• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

தனிநாயகம் அடிகளார் & நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கு

Recommended Posts

தனிநாயகம் அடிகளார் & நூற்றாண்டு நினைவுக் கருத்தரங்கு

கிருஷ்ண பிரபு

லயோலா கல்லூரியும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு என்ற முழுநாள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. அதனை முன்னிட்டுப் பல்வேறு அமர்வுகளில், தனிநாயகம் அடிகளார் தமிழ் மொழிக்கு ஆற்றிய அரும்பணிகளைக் குறிப்பிட்டுக் கல்விப்புலத்தில் இயங்கும் ஆய்வாளர்கள் பலர் கட்டுரைகள் வாசித்தார்கள்.

“தனது முப்பதாவது வயதில் தமிழ் படிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழ்மொழியின் செழுமைக்கும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கும் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய தமிழ்ப்பணி முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும் தனிநாயகம் அடிகளார் பணிகளைச் சுட்டும் ஆளுமைச் சித்திரம் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் நம்மிடம் இல்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்று. அந்தக் குறையினைக் களையும் துவக்கமாக இக்கருத்தரங்கு அமைய வேண்டும்” என ஆ.இரா. வேங்கடாசலபதி கருத்தரங்கின் நோக்கத்தினை எடுத்துரைத்தார்.

DSC_9602.jpg

காலை ஏற்பாடாகியிருந்த முதல் அமர்வில் வே. வசந்திதேவி, ய. மணிகண்டன் ஆகியோர் கட்டுரை வாசித்தனர். பின்னர் தனிநாயகம் அடிகளாரின் தமிழ்த் தொண்டைக் காட்சிகளாக விவரிக்கும் The Roving Ambassador Of Tamil ஆவணப்படம் திரையிடப்பட்டது. மதியம் ஏற்பாடாகியிருந்த அமர்வுகளில் ஜி. சுந்தர், பா. மதிவாணன், பவானி ராமன், க. காமராசு ஆகியோரது கட்டுரைகள் இடம்பெற்றன.

கிறித்துவத்தைப் பரப்ப மேற்கத்திய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த அருட்தந்தைகளில் பலரும் தமிழ்த் தொண்டு செய்துள்ளனர் என்பது வரலாறு. டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஜெர்மானியர்கள் என இறை ஊழியம் செய்ய வந்த பாதிரியார்கள் தமிழால் ஈர்க்கப்பட்டு, செவ்வியல் படைப்புகளில் சிலவற்றை உலக மொழிகளுக்கு மொழிபெயர்த்துத் தந்துள்ளனர். கீழைத்தேயவியல், திராவிடவியல், தமிழியல் போன்ற கருத்தாக்கங்களை முன்னெடுத்ததில் பாதிரிமார்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தவகையில் சேவியர் தனிநாயகம் அடிகளார் செய்த தமிழ்த் தொண்டு அளப்பரிய ஒன்று. ஸ்பானிஷ், இத்தாலி, போர்த்துக்கீசிய மொழி, பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் போன்ற பத்து மொழிகளில் புலமை உடையவர் தனிநாயகம் அடிகளார்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்து தந்தைக்கும், கிறித்துவ தாய்க்கும் பிறந்தவர் தனிநாயகம். ஒரு கத்தோலிக்கத் துறவியாகத்தான் கேரளாவிற்கு வந்திருக்கிறார். தனிநாயகத்தின் தந்தைவழி முன்னோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாயினும், இந்தியாவிற்கு வரும்வரை இவர் தமிழ் படிக்கவில்லை. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் பள்ளிக்கு உதவி தலைமையாசிரியராகச் செல்கிறார். நான்கு வருடங்கள் பள்ளியில் பணியாற்றியபோது, தமிழைக் கற்கவும் பயிற்றுவிக்கவும் செய்கிறார். 1945இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை படிக்க விண்ணப்பிக்கிறார். அதன்பின், ‘A study of nature in classical Tamil poetry’ என்ற தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார். இந்த ஆராய்ச்சி நூல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்த நூலாகும்.

1950களின் துவக்கத்தில் தமிழ்ப் பயணியாக ஜப்பான், தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா என பல நாடுகளுக்கும் செல்கிறார். Tamil Culture என்ற ஆங்கில இதழைத் துவங்கி, உலகின் பல நாட்டு மொழியியல் அறிஞர்களின் மொழி சார்ந்த கட்டுரைகளைப் பிரசுரிக்கிறார். தான் தொடங்கிய உலகளாவிய தமிழ் ஆராய்ச்சிக்கழகம் (IATR) மூலம் உலகத்தமிழ் மாநாடுகளையும் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்துகிறார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 1980ஆம் ஆண்டு இவர் இறக்கும்வரை, சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடர்ந்து இயங்கினார்.

