Jump to content

சீறும் சீனத்து டிராகன் ஒரு இந்திய பத்திரிகையாளரின் பதிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீறும் சீனத்து டிராகன்

chinesedraak.jpg

உலகின் மிகப் பழமையான நாடுகளான இந்தியாவும் சீனாவும் தான் அடுத்த வல்லரசுகள் என்று அடித்து சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதிலும் ஆசியாவின் நோயாளி என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட சீனா தன்னுடைய உள்நாட்டு சந்தையை எழுபதுகளில் வெளிநாடுகளுக்கு திறந்து விட்டதன்மூலம் பிரமிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.

சீனா மேலை நாடுகளுக்குத் தன்னுடைய சந்தையைத் திறந்து விட்டதுமல்லாமல் தன்னுடைய தொழிற் வளங்களை இந்த உலகமயமாக்கலின் மூலம் பெருக்கிக் கொண்டு உள்ளது. இன்று கிட்டத்தட்டதிட்ட தினமொரு புதிய தொழிற்சாலை திறக்கப்படும் அளவிற்கு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிவரும் சீனாவின் வணிகப்பொருட்கள் உலகெங்கிலும் உள்ள எல்லா சந்தைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிலையை எட்டுவதற்கு, சீனா கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உழைத்து வந்துள்ளது. நல்லது!

ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளில் சீனாவின் இந்த வியத்தகு வளர்ச்சியின் ஊடே அதிகரித்துவரும் அதன் மேலாதிக்க மனப்பான்மையும், அசுரத்தனமான படைபலப் பெருக்கமும் அமெரிக்கா, தைவான், ரஷ்யா, வியட்நாம், தாய்லாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘ஏன் இந்தப் படைபலப் பெருக்கம்’ – உலகநாடுகள் ஊடகங்கள் மூலம் விடுக்கும் இந்த கேள்விகளுக்கெல்லாம் சீனா, தனது அரசாங்க ஊடகங்கள் மூலம் ‘தம்மை தற்காத்துக்கொள்ளவே’ என்றுதான் பதில் சொல்கிறது, என்றாலும் யாரும் இந்தக் கதையை நம்பத் தயாராக இல்லை.

விரைவில் சீனா ஒரு போரின் மூலம் தன்னுடைய வலிமையை உலகிற்கு காட்டும் என்பதில் உலகநாடுகளுக்கு ஐயம் இல்லை என்றாலும், சீனா எந்தநாட்டுடன் போரிடப்போகிறது என்பதில்தான் அவை தலையை பிய்த்துக் கொள்ளுகின்றன. ஏனென்றால் ஏகப்பட்ட நாடுகளுடன் சீனாவுக்கு எல்லைத் தகராறு இருக்கிறது – ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் குறிப்பிடத் தகுந்தவை. சீனாவுக்கு இந்த நாடுகளுடன் எல்லாம் தென் சீனக் கடலில் எல்லையைப் பிரிப்பதில்தான் பிரச்சினையே. – காரணம் தென் சீனக் கடலுக்கு அடியில் எண்ணை மற்றும் கனிம வளங்கள் நிறைய கிடைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கின்றன. சமீப காலங்களில் தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளும் உரிமை கொண்டாடி வரும் தென் சீனக் கடலைப் பொறுத்த வரையில் சீனாவின் போக்கு மேலாதிக்கப் போக்காகத் தான் இருக்கிறது. ஜப்பானுடன் சென்கக்கு என்ற தீவு யாருக்கு சொந்தம் என்ற தகராறு வேறு இருக்கிறது.

இதுபோன்ற ஒரு குழப்படியான சூழ்நிலையில் ஆசியாவின் ஆதிக்க சமன்பாட்டை மீண்டும் நிலைபெற செய்யவல்ல ஒரு சமவலிமை படைத்த சக்தியாகவே இந்தியா உலகநாடுகளால் பார்க்கப்படுவது சீனாவிற்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளது. மேலும் தாம்தான் ஆசியாவின் ஒரே வல்லரசாக இருக்க வேண்டும் என்ற சீனாவின் நோக்கத்திற்கு இந்தியா ஒரு பலமான போட்டியாக உருவெடுத்து வருவது, எரியும் தீயில் எண்ணையை ஊற்றியுள்ளது. இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்ட, நம்முடன் ஏற்கனவே ஒரு முறை போரிட்டுள்ள நாடான சீனாவும் அதன் அதீத பொருளாதார வளர்ச்சியும், படைபலமும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பது கசப்பான உண்மை – ஏனெனில் நம்முடைய வல்லரசு நோக்கங்களும் சீனாவின் வல்லரசு நோக்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டும் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனவாகையால் வருங்காலத்தில் நாம் சீனாவுடன் போரிடும் ஒரு சூழல் வரலாம் – ஆனால் இந்த அச்சுறுத்தல் இன்னும் நம்நாட்டில் முழுவதுமாக உணரப்படவில்லை.

சரி, ஏன் சீனாவால் நம்முடன் சண்டை போடாமல் சுமுகமாகப் போகமுடியாது என்ற கேள்விக்கு மறைமுகமான பதில் சீனாவின் ஆதிக்கவெறி. வெளிப்படையான பதில் எல்லைத் தகராறு. வருங்காலத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இடையூறாக இருக்கக் கூடிய ஒரே நாடு இந்தியாதான் என்பதால் இந்தியா எந்த அளவுக்குத் தொந்தரவு செய்யப் படுகிறதோ, எந்த அளவுக்கு பலமிழக்க செய்யப் படுகிறதோ, அந்த அளவு சீனாவுக்கு அது லாபம். இந்தியாவைத் தொந்திரவு செய்ய ஒரு நல்ல முகாந்திரம் எல்லைத் தகராறு. அதற்கு வாட்டமாக திபெத் அமைந்தது சீனாவுக்கு.

