Jump to content

திராவிடம்,திராவிட அரசியல் என்றால் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய யாழ்க்களத்தில் இருந்த சில தலைப்புக்களை மீண்டும் இங்கே இணைகிறேன் புதிதாக வந்தவர்களுக்காக.

எமது அரசியல் வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டுமானால் திராவிட இயக்கத்தின் தோற்றுவாயையும் அதற்கான காரணங்களையும் தெரிந்து கொண்டால் தான் அது எங்கணம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.இங்கே ஒருவர் வரலாறு தெரியாமல் அல்லது தெரிந்து கொண்டே திரிப்பதற்காக சில விசமத் தனமான சொல்லாடல்களை திராவிட அரசியல் சம்பந்தமாகச் செருகி வருகின்றார்.மேலும் இங்கு இது சம்பந்தமாக அறிய பலர் ஆவலாக இருப்பதாகப் புலப்படுகிறது.

பெரியார்!

http://www.yarl.com/forum/viewtopic.php?t=10028

திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -** கார்த்திகேசு சிவத்தம்பி**

நினைவின் சுவடுகள்

திராவிடக் கருத்துநிலையின் பொருத்தப்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது, தொடக்கத்தில் திராவிடக் கருத்துநிலை என்பது யாது, அது எதனை அல்லது எவற்றைச் சுட்டி நிற்கின்றது என்பதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளல் அவசியம்.

தமிழ்நாட்டில் வாழும் பிராமணரல்லாத சாதிக் குழுமங்களைச் சேர்ந்தவர்கள், தங்களின் சமூக நிலைமையையும் தங்கள் சமூக அசைவியக்கத்தையும் வரையறை செய்த 'பிராமணக் கருத்து நிலை' தம்மீது திணித்ததென அவர்கள் கண்ட, கொண்ட மேலாண்மைக்கெதிராக நடத்திய போராட்டங்களினூடே மேற்கிளம்பியதும், அந்தப் போராட்டங்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதுமான சிந்தனை நிலைப்பாடே, 'திராவிடக் கருத்துநிலை'யாகும்; அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் 'தமிழ்ப் பிரக்ஞை' ஏற்படுவதற்கு இது தளமாக அமைந்து வந்துள்ளது. இது, மதம் சமூக நடத்தை முறை பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தினை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது (அந்தக் கண்ணோட்டத்தின் பிரதான எண்ணக்கருக்கள் 'நாத்திகம், பகுதித்தறிவுவாதம், சுயமரியாதை' என்பனவாகும்; இது 'ஆரிய'த்தைப் 'பிராம­யமாக நோக்குவதுடன், 'திராவிடம்' என்பது 'பிராம­யம்' என்று கொள்ளப்படுவதன் எதிர்நிலையாகக் கொள்ளப்படுவதாகும். இது காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வடிவம் பெற்றது. அத்துடன், இந்திய வரலாறு, பண்பாடு பற்றிய காலனித்துவ வாசிப்புக்களினால் உந்துதல் பெற்றதும் உண்மையாகும். (சிவத்தம்பி 1979).

இந்தச் சொற்பிரயோகத்துக்கு, ஆங்கில ஆட்சி, தென்னிந்திய நிர்வாகத்துக்கெனத் தோற்றுவித்த சென்னை மாநிலம் (Madras Presidency) என்ற அலகினது சனத்தொகையமைப்பினுள் ஒரு நியாயப்பாடு இருந்தது. அந்தச் சென்னை மாநிலம் உள்ளடக்கியிருந்த கன்னடப்பிரதேசம், ஆந்திரா (தெலுங்கானா நீங்கலாக), தமிழ்நாடு, (சமஸ்தானங்கள் தவிர்த்த) கேரளம் ஆகிய பிரதேசங்களை இணைப்பதற்கு, அவற்றினூடே ஓர் ஒருமைப்பாட்டைக் காண்பதற்கு, அக்காலத்திற் 'கண்டு பிடிக்கப் பெற்ற', 'திராவிடர்' என்ற மொழி நிலைக் கருதுகோள் உதவிற்று (சிவத்தம்பி 1995). இந்திய வரலாறெழுதியலில் இந்தத் தொடர், தென்னித்தியாவின் பிரிநிலைத் தன்மையையும் தமிழரின் தனித்துவத்தையும் குறிப்பாகக் கொள்ளப்பட்டது. 'திராவிடம்' என்பது 'ஆரிய'த்தின் எதிர்நிலையாகக் கொள்ளப்பட்டது.

