• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

விவசாயி விக்

விழித்துக்கொண்டே இறந்தேன்! பச்சையம்மா அரவணைத்தாள்! - கடைசி கருத்து (18+ வயதினருக்கு மேல் மட்டும் வாசிக்கவும்)

Recommended Posts

விழித்துக்கொண்டே இறந்தேன்! பச்சையம்மா அரவணைத்தாள்! - கடைசி கருத்து (18+ வயதினருக்கு மேல் மட்டும் வாசிக்கவும்)

*இது 18+ வயதினர் மட்டும் கதை. இது பெரியவர்களுக்கான கதை. இங்கு இறப்பு சம்பந்தப்பட்ட பதிவுகளை பதியும் மற்றும் அதன் கீழ் மிகவும் அழகாக கருத்தாடும் யாழ் கள உறவுகள் இசைஞானி, கோமகன், தமிழ் சிறி, விசுகு, சகாரா, சாந்தி, நெடுக்காலபோவான், நுனாவிலான், மல்லையூரான், யாழ் அன்பு, தமிழரசு, குமாரமசாமி,துளசி, கிருபன், பனங்காய், தமிழ் சூரியன், தமிழன்பு, மற்றும் மெசுப்பதேமிய சுமேரியர் போன்றோரின் கருத்துக்களை 2008ம் வருடம் தொடக்கம் யாழில் வாசித்து வருகிறேன். அதை பற்றி சிந்த்தித்தாலும் அந்த தலைப்பிற்குள் கருத்து பதியும் நேரம் இன்று மட்டும் வரவில்லை.  பலகாலமாக வேலை செல்லும் போதும் வரும்போதும் ஏதாவது பெரிய விபத்தை பார்த்தவுடன் இந்த தலைப்பு என்னை வந்து பிடிக்கும். அல்லது இராணுவத்தால், ஒட்டுக்குழுக்களால் கொல்லப்பட்ட குடும்பத்தினர், நண்பர்களை பற்றி சிந்தனை வந்தால், இந்த கருத்து பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவேன்.

இது தான் எனது யாழ் களத்திற்கான கடைசி கருத்து என்பதால் அந்த தலைப்பிற்கு கருத்து போடும் நேரம் வந்துவிட்டது. பதிவு நாள் இன்று மூத்தக்காவின் 27வது ஆண்டு நினைவு நாள். இந்த திரியை பி(இ)றப்பை பற்றிய ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு பாவியுங்கள் . நன்றி.

**********************************************************************************************
பெரூவியன் சோளத்தை பொறியாய் வைத்தாள்.....

 

untitled_picture_002.jpg


இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு,  தகவல் தொழில் நுட்பத்தில் 32 பில்லியன் டொலர் பெறுமதிமிக்க விவசாய, உணவு தகவல்கள், உணவு பாதுகாப்பு தகவல்களை கவனித்துவரும் முகாமையாளராக இருந்தேன்.

அதனால் ஒவ்வொரு நாளும் ஒண்டாரியோ, கனடா, உலக உணவு செய்திகள் அரசியல் செய்திகளை கவனிப்பது எனது தொழிலின் ஒரு பகுதி.  

அப்போது பி பி சியில் மட்டும் பனி துருவத்தில் 200 மில்லியன் டொலரில் விதை சேமிப்பு வங்கி ஒன்று ஆயுத பாதுகாப்புடன் கட்டப்படும் செய்தி உறுத்தியது.  அந்த செய்தியை ஆராய்ச்சி செய்ய போய் மரபணு விதை மூலம் உலகின் 70% விகித உணவை தரும் சிறு விவசாயிகளை நசுக்கும் திட்டம் தெரிந்து அதிர்ந்தேன்.

அன்று முதல் அந்த ஆராய்ச்சியை தொடர்ந்தேன்.  அமெரிக்க விவசாய புள்ளி மெக்சிகோ, மத்திய மற்றும் தென் அமெரிக்க  சோள சிறுவிவசாயிகளை முடக்கி அமெரிக்காவிற்கு தேவையான நல்ல வேலையாளிகளை பிடிக்கும் திட்டம் தெரிந்தது

அன்றிலிருந்து சோளத்தின் ஊற்றாம் மத்திய, தென் அமெரிக்காவின் உணவு, அரசியலை ஊன்றி கவனித்தேன்.  

ஒரு நாள் வேலை உணவகத்தில் மிகவும் அழகான சோளங்களை கூடையில் அழகு பொருட்களாக வைத்திருந்தார்கள்.  அவற்றை பற்றி சமையல் காரரிடம் கேட்டேன், அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

"அதை பற்றி சோளத்தை உலகத்திற்கு தந்தவர்களை கேட்கவேண்டும்" பின்னாலிருந்து சிரித்து கொண்டே சத்தம்.

திரும்பினேன்,  விக்டர் நின்றான். "நான் பெரூவியன் என்று உனக்கு தெரியாதா?"  வியந்தான்.

"இல்லை. விக்டர், நீ கொலம்பியன் என்று நினைத்தேன்" சமாளித்தேன்.

பின் இருவரும் உணவை எடுத்துகொண்டு போய், எனக்கு தெரிந்தவற்றை கொட்டி தீர்த்தேன்.  அவருடைய முகத்திலும் கவலை கோடுகள் ஓடின.

"நீ கலியாணம் கட்டவில்லை தானே.  நீ ஏன் என்னுடன் ஊருக்கு விடுமுறையில் வந்து இந்த சோள விதைகளை சேகரிக்க கூடாது? நான் சுத்த மலை கிராமம். என்னுடனே தங்கி என்னுடனே பாதுகாப்பாக எல்லா இடமும் சுற்றலாம். " சின்ன தீர்வை வைத்தார்.

இரண்டு மாதத்தில் இருவரும் பெரூவியன் மலைகள் ஊடாக ஜீப்பில் ஒரு நாள் பூரா பயணித்து ஒரு கெச்சுவ விவசாய கிராமத்திற்கு வந்திருந்தோம்.

அழகோ அழகு கொள்ளை அழகு. எனக்குள் எதோ இந்த இடம் எனக்கு மிகவும் பரிச்சியமான இடமாக உணர்ந்தேன்.  

கிராமத்தில் இருக்கும் பெரிய குடிசை தான் நண்பரின் வீடு.  

"உனது ஒரு மாத சம்பளத்தில் ஒரு மாளிகை வீடு இங்கு கட்டலாமே?" கேட்டேன்.

நண்பரின் முகத்தில் ஒரு சுழிப்பு தெரிந்தது.  "எங்களுக்கு மாளிகை வீடுகளிலும் பார்க்க இந்த குடிசை வீடுகள் தான் பிடிக்கும்."

"அப்போது என்னத்திற்கு மினக்கெட்டு படித்து கனடா வந்து வேலை செய்கிறாய்?" மடக்கினேன். நண்பர் மௌனமானார்.

அதன் பின் அந்த பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடல், விழிப்புணர்வு கூட்டங்கள், இயற்கை விதை சேகரிப்பு, வன சுற்றுலா என்று இரண்டு கிழமை ஓடிவிட்டது.  அடுத்த நாள் திரும்பி போகவேண்டும்.  மனமே வரவில்லை.  

ஒரு இங்கா பெண்ணை கைபிடித்து அங்கே வாழவும் ஆசை வந்து போனது.  ஆனால் ஒருத்தியும் எனது இடுப்புக்கு மேல் தேறவில்லை.
*************************************************
பச்சையம்மாவின் சா(வு)மன் வந்தார்.......

அடுத்த நாள் காலை செல்ல கொண்டுவந்த உடுப்புகள், வாங்கிய கலை பொருட்கள், விதைகள் மற்றும் அவற்றுக்கான விண்ணப்பங்கள் எடுத்து அடுக்குவதில் மும்முரமாக குடிசைக்குள் இருந்தேன்.

"சாமன் வருகிறார், சாமன் வருகிறார்" குடிசைக்கு வெளியே கிசு கிசுத்து கேட்டது.

யாரிவர்? எல்லோரும் ஏன்  குடிசைகளுக்குள் திரும்பி சென்றுவிட்டார்கள்.  உடுப்புகளை அடுக்கி கொண்டே யோசித்தேன்.

எனது நண்பர் குடிசைக்குள் இருந்து பாய்ந்து வெளியே வந்து மரியாதையுடன் சாமனை வரவழைத்து, வெளியே இருக்கும் கட்டிலில் இருத்தினார்.

நானும் ஆர்வ மிகுதியில் வெளியே வந்தேன். ஐம்பது வயது மிக்க பெரியவருக்கு "ஓலா, கொமாஸ்டா?" போட்டேன்.

நண்பர் உடனே பதறி, "இவர் எமது பிராந்தியத்தின் சாமன்.  எங்கள் இயற்கை தெய்வத்தின் தூதுவர்.  எங்களுக்கு வாழும் கடவுள் போல. இவர் தான் என்னை வெளிநாடு சென்று விவசாய துறையில் வேலை செய்ய கட்டளையிட்டவர். மரியாதை குடு" ஆங்கிலத்தில் பதறி முடித்தார்.

நானும் உடனே கை கூப்பி தலை வணங்கினேன்.

"நான் உன்னை பார்க்க தான் வந்திருக்கிறேன்." சொன்னார் சாமன்.  நான் நண்பரை திரும்பி பார்த்தேன். "இல்லை, உன்னைத்தான்!"

இப்போது நான் குழம்பினேன். "என்னையா?" இப்போது நண்பரும் குழம்பி இருந்தார்.

"ஓம், உன்னைத்தான்.  என்னை பச்சையம்மா அனுப்பியிருக்கிறாள். உன்னை அயவாஸ்கா அருந்த  சொன்னாள்." என்னையே புன்முறுவலுடன் பார்த்து கொண்டிருந்தார்.

நான் அது என்ன என்று கேட்பதற்கு முன், "ஐய்யா, இவரையா அருந்த சொன்னாள்?" முகத்தில் கலக்கத்துடன் நண்பர் கேட்டார்.  எனக்கும் கலக்கியது.  ஆக்கள் கட்டை என்றாலும் ஒரு நச்சு தவளை தடவிய  ஊசியால் போட்டு தள்ளிவிடுவார்கள்.  

"யாரிந்த பச்சையம்மா? எனது மொழியில் பச்சை தாய் என்று அர்த்தம்" நான் நண்பரின் கேள்வியை முடித்தேன்.

"உண்மை. அவளின் மொழி தான் உனது தாய் மொழியும். அவள் மொழியிலும் சோக்ள என்று தான் சோளத்தை அழைப்பாள்." சிரித்துக்கொண்டே தீர்க்கமாக சாமன் பார்த்தார்.

எனது ஆவலை அடைக்க முடியவில்லை ஆனால் இந்த பானத்தை பயணிப்பதற்கு முதல் நாள் அருந்த தயக்கம்.  

அதை உணர்ந்த சாமன் "பயப்படாதே. அவள் உனது வாகன விபத்தின் பின் இடது தோள் தொடர் வலியை நீக்குவதற்கே அருந்த சொல்கிறாள்.  மற்றும் உனது குடிப்பழக்கத்தை குறைக்கவும்." தீர்க்கமாக சொன்னார் சாமன்.

"விபத்தை பற்றி எப்படி தெரியும்?அதனால் அவருக்கு என்ன பயன்?" சந்தேகத்தை கேட்டேன்.  குடிப்பழக்கத்தை தொட்டதும் சந்தேகத்தை சூடாக்கியதற்கு காரணம்.

"அப்படியென்றால் தான் நீ இயற்கை விவசாயி ஆகும்போது உடல் உபாதைகள் இருக்காது.  நீ இன்னும் நூற்றுக்கணக்கான இயற்கை விதைகளை சேகரித்து பாதுகாத்து வைத்திருப்பாய், இலட்சக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்குவாய்.." எதோ எனது வருங்காலத்தை பார்த்து ஒளிபரப்புவது போல் சொன்னார்.  

அவர் பொறுமை இழப்பதை நண்பர் கவனித்தார்.  "என் வாழ் நாளில் சாமன் இப்படி வற்புறுத்தி பார்த்ததில்லை.  அவரிடம் தான் போய் கெஞ்சவேண்டும்.  அம்மா உனக்கு எதையோ காட்ட விரும்பிறார்." தெம்பூட்டின்னார்.

"கனடா திரும்பியதும் நிறைய வேலைகள் இருக்கிறது. என்னால் முடியுமோ தெரியாது."  நழுவ பார்த்தேன்.

"பச்சையம்மாவிற்கு இவ்வளவு சக்தி இருந்தால் ஏன் என் முன் தோன்றவில்லை?" அன்று பூரா தண்ணி போடுவது தான் திட்டம் என்ற படியால் சாமி குற்றத்தை தவிர்க்க பார்த்தேன்.

"விக்கி இந்த அயபாஸ்கா திரவத்தில் இருக்கும் காபி எனும் மூல பொருள் எமது மூழையில் டி எம் ரி எனும் இரசாயனத்தை சுரக்க வைக்கும்." நண்பர் விவரித்தார்.

"இந்த இரசாயனம் நாம் பிறக்கும் போதும், இறக்கும் போதும், மற்றும் கனவு காணும் போது தான் சுரக்கும்.  பச்சையம்மாவின் உலகம் இந்த மூன்றுகுள்ளும் தான் இருக்கிறது" நண்பர் விடுவதாயில்லை.  

"நாங்கள் உலகத்திற்கு முதல் மூன்று வயதில் ஐம்புலன்களை பழக்கிவிடுகிறோம். அதனால் அவர் அப்படி தோன்றினாலும் எமது அக கண்கள் அவரை தரிசிக்க அயபாஸ்கா தேவை. சாமனை நம்பு. நான் உறுதியளிக்கிறேன்."

சரியென்று தலையாட்டினேன்.

***************************************
பச்சையம்மாவிற்கு அயபாஸ்கா பூசை...விவசாயி விக்கிக்கு பலிகடா பூசை....

"காலையில் குளித்தாயா?" சாமன் கேட்டார்.

ஓம் என்று பலிகடாவா தலையாட்டினேன்.

"மாமிசம் உண்டாயா? காலையில் தண்ணி போட்டாயா? குளுசைகள் ஏதாவது பாவிக்கிறாயா?" அடுத்தடுத்த கேள்விகள்.

இல்லையென்று தலையாட்டினேன்.

"உனக்கு அய(ஆத்மா)பாஸ்கா(கொடி)வுடன் 'சளிபொங்க' இலையும் சேர்த்து சென்ற கிழமையே தயாரித்து விட்டேன்..  அது உனது உடலில் உள்ள குடியால் வந்த தேவையில்லாத சளிகளை வெளிக்கொண்டு வரும்." சாமன் சொன்னார்.

"சளி என்றால் எனது மொழியிலும் அதே அர்த்தம்" அதியசத்தோடு சொன்னேன்.  சாமன் தெரியுமென்று சிரித்தார்.

சாமன் தனது நன்றிகளை தாய்க்கு ஓதி முடித்து, எல்லா இடமும் புகை போட்டு சுத்தம் செய்தார்.  

பெண்கள் ஓடிவந்து ஒரு சிறு கதிரையை வைத்து என்னை இருத்தினார்கள். பின் மிக அழகான சிறகுகளை கொண்ட மாலைகள், காதணிகள், கிரீடம் எல்லாம் வைத்து பலிகடாவிற்கு நெற்றியில் குங்கும பொட்டு வைக்காத குறையாக இருந்தேன்.  
'
சாமன் பூசையில் கவனமா இருந்தார்.  ஆயுள்வேத இலைகளால் வேப்பில்லை அடித்து மூலிகை புகையை எனக்கு காட்டிவிட்டு பச்சையம்மாவிற்கு படைத்து வைத்த 'சிச்ச'வை(மது) எடுத்து மண்ணுக்கு  'சல'(ம்) கொடுத்தார்.  

பின் சுற்றியிருந்த கிராமத்து பதினான்கு பேரும், நானும் சாமனிடம் சிச்ச பெற்று சல நிலத்திற்கு கொடுத்து பருகினோம்.    

அதன் பின் எல்லோரும் சொல்லி வைத்தது போல் சாமனுக்கும், பலிகடாவிற்கும் தலைவணங்கி சென்றார்கள்.  

நான், சாமன், நண்பர் மட்டும் குடிசைக்குள்.

என்னை பெரிய லாமா தோலில் இருக்க வைத்தார் சாமன்.  "தேவை ஏற்படும்போது நீ படுத்து கொள்ளலாம்."    

அட பார்டிக்கு முன்னமே படுத்தியவர் இவரா தான் இருக்கும் என்று நினைத்து சொகுசான அந்த கம்பளத்தில் இருந்தேன்.

"அவளை நினைத்து கொண்டு பருகு.  அரை மணித்தியாலத்தில் உனக்கு உரு வரும். மொத்தமாக ஆறு மணித்தியாலத்தில் முடிந்துவிடும்.  பின் இந்த வாளிக்குள் வாந்தி எடு" சாமன்  முடித்தார்.

"வாளிக்குள் வாந்தியா?" வாய் மூடவில்லை.

"ஓம்.  பேர்ச் நடக்கும்போது உனது உடலில் உள்ள அத்தனை கெட்ட சக்திகளும், சளிகளும், குடல் பூச்சிகளும் சுத்திகரிக்கப்படும்" சாமன் தொடர்ந்தார். "கவனிக்க, இனி உனக்கும், ஊராருக்கும் சிறு தீவில் நடந்த கொடுமைகள் கனவா வராது."

"ஏன்?" வழி மறித்தேன்.  

"மம்மா சொல்வாள். அவளின் பாதி பச்சகமக்(காரர்) தான் உனது இனத்தின் ஆண் கடவுள்." ஒருவித சாந்தத்துடன் சொன்னார்.

எனக்கும் நம்பிக்கை கூடியது.  இருநூறு உணவு ஆராய்ச்சியாளர்களை இயக்குனராக மேய்க்கும் விக்டரும் கை கட்டி இருந்து மேலும் கீழும் தலையாட்டி கொண்டிருந்தார்.   .

சரியென்று வாயில் வைத்தேன்.  அம்மா தாயே என் வாழ் நாளில் அப்படி ஒரு மருந்தை பருகியதே இல்லை.  வேப்பெண்ணெய் எல்லாம் தேன் போல் இனிக்கும் ஒப்பிட்டால்.

சாமன் என்னிடம் வட அமெரிக்க விவசாய வியாபாரம், சோளம், உருளை கிழங்கு மற்றும் எப்படி இங்கா இராய்ச்சியம் 7 வருடங்களுக்கு உணவை பாதுகாத்து வைத்திருக்கும் நுணுக்கங்களை பாவித்தார்கள் என்று விளக்கினார்.  

"7 வருடமா? ஒன்டாரியோவில் 3 நாட்களுக்கு தான் உணவுண்டு!" அதிசயத்தேன்.  அடுத்த வரியை கூறு முன் பலிகடா கம்பளத்தில் சரிந்தது.

விழித்து கொண்டே இறந்தேன்!

*****************
நான் யார்? என்ன நேரம்?......

fractal_geometry.jpg

அடுத்த வரியை சொல்லு முன் சடார் என்று ஒரு கறுப்பு சூழல் சூழ்ந்தது அப்படியே கம்பளத்தில் வீழ்ந்தேன்.

கண்ணை மூடினேன்.  எனக்கு எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.  

நான் இருந்தேன் ஆனால் நான் யார் என்று தெரியவில்லை.

என்ன நேரம் தெரியவில்லை!  நான் யார்? எனது பெயர் என்ன?  கடினமாக யோசித்தேன்.  பிடிபடவில்லை.  

