Sign in to follow this  
லியோ

திலீபன்

Recommended Posts

ஊரெழு யாழ் நகரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செழிப்புமிக்க கிராமம் .இக்கிராமத்தை பலாலி வீதி ஊடறுத்து கிழக்கு,மேற்கு என பிரிக்கிறது.இக்கிராமத்தில் 27/11/1963 அன்று திரு,திருமதி இராசையா தம்பதியினருக்கு

இளைய மகனாக பாத்தீபன் பிறந்தான்.

அவனது தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர்.அவனது தாயார் அவன்

குழந்தையாய் இருக்கும் போதே இறந்து போனார்.இவனது தந்தை

தாயாகவும் தந்தையாகவும் இவனையும் இவனது மூன்று மூத்த

சகோதரர்களையும் வளர்த்தார்.

இவன் சிறுவயதிலிருந்தே இரக்ககுணம்  நிறைந்தவனாகவும்

எல்லோருடனும் பாசமாய் பழகுபவனுமாய் இருந்தான்.

கல்வியில் சிறந்து விளங்கியதால் யாழ் இந்துக்கல்லூரியில்

கற்கும் வரம் பெற்றான்.யாழ் இந்துக்கல்லூரி பல கல்விமான்களையும்

விடுதலைப்போராளிகளையும் தந்த  யாழ் மண்ணின் கல்விச்சோலை.

இவன் கல்வியில் மிகுந்த அக்கறையோடு எதையும் ஆராய்ந்து

கற்று வந்தான்.இவன் சதுரங்க விளையாட்டிலும் அதிக விருப்பு

கொண்டிருந்தான்.சக மாணவர்களுடன் மிகவும் அன்பாய் பழகுவான். பாடசாலை நிகழ்வுகளில் சிரத்தையுடன் பங்குபற்றுவான். கல்விப்பொதுத்தராதர உயர்தர விஞ்ஞானப்பிரிவில் சிறந்த பெறுபேறுபெற்று   

பல்கலைக்கழகத்திற்கு  தெரிவானான்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்களை துன்புறுத்தி வருவதை

நூல்கள் ஊடாக அறிந்த இவன்.1981ஆம் ஆண்டு சிறிலங்கா அமைச்சர் ஒருவரின் தலைமையில்

தென்கிழக்காசியாவில் பழமைவாய்ந்த,சிறந்த நூலகங்களில் ஒன்றும் தமிழரின் கல்விக்கோயிலுமான   யாழ் நூலகம் எரிக்கப்பட்டவுடன் மனம் நொந்து போனான். 1983 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசின் நேரடி பங்களிப்புடன் சிங்களவர்களால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட   காட்டுமிராண்டித் தாக்குதலால் தமிழ் மக்கள் உயிர்களை இழந்தும்,சொத்துக்களை இழந்தும் பல ஆயிரக்கணக்கில்

அகதிகளாய் தமிழர் பிரதேசத்திற்கு எண்ணெய்க்கப்பல்களில் அனுப்பப்பட்டார்கள். 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தனி நாட்டுக்கோரிக்கையிட்கு

மிக்க ஆதரவு வழங்கியிருந்தார்கள். மக்களின் விருப்பத்தை முழுமையாய் ஏற்றும் ,சிங்கள அரசின்

கொடூரச்செயல்களிலிருந்து தமிழ் மக்களைக்காக்க போராடுவதே

சிறந்த ஒரே மார்க்கம் என கருதி 1983 ஆம் ஆண்டு நடுப்பகுதியில்

தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டான்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் "திலீபன்"எனும் நாமம் ஏற்று

முகாம் பயிற்சியுடன் வலிகாமத்தின் ஒரு பிரதேசத்தில்  அரசியல்

வேலைகள் செய்யத்தொடங்கினான்.ஓய்வற்ற உழைப்பாளியாகவும்,

தெளிவான பேச்சாற்றல் உள்ளவனாகவும் தலைவன் மீதும் விடுதலை மீதும் ஒப்பற்ற பற்றுள்ளவனாயும் இருந்தான்.அக்காலத்தில் யாழ்ப்பா  

மாவட்டத்திற்கு பொறுப்பாக பண்டிதர் அண்ணா இருந்தார்.

