Jump to content

முற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ்: சில சிந்தனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ்: சில சிந்தனைகள்

லெனின் மதிவானம்

2002-205x300.jpg

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் முக்கியமானவர்களில் ஒருவர் கே. கணேஷ் (1920-2004). முற்போக்கு எழுத்தாளர்களுள் சிரேஸ்டர் என வழங்கத்தக்க தனிச் சிறப்பு வாய்ந்தவர். பல்துறை சார்ந்த ஆற்றலும் பயிற்சியும், சிருஸ்டிகர ஆற்றலும் பெற்றவர்கள் வெகு சிலரே உள்ளனர். அவர்களுள் கணேஷ்க்குத் தனியிடமுண்டு. இருப்பினும் அன்னாரின் பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை வெளிக் கொணரும் வகையிலான ஆய்வுகள் மதிப்பீடுகள் மிகவும் அருந்தலாகவே உள்ளன. அவ்வாறு வெளிவந்த மதிப்பீடுகள் கூட அறிமுகக் குறிப்புகளாகவே உள்ளன. இது ஒரு புறநிலைப்பட்ட உண்மை. எனினும் முற்போக்கு இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பை உணரத் தொடங்கியிருக்கின்ற இன்றைய காலக்கட்டத்தில் இன்னும் சில வருடங்களில் அவரது நூற்றாண்டு நிறைவை எதிர் நோக்கியிருக்கும் இவ்வேளையில் அவரது சமூகப் பங்களிப்பைப் புறந்தள்ளி விட்டு, அவரது சமய நம்பிக்கையை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு அவரைக் குறுகிய வரம்புக்குள் நிலைநிறுத்தி, ஆன்மீக கூண்டிற்குள்ளும் வேதாந்த சிறைக்குள்ளும் அடைத்து விட முற்படுபவர்களையும் காண்கின்றோம். இந்நிலையில் கணேஷின் மேதாவிலாசத்தின் அடிப்படைகள் என்ன? சமய நம்பிக்கையின் வரம்புகளையும் கடந்து சென்ற அவரது சமூக அணுகுமுறைகள் என்ன? என்பது குறித்த தேடல் அவசர அவசியமானது.

கணேஷ் கண்டியில் உள்ள அம்பிட்டி என்னும் பிரதேசத்தை சார்ந்த தலாத்துஓயா என்னுமிடத்தில் பிறந்தவர். இதன் காரணமாக இவர் தலாத்துஓயா கணேஷ் எனவும் அழைக்கப்பட்டார். இவரது இயற் பெயர் சித்தி விநாயகம் என்பதாகும். ஆனால் இவர் கே. கணேஷ் என்ற பெயரிலேயே அறிமுகமாகியிருக்கின்றார். 02 மார்ச் 1920 ஆம் ஆண்டு பிறந்த அவர் 05 ஜீன் 2004 அன்று தமது 86 வது வயதில் மறைந்தார். இவரது பெற்றோர்கள் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தத்தமங்களம் என்ற சிற்றூரில் இருந்து வந்தவர்களாவர். இவரது தாய் வழி தாத்தா பெரியாங்கங்காணியாக மலைநாட்டில் பணிபுரிந்தவர். பின்னாளில் பேருவலையில் கண்காணிப்பாளராக (P.று.னு ழுஎநசளநநச) பணியாற்றியிருக்கின்றார். ஒருவகையில் கணேஷின் குடும்ப பின்னணி செல்வாக்கு மிக்க மத்தியதரவர்க்க குடும்பமாகவே இருந்துள்ளது. தனது ஆரம்பக் கல்வியை தமது பிரதேசத்திலே அமைந்துள்ள பெப்டிஸ்ட் மிசன் (டீயிவளைவ ஆளைளழை¦) பெண்கள் கல்லூரியில் சிங்கள மொழியிலும், பின்னர் கண்டி புனித அன்டனி (ளுவ. யுவொழலெ’ள) கல்லூரியிலும் கற்றார். தமது தாயார் மூலமாகவே தமிழ் கற்றிருக்கின்றார் என்பதை என். செல்வராஜா முதலானோர் பதிவு செய்துள்ளனர். 1934 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ் சங்கத்தில் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றமை இவரது வாழ்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. குறிப்பாக முப்பதுகளின் ஆரம்பத்தில் (1934 – 1935) இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. இக்கால கட்டத்தில் பல இடதுசாரி தோழர்களுடனான தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மதுரை தமிழ் சங்கத்திலிருந்து இவர் விலக வேண்டிய சூழ்நிலை உருவானது. பின்னர் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் நுழைவுத் தேர்வில் தெரிவாகி திருவையாரு அரச கல்லூரியில் தமது கல்வியை தொடர வேண்டியேற்பட்டது.

