Jump to content

நினைப்பதெல்லாம் நடந்துவிடும் - . உயர்வின் ரகசியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்பதெல்லாம் நடந்துவிடும் - . உயர்வின் ரகசியம்

 

ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் அப்படி உயர்த்திக்கொள்ளத் தவறிவிட்டால் நாம் அடுத்தவர்களை உய்ர்த்தும் தகுதி அற்றவர்களாகிவிடுவோம்.
 
எதற்காக நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்..?உயர்த்திக்கொள்ளுதல் அவசியமெனில் நாம் கீழான தாழ்வு நிலையில் இருக்கிறோமா..?அடுத்தவர் உயர்வுக்கு நாம் எவ்விதத்தில் பொறுப்பு..? உயர்வு நிகழவில்லை எனில் குடியா முழுகிவிடும்..?
 
ஒரு கருத்தை வைத்ததுமே ஆயுதம் ஏந்திய போர் வீரர்களாய் உள்ளத்தில் கேள்விகள் அணிவகுப்பது இயல்பே.
 
கிணற்று நீர் அதன் இயல்பில் மண்ணுக்கு கீழான சமநிலையில் இருக்கிறது. எந்த பயன்பாட்டிற்காக தண்ணீர் உருவானதோ அதை நிறைவேற்ற மேலே வந்துதான் ஆகவேண்டும். அப்போதுதான் வறண்ட நாக்குகள் நனையும். மனிதனும் அப்படியே.
 
தண்ணீரே நினைத்தாலும் தானாக உயர முடியுமா..?ராட்டினம், கயிறு, வாளி, இவை எல்லாம் இருந்துவிட்டால் தண்ணீரை இறைத்துவிடலாம். கீழே இருக்கும் மனிதன் எப்படி உயர்வது..? யோக நூல்க்ளின் வழியே ஞானிகள் கூறினார்கள், "தலை மையத்தில் ஒரு ராட்டினத்தைத் தொங்கவிட்டு, தண்டுவடம் என்கிற கயிற்றில் கட்டி, உணர்வோடு இறக்கினால் அது கீழே இருக்கும் குண்டலினி ஊற்றைக் கிளப்பி உச்சிக்கு ஏறி ஞானத்தை முகர்ந்து வரும். மனிதன் உயர்வான்."
 
"அய்யய்யோ ஆளை விடுப்பா..குண்டலினியா.."என்று நாம் அலறுகிறோம். ஞானம் என்றாலே நமக்கு அச்சம். ஞானத்தை மதங்களோடு சேர்த்து பார்ப்பதே காரணம். மனிதர்கள் அவரவர் மத சிறைக்குள் இருந்துகொண்டு பூட்டைத் திறக்கும் சாவியை கொடுத்தாலும் வாங்க மறுக்கிறார்கள். சிறைக்குள்ளேயே சுதந்திரமாய் இருப்பதாய் பாவித்துக்கொண்டு உயர்வெய்தாமல் வாழுகிறார்கள்.அவர்களுக்கு எதையுமே அறிவியல்பூர்வமாகத்தான் சொல்லவேண்டும்.
 
என்ன செய்வது..? உலகமே திரும்பி பார்த்து ஏங்கும் இந்த ஞான பூமியில்தான் வறுமை, பிணி,பஞ்சம்,பட்டினி, விலைபொருளாய் கல்வி, பாலைவன ஊற்றாய் வேலை வாய்ப்பு,போட்டி, பொறாமை, எய்ட்ஸ்,எல்லாமே தலை விரித்தாடுகிறது.நாம் சாவிகளை தூக்கிப்போட்டு விட்டோம் அதனால்தான் தாழ்வு.சாவியை தேடி எடுத்துவிட்டால் உயர்வுதான். எடுப்பதற்கு தேவை கொஞ்சம் அறிவு, கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் உணர்வு.
 
இந்த பூமி உருண்டையும் அதன் மீதான உயிர் தொகுதிகளின் வாழ்வும் மிக உயர்வான இடத்திலிருந்து இறங்கி வந்தது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.எங்கிருந்து நாம் எதுவாக புறப்பட்டோமோ..அவ்விடத்திற்கு மீண்டும் திரும்புவதே உயர்வு. வரும்போது இறங்கி இறங்கி வந்திருக்கிறோம். திரும்புகையில் ஏறி ஏறி உயர வேண்டியிருக்கிறது. அதனால்தான் இவ்வுலகின் ஞானத்தகப்பன் "வானின்று உலகம் வழங்கி வருதலால் " என்றான்.வாழ்வு துவங்கிய இடம் வானம். வானமே நம் எல்லை."மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்"என்பார்கள். வானம்தான் மரத்தை வைத்தது, வானமே தண்ணீரை ஊற்றுகிறது.
"மண்ணோடு விண் காட்டி மரைந்து மறையா அருளைக்
கண்ணோடு கண்ணாக என்று காண்பேன் பராபரமே"- என்று ஏங்குவார் தாயுமானவர்.
 
நாமெல்லாம் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தவர்கள்தான்.மண் சூடே சுகம் என்று மண்ணீலேயே தங்கி விட்டதால் விண்ணின் முகவரி மறந்து போயிற்று.இல்லையெனில் நாமும் "மண்ணோடு விண்காட்டி" என ஏங்கத்துவங்கியிருப்போம். மறந்ததை நினைவுபடுத்தவே ஆலயங்களில் ஏற்றப்படும் கற்பூரக்கட்டிகள் சோதியாய் உயர்த்தும் தம் ஒற்றை சுட்டு விரலால் "என்னை உருக்கி நான் உயரும் திசை கண்டு தெளிந்து உன்னையும் உயர்த்திக்கொள் "- என்கிறதோ தெரியவில்லை.
 
நம் மக்களுக்கு செத்தால்தான் பரலோகம். கண்போன பின்னால்தான் சூரிய நமஸ்காரம், விழிகளை விற்றுத்தான் சித்திரம் வாங்குவார்கள். வானத்தோடான உறவு என்றாலே மரணத்துக்கு பிறகுதான் எனும் தப்பெண்ணமும் இருக்கிறது.ஆகாயத்தில்தான் நம் ஆதி தாய் இருக்கிறாள். வாழும்போதே நாம் பரலோகத்தை பார்த்துவிட வேண்டும்.
 
அதுவே உயர்வு. அதுவே ஆனந்தம்.
 
"நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
உலவை இரண்டு ஒன்று விண்"
 
இது பார்ப்பதற்கு திருக்குறள் போலவே தெரியும். ஔவையின் குறள்."பிறப்பின் நிலைமை" எனும் அதிகாரத்தின் ஐந்தாம் குறள். இக்குறளில் அப்படியென்ன இருக்கிறது..?பஞ்ச பூதங்களின் வரிசைதானே சொல்லப்பட்டிருக்கிறது. ஆம்.. எப்படி சொல்லப்பட்டிருக்கிறது..?
 
