Jump to content

தமிழ் மொழியின் இந்தச் சகரச் சிக்கலுக்கு தீர்வே இல்லையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியின் இந்தச் சகரச் சிக்கலுக்கு தீர்வே இல்லையா?

 
tamil-Language.jpg
கொஞ்ச நாளாகவே, இங்கு வெளிநாட்டிலேயே பிறந்த வளரும் தமிழ் சிறுமி ஒருத்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்து வருகின்றேன். உண்மையில், கற்பிக்கத் தொடங்கும் போதே உண்மையான ஆசிரியன் ஒருவன் உருவாகுகின்றான் என்பதை நான் உணர்ந்தேன். அவளுக்கு தமிழ் எழுத்துக்களைக் காட்டி கற்பிக்கத் தொடங்கிய போது தான், அவள் கேட்ட கேள்வி ஒன்றினால்? எனக்கே சில விடயங்கள் புரிந்தன. 
உலகத்தில் ஏழாயிரம் மொழிகள் இருக்கிறதாம், ஒவ்வொரு மொழியும் ஒருவிதத்தில் அழகு தான். உலகத்தில் எத்தனையோ தாய் இருந்தாலும், அவங்கவங்களுக்கு அவங்கவங்க தாய் தானே ஒசத்தி. அது போலத் ஒவ்வொரு மொழி பேசுகிற மக்களுக்கும் அவரவர் மொழி ஒசத்தி தான். 
 
நமக்கு நம் தமிழ் மொழி எப்போதுமே ஒசத்தி தான். ஒசத்தியாக நினைக்காதவரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது கிடையாது. இந்தியாவில் எத்தனையோ மொழி இருக்கிறது, ஆனால் தமிழ் மொழிக்கு தனிச் சிறப்புக்கள் நிறையவே உள்ளன. 
 
தமிழ் மொழி மிகப் பழமையானது, செம்மையானது, இனிமையானது. இன்று இந்தியாவில் பேசப்படுகின்ற எல்லா மொழிகளுமே 10-ம் நூற்றாண்டுக்கு பின்னர் உருவானவை, ஆனால் தமிழ் மொழி மட்டுமே கிமு 500-களிலேயே செம்மைப்படுத்தப்பட்டு, இன்று வரை அதிகளவு மாற்றமின்றி இருந்து வருகின்றது. நிச்சயமாகப் பழந்தமிழ், சங்கத்தமிழ், இடைத்தமிழ் எனத் தமிழ் மொழியும் மாறி வந்திருக்கின்றது, ஆனால் பழந்தமிழுக்கும் தற்காலத் தமிழுக்கும் இடையிலான வேறுபாடு என்பது மிகக் குறைவே. 
 
தமிழ் மொழியின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? தமிழில் நிறைய எழுத்துக்கள் கிடையாது, மொத்த எழுத்துக்களே 31 மட்டுமே. அது மட்டுமில்லை இந்திய மொழிகளில் க்க், ங்க் என வரும் பல கூட்டொலிகளை தனியாக எழுதுவதில்லை, இதைச் சேர்த்து எழுதுவதோடு அதற்கு என தனி எழுத்துக்கள் இருக்கின்றன. இதனால் அந்தந்த மொழிகளைக் கற்போர் நூற்றுக் கணக்கான எழுத்துக்களை கற்று நியாபகம் வைத்திருக்க வேண்டியும் இருக்கிறது. தமிழில் அந்த சிக்கல் இல்லை, தமிழில் மட்டுமே எழுதுவதும், வாசிப்பதும் மிகச் சுலபம். 
 
ஆனால் ! தொல் தமிழில் மிகவும் குறைவான ஒலிகள் மட்டுமே இருந்தன, அதனால் மிகவும் குறைவான எழுத்துக்களை மட்டுமே உருவாக்கினார்கள். தொல்காப்பியர் காலத்தில் முதன்மை எழுத்துக்களாக 12 உயிரெழுத்துக்கள், 18 மெய்யெழுத்துக்கள் இருந்தன. 
 
