• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Athavan CH

துண்டாடப்பட்ட தாயகத்தின் குரல்வளை!

Recommended Posts

Othiyamalai21-300x189.jpg
 
களத்திலிருந்து கொழும்பு மிரருக்காக ஜெரா
 
நிலத்துக்கான போராட்டம் தொடங்கிய இடங்கள் இப்போது எப்படியிருக்கின்றன? யாராவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? கற்பனையே செய்யவேண்டாம், நேரில் வந்து பார்த்துச் செல்லுங்கள் எனக் கொக்கிளாய் வழியான திருகோணமலை தரைவழிப் பாதையையும், நெடுங்கேணி, பெரியகுளம் ஊடான பதவியா பாதையையும் திறந்துவிட்டிருக்கின்றனர்.
 
 
முன்பெல்லாம் மணலாற்றுக் காடுகள் குறித்து பல்வேறு கிளைக்கதைகளை பரப்பிவிட்டிருந்தார்கள். சூரியன் உதிப்பதும், அஸ்தமிப்பதும் தெரியாத காடெனவும், அதற்குள் யாரும் தொலைந்தால் தொலைந்தவரை மீட்க மயில்குஞ்சன் தான் வரவேண்டும் எனவும், பகலில் கூட பேய்கள் மனிதர்களுடனேயே நடமாடி சகல வேலைகளையும் செய்யும் எனவும் கதைகள் சொல்வார்கள்.
 
ஆனால் இப்போது மணலாற்றுக் காட்டைப் பார்த்தால், சூது கவ்வும் திரைப்படத்தில் தோன்றும் வில்லன் போல காட்சியளிக்கிறது. அந்தக் காட்டின் அடர்த்தியும், தடிப்பும் மெலிந்துவிட்டன. பெறுமதியும் அற்றுவிட்டது.
 
காட்டைக் கடந்து வெலிஓயா கட்டில் ஏறி நின்று பார்த்தால் தொடர்ச்சியான சிங்கள கிராமங்களைப் பார்க்கலாம். அங்கும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. வன்னிப் பெருநிலம் 2002 ஆம் ஆண்டுகளோடு தொலைத்துவிட்ட செழுமையை அப்படியே வைத்திருக்கின்றன அந்தக் கிராமங்கள்.
 
Othiyamalai3.jpg
 
 
எங்கு பார்த்தாலும் வயல்கள் விளைந்து கிடக்கின்றன. வீட்டுக் கூரைகளில் கூட வன விலங்குள், பறவைகள் தங்கி வாழ்கின்றன. வன்னியின் வற்றாத குளங்களுக்குச் சாட்சியாக அடுக்கடுக்காகக் காணப்படும் குளங்களும், அருவிகளும் இருக்கின்றன.
 
இந்தக் கிராமங்கள் அனைத்தும் சில தசப்தங்களுக்கு முன்புவரை தமிழர்களுடையதாய் இருந்தவைதான். இப்போது வெலிஓயா என்கிற தேர்தல் வலயமாகி, சிங்கபுர, பதவியா,  ஜனகபுர என சிங்கள பெயர் மாற்றம் பெற்றுவிட்டன. அதற்குள் பல கிளை கிராமங்களும், பாதைகளும், பௌத்த மத பீடங்களும், உருவாகிவிட்டன. எனவே அவை இப்போது சுத்தமான சிங்களக் கிராமங்கள். வயதான மாடுகளில் காணப்படும் தமிழ் எழுத்துக் குறிகளைத் தவிர, தமிழர் வாழ்ந்தற்கான எந்தச் சான்றுகளும் அங்கில்லை.
 
இலங்கையில் பணியாற்றிய பாக்கர் என்கிற பிரித்தானிய தொல்பொருளியலாளர், இங்கு குறிப்பிடப்படும் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலையில் ஆதிகால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களுடன் கூடிய குகையும், கட்டடட எச்சங்களும், கி.மு 3 ஆம் அல்லது கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ் பிராமி கல்வெட்டுக்களும் காணப்படுவதாக 1889 ஆம் ஆண்டில் அவர் எழுதிய நூலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
 
ஆனால் அவர் குறிப்பிடும் நூற்றாண்டுகளைத்  தொடர்ந்து அங்கு தொடர்ச்சியான மனித நிலவுகை இருந்தமைக்கு சான்றுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. பெருங்காடுகளும், மலைகளும், ஆதி தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களையும் இந்த எல்லைக் கிராமங்களில் இப்போதும் காணலாம். பின்னர் இடையிலிருந்து  அதாவது சோழர்காலத் தமிழர் பண்பாட்டுத் தொடர்ச்சியின் பல்வேறு எச்சங்களைப் பார்க்க முடியும்.
 
