• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • கூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை       காரை துர்க்கா   இம்முறை சிவராத்திரி தினமன்று, திருக்கோணேஸ்வரத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. வழிபாடுகளை முடித்துக் கொண்டு, கோவில் முன்றலில் இளைப்பாறும் வேளையில், திருகோணமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.   “ஒரு காலத்தில், திருகோணமலையில் முதலிடத்தில் இருந்த தமிழினம், இன்று கடைநிலைக்குச் சென்று விட்டது” என்று, பெருமூச்சு விட்டுத் தனது கவலையைப் பகர்ந்துகொண்ட அவர், நிறைய விடயங்களை ஆதங்கத்துடன் அவிழ்த்துக் கொட்டினார்.   “சரி ஐயா, அடுத்து நாங்கள் தேர்தல் விடயத்தில் என்ன செய்யலாம் என நீங்கள் கருதுகிறீர்கள்?” எனக் கேட்டபோது, “சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் ஒன்று சேர்ந்து, பொதுத் தேர்தலை எதிர்கொள்வதே, தமிழ் மக்களுக்குப் பயன்மிக்கது. இதனால்கூட, தமிழ் இனத்துக்கு உடனடியாக விடிவு ஏதுவும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், எங்களது கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்த, தனித்துவமான, பலமான கட்சியும் தலைவர்களும் தேவையல்லவா?” எனக் கேட்டார்.    “நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால், அது சாத்தியப்படுமா, எங்கள் தலைவர்கள், அப்படிச் செய்வார்களா?” எனக் கேட்டபோது, “ஏன் முடியாது? 2015ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலின் போது, ‘நீயா நானா’ என முரண்டுபட்ட முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்‌ஷவும், இன்று இணைந்துச் செயற்பட முன்வந்துள்ளார்கள். பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. அது, மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளது. இருவரும் ஓரணியில், தமது இனத்துக்காக இணைந்து செயற்பட உள்ளார்கள். அன்று முரண்பட்ட இரண்டு ஜனாதிபதிகளும், இன்று தனிச் சிங்கள ஆட்சியை அமைக்கும் நோக்கத்துடன் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். பொதுத் தேர்தலில், 150 ஆசனங்களைக் குவித்து, அறுதிப் பெரும்பான்மை அல்லது 113 ஆசனங்களுக்கு மேல் பெற்று, பெரும்பான்மை ஆட்சியமைக்க, வேற்றுமையில் ஒற்றுமை கண்டிருக்கின்றார்கள். இந்நிலையில், ஒருபோதும் நேரடியாக முரண்படாத சம்பந்தனும் விக்னேஸ்வரனும், ஏன் தமிழினத்துக்காகத் தங்கள் கட்சிகளுக்கு இடையிலான பகை மறந்து, ஒன்றுசேரக் கூடாது; ஒன்று சேர முடியாது?” எனத் தனது வாதத்தை நிறுவினார்.    “சம்பந்தனது கட்சியும் விக்னேஸ்வரனது கட்சியும் ஒன்று சேர்ந்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி காணாமற்போய் விடும்” எனவும் கூறினார்.   அந்தக் காலங்களில், மன்னர்கள் மாறுவேடம் பூண்டு, நகர்வலம் சென்று, நாட்டில் தன்னைப் பற்றியும் தனது ஆட்சியைப் பற்றியும் மக்கள் தங்களுக்குள் என்ன கதைத்துக் கொள்கின்றார்கள் எனத் தகவல்களைப் பெற்று, சிறப்பாக ஆட்சி நடத்தி வந்ததாக, சிறு வயதில் கதைகள் படித்த ஞாபகம் உண்டு.   மக்களின் தேவைகளை இனங்காணல், மக்களின் நாடித் துடிப்பை அறிந்துகொள்ளல் எனப் பல விடயங்களுக்கு, இது போன்ற ஊர் உலாவும் நடவடிக்கைகள் உதவும். இது, வினைத்திறனாக ஆட்சியை நடத்த வழிவகுத்தும் உள்ளது.   அந்த வகையில், ‘மக்களின் மனங்களை அறிதல்’ என்ற விடயம் பிரதானமானது. ஆனால் நாட்டின் ஆட்சியாளர்கள், கடந்த ஏழு தசாப்தங்களாக, தமிழ் மக்களின் மனங்களை அறிந்தும் அறியாதது போல நடந்து வருகின்றனர். இதுவே, நாட்டின் இனப்பிணக்கும் கூட.   ஆனால், வடக்கு, கிழக்கில் அரசியல் செய்து வருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் கூட, தமிழ் மக்களின் மனங்களை அறியாத, அறிந்தும் அதனைப் பொருட்படுத்தாத மாந்தராகவே இருந்து வருகின்றனர்.   “அரசியல் தீர்வு குறித்து, தமிழ்க் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியல் தீர்வை வழங்குவதாகக் குறிப்பிட்டு, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. புலம்பெயர் புலிகளின் நோக்கங்களை நிறைவேற்றும் முயற்சியில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் உள்ளனர்” என, இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.   