Jump to content

வரப்புயர (விவசாயம்/கைத்தொழில் சார்ந்த பதிவுகள்)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பன்னீர் திராட்சை சாகுபடி: ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் லாபம்

grapes_2825648f.jpg

பன்னீர் திராட்சை சாகுபடி மூலம் நீண்டகாலத்துக்கு, ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் வருவாய் கிடைக்கும் என்கிறார் தேனி மாவட்ட விவசாயி சரவணன்.

கோடை வெயிலில் இருந்து உடலைப் பாதுகாக்கவும், தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும் பலர் தர்பூசணி, நுங்கு, திராட்சை உள்ளிட்ட பல்வேறு பழங்களைச் சாப்பிடுவது வழக்கம். இதில் குறிப்பாகச் செரிமானச் சக்தியை அதிகரிப்பது, ஆஸ்துமாவை மட்டுப்படுத்துவது, மார்பகப் புற்றுநோயைத் தடுப்பது, ரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பது, சிறுநீரகச் செயல்பாட்டுக்கு உகந்தது எனத் திராட்சை பழத்தின் மகத்துவத்தை மருத்துவர்கள் பட்டியல் இடுகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அணைப்பட்டியை சேர்ந்த விவசாயி எல்.சரவணன் மூன்று ஏக்கர் நிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பன்னீர் என்று அழைக்கப்படும் கறுப்பு நிறத் திராட்சையைச் சாகுபடி செய்துவருகிறார். பன்னீர் திராட்சை சாகுபடி குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:

120 நாட்களுக்கு ஒரு காய்ப்பு

பன்னீர் திராட்சை சாகுபடிக்கு உப்பு, உவர்மண் தவிரக் கரம்பை மண், செம்மண், வண்டல் மண் போன்றவை ஏற்றவை. கூடுதல் விளைச்சலுக்கு வண்டல் மண்ணில் சாகுபடி செய்யலாம். நிலத்தில் குழி தோண்டி இயற்கை உரங்களுடன், சிறிது செயற்கை உரத்தையும் சேர்த்து இட வேண்டும். அதன் பின்னர்ச் செடியை நட்டு வைத்து நல்ல தண்ணீர் மட்டும் பாய்ச்ச வேண்டும். 15மாதங்களில் பழங்கள் பறிக்கத் தயாராகி விடும். அப்போது ஏழு முதல் எட்டு டன்வரை திராட்சை பழம் அறுவடை செய்ய முடியும்.

அதன் பின் 120 நாட்களுக்கு ஒருமுறை பழம் பறிக்கலாம். அப்போது நான்கு முதல் ஐந்து டன்வரை காய்ப்பு கிடைக்கும். இது 20ஆண்டுகள்வரை தொடர்ந்து பலன் தரும். சராசரியாக ஒரு டன், ரூ. 30 ஆயிரம்வரை விலைபோகிறது. ஆண்டுக்கு ரூ. 3.60 லட்சம் கிடைக்கும். செலவு போக எப்படிப் பார்த்தாலும் ரூ.3 லட்சம் லாபம் கிடைக்கும்.

முதல் சாகுபடி செலவு

கோடை காலத்தில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மற்றக் காலத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை வீதம் தண்ணீர் பாய்ச்சினால் போதும். தொடர்மழை பெய்தால் செவட்டை, சாம்பல் நோய் போன்றவை தாக்கலாம். அந்த நேரத்தில் பூச்சிமருந்தைத் தெளித்து நோயைக் கட்டுப்படுத்த வேண்டும். முதன்முதலில் ஒரு ஏக்கரில் திராட்சை சாகுபடி செய்ய வேண்டுமென்றால் குத்துக்கல், வலைக்கம்பி, உரம், செடி, கூலியாட்கள் என ரூ. 4 லட்சம்வரை செலவு ஏற்படும். அதன் பின்னர்ச் செலவு குறையத் தொடங்கும்.

முதல் அறுவடையிலேயே செலவழித்த மொத்தப் பணத்தையும் எடுத்துவிடலாம். குத்துக்கல், கம்பி போன்றவை 70ஆண்டுகள்வரை சாகுபடி செய்தாலும் நீடிக்கும். ஐந்து ஆண்டு வளர்ந்த திராட்சை கொடியில் இருந்து விதைக் குச்சியை வெட்டி பதியன் போட்டுப் புதிய செடி வளர்க்கலாம். அது வேறு இடத்தில் புதிதாகத் திராட்சைத் தோட்டம் அமைப்பதற்குப் பயன்படும்.

சந்தைப்படுத்துதல் எளிது

தமிழகத்தில் மட்டுமல்ல கொல்கத்தா, கேரளம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களுக்குப் பன்னீர் திராட்சை அதிகளவில் செல்கிறது. மற்ற மாவட்டங் களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து பழங்களை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். பன்னீர் திராட்சையைச் சந்தைப்படுத்துதல் மிகவும் எளியது.

விவசாயி எல்.சரவணன் தொடர்புக்கு: 80123 05456

படங்கள்: ஆர். சௌந்தர்

http://tamil.thehindu.com/general/environment/பன்னீர்-திராட்சை-சாகுபடி-ஆண்டுக்கு-ரூ-3-லட்சம்-லாபம்/article8513388.ece?ref=relatedNews

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • Replies 162
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

செலவின்றிக் கிடைக்கும் இயற்கை உரம்: திருவள்ளூர் விவசாயிகளின் முன்னோடி முயற்சி

farm_2997740f.jpg
 

குப்பைக் கிடங்கில் சேகரமாகும் குப்பை பண மதிப்பற்றதாகக் கருதப்படுகிறது. குப்பையைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான் இப்படி நினைக்கிறோம். கழிவும் காசாகும் என்று செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் திருவள்ளூர் அருகேயுள்ள தலக்காஞ்சேரி விவசாயிகள்.

