Jump to content

புதிய அரசுக்கான காலஅவகாசம் சர்வதேச சூழலை மாற்றிவிடும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய அரசு தேசிய தமிழ்மக்கள் பிரச்சினைத் தீர்வு காண்பதற்கு கால அவகாசத்தை எம்மிடம் கோரியுள்ளனர். எனவே தமிழ் மக்கள் தமது தீர்வு திட்டத்திற்காக சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் தற்போது தமிழ் மக்களுக்கு சார்பாக உள்ள சர்வதேச அரசியல் கொள்கை மாறிவிட வாய்ப்புள்ளது.

 

கடந்த ஆட்சியின் போது நாட்டில் ஒட்டுமொத்தமாக ஊழல் இடம்பெற்றிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி அலரிமாளிகைக்கு சென்று வந்து சொன்னாராம் 47 கடற்படை வீரர்கள் அங்கு சமையல் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்று. இதிலிருந்து அலரி மாளிகையில் எத்தனை மில்லியன் ரூபா ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்காக செலவிடப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மஹிந்தவின் இரண்டாவது மகனின் செருப்பின் விலை ஒன்றரை இலட்சம் ரூபா. அந்த அளவிற்கு இந்த நாட்டில் ஊழல் இடம்பெற்றிருக்கின்றது.

எனவே ஆட்சி மாற்றம் என்பது சிங்கள மக்களுக்கும் தேவையானதாக இருந்தது என்பதனையும் நாம் பார்க்கவேண்டும். வெறுமனே சிங்கள மக்கள் மாத்திரம் இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவில்லை. வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் மற்றும் மலையக தமிழர்களுமாக இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். எனவே சிங்கள மக்களுக்கு ஆட்சி மாற்றம் தேவையாக இருந்தாலும் சிறுபான்மையினருக்கு அதை விட பல மடங்கு அதிகமாக ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது.

தற்போது ஆளும் கட்சியுடன் வந்திருக்க கூடிய முஸ்லிம் காங்கிரஸ், ரிசாட் பதியுதீன் தலைமையிலான கட்சி என்பன முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் மஹிந்த ராஜபக்‌ஷவை விட்டு விலகவில்லை. மைத்திரிபால சிறிசேன, அரசில் இருந்து விலகிய போதும் இவர்கள் விலகவில்லை. எப்போது அவர்கள் விலகினார்கள் என்றால் மைத்திரி வெல்வார். முஸ்லிம் மக்கள் தாம் சொல்வதை கேட்கமாட்டார்கள். மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க போகின்றார்கள். அடுத்த தேர்தலில் தாம் முஸ்லிம் மக்களால் தோற்கடிக்கப்படலாம் என்றெல்லாம் நன்கு உணர்ந்தபின்னரே அவர்கள் மைத்திரி பக்கம் மாறினார்கள்.

மாறியது மாத்திரமல்ல அமைச்சர்களாகவும் இருக்கின்றர்கள். ஒரு முஸ்லிம் தலைவர், தான் எதிர்க்கட்சியில் இருந்து உதவி செய்ய வேண்டுமென்றால் எத்தனை மில்லியனுக்கு தன்னை பேரம் பேசினார் என்பது எமக்கு தெரியும். இலங்கை ரூபாவில் சுமார் 60 கோடியைக் கேட்டிருந்தார். ஆகவே இந்த மாற்றங்களில் தங்களது சட்டைப் பைகளை நிரப்பியவர்களும் இருக்கின்றார்கள். இந்த ஆட்சி மாற்றம் ஊழலை ஒழிப்பதற்கு தேவை என்று கூறிய போதிலும் இந்த ஆட்சி மாற்றத்திலும் ஊழல் இடம்பெற்றிருக்கிறது. ஆகவே புதிய அரசுத் தரப்பினர் எவ்வாறு ஆட்சியை கொண்டு போகப்போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நாம் மஹிந்த ராஜபக்‌ஷ அரசுடன் ஒரு வருட காலத்தில் 18 தடவைகள் சந்தித்து பேச்சு நடத்தினோம். ஆனால் அந்த பேச்சுக்களால் எந்தவிதமான முன்னேற்றமும் கிடைக்கவில்லை. நாம் தீர்வு திட்டத்தை கொடுத்தபோது அரசு அதற்கு கருத்துத் தெரிவிக்காது தெரிவுக்குழுவுக்கு வருமாறே அழைத்தது. தற்போதைய அரசிலும் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த சொற்றொடரும் கிடையாது. குறைந்தது தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்கும் வேலைத்திட்டம் கூட அதில் கிடையாது.

ஆனால் தேர்தலுக்கு பிற்பாடு நாம் ஜனாதிபதியையும் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திரிக்காவையும் சந்தித்தோம். அதன்போது எமது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசினோம். அரசியல் தீர்வு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் வீடுதலை, காணி அபகரிப்பு போன்ற முக்கிய விடயங்கள்கள் பற்றி எடுத்துக் கூறினோம். எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு பதிலைத் தந்துள்ளனர். எனினும் இவை எல்லாம் நிறைவேற்றப்படுமா என்பதனை நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு அதிகப்படியான அதிகாரங்களுடன் சுயாட்சி கொடுப்பதாக கூறுகின்றார். ஆனால் அவர்கள் கூறுவது நடைமுறைக்கு வரவேண்டும். பேச்சுவார்த்தைகள் சரியான முறையில் நடைபெறவேண்டும். அதில் சரியான முடிவுகள் எட்டப்பட வேண்டும். அவை இல்லாத பட்சத்தில் அது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும். ஆட்சி மாற்றத்தின் காரணமாக சர்வதேச அரசியலிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் சிறந்த வெளிநாட்டு இராஜதந்திர கொள்கையை கொண்டிருக்கும்.

இனி இந்தியா, அமெரிக்கா என்பன இந்த அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கும். சீனாவின் திட்டங்கள் மீளாய்வு செய்யப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னும் நாம் சில வருடங்கள் இந்த தீர்வுக்காக காத்திருக்க வேண்டிவரும். அது எமக்கு தற்போது இருக்கின்ற சர்வதேச ஆதரவைக் குறைத்து விடும். இந்த அரசாங்க வெளியுறவு கொள்கையால் இப்போது தமிழ் மக்கள் நலன் சார்ந்து இருக்கின்ற சர்வதேச அரசியல் இன்னும் சில காலங்களில் இல்லாமல் போய்விடலாம். இதனால் நாம் கூட்டமைப்பாக சிந்தித்து செயலாற்ற வேண்டியுள்ளது. மிகவும் நிதானமாக நாம் பணியாற்றவும் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

 

- சுரேஷ் பிரேமச்சந்திரன்

(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்)

நான் தேர்தலுக்கு முன்னர் எழுதியதை இப்போது சுரேஸ் கூறீ உள்ளார்.  

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.