Jump to content

1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம்.


Recommended Posts

1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம்.

 

 

மூன்றாவது தவணைப்பரீட்சை கடைசி நாள். கணிதப்பரீட்சை அன்று வழமைக்கு மாறாக 12 மணிக்கே அன்றைய நாளின் பாடசாலை முடிவு. புத்தகப்பை கையில் இல்லை. ஏழுத்து உபகரணங்களை வகுப்பில் வைத்துவிட்டு வரும்போது ஏதோ எல்லாப்பாரமும் குறைந்தது போலிருந்தது. அப்பாடா இனி புதிய வருடம் புதிய வகுப்பு மனம் எங்கோ பறந்தது. முதலாம் இரண்டாம் தவணைப் பரீட்சையின் பின் என்றால் மணிக்கூட்டுக்கோபுரத்தில் நேரம் பார்த்தபடி கிரிக்கெட் அல்லது புட்போல் இல்லை யாழ் நூலகத்தில் மித்திரனில் வரும் ஜி நேசனின் தொடர் முதல் அம்புலி மாமாவரை மேய் ந்துவிட்டு 3:30க்கு வீட்டிற்குப் போகலாம். ஆனால் இப்போ மழைக்காலம் மைதானத்தில் வெள்ளம், திங்கட்கிழமை நூலகமும் பூட்டு. மத்தியானத்திற்கும் வயிற்றிற்கு ஏதுமில்லை. வீடு போவதைத் தவிர வேறு தெரிவில்லை.

 

அங்கன திரியாமல் பஸ்ஸில வீட்டை வா என்று அம்மா தந்த பழைய இரண்டு ரூபாய் நோட்டை கைகள் தன்னிச்சையாய் பொக்கற்றுக்குள் தடவி நின்றது. பஸ்ஸுக்கு ஒரு ரூபாய் போதும். அதுவும் 12 வயதில் எனது உடல்தோற்றத்திற்கு கண்டக்டர் அரை ரிக்கற் தானாகவே தருவார். அம்மாவுடன் போனால் இல்லை இவனுக்கு 12 வயது என சொல்லி முழு ரிக்கற் வாங்குவா. அரிச்சந்திரன் பரம்பரை என்ற நினைப்பா அல்லது தன்ரை கடைக்குட்டிக்கு 12 வயது என்பதில் பெருமையா தெரியாது. மனம் ஏற்கனவே முடிவெடுத்திருந்தது 13:50 க்குப் போகும் ரயிலில்தான் பயணம் என்று. ரயிலிற்கு மாதாந்த பிரயாணச்சீட்டு இருந்ததால் ஒரு ரூபாய் மிச்சம். மனம் ஒரு ரூபாய்க்கு என்னசெய்யலாம் என கணக்குப்போட்டுக் கொண்டது.

 

பஸ்ரான்டிற்குப் போனால் ராஜா கூல்பார் அருகில் உள்ள புத்தகக்கடையில் பி டி சாமியின் பேய்கதை, தமிழ்வாணனின் சங்கரலால் அல்லது முத்து கொமிக்ஸ் சிஜடி மூசாவின் சித்திர துப்பறியும் நாவல் வாங்கலாம். பத்தகத்தை நாளைக்கு வகுப்பிற்கு கொண்டுவந்தால் நான்தான் ஹீரோ. பாடசாலைக்கு மனதார ஆசையுடன் செல்லும் நாட்கள் பரீட்சை முடிந்ததிலிருந்து ரிப்போட் தரும் நாள்வரைதான். படிப்பு கொஞ்சம் மண்டையில் ஏறுவதால் ரிப்போட் பற்றிய பயமில்லை. முதலாவதாக வந்தால் அது போணஸ் வராவிட்டாலும் 75% சராசரிக்கு மேலிருந்தால் வீட்டில் கும்பாபிஷேகம் இல்லை. இந்தமுறை செவ்வாய் முதல் வெள்ளி வரை ஜாலிதான். அம்மாவும் இந்நாட்களில் 25 சதம் தருவா கணக்கு கேட்கமாட்டா. 

