Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆசீவக நெறி - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika) #2


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறி #4

முதல் மூன்று கட்டுரைகளைப் படிக்க, கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130413

 

முருகன் எப்படி ஆசீவக நெறியின் தெய்வம்? – பகுதி #1

பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆசீவக நெறியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் மாற்றப்பட்டாலும் அதை முழுவதுமாக செய்ய முடியாது. அதேபோல் தான் ஆசீவக சித்தர்களின் அடையாளங்களும். முருகன் எப்படி தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தன் எனப் பார்க்கப் போகிறோம்.

 

விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், எந்தச் செயலை தொடங்கும் முன்பும் திருமணத்திற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது.

 

       விநாயகர் ஆசீவக நெறியின் முழுமுதற் கடவுள் எனப் பார்த்தோம். ஏன் ஒரு ஆசீவக நெறியின் கடவுளை முருகன், சிவன், முதலிய தெய்வங்களை வணங்கும் முன்பு வணங்க வேண்டும் என நெறிகளை வகுக்கவேண்டும்?. ஏனென்றால், விநாயகர் ஆசீவக நெறியின் கடவுள். முருகன், சிவன், முதலியவர்கள் தெய்வ நிலையை அடைந்த சித்தர்கள்(ஆசீவக சித்தர்கள்). இதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

 

       முதலில், சங்க இலக்கியங்கள் முருகன் எனும் அரசனைப் பற்றித் தரும் செய்திகளைப் பார்ப்போம்

 1. முருகன் என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழநி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். பொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது. அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று. இதன் அரசன் நெடுவேள் ஆவி. நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று. இப்பெயரைக் கொண்டவன் இந்த அரசன். மற்றும் வையாவிக்கோப்பெரும் பேகன், வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோரும் இவ்வூர் ஆவியர் குடிமக்களின் அரசன்.
 2. முருகன் குறுஞ்சி நிலத்து(மலை) அரசன். அங்கு, வாழும் மக்கள் குறவர்(குறத்தி, குறவன்), பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி, வேம்பன், கானவர்.
 3. ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள்(ஆவியர்குடி) வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. பொதினியின்(பழநியின்) இன்னொரு பெயர் திருவாவினன்குடி(திரு+ஆவினன்குடி). ஆவியர் குடியினர் அருந்திறல் அணங்கின் ஆவியர்எனக் குறிப்பிடப்படுவதால் இவர்களின் உடல் தோற்றமே வலிமை மிக்கதாக அமைந்து பகைவரை அச்சுறுத்தியதை உணரமுடிகிறது. இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவிஎன்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

இலக்கிய மேற்கோள்

அகநானூறு 1, 61

புறநானூறு 147

திருமுருகாற்றுப்படை 176

சிறுபாணாற்றுப்படை 85, 86

வழக்குரை காதை

பதிற்றுப்பத்து

 

ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி(பழநி). இந்த ஆறு முகடுகளை ஆறுமுகம்(ஆறு+முகம்(முகடு-மலை)) என அழைக்கிறோம். இதை ஆண்டதால், முருகனை ஆறுமுகன் என அழைக்கிறோம். ஆனால், தமிழ் மொழித் தெரியாத ஆரியர்கள் ஆறுமுகன் என்றால் ஆறு முகங்களைக் கொண்டுள்ளவன் என தவறாகக் கருதி முருகனுக்கு ஆறு தலைகள் உள்ளது போல கதைகளைப் புனைந்து ஷண்முகன்(ஷண் - சமஸ்கிருதத்தில் ஆறு) என உருவாக்கினர்.

 

முருகன், தன் மக்களைக் காக்கும் அரசனாக இருந்துகொண்டு ஆசீவக நெறியைப் பின்பற்றியவன். பின்பு தெய்வ நிலையை அடைந்தான். முருகனை ஆசீவக சித்தன் என நாம் நிரூபிக்க வேண்டுமென்றால், முதலில் முருகன் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

 

முருகன் யார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில், படைவீடு, வேல், சேவல், மயில், காவடி, தண்டம், தலையில் மொட்டை அடிப்பது ஆகிய முருகனுக்குத் தொடர்புடைய விடயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலில், முருகனின் அறுபடைவீடு என்பதை விளக்க வேண்டுமென்றால், முதலில், வீடு என்ற சொல்லின் பொருள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.

              வீடு – உயரத்தில் அமைந்துள்ள ஒரு தங்குமிடம்

                     ஒப்புநோக்குக:

                           வீ – உயர்வானது, பூவின் வாடும் நிலையைக் குறிக்கும்(வாடி மேலிருந்து கீழே விழும் நிலை)

                           வீழ் – உயரத்திலிருந்து விழுவது

                           விண் – மேல்(உயரத்தில்) இருக்கும் வானம்

                           அருவி – உயரத்திலிருந்து விழும் நீர்

       அதாவது, மலைமேல்(உயரமான இடம்) இருக்கும் வசிக்கும்/தங்கும் இடங்களை முதலில் வீடு என்றழைத்தனர். பின்பு அச்சொல், பொதுவான தங்குமிடங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

       படை என்ற சொல்லின் விளக்கம்,

படை – கொல்லும் தன்மை கொண்ட ஒன்று

முருகன் மலையின் கீழிருக்கும் எதிரிகளை மலையை அரணாகக் கொண்டு போர் புரிந்து விரட்டியமையால்(சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் போல), அம்மலைகளை நாம் படைவீடு என்றழைக்கிறோம்.

       படைவீடு – உயரத்தில் இருந்து கொல்லும் தன்மையைக் கொண்டது.

அறுபடைவீடுகளில் ஐந்து படைவீடுகள் மலை மேல் இருக்கின்றன. திருச்செந்தூர் மட்டும் விதிவிலக்கு. கோயில் மலை மேல் இல்லாமல் கடலோரம் இருக்கிறது என்றாலும், முருகன், அயலாரை போர் புரிந்து வெற்றி பெற்றதை இன்றும் சூரசம்ஹாரம் என இன்றுவரை கொண்டாடுகிறோம். படைவீடு எனும் சொல் காலப்போக்கில் பொதுவான படை இருக்கும் இடங்களைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கலாம். அதாவது, வீடு எனும் சொல் பொதுவான தங்குமிடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

                     சூரசம்ஹாரம் = சூரன்+சம்ஹாரம் = முருகன் சூரபத்மனை கொன்ற நிகழ்வு

                     சூரபத்மன் = சூரன்+பத்மன்

              சூரன் எனும் சொல் ஆரியர்களைக் குறிக்கும். எப்படி என்பதைக் கீழே பார்ப்போம்.

                     சுரா – ஆரியர்கள் அருந்திய ஒரு வகை மதுபானம்

                     சுரன்>சூரன் – ஆரியர்கள் இம்மதுவை அருந்துபவர்களை சுரன் என்றழைத்தனர்.

                     அசுரன் - ஆரியர்கள் இம்மதுவை அருந்தாதவர்களை அசுரன் என்றழைத்தனர்.

              இந்த, சுரன் என்ற வடசொல்தான் சூரன் என மருவியது.

       அப்பொழுது, முருகன் ஆரியர்களை எதிர்த்துப் போர் புரிந்தானா என்பது ஆயத்தக்க விடயம். இதைப் பற்றிப் பின்பு பார்ப்போம்.

 

முருகனின் அறுபடைவீடு என்றால், முருகன் போர் புரிந்து வென்ற இடங்களைக் குறிக்கும் என்பது தெளிவாகிறது.

அடுத்து, முருகனுக்கு அடையாளங்களாக வேல், மயில், சேவல் என்பன எப்படி வந்தன என்பதைப் பார்ப்போம்.

வேல் எப்படி வந்தது எனப் பார்ப்போம். வேல் எனும் தமிழ்ச்சொல்லின் பொருளைக் காண்போம்.

              மின்>மீன்(முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்) – மின்னும் தன்மையைத் தன்னுள் கொண்டது மீன். மின்னுவது மீன் எனப்பட்டது(கடல் மீன், விண் மீன்)

              புனை>பூனை – புனைவது(கண்டுபிடிப்பது – எலியை) பூனை எனப்பட்டது

              அனை>ஆனை – அனைப்பது ஆனை எனப்பட்டது

              மன்>மான் – மன்னுவது(நிலைபெறுதல், தங்குதல்) மான் எனப்பட்டது – ஒப்புநோக்குக : மன்னன், கோமான், சேரமான்

              உண்>ஊண் – உண்ணுவது ஊண்(உணவு) எனப்பட்டது

              அழி>ஆழி – அழிப்பது ஆழி எனப்பட்டது

              பேண்>பெண் – பேணுபவள்(விரும்பிக் காப்பாற்று) பெண் எனப்பட்டாள்

              காண்>கண் – காணுவது கண் எனப்பட்டது

              மாண்>மண் – மாணுவது(மாண்பு - மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு) மண் எனப்பட்டது

அதுபோல, வெல்>வேல் – வெல்லும் தன்மையைத் தன்னுள் கொண்டது வேல். வெல்லுவது வேல் எனப்பட்டது. அதாவது, போரில் வெற்றிபெறுவதற்கு உதவி செய்வது வேல் எனப்பட்டது. வெற்றியைத் தருவது வேல். ஆகையால், வேல் என்பது வெற்றி மற்றும் வீரத்தின் அடையாளம் எனவும் கூறலாம்.

 

வேல் என்ற உடனே நமக்கு முருகன் கையில் உள்ள வேலின் வடிவம் தான் நினைவுக்கு வரும். ஆனால், இதுமட்டும் வேல் அல்ல. சுமேரியாவில் பேல்(Bel) என்ற ஒரு சொல் உண்டு. அதைப் பார்த்தீர்களென்றால் சூலத்தை ஒரு கம்பின் இருபுறமும் வைத்ததைப் போல இருக்கும். இதை, ஆசீவகத்தில் ‘இருபுற முத்தலைக் கோல்’ என்பர். ஆசீவக நெறியின் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. வைணவத்தில் நாமமிடும் பழக்கம் இதிலிருந்துதான் தோன்றியது(நாமத்தின் நடுவில் இருக்கும் சிவப்பு நிறம் பகைவரின் குருதியைக் குறிக்கும்). இந்த ‘இருபுற முத்தலைக் கோல்’ம் வேல் தான். வேல் எனும் செந்தமிழ்ச்சொல்தான் பேல் என சுமேரியாவில் திரிந்தது.

