Jump to content

வரமா சாபமா !


Recommended Posts

1513661_700531416669300_7294985980806036

 

 

ஒரு கிராமத்தில் வயதான ஏழைக்கிழவன் இருந்தான். அவனிடம் அழகான வெண் குதிரை ஒன்று இருந்தது. ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, “உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்” என்றனர்.

அந்த கிழவன், “அதிகம் பேச வேண்டாம். குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?” என்றான்.

மக்கள், “இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்றனர்.

அந்த கிழவன், “லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது அது கெட்டநேரமா நல்லநேரமா ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?” என்றான். மக்கள் சிரித்தனர். 
பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு பல குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து,“அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்றனர்.

அந்த கிழவன், “மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள். ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.” என்றார். 

இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர். 

அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள், “நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்.” என்றனர்.

அந்த வயதானவன், “நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்? யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்.” என்றான்.

இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டு இருந்தது. அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, “நீங்கள் சொன்னது சரியே பெரியவரே! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்.” என்றனர். 

அந்த வயதானவன், “உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது.” என்றார்.

அந்த கிழவன் வேறுயாருமல்ல, அவர்தான் லாவோட்சு. இந்த கதை கூறுவது, முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள்.

 

                                                                                                                                                                                  நன்றி. மாதவன்

                                                                                                                                                                                

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.