’ என்றுதான் பெயரிட்டிருந்தேன். இந்தக் கதை இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகளைப் பற்றியது. இவர்கள் இருவருமே பல வருடங்களிற்கு முன்பே அரசியல் அகதிகளாக அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இருவரும் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களா போன்ற எந்த விபரமும் எனக்குத் தெரியாது. கதையின் எந்த இடத்திலும் இவர்கள் எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என வாசகர்கள் ஊகம் செய்யப் பிடிகொடுக்காதவாறு கதையை நகர்த்திச் செல்வதும் அதைக் கதை முடிந்த பின்பும் காப்பாற்றுவதும் இந்தக் கதையைப் பொறுத்தவரையில் முக்கியமான உத்திகள். எனவே அறியப்படாத ஒன்றை குறிப்பதற்கு X என்ற குறியீட்டை உபயோகிக்கும் மரபையொட்டிக் கதைக்கு ‘X இயக்கம்’ எனப் பெயரிட்டிருந்தேன்.

கதையின் தலைப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே “இந்தக் கதை ‘செம்படை’ இயக்கம் குறித்த கதையா?” என நண்பரொருவர் கேட்கவும் நான் ஏங்கிப் போனேன்.

 

1985 வரை ‘செம்படை’ என்றொரு தமிழீழப் போராட்ட இயக்கமும் இயங்கி வந்தது நீண்ட வருடங்களிற்குப் பிறகு எனக்கு அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. நண்பர் ஈழப் போராட்ட வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர். தவிரவும் ஒன்றிரண்டு போரியல் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவர். நான் குழப்பத்துடன் “கதையைக் கூடப் படிக்காமல் செம்படை இயக்கம் குறித்த கதையென எப்படிச் சொல்கிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “அந்த இயக்கத்தின் தலைவரின் பெயர் சேவியர், எனவே X என்பது ஆங்கிலத்தில் அவரின் பெயரின் முதலெழுத்தைக் குறிப்பிடுகிறது” என்றார்.

 

இப்படிக் கூட ஊகிக்க முடியுமா என எனக்கு வியப்பாயிருந்தது. X என்பது கணிதம் முதற்கொண்டு போர்னோப் படங்கள்வரை நாம் சர்வ சாதரணமாக உயயோகித்து வந்த ஒரு குறியீடு என்பதையும் முந்திக்கொண்டு X என்பது ஒரு இயக்கத் தலைவரின் முதலெழுத்தாக விளங்கிக்கொள்ளப்பட்டதை என்னால் உடனே விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. நிதானமாக யோசித்துப் பார்த்ததில் கடந்த இருபத்தைந்து வருடங்களில் இப்படியான இசகுபிசகுகள் ஏராளமாக நிகழ்ந்திருக்கின்றன என்பது பிடிபட்டது. முன்பெல்லாம் சக்கையென்றால் மிச்சம் அல்லது திறமையற்றது எனப் பொருள். இப்போது சக்கையென்றால் மிச்சம் மீதி வைக்காமல் அழிக்கக் கூடிய வீரியமான வெடிமருந்து எனப் பொருள். முன்பெல்லாம் பொட்டு வைப்பதென்றால் மங்கலம் என்று பொருள். இப்போது பொட்டு வைப்பதென்றால் தாலியறுப்பது என்று பொருள். ‘கொல்வது’ என்ற வினைச்சொல்லுக்கு மட்டுமே ‘டம் பண்ணுதல்’, ‘மண்டையில் போடுதல்’, ‘தட்டுதல்’, ‘மட்டை’ என்று பல்வேறு இயக்க வழக்குகள் புழக்கத்திலிருக்கின்றன.

 

எந்த வகையிலும் கதையில் குறிப்பிடப்படும் இருவரும் எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என வாசகர்கள் ஊகிக்க இடம் கொடுக்கக் கூடாது என்பதில் நான் கவனமாயிருந்ததால் X என்ற எழுத்துக்குப் பதிலாக வேறெந்த எழுத்தைக் கதையின் தலைப்புக்குத் தெரிவு செய்யலாம் என நான் யோசித்தபோதுதான் அப்படியொரு எழுத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பது எனக்கு உறைத்தது. ஏனெனில் ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துகள் மாத்திரமே உள்ளன. ஆனால் நம்மிடையே முப்பத்தேழு இயக்கங்களும் எண்ணற்ற தலைவர்களுமிருந்தார்கள். நான் A என்ற எழுத்திலிருந்து ஆரம்பித்தேன்:

 

A -அருளர்
B -பாலகுமார்
C -சந்திரஹாஸன்
D -டக்ளஸ் தேவானந்தா
E - ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.என்.டி.எல். எவ் மற்றும் பல
F- ….
G -ஞானசேகரன் என்ற பரந்தன் ராஜன்
H - ஹென்ஸி மோகன்
I - இன்பம்
J -ஜெகன்
K - கருணா
L - எல்.ரி.ரி.ஈ.
M -முகுந்தன்
N - என். எல். எவ். ரி
O - ஒபராய் தேவன்… என்று தொடர்ந்த பட்டியலில் F என்ற எழுத்து மட்டுமே கேட்பாரற்றுக் கிடந்தது. எனவே நான் அந்த எழுத்தைக் கைப்பற்றிக்கொண்டேன். எங்கே இனி முடிந்தால் ஊகித்துப் பாருங்கள் பார்ப்போம்.

பாரிஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ‘லுப்தான்ஸா’ விமானத்தில் இவன் பயணம் போனான். பிராங்போர்ட் விமான நிலையத்தில் மறு விமானம் பிடித்து இவன் கொழும்புக்குப் போவான். பிராங்போர்ட் விமான நியைத்தில் சோதனைகளை முடித்துக் கொழும்பு செல்லவிருக்கும் விமானத்தில் ஏறி உட்கார்ந்தான். இவனது அருகாமை இருக்கை வெறுமையாயிருந்தது. அந்த இருக்கையில் ஒரு அழகிய ஜெர்மானியப் பெண் வந்து உட்காரக் கூடுமென இவனது உள்ளுணர்வு சொல்லிற்று. ஆனால் இவனது உள்ளுணர்வு ஒருபோதுமே பலித்ததில்லை என்பதே வரலாறு.

 

மாதத்திற்கு ஒரு தடவையாவது இவனது உள்ளுணர்வு அப்பா இன்றோ நாளையோ இறந்துவிடுவார் என்றே இவனுக்குச் சொல்லி வந்தது. ஆனால் அப்பா இன்னமும் உயிரோடு நோயும் பாயுமாகத்தான் இருக்கிறார். அதிகாலையில் தொலைபேசி அழைக்கும்போதெல்லாம் இவன் அப்பாவின் சாவுச் செய்தியை எதிர்பார்த்தே தொலைபேசியை எடுப்பான். யாழ்ப்பாணத்துக்குப் போய் அப்பாவைப் பார்த்துவிட்டு வரலாமா என்று பல காலமாகவே மண்டையைப் போட்டுக் குழப்பியவன் இவன். அப்பாவின் மரணச் செய்தி வந்தால் இந்தத் தொடர் துயரிலிருந்து விடுபடலாமே என்று கூட இவன் நினைத்ததுண்டு. அப்படி நினைத்தற்காக ஒருமுறை இரவில் தண்ணியைப் போட்டுவிட்டு இவன் தன் முகத்தில் தானே ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான்.