அதோடு குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்று சார்பு எழுத்துக்களும் இருந்தன. ஐகாரம், ஒளகாரம், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகியவைக்கு தனி வரிவடிவம் இருந்திருக்கவில்லை. ஐகாரம் -அஇ எனவும், ஒளகாரம் அஉ எனவும், குற்றியலிகரம் - இ எனவும், குற்றியலுகரம் உ எனவுமே எழுதப்பட்டன.
 
ஆனால் பிற்காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஐகாரம், ஒளகாரத்துக்கு தனி வரிவடிவம் வந்ததோடு. சார்பு எழுத்துக்கள் மூன்றில் இருந்து பத்தாக பெருகியதை 12-ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட நன்னூல் காட்டுகின்றது. அதன் பிறகு தமிழ் மொழி எவ்வளவோ வளர்ச்சி பெற்றுவிட்டன, இன்று தமிழ் மொழியில் பல ஒலிகள் பேச்சு வழக்கில் இருந்து வருகின்றன. சில ஒலிகள் தமிழ் மொழியில் இன்று விலக்கவே இயலாத அளவுக்கு இணைந்துவிட்டன. ஆனால், அந்த ஒலிகளை முறையாக எழுதும் வண்ணம் தமிழ் மொழி எழுத்துக்கள் வளர்ச்சியடையவில்லை. 
 
இதனால் தமிழில் இருக்கின்ற முதன்மையான எழுத்துக்களைக் கொண்டும், சில சமயங்களில் ஜ, ஸ, ஷ, ஹ போன்ற பல்லவ எழுத்துக்களை சேர்த்தும் எல்லா ஒலிகளையும் எழுதி வருகின்றோம். ஆனால் ! இங்கு தான் ஒரு பிரச்சனை கிளம்பியது. 

கடந்த முப்பதாண்டுகளில், தமிழ் மொழியானது அதிகளவு சிதைவுக்கு உள்ளாகி வருவதும், பெருமளவில் தமிழ் மயமாக்கப்படாமல் அப்படியே வேற்று மொழிச் சொற்களை ஏற்றுப் பயன்படுத்தி வருவதாலும், அதன் அடிப்படை இலக்கணத்தில் இருந்து பேச்சு மொழி அழியத் தொடங்கிவிட்டதோ என்ற எண்ணமும் எழுகின்றது.

ஆனால் ! தமிழ் மொழியானது அதன் உண்மையான வடிவங்கள் அதன் வட்டார மொழிகளில் இன்றளவும் தொடர்ந்து நிலைத்து வருவது ஒரு ஆறுதலான விடயம். அவ்வாறான ஒரு சிறப்பாம்சமே தென் தமிழகத்துப் பேச்சுக்களில் மொழி முதலில் வருகின்ற சகரம் சகரமாகவே ஒலிக்கப்படுவது. 

 
தமிழ் மெய்யெழுத்துக்களில் மூன்றாவது எழுத்தான சகர மெய் ( ச் ) என்ற எழுத்தை இன்று பலரும் மெய்யாக வரும் போது "ச்" எனச் சொன்னாலும், உயிர் மெய்யாக மாற்றும் போது ( ச, சா, சி, சீ, செ, சே, சை, சொ, சோ, சௌ ) அவற்றை ஸ என ஒலிக்கின்றார்கள்.

வல்லின ஒலியனான சகரத்திற்கு மூன்று மாற்றொலிகள் உள்ளன. சொல் முதலிலும் இடையிலும் இரட்டித்தும் மெல்லின எழுத்துகளுக்கு அடுத்தும் வரும்பொழுது இந்தச் சகரத்தின் ஒலிப்பில் மாற்றம் இருப்பதை உணர/கேட்க முடியும்.