வன்னி முழுவதும் ஆங்காங்கே வாழ்ந்த தமிழர்கள் உள்ளூரளவில் நிலச் சுவாந்தவர்களாகவும், கிராமங்களையும், குளங்களையும் உரிமையாகக் கொண்டவர்களாகவும் சுயாதிபத்தியத்துடன் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு கிராமத்தாரும் தன் சுற்றத்து “நடைமுறைகளை“ மிக இறுக்கமாக கடைபிடித்தமையால், யாராலும் அதற்குள் ஊடுருவ முடியவில்லை. ஆனால் அனைவரும் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்தான் கூடினார்கள். வற்றாப்பளை கண்ணகி அம்மன் பங்குனி திருவிழாவில்தான் வன்னி மக்களின் மொத்த சந்திப்பும் நடந்தது.
 
Othiyamalai4.jpg
 
இப்படியேதான், 1970 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழர்கள்தான் வாழ்ந்தார்கள். அனுராதபுரம், பொலநறுவைக்கு அப்பாலான தென்னிலங்கையின் சிங்கள தேசத்தையும், ஐம்புகோளப்பட்டிணத்தில் இருந்து தெற்காக நீண்ட தமிழர்களின் தேசத்தையும் பிரித்துநின்றவையே இத்தகைய கிராமங்கள். தணிக்கல், டொலர்பாம், ஹென்பாம், (பிற்கால காரணப்பெயர்கள்) என்பவற்றை அதற்கு உதாரமாணக் குறிப்பிடலாம். இவை குறுநில அமைப்பு முறையில் தனி நபர்களால் உரித்துடையனவாக இருந்தன.
 
அந்தக் காலத்து ஊர் உரிமையாளர்ளை, அங்கு வாழ்ந்த மூத்த குடி ஒருவர் இப்படித்தான் நினைவுகூர்கின்றார்,
 
“கொழும்புத் தமிழ் முதலாளியின் 500 ஏக்கர் ஹென் பாம், மாவிட்டபுரம் தமிழ் முதலாளியின் 500 ஏக்கர் டொலர் பாம், தம்பு றொபினுடைய 1000 ஏக்கர் சிலோன் தியேட்டர், அல்வாய் தமிழ் முதலாளியின் 1000 ஏக்கர் சர்ஸ்வதி பாம், நீதிராஜாவின் யானை பீடி கொம்பனி பாம், தனிய ஒருத்தருக்கு சொந்தமான தனிக்கல்லு”, “இதுக்கு இஞ்சால ஒதியமலை, பட்டிக்குடியிருப்பில் நெருக்கமாகச் சனம் இருந்தது. இந்தப் பக்கமிருந்து சனம் அங்கால வயல் விதைக்கவும், வேலை செய்யவும், வேட்டைக்கும், மாடுசாய்க்கவும் போய் தங்கி நிண்டுவருவினம். அங்கயும் வீடுகள் இருந்தது”.
 
ஆனால் அங்க இருந்த தமிழ் முதலாளிமார் சிலபேர் மோசமானவங்களா இருந்தாங்கள். கூலிக்கு ஆக்கள பிடிச்சி வேலை செய்விப்பாங்கள். நல்லநாள், பெருநாளில், கூலியாக்கள் தங்கட குடும்பங்களப் பாக்க ஊருக்குப் போகவேணும் சம்பளம் கேட்டால், இரவில மண்வெட்டியால வெட்டி வயலுக்குள்ளயே புதைச்சிடுவாங்கள். வீட்டுக்குப் போறனி, விளாம்பழம் புடுங்கிக்கொண்டுபோய் பிள்ளைகளுக்கு குடு எண்டு சொல்லி காட்டுக்கு கூட்டிக்கொண்டுபோய், கூலியாக்கள விளாமரத்தில ஏத்தி கீழ நிண்டு இடியனால் சுட்டுக் கொன்று போடுவாங்கள்” – ஏரம்பு (76)
 
ஏரம்பு ஐயா குறிப்பிடுவதுபோல இங்கு இருந்த ஒவ்வொரு கிராமமும் 1000 ஏக்கர்களுக்கு அப்பாலும் பரப்பைக் கொண்டு நீண்டது. வயல்களும், தோட்டக் காணிகளும், பட்டிபட்டியான மாடுகளும் அனைத்துக் கிராமங்களிலும் இருந்தன. வள மிகுயினால் செழிப்புக்கு பஞ்சமிருக்கவில்லை.
 