ஆகாயம் -முதல் பூதம்.
காற்று - இரண்டாம் பூதம்
நெருப்பு - மூன்றாம் பூதம்
நெர் - நான்காம் பூதம்
நிலம் - ஐந்தாம் பூதம்.
 
இக்குறளில் வேறேதேனும் நுட்பங்கள் உள்ளதாவெனில் உள்ளது. உலகம் தோன்றிய பரிணாம வரிசை இதுதான். ஆனால் நாம் இதற்கு ஏற்கனவ ஒரு வரிசையை தந்திருக்கிறோம்.
 
நிலம் -நீர்-காற்று - நெருப்பு - ஆகாயம் என்று.
இதை உணர்ந்து சொன்னவர்களும் ஞானிகள்தான். இரண்டில் எது சரி..? எது தவறு..?
 
இரண்டுமே சரி.
 
கோடி கணக்கான ஆண்டுகள், யுகங்கள் என காலத்தையும், வாழ்கைக்கான விதை புள்ளியையும் தன்னுள் ஒடுக்கி தன்மயமாய் இருந்த சுத்தவெளியில்
ஆகாயத்தின் தன்னறிவு காற்றறிவாய் இறங்கி , பின் தீ அறிவுக்கு இறங்கி ,ஆதன்பின் நீர் அறிவுக்கு இறங்கி இறுதியாய் நில அறிவாய் நிலைத்தன் விளைவுதான் இந்த உயிர்கோளம் உருவாக் காரணம்.எரிந்து சுழன்று குளிர்ந்து அணைவை நோக்கிப்போகும் நெபுலாவின் சின்ன சின்ன பிரதிகள்தான் நாமெல்லாம்.
 
விண்ணில் துவங்கிய அதிர்வு மண்ணீல் உயிராய் மலர்ந்தது. உயிரின் அறிவு நாட்டம் மனிதனை கொண்டு வந்தது. மனிதன் தான் எங்கிருந்து வந்தோம் என ஆராயத் துவங்கினான்.
 
நிலத்திலிருந்து உயர்ந்து நீருக்கும்.
அதிலிருந்து உயர்ந்து நெருப்புக்கும்..
நெருப்பிலிருந்து உயர்ந்து காற்றுக்கும்..
காற்றிலிருந்து உயர்ந்து ஆகாயத்துக்கும் என்றொரு வரிசையக் கண்டுகொண்டான்.
 
ஆகாயம் என்பது அருள்வெளி - பூமி என்பது பொருள்வெளி.
முதல் வரிசை வந்த வழி. இரண்டாம் வரிசை செல்லும் வழி.
 
ஒடுங்கியது வெடித்தால் உலகம். வெடித்தது ஒடுங்கினால் ஞானம்.
 
அருளிலிருந்து பொருளுக்கு இறங்கி வந்தோம்.
பொருளிலிருந்து அருளுக்கு ஏறி உயர்வோம்.
 
"அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.."
 
இதை உணராமல் தடுமாறினால் முழுமையான உயர்வடையாமல் நடுவழியில் தத்தளிக்கத்தான் வேண்டும்.
 
"தாளுண்ட நீரை தலையாலே தான் தருதலால்.."- என பாடுவாள் ஔவை.
எத்தன்மைத்தான நீராய் இருந்தாலும் அதை உறிஞ்சி வடிகட்டி உயர்த்தி தன் உச்சியில் இனிக்கும் நீராய், ஞான ரசமாய் வழங்கும் ஓரறிவு உயிரான தென்னைக்கே சாத்தியம் என்றால் ஆறறிவு மனிதனின் உயர்வில் என்னவெல்லாம் நிகழும்..?
 
"நினைப்பதெல்லாம் நடக்கும்"
 
உயர்வோடு உள்ளத்தில் உருவான எண்ணங்கள் எல்லாம் மெய்யாகும். அம்பலத்தில் அரங்கேறும். கனவுகள் மெய்ப்படும். தோல்விகள் அழிந்து வெற்றிகள் பெருகும்.ஆனந்தம் ஊற்றெடுக்கும்
 
 

நாம் யார்..?
மனிதர்கள் என்று எவராலும் சொல்லிவிட முடியும்.
மனிதனைப் படைத்தவை பஞ்ச பூதங்கள் என்று ஏற்கபனவே பார்த்தோம்.சர்வ வல்லமை படைத்தவனாக, உலகையே ஆளக்கூடிய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மனிதன் அந்நிலைக்கு எப்படி வந்தான்..?
 
"தேவன் தம்முடைய சாயலாக மனிதனை சிருஷ்டித்தார். அவனை தேவ சாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்."- ஆதியாகமம். அதிகாரம் :1 வசனம்:27
 
"மக்களே நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்களுடைய இறைவனை மட்டும் வணங்குங்கள். அதனால் நீங்கள் எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் தவிர்த்துக்கொள்ளலாம்." -குர் ஆன் அதிகாரம்:2 (அல்பக்கரா)வசனம்:22
 
மனிதன் நேரடியாக கடவுளால் படைக்கப்பட்டான் என்று மதங்கள் முரசறைந்தன. "மனிதன் முழுதாக ஆண்டவனால் படைக்கப்படவில்லை, மண்ணின் செழுமைகள் ஒன்றுகூடி உண்டான உயிரணுக்களின் பரிணாம வளர்ச்சியே மனிதன். பூச்சியாய், புழுவாய், நத்தையாய், மீனாய், பறவையாய், மிருகமாய், குரங்காய் வளர்ந்து இறுதியில் அவற்றின் திருத்த உருவமாக மனிதன் தோன்றினான்" என்று சார்லஸ்டார்வின் மதங்களுக்கு எதிராய் நின்றார்.
 
"புல்லாகிப் பூடாய் புழுவாய்
பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவரச் சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்.."-சிவபுராணம், மாணிக்கவாசகர்.
 
வைணவக் கடவுள் விஷ்ணுவின் தசாவதாரங்கள் கூட உற்று நோக்கினால் மனித பரிணாமத்தையே காட்டி நிற்பதை உணரலாம்.
 
நீரில் வாழும் மீனாக - மச்சாவதாரம்.
நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையாக - கூர்மாவாதாரம்.
நிலத்தைத் தோண்டி வாழும் பன்றியாக - வராக அவதாரம்
வானை அளந்த குறு வடிவமாக - வாமன அவதாரம்.
மனிதன் பாதி சிங்கம் பாதியாக - நரசிம்ம அவதாரம்.
முழு மனிதனாக - பரசுராம, பலராம அவதாரம்.
உழவுக்கு உதவும் ஆவினங்களை மேய்த்து காப்பவனாக - கிருஷ்ணாவதாரம்.
மக்களை காக்கும் பேரறிவு நாயகனாக - இராமாவதாரம்.
 