இக்காலச் சூழல் கணேஷ் அவர்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. இக்காலக்கட்டத்தில் இடதுசாரி தோழர்களுடனான உறவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மாயாண்டி பாரதி, கே. இராமநாதன், சக்திதாசன் சுப்பிமணியம், ப.ஜீவானந்தம் போன்றோருடனான தொடர்பு முக்கியமானது. மாயாண்டி பாரதி முதலானோர் உருவாக்கியிருந்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பும் அதன் வெளியீடான லோகசக்தி பத்திரிக்கையும் பொதுவுடமைக் கொள்கையிலான பற்றும் பல இடதுசாரி தோழர்களுடனான தொடர்பும் ஏற்படுதற்கு ஏதுவாக அமைந்திருந்தன. 1938ஆம் ஆண்டுகளில் அவர் இலங்கைக்கு திரும்பிய பின்னரும் கூட இந்திய இடதுசாரிகளுடனும், சுதந்திர போராட்டத் தோழர்களுடனான நட்பை பேணியே வந்துள்ளார். இலங்கைக்கு வந்த பின்னர் 1946 ஆம் ஆண்டு திரு. கே. இராமநாதனுடன் தொடர்புக் கொண்டு பாரதி என்ற இதழை தொடங்கியுள்ளார். இவ்விதழின் இணையாசிரியராகவும் கணேஷ் கடமையாற்றியுள்ளார். பாரதி இதழ் 1946 ஆம் ஆண்டு தோன்றிய ஒரு சஞ்சிகையாகும். அதே காலப்பகுதியில் மறுமலர்ச்சி இதழும் தோன்றியது. அவ்விதழ் இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ந்து வந்தன. மறுமலர்ச்சி இதழ் பெற்ற கணிப்பை பாரதி இதழ் பெறவில்லை. குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து முதலாவதாக வெளிவந்த முற்போக்கு இதழாக பாரதியைக் குறிப்பிடலாம். மறுமலர்ச்சி இதழுக்கு சமனான இடத்தை வகித்தது பாரதி இதழ். மறுமலர்ச்சி அழகியல் கோட்பாட்டை முன்னிறுத்தி வெளிவர, பாரதி சமூக உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. எனவே பாரதி இதழ் குறித்த ஆய்வுகள் வெளிவர வேண்டியதோடு அவை ஒப்பியல் அணுகுமுறையாகவும் அமைய வேண்டும் என்பர் பேராசிரியர் யோகராசா. பாரதியில் வெளிவந்த ஆக்கங்கள் புதுமையில் அடிப்பட்டு போகாமலும் பழமையில் அழிந்துப் போகாமலும் இரண்டையும் தரம் பிரித்து இனங்கண்டு புதுவழிக் கண்டமையினாலேயே முற்போக்கு இலக்கியத்திற்கான முன்னோடி இதழாக பாரதி திகழ்ந்துள்ளது என்பது வெறும் புகழ்ச்சியில்லை என்றே தோன்றுகின்றது. இவ்வகையில் மிக அண்மைக் காலத்தில் கூட பாரதி இதழின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளதை அறியலாம். வீரகேசரி வார பத்திரிக்கையில் துணையாசிரியராகவும் சுதந்திரனில் செய்தியாசிரியராகவும் பணிப்புரிந்துள்ளார்.

