Sign in to follow this  
கிருபன்

முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன் — அ.ராமசாமி

Recommended Posts

முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன் — அ.ராமசாமி

இரண்டு வாரங்களுக்கு முன் எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன்.

பேருந்துப் பயணத்தில் நேராக எங்கள் கிராமங்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் வழக்கத்திற்கு மாறாகக் கைவசம் இருந்த கார் புதிய யோசனைகளைத் தூண்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளால் இணைக்கப்படாமல் வண்டிப்பாதைகளாலும் ஒற்றையடிப்பாதைகளாலும் இணைக்கப்பட்டிருந்த சின்னச்சின்னக் கிராமங்களையும் பார்க்கத்தூண்டியது. அவையெல்லாம் எனது பள்ளிப் பருவத்தில் சல்லிக்கட்டு பார்க்கவும் வள்ளி திருமணம் பார்க்கவும் நடந்து போய் வந்த கிராமங்கள். பின்னர் கபடி விளையாடுவதற்காகச் சைக்கிளில் சென்றுவந்த கிராமங்கள். அப்போதெல்லாம் அந்தக் கிராமங்களில் பளிச்சென்று தெரிந்தவை எம்ஜிஆர் மன்றங்கள். எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களின் திரைப்படச் சுவரொட்டிகள் மாறிக் கொண்டே இருக்கும். அந்த மாற்றம் சாதிச் சங்கங்களின் – சாதிக்கட்சிகளின் சுவரெழுத்துகளாக மாறியபோது எங்கள் பக்கத்து கிராமங்கள் நசிந்து சிவகாசியும் திருப்பூரும் கோயம்புத்தூரும் பெருத்து வீங்கியதைக் கண்டவன் நான்.

நானே ஓட்டியாக மாறிக் காரில் சென்றேன். அப்படிச் சென்ற எனக்குச் சில உண்மைகள் பளிச்சென்று உரைத்தன. 1960- களில் எம்ஜிஆர் மன்றங்கள் இருந்ததுபோல நாம் தமிழர் கட்சியின் வண்ணத் தட்டிகள் பல ஊர்களில் நிற்கின்றன. அத்தட்டிகளில் அக்கட்சியின் தலைவர் சீமானுக்குப் பதிலாகப் படமாக நிற்பவர் ஈழவிடுதலைக்காக ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த பிரபாகரன். வரிவரியான வண்ணக்கோடுகள் போட்ட சட்டையும் தலையில் தொப்பியும் கணத்த மீசையுமாகப் புலித்தலைவர் பிரபாகரன் படம் போட்டு நாம் தமிழர் இயக்கம் கிராமங்களில் கால் ஊன்றிக் கொண்டிருக்கிறது. நாம் தமிழர் எனத் தனது அரசியல் இயக்கத்திற்குப் பெயரிட்டுள்ள சீமானின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் பொருட்படுத்தத்தக்கதல்ல; உலகமயக் காலத்தில் வாழும் தமிழர்கள் அவரை ஏற்க மாட்டார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நடப்பு வேறாக இருக்கின்றது. எனது கிராமங்கள் இருக்கும் மதுரை மாவட்டத்தில் மட்டுமல்ல; தென் மாவட்டங்களில் சீமானின் பெயரும் அவர் உச்சரிக்கும் ‘நாம் தமிழர்’ என்ற கூப்பாடும் மௌனமாகப் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. பிரபாகரனின் உருவத்தை முன்னெடுத்த அவர் இப்போது முருகனைத் தனது முப்பாட்டன் எனச் சொல்லத் தொடங்கியிருக்கிறார். வாளொடு தோன்றிய மூத்தகுடி எம் தமிழ்க் குடி என்று சொன்னவர்களின் வாரிசாகத் தன்னை முன்வைக்க விரும்பி வேலொடு தோன்றி வினையாற்றத் தொடங்கியுள்ளார். இந்த மௌனப்பரவல் என்ன செய்யும்?