இங்கு நேரம் இல்லை.  உலக நேரத்தில் ஒரு நிமிடம் இங்கு பல நூறாண்டுகளாக இருக்கலாம். நான் தான் நேரம்.  நான் இல்லாவிட்டால் நேரம் இல்லை.

ஒரு கறுப்பு பிரபஞ்ச  வெளியில் நிற்கிறேன்.

வெளிச்சம் இல்லை ஆனால் எல்லாம் தெரிகிறது.

பெயர், நேரம் தெரியாத நான் மட்டும் உலாவுகிறேன்.

இறந்துவிட்டேனோ?!

எங்கே, வெளிச்ச குழாய் ஒன்று வந்து என்னை எடுத்து செல்லாதோ?

எங்கே போவது?  நான் தானே எல்லா இடமும் இருக்கிறேன்.

ஒருவித பயம் சூழ்ந்தது.

நான் யார்?

திடீரென்று முருகன் கோவில் மண்டப கூரை வட்ட தாமாரை சித்திரங்கள் சுத்த தொடங்கின.  அத்தனையும் ஊரில் இருக்கும் கோவில்களில் இருக்கும் சித்திரங்கள்.  பயம் கொஞ்சம் குறைந்தது, ஆர்வம் கூடியது.

அந்த கோவில் சித்திரங்களில் இருக்கும் இயற்கை கோண கேத்திரகணிதம் (Fractal Geometry) அப்படியே முதல் முறை எனது கண்ணுக்கு தெரிகிறது.  

ஆற்றின் சிற்றலைகளில் இருக்கும் கேந்திர கணிதம் தெரிகிறது, அதில் தெறிக்கும் சூரிய கற்றைகளில் தெரிகிறது, மர பட்டைகளின் வெடிப்பில் தெரிகிறது, அந்த மரத்தின் கொப்பில்லும் தெரிகிறது, அதன் இலைகளிலும் தெரிகிறது. எங்கும் எதிலும் ஒரு கணிதம். ஒரு திட்டம்.

முருகன் கோவில் கூரை சித்திரங்கள் திரும்பவும் தோன்றின, சுற்றி சுற்றி திடீரென்று ஒரு கறுப்பு விந்து போன்ற உருவம் வந்தது.  நான் விளக்கை பார்த்த விட்டில் பூச்சி போல் பார்த்து கொண்டிருந்தேன்.  குழப்பமாக இருந்தது.

திடீரென்று சாமனின் முகம் தோன்றி ஆறு தலைகளாகி சுற்ற தொடங்கியது. இப்போது எனக்குள் பொறி தட்டியது.  

நான் யார் என்று தெரிந்தது. உற்சாகம் கூடியது.  ஆனால் அதை முன்பு போல் உணர முடியவில்லை.  உடம்பின் சூடு கூடுவது தெரிகிறது.

fractal-20101015-221052.jpg

*********************

ஐம்புலன்களும் ஒன்றானது..... சத்தத்தை பார்த்தேன்.... மணத்தை ருசித்தேன்...

சாமனை கண்டதும் பேச முற்பட்டேன். முடியவில்லை.

அவரின் தலை கோவில் சித்திரங்கள் போல் சுற்றிக்கொண்டே இருந்தன.

சாமன் இக்காரோ மந்திரங்களை ஓதி கொண்டிருந்தார்.  

அவை என் கண் முன் அலையாக சென்று கொண்டிருந்தது. சத்தம் பார்த்தேன். எல்லாம் டொல்பி டிஜிடல் தரத்தில் தெரிந்தது. முதல் முறை கண்ணால் கேட்டேன்!

இப்போது திடீரென்று சத்த அலைக்குள் இன்னொரு அலை மிகவும் அழகான நிறங்களுடன்  வந்து கொண்டிருந்தது.  ஆனால் இந்த அலையை எனது வாயால் ருசிக்க முடிந்தது.

ஒரு குழந்தையாக மாறினேன். வெளிச்சத்தையும், சத்தத்தையும், மணத்தையும், கையால் கலைத்து விளையாடினேன்.  எல்லாம் ஒரு இராணுவ கட்டுபாட்டுடன் இயற்கை கோண கேத்திரகணித சித்தாந்தை இஞ்சி பிசகாமல் கடைப்பிடித்தன.

இது தானா பிரபஞ்ச இரகசியம்.  எங்கும் கடவுளின் துகள்கள், எதிலும் கடவுளின் துகள்கள்.

மெய்யுக்கும் பொய்யுக்கும் வித்தியாசம் தெரிந்தது.  உயிரின் உணர்ச்சியை உணர முடிந்தது.

அப்படியே முதல் முறை நம்பிக்கையுடன் பிரபஞ்ச கடலில்  மூழ்கினேன்.  

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
 ஒண்தொடி கண்ணே உள.                                                    -திருக்குறள்


****************************
இறந்துகொண்டு எனக்கே மருத்துவம் பார்த்தேன்!

ஊஊவ்வ்வ் ஆஆஅ..... ஊஊவ் ஆஆ..... ஊஊவ் ஆஆ......

திடீரென்று எனது உடலுக்குள்ளால் இரத்தம் பாய்வதை கேட்டேன்.

முதல் முறை நான் ஒரு பக்டீரியா சேப்பியன் என்று உணர்கிறேன்.

அரண்டு கண்விழித்தேன்.  சாமான் சிரித்துக்கொண்டே "உனது உடலை இப்போது உணர்கிறாய். உன் கையை உணர்"

கண்ணை மூடினேன்.  ஊஊவ்வ்வ் ஆஅ....ஊஊவ்வ் ஆஆ....

இரத்தம் முழுதாக எனது உடலுக்குள்ளால் ஓடி இடது கையில் வந்து ஒருக்கால் கையை உலுக்கி விட்டு சென்று கொண்டிருந்தது. கையும் பல டிரில்லியன் செல்கள் நிறைந்த ஒரு செயல்பாட்டு குழுவாக செயல்பட்டுக்கொண்டிருந்தது.

அப்படியே தோள்மூட்டு பக்கம் சென்றேன். விபத்தின் போது பாதுகாப்பு பட்டியால் கிழிக்கப்பட்ட சவ்வுகள் தெரிகிறது.  அவை மிகவும் வேகமாக தம்மை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தன.  சவ்வு செல்கள் வேறு இனம், வேறு கலாச்சாரம், வேறு உடல் கட்டுமானம்.

எனது ஈரல் செல் இனமும், கண் செல் இனமும் மதுவால் பாதிக்கப்பட்டு மஞ்சளாக தெரிகிறது.  அவையும் இருப்பதை வைத்து அடித்துபிடித்து தமது இனத்தை வளர்த்து வேலை செய்ய பார்க்கின்றன.  இன்றைக்கு அவர்களுக்கு பச்சையம்மா ஜெனோசைட் விடுமுறை!

செருக்கை சக்தியாக கண்டேன்.  காசை சக்தியாக கண்டேன். சத்தத்தை சக்தியாக கண்டேன். அண்டத்தை சக்தியாக கண்டேன்.

செருக்கு சக்தி என்னிடம் கூடி இருந்தது.  சகோதரங்கள் எல்லோரையும் பல்கலைக்கு அனுப்பியது, படித்து முடித்து பெரிய வேலை எடுத்தது. பள பளா வள வளா கார்.  கை நிறைய காசு.  வெயர் இஸ் தி பார்டி டுனைட் என்று அலைந்தேன்.  

கிளப்பில் இருக்கும் செருக்கு சக்தியும், மது தரும் செருக்கு சக்தியும் தெரிகிறது.  குடல், ஈரல் மதுவால் பாதிக்கப்பட்ட செல்கள் சங்கமும் மூளை  ஐ. நா. அமைப்பில் முறையிடுவது தெரிகிறது.  எனக்குள் இருக்கும் செல்கள் உலகம் தெரிகிறது.

நான் நானா?  இல்லை, 100 ட்ரில்லியன்களுக்கு மேற்பட்ட செல்கள் வாழும் ஒரு உலகத்தை, கூண்டை இயக்கும் சக்தி.  ஒவ்வொரு அந்த செல்களுக்கும் ஒரு காரணம், ஒரு உலகம்.  அவை எல்லோரும் நான் தான்.  

எப்படி 8 பில்லியன் மனித இனம் ஒரு உலகமாக சுற்றி வேலை செய்கிறதோ, அதே போல் 100 ட்ரில்லியன்களுக்கு மேற்பட்ட  செல்கள் சுற்றி எனது உலகை கவனித்துகொண்டிருந்தன.

அதிலும் பார்க்க மிக அதிசயம் என் குடலுக்குள் கண்டேன் அங்கே 200 ட்ரில்லியன்களுக்கு மேற்பட்ட உயிரினங்கள் வேலை செய்து கொண்டிருந்தன.  அவையும் குடி அன்று இல்லாத படியால் என்னவோ மிக வேகமாக வேலை செய்து கொண்டிருந்தன.  

அவற்றுள் நல்லவையும் இருந்தன.  தீயவையும் இருந்தன.  குடிப்பழக்கம், கண்டபாட்டுக்கு வெளியில் சாப்பிடுவது போன்றவை நிறைய தீய உயிரினங்களை உருவாக்கி இருந்தன.

அட... அப்ப நான் தான் இந்த 275 டிரில்லியன் உயிரினங்களுக்கு அரசன், அதிபர், சனாதிபதி, சி.இ.ஒ!  

அவர்கள் தான் இந்த உலகில் நான் உலாவ மினக்கெடும் கூடு, வாகனம், உயிர் இயந்திரம்.

மூன்று வருடத்திற்கு ஒருமுறை எல்லா செல்களும் புதுக்க பிறந்து ஒரு புது கூடாக எங்களுக்கு உழைக்கும் உயிரினங்கள்.

நாம் செத்த பின் எம்மை உக்க வைக்கும் செல்கள் வயிற்றுக்குள் தெரிந்தன.  குடியால் பாதிக்கபட்ட மனித எரிசக்தி பிறப்பிக்கும் உயிரனங்களும் தெரிகின்றன.  அவை எனது உணவை ஒழுங்காக பிரிக்காமல் கொழுப்பு வயிற்றை சுற்றி கட்டி இருப்பதும் தெரிகிறது.

திடீரென்று எழுகிறேன், சாமன் வாளியை வாயடியில் வைத்தார் சத்தி எடுத்தேன்.  இது குடித்துவிட்டு எடுக்கும் உவாக் வாந்தி போலில்லாமல் எவ்வளவோ பாரம் எனது உடலை விட்டு போவது போல் இருந்தது.  ஒருவித சுதந்திரம் அடைந்த உணர்வு.

எனது உடல் செல் நாடுகள் விடுதலை பெற்ற வெற்றி களியாட்டம் உடலில் உணர்கிறேன்.

வாந்தி எடுப்பது ஜாலி என்று  சொன்ன முதல் குடிமகனா நானா தான் இருப்பேன்.  

"தோள் நோ இனி வராது. இனி நீ கண்டபாட்டுக்கு குடிக்க முடியாது, தலையிடி வராது. குளுசைகள் போட தேவையில்லை". சாமன் சொன்னார்.

****************************

பச்சையம்மா அரவணைத்தாள்.....நீட்டு வானவில் சீலைகாரி அணைத்தாள்....

Pachamama.jpg

முப்பது நிமிடங்கள் உலக நேரத்தில் ஓடியிருந்தன.  உரு தாண்டவம் ஆட தொடங்கியிருந்தது.  என்னை சுற்றி எல்லா அலைகளும் பொங்க தொடங்கியது.  

ஒளி அலைகள் மிகவும் மந்தமாக ஆடி அசைந்து சென்றன சுற்றம் எல்லாம் இந்த பிரபஞ்சத்தின் நாத அலைகளாக தெரிந்தன.

அப்படியே நான் அவதார் பெண் போல் நிலத்துடன் சங்கமித்தேன்.

அந்த பிரதேச மலைகள், மரங்கள், ஊற்றுகள், எரிமலை படிமங்கள் எல்லாம் தெரிகிறது.  தங்க படிமங்கள், உலோக படிமங்கள் எல்லாம் உணர முடிந்தது.

எட்ட உயரத்தில் வித்தியாசமான ஒரு கழுகு சுற்றி கொண்டிருந்தது.  

இது மிகவும் பெரிய கழுகு.  மூன்று கொண்டை கொண்ட கழுகு. சுற்றுகிறது.

அது உயரத்தில் இருந்தாலும் எனது அக கண், அந்த கழுகின் கண்ணை நோக்கியது.  ஒளி தாக்கியது. பயந்தேன்.

"பயப்படாதை! அது கார்பி கழுகு.  அது தான் காற்றின் தூதுவன்.  அம்மா உனக்கு நல்ல சகுனம் காட்டுறா! சரணடை!"
சாமன் சாந்தபடுத்தினார். இக்காரோ மந்த்திரத்தை இப்போது குரலை உயற்றி பாடுகிறார்.

இப்போது கழுகை காணவில்லை ஆனால் என்னை எனது தாயார், பாட்டியார் அரவணைக்கும் சூட்டை உணர்ந்தேன்.

குழந்தையாக தாயின் கருவில் சூடான திரவத்தில் மிதக்கும் உணர்வை பெற்றேன்.  

உடல் சூடேறியது.  கண்ணால் கண்ணீர் வழிய தொடங்கியது.

"பச்சையம்மா வந்திட்டாள். சொன்ன மாதிரியே வந்திட்டாள்" சாமன் பயபக்தியுடன் குதூகலித்தார்.  இக்காரோ மந்திரங்களை பிலத்து ஓதினார்.

எனக்கு எனது உணர்ச்சியை அடக்க முடியவில்லை.  இந்த உலகமே, இந்த பிரபஞ்சமே நான் தான் என்று பச்சையம்மாவின் அரவணைப்பில் உணர்ந்தேன்.  அந்த சுகத்தில் திளைத்தேன்.

அகிலத்தை ஆழும் ஈஸ்வரியாம் அகிலாண்டேஸ்வரியை கண்டேன்...  
என் நாக பூசணியை கண்டேன்... என் மடு மாதாவை கண்டேன்....
உலகத்தை பெற்ற அம்மனை கண்டேன்....
இந்த பிரபஞ்சத்தின் பராசக்தியை கண்டேன்....
அவள் தான் அன்பு, ஆத்திரம், பொறாமை, அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி, சோகம் எல்லாம் சேர்ந்த கலவை....

அவளுடன் பேச தேவையில்லை....எல்லாவற்றையும் உணர்ந்தேன்.....

முதல் முறை எண்ட ஐய்யோவை கண்டேன்!!

*************************************************
கலா அண்ணாவை காணவில்லையாம்....

27, ஜூலை, 1983....
காலை 6 மணி.....
வயது 8...

பாயில் படுத்திருக்கிறேன். எட்டத்தில் ஆடி ஆடி மட்டை வண்டில் வந்து கொண்டிருப்பது கேட்கிறது.  அதன் சில்லு கீச்சு சத்தமும், ஒவ்வொரு பத்தடிக்கு ஒருக்கால் ஒரு குழியில் விழும் சத்தமும் பெருத்து கொண்டு வந்தது.

அம்மா பிடிச்சு மட்டை வாங்கி அடுக்கி வைக்க சொல்ல போறா என்ற படியால் நானும், சகோதரனும் எழும்புவதாக திட்டம் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு நடிக்கிறோம்.

"விக்கி... மட்டை வண்டில் வருது. 100 மட்டை பறிக்க சொல்லு" அம்மா.

"எப்பவும் எனக்கே சொல்லுங்கோ" என்று புறுபுறுத்துகொண்டு தெருவிற்கு செல்கிறேன்.  "அண்ணை..100"

பறித்த மட்டைகளை எடுத்து வைக்க சகோதரனும் சித்தப்பரும் வந்தார்கள்.  சித்தப்பர் ஆளுக்கு ஐந்து மட்டைகளை கையில் வைக்க, எடுத்து கொண்டு போய் ஆட்டு கொட்டிலுக்குள் அடுக்கினோம்.

திடீரென்று சித்தப்பருக்கு தெரிந்தவர் ஒருவர் சைக்கிளில் வீட்டு கேட்டை தள்ளி கொண்டு வந்தார்.  அவரின் முகத்தில் ஒரு பதட்டம்.  

சித்தப்பரின் காதில் எதோ சொல்ல அவரும் திகைத்தார்.

எங்களை மட்டை அடுக்க சொல்லிவிட்டு.... பக்கத்து வீட்டுக்கு சென்றார்.

எங்களுக்கு கோபம்.  இவர் என்ன நழுவிறார் என்று கலா அண்ணா வீட்டு வாசல் பக்கம் இரகசியமாக சென்று நிற்கிறேன்.

"ஆச்சியக்கா" சித்தப்பா.

"அப்பு எங்களுக்கு மட்டை இந்த முறை வேண்டாம்" ஆச்சியக்கா.

"அதில்ல அக்கா" சித்தப்பா.

"என்னப்பு?" வெளியில் வந்தார்.

"இப்ப தான் கலாவிண்ட கொழும்பில படிக்கிற பொடியன் வந்தவன்" தயங்கினார் சித்தப்பா.

"வந்து?" ஆச்சியக்காவின் முகம் மாறியது.

"கலாவை காணவில்லையாம்..." சித்தப்பர் தளும்பினார் "கடைசியாக பாக்க அவனை யட்டியோட ஓட... கலைச்சு கொண்டு போனவங்களாம்" இப்போது சித்தப்பர் விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தார்.

எனக்கு தலை விறைத்துவிட்டது.  எங்கள் தெருவின் கிரிகெட் கவாஸ்கர், பட்டங்களின் தலைவன், பத்தாம் வகுப்பு குமரிகளின் இரகசிய கனவு நாயகன், மாங்காய் வத்தல் அரசன், குழந்தை குட்டிகளை மேய்க்கும் தாதியை காணவில்லையா?

ஆச்சியக்காவின் குரலை கேட்கவில்லை... வாசலில் தோன்றினேன்.

ஆச்சியக்கா கல்லாக உறைந்து நிலத்தில் மண்டியிட்டு இருந்தார்.  என்னை கண்டவுடன் விறைத்து பார்த்தார்.

அப்படியே ஓங்கி நெஞ்சில் மாறி மாறி குத்துகிறார்.  அழவில்லை.  வெறி பிடித்த கண்களோடு ஓங்கி ஓங்கி குத்துகிறார்.

ஒவ்வொரு குத்தும் மனித நெஞ்சு தோல் பறையில் டமார் டமார் என்று விழுகிறது.

குத்திய அழுத்தமோ என்னவோ முதல் "எண்ட ஐய்யோ!" என்ற ஒலி பீறிட்டது.   

எனது ஊரின், எனது தெருவின் சாகச வாழ்கை ஒலி அன்றுடன் அடங்கியது.
********************************************************************************
எனக்கு உடல் பதற தொடங்கியிருந்தது. கண்ணால் கண்ணீர் கொட்டுகிறது. சாமான் இக்காரோ மந்திரங்களை பிலத்து ஓதி கொண்டு, மூலிகை புகையை எனது தலைக்கு ஊதினார்.  
அது மின்ட் பபிள் கம் வாய்க்குள் தரும் உணர்ச்சி போன்று தலைக்கும், மூளைக்கும் கொடுத்தது. அடங்குகிறேன். திரும்பி அந்த நாளுக்கு போன தளர்ச்சி அடங்கியது.
சாமன் இப்போது வேறு ஒரு சாந்தபடுத்தும் தேவாரத்தை பாட தொடங்கினார். நானும் எனது நினைவுகளில் இருந்து மீள முடியாத ஒளி நாடா போல் ஓடிக்கொண்டிருந்தேன்.
இப்போது அடுத்த பசுமையான நிகழ்வு வந்து எனது சகோதரத்தின் குழந்தை சத்தம் கேட்கிறது.

