Jump to content

என்னை விட்டால் யாரும் இல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டால் யாரும் இல்லை
ஆழ்வாப்பிள்ளை
 
'மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்...' என்ற பாடல் வெளிவந்த பொழுது, இது கண்ணதாசன் பாடல் வரிகள் என்றுதான் நினைத்திருந்தேன். அன்று சிவாஜி கணேசன் படங்களுக்கு கண்ணதாசனே அதிகமாகப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்ததாலும், பெண் மயிலுக்கு ஏது தோகை? என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டதாலும் இது கண்டிப்பாகக் கண்ணதாசன் பாடல் வரிகள் என்ற எண்ணமே மேலாக நின்றது. ஆனால் ஒரு சினிமா பத்திரிகையில், 'சமீபத்திய சினிமாப் பாடல்களைப் பார்க்கும்போது, எது நான் எழுதியது, எது வாலி எழுதியது என என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இருமலர்கள் படத்தில் வாலி எழுதிய, மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்.. பாடலும் அந்த ரகம்தான்...' என்று கண்ணதாசன் பேட்டி ஒன்றில் சொன்ன பொழுதுதான் தெரிந்து கொண்டேன். அந்தப் பாடல் வாலி எழுதியதுதான் என்று.

 

கண்ணதாசனுக்குப் பிறகே சினிமாவுக்குள் வாலி நுழைந்தாலும், தனக்கென்று ஓர் இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆருக்கு வாலி என்ற நிலையும், சிவாஜிக்கு கண்ணதாசன் என்ற நிலையும் அன்று ரசிகர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும் இரு பாடலாசிரியர்களும் வரும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அந்த இரண்டு நாயகர்களின் படங்களுக்கு மாறி மாறிப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். சிவாஜி கணேசன் சொந்தமாகத் தயாரித்த அன்புக் கரங்கள் திரைப்படத்திற்கு வாலியே முழுப் பாடல்களையும் எழுதியிருந்தார். 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..' என்று எம்.ஜி.ஆர் பாணியிலான ஒரு தத்துவப் பாடலை அந்தப் படத்தில் வாலி எழுதியிருந்தார். இந்தப் படம் வெளிவந்த பொழுது, 'வாலி எம்ஜிஆரை விட்டிட்டு சிவாஜி பக்கம் சாய்ந்திட்டார்' என்று இரசிகர்கள் மத்தியில் ஓர் ஐயம் எழுந்தது.

 

கண்ணதாசனும் தன் பங்குக்கு 'அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்..' பாடலை எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு எழுதியிருந்தார். ஆக நாயகர்களுக்கு ஏற்ற இப்படியான பாடல்களை எழுதி இருந்தாலும், இருவரும் பகைத்துக் கொண்டதோ, பொறாமை கொண்டதோ இல்லை. நல்லவைகளைப் பாராட்டி விட்டு தங்கள் பாணிப் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

 

இருவரிலும் கண்ணதாசன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விடுவார். தனது ஆதங்கங்களை தான் எழுதும் பாடல்களில் அவ்வப்போது கொட்டிவிடுவார். 'உள்ள பணத்தைப் பூட்டி வைச்சு வள்ளல் வேடம் போடு, ஒழிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு..' என்று சிவாஜி கணேசன் படத்தில் எம்.ஜி.ஆரை தாக்கி பாடல் எழுதியிருந்தார். சில வருடங்களுக்கு முதல், 'சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா? பாரி வள்ளல் மகனா?' என்றெல்லாம் எம்.ஜி.ஆர் படத்தில் அவரைப் புகழ்ந்திருந்தார். அடிக்கடி இவரது கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

 

'ஒருகால் தூக்கி ஆடும் நடராஜர் மறுகாலும் தூக்கி மாண்டு விழுவது எக்காலம்?' என்று எழுதியவர்தான் பின்னாளில் இந்து மதத்துக்குள் அர்த்தம் தேடினார். ஆனாலும் அவரது கவிதை வரிகள் இரசிக்கத் தக்கவையாகவே இருந்தன.

 

கண்ணதாசன், வாலி இருவரதும் காலகட்டத்தில் பல கவிஞர்கள் வந்து போனாலும், என்னைக் கவர்ந்த வேறு இரண்டு கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆலங்குடி சோமு. மற்றையவர் புலமைப் பித்தன்.

