கருத்துக்கள உறவுகள் கறுப்பி பதியப்பட்டது July 5, 2015 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது July 5, 2015 பேலியோ டயட் பகுதி- 1 நாகரிக மனிதனின் வியாதிகள்!By நியாண்டர் செல்வன்First Published : 05 July 2015 10:00 AM ISTஎன் நண்பர் ஒருவருக்கு 25 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இந்த வியாதிக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் சர்க்கரைதான். இருவரும் ஒரே மருந்தைச் சாப்பிட்டு, ஒன்றாகத்தான் வாக்கிங் போகிறார்கள். ஆனாலும் நோய் குணமான பாட்டைக் காணோம். மற்ற மேலைநாடுகளைப் போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை ஏன் வருகின்றன, இதை எப்படிக் குணப்படுத்துவது என மருத்துவர்களுக்கும் தெரிவதில்லை. அதனால் இவற்றை எல்லாம் குணமாக்கும் முயற்சியை மருத்துவ உலகம் கைவிட்டுவிட்டது. ‘சர்க்கரையைக் குணப்படுத்த முடியாது, கண்ட்ரோலில்தான் வைக்கமுடியும்’ என சர்க்கரை மருத்துவர்கள் கூறுகிறார்கள்; சர்க்கரை நோயாளிகளும் அவ்வண்ணமே நம்புகிறார்கள். ரத்த அழுத்தத்தின் கதை இன்னமும் மோசம். ரத்த அழுத்தம் என வந்தால் மருத்துவர் கூறுவது ‘முதலில் உப்பைக் குறை’ என்பது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே எனும் பழமொழிக்கேற்ப மக்களும் உப்பில்லாமல் ஓரிரு நாள் ஓட்ஸ் கஞ்சி, கோதுமைச் சப்பாத்தி என சாப்பிட்டுப் பார்த்து கடைசியில் ‘உப்பில்லாம சாப்பிட முடியாது. நீங்க மருந்தைக் குடுங்க’ என கேட்டு வாங்கிக்கொண்டு போகிறார்கள். ஆண்டுக்கணக்கானாலும் வியாதி குணமாகும் வழியையும் காணோம். ஆரோக்கிய உணவுகள் எனக் கூறப்படும் சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு மற்றும் கைக்குத்தல் அரிசியைச் சாப்பிட்டால் இதற்கு விடிவு கிடைக்கும் எனும் நம்பிக்கையில் பலரும் சிறுதானியங்களுக்கு மாறி வருகிறார்கள். ஆனாலும் இவை வியாதியின் தீவிரத்தைச் சற்று குறைக்கின்றனவே ஒழிய வியாதிகளில் இருந்து விடுதலை கிடைப்பதில்லை. இந்த இடத்தில் நாம் நிதானித்து சில விஷயங்களை யோசிக்கவேண்டும். ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற எல்லாமே நாகரிக மனிதனுக்கு மட்டுமே வரும் வியாதிகள். நாகரிக மனிதன் எனக் கூறுகையில் நகரம், கிராமம் எல்லாவற்றையும் சேர்த்தே கூறுகிறோம். ஆண்டவன் படைப்பில் இந்த வியாதிகளில் இருந்து விடுபட்டு இருக்கும் உயிரினங்கள் எவை எனப் பார்த்தால் காட்டு மிருகங்களான சிங்கம், புலி, யானை போன்றவை. அதோடு, காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களில் யாருக்கும் இந்த வியாதிகள் இல்லை. நாகரிக மனிதர்களான நகர்ப்புற மற்றும் கிராமப்புற மனிதர்களுக்கே இந்த நோய்கள் ஏற்படுகின்றன. காட்டில் வாழும் பழங்குடி மக்களை நாம் காட்டுமிராண்டிகள் என்றும் நாகரிகமற்றவர்கள் எனவும் கருதுகிறோம். ஆனால் அவர்கள் உடல்நலனை ஆராய்ந்த விஞ்ஞானிகள், அவர்களில் யாருக்கும் புற்றுநோய், உடல் பருமன், சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சைனஸ், சொரியாசிஸ்...போன்ற நோய்கள் கிடையாது. இவை எல்லாம் என்னவென்றே தெரியாது எனச் சொல்லி நம்மை வியப்பூட்டுகிறார்கள். இந்தப் பழங்குடி மனிதர்களிடமிருந்து நாகரிக மனிதர்களான நாமும், நம் மருத்துவர்களும் கற்கவேண்டிய விஷயங்கள் என்ன? 1841ம் ஆண்டு டோக்லு தீவுக்கு வந்த அமெரிக்கத் தீவுகள் ஆய்வுக்குழு வரைந்த படம். இதில் மிக ஒல்லியாகவும், ஃபிட் ஆகவும் இருக்கும் டோக்லு தீவுவாசிகளைக் காணலாம். நியூசிலாந்து அருகே டோக்லு, புகாபுகா என இரு தீவுகள் உள்ளன. டோக்லுவில் 1,400 பேர் வசிக்கிறார்கள். புகாபுகாவில் 600 பேர் வசிக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக நாகரிக மனிதனின் சுவடே இன்றி இம்மக்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்தப் பகுதி முழுக்க மணல் நிரம்பிய தீவுகள். விவசாயம் செய்ய வழியே இல்லை. மணலில் தென்னை மரங்கள் மட்டுமே முளைக்கும். உணவுக்கு மீன், தேங்காய் மற்றும் தீவுவாசிகள் வளர்க்கும் பன்றி மற்றும் கோழியையும், சீசனில் முளைக்கும் கிழங்குகளையும் மட்டுமே நம்பியிருந்தார்கள். அதிலும் பன்றிக்கு உணவாக தேங்காய் மட்டுமே கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் மீனும், தேங்காயும், பன்றி இறைச்சியும் சில கிழங்குகளும் மட்டுமே உண்டு வந்தார்கள். உலகின் மிக போர் அடிக்கும் டயட் என டோக்லு தீவு டயட்டைச் சொல்வார்கள். கோழிகளை வளர்த்தாலும் அதன் முட்டைகளை இவர்கள் ஏதோ மூடநம்பிக்கை காரணமாக உண்பதில்லை. அதன்பின் நாகரிக உலகம் இவர்களைக் கண்டுபிடித்தது. அங்கே முதலில் போய் இறங்கிய கேப்டன் ஜேம்ஸ் குக், கந்தவர்கள் போன்ற அழகுடன் ஆண்களும், பெண்களும் இருப்பதைக் கண்டார். அதன்பின் தீவு, வெள்ளையரின் காலனிமயமானது. அப்போதும் அவர்களுடைய பாரம்பரிய உணவு அதிகம் மாறவில்லை. 20-ம் நூற்றாண்டின் மத்தியில் அவர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், ‘இத்தனை உறைகொழுப்பு உண்டும் அவர்கள் யாருக்கும் சர்க்கரை, மாரடைப்பு என்றால் என்னவென்பதே தெரியவில்லை’ என்பதை அறிந்து வியப்படைந்தார்கள். இதை ‘அடால் பாரடாக்ஸ்’ (தீவு முரண்பாடு) என அழைத்தார்கள். (இதேபோல் உறைகொழுப்பை அதிகம் உண்டும் மாரடைப்பு குறைவாக இருக்கும் பிரெஞ்சு பாரடாக்ஸ், இத்தாலியன் பாரடாக்ஸ், மசாயி பாரடாக்ஸ் எல்லாம் உண்டு.) அதன்பின் அந்தத் தீவு, நியூஸிலாந்து அரசின் வசம் வந்ததும் தீவுவாசிகள் மேல் ‘இரக்கம்’ கொண்டு கப்பல் கப்பலாக அரிசி, ரொட்டி, டின்னில் அடைத்த மாமிசம், கேக், பிஸ்கட் எல்லாம் அனுப்பினார்கள். அதன்பின் டோக்லுவாசிகள் மத்தியில் உடல்பருமன் அதிகரித்துவிட்டது. வியாதிகளும் அதிகரித்தன. இது ஏன் நடந்தது என்றும் யாருக்கும் தெரியவில்லை. முதல்முதலாக அங்கே மருத்துவமனை கட்டும் சூழலும் ஏற்பட்டது. இதன்பின் 1966-ல் புயல் அபாயம் ஏற்பட்டதால் நாலைந்து மாதம் கப்பல்கள் எதுவும் டோக்லுவுக்கு வரவில்லை. அந்த மாதங்கள் முழுக்க வேறுவழியின்றி தீவுவாசிகள் தங்கள் பாரம்பரிய உணவுக்குத் திரும்பினார்கள். வியப்பளிக்கும் விதத்தில் அந்தக் காலகட்டத்தில் தீவு மக்களின் உடல்நலன் மிக மேம்பட்டதாக தீவின் மருத்துவர்கள் பதிவு செய்கிறார்கள். அதன்பின் புயல் நின்றதும் மீண்டும் கப்பல்கள் தீவுக்கு வந்தன; மீண்டும் வியாதிகள் சூழ்ந்தன. இத்தீவில் மட்டும்தான் இப்படியா? மற்ற பழங்குடிகளின் நிலை என்ன? மருத்துவர் வெஸ்டன் ப்ரைஸ் 1930களில் மத்திய கனடாவின் குளிர்மிகுந்த ராக்கி மலைகளில், தான் சந்தித்த பூர்வக்குடிகளைப் பற்றி கீழ்கண்டவாறு எழுதுகிறார். இவர்கள் இருக்குமிடத்துக்கு போவதே சிரமம். மலைகளில் விமானத்தை இறக்கவும் முடியாது. சாலைகளும் கிடையாது. மலையில் உறைந்து கிடந்த ஆற்றில், ஒரு படகில் கஷ்டப்பட்டுச் சென்று அவர்கள் இடத்தை அடைந்தோம். இவர்களுக்கும் கனடிய அரசுக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டு. அதன்படி வருடம் ஒருமுறை இவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை கனடிய அரசு வழங்கிவருகிறது. உணவு, உடை, பொருள் என நாகரிக மனிதனின் பொருள்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், பாதி பூர்வக் குடிகள் இந்த நஷ்ட ஈட்டுத் தொகையை ஏற்க மறுத்துவிட்டார்கள். மீதிபேர் அரசு கொடுப்பதை வாங்கிக் கொள்கிறார்கள். ஆக ஒரே இனத்தில் நாகரிக மனிதனின் உணவை உண்ணும் பூர்வக்குடிகளையும், அதைப் புறக்கணித்து தம் பாரம்பரிய உணவை உண்பவர்களையும் சந்திக்க முடிந்தது. பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழ்தான் வெப்பம் எப்போதும் என்பதால் இங்கே எந்தப் பயிர்களும் முளைப்பதில்லை. கறவை மாடுகளையும் வளர்க்க முடிவதில்லை. ஆக இவர்கள் உண்னகூடிய ஒரே உணவு, இவர்கள் வேட்டையாடும் மிருகங்கள்தான். நதி உறைந்துகிடப்பதால் மீன்களைக் கூட உண்ணமுடிவதில்லை. இப்பகுதியில் கரடிகள் ஏராளம். கரடிகளை இவர்கள் வேட்டையாடிப் பிடிக்கிறார்கள். உணவில் காய்கறி இல்லாவிட்டால் வைட்டமின் சி இன்றி ஸ்கர்வி எனும் நோய் (பற்களில் துவாரம் ஏற்படுதல்) வரும். ஆனால் உணவில் தாவரங்களே இன்றி இருக்கும் இவர்களுக்கு ஏன் ஸ்கர்வி பாதிப்பு இல்லை என யோசித்து, ஸ்கர்வி எப்படி இருக்கும் என விளக்கி அங்கே இருந்த கிழவரிடம் ‘அந்த வியாதி இங்கே யாருக்காவது வந்ததுண்டா’ எனக் கேட்டேன். சற்று யோசித்து ‘அது எங்களுக்கு வராது, அது வெள்ளையர்களுக்கு மட்டும் வரும் வியாதி. இந்த ஊரில் இருக்கும் வெள்ளையர்களுக்கு அந்த நோய் தாக்கியுள்ளதைப் பார்த்துள்ளேன்’ என்றார். ‘அவர்களுக்கு உங்களால் உதவ முடியுமல்லவா? ஏன் உதவவில்லை?’ ‘அவர்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்கிறார்கள். எங்களுக்கு ஒன்றுமே தெரியாதாம், நாங்கள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாம். இந்த நிலையில் நாங்கள் கொடுக்கும் மருந்தை அவர்கள் எப்படிச் சாப்பிடுவார்கள்?’ அதன்பின் ஸ்கர்விக்கான மருந்தைக் காட்டுவதாகச் சொன்னார். கூட்டிச் சென்ற வழியில் கனடிய அரசின் உணவுப்பொருள் அங்காடி இருந்தது. ‘அது வெள்ளையனின் மளிகைக்கடை. அதை நாங்கள் சீந்துவதே கிடையாது’ எனச் சொல்லி ஒரு மானை வேட்டையாடி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். மானின் கிட்னிக்கு மேலே முழு கொழுப்பால் ஆன இரு பந்து போன்ற சதை உருண்டைகள் இருந்தன. ‘அதை வெட்டி எடுத்துச் சின்ன, சின்னத் துண்டுகளாக்கி உண்டால் ஸ்கர்வி வராது’ என்றார். பச்சை இறைச்சியில் வைட்டமின் சி இருப்பது அப்போது மருத்துவ உலகம் அறிந்திராத விஷயம். ஆனால் இதுபற்றி அறியாத அந்தப் பழங்குடிகள், அந்த இறைச்சியைக் கொண்டு ஸ்கர்விக்கு மருந்து கண்டுபிடித்திருந்தார்கள். அதன்பின் அங்கே இருந்த 87 பேரின் 2,464 பற்களை மருத்துவர் ப்ரைஸ் சோதனையிட்டார். அதில் வெறும் நான்குப் பற்களில் மட்டுமே கேவிட்டி இருந்தது. சதவிகித அளவில் இது 0.16%! அதே மலையின் கீழே இருந்த நகரான பாயின்ட் க்ரீக்கில் சோதனை செய்தபோது 25.5% மக்களுக்குப் பல் சொத்தை இருந்தது தெரியவந்தது. நகர்ப்புறத்தைச் சேர்ந்த பாயிண்ட் க்ரீக் மக்களுக்கு எல்லா வியாதிகளும் குறைவின்றி இருந்தன. அங்குப் பலருக்கும் டிபி இருந்தது, ஆத்ரைட்டிஸ் இருந்தது. ஆனால் இந்த வியாதி இருந்த ஒரு பூர்வக்குடியைக்கூட மருத்துவரால் காணமுடியவில்லை. அப்பூர்வக்குடி மக்களின் உணவாக இருந்தது, இன்றைய மருத்துவர்கள் தவிர்க்கச் சொல்லிப் பரிந்துரைக்கும் கொழுப்பு நிரம்பிய இறைச்சி மட்டுமே. இன்றைய ஆரோக்கிய உணவுகளாக கருதப்படும் கொழுப்பு அகற்றிய பால், ஓட்மீல், சீரியல், சிறுதானியம், கைக்குத்தல் அரிசி, பருப்பு, பீன்ஸ் எதையும் அவர்கள் உண்ணவில்லை. இந்த இரு உதாரணங்கள் மட்டுமல்ல. உலகம் முழுக்க உள்ள பழங்குடிகளின் உணவில், பெரும்பான்மையான கலோரிகள் உறைகொழுப்பிலிருந்தே வருகிறது. பழங்குடி உணவு என்பது பெரும்பகுதி கொழுப்பு நிரம்பிய இறைச்சி, சில காய்கறிகள், கோடைக்காலத்தில் கிடைக்கும் வெகு அரிதான சில பழங்கள் அவ்வளவே. இந்த டயட்டைக் கேட்டால் நவீன டயட்டிசியன்களும், மருத்துவர்களும் பதறுவார்கள். ஆனால் இந்த டயட்டை உண்டு வாழும் மக்கள் எவ்வித வியாதிகளும் இன்றி முழு உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மருந்துகளும், மருத்துவர்களும், டயட்டிசியன்களும் தேவைப்படுவதில்லை. தற்காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் என கூறப்படும் கார்ன்ஃபிளேக்ஸ், ஓட்மீல், கொழுப்பெடுத்த பால், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவை மனிதருக்கான உணவே அல்ல. இவற்றைப் பண்ணைகளில் இறைச்சிக்கு வளர்க்கப்படும் மிருகங்களைக் கொழுக்க வைக்கவே விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் உள்ள பண்ணைகளுக்குச் சென்று அங்கே உள்ள விவசாயிகளுடன் பேசியுள்ளேன். இறைச்சிக்கு வளர்க்கப்படும் மாடுகளையும், பன்றிகளையும் கொழுக்க வைக்க விவசாயிகள் கீழ்க்காணும் உத்திகளைக் கையாள்வார்கள். பன்றிகளுக்குக் கொழுப்பு அகற்றிய பாலைக் கொடுப்பார்கள். 1930-ம் ஆண்டில் இருந்தே ஆரகன் மாநில விவசாயக் கல்லூரி, பன்றிகளின் உடல் கொழுப்பை அதிகரிக்க, கொழுப்பு அகற்றிய பாலைக் கொடுக்கப் பரிந்துரை செய்கிறது. உணவில் அதிகக் கொழுப்பு இருந்தால் அது நம் பசியுணர்வைக் கட்டுப்படுத்தி விடும். அதனால் கொழுப்பு இல்லாத பாலைக் கொடுத்தால்தான் பன்றிகளுக்குப் பசி அதிகரிக்கும். மக்காச்சோளம் மாதிரி எடையைக் கூட்டும் தானியம் எதுவும் இல்லை. சுமார் 3.5 கிலோ மக்காச்சோளம் உண்டால் பன்றிக்கு 1 கிலோ எடை ஏறும். மக்காச்சோளத்தின் விலையும் குறைவு. எடையையும் குப் என ஏற்றும். இந்த மக்காச்சோளம் என்பது வேறு எதுவுமல்ல, கார்ன்ஃபிளேக்ஸ் என்ற பெயரில் டப்பாவில் அடைக்கப்பட்டு, நமக்குக் காலை உணவாக ஆரோக்கிய உணவு என்ற பெயரில் விற்கப்படும் உணவே. பன்றிகளை வெட்டும் முன் அவற்றுக்கு மொலாசஸ் (கரும்பு ஜூஸ்), சாக்லெட் (சாக்லெட் கம்பெனி கழிவு) எல்லாம் நிறைய கொடுப்பார்கள். வெட்டப்படும் முன்பு, அந்த நாளில் மட்டும் ஏராளமான இனிப்புகள் கொடுக்கப்படும். இதனால் பன்றிகளின் ஈரலின் அளவு சுமார் 34% அதிகமாகிறது. மேலும் இனிப்புகளைக் கொடுக்கக் கொடுக்க பன்றிகளுக்குப் பசி எடுத்து சோளத்தையும் அதிகமாகச் சாப்பிட்டு எடையை இன்னும் கூட்டிக்கொள்ளும். இறுதியாக, பன்றிகளை வெயிலே படாமல் ஒரே இடத்தில் அடைத்து வைத்து, உடல் உழைப்பும் இல்லாமல் எடையை ஏற்றுவார்கள். வைட்டமின் டி தட்டுப்பாடும் எடையை அதிகரிக்கும். ஆபிஸில் மணிக்கணக்கில் ஒரே நாற்காலியில் வெயில் படாமல் அமர்ந்திருக்கும் நமக்கும் இதான் நிகழ்கிறது. சிறிது சிந்திப்போம். நமக்கு உடல் எடை ஏறுவதும் இதே உணவுகளை உண்பதால்தானே? இறைச்சிக்காக கொழுக்க வைக்கப்படும் பன்றிகளுக்கும், மாடுகளுக்கும் என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அதே உணவுதானே நமக்கும் ஆரோக்கிய உணவு எனும் பெயரில் வழங்கப்படுகிறது? பிறகு எப்படி எடை குறையும்? ஆக நவீன டயட் முறைகளும், நவீன ஆரோக்கிய உணவுகளும், நாட்டுப்புற ஆரோக்கிய உணவுகளுமான கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி போன்ற எவையுமே நம்மை ஆரோக்கியமாக இருக்க வைப்பதில்லை. வியாதிகள் இன்றி வாழும் ஒரே மனிதர்கள், பழங்குடி மக்களே. இதற்குக் காரணம் அவர்கள் செய்யும் உடலுழைப்பு மட்டுமே எனக்கூற முடியாது. நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களில் நாள் முழுக்க கைவண்டி இழுப்பவர்களையும், வயல்வேலை செய்து வரும் ஏழை, எளிய மக்களையும்கூட நாகரிக மனிதனின் வியாதிகளான சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சைனஸ், ரத்தசோகை, மாலைக்கண் வியாதி போன்றவை தாக்குகின்றன. ஆக, இவ்வியாதிகள் எல்லாம் குணப்படுத்த முடியாத வியாதிகளோ அல்லது குணப்படுத்த முடியாமல் மருந்தால் மட்டுமே கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய வியாதிகளோ அல்ல. பலரும் ‘நாற்பதைத் தாண்டினால் எல்லாருக்கும் சுகர் வரும்’ ‘ஆறுமாதக் குழந்தைக்குக் கூட டைப் 2 டயபடிஸ் இருக்கிறது’ எனச் சொல்லி ஆறுதல் அடைவார்கள். ஆனால் டைப் 2 டயபடிஸ் வந்திருக்கும் ஆறுமாதக் குழந்தை என்ன சாப்பிடுகிறது எனப் பார்த்தால் அது புட்டிப்பாலாக இருக்கும். புட்டிப்பாலில் என்ன இருக்கிறது எனப் பார்த்தால் அதிலும் சர்க்கரையும், அரிசியும், கோதுமையும், சோயாபீன் ஆயிலும், செயற்கையான வைட்டமின்களும் இருக்கும். தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் பிள்ளைகளுக்கு டைப் 2 டயபடிஸ் வராது. அரிசி, கோதுமை, இட்லி, கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகளில் என்ன கெடுதல் உள்ளன? இவற்றை உண்டால் நமக்கு ஏன் டயபடிஸ் முதல் இன்னபிற வியாதிகள் வருகின்றன? இவற்றை உண்ணாமல் தவிர்க்கும் பழங்குடி மக்களை ஏன் இவ்வியாதிகள் அண்டுவதில்லை? துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டு உணவுவகைகள் பலவும் ஏராளமான சர்க்கரைச் சத்து கொண்டவையாகவே உள்ளன. நம் காலை உணவான இட்லியை எடுத்துக்கொள்வோம். ஒரு இட்லியில் சுமார் 15 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு இட்லி சாப்பிடுவது, சுமார் நான்கு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதற்குச் சமம். காலையில், சாம்பாரோடு சேர்த்து ஐந்து இட்லி சாப்பிட்டால் 20 ஸ்பூன் சர்க்கரை அதாவது 75 கிராம் சர்க்கரை உண்கிறீர்கள் எனப் பொருள். ‘இட்லி சாப்பிடுவதும் சர்க்கரை சாப்பிடுவதும் ஒன்றா? இட்லி ஆரோக்கிய உணவு அல்லவா?’ என என்மீது நீங்கள் கோபப்படலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஐந்து இட்லி சாப்பிடுவது நேரடியாக 75 கிராம் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை விட மோசமானது அரிசி, கோதுமை ஆகிய உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. காரணம் இவற்றில் உள்ள க்ளுகோஸ். காலை: ஐந்து இட்லி மதியம்: சாதம், சாம்பார், ரசம், மாலை: வடை, காப்பி இரவு: சப்பாத்தி, குருமா இப்படி சராசரியான தமிழ்நாட்டு உணவை உண்பது - தினம் சுமார் அரைக் கிலோ முதல் முக்கால் கிலோ வெள்ளைச் சர்க்கரையை நேரடியாக உண்பதற்குச் சமம். தினம் அரைக் கிலோ வெள்ளைச் சர்க்கரையை 40, 50 வருடங்களாகத் தொடர்ந்து உண்டுவந்தால் டயபடிஸ் வருவதிலும், உடல் எடை கூடுவதிலும் வியப்பு என்ன? இவை எல்லாம் வராமல் இருந்தால்தான் ஆச்சரியம்! வெள்ளை அரிசியைத் தவிர்த்து கம்பு, கேழ்வரகில் இட்லி செய்வதாலும், இட்லியை ஐந்திலிருந்து நாலாகக் குறைப்பதாலும் சர்க்கரை மற்றும் பிற நோய்கள் வராமல் இருக்காது. பலரும் இவ்வகை மாற்றங்களை மட்டுமே செய்துகொண்டு ஆரோக்கிய உணவுகளை உண்பதாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்த உணவுகள், இந்த நோய்களைக் குணப்படுத்துவதும் இல்லை. வியாதிகளில் இருந்து முழுவிடுதலை பெறச் சிறந்த வழி, ஆதிமனிதன் உண்ட உணவுகளை உண்பதே. இறைச்சியை உண்டால் கொலஸ்டிரால் அதிகரிக்காதா? கொழுப்பை அதிகமாக உண்டால் மாரடைப்பு வராதா? ஆதிமனித உணவால் சர்க்கரையும், ரத்த அழுத்தமும், ஆஸ்துமாவும், சைனஸும், சொரியாசிஸும், உடல்பருமனும், மாலைக்கண் வியாதியும் இன்னபிற வியாதிகளும் குணமாகுமா? இவற்றுக்கான விடைகளை அடுத்தப் பகுதியில் காண்போம். http://www.dinamani.com/junction/paleo-diet/2015/07/05/பகுதி--1-நாகரிக-மனிதனின்-வியாத/article2902224.ece Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கறுப்பி Posted August 22, 2015 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted August 22, 2015 பேலியோ டயட் பகுதி 2 - இடைவேளையில் நுழைந்த வில்லன்!By நியாண்டர் செல்வன்First Published : 12 July 2015 10:00 AM ISTமனித இனத்தின் வரலாறு, பரிணாம அடிப்படையில் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்து அரிசி, பருப்பு, பீன்ஸ், கோதுமையைச் சாப்பிட ஆரம்பித்தது 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே. இது குறித்து ஆராயும் பரிணாமவியல் விஞ்ஞானிகள் கூறுவது - மனிதனின் 99.99% ஜீன்கள் நாம் விவசாயம் செய்வதற்கு முன்பே உருவாகிவிட்டன என்பதே. விவசாயம் பிறந்தபின் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் நம் ஜீன்களில் வெறும் 0.01% மாற்றமே நிகழ்ந்துள்ளது. இன்று நாம் உண்ணும் பரோட்டா, நூடுல்ஸ், கார்ன்ஃபிளேக்ஸ், கோக், பெப்ஸி, பீட்சா, பர்கர் என்றால் என்னவென்றே நம் ஜீன்களுக்குத் தெரியாது. நம் ஜீன்களுக்குப் பழக்கமாகி, பரிச்சமயமாகியுள்ள உணவுகள் - இறைச்சியும் காய்கறி பழங்களுமே. பரிணாமரீதியில் எத்தனை பின்னோக்கிப் போனாலும், கிடைத்துள்ள அத்தனை தடயங்களும் மனிதனின் முதன்மை உணவு இறைச்சியே என்று நிரூபிக்கின்றன. 32 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த லூஸி எனும் புனைப்பெயருள்ள எலும்புக்கூட்டின் அருகே கிடைத்த மிருகங்களின் எலும்புகளை ஆராய்ந்ததில் அவற்றை லூஸியும், அவரது கூட்டத்தாரும் கற்களால் துருவி எடுத்து இறைச்சியை உண்டதற்கான சுவடுகள் உள்ளன. நம்மிடம் கிடைத்துள்ள கற்காலக் கருவிகள் 26 லட்சம் ஆண்டு பழமையானவை. அப்போது ஹோமோ எனும் வகை மனித இனமே உலகில் தோன்றவில்லை. ஹோமோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஹோமோசேபியன்ஸ் எனும் நாகரிக மனிதர்களான நாம். நமக்கு மூதாதை ஹோமோ எரெக்டஸ். இத்தனை தொன்மையான ஹோமோ குடும்ப வகை மனித இனம் தோன்றுவதற்கு முன்பிருந்த ஆஸ்திரிலொபிதிகஸ் வகை மனித இனம் (லூசியின் இனம்) இறைச்சி உண்டதற்கான தடயங்கள் நமக்கு கிடைத்துள்ளன. லூஸியின் உணவாக பரிணாமவியல் விஞ்ஞானிகள் கூறும் உணவு, செட் தோசையும், கெட்டிச் சட்டினியும் அல்ல; பழங்கள், விதைகள், பூச்சிகள் மற்றும் சிறுமிருகங்களையே. அந்தக் காலகட்ட மனிதன் அப்போது மான், யானை போன்ற பெரிய மிருகங்களை வேட்டையாட ஆரம்பிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பே இறைச்சி அவன் உணவில் இருந்திருக்கிறது. (லூஸி. மனித இனத்தின் ஆதி கொள்ளுப்பாட்டி)அதன்பின் பல லட்சம் ஆண்டுகளாகப் பரிணாமரீதியாக வளர்ந்து மாற்றம் அடைந்து வந்த மனிதன் செய்த ஒரு விஷயம், அவனை மற்ற மிருகங்களில் இருந்து பரிணாமரீதியாக வித்தியாசப்படுத்தி, தன்னை உலகின் தலைவன் ஆக்கியது. அது என்ன மாற்றம்? சமைத்த மாமிசம் உணவை அவன் உண்ணத் தொடங்கியதே. உணவுச்சங்கிலியில் சிங்கம், புலி போன்ற மிருகங்களைத் தாண்டி நாம் புலிப்பாய்ச்சலில் முன்னேறக் காரணம் - சமைத்த மாமிச உணவை உண்ணத் தொடங்கியதே என பரிணாமவியல் ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள். பச்சை இறைச்சி ஜீரணமாக ரொம்ப நேரம் பிடிக்கும். ஆனால் சுட்ட மாமிசம் எளிதில் ஜீரணமாவதுடன், அதிக அளவில் மாமிசத்தை உண்ணவும் முடியும். இதனால் நம் மூளைக்கு திடீரென அதிக கலோரிகளும், அதிக அளவில் புரதமும் வைட்டமின், மினரல் முதலான ஊட்டச்சத்துகளும் கிடைத்தன. இதை ஆராயும் பரிணாமவியலாளர்கள் மனித மூளையின் ஆற்றல் அதன்பின்னர் பெருமளவில் அதிகரித்ததாக கூறுகிறார்கள். மூளையின் ஆற்றல் அதிகரிக்க, அதிகரிக்கச் சிந்திக்கும் திறன் வளர்ந்து உலகின் மற்ற எந்த மிருகங்களையும் விடவும் பரிணாமரீதியில் மனிதன் முன்னேறிவிட்டான். ஆக, சமைத்த மாமிச உணவை உண்ணும்முன் மனிதனும் மற்ற மிருகங்களைப்போன்ற இன்னொரு மிருகமே; சமைத்த மாமிச உணவே நம்மை மற்ற மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்தி மனிதனாக மாற்றியது. ஏதோ ஒரே ஒரு உணவை மட்டுமே உண்டு மனிதனால் உயிர்வாழமுடியும் எனில் அது, மாமிச உணவு மட்டுமே. கீரை, அரிசி, பருப்பு, கோதுமை, தேங்காய், வாழைப்பழம் என உலகின் எந்தச் சத்துமிகுந்த உணவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை மட்டுமே ஒரு மனிதனுக்கு கொடுத்து வாருங்கள். உதாரணமாக தினமும் கீரை மட்டுமே சாப்பிடலாம் என்றால் சில மாதங்களில் ஊட்டசத்துக் குறைபாடு வந்து மனிதன் இறந்துவிடுவான். அவ்வளவு ஏன்? மனிதனுக்கு மிகப் பரிச்சயமான ஓர் உணவு, தாய்ப்பால். ஆனால், வளர்ந்த மனிதனுக்குத் தினமும் தாய்ப்பாலை மட்டுமே உணவாகக் கொடுத்து வந்தாலும் அவனும் சில மாதங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துவிடுவான். ஆனால், தினமும் இறைச்சியுணவை மட்டுமே ஒரு மனிதனுக்குக்குக் கொடுத்து வந்தால் அவன் இறந்துவிட மாட்டான். மாறாக அவன் உடல் ஆரோக்கியமடையும்; உடல்நலக் கோளாறுகள் நீங்கும். ஆம், தாய்ப்பாலில் கூட இல்லாத ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உணவு, புலால் உணவே. ஒரு மனிதனுக்குத் தேவையான அனைத்து வகை வைட்டமின்களையும், மினரல்களையும், புரதங்களையும், கொழுப்புகளையும் பிற மூலச்சத்துகளையும் கொண்ட ஒரே உணவு அது. ஆக, குரங்காக இருந்தவனை மனிதனாக்கி நம் ஜீன்களை வடிவமைத்து அதனுள் இருக்கும் டி.