பாரதி இதழ் ஒரு பண்பாட்டமைப்புக்கான தேவையை உணர்த்தியதன் விளைவாகவே இலங்கை எழுத்தாளர் சங்கம் உருவாகியது. பாரதி சஞ்சிகையை சிறிது காலம் நடத்திய இவர்களுக்கு இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவ்வியக்கத்தை சார்ந்த பிரபல எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் இலங்கை வந்திருந்த போது எழுத்தாளர் சார்ந்த ஸ்தாபனமொன்றினை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போராசிரியர் விபுலானந்த அடிகளைத் தலைவராகவும், பிரபல சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்கிம சிங்காவை உப தலைவராகவும் சரத்சந்திர, கே. கணேஷ் ஆகியோரை செயலாளராகவும் கொண்டு 1947 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதே இலங்கை எழுத்தாளர் சங்கமாகும். ஆனால் மிக குறுகிய காலத்திலே இவ்வியக்கம் இயங்காமல் போனமை துரதிஸ்டவசமான ஒன்றாகும். பேரினவாதம் முனைப்புற்றிருந்த சூழலில் சிங்கள தமிழ் எழுத்தாளர்களின் ஐக்கியம் என்பதை சிதைப்பதாக அமைந்திருந்தது. தமிழ் முற்போக்கு சக்திகள் தமிழ் இனவாதத்திற்கு எதிராக போராடிய அளவு சிங்கள முற்போக்கு சக்திகள் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடவில்லை என்றே கூற வேண்டும். இது குறித்த கனதியான ஆய்வுகள் அவசியமானதாகும். இது ஒருப்புறமிருக்க இவ்வியக்கம் இத்தகைய சவால்களை கடந்து இயங்கியிருக்குமாயின் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. கே. கணேஷ் தொடர்ந்து இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்க பல முயற்சிகள் எடுத்தும் பயனளிக்கவில்லை என்றே கூறவேண்டும். 1954 ஆம் ஆண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றும் வரையிலும் முற்போக்கு எழுத்தாளர்கள் ஒரு ஸ்தம்பிதம் அடைந்த நிலையிலே காணப்பட்டனர் என்பது முற்போக்கு இலக்கிய வரலாற்றில் ஒரு இருண்ட காலமாகும். தவிரவும் ஆப்பிரிக்க- ஆசிய எமுத்தாளர் சங்கத்துடன் இணைந்த இலங்கை மக்கள் எழுத்தாளர் முன்னணியின் உப தலைவராகவும் இருந்துள்ளார். இருப்பினும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலே முற்போக்கு எழுத்தாளர் சார்ந்த அமைப்புகளை உருவாக்குவதில் கணேஷ் பங்களிப்பு முக்கியமானதாகும். அவ்வாறே இடதுசாரி அமைப்புகளுடனும் தோழர்களுடனும் நெருங்கிய தொடர்பை பேணியிருக்கின்றார். முப்பதுகளின் இறுதிப்பகுதியில் திரு. எஸ் நடேசன் தலைமையில் இயங்கிய ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கலாசாரப் பிரிவின் பொறுப்பாளராக இயங்கியுள்ளார் என்பதையும் அறிய முடிகின்றது (செல்வராஜா. என். 2007, சுடரொளி வெயீட்டுக் கழகம், இங்கிலாந்து இணைந்து சிந்தனை வட்டம், இலங்கை). கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களுடனும் தாயகம் சஞ்சிகையுடனும் நெருக்கமான உறவுகள் இருந்துள்ளதை கணேஷின் குறிப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அவ்வாறே நீர்வை பென்னையனுடனும் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தார் என்பதனையும் அறிய முடிகின்றது. நீர்வையின் முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்(2007, பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு) என்ற நூலுக்கு கணேஷ் எழுதிய முன்னுரையின் ஊடாக முற்போக்கு இலக்கியம் பற்றி அவரது விசாலமான பரந்துப்பட்ட பார்வையை மாத்திரமன்று நீர்வையின் படைப்புகள், செயற்பாடுகள்- பங்களிப்புகள் பற்றியும் அறியமுடிகின்றது.