இப்படி ஒன்றிலிருந்து ஒன்றாக இயற்கை பிரினிலையில் திருத்தப்பட்டு உயர்வான மனிதன் உருவாகியிருப்பதான இந்த அவதாரக் கதைகளுக்கும் டார்வின் கொள்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது புலப்படவே செய்கிறது.
 
மனிதன் தன் உடலின் ஒவ்வொரு செல்லிலும் அறிவுப்போராட்டத்தை நிகழ்த்தியே உயர்வுக்கு வந்திருக்கிறான். அறிவுப்போராட்டத்தின் உச்சக்கட்ட வெற்றியே மனிதன்.அளவில் பெரிய யானையிடமோ, திமிங்கலத்திடமோ,குரூரம் நிறைந்த சிங்கம்,புலி, சிறுத்தையிடமோ உலகம் அடங்கவில்லை. உலகம் மனிதனின் கையில் கோலிகுண்டாய் சிறுத்துப்போனது.மேற்சொன்ன விலங்குகளையேக்கூட மனிதனே ஆட்டிப்படைத்தான்.. மனிதனுக்கு மிஞ்சிய ஒரு பரிணாம வடிவத்தை இன்னும் இயற்கை யோசிக்கவில்லை.இவ்வுலகின் முடிசூடாமன்னன் மனிதனே. வானவெளியும் கிரகங்களும், நட்சத்திரங்களும். நிலவும் அவனுக்கே சொந்தமானவை என்று பட்டயம் போட்டிருக்கிறது இயற்கை.இப்படிப்பட்ட மனித கூட்டத்திற்கிடையே இன்று நடப்பதென்ன..?
 
நதிகளின் பெயரில் போர்க்கொடி, மதங்களின் பெயரில் ரத்த வெறியாட்டம், மொழிகளின் பெயரில் கொலைவெறி,கடவுளர்களின் பெயரில் கலவரம், அரசியலின் பெயரில் அக்கிரமம்,தனிமனித சுயநலம், வக்கிரம், போட்டி, பொறாமை, மனச்சிதைவு, தற்கொலை, தோல்வி, விரக்தி, சோகம்...ஏன்..ஏன்...?
அறிவு விலங்கான மனிதனுக்கு ஏன் இந்த அவலம்...? இந்த இழிநிலைக்கு காரணம் என்ன..?
 
கால் ஓட்டத்தில் நம்மை அறிந்து முறையாக உயர்த்திக்கொள்ள தவறியதே.
உண்மையில்..நாம் யார்.....?
நாம் உடல்களாக் இருக்கிறோம். உடல்களாக மட்டுமல்ல உயிர்களாக இருக்கிறோம். உடல் உயிர்களாக மட்டுமல்ல மனங்களாகவும் இருக்கிறோம். ப்குத்துப் பார்த்தால் இதுவே உண்மை.
சூத்திரமாக நிறுவுவதானால்..
 
உடல்+உயிர்+மனம்= மனிதன்
உடல்+உயிர்-மனம்= விலங்கு/தாவரம்
உடல்-உயிர்-மனம்=சடப்பொருள்
 
உடலுடன் உயிர் பிணைகையில் அறிவு பிறக்கிறது. இந்த அறிவு பஞ்சபூதங்களின் சாரமாய் இருக்கிறது.இவ்வுலகில் ஆறுவகை உயிர்கள் இருப்பதாக தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் கூறும் சூத்திரம்
 
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு நாவே
மூன்றறிவதுவ அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே - மரபியல்-571
 
உடல்நிலையில் ஐம்பூதங்களையும், அப்பூதங்களுக்குரிய அறிவையும் ஒருங்கே அமையப்பெற்றவன் மனிதன்.அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் இது ஆன்றோர் வாக்கு.
 
நிலம் முதல் பூதம். இதற்கு தொடு உணர்வு மட்டுமே உண்டு. இடம் விட்டு இடம் நகராது. நிலமும் நிலம் சார்ந்த தாவரங்களும் இடம்விட்டு இடம் நகர்வதில்லை.எரித்தாலும் வெட்டினாலும் எதிர்க்க முடிவதில்லை. ஓரறிவு நிலமே மனிதனின் உடல்.உடலுக்கு தொடு உணர்ச்சி உண்டு. தட்பவெப்ப சூழலுக்கேற்ப நிலத்தின் தன்மையும் நிறமும் மாறுபடுவதுபோல தொடுவுணர்வுள்ள மனிதத் தோலிலும் நிற, தன்மை வேறுபாடுகள் உண்டு.நிலத்தில் செடி முளைத்தால் உடலில் முடி முளைக்கும்.நிலத்திற்கு மணம் உண்டு.உடலுக்கும் மணம் உண்டு. மனித உடலை நிலம் ஆட்சி செய்கிறது."ஊன் வளர்த்தேன் உயிர் வளர்த்தனே" என்பார் திருமூலர். உயிர் வளர்வதற்கு உணவாக உட்கொள்லப்படும் அனைத்துமே மண்ணின் விளைவே.
 
இரண்டாவது பூதம் நீர். நீருக்கு இரண்டறிவு. இடம்விட்டு இடம் நகரும்.நீரானது மனித உடலில் நாக்கை ஆட்சி செய்கிறது. வியர்வையாக, கண்ணீராக, உடலில் பெரும்பங்கில் நீரின் ஆட்சியே."செம்புலப்பெயல் நீர்போல் :மனித தன்னை சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள இந்த நீரின் நீர்மைப் பண்பே காரணமாகும்.
 
மூன்றாவது பூதம் காற்று.நிலம்..நிலத்தின்மேல் நீர்வெளியில் குமிழ்கள் உருவாகி காற்று உண்டாகிறது. உயிர்வெளியில் ஈரத்தையும் உலர்வையும், சூட்டையும், குளிரையும் சுமந்து செல்வது காற்றே. இது இயல்பாகவே வாசனைகளை சுமந்துசெல்லும் இயல்புடையது.காற்றானது நம் உடலில் நாசியை ஆட்சி செய்கிறது.நாசியின் வழியாகத்தான் நாம் சுவாசிக்கிறோம். நறுமணத்தையும், சுகந்தத்தையும் நுகர்கிறோம்.
 
நான்காவது பூதம் நெருப்பு.எதையும் தன்வயத்தில் எடுத்துக்கொள்ளும் ஒளிவடிவமானாது.நெருப்பு கண்களை ஆட்சி செய்கிறது.வெளியொளியை கண்களால் பார்க்கிறோம். அதுமட்டுமன்றி உடலிலும் உயிர்ச்சூடாக பரவி நிற்பது நெருப்பே.
 