இந்தச் சொற்பிரயோகத்துக்கான ஒரு வன்மையான தேவையுமுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் சகல சமூகக்குழுமங்களையும் 'தமிழர்' என்ற தொடராலே சுட்டிவிட முடியாது. தெலுங்கு பேசும் சில குழுமங்களும் (ரெட்டியார், நாயுடு முதலியோர்) கன்னடம் பேசும் சில குழுமங்களும் (நாயக்கர் முதலியோர்) இந்தப் பதக்குடையின் கீழ் வரமாட்டார்கள். அத்துடன் 'தமிழர்' என்னும் சொல், தமிழ்ப் பிராமணர்களையும் உள்ளடக்கிவிடும். இதனால் திராவிடர் என்ற பதப்பிரயோகம் அவசியமாகிறது என்று கருதப்படுகிறது.

மேலும் இந்தச் சொற்பிரயோகம், கடந்த காலத்து வரலாற்று நினைவுகளைத் தரும் ஒன்றாகவும் பயன்படுகிறது. இந்தியாவின் ஆரிய வருகைக்கு முற்பட்ட திராவிட வரலாற்றுப் புகழை மீட்பதற்கும் (சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம் பற்றிய சில கொள்கைகள்) தமிழ்நாட்டில், ஆரியச் செல்வாக்குக்கு முற்பட்டதாகக் கருதப்படும் தமிழ் நாகரிகத்தைச் சுட்டவும் (சங்க காலம்) இந்தப் பதம் வாய்ப்பான ஒன்றாக அமைகின்றது. மாக்ஸ் முல்லர் வழிவந்த இந்தோ-ஆரிய மேன்மைக் கோட்பாட்டின் எதிர்நிலையாக இது வழங்கி வருகின்றது.

குறிப்பாக மொழியியல் ஆய்வில் இது ஒரு வரலாற்று நிதர்சனமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் வழங்கும் இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து (சமஸ்கிருதம், அதன் வழிவருவன) வேறபட்ட மொழியமைப்பைக் கொண்ட அடுத்த பிரதான மொழிக் குடும்பம் 'திராவிடமே' ஆகும். அண்மைக்கால மொழியியல் ஆராய்ச்சிகளில் திராவிட மொழியியல், இந்திய மொழியியல் துறையில் முக்கிய இடம் பெறுவதாகும்.

இவற்றைவிட 'திராவிடர்', 'திராவிடக் கருத்து நிலை என்ற இந்தப் பதப்பிரயோகங்கள், இன்று, அதாவது சமகாலத் தமிழ்நாட்டுச் சமூகப் பார்வையில், பெரியார் ஈவெராவினால் நடத்தப்பெற்ற சுயமரியாதை இயக்கத்தினை நினைவுறுத்துவனவாக அமைகின்றன. இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் மெய்யியல் எடுகோள்கள் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய பகுத்தறிவுவாதத்தின் (Atheism) அடியாக வந்தனவாகும். இங்கர்சால் என்ற அமெரிக்கச் சிந்தனையாளரின் எண்ணங்கள் இதிற் பெரும்பங்கு வகிக்கின்றன. சென்னையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பாகத்தில் நிறுவப்பட்ட பிரம்மஞான இயக்கம் (Theosophical Movement) சம்பந்தப்பட்டவர்கள் இங்கர்சால் பற்றிச் சிரத்தை கொண்டிருந்தனர் என்பதற்கான சில வரலாற்றாதாரங்கள் உள்ளன (ஹார்வாட் பல்கலைக்கழக இறையியல் துறை நூலகத்திலுள்ள பிரசுரிக்கப்படாத அமெரிக்க மிஷன் ஆவணங்கள்).