மேலும் அவர் பண்பாட்டு இயக்கங்களின் ஸ்தாபகராக மட்டுமன்று எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். தமது பன்னிரெண்டாவது வயதிலே (1932) தமது எழுத்துப் பணியை தொடர்ந்தவர். அவர் ஆனந்தபோதினி என்ற பிரபல்யமான சஞ்சிகையில் தமது எழுத்துப்பணியை தொடங்கியதாக என். செல்வராஜா பதிவாக்கியிருக்கின்றார். பின்னாட்களில் மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன் சக்தி, ஹனுமான், தென்றல் போன்ற சிற்றேடுகள் அவரது எழுத்துக்களை பிரசுரித்திருக்கின்றன. கே. கணேஷ் சித்தார்த்தன், கலாநேசன், மலைமகன், அதிஸ்டசாலி (இப்பெயரில் ஹங்கேரியச் சிறுகதை ஒன்றினை மணிக்கொடி பத்திரிக்கையில் மொழிப்பெயர்த்து பிரசுரித்திருக்கின்றார்.) ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார். அவரது எழுத்துக்களில் ‘சத்திய போதிமரம்’ என்ற கதையும் கண்டியிலிருந்து வெளிவந்த அகிலம் சஞ்சிகையில் சித்தார்த்தன் என்ற பெயரில் எழுதிய ‘கண்டி வளர்த்த தமிழ்’ என்ற கட்டுரையும் முக்கியமானவையாகும் (சித்தார்த்தன் என்ற பெயர் கணேஷினுடையது என்ற தகவலை தந்தவர் அகிலம் சஞ்சிகையின் ஆசிரியர் கே. இராமசாமி). சத்திய போதிமரம் என்ற கதை மோசடிகாரர்கள் அம்மரத்தடியில் வைத்து பொய் சத்தியம் செய்தால் அவர்களுக்கு கேடு நிகழும் என்ற நம்பிக்கையை ஆதாரமாக கொண்ட கதை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுப்படியும் வெல்லும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கதையாக இக்கதை அமைந்துள்ளது. இவ்வாறே கண்டி வளர்த்தத் தமிழ் என்ற தொடர்கட்டுரையில் கண்டி பிரதேசத்து வரலாற்றை பண்பாட்டு நோக்கில் ஆய்வு செய்ய முனைகின்றது. குறுகிய பிரதேச வாதங்களை கடந்து தேசிய சர்வதேச நோக்கில் கண்டி பிரதேச வரலாற்றை பண்பாட்டு நோக்கில் ஆய்வு செய்ய முனைந்த முயற்சியாக அமைந்துள்ளது. அத்துடன் கணேஷ் அவர்களின் சிந்தனையை அவரது நேர்காணல்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. கணேஷ் சிறப்பிதழாக வெளிவந்த காலம் சஞ்சிகையில் (2003) பேராசிரியர் எம். ஏ. நு·மான் கண்ட நேர்காணல் கவனத்திற்குரியதாகும். இதனைத் தொடர்ந்து ஞானம் சஞ்சிகையும் கணேஷ் சிறப்பிதழ் ஒன்றினை வெளிக் கொணர்ந்திருந்தனர். கணேஷின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாக அமைந்தது அவரது மொழிப்பெயர்ப்பு துறையாகும். மொழிப்பெயர்ப்பு துறையில் அவர் காட்டிய ஆர்வம் காரணமாக அவரது சொந்த ஆக்கங்களில் கவனம் செலுத்த தவறிவிட்டார் என்றே கூறத் தோன்றுகின்றது.

முல்க்ராஜ் ஆனந்த், கே. ஏ. அப்பாஸ், கிருஷ்ணசந்தர், லூசுன், ஹோசிமின், சந்தோர்பெட்டோவ்பி, குப்பிரியாவோவ், ஜெள சூ லி, இவன்·பிராங்கோ இன்னும் இது போன்ற ஆசிய நாட்டு விடுதலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை கொண்டு வந்து சேர்ந்த படைப்புகளையும் இரசிய படைப்புகளையும் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். அவற்றில் தீண்டதகாதவன், அஜந்தா, குங்குமப்பூ, ஹோசிமின் சிறைக்குறிப்புகள், அந்தகானம், போர்க்குரல், லூசுன் சிறுகதைகள், பல்கேரிய கவிதைகள், எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே, பார்பரா கவிதைககள், குப்பிரியாவோவ் சோவியத் கவிதைகள், இளைஞன் ஏர்கையின் திருமணம், குறை பிறை, உக்ரேனியக் கவிதைகள், உடலும் உணர்வும் ஆகிய நூல்கள் முக்கியமானவையாகும்.

கணேஷ் தனது ஹோசிமின் சிறைக் குறிப்புகள் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடும் பின்வரும் கூற்று கவனத்திற்குரியது:

‘ஹோ சி மின்’ கவிதைகள் தென் வட வியத்னாம் மற்றும் கம்போடியா, லாவோஸ் வீரர்களை ஊக்குவித்தது மட்டுமல்லாது உலகத்தின் பல நாடுகளிலும் நன்மதிப்பைப் பெற்றுள்ளன. தென்னமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்காவின் பல நாடுகளிலும் மற்றும் ஐரோப்பாவிலும் ருஷ்ய நாட்டிலும் பற்பல மொழிகளிலே ஆக்கப்பட்டு விடுதலை வேட்கைமிக்க மக்களால் ஆர்வமுடன் பயிலப்படுகின்றன. சீனத்தின் மூல மொழியிலேயே வெளியிடப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு சில ஆண்டுகளுக்குள் ஐந்து பதிப்புகள் வெளிவந்துள்ளதினின்றும் இவை பெற்ற வரவேற்பை உணரலாம்.

