Jump to content

'எய்தவர்களுடன் நல்லிணக்கம் - அம்புகளுடன் பகைமுரண்' கூட்டமைப்பின் ராஜதந்திரமோ? குமரன் கார்த்திகேயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'எய்தவர்களுடன் நல்லிணக்கம் - அம்புகளுடன் பகைமுரண்' கூட்டமைப்பின் ராஜதந்திரமோ? குமரன் கார்த்திகேயன்

17 அக்டோபர் 2013

 

Wicki%201_CI.jpg

மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து வடக்கில் நிலவும் சூழ்நிலைகளை அவதானிக்கும் ஒருவருக்கு எற்படக்கூடிய மன வருத்தமும் கோபமும் இந்தக் கட்டுரையில் வெளிப்படையாகத் தெரிகிறது என எவராவது கருதுவாரானல் அது இக்கட்டுரையின் வெற்றியாகும் எமது கடந்த காலங்களை உரிய பொழுதுகளில் மீள்பார்வைக்கு உட்படுத்தாமையினாலும் புறமிருந்து வந்த விமர்சனக்களை புறந்தள்ளியமையினாலும் நாம் எதிர்கொண்ட அனர்த்தங்களை அனைவரும் அறிவோம்.

இனிவரும் காலங்களையும் மௌனத்திற்கு இரையாக்கி எதிர் வரும் பல தசாப்தங்களை கறை படிந்த வரலாறுகளாக மாற்றக் கூடாது என்பதன் வெளிப்பாடாகவே இந்தப் பதிவு அமைகிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் மெல்ல மெல்லத் தவழ்ந்து  எழுந்து தட்டுத் தடுமாறி வாழ்வை நிலைபெறச் செய்யும் பிரயத்தனங்களில் வடக்கு கிழக்கு மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மிகவும் பலவீனப்பட்ட நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டளவில் இலங்கையின் பாராளுமன்ற அரசியலுக்குள் தேவைப்படுகிற ஊன்றுகோலாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கிறது.  இவ்வூன்றுகோலும் உடைந்து சின்னாபின்னமாகப் போகுமானால் தமிழர்கள் முற்று முழுதான அரசியல் அனாதைகளாகி விடுவார்கள்.

மகாணசபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தோன்றிய  ஆசன ஒதுக்கீடு பற்றிய இழுபறி அதன் பின்னர் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தோன்றிய பதவிகளுக்கான  போட்டி எனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் ஒற்றுமையின்மையின் வெளிப்பாடுகள் அண்மைக்காலமாக மிக வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த ஒற்றுமையின்மை ஒன்றும் புதிதாகத் தோன்றியதல்ல. முன்னரே இருந்ததுதான்.

முதலமைச்சர் நியமனத்தில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜாவும் தலைவர் இரா. சம்பந்தனும் மோதிக்கொண்டனர்.  இறுதியில் சம்பந்தன் வென்றார். சம்பந்தர் தான் நினைத்தபடி  சீ.வீக்னேஸ்வரனைக் கொண்டுவந்தார். மாவையும் பெருந்தன்மையுடன் விலகிக் கொண்டார். இதன்போது தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளையும் சீ.வி.கே சிவஞானமும் சம்பந்தருக்கு எதிராகவும் தமிழரசுக் கட்சிக்கு எதிராகவும் அறிக்கை விட்டதுடன் கடுமையாக விமர்சனமும் செய்தார்கள். இந்த முரண்பாடு பதவிப் போட்டியாக, தமிழரசுக் கட்சிக்குள்ளான குத்து வெட்டாக வர்ணிக்கப்படவில்லை.  சீ.வீ.கே சிவஞானம் அவர்கள் தன்னை முதன்மைப்படுத்தும் நோக்கத்துடன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எத்தனை தடவைகள் முரண்பட்டார்? எத்தனை அறிக்கைகளை வெளியிட்டார்?  மக்களின் நலன்களோடு எந்தவகையிலும் சம்பந்தப்படாத அவரது செயற்பாட்டை  தமிழரசுக் கட்சியினர் எந்த வகைக்குள் அடக்கினர்?

ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது சகோதரருக்கு அமைச்சுப் பொறுப்பு கேட்டதும், சித்தார்த்தன் மற்றும் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் தமக்கு அமைச்சுப் பதவிகளைக்  கோரி அவை கிடைக்காததனால் சத்தியப்பிரமாணத்திற்கு செல்லாமல் விட்டதும் வேறு விதமாகப் பார்க்கப்படுகிறது.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் நான் குறிப்பிட்டேயாகவேண்டும்  சுரேஸ் பிறேமச்சந்திரன் தனது சகோதரருக்கு அமைச்சுப் பொறுப்பு கேட்டார் அது கடுமையான விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்தது. ஆனால் அது நிறைவேறாத போதும் அவரது கட்சியைச் சேர்ந்த  ஐங்கரநேசனுக்கு அப்பதவி  கொடுக்கப்பட்ட போது அதனை இட்டுச் சந்தோசமடைய முடியாமல் போனமைக்கு  மக்கள் நலன் சார்ந்த காரணங்கள் ஏதும் இருப்பின் அதனை அவர் தமிழ் மக்களுக்கு புலப்படுத்துவது நல்லது. அப்போதுதான் தனிப்பட்ட நலன்களுக்கும் மக்கள் நலன்களுக்குமான வேறுபாட்டை மக்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

இங்கே தமிழரசுக் கட்சி விடும் தவறுகள் ஒருவிதமாகவும்  தமிழ்க் கூட்டமைப்புள் இருக்கும் ஏனைய கட்சிகள் செய்யும் தவறுகள் இன்னொரு விதமாகவும் வியாக்கியானம் செய்யப்படும் தன்மையைப் பார்க்கிறோம். இந்த இரட்டை அளவுகோல் முறைமை ஆரோக்கியமானதா? சரியானதா?

நான் மேலே சொன்ன இரட்டை அளவுகோல் முறைமையின் வழி தமிழ்தேசியக் கூட்டமைப்புள் உள்ள  முன்னாள்  போராளிக் குழுக்கள்  'ஒட்டுக் குழுக்கள்' என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.  இதன் வழி சித்தார்தனும்  சுரேசும் விலக்கலுக்கு உள்ளாகின்றனர். இங்கும் முரணணி ஒன்றுள்ளது. சுகு என்ற சிறீதரன் தலைமையிலான  பத்மநாபா ஈபீஆர்எல்எவ் அணியினை கூட்டமைப்புக்குள் இணைக்க சுரேஸ் அவர்களே கடும் எதிர்ப்பை வெளியிட்டார். குறிப்பிடத்தக்க விடையம் என்னவென்றால்  ஆனந்த சங்கரி அவர்கள் மகாணசபைத் தேர்தலில் தனக்கு ஒதுக்கப்படும் ஆசனங்களில் ஒன்றைச் சுகு தரப்பிற்கு வழங்க முன்வந்தும் கூட சுரேஸ் அதனை ஏற்க மறுத்ததன் விளைவு பெண்ணியப் போராளியும் சுகுவின் மனைவியுமான ஞானாசக்தி  உண்மையான அரச ஆதரவுக்குழுவான ஈ.பீ.டீ.பீ பக்கம் சென்று விட்டார். கூட்டமைப்பு மறுத்தால் ஈ.பி.டி.பி பக்கம் கட்டாயம் செல்லவேண்டுமா என்பது இன்னுமொரு முக்கியமான கேள்வி. (மட்டக்களப்பு துரைரட்ணத்தை உதிரியாக இணைத்துக் கொண்ட சுரேஸ் சுகுவைக் கட்சியாக இணைக்க முடியாது எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.) சரேஸ் பிறேமச்சந்திரனின் இந்த நிலைப்பாட்டுக்கும் மக்கள் நலன் சார்ந்த விளக்கங்கள் உள்ளனவா?

அடுத்து புளொட் அமைப்பின் சித்தார்தனும் அமைச்சர் பதவிக்குப் பதிலாக  சபைமுதல்வர் பதவியைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பொறுப்பேற்கச் சொன்ன போது அதனை மக்களின் நலன் கருதி பொறுப்பேற்றுக் கொண்டு  கட்சியுள் தொடர்ந்தும் தமது அரசியல் நிலப்பாடுகளின் அடிப்படையில் போராடி இருக்க வேண்டும். தன் தொடர்பாகவும் தனது கட்சிதொடர்பாகவும் பலருக்கு நிலவும் அச்சத்தை போக்க தனது முன்னுதாரணத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதில் இருந்து  கள அனுபவங்களோடு நீண்ட அரசியல் அனுபவங்களையும் வைத்திருக்கும் சித்தார்த்தன் அவர்கள் இந்தப் பதவிச் சச்சரவுகளுக்கு அப்பால் சென்று சிந்திக்க வேண்டிய காலம் இது....

ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனது கட்சிக்குள்ளேயே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாமல் தலைமைத்துவத்தைக் கைவிடும்  நிலைவரை சென்று  அமைதி கண்டார். அவரும் ஆரம்பத்தில் தனது மைத்துனருக்கு அமைச்சுப்பதவி கேட்டிருந்தார். ஆயினும் ஒருவாறு பிரச்சனைகளைச் சமாளித்து முன்னாள் நீதியரசரின் பாராட்டைப் பெற்று ஒட்டுக்குழு என்ற குற்றச்சாட்டில் இருந்து மயிரிழையில் தப்பித்துக்கொண்டார்.

சிவாஜிலிங்கம் வழமைபோலவே தனது குழப்பகரமான செயற்பாடுகளால்  சர்ச்சைக்குரிய அரசியல்வாதி என்ற தனது பெயரைக் காப்பாற்றுவதில் மிகக்கவனமாக இருக்கிறார். அவரை விட்டுவிடுவோம்.

இன்னுமொரு உதாரணத்தையும் பார்ப்போம்.  விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் ஆரம்பத்தில் ஆனந்தசங்கரி  தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்தார். அவரை அப்பதவியில் இருந்து  அகற்றும் நோக்குடன் தமிழரசுக் கட்சியின் பல கனவான்கள் புலிகளின் தலமைக்கு ஆனந்த சங்கரியைப்பற்றிக் கோள் சொல்லித் திரிந்தனர். (இது இன்று எஞ்சியிருக்கும் சில புலிகளின் முக்கியஸ்த்தர்களுக்கும் தெரியும்.) இக் கோள் சொல்லல்களால்  ஏற்பட்ட முரண்பாடே ஆனந்தசங்கரியைப் புலிகளிற்கு எதிரான நிலைக்கு தள்ளியது. ஆனந்தசங்கரி இன்று துரோகிப்பட்டத்தை சுமப்பதற்கு உள்ளக முரண்பாடுகளே முதலடியை எடுத்துக் கொடுத்தன. இன்றைக்கு ஒட்டுக்குழுக்கள் எனச் சொல்லப்படுகிற அமைப்புக்களும் இனவாத அரசாங்கத்தின் நிழலில் தஞ்சமடைந்ததற்கு அடிப்படையான காரணமும் உள்ளக முரண்பாடுகள் சரியான முறையில் கையாளப்படாமையே.

எவ்வாறெனினும் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர்விடுதலைக் கூட்டணியும், தர்மலிங்கம் சித்தார்தன் தலைமையிலான புளொட்டும் இணைக்கப்பட்டன. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் இவர்களுடன் இணைந்து செயற்படும் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவாளர்களும் உள்ளூர அதிருப்தி கொண்டிருந்தனர். ஆனால் கூட்டமைப்புத் தலைமையிடம் இவர்கள் வெளிப்படையாகவும், உறுதியாகவும் தமது எதிர்ப்பைக் காட்டவில்லை.  மாறாக பா. அரியநேந்திரனும், சிவஞானம் சிறீதரனும் அப்பொழுது சிறு சிறு சலசலப்புகளோடு மௌனித்திருந்து விட்டு தேர்தல் காலத்தில் கிளிநொச்சியில் ஆனந்தசங்கரிக்கு எதிராகவும், முல்லைத் தீவில் புளொட் அமைப்பிற்கும் எதிராகவும் சிறீதரன் அணியினருடன் இணைந்து தேர்தல்பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு கடுமையான சேறடித்தலிலும் ஈடுபட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இணைத்துவிட்டு தமது வேட்பாளர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்ட போது அதனை கூட்டமைப்பின் தலைமை கண்டும் காணாது இருந்தது.

இவ்விடத்தில் சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம். புலிகளின் காலத்தில் அவர்களுக்கு எதிரணியில் அல்லது அரசாங்கத்துடன் இணைந்து இயங்கியவர்களை ஒட்டுக்குழுக்கள் என்று ஊடகங்கள் விளிக்கின்றன. தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தராக தன்னை அடையாளப்படுத்தும் பா. அரியநேந்திரன் இத்தகைய விபரிப்புக்களை தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் கொள்ளுகிறார். பா அரியநேந்திரன் அவர்கள்  கூட்டமைப்பில் இருந்த போதுதான்  சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையில் இயங்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் இயங்கிய ரெலொ அமைப்பும் விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றிற்கும் சென்றார்கள். அதன் பின்பு இவ்விரு கட்சிகளும் ஒரு போதும் அரசாங்க சார்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கவில்லை. ஆனால் இப்போது இந்தக் கட்சிகளில் ஒன்றை வெளிப்படையாகவே ஒட்டுக் குழுவாக விமர்சிக்கும் பா. அரியநேந்திரனும், மறைமுகமாக விமர்சிக்கும் சிவஞானம் சிறிதரனும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அன்றைக்கே இவர்களைச் சேர்க்க வேண்டாம் எனச் சொல்லத் துணியவில்லை.  இன்றைக்கும் துணியவில்லை. காரணம் என்னவாக இருக்கும்..?

