Jump to content

தைப்பூசத்திருநாளும் தமிழ் கடவுளின் திருவிழாவும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

108-names-of-lord-muruga3.jpg

தை மாதம் பிறந்து விட்டது, தெட்சனாயனம் முடிந்து உத்தராயனம் காலம் தொடங்கி விட்டது. தமிழ் எனும் மொழி தந்த தலைவன் அழகன் முருகனுக்கு உகந்த நாளாம் தைப்பூசத்திருநாளும் வந்துவிட்டது.

குமரன் அந்த  ஆறுபடை வீட்டில் பழனியாண்டவர், திருப்பரங்குன்றன், பழமுதிர்ச்சோலை பாலகுமாரன், செந்திலாண்டவன், திருத்தணிகை வேலவன், சுவாமிநாதன் இப்படி பலபெயர் கொண்டு விளங்குகின்றான். சொல்ல சொல்லத்  தித்திக்கும் திருக்குமரன் பெயரும் அழகு, தமிழும் அழகு. எங்கெல்லாம் தமிழ் வாழ்கிறதோ அங்கெல்லாம் முருகன் வாழ்ந்து வாழ வழிவைத்துக் கொண்டிருப்பான்.

அண்ணனிடம் ஞானப்பழத்திற்கு சண்டையிட்டு, அப்பனிடம் பிரணவப்பழம் கொடுத்து, கிழவியிடம் சுட்டபழம் தந்து, தாயிடம் சக்திவேல்பழம் பெற்று தமிழின்  கருவாய் உலகிற்கு அரும்பழம் அளித்தவர். தைப்பூசத் திருநாளில் தேவரும், மூவரும் பூவுலகத்தவரும் போற்றி வணங்குவர். குமரனின் தமிழருள் பழம் பெறுவதற்கு சரவணனின் தலம் எங்கும் முருகனடியார்கள் காவடிகள் எடுத்தும் பால்குடம் ஏந்தியும், தலைமுடியை காணிக்கை செலுத்தியும் பலவிதமாக வழிபாடாற்றுவர். பால், பழங்கள், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி சந்தனம், தேங்காய் யாவும்அபிஸேத்திற்காக எடுத்துச் சென்று அவனை  குளிர்வித்தால் சக்திவேலன் எம்மை குளிர்விப்பான். அனைத்து வளங்களும் கிடைக்கச் செய்வான். என்பது கலியுகத்

தெய்வத்தின் மீது அனைத்து மக்களும் கொண்டுள்ள நம்பிக்கையாகும்.

 "நெஞ்சக்கனகல் நெகிழ்ந்துருக தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல் சேர்

 செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்."

நெஞ்சமானது நான் எனும் ஆணவ எண்ணங்களால் கல்லாகிப் போய்விடுகின்றது. பிறப்புகள் எனும் அலைகளால் கல்லாகிய மனம் மோதித் தள்ளாடி வதைப்படுகின்றது. இந்த நிலையில் எல்லாம் அவன் செயல் என நம்மனத்தை முருகன்பால் செலுத்த கனமாகிய மனமும் தேய்ந்து தஞ்சமடைகிறது. ஒன்றுபடும் வேளை கனம் குறையக் குறைய மனமானது லேசாகிவிடுகிறது. ஓய்வு ஏற்பட ஆனந்தம் உண்டாகிறது. ஆனந்தநிலையே நெகிழ்ந்த நிலையாகும்.இவ்வானந்த நிலையில் மனம் பாடிடும். பாடிக்களித்திடும்.

அப்படி பாடிக்களிக்கும்  உள்ளத்து அன்பால் பிறந்திடும் செவ்விய இயற்றமிழ் சொல்மலர்களால் புனையப்பட்ட அப் பாமாலையே கந்தரனுபூதி ஆகும். இப்பாமாலை சிறப்புற  வேண்டி பஞ்சாக்கர பிரணவ ரூவருபன், ஐங்கரத்தான் யானை முகத்தானை  அருணகிரியார் பணிந்து தம்பாடலுக்கு  பிழைகள் ஏதும் நேராது காப்பாக அணிசெய்கிறார். விநாயகரை முதல் தொழும் மரபு ஆலயங்களில் எப்பொழுதும் உண்டு.