 

ஜீவா டேய்! குரல் என்னை நிஜத்துக்குள் தள்ளியது. அந்த வயதிலும் வாட்ட சாட்டமான நண்பன். மாபிள் விளையாட்டில் விண்ணன் ஆனால் அவனால் மாபிள்களை பாடசாலைக்கு கொண்டு வரமுடியாது வென்றதை வீட்டிற்கு கொண்டு போகவும் முடியாது. எனது மாபிள்களில் விளையாடி வென்று தருவான். என்னிடம் அப்போது 300க்கும் மேல் மாபிள்கள் இருந்ததின் சூத்திரன் கண்ணன் இவனே. தன் உடல்வாகுவை வைத்து வாக்குவாதங்கள் முற்றி அது குருஷேத்தரமாகும் தருணங்களில் எல்லாம் என்னை காப்பாத்தும் நண்பர்கள் இருவர்களில் ஒருவன். மற்றவர் இரு வகுப்பு கூட ரயில் சிநேகிதம், அவர் ஜெயசிக்குரு போன்ற பெரிய தாக்குதல்களிற்கு மட்டும்.

 

வாடா கன்ரீனுக்கப் போவம் அங்கை சின்னத்தம்பி (மன்னிக்கவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது பிழையிருந்தால் பதிவிடவும்) சுடச்சுட கடலட் தருவார் என்றான். பூதத்திற்கு (மன்னிக்கவும் உலோகவேலை ஆசிரியர்க்கான பட்டம்தான்) ரீ வாங்க மட்டுமே இதுவரை தனிய கன்ரீனுக்கப் போன நான் முதல்முறை எனக்காக. மனம் ஏங்கியது அதுவும் கையில் ஒரு ரூபாயுடன். சரி என்றேன். எமது பாடசாலையின் கன்ரீனை மக்டொனல் மாதிரி கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல. விளையாட்டிற்கு கூட ஒதுங்காத பாழ் மண்டபம். அது 100 வருடத்திற்கும் மேலானது. தொல்பொருள் ஆராட்சியாளர்கள் கண்டால் தோண்டி விடுவார்கள். 3ம் வகுப்பிருக்கும் என ஞாபகம் அண்ணனுடன் அந்த கன்ரீனுக்குள் முதல் தடவையாக போனது. அம்மா சுகயீனம் காரணமாக அண்ணாவிடம் காசு கொடுக்க நானும் சேர்ந்து இடியப்பம் சம்பல் சொதியுடன் சாப்பிட்ட நினைவு. அண்ணனும் மறக்காமல் கடைசி தம்பியை வெருட்டி விட்டே போனர்.

 

வீட்டில் கழியலறைக்கு குசினியையும் தாண்டிப் போகவேண்டும். லைற் சுவிட்ச் கூட விராந்தையின் முடிவில்தான். அம்மா குசினி அலுவல் முடிந்து லைற் ஒவ் பண்ணினால் மூத்திரம் போக கூட உதவி தேவையான வயது. இது பத்தாது என்று எலி ஓடினாலே பேய் என பயமுறுத்தும் அண்ணன்மார். கடைசியாகப் பிறந்தாலே இதுதான் தங்கள் பயமெல்லாத்தையும் என் தலைமேல் போட்டுவிட்டு தாங்கள் பயமில்லாதவர்கள் போல நடிப்பார்கள்.

 

அப்போதுதான் கன நாட்களின் பின் மழை, லயிக்கத் தெரியாத வயதில் கூட புழுதி மணம் மனதை வருடவே செய்தது. கால்கள் பேய்குகை நோக்கி நண்பனின் தைரியத்தால் நடந்தன.