இவனோடு வேலை செய்யும் நண்பர்களின் உறவினர்கள் கொழும்பிலோ வவுனியாவிலோ இருந்து தீபாவளி, வருடப் பிறப்பு என்றும் கலியாணம், படிப்பு என்றும் காசு கேட்பதும் நண்பர்கள் அனுப்புவதும் வழமை. ஆனால் இவனின் சின்னக்காவும் பெரியக்காவும் அத்தான்மாரும் அப்படி இவனிடம் காசு கேட்பதில்லை. அவர்கள் எப்போதுமே அப்பாவுக்கு நோய் கடுமையாயிருக்கிறது, சிகிச்சைக்காகக் கொழும்புக்கு அழைத்துப் போகப் போகிறோம், இந்தியாவுக்குக் கூட்டிப் போகப் போகிறோம் என்று சொல்லியே காசு கேட்பார்கள். ஆனால் அவர்கள் அப்பாவைப் பாயிலிருந்து எங்குமே நகர்த்தியதாகத் தெரியவில்லை. சின்னக்காவும் பெரியக்காவும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் காசு கேட்டார்கள். ஒருவரையொருவர் குற்றம் சொன்னார்கள். சிகிச்சைக்காக அப்பாவைக் கொழும்புக்கு அழைத்துச் செல்லாததற்காகப் புதுப் புது சாட்டுக்களைச் சொன்னார்கள். குறிப்பாக இவன் இதைப் பற்றிப் பெரியத்தானிடம் கேட்டபோதெல்லாம் கொழும்புக்கு அழைத்துப் போக முடியாததற்கான காரணங்களை அத்தான் அரசியல் ரீதியாகத்தான் விளக்கினார். அவர் சந்திரிகா பண்டாரநாயக்காவின் செத்துப்போன புருசனையும் ரணில் விக்கரமசிங்காவின் தாயையும் மகிந்த ராஜபக்சவின் பெண்சாதியையும் தூசணத்தால் ஏசினார். உங்கள் அப்பா எப்போதிருந்து நோய்ப் படுக்கையிலிருக்கிறார் என யாராவது கேட்கும்போதெல்லாம் ‘சந்திரிகாவின் காலத்திலிருந்தே படுக்கையிலிருக்கிறார்’ என்று சொல்லலாமா என்று கூட இவன் யோசிப்பான். சோமாலியாக் கடற்கொள்ளைக்காரர்களிடம் சிக்கிய கப்பல் போல அப்பா அக்காமாரிடம் பணயமாக இருப்பது போலத்தான் இவனுக்குப் பட்டது. அப்பாவிற்குச் சாகிற வயதுதான். ஆனால் இவர்கள் அப்பாவைச் சாக விமாட்டார்கள். பணயப் பொருளைத் தொலைப்பதற்குக் கடத்தல்காரர்கள் விரும்புவதில்லை.

தான் இப்படியெல்லாம் யோசிப்பதற்குத் தன்னிடம் சகோதர பாசம், தந்தைப் பாசம் எல்லாமே அற்றுப் போய்விட்டதுதான் காரணமோ என இவன் யோசித்தான். தீர யோசித்துப் பார்த்தத்தில் அப்பாவின் மீதல்ல, எவர்மீதும் தனக்கு உண்மையான அன்பு கிடையாதென்றும் தன்மேலும் எவருக்கும் அன்பு கிடையாதென்றும் நிர்ப்பந்தங்களால் மட்டுமே அன்பு செலுத்துவதாக நடிக்க வேண்யிருப்பதாகவும் இவன் நினைத்தான். ‘உறவுகள் எல்லாமே காசுக்காக’ என்ற பிரபலமான புலம் பெயர் பழமொழியை எல்லோரைப் போலவே இவனும் அடிக்கடி முணுமுணுத்தான். ‘வணக்கம்’ என்ற வார்த்தையைப் போலவே ‘விசா’ என்ற வார்த்தையைப் போலவே இந்தப் பழமொழியும் புகலிடத்தில் சர்வசாதாரணமாகப் புழக்கத்திலிருந்தது.

 

ஆனால் சென்ற கிழமை அக்கா தொலைபேசியில் ‘அப்பா இந்தமுறை தப்பமாட்டார்’ என்றும் அப்பா திடீர் திடீரெனக் கண் விழித்து இவன் வந்துவிட்டானா என்று கேட்டுக்கொண்டிருப்பதாகவும் சொன்னபோது அப்பாவைப் போய்க் கடைசியாக ஒருதடவை பார்க்க வேண்டுமென இவன் முடிவெடுத்தான். அம்மா இறந்தபோது இவன் பிரான்ஸுக்கு வந்து மூன்று வருடங்களே ஆகியிருந்தன. அம்மாவின் பிரேதம் கொள்ளி போடப் பிள்ளையில்லாமலேயே எரிந்தது. தனக்கும் அப்படியொரு நிலை ஏற்படக் கூடாது என அப்பா அழுதாராம். யாழ்ப்பாணம் போக முடிவெடுத்த கணத்திலேயே இவன் மனம் கிளர்ச்சியடையத் தொடங்கியது. இவனின் கிராமமும் உறவுகளும் நட்புகளும் வரிசையாக மூளைக்குள் படமாய் ஆடின. அப்பாவின் இறுதிச் சடங்கில் தான் வேட்டி உடுத்துக்கொண்டு கொள்ளியிடும் சித்திரம் இவனின் மனதில் தோன்றியபோது இவனுக்குக் குறுகுறுப்பாயிருந்தது. விமானத்தின் இருக்கைப் பட்டியை அணிந்து கொள்ளும்போது இவன் கொழும்பில் இறங்கும்போது அப்பாவின் மரணச் செய்தி இவனுக்காகக் காத்திருக்கும் என இவனது உள்ளுணர்வு சொல்லிற்று.

விமானம் புறப்படவிருக்கும் தருணத்தில் இவன் வயதேயுள்ள கரிய, தடித்த உருவமுடைய ஒரு மனிதன் இவனின் அருகாமை இருக்கையை நோக்கிப் பதற்றத்துடன் வந்தான். வந்தவன் இவனைப் பார்த்து ஒரு புன்னகை கூடச் செய்யாமல் இவனையும் இருக்கையையும் மாறி மாறிப் பார்த்தான். வேறு வழி இல்லாதவன்போல முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு இருக்கையில் தன் பருத்த உடலைச் சாய்த்தான். தனது கால்களிற்கு இடையே தனது கையிலிருந்த தோற்பையை வைத்துக்கொண்டான். இருக்கைப்பட்டியைச் சிரமப்பட்டுப் போட்டுக்கொண்டு கையிலிருந்த ஜெர்மனிய மொழிப் பத்திரிகையொன்றை அந்த மனிதன் வாசிக்கத் தொடங்கினான். இவன் கடைக் கண்ணால் அந்த மனிதனினின் கால்களுக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த கைப்பையில் தொங்கவிடப்பட்டிருந்த முகவரிச் சீட்டைச் சிரமப்பட்டுப் படித்தான். அதில் ‘அருமைநாயகம் தெய்வேந்திரன், டோர்ட்முண்ட், ஜெர்மனி’ என எழுதப்பட்டிருந்தது.