Othiyamalai6.jpg
 
 
மறுபுற எல்லையில் வாழ்ந்த சிங்களவர்களுக்கோ பொருளாதார ரீதியில் பெரும் பிரச்சினை இருந்தது. நூற்றாண்டுகாலமாக இராசதானிகளாக இருந்த மையங்கள் வளமின்றி வறண்டு போய்க்கிடந்தன. எனவே தமிழ்க் கிராமங்களுக்குள் ஊடுருவி இரவோடு இரவாக மாடுகளை சாய்த்துப் போவதும், விளைந்த பயிர்களை கொள்ளையடித்துப் போவதும் நடந்தது. திருடிச் சென்ற மாடுகளை மறுநாள் தமிழர்கள் சென்று மீட்டு வருவதும், அதற்காக அடிதடியில் இறங்குவதுமான சம்பவங்கள் தொடர்கதையாக இருந்தன.
 
இந்த சந்தர்ப்பத்தில்தான் (1980) இலங்கை அரசியலில் கூர்மையான இனவாதமும், தமிழர் நிலங்களை அபகரித்துக்கொள்ளும் சதித் திட்டங்களும் அரங்கேறின. இவ்வாறு தமிழரின் பூர்வீக நிலங்களில் திட்டமிட்ட வகையில் சிங்களவர்களை குடியேற்றம் செய்யும் முறையை டீ.எஸ். சேனநாயக்கா, ஜே.ஆர்.ஜெயவர்தனா, சிறீல் மத்தியூஸ், காமினி திசநாயக்க, என்.ஜீ.பி. பண்டிதரத்ன போன்றோர் தொடக்கி முன்னெடுத்தவர்களாவார்.
 
இந்தக் குடியேற்றங்கள் தமிழர்களின் எல்லையோரக் கிராமங்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கின. பட்டிக்குடியிருப்பு, ஒதியமலை கிராமங்களுக்குள் இரவு நேரத்தில் திடீரென ஊடுருவும் சிங்களவர்கள், கொள்ளையடித்தும், வீடுகளை தீக்கிரையாக்கியும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்குப் பயந்து இரவு வேளைகளில் மக்கள் தம் ஊர்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுவதும், காடுகளுக்குள் சென்று மறைந்து வாழ்வதும், ஆண்கள் வயல்காவல், வேட்டை முதலான தொழில்களை தவிர்த்து வந்ததும், இதனால் மிகத் தொலைவாக, சிங்கள எல்லைகளுக்கு அருகில் இருந்த வயல்காணிகள் காடாகியமையும் நடந்தது.
 
ஆனாலும் தமிழர்கள் அந்த நிலத்தைவிட்டு வெளியேறவில்லை. திருப்பிப் போராடியும், பின்வாங்கி மீளச் சென்றும் அங்கேயே வாழ்ந்தார்கள்.
 
 
Othiyamalai5.jpg
 
 
அப்போதுதான் வெலி ஓயா குடியேற்றத்திட்டம், மகாவலி அபிவிருத்தி குடியேற்றத்திட்டம் நடந்தது. அங்கு குடியேற்றப்பட்டவர்கள், இலங்கை சிறைகளில் மோசமான குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகளாக இருந்தனர். பதவியாவை அண்டிய இந்தக் குடியேற்றத்தில் திறந்தவெளிச் சிறைச்சாலை போல குடியேறிகள் குடியேற்றப்பட்டார்கள்.
 