 

இதில் ஆலங்குடி சோமு, பாடல் வரிகளில் அழகான உவமைகளைக் கையாண்டிருப்பார். ஒரு பாடலில் 'கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக?' என்று தொழிலாளியின் நிலையை அழகாக விளக்கி இருப்பார். இன்னும் ஒரு பாடலில், 'தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரைக் கண்டவர் யார்?' என அற்புதமாகக் கேட்டு வைத்திருப்பார். (இந்தப் பாடல் வரிகளை பல வருடங்களுக்குப் பிறகு ரி.இராஜேந்தர் தனது பாடலில் சேர்த்து விட்டு தனது சொந்த வரிகள் என்று கூத்தடித்தது தனியாக எழுத வேண்டியது)

 

புலமைப்பித்தன் இலக்கிய இரசனை கொண்ட காதற் பாடல்களைத் தந்து கொண்டிருந்தார். 'நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில், தலைவன் வாராமல் பெண் ஒருத்தி காத்திருந்தாள், விழி மலர் பூத்திருந்தாள்..', 'பொய்கை எனும் நீர் மகளும் பூவாடை போர்த்திருந்தாள்.. தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்' என்று அவரது பல பாடல் வரிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இசையமைப்பாளர் இளையராஜா வருகைக்குப் பின்னர், வைரமுத்து சினிமாவிற்குப் பாடல்கள் எழுதுவதில் முன்னுக்கு வந்தார். ஆனால் முன்னால் நான் பேசிய கவிஞர்களோடு ஒப்பிடுகையில், வைரமுத்துவை ஓர் ஆணவம் மிக்கவராகவே என்னால் பார்க்க முடிந்தது. 'தான்' என்கிற கர்வம் அவரது பேச்சிலும், சில சமயங்களில் பாடல் வரிகளிலும் வந்து போகும். தமிழுக்குத் தொண்டு செய்வதாக அடிக்கடி பிதற்றிக் கொள்வார். தான் வாழும் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் (பாட்டெழுதும்) மற்றைய கவிஞர்களை அதிகம் பாராட்ட மாட்டார். மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி என்று இப்பொழுது இல்லாத கவிஞர்களைப் பற்றி சமயம் கிடைத்தால் மட்டும் பேசிக் கொள்வார். ஈழத் தமிழர் வீரம் காட்டிய பொழுதும், அவலப்பட்ட பொழுதும் அவர்களுக்காக அதிகம் வாய் திறவாத வைரமுத்து, இப்பொழுது அவர்களைப் பற்றி காவியம் எழுதப் போகிறேன் என்கிறார். வேதனையாக இருக்கிறது.

 

சமீபத்தில் விஜய் ரிவி நடாத்தும் சுப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வைரமுத்து வந்திருந்தார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவராக நீயா நானா கோபிநாத் இருந்தார். வழமையாக தனது நீயா நானா நிகழ்ச்சியில் மற்றவர்களிடம் கேள்விகளைக் கேட்டு விட்டு நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தரும் பதில்களை இடைமறித்து 'வேறை.. வேறை..' என்று அவசரப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் கோபிநாத், வைரமுத்துவின் அலம்பலை பௌவியமாகக் கேட்டுக் கொண்டிருந்தது அவரது மதிப்பை என்னுள் குறைத்து விட்டது.

 

இளையராஜாவுடன் இணைந்து செயற்பட வாய்ப்பு இருக்கிறதா? என கோபிநாத் கேட்ட பொழுது, 'காலம் கடந்துவிட்டதாக நினைக்கிறேன். விருப்பங்கள் வேறு, யதார்த்தங்கள் வேறு. இப்போது கூட அவரது இசையை நேசிக்கிறேன். பழைய பாடல் கேட்கிற போதெல்லாம் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. பார்த்துப் பேசலாம் என்று கூடத் தோன்றுகிறது. ஆனால், சில சின்னச் சின்னத் தடைகள் பெரிய பெரிய சுவர்களை எழுப்புகின்றன. அந்தச் சுவர்கள் இல்லை என்று நான் தீர்மானிக்கிறபோது, அது சாத்தியமாகலாம். ஒன்று, அந்தச் சுவர்கள் இடியலாம். அல்லது சிலர் இடிக்கலாம். அதன்பிறகு உறவுகள் எப்படிச் சாத்தியமாகிறது என்று பார்ப்போம். என்னோடு சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் அவர் இல்லை. அவரோடு சேர்ந்துதான் பணியாற்றி ஆகவேண்டும் என்கிற சூழ்நிலையிலும் நான் இல்லை. ஆனால், காலம் என்ன சொல்கிறதோ, அதைக்கேட்டு கட்டுப்படுவதற்கு நான் காத்திருப்பது மாதிரியே அவரும் காத்திருந்தால், சாத்தியமாகலாம்' என்று வைரமுத்து பதில் தந்திருந்தார். இதில் 'என்னோடு சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் அவர் இல்லை..' என்ற வரிகளைக் கூர்ந்து கவனித்தால் இளையராஜாவின் வெற்றிக்கு தனது கவிதைதான் காரணம் எனும் தொனி தெரியும்.

