Sign in to follow this  
nunavilan

திரைப்படப்பாடலாசிரியர் நா.முத்துக்குமார்

Recommended Posts

திரைப்படப்பாடலாசிரியர் நா.முத்துக்குமார்
 
பட்டாம்பூச்சியை விற்றவர் பாடலாசியராக உயர்ந்த கதை பற்றி.. 
‘பட்டாம் பூச்சியை விற்பவன்’ அப்டினு தான் என்னுடைய கவிதைத் தொகுதிக்கு பேர் வச்சிருந்தேன். கவிதையினுடைய அடுத்த கட்ட விஞ்ஞானவளர்ச்சி என்பது திரைப்படப்பாடல்னு பார்க்கிறேன். ஒரு கவிதை எழுதும் போது ஒரு 5000 பேருக்கு மட்டும் தான் போய்ச்சேரும். அதுவும் எழுதப் படிக்கத் தெரிஞ்ச சிலருக்கு மட்டும்தான். திரைப்படப்பாடலா வரும் போது உலகெங்கும் இருக்குற தமிழர்களை சென்றடையும். திரைப்படங்கள் மேல காதல் உண்டு. கவிதையின் அடுத்த கட்ட இசைவடிவ கவிதைகளா திரைப்படப்பாடல நினைக்கிறேன். கவிஞர் அறிவுமதி மெட்டுக்கு எழுதுறதுக்கு பயிற்சி கொடுத்தாரு.
 
‘கண் பேசும் வார்த்தைகள்’ தொகுப்பு உருவான விதம் பற்றி சொல்லுங்கள்..
இது ‘7ஜி ரெயின் போ காலனி’யில வந்த பாட்டைதான் தலைப்பா வச்சிருக்கேன். பாடல்கள் பற்றிய அனுபவக் கட்டுரை இது. பாடல் பிறந்த கதை பத்தி ஜாயித் அக்தர் பண்ணிருக்காரு. தமிழ்ல இதுவரை யாரும் பண்ணல. அப்படியே பண்ணிருந்தாலும் ஏழு, எட்டு வரிகளுக்குள்ளயே அந்த அனுபவத்த அடக்கிட்டாங்க. ஆனா ஆங்கிலத்தில நிறைய பண்ணிருக்காங்க. என்னோட ஒரு பாடலுக்குள்ள ஒரு வரி வருதுனா உதாரணமா 'ஐயர் பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சுக்கோ'னு தேரடி வீதி பாட்டுல எழுதிருப்பேன். அந்த வரி எங்கிருந்து வந்தது. அந்த வரிக்கு பின்னால மிகப் பெரிய கதை இருக்கு. அது எப்டி என்னுடைய வாழ்க்கை முறையோட சம்பந்தப்பட்டிருக்கு. இந்த மாதிரியான விஷயங்கள பதிவு பண்ணத் தோணுச்சு. அப்ப நான் வாரம் ஒரு பாடல்னு கிட்டத்தட்ட 25 பாடல்கள் எழுதிருக்கேன். அது மக்கள் மத்தியில பெரிய வரவேற்பை பெற்று ஏழு, எட்டு பதிப்புகள் வந்துருக்கு.
 
இதுவரை எத்தனை கவிதை தொகுதிகள் எழுதிருக்கீங்க? 
பட்டாம்பூச்சியை விற்றவன், தோசிகன், நியூட்டனுன் மூன்றாம் விதி, ஆனா ஆவன்னா, பச்சையப்பன் கல்லூரி, குழந்தைகள் படித்த வீடுனு ஆறு கவிதை தொகுதிகளும், ஜப்பான் காதல் கவிதைகளை மொழிபெயர்த்து ‘என்னைச் சந்திக்க கனவில் வராதே’னு நான்கு தொகுப்புகளும், கண்பேசும் வார்த்தைகள், கிராமமும் நகரமுமான நகரம், பால காண்டம்னு மூன்று கட்டுரைத் தொகுப்புகளும் சேர்த்து 13 புத்தகங்கள் வந்திருக்குங்க.
 