 

விமானம் புறப்பட்ட அடுத்த அரைமணி நேரத்திற்கு இவன் ஜன்னலால் வெளியே பார்த்தும் கைகளைக் கோர்த்தும் பிரித்தும் கால்களை ஆட்டியும் சேட்டைகள் செய்துகொண்டிருந்தான். அருகிலிருந்தவனுடன் இனியும் பேசாமல் இருக்க முடியாது எனத் தோன்றியது. கடைக்கண்ணால் அருகிலிருந்தவனைக் கவனித்தான். அவனும் முகத்தைத் திருப்பாமலேயே தன்னைக் கவனித்துக்கொண்டிருப்பது போல இவனுக்குப் பட்டது. அருகிலிருந்தவனுடன் பேசுவதற்கான வார்த்தைகள் இவனின் வாய்க்குள் முட்டிப் போயிருந்தன. பேச்சை எப்படி ஆரம்பிப்பது என இவன் மனதிற்குள் ஒரு சிறிய ஒத்திகை பார்த்துக்கொண்டு முகத்தைத் திருப்பியபோது அருகிலிருந்தவன் இவனிடம் பேசத் தொடங்கினான். ஒரு முட்டாள்தனமான கேள்வியுடன் அந்த உரையாடல் ஆரம்பிக்கலாயிற்று.

 

“நீங்கள் தமிழா?”

 

இவன் கொழும்புக்குப் போய், அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு போகப் போவதாகவும் தனது தகப்பனார் மரணப் படுக்கையில் கிடக்கிறார் எனவும் சொன்னான். அதைத்தான் மற்றவனும் சொன்னான். அவனின் தாயார் வாய்ப் புற்றுநோயால் யாழ்ப்பாணக் கிராமமொன்றில் மரணப் படுக்கையில் கிடக்கிறாராம். அவன் இவனிடம் கல்யாணம் செய்துவிட்டீர்களா எனக் கேட்டபோது ‘ஓம்’ என்று இவன் பொய் சொன்னான். அவன் ஜெர்மனியில் ஒரு அச்சகசாலையில் வேலை செய்வதாகவும் தனக்கு மூன்று குழந்தைகள் என்றும் சொன்னான். இவன் தான் பாரிஸில் ஒரு சுப்பர் மார்க்கட்டில் வேலைசெய்வதாகவும் தான் பிரான்ஸுக்குப் போய் இருபது வருடங்கள் ஆகின்றன எனவும் சொன்னான். அவன் தானும் ஜெர்மனிக்கு வந்து இருபது வருடங்கள் ஆகின்றன என்றான். இருவருமே வந்ததற்கு முதல் முறையாக இப்போதுதான் இலங்கைக்குப் போகிறார்களாம். இவன் தனது பெயர் சந்திரன் என்று சொன்னான். அவன் தன்னுடைய பெயர் மாறன் என்றான்.

 

அவனுடைய பெயரை அருமைநாயகம் தெய்வேந்திரன் என்று இவன் ஏற்கனவே அவனுடைய கைப்பையிலுள்ள முகவரிச் சீட்டிலிருந்து தெரிந்து வைத்திருந்தான். மாறன் என்பது அவனின் வீட்டுப் பெயராக இருக்கலாம் என இவன் நினைத்துக்கொண்டான். பேசிக்கொண்டிருந்தபோது தான் அவனை ஏற்கனவே எங்கேயோ பார்த்திருப்பதாக இவனுக்குத் தோன்றியது. இவனின் வாய் பேசிக்கொண்டிருந்தாலும் இவனது கண்கள் மாறனின் கண்களையே ஊடுருவிக்கொண்டிருந்தன. திடீரென இவனது தேகம் குளிர்ந்து போயிற்று. தன்னோடு இப்போது பேசிக்கொண்டிருக்கும் மாறனைத் தான் எங்கேயோ பார்த்திருப்பதாகவும் அப்போது மாறனின் கையில் துப்பாக்கியிருந்ததாகவும் இவனுக்குள் ஒரு சித்திரம் உருவாகியது. அந்தச் சித்திரம் புகையால் தீட்டப்பட்டிருந்தது. அருகிலிருப்பவன் இயக்கக்காரன் என இவனது உள்ளுணர்வு எச்சரித்தது. பேச்சை நிறுத்திவிட்டு இவன் ஜன்னல் பக்கம் திரும்பியதும், அருகிலிருந்தவன் அதற்காகவே காத்திருந்தவன் போலக் கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்ததும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன. மாறனை எங்கே பார்திருக்கிறேன் என்று மண்டையைப் போட்டு இவன் உடைத்துக்கொண்டான்.

 

1984 மார்ச்

யாழ்ப்பாணம் புத்தவிகாரைக்குப் பக்கத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பின்னாகக் கோட்டையிலிருந்து நகரத்துக்குள் நுழைந்த இராணுவத்தினர் பெரியகடைப் பகுதியைக் கொழுத்தினர். அவர்களின் கைகளிலிருந்த துப்பாக்கிகள் இலக்குகள் இல்லாமல் சுட்டுத் தள்ளின. ஒருமணிநேர வெறியாட்டத்திற்குப் பின்பு இராணுவத்தினர் நகரத்தை விட்டு வெளியேறியதும் இயக்கங்கள் நகருக்குள் நுழைந்தன.

 

தெருவில் காயப்பட்டுக் கிடந்தவர்களையும் தெருவிலும் கடைகளுக்குள்ளும் பிணங்களாகக் கிடந்தவர்களையும் இயக்கப் பொடியன்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். காயப்பட்டவர்களை எடுத்துச் செல்வதற்காக வீதியில் நின்ற வாகனங்கள் இயக்கங்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன அல்லது கடத்தப்பட்டன. நாவற்குழி இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் நடைபவனியாக புறப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி கிடைத்தபோது கொஞ்ச இயக்கப் பொடியள் துவக்குகளோடு சைக்கிள்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் நாவற்குழியை நோக்கிப் பறந்தார்கள். பெரியாஸ்பத்திரியில் காயப்பட்டவர்களைச் சேர்த்துவிட்டு இரத்தம் வழங்கவதற்காகக் கொஞ்சம் இயக்கப் பொடியள் காத்திருந்தார்கள். அவர்களுக்கு அவசரம். இரத்தம் கொடுத்துவிட்டு நாவற்குழிக்குப் போக அவர்கள் துடித்துக்கொண்டிருந்தார்கள். வெளியே வந்த பெரிய டொக்டர் அவர்களைத் துவக்குகளை வெளியே வைத்துவிட்டு இரத்தம் வழங்க உள்ளே வருமாறு கூப்பிட்டார்.