 

வேல்(Vel)>பேல்(Bel) – Sumerian Tamil

ஒப்புநோக்குக:

       வெங்காலூர்>பெங்காலூர்>பெங்களூர்

       வங்காளம்>பங்காளம்>பெங்காளம்>பெங்கால்

       வேம்பாய்>பேம்பாய்>பம்பாய்

       வெள்ளை>பெள்ளை>பெலா – கன்னடம்

இதிலிருந்து, முருக வழிபாட்டின் தொன்மையை நம்மால் அறிய முடியும். இதைப் பற்றி பிறகு விளக்கமாகப் பார்ப்போம்.

மயிலும் சேவலும் எப்படி முருகனின் அடையாளங்களாகினவென்றால், இவை தன் எதிரிகளுடன் தந்திரமாகச் சண்டையிடும்(Martial Arts) தன்மையைக் கொண்டவை. ஆகையால், சேவலும் மயிலும் முருகனின் போர்த்திறனைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகின.

 

பொதினி மலையில்(பழநி மலையில்) மேல் உள்ள முருகனுக்கு தண்டாயுதபாணி எனப் பெயர். அதாவது, கையில் தண்டம் எனும் போர்க்கருவியை(சங்ககாலப் போர்க்கருவி) வைத்திருப்பவன் எனப் பொருள்படும்.

 

இதிலிருந்து, முருகன் என்பவன் சங்ககால அரசன். அவன் போர் புரிவதில் வல்லவன். போர் புரிந்து பல வெற்றிகளை பெற்றுள்ளான் என்பது தெளிவாகிறது. தமிழர்களுக்கு முருகன் வீரத்தின் அடையாளமாக உள்ளவன்.

 

அடுத்து, காவடி என்பது முருகனுடன் எப்படித் தொடர்புடையது என்பதைப் பார்ப்போம். காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். முதலில், காவடி என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம். ‘காவடி’ என்ற சொல் ‘காவுதடி’ என்ற சொல்லின் திரிபு எனக் கூறுவர். கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. சுமை காவுபவர்கள் இலகுவாகச் சுமப்பதற்காக, ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளைத் தொங்கவிட்டு அத்தடியின் நடுப்பகுதி தோளில் இருக்குமாறு வைத்துச் சுமந்து செல்வர். காவுவதற்கான தடி என்னும் பொருள்பட இத் தடியைக் காவுதடி என அழைப்பர். முருகன் இந்தக் காவுதடியைப் பயன்படுத்துபவனாக இருந்திருக்க வேண்டும்.

 

பழனி மலைமேல் உள்ள தண்டாயுதபாணி(முருகன்) தலையில் மொட்டை அடித்துள்ளவர். முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்திருக்க வேண்டும் என நாம் ஆய்ந்தால், சமணர்கள்(ஆசீவகர், ஜைனர்) மற்றும் பௌத்த நெறியைச் சேர்ந்தவர்கள் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் என நமக்குப் புலப்படும். ஆரம்பக்காலத்தில் பழநி முருகன் கோயிலில் தலையில் மொட்டை அடிக்கும் வழக்கம் வந்தது, முருகன் ஆசீவக சித்தன் என்பதால் மட்டுமே என்பதும் புலப்படும். இதனால் தான், முருகனது பக்தர்கள் காவடி(காவுதடி) தூக்கும் வழக்கமும் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கமும் வந்திருக்கலாம். இதற்குப் பொருள், முருகனை குருவாக ஏற்று, அவனிடம் சரணடைந்து கற்றுக்கொள்ள வருகிறோம் என்பதே(ஆசீவக சித்தர்களிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களைப் போல்).

 

(சமணம்(ஆசீவகம், ஜைனம்) மற்றும் பௌத்தத்தில் ஏன் மொட்டை அடிக்கிறார்கள் அதாவது முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்துள்ளார் என்பதன் அறிவியல் விளக்கம் பற்றி சிறிது ஆயவேண்டும். திருமாலுக்கும் தலையில் மொட்டை அடிப்பதற்கும் உள்ள தொடர்பை பிறகு காண்போம்.)

 

ஆசீவக நெறியில் தீர்த்தங்கரர் என்றால் தீர்வைத் தருபவர் (அ) தீர்வு தருவதைக்(தீர்த்தம்) கையில் வைத்திருப்பவர் எனப் பொருள்.

தீர்த்தங்கரர் = தீர்த்தம் + கரர் = தீர்த்த + ங் + கரர்

       தீர்த்தம்(பண்புச்சொல்)=தீர்த்து+அம்(பண்புத்தொகை உருபு)<தீர்த்து(வினையெச்சம்)<தீர்த்தி+உ(வினையெச்சம் விகுதி)<தீர்த்தி(தொழிற்பெயர்)<தீர்+த்+தி<தீர்+தி(தொழிற்பெயர் விகுதி)<தீர்

திருத்தம் = திருத்து + அம் = திருத்தும் பண்பு(தன்மை) கொண்டது திருத்தம் எனப்பட்டது

இயக்கம்

பழக்கம்

விருப்பம் = விருப்பு + அம் = விருப்பும் பண்பு(தன்மை) கொண்டது விருப்பம் எனப்பட்டது

வருத்தம் = வருத்து + அம் = வருத்தும் பண்பு(தன்மை) கொண்டது வருத்தம் எனப்பட்டது

வணக்கம் = வணக்கு + அம் = வணக்கும் பண்பு(தன்மை) கொண்டது வணக்கம் எனப்பட்டது

              அதுபோல, தீர்த்தம் = தீர்த்து + அம் = தீர்த்தும்(வினை தீர்ப்பது) (அ) தீர்த்து வைக்கும் பண்பு(தன்மை) கொண்டது தீர்த்தம் எனப்பட்டது

              கரர் = கரு + அர் = ஒரு செயலை செய்பவர்

                     கர் = கரிய நிறத்தின் தன்மையைக் குறிக்கும் சொல்(கருப்பு நிறத்திற்கும் நாம் செய்யும் செயலுக்கும் தொடர்பு இருப்பதால், பிற்காலத்தில் செய்யும் செயலை அல்லது அதன் எதிர்வினையைக் குறிக்கப் பயன்பட்டது.)

                     கர்>கரு(கர்+உ) – உ(படர்க்கை விகுதி) = ஒரு செயலை ஒருவர் செய்வதால் தோன்றும் ஒன்று(எதிர்வினை/கருமம்)

                     கர்>கரு>கரம் = அந்தச் செயலைச் செய்வது

கரம் = கரு + அம் = ஒரு செயலை(கருமத்தை) செய்வது(கைக்கு கரம் என்ற சொல்லும் இப்படித்தான் வந்தது.)

                     கர்>கரு>கருப்பு

                     கர்>கரு>கருமம்>கர்மா(Karma) = நன்மையான/தீமையான செயல். எக்கருமத்திற்க்கும் அதற்கு இணையான கருமபலன் இருக்கும். இது ஆசீவகம் மற்றும் ஜைனம் இரண்டிலும் உள்ள கோட்பாடு. ஆனால், கருமபலனை பற்றிதான் இவ்விரு நெறிகளும் வேறுபடுகின்றன.

 

இதேச் சொல்லாடல் ஜைனத்திலும் உண்டு. இத்தீர்த்தங்கரரை அவர்கள் அருகன்(அருகன்>Arhat) எனவும் அழைப்பர். அதனாலேயே ஜைனர்களுக்கு, அருகர்/ஆருகதர் எனும் பெயரும் வந்தது. இப்பொழுது ஏன் இதைக் கூறுகிறேன் எனப் பார்க்கிறீர்களா?. அருகன் என்பது நம் முருகனின் வேறுபெயர்களுள் ஒன்று. நம் முருகனின் பெயரான அருகன் எனும் பெயர் ஜைனத்தில் அனைத்து தீர்த்தங்கரரைக் குறிக்கும் பொதுச்சொல். ஆசீவக முருகன் என்பவன் தீர்த்தங்கரர்(அருகன்) எனும் பெயரில் ஆசீவகத்திலும் ஜைனத்திலும் கந்தன்(ஸ்கந்தா/கந்தாஸ் – Skanda(Sanskrit)/Khandas(Pali)) எனும் பெயரில் பௌத்தத்திலும் உள்ளவன். இதனால் தான், கதிர்காமத்தில் உள்ள கந்தன் கோயிலை இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்தர்களும் வழிபடுகின்றனர். சீனாவிலும் பௌத்த நெறியில் Skanda(Skanda Bodhisattva/Wei Tuo) வழிபாடு உள்ளது. அங்கு, Skandaவை போதிசத்துவர்(Bodhisattva) எனக் குறிப்பிடுவர். போதிசத்துவர் என்பது ஆசீவக சித்தர்களின் வேறுபெயர்களுள் ஒன்று எனப் பார்த்தோம். இதன் பொருள் என்னவென்றால், ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் போதி சத்துவர்எனப் பெயர் பெற்றனர். இங்கு நாம் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்தையும் போதிதர்மரையும் ஒப்புநோக்கவேண்டும்(இதைப் பற்றி பிறகு பார்க்கலாம்).