ஹோ வெறும் கற்பனையிலேயே திகழ்ந்த கவிஞனாக இல்லாது விடுதலை ஈட்டிக் கொடுத்துத் தன் நாட்டையும் உருவாக்கி, ஒரு வழி முறையையும் வகுத்தளித்து உருவாகி வரும் நாட்டை வலிய ஆயுத பலத்துடன் தாக்கிய உலக மகா சக்தியான அமெரிக்காவை எதிர்த்து வியக்கும் பல வெற்றிகளையடையச் செய்யும் உள்ளத் திறத்தையும் தன்னாட்டு மக்களுக்கு ஊட்டுவித்தார் ‘

மேற்குறித்த வரிகள் கணேஷ் அவர்களின் பரந்துப்பட்ட நோக்கை, உணர்வை அழகுற எடுத்துக்காட்டுகின்றது எனலாம். தனது காலத்திற்கேற்றவை எவை என்பதையும் இன்றியமையாதன எவையென்பதையும் சிந்தித்துத் தெளிந்து அவற்றை மொழிப்பெயர்த்தமையே கணேஷின் சிறப்புக்கும் தனித்துவத்துக்கும் அடிப்படையாகும். அதாவது கணேஷின் தற்கால உணர்வும் சர்வதேசிய நோக்குமே அவரை சமகாலத்தவர் பலரினின்று வேறுப்படுத்தி தனிச்சிறப்புடையவராய் காட்டுகின்றது. ஈழத்து இலக்கியத்தின் முக்கிய கரத்தாக்களில் ஒருவராக விளங்கிய அவர் தமிழ் சமுதாயத்திற்கு அவசியமாகவிருந்த பிறநாட்டு இலக்கியங்களையே மொழிப்பெயர்த்திருக்கின்றார். அப்பணி பலருக்கு ஆதர்சனமாக இருந்திருக்கின்றது. அவையே புதுப்பாதைக் காட்டும் புதுப்பணிகளாகவும் அமைந்திருக்கின்றன.

‘அக்காலச் சூழலில் ரூசிய எழுத்தாளர் கார்க்கி எழுதிய ‘தாய்’ மற்றும் முல்க்ராஜ் ஆனந் எழுதிய ‘தீண்டாதார்’ முதலாம் நாவல்கள் முற்போக்குச் சிந்தனைகள் உள்ளடக்கிய ஆக்கங்களுக்கு வகை மாதிரியாகச் சுட்டிக் காட்டப்பட்டன’ என்பார் பேராசிரியர் சபா.ஜெயராசா. தமிழ் பண்பாட்டுச் சூழலை மையமாக கொண்டு நோக்குகின்ற போது ஐரோப்பியாவில் காணப்பட்டது போன்றதொரு வர்க்க கட்டமைப்பு இங்கு காணப்படவில்லை. இச்சமூக சூழல் இனக் குழு வாழ்முறைக்கான சாதிய கட்டமைப்பை கொண்டதாக விளங்கியது. நமது வாழ்முறையின் சுரண்டலுக்கான ஏற்றத்தாழ்வு உடைய சமூகவமைப்பு சாதி என்பதை புரிந்துக் கொள்ள முடியும். இவ்வாறான சூழலில் நமது பண்பாட்டுச் சூழலில் ஐரோப்பியாவில் தோற்றம் பெற்ற வர்க்க போராட்ட சிந்தனையை அப்படியே பாவிப்பது என்பது வர்க்கவாதத்தில் முடங்குவதாக அமைந்திருந்தது. மறுப்புறத்தில் சாதிய ஒடுக்கு முறைகளை மாத்திரம் கவனத்திலெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை சகல மேல்சாதியினருக்கும் எதிராக வளர்த்தெடுக்கப்படுகின்ற அடையாள அரசியலாக காணப்படுகின்றது. இவ்வரு போக்குகளும் நமது பண்பாட்டுச் சூழலில் சமூக மாற்றப் போராட்டங்களை சிதைப்பதாக அமைந்திருந்தது.