ஊருக்கு நல்லது

உள்ளாட்சி அமைப்புகள் குப்பையைச் சேகரிக்கவும், பிறகு எடுத்துச் செல்வதற்கும், சேமிப்பதற்கான இடத்துக்கும் பெரும் செலவு செய்கின்றன. குப்பைக் கிடங்குகளால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது, துர்நாற்றம் வீசுகிறது, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது, நோய்கள் பெருக வழிவகுக்கிறது. குப்பை கொட்ட இடமில்லாத நிலையில், சாலையோரங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களிலும் குப்பை கொட்டப்படுகிறது. இதனாலும், குப்பை எரிக்கப்படுவதாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

வேதி உரத்துக்கான செலவு அதிகரிப்பு, உரமிட்டும் மகசூல் குறைவாகக் கிடைப்பது போன்றவற்றால் விவசாயிகள் இயற்கை உரத்தை நாட ஆரம்பித்துவிட்டனர். அந்த இயற்கை உரத்தையும் சுயமாகவே தயாரித்துக்கொள்ளலாம் என்பதற்குத் தலக்காஞ்சேரி விவசாயிகள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

farm_2_2997742a.jpg

ரசாயனத்துக்கு மாற்று

தான் சார்ந்திருக்கும் பகுதியில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களால், உடல்நலம் எப்படியெல்லாம் கெட்டுப் போகும் என்பதை விவசாயிகளுக்கும் மக்களுக்கும் அறிவுறுத்திவருகிறார் தலக்காஞ்சேரியைச் சேர்ந்த பொன்னரசு. கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டுவரும் பொன்னரசு, ரசாயன உரங்களுக்கு மாற்றாகக் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் வழிமுறையைப் பொன்னரசு விவசாயிகளுக்குக் கற்றுத்தருகிறார்.

இயற்கை உரம் தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு வழிகாட்டவே தலக்காஞ்சேரி அண்ணா மறுமலர்ச்சி ஆண்கள் சுயஉதவிக் குழுவைத் தொடங்கியிருக்கும் பொன்னரசு, குழுவின் செயல்பாடுகளைக் குறித்து விளக்கினார்:

உரம் தயாரிக்கும் குழு

“நான் ஐந்தரை ஏக்கரில் விவசாயம் செய்துவருகிறேன். என்னைப் போல் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள 13 விவசாயிகள் இணைந்து தொடங்கியதுதான், அண்ணா மறுமலர்ச்சி ஆண்கள் சுயஉதவிக் குழு.

குழுவின் மூலமாக ரசாயன உரத்துக்கு மாற்றாக இயற்கை உரம் தயாரிக்க முதலில் திட்டமிட்டோம். அதற்காக அரசு நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்களில் நேரடிப் பயிற்சி பெற்றோம். தொடர்ந்து, ஊரில் சேரும் குப்பையை இயற்கை உரமாக மாற்ற முயற்சித்தோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலக்காஞ்சேரியை ஒட்டியுள்ள திருவள்ளூர் நகராட்சியின் குப்பை கிடங்கிலிருந்து, பழைய குப்பையை எடுத்து இயற்கை உரம் தயாரித்துவருகிறோம். பழைய மக்கும் குப்பையில் 60 சதவீதத்துக்கு மேல் அங்கக சத்துகள் இருப்பதே இதற்குக் காரணம்.

அமோக மகசூல்

உரம் தயாரிக்கும் நடைமுறையின் முதல் வேலையாகக் குப்பையின் மேல் `இ.எம்.’ என்ற நுண்ணுயிர் திரவத்தைத் தெளித்து, குப்பையில் உள்ள துர்நாற்றத்தை அகற்றுவோம். குப்பையில் கனஉலோகங்கள் இருந்தால், உரமாக்குவதில் பிரச்சினை ஏற்படலாம். ஆனால், பொதுவாகக் கனஉலோகங்கள் காணப்படுவதில்லை.

அதன்பிறகு குப்பையில் உள்ள கல், கண்ணாடி, ரப்பர், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தேவையற்ற கழிவு - மக்காத பொருட்களை அகற்றிவிட்டு, மணல் சலிக்கும் நான்கு மி.மீ. சல்லடை மூலம் சலிக்க வேண்டும். சலித்த பின் கிடைக்கும் கழிவுடன் உயிர்ச்சத்து உரத்தைச் சேர்த்து இயற்கை உரத்தை உற்பத்தி செய்கிறோம்.

சுமார் 60 டன் குப்பையிலிருந்து 30 டன் இயற்கை உரம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து டன்வரை தயாரிக்கலாம். இந்த இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதால் எங்கள் சுயஉதவி குழுவினர் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை மற்றும் மலர் உள்ளிட்ட பயிர்கள் அமோக மகசூலைத் தந்துவருகின்றன.

farm_3_2997741a.jpg

ஊருக்கு ஒரு தொழிற்சாலை

எங்கள் குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், மற்ற விவசாயிகளுக்கு ஒரு கிலோ இயற்கை உரத்தை நான்கு ரூபாய்க்கு விற்றுவருகிறோம். தற்போது குறைந்த அளவில் மட்டுமே உற்பத்தி செய்வதால், ஒரு கிலோவுக்கு 80 பைசா மட்டுமே லாபம் கிடக்கிறது. அதிக அளவில் உற்பத்தி செய்தால், நிச்சயம் அதிக லாபம் கிடைக்கும். நாங்கள் பயன்படுத்தும் உரத்துக்கு எந்தப் பெரிய செலவும் ஏற்படுவதில்லை.

குப்பையிலிருந்து அதிக அளவில் இயற்கை உரத்தை உற்பத்தி செய்வதற்கான இயந்திரத்தை வடிவமைக்க முயற்சித்துவருகிறோம். இயற்கை உரம் தயாரிப்பதற்கு அரசு நிதியுதவி, கட்டமைப்பு வசதிகள் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தித் தந்தால் ஊருக்கு ஒரு இயற்கை உரத் தொழிற்சாலையை அமைக்கலாம். உழவர் மன்றங்கள், விவசாய அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள் இதை மேற்கொண்டால் மண் வளம் பெறும், வேலை கிடைக்கும், சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும்” என்கிறார்.