அவர்கள் கொள்ளையடிப்புக்காகவும், தமிழர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்காவும்,  மிக மோசமான வன்முறைகளிலும் ஈடுபட்டார்கள். வீட்டோடு எரியூட்டினார்கள். ஆண்களைப் பிடித்துச் சென்று குளக்கரைகளில் வெட்டிப் போட்டார்கள். வேட்டைக்கு சென்ற ஆண்கள் தலையற்ற முண்டங்களாக காடுமுழுவதும் கிடந்தார்கள்.  இரவிரவாகக் காடுகளுக்குள் நுழைந்து, மரங்களிலும், புதர்களிலும் மறைந்திருக்கும் சிறைகைதிக் குடியேறிகள், வேட்டைக்கு செல்லும் தமிழ் ஆண்களையும், மாடு சாய்க்கச் செல்பவர்களையும் கழுத்தறுத்து கொன்று விடுவர். கொன்றுவிட்டு, முண்டமாகக் கிடப்பவரின் ஆடையை அணிந்துகொண்டு, தாம் அணிந்திருக்கும் சிறை ஆடையை முண்டத்துக்கு அணிவித்துவிட்டு தப்பித்துச் சென்றுவிடுவர்.
 
இந்தக் குரூரமான கொலைகள் தமிழ் மக்களை அல்லோல கல்லோலப் படுத்தியது. அதற்கான பதில் வன்முறைகள் தடியடி, வாள்களில் தொடங்கி, மிருகங்களுக்கு வைக்கும் பொறிகளைக் கடந்து, கட்டுத்துவக்கு, இடியன், சொட்கன் துப்பாக்கிகள் வரையில் வளர்ந்தது. பொறுமையுடைந்த தமிழர்கள் ஒருநாள் இரவு சிங்கள கிராமங்களுக்குள் புகுந்து பழியெடுத்துவிட்டுத் திரும்பினர். அதற்குப் பழிவாங்க சிங்களவர்களும் தயாரானார்கள்.
 
இவ்வாறானதொரு பழிவாங்கல் காலைதான், 1982.12.02 அன்றும் விடிந்தது. அது ஒதியமலைக் கிராமம். இரண்டு நாட்களுக்கு முன் அந்தக் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றின் வாசனை அந்தக் காலையிலும் வீசிக்கொண்டிருந்தது. அவ்வேளையில் கிராமத்துக் காடுகளுக்குள் இருந்து இயக்கப் பெடியன்களின் சாயலில் வெளிப்பட்ட மனிதர்கள் “பெடியன்களைப்” போலவே ஆண்கள் அனைவரையும் பொதுறோக்கு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். புதுமாப்பிள்ளையும் போனான். மண்டபத்துக்குள் நுழைந்ததும், அவர்களின் கைகளும், கண்களும் கட்டப்பட்டன. 28 பேரை அவ்விடத்திலேயே நெற்றியில் சுட்டுக் கொன்றனர். மிகுதி நான்கு பேரை ட்ராக்டர்களில் ஏற்றி காட்டுக்குள் கொண்டு சென்று கொன்றனர்.
 
இங்கு இதுவரை இடம்பெற்ற எல்லாப் படுகொலைகளுக்கும் சாட்சியங்கள் இருப்பதைப் போல இந்த முதல் படுகொலைக்கும் சாட்சியமுண்டு.
 