அவிழ்த்து வைத்த இருக்கைப் பட்டிகளை மறுபடியும் அணியுமாறு விமானத்தில் சொன்னார்கள். விமானம் மேலேயும் கீழேயும் உலாஞ்சியது. இவன் முன்னாலிருந்த திரையில் பார்த்தபோது விமானம் பல்கேரியாவுக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்தது. இவன் தலையை மெதுவாகத் திருப்பிப் பக்கத்திலிருந்தவனைக் கவனித்தான். அவன் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான். அந்தக் கண்களும் மூக்கும் தடித்த உதடுகளும் மறக்க முடியாதவை. ஆனால் அவற்றை எங்கே பார்த்தான் என்பதுதான் இவனின் ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் துப்பாக்கியுடன்தான் பார்த்திருக்கிறான்.

 

1985 ஜுலை

 

பூட்டானில் நடந்துகொண்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஈழத் தமிழர்களுக்கான தீர்வில்லை எனக் கண்டித்து எல்லா இயக்கங்களுமாகச் சேர்ந்து ஒரு மாபெரும் பேரணியை மருதனாமடத்திலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தை நோக்கி நடத்தினார்கள். பாடசாலை மாணவர்கள் முதலிலும் பொதுமக்கள் அடுத்ததாகவும் வாகனங்கள் கடைசியாகவும் சென்ற அந்தப் பேரணியின் இரு புறங்களிலும் இயக்கப் பொடியன்கள் பேரணியை கட்டுப்பாடாக நடத்திச் சென்றுகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு இயக்கமும் பேரணி வேலைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டிருந்தன. பேரணியினரின் முழக்கங்கள் ஒரே குரலில் ஒலித்தன

“பூட்டான் என்ன, பாட்டன் வீடா!”

“வேண்டாம் வேண்டாம் பேச்சு, தமிழீழமே இறுதி மூச்சு!”

“திம்பு நாடகத்தை, நம்பவே மாட்டோம்”

“கொள்கைகளை விற்றிட மாட்டோம், தோழர்களின் கல்லறைகளை ஏமாற்ற மாட்டோம்!”

பேரணி பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து அமர்ந்ததும் முதலில் அங்கே ‘மண்சுமந்த மேனியர்’ நாடகம் நடத்திக் காட்டப்பட்டது. இறுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எல்லா இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பேசினார்கள். இயக்கங்களின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அங்கே பேசியதால் மேடையைச் சுற்றி அவர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் துப்பாக்கிகளுடன் நின்றிருந்தார்கள்.

விமானப் பணிப்பெண் தேனீருடன் வந்தபோது பக்கத்திலிருந்தவன் அவளிடம் தேனீர் கோப்பையை வாங்கி இவனிடம் கொடுத்தான். இவன் அவனைப் பார்த்து நன்றியுடன் புன்னகைத்தான். அவனும் பதிலுக்குப் பற்கள் தெரிய புன்னகைத்தான். நிச்சயமாக இந்தச் சிரிப்பை இவன் முன்பே எங்கோ பார்திருக்கிறான். அதுவும் துப்பாக்கியும் சிரிப்புமாகப் பார்த்திருக்கிறான்.

 

1986 ஏப்ரல்

 

காரைநகர் கடற்படைத் தளத்திலிருந்து இரவோடு இரவாக முன்னேறிய கடற்படையினர் ஊறாத்துறை அந்தோனியார் கல்லூரியில் முகாமிட்டனர். விடிந்ததும் விடியாததுமாக இயக்கம் அந்தோனியார் கல்லூரியைச் சுற்றி வளைத்தது. உள்ளே இருநூறு படையினரளவில் இருந்தனர். வெளியே வெறும் இருபது பொடியள் வளைத்து நின்றனர். அப்போது பொடியளிடம் பெரிதாக ஆயுதங்களும் கிடையாது. ஒரு M16, இரண்டு G3, ஆறு AK 47, நான்கு SMG துப்பாக்கிகள், ஒரு ரிப்பீட்டர், கொஞ்சம் கைக்குண்டுகள் மட்டுமே வளைத்து நின்ற பொடியளிடமிருந்தன. கடற்படையோ ஆட்டிலரி, ஆர்.பி.ஜி. லெவலில் இருந்தது. கல்லூரியைச் சுற்றி ஒரு ஹெலிகொப்டர் பறந்துகொண்டேயிருந்தது.

 

ஏழு மணியளவில் பொடியள் தாக்குதலைத் தொடக்கினார்கள். அவர்கள் இருபது பேரும் பாடசாலையின் மதில்களுக்குப் பின்னாகவும் சடைத்திருந்த மரங்களின் மீதும் பதுங்கியிருந்தார்கள். முகாமிலிருந்தவர்களை அச்சுறுத்திப் பின்வாங்க வைப்பதே அவர்களின் நோக்கமாயிருந்தது. மரங்களிலிருந்தவர்கள் உள்ளே குறிபார்த்துச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். மதிலுக்குப் பின்னால் பதுங்கியிருந்த பொடியள் திடீர் திடீரென வெவ்வேறு இடங்களிலிருந்து எழுந்து நின்று சுட்டார்கள். கைக்குண்டுகளை வீசினார்கள். ஹெலிகொப்டர் வாணவேடிக்கையைத் தொடங்கியது. ஹெலிகொப்டரை நோக்கியும் சூடுகள் பறந்தன. உள்ளேயிருந்த கடற்படையினர் இடையறாமல் எல்லாப் பக்கமும் சுட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருமுறை ஒரு பொடியன் - அவனுக்குப் பதினேழு வயதிருக்கும் - மதிலுக்கு மேலாக எஸ்.எம்.ஜியுடன் எழுந்தபோது கடற்படையிடமிருந்து வந்த ‘லோ’ தாக்குதலால் அவனின் தலை சிதறியது.

 

எட்டு மணியளவில் இரண்டு ஹெலிகொப்டர்கள் அந்தோனியார் கல்லூரிக்குச் சற்றுத் தூரத்தில் தரவைக்குள் சிறப்புக் கொமாண்டோ படையினரை இறக்கிவிட்டன. கொமாண்டோ அணியினர் அசுர வேகத்தில் அந்தோனியார் கல்லூரியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். அது பொடியளுக்குச் சிக்கலாகிவிட்டது. அவர்களுக்கு முன்னே கடற்படையினர். பின்னே கொமாண்டோப் படையினர். இப்பொது பொடியள் முற்றுகைக்குள் சிக்கிவிட்டார்கள். பொடியளுக்குப் பின்வாங்கிச் செல்வதற்கு இப்போதும் வாய்ப்புகள் இருப்பினும் அவர்கள் அதை விரும்பியதாகத் தெரியவில்லை. அடிபட்டுச் சாவதென்று முடிவெடுத்ததுபோல அவர்கள் இரு அணியாகப் பிரிந்து இரண்டு பக்கமும் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.