விவசாயிகளின் இந்த முயற்சியால் திருவள்ளூரில் தேவையின்றிச் சேரும் குப்பையின் அளவு குறைகிறது, விவசாயிகளுக்கும் மண்ணைக் கெடுக்காத இயற்கை உரம் குறைந்த விலையில் கிடைப்பது என இரட்டை லாபம் கிடைக்கிறது.

விவசாயி ஜெ. பொன்னரசு, தொடர்புக்கு: 98408 24167

 

http://tamil.thehindu.com/general/environment/செலவின்றிக்-கிடைக்கும்-இயற்கை-உரம்-திருவள்ளூர்-விவசாயிகளின்-முன்னோடி-முயற்சி/article9069412.ece?ref=sliderNews

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நஷ்டம் அடைய வாய்ப்பே இல்லை!

Tamil_News_large_1603276.jpg

தோட்டக்கலை நிபுணர் மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலோசகரான, ர.புஷ்பகுமார்: உலகின் பொருளாதார சக்தியாக இந்தியா எழுச்சி பெற, விவசாய உற்பத்தி திறன், தற்போது உலகின் பொருளாதார சக்தியை நிர்ணயிக்கிற நாடுகளுக்கு சமமாக உயர வேண்டும். அப்படி நம் உற்பத்தியை அதிகரிக்க, ஒரு புதிய திறன் வாய்ந்த தொழில்நுட்பம் வேண்டும். அதுவே பசுமை இல்லத் தொழில்நுட்பம்.

என் வீட்டில் இருப்பவர்களின் கட்டாயத்தில், ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். எனினும், விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு, தோட்டக்கலையில் அதிக ஆர்வம் உண்டு. அந்த துறையில், ஒரு புரட்சி செய்ய வேண்டும் என்ற துாண்டுதலின் விளைவு தான், பசுமை இல்லம் சாகுபடி.
இஸ்ரேல் நாட்டில் தான் பசுமை இல்ல சாகுபடிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. இப்போதும் அவர்கள் செயல்பாட்டில், மூன்றில் ஒரு பங்கு தான் இங்கே நான் செயல்படுத்தி இருக்கிறேன். ஆண்டுக்கு ஒருமுறை அங்கு சென்று, என் தொழிலுக்கு தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்தி கொள்வேன். பசுமை இல்லம் மூலம், 1 ஏக்கர் நிலத்தில் சாதாரணமாக வரும் விளைச்சலை விட, 10 மடங்கு அதிக உற்பத்தி கிடைக்கும்.

மிகக் குறைவான நிலத்தில், குறைந்த தண்ணீர், உரத்தை பயன்படுத்தி, அதிக விளைச்சல் கொடுக்க முடியும். இந்த முறையில் ஒரே சவால், முதலீடு தான். நிதி நிலைமை சற்று குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு, இது கஷ்டம் தான். ஆனால், அதற்கு பிறகு வரும் லாபத்தால், குறைந்த மாதங்களிலேயே முதலீட்டை மீட்டு விட முடியும். மத்திய, மாநில அரசுகள், இதற்காக, 50 சதவீத மானியம் தருகின்றன. வங்கிகளில் கடன் உதவி கூட சுலபமாக கிடைக்கிறது. 

கட்டடம் போல் அமைப்பை எழுப்பி, அதற்குள் தோட்டம் வைத்து, கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை மூலமாக விளைச்சல் செய்கிறோம். இதனால் செடிகளுக்கும் நோய்கள் அதிகம் வருவதில்லை.
டாக்டர், இன்ஜினியர், வக்கீல் என, பலதுறை சேர்ந்தவர்களும் அதைவிடுத்து, கிராமப்புறத்தில் நிலம் வாங்கி, அதில் பசுமை இல்ல சாகுபடி செய்து அங்கேயே குடியேறுகின்றனர். ஒரு பெரிய நிறுவனம் கூட, இதில் முதலீடு செய்து தோட்டம் வளர்க்க முடியும்; லாபமும் ஈட்ட முடியும். ஐ.டி., நிறுவனத்தில் இருந்து வரும் இளைஞர்கள் தான், இதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதைச் சரியாக பராமரித்தால், நஷ்டம் என்பதற்கு வாய்ப்பே இல்லை. எந்த கால நிலையிலும் மழை அடித்தாலோ, வெயில் இருந்தாலோ, நஷ்டம் வராது. காப்பீட்டுக்கும் அவசியமில்லை; கட்டடத்திற்கு மட்டும் 
காப்பீடு செய்யலாம்.தொடர்புக்கு: 94877 - 28648

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மழையை நம்பாத சீத்தாப் பழச் சாகுபடி: ஐந்து மாநிலங்களுக்கு ஏற்றுமதி

seetha_3005364f.jpg
 

மருத்துவக் குணம் வாய்ந்த சீத்தாப் பழம் நாட்றம்பள்ளி அருகேயுள்ள காப்புக்காடுகளிலிருந்து தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருவ மழை பொய்த்த போதிலும் ஆண்டுக்கு 150 டன் ஏற்றுமதி செய்யப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

மழை தேவையில்லை

இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், அசாம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் சீத்தாப் பழம் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது. சீத்தாப் பழத்தில் 10 வகைகள் உண்டு. 100 கிராம் எடையுள்ள ஒரு சீத்தாப் பழத்தில் நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீஷியம், தாமிரம், குளோரின், வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் அடங்கியுள்ளன. இதய நோயையும் காச நோயையும் குணப்படுத்துவதற்குச் சீத்தாப் பழம் உதவும் என்று கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சீத்தாப் பழம் வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட ஐந்து கிராமங்களில் மலையை ஒட்டியுள்ள காப்புக்காடுகளில் அதிகமாக விளைகிறது. நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம், பச்சூர், லட்சுமிபுரம் ஆகிய மூன்று கிராமங்களிலிருந்து தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்குச் சீத்தாப் பழம் அனுப்பப்படுகிறது.