  •  [Ch] சகரம், சொல் முதலில் வரும் போதும், நடுவில் இரட்டித்து வரும்பொழுதும் சொல் நடுவில் வல்லினத்தை அடுத்து வரும்பொழுதும் இம்மாற்றொலியைக் கேட்க முடியும். எடுத்துக்காட்டு. பச்சை, மொச்சை, கட்சி, பட்சி. 
  • [ J ] சகரத்தின் மற்றொரு மாற்றொலியைச் சொல் நடுவில் மெல்லினத்தை அடுத்து வருகின்றபொழுது கேட்க முடியும் எடுத்துகாட்டு மஞ்சள், பஞ்சு, கொஞ்சு, கெஞ்சு.
  • [ S ] சகரத்தின் மூன்றாவது மாற்றொலியைச் சகரம் சொல் முதலிலும் சொல் நடுவில் இரண்டு உயிர்களுக்கு இடையிலும், ல் ஒலியனுக்கும் ஒரு உயிருக்கும் இடையிலும் வருகின்றபொழுதும் உணர முடியும். எடுத்துகாட்டு சாப்பிடு. சட்டை, பசி, ஊசி, வல்சி.
ஏன் இந்தக் குழப்பம் ? 
 
தொடக்கக் காலங்களில் பல பிராகிருத, சமற்கிருதம் போன்ற வடமொழி சொற்கள் தமிழுக்கு வந்து சேர்ந்தன. இவற்றை எழுத தமிழில் தனி எழுத்துக்கள் கிடையாது, அதனால் தமிழில் இருக்கின்ற எழுத்துக்களையே பயன்படுத்தினார்கள். உதாரணத்துக்கு SEVA என்ற வடசொல் தமிழில் சேவை என ஏற்கப்பட்டது. ஆனால் தமிழில் SA என எழுத தனி எழுத்துக் கிடையாது, அதனால் அதனை ஒத்த CHA ( ச ) -வை SA என எழுதவும் பயன்படுத்தினார்கள். ASHRAM என்பதை தமிழில் ஆச்ரமம் என எழுதினார்கள். இவ்வாறு வடமொழியின் ஸகர ஒலி எழுத்துக்கள் அனைத்தையும் தமிழில் சகரம் கொண்டு எழுதினார்கள். காலப் போக்கில், ச என்பதே ஸ என்ற நிலையானது. ச் மட்டும் பிழைத்துக் கொண்டது. இன்று தமிழர்கள் பலரும் CHA ( ச )- வை மறந்துவிட்டனர். நல்லகாலமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, யாழ்ப்பாணம் போன்ற தென் தமிழக வட்டார வழக்குகளில் CHA ( ச ) இன்றளவும் உயிரோடு இருக்கின்றது. மலையாளத்தில் CHA, SA வேறுபாடுகளைக் காட்ட தனித் தனி எழுத்துக்கள் உள்ளதால், தொல் தமிழ் CHA ( ச )-கர சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. 
 
எடுத்துக்காட்டுக்கு: சோறு, சேறு, சொல், செல் போன்ற பச்சைத் தமிழ்ச் சொற்கள் முறையே CHORU, CHERU, CHOL, CHEL எனத் தான் ஒலிக்க வேண்டும். ஆனால் இன்றைய பெரும்பாலான தமிழர்கள் இதனை SORU, SERU, SOL, SEL என ஒலிக்கின்றார்கள். கொடுமையல்லவா? ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டின கதையாகிவிட்டது, தமிழின் சகர ஒலி. சந்தனம், சந்திரன், சர்க்கரை போன்றவைகள் கூட முறையே CHANDANAM, CHANDIRAN, CHARKKARAI என ஒலிக்கப்படாமல் SANDANAM, SANDIRAN, SARKKARAI என்றாகிவிட்டது. சேர, சோழ பாண்டியர் என்பதை CHERA, CHOLA, PANDIYAR என ஒலிக்காமல் SERA, SOLA, PANDIYAR எனச் சொல்வதே பிழையானது. 
 