உண்மையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவில் அனைவரும் இணைந்து ஒரே அணியில் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தால் அரசாங்கக் கட்சி ஆசனமொன்றைப் பெற்றுக் கொள்வதைத் தடுப்பதற்கான முழு முயற்சியும் எடுக்கப்பட்டதாக இருந்திருக்கும்.  ஆனந்த சங்கரி மற்றும் புளொட் அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமே அன்றைக்கு அதிகம் என அங்கு உள்ள பலரும் கூறியிருக்கிறார்கள். விளைவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலா ஒவ்வொரு ஆசனங்களை கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் பெற்றுக்கொண்டது.

கூட்டமைப்பில் ஏனைய கட்சிகளை இணைக்க முன்பே தெளிவான ஒரு முடிவைக் கூட்டமைப்புத் தலைமையும் தீவிர தமிழ் தேசிய ஆதரவாளர்களாக தம்மை வெளிப்படுத்துவோரும் வெட்டொன்று துண்டு இரண்டு என்பது போல் எடுத்த பின் இவ்வாறு செயற்படிருந்தால் அதனைப்புரிந்து கொள்ள முடியும். அதனை விடுத்து ஆறுகடக்கும்வரை அண்ணனும் தம்பியும் கடந்தபின்  நீ யாரோ நான் யாரோ என்ற முடிவிற்குச் செல்லக் கூடாது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பு தமிழ் மக்கள் ஒன்று படவேண்டிய தருணத்தில் அரசாங்கத்தின் பிடியில் இருந்து விடுபட்டு  தமிழ் மக்கள் நலன் சார்ந்து முடிவெடுக்கப் பழைய போராளிக்குழுக்கள் முனையும் போது அவர்களை ஓரம் கட்ட வெளிக்கிடுவது அரசியல் ஞானமல்ல.

சுரேஸ் அவர்களின்  மண்டையன் குழு செய்த அட்டகாசங்கள் அநியாயங்கள் அரியநேந்திரனின் கண்ணுக்கு தெரிகின்றன ஆனால் செல்வம் அடைக்கலநாதன் தலைமைதாங்கும் ரெலோவின் பேட்டா அணியினர் அன்றைக்கு மட்டக்களப்பில் செய்த கொடுமைகள் அவர்கண்ணுக்குத் தெரியவில்லை. காரணம் என்ன? நட்பு அரியநேந்திரனின் கண்ணை மறைக்கிறதா? செல்வம் அடைக்கலநாதன் பற்றி அரியம் பேசப்போவதில்லை. அவருடனான தனிப்பட்ட உறவு சிவராம் காலத்தில் இருந்து பேணப்படுகிறது.

பழையவற்றைக் கிளறப் புறப்பட்டால் எல்லாமட்டங்களிலும் நாற்றம் எடுக்கும். 'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்பார்த்துச் சொலுங்கள்' எனக் கேட்கத் தோன்றும்.

பழையவற்றை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். அந்த மீள் வாசிப்பு என்பது எதிரிகளை உருவாக்கும் பட்டறைகளாக இருக்கக் கூடாது. அவை மனிதர்களை ஒன்றிணைத்துப் புதிய அரசியற் சிந்தனைகளைச் செயற்பாடுகளை வடிவமைக்கும் தொழிற்சாலைகளாக மாற வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் பதைக்கப்பதைக்க லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்தவர்களுடன் நல்லிணக்கம் பேசமுடியுமென்றால். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட ஜனாதிபதியின் முன் சத்தியப் பிரமாணம் எடுத்துப் பின்  குடும்பத்துடன் படமும் எடுத்துக்கொள்ள முடியுமென்றால் முன்னாள் போராளிகளை இணைத்துக் கொள்வது எந்த விதத்திலும் அவமானமாகாது.

'உங்கள் மீது தப்பபிப்பிராயத்தைக் கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்ஸவைச் சந்தியுங்கள் உங்கள் பற்றி தெளிவுபடுத்தி அவருடன் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துங்கள்' என ஜனாதிபதி கூறியதனைப் பணிவுடன் ஏற்று தமிழ் மக்களின் இரத்ததை அருந்திய கோத்தபாயவுடன் தேனீர் அருந்த முடியும் என்றால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அரசுடன் இணைந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திரும்பி வரும் போது அவர்களை ஒட்டுக்குழுவென எள்ளி நகையாடுவது அரசியல் அறிவற்ற குறுகிய பார்வை.