திபெத்தை, ஆங்கிலேய ஏகாபத்தியத்தியமும் (பிரிட்டிஷ்இந்திய அரசு) பின்னர் உருவான ‘சுதந்திர இந்திய’ அரசும் ஒரு தனி நாடாகவே பார்த்ததுதான் தற்போதைய இந்திய-சீன எல்லைப் பிரச்சினையின் தொடக்க புள்ளி. ஏனென்றால், சீனா திபெத்தை சீனாவின் பகுதி என்று கூறிவந்திருக்கிறதே தவிர ஒரு தனிதேசமாக என்றுமே பார்த்தில்லை. ஆனால், திபெத்தோ சீனாவை ஒரு ஆக்கிரமிப்பு நாடாகவே பார்க்கிறது.

1914ஆம் ஆண்டு திபெத்துடனான ஒரு சிம்லா உடன்படிக்கையின் மூலம் ஆங்கிலேயர்களால் ‘மக் மோகன் எல்லை (McMohan line)’ எனப்படும் ‘பிரிட்டிஷ்இந்திய – திபெத்’ எல்லை வகுக்கப்பட்டது. பிற்பாடு சுதந்திர இந்தியாவும் இதே நிலைப்பாட்டைத் தான் எடுத்தது. ஆனால் சீனாவோ திபெத் சீனாவின் ஒரு பகுதியாதலால், அதற்கு ஒப்பந்தம் போடும் உரிமை எல்லாம் கிடையாது என்று இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுகொண்டது இல்லை. எனினும் ஒப்பந்தம் நிறைவேறியபோது சீனா ஒரு நோஞ்சான் நாடு. சீனாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால் கடுமையான உள்நாட்டுப் போரின்பின் ‘மாவோ சே துங்’ தலைமையில் சீனாவில் 1949ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த கம்யூனிஸ்டுகள் செய்த முதல் வேலை 1950ஆம் ஆண்டு திபெத்தைக் கைபற்றியதுதான். ஏனெனில் திபெத்தின் நிலபரப்பு கிட்டத்தட்டதிட்ட சீனாவின் மூன்றிலொரு பங்காக இருந்தது. இதைத் தொடர்ந்து சீனா அங்கீகரிக்காத இந்த இந்திய – திபெத் எல்லை, பிரச்சினைக்குரிய இந்திய-சீன எல்லையானது. தொடக்கத்தில் இன்றைய அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதியான லடாக் பகுதிகளை சீனாவும் உரிமை கொண்டாடியது.

11.jpg

திபெத்தை சீனா ஆக்கிரமித்தபின், லடாக் பகுதியில் ஒரு அறுதியிடப்படாத Line of Actual Control (LAC) எனப்படும் தற்காலிக எல்லை வகுக்கப் பட்டது. சீனா, இந்த LAC நம்முடைய பகுதிகளையும் அதன் பகுதிகளோடு சேர்த்து உள்ளடக்கியது என்றும் கூறிவருகிறது. இதனால் லடாக் பகுதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையே இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட அறுதியிட்ட நிரந்திர எல்லை இன்றளவும் கிடையாது. இது ஒருபுறமிருக்க இத்தனை நாள் கிடப்பில் போட்டிருந்த ‘அருணாச்சலப் பிரதேசம் ஒரு காலத்தில் திபெத்தின் பகுதியாக இருந்தது, அதை இந்தியா ஆக்கிரமித்துவிட்டது, அது தனக்குரியது’ என்ற பழைய கூக்குரலை சீனா சமீபகாலமாக கூறிவருகிறது. இது இன்று நேற்றல்ல கிட்டத்தட்டதிட்ட 60 ஆண்டுகளுக்கு முன் விடப்பட்ட பழைய அறைகூவல்கள்தான்.

ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே மாவோ திபெத்தை ஒரு உள்ளங்கை எனவும், நேபாளம், பூட்டான், இந்தியாவின் சிக்கிம் (அப்போது தனிநாடு), அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை ஐந்து விரல்களாக வர்ணித்து, சீனத்து இராணுவம் இவற்றைக் கைப்பற்றி சீனாவுடன் இணைக்க வேண்டும் என்று அறைகூவல்கள் விடுத்துள்ளார். ஆனால் நம்நாட்டின் சூத்திரதாரிகள் மாவோவின் இந்த அறைகூவல்களை சீரியசாக எடுத்துகொள்ளாததன் பலனே 1962ஆம் ஆண்டின் இந்திய-சீனப் போர்.

சீனா, லடாக்கின் பகுதியான அக்சாய் சின் பகுதியை ஆக்கிரமித்து அந்தப் பகுதி வழியாக திபெத்திலிருந்து ‘க்சின்-சியாங்’ என்ற சீன மாகாணத்திற்கு நெடுஞ்சாலை ஒன்று அமைத்தது. சீனாவைப் பொறுத்தவரை அக்சாய் சின் திபெத்தின் அங்கமாக இருந்த ஒரு பகுதி, ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அது இந்தியப் பகுதியான லடாக்கின் அங்கமாக இருந்த ஒரு பகுதி. அப்படியே அக்சாய் சின் என்ன வளம் கொழிக்கும் பகுதியா என்றால் ஒரு மண்ணும் கிடையாது. அது உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள, மழையே பெய்யாத ஒரு பாலைநிலப் பகுதி அவ்வளவுதான்! முன்னமே லடாக் பகுதிகளுக்கு உரிமை கோரி வந்ததைப் பயன்படுத்தி நமக்குத் தெரியாமல் இந்த பகுதி வழியாக சாலையை சீனா போட்டு விட்டது. திபெத்தையும் க்சின்-சியாங் மாகாணத்தையும் இணைக்கும் ‘தேசிய நெடுஞ்சாலை 219’ என்ற இந்த சாலை சீனா திபெத்தில் இருந்த அதன் இராணுவத்தைப் பராமரிக்க உயிர் நாடியைப் போன்றதாக இருந்தது. இந்தச் சாலை அக்சாய் சின் பகுதியின் வழியாகச் செல்வது மட்டும்தான் இப்பகுதியின் முக்கியத்துவம்.