 

இருண்ட குகை மாதிரியே இருக்கும் எங்கள் கன்ரீன். அண்ணன் வேறு இரவில் பழைய இறந்த அதிபர்கள் வந்திருந்து கதைப்பார்கள் என்று சிறுவயதிலேயே பயமுறுத்தியிருந்தான். பூதத்திற்காக (ஜெயரட்ணம் மாஸ்டர் மன்னிக்கவும்) பாதாளகுகைக்குள் போனதை தவிர தனிய போனதில்லை. முழு வகுப்பின் முன் "ஜீவா கன்ரினில் எனது பெயரைச் சொல்லி ரீ வாங்கி வா" என்றால் ட்டனென்றா சொல்லமுடியும். பயம் என்று சொன்னால் எனது மரியாதை என்னாவது. நாங்களெல்லாம் அப்ப கவரிமான் மாதிரி. பயப்படாத மாதிரி உள்ளே போய் ரீ சொல்லிவிட்டு வெளியே வந்து நிப்பன். அப்ப உள்ளே சின்னத்தம்பி தவிர யாரும் இருக்க மாட்டார்கள். சின்னத்தம்பி சூழலுக்கேற்ற நிறம் தனியாக தேடிப்பிடிக்க வேண்டும். கூப்பிட்டதும் போய் வாங்கி வருவேன்.

 

இந்தப் பேய்குகைக்குள் நானும் நண்பனும். மனதில் நண்பனின் உடல்வாகுவின் மீது மிகுந்த நம்பிக்கை. ஆபத்தாந்தவன் அவனே. இப்போது பேய்குகைக்குள் நாங்கள் மற்றும் சின்னத்தம்பி மட்டுமே. சின்னத்தம்பி வெளிச்சத்தில் மட்டும் தெரிவார். யார் பணம் செலுத்துவது என்ற சண்டையில் நான் வென்றுவிட, கம்பீரமாக ஓடர் செய்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தோம். நாற்காலி கூட ஸ்டீபன் ஸ்பீல்பேர்க்கின் பேய் படங்களில் வருவது போல கிரீச் என்ற சத்தத்துடனேயே இருக்க விட்டது.

 

பயம் சிறிதளவாக குறையவே சின்னத்தம்பியின் மேல் நோட்டம் போனது. அவர் கட்லட் செய்து வைப்பதில்லை. எல்லாவற்றையும் ஆயத்தமாக குழைத்து வைத்திருந்தார். உருட்டி கொதித்த எண்ணையில் போட்டார். மணத்தில் பத்தடி தூரத்திலிருந்த மூக்கு துள்ளியது. அகப்பையின் பின்புறத்தால் முதுகையும் சொறிந்து  கொண்டார். மணத்தில் லயித்திருந்த மனம் முதுகை சட்டை செய்யவில்லை.

 

தம்பீங்களா! மறுபடியும் நிஜத்தில். அவர் முதுகு போலவே பல மேடு பள்ளங்களுடன் ஒரு அலுமீனியத்தட்டு அதில் இரண்டு கட்லட். கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. நான் பார்த்த சுவைத்த கட்லட்கள் வடையை விட சிறியன ஆனால் இது போண்டா அளவில் இருந்தது. மனதில் சிறு சந்தேகம் போண்டாவா என்று. கொதிக்க கொதிக்க வைத்த முதல் வாய் கட்லட்தான் என்றது.

 

இப்போது பேய்குகை பயம் போயிருந்தது. உருசி நாக்கில் இருந்தது. டேய் நாளைக்கும் வருவோம் என்ரை முறை என்றான் நண்பன். சரி என்றேன் மனதுக்குள் இருந்த பயத்தை வென்றது இந்த உலகையே வென்றது போலிருந்தது. ஒரு கட்லட் 20 சதம் இருவருக்கும் 40 சதம். மிகுதி 1.60 இல் அம்மா ஒரு ரூபாவை எப்படியும் புடுங்கி விடுவா. 60 சதம் இன்னுமிருக்கு 3 கட்லட்டிற்கு.