இவ்வாறு CHA ( ச )-கர ஒலிகள் ஒவ்வொன்றும் தமிழில் இருந்து அழிந்து வருவதை தடுக்கவோ, காக்கவோ தமிழறிஞர்கள் ஒருவரும் முயலவே இல்லை என்பது தான் வேதனையான மற்றுமொரு உண்மையாகும். 
 
"சகார ஞகாரம் இடைநா அண்ணம்"  என்னும் நூற்பா தொண்ணூற்றில் அடிவயிற்றிலிருந்து மேலேழுந்து வருகின்ற ஓசைக் காற்றை மேல்வாய்ப் பகுதியின் நடுவில் நாவின் இடைப்பகுதியைப் பொருந்தி தடுப்பதால் ‘ச்’, ‘ஞ்’ ஆகிய மெய் எழுத் துகள் பிறந்து ஒலிக்கின்றன.
 
"மெய்யின் வழிய துயிர் தோன்று பிழையே" என்னும் நூற்பா பதினெட்டில் உயிர் மெய் எழுத்துகளில் முதழில் மெய்யும் பின்பு உயிரும் ஒழிக்கின்றன என விளக்கு வதால் சகர உயிர்மெய் எழுத்துகள் யாவையும் முதழில் மெய்யின் ஒசையை ஒழிந்து பின்பு உயிரின் ஓசையை ஒலிக்க வேண்டும்.
 
அதாவது ச்+அ = ச என்பதை CH+A = CHA என்றே ஒலிக்க வேண்டுமே ஒழிய, CH+A = SA என்று ஒலிப்பதே மிகப் பெருந்தவறாகும். மெய் எழுத்தான ‘ச்’ (சகரம்) வல்லின வகையைச் சார்ந்ததால் அதை எப் பொழுதும் நன்கு பொருந்தி (அழுத்தமாக) வன்மையாக ( CHA ) என ஒலிக்க வேண்டும். 
 
ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது, தமிழின் மெய்யொலியான CHA ( சகரம் )- முற்றாக அழியும் ஆபத்தில் இருக்கின்றது. அதனை மிகச் சரியாக உச்சரிப்பவர்களைக் கூட தமிழாசிரியர்கள் உட்பட பலரும் தவறாக ஒலிக்க வழி வகுக்கின்றனர், அல்லது கிண்டலும் கேலியும் செய்யப்படுகின்றனர்.

இன்று CHA ஒலியை தமிழில் குறிப்பாக இணையத்தில் எழுத பலரும் முயல்கின்றனர், அவர்கள் யாவரும் ச்ச என எழுத முற்படுகின்றனர். தமிழில் ச் என்பது CH என்றே ஒலிப்பதால் ச் என்பதற்கு அடுத்து வரும் ச என்பது SA என ஒலிக்காமல் CHA என ஒலிக்கப்படுகின்றது, அதனால் ச்ச என்பதை CHA -வுக்கு எழுதுகின்றனர். ஆனால் தமிழ் இலக்கணத்தில் மெய்யெழுத்தில் சொற்கள் தொடங்குவதில்லை. சென்னை என்பதை CHENNAI எனச் சொல்கின்றோம், பழக்கப்பட்டு விட்டதால் அதற்காக ச்சென்னை என எழுதுவதில்லை. ஒரே எழுத்து என்பதால் தமிழின் மெய்யொலியான CHA என்பது மறைந்து SA ஒலியால் நிரப்பப்பட்டு வருவது வேதனையான உண்மையாகும்.

 
ஆனால் உண்மையில் "ச" என்று எழுத்தின் உண்மையான ஒலி CHA என்பதே. சென்னை என்று எழுதும் போது அதனை SENNAI என்று சொல்வது பிழையானது, அதனை CHENNAI என்றே சொல்ல வேண்டும். ஆனால், தமிழில் SA என்ற ஒலிக்கு தனி எழுத்துக் கிடையாது, இடைக்காலங்களில் SA என்ற ஒலிக்கும் ச என்றே எழுதத் தொடங்கியதன் பின்விளைவு, இன்று இந்த SA ஒலி CHA ஒலியை முற்றாக விழுங்கிவிட்டது எனலாம். CHANDRAN என்ற வடசொல்லை சந்திரன் என எழுதி அதனை SANTHIRAN என ஒலிப்பவர்கள் பலரும் இருக்கின்றனர். 
 