ஐந்தாவது பூதம் ஆகாயம். எங்கும் நிறைந்து அதிர்வுடன் கூடிய ஒலிவடிவமாய் ஈதர் என்கிற அலைகளை சுமந்துகொண்டிருக்கிறது ஆகாயம்.ஓசைகளை மனிதன் அதிர்வலைகல் மூலமாகத்தான் கேட்கிறான்.வானிலி,தொலைக்காட்சி, நவீன ஒலைபேசிகள் எல்லாமே ஆகாசவாணிமயம்.
 
உணரமுடியும், சுவைக்க முடியும், நுகரவும் சுவாசிக்கவும் முடியும், பார்க்க முடியும், கேட்க முடியும். மனிதரைப்போலவே மற்ற உயிர்களுக்கும் இது சாத்தியம்தான். இந்த ஐந்தறிவோடே மனிதனும் நின்று போயிருந்தால் ஆடு,மாடு போல மனிதனும் ஒரு விலங்கே. அவனும் ஒரு அடிமைதான்.ஆறாவது அறிவாக மனம் வாய்த்த சமுக விலங்கே மனிதன். மனதை இதமாக பயன்படுத்துபவன் மனிதன் என வடநூல்கள் சொல்லும். மெய்வழிச்சாலை ஆண்டவர் மனுஷனை "மனு ஈசன்"எனபார்.
 
மனம் வாய்த்த காரணத்தால்தான் அடங்குபவனாக வாழாமல் அடக்குபவனாக மனிதன் வாழ்கிறான்.வாழ்வான். மனம் மனித பரிணாமத்தின் மகுடம்.மனம் வாய்த்த பிறகு மனிதன் அழத்தேவை இல்லை.மெய்மை இப்படி இருக்க மனித நிலையோ இன்று அவநம்பிக்கையின் எல்லையில் அலைந்துகொண்டிருக்கிறது.மனித முன்னேற்றத்துக்கான ரகசியம் மனதில்தான் ஒளிந்திருக்கிறது.அலாவுதீன் விளக்கும், அலிபாபா குகையும் மனம்தான். மந்திரக்கோலும், மந்திரக்கம்பளமும் மனம்தான். மோசேயின் கைத்தடியும் மனமே.
 
மனம் கேட்டால் கொடுக்கும், தட்டினால் திறக்கும், கறந்தால் கறக்கும், வடிக்க வடிக்க ஊறும்.
 
 

 
 
"மனமே முருகனின் மயில் வாகனம்" மோட்டார் சுந்தரம்பிள்ளைத் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இது.
முருகன், குமரன்,ஆறுமுகன் என்றெல்லாம் அழக்கப்பெறும் ஆறாவது சமயத்துக்குரிய வழிபடுக் கடவுள். அறிவுக் கடவுள். முருகனின் வாகனம் மயில். அதாவது அறிவின் வாகனம் மனம்.
"ஏறு மயில் ஏறி வினை தீர்க்கும் முகம் ஒன்று" எனப் பாடினார் அருணகிரி நாதர். வினை தீர்க்க மயிலேறி முருகனா வருவான்..? அறிவானது மனதில் ஏறி வினை தீர்க்க வேண்டும் என்பதே மறைபொருள்.
 
மயில் ஒரு அசாதாரணப் பறவை.பஞ்சபூதங்களின் உள்ளுணர்வை தெள்ளென உணரக்கூடியது.ஆலாலகண்டனும் ஆடலுக்கு தகப்பனுமான நடராஜனின் பொன்னம்பலத்தை தன் தோகையில் காட்டி நிற்பது.மனமும் அப்படித்தான். போற்றும் விதத்தில் போற்றினால் நம் மனமும் பொன்னம்பலத்தைக் காட்டும். பஞ்சபூதங்களின் மேல் ஏறி நிற்கும். தோகை விரித்தாடும்.பல அதிசயங்களை நிகழ்த்தும்.மனம் பற்றிய அறிவு இல்லா நிலை மனமில்லா விலங்கு நிலைக்கு ஒப்பானது.
 
மனம் என்பது என்ன..?
மனம் ஒரு பொருளா..? பொருள் எனில் சடநிலையில் அதை உருவாக்கவும், வடிவம தரவும், தோற்றப்பொலிவை மேம்படுத்தவும் மனிதனால் இயலக்கூடும். கடைகளில்கூட ஐ.எஸ்.ஐ முத்திரை குத்திய மனதை ஒரு அரை கிலோ கட்டி தர சொல்லி வாங்கிவிடலாம்.சந்தைக் கடையில் வாங்கும் பொருளல்ல மனம்.
 
அப்படியெனில் மனம் ஒரு புலனா..?
மனிதனுக்கு உடலும், உடல் சார்ந்த இயக்கத்திற்கு கட்டுப்படும் ஐம்புலன்கள் உண்டு. மெய்,வாய்,கண்,காது,மூக்கு,என்பவையே அவைகள். பஞ்சபூதங்களின் வார்ப்பாக மனிதன் ஐந்து புலன்களை மட்டுமே பெற்றிருக்கிறான்.அவ்விந்தையும் எழுச்சியோடு அழுத்தி எழுந்ததே மனமாகும்.தொண்டர்களை தண்டரை வைத்தே வழி நடத்துவதில் ஞாயம் இல்லை என்பதால் இயற்கை மனதை புலனாகவும் படைக்கவில்லை.
 
மனம் மனித் உடலின் உள்ளுறுப்பா..?
உடல் பெட்டிக்குள் பூட்டி வைத்த உள் உறுப்புகள் அமைய பெற்றவன் மனிதன். விலா எலும்பு சிறைக்குள்ளும், வயிற்று பானைக்குள்ளூம், இருதயம்,நுரையீரல்,மண்ணீரல்,கணையம், சிறுநீரகம், சிறுகுடல், பெருகுடல், உணவுப்பை என தானியங்கி சாதங்களாய் பல உறுப்புகளை கூட்டாக கட்டமைத்து உள்ளது.இது நாள்வரை எந்த மருத்துவரும் மனம் என்கிற உள்ளுறுப்பைக் கண்டதாய் சொன்னதில்லை.சொல்லவும் முடியாது.மனிதர்கள் பழக்கம் காரணமாக "என் மனசுக்குள் எதுவும் இல்லை"என்று நெஞ்சு பகுதியை காட்டி இதயம்தான் மனம் என்பார்கள்.
 
மனிதனை வடிவம் தந்து வார்க்கும் மனம் பொருளாக,புலனாக, உள் உறுப்பாக இல்லாத நிலையில் அதன் மூலம்தான் என்ன.?
ஒருவேளை மூளைதான் மனமோ..?வலது கைஅயி உயர்த்த வேண்டுமெனில் அதற்கான உத்தரவை இடது மூளையிடமிருந்து பெறப்படவேண்டும்.தராசு தட்டு போல் வலது இடதாய் பிரிந்து நிற்கும் மனித உடலை எதிரெதிராய் வலது மூளையும், இடது மூளையும் இயக்கிநிற்கிறது. உடல் இயங்க மூளை உத்தரவிட வேண்டும்.சரி. மூளைக்கு உத்தரவிடும் முதலாளி யார்..? பின் எதுதான் மனம்..?
 