****************************************************************************************
"சன்னதிக்கு பக்தர்கள் போயினம்"...
************************

வீட்டு வெராந்தாவில் பாட்டி, பாட்டியின் நண்பிகள் ஊர் பூராயங்கள், தோட்ட விடயங்கள் பற்றி கதைத்துகொண்டிருந்தார்கள்.

நானும், சகோதரமும் முற்றத்தில் விளையாடிகொண்டிருந்தோம்.  தாயார் எனது குழந்தை சகோதரத்தை நித்திரைக்கு அறையில் படுத்தி, உருளாமல் இருக்க சிவர் ஓரம் படுக்க வைத்து தலையணைகளால் அணைகட்டிவிட்டு, வீட்டுக்கு பின் சம்பல் இடித்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு புதிய, பெரிய சொகுசு வண்டி மிகவும் குறைந்த வேகத்தில் எங்கள் வீட்டை தாண்டி சென்றது.  உடனே நானும் சகோதரமும் கேட் பக்கம் ஓடி கம்பிகள் ஊடாக டா டா சொன்னோம்.

வாகனத்தில் எல்லோரும் ஆண்களாக இருந்தார்கள்.  பட்டு வேட்டி, சட்டை, நெற்றி நிறைய விபூதி.   

"சன்னதிக்கு பக்தர்கள் போயினம்" பாட்டி சொன்னார்.  எல்லா பாட்டிகளும் ஓம் போட்டு, பாக்கு இடிப்பதிலும், பேச்சிலும் திரும்ப கவனத்தை செலுத்தினார்கள்.

திரும்பவும் சொகுசு வண்டி ஊர்ந்து வீட்டை தாண்டி சென்றது.  நானும் சகோதரமும் திரும்பவும் கேட்டுக்கு ஓடுகிறோம்.

"என்னடி..டிரைவருக்கு வழி தெரியாது போல" பாட்டி சொல்லி முடிக்க, வாகனம் எங்கள் வீட்டுக்கு முன் நின்றது.

திடீரெண்டு வாகனத்தின் கூரை திறந்தது மெசின் துவக்கு ஒன்று எட்டி பார்த்தது, நேராக ரோட்டுக்கு சுட்டது.  சட் சட சட....சட்..சட். சட...சட....

நாம் அரண்டோம்..."உள்ளுக்கு ஓடுங்கோ....உள்ளுக்கு ஓடுங்கோ".  நானும் சகோதரமும் பாட்டிகளும் அம்மாவும் வீட்டுக்குள் ஓடுகிறோம்.

இதை கவனித்த துவக்கு எங்களை நோக்கி திரும்பியது. சன்னங்கள் சீறுகின்றது.  கண்ணாடிகள் தெறிக்கின்றன. அப்படியே ஒரு குண்டு கதவை ஓட்டை வைத்து எனது தலைக்கு அரை அடி மேலால் உள் அறை கதவை துளைக்கிறது.   

எத்தனையோ குண்டுகள்.  ஆனால் எங்களுக்கு புகை கூண்டுக்கு கீழ் பதுங்குவது குறிகோளாக இருந்ததால் எப்படியோ தப்பித்து சேர்ந்தோம்.  

திடீரென்று குழந்தையை நினைத்த தாய், துப்பாக்கி சன்னங்கள் என்றும் பார்க்காமால் திரும்பவும் முன்னறைக்கு ஓடி சென்று, தலைக்கு மேல் அரை இஞ்ச் சுவற்றில் வெடி வாங்கி, சிமெந்து பறந்த முகத்துடன் வீறிடும் சகோதரத்தை, அள்ளி கொண்டு பாய்ந்து வந்தாள்.
அவள் எங்கள் அம்மன்.

இப்போது துவக்கு எல்லா வீடுகளுக்கும் விபூதி சந்தனம் தெளித்திருந்தது. சட் சட சட....சட்..சட். சட...சட....

மயான அமைதி.  காக்கா, குருவி கூட இல்லை.  

கதவுகள் திறந்து சத்தம்.  பின் சிங்களத்தில் ஒருத்தன் கட்டளையிட மற்றோர் எதையோ பக்கத்து வீட்டுக்கு முன்னாள் செய்தார்கள்.  சைக்கிள் பெல்கள் சில இழுத்து போடும் சத்தத்தில் கேட்டது.

"யாரோ பாவி பெத்த பிள்ளைகளை சுட்டு போட்டாங்கள்" ஒரு பாட்டி கிசு கிசுத்தார்.  எல்லோரிலும் ஒரு வெறி கலந்த சாந்த கண்கள்.  எனது சகோதரமும் அடங்கியிருந்தது.

"கெரசின் கொண்டுவாங்கடா" கத்தியது துவக்கு பிடிப்பாளன்.

ஒரு சத்தமும் இல்லை.

"இப்ப கெரசின் கொண்டுவராட்டா...வீடு புகுந்து எல்லோரையும் இந்த ஏரியாவில் சுடுவம்" அவன் பொய் சொல்லவில்லை.

திடீரென்று புகை கூண்டடியில் இருந்த மண்ணெய் கானை எடுத்து கொண்டு எனது பாட்டி வெளிக்கிட்டாள்.  அம்மா தடுத்தார்.

"சும்மா இரடி....அவங்கள் என்னை ஒண்டும் செய்ய மாட்டாங்கள். பிள்ளையள், உன்னை ஏதாவது செய்து போடுவாங்கள்" பதிலுக்கு எதிர்பாராமல் தன் வருங்காலங்களை காக்க தன்னை காணிக்கையாக்க துணிந்து சென்றாள் எனது அம்மனின் அம்மன். அவளும் ஒரு தற்கொடையாளி தான்.

நாங்கள் எல்லோரும் அழ தொடங்கியிருந்தோம்.  

"நீ புத்திசாலி மனுசி.  கேட்டடியில் வைத்துவிட்டு திரும்பி போ" துவக்கு கட்டளையிட்டது.  

இதை கேட்டவுடன் அழுகை நின்றது.  பயங்கலந்த காவல் தொடங்கியது.

சிங்களத்தில் துவக்கு கனைத்தது.  நெருப்பு சுவாலை சத்தம் கேட்டது....டயர் எரியும் வாசனை தொடர்ந்தது. டயரோடு மனித மயிர் எரியும் வாடையும் வீசுகிறது.

பக்தர்கள் நிரம்பிய வாகனம் திதியை முடித்து சென்றது.  

எங்களை வெளியே விடவில்லை.  சிறிது நேரத்தில் பல குடும்பங்கள் கூடின, எரியும் டயர்களை விலக்கி உறவுகளை தேடின.

திரும்பவும் நெஞ்சு பறையில் தமிழச்சிகள் வெறி பிடித்து பறை அடித்தார்கள்.

"எண்ட ஐய்யோ" என்று கூடி அகிலம் அதிர அழுதார்கள்.


***************************************************************
மூத்தக்காவிற்கு கை போச்சாம்....
**************************
roseappletree_15942.jpg

ஒபெரசன் லிபரேசன் என்று கேட்காமலையே எங்களை விடுவித்து சுதந்திரம் தருகிறோம் சாமி என்று கெலியில் இருந்து வெடி வைத்து, ஆட்டிலறி செல் அடித்து, எம்மை கொன்று, எம் நிலத்தை பிடித்து, எம் கல்லூரியிலேயே முகாம் அமைத்து இருந்தான் எதிரி.

வரணிக்கு ஓடும் போது வீழ்ந்த செல் சன்னம் ஒன்று காலில் பட்டு, அது சீழ் பிடித்து எனக்கு யானை கால் போல் ஒரு வீக்கம்.  அப்போது ஒரு மருத்துவரும் இல்லையென்ற படியால் பாட்டி வைத்தியப்படி காரை செடி இலையும், மஞ்சளும் அவித்து கட்டி வைத்திருந்தேன்.  

அந்த நாள் தமிழரின் வீர வரலாறில் முக்கியமான நாள்.  ஒரு தமிழன் 332 எதிரிகளை சாம்பலாக்கிய நாள்.  அந்த ஒருவன் உலக இராணுவ தற்காப்பு முறைகளை மாற்றியமைத்த நாள்.

அந்த நாள் மாமா, மாமியாரின் கல்யாண நாள்.  செல் ஓட்டை விழுந்த, கண்ணாடி இல்லாத வீடுகளுக்கு திரும்பி வந்து சில கிழமைகள் தான்.

அப்போது தான் ஓடிப்போனவர்கள் எல்லோரும் திரும்பி வந்தும் இருந்தார்கள்.  நிறைய குழந்தைகள், நாம் சிறுவர்கள் இருந்த படியால் அன்று பாயாசமும், மைக் மோகன் படமும் என்ற திட்டம்.

மணி எட்டிருக்கும்... ஒரு இருபது சுற்றத்தார் 22 இன்ச் டிவியில் மலையோரம் வீசும் காற்று பாட்டை, மோகன் கடற்கரையில் நின்று நதியாவிற்கு பாடிகொண்டிருப்பதை ரசித்து கொண்டிருந்தோம்.

டுட்.டக.டுட்.டுட்...

"அதென்ன சத்தம்?" கேட்டார் சுற்றத்தாரில் ஒருவர்.  நான் ஓடிப்போய் நிறுத்துகிறேன்.  

சித்தப்பர் வாசல் சென்று வீட்டு தென்னைகள், தோட்டங்கள் ஊடாக மைல் தூர பாடசாலை முகாமை பார்க்கிறார்.  இருபது செக்கண்ட் சென்றிருக்கும்.

"அதொண்டும் இல்லை. வெறில சும்மா சுடுவாங்கள். அப்பு படத்தை போடு" ஒரு சுற்றத்து அம்மணி ஏவினார்.  மற்றைய அம்மணிகள் தலையாட்டினர்.

நானும் பாய்ந்து சென்று தட்டிவிடுகிறேன். இப்போது மைக் மோகன் உணர்ச்சிவசபட்டு மலையோரம் வீசும் காற்று என்று இழுக்கிறார்.

படாய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்....................ஒளி பிழம்பு ஒன்று கிழம்பியது! எங்கும் வெளிச்சம்....

அந்த சத்தம் மற்றைய குண்டு சத்தம் போல் இல்லை.  சத்தத்தை உணரும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.

மேலேயிருந்த ஃபான் என் தலைக்கு மேல் விழுந்தது.  ஓட்டு கூரைகள் சரிந்தன!

சுற்றத்தார் சுதாகரித்தோம்.  எல்லோரும் எங்கள் ஓட்ட பையை(துணி,முறுக்கு, தண்ணி)எடுத்து கொண்டு ஓட தயார்.  

வெளியூரில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு ஓட திட்டம்.  அவர் வீட்டை சுற்றி பனை மரங்களும்... பெரிய கொங்கிரீட் வெராந்தா... பெரிய பங்கர்... கணிப்பில் காரணங்கள்.  

அம்மணிகள் மண்வெட்டிகளுடன் தங்க புதையல் எடுக்க பாய்ந்து கோடிகளுக்கும், இரகசிய இடங்களுக்கும் சென்று தோண்டி கொண்டிருந்தார்கள்.

வெடிகள் வெடிக்க தொடங்கியிருந்தன.  

திடீரென்று மந்திகையில் இருந்து செல்கள் எங்கள் வீடுகளை நோக்கி பறக்க தொடங்கின.  ஆச்சியக்கா வீட்டில் முதலாவது வீழ்ந்தது. பட்டகாலிலே திரும்பவும் பட்டது.

 "அம்மன் கோவிலுக்கு ஓடுங்கோ" யாரோ கத்தினார்கள்.

"அம்மன் கோவில் செல்லடி தாங்காது.  சேர்ச்சுக்கு ஓடுங்கோ" இன்னொருவர் கத்தினார்.  சேர்ச்சில் கொங்கிரீட் கூரை, ஆர்மி வந்தால் கதைக்க பாதிரியார் இருந்த துணிவு.

"நீங்களும் உங்கட நகையளும்... சேர்ச்சுக்கு ஓடுங்கடி" பாட்டன் விரட்டினார்.

சேர்ச்சுக்கு ஓடுகிறோம்.  எனக்கு ஒரு கால் யானைகாலாக்கி கிடந்ததும் தெரியாமல் இயேசுவின் வீட்டுக்கு ஓடுகிறேன்.

டமார்.....டமார்........டமார்......

முதல் இரண்டு டமாரும் இயேசுவின் வீட்டுக்குள் விழுகிறது.... அடுத்தது வெளி வாசலில் விழுகிறது.....

நான் தூக்கி வீசபட்டேன்.... அப்படியே தெருவில் கிடந்தேன்.... எல்லாம் கேட்கிறது....ஆனால் கிடந்தேன்...

திடீரெண்டு சித்தப்பர் என்னை தூக்கி தோளில் போட்டு கொண்டு குறுக்கு தெருவில் இயேசுவையும், வீட்டையும் கைவிட்டு ஓடுகிறார்.  நான் தோளில் தொங்கியபடியே இரத்தம் சொட்ட எங்களை தாண்டி ஓடுவோரை பார்க்கிறேன்.  

அடுத்த நாள் காலை எழுந்தேன்.  பலர் அந்த வீட்டில் இருந்தார்கள்.  மொத்தமா 60 பேர் என்று காலை உணவிற்கு பெண்கள் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

நான் எழுந்து என்னை சோதனை பண்ணி பார்த்தேன்.  அப்பாடா ஓட்டை ஒண்டும் இல்லை.  காலை பார்த்தேன்.  சீழ் வெடித்து ஓடி இரத்த கறை தெரிந்தது.  விண் விண் என்று முதல் இருந்த வலி இல்லை.
ஒரு செல் சன்னம் மற்ற காலை சிராய்த்து சென்று காயம். டெற்றோல் போட்டால் போச்சு.

ஓடி போய் காம்ப் அடி விடயங்களை அறியும் நோக்கில் மூத்தவர்கள் கதைக்கும் இடத்திற்கு பக்கத்தில், சின்னவர்களுடன் விளையாடுவது போல் ஒற்று கேட்டேன்.

"ஒருத்தர் தப்பவில்லையாம். முன்னூறுக்கு மேல ஆர்மி சரியாம். செய்ததது எங்கட துன்னாலை பொடியனாம்" ஒருத்தர் பெருமையா சொன்னார்.

"எப்படியோ, எங்களுக்கு தெரியாமல் செய்து போட்டாங்கள்!" ஆதங்கப்பட்டார் இன்னொருவர்.

திடீரென்று ஒருத்தர் முன் கதவை திறந்து கொண்டு வந்தார்.

"மூத்தக்காவிற்கு கை போச்சாம்"

கிளி குஞ்சு பிடிச்சாலே, அதன் தாய் தந்தையர் எவ்வளவு பாடுபடுவர் என்று உணர்த்தி பொந்துக்குள் திருப்பி விடவைப்பவர்.

ஊர் குழந்தைகளுக்கு இலவச கல்வி தந்தவர். அவர் முகத்தில் எப்பவும் ஒரு சிரிப்பும் தெய்வீக களையும் இருக்கும்.

ஊருக்கே மூத்தக்காவாக இருந்தார்.  பெண்கள் தம் பிரச்சினைகளை கொட்டி தீர்வு வாங்கி செல்லும் நீதிபதி அவர்.

ஊர் நல்ல காரியங்களில் மூத்தக்காவிற்கு முதலிடம்.  எம் பெண்கள் யாரை பற்றி ஊரில் கதைத்தாலும், மூத்தக்கா என்றால் ஒரு பயபக்தி வந்துவிடும். அவரை போற்றுவார்கள்.  அவரின் வெளிநாட்டு குழந்தைகளின் சாதனைகளை பட்டியலிடுவர்.

இந்த உலகத்திற்கு எம் அவலங்களை பறையும் ஊடகத்தினரை பெற்றவர் அவர்.  உலக நீதிமன்றுகளில் எங்களுக்காக போராடும் பேரனை பெற்றவர்.

"டேய்..விக்கி ஜம்புக்காய் வீணா போகுது. வந்து பிடுங்கி கொண்டு போ" என்று என்னை ஊரில் கேட்டவர் அவர் ஒருத்தர் தான்.  மற்றோர் வீட்டில் களவாடி தின்பதில் ஒரு இன்பம்.

நான் விளையாட்டை நிறுத்தினேன்.  தலை திரும்பவும் விறைத்தது.

கால் திரும்பவும் விண் விண் என்று வலிக்க தொடங்கியது.

வெளியே கொட்டிலில் சமைத்து கொண்டிருந்த பெண்களை நோக்கி ஓடுகிறேன்.  "மூத்தக்காவிற்கு கை போச்சாம்"

கொட்டடியில் இருந்த சந்தை சத்தம் அடங்குகிறது.  

இப்போது தகவல்காரரை சுற்றி 60 பேர்.

"எங்கட தெருவில யோகண்ணா வீட்டில தான் எங்கட ஆச்சிகள் இருக்கினம்.
இப்ப அவ அங்க தான். நல்லா ரத்தம் போயிட்டுது.  அத்தான் நல்லா பயந்து போய் இருக்கிறார்.  அக்காவை மடியில் வைச்சு அழுது கொண்டிருக்கிறார்." சொன்னார் தகவல்.

"அவ வீட்ட கொங்கிரீட் கூரை இருக்கே. எப்படி பட்டது?" அறுபதில் ஒன்று கேட்டது.

"அவ அத்தான் வேண்டாம் வேண்டாம் எண்ட, அவர் இரவும் சாப்பிடவில்லை என்று சான்ட்விச் செய்ய போனவா. குசினி பக்கமா விழுந்திட்டுது." தகவல் சொன்னவருக்கு தளுதளுத்தது.

பெண்கள் கண்கள் கலங்கி நின்றார்கள்.

பாட்டனார் மற்றும் இரு மூத்தவர்கள், தகவலுடன் திரும்பி சென்று கந்தையா அண்ணரின் வண்டிலில் மந்திகைக்கு கொண்டு செல்லும் திட்டத்துடன் வெளிக்கிட்டனர்.

"ஆனால் மெயின் ரோட்டால போகேலாது... கெலி அடிப்பான்"வந்தவர் சொன்னார்.  அம்புலன்ஸ் குழுவில் எல்லோரும் நிதானித்தார்கள்.  

"எனக்கு இங்க இருந்து உள்ளுக்கால போக தெரியும்" நான் முன் வருகிறேன்.  எனது ஜம்பு காய் தாய்க்காக துணிந்து முன் வருகிறேன்.

எல்லோரும் காலை பார்க்கிறார்கள்.  "அது ஒண்டும் பெரிசா இல்லை. டெற்றோல் போட்டால் சரி" அவர்களை திருப்தி படுத்த முயல்கிறேன்.

"சரி. நானும் இவனோட வாறன். யோகண்ணா வீட்டோட திரும்பி வாறம்" சித்தப்பர் எனக்கு உதவியாளர் ஆனார்.

குழு கிழம்பியது.  எனக்கு எங்களது கோட்டத்தில் உள்ள அத்தனை மாமமரம், நெல்லிக்காய், இளநி, அன்னாமுன்னா, கொய்யா, இலந்தை, நாவல், ஜம்புக்காய் மரங்களின் ஜி. பி. எஸ். கேந்திரங்கள் தெரியும்.  

அவற்றை எப்படி மெயின் ரோட்டில் தோன்றாமல் கள்ளமாக அணுகுவதும் என்று தெரியும்.

இப்போது கை கொடுக்கிறது.  யோகண்ணா வீடு.