வசனம் என்ற வடமொழிச் சொல்லை தமிழில் VACHANAM என்று ஒலிக்காமல் VASANAM என ஒலிக்கின்றோம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் சினிமாக்களில் கதாப்பாத்திரங்கள் வசனம் என்பதை VACHANAM என ஒலித்திருப்பார்கள்.

சந்தேகம், சந்தோசம், சமூகம் என்பதன் சகரமும் ஒரே எழுத்தில் இருந்தாலும் மூன்றும் முறையே SANDEGAM, SANDOSAM, SAMOOGAM எனவும் உச்சரிக்க வேண்டும்,

ஆனால் தமிழில் இன்றுள்ளதைப் போன்றே ( ச ) எழுதினால் எது CHA, எது SA என்பதை அறியவே இயலாது. 

 
அதற்காகத் தமிழில் புதிய எழுத்துக்களைச் சேர்த்துவிடுங்கள் என நான் கூறவில்லை, ஏனெனில் கிரந்தப் பிரியர்கள் பலரும் தமிழில் இருக்கின்ற எழுத்துகள் போதாது எனக் கூறி ஒருங்குறி வரை சென்று வடமொழிக்கான கிரந்த எழுத்துக்களைத் தமிழில் சேர்க்க முயன்று, அதனைத் தடுக்கத் தமிழர்கள் பட்டபாடு பெரும்பாடு என்பதை நன்கு அறிவோம். ஏற்கனவே தமிழின் வட்டார மொழியாகத் திகழ்ந்த மலையாளத் தமிழ் இவ்வாறு கிரந்த எழுத்துக்களை ஏற்று எழுதத் தொடங்கியதன் விளைவு இன்று அது தனி மொழியாகிப் போனது, அவ்வாறான நிலை இனி ஏற்படும் வாய்ப்புக் குறைவு என்றாலும், கிரந்த எழுத்துக்களைக் கொண்டு வருவது தமிழ் இலக்கணத்தின் சிறபாம்சமான தமிழ் மயமாக்கல் முறையைச் சிதைத்துவிடும் அபாயமும் இருக்கின்றது.  
 
இதனை எவ்வாறு நிறுத்துவது, தமிழ் மொழியைக் கற்பிக்கும் போது CHA, SA வேறுபாடுகளை எவ்வாறு எடுத்துக் காட்டுவது. எந்த இடத்தில் CHA வர வேண்டும் எந்த இடத்தில் SA வரவேண்டும் என்பதை எவ்வாறு வெளிக்காட்டுவது? 
 
தமிழில் எழுத்துவடிவத்திற்கும் உச்சரிப்புக்கும்  மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எழுதுவதை மாற்றொலி விதிகளோடு அப்படியே வாசிக்கமுடியும். ஆங்கில எழுத்துமுறை வேறு.  எழுத்துகளுக்கும் உச்சரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. சில வேளைகளில் தொடர்பே இருக்காது. அங்கு எழுதுவதை அப்படியே உச்சரிக்கமுடியாது.  
 
தமிழ் மொழியின் இனிமைக்குக் குறைபாடு வாராமல் தமிழ் மொழியிலே பிற மொழி ஒலிப்புகளை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதே கேள்வி. இதற்கான தீர்வு மிக எளிமையானது, மக்கள் அறியாத புதிய எழுத்தைக் கொண்டு வருவதை விடவும், புதிய எழுத்துகள் இல்லாமல் 2-3 குறியீடுகளைக் கொண்டு தமிழில் பேசப்படும் எல்லா ஒலிகளையும், அது தவிர வேறு சில ஒலிகளையும் குறிக்க இயலும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் எழுத்திலேயே சிறிய மாற்றம் செய்து ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்டலாம். இது ஒன்றும் புதிய முறையல்ல, ஏற்கனவே ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும், இந்தி உட்பட இந்திய மொழிகளில் கூடவும் இவ்வாறான உத்தி கையாளப்படுகின்றது. இதன் மூலம் நெடுங்கணக்கு மாற்றப்படுவதில்லை, ஒலிப்பு முறைகளில் வேறுபாட்டை வாசிப்பவர் அறிய உதவுகின்றது. 
 