இந்த வகையில் தமிழரசுக்கட்சி கூட்டமைப்புள் எனைய கட்சிகளை ஓரம் கட்ட நினப்பதற்குகாரணம் என எனது அறிவுக்கு தென்படுவது, இலங்கையின் விகிதச்சாரத் தேர்தல் பிரதினித்துவ முறைகாரணமாக  கிடைக்கக்  கூடிய உள்ளுராட்சி மாகாண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சிறியதாக இருப்பதே. எனவே கிடைக்கும் அப்பத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பதில் பிரச்சனைகள் உள்ளன. அதனால் தேர்தல்களை எதிர் கொள்ளும் காலங்களிலேயே இத்தகைய முரண்பாடுகள் அதிகரித்துச் சென்று சந்தி சிரிக்கும் நிலை ஏற்படுகின்றன.

தேர்தல் காலங்களில் குடுமிபிடிச் சண்டையில் ஈடுபடுபவர்கள் தேர்தல் முடிந்த பின் தலைபோகிற பிரச்சனைகள் முரண்பாடுகள் ஏற்பட்டாலும் நீண்ட நாட்களுக்கு  அமைதியாகக் காலம் கடத்துவர். இது தவிர அரசியல் ரீதியாக நிகழும் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு சந்திப்புகளில் யார் கலந்து கொள்வது என்ற நிலை வரும் போதும்  பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் வரையறையை ஏற்பாட்டாளர்கள் விதிக்கும் போதும் யார் அந்த சந்திப்புகளுக்கு செல்வது என்ற  முரண்பாடும் மேற்கிளம்பும். மற்றப்படி இனி அடுத்த தேர்தலைச் சந்திக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அரசியல்வாதிகள் மௌனமாகவே இருப்பார்கள். காலத்துக்கு காலம் மேற்கிளம்பி அறிக்கைப் போரில் தமிழ்த் தேசிய விடுதலை வியாபாரத்தை நடத்தும் அரசியல் பிரமுகர்கள், தமது தலைமை மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து தோப்புக்கரணம் போட்டாலும், கோத்தபாய ராஜபக்ஸவைச் சந்தித்து நல்லிணக்கம் பேசினாலும்,   வாய் திறக்க மாட்டார்கள். கொழும்பில் பாரிய குற்றச்சாட்டுக்களை சந்தித்து மக்களால் இனம் காணப்பட்டு, அலரிமாளிகையினையும், ஆளும் தரப்பையும் வலம்வந்து கொண்டிருந்தவர்களை மாகாண சபையின் இணைப்புச் செயலாளர்களாக நியமித்தாலும் அவை எல்லாம் சர்வதேச அழுத்தம் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதி உயர்பீடமான மூவர் அணியின் ராஜதந்திரம் என்றும் எண்ணி தலையை மண்ணில் புதைத்து காணாமல் போய்விடுவார்கள். சரத் பொன்சேகவுடன்  அடுத்த தேர்தலில் கூட்டமைக்கப்போகிறோம் என்று அம்மூவரணி கூறினாலும் கூட வாயே திறக்க மாட்டார்கள். ஆனால் ஒட்டுக்குழுக்கள் விடையத்தில் மட்டும் இவர்கள் பரிசுத்தவான்கள்.

மறுபக்கம் நாங்கள் இன்னும் ஒன்றையும் நினைவு கூரவேண்டும்.  தமிழரசுக்கட்சி நிராகரிகிறது என்பதற்காக யாரும் அரசின் பக்கம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைக்கில்லை. 'தமிழ் மக்களின் நலனை அல்லது சிறு பான்மை இனங்களின் நலனைப் பிரதினித்துவப்படுத்துவதே எங்கள் நோக்கம் பதவிகள் அதிகாரம் சார்ந்து கிடைக்கும் தனிப்பட்ட நலன்கள் எங்கள் நோக்கம் அல்ல'  என்று இன்றைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புள் இருக்கும் முன்னை நாள்ப்போராளிகள்  கருதினால் அவர்கள் உட்கட்சிப் போராட்டம் ஒன்றை நடாத்திக்கொண்டு  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதே இன்றைக்கு தேவையானது. தமிழரசுக் கட்சியும் தமது பழைய காலக் கனவான் அரசியலில் இருந்து விடுபட்டு பரந்த எண்ணத்துடன் அரசியலை அணுக முன்வரவேண்டும். தன்னுள் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சரியான கௌரவத்தை வழங்கி வெளிப்படையான சனநாயக ரீதியான அணுகுமுறைமூலம் கூட்டுழைப்பை உறுதிப்படுத்தும் புதிய அரசியற்பாங்கை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தேர்தற் காலத்தில் ஒரு முகத்தையும் தேர்தல் முடிந்தவுடன் மறு முகத்தையும் காட்டும் பழைய கூட்டணி கால அரசியலுடன் காலம் கடத்தலாம் என்று நினைத்தால் அது மீண்டும் தமிழ் மக்களின் அரசியற் தற்கொலையாக முடியும். அப்படி முடிந்தால் அந்தப்பழியைப் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதோ பழைய போராளிகள் மீதோ போட முடியாது.

