Jump to content

Recommended Posts

- பாவண்ணன்

 

'வழிமயக்கம்' என்ற தலைப்பில் பாலகுமாரன் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார்.

அடுக்கப்பட்ட வாழைத்தார்களோடு சாலைவழியாக வண்டியை இழுத்துக்கொண்டு செல்வார் ஒரு வண்டிக்காரர். அதே சாலையில் ஓரமாக வேறொருவர் நடந்து செல்வார். அவருக்கும் வண்டிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இருவருமே வெவ்வேறு நோக்கங்களோடு தனித்தனியாகச் செல்கிறவர்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. எதிர்பாராதவிதமாக சந்திக்கிற நண்பரொருவர் பார்வையில் வாழைத்தார்களை வாங்கி வண்டியிலேற்றிவிட்டு கூடவே இவரும் நடந்துசெல்வதுபோலத் தோன்றுகிறது. என்ன விலைக்கு வாங்கினீர்கள், எங்கே வாங்கினீர்கள் என்றெல்லாம் கேட்கத் தொடங்குகிறார். நடந்துசெல்லும் நண்பர் குழப்பமும் கூச்சமுமடைகிறார். அது தன்னுடையதில்லை என்று சொல்கிறார். அதற்குப் பிறகு பார்க்கநேர்கிற ஒவ்வொரு வழிப்போக்கரும் இதே கேள்வியையே வேறுவேறு விதமாகக் கேட்கிறார்கள். பழைய பதிலையே அவர்களுக்கும் சொல்கிறார் நடையாளர்.

 

அருகருகே காணநேர்கிற ஒரே காரணத்தாலேயே இரண்டையும் இணைத்துப் புரிந்துகொள்வது ஒரு பார்வைமயக்கம். அல்லது மனமயக்கம். சாலையில் நடந்துசெல்கிற, அல்லது ஒரு பூங்காவில் அருகருகே உட்கார்ந்திருக்கிற ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பார்த்த கணத்திலேயே அவரைக் காதலர்கள் எனவும் தம்பதியினர் எனவும் நினைத்துக்கொள்வதுகூட ஒருவிதத்தில் மனமயக்கம்.

 

மனம் ஒரு பொறி. பார்த்தோ, கேட்டோ அல்லது உணர்ந்தோ தெரிந்துகொள்கிற ஒவ்வொன்றையும் எவ்விதமான பேதமும் இல்லாமல் முதலில் உள்வாங்கிப் பதிவுசெய்துகொள்கிறது அப்பொறி. பிறகு, அதை இணைத்தும் கலைத்தும் பார்க்கிறது. இசைவான ஒரு கற்பிதத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. இசைவு கூடாதவை தானாகவே ஆழத்தைநோக்கிச் சென்றுவிடுகின்றன. இசைந்துசெல்லத் தக்கவைமட்டும் மிதக்கின்றன. அக்கற்பிதங்களை மீட்டிமீட்டி அவற்றைத் தன் கண்டறிதல்களாக எண்ணி மகிழ்கிறது மனம். ஒரு சில கணங்கள். பிறகு, மறுபடியும் மனம் புதிய கற்பிதங்களைத் தேடி, புதிய இசைவான இணைகளைத் தேடிச் சென்றுவிடுகிறது. உயிரின் இறுதித்துளி உடலில் ஓடிக்கொண்டிருக்கும்வரை மனம் இப்படி இயங்கிக்கொண்டே இருக்கிறது. மரணத்தின் இறுதிக்கணத்தில் எங்கோ கேட்கிற குரல் அல்லது ஓசையைக்கூட மரணத்தின் அழைப்பாக நினைத்து அரற்றுவதற்குக் காரணம் கட்டுப்படுத்த இயலாத மனத்தின் தீராத இயக்கம். தன் கற்பிதங்கள் பிழையானவை என்றும் பார்வைமயக்கம் என்றும் உணர்கிற தருணத்தில் ஒரு புதிய உண்மையைக் கண்டடைகிறது மனம். கண்டடையப்படுகிற இத்தகு சிறுசிறு உண்மைகளே வாழ்வின்மீது படர்ந்திருக்கிற இருளை அகற்றும் சுடர்களாகின்றன.

 

மாடியில் ஒருவர் படுத்திருக்கிறார். அருகில் ஒரு கொல்லை. எதிர்ப்புறத்தில் ஒரு சோலை. விடிகிற நேரத்தில் கொல்லையிலிருந்து ஒரு குயில் கூவுகிற குரல் கேட்கிறது. வழக்கமாகக் கேட்கிற குரல். அக்குரலுக்கு விடைசொல்வதுபோல சோலையில் உள்ள ஒரு மரக்கிளையிலிருந்து ஒரு குயில் கூவுவது தினமும் நடைபெறும் கச்சேரி. படுத்திருப்பவர் ஆவலோடு சோலையைப் பார்க்கிறார். வழக்கமாக ஒலிக்கும் குயிலின் குரல் அன்று கேட்வில்லை. அது முதல் அதிர்ச்சி. தன் துணையின் குரல் ஒலிக்கவில்லையென்று குயில் வேதனையில் ஆழந்துவிடுமோ என்று அவர் மனம் வருத்தத்தில் ஆழ்கிறது. ஆனால், அந்த வருத்தத்துக்கு இடமளிக்காதவகையில் கொல்லையில் கூவிய குயில் தொடர்ந்து கூவுகிறது. அது இரண்டாவது அதிர்ச்சி. தற்செயலாக இரண்டு குயில்கள் ஒரே நேரத்தில் கூவ நேர்வதைக் கேட்டதாலேயே, ஒன்றோடு மற்றொன்றை இணைத்து, அக்குரல்களை மாற்றிமாற்றி அழைத்துக்கொள்கிற ஆசைநாடகமாக நினைத்துவிட்ட கற்பிதம் நொறுங்கிப்போவது மூன்றாவது அதிர்ச்சி. அனைத்து அதிர்ச்சிகளின் இறுதிப்புள்ளியில் மனம் ஒரு வெளிச்சத்தைக் கண்டடைகிறது. குயில் யாருக்காகவும் கூவுவதில்லை. தனக்காகவே கூவிக்கொள்கிறது. ஒரு குயிலால் கூவாமல் இருக்க முடிவதில்லை. கூவுவது அதன் இயல்பு. அதுவே அதன் இருப்பின் அடையாளம்.

 

நீங்களாகவே ஒரு கற்பிதத்தை உருவாக்க முயற்சி செய்யாதீர்கள். பார்வைமயக்கத்தையும் தாண்டி உண்மையை உணர முய‌லுங்கள்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.