'திராவிடம்' என்ற இத்தொடர் இந்தியச் சுதந்திர காலத்துக்கு முன்னரிருந்து கையளிக்கப்பட்ட ஒரு சிந்தனை மரபின் பெறுபேறாக அமைகின்றது என்பது இதுவரை கூறியவற்றினாலே புலனாகின்றது. சுதந்திர காலம் முதல் இத்தொடர் வன்மையான அரசியல் கட்சிநிலைப் பதமாகவும் தொழிற்படுகிறது. 1949 முதல் இன்று வரையுள்ள சென்னை/தமிழ் நாட்டு மாநில ஆட்சி 'திராவிட' என்ற அடையைக் கொண்ட கட்சிகளால் நடத்தப்படுவதையும், அக்கட்சிகளுக்குள்ளே பிளவுகள் ஏற்படும்பொழுதுங்கூட 'திராவிட' என்ற அடை தொடர்ந்து பேணப்படுவதையும் (திமுக, அதிமுக, மதிமுக முதலியன) நோக்கும்பொழுதும் இப்பதம் ஒரு அரசியற் குறியீடு ஆகியுள்ளது என்பது புலனாகின்றது. அரசியற் பலத்தை நாடாத, ஆனால் தமிழகத்தின் பிரதான அமுக்கக்குழுக்களில் (Pressure groups) ஒன்றாக விளங்கும் திராவிடர் கழகமும் (பெரியாரின் உத்தியோக பூர்வவாரிசாகத் தன்னைச் சுட்டிக் கொள்வது) அந்தப் பிரயோகத்தையே பயன்படுத்துவது நோக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

'திராவிட' என்னும் அடையின் இன்றைய அர்த்த விகசிப்புக்களை நோக்கிய நாம் அடுத்து , இத்தொடர் சுட்டும் கருத்து நிலையின் இன்றைய (சமகால) பொருத்தப்பாட்டை நோக்கத் தொடங்கல்வேண்டும்.

அவ்வாறு நோக்க முனையும்பொழுது மூன்று முக்கிய விடயங்கள் ஆராயப்படவேண்டியனவாகின்றன:

1 திராவிட இயக்கம்/கருத்துநிலை பெற்றிருந்த வரலாற்று வகிபாகம்--அதாவது வரலாற்று நோக்கில் அது ஆற்றியுள்ளவை;

2 அனைத்திந்திய மட்டத்தில் இன்று காணப்படும் அரசியல் நிலைமை;

3 ஏக வல்லரசாண்மை கொண்ட பூகோளக் கிராமத்திலும், சர்வதேசியச் சந்தை முதலாளித்துவம் உலக ஆண்மை செலுத்தும் நிலையிலும், தமிழ்ப் பிரக்ஞை/தமிழ்த் தேசியம் பெறும் இடம்.

இந்த மூன்று அமிசங்களும் மிக விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியனவாகும

Link to post
Share on other sites
  • 7 years later...

திராவிடர் யார்?
============
தென்னிந்தியப் பார்ப்பனர்களை ‘திராவிடர்’ என்று அழைக்கும் மரபுக்கு சான்றுகள் ஏதேனும் உள்ளனவா? பழைய சமஸ்கிருத நூல்களில் இதற்கான சான்றுகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

இந்தியத் துணைக் கண்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் குடியேற மேலாண்மை செலுத்தும் சாதியினராக, வர்ணப்பிரிவினராகப் ‘பார்ப்பனர்கள்’ (தமிழில் பார்ப்பனர்கள்) இருந்து வந்திருக்கின்றனர். இந்தியத் துணைக் கண்டத்தின் எப்பகுதியில் வாழ்ந்திருந்தாலும் கூட, பார்ப்பனர்களிடையே ஓர் ஓர்மைத்தனம் காலாகாலமாக விளங்கி வந்திருக்கிறது. பிறசாதியினருடன் தங்களை வைத்துப் பேசும் போது ‘பார்ப்பனர்’ என்ற அடையாளத்தையும், பார்ப்பனர்கள் என்று ஒட்டுமொத்தமாகப் பேசும் போது தாங்கள் வாழும் நிலப்பகுதியையே தங்கள் இனப்பெயராகவும் வழங்கி வந்திருக்கின்றனர். ஏனைய மக்கள் சத்திரிய, வைசிய, சூத்திர, பஞ்சமராக அடையாளப்படுத்தப் பட்டனர்.