ஒரு எளிமையான கதையை பார்ப்போம்..
காசு திருட ஒருவன் சிறிய உண்டியலில் கையை விட்டான். திரும்ப எடுக்க முடியவில்லை. மருத்துவர்கள் கையை வெட்டவேண்டியதுதான் என்றார்கள். திருடியவன் மிகவும் பயந்துபோனான். கையில் அந்த உண்டியல் செம்போடே போய் வரவேண்டியதாயிற்று. ஒரு நாள் அவனது மனைவி பக்கத்து கோவிலில் யாரோ ஒரு ஆன்ம ஞானி வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரிடம் தன் கணவனை அழைத்துப்போனாள். ஞானி முழுக் கதையையும் கேட்டு பின்.."இதோ பாரப்பா கைக்கும், செம்பிற்கும் சேதாரமில்லாமல் காப்பாற்ற ஒரு வழி உள்ளது. அந்த உபாயத்தை என்னால் சொல்ல மட்டுமே முடியும்..செய்ய வேண்டியது நீதான்" என்றார். திருடன் சம்மதித்தான்.
"காசுக்கு ஆசைப்பட்டுதானே கையை உள்ளே விட்டாய்..இப்போது அந்த காசு வேண்டாம்..காசு வேண்டாம்..வேண்டவே வேண்டாம்..என நினைத்து கையை வேகமாக உதறு..உன் கை வெளியே வந்துவிடும்" என்றார். அவனும் உதறினான். கை விடுபட்டது.
 
இந்த கதையிலிருந்து மனம் என்பது என்ன என்பதை பற்றிய ஓரளவு முடிவுக்கு நம்மால் வரமுடியும். கையை விடுவிக்க ஞானி எந்தப் பொருளையும் பயன்படுத்தவில்லை. வார்த்தைகளை ஒரு கருத்தில் அமைத்துப் பேசினார். பேச்சு என்பது மொழி. மொழி என்பது ஓசை. ஓசை என்பது அதிர்வு. அதிர்வு என்பது காந்தம். காந்தம் என்பது ஆற்றல். ஆம் க்ண்ணுக்கு புலனாகாத ஆற்றல்தான் மனம். mind is nothing but an enrgy. மனம் என்கிற ஆற்றல் மனித மூளையை ஊடகமாகக்கொண்டு செயல்படும் வான்காந்த ஆற்றல். மனித மூளையிமன் மேலாளர் மனமே. ஒட்டுமொத்த மனித கூட்டத்தின் எசமானன் மனமே.
 
மனம் என்கிற ஆற்றலுக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு..?
ஒவ்வொரு மனிதனின் உடல் மற்றும் புலன்களின் உள்முக குவிப்பாக அதிர்வோடு இயங்குவதே மனம். மனதின் வெளிமுக தொகுப்பாக இயங்குவதே உடல்.மனமும்,உடலும் இயங்க பாலமாக, சாட்சியாக., சக்தியாக இருப்பதே உயிர். மனம் சொல்வதை உயிர் மொழிபெயர்க்கும், உடல் செயல்பெயர்க்கும்.
 
சில சமயங்களில் உடலும், புலனும் சொல்வதை மனம் உள்ளுணரும். உடல்,கண்,காது, மூக்கு,வாய் இவைகளில் மனம் இறங்கி வேலை செய்யும். சிவந்து கோபம் கொப்புளிக்கும் கண்களில் உண்மையில் நாம் பார்ப்பது அனல் வீசும் மனத்தையே.தூங்கும் குழந்தையை தட்டிகொடுத்து மென்மையாய் வருடிவிடுவது உண்மையில் கைகளல்ல..தாயின் மனமே. உணர்வோடு புலன் வழி இற்ங்குபோது, புலன்களும், உறுப்புகளும் மன் மயமாகவே மாறிவிடுகிறது. சில தாயரோ..பிள்ளையை "ச்சீ போ சனியனே 'என விரட்டுவர். விரட்டிய கைகளில் வேலை செய்ததும் மனமே.
 
தாய் தன் பிள்ளையை வருடிகொடுத்தாளா..? விரட்டி அடித்தாளா..?என்பது பற்றி உயிருக்கு கவலை இல்லை. அது வெறும் சாட்சி.மனம் அழுத்தும் சுவிட்சுக்கு மின்சாரத்தை பாய்ச்சுவது மட்டுமே அதன் வேலை.
 
இது புலன்களில் மனம் இயங்கும்விதம்.சமயங்களில் மனதுக்குள் புலன்கள் இயங்குவதுண்டு.வெளி உடலை நகல் எடுத்தாற்போல் மனதிற்ககும் ஒரு உடல் உண்டு.அவ்வுடலில் உணர்வும் உண்டு.முதுகுக்கு பின்னால் நம்மைப் பற்றி பேசும் சிலரை சட்டென்று திரும்பி பார்க்கிறோமே மனதின் உள்ளுணர்வு தூண்டலே அது.மனதிற்கும் கண்கள் உண்டு. வெளிக்கண் காணா நிலையிலும் அகக்கண் தெளிவுறக் காணும் சக்தி படைத்தது.விசுவரூபம் எனும் இறைப்பேராற்றலை ஞானிகள் இந்த அகக்கண்ணால்தான் காண்கிறார்கள்.முக்காலத்தையும் தரிசிக்கிறார்கள். நம் மனக்கண்களோ ஐஸ்வர்யாராயையும், அஸினையும் பார்ப்பதில்தான் ஆளாய் பறக்கிறது. இது மனதின் குற்றமல்ல. மனக்குதிரையை இயக்க தெரியாதவர்களின் குற்றம்.
 
மனதிற்கு செவியும் உண்டு. அது மனச்செவி. எங்கும் ஆனந்த பேரொளியாய் இசைக்கும் விசுவநாதத்தை இச்செவியால்மட்டுமே கேட்க முடியும். மனதிற்கு வாய் உண்டு. அது மன வாய்.யாருக்கும் கேட்காமல் பேசும்.
ஔவை அழகாக சொல்லுவாள்.
"கற்கலாம் கேட்கலாம் கண்ணாரக் காணலாம்
உற்றுடம்பால் ஆய உணர்வு.."-ஔவை குறள் (உள்ளுடம்பின் நிலைமை-1)
 
மனம் எனும் மந்திர ஆற்றலை மத்தாகக்கொண்டு வாழ்வெனும் பாற்கடலை கடைந்து அமிர்தம் பருகுவதில் மனிதனுக்கு தடை என்ன..?
 