மக்களோடு மக்களாய் நின்றான்.அமைதியும் சிரிப்பும்

கதையும் அவனொரு தனி ரகமாய் இருந்தான்.அக்காலத்தில்

பல இயக்கங்கள் தமிழர் மத்தியில் இருந்தன.மக்கள் மத்தியில்

கடமை செய்வது கடினமாயும்,மகிழ்வாயும் அவனுக்கு இருந்தது.

அவனிடம் எப்போதும் இரண்டு சோடி உடுப்புக்களே இருந்தன.

அவன் போராளிகளின் வரைவிலக்கமாய் இருந்தான்.

அவனது பழைய சைக்கிள் ஒழுங்கை ஒழுங்கையாய்  ஓடியது .சில நேரங்களில் வயல் வரம்புகளாலும் ஓடியது .சிங்களப்படைகள் சுதந்திரமாய் கரும் பாதைகளில் திரிந்த காலம்.சைக்கிள் கரியரில் விடுதலைப்புலிகளின் வெளியீடுகளைச்  சுமந்தும் அவன் சிரித்த முகத்துடன் எங்கும் நிற்பான்.ஆட்களை தேர்ந்து போராளியாக்கினான்.

ஒரு நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே அவன் பொது மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு ஜீப் வண்டிகள் அவரின் அருகிலேயே முன்னும் பின்னுமாக வந்து நின்றன சிறீலங்கா படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதை உணர்ந்த திலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் நிதானமாக நின்றான்.

திலீபனை அடையாளம் கண்டு கொண்ட படையினர் ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர். அவரது கையிலே சிறிய " சூட்கேஸ்" இருந்தது. அவனுக்கு பின்னால் ஒரு படையினன் வந்தான். ஜீப் வண்டியில் ஏறுவதுபோல் பாசாங்கு செய்த திலீபன் அருகில் வந்த படையினன் எதிர்பாராத விதமாக அவன் முகத்தில் சூட்கேசினால் அடித்தான்.படையினன் நிலை குலைய  பக்கத்திலிருந்த  பனந்தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினான். ஏதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்துவிட்ட படையினர்  ஒரு நிமிடம் என்ன செய்வதென்று திகைத்து நின்றனர். மறுகணம்…. அவர்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் சுடத் தொடங்கின.  படையினரால் அவனை பிடிக்க முடியவில்லை. அவனுக்கு அத்தனை ஒழுங்கைக்களுமே பழக்கப்பட்டவை.

எப்படி அந்நியன் அவனை துரத்திப்பிடிக்க முடியும்

திலீபன் ஓடும்போது ஒரு மதிலையும் பாய்ந்திருந்தான்.பின் ஒரு நாளில் நண்பரை கூட்டிப்போய் அந்த மதிலைப்பார்த்துவிட்டு அந்த நேரம் இதை பாய்ஞ்சிட்டன்  இப்ப எண்டால் ஏலாது என்று மற்றவர்களையும் சிரிக்க வைத்து சிரித்தான்.

 

    

இயக்க வளர்ச்சியுடன் பழைய சைக்கிள் புது ஏசியா சைக்கிளாகி

பின் சிறிய ரக மோட்டார் சைக்கிலாயிற்று.அவனது கடமையும் அதிகரிக்கப்பட்டது.

 1984 ஆம் ஆண்டு பிற் பகுதியில்  சுழிபுரம் பகுதியில் ஆறு இளம் போராளிகளை

புளொட் அமைப்பு கடத்தி,சித்திரவதை செய்து கொலை செய்தது. அச்சுவேலியில் சிங்களப்படைகளின்

சுற்றிவளைப்பில் 09/01/85அன்று பண்டிதர் அண்ணா,நேரு உட்பட

ஒன்பது போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்.இச்சம்பவங்கள் அவனை பாதித்தன.

அவன் மேலும் மேலும் கடமையில் மூழ்கிப்போனான்.

பண்டிதர் அண்ணாவின் வீரச்சாவிற்கு பின் கிட்டு அண்ணா

யாழ் மாவட்ட பொறுப்பாளராய் நியமிக்கப்பட்டார்.கிட்டு அண்ணாவால்

திலீபன் யாழ் மாவட்ட பொறுப்பாளராய் நியமிக்கப்பட்டான்.அரசியல்

பொறுப்பாளனாய் சுழன்று திரிந்தான்.யாழ் பல்கலைக்கழகத்தில்

மாணவர்களுடன் கதைத்துகொண்டிருப்பான்.அடுத்த மணி நேரத்தில்

கிராமம் ஒன்றில் மக்களுடன் கதைத்துக்கொண்டு இருப்பான்.