 

பி.டி.சாமி, சிஜடி மூசா, தமிழ்வாணனின் சங்கர்லால் எதுவுமே  பாதாளக் குகை சின்னத்தம்பியின் கட்லட் அனுபவத்திற்கு இணையாகுமா. மறுபடியும் நாளைய கட்லட்டிற்கு மனது ஏங்க பாடசாலையிலிருந்து வெளியேறினோம்.

 

 

இது எனது அனுபவத்தின் பதிவு யார் மனத்தையும் புண்படுத்தவல்ல

 

வேலும்மயிலும் என்ற பெயர் சின்னத்தம்பியாக மாற்றப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு படு சீனியர் தான் போல ஜீவன் சிவா. அப்பவும் கந்தையாண்ணை வகுப்பில வந்து பற்றிஸ் எல்லாம் விக்கிறவரோ? உங்களுக்கு பிரான்ஸ் முத்துக்குமாரையும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

எங்களுக்கு படு சீனியர் தான் போல ஜீவன் சிவா. அப்பவும் கந்தையாண்ணை வகுப்பில வந்து பற்றிஸ் எல்லாம் விக்கிறவரோ? உங்களுக்கு பிரான்ஸ் முத்துக்குமாரையும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்!

 

எனது ஞாபகத்திலும் கந்தையா அண்ணை என்றுதான் இருந்தது விளக்கத்திற்காக திண்ணையில் கேட்டேன் வேலும்மயிலும் என்ற பதில் கிடைத்ததால் மாற்றினேன். ஆனாலும் கந்தையா அண்ணை groundboy அல்லவோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஞாபகத்திலும் கந்தையா அண்ணை என்றுதான் இருந்தது விளக்கத்திற்காக திண்ணையில் கேட்டேன் வேலும்மயிலும் என்ற பதில் கிடைத்ததால் மாற்றினேன். ஆனாலும் கந்தையா அண்ணை groundboy அல்லவோ.

 

கந்தையாண்ணை கிரவுண்ட் போய் தான். ஆனால் குறுகிய இடைவேளை நேரம் ஒரு பையில் ரோல்ஸ் வடை எடுத்துக் கொண்டு வகுப்பு வகுப்பாகப் போவார். காசு கையில் இருக்கும் மாணவர்கள் வாங்குவார்கள். கன்ரீன் நடத்தியவர் பெயர் வேலும் மயிலும் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்திருக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாடா கன்ரீனுக்கப் போவம் அங்கை வேலும்மயிலும் (மன்னிக்கவும் பெயர் ஞாபகமில்லை நினைவிலிருந்தால் பதிவிடவும்) 

சின்னத்தம்பி

Link to comment
Share on other sites

1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம்.

 

 

.பூதத்திற்கு (மன்னிக்கவும் உலோகவேலை ஆசிரியர்க்கான பட்டம்தான்)

 

 

ஹஹா இவர் ஒரு வித்தியாசமான ஆசிரியர் :lol:    அவருக்கு கிட்ட போக முடியாது நறுமணம் :icon_mrgreen:

 

உலோகவேலை பாடம் எடுக்க வருவார். புதன்கிழமைகளில் 2 பாடம் அவரது. அந்த நேரம் எப்படி போகும் என்று இருக்கும்.

 

மிக தடிப்பான கண்ணாடி போடுவார், தனது மேசையில் தலையை குனிந்து எதாவது எழுதி கொண்டு இருப்பார்.