“அண்டைக்கு காலம 6.30 மணியிருக்கும் எங்கட ஊருக்குள்ள நாலு பக்கமும் ஆமிக்காரர் சுத்திவளைச்சாங்கள். எங்கட ஊரில கண்ணில பட்ட ஆம்பிள ஆக்கள் எல்லாரை பிடிச்சி ஒரு இடத்துக்கு கொண்டு வந்தாங்கள். அவையள் போட்டிருந்த சேட்டைக் கழற்றி கைகள பின்பக்கமா கட்டினவங்கள். அவளபேரையும் சாய்ச்சிக் கொண்டு, ஒதியமலைக் குளக்கட்டுக்கு கிட்ட வந்தாங்கள். அப்ப றோட்டால போன செல்வராசான்ர ட்ராக்டர மறிச்சி அதில போன ஆக்களையும் பிடிச்சி, கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்துக்குள்ள கொண்டுபோனாங்கள். கொஞ்ச நேரத்தில ஒரே அலறல் சத்ததும், துப்பாக்கி வெடிச்சத்தமும் கேட்டது. சுடுறதுக்காகப் பிடிச்ச ஆக்களில வயசானவங்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சின்னையா, கனகையா, ஆக்கள தங்கட பாதுகாப்புக்காக ட்ராக்டர்ல ஏத்திக்கொண்டு போயிட்டாங்கள். இதெல்லாத்தையும் ஒழிச்சி நிண்டு பாத்துக்கொண்டிருந்த நான், ஓடிப்போய் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்த பார்த்தன். மூன்று, நான்கு பேராக நிப்பாட்டி வச்சி, சுட்டும், வெட்டியும் 27 பேரையும் கொன்றுட்டாங்கள். சிலர் தண்ணி கேட்டு கெஞ்சிக்கொண்டிருந்தாங்கள். பிறகு அங்க கால் வேறு, கை வேறு, தலைவேறயாக கிடந்தவங்கள எல்லாம் தூக்கி ஒரே இடமா அடுக்கிட்டு, எல்லாரும் முல்லைத்தீவுக்கு கால்நடையா ஓடினம். அங்கயிருந்து திரும்பி வந்து, எல்லா கிராமத்து ஆக்களும், கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு முன்னால இருந்த  மரங்கள எல்லாம் தறிச்சி அடுக்கி, அதில செத்தாக்கள போட்டு கொழுத்தினம். அதுக்குப் பிறகு அங்கயிருக்கேல்ல”
 
கந்தசாமி – ஒதியமலை
 
இந்தப் படுகொலையின் பின்னர் தமிழர்கள் எல்லைக்கிராமங்களை விட்டு வெளியேறினார்கள். சில காலம் போர் சூனிய வலையமாக இருந்த கிராமங்கள், மெல்லமெல்லமா சிங்களக் குடியேறிகள் வசமாகியது. சிங்கபுர எனவும், ஜனகபுர எனவும், கிரி இப்பன் வெவ இடதுகர, கிரி இப்பன் வெவ வலதுகர, அகற்றுகஸ் வெவ எனவும் பெயர் மாறின. விகாரைகள் முளைத்தன. 2009க்குப் பின்னர் இவ்வாறு அபகரிக்கப்பட்ட கிராமங்கள் அனைத்தும் வெலி ஓயா என்னும் தேர்தல் தொகுதியாகியது. தமிழர்களின் பூர்வீக நிலமாகிய வன்னிக்குள் முளைத்த இந்தப் புதிய தேர்தல் வலயம் சிங்கள வாக்காளர்களுக்கானதாக இருந்தது. அந்தத் தேர்தல் வலயத்துள் வாக்களிக்கத் தகுதிபெற்ற சிங்கள வாக்காளர்களாக 1726 பேர் (2011,ஓகஸ்ட்) இருந்தனர். இவ்வாறானதொரு திட்டமிட்ட குடியேற்றத்துக்கும், அதில் நிரந்தரமா இடம்பிடித்துக்கொள்வதற்கும் சிங்களவர்களுக்கு எடுத்துக்கொண்ட காலம் வெறும் 20 வருடங்கள் மாத்திரமே.
 
ஆனாலும் தமிழர்கள் அந்த நிலங்களுக்காக சட்ட ரீதியிலாவது போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் போர் இன்னும் ஓயாமல் இருக்கின்றது. அடுத்தடுத்துவரும் மாற்றங்களும், நல்லிணக்கங்களும் இவற்றையும் கண்டுகொள்ளுமா?
 
 

 

Share this post


Link to post
Share on other sites

நானும் கடந்துது போனேன் போன வருடம். அலம்பில் தொடங்கி - படர்கிறது குடியேற்றம் எனும் விசச்செடி.

ஆயுத்தத்தாலும் இதை அறுக்க முடியவில்லை. அரசியலாலும் முடியாது. கிட்டத்தட்ட ஒரு செக்மேற் தமிழர்க்கு.

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள் .

மயில்குஞ்சனுடன் திரியாயில் இருந்து கொக்கிளாய்க்கு சென்றது நினைவில் வந்தது .தற்போது மயில்குஞ்சனும் உயிருடன் இல்லை

Share this post


Link to post
Share on other sites

திருகோணமலை மாவட்டத்தில் திருமலை நகரைத் தவிர பிறபகுதிகளில் தமிழர்களின் இனப்பரம்பல் குறைந்துவிட்டது. திரியாய், கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற பகுதிகள் முழுச் சிங்கள மயமாகி இனித் தமிழர்கள் அங்கு வாழமுடியாத நிலை வந்துவிட்டது. எனவே வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் தமிழர் தாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை.