இப்பொழுது ஓரளவு பெரிய மோட்டார் சைக்கிளில் திரிந்தான்.இழப்புக்கள் இல்லாமல்

யாழ் போலிஸ் நிலையம் தாக்கி அழிக்கப்பட்டு ஆயுதங்கள்

கைப்பற்றப்பட்டன. கிட்டு அண்ணாவின் காலத்தில் இராணுவ  நகர்விற்கு  

எதிராய் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன.யாழ் நகரும் விடுதலைப்புலிகளின்

கட்டுப்பாட்டுக்குள் வந்தது.இவனும் சண்டை சத்தம் கேட்க களத்தில் நிற்பான்.

மாணவர் அமைப்பு,மகளிருக்காக "சுதந்திரப்பறவைகள்"அமைப்பு ,

கிராமிய விழிப்புக்குழுக்கள் நீதி மன்றங்கள் ,சுதேச உற்பத்திக்குழுக்கள்,

களத்தில் பத்திரிகை வெளியீடு,என பலவற்றின் உருவாக்கம் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினான்.

 

வடமாராட்சியில் இராணுவத்தாக்குதல் ஒன்றில் வயிற்றில் காயமடைந்தான். சத்திரசிகிச்சையில் ஒரு அடி சிறுகுடல் அகற்றப்பட்டது.மயக்க மருந்திலிருந்து

தெளிவடையும் போதும் அண்ணா என்று தலைவரையும்,கிட்டு அண்ணா என்று கிட்டு அண்ணனையும் மாறி மாறி புலம்பிக்கொண்டிருந்தான்

 

 

மக்கள் பிரச்சனைகள்,தேவைகளை பொறுமையாய் கேட்டு

தீர்த்துக்கொண்டிருப்பான்.இயக்கங்களுக்குள் வரும் தகராறுகளை

தீர்க்கவும் அவனது பிரசன்னம் அவசியமாய் இருக்கும்.மென்மையான

மனம் உள்ள அவன் தனது அர்ப்பணிப்பான/ஈடுபாட்டால்த்தான்

அவன் தனது கடமையில் வென்று நின்றான்.மற்றைய இயக்கத்தினராலும் விரும்பப்பட்டான்.மக்களின் மிக்க பாசத்திற்கு உரியவனாய் இருந்தான்.

 

அவன் தனக்கு அடுத்ததாய் ஒரு போராளியை வளர்த்தான்.

அந்த போராளியோ திடீரென இயக்கத்தில் இருந்து விலத்திவிட்டான்.

பின் விலத்திய போராளி திலீபனுடன் கதைக்க பலமுறைமுயன்றும்

திலீபன் இறுதிவரை அவனுடன் கதைக்கவில்லை.

 

 

1987 ஆம் ஆண்டு சிங்கள சிறிலங்கா அரசு வடமாராச்சி பிரதேசத்தை

கைப்பற்ற ஒப்பரேசன் லிபரேசன் எனும் பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.இந்நடவடிக்கையால் பல மக்கள் கொல்லப்பட்டு,சொத்துக்கள் அழிக்கப்பட்டு மிகுதி மக்கள் அகதிகளாய் துரத்தியடிக்கப்பட்டனர்.  இந்த நடவடிக்கையிட்கு

எதிராய் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த சிங்கள படையினர் மீது விடுதலைப்புலிகள் திட்டமிட்ட தாக்குதல் ஒன்றை 5/7/1987அன்று நடத்தினர்.

கரும்புலி மில்லர் தாக்குதலுக்காக சக்கை (வெடி மருந்து )ஏற்றப்பட்ட வாகனத்தில் ஏறினான். மில்லர் விடைபெறும் நேரம் திலீபனும் அந்த வாகனத்தில் ஏறிவிட்டான். திலீபன் போராளிகளிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தான்.மில்லரும் அப்படித்தான்.போராளிடம் இருந்த உறவு ஒரு தனித்துவமானது .மில்லர் திலீபனை பாசத்துடன் கடிந்து வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டான்.

வாகனம் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான் திலீபன்.

அந்த தாக்குதல் வெற்றியுடன் நிலை குலைந்த சிங்கள அரசு

இந்தியாவின் தயவை நாடிற்று. இந்திய -இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாயிற்று.