சீத்தாப் பழ ஆர்வம்

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதாலும், பருவமழை கைகொடுக்காவிட்டாலும் ஆண்டுதோறும் 80 முதல் 100 டன்வரை சீத்தாப் பழம் விளைவதால், நாட்றம்பள்ளி விவசாயிகள் சீத்தாப் பழச் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து நாட்றம்பள்ளி வெலக்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்து கூறியதாவது:

“பொதுவாக வேலூர் மாவட்டத்தில் மழையளவு எப்போதுமே குறைவாகக் காணப்படும். இதனால் வறட்சியின் பிடியில் சிக்கும் விவசாயிகள் தண்ணீர் அதிகமாகத் தேவைப்படும் பயிர் வகைகளைச் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த டிசம்பர் மாதம் வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழையளவு அதிகமாகக் காணப்பட்டாலும், நாட்றம்பள்ளி தாலுகாவில் மட்டும் மழையளவு குறைவாகவே காணப்பட்டது.

இது போன்ற காலகட்டத்தில் விவசாயிகளைக் காப்பாற்றுவது சீத்தாப் பழ விளைச்சல் மட்டுமே. நாட்றம்பள்ளி தாலுகாவில் பச்சூர், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், வீரானூர், நந்திபெண்டா, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சீத்தாப் பழம் சாகுபடியை அதிகமாக நம்பியுள்ளனர்.

நூறு டன் விளைச்சல்

நாட்றம்பள்ளியை ஒட்டியுள்ள மலைசார்ந்த இடங்களில் சீத்தாப் பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடியில் பூப்பூத்து, ஆவணியில் காய் காய்த்து, புரட்டாசி மாதத்தில் பழம் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது காய்கள் காய்த்து, பழுக்கும் தறுவாயில் உள்ளன. கடந்த ஆண்டு 130 டன்வரை வெளி மாநிலங்களுக்கு அனுப்பினோம். இந்தப் பழ வகையில் மருத்துவக் குணம் அதிகமாக உள்ளதால் கர்நாடகம், ஆந்திரம், கேரளம், சென்னை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகமாக அனுப்பிவருகிறோம். இந்த ஆண்டு 150 டன்வரை விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

மழையளவு அதிகமாக இருந்திருந்தால், 200 டன்னுக்கு மேல் விளைச்சல் கிடைத்திருக்கும். வேலூர் மாவட்டத்தில் மழையளவு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. தவிர, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளைக் கட்டிவருவதால், நீர்வரத்து சுத்தமாக இல்லாமல் போகும் சூழ்நிலையும் உருவாகிவிட்டது.

தண்ணீர் தாராளமாகக் கிடைத்தால் சீத்தாப் பழம் போன்ற பழவகைகளை அதிக அளவில் சாகுபடி செய்து, அதிக அளவில் உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியும்” என்கிறார் முத்து.

ஆண்டுக்கு ரூ. 15,000

இது குறித்து பச்சூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

‘வெப்ப மண்டலத்தில்கூட இந்த மரம் நன்றாக வளரும் என்பதால், விவசாயிகளுக்குப் பெரிய செலவு இருக்காது. இம்மரங்கள், கடல் மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் மீட்டர் உயரம்வரை உள்ள பகுதிகளில் வளரும் தன்மை கொண்டவை. நல்ல தரமான மரமாக இருந்தால், ஒரு மரத்தில் ஆண்டுக்கு 80 முதல் 100 காய்கள்வரை காய்க்கும். ஒரு பழம் ரூ. 2 வரை விற்பனை செய்கிறோம். சில நேரங்களில் ஒரு ரூபாய்க்கும் கூடப் பழம் விற்பனையாகும். 10 மரங்களைப் பராமரிக்கும் விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.15 முதல் 20 ஆயிரம் ரூபாய்வரை லாபம் கிடைக்கும்.

பராமரிப்புச் செலவு குறைவாக இருப்பதாலும் லாபம் அதிகமாக இருப்பதாலும் நாட்றம்பள்ளி தாலுகாவில் சீத்தாப்பழ மரத்தை வளர்க்க விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் தற்போது ஆர்வம் காட்டிவருகின்றனர்.’

விவசாயி முத்து தொடர்புக்கு: 97917 25081

 

http://tamil.thehindu.com/general/environment/மழையை-நம்பாத-சீத்தாப்-பழச்-சாகுபடி-ஐந்து-மாநிலங்களுக்கு-ஏற்றுமதி/article9094050.ece?widget-art=four-rel

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

நஷ்டம் இல்லாத ஊடுபயிர் விவசாயம்

oodu_3054296f.jpg
 

முன்பெல்லாம் லாபமோ நஷ்டமோ ஒரே பயிரை விளைவித்துவிட்டு விவசாயிகள் பேசாமல் இருந்தார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, ஊடுபயிர் விவசாயம் தற்போது பரவலாகி வருகிறது.

நடவுசெய்யும் முதன்மைப் பயிருக்கு ஏற்ற ஊடுபயிர்களை விளைப்பதன் மூலம் விவசாயிகள் நஷ்டத்தைத் தவிர்க்க முடிகிறது, பல நேரம் கூடுதல் பலனையும் பெற முடிகிறது. இதனால் ஒரு பயிரை நம்பி விவசாயம் மேற்கொண்ட நிலை மாறி, ஊடுபயிர் விவசாயம் மூலம் பல்வேறு பயிர்கள் பயிரிடும் முறைக்கு விவசாயிகள் மாறிவருகின்றனர்.