வன்னிப் பெருநிலம் 2002 ஆம் ஆண்டுகளோடு தொலைத்துவிட்ட செழுமையை அப்படியே வைத்திருக்கின்றன அந்தக் கிராமங்கள்.

வன்னியில் மக்களைப் படுகொலை செய்ததுடன் நிற்காது, காடழிப்பு, நீர் நிலைகளை பராமரிக்காமல் புறக்கணித்தல் போன்ற செயல்களிலும் சிங்கள இனவாத அரசு செயற்படுவதால் செழுமை இல்லாமல் போய்விட்டது என்று நினைக்கின்றேன்.

நேரடியாகச் சென்று படங்களுடன் கட்டுரையை எழுதிய ஜெராவுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

மதாத்தில் குறைந்தது 3தரத்துக்கு மேல் இவ் வீதிகள் ஊடாக பயணிக்கின்றேன் நெஞ்சை கொல்லும் தருணங்கள்......

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி

 

தமிழர்களின் பிரிவினை போராட்டத்திற்கு வித்திட்ட, இன்றும் தீர்க்கபடாமல் இருக்கும் விடயத்தினை பேசும் இக் கட்டுரை மிகவும் முக்கியமானது.

Share this post


Link to post
Share on other sites

இது இப்போ முழு வீச்சில் தொடர்கிறது என்பதே உண்மை.

நெடுங்கேணி மிகவிரைவில் சிங்கள ஊராகும்.

திருமலை நகரைப்போல வவுனியா நகர் ஒரு சிங்கள மாவட்டத்தில் தமிழ்த்தீவாகும்.

மன்னாரில் ரிசாத்தின் ஆக்கள்.

கூட்டமைப்பு எம்பிக்களுக்கோ யாழ்பாணத்தில் குறையும் சீட்டுக்கு அடிபிடி படவே நேரம் போதவில்லை.

விக்கியரும் இதில் அடக்கியே வாசிக்கிறார்.

கஜன் கம்பேனி - சொல்லவா வேண்டும்.

மிகவும் இக்கட்டான நிலையில் நிற்கிறது இந்த மாவட்டங்களில் தமிழர் பிரசன்னம்.

Share this post


Link to post
Share on other sites

இது இப்போ முழு வீச்சில் தொடர்கிறது என்பதே உண்மை.

நெடுங்கேணி மிகவிரைவில் சிங்கள ஊராகும்.

திருமலை நகரைப்போல வவுனியா நகர் ஒரு சிங்கள மாவட்டத்தில் தமிழ்த்தீவாகும்.

மன்னாரில் ரிசாத்தின் ஆக்கள்.

கூட்டமைப்பு எம்பிக்களுக்கோ யாழ்பாணத்தில் குறையும் சீட்டுக்கு அடிபிடி படவே நேரம் போதவில்லை.

விக்கியரும் இதில் அடக்கியே வாசிக்கிறார்.

கஜன் கம்பேனி - சொல்லவா வேண்டும்.

மிகவும் இக்கட்டான நிலையில் நிற்கிறது இந்த மாவட்டங்களில் தமிழர் பிரசன்னம்.

முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள் 

எஞ்சி இருப்பவர்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிநாடு செல்லவே ஆசைப்படுகின்றார்கள் .எதிர்காலம் கேள்விக்குறிதான் .

Share this post


Link to post
Share on other sites

"இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும் உலக இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,"

இந்த தாடிக்கார்ர்கள் என்ன செய்யினம் இது தொடர்பாக

Share this post


Link to post
Share on other sites

யாழ்ப்பாணம் மட்டும் தான் தமிழீழம் மிச்சம் பற்றி கவலையில்லை

Share this post


Link to post
Share on other sites

 

எப்படியிருக்கிறது தமிழரின் முதல் கிராமம் – ஒளிப்படக் கதை

http://www.yarl.com/forum3/topic/159994-எப்படியிருக்கிறது-தமிழரின்-முதல்-கிராமம்-–-ஒளிப்படக்-கதை/

Share this post


Link to post
Share on other sites