இந்தச் சாலை இருக்கும் பகுதியில் சாலை மட்டும்தான் இருக்கும், வேறு மரம் செடிகூட இல்லாத (இன்று வரை) மக்கள் குடியேறாத ஒரு பாலை நிலப்பகுதியாதலால் இங்கு நம்முடைய இராணுவத்தின் இருப்பு இல்லாமல் இருந்தது. ஆகையால் இந்த சாலை அமைக்கப் பட்ட விவரம் நமக்குப் பல வருடங்கள் கழித்துதான் தெரிய வந்தது. தெரிய வந்ததும் அது வரை காவல் இல்லாத பல பகுதிகளுக்கு நம்முடைய இராணுவத்தை பண்டித நேரு அனுப்பிவைத்தார். எல்லை சரியாக வகுக்கப் படாததால் இரண்டு நாட்டு இராணுவங்களுக்கும் இடையே அவ்வப்போது சிறுசிறு உரசல்கள் வலுத்து வந்தன. சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்த, திபெத் மக்களின் வாழும் தெய்வமான தலாய் லாமாவுக்கு வேறு நாம் அடைக்கலம் கொடுத்திருந்தோம்.

உரசல்கள் உச்சகட்டத்தை அடைந்திருந்தன. ஒரு மோதலுக்கான சூழ்நிலை உருவாகிக் கொண்டே இருந்தது. மோதலைத் தவிர்க்க வேண்டும் என்று சமாதானத்தைப் பற்றிப் பேசி கொண்டே இருந்த சீனா, திடீரென்று 1962ஆம் வருடம், இந்தியாவுக்கு ஒரு கடுமையான பாடம் புகட்டி தனக்குச் சேரவேண்டிய பகுதிகளை மீட்கப் போகிறேன் என்ற அறைகூவலுடன் நம் மீது போர் தொடுத்தது. பல இடங்களில் நம் இராணுவத்தின் தடுப்பு வியூகங்களைத் தகர்த்து, வேகமாக முன்னேறியது. ஆழமாக நம்நாட்டினுள் ஊடுருவத் தேவையான போக்குவரத்து வசதிகள் (logistics) இல்லாததாலும், அமெரிக்கா நம் சார்பில் களமிறங்க உத்தேசிப்பதாக உலகளாவிய பேச்சுக்கள் எழவும், சீனா தன்னிச்சையான போர்நிறுத்தத்தை அறிவித்துவிட்டு போருக்கு முந்தைய தன்னுடைய நிலைகளுக்குப் பின்வாங்கியது. ஆனால் அக்சாய் சின் பகுதியை முழுவதுமாகக் கைப்பற்றிக்கொண்ட சீனா இன்றுவரை அதைத் தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் வைத்துள்ளது.

ஆனால் இந்தப் போரின்போது அதிசயமாக அமெரிக்காவும் சோவித் யூனியனும் ஓரளவு நமக்கு ஆதரவாக இருந்ததைக் கண்ட சீனா, இந்த இரு வல்லரசுகளும் தான் இன்னொரு வல்லரசாக உருவாவதை விரும்பாது மேலும் அவை மாற்றுசக்தியான இந்தியாவிற்குத்தான் ஆதரவாக இருக்கின்றன என்பதையும் சீனா தெளிவாகப் புரிந்து கொண்டது. ஆரம்பித்தது சீனத்து சதுரங்கம். ஆகவே ஆசியாவில் வருங்காலத்தில் தன்னுடைய ஆதிக்கத்துக்கு சவால் விடக்கூடிய ஒரே நாடு இந்தியாதான். இந்தியாவை கட்டி வைக்க வேண்டும், நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்தாத வண்ணம் தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு சீனா சதுரங்கத்தை ஆரம்பித்தது. இதில் முதற்படி பாகிஸ்தான்.

நம்நாட்டைக் கட்ட முடிவு செய்த சீனாவுக்கு பாகிஸ்தானின் இந்தியா மீதான காழ்ப்புணர்ச்சி மிகவும் வசதியாக அமைந்தது. 1965 ஆம் ஆண்டில் நடந்த போரில் நம்மிடம் மூக்குடைந்த பாகிஸ்தானுக்கு ஆபத்பாந்தவனாக அனாதரட்சகனாக மாறியது சீனா. போர் முடிந்தவுடன் உடனடியாக பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்ற சீனா இன்றுவரை பாகிஸ்தானின் நிரந்தர நண்பனாக இருக்கிறது. என்னதான் அமெரிக்கா பாகிஸ்தானை ஊட்டி வளர்த்திருந்தாலும் உண்மையில் இன்று பாகிஸ்தானின் நண்பன் யாரென்றால் அமெரிக்கா கிடையாது – சீனாதான்!

ஒரு காலத்தில் பாகிஸ்தானின் படைகள் பெரிதும் பயன்படுத்தியது அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தான். இன்றோ பாகிஸ்தானின் படைகள் சீனத்து ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தான் பெரிதும் பயன்படுத்தி வருகின்றன. பாகிஸ்தான் அணுஉலைகள் அமைத்து அணுகுண்டு தயாரிக்க பெரிதும் உதவியது சீனா. பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணைகள் பெரிதும் சீனா விற்ற ஏவுகணைகளே. சீனா அன்று செய்த உதவியினால் மட்டுமே இன்று பாகிஸ்தானால் அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவோம் என்று நம்மை மிரட்ட முடிகிறது.