 

ஆசீவக முருக வழிபாடு எப்படி இந்து(தற்போதைய) நெறியிலும் ஜைன பௌத்த நெறிகளிலும் வந்தது என நீங்கள் கேட்கலாம். விநாயகர் வழிபாடு எப்படி இந்து ஜைன பௌத்த நெறிகளில் வந்தது என குறிப்பிட்டிருந்தேனோ அப்படித்தான் முருக வழிபாடும் வந்தது. முருக வழிபாடு எப்படி ஜைன பௌத்த நெறிகளுக்கு வந்தது என்றால், ஜைனக் கோட்பாடுகளும் பௌத்தக் கோட்பாடுகளும் ஸ்ரமணம்(அமணம்>சமணம்>ஸ்ரமணம்) எனும் சமணத்தின் திரிபிலிருந்து தோன்றியவை. அதற்கு முன் சமணம் எனும் சொல் ஆசீவகத்தை மட்டுமேக் குறிக்கும். அதாவது, ஜைனம் தோன்றுவதற்கு முன்பு சமணம்(அமணம்) என்றால் ஆசீவகம், ஆசீவகம் என்றால் சமணம்(அமணம்) என்றே பொருள். ஜைனம் தோன்றிய பின்பு சமணம் எனும் சொல் ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய இரண்டையுமே சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல்லானது. ஏன் பொதுச்சொல்லாக வேண்டும்?. அதற்குக் காரணம், ஆசீவகத்திற்கும் ஜைனத்திற்க்கும் பொதுவாக உள்ள கோட்பாடுகளால் தான். ஜைனக் கோட்பாடுகள் ஆசீவகக் கோட்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். ஆனால், சிறிது வேறுபாடுகள் உண்டு. இதனால் தான், முருக வழிபாடு, ஜைனத்திலும் பௌத்தத்திலும் உள்ளது. சமணம் எனும் சொல் ஜைனம் தோன்றிய பின்பு ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய நெறிகளைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என்று இருந்தால், பின்பு எப்படி சமணம் எனும் சொல் ஜைனம் எனும் சொல்லின் தமிழ்ச் சொல்லானது என நீங்கள் கேட்கலாம். இதற்கு விடை, முன்பு கூறப்பட்ட ஆசீவக நெறியின் சான்றுகளில் உள்ளது. அதாவது, இதற்குக் காரணம், ஆசீவகக் கோட்பாடுகள் மற்றும் வழிபாடுகள், ஆசீவகர்கள் நம்பிய, முன்பே முடிவு செய்யப்பட்ட விதி எனும் கொள்கையினாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகள் தங்கள் நெறியை புராணங்கள் மூலம் பரப்பியதாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகளால் ஆசீவகக் கோட்பாடுகளை இழுத்துக்கொள்ளப்பட்டதால் ஏற்ப்பட்ட குழப்பங்களாலும், ஆசீவகக் கோட்பாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்று பிற்கால வைதீக நெறியினர்களால் திரிக்கப்பட்டதாலும், பிற்காலத்தில் வைதீக இந்து நெறியின் செல்வாக்கு உயர்வாலும், மக்களிடம் வெகுவாகக் குறைந்த ஆசீவக நெறியின் செல்வாக்காலும், வழிவழியாக வந்த ஆசீவக நெறியைப் பற்றிய அறிவு குறைந்ததாலும், ஆரியர்களால் தமிழர்களின் வரலாற்று திரிப்புகளாலும் அழிப்புகளாலும், தற்காலத்தில் அப்படி ஒரு நெறியே இல்லை என்றளவிற்கு ஒரு நிலையை உருவாக்கிவிட்டது. அக்காலத்திலிருந்தே, ஜைன பௌத்த வைதீக நெறிகள் புராணங்கள் மூலம் தங்கள் நெறியை மக்களிடம் பரப்பின. ஏன், இந்நாட்களில் கூட தொலைக்காட்சிகளில் வைதீக இந்து நெறியினர், இராமாயணம் மகாபாரதம் முதலிய வைதீக இந்துக்களால் திரித்து(புனைந்து அல்ல) எழுதிய புராணங்களை திரையிடுகின்றனரே. ஏற்கனவே உள்ளவர்களிடம் மத நம்பிக்கையை வலுப்படுத்தவும் வழிவழியாக வரும் அடுத்த தலைமுறையினருக்கு தங்கள் மதத்தைப் பரப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் தான் இந்த செயல். ஆசீவக வழிபாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்ற பின் வைதீக நெறியினர்களால் புராணங்களாகத் திரிக்கப்பட்டன.

 

இது மட்டுமல்ல, கீழுள்ள கோட்பாடுகள் ஆசீவக ஜைன பௌத்த இந்து நெறிகளில் பொதுவாக உள்ளதை நாம் பார்க்கலாம்.

 1. விநாயகர் வழிபாடு
 2. முருகன் வழிபாடு
 3. ஓம் எனும் மந்திரச் சொல்
 4. சுழற்றியம்(ஸ்வஸ்திகா)
 5. ஊன் உண்ணாமை
 6. உண்ணா நோன்பு
 7. தலையில் மொட்டை அடிப்பது

இன்னும் பல...

 

சமணம்(ஆசீவகம், ஜைனம்), பௌத்தம், தற்போதைய வைதீக இந்து நெறிகள் அனைத்திற்கும் இடையே இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கின்றதென்றால், தற்செயலாக இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. முருகன் ஆனைமலையை ஆண்ட அரசன் எனப் பார்த்தோம். முருகனின் அறுபடைவீடுகளில் மலைமேல் உள்ள ஐந்து படைவீடுகள் அனைத்திலும் சமண குகைகள் உள்ளன என்பது இங்கு நோக்கத்தக்கது. சமணர் என்றால் இங்கு ஜைனரா ஆசீவகரா என நாம் பார்க்கவேண்டும். ஜைன நெறியினருக்கும் ஆசீவக நெறியினருக்கும் உள்ள வேறுபாடுகளுள் ஒன்று, ஜைன நெறியினர் மலை மேல் தங்கமாட்டார். அவர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் தங்குபவர்கள். ஆனால், ஆசீவகர்கள் மலைமேல் கற்படுக்கைகள் அமைத்துத் தங்குபவர். இதன்மூலம், இக்குகைகள் ஆசீவக சித்தர்கள் தங்கிய இடங்கள் எனத் தெளிவாகிறது.

 

இதன்மூலம், முருகன் ஆசீவக நெறியின் தெய்வ நிலையை அடைந்த சித்தன் எனத் தெரிகிறது. மேலும், முருகனை சித்தன், ஐயன்(எடுத்துக்காட்டு: முருகையன், வேலையன், சுப்பையன்), ஐயா என ஆசீவக சித்தர்களைக் குறிப்பிடும் சொற்களை வைத்து அழைப்பதும் இங்கு நோக்கத்தக்கது. இதை மேலும் உறுதிபடுத்தும் தரவுகளை அடுத்தத் திரியில் காண்போம்.

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

முருகன் பற்றிய ஆய்வு இதுவரையில் நான் அறிந்து யாரும் இப்படி செய்ததில்லை . அதிலும் திரு ஆவினன்குடி என்ற பெயர் வரக் காரணம் புதுமையாக இருக்கின்றது. இதுவரை பசுக்கள் அங்கு அதிகமாக இருந்த காரணத்தினாலேயே அந்தப் பெயர் வந்தது என்று சில இடங்களில் படித்திருந்தேன் .உங்கள் ஆய்வு ஆவணப் படுத்தப் பட வேண்டியது தமிழ் வேந்தன் . தொடருங்கள் உங்கள் ஆய்வுகளை .

 

Link to comment
Share on other sites

நன்று தமிழ்வேந்தன்.  எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. ..

> ஐந்திணை நிலங்களை பிரித்து அவைகளின் கடவுளாக முருகன் எங்கும் கூறப்படவில்லையே. குறிஞ்சி நிலக் கடவுகளாக கூறப்படும் சேயோனுக்கும் முருகனுக்கும் எதாவது தொடர்பு உண்டு என்று எண்ணுகிறீர்களா?

> வீரத்தின் அடையாளமாக கருதப்படும் கந்தனின் கையில் வேலும், அவன் செய்த போர்களையும் காண்கிறோம். போர்த்தொழிலை கொண்ட கந்தன் கொல்லாமையை போதிக்கும் சமண மதத்தின் மூலமாக பார்க்கலாமா?

> "கொடிநிலை கந்தழி வள்ளி என்னும்
வடுநீங்கு சிறப்பின் முதலன
மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

என்று தொல்காப்பியம் கூறும் கந்தழி வழிபாட்டு முறைக்கும் கந்தனுக்கும் தொடர்பு உண்டா ?

 

> சங்க இலக்கியம் முழுவதும் கூறப்படும் "வேலன் வெறியாட்டில்" வழிபடக்கூடியவன் இவனா?
 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

> வீரத்தின் அடையாளமாக கருதப்படும் கந்தனின் கையில் வேலும், அவன் செய்த போர்களையும் காண்கிறோம். போர்த்தொழிலை கொண்ட கந்தன் கொல்லாமையை போதிக்கும் சமண மதத்தின் மூலமாக பார்க்கலாமா?

 

உங்கள் கேள்வி நியாயமானதே. கொல்லாமையை போதிக்கும் சமண(ஆசீவகம், ஜைனம்) மதத்தில் எப்படி போர் புரிந்து பிற உயிர்களைக் கொன்ற அரசன் இருக்க முடியும்?.

 

போர் என்பதை எதிரியை அழிக்கும் தொழிலாகப் பார்ப்பதை விட தமிழர்கள் அதை ஒரு கலையாகப் பார்த்தனர் என்றேக் கூறவேண்டும். போர்க்கலையில் வெற்றி பெறுவது வீரத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது எனலாம்.

 

ஆசீவக(சமணம்) நெறி என்றால் கொல்லாமை, விதி நம்பிக்கை, முதலிய கோட்பாடுகள் மட்டும் அல்ல. அப்படிப்பட்ட காட்சிதான் நம் மனதிற்கு முதலில் வரும். அப்படிப்பட்ட நிலைமையில் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், கலைகளை(ஆயகலைகள் 64 - அறிவியல்கள்) உருவாக்கியவர்கள் தமிழ்ச் சித்தர்கள்(ஆசீவக சித்தர்கள்).

தமிழ் மொழி - ஒரு கலை

சோதியம் - ஒரு கலை

போர் - ஒரு கலை

சித்தம்(சித்த மருத்துவம்) - ஒரு கலை

ஓகம்(யோகம்) - ஒரு கலை

 

போர்புரியும் நோக்கத்தில் மூன்று வகை உண்டு. வீரத்திற்காக போர் புரிவது. பகைக்காக போர் புரிவது. போராமைக்காக(பொறாமை)/ஆக்கிரமிப்பிற்காக/தன் தேவைக்காக போர் புரிவது. முதல் வகையில் பகைவரை அழிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகையில் பகைவரை அழிக்கும் நோக்கம் கண்டிப்பாக இருக்கும். இந்த வேறுபாடு தமிழர்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.