முற்றுகை வளையம் இறுகிப் பொடியளால் இனித் தப்ப முடியாது என்ற நிலை வந்தபோது மெலிஞ்சிமுனைக்குள்ளால் வந்த இன்னொரு இயக்கம் கொமாண்டோப் படையினரைப் பின்னாலிருந்து தாங்கியது. அந்த இயக்கத்திடம் சொந்தத் தயாரிப்பான ‘2 இஞ்’ மோட்டர்கள் இருந்தன. மோட்டர் தாக்குதலில் கொமாண்டோப் படை கதிகலங்கிவிட்டது. கொமாண்டோப் படையினர் திசைமாறித் தம்பாட்டிக் கடற்கரைப் பக்கமாகப் பின்வாங்கத் தொடங்கினார்கள். இப்போது மற்ற இயக்கம் மோட்டர்களுடன் கடற்படையினர் முகாமிட்டிந்த கல்லூரியை நெருங்கியது. அந்த இயக்கம் வந்தாலே குறைந்தது அய்ம்பது பேருடன்தான் தாக்குதலுக்கு வருவார்கள். பயிற்சிபெற்ற போராளிகள் தான் தாக்குதலுக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் ஊர்ச் சனங்களையும் திரட்டிக்கொண்டு துப்பாக்கிகள் போதாவிட்டாலும் கத்திகள் பொல்லுகளோடு களத்துக்கு வருவார்கள்.

 

கிழக்குப் பக்கத்தை மட்டும் படையினர் பின்வாங்கிச் செல்வதற்காகத் திறந்துவிட்டு மற்றைய மூன்று பக்கங்களிலும் இரண்டு இயக்கங்களும் வளைத்து நின்றன. பத்து மணியளவில் மற்றைய இயக்கங்களும் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் களத்துக்கு வந்துவிட்டார்கள். ஒரு இயக்கத்திடம் ரவைகள் தீர்ந்துவிட்டால் மற்றைய இயக்கம் தன்னிடமுள்ள ரவைகளைக் கொடுத்தது. காயப்பட்ட பொடியளை ஒரே வாகனத்தில் எடுத்துச் சென்றார்கள். மாலை அய்ந்து மணியளவில் கடற்படையினர் பின்வாங்கத் தொடங்கினார்கள். இயக்கங்கள் படையினரை கடற்கரைவரை துரத்திச் சென்றன. அடுத்தநாள் ஒரு இயக்கம் ” தோளோடு தோள்நின்ற சக தோழர்களுக்கு நன்றி” எனத் துண்டுப்பிரசுரம் கூட வெளியிட்டது.

 

விமானம் தரையிறங்குவதற்குத் தயாராவதாக அறிவிக்கப்பட்டது. இவன் தனது மூளையின் எல்லாச் செல்களையும் வதைத்துப் பார்த்துவிட்டான். அருகிலிருப்பவனை எங்கே பார்த்தோம் என்பது இவனுக்குப் பிடிபடமாட்டேன் என்கிறது. கண்களை உருட்டி உதடுகளைத் திரும்பத் திரும்பப் பற்களால் கடித்துக்கொண்டிருந்தான். விமானத்தை விட்டு இறங்கியதுமே அவனின் கண்ணில் படாமல் தன்வழியே சென்றுவிட வேண்டும் என முடிவு செய்தான். அப்போது அருகிலிருந்தவன் இவனிடம் “கொழும்பில் எங்கே தங்கப் போகிறீர்கள்?” எனக் கேட்டான். திடுக்கிட்டுப்போன இவன் கொஞ்சம் யோசித்துவிட்டுக் கொழும்பில் தங்கப் போவதில்லை என்றும் காலையிலேயே யாழ்ப்பாணம் செல்வதற்கு விமானச் சீட்டு வாங்கியிருக்கிறேன் என்றும் பதில் சொன்னான். அவ்வளவும் பொய். இவன் கொழும்பில் இறங்கும்போது அக்கா விமான நிலையத்தில் காத்திருப்பார். எப்போது யாழ்ப்பாணம் போவது, எப்படிப் போவது என்பதை எல்லாம் அக்காவிடம் கலந்துபேசித்தான் முடிவு செய்ய வேண்டும். பக்கத்திலிருப்பவன் ஆச்சரியப்படுப்போவது போலக் கண்களை மலர்த்தி “நானும் காலை விமானத்தில்தான் யாழ்ப்பாணம் போகிறேன். நாங்கள் அநேகமாக நாளைக்கும் விமானத்தில் சந்திப்போம் என்று நினைக்கிறேன்” என்றான். அதைக் கேட்டதும் இவனும் ஆச்சரியப்படுவது போலவும் மகிழ்ச்சியடைவது போலவும் கண்களை மலர்த்தினான். ஆனால் இவனுக்கு உள்ளுக்கு எரிந்துகொண்டிருந்தது. அருகிலிருக்கும் தடியனின் கையில் மட்டும் இப்போது ஒரு துப்பாக்கி இருந்தால் அவனைத் தன்னால் உடனேயே அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்று இவன் நினைத்துக்கொண்டான். அவனை எங்கே பார்த்தோமென இனியும் மண்டையைப் போட்டுடைப்பது வீண்வேலை, மறுபடியும் அவனின் கண்ணில்படாமல் இருப்பதே புத்தியான வேலை என இவன் முடிவெடுத்தான்.

 

விமானநிலையத்தில் இறங்கிச் செல்லும்போது ‘இமிக்கிரேசன் கௌண்டர்’ வரை அவனும் பின்னால் கூடவே வந்தான். இவன் புத்தியாக வரிசையில் அவனே முன்னால்விட்டுப் பின்னால் நின்றுகொண்டான். அவன் இமிக்கிரேசனில் சரளமாகச் சிங்களம் கதைப்பது இவனுக்குக் கேட்டது. இவனுக்குச் சிங்களத்தில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அவன் சிங்களம் கதைப்பது இவனுக்கு ஏனோ கவலையைக் கொடுத்தது. இவன் ‘இமிக்கிரேசன்’ தாண்டியதும் சுற்றுமுற்றும் பார்த்தான். பிராங்போர்ட்டிலிருந்து கூடவே வந்த தடியனைக் காணவில்லை. இவன் வேகமாக நடந்து சென்று கழிப்பறைக்குள் புகுந்துகொண்டான். கழிப்பறையின் கதவை முடிக்கொண்டு சும்மாதான் உள்ளே நின்றிருந்தான்.