நம்முடைய சக்தியைப் பெரிதும் பாகிஸ்தானைச் சமாளிப்பதற்கும் பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதிகளைச் சமாளிப்பதற்குமே செலவிடவேண்டியதாயிற்று. ஒருவேளை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மூலமோ அல்லது வேறு நடவடிக்கைகளின் மூலமோ நம்முடைய பொறுமையை அளவுக்கு மீறி சோதித்து அதன் காரணமாக பாகிஸ்தானின் வாலை ஓட்ட நறுக்க வேண்டி நம்மால் பாகிஸ்தானின் மீது படையெடுக்க முடியாது. ஏனென்றால் அணுஆயுத ஏவுகணைகளைத் தயாராக வைத்துள்ளது பாகிஸ்தான். – காரணம் சீனா! ஆகக்கூடி சீனா சின்னதாக ஒரு காயை நகர்த்தி நம்மைப் படுத்திவிட்டது.

indo-china-pak-copy.jpg

இது மட்டுமல்லாது ‘அங்குல அங்குலமாக ஆக்கிரமி’ என்ற சீனப் பழமொழிக்கு ஏற்ப கடந்த இருபது வருடங்களாக சீனாவின் பிடி மிகமிக மெதுவாக மியான்-மர், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், என்று நம்மைச் சுற்றி உள்ள நாடுகளில் எல்லாம் இறுக ஆரம்பித்தது. இந்த நாடுகளுக்கு சீனா காட்டிவரும் சலுகைகளாலும் விற்று வரும் ஆயுதங்களாலும் இன்று இந்த நாடுகளில் எல்லாம் நம்மைக் காட்டிலும் சீனாவுக்கு பலமான ஆதரவு உண்டு. மேலும் இந்த நாடுகளில் எல்லாம் அந்தந்த நாடுகளுக்காக சீனா புதிய துறைமுகங்களை கட்டி வருகிறது. பங்களாதேஷில் சிட்டகாங், மியான்-மாரில் சிட்வே, இலங்கையில் அம்பாந்தோட்டை (Hambantota), பாகிஸ்தானில் க்வாதார் என்ற இடங்களில் எல்லாம் சீனா கட்டி வரும் துறைமுகங்கள் இராணுவரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள்.

இங்கெல்லாம் சீனா தன்னுடைய கடற்படையின் சில பிரிவுகளை நிறுத்தினால் சீனாவால் நம்நாட்டைச் சுற்றி சீல் வைக்கமுடியும். மேலும் இந்த நாடுகளில் எல்லாம் வருங்காலங்களில் நம் எல்லைபகுதிகளருகே சீனா படைத்தளங்களை அமைத்தால் நமக்கு வெளியில் இருந்து இராணுவ உதவிகள் ஏதும் கிடைப்பது மிகக் கடினமாகிவிடும். இந்த நில மற்றும் கடல்வழி கட்டுதலை போரியல் வல்லுனர்கள் சீனாவின் முத்து சரம் என்று அழைக்கிறார்கள். இந்த முத்துசரத்தின் மூலம் நம்நாட்டை கட்டுவது மட்டுமல்லாமல் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் கடல் ஆதிக்கத்திலிருந்தும் சீனாவால் தன்னுடைய கடல்வழிவாணிபத்தைக் காத்துக்கொள்ள முடிவது சீனாவுக்கு இரட்டை லாபம்.

இப்பேர்பட்ட இந்த முத்துச் சரத்தின் பதக்கம் போன்றது தான் திபெத். சீனாவிடமிருந்து நமக்கு இயற்கை அளித்துள்ள பாதுகாப்புதான் இமயமலைத்தொடர்கள். ஆனால் எப்போது இமயமலையில் அமைந்த பீடபூமியான திபெத்தை சீனா ஆக்கிரமித்துக்கொண்டதோ அன்றிலிருந்து சீனாவிற்கு, நம் மீது படையெடுக்க, திபெத் ஒரு ஏவுதளமாகிவிட்டது. திபெத் சிலவருடங்களுக்கு முன்பு வரை சீனாவில் இருந்து அதிக போக்குவரத்து வசதிகளற்றுத் தனிமைப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திபெத்துடன் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக அதிவேகரயில்கள் செல்லக்கூடிய ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இதுதான் தற்போது உலகிலேயே மிக உயரமான பகுதிகளின் வழியாகச் செல்லும் ரயில்பாதை ஆகும். இந்த ரயில்பாதை செல்லும் பல நிலப்பகுதிகள் துளியும் உறுதித்தன்மை இல்லாத ‘permafrost’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பனிக்கட்டிகளும் மண்ணும் கலந்த கலவை தான்.

இத்தகைய உறுதியற்ற நிலபரப்பில் அமைந்துள்ள இந்த ரயில்பாதை சீனர்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் வல்லமையை காட்டும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆனால் தேவைப்படும்போது எளிதாகவும் விரைவாகவும் படைகள் மற்றும் தளவாடங்களை திபெத்தில் குவிக்க இது பெரிதும் உதவும் என்பது போரியல் நோக்கர்களின் கருத்து. சீனாவால் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் போர்வீரர்களை முழு ஆயுத பலத்துடன் திபெதில் ஒரே மாதத்தில் குவிக்க முடியும். இந்த ரயில்பாதையைத் தவிர திபெத்தில் பத்திற்கும் மேற்பட்ட விமானப்படைதளங்களை அமைத்துள்ளதன் மூலம் சீனாவிற்கு படைகுவிப்பு நேரம் மிகவும் குறையும். போர் சூழ்நிலை ஏற்பட்டால் திபுதிபுவென்று சீனப்படைகள் திபெத்தில் வந்து இறங்கி அணிவகுத்து நம்நாட்டிற்குள் புகுந்துவிடும் அபாயம் மிகஅதிகமாக உண்டு.