 

தமிழர்களுக்குள்ளேயே முற்காலத்தில், வீரத்திற்காக போர் புரிந்தவர்கள், பிற்காலத்தில், பகைக்காக போர் புரிந்தனர் என்பது ஒன்று. ஆனால், தமிழர்களைத் தவிர பிற மக்கள் கூட்டங்களும் தமிழர்களின் மீது போர் தொடுத்து வந்தனர். அக்காலத்திலேயே, ஒரு நாடு கலைகள்(அறிவியல்கள்) மற்றும் செல்வங்கள் கொழிக்கும் நாடாக இருந்தால், பிற நாட்டு மக்கள்/பகைவர்கள்(தமிழகத்தைத் தவிர) போர் தொடுத்து(பண்பாட்டுப் போர்/அரசியல் போர்) வரத்தான் செய்வர்(இது நியதி). பகைவர்களிடமிருந்து மக்களைக் காக்க போர்க்கலைகளும் மற்ற சண்டையிடும் கலைகளும்(சிலம்பாட்டம், மல்யுத்தம், மற்றும் பல) தேவைப்பட்டிருக்க வேண்டும். இப்படிப் பட்ட கலைகளை உருவாக்கியவன்/பெறிதாக வளர்த்தவன் முருகனாக இருந்திருக்க வேண்டும். முருகன் போர்கள் செய்து தன் மக்களைக் காத்தான்(மக்களின் உயிரைக் காத்தான்). சங்க இலக்கியம் குறிப்பிடும் முருகன் செய்த போர் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகையைச் சார்ந்தவை. மேலும், இங்கு நோக்க வேண்டியதென்னவென்றால், சங்க இலக்கியங்கள் முருகன் பகைவரை அழித்தான் எனக் கூறவில்லை. மாறாக பகைவரை துரத்தியடித்தான் என்றேக் கூறுகிறது. இங்கு, நோக்கம் என்பது தன் நாட்டு மக்களைக் காப்பதேத் தவிர பகைவரை அழித்தல் ஆகாது. அப்படி அவன் செய்யவில்லையென்றால், கொல்லாமையை பின்பற்றும் அவன் நாட்டு மக்களும் அழிவர் என்கிற பொழுது, ஒரு நாட்டு அரசன் என்ற முறையில் அவன் போர் புரியாமல் இருக்க முடியாது.

 

கொல்லாமை என்பதை ஒரு கோணத்தில் பார்த்தால் உயிரைக் காப்பது(கொல்லாமல் காத்தல்) எனவும் பொருள் கொள்ளலாம். இன்னும் கூறப்போனால், ஒரு உயிரை கொல்லாமல்/கொல்லவிடாமல் தடுப்பதும் உயிரைக் காத்தல் எனப்படும்(அரசனின் தொழிலான மக்களைக் காத்தல்). இவ்வகையில் பார்த்தாலும், முருகன் பகைவரின் உயிரைக் காத்து அவர்களை அழிக்காமல் துரத்தியிருக்கிறானே.

 

> ஐந்திணை நிலங்களை பிரித்து அவைகளின் கடவுளாக முருகன் எங்கும் கூறப்படவில்லையே. குறிஞ்சி நிலக் கடவுகளாக கூறப்படும் சேயோனுக்கும் முருகனுக்கும் எதாவது தொடர்பு உண்டு என்று எண்ணுகிறீர்களா?

 

சேயோன் என்ற சொல் சிவந்தவன் எனப் பொருள்படும். சிவந்தவன் என்றால் சிவனா முருகனா என நாம் பார்க்கவேண்டும்.

குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடல் முருகனை சிவப்பு நிறமுடையவன் எனக் குறிப்பிடுகிறது. இப்பாடலில் இன்னும் ஆய்வு தேவை. ஏனென்றால், இதேப்பாடலில் தான் 'உடுக்கைக் குன்று' எனும் சொல்லும் வருகிறது. 'உடுக்கை' என்பது சிவன் தொர்புடைய சொல்.

 

முருகனுக்கும் சிவப்பு நிறத்திற்கும் குறுஞ்சி நிலத்திற்கும் தொடர்புகள் இருந்தாலும் சேயோன் எனும் சொல் ஆய வேண்டிய ஒன்று.

 

ஐவகை நிலத்திற்கும் தொல்காப்பியர் கூறும் கடவுள்கள் முறையே

 

சேயோன்

மாயோன்

வேந்தன்

வருணன்

கொற்றவை

 

ஆகும். இதில், வேந்தன் எனும் சொல்லை நாம் எடுத்துக் கொண்டால், அது ஒரு பொதுச்சொல். அதாவது மருத நிலத்தை ஆளும் அரசனைக் குறிக்கும் பொதுச்சொல். ஆகையால், சேயோன் எனும் சொல் ஒரு பொதுச்சொல்லாகக் கூட இருக்கலாம். இச்சொல், சிவன் முருகன் இருவரையுமே குறிக்கப்பயன்பட்டிருக்கலாம். சங்ககாலத்தில் இருந்து இன்று வரை முருகனை சிவனின் ஒரு அம்சமாக பார்க்கப்பட்டிருப்பதும்(யாரால்?) இங்கு நோக்கத்தக்கது.

 • வேதங்களில் இந்திரன் என்ற தேவர்கள் அரசனின் படைகளான மருதகணங்களின் தலைவனாக ருத்ரன்(உருத்திரன்(சிவன்)>ருத்திரன்>ருத்ரன்) குறிப்பிடப்படுவது போன்றே வடமொழிப் புராணங்களில் தேவசேனாபதியாக முருகன் (ஸ்கந்தன்) குறிப்பிடப்படுகிறான்.
 • திருஞானசம்பந்தரை முருகன் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் சொல்வர். கந்தசஷ்டிக்கு முருகனுக்கு மும்மூர்த்தி அலங்காரம் செய்யும் வழக்கம் உள்ளது. ஐப்பசியில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து (சிவப்பு சாத்தி) நடராஜராஜர்(சிவன்) அம்சமாகவும், மதியம் வெள்ளை (வெள்ளை சாத்தி) வஸ்திரத்துடன் பிரம்மா அம்சமாகவும், மாலையில் பச்சை (பச்சை சாத்தி) வஸ்திரம் அணிந்து திருமால் அம்சமாகவும் காட்சி தருவார். இந்த வழக்கத்தை நாம், சிவகிரியில்(திருநெல்வேலி) உள்ள முருகன் கோயிலிலும் மருங்கூரில்(கன்னியாகுமரி) உள்ள முருகன் கோயிலிலும் காணலாம்.
 • கீழுள்ள நம் மரபு வழிச்செய்தியையும் இங்கு நாம் பார்க்கவேண்டும்.

தமிழ் கற்றுக்கொடுத்தது

சிவன்->முருகன்->அகத்தியர்->அகத்தியர் சீடர்களுள் ஒருவரான தொல்காப்பியர்

முருகன் சிவனிடமிருந்து தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார்.

 

 

இதைப் பற்றி சிறிது ஆய்ந்துவிட்டு மிகுதியை அடுத்தத் திரியில் எழுதுகிறேன். இப்போதைக்கு எனக்குத் தோன்றுவது,

 

சேயோன் -> சிவந்தவன்(சேயோன் பொருள்) -> சிவன், முருகன் <- சிவலிங்கம் <- கந்தழி

 

> "கொடிநிலை கந்தழி வள்ளி என்னும்

வடுநீங்கு சிறப்பின் முதலன

மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

என்று தொல்காப்பியம் கூறும் கந்தழி வழிபாட்டு முறைக்கும் கந்தனுக்கும் தொடர்பு உண்டா ?

 

> சங்க இலக்கியம் முழுவதும் கூறப்படும் "வேலன் வெறியாட்டில்" வழிபடக்கூடியவன் இவனா?

 

இதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. என் பார்வைக்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி... :)

 

இதைப் பற்றி ஆய்ந்து, அடுத்தத் திரியில் இவைகளைப் பற்றிய என் ஆய்வை சேர்த்து எழுதுகிறேன்...

Link to comment
Share on other sites

தொடர்ந்து ஆய்ந்து எழுதுங்கள். ஆவலோடு வாசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

உங்கள் ஆய்வின்போது கீழ்க்கண்டவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
 
சங்க இலக்கியத்தில் மூன்று நிலைகளில் படிப்படியாக முருக வழிபாடு மாறுபடுகிறது. 
 
1. முதலில் குறிஞ்சிக் கடவுளாக குறவர் தெய்வமாக போற்றப்படுகிறார்.  அவருக்கு நிலையான ஆலயமோ வழிபாட்டு  இல்லை.வெறியாட்டு போன்ற விழாக்கள் இந்தக் காலகட்டத்தில் இருந்தது. 
 
2. ஆறுபடை வீடுகள் என்ற பெயரில் இருந்த ஆலயங்கள் முருகனின் தங்கும் இடமாக அமைத்தது. இது திருமுருகாற்றுப் படை காலம் 
 
3. வெறியாட்டு போன்ற விழாக்கள் தவிர்க்கப்பட்டு முற்றிலும் சமஸ்கிருத மொழியிலான மந்திரங்களை ஓதி செய்யப்பட்ட வழிபாடு. இது பரிபாடல் காலம் 
 
வேந்தன் என்னும் சொல் முதலில் மருத நிலத் தலைவருக்கே இருந்தது. காலப்போக்கில் அது பொதுவாக மாறியது.
 
கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையிலான முருகன் சிற்பங்களிலெல்லாம் முருகனின் வாகனமாக யானையே சித்திரிக்கப்படுகிறது என்று ஒரு கட்டுரையில் படித்தேன்.யானை வடிவெடுத்து வள்ளியை அச்சுறுத்தி முருகனிடம் அடைக்கலம் புகச் செய்து இருவரையும் மணம் புணரச் செய்தவர் விநாயகரே என்று கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அருணகிரிநாதர் தமது திருப்புகழில் குறிப்பிடுகிறார்.  
 
ar0407064a.jpg
Link to comment
Share on other sites

 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

ஆதித்ய இளம்பிறையன் அவர்களே,

தமிழர்களின் சேயோனுக்கும் சிவப்பு இந்தியர்களுக்கும்(Red Indians) நிறைய பண்பாட்டு ஒற்றுமைகள் கிடைக்கிறது. அதேபோல, தமிழர்களின் மயோனுக்கும் மாயன்களுக்கும்(Mayans) நிறைய பண்பாட்டு ஒற்றுமைகள் கிடைக்கிறது. சேயோன், கந்தழி குறித்த உங்கள் ஆய்விற்கு உதவும் எனத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

தமிழ்வேந்தன் உங்களது அடுத்த ஆய்வுப் பகுதி எப்போது ??.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வேந்தன் உங்களது அடுத்த ஆய்வுப் பகுதி எப்போது ??.

