Jump to content

நற்றிணை - 308


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நூல்: நற்றிணை (308)

பாடியவர்: எயினந்தை மகன் இளங்கீரனார்

சூழல்: பாலைத் திணை

 

செல விரைவு உற்ற அரவம் போற்றி

மலர் ஏர் உண் கண் பனி வர, ஆய் இழை

யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,

வேண்டாமையின் மென்மெல வந்து,

வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி,

வெறிகமழ் துறு முடி தயங்க, நல் வினைப்

பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,

ஆகம் அடைதந்தோளே, அது கண்டு

ஈர் மண் செய்கை நீர் படு பசுங்கலம்

பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம்

பொருள்மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே!

 

பொருள் விளக்கு கவிதை:

 

காடுமலை மேடுபள்ளம் கடந்(து) எங்காலும்

காண்பதற்காய் பொருட்செல்வம் - நெஞ்சம் நாட.

ஒடியுடன் புறப்படற்காய் விரைகின்றேன் யான்

ஒரே சத்தம் வீடெங்கும் - மனையாள்தன்னை

தேடுகிறேன் குவளை நிகர் மைக்கண்ணாளோ

தேர்ந்தெடுத்த அணிசெய்தாள் அழைத்தபோது

நாடி மெதுவாய் வந்தென்; முடிவறிந்தே

நாணமதும் சோகமதும் விரவப் பாய்ந்து

ஓடுகிற கண்ணீரோடருகில் நின்றாள்

ஒன்றையுமே கூறாது தலைகவிழ்ந்தாள்

 

என்ன செய்தி யென்றவளும் கேட்டாளில்லை

இல்லை நீ போகாதே யென்றாளில்லை

அன்னவளின்; நெஞ்சினிலே எனையனுப்ப

அணுவளவும்; மனமில்லை என்ற உண்மை

என்மனதில் தைத்திடவும் மனங்கனிந்தேன்

ஏதுசெய்வ தென்றறியா திருந்தேன் அங்கே.

 

சீரமையச் செய்திட்ட பாவையொன்று

செயலிழந்து பொறியழிந்த நிலைபோல் என்றன்

நேரெதிரில் நின்றவளோ விம்மலோடென்

நெஞ்சினிலே சாய்ந்திட்டாள் அந்த நேரம்

கார்குழலாள் அடர்கேச நறுமணத்தில்

காதல் மனம் லயித்துவிட மயங்கி நின்றேன்.

 

ஈரமண்ணிற் செய்த தொரு கலத்திற் சோவென்(று)

இரைச்சலொடு மழை வீழக் கரைதல் போல

து}ர இடம் பிரிந்தெனது துணையைவிட்டு

சொத்ததனைச் சேர்க்குமனம் கரைய நானோ

பேராசை வேண்டாமென் றவளை விட்டுப்

பிரியாமல் வாழ்வதையே மகிழ்வோடேற்றேன்.

 

உரைநடை விளக்கம்:

 

இன்னும் சிறிதுநேரத்தில் என்பயணம் தொடங்கப்போகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதனால்> வீடுமுழுவதும் ஒரே சத்தம். இதனால்> தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த என் மனைவிக்கு விஷயம் புரிந்துவிட்டது. மை இட்ட குவளை மலர் போன்ற அவளுடைய கண்களில் நீர் வடிந்தது. கலங்கி நின்றிருந்தாள். நான் அவளை அருகே அழைத்தேன். வெட்கத்துடன் வந்தாள். அந்த மெதுநடையிலேயே> எனக்கு அவளுடைய மனம் புரிந்துவிட்டது. நான் வெளியூர் செல்வதை அவள் விரும்பவில்லை. ஆனால் அதேசமயம் அதைப்பற்றி என்னிடம் கேட்கவோ என்னைத் தடுக்கவோ அவளுக்கு மனம் இல்லை. மெளனமாகத் தலை குனிந்தாள். அவளுடைய திரண்ட கேசத்திலிருந்து வீசும் நறுமணம் என்னை மயக்கியது. ஆனால் அவள்> நன்கு வடிவமைக்கப்பட்ட இயந்திரப் பாவை செயல்படாமல் அழிந்துபோனதுபோலக் கலக்கத்துடன் நின்றிருந்தாள். சில நிமிடங்கள்> யாரும் பேசவில்லை. திடீரென்று அவள் என் மார்பில் தஞ்சமடைந்தாள். அவ்வளவுதான். ஈர மண்ணில் செய்த மண் பாண்டத்தின்மீது பெருமழை பெய்ததுபோல செல்வத்தின்மீது ஆசை கொண்ட என்னுடைய நெஞ்சம் கரைந்தது அவளுடன் கலந்தது மகிழ்ந்தது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.