"அக்கா எங்க?" சித்தப்பர் கேட்கிறார். எனக்குள் ஒருவித பதட்டம்.

வேலிகள் பாய்ந்து வரும் போது இருந்த உற்சாகம் இல்லை.  

எனது கொய்யாக்காய் களவு லோயரை பார்க்கும் துணிவு இல்லை.  

"உள்ளுக்க கட்டிலில. நல்ல இரத்தம் போயிட்டிது" சொன்னார், ஒரு ஓடமுடியாமல் கொங்கிரீட் கூரை அறைக்குள் தஞ்சம் எடுத்திருக்கும் வயோதிபர்.

நான் வாசலில் இருந்து, அறையை பிரிக்கும் சுவர் சித்திர வேலைப்பாட்டு ஓட்டைகள் ஊடாக பார்க்கிறேன்.  ஒரு துணியால் மூடி இருந்தார்.  கணவரின் தோளில் படுத்திருந்தார். இடது கை பக்கம் இரத்த கறை துணியில் தெரிகிறது.

முகத்தில் தெய்வீக களை இல்லை. இரத்தம் போன, போகும் களைப்பு மட்டும்.

அதற்கு மேல் என்னால் என் ஊர் குல தெய்வத்தை பார்க்க முடியாமல் போய் விட்டது. கண்ணில் குளம்.

சித்தப்பர் வெளியில் வருகிறார். அவரின் கண்ணிலும் குளம். அவசரமாக பனைகளின் பாதுகாப்பிற்கு திரும்புகிறோம்.

ஹெலி சூடுகள், செல் அடிகள் தொடர்ந்தன.  பங்கருக்குள் குழந்தைகள், இளம்பெண்கள், தாய் மார்.  மற்றோர் கொங்கிரீட் வெராண்டாவின் கீழ் இருந்து ஒவ்வொரு குண்டுக்கும் முருகனுக்கு அரோகரா போட்டு தேவாரம் பாடி கொண்டிருந்தார்கள்.

இரவு சூழ்ந்தது..பாட்டனார் அம்புலன்ஸ் குழு திரும்பிவந்தது. முகத்தில் சோகம், ஒரு தோல்வி.

"கந்தையா மாட்டை அவிட்டு விட்டுட்டார்...நாங்கள் வெள்ளை கொடி கட்டி இழுத்து கொண்டு போனாங்கள்.  அவங்கள் ஹெலியில இருந்து சுட்டு  ஆச்சிரமத்திற்கு பக்கத்தில மரத்திற்கு கீழ நிண்டனாங்கள்.  கந்தையாவிற்கும் முதிகில வெடிபட்டு காயம்."

"அப்ப அக்கா?" எல்லோரின் கண்களும் கேட்டன.

பாட்டனார் தலை குனிந்தார். அவரின் கன்னத்தில் நீரோடை ஓடுகிறது.

தமிழச்சிகளின் தேசிய கீதம் மீண்டும் ஒருமுறை ஒலிக்கிறது.  "எண்ட ஐய்யோ!"

**********************************************************************************
இப்போது...வானவில் சேலை கறுப்பாக மாறுகிறது.... அதில் தணல்கள் தெறிக்க தொடக்கி இருந்தன... சாமன் வேறு ஒரு இக்காரோ பாட்டு பாட தொடங்கினார்...

கறுப்பு கரும்புலி ஒன்று தோன்றி தாயை வாஞ்சையோடு அரவணைக்கிறது... சாமன்  வேறு மூலிகை போட்டு தலைக்கு புகை போட்டார்....அடங்குகிறேன்

***********************************************************************************************

இரத்த நிற சூரியகாந்தி....

red-sunflower-by-d-charvat.jpeg?w=500&h=

பிரச்சினை நேரம். ஊரில் ஒரு மில்லும் இயங்கவில்லை.  எங்களுக்கு சுவர் போட்ட கிரிக்கெட் விளையாடும், பட்டம் ஏற்றும், புறா அடித்து கறி வைத்து உண்ணும் இடமாகியது.

நாங்கள் அன்று கிரிகெட் விளையாட சென்ற மில்லை சுற்றி இளநீர் மரங்கள், மாமரங்கள், கொய்யாக்கள் இருந்தது.   கிரவுண்ட் தெரிவில் அவைகளும் காரணிகள்.

விளையாட்டு சூடு பிடிக்கிறது. திடீரென்று தமிழருக்கு சுதந்திரம் தர துடிக்கும் விமானம் தோன்றுகிறது.  முதலில் போறான் என்று கவனிக்கவில்லை.  ஆனால் வட்டம் அடிக்கும் சத்தம் கேட்டவுடன் சுதாகரிக்கிறோம்.

"பொம்பர் சுத்துறான்" ஒரு விளையாட்டு வீரன் சொன்னான்.

"மரத்திற்கு கீழ போவமே?" இன்னொருத்தன் கத்தினான்.

"வேண்டாம். அவன் பருத்தித்துறை பக்கம் சுத்துறான்" பட்ஸ்மன் கத்தினான்.  அவனுக்கு பந்தை அடித்து எங்களை அலைக்கழிக்கும் ஆசை .  

அடுத்த பந்து அவனை நோக்கி போகிறது.  அவன் தூக்கி பின்னுக்கு அடித்தான்.  அது போய் நெல் தேக்கி தொட்டிகளை தாண்டி விழுகிறது.

"டேய். நீதான் போய் அந்த பந்தை எடுக்கோணும்" கோரசாக கத்துகிறோம்.  

அப்போது விமானம் இன்னும் சுற்றி எங்களுடைய பகுதியை இலக்கு எடுத்ததை கவனித்து யாரோ கத்தினான். "டேய் மரத்திற்கு ஓடுங்கடா".

சிட்டு குருவிகள் போல் பறந்து சுவர் தாவி தென்னைகள் தாண்டி மாமரத்தின் கீழ் சேருகிறோம்.  நாம் எல்லோரும் அங்கு, பட்ஸ்மனை தவிர.  பதட்டம் அடைகிறோம்.

"டேய் மில்லுக்கு குத்துறாண்டா.... ஓடுங்கடா" நெல்லு தொட்டிகளின் பின் இருந்து பட்ஸ்மன்.

படாய்ய்ய்ங்ங்.....எல்லாம் அதிர்ந்தது. சுவருக்கு அங்கால் கொங்கிரீட் சுவாலை கிளம்பியது.

நாம் நிலத்தில் படுத்திருந்தோம்.....விமானத்தின் சத்தத்தை மட்டும் உற்று கேட்டோம்.  சத்தம் தொலைவிற்கு செல்கிறது.

"டேய்...வாடா வீட்டுக்கு போவம்" பட்ஸ்மனை அழைக்கிறோம். பதில் இல்லை.  " டேய்ய் " கோரசாக அழைக்கிறோம். வீட்டை போயிட்டானோ?

நான் மற்றோரை மரத்தின் கீழ் நிற்க சொல்லிவிட்டு நெல்லு தொட்டிகள் இருந்த பக்கம் சென்று சுவரில் ஏறினேன்.  கூரைகள் பறந்திருந்தன. சுவர் எல்லாம் அம்மை விழுந்தது போல் சன்ன காயங்கள்.  குண்டு விழுந்த இடத்தை பார்க்கிறேன்.  

கொங்கிரீட் மில் நிலத்தில் ஒரு குழி. குழியை சுற்றி இரத்த சிதறல்கள்.

இரத்த நிற சூரியகாந்தி பூ.......

எனக்கு தலை சுற்றுகிறது.  சுதாகரிக்கிறேன்.

"டேய் குமாரிண்ட அப்பாவை கூட்டிவாங்கோ" கத்திவிட்டு என்னுடைய சூரியகாந்தி பூவை நோக்கி ஓடுகிறேன்.

இரத்த துண்டங்கள்.....தலை விறைக்கிறது.

மில்லு கேட்  திறக்கும் சத்தம், பெற்றோர் உறவினர் பாய்ந்து வருகிறார்கள்.

என்னை இழுத்து கொண்டு போய் மேடையில் குமாரின் தாயோரோடு விடுகிறார்கள்.

"அண்ணை அக்கா இங்க வராதிங்கோ " ஒரு உறவு பதறுகிறது.

"ஏன்? எண்ட பிள்ளைக்கு என்ன நடந்தது? எண்ட குமார் எங்கே?" அலறுகிறாள் பாவப்பட்ட தமிழ் தாய்.   

என்னை பார்க்கிறார்.  "டேய்..எங்கேடா குமார்?" வெறியோடு அதட்டுகிறாள்.

என்னால் பேசமுடியவில்லை.  குமார் சூரியகாந்தி பூவாகிவிட்டான் என்று எப்படி சொல்வது.

"அண்ணை....இங்க வாங்கோ" நெல்லு தொட்டிக்கு பின்னால் துர்அதிட்ட சுதந்திர வெற்றியாளார் செல்கிறார்.  பெத்தவள் இன்னும் பதட்டம் அடைகிறாள்.  எனக்கு அவள் என்னத்திற்கு தயாராகிறாள்  என்று தெரியும்.

தந்தை திரும்பி வருகிறார்.  தாயை பார்க்க திராணியில்லை.  தலை தூக்கவில்லை.  வெறியோடு நிலத்தில் தனது சூரிய காந்தியை தேடுகிறார்.

தாயார் கையை பிடித்த உறவை உதறிவிட்டு தொட்டிகளுக்கு பின் ஓடினாள். ஐந்து நொடியில்லை.

"எண்ட ஐய்யோ"  


****************************************************************************
இப்போது இன்னும் நிறைய சிவப்பு தணல்கள் தெறிக்கின்றன.  நான் எழுந்திருக்க முயல்கிறேன்.  ஆனால் கறையான் புத்து பிடித்த மரக்கட்டை போல் நிலத்துடன் ஒட்டி இருக்கிறேன்.  இப்போது இக்காரோ தேவாரம் திரும்பவும் மாறுகிறது.  
இந்த முறை கொஞ்ச நேரம் எடுத்தது.  தாயே எனது மண்டைய கழட்ட விரும்பவில்லை என்று நினைக்கிறேன். திரும்பவும் அடங்குகிறேன்.

****************************************************************************

ஆர்மி வரட்டாம்.....
**************************

 

coca-cola-bottle.jpg

இரண்டு பாடசாலையை சேர்ந்த நூற்றுகணக்கான மாணவர்கள் சந்தி நடுவில் தார் தெருவில் இருக்கிறோம்.  வெய்யில் சூடு முழங்காலை பதம் பார்த்தது. புத்தகங்களை வைத்து முழங்காலை பாதுகாத்தோம்.  

அதை பார்த்த, வலிந்து சுதந்திரம் தரும் இராணுவத்தினன், மாட்டு தடியால் விளாச தொடங்கினான்.

புத்தகத்தை எடுத்துவிட்டு முழங்காலை மாற்றி மாற்றி தூக்கி வேர்த்து விறு விறுத்து இருக்கிறோம்.

இரண்டு மணிகள் கழிந்தது அதற்குள் சில மாணவர் மயங்கி விழுந்து கிடந்தனர்.  அந்த பகுதியிலேயே படிப்பிற்கு பெயர் போன பத்தாம்வகுப்பு அண்ணா எழும்பினார்.  "ஏன் எங்களை இப்படி இருத்தி வைச்சிருக்கிறீங்கள்?"

சுதந்திரம் தர வந்தவன் வேகமா வந்தான் கன்னத்தை பொத்தி ஓங்கி கொடுத்தான், அந்த மலையன்.  அண்ணர் தடங்கி விழுந்தார்.  அப்படியே தர தர என்று காம்பிற்குள் இழுத்து சென்றான்.

நாம் உறைந்தோம். முழங்கால் சூடு இப்போது ஒருத்தருக்கும் இல்லை. வேர்வை மட்டும் கூடியிருந்தது.  பயத்துடன் வாசல் படலையை பார்க்கிறோம்.  அண்ணரின் குழறல் சத்தம் கேட்கிறது.  

"டேய்....விடுங்கடா என்னடா செய்யுறீங்கள்? டேய் விடுங்கடா..... டேய் போத்தில அடிகாதை.....டே....ஐய்யோ....அம்மா"
சத்தம் அடங்குகிறது.  

எங்களுக்கு இது தான் எங்கள் எல்லோருக்கும் கதி என்று பயம்.  பிலத்து பல பொடியள் அம்மா என்று மாட்டு கன்றுகள் கூப்பிடுவது போல் ஓலம் இடுகிறார்கள்.  சுதந்திர வீரனின் சீட வீரன் துப்பாக்கி பிடியால் ஓலமிட்ட ஒரு கன்றின் மூஞ்சியில் ஓங்கி குத்துகிறான்.  
திரும்பவும் சத்தம் அடங்குகிறது.

தர தர தர சத்தம் கேட்கிறது.  அண்ணர் பாண்ட்ஸ் இல்லாமல் போட்ட வெள்ளை சேர்டுடன் மட்டும் எங்களுக்கு முன்னால் கிடக்கிறார்.  கால்களால் ரத்தம் வழிந்து ஓடுகிறது.  ஆனால் காயங்கள் இல்லை.  
இரத்தம், மூல ஊற்றின் பிறப்பு.  அங்கே ஒரு கொக்க கோலா போத்தல்.

சுதந்திர மலையன் வருகிறான்.  எங்களை விறைத்து பார்க்கிறான்.
திடீரெண்டு திரும்பி அண்ணரின் வயித்தில் ஓங்கி சப்பாத்து காலால் மித்திக்கிறான்.  மீண்டும் மீண்டும் கொலை வெறியுடன் மிதிக்கிறான்.
முனகல் மட்டும் சுதந்திரம் பெற்ற தமிழ் மாணவனிடம் இருந்து வருகிறது.

எங்களுக்கு வகுப்பெடுத்தார் சுதந்திர மலையன்.  படிப்பினை: கேள்வி கேட்க கூடாது!

ஒரு மணித்தியாலம் இருக்கும் வெறித்து பார்த்து கொண்டு இருக்கிறேன். மற்றோர் கண் மட்டும் எங்கேயோ பார்த்துகொண்டிருக்கிறது.  எங்கள் பாடசாலை அண்ணனை பார்க்கிறேன்.  

எனது ரெண்டு ரூபா கன்டோஸ் அண்ணனை பார்க்கிறேன். வாத்தி பிடிச்சு வெளியில் விட்டாலும் 'வா சிரமதானம் பண்ணுவம்' என்று கூட்டி சென்று எனக்கு சமூக சேவை சொல்லி தந்தவர்.  

அவரின் தலை மட்டும் தெரிகிறது.  அவர் சுருண்டு வயித்தை கட்டிபிடித்துகொண்டு இருக்கிறார்.  உடல் மூச்சுவிடுவது தெரிகிறது.  

இப்போது எல்லோரையும் வெளிகிடுத்துகிறார்கள். கன்றுகளின் ஓலம் கேட்டு தாய், பாட்டி படை வந்து சென்றிக்கு வெளியில் இருந்து ஒப்பாரி வைத்துகொண்டிருந்தது.  வரிசையில் வெளிகிடுகிறோம்.  

ஒவ்வொருவரா குழந்தைகளுடன் வெளிகிடுகிறார்கள்.  நான் வரிசையில் தொற்றாமல் எனது சில நண்பர்கள் சிலரோடு இழுபட்டு இழுபட்டு கடைசி மட்டும் நத்தை கூடு போல் சுருண்டிருந்த அண்ணரை பார்க்கிறோம்.  திடீரென்று கொக்குத்தடி போல் விறைத்தார்.  அடங்கினார்.  

நாங்கள் ஆளை ஆள் பார்க்கிறோம்.  வரிசையில் சேர்ந்து வெளியேறுகிறோம்.  வெளியே அண்ணரின் வீட்டு அம்மன்கள் மட்டும் முகத்தில் கலக்கத்துடன்.  நாங்கள் ஆர்மி நின்ற படியால் பேச முடியாது.  

தலையை குனிந்து அழுது கொண்டு எங்கள் வீட்டு தாய்களிடம் தஞ்சம் அடைகிறோம்.

பரபரத்து சென்றி ஆர்மியையும் பொருட்படுத்தாது தள்ளி கொண்டு சந்திக்கு ஓடுகிறார்கள் தமிழச்சிகள்.  

ஈழ தமிழரின் சுதந்திர தேசிய கீதம் திரும்பவும் ஒலிக்கிறது.

"எண்ட ஐய்யோ"

*********************************************************************************
என்னால் தாங்கமுடியவில்லை.  ஒவ்வொரு நினைவாக நான் மறந்திருந்து, கெட்ட கனவாக மட்டும் வந்த விடயங்கள் திரும்பவும் நிசத்தில் நடக்கின்றன.  
ஆனால் இந்த பிரபஞ்சத்தோடு கொங்கிரீட் சவப்பெட்டியில் கிடக்கிறேன்.  என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  கட்டாயம் எல்லா நனவும் வந்து தான் சேரவேண்டும்.  
*********************************************************************************
பிரபுவும் தலையாட்டியும்.....

இப்போது இன்னொரு நாட்டில் இருந்து எங்களுக்கு சுதந்திரம் கொடுக்க இன்னொரு கூட்டம் வந்திருந்தது.  இந்த கூட்டமும் எங்களுக்கு சுதந்திரம் தருவதில் நல்ல மும்முரம் காட்டியது.  எங்களை சுற்றி நிறைய நல்லவர்கள், வில்லங்க படுத்தி சுதந்திரம் தந்தார்கள்.

மூன்று உறவுகளை கையூட்டு கேட்டு, திருப்பி திருப்பி கொடுத்து களைத்து விட்டார்கள்.  கடைசியாக வந்த செஞ்சேனை தலைவரும் வற்புறுத்தினார்.  அவர் முகாமிற்குள் ஒரு வீட்டில் இருந்து சென்றியை கடக்கும் பொடிகளை பிடிப்பது, கையூட்டு பெறுவது என்று ஒரே அட்டகாசம்.  

அவர் தன்னை கடவுள் லெவலுக்கு பில்டப் கொடுத்து வைத்திருந்தார்.  தன் ஆணைக்கு செவி மடுக்காத மூன்று உறவுகளை மரவள்ளி தோட்டத்திற்குள் ஓடவிட்டு சுட்டார்.  பெரிய மாவீரன்.  மார்க்ஸ் இருந்திருந்தால் பெருமைபட்டிருப்பார்.  

தொழிலாள வர்க்கத்திற்கு அவரின் கட்சி(?!) எவ்வளவு சேவகம் செய்கிறது என்று பார்த்து உச்சி மோந்திருப்பார்.

ஊரை ரவுண்டப் பண்ணி யார் யார் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்று கணக்கு போட திட்டம்.  இதற்கு வல்லரசின் சுதந்திர தியாகி கொமான்டரும் உடந்தை.  மகாத்மா காந்தி இருந்திருந்தால் பாரத ரத்னா பட்டம் இவருக்கு தான்.

எல்லோரும் வரிசையில்.  செஞ்சேனை ரத்தத்தின் ரத்தம் ஒன்று தலையாட்டி முகமூடியை போட்டு கொண்டு சும்மா இல்லை இல்லை என்று தலையாட்ட எல்லோரின் பேரும், தொழிலும் குறிக்கபடுகிறது.

எங்கள் வரிசை முடிந்து ஆட்டு மந்தைகள் வீடு திரும்புகிறோம். எல்லோருக்குள்ளும் ஒரு நிம்மதி.  

அடுத்த வரிசையில் பிரபு, காது கேட்காத, வாய் பேசாத மாற்று திறனாளி.  ஆனால் மிகவும் அழகான முகத்தில் எப்போதும் ஒரு சாந்தம் குடிகொண்டிருக்கும்.  