 

மாணவர்கள் யாராவது கதைத்து சத்தம் போட்டால் குனிந்த தலை நிமிராமல்  நம்பர் 7 (  Register இல் யாரது பெயர் 7வரிசையில் இல் இருக்கோ) எழும்பு

 

என்பார். பிறகு என்ன  அவருக்கு கன்னத்தை பொத்தி 2 விழும் :icon_mrgreen::D  கதைத்தவன் யாரோ அடிவாங்குவன் வேறு யாரோவாக இருக்கும். :lol:

 

அவர் வகுப்பில் இருக்கும் போதே பலர் வகுப்பை விட்டு வெறியேறி விடுவார்கள் அவருக்கு எதுவும் தெரியாது :o

Link to comment
Share on other sites

 

 

அவர் வகுப்பில் இருக்கும் போதே பலர் வகுப்பை விட்டு வெறியேறி விடுவார்கள் அவருக்கு எதுவும் தெரியாது :o

 

இவர் எப்பவும் புத்தகத்தை கண்ணிற்கு மிக அருகிலேயே வைத்துப் படிப்பார். சார் இது சரியா என ஒருவர் கொப்பியை காட்ட மற்றவரகள் வகுப்பை விட்டு வெளியேறுவது எமது வகுப்பிலும் நடந்ததுதான். ஆனால் அவரிடம் நுள்ளு மட்டும் வாங்கக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கலூரியில் பல நண்பர்கள் படித்தார்கள்.
எனக்கு மட்டும் அந்தக் கல்லூரியில் ஏனோ ஒரு பிடிப்பும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மத்தியை ரெம்பப் பிடிக்கும். வேற எதுக்கு பக்கத்தில.. நல்ல மைதானமும்.. நல்ல பாடசாலை ஒன்றும் உள்ளதால்.

 

மத்தியின் நண்பர்கள் பலர் தற்பெருமை அற்ற இயல்பானவர்கள். அது உண்மையில் வரவேற்கக் கூடியது.

 

மத்தியும்  பல திறமைசாலிகளை உருவாக்கியுள்ளது. எங்களுக்கு கிரிக்கெட் போதித்த ஒர் அண்ணா.. மத்தியின் மைத்தன். அங்கேயே படித்து 3ஏ பி எடுத்தவர். கிரிக்கெட்டிலும்.. பாடசாலை அணிக்காக விளையாடிய ஒருவர். :):icon_idea:

 

பகிர்விற்கு நன்றி.. ஜீவன் சிவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியின் சிறந்த ஆசிரியர்கள் பலர் பல்வேறு பாடசாலை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.

 

1. பிரவுன் வீதி சிவகுமார் - கணிதம்.

 

2. கப்டன் நாகரத்தினம் - இரசாயனவியல்.

 

3. குசும்பு பாலா - விஞ்ஞானம்

 

4. சிவப்பிரகாசம் - சித்திரம் (யாழ் மணிக்கூட்டு கோபுரத்தை அண்டி அண்மையில் தமிழ் மன்னர்களின் சிலைகளை வடிவமைத்த ஆசிரியர். யாழ் நல்லூர் ஆறுமுக நாவலர் சிலை உட்பட பல சிலைகள் இவரால் வடிவமைக்கப்பட்டவை.)

 

5. போல்  - சங்கீத ஆசிரியர் - இலங்கை சிறந்த சங்கீத ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர்.

 

இன்று இவர்களை விட இன்னும் பலர் உருவாகி இருக்க முடியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியின் சிறந்த ஆசிரியர்கள் பலர் பல்வேறு பாடசாலை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.

 

1. பிரவுன் வீதி சிவகுமார் - கணிதம்.

 

2. கப்டன் நாகரத்தினம் - இரசாயனவியல்.

 

3. குசும்பு பாலா - விஞ்ஞானம்

 

4. சிவப்பிரகாசம் - சித்திரம் (யாழ் மணிக்கூட்டு கோபுரத்தை அண்டி அண்மையில் தமிழ் மன்னர்களின் சிலைகளை வடிவமைத்த ஆசிரியர். யாழ் நல்லூர் ஆறுமுக நாவலர் சிலை உட்பட பல சிலைகள் இவரால் வடிவமைக்கப்பட்டவை.)