என்.ஏவைத் தீர்மானித்து மனித இனத்தைக் கட்டமைத்த உணவு - இறைச்சியுணவு. அதைக் கெடுதலானது எனக் கூறும் எந்த ஒரு டயட் முறையும் எப்படிச் சரியானதாக இருக்கமுடியும்? எனவே, பேலியோ டயட் என்பது ஏதோ இன்றைய டயட்டிசியனோ, விஞ்ஞானியோ கண்டுபிடித்த புதிய உணவுமுறை அல்ல. நம்மை மனிதனாக்கி, மனித சமுதாயத்தைக் கட்டமைத்த ஆதிகால உணவுமுறை. நவீன உலகின் தொன்மையான டயட் இதுவே. வாருங்கள், நாம் நவீன உலகின் முதல் பேலியோ டயட்டரைச் சந்திக்க காலச்சக்கரத்தில் ஏறி 1862-ம் ஆண்டுக்குப் பயணிக்கலாம். அப்போது டயட்டிங், ஜிம், ட்ரெட்மில் போன்ற எந்த வார்த்தைகளும் புழக்கத்தில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் வில்லியம் பாண்டிங் (William Banting) எனும் சமையற்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் பிரபுக்களுக்கும், மன்னர்களுக்கும் சமைப்பவர். அவர்களது உணவை உண்டு, உண்டு இவரும் குண்டானார். தன் 30 வயதில் குனிந்து ஷூ லேசைக் கூட கட்ட முடியாத நிலை வந்ததும் வெறுத்துப்போய் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டார். அவரும் ‘உடல்பயிற்சி செய்’ என்ற வழக்கமான ஆலோசனையைக் கொடுத்தார். வீட்டுக்கு அருகே இருக்கும் ஏரியில் படகு வலித்துக் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டார் பாண்டிங். தினமும் இரண்டுமணிநேரம் படகு வலிப்பார். அதன்பின் கடும்பசி எடுக்கும். அதைப்போக்க மேலும் அதிகமாக உண்பார். உடல் மேலும் குண்டாகும். வெறுத்து போன பாண்டிங்கிடம் ‘குறைவான கலோரிகளைச் சாப்பிடு’ எனும் அறிவுரை கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் வெறும் காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு வந்தார் பாண்டிங். கடும் உடற்பயிற்சியும், உணவில்லா நிலையும் அவரை மயக்க நிலைக்குத் தள்ளின. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வருடம் இப்படிப் பட்டினி கிடந்து, உடற்பயிற்சி செய்து, நீச்சல், ஸ்பா, குதிரை ஏற்றம் என பலவற்றை முயற்சித்தும் எடையில் வெறும் 3 கிலோ மட்டுமே இறங்கியது. இதனிடையே பாண்டிங்குக்குக் காதுகேட்கும் திறனும் குறைந்துகொண்டே வந்தது. இந்தச் சூழலில் பாண்டிங் 1862-ல், வில்லியம் ஹார்வி எனும் மருத்துவரைச் சந்தித்தார். அப்போது க்ளுகோஸ் சுகர் என ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுதான் எடை அதிகரிப்புக்குக் காரணம் என்கிற ஒரு தியரி உலா வந்தது. ஹார்வியும் பாண்டிங்கிடம் ‘உன் எடை அதிகரிப்பு மற்றும் காது கேட்காதது போன்ற பிரச்னைகளுக்குக் காரணம் சர்க்கரையே’ என்றார். அதன்பின் ஹார்வி, பாண்டிங்குக்கு ஓர் எளிய ஆலோசனை சொன்னார். ‘சர்க்கரைச் சத்து எதில் இருக்கிறது? அரிசி, பருப்பு, கோதுமை, ரொட்டி, பழங்கள், பீன்ஸ், பால் அனைத்திலும் இருக்கிறது. ஆக இதை எல்லாம் சாப்பிடக்கூடாது.’ ‘பின் எதைச் சாப்பிடவேண்டும்?’ ‘இறைச்சி, முட்டை மற்றும் சீஸ் போன்ற சர்க்கரை சுத்தமாக இல்லாத உணவாகச் சாப்பிடு!’ இப்படி ஒரு ஆலோசனையை முதல்முறையாகக் கேட்கிறார் பாண்டிங். ‘இதில் எப்படி எடை இறங்கும்? முட்டையையும், இறைச்சியையும் தின்றால் எடை ஏறத்தானே செய்யும்?’ (சாஸ்வதம் பெற்ற கேள்வி இது!) ‘குண்டாக இருக்கும் சிங்கத்தையோ, புலியையோ, ஓநாயையையோ யாரும் பார்த்ததுண்டா? இவை எல்லாம் இறைச்சியை மட்டுமே சாப்பிடுகின்றன. குண்டாக இருப்பவை எல்லாம் முழுக்க முழுக்க தாவர உணவு மட்டும் உண்ணும் யானை, காண்டாமிருகம், நீர்யானை போன்ற மிருகங்களே’ என்றார் ஹார்வி. வீடு திரும்பிய பாண்டிங், ஹார்வி சொன்னபடி உணவுமுறையை முற்றிலும் மாற்றினார். தினம் மூன்று வேளை வெறும் மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றை மட்டும் உண்டார். மாலையில் ஒரு டீயுடன், கொஞ்சம் பழம் சாப்பிடுவார். ரொட்டி, பால், இனிப்பு, உருளைக்கிழங்கு அனைத்தையும் தவிர்த்தார். கலோரிகளுக்கு எந்தக் கட்டுபாடும் இல்லை. இஷ்டத்துக்கு சாப்பிட்டார். 2 வருடங்களில் அதிசயத்தக்க முறையில் முப்பது கிலோவை இழந்து முழுமையான உடல் ஆரோக்கியம் பெற்றார். காதுகளின் கேட்கும் திறனும் அதிகரித்து நாளடைவில் முழுக்கச் சரியாகிவிட்டது. (வில்லியம் பாண்டிங் மற்றும் அவரது நூல்)இதில் மிகவும் உற்சாகமானார் பாண்டிங். தன்னைப் போல அனைவரும் இந்த உணவுமுறையால் பயனடையவேண்டும் என்று தன் டயட் அனுபவங்களை 1863-ம் ஆண்டு ஒரு நூலாக எழுதினார். வித்தியாசமான உணவுமுறைகள், புதிய கருத்தாக்கம் என்பதால் அந்த நூல் மிகப் பிரபலம் அடைந்தது. இப்போது, உணவுக் கட்டுப்பாடுக்கு ‘டயட்டிங்’ என சொல்வது போல் அந்தக் காலத்தில் ‘பாண்டிங்’ என்று சொல்லப்பட்டது. அப்போது ‘நான் டயட்டில் இருக்கிறேன்’ என யாரும் கூறமாட்டார்கள். ‘நான் பாண்டிங்கில் இருக்கிறேன்’ எனக் கூறுவார்கள். அன்று மக்காச்சோளம், ஓட்ஸ், பால், முட்டை எல்லாம் இருந்தன. ஆனால் கார்ன்ஃபிளேக்ஸ் எனப்படும் புராசஸ் செய்யப்பட்ட சோளம், ஓட்மீல் என அழைக்கப்படும் சர்க்கரை/செயற்கை வைட்டமின் சேர்த்த ஓட்ஸ், கொழுப்பெடுத்த பால், முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே உண்பது போன்ற வழக்கங்கள் அன்று இல்லை. இன்று இவை இல்லாமல் அமெரிக்காவில் யாரும் டயட் செய்வதே இல்லை. ஆக, நவீன உலகின் முதல் டயட், பேலியோ டயட் தான். அதாவது பாண்டிங் டயட் என்று சொல்லப்பட்ட டயட். பாண்டிங் டயட் பிரபலமானதால் அதுகுறித்த சர்ச்சைகளும் வர ஆரம்பித்தன. பாண்டிங் எளிய சமையல்காரர் என்பதைக் கண்டோம். அதனால் அவரது நூலைப் படித்த மருத்துவர்கள் அனைவரும் ‘இந்த டயட்டின் அறிவியல் அடிப்படை என்ன? இது எப்படி வேலை செய்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பாண்டிங்கிடம் பதில் இல்லை. அதனால் அன்றைய மருத்துவர்களால் எள்ளிநகையாடப்பட்டார் பாண்டிங். மேலும், ‘அறிவியல் அடிப்படையற்ற நூல்’ என அவருடைய நூலைக் குறைகூறி சுத்தமாக ஒதுக்கி வைத்தார்கள். ஆனால் மக்களின் எதிர்வினை வேறுவிதமாக இருந்தது. பாண்டிங் டயட்டை முழுமையாக நம்பினார்கள். இதனால் பயன் உள்ளது என்று அனைவரும் இந்த டயட் முறையை ஏற்றுக்கொண்டார்கள். பாண்டிங்கின் நூலை வாங்கிப் படித்து அதன் டயட் முறையைப் பின்பற்றியவர்களின் எடை நன்கு இறங்கியது; பல்வேறு வகையான உபாதைகளும் குணமாகின. ஆனாலும் மருத்துவர்கள் அந்த டயட்முறையை ஏற்றுக்கொள்ளவேயில்லை. அமெரிக்காவில் பம்பிள்தேனி என்கிற ஒரு வகை தேனி உண்டு. அதன் உடலமைப்பை ஆராயும் எந்த ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரும் ‘இந்த உடலமைப்பைக் கொண்டுள்ள ஒரு பூச்சியால் பறக்க இயலாது’ எனத் துண்டைத்தாண்டி சத்தியம் செய்வார்கள். காரணம், அதன் உடலமைப்பு ஏரோநாட்டிக்கல் துறையின் சித்தாந்தங்களுக்கு எதிரானது. ஆனால், பம்பிள்தேனி காலகாலமாகப் பறந்துகொண்டுதான் இருக்கிறது. அதுபோன்ற ஒரு பம்பிள்தேனி தான் பாண்டிங் டயட்டும். அறிவியல் ஒரு விஷயம் சாத்தியமில்லை என்கிறது. ஆனால் நடைமுறை அதற்கு எதிரானதாக இருக்கிறது. இந்தச் சூழல் அறிவியலுக்குப் புதிதல்ல. நடைமுறைக்குத் தக்கபடி தன்னை மாற்றிக்கொள்வதே அறிவியலின் சாதனை. அவ்வகையில் பாண்டிங் டயட்டை ஆராய மேலும் சில மருத்துவர்கள் முன்வந்தார்கள். 1890களில் ஹெலென் டென்ஸ்மோர் எனும் அமெரிக்க மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடம் பாண்டிங் டயட்டைப் பரிந்துரைக்க ஆரம்பித்தார். டயட் மிக எளிமையானது. ‘தினம் அரைகிலோ இறைச்சியும், சில காய்கறிகளும் சாப்பிடு. கிழங்குகள், சர்க்கரை, ரொட்டியைத் தவிர்.’ அவர் சொன்னதை அப்படியே பின்பற்றியவர்களுக்கு எடை மள மளவென இறங்கியது. டென்ஸ்மோரின் பரிந்துரை பேலியோ டயட்டுக்குப் பெரிய திருப்பமாக அமைந்தது. இந்தத் தகவல் வெளியே பரவியபிறகு அதன் வீச்சு மேலும் அதிகமானது. அதன்பின் அன்றைய ஐரோப்பா, அமெரிக்காவின் அனைத்து மருத்துவர்களும் பாண்டிங் டயட்டை ஏற்றுக்கொண்டார்கள். சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந்துரைத்தது மட்டுமில்லாமல், சர்க்கரை வியாதி தொடர்புடைய நூல்களும் பாண்டிங் டயட்டையே வலியுறுத்தின. 1863-ல் இருந்து 1950 வரை, அதாவது 87 வருடங்கள், பாண்டிங் டயட் மட்டுமே உலகின் மிகப் பிரபலமான, மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரபூர்வ டயட்டாக இருந்தது. இதை எல்லாம் இப்போது படிக்கையில்‘ பிறகு எப்படி இந்தக் குறைகொழுப்பு டயட்டுகள் பிரபலமாகின? ஏன் இறைச்சியும், நெய்யும் குண்டாக்கும் உணவுகள் என மக்களும், மருத்துவர்களும் நம்ப ஆரம்பித்தார்கள்?’ என்கிற சந்தேகம் தோன்றும்! திரைப்படத்தில், ஒரு ஹீரோ இடைவேளை வரை கதாநாயகியைக் காதலித்து குடும்பப்பாட்டு பாடி, மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில், இடைவேளை சமயத்தில் திடீரென ஒரு வில்லன் தோன்றி கதையில் திருப்பத்தை ஏற்படுத்தினால் எப்படி இருக்கும்! 1956-ல் அப்படி ஒரு வில்லன் தோன்றினார். அவர் பெயர் நம்மில் யாருக்கும் பரிச்சயமாக இருக்காது. எனினும், அவர்தான் இன்றைய குறைந்தகொழுப்பு டயட்டுகளின் தந்தை - ஆன்சல் கீஸ் (Ancel Keys). உயிரியல் விஞ்ஞானியான கீஸ், இரண்டாம் உலகப் போரின்போது உணவு ரேஷன்களை ஆராயத் தொடங்கினார். பலநாடுகளுக்கும் சென்று உணவுக்கும், உடல்நலனுக்கும் இருக்கும் தொடர்பை ஆராய்ந்தார். 22 நாடுகளுக்குச் சென்று ஆராய்ந்த கீஸ், அதில் வெறும் ஏழே ஏழு நாடுகளின் புள்ளிவிவரத்தை எடுத்து ‘ஏழுநாடுகளின் ஆராய்ச்சி’ எனப்படும் ஆய்வை 1956-ல் பதிப்பித்தார். அந்த ஆய்வில் இந்த ஏழுநாடுகளிலும் உணவில் கொழுப்பின் சதவிகிதம் அதிகரிக்க, அதிகரிக்க இதயநோய்களால் மரணவிகிதங்கள் அதிகரிப்பதாக உலகுக்கு அறிவித்தார் கீஸ். ஆனால் கீஸ் 22 நாடுகளிலும் எடுத்த குறிப்புகளைப் பலவருடம் கழித்து ஆராய்ந்தார்கள் விஞ்ஞானிகள். அதன்படி, கீஸ் சொன்னதுபோல இதயநோய்க்கும், கொழுப்புக்கும் எத்தொடர்பும் இல்லை என்பதைக் கண்டறிந்தார்கள். முழுமையான 22 நாடுகளின் புள்ளிவிவரங்களையும் ஆராய்ச்சி செய்யாமல் வெறும் ஏழே நாடுகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தார், பிற 15 நாடுகளை ஏன் ஆய்வில் சேர்க்கவில்லை என்பதற்கான எந்த விளக்கத்தையும் கீஸ் சாகும்வரை தெரிவிக்கவில்லை. கீஸின் ஆய்வு தவறானது என்று பின்னாளைய விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டாலும் அன்று கீஸிடம் யாரும் ஒரு கேள்வி எழுப்பவில்லை. அவர் அமெரிக்க அரசின் மதிப்பு மிகுந்த விஞ்ஞானி. அவரது ஆய்வு பதிப்பிக்கபட்ட பிறகு, உலகப்புகழ் பெற்ற பத்திரிகைகளான டைம், ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்றவை ‘முட்டையும், நெய்யும், இறைச்சியும் மாரடைப்பை வரவழைப்பவை’ எனத் தலையங்கம் எழுதின. இதைப் படித்த மக்கள் பேரதிர்ச்சி அடைந்தார்கள். இந்தச் சூழலில் 1950-களில் கெல்லாக்ஸ் சகோதரர்கள் மக்காச்சோளத்தில் இருந்து கார்ன்ஃபிளேக்ஸ் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருந்தார்கள். காலை உணவாக சீரியலையும், பாலையும் குடிக்கலாம் என சீரியல் கம்பனிகள் விளம்பரம் செய்துவந்தபோதும் அன்றைய அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் அதைச் சட்டை செய்யவில்லை. அன்றைய காலை உணவு என்பது முட்டையும், பன்றி இறைச்சியுமே. ஆனால், கீஸின் ஆய்வு வெளிவந்ததும் மக்கள் முட்டையையும், பன்றி இறைச்சியையும் கைவிட்டுவிட்டு சீரியலுக்கு மாறினார்கள். இதன்பின் சில விந்தைகள் நிகழ்ந்தன. கார்ன்ஃபிளேக்ஸும், கொழுப்பெடுத்த பாலும் ஆரோக்கிய உணவுகளாக டிவியில் விளம்பரம் செய்யப்பட்டன. முட்டை, இறைச்சி விற்கும் சிறுபண்ணையாளர்களுக்கு அம்மாதிரி விளம்பரம் செய்யத்தெரியாததால் போட்டியில் பின்தங்கிப் போனார்கள். இச்சூழலில் கொழுப்பு நல்லதா, கெட்டதா என பெரிய சர்ச்சை விஞ்ஞானிகளிடையே தொடங்கியது. 1970-களில் இதைத் தீர்க்க அமெரிக்க அரசின் ஒரு கமிட்டி செனட்டர் ஜார்ஜ் மெக்கவர்ன் தலைமையில் அமைக்கப்பட்டது. மெக்கவர்ன், மக்காச்சோளம் அதிகமாக விளையும் விவசாய மாநிலத்தைச் சேர்ந்தவர். ப்ரிட்கின் டயட் எனப்படும் குறைகொழுப்பு, சைவ டயட்டைப் பின்பற்றியவர். அவருக்கு உணவியல், அறிவியல் குறித்து எந்தத் தெளிவும் கிடையாது. இரு தரப்பு விஞ்ஞானிகளிடமும் கருத்து கேட்டார். அதன்பின் தன் இஷ்டத்துக்கு ஒரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார். அதில் ‘இறைச்சி, முட்டை, கொழுப்பு ஆகியவை உடலுக்குக் கெடுதல். கொழுப்பு குறைவான உணவே உடலுக்கு நல்லது’ எனப் பரிந்துரைத்தார். அவ்வளவுதான். அதையே அமெரிக்க அரசு அதிகாரபூர்வமான அறிக்கையாக ஏற்றுக்கொண்டது. அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன், அமெரிக்க டயாபடிஸ் அசோசியேஷன் முதலான அமைப்புகள் அதையே அதிகாரபூர்வமான டயட்டாக அறிவித்தன. இந்த அமைப்புகளுக்கு சீரியல், ஓட்மீல், பிஸ்கட், குக்கி, மருந்து கம்பனிகளின் ஸ்பான்சர் பணம் வெள்ளமெனப் பாய்ந்தது. இந்தப் புதிய உணவுமுறையை முன்வைத்து மருத்துவ நூல்களும், மருத்துவக் கல்லூரிப் பாடத்திட்டங்களும், டயட் முறைகளும் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எது அறிவியலோ அதுதான் உலகின் அறிவியல். அமெரிக்க மக்கள் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தால் ஏனென்று யோசிக்காமல் நாமும் குதிப்போம்தானே! அமெரிக்க மக்கள் சாப்பிடுகிறார்கள் எனும் ஒரே காரணத்தால் தானே நாமும் பீட்சாவையும், பர்கரையும் உண்ண ஆரம்பித்தோம்? அவர்களைப் பார்த்து புகைப்பிடிக்கக் கற்றுக்கொண்டோம். பிறகு, டயட்டில் மட்டும் புதிய பாதையிலா பயணிப்போம்? அமெரிக்காவின் டயட்டே ஆசிய நாடுகளின் டயட்டாகவும் மாறிப்போனது. முட்டையும், இறைச்சியும் உணவுமேஜைகளில் இருந்து ஒழிக்கப்பட்டன. அவற்றின் இடத்தை கார்ன்ஃபிளேக்ஸும், கொழுப்பெடுத்த பாலும் பிடித்துக்கொண்டன. (தொடரும்) http://www.dinamani.com/junction/paleo-diet/2015/07/12/பகுதி-2---இடைவேளையில்-நுழைந்த-/article2914739.ece Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கறுப்பி Posted September 16, 2015 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted September 16, 2015 பகுதி 3 - வரலாறு உணர்த்தும் பாடம்By நியாண்டர் செல்வன்First Published : 19 July 2015 10:00 AM IST1913-ல், ஆல்பர்ட் ஸ்வைட்சர் (Albert Schweitzer) எனும் கிறிஸ்துவ மதப் பிரசாரகர் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். மருத்துவரான அவர் சிறந்த தத்துவஞானியும், சேவகரும் ஆவார். மேற்கு ஆப்பிரிக்காவின் குக்கிராமம் ஒன்றில் மருத்துவமனை ஒன்றைக் கட்டினார். ஒரு வருடத்தில் இரண்டாயிரம் பேரின் வியாதிகளைக் குணமாக்கினார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு, குடல்வால் பிரச்னையுடன் ஒரு ஆப்பிரிக்கப் பழங்குடி ஸ்வைட்சரிடம் சிகிச்சைக்கு வந்தார். இதைப் பற்றி ஸ்வைட்சர் எழுதும்போது, ‘இந்த 41 ஆண்டுகளில் புற்றுநோய் உள்ள ஒரு ஆப்பிரிக்கனையும் நான் சந்தித்ததில்லை’ என்று வியப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால் அவர் மேலும் பல ஆண்டுகள் அங்கே மருத்துவம் பார்த்ததில் பல புற்று நோயாளிகளைச் சந்தித்துள்ளார். ‘கருப்பர்கள் வெள்ளையர்களைபோல சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்’ என்று பதிவு செய்கிறார் ஸ்வைட்சர். யோசித்துப் பார்க்கவும். 41 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்தவர், அந்தக் காலகட்டத்தில் புற்றுநோய், சர்க்கரை நோய், குடல்வால் பிரச்னை, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளைக் கொண்டவர்களைச் சந்திக்கவே இல்லை என்றால் அவை எல்லாம் நாகரிக மனிதனின் வியாதிகள் என்பது உறுதியாகிறது அல்லவா? இவர் மட்டுமல்ல, பழங்குடிகளை ஆராய்ந்த பல ஆய்வாளர்கள் ‘புற்றுநோய் ஒரு நாகரிக மனிதனின் வியாதி’ என்றே கூறுகிறார்கள். ஆப்பிரிக்கா முதல் அண்டார்டிகா வரை, வட துருவம் முதல் தென் துருவம் வரை தேங்காய், மான், நண்டுகள், கடல்மீன், திமிங்கலம் போன்ற இயற்கை உணவுகளைச் சாப்பிட்டு வரும் எந்தப் பூர்வகுடி மனிதரிடமும் புற்றுநோய் பாதிப்பு கிடையாது. வட துருவப் பகுதியில் வசிக்கும் எஸ்கிமோ மக்களை ஆராய, 1903-ம் வருடம் அங்கே சென்றார், வில்ஜாமுர் ஸ்டெபன்சன் (Vilhjalmur Stefansson) எனும் ஆய்வாளர். அங்கே ஐந்து வருடம் தங்கி ஆய்வை மேற்கொண்டார். ஆல்பர்ட் ஸ்வைட்சர் - வில்ஜாமுர் ஸ்டெபன்சன் இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் புற்றுநோய் பரவ ஆரம்பித்திருந்தது. 1898-ம் ஆண்டு வெளிவந்த லான்செட் (Lancet) எனும் நூலில் ‘லண்டனில் புற்றுநோய் பரவி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, லட்சத்தில் பதினேழு பேருக்குப் புற்றுநோய் இருந்தது. இன்று லட்சத்தில் 88 பேருக்குப் புற்றுநோய் உள்ளது" என்கிற தகவல் வெளியாகியுள்ளது. எஸ்கிமோக்கள் வாழும் பகுதி, புல், பூண்டு கூட விளையாத பூமியாகும். பனியில், தீ மூட்ட விறகுகள் இன்றி, பல சமயம் பச்சை இறைச்சியை உண்ணும் நிலைக்கு எஸ்கிமோக்கள் தள்ளப்படுவார்கள். அவர்களின் உணவு என்பது கடல் நாய் (seal), கடற்பசு (walrus), திமிங்கலம், பனிக்கரடி முதலான கொழுப்பு நிரம்பிய மிருகங்களே. என்றாவது அபூர்வமாக சில பறவை முட்டைகள் கிடைக்கும். கோடையில் ஒரே ஒரு மாதம் அதிசயமாக புல், பூண்டு துளிர்விடும். அந்தச் சமயத்தில் கசப்பான சில காய்கள் கிடைக்கும். அக்காய்களைக்கூட அவர்கள் திமிங்கிலக் கொழுப்பில் முக்கி எடுத்து தான் உண்பார்கள். ஆக, வருடத்தில் 11 மாதம் வரை இவர்கள் உண்பது முழுக்க, முழுக்க கொழுப்பு நிரம்பிய இறைச்சி உணவுகளே. காய்கறியை உண்ணாமல் இவர்களால் எப்படி உயிர்வாழ முடிகிறது என்பதே விஞ்ஞானிகளுக்கு அன்று புரியாத புதிராக இருந்தது. அன்று வைட்டமின் சி பற்றி விஞ்ஞானிகள் அறிந்திருக்கவில்லை. ஆனால் நீண்டதூரம் கடலில் பயணிக்கும் மாலுமிகள் ஒரு மூன்றுமாதம் காய்கறிகளை உண்ணவில்லை எனில் ஸ்கர்வி எனும் நோயால் (பற்களில் துவாரம் ஏற்படுதல்) பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தார்கள். அதை எலுமிச்சைச்சாறு குணப்படுத்துவதையும் அறிந்திருந்தார்கள். ஆனால், வருடம் முழுக்க காய்கறிகளை உண்ணாத எஸ்கிமோக்களுக்கு ஏன் ஸ்கர்வி வருவதில்லை என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக இருந்தது. எஸ்கிமோக்களுடன் ஐந்து வருடம் தங்கிய ஸ்டெபன்சன், அவர்கள் உண்ட உணவையே உண்டார். அவரது உணவுமுறை: ...இரவில் பிடிக்கப்பட்ட மீனை காலையில் என் வீட்டுக்குக் கொண்டுவருவாள் ஒரு பெண். மீன் பனியில் உறைந்து கல்லைப்போல கெட்டியாக இருக்கும். அது இளகும்வரை காத்திருக்கவேண்டும். ஓரிரு மணிநேரங்களில் அது இளகியபின் சமையல் தொடங்கும். முதலில் மீன் தலையை வெட்டி எடுத்து, அதை பிள்ளைகளுக்காகத் தனியே வைத்துவிடுவார்கள் எஸ்கிமோக்கள். இருப்பதிலேயே சத்தான உணவை தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். மீனின் உறுப்புகளிலேயே மீன் தலை தான் மிகச்சத்தான பொருள். அதன்பின் வாழைப்பழத்தை உரிப்பது போல மீனை உரிப்பார்கள். உரித்தபிறகு மீனின் பகுதிகள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படும். பச்சையாக மீனை அனைவரும் சாப்பிடுவோம். அதன்பின் மீன் பிடிக்கச் சென்றுவிடுவோம். மதிய உணவுக்காக வீட்டுக்குத் திரும்புவோம். உறைந்த, கொழுப்பு நிரம்பிய பெரிய மீன் ஒன்று உரிக்கப்பட்டு மீண்டும் உணவாக வழங்கப்படும். அதன்பின் மாலையில் வீட்டுக்குத் திரும்பி வெந்நீரில் கொதிக்க வைக்கப்பட்ட மீனை உண்போம். உணவில் காய்கறி, மசாலா என எதுவும் இருக்காது. இப்படித் தினமும் மூன்று வேளை பச்சை மீனையும், வேக வைத்த மீனையும் சாப்பிட்டுச் சாப்பிட்டு எனக்கு வேறு எந்த உணவும் பிடிக்காமல் போய்விட்டது. வெந்நீரில் கொதிக்க வைக்கப்பட்ட மீன் சுவையாக இருக்கிறது. மீனின் உறுப்புக்களில் தலைதான் சுவையான பகுதி. இதில் திமிங்கிலக் கொழுப்பை ஊற்றிச் சாப்பிட்டால், சாலடில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி உண்பது போல சுவையாக இருக்கும்... என்று ரசனையுடன் எழுதுகிறார் ஸ்டெபன்சன். ஆனால் எஸ்கிமோ உணவில் ஸ்டெபன்சனுக்கு இரு மனக்குறைகள். ‘ஸஉணவில் உப்பு இல்லை’ என எழுதுகிறார். ‘கோடையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிடிக்கப்படும் மீன்களைக் குளிரான வெப்பத்தில் பாதுகாக்க முடியாததால் அவை விரைவில் கெட்டுவிடுகின்றன. கெட்டுப்போன மீன்களை எஸ்கிமோக்கள் மிக உயர்வான ஒயின் அல்லது பழைய பாலடைக்கட்டி போல நினைத்து ஆசையுடன் உண்கிறார்கள். நாள்பட்ட பழைய பாலடைக்கட்டிகளைப் பரிமாறுவது இங்கிலாந்தில் உயர்வானதாகக் கருதப்படும். அதுபோல நினைத்து நானும் கெட்டுப்போன மீன்களை உண்டேன்’ என எழுதுகிறார் ஸ்டெபன்சன். ஐந்து வருடங்களில் ஒரே ஒரு நாள், நாய்வண்டியில் (Sled) அங்கு வந்த இன்னொரு வெள்ளையரிடம் கெஞ்சிக்கேட்டு கொஞ்சம் உப்பை வாங்கியுள்ளார். அதை மீனில் போட்டுச் சாப்பிட்ட ஸ்டெபன்சன், மீதமிருந்த உப்பை அடுத்தவேளை உணவில் சேர்க்கவில்லை. உப்பில்லாமலேயே அந்த உணவு நன்றாக இருப்பதுதான் காரணம் என்கிறார். இந்த ஐந்து வருடங்களில், தான் அடைந்த உடல்நலமும், ஆரோக்கியமும் தன் ஆயுளில் வேறு எந்தக் காலகட்டத்திலும் அடைந்ததில்லை என்றும் அவர் கூறுகிறார். ஐந்து வருடமாக ஒரே உணவை உண்பது போரடிக்கவே இல்லை, மீனை மட்டுமே உண்ட தனக்கும், எஸ்கிமோக்களுக்கும் ஸ்கர்வி வரவே இல்லை என்றும் ஐந்து வருடமும் தான் வெறும் மீன் மற்றும் நீரை உட்கொண்டே வாழ்ந்ததாகவும் நூலில் எழுதியுள்ளார் ஸ்டெபன்சன். தாய், தந்தை, பிள்ளை- எஸ்கிமோ பழங்குடியினர் எஸ்கிமோக்களின் உடல்நலனைப் பற்றி எழுதுகையில்ஸ ஐந்து வருடத்தில் ஆயிரக்கணக்கான எஸ்கிமோக்களைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவருக்குக் கூட புற்றுநோய் இல்லை. எஸ்கிமோ பெண்கள் சாதாரணமாக ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள். எஸ்கிமோக்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனை ஒன்று இருக்கும். எந்தப் பெண்ணுக்காவது பிரசவ வலி ஏற்பட்டால் உடனே மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். பெரும்பாலான சமயங்களில் மருத்துவர் வீட்டுக்கு வருவதற்குள் அப்பெண்ணுக்கு இயற்கையாகவே பிரசவம் ஆகிவிடும். பிரசவம் பார்க்க வீட்டுக்கு வந்த மருத்துவரை, சில நிமிடங்களுக்கு முன்பு குழந்தையைப் பெற்ற பெண்ணே எழுந்துவந்து உபசரிப்பார். சிசேரியன், நீண்டநேர பிரசவ வலி, பிரசவ சமயம் மரணம் என எதுவும் அவர்களுக்கு நேர்வதில்லை. பத்துப்பிள்ளைகளைப் பெற்றும் எஸ்கிமோ பெண்கள் மிக ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள். என்று வியக்கிறார் ஸ்டெபன்சன். இந்த வரலாறுகள் நமக்குக் கதையாக மட்டுமல்ல, பாடங்களாகவும் உள்ளன. கொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருள்களை (இறைச்சி, நெய், முட்டை, தேங்காய் போன்றவை) மனிதன் உண்பதால் குண்டாவதில்லை, மாறாக நல்ல ஆரோக்கியம் பெறுகிறான், ஒல்லியான தோற்றம் கிடைக்கிறது. அரிசி, கோதுமை, பழங்கள், இனிப்புகள், சர்க்கரை போன்றவற்றில் கொழுப்பு இல்லை. ஆனால் சர்ச்சரைச் சத்துகள் உள்ளன. இவற்றால் நாம் ஒல்லியாவதில்லை; மாறாக குண்டாகிறோம். இது ஏன் நிகழ்கிறது என்பதை இனி ஆராய்வோம். உடல் பருமனை முன்வைத்து மருத்துவ உலகம் ‘கலோரிச் சமன்பாடு’ எனும் கோட்பாட்டை உருவாக்கியது. இதன் அடிப்படை என்னவெனில், நாம் உண்ணும் உணவில் இருக்கும் கலோரி, நாம் செலவு செய்யும் கலோரியை விட அதிகமாக இருந்தால் குண்டாகி விடுவோம். செலவு செய்யும் கலோரியை விட குறைவான கலோரியை உட்கொண்டால் நாம் ஒல்லியாவோம். இந்த கலோரிச் சமன்பாட்டுக் கோட்பாட்டில் உள்ள குறைகள் சில: 1) நாம் எத்தனை கலோரியை எரிக்கிறோம் எனும் கணக்கு யாருக்கும் தெரியாது. ஆக, எத்தனை கலோரியை எரிக்கிறோம் என்பது தெரியாமல், இந்தக் கணக்கீடு அடிப்படையில் பயனற்றதாக மாறிவிடுகிறது. 