எனவே, அரசியல் தீர்வும் அதனூடாகத் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரமும் கிடைப்பதற்கான அறிகுறிகள், மங்கலாகவே உள்ளன. ஏன், இல்லை என்றுகூடக் கூறலாம்.    ஆகவே, கூட்டமைப்பினர் மாத்திரமல்ல, தமிழ் மக்கள் கூட்டணியோ தமிழ்த் தேசிய முன்னணியோ என, எவருமே அரசியல் தீர்வு குறித்து, அரசாங்கத்துக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்க முடியாது. அவ்வாறு கொடுத்தாலும் எதுவுமே நடக்கப்போவதும் இல்லை.   இலங்கைத்தீவின் இனப்பிணக்கைத் தீர்க்க வேண்டும்; அதற்கான பரிகாரம் தேட வேண்டும் என்ற எண்ணமும் தேவையும், தமிழ் மக்களுக்கே அதிகப்படியாக உள்ளது. ஏனெனில், இனப்பிணக்கு காரணமாக அதிகப்படியான விலையைக் கொடுத்தவர்களும் அவர்களே.    நிலைமைகள் இவ்வாறிருக்க, வருகின்ற பொதுத் தேர்தலில், இலங்கை வரலாற்றிலேயே மிகக் கூடுதலாக 143 கட்சிகள் போட்டியிடத் தயாராக உள்ளனவென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இது போலவே, வடக்கு, கிழக்கிலும் ஏராளமான கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறங்க உள்ளன; களம் இறக்கப்பட உள்ளன. ஆகவே, வாக்குகளும் சிந்திச் சிதற உள்ளன.   இதைவிட, அதிகப்படியான கட்சிகளின் வருகையால், அதிகப்படியான மக்களுக்கு வாக்களிப்பில் ஈடுபட விருப்பமின்மையும் ஏனோதானோ என்ற நிலை ஏற்படவும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.   இவ்வாறாகப் பல கட்சிகள், பல சுயேட்சைக் குழுக்கள், மத அடிப்படையிலான சுயேட்சைக் குழுக்கள், பல முனைகளில் போட்டியிட்டு, தேர்தல் களம் போர்க்களம் போன்று மாறவுள்ளது.   ஆயுதப் போர் நிறைவுற்ற பத்து ஆண்டுக் காலங்களில், தமிழ் மக்களது அடிப்படைக் கட்டுமானங்களோடு அரசியல் ரீதியாகவும் முன்நகர, கூட்டமைப்பால் முடியவில்லை. அதற்குப் பல காரணங்கள் காணப்பட்டாலும், கூட்டமைப்பின் முழுமையான அதிகாரம், ஒரு சிலருடைய கைக்குள் சிறைப்பட்டு இருந்தமையே முதன்மைக் காரணம் எனலாம்.   கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் அதிகாரம் கூடுதலாகவும் தமிழரசுக் கட்சிக்குள் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரது அதிகாரம் கூடுதலாகவும் உள்ளதாகத் தமிழ் மக்களிடம் கருத்தொன்று காணப்படுகின்றது. இது, தலைமைத்துவத்துக்கான எல்லை தாண்டி, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே விடயங்களைத் தெரியப்படுத்தாத நிலை உள்ளதாகவும், தமிழ் மக்களிடம் தொடர்ந்தும் பலமான சந்தேகங்கள் உள்ளன.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை என, இம்மாதம் 23ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் - மாட்டீன் வீதிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.   இவர்கள், தமிழர் பிரச்சினை தொடர்பாக, ஜெனீவாவில் ஒன்றும் கொழும்பில் இன்னொன்றும், வடக்கு, கிழக்கில் பிறிதொன்றும் கதைப்பதாகவே, தமிழ் மக்கள் தங்களுக்குள் பல ஆண்டுகளாகக் கதைத்து வருகின்றார்கள். பல தடவைகள் வெளிப்படையிலும் தெரிவித்துள்ளனர்.   தமிழ் மக்களுக்கான சந்தேக வினாக்களுக்கு, கூட்டமைப்பின் தலைவர்கள் ஐயம் திரிபுற விளக்கம் கொடுக்கத் தவறிவிட்டார்கள். இவ்வாறாகத் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தாத ஐய வினாக்களே, மாற்றுத் தலைமைத்துவத்துக்கு வழிகோலியது.   மறுவளமாக, தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக் கதை, பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகின்றது. ‘இதோ வருகுது; அதோ வருகுது’ என எதிர்பார்க்கப்பட்ட மாற்றுத் தலைமை, இன்று வந்துவிட்டது. வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, மாற்றுத் தலைமை எனத் தமிழ் மக்களின் தேசிய அரசியலுக்குள் வந்துள்ளது.   இதில், நீதியரசர் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமசந்திரன், சிறிகாந்தா, அருந்தவபாலன், அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் எனக் கணிசமான பிரமுகர்கள் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களாக உள்ளனர். சிவசக்தி ஆனந்தன், வன்னித் தேர்தல் தொகுதியைச் சேர்ந்தவராக உள்ளார்.   