இந்தியா தனது நலன்களிலேயே குறியாய் இருந்தது.இலங்கையோ

தமிழரை சிதைப்பதிலேயே குறியாய் இருந்தது.தமிழர்களின் நலன்கள்

திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன.விடுதலைப்புலிகள் தமிழர்

நலனில் விட்டுக்கொடுப்புகள் அற்று இருந்தமையால் இந்தியாவின்

முகத்திரை கிழிக்கப்பட்டது.இந்தியா ஆரம்பம் முதல் தனது பிரித்தாளும்

தந்திரத்தால் இயக்கங்களை மோதவிட்டு போராட்டத்தை நசுக்கி வந்தது.

எடுப்பார் கைப்பிள்ளைகளாய் இருந்த இயக்கங்களை வைத்து தனது

பிராந்திய அரசியலை நகர்த்த திட்டமிட்டது.

விடுதலைப்புலிகள் தமிழரின் அன்றைய நலன் சார்ந்த மிகவும் அடிப்படையான

ஐந்து கோரிக்கைகளை  இந்திய  அரசாங்கத்திடம் முன் வைத்து கால அவகாசத்தையும் கொடுத்தனர்.

 

ஐந்து அம்சக் கோரிக்கை

1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

 

இந்தியா  அரசோ விடுதலைப்புலிகளை அடக்கி வைத்தால் தான்

நினைத்ததை செய்யலாம் என்று எண்ணியது.மிரட்டி அடிபணியவைக்க முனைந்தது.

கால அவகாசம் நிறைவுபெற்றும் இந்தியா எந்தப்பதிலும் தராமல்

மிலேச்சத்தனமாய் இருந்தது.விடுதலைப்புலிகள் வேறு மார்க்கமின்றி

அகிம்சை வழியில் போராட முடிவெடுத்தனர்.உலகிற்கு அகிம்சையை

போதித்த இந்தியா நல்ல தீர்வு தரும் என்று நம்பினர்.

 

திலீபன் தானாக முன்வந்து உணவு ,நீர் அற்று சாகும்வரை உண்ணாவிரதம்

இருக்க தலைவரிடம் ஆணை கேட்டான்.தலைவர் அவர்கள் திலீபன்

இடத்தில் உள்ள மன உறுதியை நன்கு அறிந்தவர்.அவர் திலீபனுக்கு

அச் சந்தர்ப்பத்தை வழங்கினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 1986 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இந்தியாவில் தங்கி இருந்த  போது, தங்களது தகவல் தொடர்புச் சாதனங்களை இந்திய அரசு கைப்பற்றியதைக் கண்டித்துநீர்கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துஉலகில் புதிய அத்தியாயம் ஒன்றை அகிம்சைப்போரில் ஆரம்பித்துவைத்தார்.எம் ஜி ஆரின் நெருக்குதலாலும்  இரண்டாம் நாளே இந்திய அரசு அச் சாதனங்களை ஒப்படைத்திற்று.   தலைவரின் போராட்ட வழியையே பின்பற்ற திலீபன் விரும்பினான்.  

திலீபன் நல்லூர் வீதியில் தனது யாகத்தை 15/9/1987அன்று காலை 9.45 மணிக்கு ஆரம்பித்தான்.

முருகப்பெருமானின் அந்த வீதி நாளுக்கு நாள் மேலும் மேலும்

மக்களால் நிரம்பிக்கொண்டிருந்தது.மக்களின் அழுகையும் நாளோடு

அதிகரித்திருந்தது.இன்னொரு மேடையில் கலை நிகழ்வுகளும்

நடந்தது.மேலும் மூன்று மக்கள் திலீபனுடன் உண்ணாவிரதத்தில் இணைந்துகொண்டனர்.

தலைவர் அவர்கள் இரண்டு நாட்கள் திலீபனை வந்து பார்த்து சென்றிருந்தார்.

எந்தப்போராளிகளின் முகத்திலும் மகிழ்வு இல்லை.மக்கள் வெந்து

கொண்டிருந்தனர்.திலீபன் உடல் நோவினால் அவஸ்த்தைப்பட்டாலும்

இயன்றவரை வெளிக்காட்டாமல் இருந்தான்.அவன் மக்கள் முன் உரையாற்றினான்.