வழிபடும் போது விக்கினேஸ்வரரை விக்கினங்கள் ஏதும் வராது முதலில் வணங்கிட வேண்டும். தலையில் குட்டி நினைவாற்றலை அதிகப்படுத்தி தோப்புக்கரணம் இட்டு உடலும் மூளையும் சுறுசுறுப்பு பெற்றிட விநாயகரை உள்ளன்போடு துதிக்கவேண்டும். அண்ணனை காப்பிட்டு தம்பி கந்தனுக்கு அனுபூதி செய்கிறார் அருணகிரி. அவர் கூடுவிட்டு கூடு பாய்ந்து அருந்தமிழை வளர்க்க அயராது பாடுபடுகிறார். அருணகிரியார் ஆபத்துக்கு உதவி செய்யப் போய் அவருடற்கூட்டை விட்டு கிளியின் உருவெடுத்து உதவினார். ஆனால் அவரைப்பிடிக்காதவர் அவருடலை எரித்து விட்டனர்.

ஆனாலும் கிளியின்  உருவிலே இருந்த அருணகிரியார் கந்தரனபூதி பெற்றவரல்லவா, அவர் முருகப்பெருமானின் மீது மாறாத பக்தியினால் கந்தரனுபூதி பாடுகிறார்.

" ஆடும் பரிவேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் 

 தேடும் கயமாமுகனைச் செருவில் சாடும் தனியானை சகோதரனே"

ஆடும் பரி சுயமாக அனைத்துவித நடனங்களையும் ஆடத்தெரிந்தபரி, நீலகண்டம் என அழைக்கப்படும் மயிலும்,வேல் முருகன் கையில் அணிந்து இருக்கும் ஞானவேல் அதாவது அனைத்தையும் வென்றுவிடும் ஞானம் இந்த ஞானமாகிய அறிவே ஆழம் அகலம் கூர்மை என்னும் மூன்று இலக்கணங்கள் அமையப்பெற்றதாக விளங்குகின்றது.

வேலின் அடிப்பகுதி ஆழமானதாக இடைப்பகுதி அகலமானதாக நுனிப்பகுதி கூர்மையானதாக இப்படி ஆழ்ந்த அகன்ற கூரிய அறிவு அமைய வேண்டும். தீமையை அழிக்க வல்ல படைக்கலமாகிய சக்திவேலும், அழகிய செயல் புரியும் சேவல், அதிகாலை கதிரவனாகிய சூரியோதயத்தை உலகிற்கு உணர்த்துவது, ஞானசூரியனை முருகப்பெருமானின் வரவையும் உணர்த்திடும். ஆதலால் அகில உலகங்களையும் ஒரு

நொடியில் சுற்றி வரும் திருமுருகனின் அருளைப் பெற்ற வாகனமாக விளங்கும் மயிலையும், ஞானவேலையும், திருக்கொடியில் வீற்றிருக்கும்,சேவலையும் பாடித்துதிக்கின்ற செயல் ஒன்றையே பணியாக அருள்வாய். தேவர்களை தேடிச்சென்று துன்புறுத்தும் கயமுகாசுரனை போர்களத்தில் சாடி போரிட்டு வென்ற ஒப்புயர்வற்ற மூலமுதல்வனான ஆனைமுகன் சகோதரனே. அருள் புரிவாய் என்று பணிந்து அடுத்த பாடலை தொடர்கிறார்.

"உல்லாச நிராகுல யோகவிதச் சல்லாப விநோதனும் நீயலையோ 

 எல்லாமற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியெ"

இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் சிவயோக மூர்த்தியும் இனிமையாகப் பேசுபவரும் மகிழ்ச்சியைத்தருபவரும்,அருள் விளையாடல் பலபுரிபவரும்,நீரல்லவோ ,நான் எனது எனும் புறப்பற்று அகப்பற்று நீங்கியதும் ஏற்படும் நலமாகிய பேரின்பம் அடையச் சொல்லால் உனது தீந்தமிழால் உபதேசித்தருள்வாய். தன்னை அழிக்கவந்த சூரனை வதை செய்ததோடு அவனுக்கும் தன்னுடனேயே மயிலாகவும் சேவலாகவும் விளங்கக்கூடிய சாயுச்சியப் பதவியைக் தந்தவர். முருகப்பெருமான் அப்படி விளங்கும் சுரபூபதியை  தயாமூர்த்தியை கந்தரனுபூதி பாடி நாம் தைப்பூச நன்னாளில் பணிந்து வணங்கிட எம் துன்பம் போக்கி இன்பம் அருளிடுவார். இதில் ஐயம் ஏதும் இல்லை. வேல் வேல் முருகா, வெற்றிவேல் முருகா. ஓம் சரவணபவ!

-அருந்தா

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.