2) நாம் எத்தனை கலோரியை உண்கிறோம் என்பதிலும் பல சிக்கல்கள், குழப்பங்கள் உள்ளன. கலோரிகளின் அளவை அறிய நாம் உண்ணும் உணவை மிகச்சரியாக அளந்து, எடைபோட்டு, கலோரிக் கணக்கு போடவேண்டும். அப்படிப் பார்த்து யாருமே சாப்பிடுவது கிடையாது. ஆக, உள்ளே எத்தனை கலோரி போகிறது, உடலில் எத்தனை கலோரி எரிக்கப்படுகிறது என்பது தெரியாமல் இந்தச் சமன்பாட்டை எப்படிப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது? 3) இதைவிட முக்கியமாக, உணவுப்பொருள்களை கலோரியை வைத்து மதிப்பிடுவதால், ஒரு முட்டையை விட ஒரு சாக்லெட்டில் குறைவான கலோரியே உள்ளது, ஆக முட்டையை விட சாக்லெட்டை உண்பது நல்லது என பலரும் நினைக்க ஆரம்பித்தார்கள். இன்றும் பல டயட் முறைகளில் உணவுகளுக்கு பாயிண்ட் முறை வழங்கப்படுகிறது. அதன்படி சாக்லட், ஐஸ்க்ரீம் எல்லாம் சாப்பிடலாம். ஆனால் அளவாகச் சாப்பிடவேண்டும் என்பார்கள். இது மிகவும் பிழையான கணக்கீடு ஆகும். சரி, கலோரிச் சமன்பாடு தவறெனில் நாம் எப்படிக் குண்டாகிறோம்? சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உண்ணும்போது நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடனடியாக சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டுவர நம் கணையம் (pancreas), இன்சுலின் எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இன்சுலின் சுரந்ததும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை சேகரிக்கப்பட்டு நம் ஈரலுக்கு அனுப்பப்படுகிறது. ஈரல் அந்தச் சர்க்கரையைக் கொழுப்பாக மாற்றி நம் தொப்பைக்கு அனுப்பிச் சேமிக்கிறது. ஆக, நாம் குண்டாக இன்சுலினும், சர்க்கரை அதிகமுள்ள உணவுகளுமே காரணம். தவிரவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இன்சுலின் குறைத்துவிடுகிறது என்பதையும் கண்டோம். இதனால் நமக்குப் பசி எடுக்கிறது. உடல் நம்மை மேலும் உண்ண கட்டளையிடுகிறது. அப்போதும் நாம் என்ன செய்கிறோம்? பஜ்ஜி, போண்டா, டீ என மீண்டும் சர்க்கரை உள்ள உணவுகளையே உண்கிறோம். இதனால் மீண்டும் இன்சுலின் சுரந்து மீண்டும் உடலில் கொழுப்பு சேர்கிறது. தவிர இப்படித் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் சர்க்கரை அளவுகள் உடலில் ஏறி இறங்கி, தினமும் இன்சுலின் பலமுறை தொடர்ந்து சுரந்துகொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் கணையத்தின் பீட்டா செல்கள் பழுதடைந்துவிடும். கூடவே இன்சுலினின் உற்பத்தியும் குறைந்துவிடும். இதன்பின் நம் உடலில் சர்க்கரை அளவுகள் அதிகரித்து நமக்குச் சர்க்கரை வியாதியும் வந்துவிடுகிறது. கொழுப்பு அதிகமாக உள்ள இறைச்சியை நாம் உண்டால் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. காரணம், இறைச்சியில் சர்க்கரை துளியும் இல்லை. இதனால் நம் உடலில் இன்சுலினும் சுரக்காது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புலால் உணவை மட்டுமே உண்டால் அவர்கள் உடலில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்காது. உடலும் குண்டாகாது. இன்சுலினுக்கும் உடல் பருமனுக்கும் இடையே உள்ள உறவை அறிவியல் உலகம் அறிந்திருந்தாலும், விந்தையிலும் விந்தையாக அந்த அறிவியல் தற்கால டயட்டுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. விளைவாக இன்சுலின் என்றால் ஏதோ சர்க்கரை வியாதி வந்தவர்களுக்கு மாத்திரமே தேவையான விஷயம் என்ற அளவில்தான் பலரும் இன்சுலினைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்சுலினை உடல் சுரப்பது ஒரு அபாயத்திலிருந்து நம்மைக் காக்க. அதாவது ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவுகளில் இருந்து நம்மைக் காக்க. கணையத்தில் இன்சுலின் சுரந்ததும் அது உடலின் செல்களுக்குப் பலவிதமான கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. உடலை கொழுப்பை எரிக்கும் பணியிலிருந்து விடுவித்து, கொழுப்பைச் சேகரிக்கும் பணிக்கு இன்சுலின் தூண்டுகிறது. காரணம், நம் உடலில் அதிகரித்த சர்க்கரை அளவைக் குறைக்க அதைக் கொழுப்பாக மாற்ற வேண்டியது அவசியம் அல்லவா? இதனால், உடலின் செல்களும் கொழுப்பை எரிப்பதை நிறுத்தி கொழுப்பை சேமிக்கும் பணியில் ஈடுபடுகின்றன. நாம் குறைந்த கலோரி அளவே உணவை உண்டாலும், நாம் குண்டாகக் காரணம் – இன்சுலின். இன்சுலின் உடலில் உள்காயத்தை ஏற்படுத்தி மாரடைப்பு, அல்சர், உடல் பருமன் போன்ற பல வியாதிகளுக்கு காரணியாகிறது. அதனால் அதை வில்லனாகவும் பார்க்கவேண்டியதில்லை. இன்சுலின் சுரக்கவில்லையெனில் நாம் மரணமடைந்து விடுவோம். உடலின் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைக்க இன்சுலின் அவசியம். ஆனால், அதிக அளவிலான இன்சுலினைச் சுரக்கவைக்கும் அளவுக்கு நாம் சர்க்கரைச்சத்து உள்ள உணவை உண்பதே உடல்பருமனுக்கும் வியாதிகளுக்கும் காரணம். இன்சுலினைக் கட்டுக்குள் வைக்காத டயட் முறைகள் தோல்வி அடைகின்றன. காலையில் ஐந்து இட்லி சாப்பிடுவதற்கும் அதற்குப் பதிலாக நாலு முட்டை உண்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன. காலையில் ஐந்து இட்லியைச் சாப்பிட்டுவிட்டு, உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பலர் நினைக்கிறார்கள். இட்லியை ஆரோக்கிய உணவு என்று எண்ணுகிறார்கள். ஐந்து இட்லிக்குச் சமமான அளவில் வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிடச் சொன்னால் பதறுவோம் அல்லவா! ‘இத்தனை சர்க்கரையைச் சாப்பிட்டால் உடம்புக்கு என்ன ஆகும்?’ என்று கேட்போம். ஆனால், வெள்ளைச் சர்க்கரைக்கு நிகராக அரிசியும் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகரிக்கவே செய்கிறது. இந்த நிலையில், சர்க்கரைக்குச் சமமான அளவில் தீமைகளை விளைவிக்கும் அரிசியை ஆரோக்கிய உணவு என்று தினமும் சாப்பிடுவது சரியா? ஐந்து இட்லி உண்டால் என்ன ஆகும் என்பது இப்போது புரிந்துவிட்டது இல்லையா? ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் ஜிவ் என ஏறும். உடனடியாக நம் கணையம் இன்சுலினைச் சுரக்கும். இன்சுலின் உடலை கொழுப்பைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ரவுண்டு கட்டி நம் ஈரலுக்கு அனுப்பும். ஈரல் அந்தச் சர்க்கரையை ட்ரைகிளிசரைடு எனும் கொழுப்பாக மாற்றி நம் தொப்பையில் சேமிப்புக்கு அனுப்பும். நம் தொப்பை வளரும். அத்துடன் நிற்கிறதா என்றால் இல்லை. இன்சுலினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது எனக் கண்டோம். இதனால் நமக்குச் சர்க்கரை அளவுகள் குறையும். உடனடியாக நம் மூளை பசி எனும் சிக்னலை அனுப்பும். சர்க்கரை அளவு குறைவது ஆபத்து என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதனால்தான் காலையில் எட்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்ற நாம், பத்துமணிவாக்கில் அலுவலக கேண்டினை எட்டிப்பார்த்து ‘ரெண்டு வடையும், ஒரு டீயும் கொடு" என்று கேட்கிறோம். இதே காலை உணவாக இட்லிக்குப் பதில் நாலு முட்டை ஆம்லெட் சாப்பிட்டால் என்னவாகும்? முட்டையில் துளி சர்க்கரை கிடையாது. அதனால் முட்டை நம் சர்க்கரை அளவை அதிகரிக்காது. இரவு முழுக்க உண்ணாமல் காலையில்தான் காலை உணவை உண்கிறோம். ஆக, உடல் தனக்குத் தேவையான எரிசக்தியை அடைய நேராக நம் தொப்பையில் உள்ள கொழுப்பை எடுத்து எரிக்கத் தொடங்கும். இதனால் நம் தொப்பை கரையும். நம் உடல், கொழுப்பை எரிக்கும் பணியில் இருப்பதால் முட்டையில் உள்ள கொழுப்பும் (dietary fat) சேர்த்தே எரிக்கப்படும். அது உடல்கொழுப்பாக (body fat) மாறி நம் உடலில் சேமித்துவைக்கப்படாது. காலை உணவாக நாலு இட்லிக்குப் பதில் நாலு முட்டை சாப்பிட்டால் உங்களுக்குப் பலமணிநேரம் பசிக்காது. நொறுக்குத்தீனிக்கும் மனசு ஏங்காது. உடல் கொழுப்பு எரிக்கப்படும். இன்சுலினால் ஏற்படும் உள்காயம், மாரடைப்பு, அல்சர் போன்ற பலவகை வியாதிகள் வரும் வாய்ப்பு பெருமளவில் குறையும். (தொடரும்) http://www.dinamani.com/junction/paleo-diet/2015/07/19/பகுதி-3---வரலாறு-உணர்த்தும்-பா/article2927463.ece Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கறுப்பி Posted September 19, 2015 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted September 19, 2015 பகுதி 4 - சாவித்திரியும் இலியானாவும்!By நியாண்டர் செல்வன்First Published : 26 July 2015 10:00 AM IST சென்ற வாரப் பதிவின் மூலமாக, நம் உடல் எடை அதிகரிக்க இன்சுலினே காரணம் எனக் கண்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எடையைக் குறைக்க முயலும் பலரும் இன்சுலின் எனும் வார்த்தையை அறிந்திருக்கக்கூட மாட்டார்கள். அவர்களுக்குச் சொல்லப்படுவதெல்லாம் ‘உடற்பயிற்சி செய்தால் இளைக்கலாம், குறைவாகச் சாப்பிட்டால் இளைக்கலாம்’ என்பது போன்ற கலோரிச் சமன்பாட்டுக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த அறிவுரைகளே. ‘இளைக்கணுமா, உடற்பயிற்சி செய்’ என்பது இன்று பச்சைக் குழந்தைக்கும் தெரியும் அறிவுரையாகிவிட்டது. அதிகாலையில் கடற்கரைகளிலும், பூங்காக்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சைக்கிளில் அலுவலகத்துக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். புற்றீசல் மாதிரி தெருவுக்குத் தெரு உடற்பயிற்சி மையங்கள் உள்ளன. டிரெட்மில், ஸ்டேஷனரி சைக்கிளிங், யோகா போன்ற உடற்பயிற்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி உடற்பயிற்சிக் கருவிகளை வாங்குகிறார்கள். இது, பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் வணிகமாகிவிட்டது இதெல்லாம் அடிப்படையில் வீணான செயல், இதனால் எவ்விதப் பயனும் கிடையாது என்பதை மாங்கு, மாங்கென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் அறிந்தால் கடும் அதிர்ச்சி அடைவார்கள். இவ்வகை உடற்பயிற்சிகள் உடலுக்கு ஆபத்தானவை என்றும்கூட கூறலாம். ஆதிமனிதன் எவ்வகை உடற்பயிற்சிகளை மேற்கொண்டான்? டிரெட்மில்லில் காட்டுத்தனமாக மணிக்கணக்கில் தலைதெறிக்க ஓடினானா? சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டானா? 300 கிலோ எடையை ஐம்பது முறை தூக்கி, பளுதூக்கும் பயிற்சிகளை மேற்கொண்டானா? சைக்கிளில் ஏறி ஐநூறு கிலோமீட்டரை நாள் முழுக்கச் சுற்றினானா? இல்லை. இவை எதையும் அவன் செய்யவில்லை. வேகமாக ஓடினால் கை, கால் முறியும். வேகமாக ஓடினால் உடலில் காயம் ஏற்படும் அபாயம் அதிகம். மேலும், மனிதன் வேகமாக ஓடக்கூடிய விலங்கும் அல்ல. துள்ளி ஓடும் மான், முயல் போன்ற மிருகங்களை அவனால் ஓடிப்பிடித்திருக்க முடியாது. தன்னைத் துரத்தும் சிங்கம், புலி ஆகியவற்றின் வேகத்துக்கு அவனால் ஈடு கொடுத்து ஓடியிருக்கவும் முடியாது. வனவிலங்குகளில் மனிதன் மிக மோசமான ஓட்டக்காரன். ஆக, விரைவாக ஓடுதல் என்பது நம் இயல்புக்கு முரணானது. ஆதிமனிதன் செய்த உடற்பயிற்சி - கையில் கல், ஈட்டியை ஏந்தியபடி காடுகளில், புல்வெளிகளில் மணிக்கணக்கில் இரையைத் தேடி மெதுவாக நடந்ததே. ஆதிகுடிப் பெண்கள் வீட்டுவேலை, நீர் கொண்டுவரும் வேலை, முட்டை, பழங்கள், காய்கறிகளைச் சேகரித்தல் போன்றவற்றைச் செய்தார்கள். இன்னமும் கிராமப் பெண்கள் மைல்கணக்கில் நடந்து சென்று தம் வீடுகளுக்குக் குடிநீர் கொண்டுவருவதைப் பார்க்கிறோம். ஆக, ஆதிமனிதன் உடலைச் சுளுக்க வைக்கும், கடினமான உடற்பயிற்சிகளைச் செய்ததில்லை; காட்டுத்தனமாக ஓடியதில்லை. அவன் செய்த உடற்பயிற்சி என்பது வீட்டு வேலையில் ஈடுபவது, விளையாடுவது போன்றவை மட்டுமே. அறிவியல், உடற்பயிற்சியைப் பற்றி என்ன கூறுகிறது? 3 கி.மீ. தூரம் நடந்தால் நாம் சுமாராக 150 கலோரிகளை எரிக்கிறோம். அதாவது ஒரு கோகோ கோலா பாட்டிலில் உள்ள கலோரிக்குச் சமமான அளவு அல்லது ஒன்றரை வாழைப்பழத்துக்குச் சமமான கலோரி அளவு. ஆனால் பலரும் உடற்பயிற்சி செய்யும் முன்பு, ஒரு வாழைப்பழம் அல்லது பிஸ்கட்/காப்பி அருந்திவிட்டு உடற்பயிற்சிக்குச் செல்கிறார்கள். உடற்பயிற்சி முடிந்தபின் பசி அதிகரித்து அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். ஆக, உடற்பயிற்சியால் எரிந்த கலோரிகளை விடவும் உடற்பயிற்சியால் அதிகமான கலோரிகள்தான் அதிகம். 6 கி.மீ. நடந்தால் 300 கலோரிகள் எரிகின்றன. ஆனால், இப்படி 300 கலோரிகளை எரிப்பதால் நம் எடை பெரிதாகக் குறைந்துவிடாது. உடற்பயிற்சி செய்பவர், செய்யாதவர் ஆகிய இருவரது உடலும் ஒரே அளவு கலோரிகளையே எரிக்கும். தினமும் உங்கள் உடல் 2,000 கலோரிகளை எரிக்கிறது என்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்தாலும் அதே 2,000 கலோரிகளே எரிக்கப்படும். உடற்பயிற்சியால் எடை குறைய வேண்டும் என்றால் தினமும் 90 நிமிடம் கடும் உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், தினமும் 90 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் களைப்படையும், மூட்டுகளில் வலி எடுக்கும். விளையாட்டு வீரர்கள் பலரும் வலி நிவாரணிகள் மற்றும் ஊக்கமருந்து போன்றவற்றின் துணையுடனே விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அடிக்கடி அவர்களுக்கு உடல்நலன் சரியில்லாமல் போவதையும் காண்கிறோம். அதேசமயம், உடற்பயிற்சி வேறுபலவிதங்களில் உடலுக்கு நன்மையளிக்கவும் செய்கிறது. 30 நிமிட மெதுநடை நம் இதயத்துக்கும், ரத்த ஓட்டத்துக்கும் மிகவும் நன்மையளிக்கும். அதனால் உடற்பயிற்சி கட்டாயம் செய்யப்படவேண்டிய ஒன்று. ஆனால், எடைக்குறைப்புக்கு அதை மருந்தாக நினைப்பது வீண்முயற்சி. உடற்பயிற்சியால் உடல் இளைக்காது என்றால் ஏன் உடற்பயிற்சி பலரால் வலியுறுத்தப்படுகிறது? இதற்கான விடை – அரசியல். கோகோ கோலா, பெப்ஸி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ‘குளிர்பான மையம் (Beverage Institute)’ என்ற அமைப்பை நிறுவியுள்ளன. மேலை நாடுகளில் அதிகரித்து வரும் உடல் பருமனுக்குக் காரணமாக இவ்விரு நிறுவனங்களின் குளிர்பானங்கள் மீது புகார் கூறப்பட்டதால் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்த மையத்தைத் தொடங்கின. இதன் வழியாக ‘உடற்பயிற்சி செய்தால் இளைக்கலாம்’ என்கிற கருத்தாக்கம் வலுவாக முன்னிறுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் கோகோ கோலா நிறுவனம் ‘நாற்காலிகள் (chairs)’ என்கிற ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பியது. இதில் ‘வேலை செய்யாமல் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால்தான் மக்கள் உடல் பருமன் அடைகிறார்கள்’ என அதில் கூறப்பட்டிருந்தது. https://youtu.be/PMLjHwwpAdg கோகோ கோலாவின் நாற்காலிகள் விளம்பரம் மக்களின் உடல் பருமனுக்குக் காரணம் - அதிகமாக சாப்பிடுவதாலும், குறைவாக உடற்பயிற்சி மேற்கொள்வதாலும்தான்; மற்றபடி, சர்க்கரை நிரம்பிய உணவுகளை உண்பதால் அல்ல என்று இந்த நிறுவனங்களும் பிற உணவு லாபிகளும் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு ஏதுவான முறையில் இவை கலோரிச் சமன்பாட்டுச் சித்தாந்தத்தையும் முன்வைக்கின்றன. ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை இந்த நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்து ‘உடற்பயிற்சி செய்யுங்கள்’ எனும் செய்தியை மக்களிடம் பரப்புகின்றன. இது தொடர்ந்து வலியுறுத்தப்படுவதால், மக்களும் ‘உடற்பயிற்சி செய்தால் நாம் விரும்பும் அளவு குளிர்ப்பானம் குடிக்கலாம்’ என்றும் ‘உடல்பருமனுக்குக் காரணம் கோகோ கோலாவோ, பெப்ஸியோ, சிப்ஸோ அல்ல; அதிக கலோரிகளை உண்பதே’ என்றும் நம்புகிறார்கள். உலக சுகாதார மையம் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘நம் கலோரிகளில் 10% அளவு சர்க்கரையில் இருந்து வரலாம்’ எனப் பரிந்துரை செய்ய முடிவெடுத்து பிறகு 10 சதவிகிதத்தை 5-ஆக மாற்றவும் முடிவெடுத்தது. இதை ஏற்றுக்கொள்ளாத உணவு லாபிகள் உடனே களத்தில் குதித்தன. உணவு நிறுவனங்கள் அளிக்கும் தேர்தல் நிதியை அதிக அளவில் பெறும் அமெரிக்க அரசியல்வாதிகள், அமெரிக்க மேல்சபை, கீழ் சபை உறுப்பினர்கள் ஆகியோர் அமெரிக்க அதிபருக்கும், உலக சுகாதார மையத்துக்கும் கடிதம் எழுதினார்கள். இதுபோன்ற பல எதிர்ப்புகளால், உலக சுகாதார மையம் அப்பரிந்துரையை வெளியிடவில்லை. அப்பரிந்துரை வெளியிடப்பட்டிருந்தால் நாம் உண்ணும் கார்ன்ஃபிளேக்ஸ், குளிர்ப்பானங்கள் போன்றவற்றின் வணிகம் பாதிப்படைந்திருக்கும். இவற்றை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அறிவுறுத்திருப்பார்கள். இந்த விளைவுகளைத் தடுக்கவே, பன்னாட்டு உணவு நிறுவனங்களின் லாபி, உலக சுகாதார மையத்தின் பரிந்துரைகளைத் தடுத்து நிறுத்திவிட்டது. உடல் பருமனுக்குக் காரணம் சர்க்கரை என்கிற தேவரகசியம் மக்களுக்குத் தெரிந்துவிட்டால், தங்களின் வர்த்தகம் சரிந்துவிடும் என்பதால், ‘உடல்பருமனுக்குக் காரணம் உடற்பயிற்சியின்மையும், அதிக கலோரிகளை உண்பதுவுமே’ என இந்த நிறுவனங்கள் பிரசாரம் செய்து வருகின்றன. கலோரிச் சமன்பாட்டுக் கோட்பாட்டில் உள்ள பிழைகள் என்ன? அது மனிதனின் சிக்கலான உடலியல் வழிமுறையை ஒரு கணிதச் சமன்பாட்டுக்குள் அடக்கிவிடப் பார்க்கிறது என்பதே. கலோரிச் சமன்பாட்டுக் கோட்பாட்டின்படி அனைத்து கலோரிகளும் ஒன்றே. கலோரிச் சமன்பாட்டுக் கோட்பாட்டின்படி, 2,000 கலோரி அளவுக்குக் கீரை சாப்பிடுபவர், 1,900 கலோரி அளவுக்கு சாக்லட்டையும், அல்வாவையும் சாப்பிடுபவரைவிடக் குண்டாக இருப்பார்! நமக்குப் பசி எடுத்தால், 200 கலோரிகளை வழங்கும் மூன்று முட்டைகளை உண்பதை விட, 150 கலோரிகளைக் கொண்ட கோகோ கோலாவை உண்டால் இளைப்போம்! மனித உடலின் எரிசக்தித் திறன் (metabolism) பிற மிருகங்களை விடவும் மாறுபட்டது. காரணம், நம் மூளைக்கு மட்டுமே நம் கலோரிகளில் 20% அளவுக்கு மேல் தேவைப்படுகிறது. நாம் நாள் முழுக்கப் படுத்து உறங்கினாலும் நம் உடல் சர்வசாதாரணமாக 1500 முதல் 2000 கலோரிகளை எரிக்கும். நீங்கள் உடற்பயிற்சியில் 500 கலோரிகளை எரித்தால், மீதமுள்ள நேரத்தில் 2000 கலோரிகளை எரிப்பதற்குப் பதில் உடல் 1500 கலோரிகளை எரிக்கும். அதாவது நம் உடற்பயிற்சியால் உடல் கூடுதலான கலோரிகளை எரிப்பது கிடையாது. ஆக, உடற்பயிற்சி செய்பவர், செய்யாதவர் இருவரும் நாள் முழுக்க ஒரே அளவிலான கலோரிகளையே எரிக்கிறார்கள். உணவின் அளவைக் குறைத்தாலும் உடல் அதற்கேற்ப கலோரிகளை எரிப்பதைக் குறைக்கும். உதாரணமாக 2000 கலோரிகள் சாப்பிடுவதற்குப் பதில் 1500 கலோரிகளை மட்டும் சாப்பிட்டால் உடல் 2000 கலோரிகளை எரிக்காமல் 1400 கலோரிகளை எரிக்கும். நம் உடல் கொழுப்பைச் சேமித்து நமக்கு எதிராக சதி செய்வது போல தோன்றினாலும் பரிணாமரீதியில் இதற்கான காரணத்தை அறிந்து கொண்டால் நம் உடலின் கொழுப்பு சேமிக்கும் தன்மையைப் புரிந்துகொள்வோம். 1970-ல் விவசாயப் புரட்சி நடந்து பட்டினிச் சாவுகள் ஒழியும் வரை மனித இனத்தின் வரலாறு என்பது பசியும், பட்டினியும், பஞ்சமும் நிரம்பியதே. ஆதிமனிதன் தினமும் மூன்று வேளை விருந்து சாப்பிட்டுப் பழகியவன் அல்லன். வேட்டை கிடைக்கும் நாளில் விருந்து, கிடைக்காத நாள்களில் பட்டினி என வாழ்ந்து பழகியவன். பஞ்ச காலத்தில் அல்லது உணவு கிடைக்காத குளிர்காலத்தில் நல்ல குண்டாக இருப்பவன் மட்டுமே தப்பி பிழைப்பான். ஒல்லியானவன் இறந்துவிடுவான். உதாரணமாக, இரண்டாம் உலகப்போர் சமயம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பல லட்சம் மக்கள் மடிந்தார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் யார் என்றால், குண்டாக இருந்தவர்கள் மாத்திரமே. பஞ்சத்தின்போது, குண்டர்கள் தப்பிப் பிழைத்தார்கள்; ஒல்லியானவர்கள் மடிந்துபோனார்கள். அதனால் இப்போது கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பலரும் மரபணு ரீதியாக குண்டாகும் தன்மை உடையவர்களே. 20 லட்சம் ஆண்டு மனித வரலாற்றில் எத்தனை முறை பஞ்சம், பட்டினி, போர்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். பரிணாமரீதியாக, நம் உடல் கொழுப்பைச் சேமிப்பது எதனால் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா? மரபணுரீதியாக, இன்றைய மனிதர்களில் குண்டாக இருப்பவர்கள், பஞ்ச காலத்தில் தப்பி பிழைத்தவர்களின் சந்ததியினரே. உணவு கிடைப்பதைப் பொறுத்து உடல் தன் எரிசக்தித் திறனை குறைத்துக்கொண்டதால்தான் நம் முன்னோர்கள் பஞ்ச காலங்களில் தப்பிப் பிழைத்தார்கள். ஒல்லியாக இருப்பதே அழகு என்பது 20-ம் நூற்றாண்டின் கண்ணோட்டம். மனித இன வரலாற்றில், குண்டாக இருப்பதே அழகாகக் கருதப்பட்டது. ‘அவன் கொழுத்த பணக்காரன்’ என்பது போன்ற சொல்வழக்குகள் இருக்கக் காண்கிறோம். பருமனாக இருப்பது அந்தஸ்துக்கும், செல்வத்துக்கும் குறியீடாக இருந்த காலங்கள் உண்டு. முன்பு, சர்க்கரை வியாதி பணக்காரர்களின் வியாதியாகப் பார்க்கப்பட்டது. கவுட்(Gout) என்பது ஒரு வகை மூட்டுவாதம். ரத்தத்தில் யூரிக் அமிலம் (Uric acid) அளவு அதிகரிக்கும்போது கவுட் ஏற்படும். இந்த வியாதி மன்னர்களுக்கு மட்டுமே வரும் வியாதியாகவும் அப்போது கருதப்பட்டது. 