தெருவின் வேலைகாரனாக கடைக்கு போக, சந்தைக்கு போக, மருத்துவமனைக்கு போக யார் கேட்டாலும் சைக்கிளில் வாசலில் நின்று மணி அடிப்பார்.  17 வயதிலும் அவரில் ஒரு முதிர்ச்சி.

நல்லவர்களுக்கு தான் சுதந்திரம் தேடி வந்தது.  தலையாட்டி யாருக்காவது ஒருத்தருக்கு தலையாட்டுவது தான் அந்த தமிழ் ரசியன் ருலட் விளையாட்டின் விதி.  இவரை கேள்வி கேட்க, இவர் திணற, சேகுவாராவின் புரட்சி வீரன் தலையாட்டுகிறார்.

ஊரார் அவன் செகிடன்...செகிடன் என்று கத்த உள்ளுக்கு இழுத்து செல்லபடுகிறார்.  

சில நாட்களில் கொடுமையின் கோரம் தாங்காமல் அங்கு குண்டிருக்கு, இங்க கிரனட் இருக்கு என்று வாகனத்தில் போகும்போது கொடுமை இருக்காது என்ற காரணத்தால் பொய் சொல்லுகிறான் ஊமை.

அவரின் நண்பர்கள், சுற்றத்தில் கொஞ்சம் வளர்ந்த பொடிகள், உள் தெரு சொந்தங்கள் வீட்டுக்கு அனுப்பு படுகிறார்கள்.  நானும் உள் தெருவில் பதுங்குகிறேன்.

ஒரு கிழமை கழித்து பிரபுவின் தந்தையார் வாசலில், "உன்னை வரட்டாம்"

"யார்?"

"பிரபு" தந்தை அவசரமா சொல்லுறார்.  

"நான் என்னத்திற்கு?" என்னையே காட்டிகொடுத்துவிட்டானா நண்பன்?

"அவன் என்னையும், உன்னையும் பார்க்க வேணுமாம்.  நானும் வாறன் வா." கெஞ்சுகிறார். "அவனுக்கு உன்னில நல்ல பாசம்.  தாயை கூட பார்க்க கேட்கேவில்லை"

அவனுக்கு தாயை பார்க்க திராணியில்லை என்று தெரியும்.  அவனுக்கு அவன் குடும்பமும், சொந்தங்களும் தான் சொர்க்கம்.  

போகாவிட்டால் செஞ்சேனை வீர குழு வீடு வந்துவிடும் என்ற பயம்.  பாட்டியும் பாதுகாப்பிற்கு வருவது என்று திட்டம்.

எனக்கு குலை நடுக்கம்.  சென்றியடியில் தந்தையை கண்டவுடன் ஒரு செஞ்சேனை வீரர் எங்களை கொமாண்டரிடம் அழைத்து செல்கிறார்.  தந்தையார் ஒரு மஞ்சள் முருகன் படம் போட்ட பையை கொடுக்கிறார்.

"போய்...பின்னுக்கு பாத்திட்டு உடனே போயிடனும். இரண்டு நாளில் விட்டுவிடுவம்" கொமாண்டருக்கு பக்கத்தில் நின்ற தமிழ் ஸ்டாலின் சொல்கிறார்.

அடித்துபிடித்து கொண்டு தந்தை ஒரு கிழமையாக பார்க்காத மகனை பார்க்க ஓடுகிறார்.  நான் அவருடன் ஒட்டி கொண்டே ஓடுகிறேன்.  பயம்.

வாசலுக்கு வெளியே நாங்கள்.  வாசலை பார்த்து.  சிறு நேரத்தில் தள்ளாடி கொண்டு ஒரு உருவம்.  முகத்தில் சாந்தம் இல்லை.  ஒரு களைப்பு.  ஏன் தமிழனா பிறந்தோம் என்றொரு வெறுப்பு தெரிகிறது.

தந்தையும் தனயனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள்.  நெருங்க பார்த்தவர்களை சுதந்திர துப்பாக்கி பிடிகள் தடுக்கின்றன.  நான் பிரபுவின் கைகளையே கூர்ந்து பார்க்கிறேன்.  ஊத்தை துணியால் சுத்தி இருந்தது.  ரத்த பொட்டுக்கள் தோன்றியிருந்தன.  

எனக்கு அந்த பிரபுவை பார்க்க பிடிப்பில்லை.  கைகளையே பார்த்து கண் தொடர்பை தவிர்க்கிறேன்.

"எப்படியப்பு இருக்கிறாய்?" தந்தை.

"அப்பே...எ விரல வெட்....." அழுது கொண்டே கையை தூக்குகின்றான்.  அதுதான் எங்களின் கடைசி சந்திப்பு.

முதல் முறை ஒரு தந்தை எங்கள் தேசிய கீதத்தை இசைத்தார்.

"எண்ட அப்பு, ஐய்யோ"

**************************************************************************************
நான் ஒரு கருவியாக எல்லா விடயங்களையும் கக்குகிறேன்.  அவதார் படத்தில் மரத்தின் விழுதின் ஊடாக இயற்கையுடன் பேசுவது போல்.  உணர்கிறேன்.  நான் அந்த வாழ்க்கையை திரும்பவும் வாழ்கிறேன்.  
இப்போது என் உள்ளங்காலிலும் புகை அடித்து தலை உடம்பெல்லாம் அடித்து கொண்டே பாடுகிறார் உரத்த குரலில்.  கரும்புலி தாயின் காலடியில் படுக்கிறது.
**************************************************************************************
அறிவாலயத்தை திறந்ததற்கு உன்னை போட போறாங்களாம்......
**************************************************************************************

 

chandamama.jpg

என்னதான் இறந்தாலும், செல் அடித்தாலும், சுட்டாலும், பள்ளியில் பங்கர் வெட்டி வைத்து படிக்கும் இனம் நாங்கள்.  

பெரிய தெருக்களை பாவிக்காமால் எப்பவும் உள் ஒழுங்கைகள் ஊடாக பள்ளி சென்று பின் டியூசன் சென்று வருவோம்.  

எங்களின் டியூசன் பக்கம் அறிவாலயம் ஒன்று வேற்று நாட்டு சுதந்திர வீரர்கள் வந்து அடித்து நொறுக்கி மூடி கிடந்தது.  பின்னுக்கு பல மாமரங்களும், கொய்யாக்களும் இருந்தன.  அதனால் நாங்கள் எப்போதும் டியூசனுக்கு முதல் அங்கு சென்று மேய்ந்துவிட்டு செல்வோம்.

ஒரு நாள் வீட்டுக்குள் இருந்து சத்தங்கள் கேட்க உள்ளே எட்டிப்பார்த்தால்.  அந்த பக்க நாய்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அறைகளுக்குள் புணர்ந்து கொண்டிருந்தன.   

எங்களுக்கு லொட்டரி விழுந்த சந்தோசம்.  கல்லு, தடி பொல்லுகளை தேடி ஓடுகிறோம்.  நாய்களுக்கும் எங்கள் வாசம் தெரியும்.  அவைகளும் தப்பி கூட்டமா ஓட முற்படுகின்றன.  ஒரு மணித்தியாலத்திற்கு எங்களுக்கு பம்பல் தான்.  

பின் உள்ளுக்கு சில அம்புலி மாமா புத்தகங்கள் தெரிய உள்ளடுகிறோம்.  பின் அறை ஒன்றில் பல பெட்டிகள்  பூராக ஒரே சிறுவர் புத்தகங்கள்.  அறிவாலயம் எங்களது இரகசிய வாசிகசாலையாகிறது.

டியூசனில் கதிர் என்று ஒரு மாணவன், என்னோடு கடைசி வாங்கிலில் இருப்பான்.  அவனது ஒரு தமையன் ஒரே குடியும் கூத்தும்.  வீட்டுக்காரர் பேச அவர் போய் ஒட்டுகுழுவில் சேர்ந்துவிட்டார்.   அதன் பின் கதிர் ஒரு துரோகியாக பார்க்கப்பட்டான்.

ஒருத்தரும் அவனுக்கு முன் ஒரு பிரச்சினை பற்றியும் கதைப்பதில்லை.  வாத்திமார் அவனை அடிப்பதில்லை.  எனது நண்பர்களும் சரி, மொத்த டியூசனும் சரி அவனை ஒரு பயத்தோடு பார்க்கும்.

எனக்கு கதிர் மேல் வெறுப்பு இல்லை.  தமையன் செய்யும் கொடுமைக்கு அவன் எப்படி பொறுப்பாக முடியும்.  இரகசியமாக மாங்காய் கொடுப்பேன்.  பாத்தடிக்க கையை தூக்கி பதில் காட்டுவேன்.  

சத்திய பிரமாணம் செய்த இரகசிய வாசிகர்கள் குழுக்கு தெரியாமல் அறிவாலய அம்புலி மாமாக்களையும், 007, மாயாவி புத்தகங்களையும் பகிர்ந்தேன்.  அவனுக்கும் எனக்கும் வெளியில் தெரியாத இரகசிய நட்பு.

அறிவாலய வாசகர் குழு பட பட என்று வளர்ந்தது.  நாங்கள் சுற்றத்தாரிடம் சேர்த்த புத்தகங்கள், மாங்காய், இளனி, நெல்லிகாய்க்கு பண்டமாற்று செய்த புத்தகங்கள் என்று எல்லா அறையும் பிசியாகியது.

பக்கத்து வீடுகளில் இருந்த இளைப்பாறியோரை பிடித்து இருத்தி அறிவாலயம் மீண்டும் முன் கதவு திறக்காமல் இயங்கியது.

காலையில் அறிவாலயத்திற்கு பின்னுக்கு பாசன் புருட் கொடி நட இடத்தை சுத்தம் பண்ணிகொண்டிருக்கிறேன்.  பத்தாம் வகுப்பு அக்காக்கள் சிலர் வந்து எங்களுக்கு உதவி கொண்டிருந்தார்கள்.

திடீரென்று அரக்க பரக்க கதிர் ஓடிவந்தான்.  எல்லோரும் பயத்துடன் அவன் ஏன் இங்க வந்தான் என்று பார்க்கிறார்கள்.

"உன்னோட கதைக்கோணும்" என்னை காட்டுகிறான்.

"சொல்லு" அவனை நைசா தள்ளி கொண்டு எட்ட போகிறேன்.

"எண்ட அண்ணன் நேற்று வெறியில் வீடு வந்தவன்... நீ அறிவாலயத்தை திறந்ததற்கு உன்னை போட போறாங்களாம்" கதிர் பயந்து பயந்து சொன்னான்.

என்னால் நம்ப முடியவில்லை.  அப்படி என்ன பெரிய குற்றம் செய்தேன்?

"நான் சொன்னது என்று சொல்லி போடாதை" பயத்துடன் சொன்னான் என் கர்ணன்.

எனக்கு உதறுகிறது.  அவனை அனுப்பி விட்டு.  ஓடி போய் சகோதரிகளுக்கு இனி அறிவாலயத்திற்கு விடுமுறை என்கிறேன்.  அவர்களும் விடயத்தை விளங்கி வெளிகிடுகிறார்கள்.

நான் வீடு சென்று நல்ல பிள்ளையாக இருக்கிறேன்.

மத்தியானம் மட்டும் ஒன்றும் இல்லை.  சித்திமார்,மாமிமார், அவர்களின் சுற்ற நண்பிகள், பாட்டி, பாட்டன் என்று பெரிய கூட்டம் நின்றதால் ஒரே பம்பலாக இருந்தது. வெளியே பல சைக்கிள்கள்.

திடீரென்று நாய்கள் எலார்ம் அடிக்க தொடங்கின.  வீட்டுக்குள் சந்தை சத்தம் அடங்கியது.  எல்லா காதுகளும் தெரு நடமாட்டத்தை நாய்களின் கண்கள் ஊடாக பார்க்க தொடங்கி இருந்தன.

தெருநாய்களின் கண்கள் எங்கள் வீட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தன.

இப்போது எல்லோரும் வீட்டுக்குள் வந்து கதவுகள் பூட்டப்படிருந்தன.  

எங்கள் வீட்டு நாய் மட்டும் வாசலில் மெத்தபடித்த மனிதரிலும் பார்க்க விசுவாசத்துடன் தனது வீட்டை, குடும்பத்தை காக்க சத்தம் போட்டுக்கொண்டிருந்தது.

அந்த படிக்காத சீவன், நாங்கள் எல்லாம் புத்திசாலிகளாக ஓட, வீட்டு வாசலில் படுத்து கிடந்து, விடுதலை எறிகணைகள் வீட்டின் மேல் விழும்போது காதுகள் செகிடாகி இருந்தது.  இருந்தும் வாசலில் துணிந்து நின்று குரைத்து கொண்டிருந்தது.

"புலி வந்தால் திறந்து வைத்துருப்பீங்கள்..... நாங்கள் வந்தால் பூட்டி வைச்சிருப்பீங்கள்.... கதவை திறவுங்கடி வே*களா" கடைசி வார்த்தையில் ஒட்டுக்குழு தலைவன் கதவு பூட்டலின் காரணத்தை அறியாமல் கத்துகிறான்.

ஒருத்தரும் அவனின் கட்டளையை ஏற்கவில்லை.  எனக்கு மட்டும் யாரை அவன் குறிக்கிறான் என்று தெரியும்.

நேராக வந்து எங்கள் வீட்டு கேட்டை  எட்டி மிதிக்கிறான்.  பாட்டியாரும், பாட்டனாரும் வீட்டு வாசல் கதவிற்கு வருகிறார்கள்.  அவர்களின் பின் தாயார்.  அவர்களின் பின் இளம்பெண்கள் கூட்டம். அவர்களின் பின் நான் ஒளிக்கபடுகிறேன்."இங்க ஏன் இத்தனை சைக்கிளுகள்.... புலி கூட்டம் நடக்குதோ?"

வீட்டுக்குள் புகுந்ததிற்கு காரணம் கற்பிக்கிறான். எங்கள் வீட்டு படிக்காத விசுவாசியின் பயங்கரவாதத்தை எதிர்க்க சுடுகிறான். எங்கள் காவல் தெய்வம் அடங்குகிறான்.  வீட்டுக்குள் இளம்பெண்கள் அழ தொடங்கியிருந்தனர்.  எனக்கு முடிவு தெரிகிறது.  

இன்னும் ஏழெட்டு செஞ்சேனை குழு வெறியில் உள்ளுக்கு வந்திருந்தது.  வெளியில் தெளிவாக நிலையெடுத்து பத்து பேருக்கு கிட்ட தோழர்கள் நின்றார்கள்.  

அவர்களுக்கு புலி பயத்தில் அடித்த சாராயம் தெளிந்திருக்கவேண்டும். ஆனாலும் அன்று தம்மில் ஏழு பேர் போய் சேர்ந்து ,அவர்களின் தலைவர் ஒருவருக்கு இடது கை பறக்க போவது தெரிந்திருக்கவில்லை.  பனங்காட்டுக்குள் நீதிபதிகள் பதுங்கி இருந்ததும் தெரிந்திருக்கவில்லை.

கொம்றேட் ஒருவர் மாகாத்மா காந்தியின் தளபதிக்கு நாய் சுட்ட விடயத்தை அறிவிக்கிறார்.  

"கதவை திற..." உறுக்குகிறான் ஒட்டுக்குழு தலைவன்.  

பாட்டியார் திறந்து முன் செல்கிறார். "என்னப்பு வேணும்?"

"புலியை ஒளிச்சு வைச்சுக்கொண்டு நடிக்கிறியே?" பாட்டியாரை தள்ளி விடுகிறான்.  பாட்டியார் சைக்கிள்கள் மேல் விழுகிறார்.

நான் முன்வருகிறேன்.  வாசல்படியில், தாயும் பாட்டனாரும் என் கையை பிடித்துகொண்டு நிற்கின்றார்கள்.  

"தம்பி....எல்லாம் படிக்கிற பிள்ளையள் அப்பு" ஓடிவந்து கார்ல் மார்க்சின் சீடனின் காலில் விழுகிறார்.

சாராய வாடை என் முகத்தில் வீசிகொண்டிருக்கிறது.  எனது 12 வருட தோழனை, குடும்ப காவலனை சுட்ட துவக்கு என் நெஞ்சில் தள்ளாடிகொண்டிருந்தது.

"டேய்...எங்கேடா உண்ட கிரனேட்?" போட்டுத்தள்ளுவதற்கு ஏற்பாடு செய்யும் முதல் ஸ்டாண்டர்ட் கேள்வியாக அந்தகாலகட்டத்தில் இருந்ததால் நான் பதில் சொல்லவில்லை.

தாயை பார்க்கிறேன். பாட்டனாரை பார்க்கிறேன்.  விடுதலை வசந்தம் தர அடம்பிடிப்பவனின் காலில் கிடக்கும் பாட்டியை பார்க்கிறேன்.

"அப்பு...அவன் ஆறாம் வகுப்பு படிக்கிற குழந்தையப்பு" தனது பேரனின் உயிர் மட்டும் தான் பாட்டியின் குறியாக இருக்கிறது.  தன்னை பற்றிய சிந்தனை தென்படவில்லை.

நான் அழவில்லை. அமைதியாக பார்க்கிறேன்.  முழங்கால் அடியில் எதோ சலனம்.  உற்று பார்க்கிறேன்.  எனது கைகள் பதறிகொண்டிருந்தன.  என்னால் உணர முடியவில்லை.  திரும்பவும் எனக்காக உயிரை பேரம் பேசும் பாட்டியை பார்க்கிறேன்.

"பொய் சொல்லாதையடி...வே*" எட்டி சப்பாத்து காலால் மிதிக்கிறான்.  இந்த முறை முகத்தில் பட்டு பாட்டி அப்படியே திரும்பவும் சைக்கிள்கள் மேல் விழுகிறார்.  நியூட்டனின் விதி தெரிந்ததோ இல்லையோ, விழுந்த வேகத்திலேயே திரும்பி எழும்பி வந்தாள் தமிழச்சி.

காலை இறுக்கி பிடிக்கிறாள்.  முகம் முழுக்க ரத்தம்.  பல்லுடைந்த பொக்கை  வாயோடு அழுகிறாள்.

இப்போது கேட் பக்கம் சில உருவங்கள் தோன்றின. திரும்புகிறேன்.

சாப்பிட்ட, கை கழுவாத, சட்டை போடாமல் சாரத்தில் திரு அண்ணா.  அவர் பல வாகனங்கள் வைத்து சுய உழைப்பால் வளர்ந்தவர்.  பிள்ளைகள் எல்லாம் நல்லா படித்து பெயர் பெற்றவர்கள்.  ஊரில் கை சுத்தமானவர் என்று பலரும் அவருடன் வியாபாரம் செய்தவர்கள்.

புதுசா வந்த மாவோவின் மொட்டை கடித செக் பவுன்ஸ் பண்ணியதே அவர் அங்கு தோன்றியதற்கு காரணம்.

திரு அண்ணா அங்கு நின்று என்னை பார்க்கிறார்.  இங்கிருந்து நான் பார்க்கிறேன்.  எங்களுக்குள் ஏதோவொரு சாந்தம்.  போய் சேர்வதற்கு தயாராகிறோம்.

ஆனால் திரு அண்ணா தான் என் உயிரின் காப்புறுதி என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை.

"அப்பு...அவன் படிக்கிற பிள்ளையப்பு...அவனுக்கு உதெல்லாம் தெரியாது.  அப்பு இந்தா எண்ட நகை எல்லாம் எடப்பு... அவனை ஒண்டும் செய்யாதை...படிக்கிற பிள்ளையப்பு"  சங்கிலி, தாலி, தோடுகள், காப்பை மிக வேகமாக களட்டுகிறாள்.  