 

‘எனக்கு மூளை மரத்துப்போய் ஞாபகம் மங்கியிருக்கலாம். ஆனால் கூட வந்த தடியனுக்கும் அப்படியிருக்க வாய்ப்பில்லை. என்னை அவன் அடையாளம் கண்டிருக்கலாம். என்னை அவன் முதற் பார்வையிலேயே அடையாளம் கண்டிருக்கக் கூடும். பேச்சின்போதுகூட அநேகமாக நான் சொல்லுபவற்றையே திருப்பிச் சொல்லும் டெக்னிக்கைத்தான் அவன் பாவித்தான். அவனின் மாறன் என்ற பெயர்கூடச் சாதாரணமான யாழ்ப்பாணப் பெயரில்லை. இந்த மாறன், பரிதி, சங்கிலி போன்ற பெயர்களை இயக்கப் பொடியள்தான் வைத்துக்கொள்வார்கள்’ என்று யோசித்துக்கொண்டிருந்தவனுக்குத் தன்னுடைய இயக்கப் பெயர் பீற்றர் என்பது ஞாபகத்திற்கு வந்தது. அதைத் தொட்டு ‘வாளெடுத்தவனுக்கு வாளாலேதான் சாவு’ என்ற பைபிள் வாசகமும் ஞாபகத்திற்கு வந்தது. ‘இருபது வருசமாகப் பாரிஸில் மூடிக்கொண்டிருந்ததுபோல அங்கேயே இருந்திருக்கலாம், அப்பா பாசத்தில் நாட்டுக்கு வந்து நாட்டில் கால் வைக்கும்போதே நிம்மதியின்மையோடும் பயத்தோடும் தவிக்க வேண்டியிருக்கிறதே’ என்று இவன் கக்கூசுக்குள் நின்று கலங்கிக்கொண்டிருந்தான். இவன் வாயில் அப்பாவைப் பற்றி ஒரு வசவு வார்த்தையும் வந்து போயிற்று. அதிக நேரம் கழிப்பறைக்குள் நின்றால் அது வேறு பிரச்சினையைக் கொண்டுவரலாம் என யோசித்துவிட்டுக் கதவைத் திறந்து தயக்கத்தோடு வெளியே வந்தான்.

கழிப்பறைக்கு வெளியே அந்தத் தடியன் மாறன் நின்றுகொண்டிருந்தான். ஒருவரையொருவர் கண்டுகொண்டதாகவே இருவரும் காட்டிக்கொள்ளவில்லை. இவன் நிதானமான ஒரு நடையைப் போட்டு பெட்டிகள் எடுக்கும் பகுதிக்குப் போனான். அந்தப் பகுதியில் இவனின் பெட்டி மட்டும் அநாதரவாகப் பெல்டில் சுற்றிக்கொண்டிருந்தது. இவன் பெட்டியை இழுத்துக்கொண்டு விறுவிறென வெளியே நடந்தான்.

வெளியே பார்வையாளர்களைச் சந்திக்கும் பகுதியில் ஒரே கூட்டமாயிருந்தது. சிங்களத்திலும் தமிழிலும் பேரிரைச்சலாயிருந்தது. அங்கே அக்காவைக் காணாமல் இவன் பதறிப்போனான். தனியாக நின்றவனைச் சிலர் அணுகி சிங்களத்தில் ஏதோ கேட்டனர். இவன் ஒரு வலிந்த புன்னகையுடன் அவர்களைக் கடந்து சென்றான். அங்கே அந்தத் தடியன் மாறன் இருக்கிறானா என இவனின் கண்கள் தேடிக்கொண்டிருந்தன. காவலுக்குத் துப்பாக்கியும் கையுமாக நின்றிருந்த ஒரு பொலிஸ்காரனின் அருகில் போய் இவன் நின்றுகொண்டான். அது இவனுக்கு ஏனோ சற்று அமைதியையும் பாதுகாப்பு உணர்வையும் கொடுத்தது. அக்காவும் அத்தானும் ஒருவாறு இவனைக் கண்டுபிடித்தபோது இவன் அவர்களில் எரிந்து விழுந்தான். அத்தான் வாகனம் தயாராக இருக்கிறது என்று சொன்னார். இவன் உற்சாகமில்லாமல் வாகனத்தை நோக்கி நடந்தான். அந்தப் பொலிஸ்காரனை விட்டுப்போவது இவனுக்குக் கவலையைக் கொடுத்தது. இவனை வைத்துக் கதை எழுதுவது ஆய்க்கினை பிடித்த வேலை. இவன் எப்போது என்ன நினைப்பான், எதற்குக் கவலைப்படுவான், எதற்கு மகிழ்ச்சியடைவான், எதற்குப் பதற்றமடைவான் என்று ஒரு இழவும் விளங்கவில்லை. இது போதாதென்று இவனது உள்ளுணர்வு வேறு கதையை ஒரு பக்கமாக இழுக்கிறது.

 

இவனும் அக்காவும் அத்தானும் கொள்ளுப்பிட்டியிலுள்ள ஒரு விடுதியில் தங்கினார்கள். அத்தான் “யாழ்ப்பாணம் போவதற்கு எந்தத் தேதியில் விமானச்சீட்டுப் பதிவு செய்ய வேண்டும்?” என இவனிடம் கேட்டார். அதற்கு இவன் “கொஞ்ச நாட்கள் கொழும்பிலிருந்து கொழும்பைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் பின்பு யாழ்ப்பாணம் போகலாம்” என்றான். அதைக் கேட்டதும் அக்காவுக்கும் அத்தானுக்கும் மகிழ்ச்சியால் முகம் விரிந்துபோனது. அக்கா “கொழும்பில் பார்ப்பதற்கு நிறைய இடங்களிருக்கின்றன” என்றார். அந்தக் கிழவன் அங்கே சாகக் கிடக்கிறான், இவர்கள் கொழும்பு பார்க்க நிற்கிறார்கள் என இவன் மனதிற்குள் முறுகிக்கொண்டான். இப்போது யாழ்ப்பாணம் போவது புத்திசாலித்தனமான செயல் அல்ல என்று இவனது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்தது. கண்ணை மூடிக் கண்ணைத் திறந்தால் அந்தத் தடியன் மாறனின் கறுத்த முகமே முன்னால் வந்து இவனை அலைக்கழித்தது.

 