உங்களுடைய அடுத்த படைப்பு பற்றி..
ஆங்கிலத்துல ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். அது முடியுற நிலையில இருக்கு. அதுக்குத்தான் என்னோட முழு நேரத்தையும் செலவிடுறேன்.
 
உங்களுடைய அன்றாட பணியின் 5 முக்கியமான விஷயங்களாக எதைச் சொல்வீங்க? 
எல்லாமே முக்கியம்தான். முதன்மைப் படுத்த வேண்டியதுனா பாடல் எழுதுறதுதான். கடந்த 5 ஆண்டுகளா அதிகப் பாடல்கள் எழுதுன பெருமை கிடைச்சிருக்கு. தொடர்ந்து அத தக்க வச்சுக்கிறதுக்கு ரொம்ப ஓட வேண்டியிருக்கு.
 
அதிக பாடல்கள் எழுதுற பாடலாசிரியர்ங்ற பேர் கிடைச்சிருக்கு. இந்த வெற்றியை எப்படி பாக்குறீங்க? 
தொடர்ந்து 5 வருடமா நிறைய பாடல்கள் எழுதுற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அத தக்க வச்சுக்கணும்னு நினைக்கிறேன். எண்ணிக்கை முக்கியமில்ல. எண்ணங்கள்தான் முக்கியம்னு சொல்வாங்க. நல்ல பாடல்கள தொடர்ந்து தமிழ் சமூகத்துக்கு கொடுக்கனும்ங்ற பொறுப்புணர்வு என் தோள்கள்ல ஏறி அமர்ந்திருக்கு.
 
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? 
அத நீங்கதான் சொல்லணும். குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை என்னோட பாடல்கள பாடிட்டுருக்காங்க. அவங்கள பாடல்களோட எளிமை தான் ஈர்க்குதுனு நினைக்கிறேன். உயர்ந்த விஷயங்களை எளிமைப்படுத்தி சொல்றது, வாழ்க்கைல இருந்து வார்த்தைகள எடுக்குறது, நவீன இலக்கியத்த தொடர்ந்து வாசிக்கிறது, உலக சினிமாக்களின் பரிச்சயம், தொடர்ந்து பயணங்கள் இப்டி நிறைய சொல்லிட்டே போகலாம்.
 
உங்களின் புதிய சிந்தனைக்கான களமா எதைச் சொல்வீங்க? 
என்னோட ஒவ்வொரு படைப்பும் புதிய சிந்தைனைக்கான களம்னு சொல்வேன். அது கவிதை, கதை, கட்டுரை, திரைப்படப்பாடல் எதுவா இருக்கட்டும். அது வந்து அதனுடைய வடிவத்த தேர்ந்து எடுத்துட்டு வெளியே வரும் போது புதிய படைப்பா இருக்கும்.
 
உங்களிடம் முரண்படும் விஷயம் அல்லது செயல்?
முரண்படுற விஷயம் நிறையவே இருக்கு. நான் ஒரு எழுத்துச் சோம்பேறி. பாடல்னா நிறைய எழுதுவேன். இலக்கியம்னா கொஞ்சம் ஊறப் போட்டு 6 மாசத்துக்கு ஒரு தரம் தான் எழுதுவேன். தொடர்ந்து நிறைய எழுதனும்னு ஆர்வம் இருக்கு.
 
பிரபலம்ங்றத எப்டி பாக்குறீங்க? 
சுதந்திரத்துக்கு கொடுக்குற விலைன்னுதான் நினைக்கிறேன்.
 