 

5. போல்  - சங்கீத ஆசிரியர் - இலங்கை சிறந்த சங்கீத ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர்.

 

இன்று இவர்களை விட இன்னும் பலர் உருவாகி இருக்க முடியும். :)

 

கப்ரன் அல்ல, 2 ஆம் லெப்டினன்ட் என்பார் (சிறி லங்கா ஆமி கடேற் பிரிவு இருந்து அணிநடை மட்டும் செய்த காலத்தில் இருந்தாராம்!) ஆனால் இவர் பள்ளிக் கூடத்தில் எங்களுக்குப் படிப்பித்த நாட்களை இலகுவாக ஒரு கை விரல்களில் எண்ணி விடலாம்! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் அவர் லெப்டினட் நாகரட்னம் என்று தான் அவரின் இரசாயனவியல் பயிற்சி நூல்களில் போடுறவர் என்று நினைக்கிறோம். யாழ் இந்துவின் சோமர் தான் கப்டன் என்று சொல்லிக் கொள்ளுறவர்.

 

நாகர் பள்ளியில் படிப்பிப்பது குறைவு. ஆனால் அவரின் தனியார் கல்வி நிலையத்தில் கற்ற பலர் நல்ல பெறுபேறுகளை பெற்றுள்ளனர். :):icon_idea:

Link to comment
Share on other sites

உந்த ஸ்கூலுக்குப் போற பையன்கள் படிக்கவா போறாங்க வேம்படிப் பெண்ணுகளைப் பார்க்கவல்லா போறாங்க. காவாலிப் பையன்கள்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

யாழ் இந்துவில் படித்தாலும் என்ன மத்திய கல்லூரியின் வாலென்று நக்கல் அடிப்பார்கள் .அண்ணர் மத்திய கல்லூரி மூன்று அக்காமார் வேம்படி .ஊரில் தமிழ் பாடசாலையில் படிக்கும் போதே (முன்றாம் நாலாம் வகுப்பு ) கிரிக்கெட் பார்க்கவென்று அண்ணையுடன் மத்திய கல்லூரிக்கு போக தொடங்கிவிட்டேன் .Big Match என்றால் அக்காமாரும் வருவார்கள் .இடைவேளையில் city bakery யில் பருப்பும் பாணும் சாப்பிட்ட சுவை இன்னமும் நாக்கில் இருக்கு .

பிறகு அண்ணர் மூன்றாம் அணியில் உதைபந்து விளையாட தொடங்கிவிட்டார் .வரலாறு காணாத மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி அது .அதே அணி 3rd team ,2nd team ,1st team அனைத்தும் இறுதி சம்பியன் ஆட்டத்திற்கு வந்தது ஆனால் இறுதி ஆட்டத்தில் வெல்லவில்லை .அண்ணருடன் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்றாக விளையாடியவர்கள் சில்வெஸ்டர் ,வால்டேர்ஸ்,தம்பா மகேஸ்வரன் ,சுபாஸ் மனோ ,தேவராஜா ,

 

1st team துரையப்பா மைதானத்தில் திருத்த வேலை நடந்ததால் பரமேச்வராவில் அனைத்து ஆட்டங்களும் நடந்தது .அந்த வருட மிக நல்ல அணிகளான மானிப்பாய் இந்துவையும் யாழ் இந்துவையும் வென்று இறுதி ஆட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனாவுடன் மத்திய கல்லூரி விளையாடியது ."பட்டிக்காடா பட்டணமா " என்று நோட்டிஸ் வேறு அடித்துவிட்டார்கள் .

மகாஜனா வஞ்சகமில்லால் ஆறு கோல்கள் அடித்தது .அண்டைக்கு உண்மையில் உருப்படியாக விளையாடியது அண்ணர் மட்டும் தான் .

 

Link to comment
Share on other sites

"பட்டிக்காடா பட்டணமா " என்று நோட்டிஸ் வேறு அடித்துவிட்டார்கள் .