 

இன்னும் ஓரிரு வாரங்களில் அடுத்தக் கட்டுரை முடிந்துவிடும்...முடிந்தவுடன் பகிர்ந்துகொள்கிறேன்... :)

 

ஐயா ஆதி. சங்கரன் அவர்கள் ஆசீவகம் பற்றி இயற்றிய சிறுசிறு நூல்கள் சிலவற்றை அவரின் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்(இணைப்புகள் கீழே)...இன்னும் பல கோட்பாடுகள் இந்நூல்களில் உள்ளன...

 

ஆதித் தமிழர் மெய்யியல், ஆதி. சங்கரன்

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள், ஆதி. சங்கரன்

ஐயனார் தந்த ஐகாரமும் ஐகாரம் தந்த வள்ளுவரும், ஆதி. சங்கரன்

 

நேரம் கிடைக்கும்பொழுது படிக்கவும்...

Link to comment
Share on other sites

 • 1 year later...

தமிழ்வேந்தன் அய்யா நான் உங்களை தொடர்புகொள்ள விரும்புகிறேன் தயவுசெய்து எப்படி தொடர்புகொள்வது என தெரியபடுத்துங்கள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • என்னப்பா இது..... தலை, கால் புரியவில்லை...... இதுக்கு பதில்..... மலைப்பாம்பை... விழுங்கி..... நாலு கோட் எழுதி.... ரிஸ்க் இல்லாமல் காசு பார்க்கலாமே என்று யோசிக்கிறேன். 🤔
  • வடமாராட்சியில் கரையொதுங்கிய சடலங்களில் ஒன்றை சிம்பன்சி குரங்கு என புதைப்பு? December 8, 2021   வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் சிம்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி காவற்துறையினர் புதைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறைத் திணைக்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் 5 சடலங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக கரை ஒதுங்கிய சடலத்தை காவற்துறையினர் புதைத்துள்ளனரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த சடலம் சிம்பன்சி குரங்கின் சடலம் என அந்தச் சடலம் புதைக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி கடற்பரப்பில் கடந்த வாரம் வெவ்வேறு தினங்களில் 5 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என்றும் அவை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். அவை தொடர்பில் தகவல்கள் கிடைக்காதமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் மணற்காடு கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் நீதிமன்றுக்கு தகவல் வழங்கப்படாமல் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளின் சடலம் மீட்கப்பட்டாலும் நீதிவானின் அனுமதியுடன் கால்நடை வைத்திய அதிகாரியின் விசாரணைக்கு உள்படுத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.   https://globaltamilnews.net/2021/170040
  • ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமிழ்த்துகிறது? அரவிந்தன் கண்ணையன் பிரான்சிஸ் ஹாகென் (Frances Haugen) ஓர் அமெரிக்க தொலைக்காட்சியின் நேரலையில் தோன்றினார்.  ஃபேஸ்புக்கின் செயல்பாடுகள் குறித்து ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில் சமீபத்தில் வெளிந்த கட்டுரைகளுக்குத் தரவுகள் தந்துதவியது ஃபேஸ்புக் நிறுவனத்திலேயேவேலை பார்க்கும் தான்தான் என்று அவர் சொன்னார். அடுத்த 24 மணி நேரத்தில் பேஸ்புக்கின் பங்குச்சந்தை மதிப்பு 6 பில்லியன் டாலர் சரிந்தது. மேலும் சோதனையாக ஃபேஸ்புக் செயலி பல மணி நேரங்கள் செயலிழந்ததும், அந்நிறுவனத்தின் செயல் திறன் மீது கேள்விகள் எழுப்பியது. இச்சூழலில் அமெரிக்காவின் மூன்று முக்கிய பத்திரிக்கைகள் - ‘நியூ யார்க் டைம்ஸ்’ (NYT),  ‘வாஷிங்டன் போஸ்ட்’ (WaPo), ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ (WSJ) - அடுத்தடுத்து நீண்ட கட்டுரைகளை வெளியிட்டன. இந்தியாவில் வெறுப்பரசியல் வளர  ஃபேஸ்புக் உதவுவதாகவும், இதைத் தடுக்க எந்தப் பிரயத்தனமும் எடுக்கப்படவில்லை என்றும் அந்தக் கட்டுரைகள் கூறின.  இப்படி மூன்று மிக முக்கிய பத்திரிக்கைகள் இந்தியாவை மையமாக வைத்து ஃபேஸ்புக்கின் செயல்பாட்டினை அம்பலப்படுத்தியது மெதுவாகவே இந்திய ஆங்கில ஊடகங்களில் பேசப்பட்டன, அதுவும் மேம்போக்காக! தமிழ் ஊடகங்களில் இவ்விஷயம் பெரும் கவனத்தைப் பெறவில்லை. இந்திய அரசியலை உற்றுக் கவனிப்போர் விவாதிக்க வேண்டிய விஷயம் இது என்பதாலேயே இக்கட்டுரை அவசியமாகிறது. ஃபேஸ்புக்கின் உளவியலும் நன்மைகளும் குகைகளில் கோட்டோவியம் வரைந்த ஆதி மனிதன் முதல் இன்று வரை எண்ணங்களை சக மனிதனோடு பகிர்வது அடிப்படை அவாவாக இருக்கிறது. சகல ஜீவராசிகளும் அதில் ஏதோவொரு வகையைப் பின் பற்றினாலும் மனிதனால்தான், தன் பின்புலத்தோடு வேறுபட்ட மற்றவர்களோடு அர்த்தத்துடன் உறவாடி அறிவுத் தளத்தில் இணைந்து செயல்பட முடிகிறது. அவ்வகையில் சமூக வலைதளங்களின் அறிமுகமும் நவீன யுகத்தின் இணைய வசதிகளும் அவ்வுணர்வுக்கு நெய்யூற்றி வளர்த்தது. உலகம் நிஜமாகவே இன்று கையளவுதான். அக்டோபர் மாதம் டில்லியில் வாழும் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன், ஸ்வீடனில் வாழும் பாகிஸ்தானிய வரலாற்றாசிரியர் இஷ்டியாக் அஹ்மத், நியூ ஜெர்ஸியில் வாழும் நான் ஆகியோர் முகம்மது அலி ஜின்னா பற்றிய நேரலை நிகழ்வொன்றை ஃபேஸ்புக் மூலம் ஒருங்கிணைத்தோம்; பார்வையாளர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில். நிகழ்வின் முடிவில் ஜின்னா போன்ற ஓர் ஆளுமையைப் பற்றி பலரும் அறிய முடிந்தது. அதேபோல் தலித் வரலாற்றாசிரியர்களோடு நிகழ்த்திய நேரலைகளும் பலருக்கு புதிய வரலாற்று புரிதல்களை அளித்தன. பேரிடர்களின்போது ஃபேஸ்புக் மூலம் உதவிகள் ஒருங்கிணைப்பது, மருத்துவச் செலவுகளுக்குப் பணம் திரட்டுவது - ஒரு குழந்தையின் மருத்துவத்துக்கும் கோடிக்கணக்கில் பணம் திரட்டியதும் சமீபத்தில் நடந்தது - ஜனநாயகம் காக்க யதேச்சாதிகார அரசுகளுக்கு எதிராகத் திரள உதவுவது என்று ஃபேஸ்புக் எவ்வளவோ நற்பயன்களை நமக்குத் தருகிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், விஞ்ஞானம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எப்போதுமே இரு முனைக் கத்தி! அணுசக்தியால் நகரங்கள் அழிந்திருக்கின்றன. அதே அணுசக்தி புற்றுநோயிலிருந்து காக்கவும் உதவுகிறது. ஃபேஸ்புக்கும் இதற்கு விதிவிலக்கு இல்லை.  அமெரிக்க அரசியலும் பேஸ்புக்கும் 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகமே ஆச்சர்யப்படத்தக்க வகையில் ஹிலாரி கிளிண்டன் தோற்று டொனால்ட் டிரம்ப் ஜெயித்தார். அமெரிக்க அரசியல் உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்த நிகழ்வு அது. அந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது ட்விட்டரை மிகச் சாதுர்யமாக டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய விதம். அத்தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா என்று ஆராய்ந்த அமெரிக்க அரசு நிறுவனங்கள், “ஆம், ரஷ்யா ஒரு மிகப் பெரும் பொய்ச் செய்தி பரப்புரையை மேற்கொண்டது, சமூக ஊடகங்களின் துணையோடு!” என்று அறிவித்தன. வாஷிங்டன் டி.சி. அருகே ஒரு பீட்சா ஹட் உணவகத்தில் ஹிலாரி கிளிண்டனின் பாலியல்ரீதியாக குழந்தைகளை துன்புறுத்துவதாக ஒரு பொய்ச் செய்தி ஃபேஸ்புக்கில் பரவ அந்த உணவகம் தாக்கப்பட்டது, சமூக வலைதளங்களின் வீச்சுக்கும் தாக்கத்திற்கும் ஓர் உதாரணம் இது. 2020 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோற்றார். ஆனால், தொடக்கத்தில் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து அமெரிக்க ஜனாதிபதியான அவரே பொய்ச் செய்திகளை பரப்பினார். அவர் ஆதரவாளர்கள் அச்செய்திகளை சமூகவலைதளங்களில் மேலும் பரவலாக்கினர். அமெரிக்க தேர்தலின் மீது அமெரிக்கர்களே நம்பிக்கை இழந்து, ‘மோசடி நடந்தது’ என்று பேசும் நிலையை உருவாக்கினர். டிரம்பின் நீதித் துறையே, தேர்தல் நேர்மையாக நடந்ததென்று சான்றளித்தை டிரம்ப் ஆதரவாளர்கள் கேட்கவில்லை. முத்தாய்ப்பாக தேர்தல் முடிவை அதிகாரபூர்வமாக அமெரிக்க காங்கிரஸ் ஏற்கும் நாளன்று அமெரிக்காவே திகைக்கும் வகையில் காங்கிரஸ் கட்டிடத்தைத் தாக்கிச் சூறையாடினார்கள் டிரம்ப் ஆதரவாளர்கள். இதில் ஃபேஸ்புக்கின் பங்கு கணிசமானது. இன்ஸ்டாகிராமும் பதின்ம வயதுப் பெண்களின் உளைச்சலும் செப்டம்பர் 14 அன்று ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை, ஃபேஸ்புக்கின் இன்னொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் எவ்வாறு பதின்ம வயதுப் பெண்களுக்கு தங்கள் உடல் பற்றிய திருப்தியின்மையை உருவாக்கி பெரும் மன உளைச்சல் அளிக்கக் காரணமாகின்றது என விரிவான கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரை வெளியான சமயம்தான் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை இளம் பதின்ம வயதினருக்கு அனுமதியளிக்க எத்தனித்தது.  