குமரன் - கார்த்திகேயனின் இந்தக் கட்டுரையானது பல கத்தரிப்புகளுக்கு உள்ளாகி இங்கு பிரசுரத்திற்கு வருகிறது. இன்று செயற்பாட்டு அரசியலில் உள்ள பலரது பெயர்கள் வெளிப்படையாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. கட்டுரையாளரால் குறிப்பிடப்பட்டு உள்ளவர்கள் தமது பக்க கருத்துக்களை ஆரோக்கியமான விவாதமாக தொடர்வதாயின் இங்கே அவர்களின் கருத்துக்களும் வெளியிடப்படும். அதுபோல் ஆரோக்கியமான பின்னூட்டங்களும் எந்தவிதமான திருத்தங்களும் இன்றி பிரசுரிக்கப்படடும்.

ஆ.ர்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97745/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

இந்தக் கட்டுரை ஒரு பகுத்தாய்வுக்கான கட்டுரையாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முயன்றாலும், பக்கசார்பு உள்ளவராகவே இதனை யாத்தவரை அறிமுகப்படுத்துகிறது.

பெண்ணியப் போராளியும், சுகுவின் மனைவியுமான ஞானாசக்தி, உண்மையான அரச ஆதரவுக்குழுவான .பீ.டீ.பீ பக்கம் சென்று விட்டார். கூட்டமைப்பு மறுத்தால் .பி.டி.பி பக்கம் கட்டாயம் செல்லவேண்டுமா? என வினா எழுப்புகின்றார்.

 

தமிழரசுக் கட்சியின் பல கனவான்கள், புலிகளின் தலமைக்கு ஆனந்த சங்கரியைப்பற்றிய கோள் சொல்லல்களால் ஏற்பட்ட முரண்பாடே ஆனந்தசங்கரியைப் புலிகளிற்கு எதிரான நிலைக்கு தள்ளியதென ஏன்? அவரை எதற்காக நியாயப்படுத்த முயல்கிறார்?.

 

ஆனந்த சங்கரி மற்றும் புளொட் அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலா ஒவ்வொரு ஆசனங்களை கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் பெற்றுக்கொண்டது எனத் தெரிவிப்பவர். அவர்களின் அமைப்பிற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டால் மக்கள் அரசின் பக்கம் கட்டாயம் செல்லவேண்டுமா என்ற வினாவை ஏன் எழுப்பவில்லை....?.

 

ஒட்டுக்குழுக்களை நியாயப்படுத்துவதற்கு நியாயமற்று நடைபெறும் செயற்பாடுகளை உதாரணப்படுத்த முயல்வது வெளிப்படையாகவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரைக்கு குளோபல் தமிழில் வந்த பின்னூட்டங்கள்:

இந்த பின்னூட்டம் இரா. துரைரட்ணம் எமது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தது.

எய்தவர்களுடன் நல்லிணக்கம் - அம்புகளுடன் பகைமுரண்' கூட்டமைப்பின் ராஜதந்திரமோ? என்றதலைப்பில் குமரன் கார்த்திகேயன்தங்கள் இணையத்தில் எழுதியகட்டுரைதொடர்பாக இச்சிறுகுறிப்பைஎழுதுகிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புஎப்போதுஉருவாக்கப்பட்டது,அரியநேத்திரன்,சிறிதரன் ஆகியோர் எப்போது அரசியலுக்குள் பிரவேசித்தார்கள் என்ற வரலாற்றை கட்டுரையாளர் சரியாக புரிந்து கொள்ளவில்லை அல்லது அறிந்து கொள்ளவில்லை எனநினைக்கிறேன்.