திரைப்படப்பாடல்களின் தற்போதைய வரவு குறித்து என்ன நினைக்கிறீங்க? 
ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. கண்ணதாசனுக்குப் பிறகு அதனுடைய பாதை கொஞ்சம் மாறி பட்டியல் போடுறது வந்தது. இது ஒரு 15 வருஷம் இருந்துச்சு. இப்ப எதார்த்தமா எழுதுறது, இது எனக்கு நடந்ததுனு எழுதுறதுனு எழுதுறாங்க. நிறைய படங்கள் மண் சார்ந்து, மக்கள் சார்ந்து, புதிய புதிய முயற்சிகள் வந்துட்டே இருக்கு. கதைக்களமும், பாடலுக்கான சூழலும் ரொம்ப வித்தியாசமா இருக்கு. அதனால எழுத நிறைய களம் இருக்கு. அதான் தேரடி வீதி, முதல் மழை என்னை நனைத்தது, சூ சூ மாரி, வெயிலோடு விளையாடி, உனக்கென இருப்பேன், காவிரியாறும் கைக்குத்தல் அரிசியும்னு எழுத முடியுது. மக்கள் மொழியில அவங்கள நேரடியா சென்று சேர அளவுக்கு கொஞ்சம் அவங்க இதயத்த தொடும் அளவுக்கு திரைப்பட மொழி மாறிருக்குனு நினைக்கிறேன்.
 
புதிய பாடலாசிரியர்கள் அவங்கள தக்க வச்சுக்க என்ன பண்ணனும்? 
பாடலாசிரியர்கள் மட்டுமில்லாம எந்த படைப்பாளியும் நிறைய படிக்கணும். புதிய விஷயங்களை தெரிஞ்சுக்கணும். கனவுகளை மட்டும் வைத்துக் கொண்டு எதிலயும் காலடி வைக்கக் கூடாது. தங்களைத் தயார்படுத்திக்கிட்டு திறமையோட சேர்ந்த கனவும், அதற்கான உழைப்பும் இருந்தாதான் தக்கவச்சுக்க முடியும்.
 
உங்களை உயர்த்திய இலக்கியத்துக்கு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்? 
இலக்கியத்த யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. எழுத்தாளர் வண்ணதாசன் சொல்ற மாதிரி ‘வாழ்க்கை ஒரு மகாநதி. கண் முன்னால ஓடிட்டிருக்கு. நான் என் கரையோரம் நின்னு என் கண்ணுக்கு தெரிந்தவற்றை சொல்லிக் கொண்டிருக்கிறேன்’ என்றார். அது மாதிரிதான். என் கண்ணுக்குப் படும் விஷயங்களையும், என் உள்ளங்கையில் அள்ளிக் குடிக்கும் தண்ணீரையும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
 
உங்களுடைய புதுமையான முயற்சிகள் பத்திச் சொல்லுங்களேன்..
எல்லா முயற்சியுமே புதுமையான முயற்சிதான். பழைய முயற்சி எதுவும் இல்ல.
 
வித்தியாசமான முயற்சி ஏதாவது? 
செய்வது எல்லாமே வித்தியாசம்தான்.
 
ஒரு கவிஞனுக்கான முகவரியாக எதை பார்க்கிறீர்கள்?
கவிஞனுக்கான முகவரி அவனோட படைப்புகள்தான்.
 
உங்களைக் கவர்ந்த கவிஞர்கள் பற்றி..
நிறைய பேர் இருக்காங்க. தமிழ்ல எடுத்துக்கிட்டா 2000 வருஷம் பாரமப்ரியம் கொண்டது. சங்க இலக்கியத்துல தொடங்கி இன்றைக்கு இருக்குற நவீன கவிஞர்கள் வரை பட்டியல் போடலாம். உடனே ஞாபகத்துக்கு வர்றதுனா கவிஞர் கலாப்ரியா, விக்ரமாதித்தன், பசுவய்யா, கல்யாண்ஜி, ஆத்மநாம், நகுலன்னு சொல்லிட்டே போகலாம். சினிமாவுல எழுதுறவங்க மட்டும் கவிஞர்கள் இல்ல. சினிமாவுக்கு வெளியேயும் நிறைய நல்ல கவிஞர்கள் இருக்காங்க. தொடர்ந்து வாசிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கணும்.
 
இப்ப என்னென்ன புத்தகங்கள் படிச்சிட்டிருக்கீங்க?
நான் ஆங்கில நாவல்கள் அதிகமா படிப்பேன். எஸ்.ராவோட யாமம், சேத்தன் பகத்தோட நாவல்கள் படிச்சிட்டிருக்கேன்.
 
