Jump to content

யானி: எல்லைகளை உடைத்த இசை நதி


Recommended Posts

  • yani_2203585g.jpg
     
  • yani1_2203587g.jpg
     

இசை மேதை யானிக்கு இன்று 60-வது பிறந்தநாள். யானியின் பெயரைக் கேள்விப்படாதவர்கள் இருக்கலாம். ஆனால் அவரது இசையைக் கேட்டிராதவர்கள் யாரும் இருக்க முடியாது. உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமாக அவர் ஆல்பங்கள் விற்பனையாகிச் சாதனை படைத்துள்ளன. உலகின் எந்தத் தேசத்தின் திரையிசையிலும் யானியின் தாக்கம், மெட்டுகளாகவும் பின்னணி இசையாகவும் பெருக்கெடுத்து வழிந்தோடியபடியே இருக்கிறது. தமிழ்த் திரையிசையில் யுவன், ஜி.வி. பிரகாஷ் இருவரிடமும் யானியின் சாயல்கொண்ட இசைக் கீற்றுக்கள் மின்னுவதைக் காண முடியும்.

1997-ல் தாஜ்மஹால் முன் தொடர்ச்சியாக 3 இரவுகள் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார் யானி. அதன் பிறகு 17 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுதான் சென்னையில் மாபெரும் இசை நகழ்ச்சி ஒன்றை அரங்கேற்றி இந்தியாவிற்குள் மறுபிரவேசம் செய்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், இந்தியா உட்பட உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். எங்கே சென்றாலும் கோடிக்கணக்கான இசைப் பித்தர்கள் அவரை உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

 

பியானோ ஸ்பரிசம்

தெற்கு கிரீஸின் கடற்கரை ஊரான காலாமாடாவில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த இளைய மகன் யானி. அமெரிக்காவில் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் பி.ஏ.சைக்காலஜி சேர்ந்தான். ஆனால் ஆங்கிலம், படிப்பு இரண்டிலும் நாட்டமில்லை. தினமும் மெஸ்ஸுக்குச் செல்லும் வழியில் ஓரத்தில் துணியால் போர்த்தப்பட்டு ஒரு பியானோ இருந்தது. என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே பியானோவின் சுருதியைச் சேர்த்துச் சரி பார்க்கத் தொடங்கினான். பியானோ புதிதாகத் தோன்றவில்லை. இசையும் பழக்கமானதாகவே தோன்றியது. முதலில் கட்டைகளும் விரல்களும் தனித்தனியே தெரிந்தன. நேரம் ஆக ஆக, தன் வாசிப்பில் தானே லயித்துக் கண்கள் மூடிக்கொண்டுவிட, கட்டைகளோடு விரல்கள் கரைந்துபோய்விட்டது போல உணர்ந்தான்.

 

இசையோடு வாசம்

முறைப்படி இசை கற்றுக்கொள்ளவே இல்லை என்றாலும் பியானோவில் கை வைத்ததும் விரல்கள் விளையாடுகின்றன. இனி படிப்பைத் தொடரப் போவதில்லை என முடிவெடுத்தான். கால் போன போக்கில் திரிந்தான். வழியில் சந்திக்க நேர்ந்த ராக் அண்ட் ரோல் இசைக் குழுக்களோடு இணைந்து நைட் கிளப், தெருவோரங்களில் வாசித்துவந்தான். ஆனால் ஒன்றன் பின் ஒன்றாகக் கலைந்துபோயின. சாப்பாட்டுக்கு வழியில்லை, பிளாட்பார வாழ்க்கை. தங்க இடமில்லாமல் விரக்தியோடு திரிந்தபோது தங்கை கணவனின் நட்பு கிடைத்தது. அவர் வீட்டில் இடமில்லை, ஆனால் கார் ஷெட்டில் இருந்தது. கார் காரேஜை ரெக்கார்டிங் தியேட்டராக மாற்றி இசை எழுத வேண்டும் எனத் தோன்றியது. ஏதோ கிடைத்த இரண்டாம் தர இசைக் கருவிகள் கொண்டு தானே வயரிங் செய்து, வீணாய்ப் போன மரக்கட்டைகள் கொண்டு ஸ்டூடியோ தயாரானது.

 

யானி அவதரிப்பு

கதவை இழுத்துச் சாத்திக்கொண்டு எழுத ஆரம்பித்தார் யானி. நொடிப் பொழுதில் அரேபியா பாலைவனச் சோலையில் குதூகலித்து சுற்றிய அடுத்த கணம் அமெரிக்க சொர்க்க லோகத்தில் இருப்பது போன்ற அனுபவம் தரும் ‘கீஸ் ஆஃப் இமாஜினேஷன்’ அப்போதுதான் பிறந்தது.