எனது தாயும் நகைகளை  கழட்டி பாட்டியின் கையில் போடுகிறாள்.  பாட்டி எனது உயிருக்கு கையூட்டாக நகைகளை கொடுக்க முனைகிறாள்.

பாட்டியின் கண்ணீர், வாய் இரத்தத்துடன் சேர்ந்து நகைகளை நனைத்திருந்தது. வீட்டுக்குள்ளும், வெளியிலும் அழுகை கோரசாக வந்து கொண்டிருந்தது.

முதலாளித்துவ எதிர்பாளியின் பார்வை என்னை விட்டு இப்போது பாட்டியின் கையூட்டின் மேல் பதிகிறது.

"கொமாண்ட்டர் கூப்பிடுறான்"  வாசல் வோக்கி டோக்கி கத்தியது.

பாட்டியின் கையில் இருந்ததை பறித்து கொண்டு எனது தலையில் ஓங்கி துப்பாக்கி பிடியால் ஒரு குத்து விட்டான்.  

அவன் கண்களில் கடைசி அறிவுறுத்தல் தெரிகிறது. சரிகிறேன்.

தோழர்கள் கிழம்பினார்கள்.  அவர்களுக்கு காப்புறுதியாக திரு அண்ணா.

தூசணத்தில் ஏசிக்கொண்டு சந்தியை நோக்கி செல்கிறார்கள்.  

வீட்டுக்குள் நாம்.  

"அது திருவே நிண்டது? " பாட்டனார் கேட்டார்.

"பாவம்.  நல்லவர்.  குடும்பம் குட்டிகள்.  அண்ணி பாவம்" எல்லோரும் சொல்லி வைத்தது போல் குழுவா சிந்தித்தோம்.

நாய் எலார்ம்கள் சந்தியை சுத்தி அடித்தது.  

"ஓடுடா....வே* மேனே... சொன்னால் ஓடமாட்டியா?" சத்த வெடி வைக்கிறான் எங்கள் தமிழ் சே குவாரா.

டுட் டுட்.......................டுட். கடைசியா தலை வெடி....... டட்.

"மூதேசிகள்...சனியன்கள்" பாட்டி ரத்த கறை வாயோடு திட்டினாள்.  எனது புத்தகசாலை கனவின் பரிசாக வீங்கி மூடி கிடந்த இடது கண்ணை வருடி கொடுத்தாள்.  "நெற்றில பிள்ளைக்கு தைய்யல் போடோணும்" பல சாபங்களை புறுபுறுத்தாள்.

பனங்காட்டு நீதிமன்றை நோக்கி சாராயத்தின் துணிவில் செல்கிறார்கள் சிவப்பு மாவோயிஸ்டுகள். விதி அன்று உடன் நீதி வழங்கியது.  

நீதியடிதடி சத்தங்கள் பிலத்து கேட்க தொடங்கியிருந்தன.  நாய் எச்சரிக்கை மணிகளும் அடங்கியிருந்தன.  

பதினைந்து நிமிடங்கள் செல்லவில்லை.... திரு அண்ணாவின் குடும்பம் தெருவால் அழுது கொண்டு சந்தியை நோக்கி ஓடியது.   ஒருத்தரும் வீட்டை விட்டு வெளிவரவில்லை.

என் குடும்பத்தின் ஓலமாக இருக்கவேண்டியது அன்று திரு அண்ணாவின் குடும்பத்திடம்.

"மதியத்திற்கு வாய்க்கு சோறு போட்டவள் , இரவிற்கு வாய்க்கு அரிசி போட கூடாது" என்று ஏதோ புலம்பிக்கு கொண்டு ஓடினாள் அண்ணி.  

எல்லாரையும் தாண்டி முன்னுக்கு ஓடினாள்.

அண்ணியின் குரல் சந்தியில் இருந்து எல்லோரிலும் பார்க்க பெரிதாக கேட்கிறது.

"எண்ட ஐய்யோ"

***************************************************************************************************
இப்போது என்னால் அடக்க முடியாமல் எழுந்து சத்தி எடுக்கிறேன்.  வாளியை பிடித்தார் சாமன்.  நனவு நிழற்படங்களை கழுவிய அழுக்கு தண்ணி வெளியேறியது போல் ஒரு உணர்வு.  விக்டர் எதோ கதை குடுக்க முற்பட்டார்.
தாய் என்னை கடைசி அதி உச்ச  கெட்ட கனவை காட்ட  திருப்பி அணைக்கிறாள்.  இப்போது சூடு திரும்பவும் அதிகரிக்கிறது.  சாமானுக்கும் தெரிகிறது.  
அவரும் சாந்தபடுத்த பாடதொடங்குகிறார்.
*****************************************************************************************************

பச்சகமக்கை கொன்றுவிட்டீர்கள்.......என் பாதியை கொன்றுவிட்டீர்கள்.....
****************************************************
300px-Viracocha.jpg

எனது அறிவாலய குட்டு வெளிக்கிட்டு, பலர் குட்டி, நான் உள் தெருவொன்றில் வசித்த சித்தியாரின் வீட்டுக்கு பாட்டி பாட்டன் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க படுகிறேன்.  

சகோதரத்திற்கும் ஆபத்து என்று அவரும் என்னுடன் உள் தெரு வீட்டுக்கு அனுப்பபட்டார்.  தெரு பக்கமோ, முன் வாசல் பக்கமோ தலை வைக்க கூடாது என்று சட்டம்.

ஊருக்கு தொண்டு செய்ய போய் மூடி கிடந்த வீங்கிய கறுப்பு கண், வெடித்த நெற்றி நோ அந்த சட்டத்தை நடை முறை படுத்தியது.  

ஒரு கிழமையாக சித்தியாரின் வீட்டில் இருந்த ஒரு மரமும் விடாமல் ஏறி இறங்கி இருந்தோம்.  முக்கியமாக பிடுங்கும் காய், பழங்களை குரங்குகள் போல் பின் காணி மூலையில் இருந்த நுணா மர உச்சி கொப்பு  நிழலில்  இருந்து பாதுகாப்பாக உண்போம்.  

அதில் இருந்து இருந்து மூன்று பக்கம் இருந்த வீடுகளையும் மற்ற பக்கத்தில் இருந்த தோட்டங்கள், குளத்தை காணலாம்.

அந்த மரத்திற்கு இன்னொரு வசதி இருந்தது, அது தான் தோட்ட அண்ணாவின் குடிசை இருந்த எல்லையில் இருந்தது.  அவரது காணி முன்பக்கத்தை ஒரு சின்ன ஒழுங்கையால் தான் அடையலாம்.  

அவரின் அழகான குடிசையை சுற்றி பச்சை பசேல் என்று ஒரே பழ மரங்களும், பனைகளும், தென்னைகளும், செவ்வரத்தம் பூ, தேமா மற்றும் நந்தியாவட்டை பூ மரங்களும் வளர்ந்திருந்தன.  அவர்களின் குடிசை வாசல் மல்லிகை வராந்தா மிகவும் பெரியது.  

அவற்றின் கீழ் கோழிக்குஞ்சுகள், தாயுடன் மேய்ந்துகொண்டிருக்கும்.  பக்கத்தில் அவர்களின் சின்ன கூடை குடிசை.

அந்த மல்லிகை இரவில் பூக்கும் போது அந்த சுற்றம் எல்லாம் கம கமக்கும்.  தோட்டஅண்ணி (இருவரது பேரும் எனக்கு தெரியாது.) ஊரில் எல்லோருக்கும் அந்த மல்லிகை பதிவு வைத்து இலவசமாக கொடுப்பார்.  

அவரிடம் ஒரு ஊர் பெண்களின் பெரிய பட்டியல்  பூ, பழ, தென்னங்கன்றுகளுக்கு காவல் இருந்தது.  

தோட்ட அண்ணா ஊரில் தோட்ட வேலைகளுக்கு பெயர் போனவர். கொத்துவது, பாத்திகட்டுவது போன்ற வேலைகள் செய்து வந்தார்.

தன் காணியிலும் பின்னுக்கு சின்ன தோட்டம் வைத்து சந்தையில் விற்று வந்தார்.  அவர் தனது வருமானத்தில் சிக்கனமாக தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தாயை கவனித்து வந்தார்.

எப்போதும் காலையில் அம்மன் கோவிலுக்கு பூ எடுத்து சென்று திருநீறு பட்டையுடன் பகலவன் எழு முன் தோட்டத்திற்கு வந்துவிடுவார்.  அவரின் பேரிற்கு இந்த ஒழுக்கமும் ஒரு காரணம்.  

அவரின் பள பளக்கும் கொத்து மண்வெட்டியுடன் வந்துவிடுவார்.  அவருடன் குழுவா கொத்த வட்டாரத்தில் ஒரு சிலருக்கே தெம்பு இருந்தது.  

அந்த குடும்பம் ஊரார் வம்பிற்கு போகாமல் எப்போதும் மகிழ்ச்சியாக தம் சிறிய விவசாய உலகில் வாழ்ந்தார்கள்.

கொழுத்தும் வெய்யில் அன்று, மண் தணலா சுட்டது.  பின் பக்கம் வீட்டுக்கும், பொயிலை கொட்டிலுக்கும் இடையில் இருந்த கொய்யா மரத்தில் நானும் சகோதரமும் சல்லடை போட்டு முத்திய காயை தேடுகிறோம்.  

ஒன்று எனது ஒற்றை கண்ணுக்கு தெரிகிறது, அதை இரட்டை கண் சகோதரம் கவனித்து பாய்ந்து பிடுங்குகிறது.

திடீரென்று உள் தெரு எச்சரிக்கை மணிகள் குரைக்க, பருந்தை கண்ட தாய் கோழி போல் பாய்ந்து வந்தார் பாட்டியார்.  எங்களை தள்ளி கொண்டு பொயிலை கொட்டிலுக்குள் போகிறார்.  

பாட்டனாரும் பின் வேலியில் ஆட்டுக்கு குளை பறித்து கொண்டிருந்தவர், கொக்கதடியோடு ஓடிவருகிறார்.

எங்களை நெல் மூட்டைகளுக்கு பின்னால் பதுக்கிவிட்டு கொட்டில் வாசலை பார்த்தபடி பாட்டியார் இருக்கிறார்.  எதோ தேவாரத்தை முணுமுணுத்து கொண்டிருந்தார்.

"இந்திய ஆர்மி காரன் இப்ப டாங்கை ரோட்டில ஓடாமல் வீட்டு பின் பக்க வேலிகள் ஊடக ஓடி திரியுறாங்கள்"  குளை பறித்து முடிக்காத கோபத்தில் புறுபுறுக்கிறார்.

சில மூன்று தலை சிங்கங்கள் டாங்கியில் உறுமி கொண்டு செல்வது கேட்கிறது.  பாட்டனாரும் எத்தனை வேலிகள் பிரிக்கபடுகின்றன என்பதை எண்ணி கொண்டிருப்பது தெரிகிறது.  உறுமல் அடுத்த தெருவில் நிற்பது கேட்கிறது.

இப்போது ஒருவித இறுக்கம் எங்களை சூழ்கிறது.  தமிழருக்கு விசுவாசமாக இருக்கும் ஒரே இனம், குரல் ஓங்கி கொடுக்கிறது.  சில ட்ரக் வாகனங்களும் வந்து சுற்றத்தில் நிற்பது கேட்கிறது.

பாட்டியின் தேவாரத்தில் இப்போது நடுக்கம் தெரிகிறது.  குஞ்சை திரும்பவும் கொத்த வந்துவிட்டார்கள் என்ற பயம்.  எனக்கும் தலை திரும்பவும் விறைக்க தொடங்குகிறது.  "இண்டைக்கு தப்ப முடியாது" என்னையே திரும்பவும் தேற்ற முயற்சிக்கிறேன்.

ஆனால் குறி அன்று நானில்லை. தோட்ட அண்ணா வீட்டு ஒழுங்கையால் மகாத்மா காந்தியின் அமைதி படை எதையோ இந்தியில் கத்தி கொண்டு வர தமிழ் பேசும் ஒட்டுக்குழு அதை மொழி பெயர்த்து கத்தி கொண்டு வந்தார்.  

எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை ஆனால் விபரீதம் நடக்க போகிறது என்று உறுத்தியது.

"போன கிழமை வேண்டி கட்டினதோட அந்த குழு ஓடிட்டுது. இப்ப புதுசா யாரையோ கொண்டு வந்திட்டாங்கள். சந்தையில திருப்பியும் இலஞ்சம் கேட்டு அட்டாகசமாம்" பாட்டனார் புறுபுறுக்கிறார்.

"வெளில வாடா நாயே.  கள்ள கரண்ட் எடுக்கிறியோ?" புதுசா வந்தவர் வெருட்ட புதிய பொறி முறையுடன் வந்திருந்தார்.

தோட்ட அண்ணாவின் குரல் பெரிதாக கேட்கவில்லை.  சாந்தமான மனுசன்.  

"பொய் சொல்லாதையடா.  வர சொன்னால் வராமல் இங்க ஒளிச்சிருக்கிறியோ?" இன்னொரு பொறி முறையை பாவித்தார் புதுசா வந்த செஞ்சேனை தோழர்.

தோட்ட அண்ணி அழுவது கேட்கிறது.  பின்னுக்கு கோரசாக குழந்தைகளும், மாமியாரும் விசும்புவது கேட்கிறது.

"இந்த அப்பாவி வீட்டுக்கு ஏன் வந்தாங்கள்? கோதாரி பிடிச்சவங்கள்" பாட்டி தேவாரத்தை நிறுத்தி சபித்தார்.  அவருக்கும், எங்களுக்கும் பதில் தெரியும்.  

"பின்னுக்கு வாடா!" கட்டளையிட்டார் புதுசா வந்தவர்.

இப்போது அமைதி படை அதிகாரி எதையோ இந்தியில் சொல்ல தட தட வென்று பின் நுணா மரம் தொடக்கம் எல்லா இடமும் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.  

பின் வேலிக்கு கிட்ட வந்தபடியால் மூச்சு விடக்கூட பயத்தில் உறைந்தோம்.  பாட்டியாரும் தேவாரத்தை முணுமுணுப்பதை நிறுத்தி ஒட்டு கேட்கிறார்.

"ம்ம்ம்.. வெட்டுடா கிடங்கை" புதுசா வந்தவர் கட்டளை இட்டார்.

"தம்பி... நான் குழந்தை குட்டி காரன்" தோட்ட அண்ணா எல்லா தமிழ் தந்தையாரும் பாவித்த வசனத்தை பாவித்தார்.

"என்னட்ட தர ஒண்டும் இல்ல தம்பி.  நான் கிடந்த நகையை முந்தி இருந்தவரிட்ட கொடுத்திட்டம். என்னட்ட ஒண்டும் இல்லை தம்பி" கெஞ்சினார்.

"வெட்டுட்டா வே...மேணே" குரலை தூக்கினார் சுதந்திர படையின் பகடை.

மண்வெட்டி இறுகிய மண்ணில் விழுகிறது.

"தம்பி, இந்த மண்வெட்டி சரி வராது.  இது மொட்டையாகிடும். தொழிலுக்கு வேணும்" அவர் ஓங்கி கொத்தும் போது வேலிக்கு மேலால் பள பளக்கிறது மண்வெட்டி.  அவரது வாழ்வாதாரத்தின் முதலீடு.

"உனக்கு கேட்டதை குடுக்க வக்கில்லை. மண்வெட்டி கேட்குதோ? எனக்கு விசர் ஏத்தாதை" கொதித்தான்.  இந்தியில் எதோ கட்டளைகள் பறந்தது.

இப்போது தோட்ட அண்ணா கெஞ்சலாக "ஐயா...ஐயா... காசு இல்லை ஐயா. இருந்த காசை சந்தையில வைச்சு குடுத்திட்டன் ஐயா"

யாரோ ஒரு அமைதி படை கூலி துவக்கால் இடிக்கிறது.  "ஆஆ....ஐயா" விவசாயி அலறினார்.

"என்னங்கோ....என்னங்கோ......" அண்ணி. "அப்பா...அப்பா..." குழந்தைகள்.

"ஐயா....என்ட புருசனை ஒண்டும் செய்யாதிங்கோ"  அண்ணி ஓடிவருவது கேட்கிறது.  கூலிகள் கூவினார்கள்.

"திரும்பி போடி வே... வீட்டோட எல்லாரையும் கொழுத்திபோடுவன்!  என்னை யாரெண்டு நினைசீங்கள்" வீரம் காட்டினார் கையூட்டு பெற வந்தவர்.

அண்ணியை யாரோ குடிசைக்கு இழுத்து போவது அவரது அழுகை சத்தத்தை வைத்து தெரிகிறது.

"வெட்டுடா நாயே"  ஊருக்கு உணவு போட்டவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டது.

"தம்பி...என்னால் ஓரடிக்கு மேல வெட்ட முடியாது. ஒரே கல்லு.  தம்பி காசை எப்படியாவது தருறன் தம்பி"  தன் குடும்பத்திற்காக கெஞ்சினார் தோட்ட அண்ணா.  

"ம்ம்ம்... நீ நல்லா தருவாய்... உனக்கு குடுக்கிறதில எல்லாரும் தானா வந்து தருவினம்"  கணக்கு போட்டார் புதுசா வந்த ஆயுதமேந்திய சேவகன்.

ஒழுங்கை வாசலில் இந்தி சத்தம்.  தமிழில் புதுசா வந்தவரின் வலது கை "கொமாண்டர் வரட்டாம்"  

தோட்ட அண்ணா கலவரபட்டார்.  குடிசைக்குள் குடும்பத்தின் ஓலம்.

"ஐயா....ஐயா....சின்ன குழந்தைகள் ஐயா... என்ட குடும்பத்தை பார்க்க ஒருத்தரும் இல்லை ஐயா"  

"தம்பி...தம்பி என்னை ஒண்டும் செய்யாதை தம்பி.  நான் ஒரு சோழி சுரட்டுக்கும் போறதில்லை தம்பி"

""டேய்...கிடங்குக்க இருடா"

""தம்பி வேண்டாம்... வேண்டாம்.  என்ட குடும்பம், தோட்டம் துரவு என்று வாழுறவன்.
......தம்பி நான் ஒரு கமக்......"

டுட் டுட்... டுட்..... தலை வெடி.... டட்

அண்டம் அடங்கியது.  ஒரு சத்தம் இல்லை.  நாய், குருவி, காக்கா சத்தம் இல்லை.  மயான அமைதி.  எதோ ஒன்று உலகத்தில் இருந்து அகற்றபட்ட உணர்வு.  

நுணா மரத்திற்கு கீழ் அண்ணியின் குரல் ஓங்கியது.

"என்ட தெய்வமே!"


 "பூவார் சென்னி மன்னன்எம்
 புயங்கப் பெருமான் சிறியோமை
 ஓவா துள்ளங் கலந்துணர்வாய்
 உருக்கும் வெள்ளக் கருணையினால்
 ஆவா என்னப் பட்டன்பாய்
 ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
 போவோம் காலம் வந்ததுகாண்
 பொய்விட் டுடையான் கழல்புகவே"**


***********************************************
இப்போது எங்கும் இருந்த வர்ண நிற சோளக்காடு பொசுங்குகிறது. எனக்கு வாழ்நாளில் தெரிந்த எல்லோரும் வாடி வதங்கி கன்னம் இடிந்து சுருங்கி அப்படியே வெட்கையில் உருகினார்கள்.  