ஒரு படைப்பாளி கவிஞனா இருந்து சிறுகதை நாவல்னு அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதான் வளர்ச்சியா? அதை எப்படி பார்க்கிறீர்கள்? 
எல்லாமே இலக்கியத்துல ஒரு பகுதிதான். அது கவிதையாக, கதையாக, நாவலாக எதுவாக இருந்தாலும் சரி, நாம எழுதும் கருப்பொருள்தான் அத தீர்மானிக்குது. நானே கவிதையும், கதையும், கட்டுரையும் எழுதிருக்கேன். பாடலாவும் மாறியிருக்கு. அனுபவம் தான் அத தீர்மானிக்கும்.
 
உங்களுக்கு பிடிச்ச நாள்?
எல்லா நாளுமே திருநாளுதாங்க.
 
நீங்கள் சந்திக்க விரும்பும் நபர்? 
அப்டி யாரும் இல்லங்க. வாழ்க்கை ஒரு கம்பளம் மாதிரி. தினம் தினம் புதிதாய் விரிக்கப்படுகிறது. அடுத்து யாரை சந்திக்கப் போறோம்னு தெரியாத வரைதான் சுவாரஸ்யமா இருக்கும்.
 
உங்களுடைய தனித்தன்மையாக எதைச் சொல்வீர்கள்?
அத நீங்கதான் சொல்லனும்.
 
உங்களுடைய கவிவரிகள்னு நினைக்கிறோம். நீங்க யாருக்காவது காத்திருந்ததுண்டா?
வாழ்க்கையே ஒரு காத்திருப்புதான்.
 
வார்த்தைகள்தான் உங்களுக்காகக் காத்திட்டு இருக்கு. அந்த அளவுக்கு உங்க உவமைகள் இருக்கு. உங்களைக் கவர்ந்த பாடல் வரிகள்னா உடனே எதைச் சொல்வீங்க?
அங்காடித்தெரு படத்துல ‘புல்லும் பூண்டும் வாழும் உலகம், நீயும் வாழ்ந்திட வழியில்லையா? பூமியில் ஏழையின் ஜனனம், அது கடவுள் செய்த பிழையில்லையா? இது மிகக் கொடுமை, இளமையில் வறுமை. பசிதான் மிகப்பெரும் மிருகம், அதை அடக்கிட இங்கு வழியில்லையா? கண்ணீர்தான் மிகப்பெரும் ஆழம், அது கடலை விடவும் பெரிதில்லையா?’னு எழுதிருப்பேன். அது எனக்குப் பிடித்த வரிகள்.
 
கண்ணீர்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது. தநா 07 படத்துல ‘கண்ணீரைப் போல வேறு நண்பன் இல்லை’னு எழுதிருப்பீங்க? 
ஆமா உண்மைதான். கண்ணீரைப் போல வேறு நண்பன் இல்லை, கற்றுக் கொள் துன்பம் போல பாடம் இல்லை.
 
இளமையை எப்படிக் கொண்டாடலாம்னு நினைக்கிறீங்க? 
இளமையை மட்டுமில்ல ஒவ்வொரு கணத்தையும் நமக்கான கணம்னு நினைக்க ஆரம்பிச்சாலே முதுமையும் கொண்டாடப்பட வேண்டியதுதான். ஓஷோ சொல்வது போல் அந்தக் கணத்தில் வாழ்வதுதான் சந்தோஷமளிக்கும்.
 
குழந்தைகளிடம் பிடித்த விஷயம்?
குழந்தைகளே பிடிச்ச விஷயம்தான். பூவுல எந்த பகுதி பிடிச்சதுன்னு கேக்குற மாதிரி இருக்குது.
 
உங்களைப் பெருமைப்படுத்தியதா நீங்க நினைக்கிற நிகழ்வு..?
நிறைய இருக்கு. இப்ப உங்க கூட பேசிட்டு இருக்குறது கூடத்தான்.
 
நினைக்கும் போதெல்லாம் இனிக்கிற விஷயம்?
சர்க்கரைனுதான் சொல்லனும்.
 