மகாஜனா வஞ்சகமில்லால் ஆறு கோல்கள் அடித்தது .அண்டைக்கு உண்மையில் உருப்படியாக விளையாடியது அண்ணர் மட்டும் தான் .

 

மலரும் நினைவுகள்
 
பழையமாணவர்கள் மாட்டுவண்டியில் சகல வாத்தியங்களுடன் வந்திறங்கி அட்டகாசம் பண்ணினார்கள். ஆனாலும் முடிவு சோகக்கதைதான். மஹாஜனாவிற்காக எனது நெருங்கிய உறவினர்கள் இருவர் விளையாடியிருந்தார்கள். அவர்களின் கேலியால் கூணிக்குறுகியது இப்பவும் ஞாபகத்தில் உள்ளது. இதில் ஆச்சரியமானது உயர்தரக் கல்வியை நான் மஹாஜனாவில்தான் கற்றேன். ஆரம்பநாட்களில் பட்டிக்காடா பட்டணமா என்ற நக்கல்கள் வேறு...
 
ஊக்கமளித்த, ஊக்கமளிக்கும் நண்பர்களிற்கு நண்றிகள்.
Link to comment
Share on other sites

அண்ணருடன் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்றாக விளையாடியவர்கள் சில்வெஸ்டர் ,வால்டேர்ஸ்,தம்பா மகேஸ்வரன் ,சுபாஸ் மனோ ,தேவராஜா ,

 

 

 

இவர்களில் சிலர் அண்ணருடன் படித்தவர்கள். தேவராஜா அண்ணரின் வகுப்பு. இவர்களுடன் கிரிக்கெட் வீரர்களான சிவகுமார், தியாகராஜா, ஸ்ரீகாந்தா போன்றோரும் ஒரே வகுப்புத்தான்.

Link to comment
Share on other sites

உந்த ஸ்கூலுக்குப் போற பையன்கள் படிக்கவா போறாங்க வேம்படிப் பெண்ணுகளைப் பார்க்கவல்லா போறாங்க. காவாலிப் பையன்கள்! :icon_mrgreen:

 

சரி உங்கள் பிரச்சினை என்ன? :icon_mrgreen:  சென்றல் பெடியள் காவாலி தான் :lol:  வேம்படி பெண்களை பார்ப்பதில் என்ன தப்பு? :icon_idea:

அவர்களும் விரும்பினால் பார்த்துவிட்டு போகட்டுமே :D:lol:

 

நீங்கள் என்ன கலவன் பாடசாலையா? :icon_mrgreen:  உங்கள் கதையையும் எழுதுங்கோ நாங்கள் கேட்க தயார்

 

Link to comment
Share on other sites

http://sinnakuddy1.blogspot.co.uk/2014/04/70_9.html

 

70 களின் யாழ் மத்திய கல்லூரி சூழலை விவரிக்கும் புகைபடங்களை தொகுத்து இந்த வீடியோ தொகுக்க பட்டிருக்கிறது. அக்கால இளைஞர்களின் தலை அலங்காரம் ,பெல்பொட்டம் உடை அணியும் முறை மற்றும் பலவற்றை ஞாபகபடுத்த வைக்கிறது. மணிக்கூட்டு கோபுரம் ,சுப்பிரமணியபூங்கா, யாழ் மத்திய கல்லூரி ஆரம்ப பாடாசாலை மற்று ஹாஸ்டல் முன் இளைஞர்கள் கூடுவது எல்லாம் 70களை கண் முன் நிற்க வைக்கிறது....சில புகைபடங்களை கஸ்டபட்டு உற்று நோக்கினால் சில பழைய கிரிக்கட் வீரர்கள் உதைபந்தாட்ட வீர்ர்களை சாடையாக ஞாபக படுத்த முடிகிறது ...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படியும், சுண்டுக்குளியும் சென்ட்ரலின் இரு கண்கள் அல்லவா...!