கிழக்கு மாகாணத்தில், மாற்றுத் தலைமை மறைந்து விடுமா என்ற நிலைவரம் உள்ளது. இதைவிட, மாற்றுத் தலைமைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கடும் சமர் நடைபெற்று வருகின்றது.   இன்று, தமிழ் மக்களிடையே பாகப்பிரிவினைகள் அதிகரித்து வருகின்றது. மதம், சாதி, ஊர் என்ற அடிப்படையில், கட்சிகள் புதிது புதிதாக முளைத்து வருகின்றன. அரசியல் நம்பிக்கையீனங்கள், பிற காரணங்களால் வெளிநாட்டு மோகமும் அதிகரித்தே வருகின்றது.   ஒரு கட்சிக்குள்ளும் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு கருத்துகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனாலும், தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய, தமிழ் மக்கள் விரும்பக் கூடிய ஒரு களம் தோன்றுமாயின், விட்டுக்கொடுப்புகளும் சகிப்புத்தன்மைகளும் கட்டாயமாகின்றன.   சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் ஒன்று சேர்ந்து, வருகின்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் போது, தமிழ் மக்களிடையே எழுச்சியும் இணையும்; இரு கட்சிகளுக்கு வளர்ச்சியும் காத்திருக்கின்றது.   மன்னர் காலங்களைப் போல, தற்போது நகர்வலம் வரக்கூடிய சூழ்நிலைகள் இல்லை. ஆனாலும், ஊர்மனைக்குள் எங்கள் அரசியல் தலைவர்கள் சென்று, மக்களது விருப்பங்களைக் கேட்டால், அதிபர் கூறியதைப் பலர் ஆமோதிப்பார்கள்.   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கூட்டமைப்பில்-திருப்தியில்லை-கூட்டணியில்-நம்பிக்கையில்லை/91-246119
  • இலங்கைக்காக 7 பதக்கங்களைப் பெற்ற வடக்கு வீரர்கள்       க. அகரன்   இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச காலுதைச்சண்டைப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள கடாபி வளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் இன்று வரை நடைபெற்ற சர்வதேச காலுதைச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்ட வட மாகாண காலுதைச்சண்டை வீரர்கள் எழுவர் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வட மாகாண காலுதைச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வட மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ். நந்தகுமாரால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களான, வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த எஸ். சஞ்சயன் (18) தங்கப் பதக்கத்தையும், பி. ராகுல் (17) தங்கப் பதக்கத்தையும், ரி. நாகராஜா (18) வெள்ளிப் பதக்கத்தையும், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ. கெவின் (11) தங்கப் பதக்கத்தையும், வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ. நிரோஜன் (16) தங்கப் பதக்கத்தையும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வி. வசீகரன் (17) என்ற மாணவன் வெள்ளிப் பதக்கத்தையும், வவுனியா காமினி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். சிறிதர்சன் (18) வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர். சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிவிப்பாளரும், பிரான்ஸ் சவாட் குத்துச்சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வட மாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும், தென்னிலங்கையை சேர்ந்த 14 வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர். இவ்வீரர்கள் இலங்கைக்கு 11 தங்கப் பதக்கங்களையும் எட்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதன்போது தெற்காசிய வூசு கூட்டமைப்பின் தலைவரும், பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பாளருமான மாலிக் இப்திகார் உள்ளிட்ட குழுவினரின் தலைமையில் பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் வெற்றி வாகை சூடிய எமது வீரர்கள் நாளை மாலை நான்கு மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இலங்கைக்காக-7-பதக்கங்களைப்-பெற்ற-வடக்கு-வீரர்கள்/44-244543
  • புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து     சவுதி அரேபிய அரசாங்கம், மக்காவுக்குப் புனிதப் பயணம் செல்வதற்கான விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம். COVID-19 வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு விசாக்கள் வழங்கபடமாட்டா என்று சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது. இந்த தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. குவைத், பஹ்ரேன் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ளவர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/பனதப-பயணகளககன-வச-தறகலகமக-இரதத/50-246114
  • இலங்கை தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு     ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் இன்று (27) நடைபெறும் அமர்வின்போது இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட்டினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அதற்கு பதில் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட் மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது. முன்னதாக, இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/01 மற்றும் 40 /1 ஆகிய பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதாக நேற்றைய அமர்வின்போது வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙக-தடரபன-அறகக-இனற-சமரபபபப/150-246104
  • சஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம்  தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. கூட்டணியாக களமிறங்கி பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை கைப்பற்றுவோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டன் கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தின் மைதானம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக இன்று 27() தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்த தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் நாம் வெற்றிபெற்றோம். எமது மக்கள் உணர்வுப்பூர்வமாக வாக்களித்தார்கள். எனவே, பொதுத்தேர்தலிலும் சஜித் தலைமையில் அம்மாவட்டத்தில் எமது வெற்றிநடை தொடரும். புதிய அரசாங்கம் பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. இதன்மூலம் அரசாங்கத்தின் மூகமூடி கலைந்துள்ளது. சாய்ந்தமருது நகரசபையை உருவாக்குவதற்கு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுவிட்டு, அதனை மீளப்பெற்றனர். எனவே, ஆயிரம் ரூபாவுக்கும் இந்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கம்தான் உறுதியளித்தது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும். கம்பனிகளை காரணம் காட்டிக்கொண்டு இருக்க முடியாது. அடிப்படை சம்பளமாக அல்லாது, மொத்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கினார் அதனை மக்கள் திருப்தியுடன் ஏற்கமாட்டார்கள். தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடும் இல்லை. நேற்றுகூட நாங்கள் மூவரும் கூட்டாகவே பத்திரிக்கையாளர்களை சந்தித்தோம். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே வேட்பாளர்களை விவபரத்தை அறிவிப்போம். அதேவேளை, கினிகத்தேனை மத்திய கல்லூரிக்கான மைதானத்தை புனரமைப்பதற்கு ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. இன்று பணிகள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறு மலையகத்தில் தோட்டப்புறங்கள் மற்றும் நகரப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு கோடி கணக்கில் ஒதுக்கினேன். மலையகத்திலுள்ள சில அரசியல்வாதிகள் தற்போது அவற்றை முன்னெடுப்பதற்கு அனுமதிக்காமல், தடுத்துநிறுத்துகின்றனர். இது வெட்கக்கேடான செயலாகும். சில தமிழ் பாடசாலைகளின் அதிபர்களும் அரசியல் ரீதியில் செயற்படுகின்றனர். இதனால் அபிவிருத்தி தடைபட்டுள்ளது. எனவே, அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   -மலையக நிருபர் கிரிஷாந்தன்-         http://tamil.adaderana.lk/news.php?nid=126186