அக்காவும் அத்தானும் கொழும்பு பார்க்கப் போக, தனக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்லவிட்டு இவன் இரண்டு நாட்களாக விடுதிக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். கொழும்பில் நடமாடக் கூட இவன் விரும்பவில்லை. கட்டிலில் குறுகிப் படுத்துக்கொண்டான். வடக்கிலும் இயக்கங்கள், தெற்கிலும் இயக்கங்கள் எந்தப் பக்கம் கால் நீட்டிப் படுப்பதென்றே இவனுக்குத் தெரியவில்லை. திரும்பிப் பிரான்ஸுக்கே போய்விடலாமா என்றுகூட யோசித்துப் பார்த்தான். எந்த நேரத்திலும் அப்பாவின் மரணச் செய்தி வரவிருக்கும் நிலையில் தான் திரும்பிப்போக நினைப்பது சரியான வேலையில்லை எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அப்பா சாவதற்கு முன்பு அவரின் முகத்தை ஒருமுறை பார்த்துவிடுவது அவசியம் என்று இவனுக்கு மறுபடியும் தோன்றியது. முன்னொரு முறை பாரிஸில் வந்த அந்த உணர்வுதான் இவனை இந்த இடம் வரைக்கும் இழுத்து வந்திருக்கிறது. அந்த எண்ணம் நெஞ்சில் வந்ததும் தான் மாறனை விமானத்தில் சந்தித்தது வெகு சாதாரண நிகழ்வென்றும் அவனைத் தான் எங்கேயோ துப்பாக்கியும் கையுமாகப் பார்த்த நினைவு வெறும் பிரமையாகக் கூட இருக்குமென்றும் இவனுக்குப்பட்டது. இவன் பாரிஸிலிருந்து கிளம்பிய விமானத்தில் கொடுக்கப்பட்ட அரைப் போத்தல் வெள்ளை வைனையும் பிராங்போர்ட் விமான நியைத்தில் மூன்று கோப்பைகள் சிவப்பு வைனையும் கலந்து குடித்துவிட்டுத்தான் பயணம் செய்திருந்தான். வைன் இப்படியான அதீத கற்பனைகளைத் தூண்டிவிடக் கூடியது என்பது இவனுக்குத் தெரியும். பாரிஸில் ஒருமுறை இவன் வைனை முட்டக் குடித்துவிட்டுச் சுப்பர் மார்க்கட்டுக்கு வேலைக்குப் போய்க் குழந்தைகளுக்கான உணவு டப்பாக்கள் இருக்கும் பகுதியில் பூனைகளுக்கான உணவு டப்பாக்களை அடுக்கி வைத்துவிட்டான். இவ்வளவுக்கும் குழந்தைகளின் உணவு டப்பாக்களில் குழந்தைகளின் முகமும் பூனைகளுக்கான உணவு டப்பாவில் பூனைகளின் முகமும் அச்சிடப்பட்டிருக்கும். இவனுக்கு அன்று பூனைகள் குழந்தைகளைப் போலத் தோன்றின.

அப்பாவைப் பார்க்கப் போவது உறுதியானவுடன் யாழ்ப்பாணம் செல்வதற்கு விமானப் பயணச் சீட்டுப் பதிவு செய்வதற்காக வெளியே புறப்பட்டான். தங்கும் விடுதிக்கு எதிரேதான் பயணச்சீட்டுப் பதிவு செய்யும் அலுவலகம் இருந்தது. இவன் விடுதியிலிருந்து வெளியே வந்து தெருவைக் கடந்து அந்தப் பக்கம் சென்றபோது அங்கே ஒரு தேனீர்க் கடையின் ஓரமாக அந்தத் தடியன் மாறன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். இவனின் கால்கள் அப்படியே நகராமல் நின்றன. ஒரு செக்கனில் சமாளித்துக்கொண்டு இவன் மாறன் நின்றிருந்த திசைக்கு எதிர்த் திசையால் மெதுவாக நடந்தான். தன்னை அவனும் கண்டுவிட்டான் என்பது இவனுக்குத் தெரியும். அடுத்தநாளே யாழ்ப்பாணம் போவதாகச் சொன்ன தடியன் இங்கே நின்று என்ன செய்கிறான்? இவன் பதற்றத்தோடு கடற்கரையை நோக்கி நடக்கத் தொடக்கியவன் திடீரெனத் திசையை மாற்றி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினான். இடையிடையே சப்பாத்தைச் சரிசெய்வது போல நின்று பின்னாலே பார்வையை எறிந்தான்.

 

அன்றிரவே அந்தத் தங்கும் விடுதியை விட்டு வேறு இடத்துக்கு மாறவேண்டும் என இவன் அத்தானிடம் சொன்னான். அத்தானுக்கு இவனின் போக்குப் பிடிபடுவதாயில்லை. அந்த விடுதியிலிருந்து மாறி கொட்டஞ்சேனையிலிருந்த ஒரு விடுதிக்கு வந்து தங்கினார்கள். அப்பாவின் இறுதிச் சடங்குகளுக்கு வேண்டிய துணிமணிகளை வாங்குவதில் அக்கா அக்கறைகாட்டினார். யாழ்ப்பாணத்தில் நல்ல துணிகள் கிடைக்காதாம். கிடைத்தாலும் அறாவிலையாம். கொள்ளி வைக்கும் போது கட்டுவதற்காக இவனுக்கு ஒரு வேட்டியும் பந்தம் பிடிக்கும் பேரக் குழந்தைகளுக்காகத் துண்டுகளும் வாங்கப்பட்டன.

இவன் அறையைவிட்டு சாப்பிடுவதற்கு மட்டுமே வெளியே போனான். வெயில் உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அக்காவிடம் சொன்னான். புதிய விடுதிக்கு வந்த நான்காவது நாள் காலையில் சாப்பிடச் சென்றவன் நிம்மதியால் கழுவப்பட்ட முகத்துடன் உற்சாகமாகத் தங்கும் விடுதிக்குத் திரும்பி வந்தான். அத்தானிடம் யாழ்ப்பாணம் புறப்படுவதற்கு உடனே பயணச் சீட்டுகள் வாங்குமாறு சொன்னான். இவனது கிராமமும் உறவுகளும் பழைய நட்புகளும் இவனுக்குள் உயிர்த்தெழுந்தன. அப்பாவின் இறுதிச் சடங்கையும் அங்கே உடுத்த வேட்டியுடன் தான் சிதைக்குத் தீ மூட்டுவதையும் நினைத்தபோது இவனுக்குப் புல்லரித்தது. அந்த மரணச் செய்தி இன்று காலையில் இவனுக்குக் கிடைத்தது. அந்தச் செய்தி இவன் கையில் சுருட்டி வைத்திருந்த பத்திரிகையில் அந்தத் தடித்த, கறுத்த மனிதனின் புகைப்படத்துடன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஜெர்மனியை வசிப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும் கொண்ட அந்த மனிதன் நேற்றுக் காலையில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் வைத்து மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டானாம். ஏனோ தெரியவில்லை இவன் மிகச் சிரத்தையுடன் அந்தப் பத்திரிகையைத் தனது பெட்டிக்குள் வைத்து மூடினான்.

இப்படியாக இந்தக் கதை சப்பென்று முடிந்தது.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=394

 

 

Edited by கோமகன்

Share this post


Link to post
Share on other sites
இன்றைக்கு நண்பர் ஒருவர் இமெயில் செய்தி ஒன்று அனுப்பி இருந்தார், அதில் ஆனந்தசங்கரி தெரிவில் பல விடையங்கள் தெளிவுவில்லை என்றும், இதன் பின்னால் இவர் இவர் இருக்கிறார் என்றும்... ஒரு கடிதம்..உங்களுக்கும் வந்திருக்கும்.
அதை வாசித்த பின்பு அவருக்கு பதிலும் போட்டிருந்தேன், அந்த செய்தியில் எனக்கு தெரிய "சில" "புனைகதைகள்" இருக்கிறது. அதை தவிர எனக்கு ஒன்றும் சொல்லத்தெரியாவில்லை என்று.
அடிப்படையில்; இப்படி கதை சொல்லுபவர்களும், கடிதங்கள் எலுதுபவர்களும், ஒரு இலக்கு/நோக்கம்  வைத்துள்ளார்கள்; தங்களுது சொந்த கருத்தை புகுத்தும் பண்பு..அது 10 வீதமா 24 கரட்ட என்று அறிய எல்லோராலும் முடியாது. 
இந்த கதையிலும்  "புகுத்துகிற" அளவு 10, 15, 20, 50, 100 வீதமா என்று அறியாதவரைக்கும்..யாரும் தொடப்போவதில்லை..