1950, 1960-களில் தமிழ்நாட்டின் கனவுக் கன்னிகளாக இருந்த சரோஜா தேவி, கே.ஆர். விஜயா, சாவித்திரி போன்ற நடிகைகளின் உடலமைப்பை இன்றைய கனவுக் கன்னிகளான இலியானா, நயன்தாரா போன்றோருடன் ஒப்பிட்டால், உடலமைப்பு குறித்து எத்தனை பெரிய மனமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தெரியவரும். 1950-களில் ஸ்லிம்மான உடலமைப்பைக் கொண்டவர்களை வேறுவிதமாகப் பார்த்தார்கள். ஏதோ வியாதி இருப்பதால்தான் அவர்கள் மெலிந்துள்ளார்கள் எனக் கருதபட்டு உடல் பருமனாவதற்கான மாத்திரைகள் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. அது தொடர்பான விளம்பரத்தைப் படத்தில் காணலாம். அன்று காதல் மன்னனாக அறியப்பட்ட ஜெமினி கணேசன் போன்றோரும் சிக்ஸ் பேக் எனப்படும் கட்டுடலுடன் இருக்கவில்லை. இன்று புதிதாக நடிக்க வரும் நடிகர்களே சிக்ஸ்பேக்குடன் இருக்கிறார்கள். ஆக, ஒல்லியாக இருப்பதே அழகு, சிக்ஸ்பேக்கும் பூஜ்யம் சைஸுமே (size zero) அழகு போன்ற கருத்தாக்கம் எல்லாம் நவீன உலகமயமாக்கல், பொருளாதாரம் நமக்குக் கற்பித்த சந்தையியலை ஒட்டிய கண்ணோட்டங்கள். பட்டினி கிடந்தும், மருந்துகளை உட்கொண்டும், இயற்கைக்கு முரணான கடும் உடற்பயிற்சிகளை செய்தால் மட்டுமே உலக அழகிப் போட்டியிலும், ஆணழகன் போட்டியிலும் ஜெயிக்க முடியும். ஆணழகன் போட்டியில், ஜெயித்தபின் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரை விட்டவர்கள் உண்டு. உடலில் உள்ள நீரின் அளவைக் குறைக்கும் மருந்துகளை (Diuretics) அவர்கள் உட்கொண்டதுதான் இதற்குக் காரணம். இதுவரை, உடல்பருமனுக்குக் காரணம் கலோரிச் சமன்பாட்டுக் கொள்கை அல்ல, இன்சுலினே என்று பார்த்தோம். இன்சுலின், உடல்பருமனுக்கு மட்டும் காரணம் அல்ல, உயர் ரத்த அழுத்தம் (Blood pressure), டைப் 2 சர்க்கரை வியாதி போன்றவற்றுக்கும் காரணம் ஆகிறது. ஆனால், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களிடம் சர்க்கரை, இன்சுலின் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படுவதில்லை. உணவியல் நிபுணர்களும் (dieticians) தவறான ஒரு காரணத்தை முன்வைக்கிறார்கள் - உப்பு! ஆனால், உப்புக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் கொஞ்சமும் தொடர்பில்லை என்பதுதான் உண்மை. உணவில் இருக்கும் உப்பு முழுவதையும் அகற்றினாலும் உங்களின் உயர் ரத்த அழுத்தம் குறையாது. வேண்டுமானால் 140/90 என இருக்கும் உயர் ரத்த அழுத்தத்தை 138/87 எனக் குறைக்கலாம். ஆனால், இது பெரிய மாற்றமில்லை. இதனால் நோயாளியின் உயர் ரத்த அழுத்தம் குணமடையாது. உப்புக்கும், உயர் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்பில்லை என்றால் ஏன் உப்பின் மேல் குற்றம் சாட்டப்படுகிறது? தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்ட சில ஆய்வுகளே காரணம். உப்பால் ரத்த அழுத்தம் அதிகரிப்பது உண்மை. ஆனால், அதனால் சில புள்ளிகளே அதிகரிக்கும். உப்புள்ள உணவு ஜீரணமானவுடன் அடுத்தச் சில மணிநேரங்களில் ரத்த அழுத்தம் அதிகரித்து பிறகு சரியான அளவுக்கு வந்துவிடும். இப்படித் தற்காலிகமாக சில புள்ளிகள் ஏறுவதை வைத்து, ரத்த அழுத்தத்தை உப்பு அதிகரிப்பதால் அதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பது தமிழ் மூதுரை. உப்பில்லாமல் சில நாள்கள் சாப்பிட்டுப் பார்க்கும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் பலரும் ‘இது என்னால் முடியாது. நான் உப்பு போட்டே சாப்பிட்டுக்கொள்கிறேன். நீங்கள் என்னை மருந்தின் மூலம் காப்பாற்றுங்கள்’ என மருத்துவரிடம் சரணடைந்து விடுகிறார்கள். அதன்பின் ஆயுளுக்கும் மருந்து, மாத்திரைதான். மற்றபடி உப்பு நல்லது அல்ல; அதேசமயம் கெட்டதும் அல்ல. முக்கியமாக உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணம் உப்பு அல்ல. எனில், உயர் ரத்த அழுத்தம் ஏன் வருகிறது? இன்சுலின்! காலை உணவாக இரண்டுத் துண்டு ரொட்டி, பழக்கூழ் (ஜாம்) மற்றும் ஒரு ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதில் துளி உப்பு இல்லை. ஆனால், சர்க்கரை ஏராளமாக உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும். இன்சுலின் ரத்த அழுத்தத்தை மூன்று விதங்களில் உருவாக்குகிறது. முதலாவதாக இன்சுலின் சிறுநீரகத்துக்கு அதிக அளவில் உப்பை (sodium) தேக்க உத்தரவிடுகிறது. இதனால் தேவையற்ற உப்பை நம் சிறுநீரகம் வெளியேற்ற நினைத்தாலும் அதனால் முடிவது இல்லை. சிறுநீரகத்தில் உப்பு தேங்கினால் அதற்கு ஏற்ப நீரும் தேங்கியே ஆகவேன்டும். ஆக, உடலில் உப்பும், நீரும் தேங்க நம் ரத்த அழுத்தம் வேகமாக அதிகரிக்கிறது. இரண்டாவதாக இன்சுலின் நம் இதயக் குழாய்கள் விரிவதைத் தடுக்கிறது. காரணம் இன்சுலின் ஒரு வளர்ச்சியளிக்கும் ஹார்மோன் (Growth Hormone). இதயக் குழாய்கள் விரிவது நின்றால் இதயம் அதிக வேகத்துடன் ரத்தத்தை அடிக்க வேண்டும். ஆனால், இன்சுலினால் இதயக் குழாய்கள் விரிவது தடுக்கப்படுவதால் (Cardiac Contractility), இதுவும் உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மூன்றாவதாக இன்சுலின், நரம்பு மண்டலத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி கார்ட்டிசோல் (cortisol) எனும் ரசாயனத்தைச் சுரக்க வைக்கிறது. இது அட்ரினலின் (adrenalin) போன்று மன அழுத்தத்தை அதிகரிக்கும் திரவம். நீங்கள் அதிகம் கோபப்பட்டால், ஆவேசப்பட்டால் அட்ரினலின் சுரக்கும். கோபப்பட்டால் இதயம் அதிக ரத்தத்தை ரத்தக்குழாய்களுக்கு அனுப்பத் தயார் ஆகும். இதுவும் உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆக, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவேண்டும் எனில் நாம் நிறுத்த வேண்டியது உப்பை அல்ல. சர்க்கரை மற்றும் தானியத்தை. சந்தேகம் இருந்தால் உணவில் கொழுப்பை அதிகரித்து தானியத்தையும், சர்க்கரையையும் குறைத்துப் பாருங்கள். உயர் ரத்த அழுத்தம் குறைய ஆரம்பிக்கும். ஒரு சில மாதங்களில் கட்டுக்குள் வந்து இயல்பாகிவிடும். எனவே, பேலியோ உணவுமுறை மூலம் உயர் ரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும். இப்படி, பேலியோ மூலமாக உயர் அழுத்தத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்த சிலருடைய அனுபவங்களை அடுத்த வாரப் பதிவில் காண்போம். (தொடரும்) http://www.dinamani.com/junction/paleo-diet/2015/07/26/பகுதி-4---சாவித்திரியும்-இலியா/article2940000.ece Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கறுப்பி Posted September 24, 2015 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted September 24, 2015 பகுதி 5 - எதைச் சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம்?By நியாண்டர் செல்வன்First Published : 02 August 2015 10:00 AM ISTபேலியோ டயட் தொடர்புடைய வரலாறு மற்றும் அதன் அடிப்படை விவரங்களை இதுவரை பார்த்தோம். இப்போது பேலியோ உணவுமுறையில் பின்பற்றவேண்டிய விதிமுறைகளைப் பார்த்துவிடலாம். பேலியோ டயட்டில் அசைவ பேலியோ, சைவ பேலியோ என இருவகை உண்டு. சைவ பேலியோ முறை, தமிழில் உள்ள பேலியோ டயட் ஃபேஸ்புக் குழுமத்தால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். சரி, அசைவ பேலியோ டயட்டில் என்னென்ன சாப்பிடலாம்? காலை உணவு: 100 பாதாம் கொட்டைகள். பாதாமை வாணலியில் வறுத்து அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவிட்டு தோலுடன் உண்பது சிறந்தது. பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். (அதன் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.) மதிய உணவு: 4 முட்டைகள். முட்டையை மஞ்சள் கருவுடன் உண்ணவேண்டும். ஆம்லெட், ஆஃப்பாயில் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம். முட்டையுடன் உப்பு, வெங்காயம், தக்காளி போன்றவற்றைச் சேர்க்கலாம். மாலைச் சிற்றுண்டி: 1 கோப்பை பால் அருந்த வேண்டும். உடன் கால் கிலோ அளவிலான பேலியோ காய்கறிகளைச் சேர்க்கவேண்டும். காய்கறிகளை சாலட் ஆகவும், வாணலியில் நெய் விட்டு வணக்கி எடுத்தும் உண்ணலாம். இரவு உணவு: இறைச்சி எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியில் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றி இறைச்சி, மீன், தோலுடன் உள்ள கோழி, வாத்து போன்ற இறைச்சிகளைப் பசி அடங்கும் வரை கணக்கு பார்க்காமல் உண்ணலாம். தவிர்க்கவேண்டிய இறைச்சி வகைகள்: கொழுப்பு அகற்றப்பட்ட இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. (உதா: தோல் அகற்றப்பட்ட கோழி, மற்றும் தோல் அகற்றப்பட்ட மீன்). துரித உணவகங்களில் கிடைக்கும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட, ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட இறைச்சி உணவுகளைத் தவிர்க்கவேண்டும். கருவாடு (மிதமான அளவுகளில் உண்ணலாம். தினமும் வேண்டாம்). முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் உண்பது தவிர்க்கப்படவேண்டும். மஞ்சள் கருவுடன் சேர்த்த முழு முட்டையே உண்ணவேண்டும். எண்ணெயில் பொறிக்கப்பட்ட இறைச்சியைத் தவிர்க்கவேண்டும். சைவர்களுக்கான பேலியோ டயட்: காலை - மதிய உணவுகளும், மாலைச் சிற்றுண்டியும் அசைவ டயட்டில் இருப்பது போல பாதாம், முட்டை போன்றவற்றை இதிலும் எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவாக இறைச்சிக்குப் பதிலாக பனீர் மஞ்சூரியன், பனீர் டிக்கா, பனீர் பட்டர் மசாலா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இதையும் அளவு பாராது பசி அடங்கும் வரை உண்ணலாம். பேலியோவில் தவிர்க்கவேண்டியவை: உருளைக்கிழங்கு, பீன்ஸ் (அனைத்து வகைகளும்), சுண்டல், பச்சைப் பட்டாணி - பருப்புவகைகள் அனைத்தும், பயறுவகைகள் அனைத்தும், நிலக்கடலை, சோயா, டோஃபு (சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால்கட்டி), மீல்மேக்கர், அவரைக்காய், மரவள்ளி, சர்க்கரைவள்ளி, பனங்கிழங்கு, பலாக்காய், வாழைக்காய், பழங்கள் அனைத்தும் (அவகாடோ எனப்படும் வெண்ணெய்ப்பழம் தவிர்த்து) என்ன, இதெல்லாம் தினமும் அல்லது அடிக்கடி உண்ணும் உணவுகள், இதை எப்படித் தவிர்ப்ப்பது என்று யோசிக்கிறீர்களா? உடல்நலனா அல்லது நம் விருப்பமா இரண்டில் எது முக்கியம் என முடிவெடுத்துக்கொள்ளுங்கள். பேலியோவில் உண்ணக் கூடியவை: காளிபிளவர், பிராக்களி (Broccoli), முட்டைகோஸ், பாகற்காய், காரட், பீட்ரூட், தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், கத்திரிக்காய், சுண்டைக்காய், வாழைத்தண்டு, அனைத்துவகைக் கீரைகள், முருங்கை, ஆஸ்பாரகஸ் (Asparagus, அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த காய்கறி வகை. குச்சி போன்று இருக்கும்.), ருபார்ப் (Rhubarb, இளவேல் சீனி), ஆலிவ், செலரி (செலரிக்கீரை), வெள்ளரி, குடைமிளகாய், பச்சை, சிகப்பு மிளகாய், பூசணி, காளான், தேங்காய், எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மஞ்சள் கிழங்கு,அவகாடோ (Avocado),புடலங்காய், இந்த டயட்டில் அரிசி, பருப்பு, கோதுமை, சிறுதானியம் போன்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். பேக்கரிகளில், உணவகங்களில் விற்கப்படும் உணவுகள், முறுக்கு, சீடை போன்ற பலகாரங்கள், இனிப்பு வகைகள் மற்றும் இதர குப்பை உணவுகள் என இவை அனைத்தையும் அறவே தவிர்க்கவேண்டும். மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவை உண்பதே நலம். சமையல் எண்ணெயாக நெய், வெண்ணெய், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். சாலடுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம். இதுதான் எடைக் குறைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றைக் குணப்படுத்தும் பொதுவான பேலியோ டயட். சைவர்கள், அசைவர்கள் என இருவரும் பின்பற்றலாம். வசதி உள்ளவர்கள் பாதாம் சேர்க்கலாம், முடியாதவர்கள் பட்டர் டீ உட்கொள்ளலாம். முட்டை கூட சேர்க்காத சைவர்களும் முட்டைக்குப் பதில் பேலியோ காய்கறிகளை உண்டு பயனடைந்து வருகிறார்கள். சரி, பட்டர் டீ செய்முறையை இப்போது பார்த்துவிடலாம். பட்டர் டீ செய்முறை: திபெத், மலைகள் நிரம்பிய பகுதி. அங்கே யாக் எனப்படும் எருமை அதிக எண்ணிக்கையில் உள்ளது. யாக் எருமையின் பாலில் எடுக்கபடும் வெண்ணெயை வைத்து திபெத்தியர்கள் பட்டர் டீ தயாரிப்பார்கள். இதை காலை உணவாக அருந்தினால் நாலைந்து மணிநேரத்துக்குப் பசி எடுக்காது. யாக் எருமைக்கு நாம் எங்கே போவது என திகைக்கவேண்டாம். மாட்டுப்பால் வெண்ணெயிலேயே இதைத் தயாரிக்கலாம். தேவையான பொருள்கள்: பால்: 125 மிலி நீர்: 125 மிலி வெண்ணெய்: 30 கிராம் சர்க்கரை: 1/2 தேக்கரண்டி அளவு டீ தூள்: 1.5 தேக்கரண்டி அளவு அனைத்து பொருள்களையும் ஒன்றாக பாத்திரத்தில் விட்டுக் கலக்கவும். பிறகு, கொதிக்க விட்டு வடிகட்டி இறக்கவும். எளிய சமையல் முறையில் மிகச் சுவையான பட்டர் டீ தயார். * இந்த பேலியோ டயட்டில் எடைக் குறைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி தவிர இதர உடல் பிரச்னைகள், வியாதிகளை (உதா: கிட்னி பிரச்னை) கணக்கில் கொள்ளவில்லை. எனவே அதுபோன்ற நோய் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைகள் இன்றி இந்த டயட்டைப் பின்பற்றவேண்டாம். மேலும், இது கொழுப்பின் அடிப்படையில் அமைந்த டயட் என்பதால் இந்த உணவுகளை உட்கொள்வதால் கொலஸ்டிரால் அளவுகள் கூடும் வாய்ப்பு உள்ளது. அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொலஸ்டிரால் உடலுக்கு மிக அத்தியாவசியமான ஒரு மூலப்பொருள். இதனால் உங்கள் இதயத்துக்கு எந்த ஆபத்தும் கிடையாது. வரும் வாரங்களில், கொலஸ்டிரால் பற்றி இன்னும் விரிவாகப் பார்க்கலாம். ** ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவற்றுக்கு உடல்பருமனே காரணம் என்று பலர் நம்புகிறார்கள். நிச்சயம் உடல் பருமன் இவற்றுக்குக் காரணம் அல்ல. ஒன்று தெரியுமா, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதிகளுக்கான காரணம் எதுவோ அதுவே உடல் பருமனுக்கும் காரணமாக உள்ளது. இந்த மூன்றுக்கும் காரணம் இன்சுலின் என்பதைச் சென்ற வாரப் பதிவில் கண்டோம். பேலியோ டயட்டில் இன்சுலின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவதால் இந்த மூன்றின் சிக்கல்களும் சரியாகி விடுகின்றன. உங்களுக்குச் சர்க்கரை நோய் இருந்தால், இந்த டயட்டால் சர்க்கரை அளவுகள் (Blood Glucose level) இறங்கும். ஆனால், பேலியோ டயட்டைப் பின்பற்றும்போது முன்புபோலவே இன்சுலின் ஊசியை அதே அளவுகளில் தொடர்ந்து போட்டு வந்தாலோ, அல்லது சர்க்கரை வியாதிக்கான மெட்பார்மின் போன்ற மாத்திரைகளை அதே அளவுகளில் எடுத்து வந்தாலோ உங்களுக்கு ஹைப்போகிளைசெமியா (Low sugar) வரலாம். அதனால் இன்சுலின் ஊசி போடும் சர்க்கரை நோயாளிகள், தங்களுடைய ரத்த சர்க்கரை அளவை (Blood glucose levels) தொடர்ந்து கண்காணித்து, அதற்கு ஏற்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்து இன்சுலின் ஊசி அளவுகளைக் குறைத்துக்கொள்வது அவசியம். உதாரணமாக உங்களுக்கு ஃபாஸ்டிங் சர்க்கரை அளவு (Fasting Glucose levels) 140 மற்றும் வழக்கமான இட்லி, தோசை போன்ற தமிழ்நாட்டு உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு (Post prandial glucose levels) 200 உள்ளது என வைத்துக்கொள்வோம். நீங்கள் பேலியோ டயட்டைப் பின்பற்றினால் உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு, ஃபாஸ்டிங் சர்க்கரை அளவான 140 என்கிற அளவிலேயே இருக்கும். அல்லது சிறிதளவு மட்டுமே அதிகரித்து 142, 145 என்ற அளவுகளில் மட்டுமே இருக்கும். இந்தச் சூழலில் பழையபடி இன்சுலின் ஊசி எடுத்தால், ஹைப்போகிளைசெமியா வருகிற வாய்ப்பு உண்டு. எனவே, பேலியோ உணவைப் பின்பற்றும் முதல் நாளில் இருந்தே இன்சுலின் ஊசி அளவுகளைக் குறைக்கவேண்டும். * முட்டையுடன் கூடிய சைவ பேலியோ டயட்டைப் பின்பற்றி உயர் ரத்த அழுத்தத்தை விரட்டியவர், திருமதி. டாலிபாலா. பெங்களூரில் வசிக்கும் 54 வயது இல்லத்தரசியான இவர், சைவ பேலியோ டயட்டைப் பின்பற்றி சுமார் 17 கிலோ வரை எடையைக் குறைத்தது மட்டுமின்றி, பல ஆண்டுகளாக இருந்த உயர் ரத்த அழுத்தப் பிரச்னையிலிருந்தும் மீண்டு வந்துள்ளார். தன் டயட் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது: வாழ்க்கையில் இனிமேல் உடல் எடை குறையவே குறையாது என்கிற மனநிலையில் இருந்தேன். கூடவே சில உடல் உபாதைகளும் எனக்கு இருந்தது. வேறு ஒரு டயட்டால் என் எடை ஓரளவு குறைந்தாலும் அதனால் வேறுவிதமான உடல் பிரச்னைகள் ஏற்பட்டன. அதனால் அந்த டயட்டைக் கைவிட்டேன். பழைய எடையை மீண்டும் அடைய நேரிட்டது. அப்போதுதான் நானே எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஃபேஸ்புக்கில் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தின் அறிமுகம் கிடைத்தது. அதில் எடைக்குறைப்பு மற்றும் ஆரோக்கிய உடல்நலன் குறித்து படிக்க நிறைய இருக்கும். நியாண்டர் செல்வன் பரிந்துரைத்த தானியம் தவிர்த்த உணவுமுறை என்னை ஆச்சரியப்படுத்தியது. நிறைய கேள்விகளும் தோன்றின. முக்கியமாக இந்த உணவுமுறை, சைவ உணவுமுறையைப் பின்பற்றுபவர்களுக்குச் சரிப்பட்டு வருமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. உயர் கொழுப்பு உணவு என்று வரும்போது சைவர்களுக்கு அதிகத் தேர்வுகள் இல்லை என்பதால். ஆனாலும் இந்த டயட்டை முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது. உடல் பிரச்னைகளால் இழந்தது ஏராளம் என்பதால் இனி புதிதாக இழக்க எதுவும் இல்லை என்கிற மனோபாவத்துடனும் கூடவே வீட்டினரின் எதிர்ப்புகளுடனும் இந்த டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தேன். முட்டை, பாதாம், பனீர், காய்கறி என்று மிகக் குறைந்த அளவு உணவு வகைகளுடன் என்னுடைய பேலியோ டயட் ஆரம்பமானது. செல்வன் தவிர்க்கச் சொன்னதில் மிக முக்கியமானவை - தானியங்கள், சர்க்கரை, மாவுச்சத்து உணவுகள், ஹோட்டல் உணவுகள், நொறுக்குத் தீனிகள் போன்றவை. இதில் எனக்குச் சர்க்கரையைத் தவிர்ப்பது கடினமாக இருக்கவில்லை. காபிக்குச் சர்க்கரை போட்டுக் குடிப்பதில்லை என்பதால். ஆனால் டீ-க்குச் சர்க்கரை சேர்ப்பேன். அதனால் டீ-யைச் சர்க்கரை இல்லாமல் குடிக்க முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. (ஆனால் அதுவும் இப்போது பழகி விட்டது.) அதேபோல காபி குடிக்கவில்லையென்றால் எனக்குத் தலைவலி வரும். இந்த நிலையெல்லாம் இந்தியாவில்தான். அமெரிக்கா போன பிறகு காபியை விட்டு விட்டேன். தலைவலியும் வரவில்லை. (காபி குடிக்கவேண்டாம் என செல்வன் அறிவுறுத்தினார். காபியால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதால். பல வருடங்களாக ஒரு நாளைக்கு ஏழெட்டு காபி குடித்துப் பழகியிருந்தாலும் உடல் நலனை முன்னிட்டு காபியை விட்டுவிட்டேன்.) அரிசியைத் தவிர்ப்பது கஷ்டமாக இருக்கவில்லை. காரணம், வாரம் இரு முறைதான் சாதம் சாப்பிடுவேன். ஆனால், சப்பாத்தி உண்ணாமல் எப்படி இருக்க முடியும்? தினமும் மதியம் ஒன்று அல்லது இரண்டு சப்பாத்தி உண்பது பல வருடப் பழக்கம். முதல் இரண்டு நாள்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. எப்படியோ அதையும் தவிர்த்தபடி பேலியோ டயட்டைத் தொடர்தேன். இதனால் எனக்கு எந்தத் தொல்லையும் ஏற்படவில்லை. தானியம் இல்லாத உணவுமுறை தலைவலியை உண்டாக்கும், வாந்தி வரும், மயக்கம் ஏற்படும் என்றெல்லாம் சிலர் பயமுறுத்தினார்கள். ஆனால், எனக்கு அப்படி எதுவும் ஆகவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் பசித்தது. பிறகு அதுவும் பழகிவிட்டது. நிறைய காய்கறிகள், பனீர், பாதாம் எல்லாம் உண்பேன். முதலில் முட்டை சாப்பிடுவதை நிறுத்தியிருந்தேன். பிறகு அதையும் சாப்பிட ஆரம்பித்ததால் பசி ஏற்படும் பிரச்னையும் அகன்றது. பல வருடங்களாக கேல்லோக்ஸ் (kellogs) தான் எனது காலை உணவு . இல்லாவிட்டால் ஓட்ஸ் (oats). இந்த இரண்டு உணவுகளும் என் எடையைக் குறைக்க உதவும் என்று நம்பியிருந்தேன். பேலியோ டயட்டில் சீரியல் உணவுக்கு (breakfast cereal) இடமில்லை. அதனால் அவற்றையும் தவிர்த்தேன். அமெரிக்காவில் இருந்தபோது உணவகங்களில் உண்ணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கே சைவ உணவு என்றாலே வெறும் இலை, தழை நிரம்பிய சாலட்தான் அதிகம் கிடைக்கும் என்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பேலியோ உணவு முறையினால், முதல் வாரத்திலேயே பலன் தெரிய ஆரம்பித்தது. உடல் எடை குறைந்தது. ரத்த அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக செட் ஆனது. மாத முடிவில் ரத்தப் பரிசோதனை செய்துகொண்டேன். அளவுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இதனால், பல வருடங்களாக எடுத்துக்கொண்டிருந்த கொலஸ்டிரால் குறைப்பு மாத்திரையான ஸ்டாடினை (statin) நிறுத்தினேன். முதல் ஏழு மாதங்களில், கிட்டத்தட்ட பத்துகிலோ எடை குறைந்தது. என் வயதுக்கு இந்த முன்னேற்றம் மிக அதிகம்தான். எடை குறைந்ததால் நடப்பது எளிதாகிவிட்டது. ஆறு கிலோமீட்டர் தொடர்ந்து நடக்க முடிகிறது. இந்த உணவுப் பழக்கத்தால் எனக்கு ஏற்பட்ட நன்மைகளை இங்கே பட்டியலிடுகிறேன். எல்லா நன்மைகளையும் என்னால் ஞாபகம் வைத்துச் சொல்லமுடியாவிட்டாலும், முடிந்ததைச் சொல்கிறேன்: 54 வயதில் சைவ உணவுப் பழக்கம் கொண்ட நான் முட்டை மட்டும் சேர்த்து கொண்டு இந்த டயட்டைப் பின்பற்றியதால் கிடைத்த நன்மைகள்: 1. எடைக் குறைப்பு. 17 கிலோ. 2. முதலில் உயர் ரத்த அழுத்தத்தின் அளவு மூன்று மாத்திரைகளுடன் 140/90 என்றிருந்தது. ஆனால், பேலியோ டயட்டால் மளமளவென 110/70க்குச் சரிந்தது. இன்று வரை இதே அளவுதான். ஒரே ஒரு மாத்திரை மட்டுமே இப்போது எடுத்துக்கொள்கிறேன். ‘ரத்த அழுத்தம் இறங்கி நார்மலாக ஆனாலும், சில வருடங்கள் மாத்திரையை நிறுத்தவேண்டாம்’ என மருத்துவர் அறிவுறுத்தியதால் ஒரு மாத்திரையை மட்டும் உட்கொள்கிறேன். பத்து ஆண்டுகளாக மாத்திரை எடுத்து வருவதால், அதை மெதுவாகத்தான் நிறுத்தவேண்டும் என்பது என் மருத்துவரின் பரிந்துரை. ஆனால் என்னுடைய ஃபிரஷர் அளவுகள் நார்மலாகவே உள்ளன. 3. இதயத்துடிப்பு மிக அதிகமாக இருந்ததால் அதற்காகப் பல வருடங்களாக எடுத்துவந்த மாத்திரையையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறுத்திவிட்டேன். 4. கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும் ஸ்டாட்டின் (Statin) என்கிற மாத்திரையைப் பல வருடங்களாக எடுத்துக் கொண்டிருந்தேன். பேலியோ டயட்டின் தைரியத்தில் அதையும் நானே நிறுத்திவிட்டேன். பிறகு, என் மருத்துவரும் அதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார். ரத்தப் பரிசோதனை அறிக்கையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. 5. அடுத்தபடியாக என் தோல் நல்ல பளபளப்பாக மாறியுள்ளது. இது நானாகச் சொல்லவில்லை. நண்பர்களின் கருத்து. 