   

"எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்றுகொண்டு பேசமுடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுய நினைவுடன் இருப்பேனோ என்பது தெரியாது. அதனால் இன்று  உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம், அறுநூற்று ஐம்பது பேர் இன்று வரை மரணித்துள்ளனர்  . மில்லர் இறுதியாகப் போகும்போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதிவரை இருந்தேன். "நான் எனது தாய்நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்ணால் காணமுடியாது என்பதே ஒரே ஏக்கம்" என்று கூறிவிட்டு, வெடிமருந்து நிரப்பிய லொறியை எடுத்துச் சென்றான். வீரச்சாவு அடைந்த  அறுநூற்று ஐம்பது பேரும் அநேகமாக எனக்குத் தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்கமாட்டேன்.

தனது உயிரைச் சிறிது கூட மதிக்காத தலைவனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தை, தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரும். இதனை வானத்தில் இருந்து, இறந்த அறுநூற்று ஐம்பது போராளிகளுடன் சேர்ந்து, நானும் பார்த்து மகிழ்வேன். நான் மன ரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடன் உங்களிடம் இருந்து இறுதி விடைபெறுகின்றேன்.

 

ஒரு நாள் நல்ல மழை பெய்தது.திலீபன் மக்களை

கோவிலுக்குள்ளும்,கூடாரங்களுக்குள்ளும் போக தன்

கைகளால் அசைத்து அசைத்து சைகை காட்டிக்கொண்டிருந்தான்.மக்களோ

அசையவில்லை.  தன்னை உருக்கி பிறருக்கு ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்தியாக ஒவ்வொரு கணத்திலும் உருகிக்கொண்டே இருந்தான்.

 

 

திலீபன் மீண்டும் மக்கள் முன் உரையாற்றினான்.

 

அன்பார்ந்த தமிழீழ மக்களே ! விளக்கு அணையுமுன்பு பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேசமுடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்! ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. வீரச்சாவு அடைந்த  போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651 ஆவது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது அவயவங்கள் செயலிழப்பதனால், இனிமேல் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும். எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் தடுக்காதீர்கள்.  "

திலீபன் நாளுக்கு நாள் துவண்டு போய்க்கொண்டிருந்தான்.

கொண்ட கொள்கையில் மட்டும் மேலும் மேலும் உறுதியாய் இருந்தான்.

திலீபன் இறுதியாய் ஆற்றிய உரை "என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். . நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான். வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நான் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்" 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்"

இந்தியா உயரதிகாரிகளுடனான விடுதலைப்புலிகளின் இரு சந்திப்புகளும்

வீண் விரயமாய்ப்போகவே ஈழத்தாயின் மகன் 26/9/1987அன்று காலை 10.48 மணிக்கு தியாகச்சாவு அடைந்தான்.   

நல்லூர் வீதியில் குழுமி நின்ற மக்கள்

குரல் எறிந்து கத்தினர்.நல்லூர்ப்பிரதேசம் எங்கும்

அந்த அழுகையொலி கேட்டது.தமிழரெல்லாம் தங்கள்

வீட்டில் ஒருவனை இழந்ததாய் அழுது குளறினர்.

அவன் இறுதி நாட்களில் கிட்டண்ணாவை சந்திக்க

விரும்பி இருந்தான்.கிட்டண்ணா இந்தியாவில் இருந்தார்.

இவனின் இந்த விருப்பம் தலைவருக்கு தெரிந்திருக்கவில்லை

 லெப்டினன்ட் கேணல் திலீபன்  அவர்களின் வித்துடலுக்கு இலச்சக்கணக்கான

மக்கள் தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர்.

திலீபனின் விருப்பப்படி அவனது வித்துடல் யாழ் பல்கலைக்கழகத்தின்

மருத்துவ பீட உடலமைப்பியல் பிரிவுக்கு வழங்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு திலீபனின் நினைவு நாளன்று

யாழ் கோட்டை சிங்களப் படையினரிடமிருந்து மீட்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.

1995 ஆம் ஆண்டு சிங்கள இராணுவம் வலிகாமத்தை கைப்பற்றும்போது

திலீபனின் வித்துடலை பாதுகாக்கும் பொருட்டு அவரது வித்துடல்

வன்னிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

சிங்கள இராணுவத்தின் ஜெயசுக்குறு நடவடிக்கையின் போது

திலீபனின் நண்பன் ஒருவன் தலைவரிடம் கேட்டான்.அண்ணா

திலீபனின் உடலை விதைப்போமா?அவனது உடலை ஓரிடத்தில்

வைத்துவிட்டு எமது தனிப்பட்ட வேலைகளைச் செய்வது கடினமாக இருக்கிறது என்றான்.