எல்லாம் சரி...மனதின் முகவரி எது..? அதன் விஸிட்டிங் கார்டு இருந்தால்தானே அதைக் கண்டுபிடித்து அழைத்து வேலை வாங்க முடியும்.
 
மனமெனும் ஆற்றலின் இருப்பிடம் எது..?அதன் ரிஷிமூல ஊற்று எங்கிருந்து..?தங்கப்புதயலைத் தேடி மனிதர்கள் பய்ணித்த கதை நமக்கு தெரியும்.
 

 
 
"தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்"
"தலையே போனாலும் சரி இதை நான் செயாம விட மாட்டேன்.."
"என்ன் செய்துடுவான்..தலையே எடுத்துடுவானோ..?"
"தலைய வச்சாவது சொன்ன நேரத்துல நான் என் கடனை அடைச்சுடுவேன்.."
"தலைக்கு வந்தது தலைப்பாகையோட் போச்சு.."
இப்படி..இப்படி மனிதர்களிடம் தலைப்படும் பாடு சொல்லிமாளாது.தலைக்கு ஏன் இந்த முக்க்யியத்துவம்..?அப்படி இந்த தலையில் என்னதான் இருக்கிறது..?
 
கவிழ்த்துவைத்த மண்சட்டியைபோல் கபாலம். அதில் வலது இடதாய் 700 கிராமுக்கு ஒன்னரைகிலோ மூளை. பிமண்டியயில் முகுளம்.சோள்க்கொல்லை பொம்மையில் குத்தி வைத்ததுபோல் முகுளத்தை இணைக்கும் தண்டுவட் முனை. அச்சில்வார்த்த கேள்விக்குறிகளாய் ரெண்டு செவிகள்.மு மண்டைக்கு நேராக நூறடி ரோடு மாதிரி பெரு நெற்றி.அதன் கீழாக இரு துளைகளில் கோழிமுட்டையை துருத்தி வைத்த மாதிரி இரு கண்கள்.கண்களின் நடுநாயகமாய் சார்த்திவைத்த ஏணி மாதிரி ஒரு மூக்கு.நாசிகோயிலுக்கு பீடம் வைத்த மாதிரி வாய் அதிலொரு நாக்கு.சொல்லிகொண்டே போனால் தலையில் வேறென்ன இருக்கிறது..?
"எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்"என்பது லேசான வார்த்தைகள் அல்ல.
 
உயிர் நடத்தும் ஜனநாயக ஆட்சிக்கு தலைமைச் செயலகம் தலையே.புலன்கள் என்னும் அமைச்சர்களஅமர்ந்திருக்கும் சட்டமன்றம்தான் நம் தலை. சிரசில் உட்கார்ந்துகொண்டு அவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள்..?உடல்முழுதும் இருக்கும் எண்ணற்ற தொகுதிகளுக்கன நிர்வாக கட்டளையை மூளையிடமிரும்து நரம்புகள் வழியாய் எடுத்துப்போகிறார்கள். உயிரின் நிதியகமான குருதி கிடங்கு இதயத்திலிருந்து நிதியை நாலங்கள் வழியாக நுரைக்க நுரைக்க உடலின் உள்லாட்சி அமைப்புக்கும் இன்னும் மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துப்போகிறார்கள்.குடிமக்களான ஒவ்வொரு செல்லும் சுகமாய் வாழ, வயிறான் தானியக் கிடங்கில் சேமிப்பை கண்காணிக்கிறார்கள்.
 
இப்படி உடல் முழுதிற்கும் தேவையான சட்ட திட்டங்கள் தீட்டப்பட்டு செயலாக்கப்படும் செயிண்ட்ஜார்ஜ் கோட்டைதான் நம் தலை.உயிராற்றல் எனப்படும் மின்சார உதவியோடு இயங்கும் அனைத்து புலன்களின் மின் இணைப்புகளின் மெயின் போர்ட் மாட்டப்பட்டிருக்கும் இடமே தலை.கணினி மொழியில் சொல்வதானால் கணினியின் செயல் வேகத்தை தீர்மானிக்கும் மதர் போர்ட் அடங்கிய CPU தான் நம் தலை.இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு முதல்வராய் இருந்து ஆட்சி செய்பவர்தான் திருவாளர் மனம்.
 
இவர் இயற்றும் சட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் மன்றத்தில் சின்னதாய் சிக்கலும் உண்டு.அரசியல் கட்சிகள் போலவே right left ஆக அமர்ந்திருக்கும் வலது மூளை ஆளுங்கட்சி என்றால் இடது மூளை எதிர்கட்சி.
வலது - நெருப்பு என்று சொன்னால் போதும்
இடது - அது சுடுமே என்பார்..
வலது -பர்னால் தடவிக்கொள்ளலாம் என்றால்
இடது - அது வீண் செலவு என்பார்.
 
இரண்டு பக்க மூளைக்கும் ஊடாடித்தான் நம் மெய் தேசத்தின் நிரந்தர முதல்வராகிய மனம் ஆட்சி செய்தாக வேண்டும்.
சரி...
முதல்வரின் இருக்கை எங்கே இருக்கிறது.....?
ஏற்கனவே பார்த்தோம் புலான, உடல் உறுப்பாக இல்லாத மனதுக்கு உடலுக்குள் இடம் இல்லை என்று. மன முதல்வர் ஆற்றல் அலையாக இருப்பதால் வெளியேதான் உட்கார வைத்தாகவேண்டும்.உள்ளுறுப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட பணிகளை திரும்ப திரும்ப செய்பவை. மனம் அப்படியல்ல. அது அந்த உள்ளுறுப்புகளையே மூளை வழியாக இயக்கும் ரிமோட்சென்ஸ் மாதிரி.அந்த ரிமோட் வசதியாக உட்கார்ந்து தன் பணியை செய்ய இய்றகை தேர்ந்தெடுத்த இட்மதான் உச்சந்தலை.ஆண்டெனா மாதிரி கொத்து முடிகள் தூக்கிகொண்டிருக்குமே அந்த தலை உச்சியில்தான் சுருள்வில் இருக்கையிலே கண்ணுக்கு தெரியாத அலை ஆற்றலாக நம் மனம் உட்கார்ந்திருக்கிறது.
 
கருவறையில் சிசு குடியிருக்கும் முந்நூறு நாட்களில் உயிராற்றல் தொப்புள் கொடி வழியே தாயிடமிருந்து அனுப்பப்படுகிறது. தொப்புள் கொடி அறுபட்டதும் அதன் அழியே முதல் காற்று உடலுள் ஜீவனை இழுத்துப்போய் நெற்றியில் வாய்ப்பதாக ஞானியர் கூறுவார்கள்.அந்த ஜீவஜோதியின் பிரகாசம் அணையும் வரை உச்சந்தலை மனம் அதன் ஒளியை உடலுக்கு உள்ளும் வெளியும் எண்ணமாக செயலாக பரவச்செய்கிறது. முழு உடலும் கருவுக்குள் வளர்ந்தாலும் குழந்தைக்கு தேவையான மனதை பிரசவம் நிகழந்த பிறகே இய்ற்கைமுழுதாக வடிவமைக்கிறது.
 
