Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

தவக்கால நற்சிந்தனைகள்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தவக்காலம் மிகவும் முக்கியமான ஒரு காலம். சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு பெருநாள் வரை இந்த தவக்காலம் அமைகிறது.

                               ஒவ்வோர் ஆண்டும் நாம் கடைபிடிக்கும் இந்த வழிபாட்டு காலத்தைப் பற்றிய நமது எண்ணங்களை இந்த சிந்தனையின் துவக்கத்தில் சிறிது ஆழப்படுத்த முயல்வோம். தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை ஆங்கிலத்தில் Lenten Season என்று அழைக்கிறோம். Lenten என்ற வார்த்தை Lencten அல்லது, Lengten என்ற Anglo Saxon வார்த்தையில் இருந்து வந்தது. அதன் பொருள் வசந்தம். அதாவது, வசந்தம் வருகிறது என்ற எண்ணத்தை சொல்வதற்கு, Lengten அல்லது Lencten என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. தவக்காலத்தை ஒரு வசந்த காலமாக எண்ணிப் பார்ப்பது ஓர் அழகான எண்ணம். புதுமையான எண்ணம். பொதுவாக. தவக்காலம் என்றதும் சாம்பல். சாக்குத்துணி. சாட்டையடி என்று சோகமான, துயரமான அடையாளங்கள் மனதை நிரப்பும். ஆனால். தவக்காலம் வசந்தத்தைக் கொண்டுவரும் புதியதொரு ஆரம்பம் என்ற பொருளிலும் பாப்பது நல்லது. ‘வசந்தம்’ கேட்பதற்கு அழகான சொல். அழகான எண்ணம். உண்மைதான். ஆனால் அந்த வசந்தம் வருவதற்கு முன் மாற்றங்கள் வேதனைக்குரிய மாற்றங்கள் நடைபெற வேண்டும். மாற்றங்கள் என்றதும், முற்றிலும் அழிந்துபோன ஒன்று மீண்டும் உயிர்பெறுவதும் ஒரு மாற்றம்தானே.
                      மழைக் காலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பிக்கும் போது மரம் செடி கொடி போன்றவற்றில் உள்ள இலைகள் உதிர்ந்து ஒரு வெறுமையான தோற்றம் காணப்படும்.பிறகு வசந்த காலம் ஆரம்பிக்கும் போது மீண்டும் அந்த மரம் செடி கொடிகளில் புதிய தளிர்கள் தோன்ற ஆரம்பிக்கும். பிறகு அவைகள் அனைத்தும் செழிப்பாக காணப்படும். அதுபோல நாமும் இந்த தவக்காலத்தில் நம்மை ஜெப,தவ முயற்சிகளால் நம்மில் உள்ள பழைய கெட்ட பழக்கங்களை உதறி விட்டு புதிய மனிதர்களாய்.மாற முயற்சி செய்வோம்.

                          தவக்காலத்தைப் புத்துயிர் தரும் வசந்தகாலம் என்ற வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுபோல், சோதனைகளைப் பற்றியும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம். சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், நம்மில் பலருக்கு அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் போல் தோன்றலாம். அவ்வளவு பயம். ஆர அமர சிந்தித்தால், சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மைகளை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
                                போதை, மது, பேராசை, பதவிவெறி என்று நம் வாழ்வைச் சுற்றி வருபவை நச்சுப் பாம்புகள் என்று தெரிந்தும் அவற்றைத் தூக்கி கடிபடுகிறோமே!  சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? தப்பித்துக் கொள்ள முடியாத அளவு பெருகியுள்ள ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவது போல நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்வதால், சோதனைகளுக்கு ஓர் அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். சோதனைகளுக்கும் அவற்றின் மூல காரணமான தீய சக்திகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை.
                  சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ்மனதில் உள்ள தீய நாட்டங்கள் மிருக உணர்வுகள் இவைகளைத் தட்டி எழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும் உறுதியான மனமும் உள்ளன. இதையும் நாம் நம்ப வேண்டும்.
                   நாம் வாழும் உலகில் நல்லவைகளும் ஆக்கப்பூர்வமான செயல்களும் நடக்கின்றன. தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால் ஒரு சாபக்கேடாக நமது செய்தித் தாள்கள் தொலைகாட்சி வானொலி என்று அனைத்துத் தொடர்புச்சாதனங்களும் பெருமளவில் அழிவையே நமக்குப் படங்களாக கதைகளாகச் சொல்லி நம் மனதை உருக்குலைய வைக்கின்றன. வசூலுக்குச் சுவையானவை இந்தக் கோரங்கள்! ஆனால் வாழ்க்கையில் இவை உண்டாக்குவது விபரீதங்கள். இவைகளையே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்க்கும் போது "ச்சே, என்னடா உலகம்" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது.
                     இப்படி ஓர் இயலாத்தன்மை நமக்கு ஊட்டப்படும் போது இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு பிரமை ஒரு மாயை நம்மில் வளர்கிறது. இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும். இயேசு சோதனைகளைச் சந்தித்தது அவைகளை வென்றது நமக்கு நல்லதொரு பாடமாக அமைய வேண்டும்.
                    இயேசு தமது பணியைத் தொடங்கும் முன் நாற்பது நாட்கள் நோன்பு இருந்து இறைவேண்டல் செய்தார். அவரைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களும் தங்கள் தவ முயற்சிகள் மூலம் இறைவனின் பணியை செய்ய தங்களைத் தயார் செய்கிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

  • கிறிஸ்துவின் பாடுகளை தியானம் செய்தல் அல்லது
  • சிலுவைப்பாதை செய்தல் மற்றும்
  • திருப்பலியில் அதிக அளவில் பங்கேற்றல்
                     ஆகியவை தவக்காலத்தின் சிறந்த பக்தி முயற்சிகள் ஆகும். உடல் மன கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுதல் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல் போன்றவையும் சிறந்த தவ முயற்சிகள் ஆகும்.
 

                   "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். "


                    "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்."


என்று நம் ஆண்டவர் நமக்கு அறிவுறுத்தியது போல நாமும் வாழ்ந்து இறையரசை பற்றிக்கொள்வோம்.

 

நன்றி:
http://raktamilcatholic.blogspot.ca/2014/03/blog-post_5042.html

 

 

 

Link to post
Share on other sites
  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.