 

ஏழு வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்குபற்றாத வைரமுத்து அவர்கள் அன்று அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும்? அதுவும் நான்கு மணித்தியாலங்கள் அமர்ந்திருப்பதற்கு என்று யோசித்தால், நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதற்கு பெருந்தொகை பெற்றுக் கொண்டிருப்பார் என்பது கையிடை நெல்லிக்கனி. இதை உறுதிப்படுத்த சில நாட்களுக்கு முதல் வந்த செய்தி ஒன்று போதும். அது - வைரமுத்து, தான் வேலை பார்த்த, பாடல்கள் எழுதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வர ரூ 1 லட்சம் பணத்தை கறாராகக் கேட்டுப் பெற்றுக்கொண்டார் என்பதாகும். இதற்குள் சுப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் பத்துப் பேருக்கும் தலா பத்தாயிரம் வீதம் ஒரு இலட்சம் அன்பளிப்பு செய்கிறேன் என்று தொலைக்காட்சியில் இலவசமாக விளம்பரமும் செய்து கொண்டார். அந்தப் பணத்தையும் தொலைக்காட்சி நிறுவனத்தினர்தான் அழுதிருப்பார்கள் என நினைக்கிறேன்.

 

தனது கருத்துகளை அந்த நிகழ்ச்சியில் வைரமுத்து சொல்லும் பொழுது, 'நான் இந்த நிகழ்ச்சிக்கு விமர்சகனாக வரவில்லை. ரசிகனாக வந்திருக்கிறேன். விமர்சகனுக்கும் ரசிகனுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. விமர்சகன் ஒட்டகம் போன்றவன். பழங்களை விட்டு விட்டு முட்களை மட்டுமே மேய்ந்து கொண்டிருக்கிறவன். ரசிகன் வண்டு போன்றவன். முள் உள்ள ரோஜாவிலும் கூட முள்ளை விட்டு விட்டு ரோஜாவில் தேன் எடுப்பவன். நான் தேன் எடுக்க வந்திருக்கும் வண்டு' என்று விமர்சகர்களை உரசிப் பார்த்திருக்கிறார். விமர்சகர்கள் முட்களை அகற்றினால்தானே ரசிகன் இலகுவாகத் தேனைப் பருகலாம் என்பது வைரமுத்துவுக்கு ஏன் தெரியாமல் போனது?

 

'இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை?' என்ற கோபிநாத்தின் கேள்விக்கு, வைரமுத்து சொன்ன பதில் 'இளையராவுக்கு இளையராஜா பிரச்சினை. வைரமுத்துவுக்கு வைரமுத்து பிரச்சினை.'

 

இவரது பதில்கள் எப்பொழுதுமே என்னை விட்டால் யாரும் இல்லை என்கின்ற பாணியிலேயே இருக்கும்.

 

வைரமுத்து வைரமுத்துவுக்கு மட்டும்தான் பிரச்சினையா?

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=4b6a960d-bd41-44b0-88ed-b9c59102bd82

Link to comment
Share on other sites

வைரமுத்து கற்பனையை பலாத்காரமாக வரவைக்க முயல்பவர்.. அதனால் இளையராஜாவுடன் இணைந்து நீண்டகாலம் பணியாற்ற முடியவில்லை..

இசையமைப்பாளர் அரை மணிரேத்தில் ஐந்து மெட்டுக்களைப் போட்டு இசைக் குறிப்பையும் எழுதிவைத்துவிட்டுக் காத்திருந்தால் அருகில் உள்ள பூங்காவில் வரிகளைத் தேடிக்கொண்டிருந்தவர் வைரமுத்து.. காலதாமதமாக வந்த வரிகளும் சந்தத்துக்குள் அடங்காமல் அழிச்சாட்டியம் செய்தபோது ஏற்கனவே எழுதப்பட்ட இசைக்குறிப்புகளில் மாற்றம் தேவைப்படும். ஆகவே இவர்களுக்குள் பிரச்சினை வந்தது ஆச்சரியமல்ல.

புலமைப்பித்தன் அவர்களது பாடல்வரிகளும் எனக்கு மிகப்பிடித்தமானவை.. குறிப்பாக "பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த.." என்கிற பாடல்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.