கால்நூற்றாண்டுக்கும் அதிகமாகத் தமிழ்ப்பணியாற்றிய தனிநாயகம் அடிகளின் முனைவர் பட்ட ஆராய்ச்சி தமிழ் இலக்கியம் காட்டும் பழங்காலக் கல்விமுறையைப் பற்றியது ஆகும். போதிய தரவுகள் கிடைக்காமையினால் தமிழரின் கல்வி அமைப்பைப் புரிந்துகொள்ள இயலாதவர்களாகத் தவிக்கும் நமது நிலைமையை எடுத்துரைத்த வசந்திதேவி, இன்றைய வணிகக் கல்வியைக் கடுமையாகச் சாடினார். தனிநாயகம் நடத்திய ஆங்கில ஆய்வு இதழான தமிழ் கல்ச்சுரல் பற்றிய ய. மணிகண்டனின் பேச்சு அடுத்து நிகழ்ந்தது. அவ்விதழின் உள்ளடக்கத்தை விதந்துரைக்கும் நோக்கில் அமைந்த அவரது உணர்ச்சிகரமான பேச்சு தமிழ் ஆய்வுலகில் இயங்கிய அயல் அறிஞர்களை மையமிட்டது. மாணவர்களுக்கு உற்சாகத்தைத் தருவதாகவும் வழிகாட்டுவதாகவும் அமைந்தது அப்பேச்சு.

மதிய அமர்வில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் ஜி. சுந்தரின் எழுதப்பட்ட உரையை, பிரகாஷ் வாசித்தளித்தார். தமிழியல் ஆய்வுக் களங்களாக உலக நூலகங்கள் உருவான கதையை வரலாற்று அடிப்படையில் விவரித்தது அக்கட்டுரை. குறிப்பாக 1700-1900 காலத்திய தமிழ்ச்சுவடிகள் மதப்பணியும் நிர்வாகப்பணியும் ஆற்ற வந்தவர்கள் படிக்கவும் பாதுகாக்கவும் எனக் கொண்டு சென்ற செயலை விவரமாக அவர் எடுத்துச் சொன்னார்.

நிலக்கிடக்கையும் தமிழ்க்கவிதையும் என்ற தனிநாயகம் அடிகளின் புகழ்பெற்ற நூலைப் பற்றிய விமர்சனக் கட்டுரையாக அமைந்தது பா. மதிவாணனின் பேச்சு. அந்த நூல் அவரது சமயம் கடந்த பார்வையையும், இந்தியக் கவிதைகளுடன் தமிழ்க் கவிதைகள் கொண்டுள்ள ஒத்த தன்மையையும் காட்டுவதாக மதிவாணன் சொன்னார். இன்றைய இளைஞர்களின் கருத்தாடலில் தனிநாயகம் செலுத்தும் புதிய பார்வையை க. காமராசு எடுத்து விளக்கியதாக அடுத்த ஆய்வுரை அமைந்தது. இன்றைய தமிழ்த் தேசியக் கருத்தாடலின் தொடக்கப் புள்ளியாகப் பேராசிரியரின் பல பணிகள் அமைந்ததைக் குறிப்பாக இவர் சுட்டினார்.

உலகளாவிய தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை தனிநாயகம் உருவாக்கி அதன் பேரால் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியது உலகம் அறிந்த செய்தி. இதன் உருவாக்கத்தைத் தென்கிழக்கு ஆசியநாடுகளில் எழுந்த அரசியல், பண்பாட்டு எழுச்சியில் தேடுவதாக அமைந்தது பவானி ராமனின் கட்டுரை. டொரான்டோ பல்கலைக்கழகப் பேராசிரியரான இவரது ஆங்கிலக் கட்டுரையை, சலபதி வாசித்தளித்ததோடு அதன் சுருக்கத்தைத் தமிழில் விளக்கினார். பேராசிரியரின் சமயநோக்கு என்ற தலைப்பில் ஆ. சிவசுப்பிரமணியன் நிகழ்த்தவிருந்த உரை தவிர மற்றபடி கருத்தரங்கம் திட்டமிட்டபடி நிகழ்வுற்றது. லயோலா கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.

காலையில் நிகழ்வுற்ற தொடக்கவிழாவில் தனிநாயகம் அடிகளார் இன்று நினைவுகூரப்பட வேண்டியதன் தேவையை லயோலா கல்லூரியின் அதிபர் ஜெயபதி வலியுறுத்தினார். தனிநாயகம் குறித்த செய்திகளை முன்னெடுத்துச் செல்வதில் பல அமைப்புகளோடு இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வரும் அமுதன் அடிகள், பேராசிரியர் பணிகள் பற்றி ஒரு முழுச்சித்திரத்தைச் சுருக்கமாகத் தன் சிறப்புரையில் அளித்தார். நிறைவாக, தனிநாயகம் அடிகள் குறித்து சென்னைக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கல்லூரி செயலர் ஆல்பர்ட் வில்லியம் நிறைவுரை ஆற்றினார். தமிழ்த்துறையின் தலைவர் அந்தோணி செல்வநாதன் வரவேற்புரையுடன் தொடங்கிய நிகழ்வு, தேசிய கீதத்துடன் மாலை இனிது நிறைவுற்றது.

http://www.kalachuvadu.com/issue-181/page158.asp

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this