‘மாற்றொலிகள் வேறுபடுத்தி ஒலிக்கப்படாவிட்டாலும் பொருள்கொள்வதில் குழப்பம் விளைவதில்லை. ஆனால் அவ்வகை உச்சரிப்பு தமிழ்மொழியின் இயல்பு வழக்கினின்றும் வேறுபட்டு அயற்றன்மை உடையதுபோல் ஆகிவிடும். இயல்பான தமிழ்ப்பேச்சாக அமையாது’ என்று ஒலியியல் பேராசிரியர் க. முருகையன் கூறுவார். 
 
ஆங்கிலத்தில் Diacritics என்பார்கள், ஏற்கனவே உள்ள எழுத்துக்கள் மேலோ, கீழோ ஒரு சிறிய புள்ளியையோ, கோடையோ இடுவதாகும். பிரஞ்சு மொழியை வாசிப்பவர்கள் இதனை நன்கு அறிவார்கள், இதனைத் தமிழில் பயன்படுத்துவதில் எந்தவிதச் சிக்கலும் இருக்கப் போவதில்லை. ஏற்கனவே நாம் மெய்யெழுத்துக்களைக் குறிக்க எழுத்தின் மேலே புள்ளியிட்டு வருகின்றோம். அதைப் போலவே ச எழுத்தின் கீழே ஒரு குறியீட்டை இடுவதன் மூலம் SA, CHA வேறுபாடுகளை வாசிப்பவர்களுக்கு உணர்த்தலாம். இதன் மூலம் ஒலிப்பு மயக்கம் என்பது வராது, அது மட்டுமின்றிப் பழந்தமிழ் ஒலிப்பான CHA அழிந்து விடாமல் காக்க இயலும். 
 
ஒரு மொழியானது செம்மையாகப் பேசப்படும் போதே அது உயிர்வாழும், ஏடுகளில் எழுதி வைத்து எழுத்துக்களைப் பொத்தி பொத்தி காப்பாற்றுவதால் உயிர் வாழ்ந்திடாது. இன்று கிரேக்கமும், லத்தீனும், சமஸ்கிருதமும், பிராகிருதமும் ஏடுகளில் மட்டுமே வாழ்கின்றது. ஆனால் பேச்சு முறையில் அழிந்து விட்டன. 
 
CHA-SA%2BTAMIL.png
‘தமிழ்மொழியினைத் தெளிவாக உச்சரிக்கும்போது அது மேலும் அழகு பெறுகிறது. உச்சரிப்பு சரியில்லை என்றால் மொழியின் பொருளும் மாறுகிறது. ‘ஒரு மொழியின் பொருள்தரு ஒலிகளை – ஒலியன்களை அத்தாய்மொழியாளர் நன்குணர்ந்திருப்பர். இஃது அன்னாரின் உளவறிவு (Psychological image).  ஆனால் அவ்வொலியன்கள் இடம், சூழல்களுக்கு ஏற்ப மாறிவருவதனை அவர் யாரும் சாதாரண நிலையில் அறிந்திருப்பதில்லை. காரணம் மனிதமூளை ஒலிகளை, அவை மொழியில் பொருள் அல்லது இலக்கணக் கூறுகளை வெளிப்படுத்தும் பணிபினைக்கொண்டே தேர்வே செய்கிறது. அலகுகளாகக் கொள்கிறது. மற்ற ஒலிகளைப் பிறர் கூற்றாலோ ஒலியியல் அறிவாலோதான் அறிகின்றது’ என்று ஒலியியல் பேராசிரியர் க. முருகையன் கூறுவார்.
 