ஃபேஸ்புக் நிறுவன ஆய்வின் அடிப்படையிலேயே, மூன்றில் ஒரு பங்கு (33%) பதின்ம வயதுப் பெண்கள் இன்ஸ்டாகிராமினால் தங்கள் உடல் அழகின் மீது அதிருப்திக் கொண்டு உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியது ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ கட்டுரை. தற்கொலை எண்ணம் எழுந்த பதின்ம வயதினரில், அமெரிக்காவில் 6% இன்ஸ்டாகிராமை குற்றஞ்சாட்டினார்கள். பதின்ம வயதினரும் இள வயதினரும் ஃபேஸ்புக்கைவிட இன்ஸ்டாகிராமையே அதிகம் விரும்புகின்றனர் என்கிற புள்ளிவிபரத்தை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இந்த பிரச்சினைகள் எல்லா 'ஸ்நாப்சேட்' போன்ற தளங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமுக்கே பிரத்யேகமான சில பிரச்சினைகள் உண்டு. ஃபேஸ்புக் தானே அறிய வந்த இந்த உண்மைகளைப் பொதுவெளியில் மட்டுப்படுத்தியே பேசியதோடு அல்லாமல், இது போன்ற ஆய்வின் முடிவுகளைக் கேட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கே விபரங்களை அளிக்க தட்டிக் கழித்தது என்றது ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’கட்டுரை. வெறுப்பை ஊக்குவிக்கும் அல்காரிதம் எந்த ஒரு மென்பொருள் (Software) செயல்பாட்டினை நிர்ணயிப்பதும் கட்டமைப்பவதும் அதனை எழுதப் பயன்படுத்தும் மொழியும் அது சார்ந்த இலக்கணமும். அம்மொழிகளை வைத்துக் கட்டமைக்கப்படும் ஒவ்வொரு செயலுக்கான விளைவினை ‘அல்காரிதம்’ என்று சொல்லலாம். ஒரு பொத்தானை அழுத்தினால் அடுத்து என்ன நிகழும் என்று கட்டமைப்பதே அல்காரிதம். இன்று சமூக வலைத்தளங்கள் வெறுப்பை ஊக்குவிக்கும் செயலிகளாக உருமாறியிருப்பது தற்செயல் இல்லை. 2016-ல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆய்வாளரே வெளியிட்ட பதிவொன்றில், ‘சமூக வலைதளங்கள் மூலம் செய்திகளைப்  படித்து ஒரு ஊக்கமற்ற தன் தேவைக்கான நுகர்வோராக (passive user) மட்டுமே இருப்பது மன ஆரோக்கியத்துக்கு கேடு’  என்று கண்டறிந்து எழுதினார். ஆனால், ஃபேஸ்புக்கால் விளையும் மன பாதிப்புக்கான மருந்து, ஃபேஸ்புக் மூலம் இன்னும் பலருடன் பகிர்தலே’ என்பதாகச் சொல்லி அதனை ஊக்குவிக்கும் வகையில்  ஃபேஸ்புக் செயல்பட ஆரம்பித்தது. ஃபேஸ்புக்கின் புதிய அல்காரிதம் விருப்பக் குறிக்கு (like) 1 மதிப்பெண், மறுப்பகிர்வுக்கு 5, முக்கியமான நீள கமெண்ட் அல்லது மறுப் பகிர்வுக்கு 30 என்று பதிவுகளை மதிப்பிட ஆரம்பித்து, இதற்கேற்ப பதிவுகளைப் பயனர்களின் செய்திச் சுருளில் (news feed) காட்டுமாறு செய்தது. இதன் விளைவாக சர்ச்சைப் பதிவுகள் பிரதான இடம்பெற்றன, ஆக்ரோஷத்தை உண்டாக்கும் பதிவுகள் தூக்கிப்பிடிக்கப்பட்டன. போலந்தில் ஓர் அரசியல் கட்சி 50%-50% என்கிற அளவில் நேர்மறைச்செய்தி, எதிர்மறைச் செய்திகளைப் பகிர்ந்துவந்தது. ஃபேஸ்புக்கின் புதிய அல்காரிதம் மாற்றத்துக்குப் பின் எதிர்மறைச் செய்திகளின் பங்கு 80% ஆக எகிறியது. இப்படிப்பட்ட சூழலில்தான் பாஜகவின் ஐடி விங்கின் எதிர்மறைச் செய்திகளை நாம் நினைவுகூர வேண்டும். சென்ற வருடம் ஃபேஸ்புக் கோப உணர்வு எமோஜிக்கான மதிப்பீட்டை பூஜ்யமாக்கியதும் வன்முறைப் பதிவுகள் குறைந்தன என்று நிறுவனத்தின் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடத்தில் நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஃபேஸ்புக்கின் அல்காரிதத்தின் பகடைக்காய்கள் ஆகிவிடுகிறோம். நீண்ட நாள் ஃபேஸ்புக் செயல்பாட்டாளனாக என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும். தமிழ்ப்  பதிவுகளில் பிராமணர்களைக் காழ்ப்புடன் பழிப்பதோ, பெரியாரைக் காட்டமாக விமர்சிப்பதோ நொடிப் பொழுதில் வைரலாகும். மார்க் ஸக்கர்பர்க் இப்படியான எதிர்மறை விளைவுகளை மட்டுப்படுத்த நிறுவன ஊழியர்கள் முன்வைத்த யோசனைகளை நிராகரித்தார் என்கிறது ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ கட்டுரை. இந்த இடத்தில்தான் நாம் இந்தியா தொடர்பான ஃபேஸ்புக் செயல்பாடுகளையும், பாஜகவின் வெறுப்பரசியலையும் ஆராய வேண்டி இருக்கிறது. 2019 தேர்தலும் பாஜகவின் சமூக வலைதளப் பிரச்சாரமும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அசுர வெற்றி பெற்றது ஏன் என்று கிரிஸ்டோஃப் ஜாஃப்ரலாட்டும் கில்லிஸ் வெர்னியர்ஸும் ‘கான்டெம்ப்ரவரி சௌத் ஏஷியா’ (Contemporary South Asia) இதழில் வெளியிட்ட கட்டுரையில் சில காரணங்களை முன்வைத்தார்கள். அத்தேர்தலில் பாஜக சமூக வலைதளங்களை எப்படிப் பயன்படுத்தியது என்று கவனப்படுத்தியிருக்கிறார்கள். சில விவரங்களை இங்கு தொகுக்கிறேன். தேர்தலுக்காக ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து மிகப் பெரும் களப் பணியாளர் படையை உருவாக்கியது பாஜக. மஹாராஷ்டிரத்தில் மட்டும் 92,000 வாக்குச்சாவடிக் கண்காணிப்பாளர்கள். எந்த ஒரு பணியாளரும் 100 வாக்காளருக்கு மேல் பொறுப்பாக இருக்க மாட்டார், அந்தளவுக்குப் பணியாளர்களும் இருந்தார்கள். 2018-ல் அமித் ஷா, பூத் செயல்பாட்டு திட்டம் ஒன்றை உருவாக்கினார். இதில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒருவர் என்று 90,000 செல்பேசி பிரமுகர்கள் (cell phone pramukhs) நியமிக்கப்பட வேண்டும் என்பது இலக்கு.  இப்படி நிர்ணயிக்கப்படுபவர்கள் வெறும் செய்தி சேகரிப்பாளர்கள் மட்டும் இல்லை; செய்திகளைப் பரவலாக்குவோரும் ஆவர். அவர்களுக்கு செல்பேசி அளித்து வாட்ஸப் குழுமங்களை உருவாக்கி அதன் மூலம் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதே குறிக்கோள். ஐ.டி. விங்கின் தலைவர் அமித் மாளவியா 1.2 மில்லியன் களப் பணியாளர்கள் பாஜக அரசின் சாதனைகளைப் பரப்புரை செய்கிறார்கள் என்றார். ஒரு டிரோல் (troll) படையே உருவாக்கப்பட்டது என்கிறார்கள் கட்டுரை ஆசிரியர்கள். 2019 தேர்தலுக்கு, ‘ஐ.டி. படை வீரர்கள்’ (I.T. Yoddhas) என்று ஒரு அணியே அமித் ஷா வழிமுறையில் உருவாக்கப்பட்டதாகவும், அவர்களுள் ஒருவரான தீபக் தாஸ் 1,114 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாகவும் சொல்கிறார். இவர் பாஜகவின் அதிகாரப்பூர்வ கட்சி உறுப்பினர் அல்ல, மாறாக, ‘நானும் சௌகிதார்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட வாக்கு சேகரிப்பாளர் அல்லது வாக்காளர் மீது தாக்கம் செலுத்தும் 10 மில்லியன் ஆதரவாளர்களுள் ஒருவர். 2019-ல் பாஜக 2,00,000 - 3,00,000 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாகவும், காங்கிரஸ் 80,000 - 1,00,000 வரை நடத்தியதாகவும் தெரிகிறது. ஃபேஸ்புக் பொய்ச் செய்தி பரப்பும் போலிக் கணக்குகளை முடக்கியபோது அவற்றில் முக்கியமான ஒன்றாகப் பேசப்பட்ட ‘இண்டியா ஐ’ (India Eye) பாஜக சார்பானது. ராகுல் காந்தியை இஸ்லாமியர் என்றும், காங்கிரஸ் அரசியலர்கள் பாகிஸ்தானின் கொடியை வைத்திருப்பதுபோலவும் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. 2017 உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித் ஷா ஒரு கூட்டத்தில், “பொய்யோ மெய்யோ நாம் ஒரு செய்தியை எல்லா மக்களிடத்திலும்  கொண்டுசேர்க்கும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்” என்றார். பாஜகவின் தேர்தல் வியூகத்தில் மட்டுமல்ல, தேசத்தை அரசாளும் வியூகத்திலும் சமூக வலைத்தளத்துக்கு பெரும் பங்குண்டு. அதன் மூலம்தான் அதன் வெறுப்பரசியல், வாக்காளர்களின் விரல் நுனிகளுக்கும் விழித்திரைகளுக்கும் சென்றடைகிறது. இது இன்று நேற்று நடப்பதல்ல. சமூக வலைதளக் காலம் இதை மேலும் விஸ்தரித்திருக்கிறது. ஃபேஸ்புக்கும் அங்கி தாஸின் ராஜிநாமாவும் ஃபேஸ்புக்கை இந்திய வெறுப்பரசியலின் முக்கிய அங்கமாக பாஜக இருப்பதைப் பற்றி ஆகஸ்ட் 2020-ல் ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ விரிவான கட்டுரையை வெளியிட்டது. பாஜகவின் டி.