தமிழ்நாட்டிலிருந்து தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை அந்நியர்கள் எனச் சித்திரித்துப் பேசும் குரல்கள் அவ்வப்போது தலை தூக்கி வந்துள்ளன. தமிழைத் தாய்மொழியாக் கொள்ளாதவர்களால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தடைபட்டுள்ளது என அந்தக் குரல்கள் வலியுறுத்துகின்றன. தமிழைத் தவிர வேறு மொழியை அறியாதவர்களைக் கூட அவர்களின் சில நூறாண்டுப் பூர்வீகத்தைத் தோண்டி எடுத்து அந்நியர்கள் என முத்திரை குத்துவதன் நோக்கம் தமிழர்களுக்கு நன்மை உண்டாக்க வேண்டும் என்பதாகப்படவில்லை. அருகருகே வாழ்ந்து தன்னிலை மறந்தவர்களின் மனத்திற்குள் கலவர பயத்தை உண்டாக்குவதின் மூலம் எதிரிகளைக் கட்டமைத்து வளர்ச்சியை முடக்கிப்போடவே இந்த வாதங்கள் பயன்படும். அது மட்டுமல்லாமல், இன்று இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அம்மாநிலங்களின் பெருநகரங்களில் மட்டுமல்லாமல், சிறுசிறு கிராமப் பகுதிகளிலும் வாழநேர்ந்ததால் அதன் பூர்வகுடிகளாகவே ஆகிவிட்ட தமிழர்களின் வாழ்க்கையையும் நெருக்கடிக்குள்ளாக்கும் ஆபத்து கொண்டது இந்த வாதங்கள். இந்த வாதங்கள் குறுகிய வாதங்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான இடப் பெயர்வுகளையும் நம் மனங்களில் நிழலாட விட்டபின்பே இக்குரல்களுக்குச் செவி மடுக்க வேண்டும்; சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். இந்தப் பின்னணியில் தான் தமிழர்களின் முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன் என்று சொல்ல வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

**********

உலக மொழிகள் பலவற்றில் இருந்தும் மொழிபெயர்க்கப்பெற்று உலகக் கவிதைகள் என்றொரு தொகுப்பு வெளியிடப்படுகிறது என்றால் தமிழிலிருந்து யார் யாரையெல்லாம் பரிந்துரை செய்வீர்கள்? என்றொரு கேள்வியை ஒரு இந்தியவியல் அறிஞர் என்னிடம் கேட்டார். நான் பணியாற்றிக் கொண்டிருந்த வார்சா பல்கலைக்கழகத்தில் நடந்த போரும் அமைதியும் இந்திய இலக்கியங்களும் என்ற கருத்தரங்கின்போது சந்தித்த அவருக்கு இந்திய மொழி இலக்கியங்கள் மட்டுமல்லாமல் உலக இலக்கியப்பரப்பின் அகலமும் ஆழமும் தெரிந்திருந்தது என்பதை அவரது கருத்தரங்க உரையும், பிந்திய விவாதங்களும் எடுத்துக் காட்டின.

காபி குடிப்பதற்கான இடைவேளையின் போது அந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்டார் என்பதற்கான காரணத்தைச் சொல்லவில்லை;நானும் கேட்கவில்லை. “தமிழிலிருந்து நூறு பெயர்களையும் அவர்களது கவிதைத் தலைப்புகளையும் நாளையே எழுதித் தருகிறேன்” என்றேன். “நூறு அல்ல; பத்துப் பேரின் பத்துக் கவிதைகளுக்குத் தான் இடம்” என்றால் யார் யாரைச் சொல்வீர்கள் என்றார்? உலகக் கவிதை இலக்கியத்திற்கு ஆயிரக் கணக்கான கவிதைகளைத் தரக் கூடிய தமிழிலிருந்து வெறும் பத்துக் கவிதைகளுக்குத் தான் இடம் என்று சொன்னவுடன் நான் கொஞ்சம் திகைத்துப் போய் விட்டேன். பல்வேறு மொழிகளிலிருந்து ஆகச் சிறந்த கவிதைகள் தொகுக்கப்படும்போது பேசுபொருளில் இருக்கும் உண்மைத்துவம், கவிதையின் செய்நேர்த்திசார்ந்த நுட்பங்கள், எழுதப்பெற்ற மொழியில் அது செலுத்திய தாக்கம் மற்றும் செல்வாக்கு எனப் பலவற்றையும் அடிப்படையாகக் கொண்டு கவிதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த அடிப்படைகளைப் பின்பற்றிப் பத்துத் தமிழ்க் கவிதைகளைத் தேர்வு செய்வது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை நானறிவேன்.