வரைபடத் தாளில் இரண்டு அச்சுகள் வெட்டிக்கொண்டால் நான்கு கால் பகுதிகள் உருவாகும் அல்லவா..?அதை போல கபால எலும்புகள் இணையும் ஓர் ஆதிப்புள்ளியில் தோல்மட்டும் மூடிய நிலையில் உச்சிக்குழி என ஒன்று துடிக்கும். அந்த உச்சிகுழி வழியேதான் வாழ்கையை எதிர்கொள்ளத் தேவையான் இயங்குப் பதிவுகளை இயற்கை இறக்கி வைக்கிறது."குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு குடுக்கும்" என்ற சொலவடையில் வரும் கூரை நம் தலைதான், தெய்வம் பிய்க்கும் இடமே உச்சிக்குழி.உடனே உங்கள் தலையில் அப்படியொரு குழியை நீங்கள் தேடுவது தெரிகிறது. முழு மனமும் உருவான சில மாதங்களிலேயே இயற்கை அதை சீல் செய்து அடைத்துவிடும்.
 
நம் மனதில் ஏற்கனவே programme load செய்தாகிவிட்டது. அதுவும் மிக நன்றாகவே. கணீனியில் தொடர் பணி நிமித்தம் cpu சூடாகிவிடுவதுபோல் நம் தலையும் சூடாகி செயல்பாட்டில் பங்கம் வராதிருக்கவே நம் பாட்டிகள் உச்சந்தலையில் சூடு பறக்க எண்ணெய் தேய்க்கிறார்கள். எண்ணெய் முழுக்குப்போன்ற அனைத்துமே அனலடிக்கிற மனதுக்கு ஐஸ் வைக்கிற முயற்சியே.
 
தலை உச்சியில் தலைவனாக உட்கார்ந்திருகும் ஆறாவது அறிவின் அதிபதியான மனதின் அலைநீளத்தை பொறுத்தே நாம் பில்கேட்ஸ் ஆவதும் பிச்சைக்காரர்கள் ஆவதும்.நாளும் பொழுதும் ஒவ்வொரு நொடியும் தலைமேல் அலையாக இருக்கும் மனதைநாம் உணர்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்பதில் நம் முன்னோர்கள் அதிக கவனம் காட்டியிருப்பதற்கான அடையாளங்கள் நிறைய. அதிலொன்றுதான் கரகாட்டம். தலையில் ஏற்றிய கரகத்தை வைக்கப்பட்ட உச்சியிலிருந்து கீழே விழுந்துவிடாமல் உடலின் ஒவொரு ஊசி முனையிலும் கரகத்தின் நர்த்தனம்.மனதின் அதியற்புதத்தை உலகுக்கு எடுத்து சொல்லும் தமிழின் தன்னிகரில்லா தமிழ்கலை. நம் கலாச்சாரத்தின் ஒவொரு கலையையும் இதே ரீதியில் ஆய்வுகுட்படுத்த வேண்டும்.
 
விளையாட்டக மட்டுமன்றி புராணப்படைப்புகளில் அடையாங்களாக மனம்,உடல், மற்றும் உயிர் பற்றிய நுட்பங்கள்தான் வைக்கப்பட்டிருக்கின்றன என கருத இடம் உள்ளது.வலது மற்றும் இடது மூளையோடு இணைந்து மனதின் ஆற்றல் முதுகு தண்டுவடம் வழியாக மனிதனுக்குள் இறங்கும் அற்புதமான வடிவம்..சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலம். மனம் இருபக்கத்துக்கும் ஊடாடி சப்திக்கும் செயலை சித்தரிக்கும் உடுக்கை. ஒவ்வொரு மனிதனுன் முக்கண்கொண்ட சிவனே.இயேசுபெருமான் மரித்த சிலுவையைக்கூட இதே பார்வையில் பார்க்க பொருத்தமாகத்தான் இருக்கிறது. திரிசூல வளைவுகளை மடக்கி வைத்தால் சிலுவை. சிலுவையின் பக்கங்களை வளைத்தால் திரிசூலம். இஸ்லாமியமார்க்கத்தின் அடையாளமான பிறையின் இரு கூர்முனைகளும் மையத்து நட்சத்திரமும் இதே ரகசியத்தைதான் பறைசாற்றுகிறது.
 
"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்..
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு"
 
big minds are thinks alikes என்பார்கள். பேருண்மையை எல்லா ஞானியரும் இப்படித்தான் ஒரே மாதிரி சிந்தித்தார்கள்போலும்...அது சரி உங்களுக்கு என்ன சிந்தனை..?
உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது என்றா..?
 
 
 
 