கேட்பவர் மனதை லேசாக்கி, பட்டாம்பூச்சிப் போல பறக்கச் செய்யும் ‘பட்டர்ஃபிளை டான்ஸ், சுட்டெரிக்கும் கோடை காலத்தில் உடல் மேல் பட்டும் படாமலும் சில்லென்ற மழைச் சாரல் தூவுவது போல உணரச் செய்யும் ‘தி ரெயின் மஸ்ட் ஃபால்’, என இசை பிரவாகமாகப் புரண்டோடத் தொடங்கியது. அவருடைய சமீபத்திய ஆல்பம் ‘வேர்ல்ட் வித்தவுட் பார்டர்ஸ்’. உண்மைதான் யானி எனும் வற்றா இசை நதியை தேசங்களின் எல்லைக்கோடுகள் தடுக்க முடியாது. ஆனால் கிரீஸ் நாட்டின் பழம்பெரும் நகரமான அக்ரோபொலிஸீக்கு போகும்வரை அவர் இசையின் அருமை உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும். நாம் பல வருடங்களாக மீண்டும் மீண்டும் நம்மையே அறியாமல் ரசித்துக்கொண்டிருக்கும் யானியின் ஒரு ஆல்பம் ‘லைவ் அட் தி அக்ரோபொலிஸ், அந்த அக்ரோபொலிஸில் தன் இசைக் கோவையை அரங்கேற்ற யானி கடந்து வந்த பாதை கோடிக்கணக்கான முட்கள் நிறைந்தது.

 

உயிரை உருக்கும் இசை

இசையமைக்கத் தொடங்கிவிட்டால் யானிக்கு உணவு மறந்துவிடும். மூன்று மாதங்கள்வரைகூடத் தூங்க மாட்டார். உட்கார மாட்டார். யாரோடும் பேசவும் மாட்டார். உடல் ஒரு பொருட்டல்ல. வலி ஒரு பொருட்டல்ல. “நானும் என் இசையும் இங்கே வாழ்கிறோம். மற்றவை எதுவும் முக்கியமில்லை” என்று தன்னையே உருக்கி இசையாகப் பொழிவார்.

 

காதல் சங்கீதம்

இப்படி இருக்க ஒரு நாள் அக்ரோபொலிஸ் நகரில் தன் இசைக் கோவைகளை அரங்கேற்ற வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அன்றாடங்காய்ச்சி வாழ்க்கைதான் அப்போதைய நிலை. அவர் கனவை நினைவாக்க யானியின் ஆத்மார்த்த காதலி, நடிகை லிண்டா ஈவான்ஸ் கோடிகளில் செலவு செய்தார். யானிக்கு அப்போது 33 வயது. லிண்டாவுக்கோ 47. அவ்வளவு செலவு செய்தும் பல்லாயிரம் தடங்கல்கள். “எப்படிச் சமாளிப்பேன்” என்று யானி கலங்கி நின்றபோது துளியும் தளராமல், “நீ அடைய விரும்பும் உயரத்துக்கு இதனைக் காட்டிலும் சிறந்த முதல் ஏணி அகப்பட வாய்ப்பில்லை” எனக் கூறி மீண்டும் கோடிகளில் செலவு செய்தார்.

 

வரலாறு

நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைந்தது. அன்று உலகைப் பார்த்து மேடை ஏறினார் யானி. அந்த நொடி முதல் உலகம் அவர் இசைக் கோவைகளில் சுழலத் தொடங்கிவிட்டது. ஒரு விதத்தில் லிண்டாதான் இந்த உலகிற்கு யானி என்னும் இசைக் கலைஞனை அறிமுகப்படுத்தியவர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடனே தன் காதலன் இருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச எதிர்பார்ப்புக்கூட இல்லாமல் யானிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் லிண்டா. ஒரு கட்டத்தில் இருவரும் இசைக்காகவே பரஸ்பரமாகப் பேசிப் பிரிந்துவிட்டார்கள். அத்தகைய லிண்டாவுடன் வாழ்ந்த காலங்களின் ஞாபகார்த்தமாக யானி படைத்ததுதான் ‘ரிஃப்ளக்‌ஷன்ஸ் ஆஃப் பேஷன், இதுவரை காதல் என்ற உணர்வை ஸ்பரிசிக்காதவர்கூட இதைக் கேட்டால் காதல் வெள்ளத்தில் மூழ்கிப்போவார்கள்.

எந்தப் பல்கலைக்கழகத்தைவிட்டு இளங்கலைப் பட்டதாரியாக வெளியேறி னாரோ அதே மின்னசோட்டா பல்கலைக் கழகம் 2004-ல்யானிக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்பட்டது.

முயற்சி. அதுதான் முக்கியம். வாழ்வின் அற்புதக் கணங்களும் அர்த்தமுள்ள பக்கங்களும் அங்கேதான் இருக்கின்றன என்று நிரூபித்தவர் யானி. அடிப்படையில் யானி ஒரு நாத்திகவாதி. ஆனால் இசையைப் பொறுத்தவரை அதைத் தன்னை மீறிய சக்தியாக உணர்வதாகவே கூறுகிறார். யானியின் வியப்பூட்டும் வாழ்க்கையைப் பற்றி எழுதப்படாத பக்கங்களே அதிகம். நாம் வாழும் இதே உலகில்தான் இப்படி ஓர் அசகாய இசைச் சூரனும் வாழ்கிறாரா எனப் பிரமிக்க வைக்கும் மகா இசைக் கலைஞன்தான் யானி.

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/article6596254.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.