நூறு கவிதைகளைப் பரிந்துரை செய்வதற்குப் பதிலாகப் பத்துக் கவிதைகளைப் பரிந்துரை செய்வதுதான் எனக்குச் சிரமமே ஒழிய ஒரேயொரு கவிதையைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னால் சிரமமே படமாட்டேன். கண்ணை மூடிக் கொண்டு அந்தக் கவிதையைச் சொல்லி விடுவேன். ஆம் தமிழின் ஆகச் சிறந்த கவிதையாக நான் நினைப்பது கவி கணியன் பூங்குன்றனின்

“யாதும் ஊரே யாவருங் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

சாதலும் புதுவதன்றே; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தென்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்

முறைவழி படூஉ மென்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம், ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமோ!

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.[ புறநானூறு 192.]

தொடங்கிய இடத்தில் முடிவதல்ல; வாழ்க்கை. ஒரு மழைத்துளியின் ஆசை பெருங்கடலின் பகுதியாக ஆவதில் இருக்கிறது. ஒரு மனிதப் பிறப்பின் வாழ்க்கை நிலையாமையின் இருப்பில் இருக்கிறது என்பது தெரிந்த ஒன்றாக இருந்தாலும், நிலைத்து நின்று விடும் ஆசையை ஒவ்வொரு மனிதனும் விட்டுவிடுவதில்லை. மனிதம் நிலையாமை என்பது தெரிந்ததால் தான் நிலையானது இறைமை என ஒன்றை உருவாக்கிக் கொண்டு அதுவாகிவிட முயல்கிறது. ஆம் மனிதர்கள் கடவுளாகி விடுவதில் வாழ்க்கை முழுமையடைவதாக நம்புகிறார்கள். அதற்காகவே அலைகிறார்கள்; தேடுகிறார்கள். அந்த முழுமை ஞானத்தில் இருக்கிறது என்கிறான் ஒருவன். ஒருவனுக்கு வீரத்தில் இருக்கிறதாகப்படுகிறது. மற்றொருவனுக்கோ செல்வத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. பெரும்பணக்காரனாக ஆவதும், பெரும்சாகசக்காரனாகக் காட்டிக் கொள்வதும், ஞானத்தின் உச்சத்தில் இருப்பதாகப் பாவித்துக் கொள்வதுமான வாழ்க்கையெல்லாம் பாவனைகள் தான். ஆணாக இருந்து பெண்ணை ஆள்வதிலும், பெண்ணாக இருந்து ஆணைக்கொள்வதிலும் இருப்பதாக நம்புவதும் இன்னொரு பாவனை. இதையெல்லாம் தான் கணியன் பூங்குன்றன் அந்தக் கவிதையின் ஒரு தெப்பத்தைக் காட்டிச் சொல்கிறான்.

மழை பெய்ததாலோ அல்லது ஊற்றுப் பெருக்காகவோ மலையிலிருந்து கிளம்பும் நீரின் பயண நோக்கம் கடலை அடைவது என்பதை நீர் அறியுமா? என்று தெரியவில்லை. அறியாமலேயே தொடங்கும் நீரின் பயணம் ஓடையாக, தடாகமாக, அருவியாக, சிற்றாறாக, நதியாகப் பயணம் செய்கிறது. அதன் போக்கிலான பயணத்தை மனிதர்கள் குளமாகவும், ஏரியாகவும் அணையாகவும் மாற்றித் தடுத்து நிறுத்தவும் கூடும். என்றாலும் அதன் ஆசை என்னவோ கடலைச் சேர்வது என்பதில் தான் இருக்கிறது. அந்த நீர் அதற்காக மட்டுமே நிகழவில்லை; அதற்குள் கிடக்கும் தெப்பத்திற்காகவும் சேர்த்தே நிகழ்கிறது என நினைக்கிறான் பூங்குன்றன்.