 

நாங்களும் சைக்கிளில் அங்கு வீதியுலா வந்திட்டுத்தான் இங்கு பாடசாலை போறது.

 

சென்ட்ரலில் நடைபெறும் கண்காட்சிகள், கலை விழாக்கள், மற்றும் தென்பகுதிப் பாடசாலைகளில் இருந்து வரும் நல்லெண்ணக் குழு விஜயங்கள் . போன்றவற்றிலும் நாங்கள் பாடசாலை யூடாகப் பங்கு பற்றுவதுண்டு...!! :D :D

 

பகிர்வுக்கு நன்றி ஜீவன் சிவா...!!!

Link to comment
Share on other sites

இவர்களில் சிலர் அண்ணருடன் படித்தவர்கள். தேவராஜா அண்ணரின் வகுப்பு. இவர்களுடன் கிரிக்கெட் வீரர்களான சிவகுமார், தியாகராஜா, ஸ்ரீகாந்தா போன்றோரும் ஒரே வகுப்புத்தான்.

இவர்கள் எல்லோரையும் எனக்கு தெரியும் .தேவராஜா கனடாவில் தான் உள்ளார் .கனடாவில் தமிழ் இளைஞர்களுக்கு ஒழுங்காக Track & field பயிற்சி கொடுப்பது என்றால் இவர்தான் .சிவகுமாரும் சிறிகாந்தவும் லண்டனில் .தியாகராஜா போதகர் ஆகியதாக அறிந்தேன் .தியகராஜாவை நல்ல பழக்கம் இவரது அப்பாவும் எனது அப்பாவும் ஒரே பாடசாலை ஆசிரியர்கள் . 

இரண்டு வருடங்களுக்கு முதல் யாழில் நான் எழுதிய கதை ஒன்றில் சிறிகாந்தா வருகின்றார் . :o

Link to comment
Share on other sites

மதராசி இணைத்த வீடியோவில் பல தெரிந்த முகங்கள் .

 

நாடா ஜெயதேவன் ,ரமீஸ் -கனடா

முத்துக்குமார் -பிரான்ஸ்.

உருத்திரகுமார் -அமேரிக்கா (நாடு கடந்த அரசு )

மித்திரன் ,ரஞ்சிற்-காலாமகிவிட்டார்கள் .

சூப்பர் வீடியோ ஒருக்கா மத்திய கல்லூரி சூழலை சுற்றிவந்தது போலிருக்கு .


இரு வருடங்ககுக்கு முன் கனடாவில் யாழ் மத்திய கல்லூரி பெரியதொரு ஒன்றுகூடல் வைத்தார்கள் .

வெளிநாட்டில் இருந்து வந்த ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களின் கிரிக்கெட் டீம் இது .

 

533787_10151461646353674_1957096045_n.jp

Link to comment
Share on other sites

மதராசி இணைத்த வீடியோவில் பல தெரிந்த முகங்கள் .

 

நாடா ஜெயதேவன் ,ரமீஸ் -கனடா

முத்துக்குமார் -பிரான்ஸ்.

உருத்திரகுமார் -அமேரிக்கா (நாடு கடந்த அரசு )

மித்திரன் ,ரஞ்சிற்-காலாமகிவிட்டார்கள் .

சூப்பர் வீடியோ ஒருக்கா மத்திய கல்லூரி சூழலை சுற்றிவந்தது போலிருக்கு .

 

உருத்திரகுமார், நகுலேஸ்வரன் எனது இன்னொரு அண்ணரின் வகுப்பு.
 
அது சரி 9 வருடங்கள் படித்த எனக்கு தெரியாத முகங்கள் உங்கள்  ஞாபகத்தில் எப்படி. நீங்கள்தான் மத்திய கல்லூரியில் படிக்கவேயில்லையே.
 
இணைப்புக்கு நன்றி மதராசி.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.