இந்தியத் துணைக் கண்டத்துப் பார்ப்பனர்களை நிலப்பகுதி அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கும் மரபு நீண்டகாலமாக இருந்து வந்தது. வட இந்தியப் பார்ப்பனர்களை ‘பஞ்ச - கௌடர்’ (Pancha-gauda) என்றும் தென்னிந்திய பார்ப்பனர்களை ‘பஞ்ச-திராவிடர்’ (Pancha-Dravida) என்றும் குறித்தனர். பழைய நூல்களுக்கு உரை எழுதுபவர்கள் நல்ல புரிதலைத் தரும் எண்ணத்துடன், வடஇந்திய பார்ப்பனர்களை ‘பஞ்ச-கௌட பார்ப்பனர்’ என்றும் தென்னிந்திய பார்ப்பனர்களை ‘பஞ்ச - திராவிட பார்ப்பனர்கள்’ என்றும் பார்ப்பனர் என்றும் சொல்லை சேர்த்து எழுதுவர். இதில் ‘பஞ்ச திராவிட’ என்று எழுதினாலே அது ஐந்து நிலப்பகுதிகளைச் சேர்ந்த தென்னிந்திய பார்ப்பனர்கள் என்று பொருள்படும்.

‘பஞ்ச - திராவிட’ என்ற சொல்லில் வரும் ‘திராவிட’ என்ற சொல் தென்னிந்தியப் பகுதியைக் குறிப்பது அன்று. அதற்கு ‘தென்னிந்திய பார்ப்பனர்’ என்றே பொருள். ஏனெனில், சமஸ்கிருத சுலோகங்களில் தென்னிந்தியப் பார்ப்பனர்களைக் குறிக்க ‘பஞ்ச-திராவிட’ என்று மட்டுமே வருகின்றது.இராஜதரங்கினி (Rajatarangi) என்னும் நூல் கல்ஹனரால் எழுதப்பட்டது. இது காஷ்மீரின் வரலாற்றைப் பேசும் 12-ம் நூற்றாண்டு நூலாகும். இந்நூல் இந்தியத் துணைக் கண்டத்துப் பார்ப்பனர்கள் வாழும் பெருநிலப் பகுதிகளின் அடிப்படையிலான சாதிப் பிரிவை விவரிக்கிறது. இதைக் கூர்ந்து படிக்கும் எவரும், ‘பிரமணர்’ என்ற சொல்லே பயன்படுத்தாமல் ‘திராவிட’ என்ற சொல்லால் மட்டுமே தென்னிந்திய பார்ப்பனர்கள் குறிக்கப்படுவதை அறிந்து கொள்ளலாம்.

இராஜதரங்கினி இவ்வாறு பேசுகிறது.

கர்னாடகஆஸ்ச்ச தைலங்கா திராவிட மஹாராஷ்ட்ரகஹா|

குர்ஜராஷ்சேத்தி பஞ்சைவ திராவிட விந்தியதக்ஷஜீனே||

சாரஸ்வதாஹா கான்யகுப்ஜா கௌடா உத்கலமைதிலஹா|

பஞ்சகௌடா இத்தி கியாதா விந்ஸ்யோதரவாசினஹா||

(சமஸ்கிருத சுலோகம்: Brahmin Communities – Wikipedia,a, the Free Encyclopedia1.htm)

இதன் பொருளாவது: ‘கர்னாடகா, தைலங்கர், திராவிடா, மஹாராஷ்ட்ரகர், குர்ஜரா ஆகிய ஐவரும் விந்தியத்துக்குத் தெற்கே வாழும் திராவிடர்; சரஸ்வதர், கன்யாகுப்ஜா, கௌடா, உத்கலா மற்றும் மைதிலா ஆகிய விந்தியத்துக்கு வடக்கே வாழ்பவர் ‘பஞ்ச கௌடா’.