ஒரே பாசனம்

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி ஏ. ரசூல் மொகைதீன். இவர் தன்னுடைய தென்னந்தோப்பில் பாக்குமரம், ஜாதிக்காய் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிட்டுள்ளார். பணப்பயிரான மிளகு, பாக்கு மரத்தைப் பற்றி படர்ந்து மேலே கொடியாக ஏறுகிறது.

தென்னைமரத்தில் ஊடுபயிராகக் கோக்கோ பயிரிட வேளாண்மைத் துறையினரால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் கோக்கோவைவிட பாக்குமரம், ஜாதிக்காய், மிளகுக் கொடிகள் மூலம் அதிக லாபம் கிடைப்பதால், கோக்கோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மற்ற ஊடுபயிர்களை நடவுசெய்துள்ளார் ஏ. ரசூல் மொகைதீன்.

தென்னந்தோப்பு முழுவதும் சொட்டுநீர்ப் பாசனம் கொடுத்துள்ளார். இதனால் தென்னைக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும்போதே அருகில் நடப்பட்டுள்ள பாக்குமரம், ஜாதிக்காய் மரம், மிளகுக் கொடி ஆகியவற்றுக்கும் பாசனம் கிடைக்கிறது.

பராமரிக்காத மிளகில் லாபம்

தென்னை மரங்களில் ஏறிக் காய் பறிக்க ஒரு மரத்துக்கு ரூ.15 வரை கூலி கேட்கப்படுவதால் செலவைக் குறைப்பதற்காக மரத்தில் இருந்து தேங்காய் விழும்வரை விட்டுவிடுகிறார்.

இந்தத் தேங்காய்கள் கொப்பரைக்கு (எண்ணெய் எடுக்க) பயன்படுத்தப்படுகின்றன. தேங்காய் விற்பனையைவிட கொப்பரை விற்பனையில் கணிசமான லாபம் கிடைக்கிறது. பாக்குமரத்தை ஒப்பந்த அடிப்படையில் மொத்தமாகப் பேசிவிட்டால், வாங்குபவர்களே தோட்டத்தில் வந்து பறித்துச் செல்கின்றனர். ஜாதிக்காய் மருத்துவ குணம் மிக்கது என்பதால் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். மிளகு விளைச்சலை அறிய, ஒரு மிளகுக் கொடியைப் பார்த்தாலே தெரிந்துவிடுகிறது. மிளகு கொத்துக்கொத்தாகக் காய்த்துக் குலுங்குகிறது. சந்தையில் மிளகுக்கு எப்போதும் மவுசு உண்டு என்பதால், பண்ணையில் தனியாகப் பராமரிக்காத மிளகுக் கொடியே அதிக வருவாயைக் கொடுக்கிறது.

தென்னைமரங்களின் அடிப்பகுதியில் மண்புழுக்கள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. இவையே மரத்துக்கு இயற்கை உரங்களைத் தருகின்றன. இதனால் தனி உரச் செலவு இல்லை. சொட்டுநீர்ப் பாசனம் மூலம் அவ்வப்போது தண்ணீரை முறையாகப் பாய்ச்சினாலே போதும் என்றநிலை உள்ளது.

நஷ்டத்துக்கு வழியில்லை

தன்னுடைய பண்ணைய முறை குறித்து விவசாயி ஏ. ரசூல் மொகைதீன் பகிர்ந்துகொண்டது: “தென்னையை மட்டுமே நம்பியிருந்தால் திடீரென விலை வீழ்ச்சி ஏற்படும்போது விவசாயிக்கு நஷ்டம் ஏற்படும். இதனால் அடுத்து மரங்களைப் பராமரிக்கச் சிரமப்பட வேண்டியிருக்கும். இதனால்தான் ஊடுபயிர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். தேங்காய்கள் வழக்கமான வருமானத்தைத் தந்தாலும், தென்னையைப் பராமரிக்கும் செலவைக் கொண்டே ஜாதிக்காய், பாக்குமரம், மிளகுக் கொடி ஆகியவற்றை ஊடுபயிராக விளைவிப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

ஒரே செலவு என்றாலும், தென்னை, ஜாதிக்காய், பாக்கு, மிளகு என நான்கு வழிகளில் பலன் கிடைக்கிறது. இப்படி முதன்மைப் பயிருக்கு இடையே ஊடுபயிர்களைத் தேர்வு செய்து பயிரிட்டால், ஒரு பயிருக்கு விலை இல்லாத நிலை ஏற்பட்டாலும், மற்றவை சமாளித்துவிடும். எனவே, விவசாயிகள் எதிர்காலத்தில் ஒரு பயிர் விவசாயம் செய்வதைவிட, ஊடுபயிராக வேறு பயிர்களையும் பயிரிட்டால் எந்தவிதத்திலும் விவசாயத்தால் நஷ்டம் அடைய வாய்ப்பில்லை” என்றார்.

rasool_3054295a.jpg

விவசாயி ரசூல் மொகைதீன் தொடர்புக்கு: 9443736984

 

http://tamil.thehindu.com/general/environment/நஷ்டம்-இல்லாத-ஊடுபயிர்-விவசாயம்/article9255397.ece

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை....  முழுமையாக பார்க்காவிட்டாலும்... 27´ம் நிமிடத்திலிருந்து, 
தயவு செய்து  
5 நிமிடம் மட்டும் ஒதுக்கி..... கட்டாயம் பாருங்கள். 
விவசாயி எவ்வளவு.. வஞ்சிக்கப் படுகின்றான் என்பதை... உங்கள் முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.

Link to post
Share on other sites
 • 4 months later...
 • கருத்துக்கள உறவுகள்

மரங்கள் வளர்ப்பு முறை , பயண்கள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலகுவான வீட்டுத் தோட்டம் - hugelkultur

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பண்ணை  நாட்டு கோழி

a1793b2def485a135ed57b7b98674af.jpg

கிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப்பு ஆடுகளும்தான்.