அந்த உருகிய திரவமும் வறண்டு, கருகிய வண்டல் மண் மாறி செவ்வாய்க்கிரக நிலத்தில் இருப்பது போன்ற நிலத்தில் இருக்கின்றேன்.  

எல்லாவற்றையும் அழித்துவிட்டோம்.  நான் மட்டும் அந்த சிவந்த உயிரற்ற தரையில்.  இனி வாழ்ந்து என்ன பிரயோசனம்?  எல்லாம் இருந்தும் அழித்துவிட்டோம்.  

திடீரென்று ஒரு வெள்ளை ஒளி ஒன்று தோன்றி இந்த சிவப்பு கிரகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.  எல்லாம் சரியாக வரும் என்ற ஒரு நம்பிக்கை பூவாக நெஞ்சுக்குள் மலர்ந்தது.

அப்படியே பல நினைவுகள்,காட்சிகள் ஓட தொடங்கின.  பல விடயங்களை கற்று தர தொடங்கினாள்.  எனது மூளை அவ்வளவையும் தரவேற்றம் செய்து கொண்டிருந்தது.  கிரகிக்க நேரம் தேவை.  பல வருடங்கள் தேவை.  

சாமனின் தேவாரம் திரும்பவும் கேட்க தொடங்கிறது.  ஆனால் இப்போது சத்தமாக மட்டும் கேட்கிறது.  புகை வாசமும் மூக்கால் மணக்கிறது.கண்ணை விழிக்கிறேன்! பொய்யை பார்க்கிறேன்.

***********************************************
நன்றி. வணக்கம்.
***********************************************பின்குறிப்புகள்:
***********************************************
**பூவார் சென்னி மன்னன்எம்
 புயங்கப் பெருமான் சிறியோமை
 ஓவா துள்ளங் கலந்துணர்வாய்
 உருக்கும் வெள்ளக் கருணையினால்
 ஆவா என்னப் பட்டன்பாய்
 ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
 போவோம் காலம் வந்ததுகாண்
 பொய்விட் டுடையான் கழல்புகவே."

அழகிய பூசனை மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட சடையும்

பாம்பணிந்த புஜமும் கொண்ட எங்கள் பெருமான்

சிறியோர் ஆகிய‌ எம் உள்ளத்திலே,

உணர்வுமயமாகிக் கலந்து ஓயாமல் உருக்குகின்றான்.

 

இது கண்டு அவன் ஐயோ என இரங்கி,

அவன் பெருங்கருணையினால் அவன் அன்பில் ஆட்பட்டீர்.

 

அவன் அன்பில் ஆட்பட்டவரே..

பொய் என்னும் இவ்வாழ்வு விட்டு

மெய்யாகிய எம்மிறைவன் திருவடி அடையும்

காலம் இதுவே.

அந்த‌ யாத்திரை வாருங்கள்.
***********************************************
மிக முக்கிய தகவல்: அயவாஸ்கா போதை பொருள் அல்ல.  இதை விளையாட்டாக பாவிக்க கூடாது!  

மெக்சிகோ, கொஸ்ட ரீக்கா, பேரு போன்ற நாடுகளில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் அங்கீகாரம் பெற்ற சாமனிடம் மட்டும் போகவேண்டும். பல போலி சாமன்கள் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி களவு செய்வார்கள்.

இது போதை பொருள், மது அடிமைகளுக்கு அருமருந்து. கான்சருக்கும் இதை மருந்தாக பாவிக்கிறார்கள்.  

http://en.wikipedia.org/wiki/Ayahuasca

***********************************************

சகுனம் பற்றி படிக்க பவலோ கொஎலொவின் அல்கெமிஸ்ட் படியுங்கள்.

***********************************************
DMT: The Spirit Molelcule (Documentary on Netflix)
***********************************************
அவதார் படத்தில் கமெரோன் மரத்தின் கொடியுடன் தொடர்பை ஏற்படுத்துவது போல் காட்டுகிறார்.  அந்த மரத்தின் கொடியும், ஆதிவாசிகளின் தலையில் தொங்கும் கொடியும், அயவாஸ்கா கொடி போல் இருக்கும்.  விஞ்ஞானியும் கடைசியில் பச்சையம்மாவுடன் கலப்பார்.
கமெரோன் இந்த படத்தில் நிறைய இயற்கை கேந்திர கணித தொழில் நுட்பங்களை புகுத்தியிருந்தார்.
***********************************************
Key food crops head to Arctic 'doomsday vault'
http://www.bbc.com/news/science-environment-26338709
***********************************************
The Pyramid Code : 5 Part Series (NetFlix)
***********************************************
The Secret of Nikola Tesla (The Movie)
***********************************************
Fractals The Hidden Dimension
*http://youtu.be/lmxJ1KDR_s0
***********************************************

மேலுள்ள படங்கள் யாவும் கூகிளில் தேடியவை. 

அவற்றின் உரிமை அதன் உரிமையாளர்களுக்கே சொந்தம்.
 

Share this post


Link to post
Share on other sites

புங்கையின் பெயரையும் காணவில்லை..! :o

 

மரணத்தின் நிழல் படாமல், கவிதை புனையத் தெரியாத 'நிழலியின்' பெயரையும் காணவில்லை! :D

 

ஆனால், மரணம் ' கோம்பையன் மணல்' என்ற வார்த்தைகளைக் கேட்டாலே, திரும்பிப் பார்க்காமல், பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடும்..... தமிழ் சிறியரின் பெயர் இருக்கின்றது..! :huh:

 

சரி, எனக்கும், நிழலிக்கும் இன்னும் பதினெட்டு முடியவில்லை என்பதை எண்ண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! :lol:

 

உங்கள் பதிவின் ஆரம்பம், நான் வாசித்த ஒரு நிஜமான அனுபவத்தை, உறுதி செய்கின்றது.!

 

தென்னமெரிக்காவில் பயணிக்கும் அவர், வாய்க்குள் நீரைக் குடித்து, அதன் மூலம், உடலிலுள்ள நோய்களை 'உறிஞ்சி' எடுக்கும் ஒரு மருத்துவச்சியைச் சந்திக்கிறார்.

 

பின்னர் நம்பிக்கையில்லாமல், தனது முழங்கைகளில் நிரந்தரமாகக் குடி கொண்டு விட்ட 'வலியை' குணமாக்கும் படி, நையாண்டியாக அந்த 'மருத்துவிச்சியிடம்' கூறுகிறார்! ஒரு முன்னாள் குத்துச்சண்டை வீரரான அவருக்கு, அந்த நிரந்தர வலிக்கு, உலகத்தின் எந்த மூலையிலும் 'மருந்து' கிடையாது எனப் பிரபலமான மருத்துவர்களால் கூறப்பட்டிருந்தது!

 

வாய்க்குள் சிறிது நீரை, ஒரு சிரட்டையிலிருந்து' மொண்ட 'அந்த மருத்துவிச்சி' அவரது கரங்களை 'உக்கிரமாக' முகர்ந்த பின்னர், அந்த நீரை பெரிய சத்தத்துடன் வெளியே துப்பினாள்!

 

அவரது கைகளில் இருந்த வலி மட்டுமல்ல, அவர் உடலிலிருந்த 'சகல உழைவுகளும்' அவரிடமிருந்து விடை பெற்று விட்டன!

 

இது தானா எமது கிராமங்களில், 'பார்வை' பார்ப்பது என்று கூறுவது..? :D

 

இரண்டாவது அனுபவம்... ஒரு 'அவுஸ்திரேலிய ஊடகவியலாளரின்' நேபாளத்தில் உள்ள 'ஒரு புத்த கோவிலில்' நடந்த அனுபவத்தை ஒத்திருக்கின்றது!

 

அவரது 'அதிர்வுகளும்', பிரபஞ்சத்தின் 'அதிர்வுகளும்' ஒரே மட்டத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன!

 

அந்த அனுபவத்தை அவர் விபரிக்கும் போது, அவரது அனுபவங்களும், நீங்கள் கூறும் அனுபவங்கள் போலவே உள்ளன!

 

அருமையான ஒரு பதிவு என்பதைத் தவிர, வேறு எதையும் என்னால் கூற முடியவில்லை, விவசாயி விக்!

 

ஆற , அமர.. இருந்து வாசித்து உள்வாங்க வேண்டிய பதிவு...!

 

வாசித்து ஜீரணித்த பின்னர், இன்னுமொரு முறை, விபரமாக எனது கருத்தை எழுதுகின்றேன்! :icon_idea:

 

பாலாழி மீனாளும் பான்மைத்து அருளுயிர்கள்,

மாலாழி ஆளும் அறிந்து...!                 - திருவருட்பயன்.

Share this post


Link to post
Share on other sites
விவசாயி விக், 
சத்தியமாக என்ன எழுதுவது என்று தெரியவில்லை !!
 
முதலில் நீங்கள் எதிர்கொண்ட துன்பங்கள், இன்னல்கள் வாசிக்க கண்கள் கலங்கியது. 
நான் இழந்த பள்ளி நண்பர்கள், அன்றாடம் பேசித்திரிந்த அயலவர்கள், பண்பும், பாசமும் கொண்ட  போராளிகள்...இப்படி பலபேர் என் கண் முன்னே தோன்றி மறைந்தார்கள்.  
 
உங்கள் எழுத்து திறன், மொழி ஆளுமை, கருப் பொருளை சொல்லிய விதம்.... அப்பாடா ...ஒவ்வொரு வரியும் வாசித்து உண்மையில் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறேன். 
 
பெரூவில் நீங்கள் சாமன் ஒருவர் மூலம் உணர்ந்தது "உங்களை நீங்களே அறிதல்"  என்ற உன்னத நிலை.
எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவது இல்லை. தேடுதல் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் யோகம் அது. 
எம் முன்னோர் தந்த நாடி சுத்தி, பிரணாயாமம், தியானம், மந்திர ஜெபங்கள் கூட "அயவாஸ்கா" போன்ற நிலையை அடைய உதவும்.  
 
நீங்கள் வாழ்கையில் சந்தித்த ஒவ்வொரு அனுபவத்தையும் நானும் ஆழமாய் சந்தித்து இருக்கிறேன். இலங்கையில் தமிழனாய் பிறந்த பாவத்திற்காக நாங்கள் ஒவ்வொருவரும் பட்ட அவஸ்தைகள் தான் எத்தனை, இழப்புகள் தான் எதனை. 
 
சகோதரரே,
உங்களை செம்மை படுத்தியது உங்கள் அனுபவம்,
உங்களை நேர்வழிப் படுத்தியது உங்கள் அனுபவம் 
உங்களை திடமானவனாகவும் திறமை உள்ளவனாகவும் மாற்றியதும் கூட உங்கள் அனுபவங்கள் தான்
உங்களை அமைதியானவனாகவும் இந்த அனுபவங்கள்  மாற்றி இருக்கக் கூடும்.
 
"யாழ் களத்தில் இதுவே உங்கள் கடைசிப் பதிவு" இது மட்டுமே எனக்குப் புரியவில்லை!!!
விடை தருவீர்களா?
 

Share this post


Link to post
Share on other sites

புங்கையின் பெயரையும் காணவில்லை..! :o

மரணத்தின் நிழல் படாமல், கவிதை புனையத் தெரியாத 'நிழலியின்' பெயரையும் காணவில்லை! :D

ஆனால், மரணம் ' கோம்பையன் மணல்' என்ற வார்த்தைகளைக் கேட்டாலே, திரும்பிப் பார்க்காமல், பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடும்..... தமிழ் சிறியரின் பெயர் இருக்கின்றது..! :huh:

சரி, எனக்கும், நிழலிக்கும் இன்னும் பதினெட்டு முடியவில்லை என்பதை எண்ண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! :lol:

உங்கள் பதிவின் ஆரம்பம், நான் வாசித்த ஒரு நிஜமான அனுபவத்தை, உறுதி செய்கின்றது.!

தென்னமெரிக்காவில் பயணிக்கும் அவர், வாய்க்குள் நீரைக் குடித்து, அதன் மூலம், உடலிலுள்ள நோய்களை 'உறிஞ்சி' எடுக்கும் ஒரு மருத்துவச்சியைச் சந்திக்கிறார்.

பின்னர் நம்பிக்கையில்லாமல், தனது முழங்கைகளில் நிரந்தரமாகக் குடி கொண்டு விட்ட 'வலியை' குணமாக்கும் படி, நையாண்டியாக அந்த 'மருத்துவிச்சியிடம்' கூறுகிறார்! ஒரு முன்னாள் குத்துச்சண்டை வீரரான அவருக்கு, அந்த நிரந்தர வலிக்கு, உலகத்தின் எந்த மூலையிலும் 'மருந்து' கிடையாது எனப் பிரபலமான மருத்துவர்களால் கூறப்பட்டிருந்தது!

வாய்க்குள் சிறிது நீரை, ஒரு சிரட்டையிலிருந்து' மொண்ட 'அந்த மருத்துவிச்சி' அவரது கரங்களை 'உக்கிரமாக' முகர்ந்த பின்னர், அந்த நீரை பெரிய சத்தத்துடன் வெளியே துப்பினாள்!

அவரது கைகளில் இருந்த வலி மட்டுமல்ல, அவர் உடலிலிருந்த 'சகல உழைவுகளும்' அவரிடமிருந்து விடை பெற்று விட்டன!

இது தானா எமது கிராமங்களில், 'பார்வை' பார்ப்பது என்று கூறுவது..? :D

இரண்டாவது அனுபவம்... ஒரு 'அவுஸ்திரேலிய ஊடகவியலாளரின்' நேபாளத்தில் உள்ள 'ஒரு புத்த கோவிலில்' நடந்த அனுபவத்தை ஒத்திருக்கின்றது!

அவரது 'அதிர்வுகளும்', பிரபஞ்சத்தின் 'அதிர்வுகளும்' ஒரே மட்டத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன!

அந்த அனுபவத்தை அவர் விபரிக்கும் போது, அவரது அனுபவங்களும், நீங்கள் கூறும் அனுபவங்கள் போலவே உள்ளன!

அருமையான ஒரு பதிவு என்பதைத் தவிர, வேறு எதையும் என்னால் கூற முடியவில்லை, விவசாயி விக்!

ஆற , அமர.. இருந்து வாசித்து உள்வாங்க வேண்டிய பதிவு...!

வாசித்து ஜீரணித்த பின்னர், இன்னுமொரு முறை, விபரமாக எனது கருத்தை எஉங்கள் கருத்திற்கு நன்றி அண்ணா. உங்களுடைய, நிழலி அண்ணாவின் பெயர்களை தவறியதற்கு மன்னிக்கவும். இணைத்துவிடுகிறேன்.

ழுதுகின்றேன்! :icon_idea:

பாலாழி மீனாளும் பான்மைத்து அருளுயிர்கள்,

மாலாழி ஆளும் அறிந்து...! - திருவருட்பயன்.

உங்கள் கருத்திற்கு நன்றி அண்ணா. உங்களுடைய, நிழலி அண்ணாவின் பெயர்களை தவறியதற்கு மன்னிக்கவும். இணைத்துவிடுகிறேன்.

நவீன விஞ்ஞானம் தனக்கு இலாபம் ஈட்ட பல வேலிகளை உருவாக்கி வைத்திருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

விவசாயி விக்,

சத்தியமாக என்ன எழுதுவது என்று தெரியவில்லை !!

முதலில் நீங்கள் எதிர்கொண்ட துன்பங்கள், இன்னல்கள் வாசிக்க கண்கள் கலங்கியது.

நான் இழந்த பள்ளி நண்பர்கள், அன்றாடம் பேசித்திரிந்த அயலவர்கள், பண்பும், பாசமும் கொண்ட போராளிகள்...இப்படி பலபேர் என் கண் முன்னே தோன்றி மறைந்தார்கள்.

உங்கள் எழுத்து திறன், மொழி ஆளுமை, கருப் பொருளை சொல்லிய விதம்.... அப்பாடா ...ஒவ்வொரு வரியும் வாசித்து உண்மையில் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறேன்.

பெரூவில் நீங்கள் சாமன் ஒருவர் மூலம் உணர்ந்தது "உங்களை நீங்களே அறிதல்" என்ற உன்னத நிலை.

எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவது இல்லை. தேடுதல் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் யோகம் அது.

எம் முன்னோர் தந்த நாடி சுத்தி, பிரணாயாமம், தியானம், மந்திர ஜெபங்கள் கூட "அயவாஸ்கா" போன்ற நிலையை அடைய உதவும்.

நீங்கள் வாழ்கையில் சந்தித்த ஒவ்வொரு அனுபவத்தையும் நானும் ஆழமாய் சந்தித்து இருக்கிறேன். இலங்கையில் தமிழனாய் பிறந்த பாவத்திற்காக நாங்கள் ஒவ்வொருவரும் பட்ட அவஸ்தைகள் தான் எத்தனை, இழப்புகள் தான் எதனை.

சகோதரரே,

உங்களை செம்மை படுத்தியது உங்கள் அனுபவம்,

உங்களை நேர்வழிப் படுத்தியது உங்கள் அனுபவம்

உங்களை திடமானவனாகவும் திறமை உள்ளவனாகவும் மாற்றியதும் கூட உங்கள் அனுபவங்கள் தான்

உங்களை அமைதியானவனாகவும் இந்த அனுபவங்கள் மாற்றி இருக்கக் கூடும்.

"யாழ் களத்தில் இதுவே உங்கள் கடைசிப் பதிவு" இது மட்டுமே எனக்குப் புரியவில்லை!!!

விடை தருவீர்களா?

சகோ,

பன்னிரண்டு வருடங்களின் பின் மீண்டும் அழைப்பு வந்துவிட்டது. நான் ஒரு கருவி என்பதை உணர்ந்த கருவி.

கருத்து பதிவுகளை நிறுத்தி ஆக்க பதிவுகளை கூட்ட திட்டம்.

பல திட்டங்களை நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டது.

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

Share this post


Link to post
Share on other sites

விக், இந்த ஆக்கம் உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல் உள்ளது என்பதைக் காட்டுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

 

நிங்கள் பச்சையம்மா பற்றி எழுதியதை வாசித்தபோது வந்தனா சிவா அம்மையார் நினைவிற்கு வந்தது.

vandanashiva.jpg

 

முன்னர் இயற்கைத் தானியங்கள் பற்றிச் சிறிதளவு அறிய விரும்பினேன். தற்போது அது பற்றிய சிந்தனைக்கு நேரமோ மனநிலையோ இல்லை.

http://kokopelli-semences.fr

Share this post


Link to post
Share on other sites

விக்,

நல்ல எழுத்தாற்றலுடன் நிஜங்களை நேரில் காட்டிய பதிவு.

பதிவை வாசிக்க முதலே உங்கள் கடைசி பதிவு என்று குறிப்பிட்டது நெஞ்சத்தை எங்கேயோ பிசைந்தது.

நீங்கள் மீண்டும் எழுதும் காலம் வரை காத்திருக்கிறேன் ஒரு வாசகனாய்.

Share this post


Link to post
Share on other sites

ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். நமது கற்பனைக்கு விளங்காத மூலப்பொருள் ஒன்று உண்டு என்பதை நான் நம்புகிறேன். உங்கள் பதிவில் இருந்து நான் விளங்கிக் கொண்டதும் அதுதான். உங்கள் பகிர்வில் இருந்து நீங்கள் பல படி நிலைகள் முன்னுக்குச் சென்றவர் என்பதையும் விளங்கிக் கொள்ளமுடிகிறது. இதற்கு மேல் எதையும் சொல்லத் தோன்றவில்லை.