இந்நிலையில் சாதிய எதிர்ப்பு போராட்டத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் நோக்கி அப்போராட்டத்தை சரியான திசை மார்க்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வரலாற்றை- அதன் அவசியத்தை இந்திய வாழ்நிலையிலிருந்து வெளிப்படுத்தியதில் ‘தீண்டாதான்’ என்ற நாவலுக்கு முக்கிய இடமுண்டு. முற்போக்கு இலக்கிய பாரம்பரியத்தை முன்னெடுத்த ‘தாய்’ இன்னும் இது போன்ற பல நாவல்கள் இருக்க கணேஷ் தீண்டாதவன் நாவலை மொழிப்பெயர்த்துள்ளமை அவதானத்திற்குரியது. நமது பண்பாட்டுச் சூழலில் மார்க்சிய பிரயோகம் பற்றிய நிதானமான தெளிவு அவரிடத்தில் இருந்திருப்பதற்கான சாத்திய கூறுகளை அவரது இந்த மொழிப்பெயர்ப்பு எடுத்துக்காட்டுவதாகவே படுகின்றது. கணேஷ் சொந்தமாக எழுதினாலும் சரி, மொழி பெயர்த்தாலும் சரி, அவற்றில் வீறுமிக்க சிந்தனையிருக்கும்; தனித்தன்மையான நடையிருக்கும் அவரது தமிழில் தெளிவும், இனிமையும், புதுமையும் இருக்கும். ‘தீண்டாதவன்’ என்ற நாவல் கணேஷின் மொழிப்புத் திறனுக்கு ஒரு சான்றாகும்.

அவ்வகையில் கணேஷ் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிந்தித்தவை மொழிப்பெயர்த்தவை பல வழிகளில் தமிழுக்கு புதிதாயும் ஏனையோருக்கு முன்மாதிரியாகவும் இருந்து வந்திருப்பது சிறப்பாக குறிப்பிட வேண்டியதாகும். சீன இலக்கிய முன்னோடி லூசுன் பற்றிப் பலரும் நன்கு அறியாதிருந்த வேளையில் லூசுன் சிறுகதைகளை மொழிப்பெயர்த்து ‘போர்க் குரல்’ சீன அறிஞர் லூசுன் சிறுகதைகள் நூல் வெளிவந்தது. இவ்வாறே ஆசியாவில் மனிதகுலத்தின் விடுதலையை உணர்த்தி நின்ற பல படைப்புகள் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார்.

இவ்வாறு சாதனைகள் பல புரிந்த கணேஷ் பல காலமாக பொதுவுடைமை தத்துவத்தை தழுவியவராக இருந்து வந்திருக்கின்றார். மார்க்சியத்தை உள்வாங்கி தமிழ் கலை இலக்கிய மரபினை அதனுடன் கலந்து இலக்கியம் படைப்பவராக இருப்பதே அவரது தனிச்சிறப்பு எனலாம். அவரது மொழிப்பெயர்ப்புகளிலும் எழுத்துக்களிலும் இதனைக் கண்டுக் கொள்ளலாம்.

அவர் பெற்றுள்ள விருதுகள் இலக்கியச் செம்மல் (1991) தேசிய விருது, கலாபூசணம் (1995) தேசிய விருது, விபவியின் சிறந்த மொழிப்பெயர்ப்பாளருக்கான விருது(இரு முறை), கனடா இலக்கிய தோட்டத்தினால் வழங்கப்பட்ட இயல் விருது(2003) ஆகிய விருதுகளையும் பெற்றிருக்கின்றார். விருதுகளுக்காக தன் இலக்கிய போக்கையோ கொள்கையையோ மாற்றிக் கொண்டவர்கள் பலர். பணமுடிச்சு, பொன்னாடை சுமர்த்தல், புகழ் நாட்டம் போன்றவற்றிலிருந்து ஒதுங்கியிருப்பதை தமது கெளரவமாக கருதுபர்கள் சிலர். இந்த வாத விவாதங்களுக்கு அப்பால் கே. கணேஷ் அவர்களுக்கு இவ்விருதுகள் கிடைத்தமையால் அவ்விருதுகள் தான் அங்கிகாரத்தை பெற்றன எனக் கூறின் மிகைக் கூற்றல்ல.