நீருக்குள் விழும் ஒரு தெப்பத்தின் பயணமும் அந்த நீரின் பயணப்பாதையையே ஏற்றுக் கொள்ளவேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. திசைமாற்றப்படும் தெப்பத்தின் போக்கைப் போல மனித வாழ்க்கையின் பயணமும் பல நெருக்கடிகளால் திசை மாற்றம் அடையக் கூடியது. தனிமனித வாழ்க்கையில் அடுத்தவரின் பார்வைக்கு வராமல் – நடக்கும் திசைமாற்றங்களை முன் வைத்தே கணியன் பூங்குன்றன் தன் கவிதைப் பொருளை அமைத்துள்ளான். ஆகப் பெரிய காரியங்கள் எதனையும் செய்யாத சிறியோரை அவர்களின் சிறுமைக்காக இகழாமல் இருப்பது போலவே, சாகசங்கள் செய்தவர்கள் என்பதற்காகப் பெருமை பாராட்டுவதும் தேவையில்லை எனச் சொல்லும் அவன் சொல்லும் தொனியாலும் விதத்தாலும் அதனை பெரும் மனிதக் கூட்டத்திற்கே உரியதாக மாற்றியுள்ளான். யாதும் ஊரே; யாவரும் கேளிர் எனத் தொடங்கும் அந்த வரிகள் ஆகப் பெரும் பொதுமையை நோக்கிப் பேசும் சொற்கூட்டம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா? என்ற ஐயம் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. கணியன் பூங்குன்றனின் உள்ளார்ந்த நோக்கத்தை மொழிபெயர்ப்பில் வாசித்தவர்களே புரிந்து கொண்டுள்ளார்கள்; ஆனால் நேர்தமிழில் வாசித்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்; புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்கிறார்கள்.

தனிமனிதர்களின் வாழ்க்கைப் பாதையைப் பற்றிப் பேசும் பூங்குன்றனின் இக்கவிதை ஓரினத்தின் இருப்பையும் அலைக்கழிப்பையும் கூடப் பேசும் கவிதையாக மாறியிருப்பதை நாம் உணர வேண்டும். சமூகத்தின் வழித்தடங்களை – ஒரு கூட்டத்தின் பாதையை – திசை மாற்றம் செய்வதில் போர்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதைப் பண்டைய வரலாற்று நிகழ்வுகள் காட்டியுள்ளன. உலக வரலாற்றில் போர்களால் திசை தடுமாறிப் பல இடங்களுக்குப் பரவிய கூட்டங்கள் பலவாகும். அலெக்ஸாண்டரையும் செங்கிஸ்கானையும்மாவீரர்களாக மட்டுமே போர்கள் காட்டியது என்பதை வரலாற்றுப் புத்தகங்களை மட்டும் வாசிப்பவர்கள் நம்பலாம். அவர்கள் நடத்திய போர்களுக்குப் பின் ஏற்பட்ட கலப்புகளும் சேர்மானங்களும் மனிதகுல வாழ்க்கையில் ஏற்படுத்திய அடையாளங்கள் பலவிதமானவை. சிலுவைப் போர்களும் இரண்டு உலக யுத்தங்களும் நபர்களை வீரர்களாகக் கட்டமைக்க நடந்த போர்கள் அல்ல. மனிதக் கூட்டத்தை இடம்சார்ந்து நிலைத்து நிற்கவிடாமல் அலைக்கழிக்க நடந்த போர்கள் என்பதை ஐரோப்பியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் நடந்த பல போர்களும் பின் விளைவுகளுமே பாரத தேசம் என்னும் அடையாளத்தை உருவாக்கும் பயணத்தைத் தொடங்கி வைத்தன.

கண் முன்னே சின்னஞ்சிறு நாடான இலங்கையில் நடந்த யுத்தம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்த உண்மையை உணர்த்தியுள்ளது. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு அதை உணர்த்தத் தவறிவிட்டது என்றே தோன்றுகிறது. அந்த வகையில் தான் கணியன் பூங்குன்றனின் கவிதையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர மறுக்கிறார்கள் என்ற நினைப்பு தோன்றுகிறது.

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடந்த போராட்டங்கள் வெறும் போராட்டங்கள் என்ற வரையறைக்குள் அடங்கிவிடக்கூடியன அல்ல. போராட்டங்கள், போர்களாகவும் நடந்தன. போர்கள் என்றாலே இடங்கள் பறிபோவதும், அவ்விடங்களில் வாழ்ந்தவர்கள் இடம் பெயர்ந்து வேற்றிடம் தேடிப் பயணம் செய்ய நேர்வதும் தவிர்க்க முடியாதவை. ஈழப் போராட்டத்திலும் யுத்தங்களிலும் அதுதான் நடந்தன. இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது இயன்றவர்கள் வெளியேறி பூமிப் பந்தின் பல பாகங்களுக்கும் சென்றனர். யுத்தத்தின் காரணமாய் மரணத்துள் வாழ நேர்ந்தவர்கள் அகதிகளாய் அலைய நேரிட்டதையும் பதிவுகளாக்கித் தந்துள்ளார்கள். நிலைகொள்ளல் இன்றி நீரில் பட்ட தெப்பமாய் அலையும் மனிதர்களாய் இருப்பவர்களின் நிலை அறியாது தமிழ்நாட்டுத்தமிழர்கள், தனித்து வாழ்வதன் தாத்பரியங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நிலம், தமிழர்களுக்கு மட்டும் உரியது எனப் பேசுவதன் ஆபத்து தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட பேச்சா? என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ் அடையாளத்தை உருவாக்கும் மொழி, பண்பாடு, அறிவு ஆகியவற்றை உருவாக்கும் ஒரு நிலப்பரப்பின் அவசியத்தை வலியுறுத்தும் அதே நேரத்தில் அந்த நிலம் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டும் வாழும் பிரதேசமாக இருக்க வேண்டும் என வாதிடுவதன் ஆபத்துக்களை உணர வேண்டும்.