கோழிவளர்ப்பு மிகவும் குறைந்த முதலீட்டில் ஆரம்பித்துவிடலாம். இடத்தேவையும்  மிகவும் குறைவே. கிராம மக்கள் கண்டிப்பாக 20 க்கும் அதிகமான கோழிகளை வீட்டிலேயே வளர்ப்பார்கள். அதையே கொஞ்சம் சிரத்தை எடுத்து எண்ணிக்கை அதிகமாக்கினால் மிகுந்த லாபம் பெறலாம். இன்றைய சூழ்நிலையில் நாட்டு  கோழி நல்ல விலை போக கூடியதாக உள்ளது.

ஆடு நிக்குது, கோழி இருக்குதுன்னு சொல்லுவாங்க. ஆனா அதை நல்ல முறையில் பார்த்து வளர்க்கிறது  கிடையாது. அப்படி செய்தல் கண்டிப்பா நிறைய லாபம் கிடைக்கும்னு உணர்வது இல்லை. இதை ஒரு உப தொழிலா நெனச்சு செய்யணும். கொஞ்சம் பராமரிப்பு இருந்தா போதும். கோழிகளோட வருமானத்தையும் நாம லாபகணக்குல  தவறாம சேர்த்துடலாம்.

ராஜ் டேனியல் என்பவரின்  கோழி வளர்ப்பு நுணுக்கங்களை நாமும் தெரிந்துகொள்வோம்.

ஒரு பெட்டைக்கோழி வருஷத்துக்கு மூணு பருவங்கள்ல முட்டை போடும். ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியா பதினைஞ்சு முட்டை வரை போடும். அதை தேதி வாரியா எழுதி வைக்கணும். கடைசியா போட்ட ஒன்பது முட்டைகளை அடை காக்க வைக்கறதுதான் லாபமானது. நல்லா வளர்ச்சி அடைஞ்ச ஒரு பெட்டைக்கோழியால ஒன்பது முட்டைகளை மட்டும்தான் அடை காக்க முடியும். அதுக்கு மேல வெச்சா, ஒழுங்கா குஞ்சு பொரியாது. அடுப்புச் சாம்பலும் மணலும் நிரப்பின கூடையிலதான் அடைகாக்க வைக்கணும். கூடையில மூணு மிளகாயையும் போட்டுட்டா பூச்சி, பொட்டு அண்டாது. ஈரப்பதத்தை உறிஞ்சி கதகதப்பா வைக்கறதுக்காக கரித்துண்டு… இடியைத் தாங்கிக்கறதுக்காக இரும்புத் துண்டு… இதையெல்லாம் கூடையில போட்டு வைக்கணும். இந்த மாதிரி வெச்சா… ஒன்பதும் பொரிச்சிடும். முதல் வாரம், தினமும் தண்ணியில் மஞ்சதூள் கலந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கணும். அப்புறம் முணு வாரத்துக்கு ஏதாவது வைட்டமின் டானிக்குகளை சில சொட்டுகள் கலந்து கொடுத்தா போதும். சனிக்கிழமை தோறும் அரசு கால்நடை மருந்தகங்கள்ல கோழிக்கு இலவசமா தடுப்பு ஊசி போடுவாங்க. இதையெல்லாம் தவறாம செய்தா… எந்த இழப்பும் இல்லாம கோழிகளை வளர்த்தெடுத்துடலாம். புதுசா வேற எந்த டெக்னிக்கும் தேவையில்ல

கோழி குஞ்சு வளர்ப்பு.

முழுக்க நாட்டுப்புறத்துல வளர்க்கற மாதிரியேதான் வளர்க்கணும். 450 சதுர அடி இருந்தா போதும். பத்து கோழிகளை வளர்த்து மாதம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அந்த இடத்தைச் சுத்தி நாலடி உயரத்துக்கு கோழி வலை அடிச்சு வேலி போட்டுக்கணும். வேலியோரம் கீழ் மண்ணைக் குவிச்சி சிமென்ட் பாலை ஊத்தி கொஞ்சம் கெட்டியாக்கிட்டா, மத்த உயிரினங்களால கோழிக்கு தொந்தரவு இருக்காது. வலை போட்ட இடத்துக்குள்ள மூணுக்கு மூணு அடி சதுரத்துல மூணு அடி உயரத்தில் மூணு குடிசைகளை சின்னச்சின்னதா போட்டுக்கணும். கோழிகள் ராத்திரியில தங்கறதுக்கு ஒரு குடிசை. நாலு பக்கமும் தரையிலிருந்து அரை அடி உயரத்தில் சுவர் எழுப்பி, வலை அடிச்சு, கீழே கடலைத் தோலை பரப்பி வைக்கணும். இன்னொரு குடிசை தூசிக் குளியலுக்கு. நாட்டுக்கோழிங்க குப்பையில புரண்டு றெக்கைகளை உதறுறதைப் பார்த்திருக் கலாம். உடம்புல இருக்கிற சின்னச்சின்ன உயிரினங்களை (செல்) துரத்துறதுக்காக இப்படி அந்தக் கோழிங்க செய்யும். பண்ணையில குப்பைக் குழி இருக்காது. அதனால, தரையில சாம்பலையும் மணலையும் கலந்து இந்த குடிசையில வைக்கணும். மூணாவது தீவனக் குடிசை. இதுல தீவனத் தொட்டியையும், தண்ணீர் குவளையையும் வெச்சுரணும். கோழிகளை பூட்டி வைக்கற வேலையே இங்க கிடையாது.