திபெத்தில் ஏவுகணைத்தளங்களையும் சீனா நிறுவியுள்ளது. இன்று சீனத்து அணுஆயுத ஏவுகணைகளால் வெகுதொலைவிலுள்ள அமெரிக்க நகரங்களையே தாக்க முடியும் என்ற நிலையில் அருகிலிருக்கும் நம்நாட்டின் எந்த ஒரு நகரத்தையும் தரைமட்டமாக்க முடியும். மேலும் சீனா கடந்த இருபது ஆண்டுகளாக, காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரை தன்னுடைய எல்லைப்புறங்கள் நெடுகிலும் சாலை வசதிகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் எல்லைகளில் உள்ள அதன் போர் நிலைகளுக்கு வீரர்களையும் ஆயுதங்களையும் விரைவாகவும் எளிதாகவும் எடுத்து வரமுடியும்.

ஆனால் அத்தகைய சாலை வசதிகள் நம்முடைய எல்லைப் பகுதிகளில் கிடையாது. நம் வீரர்கள் தங்களுடைய போர் நிலைகளுக்கு செல்லவே பல நாட்கள் ஆகும். ஆகவே போர் என்று வந்தால் அதிக வீரர்களையும் ஆயுததளவாடங்களையும் போர்களத்திற்கு அனுப்பத் தேவையான சாலைவசதிகளைத் தற்போதுதான் எல்லையில் நாம் ஏற்படுத்திவருகிறோம். கடுமையான நிலபகுதிகள் வழியே சாலைகள் அமைக்கும் மிகக் கடினமான இந்த முயற்சிகள் வெற்றியடைய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை சிக்கல்தான்.

சீனாவின் படைபலத்தின் முன்னும் தொழில்நுட்பத்திறனின் முன்னும் நம்முடைய நிலை மிகவும் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. தற்காலப் போரியலில் ஒரு போரை வெல்லும் ஆற்றல் அணுஆயுத ஏவுகணைகளுக்கும், அதிவேகப் போர் விமானங்களுக்கும், விமானந்தாங்கி கப்பல்களுக்கும், அணுஆயுத ஏவுகணைகளை செலுத்தவல்ல அணுவிசை நீர்மூழ்கி கப்பல்கள் போன்ற போர் தளவாடங்களுக்கு மட்டுமே உள்ளது.

ஆனால் ஒரு நாட்டின் படைபலம் இப்படிப்பட்ட ஆயுத தளவாடங்களை தேவையான அளவில் சொந்தமாகவே தயாரிக்கும் வல்லமையைத் தான் நேரடியாக நம்பி உள்ளது. ஏனெனில் தளவாடங்களை வெளிநாடுகளிடமிருந்து வாங்கினால் அவற்றை விற்கும் நாடு போர் காலங்களில் விற்க மறுக்கலாம். இன்று போர் தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்வதில் நாம்தான் உலகஅளவில் முதலிடத்தில் இருக்கிறோம்.

நம்மிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வெளியில் இருந்து வாங்கப்பட்டவையே. மேலும் தற்போது நம்முடைய ஆயுத தளவாடங்கள் மற்றும் போர்விமானங்கள் வாங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் மந்தகதியில் தான் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றைப் பெரும்பாலும் சொந்தமாகவே தயாரித்துவரும் சீனாவின் ஆயுதவரிசைகள் மிரட்சி அடையத்தான் வைக்கிறன.

குறிப்பாக சீனாவிடம், புராணகால அரக்கர்களின் அம்பறாத்தூணியில் இருந்த அம்புகள் போல ஏவுகணைகள் வகைவகையாக டஜன் கணக்கில் உள்ளன. சீனாவை எங்கு வேண்டுமானாலும் அடிக்க இந்தியாவிடம் அக்னி-5 அணுஆயுத ஏவுகணை உருவாக்கத்தில் உள்ளது. எனினும் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு இந்த ஏவுகணை இந்தியராணுவத்தில் சேர குறைந்தது இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை பிடிக்கும்.

நம்நாட்டின் அணுஆயுத பயன்பாட்டுக் கொள்கை என்னவென்றால், “அணுஆயுதத்தை நாம் முதலில் பயன்படுத்த மாட்டோம். ஆனால் அதேநேரம் நம் மீது அணுஆயுதம் பயன்படுத்தபட்டால் நாம் கொடுக்கும் அணுஆயுத பதிலடியில் எதிரி இருந்த அடையாளமே இருக்கக்கூடாது,” என்பதே. இந்தியா மேல் அணுஆயுதத் தாக்குதல் நடத்தினால் தன்னுடைய அழிவு நிச்சயம் என்பதால் எதிரிநாடு அணுஆயுதத் தாக்குதல் நடத்தாது என்பதே நம்முடைய இந்த நிலைப்பாட்டிற்குக் காரணம்.

சீனாவின் அணுஆயுத பயன்பாட்டுக் கொள்கையும் சில வருடங்களுக்கு முன் வரை இதேபோல்தான் இருந்தது. ஆனால் தற்போது, தான் பலமாகத் தாக்கப்பட்டால் பதிலுக்கு அணுஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. சுமார் நானூறு முதல் ஐநூறு அணுகுண்டுகள் வரை சீனா வைத்திருக்கலாம். அவற்றில் சுமார் நூறு அணுகுண்டுகள் போதும் நம் நகரங்களை முழுவதும் அழிக்க.