இது இவ்வாறிருக்க அவர் பொறுத்து வெளிவந்த விமர்சனங்களையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளல் காலத்தின் தேவையாக உள்ளது. பலரும் அன்னாரை முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியாக கொள்கின்ற இன்றைய சூழலில் ‘காலம்’ சஞ்சிகையில் வெளிவந்த அவரது நேர்காணலை மையமாகக் கொண்டு மார்க்ஸியவாதிகள் யாரும் இறுதியில் மதத்தில் சங்கமிக்கின்றார்கள் என்ற அடிப்படையில் அவர் பொறுத்து கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதிலும் அமைந்திருந்தன. இன்னொரு புறத்தில் அவரது ஆன்மீகம் சார்ந்த பற்றுதல் இளமைக்காலத்திலிருந்தே வந்தது என்பதாக வெளிவந்த எழுத்துக்கள். மிக அண்மையில் மு. பொ எழுதிய புதிய திறனாய்வின் திசைகள்(2011, கொடகே வெளியீட்டகம், கொழும்பு) என்ற நூலில் அவரது சத்திய போதிமரம் என்ற கதையை ஆதாரமாக கொண்டு மேற்குறித்த கருத்துக்களை நிறுவ முற்படுகின்றார். இதற்கு அப்பால் கணேஷை மத முகாமிற்குள் அடைத்து முற்போக்கு இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நிராகரிக்கும் வகையிலான உள்நோக்கம் கொண்ட எழுத்துக்கள் ஆங்காங்கே தலைக்காட்டாமலும் இல்லை. இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயத்தை சுட்டிக் காட்டுதல் அவசியமானதாகும். அக்கதையில் வெளியிட்ட கருத்து வேத வேதாந்த மீட்டுருவாக்கமாக அல்லாமல் ஒரு மனிதநேயம் சார்ந்த பற்றுதலாகவே அக்கருத்து அமைந்திருந்தது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஓர் ஒப்பியல் வசதிக்காக டொமினிக் ஜீவாவின் பாதுகையுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற போது இக்கதையில் வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி தனது தொழிலின் மீதுக் கொண்டிருந்த பக்தியின் காரணமாக செருப்பின் மீது சத்தியம் வைக்க மறுக்கின்றார். இவற்றியெல்லாம் வெளிப்பட்ட நம்பிக்கைகள் மனிதநேயம் சார்ந்ததாகவே அமைந்திருந்தது என்பதை அறியலாம். எது எவ்வாறாயினும் அத்தகைய மத நம்பிக்கையுடன் இருந்த ஒருவராலும் முற்போக்கு இலக்கியத்திற்கு எத்தகைய காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை கவனத்திலெடுத்தல் அவசியமாதொன்றாகும். கணேஷின் இத்தகைய சமூக பங்களிப்பை கவனத்தில் எடுத்த இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் பூபாலசிங்கம் பதிப்பகத்துடன் இணைந்து வெளியிட்ட முற்போக்கு சிறுகதைகள் -1 என்ற தொகுப்பில் இவரது கதையை சேர்த்துள்ளனர் தவிரவும் இவர் இறந்த 2004ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை பல நினைவுப் பேருரைகளை இவ்வியக்கத்தினர் ஒழுங்கமைத்து நடத்தியுள்ளனர். இதுவரை எட்டு பேருரைகள் நடத்தப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகின்றது. முற்போக்கு அணியினர் கணேஷின் இலக்கிய முக்கியத்துவத்தையும் சமூகப் பங்களிப்பையும் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்நிகழ்வுகள் தக்க சான்றுகளாக அமைகின்றன.

தன் காலத்து வேடிக்கை மனிதரிலிருந்து வேறுபட்டு அவரது இலக்கியம் மற்றும் அது சார்ந்த இயக்கங்களின் தோற்றுவாய்களுக்கும் வழிகோலிய அன்னாரின் பங்களிப்பும் பணியும் இந்நாட்டின் முற்போக்கு இலக்கிய அரசியல் எழுச்சிகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன – ஏற்படுத்த வேண்டும். கணேஷ் பற்றிய ஒரு சில செய்திகளே மட்டுமே இவை. எனினும் அவர் வாழ்வும் வளமும் பங்களிப்பும் இன்னும் சரியான முறையில் ஆராயப்பட வேண்டியிருக்கின்றது.

http://vallinam.com.my/version2/?p=1797

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.