நல்ல வெடக்கோழிகளா பத்தும் சேவல் ஒண்ணும் வாங்கி வந்து வளர்க்க வேண்டியதுதான். கோழிங்க சமயத்துல பறந்து வெளியில போயிரும். அதனால பறக்கற கோழியை மட்டும் பிடிச்சி, ஒரு பக்க றெக்கையை நாலு விரக்கடை அளவு வெட்டி விட்டுட்டா பறக்காது. அப்பறம் முட்டைகளை சேகரிச்சு பொரிக்க வைக்க வேண்டியதுதான்.

பத்துக் கோழிகளை வளர்க்கறது ஒரு யூனிட். அப்படியே யூனிட் யூனிட்டா பெருக்கிக்கிட்டே போகலாம். குஞ்சுகள் தாயிடம் இருந்து பிரிஞ்சதும், அதை வெச்சே இன்னொரு யூனிட் அமைக்கறது நல்லது.

நாட்டுக்கோழிகளை நாட்டுக் கோழியா நினைச்சு மேய விட்டுதான் வளக்கணும். மனிதனுக்கான தீவனத்தை வாங்கிப்போட்டு எந்த உயிரினத்தை வளர்த்தாலும் பெரிசா லாபம் பார்க்க முடியாது. நாமளே கரையான் உற்பத்தி பண்ணி கொடுக்கலாம். அடுப்படிக்கழிவு, காய்கறிக்கழிவுகள், இலை தழைகள் கொடுத்து வளர்த்தாலே போதும் ஐந்தே மாசத்துல ஒன்றரை கிலோ அளவுக்கு வளர்ந்துடும். வீணாகிற தானியங்களை வேணும்னா கொடுக்கலாம். நாட்டுக் கோழியை விக்கறதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஒரு முறை விஷயத்தைத் தெரியப்படுத்திட்டா… வீடு தேடி வந்து வாங்கிக்குவாங்க.

நாட்டுக்கோழி வளர்ப்பில் இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வருபவர் நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டியை சேர்ந்த ரகுநாதன் (அலைபேசி: 94426-25504). ‘பண்ணை முறையிலான நாட்டுக்கோழி வளர்ப்பு’ பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.

“வீட்டில் இருந்தே பாக்குற மாதிரி ஏதாவது பண்ணைத் தொழில் செய்யலாம்னு நாமக்கல்ல இருக்கற கே.வி.கே. மையத்துல போய் கேட்டேன். ஆடு, கோழி வளர்க்கலாமேனு சொன்னாங்க. கோழி வளர்ப்பு பயிற்சி வகுப்புல சேர்ந்து விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டேன். பிறகு, சென்னை – நந்தனத்துல இருக்கற கோழியின ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நாட்டுக்கோழி, கின்னிக் கோழினு வாங்கிட்டு வந்து தொழிலை ஆரம்பிச்சேன். மத்த இனங்களுக்கு அவ்வளவா விற்பனை வாய்ப்பு இல்லாததால, நாட்டுக்கோழிங் களை மட்டும் தொடர்ந்து வளர்க்கிறேன். படிப்படியா வளர்ந்து, இப்பப் பெரிய பண்ணையா மாத்திட்டேன். வாரத்துக்கு 50 கோழிங்க விற்பனை ஆகுது. எப்பவுமே 500 கோழிங்க தயாரா இருக்கும். ஆரம்பத்துல, பாரம்பரிய முறைப்படி அடைகாக்க வெச்சேன். விற்பனையும் தேவைகளும் அதிகமாயிட் டதால இப்ப இங்குபேட்டர் பயன்படுத்துறேன்.

‘மேய்ச்சலுடன் கூடிய கொட்டில் முறை’யிலதான் நான் வளர்க்கிறேன். மதியத்திலிருந்து இருட்டுற வரை வெளியில மேயவிட்டு, பிறகு கூண்டுங்கள்ல அடைச்சிடுவேன். அப்ப அடர் தீவனம் கொடுப்பேன். விலைக்கு வாங்காம நானே தயாரிக்கிறதால தீவன செலவு ரொம்பவும் குறைச்சல்தான். வெளிய வாங்கினா ஒரு கிலோ 13 ரூபாய். நாமே தயார் செய்தா 8 ரூபாய்தான்.

தவறாம தடுப்பூசி போடணும், மருந்துகளையும் கொடுக்கணும். தடுப்பூசி போட்டாதான் கோடைக்காலத்துல வர்ற வெள்ளைக்கழிசல் நோய் வராம பாதுகாக்கலாம்” என்று விவரித்தார்.

http://www.velanmai.in/article/2318

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Athavan CH said:

ஒரு பெட்டைக்கோழி வருஷத்துக்கு மூணு பருவங்கள்ல முட்டை போடும். ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியா பதினைஞ்சு முட்டை வரை போடும். அதை தேதி வாரியா எழுதி வைக்கணும். கடைசியா போட்ட ஒன்பது முட்டைகளை அடை காக்க வைக்கறதுதான் லாபமானது. நல்லா வளர்ச்சி அடைஞ்ச ஒரு பெட்டைக்கோழியால ஒன்பது முட்டைகளை மட்டும்தான் அடை காக்க முடியும். அதுக்கு மேல வெச்சா, ஒழுங்கா குஞ்சு பொரியாது. அடுப்புச் சாம்பலும் மணலும் நிரப்பின கூடையிலதான் அடைகாக்க வைக்கணும். கூடையில மூணு மிளகாயையும் போட்டுட்டா பூச்சி, பொட்டு அண்டாது. ஈரப்பதத்தை உறிஞ்சி கதகதப்பா வைக்கறதுக்காக கரித்துண்டு… இடியைத் தாங்கிக்கறதுக்காக இரும்புத் துண்டு… இதையெல்லாம் கூடையில போட்டு வைக்கணும். இந்த மாதிரி வெச்சா… ஒன்பதும் பொரிச்சிடும். முதல் வாரம், தினமும் தண்ணியில் மஞ்சதூள் கலந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கணும். அப்புறம் முணு வாரத்துக்கு ஏதாவது வைட்டமின் டானிக்குகளை சில சொட்டுகள் கலந்து கொடுத்தா போதும். சனிக்கிழமை தோறும் அரசு கால்நடை மருந்தகங்கள்ல கோழிக்கு இலவசமா தடுப்பு ஊசி போடுவாங்க. இதையெல்லாம் தவறாம செய்தா… எந்த இழப்பும் இல்லாம கோழிகளை வளர்த்தெடுத்துடலாம். புதுசா வேற எந்த டெக்னிக்கும் தேவையில்ல