எந்த ஒரு அணுஆயுதப் போரிலும் ஒருநாடு பதிலடி தருவதற்கு அதன் அணுஆயுதங்களை பாதுகாத்து வைக்க வேண்டும். நிலத்தின் மேல் உள்ள அனைத்தும் எதிரியின் அணுஆயுதத் தாக்குதலால் அழிய நேரிடலாம். ஆனால் நீர்பரப்பிற்கு கீழே பெருஅணுவிசைநீர்மூழ்கிகளில் உள்ள அணுஆயுத ஏவுகணைகள் அழியாது. இது போன்ற பெருஅணுவிசைநீர்மூழ்கிகள் அமெரிக்காவிடமே பதினெட்டுதான் உள்ளன. சீனாவிடம் சமீப காலமாக இரண்டு முதல் நான்கு வரை பெருஅணுவிசைநீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. நம்முடைய பெருஅணுவிசைநீர்மூழ்கியான ‘ஐ.என்.ஸ் அரிஹந்த்’ தற்போதுதான் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது ஆனால் இதற்கான அணுஆயுத ஏவுகணைகள் இன்னும் போருக்குத் ஆயத்தமான நிலையில் இல்லை உருவாக்கத்தில் தான் உள்ளன. இது கப்பற்படையில் சேர்ந்து சேவை செய்ய இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். மேலும் இது போன்ற பெருஅணுவிசைநீர்மூழ்கிகளுக்கு துணைக் கப்பல்களாக இலகுரக அணுவிசைநீர்மூழ்கிக் கப்பல்கள் வேண்டும்.

சீனாவிடம் இது போன்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் ஐந்து அல்லது ஆறு இருக்கின்ற நிலையில், இப்படிப்பட்ட கப்பல்களே நம்மிடம் கிடையாது. நம்மிடம் சற்றேறக்குறைய பத்து சாதாரண நீர்மூழ்கிக் கப்பல்களே உள்ள நிலையில் சீனாவிடம் நாற்பதுக்கும் அதிகமான சாதாரண நீர்மூழ்கிகள் உள்ளன. மேலும் ஹைனான் எனப்படும் தீவில் பல நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தும் வசதிகள் கொண்ட ஒரு கடற்படைத்தளத்தையும் மலைகளைக் குடைந்து சீனா கட்டியுள்ளது. சீனத்து நீர்மூழ்கிகள் நீரில் மூழ்கியபடியே இந்தப் படைத்தளத்தை விட்டு வெளியேறலாம் என்பதால் செயற்கைக் கோள்களைக் கொண்டும் இவைகளின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாது.

இந்தத் தளம் இந்தியாவிற்கு அருகே உள்ள மலாக்கா ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளதால் சீனத்து நீர்மூழ்கிகள் எப்போது வேண்டுமானாலும் நம் கடல்பகுதிகளுக்குள் நுழைந்து நம் கப்பல்களைத் தாக்கலாம். சீனத்து நீர்மூழ்கிகள் நம் கடல் பகுதிகளில் பல முறை தென்பட்டுள்ளதாக அரசிற்கு நம் கப்பற்படை அளித்துள்ள இரகசிய அறிக்கையை செய்தியாக சமீபத்தில் ஒரு நாளேடு வெளியிட்டுள்ளது. ‘கண்ணில்பட்டது பல முறை என்றால் கண்ணில் படாமல் உலாவியது எத்தனை முறையோ? என்பது இதில் அச்சமூட்டும் ஒரு பரிமாணம். சீனத்து நீர்மூழ்கிகளின் இந்த நடமாட்டங்களை போர்வருங்காலத்தில் எப்படி செயல் படுவது என்ற பயிற்சிகளை மேற்கொள்கிறது என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

chinamilitary-1024x640.jpg

போர்க்கப்பல்களைப் பொறுத்தவரை நம்மைவிட மூன்று முதல் ஐந்து மடங்குவரை அதிகமாக வைத்துள்ள சீனாவின் விமானப்படையும் நம் விமானப்படையை விட குறைந்தது மூன்று மடங்கு பலமாக உள்ளது. தரைப்படைகளைப் பொறுத்தவரை டாங்கிகள், பீரங்கிகள் ஆகியவற்றை மிக அதிக எண்ணிக்கையில் சீனா வைத்துள்ளது. சீனாவின் வலிமைகுறைவாக விமானந்தாங்கிக் கப்பல்கள் அதனிடம் இல்லாததை வேண்டுமானால் கூறலாம். ஏனெனில் விமானந்தாங்கிகள் போர்களை வெல்லும் ஆற்றல் படைத்தவை. ஆனால் அவற்றை அவ்வாறு பயன்படுத்த நீண்ட அனுபவம் தேவை. இதுவரை சீனா விமானந்தாங்கிக் கப்பல்களை தன்னுடையக் கப்பற்படையில் வைத்து இயக்கியதும் இல்லை, சீனாவிற்கு விமானந்தாங்கிகளை விற்பாரும் யாருமிருந்ததில்லை.

ஆனால் நம்முடைய கப்பற்படை இவற்றை வெகுகாலம் இயக்கி வந்துள்ளது, தற்போது ஐ.என்.ஸ் விராட் என்ற ஒரு கிழடுதட்டிய விமானந்தாங்கியை இயக்கியும் வருகிறது. சோவித் யூனியன் உடைந்தபோது யுக்ரைனில் கட்டப்பட்டுவந்த ‘வார்யாக்’ என்ற ஒரு விமானந்தாங்கிக் கப்பல் பாதி கட்டிமுடிக்கப் பட்ட நிலையில் கைவிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் அதை ஏலத்தில் எடுத்த ஒரு சீனநிறுவனம் அந்தக் கப்பலை ஒரு மிதக்கும் சூதாட்ட விடுதியாக மாற்றப் போவதாக கூறியது. ஆனால் அந்தக் கப்பல் தற்போது சீனாவில் சுறுசுறுப்பாக ரிப்பேர் செய்யப்பட்டு விமானம் இல்லாத விமானந்தாங்கியாக உலா வருகிறது. மேலும் சீனா அந்தக் கப்பலில் இருந்து இயக்கக்கூடிய சுகாய்-33 ரக போர் விமானங்களை ரஷியாவிடம் இருந்து வாங்கவும் முயற்சி செய்து வருகிறது.