உங்க பாடல்களைக் கேட்கும் போது உங்க மனநிலை எப்படி இருக்கும்? 
அந்த பாடல் எழுதின சூழல்தான் ஞாபகம் வரும். அது பெரிய சந்தோஷம் தந்ததில்லை. ஏன்னா எந்தப் பாட்டக் கேக்கும் போதும் அது எழுதும் போது பட்ட கஷ்டங்களும், அந்த வரிகளுக்கான முயற்சியும் தான் எனக்கு ஞாபகம் வரும்.
 
வெயில் படத்துல ‘வெயிலோடு உறவாடி’ பாடல் எழுயிருப்பீங்க. அது உங்க அனுபவமா?
ஆமா. அந்த பாடல் முழுக்க என்னோட அனுபவங்கள்தான். குழந்தை பருவத்துல நான் விளையாடின விளையாட்டுக்கள் எல்லாமே கலந்ததுதான் அந்த பாடல். குறிப்பா ‘புழுதிதான் நம்ம சட்டை’ அந்த வரியை கவிஞர் வாலி ரொம்ப பெருமையா சொல்வார். மத்த வரிகளைக் கூட வேற கவிஞர்கள் எழுதிடலாம். அந்த ஒருவரிய எழுதத்தான் முத்துக்குமார் வேணும்னு சொன்னார். அந்த பாடலுக்குத்தான் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது கிடைச்சது.
 
‘கனவெல்லாம் பலிக்குதே’ பாடல் ஒரு தந்தை தன் மகனைப் பார்த்து பெருமைப்படுற மாதிரி வர்ற பாடல். உங்களுடைய தந்தை அந்த மாதிரி ஒரு அனுபவத்தை அடைஞ்சிருக்காரா? 
கண்டிப்பாக, குறிப்பா அந்தப் பாட்டை என் தந்தைக்காகத்தான் எழுதுனேன். என்னை வளர்த்தது முழுக்க என் தந்தைதான். அந்த பாடலை எழுதும் போது என் அப்பாவை நினைச்சுதான் எழுதுனேன். குறிப்பா அந்த பாடல் வந்த பிறகு நிறைய தந்தைகள் என்னைத் தொடர்பு கொண்டு அவங்க மன உணர்வுகள பிரதிபலிச்சதா சொன்னாங்க. அதுலயும் முத்தாய்ப்பா அந்த அப்பா கேரக்டர்ல ராஜ்கிரண் நடிச்சாரு. அவர் இந்த பாட்டக் கேட்டுட்டு ஒரு இரவு நேர ஷூட்டிங் அப்ப சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்ப என்னையக் கட்டிப் பிடிச்சுக் கண்கலங்கிட்டாரு. அந்த பாடல் கேட்டதும் அவருக்கு அவங்க அப்பா, அம்மா ஞாபகம் வந்துடுச்சுனு. அந்த பாடலுக்கு இன்னைக்கும் நிறைய ரசிகர்கல் இருக்காங்க.
 
ம்ம். அதே மாதிரிதான் ‘புண்ணாக்குனு சொன்னா கூட கவலை இல்லைடா. ஒரு புள்ளையத்தான் வஞ்சிடாத அப்பன் யாருடானு’ எழுதியிருந்தீங்க?
ஆமா. அப்பா திட்டுறத ஏத்துக்கணும்னு எழுதியிருப்பேன். அந்த பாட்ட ஸ்டுடியோவுல 20 நிமிஷத்துல எழுதினேன். அந்த பாட்டுல வடிவேல் இருக்குறதால காமெடியாவும், அதே நேரத்துல சீரியஸாவும் இருக்கணும்னு சொன்னாங்க. அந்த மாதிரி எழுதிய பாடல்தான் அது. அப்புறம் வேப்பமரம் புளியமரம்னு சாமி படத்துல அப்பா பாடுற மாதிரி ஆரம்பிச்சு கதாநாயகன் பாடுற மாதிரி முடியும். டைரக்டர் ஷங்கருக்கு சாமில பிடிச்ச பாட்டு அதுதான்னு சொல்வாரு.
 