Share this post


Link to post
Share on other sites

சோபா சக்தியின் கருத்துக்களை புறந்தள்ளுபவனாக இருப்பினும் அவரது எழுத்துநடையைப் புறந்தள்ள முடியாது. தமிழுலகின் நல்ல கதை சொல்லி.

 

இவனை வைத்துக் கதை எழுதுவது ஆய்க்கினை பிடித்த வேலை. இவன் எப்போது என்ன நினைப்பான், எதற்குக் கவலைப்படுவான், எதற்கு மகிழ்ச்சியடைவான், எதற்குப் பதற்றமடைவான் என்று ஒரு இழவும் விளங்கவில்லை. இது போதாதென்று இவனது உள்ளுணர்வு வேறு கதையை ஒரு பக்கமாக இழுக்கிறது

 

அருமையான கதை நகர்வு

Share this post


Link to post
Share on other sites

1985 வரை ‘செம்படை’ என்றொரு தமிழீழப் போராட்ட இயக்கமும் இயங்கி வந்தது.....###இதில்தான் முன்னால் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் இருத்தறாம் பின்னே புலிகளுடன் இணைத்தார் அவர் அண்ணன் மூர்த்தி அவர்களின் முயற்ச்சியால் என்பது உண்மையா .

Share this post


Link to post
Share on other sites
கதை சொல்லி வேலையில்லை அந்த மாதிரி இருந்தது.இணைப்பிற்கு நன்றி கோ
 
அவர்கள் இருவரும் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் :unsure:

Share this post


Link to post
Share on other sites
கதை சொல்லி வேலையில்லை அந்த மாதிரி இருந்தது.இணைப்பிற்கு நன்றி கோ
 
அவர்கள் இருவரும் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் :unsure:
 
கதை, சொல்லிவேலையில்லை, அந்தமாதிரி இருந்தது. இணைப்புக்கு நன்று கோ. அவர்கள் இருவரும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
 
இப்படி எழுத முயற்சிக்கவும் றதி அவர்களே.

Share this post


Link to post
Share on other sites
அந்தத் தடித்த, கறுத்த மனிதனின் புகைப்படத்துடன்
கறுத்த தடியன் என்றால் எல்லோருக்கும் ஒரு வில்லன் என்ற நினைப்பு....தமிழ் சினிமாவிலும் கறுத்த தடியனைதான் வில்லனாக அதிகம் காட்டுவினம் ..முற்போக்கு எழுத்தாளர்மாரும் கறுத்த தடியனைதான் வில்லங்கம் பிடிச்ச மனுசனாக காட்டியினம்

Share this post


Link to post
Share on other sites

 

கதை சொல்லி வேலையில்லை அந்த மாதிரி இருந்தது.இணைப்பிற்கு நன்றி கோ
 
அவர்கள் இருவரும் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் :unsure:
 
கதை, சொல்லிவேலையில்லை, அந்தமாதிரி இருந்தது. இணைப்புக்கு நன்று கோ. அவர்கள் இருவரும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
 
இப்படி எழுத முயற்சிக்கவும் றதி அவர்களே.

 

 

 

நீங்கள் சிறந்த எழுத்தளார் தான் ஒத்துக் கொள்கிறேன்.பல பெயர்களில் வந்து எழுதும் கதைகளே சாட்சியாய் இருக்கிறதே :) ஆனால் ,இங்கு பல பேர் எழுதுகிறார்கள்.அப்படி இருக்கும் போது எனக்கு மட்டும் எங்கே கமா,முற்றுப் புள்ளி எங்கே போட வேண்டும் என்று சொல்லும் அவசியம் என்ன?
 
நான் நீங்கள் சொன்னதை கவனத்தில் எடுக்க முயற்சி செய்கிறேன்.ஆனால்,நீங்கள் எழுத்துப் பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்யுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

 

இன்றைக்கு நண்பர் ஒருவர் இமெயில் செய்தி ஒன்று அனுப்பி இருந்தார், அதில் ஆனந்தசங்கரி தெரிவில் பல விடையங்கள் தெளிவுவில்லை என்றும், இதன் பின்னால் இவர் இவர் இருக்கிறார் என்றும்... ஒரு கடிதம்..உங்களுக்கும் வந்திருக்கும்.
அதை வாசித்த பின்பு அவருக்கு பதிலும் போட்டிருந்தேன், அந்த செய்தியில் எனக்கு தெரிய "சில" "புனைகதைகள்" இருக்கிறது. அதை தவிர எனக்கு ஒன்றும் சொல்லத்தெரியாவில்லை என்று.
அடிப்படையில்; இப்படி கதை சொல்லுபவர்களும், கடிதங்கள் எலுதுபவர்களும், ஒரு இலக்கு/நோக்கம்  வைத்துள்ளார்கள்; தங்களுது சொந்த கருத்தை புகுத்தும் பண்பு..அது 10 வீதமா 24 கரட்ட என்று அறிய எல்லோராலும் முடியாது. 
இந்த கதையிலும்  "புகுத்துகிற" அளவு 10, 15, 20, 50, 100 வீதமா என்று அறியாதவரைக்கும்..யாரும் தொடப்போவதில்லை..

 

 

ஒரு கதையில் வருகின்ற சம்பவங்கள் உண்மையா பொய்யா என்பதற்கப்பால் அந்தக் கதை சொல்லபட்டு அதன்  முடிவுரையில் தான் அந்தக் கதையின் வெற்றி தங்கி இருக்கின்றது . என்னைப் பொறுத்தவரையில் சோபாசக்தியின் கதை சொல்லும்  ஆற்றல் தனித்துவமானது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி எரிமலை  .

Share this post


Link to post
Share on other sites

சோபா சக்தியின் கருத்துக்களை புறந்தள்ளுபவனாக இருப்பினும் அவரது எழுத்துநடையைப் புறந்தள்ள முடியாது. தமிழுலகின் நல்ல கதை சொல்லி.

 

இவனை வைத்துக் கதை எழுதுவது ஆய்க்கினை பிடித்த வேலை. இவன் எப்போது என்ன நினைப்பான், எதற்குக் கவலைப்படுவான், எதற்கு மகிழ்ச்சியடைவான், எதற்குப் பதற்றமடைவான் என்று ஒரு இழவும் விளங்கவில்லை. இது போதாதென்று இவனது உள்ளுணர்வு வேறு கதையை ஒரு பக்கமாக இழுக்கிறது

 

அருமையான கதை நகர்வு

 

உள்ளதை உள்ளபடி சொல்லியிருகின்றீர்கள் எழுஞாயிறு மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு :) :) .

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this