அதுமட்டுமல்ல பாதி கட்டிமுடிக்கப்பட்ட அந்த ரகப் போர் விமானத்தையும், அதன் ப்ளூப்ரிண்டுகளையும் யுக்ரைனிடமிருந்து பெற்று அந்த ரகப் போர் விமானங்களை சொந்தமாகவே தயாரிக்கவும் முயற்சி செய்து வருகிறது, ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. இந்தப் பழைய கப்பலை சரிசெய்து அதைப் இயக்கப் பயின்று அதைப் போலவே சில புதிய விமானந்தாங்கிகளைக் கட்டுவதே சீனாவின் திட்டம். இது நடக்கும் பட்சத்தில் சீனாவால் ஒரு வலிமையான கடற்படையை இயக்க முடியும். தற்போது இந்திய பெருங்கடல் பகுதிகளுக்குள் மெல்லத் தலையைக் காட்டும் சீனக் கப்பற்படை இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் விமானந்தாங்கிகளை முன்னிறுத்தி பலமாகவே தலையைக் காட்டும்.

2007ஆம் ஆண்டு, சாதனையாக ஒரு பழைய செயற்கைக் கோளை விண்ணில் ஏவுகணை மூலம் சீனா அழித்ததைக் கண்ட உலகநாடுகள் மிரண்டன. இன்று சீனாவால் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக் கோள்களையும் ஏவுகணைகள் மூலம் துல்லியமாக அழிக்க முடியும். தகவல் தொடர்பிற்கு, எதிரி நடமாட்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு – என்று செயற்கைக் கோள்களை பெரிதும் நம்பியே இராணுவங்கள் செயல்படுகின்றன. இவற்றின் இழப்பு இராணுவ செயல்பாடுகளையே முடக்கிவிடும். இதற்கு நம் இராணுவமும் விதிவிலக்கல்ல.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க சில அதிர்ச்சிமருந்துகளையும் சமீபகாலத்தில் சீனா உலகிற்கு கொடுத்துள்ளது.

df-21-launch.jpgமுதல் மருந்து யாருமே எதிர்பார்க்காதவகையில் ‘டாங் ஃபெங்-21D’ என்ற ஒரு புதுமையான ஏவுகணையை சீனா உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணை வகையை சேர்ந்தது. இந்த வகை ஏவுகணைகளின் மூக்கில் உள்ள அணுகுண்டு ஏவுகணையின் உந்துசக்தியின் மூலம் ஒரு பந்தைப் போல் விண்ணில் மிக உயரே செலுத்தப்படும். பின் அது வில்போன்ற வளைபாதையில் சென்று பூமியில் குறிவவைக்கப்பட்ட நகரத்திற்கருகே குத்துமதிப்பாக அசுர வேகத்துடன் விழுந்து வெடிக்கும். அப்போது அது சில கிலோமீட்டர்கள் வரை விலகி விழுந்தாலும்கூட கவலையில்லை, அனைத்தையும் சாம்பலாக்கிவிடும். ஆனால் சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்கும் திறனுள்ள சீனாவின் இந்த குறிப்பிட்ட ஏவுகணை சற்று மாறுபட்டது. இதில் அணுகுண்டிற்கு பதிலாக கடலில் உலாவும் விமானந்தாங்கிகளை துல்லியமாகத் தேடி அழிக்கும் திறன் படைத்த குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. யாருமே யோசிக்காத மிகவும் சிக்கலான இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்டு இந்தப் புதியவகை ஏவுகணையை உருவாக்கியதன் மூலம் கடற்போரின் அடிப்படைகளையே சீனா மாற்றிவிட்டதாக கடற்போர் வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த ஏவுகணை, விமானந்தாங்கிகளை முன்னிறுத்திப் போர் நடத்தும் அமெரிக்காவிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தமுடியும். இந்த ஏவுகணை வருங்காலத்தில் விமானந்தாங்கிகளை அதிகமாக இயக்கப்போகும் நம்முடைய கப்பற்படைக்கும் பாதிப்பாகத்தான் முடியும். வருங்காலத்தில் இனி சீனக் கடற்கரையிலிருந்து 2000 கி.மீ. வரை விமானந்தாங்கிகள் நடமாடினால் அவற்றின் கதி அதோகதிதான்.

அடுத்த அதிர்ச்சி மருந்தாக சீனா உலகிற்குக் கொடுத்துள்ளது ‘மாயாவி’ போர் விமானம் (stealth aircraft). இந்தப் போர் விமானம் இந்திரஜித்தைப் போல ஜால வித்தைகள் செய்யாதெனினும் விமான நுண்ணுணர்வு ராடார்களுக்கு டிமிக்கி கொடுக்கும் வண்ணம் அதன் கட்டமைப்பு இருக்கும். இதன் இருப்பையே இது வந்து தாக்குதல் நடத்தும் போதுதான் அறிந்து கொள்ள முடியும். இந்த சீனத்து மாயாவி விமான உருவாக்கத்திட்டம் பல காலமாக வதந்திகளாகவே இருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று இணையத்தில் வெளியான இதன் வெள்ளோட்டப் புகைப்படங்கள் போரியல் நோக்கர்களை உலுக்கிவிட்டன. இத்தகைய போர் விமானங்கள் அமெரிக்காவின் விமானப் படையிலேயே மிகமிகக் குறைந்த அளவில் தான் உள்ளன. ரஷ்யா சிலமாதங்களுக்கு முன்தான் இத்தகைய போர் விமானத்தை வெள்ளோட்டமே விட்டுள்ளது. சீனா, அடுத்த அதிரடியாக இன்னொரு மாயாவி போர் விமானத்தையும் உலகிற்கு வெளிபடுத்தி தற்போது இரண்டு வகையான மாயாவி போர்விமானங்களை உருவாக்கி வருகிறது – அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக! இத்தகைய சூழ்நிலையில் சீனாவின் இந்தப் போர்விமானங்கள் பல அதிரடி செக்குகளை வைத்துள்ளன – முக்கியமாக நமக்கு. இன்னும் சில ஆண்டுகளில் இந்த விமானங்கள் முழு இராணுவ பயன்பாட்டிற்கு ஆயத்தமாகிவிடும். எதிர்காலத்தில் நம்முடன் போர் எதுவும் வந்தால் இந்த விமானங்கள் திபெத்திலுள்ள தளங்களில் இருந்து கிளம்பி நம் ராடார்களின் கண்ணில்படாமல் நிதானமாக ஆழமாக ஊடுருவித் தாக்கிவிட்டு திரும்பச் சென்றுவிடும் வல்லமையைக் கொண்டதாக இருக்கும்.