‘ஆழியிலே முக்குளிக்கும் அழகே’னு வர்ணிக்கிற வார்த்தைகளைப் போட்டு எழுதியிருக்கீங்களே.
கர்னாடக இசையில் அமைந்த அருமையான மெட்டு. அந்த மெட்டைச் சிதைக்காம வார்த்தைகள் போடணும்னு தோணுச்சு. நான் எப்பவும் ரியலிஸ்ட்டிக்காதான் எழுதுவேன். ஃபேன்டஸியா எழுத மாட்டேன். ஒரு பாட்டு கொஞ்சம் ஃபேன்டஸியா ட்ரை பண்ணலாமேனு முயற்சி பண்ணேன். பொதுவா பெண்ணையோ, ஆணையோ உடல் சார்ந்த வர்ணனைகள் தவிர்த்துதான் எழுதுவேன். அதுல ஒண்ணு ரெண்டு விதி விலக்குல ஆழியில முக்குளிக்கும் அழகும் ஒண்ணு. ‘நீயா? நானா?’ கோபிநாத் ஒரு பண்பலைல இருக்கும் போது இந்த பாடலை ஒளிபரப்பும் போது முத்துக்குமாருக்கு காத்துல ஒரு மோதிரம் போடுறேன்னு சொல்வாராம். நான் கால்ல கையில போடுங்கன்னு சொன்னேன். பாராட்டுதானங்க சிறந்த மோதிரம்.
 
கவிஞர்கள் புனைப்பெயர் வச்சுக்குற கலாச்சாரம் இருக்கு. நீங்க புனைப்பெயர் வச்சுக்கலயா? இனிஷியலோட உங்க பேர வச்சிருக்கீங்க.?
என் பேரே நல்லாதான இருக்கு. அதுமட்டுமில்லாம எனக்கு முன்னாலயே மு.மேத்தா, நா.காமராசன்னு இனிஷியலோடதான் வச்சிருக்காங்க. என் பேர் அழகாத்தானே இருக்கு. அதனால புனைப் பெயர் வச்சுக்கல.
 
அப்ப புனைப்பெயர் வச்சிருக்கிறவங்க எல்லாம் அவங்களுக்குப் பிடிக்கலைனு வச்சிருக்காங்களா? 
தெரியலையே. அத அவங்ககிட்டதான் கேக்கணும்.
 
‘நேரம் பொறந்திருச்சு ஏலே’ பாட்டுல சிவப்பு சிந்தனை வரிகள் இருக்குதுனு நான் பாக்குறேன். நீங்க என்ன சொல்றீங்க.?
அந்த வடிவத்த உருவாக்குனது ரஹ்மான் சார்தான். மைக்கேல் ஜாக்சன் பாடல்கள் சமூக சிந்தனை, சுற்றுச்சூழல் பத்திதான் இருக்கும். அதுமாதிரி தமிழ்ல முயற்சி பண்ணலாமேனு ‘கருப்பு கலரு ஜூஸ் வேண்டாம், கரும்பு, இளநீர் வாங்கிக் குடிப்போம், காரைவிட்டு சைக்கிள் ஏறிப் பறப்போம்’னு எழுதிருப்பேன். அது ரஹ்மான் சார் கொடுத்த சுதந்திரம் தான்.
 
நீங்க பாடல் நல்லா எழுதுறீங்க சரி, பாடுவீங்களா? 
இல்ல பாடமாட்டேன். சும்மா முணுமுணுப்பேன். நான் இப்ப அடிக்கடி முணுமுணுக்குற பாடல் பையா படத்துல “துளித்துளி மழையாய் வந்தாளே” அங்காடித்தெருவுல ‘உன் பேரைச் சொல்லும் போதே’ இந்த ரெண்டு பாடலும்தான்.
 
உங்க வாசகர்களுக்கு அல்லது ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க? 
அடுத்த தலைமுறைய வாசிக்கிற தலைமுறையா உருவாக்க நீங்க நிறைய வாசிங்க. புத்தகத்தின் மீதான காதலை அதிகப் படுத்துங்க. அறிமுகப்படுத்துங்க.
 
இந்த நேரத்துல யாருக்காவது நன்றி சொல்ல விரும்புறீங்களா? 
என்னைய உருவாக்குன என் அம்மா அப்பவுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
 
--- இவள் பாரதி 
 

Share this post


Link to post
Share on other sites

பகிர்விற்கு நன்றி 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this