ராஜா சிங், தெலுங்கானாவைச் சேர்ந்தவர். ரோஹிங்யாக்களைப் பற்றியும், இந்திய முஸ்லிம்களைப் பற்றியும் மிக ஆட்சேபகரமான பதிவுகளை, வன்முறையைத் தூண்டும் விதமாகவே (விரிவாக அப்பேச்சுகள் இந்திய ஊடகங்களிலும் பேசப்பட்டது, சுட்டிகளை கட்டுரையின் கீழ் காண்க) எழுதவும் பேசவும் செய்தார். அவரைப் போன்ற வன்முறைப் பேச்சுகள் பேசியவர்களை அமெரிக்காவில் ஃபேஸ்புக் தன் எல்லா தளங்களிலிருந்து நீக்கியிருந்தாலும், ராஜா சிங் மீது நடவடிக்கை எடுத்தால் ஆளும் பாஜகவைப் பகைத்துக்கொள்ள நேரிடுமோ என ஃபேஸ்புக் இந்தியாவின் முக்கிய பொறுப்பில் இருந்த அங்கி தாஸ் மறுத்துவிட்டார். ஃபேஸ்புக்கை அமெரிக்காவில் உபயோகிப்போர் 200 மில்லியனுக்கும் சற்று குறைவு, இந்தியாவில் பயனாளர்கள் எண்ணிக்கை 300 மில்லியனை நெருங்குகிறது. அங்கி தாஸ் பாஜக சார்புடையவராக இயங்கினார் என்று ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களே சொன்னார்கள். 2014-ல் அங்கி தாஸ் நரேந்திர மோடியின் சமூக வலைத்தள பிரச்சாரத்தை முடுக்கிவிட உதவியதாகவும், அதன் பின் நிகழ்ந்தது ஊரறிந்தது என்றும் பதிவிட்டார். இன்னொரு பதிவில் அவர் 30 வருட களப் பணி இந்தியாவை சோஷலிஸத்தில் இருந்து விடுவித்தது என காங்கிரஸை தாக்கிப் பதிவிட்டார். அங்கி தாஸின் செயல்கள் பாரபட்சமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு தாஸின் பதிவுகள் முழுமையாகப் பார்த்தால் எந்தப் பாரபட்சத்தையும் காட்டவில்லை என ஃபேஸ்புக் நிறுவனம் சமாதானம் சொன்னது. தாஸ் இஸ்லாமியரை பற்றியும் கீழ்த் தரமான பதிவொன்றைப் பகிர்ந்திருந்தார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டே, ‘இந்திய முஸ்லிம்கள் கரோனா தொற்றைப் பரவச் செய்கின்றனர்’ என்று சமூக வலைத்தளங்களில் எழுதினார். ட்விட்டர் அவரை வெளியேற்றியது. ஆனால் ஃபேஸ்புக்கோ  ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ இக்கட்டுரை தொடர்பாக கேட்கும்வரை அவரை நீக்கவில்லை. பிப்ரவரி 2020 கபில் மிஷ்ரா இஸ்லாமியரை மிரட்டிய பேச்சு ஒன்று ஃபேஸ்புக்கில் அவரால் வலையேற்றப்பட்ட சில மணி நேரங்களில் டில்லியில் கலவரம் வெடித்தது. ‘கிரவுட்டான்கிள்’ (CrowdTangle) எனும் ஃபேஸ்புக்கின் மென்பொருள் மூலம் ஆராய்ந்ததில் மிஷ்ராவின் அந்தப் பதிவுக்கு முன், ஒரு மாதத்தில் சில ஆயிரம் வலைதளப் பரிமாற்றமாக (interactions, probably refers to comments and not just rehshares) இருந்த அவர் பதிவுகள் 2.5 மில்லியனாக எகிறியதாம். வெறுப்புத் தீயாகப் பரவும் வகை கொண்டது. இக்கட்டுரைகளின் விளைவாக அங்கி தாஸ் அக்டோபரில் பதவி விலகினார். டிசம்பர் 2020-ல் ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ இன்னொரு கட்டுரையில், ‘ஃபேஸ்புக் சமூக வன்முறை உண்டாகக் கூடிய இடங்களில் மிக உச்சப்பட்ச ஆபத்து இருக்கும் தொகுப்பான முதலாவது அடுக்கில் (Tier -1)-ல் இந்தியாவைக் கணக்கிட்டது’ என்றது. இந்த வருடம் மீண்டும் ஃபேஸ்புக்கின் செயல்பாடுகளை விமர்சித்து முன்பு கூறிய மூன்று பத்திரிக்கைகளும் கட்டுரைகளை வெளியிட்டன. இதில் இந்தியாவுக்கு என்றே பிரத்யேகக் கட்டுரைகள் வெளிவந்தன. ஃபேஸ்புக்கின் கட்டமைப்பு போதாமை ஒரு முக்கியமான புரிதலை சமீபத்தியக் கட்டுரைகள் உணர்த்தின.  ஃபேஸ்புக் உலகில் எல்லா நாடுகளில் இருந்தாலும், பொய்ச் செய்திகளைக் கண்டறிவதற்கான அதன் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 87% அமெரிக்காவுக்கும், வெறும் 13% மட்டுமே அமெரிக்கா தவிர்த்த மொத்த உலகுக்கும் செலவாகிறது. இந்தியாவில் ஹிந்தியிலும் வங்க மொழியிலும் வெறுப்பு மொழியாடல்களைக் கண்டறிய மென்பொருளில் முதலீடுசெய்ததாக ஃபேஸ்புக் சொல்கிறது. சமீபத்திய தேர்தலுக்குப் பின் வங்கத்தில் 40% பதிவுகள் பொய்கள் என்று ஃபேஸ்புக் கண்டறிந்தது. ஒரு பொய்ப் பெயர் (Fake ID) பதிவாளரின் பதிவு 30 மில்லியன் லைக் போன்றவற்றை அள்ளியதாம். தமிழில் பொய்ச் செய்திகளைக் கண்டறியவும், வன்மம் கொண்ட பதிவுகளைக் கண்டறிந்து நீக்கவும், ஃபேஸ்புக் தமிழ் மொழியில் முதலீடு செய்யவில்லை என்று தெரிகிறது. தமிழில் பிராமணர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் (இதில் பிராமணர்களும் சேர்த்தி) மிக வன்மத்துடன் எழுதப்பட்ட பதிவுகள் சாதாரணமாக அன்றாடம் தென்படும். அடிப்படையில் யாரோ யாரைப் பற்றியோ வன்மத்துடன் எழுதுகிறார்கள். மிகவும் அருவருக்கத்தக்க சொல்லாடல்கள் மிகச் சாதாரணமாகத் தெறிக்கும். மேலும் ரிப்போர்ட் அடிப்பது என்கிற புகார் சொல்லுதலை வைத்து பதிவர்களை, அவர் எழுதியது - வன்மமோ இல்லையோ- பிடிக்காதவர்கள், முடக்குவதும் அடிக்கடி நிகழும் ஒன்று. ஆனால் அதையெல்லாம் மட்டுப்படுத்தும் கட்டமைப்பு ஃபேஸ்புக்கிடம் இல்லை. இந்திய வெறுப்பரசியலைக் கண்டு அஞ்சிய ஃபேஸ்புக் ஆய்வாளர்கள் முன்பு குறிப்பிட்டதைப் போல், இவ்வருடம் ஃபேஸ்புக்கின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திய கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்ததுமே மூன்று முக்கிய நாளிதழ்கள் ஃபேஸ்புக்கினால் இந்தியாவில் பெருகும் அல்லது வெளிவரும் வெறுப்பரசியலைப் பற்றி பிரத்யேக கட்டுரைகள் வெளியிட்டன. உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் நிகழும் அரசியலும் அதில் சமூக வலைத்தளங்களின் பங்கு பற்றியும் உலக அரங்கில் இருக்கும் முக்கியத்துவமே அக்கட்டுரைகளுக்கு காரணம். இந்தியாவில் ஃபேஸ்புக் இயங்கும் முறையையும் அங்கிருக்கும் உரையாடல்களையும் ஆராய முனைந்து, ஃபேஸ்புக்கின் ஊழியர் ஒருவர் ஒரு பொய் கணக்கைத் தொடங்கினார்; ஃபேஸ்புக்கின் அல்காரிதம் பரிந்துரைக்கும் குழுமங்களில் இணைவது, பரிந்துரைத்த காணொளிகளைக் காண்பது என்று ஒரு சாதாரண பயணாளியாக அவர் இயங்க ஆரம்பித்தார். பிறகு மளமளவென்று வன்முறைப் பதிவுகள் வரத் தொடங்கின, பொய்ச் செய்திகள் தொடர்ந்தன. மூன்றே வாரத்தில் தன் வாழ்நாளில் பார்த்த மொத்த வன்முறைக் காட்சிகளையும்விட அதிகமாக பார்க்க நேரிட்டதாம் அந்தப் பரிசோதனை பதிவருக்கு. பாகிஸ்தானுக்கு எதிராக, இஸ்லாமியரை மிகக் கீழ்த்தரமாக வசை பாடி, மோதியை துதிபாடி, அதீத வன்முறை பதிவுகள் வர தொடங்கின. ஃபேஸ்புக்கின் உள்ளேயே இந்தியாவில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்குத் தொடர்ந்து வெறுப்புப் பதிவுகளுக்கான தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக வெளிப்படையாக ஓர் அறிக்கை சொன்னது. ஃபேஸ்புக்கின் செயல்பாடு இப்படியே தொடர்ந்தால், இன்னும் பத்து வருடத்தில் வெறுப்பு மட்டுமே எஞ்சும் என்று ஓர் இஸ்லாமியர் ஃபேஸ்புக்கின் ஆய்வாவாளர்களிடம் சொன்னாராம். லவ்-ஜிஹாத், கரோனா தொற்று ஆகியவற்றுக்கு இஸ்லாமியரை வசைபாடி வரும் பதிவுகளில் பெரும்பாலானவை சங்கப் பரிவார அனுதாபிகளுடையதுதானாம். பஜ்ரங் தள், ராம் சேனா ஆகிய குழுக்கள் பற்றி ஃபேஸ்புக் நிறுவனத்துக்குள்ளேயே அச்சம் இருந்தது. ஆனால் அவற்றைத் தடைசெய்தால் பாஜகவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமோ என்று ஃபேஸ்புக் தயங்கியது. பஜ்ரங் தள் பதிவுகளுக்கும் நிஜ வாழ்வில் நடக்கும் வன்முறைக்கும் தொடர்பிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. திரிபுராவில் 11 வயது பையன் ஒருவன் ஜூன் 26 அன்று இறந்ததும், சிறுநீரகத்தைத் திருடுவதற்காகவே அவன் கொல்லப்பட்டான் என்று வதந்தி பரப்பப்படது. விளைவாக உண்டான கலவரத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அந்த வதந்தியைப் பரப்பியதில் முக்கியமானவர் பாஜகவைச் சேர்ந்த ரத்தன் லால் நாத். பிள்ளைகளைக் கடத்துகிறார்கள் என்று வாட்ஸப்பில் பரவும் வதந்திகளால் மஹாராஷ்டிராவில் மட்டும் ஒரு