Jump to content

பண்டைய நாகரிகங்கள் - தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 42

ரோம சாம்ராஜ்ஜியம் – மதமும் மனிதர்களும்

எஸ்.எல்.வி. மூர்த்தி

dreamstime_1529475-300x200.jpg

மத நம்பிக்கைகள்

ரோமர்களின் வாழ்க்கை யுத்தத்தையும், மத நம்பிக்கைகளையும் சுற்றியே சுழன்றது. தொட்டில் தொடங்கி, கட்டிலில் தொடர்ந்து, கல்லறை வரை சடங்குகள். குழந்தை பிறந்தால் பூஜை, பதினாறு வயதானதும் பூஜை, திருமணம் செய்தால், யுத்தம் தொடங்கினால், ஜெயித்தால், தோற்றால், மரணமடைந்தால் அனைத்துக்கும் பூஜைதான்.

ரோம் நகரத்தைப் படைத்த ரோமுலஸ், ரேயஸ் ஆகிய இருவருமே மார்ஸ் என்னும் போர்க் கடவுளின் வாரிசுகள். ஜூப்பீடர் என்னும் சூரியன் தலைமை தெய்வம். இவரோடு, கணக்கில்லாக் கடவுள்கள், துறை வாரியாக தெய்வங்கள்:

விவசாயம் : சேரஸ்

வேட்டையாடுதல் : டயனா

வசந்தம் : ஃப்ளோரா

அதிர்ஷ்டம் : ஃபார்ச்சூனா

செல்வம் : ஃப்ளோரா

காதல் : க்யூப்பிட்

திருமணம் : ஜூனோ

ரோமர்களுக்கு அருள் வாக்கு பெறுவதில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. கோவில்களில் பிதியாக்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்ட ஊடாளர்கள் (மீடியம்) இருந்தார்கள். பெண்கள் மட்டுமே பிதியாக்களாக முடியும். இவர்கள்மேல் “சாமி வந்து“ அருள் வாக்கு வழங்குவார். ஒவ்வொரு மாதமும் ஏழாம் நாள் அருள்வாக்கு நடக்கும். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆண்டவனிடம் தங்கள் பிரச்னைகளைச் சமர்ப்பித்து, அருள் வாக்குத் தீர்வுகளைப் பெற்றுச் செல்வது வழக்கம்.

கி. பி. 313 – இல் கான்ஸ்டன்டின் சக்கரவர்த்தி ஆட்சியில் கிறிஸ்தவ மதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நாடு முழுவதும் பரப்பப்பட்டது. வாட்டிகன் நகரம், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகமானது, புனித நகரமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. போப் ஆண்டவர் இதன் தலைவரானார்.

கல்விமுறை

அப்பாதான் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கவும், ஆயுதங்கள் பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்தார். பொது நிகழ்ச்சிகள், மதச் சடங்குகள் ஆகியவற்றுக்கு மகன்களை அழைத்துச் சென்று ஏட்டுப் படிப்பைத் தாண்டி, உலகியல் படிப்பையும் வாரிசுகளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். இந்த உரிமை பெண் குழந்தைகளுக்கு இருக்கவில்லை. உயர் குடும்பத்து ஆண் வாரிசுகள் பதினாறாம் வயதில் அரசு அல்லது அரசியல் நிபுணரிடம் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்கள். பதினேழாம் வயதில் அவர்கள் கட்டாய ராணுவ சேவைக்குப் போகவேண்டும்.

பணக்கார வீட்டுக் குழந்தைகள் வீட்டிலேயே கல்வி கற்றார்கள். கல்வி அறிவு கொண்ட அடிமை இவர்களுக்கு ஆசிரியராக இருந்து இவர்கள் படிப்பில் தனிக் கவனம் செலுத்தினார். சாமானியர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பினார்கள்.

கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், கல்விமுறை சீர்திருத்தி அமைக்கப்பட்டது. படிப்பு ஏழு வயதில் தொடங்கும். ஏழு முதல் பதினொரு வயது வரையிலான படிப்பு ஆரம்பக் கல்வி என்று அழைக்கப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆரம்பக் கல்வி வழங்கப்பட்டது. இதில் லத்தீன் மொழி எழுதப் படித்தல், கணிதம் ஆகியவை கற்றுக்கொடுப்பார்கள். சில பள்ளிகளில் லத்தீனோடு கிரேக்க மொழியும் பயிற்றுவித்தார்கள். பெண்கள் ஆரம்பக் கல்விக்குமேல் படிக்க முடியாது. கணிதத்தில் வாய்ப்பாடு எல்லோரும் கட்டாயம் மனப்பாடம் செய்யவேண்டும்.