"ஏ..மனமே உன்னோடு ஹாயாக சில நிமடங்கள் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும்.."
"நான் ரொம்ப பிஸி. நிறைய வேலைகளிருக்கிறது. பரவாயில்லை..நாம் சிறிது நேரம் பேசுவோம் எனக்கும் போரடிக்கிறது.."
"என்னது மனதுக்கே போர் அடிக்கிறதா..?"
"இதென்ன அண்ணாமலைக்கே பாலா என்கிற மாதிரி..? மனதுக்குதான் போர் அடிக்கும்ம்.."
"போரடித்தால் என்ன செய்வாய்,,,?"
"உடலை திமர வைப்பேன். மனித முகங்கள் தாக்க வருகிற கரடியாகத் தோணும். சில உதடுகளில் நிக்கோடின் அரிப்பைத் தூண்டுவேன். சில நுரையீரல்களுக்கு 'டாஸ்மாக்' வாசனை தேவைப்படும்.சிலருக்கு புத்தகம். சிலருக்கு டி.வி., சிலருக்கு ஹிஹி..ஹி..,சிலருக்கு தூக்க மாத்திரை..இப்படி நிறைய இருக்கிறது.."
"மனமே நீ ஒரு மாபெரும் ஆற்றல். மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவு. ஒவ்வொரு அறிவும் தாம் செயல்பட ஒரு ஊடகம் வைத்திருப்பது போல். சிந்திக்கும் பகுத்தறிவான நீ, வலது மூளையும் இடது மூளையும் கட்டப்பட்ட கபாலத்தேரின் உச்சியில் சாரதியாய் உட்கார்ந்திருக்கிறாய். எல்லாம் சரி..அங்கு உட்கார்ந்து என்ன செய்கிறாய்..?"
"வியாபாரம் செய்கிறேன்"
"என்ன வியாபாரம்"
"எண்ண..வியாபாரம். என் கடை எண்ணக்கடை. உடல் செயல்வடிவமானது.உயிர் ஒளிவடிவமானது. மனமாகிய நானோ எண்ண வடிவமானவன். என் பணி கண்டதையும் எண்ணிக்கிடப்பதே."
"உன் வாடிக்கையாளர்கள் யார்..?"
"உயிருள்ள உடல் என்னுடைய main dealer. புலன்கள் sub-dealer. செல்கள் என் நுகர்வோர்.."
"எண்ணங்களை வாங்கி அவர்கள் என்ன செய்கிறார்கள்..?"
"உணர்ந்து அனுபவிக்கிறார்கள்.செயலுக்குள் ஈடுபடுத்திப் பொருளாய் மாற்றுகிறார்கள். புதிய கொள்கையையோ
கருத்தையோ உருவாக்குகிறார்கள், மொழியாகப் பேசுகிறார்கள்.."
"இதில் உனக்கென்ன லாபம்..?"
"எனக்கு கிடைக்கும் திருப்திதான் லாபம். திருப்தி கிடைக்காவிட்டால் நஷ்டம்.."
"லாபம் வந்தால் என்ன செய்வாய்..? நஷ்டம் வந்தால் என்ன செய்வாய்..?"
"அதையும் எண்ணங்களாகவே மாற்றிவிடுவேன். லாபம் எனில் ஆணவச்சாயம் பூசி அகங்காரமாயும், நட்டம் எனில் சோகச்சாயம் பூசி விரக்தியான எண்ணங்களாக்கிவிடுவேன்.நான தூண்டில் போட்டு அதில் நானே சிக்கிக்கொள்கிறேன். இதுதான் என் இயல்பு,,"
"மாற்றிக்கொள்ள முடியாதா..?"
"அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது நீங்கள்தான். காரணம்..என்னை எதுவாக நினைக்கிறீர்களோ..நான் அதுவாகவே மாறிவிடுவேன். நினைத்தவர்களையும் மாற்றிவிடுவேன்."
"நல்லதே விளைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்,..?"
"நல்லதை நினை ம்னமே,."

"நல்லதை நினைப்பது உன் வேலை இல்லையா.."
""நல்லைவைகள் மிக மிக உயரத்தில் இருக்கின்றன. அவ்விடத்திற்கு சென்று நான் கொள்முதல் செய்துவரும் வரை புலன்கள் பொறுப்பது இல்லை. அதனால்தான் தாழ்வான நிலையில் உள்ள தரமற்ற எண்ணக்களைத் தருகிறேன்."
"தரமற்ற எண்ணங்கள் என்றால்..?"
"உயரத்தில் உள்ளவை உன்னதங்கள்.என் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவையோ..கோபம்,எரிச்சல்,சலிப்பு,சோம்பல், விரக்தி, தற்கொலை.."
"அய்யோ.."
"என்ன அய்யோ? தலைவர்களூக்காக தீ குளித்தவர்கள்,நாக்கை வெட்டி உண்டியலில் போட்டவர்கள், தீர்க்க முடியாத கடனை தண்டவாளத்தில் அடைத்தவர்கள், நினைத்த காதல் நிறைவேறாமல் மலையிலிருந்து குதித்தவர்கள்,இப்படி..இப்படி..என்னை உயரத்துக்கு எடுத்து செல்லாதவர்கள் ஏராளம்.."
"உன்னால் இதை எல்லாம் தடுக்க முடியாதா..?"
""முடியும். தவமிருந்தால்தானே வரம் கிடைக்கும்..இல்லையெனில் சாபம்தான். இயல்பாகவே நான் ஒரு குப்பைத் தொட்டி.முயற்சி செய்யாமலே என்னிடம் குப்பைகள் குவியும். முயற்சியின்றி சேர்ந்தால்தான் குப்பை. முயற்சி செய்தால் மட்டுமே தூய்மை.அம்முயற்சிக்கு எனக்கு தூண்டுதல் வேண்டும்.."
"எதை வைத்துத் தூண்ட..?"
"விழிப்புணர்வை வைத்து.."
"இதென்ன புது உணர்வு.."
"உம் போன்ற ஆட்களுக்கு இது புதிதாகத்தான் இருக்கும். சரி எனக்கு நேரமாகிறது நான் வருகிறேன்.."
"மனமே எங்கே போகிறாய்..?"
"ஊர் சுற்றத்தான்..தெரியாமல் விழிப்புணர்வு இல்லாத ஒருவனிடம் சிக்கிக்கொண்டேன். கண்டதையும் நினைக்க வேண்டும்..நான்..வருகிறேன்..பை.."

"எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாக செய்தது இனிப்
போதும் பராபரமே.."
என்று விழிப்புணர்வை வேண்டினார் தாயுமானவர்.

"ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைஸ் சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்..?"
விழிப்பின் உச்சியில் கிட்டும் சுகத்திற்காக இப்படி ஏங்கினார் பத்திரகிரியார்.

விழிப்புணர்வு கூடக்கூட யாருடைய மனது படிபடிபயாக திருந்தி அமைகிறதோ , அம்மனிதனே மெய்வாழ்வு பெறுகிறான். மனோலயப்பட்டால் மனிதன். மனோ நாசம் உற்றால் ஞானி. மானுடப்பிறவி எடுத்ததன் நோக்கமே ஒருவன் தன்னை குணசீலனாக்கிக்கொள்ளவே.நல்லெண்ணமும் , நற்செயலும், நன்மொழியும் மனிதனை குணவானாக்கும்.
"நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்ட நின்றாய்.." என்று நெகிழ்ந்தார் அப்பர் பெருமான்.

சாதாரணமாக வாழும் வாழ்கை என்பது, உணர்தல், பார்த்தல், சுவைத்தல், மூச்சுவிடுதல், கேட்டல் எனலாம்.
விழித்துணர்ந்து வாழ்தல் என்பது..
உடலும் மனமும் ஒன்றி உற்றறிதல்,நாவும் மனமும் பின்னி உணவை சுவைத்தல்,நாசியின் காற்றோடே மனமும் ஏறி இறங்குதல்,கண்களோடு மனம் கலந்து காணல்,செவிகளில் ம்னம் இணையக் கேட்டல்,மனம் மனமாயிருந்து சிந்தித்தல்.

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்.நாமும் பிழைத்துக்கொள்வோம். விழிப்பே உயர்வு. விழிப்புடன் மனதை சிக்கெனப் பிடித்துக்கொண்டால் மட்டுமே உயர்வு.

 

http://kvthaai.blogspot.com.au/2009/04/5_22.html

 

Link to post
Share on other sites

அருமையாக இருக்கிறது. பகிர்தலுக்கு நன்றி உடையார்ர்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிறைய விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன...! நன்றி உடையார்...!!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.