பாஅரியநேந்திரன் அவர்கள் கூட்டமைப்பில் இருந்தபோதுதான் சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையில் இயங்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும்,செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் இயங்கிய ரெலொ அமைப்பும் விடுதலைப் புலிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றிற்கும் சென்றார்கள். அதன் பின்பு இவ்விருகட்சிகளும் ஒருபோதும் அரசாங்க சார்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கவில்லை. ஆனால் இப்போது இந்தக் கட்சிகளில் ஒன்றை வெளிப்படையாகவே ஒட்டுக் குழுவாக விமர்சிக்கும் பா. அரியநேந்திரனும், மறைமுகமாக விமர்சிக்கும் சிவஞானம் சிறிதரனும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அன்றைக்கே இவர்களைச் சேர்க்கவேண்டாம் எனச் சொல்லத் துணியவில்லை. இன்றைக்கும் துணியவில்லை. காரணம் என்னவாக இருக்கும்..?

மேலே கட்டுரையாளரால் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயம் அவர் கடந்தகால அரசியலை சரியாக அறிந்து கொள்ளவில்லை என்பதையே புலப்படுத்துகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட்டது. அப்போது தமிழரசுக்கட்சி செயற்பாட்டில் இருக்கவில்லை.

அப்போது அரியநேத்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணியிலோ அல்லது தமிழரசுக்கட்சியிலோ ஒருசாதாரண அங்கத்தவராக கூட இருக்கவில்லை. அவர் அப்போது கால்நடை உத்தியோகத்தராக பணியாற்றிக் கொண்டிருந்தார். பகுதிநேரமாக தினக்கதிர் பத்திரிகையில் ஒரு செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அரியநேத்திரன் 2004ஆம் ஆண்டில் தான் முதல்தடவையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். அவர் அந்நேரத்தில் எந்த ஒருகட்சியின் சார்பிலும் நிறுத்தப்படவில்லை. அத்தேர்தலில் எந்தகட்சியையும் சாராத பொது வேட்பாளர்கள் சிலர் நிறுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் அரியநேத்திரன். சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் செல்வம் அடைக்கலநாதனின் ரெலோவும் 2000ஆம் ஆண்டிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டு 2001ஆம் ஆண்டு தேர்தலிலும் அவர்கள் போட்டியிட்டனர்.

2004ஆம் ஆண்டுவரை அரசியலுக்குள் வராத அரியநேத்திரன் எப்படி 2000ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோபோன்றகட்சிகளை சேர்க்கவேண்டாம் என கூற முடியும்.

அது போலசிறிதரன் அரசியலுக்கு முதன் முதலில் வந்தது 2010ஆம் ஆண்டுதான். அதற்குமுதல் ஒரு ஆசிரியராக இருந்தார். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறந்து போன பிரபாகரனிடம் 2010ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த சிறிதரன் எப்படிஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோவை சேர்க்கவேண்டாம் என கூற முடியும்.

சிறிதரன் அரசியலுக்கு வந்த 2010ஆம் ஆண்டில் பிரபாகரனின் ஆவியிடம் தான் இதனை கூறியிருக்கமுடியும்.

இன்னும் ஒன்றையும் இக்கட்டுரையை எழுதியவர் அறியவில்லைபோல் தெரிகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது தமிழீழ விடுதலைப்புலிகள் அல்ல. தமிழ் கட்சிகளை இணைக்கவேண்டும், முக்கியமாக முன்னாள் ஆயுதக்குழுக்களையும் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது அதை ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் கடுமையாக எதிர்த்தனர் என்றவரலாறும் பலருக்குதெரியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னணிபற்றி இக்கட்டுரையாளரை போன்றவர்கள் அறிந்து கொள்வது அவசியம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தவர்களில் சிவராம், தம்பையா,நடேசன், போன்றவர்கள் இறந்துவிட்டனர். ஏனையவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். இப்போது நாட்டில் இருப்பவர்கள் ஒருசிலர்தான். அவர்களில் முக்கியமானவர் கலாநிதி கெனடி விஜயரத்தினம்.

இக்கட்டுரையாளரை போன்றவர்கள் கலாநிதி கெனடி விஜயரத்தினம் போன்றவர்களிடம் தொடர்பு கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் அதன் பின்னணி பற்றியவிடயங்களை தெரிந்துகொள்வதுநல்லது.

இரா.துரைரத்தினம்

-----------------------------

 

இந்தப் பின்னூட்டம் ரகு என்பவரால் மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது....

