Jump to content

‘எது வேணும்னாலும் சாப்பிடலாமா டாக்டர்?’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

- பொன்.விமலா

''முன்ன எல்லாம் காய்ச்சல்னு டாக்டர்கிட்ட போனா... மாத்திரை எழுதித் தர்றதோட, 'பால் குடிக்கக் கூடாது, காரம் கூடவே கூடாது, எண்ணெய்ப் பொருட்கள் வேண்டாம், கஞ்சி சாப்பிடலாம், பிரெட் சாப்பிடலாம்’னு இப்படி சாப்பாட்டைப் பற்றியும் மறக்காம சொல்லி அனுப்புவார். ஆனா, சமீபத்துல நான் இரண்டு வேறுபட்ட நோய் காரணமா டாக்டர்கிட்ட போனப்போ, நோய்க்கான மருந்தை பரிந்துரைத்தவர்கிட்ட, 'என்னவெல்லாம் சாப்பிடலாம், எதெல்லாம் கூடாது டாக்டர்?’னு நான் கேட்க, 'அப்படிஎல்லாம் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்ல, எதை வேணும்னாலும் சாப்பிடுங்க!’னு சொல்லி அனுப்பினார். உடல் நலக்குறைவால சிகிச்சை எடுத்துட்டு இருக்கும்போது, இப்படி எதை வேணும்னாலும் சாப்பிடறது சரியா இருக்குமா..?''

- இப்படி ஒரு கேள்வியை நம் வாசகி ஒருவர் கேட்க, இதை சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் எழிலன் முன் வைத்தோம்.

''பத்தியம் தேவையில்லை என்பதன் பொருள், கண்டிப்பாக விளக்கப்பட வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்ன டாக்டர், ''முந்தைய காலங்களில் ஒரு நபருக்கு மஞ்சள்காமாலை இருந்தால் அவருக்கு செரிமானத் தன்மை குறைவாக இருக்கும். அதனால் வயிற்றை காலியாகப் போடுவது நல்லது என டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். அதோடு காய்ச்சலால் வாந்தி இருந்தால், வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கும்படியான ஆலோசனைகளை வழங்கினார்கள். இப்போதோ, நோயாளிக்கு குடல் பிரச்னை அல்லது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தால் மட்டுமே வாய் வழியான உணவைத் தவிர்க்கச் சொல்கிறோம். வயிற்றைச் சுத்தமாக காலி செய்யச் சொல்லும் அறிவுரைகள் தற்போது இல்லை. ஒரு நோயாளி எவ்வளவு சீக்கிரம் வாய் வழியாக உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறாரோ, அவ்வளவு சீக்கிரம் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவேதான் உணவுக் கட்டுப்பாட்டை கடுமையாகப் பரிந்துரைப்பதில்லை.

p76.jpg

அதற்காக, 'எதை வேணும்னாலும் சாப்பிடலாம்’ என்கிற பரிந்துரைக்கு, 'பிரியாணி சாப்பிடுங்க, பால் கோவா சாப்பிடுங்க, எண்ணெயில் மூழ்கிய பலகாரங்களைச் சாப்பிடுங்க’ என்பதல்ல அர்த்தம். பத்திய சாப்பாடு என்கிற பெயரில் சத்தில்லாத ஆகாரம் எடுத்துக்கொள்ள அவசியம் இல்லை. நோயின் தீவிரத்தைப் பொறுத்து செரிமானம் ஆகக்கூடிய ஆரோக்கியமான, சத்தான உணவை எடுத்துக்கொள்ளலாம் என்பதே இதன் பொருள். நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும் நல்ல உணவை சாப்பிட வேண்டும் என்பதையே டாக்டர்கள் சொல்கிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று தெளிவுபடுத்திய டாக்டர், தொடர்ந்தார்.

''ஒவ்வொரு நோயின் வெளிப்பாடும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எனவே, எல்லோருக்கும் பொதுவான உணவு ஆலோசனைகள் வழங்குவது சரியாக இருக்காது. உதாரணத்துக்கு... மஞ்சள்காமாலையுடன் வரும் ஒருவருக்கு, நீரிழிவு நோயும் வரும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டுக்கான உணவைத்தான் அறிவுறுத்துவோம். மண்ணீரல் சிதைவோ, குடல் பிரச்னையோ இருப்பவர்களுக்குத் தவிர்க்க வேண்டிய உணவுகளைக் கண்டிப்புடன் அறிவுறுத்துவோம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, சக்தியைப் பெருக்குவதற்குத் தேவையான புரோட்டீன் சத்துக்கள் அடங்கிய உணவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்துவோம். பழங்கள், கீரைகள், வேகவைத்த முட்டையுடன் கூடிய சரிவிகித உணவை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

 

p76a.jpgமுன்பு கூட்டுக் குடும்பங்களாக இருந்தபோது, ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், கஞ்சி, சூப், பத்தியம் என்று உறவினர்கள் அவர் உடல்நிலை தேறும்வரை அருகிலிருந்து கவனித்துக்கொண்டார்கள். ஆனால், தற்போதுள்ள தனிக்குடித்தன சூழலில், அதிலும் தம்பதி இருவரும் பணிக்குச் செல்ல நேரும்போது, ஒருவருக்கு நோய் என்றால், அதை அவரே சரிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம். இந்நிலையில், உணவுக் கட்டுப்பாடு என்பதைவிட, சத்தான உணவின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொண்டு அதிலிருந்து நிவாரணம் பெறுவதே சிறந்தது. அதைத்தான் மருத்துவர் களும் வலியுறுத்துகிறார்கள்.

 

இந்தத் தலைமுறையினருக்கு சுத்தமான காற்று, குடிநீர், இயற்கை உணவு இவையெல்லாம் கிடைப்பதில்லை. ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில் யாருக்கும் இங்கே நின்று நிதானமாக உணவு சாப்பிடக்கூட நேரமில்லை. நேரம் தவறிச் சாப்பிடுவதையும், அவசரமாகச் சாப்பிடுவதையும்தான் அனைவரும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், செரித்த பின் உண்பதும், சரியான நேரத்தில் சாப்பிடுவதுமே நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்பதை உணருங்கள்'' என்று முக்கியமான ஆலோசனையுடன் முடித்தார் டாக்டர் எழிலன்!

 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=31492

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.