6. முன்பு, நடைப் பயிற்சியில் என்னால் ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடக்கமுடியாது. இப்போது சர்வ சாதாரணமாக ஆறு கிலோமீட்டருக்கு மேல் நடக்கிறேன். 7. எனக்குக் கொஞ்சம் ஹார்மோன் பிரச்சனை உண்டு. அதன் பாதிப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது. 8. உடல் சோர்வு ஏற்படுவதில்லை. 9. காலில் தசைப்பிடிப்பு அடிக்கடி வரும். அது சுத்தமாகக் குறைந்துவிட்டது. 10. முதலில் இருந்த பல் வலித் தொந்தரவும் இப்போது குறைந்துவிட்டது. நூறு பாதாம் தினமும் சாப்பிடுகிறேனே! இப்படிப் பல விதங்களில் எனக்கு நன்மைகள். பேலியோ டயட் என்பது வெறும் டயட்டாக மட்டும் இல்லாமல், என் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டது. டாலிபாலா அவர்களின் எடைக் குறைப்புக்கு முந்தைய/பிந்தைய புகைப்படங்கள் இவை. முதல் படம் - பிப்ரவரி மாதம் 2013ம் ஆண்டு அவர் பேலியோ டயட்டை ஆரம்பிக்கும் முன்பு எடுக்கப்பட்டது. இரண்டாவது படம் - ஜூலை 2015. எவ்வளவு வித்தியாசம், முன்னேற்றம்! (தொடரும்) http://www.dinamani.com/junction/paleo-diet/2015/08/02/பகுதி-5---எதைச்-சாப்பிடலாம்-எத/article2952182.ece Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கறுப்பி Posted September 27, 2015 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted September 27, 2015 பகுதி 6 - கொலஸ்டிரால் எனும் நண்பன்!By - நியாண்டர் செல்வன்First Published : 09 August 2015 10:00 AM ISTகொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதலா? கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு (Saturated fat) போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே பலரும் பதறுவார்கள். அதிலும் முட்டை, சிகப்பு இறைச்சி (Red meat), பன்றிக்கொழுப்பு, வெண்ணெய் என்றால் அவ்வளவுதான். உடனே வரும் கேள்வி – இவற்றைச் சாப்பிட்டால் மாரடைப்பு வரும் அல்லவா?’ சிகப்பு இறைச்சியும், நிறைவுற்ற கொழுப்பும் இதயத்துக்குக் கெடுதலானவை என்று பலரும் நினைப்பது நம் இதயத்துக்குத் தெரிந்தால், விழுந்து விழுந்து சிரிக்கும். ஏன் எனில், நம் இதயமே மிகப்பெரிய சிகப்பு இறைச்சித் துண்டுதான். முழுக்க முழுக்க சிகப்பு இறைச்சியாலும், நிறைவுற்ற கொழுப்பாலும் ஆனதுதான். இதயம் மட்டுமல்ல, மனித உடலே அப்படித் தான். அதிலும் மனித மூளை என்பது மிகப்பெரிய கொலஸ்டிரால் பந்து. உள் உறுப்புக்களில் மிக அதிக அளவில் கொலஸ்டிராலைத் தேக்கி இருக்கும் மனித உறுப்பு, மூளையே. வேறு எந்த உறுப்புக்களை விடவும் பத்து மடங்கு அதிக கொலஸ்டிரால் நம் மூளையில் உள்ளது. கொலஸ்டிரால் நம் தோழன். அதிலும் உற்ற தோழன். நம் உயிர் காத்து, ஆண்களுக்கு ஆண்மையையும், பெண்களுக்குப் பெண்மையையும் அளித்து, மாரடைப்பின் பிடியில் இருந்து நம்மைக் காக்கும் தோழன். கர்ணனுக்கு துரியோதனன் போல, அவ்வைக்கு அதியமான் போல, அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா போல நமக்கு உற்ற நண்பன். கொலஸ்டிரால் இல்லையென்றால் நாம் இல்லை, நம் சந்ததி இல்லை, மனித இனம் மட்டுமல்ல, பாலூட்டிகள் என்கிற இனமே இல்லை. கொலஸ்டிரால் என்பது பசை மாதிரி உள்ள ஒரு வகைப் பொருள். பலரும் நினைப்பது போல அதில் கலோரி எல்லாம் கிடையாது. கொலஸ்டிரால் உடலுக்குத் தேவையான மிக, மிக முக்கியமான ஒரு மூலப்பொருள். நம் உடல் இயங்க பல ஹார்மோன்கள் அவசியமானவை. உதாரணமாக ஆண்களுக்கு ஆண்மையை அளிப்பது டெஸ்டோஸ்டிரான் (Testosterone) எனும் ஹார்மோன். இந்த ஹார்மோன்தான் உயிர் அணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. ஆண்களுக்கு முடி வளர்வது முதல் விந்தணு உற்பத்தி வரை அனைத்துக்கும் மூலக்காரணி டெஸ்டோஸ்டிரான் தான். ஆண்களுக்கு வலிமையை அளிப்பதும் இதுதான். அதனால்தான் பெண்களை விட ஆண்களுக்கு அதிக உடல் வலு உள்ளது. பெண்களுக்குப் பெண்மையை அளிப்பது ஈஸ்ட்ரோஜென் (Estrogen) எனும் ஹார்மோன். ஈஸ்ட்ரோஜெனால்தான் பெண்கள் வயதுக்கு வருகிறார்கள், மார்பக வளர்ச்சியைப் பெறுகிறார்கள். பெண்களுக்கு, கருமுட்டை வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அவசியம். கொலஸ்டிராலுக்கும் ஹார்மோன்களுக்கும் இடையே உள்ள உறவு வெண்ணெய்க்கும், நெய்க்கும் இடையே உள்ள உறவு போன்றது. அதாவது உடலால் உற்பத்தி செய்யப்படுகிற அனைத்து ஹார்மோன்களுக்கான மூலப்பொருளே கொலஸ்டிரால்தான். உடலில் வேறு எந்த மூலப்பொருள் தட்டுப்பாடு வந்தாலும் ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால், கொலஸ்டிரால் உற்பத்தி மட்டும் தடைபட்டால் அவ்வளவுதான். பல ஹார்மோன்களின் உற்பத்தி நின்று, உடலே ஸ்தம்பித்துவிடும். இத்தனை முக்கிய மூலப்பொருளான கொலஸ்டிராலை, நம் உடல் தானே தயாரித்துக்கொள்ளும் வல்லமையைப் பெற்றுள்ளது. நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும் சக்தி உள்ளது. இருப்பினும் நமக்குத் தேவையான கொலஸ்டிராலை நம் உணவு மூலமாகவும் பெறலாம். அதாவது இறைச்சி, முட்டை, பால், மீன் போன்ற உணவுகளில் கொலஸ்டிரால் உண்டு. அதே சமயம் எந்த ஒரு தாவர உணவிலும் கொலஸ்டிரால் கிடையாது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள் உள்ள சவ்வை (Membrane) உற்பத்தி செய்ய கொலஸ்டிரால் அவசியமாகிறது. மேலும், ஒவ்வொரு செல்லிலும் நீர் புகாதபடி, ‘வாட்டர் ஃப்ரூப்’ ஆக செல்களைக் காப்பாற்றுகிறது. கொலஸ்டிரால் இல்லையெனில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரோஜெஸ்டிரான் (Progesterone), டெஸ்டோஸ்டிரான் (Testosterone), அட்ரினலின் (Adrenaline), கார்ட்டிசோல் (Cortisol) ப்ரக்னனோலோன் (Pregnenolone) போன்ற ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி போன்றவை நம் உடலில் உற்பத்தி ஆகாது. இதனால் நம் உடல் கொலஸ்டிராலை உற்பத்தி செய்ய அதிக முயற்சி எடுக்கிறது. இத்தனை பணிகளுக்கும் தினமும் 2000 மி.கி. கொலஸ்டிரால் தேவை. அதனால், கல்லீரல் (Liver) நம் உணவில் இருந்து கொலஸ்டிராலை உற்பத்தி செய்வதில் பெரும் ஆற்றலையும், நேரத்தையும் செலவழிக்கிறது. உணவில் இருந்து கொலஸ்டிராலை நம் உடல் உற்பத்தி செய்வது எளிதான காரியம் அல்ல. அது 30 படிகள் கொண்ட ஒரு வழிமுறை. இதைச் செய்வதால் கல்லீரலுக்கு அதிக வேலை. அதற்குப் பதிலாக, உணவின் மூலமாகவே நம் உடலுக்கு கொலஸ்டிரால் கிடைத்துவிட்டால்? கல்லீரலுக்கு அதிக ஓய்வு கிடைக்கும் இல்லையா! இதனால் அது புரதத்தை ஜீரணம் செய்தல், பைல் ஆசிட் (Bile acid) எனப்படும் ஜீரண ஆசிட்டை உற்பத்தி செய்தல் போன்ற வேறு வேலைகளில் ஈடுபடும். ஆக, எத்தனைக்கு எத்தனை கொலஸ்டிரால் நம் உணவில் அதிகமாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை நம் கல்லீரல் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்கும். உணவின் வழியாக கல்லீரலுக்கு கொலஸ்டிராலைக் கொடுப்பது என்பது தினமும் ஐந்து மணிநேரம் கையால் துணி துவைக்கும் இல்லத்தரசிக்குச் சலவை இயந்திரம் வாங்கிக் கொடுப்பது மாதிரி. நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் கொலஸ்டிராலுக்கும் முட்டை, இறைச்சி, வெண்ணெய் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் கொலஸ்டிராலுக்கும் துளி வேறுபாடு கிடையாது. இரண்டும் ஒன்றே. முட்டையில் உள்ள கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதல் என்று சொன்னால், நம் கல்லீரல் மாங்கு மாங்கு என்று உற்பத்தி செய்யும் கொலஸ்டிராலும் கெடுதலானது என அர்த்தம் வரும் இல்லையா? உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் பொருளை எதற்காக நம் கல்லீரல் உற்பத்தி செய்யவேண்டும்? கொஞ்சம் யோசியுங்கள். நம் உடலுக்குத் தினமும் தேவைப்படும் கொலஸ்டிரால் அளவு - 2000 மிகி. அதாவது கிட்டத்தட்ட பத்து முட்டைகளில் உள்ள அளவு. தினமும் எட்டு முட்டைகள் சாப்பிட்டால், நம் கல்லீரலுக்குச் சுமார் 1600 மி.கி. கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும் வேலை மிச்சம் ஆகும். மீதமுள்ள நானூறு மி.கி. கொலஸ்டிராலை மட்டும் அது உற்பத்தி செய்துவிட்டு ஹாயாக ஓய்வெடுக்கும். எனவே, கொலஸ்டிரால் உள்ள உணவுகளை உண்டால் ஆபத்து என்று எச்சரிப்பதில் எந்த அர்த்தமும் இருக்கமுடியாது இல்லையா? ஒரு அமெரிக்கருக்கு அவரது உணவின் மூலம் தினமும் 400 மி.கி. அளவுள்ள கொலஸ்டிரால் கிடைக்கிறது (அமெரிக்க அரசின் பரிந்துரை 300 மி.கி.). இந்திய அரசு, உணவில் தினமும் 365 மி.கி. மட்டுமே கொலஸ்டிரால் இருக்கவேண்டும் எனப் பரிந்துரை செய்கிறது. இந்தப் பரிந்துரைகள் அபத்தமானவை. 2000 மி.கி. கொலஸ்டிராலை உணவின் மூலமாகவே அடைய முடியுமா? பலராலும் முடியாது என்பதே உண்மை. உதாரணமாக சைவர்கள் தினம் 2 கப் பால் மட்டும் அருந்தினால் கிடைக்கும் கொலஸ்டிரால் அளவு வெறும் 50 மி.கி. தான். அதே நாலு முட்டையை உணவில் சேர்த்தால் 800 மி.கி. கொலஸ்டிரால் கிடைக்கிறது. உடன் அரை கிலோ சிக்கன் சேர்த்தால் கூடுதலாக 500 மி.கி. கொலஸ்டிரால். சைவ உணவை விட அசைவ உணவில் அதிக அளவிலான கொலஸ்டிரால் உள்ளது. இதனால்தான் சைவர்களுக்கு அதிக அளவில் ஹார்மோன் பிரச்னைகள், ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்புமிக்க கல்லீரல் பிரச்னைகள் (கொழுப்பானது கல்லீரலில் படிந்து கல்லீரலின் பருமன் அதிகரிப்பதே ஃபேட்டி லிவர்.) போன்றவை ஏற்படுகின்றன. கல்லீரலில் இருந்து உடலெங்கும் உள்ள செல்களுக்கு கொலஸ்டிராலைக் கொண்டு சேர்ப்பது, கெட்ட கொழுப்பு (LDL- Low density Lipoprotein). செல்களில் படிந்திருக்கும் கொலஸ்டிராலை, மீண்டும் கல்லீரலுக்கு எடுத்துச் சென்று வெளியேற்ற உதவுவது, நல்ல கொழுப்பு (HDL - High density Lipoprotein). உங்கள் கொலஸ்டிரால் அறிக்கையில் எல்டிஎல் அதிகமாக இருந்தால் ‘கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகிவிட்டது’ என மருத்துவர் கூறுவார். நீங்களும் பதறுவீர்கள். ஆனால் கெட்ட கொலஸ்டிரால் எனப் பெயர் வாங்கியுள்ள இந்த எல்டிஎல், உண்மையில் கொலஸ்டிராலே அல்ல. அது ஒருவகை புரதம் மட்டுமே. கொழுப்பு, நீரில் கலக்காது என்பதை நினைவில் கொள்க. அதனால் கொலஸ்டிராலை எல்டிஎல் எனும் புரதத்துக்குள் ஏற்றும் நம் கல்லீரல், ரத்தத்தின் மூலமாக உடலின் செல்களுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கிறது. இந்த எல்டிஎல், இதுபோல கொலஸ்டிராலைச் சுமந்து செல்வதால்தான் ஹார்மோன்கள் உற்பத்தி அனைத்தும் தவறாமல் நிகழ்கிறது. எல்.டி.எல் தான் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்களையும் செல்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கிறது. உடலில் கொலஸ்டிரால் அளவுகள் குறைந்தால் பைத்தியம் பிடித்தல், தற்கொலை எண்ணம் தோன்றுதல், ஹார்மோன் குறைபாடு, ஆண்மைக் குறைபாடு, மாரடைப்பு போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். இதுவரை படித்து வருபவர்களுக்கு ஒரு கேள்வி நிச்சயம் தோன்றும். கொலஸ்டிரால் இத்தனை முக்கிய மூலப்பொருள் என்பது மருத்துவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உணவியல் நிபுணர்களுக்கும் தெரியாதா? பிறகு ஏன் கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதல் என்று இத்தனை நாளாக எச்சரித்து வந்தார்கள்? ஒரு எளிய உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை என்று வைத்துக்கொள்வோம். வில்லன் ஒருவரைக் கொலை செய்துவிடுகிறான். அந்த இடத்துக்கு நம் அப்பாவி கதாநாயகன் வருகிறான். கொலை செய்யப்பட்டவரின் உடலில் சொருகப்பட்டிருந்த கத்தியை எடுக்கிறான். அவன் கைரேகை அதில் படிகிறது. அப்போது அந்தக் காட்சியைப் பார்க்கும் ஒருவர், ‘அய்யோ கொலை செய்துவிட்டாயா?’ எனச் சத்தம் போடுகிறார். அவரே போலீஸிடம் புகார் கூறுகிறார். போலீஸும் ‘கதாநாயகனின் கைரேகை கத்தியில் இருந்தது’ என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து, தண்டனை வாங்கித் தருகிறது. அதன்பின் கதாநாயகன் சிறையில் இருந்து தப்பி, தான் நல்லவன் என்பதை நிரூபிக்கிறான். உண்மையான கொலைகாரன் கூண்டில் ஏற்றப்படுகிறான். ‘கொலஸ்டிரால் எனும் நண்பன்’ படத்தின் கதையும் இதுதான். இங்கே கொல்லப்பட்டது நம் இதயம். கொலைகாரன் என தவறாகப் புரிந்து கொள்ளபட்ட கதாநாயகன் - கொலஸ்டிரால். கொலஸ்டிரால்தான் கொலைக்குக் காரணம் என புகார் கொடுப்பவர்கள், மருத்துவர்கள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸைத்தான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதாவது பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட கொலஸ்டிரால், தான் நல்லவன் என்பதை நிருபித்து, உண்மையான கொலையாளிக்குத் தண்டனை வாங்கித் தரும் நேரம் இது. எனில், வில்லன் யார்? இன்ஃப்ளமேஷன் (Inflammation) எனப்படும் உள்காயம். மாரடைப்பின் காரணி இதுவே. அப்படியானால் உள்காயத்தால் உண்டாகும் மாரடைப்புக்கு, கொலஸ்டிரால் மீது ஏன் பழி சுமத்தப்படுகிறது? மருத்துவர்கள் ஏன் அவ்வாறு புகார் தெரிவிக்கிறார்கள்? சினிமாவில், கதாநாயகன் கத்தியுடன் இருக்கும்போது ஒருவர் பார்த்துவிடுகிறார், போலீஸில் புகார் தெரிவிக்கிறார் என்று பார்த்தோம். இங்கும் அந்தக் கதைதான். மாரடைப்பு வந்து இறந்தவர்களின் இதய நாளங்களை திறந்து பார்த்தபோது, அதில் முழுக்க கொலஸ்டிரால் இருந்தது. கொலஸ்டிரால் இதயநாளச் சுவர்களில் படிவதால், ரத்த ஓட்டம் தடைபடுகிறது; மாரடைப்பு நிகழ்கிறது. எனவே, எந்தளவுக்கு இதய நாளங்களில் கொலஸ்டிரால் படிகிறதோ அந்தளவுக்கு மாரடைப்புக்கான அபாயம் உண்டாகும். இப்படித்தான் மருத்துவர்கள் நம் கதாநாயகன் மீது பழி சுமத்தினார்கள். சினிமாவில், கத்தி சொருகப்பட்டிருந்தவரைக் காப்பாற்ற கத்தியை வெளியே எடுத்தான் கதாநாயகன். அதேபோல, நம் உயிரைக் காக்கவே கொலஸ்டிரால் ரத்த நாளங்களில் படிகிறது. அதாவது, ரத்த நாளங்களில் உள்காயம் எனப்படும் இன்ஃப்ளமேஷன் உருவாகிறது. நம் தோலில் காயம் பட்டால் அங்கே எரிச்சல் வந்து புண் ஆகும். புண்ணை ஆறவைக்க மேலே தோல் படியும் அல்லவா? அதேபோல இதய நாளங்களில் உள்காயம் ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த மேலே பூசப்படும் மருந்தே எல்டிஎல் கொலஸ்டிரால். எல்டிஎல் கொலஸ்டிரால்தான் உள்காயத்தை ஆற வைக்கிறது. ஆனால், அதே இடத்தில் உள்காயம் மேலும் மேலும் ஏற்படும்போது, மேலே அதிக அளவில் எல்டிஎல் படிகிறது. இப்படிக் காயம் ஏற்படுதலும், அதன் மேலே கொலஸ்டிரால் பூசப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதால், ஒரு கட்டத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு வருகிறது. ஆக, கதாநாயகனான கொலஸ்டிரால், இங்கே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ரத்த நாளங்களில் உள்காயம் ஏற்படாமல் இருந்தால் எல்டிஎல் கொலஸ்டிராலால் எவ்விதக் கெடுதலும் ஏற்படாது. உண்மையில், மொத்த கொலஸ்டிராலின் அளவு 300, 400, 500 ஆக இருந்தாலும் எந்த ஆபத்தும் கிடையாது. நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதே உள்காயத்தால்தான், கொலஸ்டிராலால் அல்ல. அப்படியானால் உள்காயம் ஏன் உண்டாகிறது? இதற்கான காரணங்களைப் பார்க்கலாம். எளிய மாவுச்சத்து உணவுகளை (கார்போஹைட்ரேட்) உண்பதால் உள்காயம் உண்டாகும். அதாவது வெள்ளை அரிசி, சர்க்கரை, மைதா போன்றவை. மாறுதல் அடையும் கொழுப்பு (Trans fat) எனப்படும் செயற்கைக் கொழுப்புகளை உண்பதாலும் உள்காயம் உண்டாகும். சமையலுக்கு நீங்கள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயை எடுத்துக்கொள்வோம். செக்கில் ஆட்டி எடுத்த சூரியகாந்தி எண்ணெயை யாரும் பார்த்திருக்க முடியாது. காரணம் அது அதிகச் சூடு தாங்காது. அந்த எண்ணெயை வைத்து வடை செய்ய முயன்றால், எண்ணெயைக் கொதிக்க வைத்தவுடன் அது எரிந்து புகைமண்டலத்தை வீடெங்கும் பரப்பிவிடும். இதற்காக சூரியகாந்தி, கனோலா, சஃபோலா, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்கள், லேபில் ஹைட்ரஜனேற்றம் என்கிற வேதிவினைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவற்றின் கொழுப்பில் ஒரு ஹைட்ரஜன் அணுவைச் செயற்கையாக உள்ளே நுழைக்கிறார்கள். இதனால் அந்த எண்ணெய்களின் கொழுப்புகள் திரிந்து டிரான்ஸ் ஃபேட் எனும் வகை கொழுப்பாக மாறிவிடுகிறது. அதன்பின் இந்த எண்ணெய்கள் ஜம் என சூடு தாங்குகின்றன. வடை, பூரி என சமையலுக்கு ஏற்றதாகிவிடுகிறது. இதன்பின் இந்தச் செயற்கைக் கொழுப்புகள் என்ன ஆகின்றன? அவை நம் கல்லீரலுக்குச் செல்கின்றன. நம் உடலுக்கு இயற்கைக் கொழுப்புதான் நன்குப் பழக்கம்; இதுபோல உருவாக்கப்படும் செயற்கைக் கொழுப்பு வகைகளை என்ன செய்வது என்று உடலுக்குத் தெரியாது. இதனால் டிரான்ஸ் ஃபேட்டால் உள்காயம் அதிகரிக்கிறது. மாரடைப்புக்கு மட்டுமல்ல, பல வகை வியாதிகளுக்கும் உள்காயமே காரணம். உள்காயம் இதயச் சுவர்களில் மட்டும் வராது அல்லவா? உடல் உறுப்புக்கள் அனைத்திலும் ஏற்படும். குடல் சுவர்களில் உண்டாகும் உள்காயத்தால் தீராத வயிற்றுவலி ஏற்பட வாய்ப்புண்டு. முதுகெலும்பில் ஏற்படும் உள்காயத்தால் தீராத முதுகுவலி வந்து அறுவை சிகிச்சை மூலம் முதுகுத்தண்டின் சில டிஸ்குகளை அகற்றும் நிலைக்கு ஆளாக நேரிடும். அத்துடன் மூட்டில் வரும் உள்காயத்தால் முடக்குவாத நோய் நம்மைத் தாக்கக்கூடும். வடைக்கு ஆசைப்பட்டு வியாதியை தேடிக்கொள்வது என்பது இதுதான் இல்லையா? தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். இந்தக் குறளுக்கு என்ன அர்த்தம்? நல்லவன் மீது சந்தேகப்படுவதும் கெட்டவனை நம்புவதும் தீராத துன்பத்தைத் தரும். இங்கும் அதே கதைதானே. நல்லவனான கொலஸ்டிராலை கெட்டவன் என்றோம்; ஆனால், கெட்டக் குணங்கள் கொண்ட தாவர எண்ணெய்களையும், தீட்டிய வெள்ளை அரிசியையும் நல்லது என நம்பி மோசம் போனோம். தீராத துன்பத்தை அனுபவித்தோம். இனிமேலாவது விழித்துக்கொள்வோம். (தொடரும்) http://www.dinamani.com/junction/paleo-diet/2015/08/09/பகுதி-6---கொலஸ்டிரால்-எனும்-நண/article2964209.ece Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரதி Posted September 27, 2015 கருத்துக்கள உறவுகள் Share Posted September 27, 2015 கறுப்பி இணைக்கும் இந்தக் கட்டுரை யாராவது வாசிப்பது உண்டா?...இந்த கட்டுரை பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்களேன். Link to comment Share on other sites More sharing options...
spyder12uk Posted September 27, 2015 Share Posted September 27, 2015 பிரயோசனமான கட்டுரை நன்றி கறுப்பிக்கு இதுவரை 803 பேர் வந்து போய் உள்ளனர் ரதிக்கா . Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted September 27, 2015 கருத்துக்கள உறவுகள் Share Posted September 27, 2015 வாசிக்கிறதா ! என்ன கேள்வி .... நான் மேலே குறிப்பிட்டபடி "பட்டர் டீ" அப்பப்ப போட்டுக் குடிக்கிறன்..., ரொம்ப நல்லாயிருக்கு...! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கறுப்பி Posted September 29, 2015 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted September 29, 2015 பகுதி 7 - தானியம் எனும் எமன்!By - நியாண்டர் செல்வன்First Published : 16 August 2015 10:00 AM ISTதானியம் என இங்கே குறிப்பிடுவது அரிசி, கோதுமை, ராகி, கம்பு, சோளம் போன்றவற்றையே. தற்போது கின்வா (Quinoa), ஓட்ஸ், பார்லி போன்ற மேலைநாட்டுத் தானிய வகைகளும் பிரபலமாகி வருகின்றன. இவற்றின் குணங்களில் பெரிய வேறுபாடு இல்லை. எனவே, இந்தத் தானியங்களையும் எமன் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். தானியத்தை எமன் எனக் குறிப்பிடுவதால் பலரும் அதிர்ச்சி அடையலாம். ஏனெனில் இட்லி, தோசை, பணியாரம் போன்ற உணவுகள் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுபவை. மேலைநாட்டு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்குக் காலை உணவாக ரொட்டிகளை வழங்குவார்கள். அதேபோல நம் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குக் காலை உணவாக இட்லியை சாப்பிடச் சொல்வார்கள். சர்க்கரை வந்தால் கோதுமை சாப்பிடவேண்டும் என்பது பல சர்க்கரை நோயாளிகளுக்குக் கூறப்படும் அறிவுரை. இதற்குக் காரணம், தமிழக உணவுகள், பெரும்பாலும் அரிசியை அடிப்படையாகக் கொண்டவை. இதன் அடிப்படையில், அரிசிக்குப் பதில் கோதுமையைச் சாப்பிடச் சொன்னால், மக்கள் குறைவாகச் சாப்பிடுவார்கள் என எண்ணி அந்த அறிவுரை வழங்கப்படுகிறது. இட்லி என்றால் பத்து, பன்னிரண்டு இட்லிகளை விழுங்குபவர்கள் கூட சப்பாத்தி, ரொட்டி என்றால் குறைவாகச் சாப்பிடுவதைக் காணமுடியும். தமிழ்நாட்டில் இப்படி என்றால் வடநாட்டில் என்ன நடக்கும் தெரியுமா? கோதுமையை அடிப்படையாகக் கொண்ட வடநாட்டில், சர்க்கரை நோயாளிகளிடம் கோதுமைக்குப் பதில் அரிசி சாப்பிட அறிவுறுத்தப்படும்! அதே காரணம்தான். அரிசி அவர்களுக்குப் பிடிக்காது என்பதால் குறைவாகச் சாப்பிடுவார்கள். நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும், ஆரோக்கிய உணவு என பலரும் நம்பும் இட்லி, சப்பாத்தியால் உடல்நலனுக்கு எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. ஆனால், இவற்றினால் ஏற்படும் தீமைகள் அளவற்றவை. மனிதனுக்கு வரும் பல்வேறு வியாதிகளுக்கு இவை காரணமாக அமைகின்றன. தீட்டிய வெள்ளை அரிசி மற்றும் மைதா போன்றவை கெடுதல் என்பது தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் பரவலாகத் தெரிகிற விஷயம். ஆனால் பலரும் இதற்கு மாற்றாக சிறுதானியங்களையும், தீட்டாத முழு தானியங்களையும் தேடிச்செல்கிறார்கள். பல உணவகங்களில் சிறுதானிய உணவுகள் விற்கப்படுகின்றன. சிறுதானிய விழாக்கள் நடைபெறுகின்றன. குதிரைவாலி அரிசி, கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு அடை, கம்பு புட்டு, சோளதோசை போன்ற கிராம மக்களின் உணவுகள் நகர்ப்புறங்களிலும் பிரபலமாகி வருகின்றன. இங்கே வருத்தத்துடன் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். கைக்குத்தல் அரிசி, கம்பு, ராகி, சோளம், கோதுமை போன்றவை தீட்டிய வெள்ளை அரிசி, மைதாவுக்குச் சமமாக உடலுக்குக் கேடு விளைவிப்பவையே. தானியங்களை நாம் உண்ண ஆரம்பித்து 10,000 ஆண்டுகளே ஆகின்றன. மனித இனத்தின் வரலாறு 1.6 கோடி ஆண்டுகள் பழமையானது. இந்த 1.6 கோடி ஆண்டுகளில் கடைசி பத்தாயிரம் ஆண்டுகளில் மட்டுமே நாம் அரிசி, கோதுமை, சோளம் போன்றவற்றை உண்ணத் தொடங்கியுள்ளோம். ஆக மனிதனின் 99.99% மரபணுக்கள் - தானியம் சாராமல், விவசாயம் செய்யத் தொடங்கும் முன்பு இருந்த காலகட்டத்தில் அதாவது இறைச்சி, காய்கறிகள் உண்ட காலத்தில் உருவானவை. அதனால் என்ன? பத்தாயிரம் ஆண்டுகள் போதாதா, நம் மரபணுக்களுக்குத் தானியத்துடன் பரிச்சயம் ஏற்பட என நீங்கள் கேட்கலாம். ஆனால், ஒரு சராசரி மனிதன் வாழும் காலகட்டத்துடன் ஒப்பிட்டால் பத்தாயிரம் ஆண்டுகள் என்பது மிகப்பெரிய கால அளவாகத் தோன்றும். ஆனால், மரபணுக்களைப் பொறுத்தவரை பத்தாயிரம் ஆண்டுகள் என்பது, கண்ணிமைக்கும் பொழுதுக்கே சமமானவை. இந்தப் பத்தாயிரம் ஆண்டு காலகட்டத்தில் நம் மரபணுக்களில் வெகு குறைந்த அளவிலான மாற்றங்களே நிகழ்ந்துள்ளன. ஒரு சிறிய உதாரணம். சுமார் 42 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புவரை நாம் நாலு கால் மிருகங்கள்தான். அன்று, நம் முன்னோர்கள் மரங்களில் நான்கு கால்களைப் பயன்படுத்தி கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருந்தார்கள். பிறகு, ஏதோ ஒரு காரணத்தால் மனிதன் மரங்களில் இருந்து தரையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். தரையில் நான்கு காலில் நடந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு கால்களில் நடக்கவும், மீதமிருக்கும் இரு கால்களைக் கைகளாகவும் பயன்படுத்தத் தொடங்கினான். அதன்பின், முழுக்க இரண்டுகால் பிராணியாக மனிதன் மாறிவிட்டான். 