மாதத்துக்குள்ளேயே 14 கலவரங்கள். மாடுகளைக்  கடத்துகிறார் என்ற வதந்தியால், பெஹ்லு கான் அடித்தே கொல்லப்பட்டார். பரவும் வெறுப்புக் கலாசாரமும் ஏற்றுமதியாகும் வெறுப்பும் ஃபேஸ்புக் பற்றிய உண்மைகள் அம்பலமானதும் அது ஒரு தனியார் நிறுவனம் தன் லாப நோக்குக்கான உறுபசிக்கு சமூகங்களைக் காவு கொடுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது. உண்மை. ஆனால், அது மட்டுமே உண்மை இல்லை. ஃபேஸ்புக் இந்திய அரசோடு கருத்துரிமைக்காக சில சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்ற எண்ணம் பொதுவில் மேலோங்கியபோது, இந்தியா இந்திய தயாரிப்பான 'கூ' (Koo) என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. உடனே பாஜகவினர் கூவை நோக்கிப் பாய்ந்தனர். கூ தளத்தில் மட்டுறுத்தல் செய்வதற்கு ஆட்கள் இல்லை. வெறுப்புப் பதிவுகள் உடனே பெருகியது. ஒரு பதிவர் இஸ்லாமியரை எந்த வசைச் சொல்லை வைத்து அழைக்கலாம் என்று அச்சில் ஏற்ற முடியாத நான்கு சொற்களைக் குறிப்பிட்டிருந்தார். கூ தளத்தைப் போல் கிளப்ஹவுஸ் வலைதளத்திலும் சாதியமும் இஸ்லாமியருக்கு எதிரான வசைகளும் தளம் ஆரம்பித்து இந்தியர்கள் சேர்ந்த உடனேயே தொடங்கியது. ஒரு கிளப்ஹவுஸ் நிகழ்வில் முஸ்லிம் ‘ஜெய் ஶ்ரீராம்’ என்று சொன்னால் ரூ. 500 அளிப்பதாகச் சொல்லப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனம் தன் கடமையில் தவறுகிறது, ஆனால், அதை தாண்டி இந்தியாவில் நிலவும் வெறுப்புச் சூழல் இந்தியாவின் பிரச்சினை, இந்தியர்களின் பிரச்சினை. இதனை மழுப்பவே முடியாது. வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றி செய்திகள், கட்டுரைகளை வெளியிடும் ‘ஃபாரின் பாலிஸி’ (Foreign Policy) இதழ், சென்ற வருடம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இஸ்லாமிய வெறுப்பு என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. பொய்ச் செய்திகளை ஆராயும் ஓர் ஆய்வகம் இந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் 260 போலி ஊடக தளங்கள் 65 நாடுகளில் வியாபித்திருப்பதாகச் சொல்கிறது. வெளிநாடுகளில் இடதுசாரி அரசியலர்கள்கூட தங்கள் தொகுதி இந்தியர்களின் மோதி ஆதரவை அனுசரித்துப் பேசும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அரசியலர்கள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வரை அமெரிக்க வாழ் இந்துத்துவர்களின் சமூக வலைதளத் தாக்குதல்களுக்கு - பலவும் வன்முறையை அப்பட்டமாகப் பேசும் தாக்குதல்கள் - உள்ளாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கர்நாடக சங்கீதத்தில் கிறிஸ்தவர்களைப் பற்றி பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபோது, டி.எம்.கிருஷ்ணா நியூ ஜெர்சியில் நிகழ்ச்சி நடத்த வந்திருந்தார். அப்போது எழுந்த அச்சுறுத்தல்களைப் பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே விக்கித்துப்போய் அமெரிக்க போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்ட அவலமும் நடந்தது. கவனியுங்கள் வாசகர்களே... மிரட்டியவர்கள் அமெரிக்க வாழ் மெத்தப் படித்த தமிழர்கள். முன்பொரு முறை சுப்பிரமணிய சுவாமியின் நிகழ்ச்சி ஒன்றுக்கு நியூ ஜெர்சியில் நேரில் சென்றிருந்தேன். சுவாமி பேசிய அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு மெத்தப் படித்தவர்கள் பலர் கை தட்டியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தியர்கள் இங்கு அமெரிக்காவில் சிறுபான்மையினர், இங்கு எந்த பாதுகாப்பைத் தங்களுக்கு விழைகிறார்களோ அதனை அமெரிக்க வாழ் இந்துத்துவர்கள் இந்தியாவில் தர மறுக்கிறார்கள். இது அசிங்கமான இரட்டை வேடம். இந்தியா உலகின் ஜனநாயக நாடுகளில், அதன் மக்கள்தொகையாலும் அங்கிருக்கும் பல கோடி சிறுபான்மையினராலும், அமெரிக்காவுக்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனநாயகம் உலகில் எங்கு சிதைவுற்றாலும் அது உலகெங்கிலுமுள்ள ஜனநாயகத்தைப் பலவீனமாக்கும். இன்று ஜனநாயகத்துக்கு முக்கிய அச்சுறுத்தலாக சமூக வலைதளங்கள் உருவெடுத்திருக்கின்றன. அரசுகளும் சமூகங்களும் இதுகுறித்து அக்கறையோடு உடனடியாக பலவித உரையாடல்களை முன்னெடுக்க வேண்டும். எல்லாப் பழியையும் வலைதளங்கள் மீது போட்டுவிட்டு சமூகங்கள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கவும் முடியாது. சமூக வலைதளங்களானவை ஒரே சமயத்தில் ஊதுகுழல்களாகவும் முகம் காட்டும் கண்ணாடிகளாகவும் நமக்குத் தோன்றுகின்றன. அதாவது, அடிப்படை வெறுப்பானது நம் சமூகத்தின் உள்ளே ஊற்றெடுக்கிறது. அதைத்தான் நாம் வெல்ல வேண்டும். ஆதாரச் சுட்டிகள்: 1.     https://www.wsj.com/articles/facebook-services-are-used-to-spread-religious-hatred-in-india-internal-documents-show-11635016354 2.     https://www.nytimes.com/2021/10/23/technology/facebook-india-misinformation.html 3.     https://www.nytimes.com/2021/10/25/business/facebook-papers-takeaways.html 4.     https://www.washingtonpost.com/technology/2021/10/24/india-facebook-misinformation-hate-speech/ 5.     https://www.washingtonpost.com/technology/2021/10/25/what-are-the-facebook-papers/ 6.     https://www.wsj.com/articles/facebook-hate-speech-india-politics-muslim-hindu-modi-zuckerberg-11597423346 7.     https://theprint.in/tech/facebook-research-flagged-inflammatory-content-against-muslims-in-india-says-wsj-probe/755878/ 8.     https://www.bbc.com/news/world-asia-india-54715995 9.     https://www.vice.com/en/article/v7gq98/wsj-investigation-of-facebook-india-links-with-bjp-sparked-political-row 10.  https://www.indiatoday.in/technology/news/story/facebook-turned-a-blind-eye-to-anti-muslim-hate-speech-and-propaganda-in-india-says-report-1868737-2021-10-24 11.  https://www.washingtonpost.com/world/asia_pacific/as-mob-lynchings-fueled-by-whatsapp-sweep-india-authorities-struggle-to-combat-fake-news/2018/07/02/683a1578-7bba-11e8-ac4e-421ef7165923_story.html 12.  https://news.yahoo.com/uproar-over-fabindia-commercial-highlights-085504363.html 13.  https://www.buzzfeednews.com/article/pranavdixit/koo-muslim-hate-india 14.  https://www.hindustantimes.com/india-news/twitter-says-its-algorithm-amplifies-right-wing-political-content-101634926182240.html 15.  https://www.thequint.com/news/india/clubhouse-twitter-spaces-hate-speech-islamophobia-casteism-bullying 16.  https://theprint.in/opinion/twitter-facebook-profited-a-lot-from-indias-hate-agenda-time-to-pull-the-plug-with-a-law/425047/ 17.  https://time.com/6112549/facebook-india-islamophobia-love-jihad/ 18.  https://foreignpolicy.com/2020/07/01/india-islamophobia-global-bjp-hindu-nationalism-canada/ 19.  https://thediplomat.com/2019/05/manufacturing-islamophobia-on-whatsapp-in-india/ 20.  https://www.rollingstone.com/feature/anatomy-of-a-fake-news-scandal-125877/ 21.  https://www.wsj.com/articles/facebook-executive-supported-indias-modi-disparaged-opposition-in-internal-messages-11598809348 22.  https://scroll.in/article/979033/ankhi-das-track-record-at-facebook-will-make-her-successors-unenviable-job-even-harder 23.  https://www.livemint.com/Politics/jkSPTSf6IJZ5vGC1CFVyzI/Death-by-Social-Media.html   https://www.arunchol.com/aravindan-kannaiyan-article-on-facebook-and-hate-arunchol?fbclid=IwAR1OpNcmY2gPAECDhu13ZpT0p907an_sxsWC0IBhayl1tfJN0h5EKDXZKEM
  • அருள் பொழியும் திருநல்லை பதி வாழி அழகான வடிவேலன் பதம் வாழி    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.