குளோபல் ஆசிரியருக்கு நான் ஒரு முன்நாள் இயக்க உறுப்பினர்... உங்கள் வெப்சைட்டில் வந்த கட்டுரையையும் அதற்கு ஊடகவியலாளர் துரைரட்ணம் அவர்கள் எழுதிய விமர்சனமும் படித்தேன். முதலில் நான் எழுதியதனை நீங்கள் பிரசுரிக்கவில்லை. ஏன் என்று தெரியாவிட்டாலும் அதில் இருந்த பிரச்சனைக்குரிய பகுதிகளை நீக்கி திருப்பி அனுப்புகிறேன். இதனை வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.

எனது விபரம் ஈமெயிலில் உள்ளது. ஆனால் சில காரணங்களால் ரகு என்ற பெயரில் வெளியிடுங்கள்.

கட்டுரையாளரின் தகவல் பிழை தொடர்பாக ஊடகவியலாளர் இரா. துரைரட்ணம் கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் 2004ன் பின் அரசியலில் பிரவேசித்த பா. அரியநேந்திரனுக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை சந்தர்ப்பங்கள் இருந்தன என்பதனை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது? எனக்கு ஞபகம் இருக்கிறது. கருணாவுடனான புலிகளின் மோதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான போராளிகளை (700 வரையிலான போராளிகள்;) மாவீரர்களாக அறிவிக்க வேண்டும் என அரியநேந்திரன் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கோரிக்கையை முன்வைத்து அதனை அவர் ஏற்றுக்கொண்டதாக அரியம் அறிவித்திருந்தார்.

அதுபோல புலிகளின் சந்திப்புக்களில் பல தடவைகள் தான் ஒட்டுக் குழுக்கள் என விழிக்கும் தலைவர்களோடு ஒரே மேசையில் இருந்தபோது பிரபாகரனிடம் கூறியிருக்கலாம் தானே ஒட்டுக்குழுக்களை நீங்கள் வெளியேற்றாவிட்டால் தான் அரசியலை விட்டு விலகுவேன் என அப்போது ஏன் மொனம் காத்தார்?

இப்படி பல சந்தர்ப்பங்களை தவற விட்ட பா. அரியநேந்திரன் தனது உற்ற நண்பர் செல்வம் அடைக்கலநாதன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கோவிந்தம் கருணாகரனை களமிறக்கியபோது கூட்டமைப்பின் தலைமையிடம் கூறியிருக்கலாம் தானே இவர் தலமையிலான ரெலோ 90களில்இருந்து கிழக்கில் செய்த கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் இன்னும் உறையாத நிலையில் அவர் கூட்டமைப்பில் போட்டியிட்டால் தாம் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் அல்லது தனிவழி போவேன் என....

தனது பாராளுமன்றக் கதிரையை இறுகப் பிடித்துக்கொண்டு அவர் தனக்கு பிடிக்காதவர்களை ஒட்டுக்குழுக்கள் என்றும் மற்றவர்களைப்பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் இரட்டை வேடம் போடுவது நியாயமானதா?

உண்மையில் சிவஞானம் சிறிதரன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் களமிறங்கியவர். ஆனால் அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் மக்களின் மீதும், விடுதலைப் போராட்டத்தின் மீதும் கொள்கைப்பிடிப்பு பற்றுதி கொண்டவராயின் ஒட்டுக்குழுக்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் எப்படி இணைந்திருக்க முடியும்?

இணைந்து பாராளுமன்றக் கதிரையை தக்க வைத்த பின்பு கூட எத்தனை வருடங்கள் சந்தர்ப்பம் இருந்தது. இந்த மாகாணசபைத் தேர்தலில் கூட திரு ஆனந்தசங்கரியை, திரு சித்தார்தனை இணைத்தால் கட்சியில் இருக்க மாட்டோம் என கூறி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து ஏற்காவிடின் தனிவழி போயிருக்க முடியுமே? அதனை ஏன் செய்யவில்லை?

அப்படிச் செய்யாமல் அவர்களை இணைத்துவிட்டு கழுத்தறுப்பது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல் என்பதனை விளங்குவார்களா?

கடந்த மாகாண சபைத் தேர்தலில் இவர்கள் சார்ந்த ஊடகங்கள் சிலவற்றில் எழிலனின் மனைவி ஆனந்தி அக்காவுக்கு எதிராகவே பிரச்சாரத்தை செய்தவர்கள், அவரின் எழுச்சியை பொறுக்க முடியாதவர்கள் தமது சொந்த நலனுக்காக புலிகளையே நாளை ஒட்டுக்குழுக்கள் என்று சொல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.