42 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, நாம் இரண்டு கால் பிராணியாக மாறிவிட்டாலும் நம் மரபணுக்கள் இன்னமும் அந்த மாற்றத்துக்குப் பழகவில்லை. இதை அறியும்போது உங்களுக்கு வியப்பாக இருக்கிறது இல்லையா! உதாரணமாக, மனித இனத்தில்தான் பிரசவம் என்பது செத்துப் பிழைக்கும் விஷயமாக இருக்கிறது. மருத்துவ வசதிகள் மேம்பட்ட இந்தக் காலத்தில்தான் பிரசவ மரணங்கள் குறைந்துள்ளன. முன்பெல்லாம் பிரசவத்தை மறுபிழைப்பு என்றுகூட வர்ணிப்பார்கள். பேறுகால மரணங்களுக்கும், பிரசவ சிக்கல்களுக்கும் என்ன காரணம்? நாம் இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கியதால் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டான விளைவு என விஞ்ஞானிகள் பதிலளிக்கிறார்கள். (ஆதாரம் - http://ngm.nationalgeographic.com/print/2006/07/bipedal-body/ackerman-text) பெண்களின் இடுப்பு எலும்பில் ஏற்பட்ட மாற்றத்தால் பிரசவ சமயத்தில் குழந்தை வெளியே வர அதிக நேரமும், வலியும், சிரமங்களும் ஏற்படுகின்றன. இதே சிம்பன்ஸி, உராங் உடான், கொரில்லா போன்ற பிற குரங்கினங்களுக்கு இந்தச் சிரமங்கள் இல்லை. உதாரணமாக சிம்பன்ஸியின் பிரசவம் சில நிமிடங்களில் முடிந்துவிடும். எந்த வலியும் இன்றி, சில நிமிடங்களில் சிம்பன்ஸி குட்டி, தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்துவிடும். தாய் உடனே அதற்குப் பாலூட்டத் தொடங்கும். தாதிமார், மருத்துவர் என யாருடைய உதவியும் சிம்பன்ஸியின் பிரசவத்துக்குத் தேவைப்படாது. எனவே, 42 லட்சம் ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு மாற்றம், இன்னமும் நம் மரபணுக்களில் சரியாகப் பதிவாகாமல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. எனில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தானிய உணவை உண்ணுதல் எனும் உணவு மாற்றம் நம் மரபணுக்களுக்குப் பழக இன்னும் எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆகுமோ? யோசித்தால் தலை சுற்றுகிறது இல்லையா? தானிய உணவு என்பது நம் மரபணுக்களுக்கு இன்னமும் பழகாத உணவு. மரபணுக்களுக்குப் பழகாத உணவை உண்பதால் நமக்குப் பல வியாதிகள், ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. தானியங்களின் முதல் தீமை, அதில் உள்ள அதிகப்படியான மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்). மாவுச்சத்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரித்து, இன்சுலின் சுரந்து, உடல், கொழுப்பைச் சேகரிக்கத் தொடங்கும் என்பதை முந்தைய அத்தியாயங்களில் கண்டோம். இந்திய அரசு அளிக்கும் புள்ளிவிவரப்படி, சராசரியாக, ஒரு இந்தியர் வருடம் முழுக்க 166 கிலோ தானியத்தை உட்கொள்கிறார். அதாவது தினமும் 400 கிராம் அளவுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் நம் உடலில் சேர்கின்றன. இதில் உலக வருட சராசரி 170 கிலோ. இந்தியர்களின் தானிய நுகர்வு உலகின் சராசரி அளவை ஒட்டியே இருக்கிறது. பெரிய வித்தியாசம் இல்லை. அதே சமயம் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் சராசரியாக வருடத்துக்கு 120 கிலோ தானியங்களையே உட்கொள்கிறார்கள். அவர்களின் உணவில் இறைச்சியே பிரதான இடம் வகிக்கிறது. சராசரி ஐரோப்பியர் வருடத்துக்கு நூறு கிலோ இறைச்சி மற்றும் மீனை உட்கொள்கிறார். ஆனால் இந்தியர்கள், ஒரு வருடத்துக்கு வெறும் ஏழு கிலோ இறைச்சி மற்றும் மீனையே உட்கொள்கிறார்கள். உலக அளவில் மிக, மிக குறைந்த அளவில் இறைச்சி உண்ணும் நாடு – இந்தியா. இந்தியர்கள், புரதத்துக்குப் பருப்பை நம்பியே இருக்கிறார்கள். இங்கு, சராசரியாக வருடத்துக்கு 14 கிலோ பருப்பு ஒருவரால் உண்ணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் சராசரி தனிமனிதப் பருப்பு நுகர்வு - ஆண்டுக்கு 2 கிலோ மட்டுமே. இந்தியர்கள், கலோரிகளின் தேவையைப் பெருமளவு தானியங்கள் மூலமாகவே அடைகிறார்கள். சராசரியாகத் தினமும் 400 கிராம் அரிசி, கோதுமை போன்றவை இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகள் வழியாக நம் உடலை அடைகின்றன. நானூறு கிராம் அரிசியில் 112 கிராம் மாவுச்சத்து உள்ளது. தினமும் 112 கிராம் வெள்ளைச் சர்க்கரை உண்டால் உடலுக்கு என்னென்ன கெடுதல்கள் விளையுமோ அதெல்லாம் இந்த நானூறு கிராம் அரிசி நுகர்வாலும் ஏற்படுகின்றன. மற்றபடி அரிசியில் உள்ள மாவுச்சத்து க்ளுகோஸாக மாறி நம் ரத்தத்தில் கலந்தபின் அதற்கும், வெள்ளை சர்க்கரையில் உள்ள க்ளுகோஸுக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. அரிசியும், சர்க்கரையும் உடலுக்குள் சென்றபின், இரண்டும் ஒரே அளவில் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கின்றன. இன்சுலின் சுரப்பும் இரண்டுக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கும். சரி, தானியங்களில் மாவுச்சத்து இருப்பதுதானே பிரச்னை எனக் கேட்டால், அது மட்டும் இல்லை எனத் தாராளமாகச் சொல்லமுடியும். தானியங்களில் காய்ட்ரோஜன்கள் (Goitrogens) என அழைக்கப்படும் தைராய்டு சுரப்பைத் தடுக்கும் மூலப்பொருள்கள் உள்ளன. உதாரணமாக ராகி, தினை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை எடுத்துக்கொள்வோம். சிறுதானியங்களில் உள்ள புரதங்களை ஜீரணிக்க நம் உடல் மிகச் சிரமப்படும். இவற்றில் உள்ள காய்ட்ரோஜன்கள், தைராய்டு சுரப்பியின் (Thyroid Gland) செயல்திறனைக் குறைத்துவிடும். இதன் விளைவாகப் பலருக்கும் ஹைப்போதைராய்டு வியாதி (Hypothyroidism) உண்டாகும். இதனால் உடல் சோர்வடையும், உடல் பருமன் அதிகரிக்கும், குளிரைத் தாங்க முடியாது, ஞாபக சக்தி குறைவடையும். சில சமயம் இதனால் கழுத்தில் பெரிய கட்டிகள்கூட உருவாகும். முன்பு, கிராமங்களில் பலருக்கும் கழுத்தில் கட்டிகள் (Goiter) இருப்பதைக் கண்டிருக்க முடியும். அவர்கள் உடலில் போதுமான ஐயோடின் சத்து (Iodine) சேராததால், தைராய்டு சுரப்பிகள் வீங்கிப் பெருத்துவிடும். வரகு, சாமை போன்றவற்றில் உள்ள காய்ட்ரோஜன்கள், நம் உடலில் அயோடின் சத்து சேர்வதைத் தடுத்துவிடும் என்பதும் அறியவேண்டிய தகவல். இன்று நகர்ப்புறங்களில் யாரும் வரகு, சாமை போன்றவற்றை அந்தளவுக்கு உண்பதில்லை. ஆனாலும் தைராய்டு சுரப்பிகளில் வரும் இன்னொரு வகை வியாதியான ஹைப்போதைராய்டு வியாதி, நகர்ப்புற மனிதர்களிடம் தென்படக் காரணம் என்ன? இதே காய்ட்ரோஜன்கள், சிறு தானியங்களில் மட்டுமின்றி நிலக்கடலை மற்றும் கோதுமையிலும் உள்ளன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு யாருமே கேள்விப்பட்டிராத நிலக்கடலை வெண்ணெயின் (Peanut butter) பயன்பாடு இன்று நகர்ப்புறங்களில் அதிகமாகி வருகிறது. இவற்றின் நுகர்வு அதிகரிக்க, அதிகரிக்க ஹைப்போதைராய்டு வியாதியின் பாதிப்பையும் இனி அதிகமாகக் காணமுடியும். சர்க்கரை நோயாளிகளின் உணவாகக் கருதப்படுவது சப்பாத்தி. தானியங்களிலேயே மிகக் கெடுதலான தானியம் – கோதுமை. கோதுமையை விடவும் மிகக் கெடுதலான உணவு உலகில் ஏதேனும் உண்டா என்று சந்தேகிக்கும் அளவுக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முழு தானிய கோதுமை (Whole grain wheat), சர்க்கரை, அரிசி, மைதா போன்றவை எல்லாம் ஒரே அளவிலேயே நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஏற்றுகின்றன. வெள்ளைச் சர்க்கரை ஆரோக்கியமான உணவு, சர்க்கரை நோயாளிகள் உண்ணக்கூடிய உணவு எனக் கூறினால் அது எப்படி நகைப்புக்குரியதாக இருக்குமோ அதுபோல தான் கோதுமை, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்பதும். கோதுமையில் உள்ள மாவுச்சத்தைத் தாண்டி, காய்ட்ரோஜன்களைத் தாண்டி அதில் உள்ள தீமை விளைவிக்கும் புரதம் - க்ளூடன் (Gluten). கோதுமையில் உள்ள க்ளூடன் வகைப் புரதத்தின் தீமைகள் பற்றிய ஆய்வுகள் ஒவ்வொன்றும் அச்சமூட்டுகின்றன. கோதுமை தவிர பார்லி போன்ற தானியங்களிலும் க்ளூடன் காணப்படுகிறது. க்ளூடன் புரதத்தால் பாதிப்படையாத உடல் உறுப்பு ஏதேனும் இருக்கிறதா என்பது சந்தேகமே. மூளை, இதயம், கிட்னி, நரம்பு, நோய் எதிர்ப்பு சக்தி... அவ்வளவு ஏன் நம் கைகால் விரல், நகங்கள் முதல் முடி வரை அனைத்துமே க்ளூடனால் பாதிப்படைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மாரடைப்பை வரவழைக்க காரணமாக இருப்பது உள்காயமே என சென்றவாரப் பதிவில் கண்டோம். உடல் உறுப்புகளில் உள்காயம் உள்ளவர்களில், 80% பேர் க்ளூடன் புரதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. க்ளூடனால் உண்டாகும் உள்காயம் நம் இதய நரம்புகள் முதல் மூட்டுகள், எலும்புகள், நரம்புகள், பெரும்குடல் ஆகிய பல பகுதிகளில் புண்களை உண்டாக்குகிறது. இதனால் ஏற்படும் சிக்கல்கள் - மாரடைப்பு, முடக்குவாதம், பெரும்குடல் சவ்வுகள் கிழிதல், ஜீரணக் குறைபாடுகள், தாள இயலாத வயிற்றுவலி, தொடர் வயிற்றுபோக்கு. கடைசியில் உள்ள பிரச்னைகள் தொடர்ந்தால் வயிற்றில் அல்சர் உருவாகும். உள்காயத்தால் வரும் வியாதிகள் எண்ணற்றவை. அல்சைமர் (Alzheimer’s disease) எனப்படும் ஞாபக மறதி வியாதி, பார்க்கின்சன் (Parkinson’s disease) எனப்படும் நரம்புமண்டல வியாதி ஆகியவை உள்காயத்தால் உருவாகின்றன. ஆக, உள்காயத்தை உருவாக்கும் க்ளூடன் புரதத்தால் நமக்கு வரக்கூடிய வியாதிகளின் எண்ணிக்கைக்கு கணக்கு, வழக்கு எதுவும் கிடையாது. இது தவிர நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் தொடர்ந்து அதிகமாக இருந்தால் மூளையில் பெரும் பாதிப்புகள் உண்டாகும். சர்க்கரை அளவுகளால் மூளையில் ஏற்படும் பாதிப்பே அல்சைமர் வியாதிக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் வழியாகச் சொல்கிறார்கள். தினமும் மூன்று வேளை மாவுச்சத்து நிரம்பிய தானியங்களை உண்பது மூளையின் அமைப்பையே சிதைத்து, மூளையின் அளவையும், செயல்திறனையும் குறைத்துவிடும். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தானிய உணவை மனிதன் உண்ணாதபோது கிடைத்த எலும்புக்கூடுகளைத் தானியம் உண்ணத் தொடங்கிய காலகட்ட எலும்புக்கூடுகளுடன் ஒப்பிட்டபோது பெரும் வித்தியாசம் தென்பட்டது. தானியங்களை உண்ணத் தொடங்கியபிறகு சராசரி மனித உயரம் அரை அடி குறைந்து போனது. மூளையின் அளவும் குறைந்துள்ளது. பற்கள் கடுமையாகச் சீர்கெட்டன. தானியங்களை உண்ணாத ஆதிமனிதன் பற்பசை கொண்டு பல் துலக்கவில்லை, தற்போது பல ரகங்களில் கிடைக்கும் பற்பசைகளும், அவை அளிக்கும் பாதுகாப்பு வளையமும் அன்று இல்லை. (பல் மருத்துவர்களும் கிடையாதுதான்.) ஆனால் பல்கூட துலக்காத ஆதிமனிதனின் பற்களில் சொத்தை, ஓட்டைகள் போன்றவை வெகு, வெகு சொற்பமாகவே இருந்தன. ஆனால் நம் உணவில் தானியங்கள் சேரத் தொடங்கிய பிறகு, பற்களில் கடும் சேதாரங்களும், சொத்தைகளும், பல் வியாதிகளும் ஏற்பட ஆரம்பித்தன. தானியங்களில் உள்ள மாவுச்சத்தை நம் பற்களால் அரைக்கும்போது பற்கள் முழுக்க மாவுச்சத்து பரவுகிறது. மாவுச்சத்தில் உள்ள சர்க்கரை, பற்களின் எனாமலை (பல்லின் மேல் இருக்கும் வெள்ளை நிறப் பகுதி ) கரைக்கும் தன்மை கொண்டது. பலவகை நுண்ணுயிரிகளுக்கும் சர்க்கரை விருப்ப உணவு என்பதால் அவை நம் பல்லில் குடியேறுகின்றன. பாக்டீரியா பாதிப்பால் சொத்தைப் பற்கள், பல் வியாதிகள் போன்றவை உண்டாகின்றன. இவை எல்லாவற்றையும் விட க்ளூடன் போன்ற தானியப் புரதங்களால் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த வியாதிகள் (Autoimmune diseases) உருவாகின்றன. குறிப்பாக இன்று பலருக்கும் சொரியாசிஸ் (psoriasis) என்கிற தோல்வியாதிகள் வருகின்றன. சொரியாசிஸ் வந்தால் தோலெங்கும் கொடிய புண்கள் தோன்றும். உடலெங்கும் சிகப்புத் திட்டுக்கள் பரவும். இந்த இடங்களை சொறிய, சொறிய வலி மேலும் அதிகரிக்கும். சொரியாசிஸ் போன்ற தோல்வியாதிகளுக்குக் காரணம் தானியங்களே. தானியங்களில் உள்ள புரதத்தை நம் மரபணுக்கள் ஏற்பதில்லை. அதை ஏதோ நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா அல்லது வைரஸ் என நினைத்து நம் நோய் எதிர்ப்பு சக்தி உடனே செயலில் இறங்கி நம் உடல் உறுப்புக்கள் மேலேயே தாக்குதல் நடத்துகிறது. வீட்டில் காவலுக்கு இருக்கும் காவலாளியே வீட்டுக்குள் திருடன் நுழைந்ததாக நினைத்து வீட்டுக்குள் துப்பாக்கியால் சுடுவதற்கு ஒப்பானது இது. இதனால் உடலெங்கும் புண்களும், உள்காயமும் ஏற்பட்டு சொரியாசிஸ் எனும் தோல்வியாதி வருகிறது. இதைக் குணபடுத்த முடியாமல் மக்கள் காசு கொடுத்து பல மருந்துகளை வாங்கி உண்கிறார்கள். களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். காசு கரைகிறதே ஒழிய நோய் குணமாவதில்லை. சொரியாசிஸ் போன்ற தோல்வியாதிகள் குணமாக்க முடியாதவை என பலரும் நம்புகிறார்கள். இது முழுக்க தவறான முடிவு. தானியம் தவிர்க்கும் பேலியோ டயட்டால் சொரியாசிஸ் போன்ற வியாதிகளை நிச்சயம் குணமாக்க முடியும். நம் மரபு சார்ந்தவை, கலாசாரம் சார்ந்தவை, பலவகை நோய்களுக்கான தீர்வு என நினைத்து உட்கொள்ளும் தானியங்களே இதுபோன்ற கடும் விளைவுகளை உடலில் ஏற்படுத்தி பல வியாதிகளுக்கும் காரணமாகிவிடுகின்றன. அவ்வகைத் தானியங்களை எமன் என அழைப்பது பொருத்தம்தானே? ***** வாசகர்களே, பேலியோ டயட் குறித்த உங்கள் சந்தேகங்களை askdinamani@dinamani.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். முக்கியமான கேள்விகளுக்கு இத்தொடரின் ஓர் அத்தியாயத்தில் நியாண்டர் செல்வன் பதிலளிப்பார். http://www.dinamani.com/junction/paleo-diet/2015/08/16/பகுதி-7---தானியம்-எனும்-எமன்/article2974309.ece Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கறுப்பி Posted October 6, 2015 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2015 பகுதி 8 - சர்க்கரை வியாதிக்கு ஒரு தீர்வு!By - நியாண்டர் செல்வன்First Published : 23 August 2015 10:00 AM ISTசர்க்கரை வியாதி, ஆயுர்வேத நூல்களில் மதுமேகம் என அழைக்கப்பட்டது. மது என்றால் தேன். தேனைப் போன்ற இனிப்புடன் சர்க்கரை நோயாளிகளின் சிறுநீர் இருந்ததால் இவ்வியாதிக்கு மதுமேகம் எனப் பெயர் வந்தது. ஒருவருடைய சிறுநீரைக் குடித்து அது இனிப்பாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்குச் சர்க்கரை நோய் உள்ளது என்று அந்தக் காலத்தில் ஒரு வழிமுறை பின்பற்றப்பட்டது. இதைத் தொடங்கி வைத்தவர்கள் இந்தியர்களே. 20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை இதுவே சர்க்கரை நோயைக் கண்டறியும் வழிமுறையாக இருந்தது. இதனால் ஆங்கிலத்திலும் சர்க்கரை நோய்க்கு Diabetes mellitus என்ற ‘தேனின் சுவையுள்ள டயபடிஸ்’ எனும் பெயரே சூட்டப்பட்டது. சர்க்கரை வியாதி உள்ளவர்களின் ரத்தத்தில் அதிக க்ளுகோஸ் கலந்துவிடுவதால் சிறுநீரகத்தால் அதிக அளவில் அந்த க்ளுகோஸை வெளியேற்ற முடிவதில்லை. அதனால் அது அவர்களின் சிறுநீரில் கலந்துவிடுகிறது. சர்க்கரை நோயின் ஒரு அறிகுறி, இடைவிடாத பசி. சர்க்கரை நோய்க்குக் காரணம் மாவுச்சத்தும், சர்க்கரையும் என்பது இன்றைய சர்க்கரை நோயாளிகளுக்கும், இந்திய டயபடிஸ் அசோசியேஷன், அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் போன்ற அமைப்புகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் 1913-ல் பிரெட்ரிக் ஆலன் எனும் நீரிழிவு மருத்துவர் ‘சர்க்கரை நோய்க்குக் காரணம் மாவும், அரிசியும், சர்க்கரையும் என பண்டைய இந்திய மருத்துவர்கள் நம்பினார்கள். இதில் உண்மை உள்ளது’ எனக் குறிப்பிடுகிறார். மேலும் குறிப்பிடும்போது, ‘பண்டைய இந்திய மருத்துவர்கள் இவ்வாறு எழுதுகையில் அவர்களுக்கு மாவுச்சத்து என்ற ஒன்று இருப்பதோ அல்லது அரிசியில் பெரும்பான்மையாக இருப்பது மாவுச்சத்து என்பதோ கூடத் தெரியாது. ஆனால், அதைப் பற்றி எதுவும் தெரியாமலேயே இதைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால், சர்க்கரை நோயாளிகளின் உணவை அவர்கள் மிகத் தெளிவாக ஆராய்ந்திருப்பது தெரியவருகிறது’ என்கிறார். 20-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமெரிக்காவில் வெளியான சர்க்கரை நோயாளிகளுக்கான நூல்களில் தானியங்களையும், பருப்புக்களையும், இனிப்புக்களையும், மாவுப்பொருள்களையும், ரொட்டி, பன், பழங்கள் போன்றவற்றைத் தவிர்க்கும்படி எழுதப்பட்டிருந்தன. சர்க்கரை நோயாளிகளுக்கு இறைச்சி, முட்டை, காய்கறிகள் போன்றவையே அன்று பரிந்துரைக்கப்பட்டன. இன்று சொல்வதுபோல 'சர்க்கரை நோய் இருந்தால் சப்பாத்தி சாப்பிடு’ என்கிற அறிவுரைகள் எல்லாம் அன்று கிடையாது. தானியங்களும், பழங்களும், மாவுச்சத்தும் சர்க்கரை நோயாளிகளின் எதிரிகளாக கருதப்பட்ட காலம் அது. (இணைப்பு: 1917-ல் எழுதப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு நூல் - https://archive.org/stream/diabeticcookeryr00oppeiala#page/n0/mode/2up ) 20-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது. இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள மாவுச்சத்தைக் கையாளும் ஹார்மோன் என்பதும் கண்டறியப்பட்டது. மாவுச்சத்துள்ள உணவுப் பொருள்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும் என்பதும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டுவிட்டது. அன்றைய மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இன்சுலின் கொடுப்பதும், மாவுச்சத்தை நிறுத்துவதும் இரண்டும் ஒன்றே என்பதை அறிந்திருந்தார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்று இன்சுலின் கொடுக்கவேண்டும், அல்லது உணவில் உள்ள மாவுச்சத்தை நிறுத்தவேண்டும் என்பதுதான் அவர்கள் கற்ற பாடம். இரண்டும் ஒரே மாதிரியான விளைவையே அளிக்கும் என்பதால் அதன் அடிப்படையில்தான் அவர்கள் மருத்துவம் பார்த்தார்கள். இப்படி அந்தக் கால மருத்துவர்களுக்குப் புரிந்த இந்த எளிய அறிவியல் இன்று மருத்துவம் பயில்பவர்களுக்கு ஏன் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை? சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த முடியாத வியாதி என்று சொல்வதில் துளியும் உண்மை இல்லை. நம் மருத்துவ அமைப்புகள், இந்த விஷயத்தில் மக்களுக்குத் தவறான அறிவுரைகளை கூறி வருகின்றன. ஒருவர் மருந்து கம்பனியை நடத்தி வருகிறார். அந்தத் தொழிலில் லாபம் வருவதை எப்படி உறுதி செய்வது? குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்தவே முடியாது என நோயாளிகளிடம் கூறவேண்டும். அதை மருந்தால் மட்டுமே கட்டுக்குள் வைக்கமுடியும் என்று சொல்லி நோயாளிகளை நம்பவைக்கவேண்டும். நோயாளி சாகவும் கூடாது, நோய் குணமாகவும் கூடாது. இப்படி ஆயுள் முழுக்க நோயுடனும், மருந்துடனும் வாழ்க்கையை நடத்தி வரும் நோயாளிகளால்தானே லாபம் கிடைக்கும்! சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த வியாதி உள்ளவர்கள் எல்லாருமே இப்படி மருந்து நிறுவனங்களுக்குப் பணம் காய்ச்சி மரமாக ஆண்டுக்கணக்கில் இருந்து வருகிறார்கள். சர்க்கரை வியாதியில் இரு வகைகள் உண்டு. ஒன்று, பிறப்பால் வரும் டைப் 1 சர்க்கரை வியாதி. இதை உணவால் குணப்படுத்த இயலாது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு வருவது டைப் 2 சர்க்கரை வியாதி. இது உணவால் வரும் சர்க்கரை வியாதி. இதைச் சரியான உணவுமுறை மூலம் சில மாதங்களில் குணப்படுத்த முடியும். சில மாதங்கள் எனக் கூறினாலும் பேலியோ டயட்டை வலியுறுத்தும் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ என்கிற ஃபேஸ்புக் குழுமத்தில் உள்ள பலரும் ஒரு சில வாரங்களில் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆண்டுக்கணக்கில் உண்டுவந்த மருந்துகளை நிறுத்தியுள்ளார்கள். ஒரு சில மாதங்களில் அவர்களுடைய சர்க்கரை அளவுகள் நார்மல் என்று சொல்லப்படும் இயல்பான அளவை எட்டியுள்ளன. காலை உணவுக்கு முந்தைய ஃபாஸ்டிங் சுகர் அளவுகள், உணவுக்குப் பிந்தைய சுகர் அளவுகள், ஏ1சி அளவுகள் என இந்த மூன்று அளவுகளும் ஒரு சில மாதங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுவில் பரிந்துரைக்கப்படும் டயட்: அசைவ டயட் காலை உணவு: 4 முட்டைகள் மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள் மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால் இரவு உணவு: பசி அடங்கும் வரை ஏதாவதொரு இறைச்சி (மட்டன், சிக்கன், மீன்) முட்டை சேர்க்கும் சைவர்களுக்கான டயட் காலை உணவு: 100 பாதாம் அல்லது பட்டர் டீ மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள் மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால் இரவு உணவு: 4 முட்டைகள் முட்டை சேர்க்காத சைவர்களுக்கான டயட் காலை உணவு: 100 பாதாம் அல்லது பட்டர் டீ மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள் மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால் இரவு உணவு: முழுக் கொழுப்பு நிரம்பிய பாலில் இருந்து எடுத்த பனீரில் பனீர் மஞ்சூரியன், பாலக் பனீர் போன்றவற்றைத் தயாரித்து உண்ணலாம். முக்கிய குறிப்பு: இது தவிர சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த வைட்டமின் டி மிக அவசியம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் மதிய வேளையில், நேரடி வெயில் தோலில் படும்வண்ணம் 15 - 20 நிமிடம் வெயிலில் நிற்பது நன்று. மதியம் 11 மணி முதல் 1 மணி வரை உள்ள வெயில் இதற்கு உகந்தது. தலைக்கு வெயில் தாக்காமல் இருக்க தொப்பி அணியவும். வெயில் அதிக அளவில் நம் உடலில் படவேண்டும் என்பதால் கையில்லாத பனியன், அரைக்கால் டிரவுசர் போன்றவற்றை அணிந்து நிற்பது நன்று. காளிஃபிளவர் அரிசியின் செய்முறை சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்வதால் அதற்கு மாற்றாக காளிஃபிளவர் அரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காளிஃபிளவர் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். அதன்பின் ஒரு மிக்ஸி அல்லது ஃபுட் ப்ராசசரில் நாலைந்து நொடிகள் ஓடவிட்டு, நிறுத்தி, மறுபடியும் நாலைந்து நொடிகளுக்கு ஓடவிட்டு அரைக்கவேண்டும் (தொடர்ந்து