நடுத்தரக் கல்வி 12 முதல் 15 வயதுவரை. இது ஆண்களுக்கு மட்டுமே. லத்தீன், கிரேக்க மொழிகள், கணிதம், இலக்கியம் ஆகியவை இப்போது போதிக்கப்பட்டன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பேச்சுக் கலை ஒரு பாடமானது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பேச்சுக்கலை வளர்க்கும் தனிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. புரூட்டஸ், மார்க் ஆண்டனி போன்ற தலைவர்கள் தங்கள் பேச்சுத்திறமையால் ரோமின் தலைவிதியையே மாற்றி எழுதினர்கள். அதற்கு வித்திட்டவை இந்தப் பேச்சுப் பாசறைகள்தாம்.

படிப்பின் மூன்றாம் கட்டம் பதினைந்து வயதாகும்போது தொடங்கும். ரோமன் பொது வாழ்க்கையில் பேச்சுத் திறமை மிக முக்கியமானது. சமுதாய அந்தஸ்தும், பதவிகளும் பேச்சாளர்களுக்கு மட்டுமே கிடைத்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பேச்சுக் கலை பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக இருந்தது. இதே காலகட்டத்தில், பேச்சுக்கலை வளர்க்கும் தனிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டன.

கிரேக்கம் அறிவின் மையமாகக் கருதப்பட்டது. வசதி படைத்த இளைஞர்கள் உயர் கல்வி கற்க, கிரேக்க நாட்டுக்குப் போனார்கள்.

உலகத்துக்கு ரோம நாகரிகம் தந்திருக்கும் பரிசுகளில் முக்கியமான சில:

  • நாம் பயன்படுத்தும் எண்முறை ரோம் தந்ததுதான்.
  • ரோமர்களின் மொழி லத்தீன். இதன் எழுத்துமுறைதான் ஆங்கில எழுத்துமுறையின் முன்னோடி. பல ஐரோப்பிய நாடுகளில் லத்தீன் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் பிரெஞ்சு மொழி லத்தீன் மொழியின் இடத்தைப் பிடித்துவிட்டது.
ரோமன் இலக்கியம்

ரோமன் படைப்பாளிகளுள் வர்ஜில், கேட்டுலஸ் ஆகியோர் முக்கியமானவர்கள்.

விர்ஜில் – கி.மு. 70 முதல் கி.மு. 19 வரை வாழ்ந்த இவர்தான் ரோமின் நிரந்தரக் கவிச் சக்கரவர்த்தி. இவர் படைத்த இதிகாசமான இனிட் ரோமின் மகாபாரதம் அல்லது ராமாயணம்.

க்லோக்ஸ் விர்ஜிலின் இன்னொரு சாதனைப் படைப்பு. பத்து ஆயர் பாடல்கள் கொண்ட இந்தக் காவியத்தில் வரும் ஒரு பாடல் இயேசுநாதரின் வருகையைக் குறிக்கும் பாடலாக உள்ளது. இன்னொரு படைப்பு ஜியார்ஜிக்ஸ். கிராம நிலங்களை மக்களுக்குப் பகிர்ந்தளித்தல், விவசாயத்தைச் சீர்ப்படுத்துதல் போன்ற சமுதாயப் புரட்சிக் கருத்துகளை இந்தக் கவிதைத் தொகுப்பு அறிவிக்கிறது.

கேட்டுலஸ் – கி.மு. 84 முதல் கி.மு. 34 வரை சுமார் 50 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இவர் ரோமின் முக்கியக் கவிஞர். 116 கவிதைகள் எழுதியிருக்கிறார். காதல், நட்பு, லெஸ்பியனிஸம், நையாண்டி ஆகிய மாறுபட்ட உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாளிதழ்

கி.மு. 131ல் அதாவது 2165 ஆண்டுகளுக்கு முன்னால் ரோமாபுரியில் Acta Diurna

என்னும் நாளிதழ் வெளியானது. (*இந்த லத்தீன் வார்த்தையின் பொருள் – தினசரி நிகழ்வுகள்)

ரோமன் சட்டங்கள்

கி. மு 449 – இல் பன்னிரெண்டு கட்டளைகள் என்னும் சட்டமுறை ரோமாபுரியில் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் உலகின் பல நாடுகளின் இன்றைய நீதி, நியாய முறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

பன்னிரெண்டு டேபிள்கள் : முக்கிய ஷரத்துகள் சுருக்கமாக:

1.நீதிமன்றத்தில் தோன்றுமாறு அழைப்பு வந்தால் நீங்கள் கட்டாயம் போயே ஆக வேண்டும். அப்படிப் போகாவிட்டால், வலுக்கட்டாயமாக நீங்கள் இழுத்துச்செல்லப் படுவீர்கள்.