இந்த சுலோகத்தில் ‘கௌடா’ என்ற சொல் பொதுவில், வடஇந்தியப் பார்ப்பனர்களையும், ‘திராவிடர்’ என்ற சொல் தென்னிந்தியப் பார்ப்பனர்களையும் குறித்து நிற்பதைக் காணலாம்.

1896ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜொகேந்திர நாத் பட்டாசார்யா எழுதிய ‘‘Hindu castes and sects’ என்னும் நூல், இந்தியத் துணைக் கண்டத்துப் பார்ப் பனர்களை “சாஸ்திரங்கள் அடிப்படையிலும், மக்கள் நம்பிக்கையின் அடிப்படையிலும்”, இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறது. அவை,

1. பஞ்ச கௌர் (Panch Gaur) , 2. பஞ்ச திராவிட(Panch Dravida).

பஞ்ச திராவிட என்னும் பிரிவில்,

1. ஆந்திர (Andhra)

2. திராவிட (Tamils and Kerala)

3. கர்னாடகா (Karnataka)

4. மகாராஷ்ட்ரா (Maharasthra)

5. குஜராத் (Gujarat)

ஆகியவை அடங்குவதாக இந்நூல் குறிப்பிடுகிறது. ‘பஞ்ச கௌர்’ என்பதிலும் ‘பஞ்ச திராவிட’ என்பதிலும் பார்ப்பனர் என்ற பின்னொட்டு காணப்படாமையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புராணங்களிலும் திராவிடம் பற்றிய சில பதிவுகள் இருப்பதாக அறிய முடிகிறது. தொன்மங்கள் மிகைப்படுத்தப் பட்டவையாகவும், கட்டுக்கதைகள் நிரம்பியவையாகவும் இருக்கக் கூடியவை. ஆனால் அவற்றுள் சில வரலாற்றுச் செய்திகள் உள்ளீடாக இருக்கும். இணையத்தள கட்டுரை ஒன்று “According to the Puranas, the Dravida people are the descendants of the Vedic Turvasha people” (http://www.indianetzone.com/9/ dravidian_race.htm)

திராவிடர் என்போர் துர்வாச மக்களின் வழித்தோன்றல்கள் என்று கூறும் இச்செய்தி வேத ஆரியர்களுடன் திராவிடர்களைத் தொடர்பு படுத்துகிறது. இது மேலும் நுணுகிப் பார்க்க வேண்டிய ஒன்று ஆகும்.

தென்னிந்திய பார்ப்பனர்கள் தாம் ‘திராவிடர்’ என அறியப்பட்டனர் என்பதற்கு மேலும் சில சான்றுகள் உள்ளன. ‘ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்று அழைத்துள்ளார்; அதாவது, ‘தென்னகக் குழந்தை’ என்று அதற்குப் பொருள்’ என்று எளிமையாகப் பொருள் சொல்லி திருஞானசம்பந்தரை தென்னக நாயகனாக சில தமிழறிஞர்கள் ஒப்பனை செய்வதுண்டு. ஆனால், ‘திராவிட சிசு’ என்ற சொல்லாடல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

ஆதிசங்கரர் என்னும் கேரளத்தைச் சேர்ந்த நம்பூதிரிப் பார்ப்பனர்(8ஆம் நூற்றாண்டு) தாம் எழுதிய சௌந்தர்ய லகரி என்னும் நூலின் 75வது பாடலில் திராவிட சிசு என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். அப்பாடலின் பொருள் இதுதான்.