சீனாவின் இந்த புதிய அதிரடி ஆயுதங்கள் மற்றும் வியூகங்கள் ஆசியாவில் பல ஆதிக்க சமன்பாடுகளை கேள்விக்குறிகளாக்கிவிட்டன. இந்திய – சீன ஆதிக்க சமன்பாடுகளில் முன்னர் நமக்குச் சாதகமாக இருந்த அம்சங்கள் பலவற்றையும் இன்று சீனா மிக எளிதாக உடைத்துவிட்டது. சீனப்படைகள் இன்று எண்ணிக்கையிலும் தொழில்நுட்ப வல்லமையிலும் பலமடங்கு வலிமையான நிலையில் உள்ளன. ஆசியாவில் இன்று சீனா அமெரிக்காவுக்கே தொடைதட்டி சவால் விடுகிறது.

மிகவும் திட்டமிட்டு வல்லரசாகியே தீருவது என்று களத்தில் உள்ள சீனா பல வகைகளிலும் நம்மை நெருக்கிவருகிறது. உதாரணம், அண்மையில் நம்முடைய அணுஉலைகளுக்கு யுரேனியம் தரவேண்டி அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை சீனா கமுக்கமாக தடுக்க முனைந்தது. இதே போல பலவழிகளிலும் நம் முன்னேற்றத்தை தடுக்க சீனா முனைப்புடன் செயல்பட்டு வரும் அதேநேரத்தில் இராணுவரீதியிலும் தொந்தரவு செய்துவருகிறது. அடிக்கடி சீன இராணுவ வீரர்கள் நம்முடைய பகுதிகளுக்குள் வந்து இந்த இடம் தங்களுடையது என்றும் எழுதிவைத்துச் செல்கின்றனர். இந்த திட்டமிட்ட மிரட்டல் நடவடிக்கைகள் நமக்கு சீனாவிடும் பலமான எச்சரிக்கைகளாகவே கருதப்படவேண்டும்.

உலகநாடுகளின் மத்தியில் நமக்கு வளரும் செல்வாக்கு, ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெற முயற்சிகள், அமெரிக்காவுடனான அதிகரித்துவரும் நல்லுறவு போன்றவை சீனாவை எரிச்சல் படுத்தியுள்ளன. இந்த எரிச்சலின் வெளிப்பாடே இந்த மிரட்டல் நடவடிக்கைகள். மேலும் இவற்றை வெறும் மிரட்டல்கள் என ஒதுக்கிவிடமுடியாது இவை எதிர்காலத்தில் வரும் ஒரு போருக்கான அச்சாரமாகவும் இருக்கலாம். போர் என்று வந்தால் நம்முடைய உதவிக்கு யார் வந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து ஆப்படிக்க சீனாவால் முடியும்.

முன் எப்போதும் இல்லாத வகையில் இன்று நம் இராணுவமும் இருமுனைப் போரைப்பற்றி சிந்தித்து வருகிறது. ஏனென்றால் சீன-இந்திய போர் என்று வந்தால் பாகிஸ்தான் தன்னுடைய உள்நாட்டு பிரச்சினைகளுக்கு ஒரு போக்கு காட்ட நம் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது. அப்போது மேற்கு எல்லையில் பாகிஸ்தானுடனும் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் சீனாவுடனும், கடல்பகுதிகளில் இரண்டு நாடுகளுடனும் நாம் ஒரேநேரத்தில் போர்புரிய நேரிடலாம். பாக்குவெட்டியில் வகையாகச் சிக்கும் பாக்காக நம்முடைய நிலைமை அப்போது மாறிவிடும்.

2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் வாழ்ந்த ‘ட்சுன் சுயீ’ என்ற சீனப் போரியல் அறிஞரின் போரியல் கோட்பாடுகளின்படி சீனா மிகத் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நம்மவர்களோ சாணக்கியரையும் திருவள்ளுவரையும் மறந்து தூங்கிவிட்டதன் பலன் இன்று சீனாவின் வியூகங்கள் நம்மை பலமாகச் சூழ்ந்துவிட்டன.

ஆனால் நெருப்பு மூச்சுகளைவிட்டு சீறும் ஒரு ராட்சத டிராகனைப்போல் மிரட்டும் சீனா அப்படி ஒன்றும் சமாளிக்கவே முடியாத ஆபத்தான சிக்கலல்ல. ஆனால் அதை சமாளிக்க நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது, சற்று யோசித்து சுறுசுறுப்பாகவும் அச்சமின்றியும் செயல்பட்டால் இந்த சீனத்து சதுரங்கத்தை நாம் நிச்சயமாக வெல்லலாம்.

உலகமே நம்மை பார்த்துக் கொண்டிருகிறது.

நாம் என்ன செய்ய போகிறோம்?

chess-horse-wallpapers-01-1024x768.jpg

 

 

Link to comment
Share on other sites

.

சரி பார்க்கலாம்.

சீனா போருக்கு செல்கிறது என்றால் தன் அழிவிற்கு அதே நேரடியாக செல்கிறது என்று அர்த்தம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.