நாம் எழுத்துக்களை இன்று சீர்திருத்தம் செய்யாவிட்டால், பேச்சின் மெய்யொலிகளை இழக்க நேரிடும், இதன் மூலம் தமிழின் தனித்துவமான ஒலிப்புக்கள் அழிந்தே போய்விடும். அவற்றில் முதன்மையானது சகர ஒலி என்பதை நாம் அறிய வேண்டும். 
 
முதலில் தமிழறிஞர்கள் CHA - SA ஒலிகள் உடைய சொற்களை அதன் செவ்வியல் வடிவில் வேறுபடுத்திப் பட்டியலிட வேண்டும். அவ்வாறு பட்டியலிடும் போது ச என்பதை SA எனவும் ச எழுத்தின் கீழ் ஒரு குறியையிட்டு அதனை CHA எனவும் வேறுபடுத்திக் காட்ட வேண்டும். பின்னர் அந்தப் பட்டியலை ஒரு நூலாக வெளியிடலாம். அந்த நூலின் பின்பற்றலில் முறையாகச் செய்திதாள்கள், நூல்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் பின்பற்றலாம். இந்த வேறுபாட்டை ஒருங்குறியில் காட்டவும் இந்த முயற்சியில் கணினி வல்லுநர்களும் மென்பொருள் தயாரிப்பாளர்களும் ஈடுபட்டு உதவுகின்றபொழுது தமிழ் மொழி மேன்மேலும் வளம் பெறுவதோடு, கிரந்தத்தின் உதவியின்றியே தமிழை எழுதவும், வாசிக்கவும் முக்கியமாக பேசுவது போல எழுதவும், எழுதுவது போல வாசிக்கவும் முடியும்.

http://www.managaran.com/2015/02/tamil-cha-sa-letter-pronunciation-script-issues1.html

செய் என்பதை CHEI என்பீர்களா? SEI என்பீர்களா?  சரி என்பதை SARI என்பீர்களா? CHARI என்பீர்களா? எது சரியானது என்பதை அறிவீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான பதிவு. பகிர்விற்கு நன்றி..

நான் ஆரம்ப பள்ளியில் படிக்கும்போது தமிழின் எழுத்துக்களோடு வடமொழி எழுத்துக்களையும் ( ஹ, ஸ, ஷ், ஜ, ஸ்ரீ ) சேர்த்தே கற்பித்தனர்..ஆனால் ஈழத்தமிழர்கள் இந்த வடமொழி எழுத்தே இல்லாமல், அழகாக தமிழ் எழுத்துக்களை மட்டுமே உபயோகிப்பதைக் கண்டு பெருமையாகவும், அதே சமயம் எம்மை இப்படி கலப்படமாக தமிழில் பயன்படுத்த கற்பித்துவிட்டார்களே என வருத்தமாகவும் இருக்கும். எழுதியே பழகிவிட்டதால் தவிர்க்கவும் இயலவில்லை.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பயனுள்ள கட்டுரை. புலம்பெயர் நாடுகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் நடைபெறும் போதெல்லாம், நான் நினைக்கிறேன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரு தாசீசியஸ் அவர்கள் இந்த ச உச்சரிப்புப் பற்றி தெளிவாகக் கூறியபடிதான் இருக்கின்றார். ஆனாலும் தவறாகவே தமிழை உச்சரித்துப் பழகிய பல ஆசிரியர்கள் இன்னும் மாறாமலே இருக்கிறார்கள். உண்மையில் ச வை சரியாக உச்சரித்தால் அதன் அழகே தனி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான பதிவு, சிறு வகுப்புகளிலிருந்தே உச்சரிப்புகளுக்கு பிள்ளைகலின் நாவைப் பழக்கி வந்தால்தான் இது சாத்தியமாகும். அத்துடன் மேல் வகுப்புகளுக்கும் கூடவே தமிழும் கட்டாயமான பாடமாக வரவேண்டும்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.