Share this post


Link to post
Share on other sites

விக், இந்த ஆக்கம் உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல் உள்ளது என்பதைக் காட்டுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

நிங்கள் பச்சையம்மா பற்றி எழுதியதை வாசித்தபோது வந்தனா சிவா அம்மையார் நினைவிற்கு வந்தது.

vandanashiva.jpg

முன்னர் இயற்கைத் தானியங்கள் பற்றிச் சிறிதளவு அறிய விரும்பினேன். தற்போது அது பற்றிய சிந்தனைக்கு நேரமோ மனநிலையோ இல்லை.

http://kokopelli-semences.fr

ஊக்கத்திற்கு நன்றி அண்ணா.

வந்தனா சிவா, நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் எனது இயற்கை விவசாய ஆசான்கள்.

நீங்கள் ஒரு இயற்கை விதை வகையை சேகரித்தாலே கோடி புண்ணியம்.

மற்றும் அடுத்த பத்து வருடங்களில் இரசாயன விவசாயம் பொய்க்கும் போது விலை மதிப்பற்ற பொருளாக இயற்கை விதைகள் மாறும்.

விக்,

நல்ல எழுத்தாற்றலுடன் நிஜங்களை நேரில் காட்டிய பதிவு.

பதிவை வாசிக்க முதலே உங்கள் கடைசி பதிவு என்று குறிப்பிட்டது நெஞ்சத்தை எங்கேயோ பிசைந்தது.

நீங்கள் மீண்டும் எழுதும் காலம் வரை காத்திருக்கிறேன் ஒரு வாசகனாய்.

நன்றி அண்ணா.

நான் கருத்து பதிவுகளை மட்டுமே நிறுத்துகிறேன். முதல் ஆக்க பதிவாக, நீங்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க இயற்கை விவசாயம் பற்றி எழுதி வருகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

நான் அயபாஸ்க பற்றி அறிந்ததில்லை.. ஆனால் உங்கள் விபரிப்பில் இருந்து அயபஸ்காபும் கள்ளு கஞ்சா அபின் போன்ற போதையூட்டும் பொருட்களைப்போல் மூலிகைகளால் தயாரிக்கப்படும் போதையூட்டும் ஒரு குடிபானம் என்று தெரிகிறது.. சாதாரணமாக ஆழ் துயில் நிலையில் மனித மனத்தின் அடி மனதில் ஆழமாகப் பதிந்துள்ள காயங்கள்,நினைவுகள்,சம்பவங்கள் வெளிப்படுவது போலவே ஆழ்ந்த போதை நிலையில் உங்களுக்கு அடி மனதில் ஆழமாகப் பதிந்திருந்த காயங்கள் வெளிப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்..அத்துடன் ஓசை நயத்துடன் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் பாடல்கள் மற்றும் இசைக்கு ஏற்ப எமது நாட்டில் கலை வந்து ஆடுவது போன்றதுமே அந்த கிராமத்தவரின் மந்திரச்சொற்களில் உங்களுக்கு ஏற்பட்டது இதை தவிர அறிவியல் ரீதியாக எந்தப் பெறுமதியும் இருக்குமென்று நான் நம்பவில்லை...உங்களுக்கு ஏற்பட்ட காயங்களைப்போல் ஆகக்குறைந்தது ஒன்றாவது ஒவ்வொரு ஈழத்தமிழ்க் குடும்பத்திற்கும் ஏற்பட்டிருக்கும் அல்லது கண்டிருப்பார்கள்..

இப்படிப்பட்ட கிராம மக்களின் எளிமையான வாழ்க்கையும் நம்பிக்கை தரும் பழக்க வழக்கம்களும் இயற்கையுடன் இசைந்து வாழும் வாழ்க்கையும் தரும் நிறைவையையும் நிம்மதியும் நாம் வாழும் இந்த நவீன வாழ்க்கையும் பழக்க வழக்கம்களும் ஒரு போதும் தருவதில்லை இயற்கையுடன் இசைந்து வாழ துடிக்கும் உங்கள் வேட்கையும் தேடலும் போற்றுதலுக்குரியது... சம்பவங்களை விபரித்த உங்கள் எழுத்து நடை அருமை... வாழ்த்துக்கள் விவசாயி விக் அண்ணா

Share this post


Link to post
Share on other sites

ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். நமது கற்பனைக்கு விளங்காத மூலப்பொருள் ஒன்று உண்டு என்பதை நான் நம்புகிறேன். உங்கள் பதிவில் இருந்து நான் விளங்கிக் கொண்டதும் அதுதான். உங்கள் பகிர்வில் இருந்து நீங்கள் பல படி நிலைகள் முன்னுக்குச் சென்றவர் என்பதையும் விளங்கிக் கொள்ளமுடிகிறது. இதற்கு மேல் எதையும் சொல்லத் தோன்றவில்லை.

நீங்களும் தமிழ் சிறி அண்ணாவும் தான் இந்த கருத்தை எழுத காரணம்.

என்னை கேட்டால், நான் பல படிகள் கீழே இறங்கிவிட்டேன். நானும் ஒரு நடமாடும் கருங்கல்லு தான்.

எங்கள் உடல் செல்கள் உயிரின் நம்பிக்கையில் இயங்குகிறது.

உங்களுக்கு மெய்யை காட்டமுடியும் ஆனால் எல்லோராலும் கிரகிக்க முடியாது. குழந்தையா மாறி அழுவார்கள்.

ஊக்கத்திற்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

நான் அயபாஸ்க பற்றி அறிந்ததில்லை.. ஆனால் உங்கள் விபரிப்பில் இருந்து அயபஸ்காபும் கள்ளு கஞ்சா அபின் போன்ற போதையூட்டும் பொருட்களைப்போல் மூலிகைகளால் தயாரிக்கப்படும் போதையூட்டும் ஒரு குடிபானம் என்று தெரிகிறது.. சாதாரணமாக ஆழ் துயில் நிலையில் மனித மனத்தின் அடி மனதில் ஆழமாகப் பதிந்துள்ள காயங்கள்,நினைவுகள்,சம்பவங்கள் வெளிப்படுவது போலவே ஆழ்ந்த போதை நிலையில் உங்களுக்கு அடி மனதில் ஆழமாகப் பதிந்திருந்த காயங்கள் வெளிப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்..அத்துடன் ஓசை நயத்துடன் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் பாடல்கள் மற்றும் இசைக்கு ஏற்ப எமது நாட்டில் கலை வந்து ஆடுவது போன்றதுமே அந்த கிராமத்தவரின் மந்திரச்சொற்களில் உங்களுக்கு ஏற்பட்டது இதை தவிர அறிவியல் ரீதியாக எந்தப் பெறுமதியும் இருக்குமென்று நான் நம்பவில்லை...உங்களுக்கு ஏற்பட்ட காயங்களைப்போல் ஆகக்குறைந்தது ஒன்றாவது ஒவ்வொரு ஈழத்தமிழ்க் குடும்பத்திற்கும் ஏற்பட்டிருக்கும் அல்லது கண்டிருப்பார்கள்..

இப்படிப்பட்ட கிராம மக்களின் எளிமையான வாழ்க்கையும் நம்பிக்கை தரும் பழக்க வழக்கம்களும் இயற்கையுடன் இசைந்து வாழும் வாழ்க்கையும் தரும் நிறைவையையும் நிம்மதியும் நாம் வாழும் இந்த நவீன வாழ்க்கையும் பழக்க வழக்கம்களும் ஒரு போதும் தருவதில்லை இயற்கையுடன் இசைந்து வாழ துடிக்கும் உங்கள் வேட்கையும் தேடலும் போற்றுதலுக்குரியது... சம்பவங்களை விபரித்த உங்கள் எழுத்து நடை அருமை... வாழ்த்துக்கள் விவசாயி விக் அண்ணா

நம்புங்கள் சுபேஸ், இது கள்ளு, கஞ்சா விளையாட்டில்லை. இப்படி நினைத்து போய் வாங்கி கட்டியவர்கள் பலர். அது தான் பின் குறிப்பில் எச்சரிக்கை போட்டிருக்கிறேன்.

அயபாஸ்கா மட்டுமே பைனியல் சுரப்பியை திறந்து டி.எம்.ரி யை வெளியேற்றும்.

மற்றும் ஹெரோயின், கிராக், மெத் போன்ற வலிய போதைபொருள் அடிமைகளுக்கு இது மருந்து.

திரும்பவும் கூறுகிறேன், இது போதை பொருள் அல்ல. விளையாட்டா போய் வேண்டி கட்ட வேண்டாம்.

ஊக்கத்திற்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

 மிக அருமையான பதிவு.ஆன்மீக அனுபவத்தின் ஆவணப்படுத்தலாகவும்,
எமது விடுதலைப்போராட்டவாழ்வு நிகழ்வுகள்,அனுபவங்களின்
ஆவணப்படுத்தலாகவும் அமைகிறது.மிகுந்த பயனுள்ள செயற்பாடு.

Share this post


Link to post
Share on other sites

நிகழ்வுகளின் அனுபவங்களை வாசிப்பவர்களுக்கும் தொற்ற வைக்கும் எழுத்து நடையும் மொழிப் பிரவாகமுமாக உங்கள் பதிவு அருமையாக இருக்கின்றது.   'என்ட ஐயோ' என்று எல்லா அவல நிகழ்வுகளின் இறுதியிலும் கதற வைத்து எம் அனைவரினது அனுபவங்களுக்கும் ஒரு முடிச்சினை போட்டுள்ளீர்கள். 

 

ஒரு பதிவாக மிகவும் கனதியாக இருக்கின்றது. அதே நேரத்தில் சுபேஸ் குறிப்பிட்டவாறுதான் அயபாஸ்க வின் அனுபவங்கள் போதைப் பொருள் பாவித்து வரும் அனுபவங்கள் போன்றே  இருக்கின்றது. இது உங்கள் முன்னைய அவல நிகழ்வுகளின் சாரத்தினைம் அது தரும் வேதனைகளை உங்களிள் இருந்து இம்மியளவும் இறக்கி வைக்க வில்லை. அப்படி உங்களிருந்து இறக்கி வைத்து இருந்தால், அந்த அவலங்களை இந்தளவுக்கு கனதியாக உங்களால் சொல்ல முடிந்து இருக்காது.

Share this post


Link to post
Share on other sites
விவசாயி,
நீங்கள் ஒரு கைதேர்ந்த எழுத்தாளனாக உங்கள் பதிவை எழுதியுள்ளீர்கள். நீங்கள் அனுபவித்த அத்தனையும் நானே அத்தனையிடங்களிலும் அனுபவித்து இரத்தமும் காயமும் கண்ணீருமாய் கடந்து வந்த காலத்தை அப்படியே பிரதியிட்டது போல உணர்கிறேன். ஒரு கட்டத்தில் கண்ணீரோடுதான் வாசித்து முடித்தேன். ஒரு எழுத்தின் வெற்றியென்பது இதுதான். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். உங்கள் எழுத்துக்கள் பல்லாயிரம் பேருக்கான வழிகாட்டியாக அமையும். 
 
ஏனோ பல்வகையான பழைய நினைவுகள் அந்த நாள் இறப்புகள் இழப்புகள் பிரிவுகள் என அண்மைய வாரங்களை ஆக்கிரமித்துக் கொண்டு அலைக்கிறது. மனம் அமைதியை தொலைத்து துயரங்களால் தோய்கிறது. இந்த மன அலைவு அண்மையில் எதையும் எழுதவோ வாசிக்கவோ முடியாது ஏதோவொரு பாரத்தை தரும் நாட்களாக கழிகிறது. அந்த மன அலைவை உங்கள் எழுத்தில் வாசித்து அதனோடு பயணித்துக் கொள்ளும் உணர்வோடு இக்கருத்தை எழுதுகிறேன். 
 
தனக்கென்று வாழாத பலரை தந்தது எங்கள் வாழ்வும் வரலாறும் அதுபோன்றொருவர் நீங்கள் நீங்கள் நலமோடும் மன அமைதியோடும் உங்கள் பணிகளைச் செய்து இன்னும் பலரை வாழ வைக்கும் தைரியத்தை நீங்கள் பெறுவீர்கள். பாராட்டு என்று சொல்லி ஒரு அற்புதம் மிக்க படைப்பை புறந்தள்ள முடியாத படைப்பை படைத்துள்ளீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

எமது தேன்சிட்டு ஆயுர்வேத நிலத்தின் உருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆயுர்தேவ வைத்தியம் கற்று எமது ஆயுர்வேத நிலத்தை கொண்டு நடாத்தவென ஒருவரை படிப்பித்துள்ளேன். அந்த இளைஞர் வருமுன் காப்போம் என எழுதி ஆயுர்வேத பயிர்களால் தயாரிக்கப்பட்ட கோப்பி போன்றதொரு வடிவில் செய்து எனக்கு ஒரு கிலோ மூலிகை கோப்பி தூள் அனுப்பியுள்ளார்.

 

அது கசப்பு என்பதனால் வாயில் வைத்தும் பார்க்காமல் வைத்திருக்கிறேன். தினமும் அதை குடியுங்கொ அக்கா கொலஸ்ரோல் உட்பட்ட பல நோய்களை தடுக்கும் மூலிகைகளால் கையால் இடித்து தயாரித்து அனுப்பியுள்ள அந்த ஆயுள்வேத வைத்தியனின் மருத்துவத்தை இதனை வாசித்த பின்னர் நானும் குடிப்பதென முடிவெடுத்துள்ளேன்.

 

இன்றும் அதனை குடியுங்கோ என சொல்லிவிட்டே விடைபெற்றான். நாளையிலிருந்து தினமும் ஒருதடவை மூலிகை கோப்பி குடிக்கப்போறன்.
 
பி. கு :- வித்தியாசமாக யாரும் மூலிகை கோப்பியை கனவு காணப்படாது சொல்லீட்டன். யாருக்கும் பரீட்சித்து பார்க்கவெனில் கொஞ்சம் தரலாம். பலர் இந்த கோப்பியால் பயனடைந்துள்ளார்கள். இனி நானும் பயனடையப்போகிறேன்.
 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

பலகாலமாக மறந்துபோய்விட்ட சிறுவயதில் கேள்விப்பட்ட விடயங்களை மீளவும் கண்முன்னே கொண்டுவந்தது விவசாயியின் விபரிப்பு. சம்பவங்களைக் கோர்வையாக எழுதிய விதம் அவை என்றுமே மறக்கமுடியாமல் தொடர்ந்து உங்களுடன் வாழ்பவை என்று உணரக்கூடியதாக உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
எழுத்து அருமை. அதவிட அருமை அதை பின் நின்று இயக்கும் அறிவு.
 
கணனி பாவனையை இன்றோடு கைவிடுகிறேன் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால் யாழில் எழுதுவதைக் கைவிடுகிறேன் என்பது ஞாயம்.
 
2 வருடத்தில் 5000 பதிவுகள் போட்டுள்ளீர்கள்.( நான் 6 வருடங்களில் 2000 பதிவி மாத்திரமே.) நிச்சியமாக களைப்படைய வைக்கும். பதிவுகளின் எண்ணிக்கையை குறைத்து இணைந்திருங்கள் விக்.
 
 
 
கடையவன் எனைக் கருணையினால்
கலந்தாண்டு கொண்ட விடையவனே
விட்டிடுதி கண்டாய்
விறள் வேங்கையின் தோல் உடையவனே
மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே
 
சடையவனே,
தளர்ந்தேன் எம்பிரானே
என்னைத்,
தாங்கிக் கொள்ளே !
 
( - நீத்தல் விண்ணப்பம், மாணிக்கவாசகர்)

Share this post


Link to post
Share on other sites

 

எமது தேன்சிட்டு ஆயுர்வேத நிலத்தின் உருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆயுர்தேவ வைத்தியம் கற்று எமது ஆயுர்வேத நிலத்தை கொண்டு நடாத்தவென ஒருவரை படிப்பித்துள்ளேன். அந்த இளைஞர் வருமுன் காப்போம் என எழுதி ஆயுர்வேத பயிர்களால் தயாரிக்கப்பட்ட கோப்பி போன்றதொரு வடிவில் செய்து எனக்கு ஒரு கிலோ மூலிகை கோப்பி தூள் அனுப்பியுள்ளார்.

 

அது கசப்பு என்பதனால் வாயில் வைத்தும் பார்க்காமல் வைத்திருக்கிறேன். தினமும் அதை குடியுங்கொ அக்கா கொலஸ்ரோல் உட்பட்ட பல நோய்களை தடுக்கும் மூலிகைகளால் கையால் இடித்து தயாரித்து அனுப்பியுள்ள அந்த ஆயுள்வேத வைத்தியனின் மருத்துவத்தை இதனை வாசித்த பின்னர் நானும் குடிப்பதென முடிவெடுத்துள்ளேன்.

 

இன்றும் அதனை குடியுங்கோ என சொல்லிவிட்டே விடைபெற்றான். நாளையிலிருந்து தினமும் ஒருதடவை மூலிகை கோப்பி குடிக்கப்போறன்.
 
பி. கு :- வித்தியாசமாக யாரும் மூலிகை கோப்பியை கனவு காணப்படாது சொல்லீட்டன். யாருக்கும் பரீட்சித்து பார்க்கவெனில் கொஞ்சம் தரலாம். பலர் இந்த கோப்பியால் பயனடைந்துள்ளார்கள். இனி நானும் பயனடையப்போகிறேன்.

 

 

அந்த கோப்பியில் என்ன மூலிகைகள் கலந்திருக்கின்றன என்று கூற முடியுமா? நன்றி...

 

நான் கருத்து பதிவுகளை மட்டுமே நிறுத்துகிறேன். முதல் ஆக்க பதிவாக, நீங்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க இயற்கை விவசாயம் பற்றி எழுதி வருகிறேன்.

இது மிக நல்ல முடிவு...நான் பயந்தேன் நீங்கள் யாழை விட்டே போகிறீர்களோ என்று....

 

 

நீங்க மேலே கூறிய அனுபவத்தை பார்த்தால்...எல்லாமே எனக்கும் சரியாக பொருந்தும் (இருவருக்கும் சம அளவான வயதும் கூட..இருவரும் ஒரு மூன்று மைல் தள்ளியே இருந்தும் இருக்கிறோம்)..ஆனால் எனக்கு அவை உறைக்கவில்லை என்று நினைக்கும் பொது வெட்கமாகவும் இருக்கிறது......

Share this post


Link to post
Share on other sites

விவசாயி விக், உங்கள் தேடல்.... பரந்து விரிந்தது என்பதை...
ஈழப் போரின் போதும், அதற்குப் பின்... ஏற்பட்ட வெளிநாட்டு தொழில் சம்பந்தப் பட்டும் எழுதிய இந்த நீண்ட பதிவை வாசித்த பின் புரிந்து.

 

மரணத்தையும், மரபணு விதை பயிர்ச் செய்கையையும் ("எண்ட ஐய்யோ").... ஒப்பிட்ட விதம் பிடித்தது.

 

கட்டுரை வாசித்த பின், மனது கனத்துப் போயிருந்தது உண்மை.

Share this post


Link to post
Share on other sites

LaPaz+180.JPG

64687.jpg

 

பொலிவியன் மக்களின் மொழியில், தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பது, ஆச்சரியமூட்டும்  செய்தி.
 

Share this post


Link to post
Share on other sites

மிக அருமையான பதிவு.ஆன்மீக அனுபவத்தின் ஆவணப்படுத்தலாகவும்,

எமது விடுதலைப்போராட்டவாழ்வு நிகழ்வுகள்,அனுபவங்களின்

ஆவணப்படுத்தலாகவும் அமைகிறது.மிகுந்த பயனுள்ள செயற்பாடு.

ஊக்கத்திற்கு நன்றி மகம்.

Share this post


Link to post