தலைவர் யோசித்துவிட்டு சொன்னார்.அது திலீபனின் விருப்பப்படி

மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கவேண்டும்.

வன்னியில் முத்தையன்கட்டு,வள்ளிபுனம்,அறிவியல்நகர் என

திலீபனது வித்துடல் நன்கு பராமரிக்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தது, இறுதி இடப்பெயர்வுகளோடு பாதுகாப்பாக அதுவும் கொண்டு செல்லப்பட்டது. பங்குனி மாதம் 2009 ஆம் ஆண்டு அவனது வித்துடல் பாதுகாப்பாய் புதைக்கப்பட்டது.அவனது உடலை பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கமுடியாது. ஆனால் அவனது வன்கூட்டுத்தொகுதி(எலும்புகள்) களையாவது பல்கலைக்கழகத்திற்கு கொடுப்போம் என்ற நம்பிக்கையில் தாய்மண்ணுக்குள் ஒளிக்கப்பட்டது   . திலீபன் இன்னும் தான் நேசித்த மக்கள் மனதில் வாழ்கிறான். இனியும் வாழ்வான் .

 

 

 

-சுருதி-

  • Like 9

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் இன்று நடந்த நிகழ்வு போல இருக்கிறது. திலீபனண்ணா உருகியுருகித் தன்னை தற்கொடை தந்த அந்த நாட்களில் திரும்பவும் கொண்டு போய்விட்டுள்ளது உங்கள் பதிவு.  மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று சொன்ன அந்தப்புனிதனின் நினைவுகளை மீட்டியமைக்கு நன்றிகள்.

இறுதி வரை காப்பாற்றப்பட்ட அந்த உன்னதமானவரின் வன்கூட்டுத்தொகுதி என்றாவது ஒருநாள் நிச்சயம் அவரது ஆசைப்படி பல்கலைக்கழக மாணவர்களிடம் கிடைக்கும்.

நன்றி லியோ அண்ணா அவ்வப்போது வந்து இத்தகைய வரலாறுகளைப் பதிந்து செல்லும் போது மீண்டும் அந்தநாட்களில் மனசைக் கொண்டு போய் சேர்த்துவிடுகிறீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

திலீபன்ணை பற்றிய ஒரு வரலாற்று நினைவூட்டல் பதிவு

 

நினைவு நாள் வணக்கங்கள்

 

 

Share this post


Link to post
Share on other sites

திலீபன் ஒரு காவியம்

காந்தியையே நாணச் செய்தவன்!

 

நினைவுநாள்  வணக்கங்கள்

 

Share this post


Link to post
Share on other sites
கருத்திட்ட,விருப்பிட்ட,வருகை தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
 
இருபத்தி மூன்று முழு வருடங்களே உயிர்வாழ்ந்த தியாகி திலீபனின் (27/11/63 - 26/09/87)நினைவுகள் இருபத்தி ஆறு  முழு வருடங்களை கடந்து போகிறது.
 
மாவீரர் நாளில் நாங்கள் திலீபனையும்,தளபதி பால்றாஜையும்( 27/11/65) நினைப்போம் ஏனெனில் அது இவர்களது பிறந்தநாளும் கூட.
Edited by லியோ
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

இருபத்தி மூன்று முழு வருடங்களே உயிர்வாழ்ந்த தியாகி திலீபனின் (27/11/63 - 26/09/87)நினைவுகள் இருபத்தி ஆறு  முழு வருடங்களை கடந்து போகிறது.
 
மாவீரர் நாளில் நாங்கள் திலீபனையும்,தளபதி பால்றாஜையும்( 27/11/65) நினைப்போம் ஏனெனில் அது இவர்களது பிறந்தநாளும் கூட.

 

 

வரலாற்று நாயகர்கள் இருவரும் ஈழவரலாற்றின் புதிதாயெழும் நாளில் எங்களுக்காய் பிறந்தார்கள்.

 

Share this post


Link to post
Share on other sites

திலீபனின் தியாகம் சாதாரண வார்த்தைகளில் சொல்லிட முடியாதது. அந்த வீரனுக்கு வணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this