2.உங்கள் வழக்கில் சாட்சிகளாக யாரேனும் தேவைப்பட்டு அவர் வராவிட்டால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் அவர் வீட்டின் முன்னால் போய் குரல் எழுப்பி அவரை அழைக்கலாம்.

3.கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 30 நாட்களுக்குள் கடன் தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

4.உடல் ஊனத்தோடு பிறக்கும் குழந்தைகளைக் கொன்றுவிட வேண்டியது பெற்றோரின் கடமை.

5.வயது வந்தாலும், பெண்கள் ஆண்களின் பாதுகாப்பில்தான் இருக்க வேண்டும்.

6.கணவனிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பெண் ஒரு வருடத்தில் மூன்று நாட்களாவது அவனிடமிருந்து பிரிந்து வாழ்ந்திருக்கவேண்டும்.

7.உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மரம் காற்றடித்து உங்கள் பகுதியில் விழுந்தால் அந்த மரத்தை அவர்தான் எடுக்க வேண்டும். அவர் அப்படிச் செய்யாவிட்டால், நீங்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்.

8.இரவு நேரங்களில் கூட்டங்கள் நடத்தும் உரிமை யாருக்கும் கிடையாது.

9.நீதிபதிகள் லஞ்சம் வாங்கினால், மரண தண்டனை பெறுவார்கள்.

10.இறந்தவர்களின் உடலை நகர எல்லைக்கு வெளியேதான் புதைக்கவோ, எரிக்கவோ செய்யலாம்.

11.குடிமக்கள் இரண்டு “ஜாதிகளாக“ ப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். பிரபுக் குடும்பத்தினரும், நிலச் சுவான்தார்களும் பெட்ரீஷியன்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தவிர மீதி அனைவரும், அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும், ப்ளீபியன்கள் . ஜாதி மாறி திருமணங்கள் செய்துகொள்ளக்கூடாது.

12.பெரும்பாலான மக்களின் கருத்து சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.

ரோமன் காலண்டர்

ரோமாபுரியை நிறுவிய ரோமுலஸ்தான் நாள்காட்டிகளின் தந்தை என்று சொல்கிறார்கள். கி.மு. 753 -இல் அவர் வகுத்த காலண்டரில் 10 மாதங்களும் 304 நாட்களும் இருந்தன. இரண்டாம் மன்னரான ந்யூமா கி. மு. 713ல் இதை 12 மாதங்களும், 355 நாட்களும் கொண்டதாக மாற்றினார். கி.பி. 46 ல் ரோமச் சக்கரவர்த்தி ஜூலியஸ் ஸீஸர் அமைத்த தத்துவ மேதைகள், கணித வல்லுநர்கள், வானியல் அறிஞர்கள், மத குருக்கள் ஆகியோர் கொண்ட குழு 12 மாதங்கள், 365 நாள்கள் கொண்ட காலண்டரை உருவாக்கியது. இதன் அடிப்படையில், கி.மு. 1562 ல் பதின்மூன்றாம் கிரெகோரி என்னும் போப் ஆண்டவர் கிரெகோரி காலெண்டர் கொண்டுவந்தார்.

காலெண்டர்களோடு தொடர்புகொண்ட ரோமுலஸ், ந்யூமா, ஜூலியஸ் சீஸர், போப் கிரெகோரி ஆகிய அத்தனைபேரும் ரோமர்களே!

வரலாற்றில் நிரந்தரத் தடம் பதித்த ரோமர்கள்

நல்லரரசர்கள்

ந்யூமா பாம்ப்பிலியஸ் ஆட்சிக்காலம் கி.மு.715 – கி.மு.673

அகஸ்டஸ் சீஸர் ஆட்சிக்காலம் கி.மு.63 – கி.பி.14

நெர்வா ஆட்சிக்காலம் கி.பி. 96 – கி.பி.98

ட்ராஜன் ஆட்சிக்காலம் கி.பி. 98 – கி.பி.117

ராணுவ மேதைகள்

ஸிப்பியோ தோற்றம் கி.மு. 236 – மறைவு கி.மு. 184

பாம்பே தோற்றம் கி.மு. 106 – மறைவு கி.மு. 48

ஜூலியஸ் சீஸர் தோற்றம் கி.மு. 100 – மறைவு கி.மு. 44

தத்துவ மேதைகள்

சீசரோ தோற்றம் கி.மு. 106 – மறைவு கி.மு. 43

செனிகா தோற்றம் கி.மு. 4 – மறைவு கி.பி. 65

மார்கஸ் அரேலியஸ் தோற்றம் கி.பி.121 – மறைவு கி.பி.180

****

(முடிந்தது).

http://www.tamilpaper.net/?p=8948

Link to post
Share on other sites
  • Replies 50
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.