“ஓ, மலையரசனின் மகளே, உனது மார்பிலிருந்து(Breast) வாங்கி வரும் பால், உண்மையில் அலையாக எழுந்துவரும் அருந்தேன் ஆகிய கல்விக் கடவுள் சரஸ்வதி என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், அருள் நிறைந்த உன்னால் அளிக்கப்பட்ட பால், இந்த ‘திராவிட சிசு’வை, ஒருவரின் மனத்தைக் கொள்ளையிடும் படைப்புகளை உருவாக்கும் மாபெரும் மாபெரும் புலவர்களுக்குள் மன்னன் ஆக்கியது” (பாடலின் பொருள் கட்டுரையாளரின் நடையில்)

ஆதிசங்கரர் குறிப்பிடும் ‘திராவிட சிசு’ என்பதற்கு என்ன பொருள்? அவர் எவரைக் குறிப்பிடுகிறார்? ஆதிசங்கரர் திராவிட சிசு என்று தன்னைத் தான் சுட்டுகிறார் என்று சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள் (http:// www.hindunet.com – The Roots of the Word Dravida – Hindunet Forums). திராவிட என்பதற்கு ‘தமிழ்’ என்று பொருள் கொண்டு அது திருஞான சம்பந்தரைக் குறிக்கும் சொல் என்று கருதுவோரும் உண்டு. ஆனால், தமிழ் மொழியையோ அல்லது பிறந்த நிலப்பகுதியையோ ஒருவரின் அடையாளமாகக் கருதக் கூடிய மனிதனாக வர்ண சாதி மதவாத உணர்வு படைத்த, ஆதிசங்கரரைக் கருதமுடியாது. ‘திராவிட’ என்ற சொல்லுக்கு பார்ப்பனர்களைப் பொறுத்தவரை ‘தென்னகப் பார்ப்பனர்’ என்பதே முதற்பொருள். ‘திராவிட சிசு’ என்பதற்கு ‘தென்னகப் பார்ப்பனக் குழந்தை’ என்பதே பொருள். அது ஆதிசங்கராக இருந்தாலும், திருஞானசம்பந்தராக இருந்தாலும் பொருந்தக் கூடியதே.தென்னிந்தியப் பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர் என அழைத்துக் கொள்கின்றனர்’ என்ற பதிவையும் செய்து வைத்திருக்கிறார். (எட்கர் தர்ஸ்டன், குலங்களும் குடிகளும், தொகுதி - மிமி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987, பக். 251)

எட்கர் தர்ஸ்டன் இந்தியாவில் உள்ள பார்ப்பனர் களின் பல்வேறு பிரிவுகளைப் பற்றியும் விவரிக்கிறார்:

“இவர்களுள் தமிழ்ப் பார்ப்பனர்கள் அல்லது திராவிடர் என்ற பிரிவினைச் சேர்ந்தவர்களே தென் மாவட்டங்களில் (அன்றைய சென்னை மாகாணத்தில்) மிகுதியாகக் காணப்படுபவர்கள்”. (எட்கர் தாஸ்டன், தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி மி, பக். 425-, 426)

திராவிடர் எனப்படும் அவர்கள் 1. ஸ்மார்த்தர் என்றும் 2. வைணவர்கள் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளனர்.

ஸ்மார்த்தர் என்னும் முதற்பிரிவுக்குள் வடமர், தேசிகன், பிரகசரணம், வாத்திமர், அஷ்டசகஸ்ரம், தீட்சிதர், சோழியர், முக்காணி, காணியாளர், சங்கேதி, பிரதமசாகை, குருக்கள் - ஆகிய 12 பிரிவினர் அடங்குவர். இவற்றில் முதற்பிரிவான வடமர் பிரிவில் 5 உட்பிரிவினர் அடங்குவர். அந்த உட்பிரிவுகளுள் ஒன்று - ‘தும்ம குண்ட திராவிடர்’ என்பது.

அது போன்று ‘பிரகசணம்’ என்றும் பிரிவின் 9 உட்பிரிவு களுக்குள் ஒன்று ‘புதூர் திராவிடர்’ என்பது.