காவிரியாற்றில் நமது உரிமையைக் கோரிப் பெறுவதில் காட்டும் நமது அக்கறை அண்டை மாநில மக்களை எதிரிகளாகப் பாவித்துப் பகை வளர்க்கும் எல்லைக்குப் போய்விடக் கூடாது. முல்லைப் பெரியார் அணையைக் காரணமாக்கி இன்னொரு மாநில மக்களை மற்றவர்களாக நினைத்துப் போர்க்களத்தை உருவாக்கி விடக் கூடாது. தமிழ்த் தேசிய உணர்வு என்பது தமிழ் நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும், பண்பாட்டு அடையாள உருவாக்கங்களுக்காகவும் குரல் கொடுக்கும் உணர்வாக இருக்க வேண்டும். அவற்றை அடைய விடாமல் தடுக்கும் அதிகாரத்துவ சக்திகளை, அமைப்புகளை அடையாளங்காட்டும் முயற்சியில் வலிமையோடு செயல்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் அண்டை மாநில மக்களை வெறுக்கும் கூட்டமாகத் தமிழர்களை ஆக்கும் எத்தணிப்புகளைச் செய்துவிடக் கூடாது.

ஈழப் போரின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தங்கி விட்டார்கள். கனடாவிலும் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் அடிப்படை உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுக் குடியேறிவிட்டார்கள். அவர்களை அந்நாடுகள் திருப்பி அனுப்பிவிடும் என்ற ஆபத்தில்லாமல் உலக மனிதர்களாக ஆகி விட்டார்கள். இவர்களின் வாழ்க்கையையெல்லாம் பாதிக்கும்விதமான ஒன்றாகத் தமிழ் தேசிய உணர்வு வடிவம் கொண்டுவிடக் கூடாது என்பதைத் தமிழ்த் தேசியவாதிகள் மனங்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு தமிழர்களுக்கு மட்டும் உரியது எனப் பேசும் பேச்சுக்கள், ‘இந்தியா இந்துக்களின் நாடு’ எனப் பேசும் பாசிசக்குரலின் இன்னொரு வடிவம் தான். சகிப்பின் அடையாளமாகக் கருதப்படும் ஜனநாயக நாட்டில் மதச் சிறுபான்மையினரின் இருப்புக்காகப் பேசுவது நாகரிகத்தின் அடையாளம் என்றால், மொழிச் சிறுபான்மையினருக்காகப் பேசுவதும், அவர்களை ஏற்பதும் ஜனநாயகத்தின் – நாகரிகத்தின் அடையாளம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தமிழின் பெயரால் தமிழர்களின் மனம் குறுக்கப்படுவது கணியன் பூங்குன்றனின் கவிதையைத் தமிழர்கள் விரும்பித் தொலைத்து விடச் செய்யும் முயற்சியாகும்.

உலகக் கவிதைகள் தொகுப்பில் இடம் பெறத்தக்க கணியன் பூங்குன்றனின் கவிதையைக் காப்பாற்றுவது என்பது அதன் தாக்கத்தை – அதன் அர்த்த இருப்பைத் தமிழ்ச் சமூகம் தக்க வைப்பதில் தான் இருக்கிறது.

http://malaigal.com/?p=6506

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கணியன் பூங்குன்றனாரின் முப்பாட்டனே முருகன் தான்  :D  :lol:  :icon_idea:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

யாரப்பா இந்த எழுத்தாளர் ஏதோ தெலுங்கு,கன்னட ,மலையாள ஏஜென்ட் போல தெரியுது

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this