கோழி வளர்ப்பு முறையில்... பல கேள்விப் படாத விடயங்களை இந்தப் பதிவில் அறியக் கூடியதாக இருந்தது. 
எனக்கு சிறிய வயதில் இருந்தே... கோழி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. இன்னும் அந்த விட்டுப் போகவில்லை. ஆனால்... அதற்கான சந்தர்ப்பம் தான்.... அமையவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அழகர்கோவில் பப்பாளி: ஏக்கருக்கு ரூ. 5 ½ லட்சம் வருவாய்

pappali_3152268f.jpg

மதுரை அழகர்கோவில் அருகே விவசாயி உற்பத்தி செய்யும் பப்பாளிப் பழங்கள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன்மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 5 ½ லட்சம் ரூபாய் அவர் லாபம் சம்பாதித்துவருகிறார்.

மதுரை மாவட்டத்தில் குடிநீர், விவசாயப் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ள சூழலில் அழகர்கோவில் அடிவாரம் கிழக்கு சுற்றுவட்டாரக் கிராமங்களில், தற்போதும் 200 அடியில் சுவையான தண்ணீர் கிடைக்கிறது. இந்தத் தண்ணீரையும் கரம்பை மண்ணையும் பயன்படுத்தி விவசாயிகள் இயற்கை விவசாயத்திலும், ‘ஹைடெக் ஹைபிரிட்’ விவசாயத்திலும் சாதித்துவருகின்றனர்.

நேரடிக் கொள்முதல்

அழகர்கோவில் சாம்பிராணிப் பட்டியைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன், தனது சகோதரர் கார்மேகத்துடன் சேர்ந்து ஆறு ஏக்கரில் கலப்பினப் பப்பாளி சாகுபடி செய்துள்ளார். ஒவ்வொரு மரத்திலும் பப்பாளிப் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்துக் குலுங்குகின்றன. ஒவ்வொரு பழமும் மூன்று கிலோ முதல் ஐந்து கிலோவரை இருக்கிறது. நான்கு நாட்களுக்கு ஒருமுறை பழங்களை அறுவடை செய்கின்றனர்.

ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, இவர்கள் விளைநிலத்துக்கே வந்து மொத்தமாகப் பப்பாளிப் பழங்களைக் கொள்முதல் செய்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இவர்கள் விளைவிக்கும் பப்பாளி பழங்களில் அதிகச் சுவை இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதனால், பப்பாளி சாகுபடியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செலவு போக இவர்கள் ஏக்கருக்கு 5 ½ லட்சம் ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றனர்.

முழுமையான மகசூல் பெற...

இது குறித்து விவசாயி கோபாலகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டது: தோட்டக்கலைத் துறை பண்ணையில் வாங்கிய 40 நாள் பப்பாளிக் கன்றுகளை ஆறு ஏக்கரில் நடவு செய்தோம். ஆறு மாதங்களில் இந்தப் பப்பாளி மரங்களில் காய்கள் பிடிக்க ஆரம்பித்தன. ஒன்பதாவது மாதத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை பப்பாளிப் பழங்களை அறுவடை செய்ய ஆரம்பித்தோம். அதிகபட்சமாக, எங்கள் மரங்களில் விளையும் பப்பாளி பழம் மூன்று கிலோ முதல் ஐந்து கிலோவரை காய்க்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து ஓர் ஏக்கருக்கு 1 ½ லட்சம் ரூபாய் செலவாகிறது. பப்பாளி சீசனுக்குத் தகுந்தாற்போல் ஒரு கிலோ ரூ.10 முதல் 18 ரூபாய்வரை விற்கிறது. ஓர் ஏக்கரில் 70 டன் முதல் 100 டன்வரை மகசூல் கிடைக்கிறது. சராசரியாக ஏக்கருக்கு 7 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. 1 ½ லட்சம் ரூபாய் செலவு, போக 5 ½ லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. நல்ல விலைக்கு விற்றால், கூடுதல் மகசூல் கிடைத்தால் லாபமும் கூடுதலாகும்.

பொதுவாக 20 அடி உயரம்வரை மரத்தை வளர வைத்து மூன்று ஆண்டுகளுக்கு மகசூல் பெறலாம். சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் ஏழு அடி, 10 அடியில் வளர்ச்சி நின்றுவிடும். வெள்ளை, பச்சை கொசுக்கள், மாவுப் பூச்சிகள் அதிகமாக இருந்தால் காய் பிடிக்காது. தண்டு அழுகல் நோய் வரும். இந்த நோயைக் கட்டுப்படுத்தத் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அறிவுரைப்படி அவ்வப்போது மருந்துகளை அடிக்க வேண்டும். நாங்கள் உற்பத்தி செய்யும் பப்பாளிப் பழங்களை அரபு நாட்டு மக்கள் சாம்பார் செய்யவும், பழங்களாகச் சாப்பிடவும் விரும்பி வாங்குகின்றனர் என்றார்.

gopala_3152269a.jpg

- விவசாயி கோபாலகிருஷ்ணன் தொடர்புக்கு: 93603 84427

http://tamil.thehindu.com/general/environment/அரபு-நாடுகளுக்கு-ஏற்றுமதியாகும்-அழகர்கோவில்-பப்பாளி-ஏக்கருக்கு-ரூ-5-லட்சம்-வருவாய்/article9624262.ece?widget-art=four-rel

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.