தெலுங்கு பிரமணர் களிடையே 1. வைதிகி 2. நியோகி 3. தம்பல 4. குடியேறியவர் என நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் நான்காவது பிரிவான குடியேறியவர் என்ற பிரிவில் ‘புதூர் திராவிடர்’, ‘தும்ம குண்ட திராவிடர்’ என்ற உட்பிரிவுகள் உள்ளன. நன்றி முனைவர் த.செயராமன்

சங்ககாலத்திற்குப் பின் 20 ஆம் நூற்றாண்டுவரை, 1800 ஆண்டு கால வரலாற்றில். களப்பிரர், பல்லவர் - 700 ஆண்டுகளும், விஜயநகர, நாயக்க அரசர்கள் 400 ஆண்டுகளும் தமிழரை ஆண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திராவிட மரபினர். தமிழர்களது சோழர் காலம் முழு வீச்சுடன் ஆண்டது, 300 ஆண்டுகளுக்கும் குறைவாகவே.

தமிழர் முழுமையாக ஆட்சி செய்த சங்ககாலத்தில், ஆரியத்திற்கு எதிரான அரசியலே இருந்தது. அதன்பின்னர்தான் தமிழகத்தில் ஆரியம் வளர்ந்தது. இந்த அடிப் படையில் அணுகினால், உண்மையில் ஆரியத்தை வளர்த்தெடுத் தவர்கள் தமிழர்களா? திராவிடர்களா? என்பது வெளிப் படையாகப் புரியும்.

இது ஒரு எளிய உண்மை யே. ஆனால், இந்த எளிய உண்மை யைக்கூட தமிழர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதில்தான், திராவிடக் கோட்பாட்டாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தமிழகப் பள்ளிகளின், கல்லூரி களின் பாடத் திட்டங்கள் மேற்கண்ட வரலாற்றை மறைக்கின்றனதிராவிட அரசர்களின் ஆரியக் கொள்கைகளை மறைப் பதும், தமிழர் மரபான ஆரிய எதிர்ப்பை இருட்டடிப்பு செய்வதுமே இவர்களின் நோக்கம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆரியத்தின் பிள்ளையே திராவிடம்!

ஆரியம், சிந்துவெளியில் தமிழரை வென்றது. அப்போது ஆரியத்துக்கென அரசு இல்லை கட்டிக்காக்க வேண்டிய நாகரிகம் இல்லை. எனவே, அழித்தொழிப்புப் போர் நடத்தி, தமிழரை வீழ்த்தியது.

பின்னர், ஆரியம் தமக்கென அரசுகளை உருவாக்கிக் கொண்டது. அப்பகுதியே விந்திய மலைக்கு வடக்கே உள்ள ஆரியவர்த்தம் எனப்பட்டது. தமிழர், அரசுகள் ஆரியரைப் படையெடுத்து வென்று இந்திய நிலப்பரப்பில் தமிழரது மேலாண்மையை நிலை நிறுத்திய போதெல்லாம், ஆரியம் தமிழரிடம் தோற்றுச் சரணடைந்தது. ஆனால், ஆரியம் மிக நுட்பமாக செய்த இரண்டகம், தமிழ் இனத்தில் ஆரியக் கலப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேரினத்தை, தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பிரித்தமைதான்.

சங்ககாலத்தின் இறுதி முதல், இன்றுவரை தமிழருக்கு எதிராக ஆய்தம் ஏந்தும் இனங்களாக மேற்கண்ட தெலுங்கர், கன்னடர் இனங்கள்தான் உள்ளன. இவை, ஆரியத்தின் பிள்ளைகள்தான். இம்மொழிகளில் சமக்கிருதம் மிகையாக உள்ளது. இவ்வினங்களின் மதிப்பீடுகள் ஆரியத்திற்குச் சார்பான வையாக உள்ளன. இந்தி மொழி யைக் கற்பதில் இவ்வினங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தென் னிந்திய நிலப்பரப்பில் இந்தியை ஏற்காத ஒரே இனம் தமிழ் இனம் தான். தெலுங்கு, கன்னட இனத்தவர் தமிழரை ஆண்ட காலங்களில் எல்லாம், வட மொழியையே தூக்கிப் பிடித்தனர். அந்தளவு இவ்வினத் தவருக்கு ஆரியத்தின் மீது பற்று உண்டு.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.