அரைத்தால் கூழாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்). அரிசி போல சின்னஞ்சிறிய துண்டுகளாக ஆனதும் அதைப் புட்டுச்சட்டியில் ஆவியில் வேகவைத்தால் காளிஃபிளவர் அரிசி தயார். இதில் காய்கறிக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும். இதில் உள்ள மாவுச் சத்தின் அளவும் மிகக் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகளும் அதிகரிக்காது. முக்கியமான கேள்விக்கு வருவோம். பேலியோ டயட் சர்க்கரை வியாதியை எப்படிக் குணப்படுத்துகிறது? சர்க்கரை நோயை வரவழைப்பது மாவுச்சத்து நிரம்பிய அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானிய உணவுகள். இந்நிலையில், அரிசி, கோதுமையைத் தொடர்ந்து உண்டுவந்தால் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த முடியுமா? நாம் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். மாவுச்சத்து உள்ள உணவை உண்டால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும். இதனால் ஃபாஸ்டிங் சுகர் அளவு 200 ஆக உள்ள ஒருவர் (இயல்பான அளவு: 100க்குக் கீழ்) காலையில் ஐந்து இட்லியைச் சாப்பிடுகிறார் என வைத்துக்கொண்டால் அதன்பின் அவரது உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு 200-ல் இருந்து 280 ஆக அதிகரிக்கும். இந்த 280 எனும் அளவைக் குறைக்க அவர் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும். அதன்பின்பு, சர்க்கரை அளவு 280-ல் இருந்து 230, 220 எனக் குறையும். அடுத்தவேளை உணவாக சாதமும், பருப்பும் சாப்பிட்டால் மீண்டும் உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவுகள் 280, 300 என எகிறிவிடும். மறுபடியும் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டால்தான் அதைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். இந்தச் சர்க்கரை நோயாளி பேலியோவுக்கு மாறுகிறார் என வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்? ஃபாஸ்டிங் சுகர் அளவு 200 ஆக இருக்கிறது. காலை உணவாக நெய்யில் வறுத்த 4 ஆம்லெட்களைச் சாப்பிடுகிறார். பசி முழுமையாக அடங்கிவிடுகிறது. முட்டையிலும், இறைச்சியிலும் துளியும் மாவுச்சத்து இல்லை என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் ஏறாது. அவரது உடலைப் பொறுத்தவரை அவர் இன்னமும் உண்ணாநிலையில்தான் இருக்கிறார். எனவே இரண்டு, மூன்று மணிநேரம் கழித்து அவரது சர்க்கரை அளவு 200-ல் இருந்து 180, 170 ஆக குறையும். மதிய உணவு - காளிஃபிளவர் அரிசி அல்லது 100 பாதாம். இதிலும் மிகக் குறைந்த அளவே மாவுச்சத்து உள்ளது. இரவிலும் பேலியோ டயட்டைப் பின்பற்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம். பேலியோ உணவால் சர்க்கரை அளவுகள் அதிகரிக்காமல் தொடர்ந்து குறைந்துகொண்டே வரும். ஒருசில நாள்களில் இன்சுலின் ஊசி அளவுகள், சர்க்கரை வியாதி மாத்திரை அளவுகளைக் குறைக்க அல்லது முழுவதும் நிறுத்தவேண்டிய நிலைமை உருவாகும். ஒரு சில மாதங்களில் உடலில் சர்க்கரை அளவுகள் இயல்பானதாக மாறிவிடும். சர்க்கரை நோய்க்கு பேலியோ டயட்டைப் பயன்படுத்தமுடியும் என்பதைப் பல மருத்துவ ஆய்வு வெளியீடுகள் (Medical journals) ஒப்புக்கொள்கின்றன. மருத்துவ ஆய்வு வெளியீடுகளில், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வறிக்கைகள் இடம்பெற்றிருக்கும். மருத்துவத்துறையின் புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படும். இதன் சோதனை முடிவுகளே மருத்துவ ஜர்னல்களில் வெளியிடப்படும். இவை மருத்துவத்துறைசார் கருத்தரங்குகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் விவாதிக்கப்படும். பிறகு, முக்கியமான கண்டுபிடிப்புகள் மருத்துவப் பாடபுத்தகங்களில் இடம்பெறும். இதன் தொடர்ச்சியாக சிகிச்சைகளிலும் அந்த ஆய்வுகள் பின்பற்றப்படும். எனவே மருத்துவ ஜர்னல்கள் என்பவை அறிவியல் ரீதியாக நிரூபணமான ஆய்வுக்கட்டுரைகள் என்பதை மனத்தில் கொள்வோம். Diabetes Metabolism Research and Reviews எனும் அறிவியல் ஜர்னலில் 2011-ம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை எழுதிய மருத்துவப் பேராசிரியர் புசாட்டோ (Busetto) ‘சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குக் குறைவான கொழுப்பு உள்ள டயட் அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டு வந்தாலும், உயர் புரதமும், குறைந்த அளவு மாவுச்சத்தும் நிரம்பிய பேலியோ டயட், சர்க்கரை நோயாளிகளின் உடல் எடையைக் குறைத்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகளை குறைத்துயும், இதய நலனையும் மேம்படுத்துகிறது’ என்று கூறுகிறார். (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/21309052) 2008-ல், Nutritional Metabolism என்கிற லண்டன் மருத்துவ ஜர்னலில், பேராசிரியர் எரிக் வெஸ்ட்மெனின் (Eric Westman) ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் குறைந்த அளவிலான மாவுச்சத்து உள்ள பேலியோ டயட்டும், சற்று அதிக அளவு மாவுச்சத்து உள்ள லோ-கிளைசெமிக் டயட்டும் (Low Glycemic diet) ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. இந்த ஆய்வில் 49 பேர் பங்கேற்றார்கள். இந்த 49 பேரும் அதிக உடல் எடை கொண்ட சர்க்கரை நோயாளிகள். அதில் பாதி பேருக்கு பேலியோ டயட் பரிந்துரைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு லோ-கிளைசெமிக் டயட். ஆறுமாத ஆய்வுக்குப் பிறகு கிடைத்த முடிவுகள்: பேலியோ டயட்டைப் பின்பற்றிய நோயாளிகளுக்கு எச்பிஏ1சி (HBA1C) அளவுகள் சராசரியாக 1.5 புள்ளிகள் குறைந்திருந்தன. உடல் எடை சராசரியாக 11 கிலோ குறைந்திருந்தது. இதயத்தின் நலனை வெளிப்படுத்தும் நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலின் அளவுகள் 5.6 புள்ளிகள் அதிகமாகியிருந்தன. இதனால் சர்க்கரை நோய்க்கு பேலியோ டயட்டே உகந்தது என இந்த ஆய்வு முடிவு கூறியது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2633336/) Journal of American College Nutrition எனும் மற்றொரு மருத்துவ ஜர்னலில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிக எடை உள்ள 14 டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு பேலியோ டயட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் உடலின் இன்சுலினைக் கையாளும் திறன், பிளட் சுகர் அளவைக் கையாளும் திறன் மற்றும் மாரடைப்பு அபாயம்/இதய நலன் போன்றவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மருத்துவ ஆய்வாளர் கிரெப்ஸ் (Krebs) தலைமையில் 2013-ம் ஆண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது. 14 டைப் 2 சர்க்கரை நோயாளிகளும் ஆறு மாத காலத்துக்கு பேலியோ டயட்டைப் பின்பற்றினார்கள். முடிவில் அனைவருக்கும் சராசரியாக பத்து கிலோ எடை இறங்கியிருந்தது. உடலின் பிளட் சுகர் அளவைக் கையாளும் திறன் (HBA1C) சராசரியாக 1.1 புள்ளிகள் குறைந்திருந்தது. ஃபாஸ்டிங் சுகர் அளவுகள் கணிசமாக குறைந்து காணப்பட்டன. ரத்த அழுத்தம் பத்துப் புள்ளிகள் வரை குறைந்திருந்தது. நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலின் அளவுகள் 10 புள்ளிகள் வரை அதிகரித்திருந்தன. மொத்த கொலஸ்டிரால் அளவும், எல்டிஎல் கொலஸ்டிரால் அளவும் அதிகரித்திருந்தாலும், எச்டிஎல் கொலஸ்டிரால்/ டிரைகிளிசரைட்ஸ் விகிதம் கணிசமாகக் குறைந்து அவர்களின் இதயநலன் மேம்பட்டிருப்பதை வெளிப்படுத்தியது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24015695) * பேலியோ டயட்டால் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வருவதையும், இதயநலன் மேம்படுவதையும், உடல்நலன் சார்ந்த இதர அளவுகள் முன்னேற்றம் காண்பதையும் ஆய்வுகளின் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. மருத்துவ ஜர்னல்களில் பேலியோ டயட்டின் பலன்கள் குறித்து தொடர்ந்து எழுதப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகின்றன. மருத்துவத்துறை சார் கருத்தரங்குகளில் இவை விவாதிக்கப்படுகின்றன. ஆனால் பேலியோ டயட் தொடர்புடைய ஆய்வுகள் மருத்துவக் கல்லூரி நூல்களிலும், பாடத் திட்டங்களிலும் இடம்பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கான காரணமாக நான் கருதுபவை - பேலியோ டயட்தான் சர்க்கரை நோய்க்கு உகந்த டயட் எனத் தீர்மானம் ஆகி பாடநூல்களில் இடம்பெற்றுவிட்டால், இத்தனை நாள் சொல்லி வந்த ‘குறைந்த கொழுப்பு டயட்டே சிறந்தது’ என்கிற அறிவுரைகளுக்கு எதிரானதாக ஆகிவிடும். பல டயபடிஸ் அசோசியேஷன்கள் மீது வழக்குகள் தொடரப்படலாம். தவிரவும் குறைந்த கொழுப்பு உணவு மாடலை அடிப்படையாகக் கொண்டு பல உணவு நிறுவனங்கள் சீரியல், ஓட்ஸ் போன்ற காலை உணவுகளையும், தானிய அடிப்படையிலான நொறுக்குத் தீனிகளையும் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றன. பேலியோ டயட் ஏற்கப்பட்டுவிட்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். அதனால் அவை அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் மூலமாகவும், தம் நிறுவனங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் தான் நடத்தி வரும் அறிவியல் ஆய்வுக்கழகங்கள் மூலமாகவும் பேலியோ டயட்டுக்கு எதிரான தடுப்பணைகளைக் கட்டியுள்ளன. இதனால்தான் மருத்துவ நூல்களில் பேலியோ டயட் குறித்து எதுவும் இடம்பெறுவதில்லை; ஊடகங்களிலும் இதற்கு ஆதரவான கட்டுரைகள் எழுதப்படுவதில்லை. இத்தடைகளை எல்லாம் தாண்டி பேலியோ இயக்கம், மேற்கத்திய நாடுகளில் நூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெரும் மாற்றங்களை உண்டாக்கி வருகிறது. இதுபோன்ற ஒரு மாற்றம் இந்தியாவிலும் ஏற்படவேண்டும். பேலியோ டயட்டைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பங்களிப்பை அளிக்கவேண்டும். (உதாரணமாக, ஃபேஸ்புக், ட்விட்டர் வழியாக பேலியோ டயட் குறித்த தகவல்களை அளிப்பது) டைப் 2 சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாதது என்கிற பிரமை உடைக்கப்படவேண்டும். ஆண்டுக்கணக்கில் சர்க்கரை வியாதியால் தவிக்கும் மக்களை, அந்தக் கொடுமையிலிருந்து விடுவிக்கும் பணியில் நாம் தொடர்ந்து ஈடுபடவேண்டும். **** வாசகர்களே, பேலியோ டயட் குறித்த உங்கள் சந்தேகங்களை askdinamani@dinamani.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். முக்கியமான கேள்விகளுக்கு இத்தொடரின் ஓர் அத்தியாயத்தில் நியாண்டர் செல்வன் பதிலளிப்பார். http://www.dinamani.com/junction/paleo-diet/2015/08/23/பகுதி-8---சர்க்கரை-வியாதிக்கு-/article2987827.ece Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரதி Posted October 6, 2015 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2015 இந்த இணைப்பை வாசிக்க சுவாரசியமாகவும்,சிரிப்பாகவும் இருக்குது.இணைப்பிற்கு நன்றி கறுப்பி Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கறுப்பி Posted October 9, 2015 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 9, 2015 இந்த இணைப்பை வாசிக்க சுவாரசியமாகவும்,சிரிப்பாகவும் இருக்குது.இணைப்பிற்கு நன்றி கறுப்பி உங்கள் சுவாரசியத்துக்கும், சிரிப்புக்கும் நன்றிகள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் Posted October 9, 2015 கருத்துக்கள உறவுகள் Share Posted October 9, 2015 அருமையான பதிவு.நானும் இந்த டயட்டைத் தொடங்கப்போகிறேன். நன்றி கறுப்பி Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கறுப்பி Posted October 11, 2015 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 11, 2015 பேலியோ டயட் பகுதி 9 - சர்க்கரை நோயும் சிறுநீரகப் பாதிப்பும்!By - நியாண்டர் செல்வன்First Published : 30 August 2015 10:00 AM ISTசர்க்கரை நோய் (டைப் 2), குணப்படுத்தக்கூடிய வியாதியே, பேலியோ டயட் மூலம் இது சாத்தியமாகும் எனச் சென்ற வாரப் பதிவில் கண்டோம். ஆனால், டைப் 2 சர்க்கரை நோயால் அவதிப்படும் பல கோடி இந்தியர்களுக்கு பேலியோ என்கிற ஒரு வார்த்தை இருப்பதே தெரியாது. டைப் 2 சர்க்கரை நோய்க்கும், அதற்குப் பரிந்துரைக்கப்படும் தானிய அடிப்படையிலான உணவுமுறைக்கும் உள்ள தொடர்பின்மையை அவர்கள் இதுவரை அறிந்திருக்கவில்லை. டைப் 2 சர்க்கரை நோய் வரக் காரணம் ‘உடல் பயிற்சி செய்யாதது, அதிகமாகச் சாப்பிடுவது, பரம்பரை வியாதி’ என அவர்களுக்குத் தவறான பாடம் கற்பிக்கப்படுகிறது. டைப் 2 சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத ஒன்று, அதை மருந்தால் மட்டுமே கட்டுக்குள் வைக்க முடியும் என நோயாளிகள் நம்பவைக்கப்படுகிறார்கள். இதன் பின்னே இருப்பது மிகத் தவறான அறிவியலும், அரசியலும், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் மற்றும் மருந்து கம்பனிகளின் பேராசையுமே. டைப் 2 சர்க்கரை நோய்க்கான வைத்தியமாக உடற்பயிற்சியும், டயட்டாக சப்பாத்தியும் பரிந்துரைக்கப்படுகின்றன. மக்கள் ஆண்டுக்கணக்கில் நடைப்பயிற்சி செய்கிறார்கள். தொடர்ந்து சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். கைக்குத்தல் அரிசி, கம்பு, ராகி போன்ற சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். கடைசியில் எந்த நிவாரணமும் கிடைக்காமல் ‘இது பரம்பரை வியாதி, 40 வயதைத் தாண்டினால் எல்லாருக்கும் சர்க்கரை நோய் வரும்’ என்பது போன்ற சமாதானங்களைச் சொல்லி ஆறுதல் அடைகிறார்கள். டைப் 2 சர்க்கரை நோய் ஒரு பரம்பரை வியாதி என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உணவுப்பழக்கம் தான் பிரச்னையே ஒழிய, நம் முன்னோர் யார் என்பது டைப் 2 சர்க்கரை நோய்க்கான காரணம் அல்ல. நம் பெற்றோர் இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிட்டதால் நாமும் அதைச் சாப்பிடுகிறோம். பதிலாக பீட்சா, பர்கர் சாப்பிட்டிருந்தால் அதையே தானே பின்பற்றியிருப்போம்! அதனால் அவர்களுக்கு வரும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை நமக்கும் வருகின்றன. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஒரே உணவுப் பழக்கத்தால் சர்க்கரை நோய் ஒரு பரம்பரை வியாதி என தவறாகக் கணிக்கப்படுகிறது. பரம்பரை வியாதி என்கிற காரணத்தை விடவும் உணவுப்பழக்கம் தான் உங்கள் சர்க்கரை நோயைத் தீர்மானிக்கிறது. நம் உடலில் நல்லது, கெட்டது என அனைத்து வகை மரபணுக்களும் உள்ளன. அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் மரபணுக்கள் தவறான உணவாலும் நன்மை விளைவிக்கும் மரபணுக்கள் சரியான உணவாலும் தூண்டப்படுகின்றன. ஆக, மரபணுக்கள் மேல் பழியைச் சுமத்துவதை விட நம் தொல்மரபுசார்ந்த உணவுகளை உட்கொண்டு வியாதிகளில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்வதே சிறப்பானது. டைப் 2 சர்க்கரை நோய்க்கு மட்டுமல்ல, டைப் 2 சர்க்கரை நோயால் ஏற்படும் பல்வேறு வகையான ஆபத்தான வியாதிகளுக்கும் பேலியோ டயட் நிவாரணம் அளிக்கிறது. உதாரணமாக டைப் 2 சர்க்கரை நோய், ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அத்தகைய சிறுநீரக வியாதியை டயபடிக் நெப்ரோபதி (Diabetic nephropathy) என அழைப்பார்கள். சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றால் அது நரம்புமண்டலம், ரத்தக் குழாய், சிறுநீரகம், இதயம் என உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது சிறுநீரகத்தைப் பாதித்து, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும். சர்க்கரை அளவு அதிகரிப்பால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதுதான் டயாபடீக் நெப்ரோபதி. (நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது அதன் பெயர், டயாபடீக் நியூரோபதி; கண்கள் பாதிக்கப்படும்போது - டயாபடீக் ரெட்டினோபதி.) மருத்துவப் பேராசிரியர் ஜோர்கன் நெல்சன் (Jorgen Nielsen) தலைமையில் நிகழ்ந்த ஒரு மருத்துவ ஆய்வில் பேலியோ டயட்டுக்கும், டயபடிக் நெப்ரோபதிக்கும் இடையே உள்ள உறவு ஆராயப்பட்டது. இதன் ஆய்வறிக்கை நியூட்ரிஷனல் மெடபாலிசம் (Nutritional metabolism) எனும் மருத்துவ ஜர்னலில் 2006-ம் ஆண்டு வெளியானது. இந்த ஆய்வின் முடிவில் நெல்சன் கூறுவதாவது: ‘ஹெச்பிஏ1சி ((HbA1c) அளவுகளுக்கும் நெப்ரோபதிக்கும் இடையே உள்ள தொடர்புகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக சர்க்கரை நோய் முற்றிய நோயாளிகளுக்குக்கூட மாவுச்சத்து உள்ள உணவுகளே தொடர்ந்து பரிந்துரைக்கப்படுவதால் அவர்களுக்கு இதனால் ஹைபர்கிளைசீமியா (Hyperglycemia, ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரித்தல்) ஏற்பட்டு, அதீத அளவில் இன்சுலின் சுரந்து, உடல் பருமன் அதிகரிக்கின்றன. இப்படி அதிகரிக்கும் உடல் பருமனால் சிறுநீரகத்தின் செயல்திறன் கெடுகிறது. இந்த ஆய்வில் ஆறுவருடமாக டைப் 2 சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு பேலியோ டயட் மூலமாக நெப்ரோபதி வியாதியைக் குணப்படுத்தினோம். அந்த நோயாளியின் வயது 60. 1989-ம் ஆண்டு அவர் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். அவருடைய குடும்ப உறுப்பினர்களில் பலரும் உடல் பருமனாலும், சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். 90-களின் மத்தியில் அவர் சிறுநீரக வியாதியான நெப்ரோபதியால் பாதிக்கப்பட்டார். அனைத்து வகை நவீன மருந்துகளை அவருக்குக் கொடுத்து, லேசர் சிகிச்சை அளித்தும் சிறுநீரகப் பாதிப்பு சரியாகவில்லை. இந்தக் காலகட்டத்தில் நோயாளியின் எடை 85 முதல் 89 கிலோ வரை இருந்தது. அவருக்கு வழக்கமான மாவுச்சத்துள்ள தானிய உணவே அக்காலகட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவை எடுத்துக்கொள்ளும்போது அவருடைய எடை இறங்கும், அதன்பின் மறுபடியும் ஏறும். இப்படியே எடை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. அப்போது அவரது சிறுநீரில் அல்புமின் எனும் புரதத்தின் அளவுகள் அதிகரித்தன. இது சிறுநீரகம் கெடத் தொடங்குவதற்கான அறிகுறி என்பதால் மருத்துவர்கள் எச்சரிக்கை ஆனார்கள். அவருக்கு இன்சுலின் மருந்தை ஊசி மூலம் செலுத்தத் தொடங்கினார்கள். இன்சுலின் ஊசி செலுத்தத் தொடங்கியதும் ஹெச்பிஏ1சி அளவுகள் தற்காலிகமாகக் குறைந்தன. ஆனால், உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. 90 கிலோ எனும் அளவை எட்டியது. 125/90 என்ற அளவில் இருந்த ரத்த அழுத்தம் 145/90 என அதிகரித்தது. 116 எனும் அளவில் இருந்த அல்புமின் புரத அளவுகள் 2000 எனும் அளவை எட்டின (இயல்பான அளவு 55). இதன்பின் ரத்த அழுத்தம் 160/90 ஆக உயர்ந்தது. இதன்பின் 2004-ம் ஆண்டில் அவரது உணவில் இருந்த மாவுச்சத்தின் அளவுகள், தினமும் 90 கிராம் எனக் குறைக்கப்பட்டன. அவருக்குக் காய்கறிகளும், புரதமும் கொழுப்பும் நிரம்பிய உணவுகளும் வழங்கப்பட்டன. அவரது உணவில் 20% மாவுச்சத்து, 50% கொழுப்பு, 30% புரதம் இருந்தன. அதன்பின் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. இரு வாரங்களில் அவருக்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்துவது நின்றது. பேலியோ உணவால் 19 கிலோ எடை குறைந்து ஹெச்பிஏ1சி அளவுகள் 8.5 எனும் அளவில் இருந்து 6.5 எனும் அளவுக்கு இறங்கியது. இதன்பின்னரே அவரது சிறுநீரகத்தின் செயல்திறன் அதிகரித்தது. இரண்டரை ஆண்டுகள் கழித்து அவரது சிறுநீரகப் பாதிப்பு விலகியது. அவர் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார். எனவே பேலியோ டயட் - டயபடிக் நெப்ரோபதி, ரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு, உடல் எடைக் குறைப்பு போன்றவற்றுக்கு சிறப்பான தீர்வாக அமையும்...’ என்கிறார் ஜோர்கன் நெல்சன். (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1523335/) (ஹெச்பிஏ1சி (HbA1c) பரிசோதனை பற்றி தெரிந்துகொள்வோம். நாம் சாப்பிடும் உணவு, க்ளுகோஸாக (சர்க்கரை) மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. மேலும், நம் கல்லீரலும் க்ளுகோஸை உற்பத்தி செய்கிறது. இந்த க்ளுகோஸ், உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது. நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. க்ளுகோஸானது இந்தச் சிவப்பு அணுவில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். இந்த ரத்தச் சிவப்பு அணுக்கள் 8 முதல் 12 வாரங்கள் வரை இருக்கும். அதன் பிறகே அவை அழிக்கப்படும். எனவே, ரத்தச் சிவப்பு அணுவைப் பரிசோதனை செய்வதன் மூலம், 8 முதல் 12 வாரங்களில் ஒருவருடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும்.) ஆனல்ஸ் ஆஃப் மெடிசின் (Annals of Medicine) எனும் புகழ் பெற்ற மருத்துவ ஜர்னலில் 2014-ம் ஆண்டு மருத்துவப் பேராசிரியர் லீனா ஜொனாசன் (Lena Jonasson) தலைமையில் நடந்த ஆய்வு ஒன்றில் பேலியோ டயட்டும், மாவுச்சத்து அதிகமுள்ள குறைந்த கொழுப்பு டயட்டும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. சர்க்கரை நோய் உள்ள நோயாளிகள் இன்ஃப்ளமேஷன் எனும் உள்காயத்தால் பாதிப்புக்குள்ளாவது வழக்கம். இந்த உள்காயமே மாரடைப்பு, அல்சர், முடக்குவாதம் போன்ற பலவகை வியாதிகளுக்குக் காரணம் என்பதை முந்தையப் பகுதிகளில் கண்டோம். பேராசிரியர் லீனா ஜொனாசன் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் சர்க்கரை நோயாளிகளுக்குக் குறைந்த கொழுப்பு உள்ள சாதாரண டயட்டால் உடல் எடை குறைகிறதே ஒழிய அவர்கள் உள்காயம், சர்க்கரை அளவுகள் போன்றவற்றில் மாறுதல் ஏற்படுவதில்லை எனக் கண்டறியப்பட்டது அதேசமயம் உணவில் உள்ள மாவுச்சத்தை குறைக்கும் பேலியோ டயட்டைப் பின்பற்றிய சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் பருமன் குறைந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவுகளும் குறைந்தன. இன்ஃப்ளமேஷன் எனப்படும் உள்காயமும் பெருமளவில் குறைந்ததை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4025600/ ) ஆக, பேலியோ டயட், சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து என்பதையும் தாண்டி சர்க்கரை நோயால் விளையும் சிறுநீரக நோய்களில் இருந்தும் நோயாளிகளைப் பாதுகாக்கிறது என்பதை அறிய முடிகிறது. சர்க்கரை நோயைக் குணப்படுத்துகிறது. எடையைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கி, ஹெச்பிஏ1சி அளவுகளைக் குறைக்கிறது. ஆபத்தான வியாதிகளை வரவழைக்கும் உள்காயத்தைக் குணப்படுத்தி, சிறுநீரகத்தின் செயல்திறனையும் அதிகரித்து, கெட்டுப்போகும் நிலையில் இருந்த சிறுநீரகத்தை இயல்பு நிலைக்கும் கொண்டுவருகிறது. இத்தனை முன்னேற்றங்கள் பேலியோ டயட்டால் உண்டாகின்றன. இந்நிலையில் பேலியோ டயட் இதயத்துக்குக் கெடுதலானது, மாரடைப்பை வரவழைக்கக்கூடியது என அஞ்சுவதில் ஏதேனும் பொருள் உண்டா? ஆண்டுக்கணக்கில் மருந்து, மாத்திரை உட்கொண்டு, லேசர் சிகிச்சையால் குணமாகாத வியாதிகள் எல்லாம் பேலியோ டயட்டால் குணமானதாக மருத்துவ ஜர்னல்களில் வெளியான ஆய்வுகள் கூறுகின்றன. இதை விடவும் வலுவான ஆதாரம் வேற என்ன வேண்டும்? இதற்குப் பிறகும் சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளானவர்களுக்குத் தானிய உணவுகளையும், மாவுச்சத்து உள்ள பிஸ்கட், சப்பாத்தி போன்றவற்றையும் கொடுப்பதில் ஏதேனும் அர்த்தமுண்டா? சரி, டைப் 1 டயபடிஸ் எனப்படும் பிறப்பில் வரும் சர்க்கரை நோய்க்கு இதனால் பலன் உண்டா? டைப் 1 சர்க்கரை நோய் ஏன் வருகிறது? இதற்கான காரணங்கள் மருத்துவ உலகால் சரிவர விளக்கப்படவில்லை. ஆனால் இவ்வியாதி உள்ளவர்களுக்கு சிறுவயதிலேயே பாதிப்புகள் ஏற்படும். சிறுவயதிலேயே உடலின் இன்சுலின் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டுவிடும். இதனால் உணவில் உள்ள மாவுச்சத்தை சரிவரக் கையாளும் திறனை உடல் இழந்துவிடும். விளைவு - சிறுவயதிலேயே இன்சுலின் ஊசி எடுக்கும் நிலைக்கு இவர்கள் ஆளாவார்கள். பேலியோ டயட், டைப் 1 சர்க்கரை நோயைப் பெருமளவு கட்டுப்படுத்துகிறது. பிறப்பால் வருவது என்பதால் இதை முழுவதும் உணவால் குணப்படுத்துதல் சாத்தியமில்லை. ஆனால், பேலியோ உணவால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. டைப் 1 சர்க்கரை நோயாளிகள் எடுக்கும் இன்சுலின் ஊசி அளவையும் இது குறைக்கிறது. மேலும் அவர்களுக்கு ஏற்படும் உள்காயம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்ற பலவகை வியாதிகளையும் கட்டுக்குள் வைக்க பேலியோ டயட் உதவுகிறது. ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழுவில் உள்ள அதன் மூத்த உறுப்பினர் சிவராம் ஜெகதீசன் டைப் 1 சர்க்கரை நோயை பேலியோ உணவுமுறை மூலம் வெற்றிகரமாக எதிர்கொண்டு வருபவர். அவர் தன் அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்: கடந்த 29 வருடங்களாக டைப் 1 சர்க்கரை நோயுடன் இன்சுலின் ஊசி எடுத்துக்கொண்டு வாழ்ந்து வருபவன். 1986-ல், +2 மாணவனாக இருந்தபோது எனக்குச் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. உடற்சோர்வுடன் நடப்பதே சிரமமாக இருந்த காலகட்டம். தொடர்ச்சியான எடை இழப்புக்குப் பிறகு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என் எடை 37 கிலோ! மருத்துவமனையில் இருந்த இரண்டு மாதத்தில் தினமும் ஐந்து ஊசிகள்! ஆனால் ஒன்றும் பயனில்லை. எடை கொஞ்சம் ஏறி 39 கிலோவாக ஆனது! அதன்பின் என் தந்தையின் நண்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் கோவை ராம் நகரில் உள்ள டயபடிஸ் ரிசர்ச் சென்டருக்குச் சென்றோம். அதை நடத்திக் கொண்டிருந்த டாக்டர் முனிரத்னம் செட்டி என்ற சேவை மனப்பான்மையுள்ள மாமனிதர்தான் இன்று நான் உயிருடன் இருக்கக் காரணம். அவருடைய ஆய்வகத்தில் நாம் உண்ணும் இட்லி முதல் அனைத்து உணவுகளுக்குமான மருத்துவக் குறிப்பும் அதன் கலோரி அளவுகளும் விளக்கப்பட்டிருந்தன. அவர் நீரிழிவுக்கு மருத்துவம் பார்த்தார் என்பதை விடவும் நோயாளிகளுக்கு நீரிழிவைப் பற்றிய விழிப்புணர்வை ஊட்டினார் என்றே சொல்ல வேண்டும். அங்குதான் இனி வாழ்க்கை முழுதும் ஊசி போட வேண்டும் என்பதைச் சொல்லி எப்படித் தொடையிலும் வயிற்றுப் பகுதிகளிலும் தானே இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது என்பது குறித்தும் கற்றுக் கொடுத்தார்கள். இரண்டு வகையான மருந்தைக் கலந்து தொடையில் ஊசி போட வேண்டும். இப்போது இருப்பதைப் போல டிஸ்போசபிள் ஊசிகள் அப்போது கிடையாது. காலையில் 70 யூனிட் மாலையில் 60 யூனிட். அப்போது இனிப்பு மட்டும் சாப்பிடாமல் மற்ற அனைத்தையும் சாப்பிட்டு இன்சுலினும் போட்டுக் கொள்வேன். முனிரத்னம் செட்டியிடம் மருத்துவம் பார்த்த பிறகு ஒரு மாதத்தில் என் எடை 55 கிலோவாக ஆனது. அந்த மருத்துவ மையத்தின் மூலமாகத்தான் எந்த உணவை உண்டாலும் சர்க்கரை அளவுகள் அதிகமாகும் என்பதையும் இன்சுலின் போடுவதால் எப்படி ரத்தச் சர்க்கரை அளவு குறையும் என்பதையும் கற்றுக் கொண்டேன். சர்க்கரை அளவு குறைவதை உடனடியாக சரி செய்ய எப்போதும் 50 கிராம் சர்க்கரையைப் சட்டைப் பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பேன். இதனிடையே படிப்பும் தொடர்ந்து கொண்டிருந்தது. திருமணம் ஆகி, குழந்தைகளும் பிறந்தார்கள். அப்போது மாட்டின் கணையத்தில் (pancreas) இருந்து எடுக்கப்பட்ட இன்சுலின் உபயோகத்தில் இருந்தது. 1998-ம் ஆண்டு அமெரிக்கா வந்த பிறகு ஹியூமன் இன்சுலின் (Human insulin) அறிமுகமானது. செயற்கையான முறையில் பரிசோதனைக்கூடத்தில் உருவாக்கப்படும் இன்சுலின் அது. 2000-ம் வருடத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முழு ரத்தப் பரிசோதனை எடுத்துக் கொண்டும், உடற்பயிற்சி, இன்சுலின் உதவியுடன் காலம் ஓடிக்கொண்டிருந்தது. பிறகு 2006-ல் இன்சுலின் பேனா (Insulin pen) அறிமுகம் ஆனது. (இன்சுலின் பேனா என்பது டிஸ்போசபிள் ஊசி. சாதா ஊசியில் மருந்தைத் தனியாக எடுத்து அளந்து ஊசி போட வேண்டும். இதில் ஏற்கனவே ஊசியில் இன்சுலினை ஏற்றி வைத்திருப்பார்கள். நாம் ஊசி போட்டுக்கொண்டு பிறகு மூடிவைத்துவிடலாம். நாலைந்து தடவை பயன்படுத்தலாம். மருந்து தீர்ந்தபின் வீசிவிடலாம்.) அப்போதிருந்து பேலியோ உணவுமுறைக்கு மாறும்வரை எனது இன்சுலின் அளவுகளில் மாற்றம் நிகழவில்லை. எடையும் கிட்டத்தட்ட 70 கிலோ என்கிற அளவிலேயே இருந்து கொண்டிருந்தது. வழக்கமான உணவுடன் ஹெச்பிஏ1சி-யையும் ரத்தச் சர்க்கரையையும் கட்டுக்குள் வைத்திருந்தேன். 2014-ம் ஆண்டு பிற்பகுதியில்தான் ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழுமம் அறிமுகமானது. முதலில் பார்த்தபோது ஒன்றும் புரியவில்லை. முழுக்க முழுக்க தவறான உணவுமுறையாகப் பட்டது. இருந்தாலும் தொடர்ந்து அதைப் பற்றி படித்ததால், பேலியோ டயட் பற்றிய புரிதல் உண்டானது. குறைந்த அளவிலான மாவுச்சத்து, அதிகக் கொழுப்பு - பேலியோ டயட்டின் இந்த அறிவியலைப் புரிந்துகொண்டேன். ஒரு ஞாயிற்றுக் கிழமை, நானும் பேலியோ டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தேன். காலையில் வழக்கம்போல 70 யூனிட் இன்சுலின் மருந்தை ஊசி மூலம் போட்டுக்கொண்டு பிறகு 100 பாதாம் சாப்பிட்டேன். சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவு 145. என் கணக்குப்படி 100 பாதாம் 700 கலோரிகள். அதாவது 5 இட்லி, சாம்பார் - சட்னியுடன் சாப்பிடும் அளவு. இது சாதாரணமாக 4 மணி நேரத்துக்குத் தாங்க வேண்டும் (அடுத்தவேளை வரை). ஆனால் நடந்தது வேறு. 30 நிமிடத்திலேயே லோ சுகருக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஒன்றும் புரியாமல் சர்க்கரைப் பரிசோதனை செய்தபோது அது 64 எனக் காட்டியது. உடனடியாக ஐஸ்கிரீம், சாக்லேட் எனச் சாப்பிட்டு அதை அதிகரித்தேன். பேலியோ டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தபோது இன்சுலின் அளவைக் குறைக்காதது என் தவறு. மிகவும் பதற்றமாகி நியாண்டர் செல்வனிடம் ஆலோசனை கேட்டேன். பிறகுதான் நான் செய்த தவறு புரிந்தது. அதன்பிறகு, பேலியோ உணவுமுறையால் இன்சுலின் அளவைப் பாதியாகக் குறைத்தேன். சில வாரங்களில் மூன்றில் ஒரு பங்காகக் குறைத்த பிறகுதான் ஓரளவு லோ சுகர் கட்டுக்குள் வந்தது. மூன்று மாதம் கழித்து எடுத்த ரத்தப் பரிசோதனையில் பயப்படும்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கொலஸ்டிரால் சிறிது அதிகமாகியிருந்தது. அடுத்த இரு பரிசோதனைகளில் கொலஸ்டிராலும் சர்க்கரை அளவும் கட்டுக்குள் வந்தன. காலையில் பாதாம், மதியம் முட்டை, இரவு இறைச்சி. பால், காய்கறிகளையும் சேர்த்துக்கொள்கிறேன். இதுதான் என் பேலியோ டயட் (தற்போது வாரம் ஓரிரு வேளைகள் மட்டும் தென்னிந்திய உணவுகள்.) டைப் 1 சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால், மூன்றில் ஒரு பங்காக இன்சுலின் அளவுகளைக் குறைத்துக்கொண்டது பெரிய விஷயம். மேலும் எடை அதிகமாகும் என்கிற பயமும் இப்போது இல்லை. என் அனுபவம், வாசிப்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழுமத்தில் ‘உன்னை வெல்வேன் நீரிழிவே’ என்ற தொடரை எழுதி வருகிறேன். பேலியோ டயட்டின் ஆதரவில் என் பயணம் தொடர்கிறது. (தொடரும்) http://www.dinamani.com/junction/paleo-diet/2015/08/30/பேலியோ-டயட்-பகுதி-9---சர்க்கரை-/article2999895.ece Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கறுப்பி Posted October 17, 2015 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 17, 2015 பேலியோ டயட் பகுதி 10: கேள்வி – பதில்கள்By - நியாண்டர் செல்வன்First Published : 06 September 2015 10:00 AM ISTபேலியோ டயட் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நியாண்டர் செல்வன் பதில் அளிக்கிறார். 1. இன்று கிடைக்கும் கோழி (பிராய்லர்) எல்லாம் ஆண்டிபயாடிக் ஊசி போடப்பட்ட, இயற்கை உணவு உண்ணாத கோழிகள். இதை அதிகம் சாப்பிடுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். மீன் மற்றும் மட்டனும் அப்படித்தான். இதற்கு என்ன செய்வது? - ஆஷிக் ரஹீம் கோழி, ஆடு, மாடு என எதுவுமே தன் இயற்கை உணவை இன்று உண்பதில்லை. அனைத்துக்கும் மக்காச் சோளம், சோயா, சோளத்தட்டு போன்ற உணவுகளே வழங்கப்படுகின்றன. கோழிகளுக்கு வியாதி வரக்கூடாது எனும் நோக்கில் ஆண்டிபயாடிக் ஊசி போடப்படுகிறது. மனிதர்களுக்குக் காய்ச்சல், சளி வந்தால் ஆண்டிபயாடிக் ஊசி போடுகிறார்கள் அல்லவா? அதுமாதிரி. இந்த ஊசிகளால் கெடுதல் கிடையாது. ஹார்மோன் ஊசிகளைப் போட்டு வளர்க்கும் மிருகங்களை உண்பது ஆபத்தானது. அதைத்தான் தவிர்க்கவேண்டும். அதேசமயம், வியாதிகளைக் குணமாக்கும் நோக்கில் அல்லாமல் கோழிகளின் எடையை அதிகரிப்பதற்காக, அளவுக்கு அதிகமான அளவில் ஆண்டிபயாடிக் ஊசிகள் செலுத்தப்படுவதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. கோழிகளுக்கு எடையை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டிபயாடிக் ஊசி போடப்படுகிறதா, எந்தப் பண்ணைகள் அவ்வாறு செய்கின்றன என்பதை அரசு கண்காணிக்கவேண்டும். ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழுவில் உறுப்பினராக உள்ள கால்நடை மருத்துவரான ரவி பச்சையப்பன் இது குறித்து கூறுகையில்: ‘கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடுகிறார்கள் எனத் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஹார்மோன்கள் என்பது பெப்டைட் (peptide) எனப்படும் புரதம்; அது எந்த உடலுக்குள் போனாலும் உடனடியாக உடல் ஒருவித தற்காப்புமுறையைக் கையாளும். அப்போது உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து 14 நாள்கள் கழிந்த பின்னரே இயல்பு நிலைக்குத் திரும்பமுடியும். இப்படி இருக்கும் பட்சத்தில் 40 நாள்கள் மட்டுமே வளர்க்கப்படும் கோழிகளுக்கு எப்படி அந்த ஊசியைப் போட முடியும்? மேலும் ஒரு முக்கியமான உண்மை – கறிக்கோழி, முட்டைக் கோழி ஆகிய இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) முன்வைத்தே முட்டை உற்பத்தி செய்கின்றன. எதிர்ப்பு சக்தி குறையும்போது உற்பத்தி குறையும். ஹார்மோன் ஊசி செலுத்தினால் எதிர்ப்பு சக்தி குறைவதோடு கோழிகள் இறக்கவும் நேரிடும். அதனால் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடப்படுவதில்லை’ என்கிறார். அதனால் நல்ல முறையில் பண்ணையில் வளர்க்கப்படும் கோழி, ஆடு போன்றவற்றை உண்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதேசமயம் தெருவில் கண்டதைத் தின்று வளரும் நகர்ப்புறப் பிராணிகளான கோழி, மாடு, பன்றி போன்றவற்றை உண்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், தெருவில் உள்ள குப்பை, கழிவுகள் ஆகியவற்றை உண்டால் அவற்றின் உடலில் ஏராளமான நோய்த்தொற்றும், வியாதிகளும் பரவிவிடும். அதை வீட்டுக்குக் கொண்டு வந்து கழுவி, சமைத்தால் அந்த நோய்த்தொற்று நம்மையும் பாதிக்கும். 2. இந்தத் தொடரின் ஓர் இடத்தில் பேலியோ சேலட் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பேலியோ சேலட் என்றால் என்ன? - ஜெகதீசன் பேலியோ சாலடில் கீரை, முட்டைகோஸ், வெள்ளரி, காளிபிளவர், பிராக்களி, (சிறிதளவு) காரட், செலரித்தண்டு, குடைமிளகாய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். சாலடின் மேலே ஆலிவ் ஆயில் அல்லது செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், வினிகர் மற்றும் எலுமிச்சம் பழச் சாற்றை ஊற்றி உண்ணலாம். சைவர்கள் அதில் அவகாடோ அல்லது தேங்காய்த் துண்டுகளையும் அசைவர்கள் முட்டை அல்லது சிக்கன் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். 3. பேலியோ காய்கறிகள் என்றால் என்ன? - ராமலிங்கம் இராஜராஜன் காளிபிளவர், பிராக்களி (Broccoli), முட்டைகோஸ், பாகற்காய், காரட், பீட்ரூட், தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், கத்திரிக்காய், சுண்டைக்காய், வாழைத்தண்டு, அனைத்துவகைக் கீரைகள், முருங்கை, ஆஸ்பாரகஸ் (Asparagus, அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த காய்கறி வகை. குச்சி போன்று இருக்கும்.), ருபார்ப் (Rhubarb, இளவேல் சீனி), ஆலிவ், செலரி (செலரிக்கீரை), வெள்ளரி, குடைமிளகாய், பச்சை, சிகப்பு மிளகாய், பூசணி, காளான், தேங்காய், எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மஞ்சள் கிழங்கு, அவகாடோ (Avocado),புடலங்காய் போன்றவை பேலியோ காய்கறிகளில் அடங்கும் 4. சைனஸ் பிரச்னைக்கு பேலியோவில் தீர்வு உண்டா? - பார்வதி உண்டு. சைனஸ் வர ஒரு முக்கிய காரணம் புல் அலர்ஜி. கோதுமை, அரிசி போன்ற தானியங்கள் எல்லாமே புல் வகையைச் சேர்ந்ததுதான். அவற்றை நிறுத்தினால் சைனஸும் மறைந்துவிடும். பல ஆண்டுகளாக என்னை வாட்டி வந்த சைனஸ் வியாதி, பேலியோவினால்தான் அகன்றது. எங்கள் ஃபேஸ்புக் குழுவில் உள்ள பலரும் சைனஸில் இருந்து பேலியோவால் விடுதலை பெற்றுள்ளார்கள். 5. நமது உடல் அசைவ உணவுகளையே ஜீரணிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. அசைவ உணவில் கேடுவிளைவிக்கும் மாவுச்சத்து இல்லை. உண்மை இவ்வாறாக இருக்கும்போது, அசைவ உணவு குறித்து ‘தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்’ என திருக்குறளில் கூறப்பட்டுள்ளது ஏன்? - இராமநாராயணன் நம் உடல் அசைவ உணவை ஜீரணிக்க ஏற்றது அல்ல என்று சிலர் கூறுவது தவறான கருத்து. மனித உடலால் ஜீரணிக்க முடியாதது நார்ச்சத்து மாத்திரமே. நார்ச்சத்து தாவர உணவுகளில் மட்டுமே உண்டு. அசைவ உணவில் துளியும் கிடையாது. மேலும் நாம் உண்ணும் உணவு அனைத்தும் முதலில் சிறுகுடலுக்கே செல்லும். அதில் புலால் உணவு மட்டுமே சிறுகுடலால் முழுமையாக ஜீரணிக்கப்படும். சிறுகுடலால் ஜீரணம் செய்ய இயலாத நார்ச்சத்து கொண்ட தாவர உணவுகள், தானியங்கள் முதலானவை பெரும்குடலுக்குச் சென்று அங்கேயும் ஜீரணமாகாமல் வாயு, வயிற்றுவலி முதலான உபாதைகளை ஏற்படுத்தி கழிவில் கலந்து வெளியேறும். அடுத்து வள்ளுவர் புலால் மறுத்தல் எனும் அதிகாரத்தில் பத்து குறள்களை எழுதி புலால் மறுத்தல் எனும் கருத்தை வலியுறுத்துகிறார். ஆனால் புலால் மறுத்தல் அதிகாரம், துறவறவியலில் மாத்திரமே வருகிறது. அவாவறுத்தல், துறவு போன்ற அதிகாரங்களும் துறவறவியலில் வருகின்றன. இல்லறம் நடத்தும் மக்களுக்கு அவாவறுத்தல் (ஆசையை அறுத்தல்), துறவு, புலால் மறுத்தல் போன்றவை எப்படிப் பொருந்தும்? அதனால் புலால் மறுத்தல் துறவிகளுக்கான அறமாகவே வள்ளுவரால் கூறபட்டது என்பது தெளிவு. இல்லறத்தில் ஈடுபடுபவர்கள் புலால் உண்ண வேண்டாம் என்று வள்ளுவர் கூறவில்லை. திருக்குறளில் இன்னொரு இடத்தில் வள்ளுவர் கூறுகிறார்: கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது அதாவது, ‘முயலை வேட்டையாடி ஜெயிப்பதைவிட யானையை வேட்டையாடித் தோற்பது நல்லது’ எனக் கூறுகிறார். யானையை வேட்டையாடக் கூறும் வள்ளுவர் எப்படி சைவ உணவு நெறியை இல்லறத்தில் ஈடுபடுபவர்களுக்கு வலியுறுத்த முடியும்? அப்படிக் கருதுவதாக இருந்தால் இல்லறத்தார் ஆசையை விட்டொழிக்க வேண்டும், துறவு பூணவேண்டும் என்றும் அல்லவா கூறவேண்டும்? அதன்பின் சமூகம் எங்ஙனம் இயங்கும்? 6. நீங்கள் பேலியோ உணவுமுறைக்கு எப்படி மாறினீர்கள்? உங்கள் அனுபவம் என்ன? - செந்தில் என் அப்பா, தாத்தா, பாட்டி ஆகியோருக்குச் சர்க்கரை நோய் உண்டு. தாத்தா டிமென்ஷியா என்கிற மறதி நோயால் மரணமடைந்தார். அதனால் எனக்கும் சர்க்கரை நோய் வரலாம் என்கிற அச்சம் இருந்தது. அதேபோல 39-வது வயதில், ப்ரி டயபடிஸ் எனும் சர்க்கரை நோய் எனக்கு இருப்பதை அறிந்தேன். ரத்தச் சர்க்கரை அளவுகள் 125 எனும் அளவை எட்டின. ரத்த அழுத்தம் 130/85. எடை 90 கிலோவைத் தொட்டது. உடற்பயிற்சி மூலம் என் வியாதிகளை விரட்டலாம் என எண்ணி பளுதூக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டேன். பிறப்பு முதல் சைவம் என்பதால் கோதுமை, கொழுப்பெடுத்த பால், பருப்பு, சோயா போன்ற உணவுகளைக் கொண்ட குறைந்த கொழுப்பு டயட்டுகளையும் பின்பற்றினேன். இந்தச் சூழலில் அமெரிக்காவுக்கு வந்தபோது பாடிபில்டிங் தொடர்புடைய நூல்களைப் படித்தேன். அவற்றில் இறைச்சியும், முட்டையும் உடலுக்கு நல்லது என எழுதியிருந்தது. நூல்கள், ஆவணப் படங்கள் ஆகியவற்றின் உதவியுடன் பேலியோ டயட் பற்றி மேலும் தெரிந்துகொண்டேன். பரிசோதனை முயற்சியாக தானியம் இல்லாத சைவ பேலியோவைப் பின்பற்றத் தொடங்கினேன் (நான்தான் அசைவம் தொடமாட்டேனே!) நல்ல முன்னேற்றம் தெரிந்தாலும் சைவ பேலியோவில் தானியம் இல்லாததால் பசி வாட்டி எடுத்தது. எனக்குச் சிறுவயது முதல் அடிக்கடி வாய்ப்புண் உண்டாகும். ஓரிரு நாள் பால் குடிக்காவிட்டாலும் இப்பிரச்னை ஏற்படும். இதற்குக் காரணம் பி12 பற்றாக்குறையே என்பதை அறிந்தேன். உடற்பயிற்சி செய்யும்போது அதன் புரதத் தேவைகளை சைவ டயட்டால் பூர்த்தி செய்ய முடியாது என்பதையும் புரிந்துகொண்டேன். உணவுப் பழக்கத்தை மாற்றவேண்டும் என முடிவெடுத்தேன். மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் 40-வது பிறந்தநாளில் அசைவ பேலியோ உணவுமுறைக்கு மாறினேன். அதன்பின் என் வியாதிகள், வலிகள், உடல்பருமன் போன்றவை என்னை விட்டு அகன்றன. வாய்ப்புண், வயிற்றுவலி, சிறுவயது முதல் இருந்த சைனஸ் எல்லாமே போன இடம் தெரியவில்லை. இப்போது பேலியோவைத் தவிர்த்த வேறொரு உணவுமுறையை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ஆரம்பத்தில் பேலியோ பற்றி தெரிந்தபிறகும் ஒரு வருடம் அதில் இறங்கும் துணிச்சல் எனக்கு வரவில்லை. அதனால் பேலியோவை சந்தேகத்துடன் பார்ப்பவர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை நம்புவதை விடவும் தென்னை மரத்தையும் பசுவையும் நம்பலாம். நம் முன்னோர் உண்ட இறைச்சி, முட்டை, பால் போன்ற உணவுகளை உண்பதால் எந்தக் கெடுதலும் வராது. கேரளாவில் தேங்காய் எண்ணெயில் தான் சமைக்கிறார்கள். ஆரோக்கியமாகத் தானே இருக்கிறார்கள்! பேலியோ டயட்டைப் பின்பற்றும் முன்பு மெடிக்கல் டெஸ்ட் ஒன்றை எடுத்து உங்கள் ரத்தச் சர்க்கரை அளவுகள், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அதற்கேற்றபடி உணவைப் பரிந்துரைக்க உதவும். மற்றபடி பேலியோ டயட், இயற்கை உணவைச் சார்ந்தது என்பதால் எந்த உடல்நிலையில் இருப்பவரும் எந்த வயதினரும் இதைக் கடைப்பிடிக்கலாம். 7. நீங்கள் தினமும் நிறைய கொழுப்பு உணவுகள் சாப்பிடுவதை உங்கள் ஃபேஸ்புக் பக்கம் மூலமாக அறிகிறேன். என்னதான் பேலியோ டயட்டில் இருந்தாலும் எடை குறைந்தபின்னும் இவ்வளவு கொழுப்பு சாப்பிடுவது குறித்து உங்களுக்குக் கொஞ்சம்கூட பயமே இல்லையா? - செந்தில் நிச்சயமாக இல்லை. என்றாவது வெளியூர் போகும்போது பேலியோ டயட்டைத் தொடரமுடியாமல் இருந்தால், எப்போது மீண்டும் பேலியோவுக்குத் திரும்பி இறைச்சியையும், முட்டையையும் உண்போம் என மனம் ஏங்கும். அந்த அளவுக்கு உடலும் உள்ளமும் பேலியோ உணவுமுறைக்குப் பழகிவிட்டன. பேலியோவைப் பின்பற்றும் இந்த 3 வருடங்களில் சளி, காய்ச்சல் என எவ்விதச் சிறுதொல்லையும் ஏற்பட்டதில்லை. மருந்து மாத்திரையையும் தொட்டதில்லை. மிகுந்த ஆரோக்கியமாகவும், மன அமைதியுடனும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இதற்குக் காரணம் பேலியோ உணவே எனத் திடமாக நம்புகிறேன். 8. சம்பா கோதுமை (முழு கோதுமை) கஞ்சி சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதில்லை. பசியும் கட்டுக்குள் உள்ளது. இதைச் சாப்பிடலாமா? - ஆஷிக் ரஹீம் எம்மெர் (Emmer) எனப்படும் சம்பா கோதுமை, தொன்மையான உணவுப் பொருள். தொன்மையான ஐன்கார்ன் கோதுமை (Einkorn wheat) மற்றும் காட்டரிசியின் கலப்பினம்தான் இது. இதன் அறிவியல் பெயர் - Triticum dicoccum. பண்டைய காலத்தில் பயிரிடப்பட்ட சம்பா கோதுமையின் உயரம் மனிதர்களின் உயரத்தை விடவும் அதிகமாக இருக்கும். எகிப்திய பழங்காலக் கோதுமையை இன்னமும் பரிசோதனை முறையில் சில இடங்களில் வளர்கிறார்கள். அதன் புகைப்படத்தையும் இந்தியாவில் வளர்க்கப்படும் குட்டைக் கோதுமையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! நீளமான பயிராக இருந்த கோதுமையை ஆய்வுக்கூடத்தின் உதவியுடன் குட்டைக் கோதுமையாக மாற்றியபின் அது மோசமான தானியமாக மாறிவிட்டது. கோதுமையில் இருக்கும் புரதமான க்ளூட்டன் (Gluten), சுமார் 20 முதல் 30% பேருக்கு அலர்ஜியையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. கோதுமையில் ஏ, பி, டி (A,B,D) என மூன்று வகை ஜினோம்கள் (Genome) உண்டு. அதில் டி ஜெனோமை ஆய்வுக்கூடத்தில் மாற்றிவிட்டார்கள். இதனால் கோதுமை விஷமாகிவிட்டது. விஷம் என்பது மிகை இல்லை. க்ளூட்டன் அலர்ஜி இருப்பவர்களுக்குக் கோதுமை கடும் பாதிப்பு ஏற்படுத்தும். தமக்கு க்ளூட்டன் அலர்ஜி இருப்பதேகூடத் தெரியாமல் அதன் விளைவுகளை அனுபவிப்பார்கள். எடை ஏறும், தலை சுற்றும், சர்க்கரை நோய் ஏற்படும், பெண்களுக்கு மாதவிலக்குக் கோளாறுகள் உண்டாகும். பாரம்பரியமான சம்பா கோதுமையில், குட்டைக் கோதுமை அளவு பாதிப்பு இல்லை. குட்டைக் கோதுமை அளவு அதில் ரத்தச் சர்க்கரை அளவுகள் ஏறுவதும் இல்லை. குட்டைக் கோதுமை நம் ஜீரண உறுப்புக்களைப் பாதிப்படைய வைக்கும் அளவுக்கு சம்பா கோதுமை இல்லை. ஆனால், அந்தப் பாரம்பரிய சம்பா கோதுமை இப்போது பயிரிடப்படுவது இல்லை. இப்போது உள்ள சம்பா கோதுமை வகையும் குட்டைக் கோதுமை வகைதான். இதற்குக் காரணம், நம் இந்திய அரசுதான். 1995-96ல், DDK 1000, DDK 1029 என இரு புதிய சம்பா ரகக் கோதுமை வகைகளை அரசு அறிமுகப்படுத்தியது. கர்நாடகாவில் நடந்த ஓர் ஆய்வின் முடிவில், DDK 1001 எனும் குட்டைச் சம்பா கோதுமையையும் பிறகு அறிமுகம் செய்தது. சமீபத்தில் DDK 1009 என்கிற இன்னொரு சம்பா கோதுமை வகையும் அறிமுகமாகியுள்ளது. இது இலைப்புழுவை எதிர்க்கும் வண்ணம் மாற்றம் செய்யப்பட்ட மரபணுக்களைக் கொண்ட கோதுமை. இதுவும் டி ஜெனோமைக் கெடுத்து, நாசம் செய்து உருவானதுதான். சம்பா கோதுமையில் பல வகைகள் உள்ளன. பாரம்பரியமான நீளமான சம்பா கோதுமையைப் பயிரிடுபவர்கள் இன்னும் இருக்கலாமோ என்னவோ? ஆனால் நம் அரசு இந்தப் புதிய வகை சம்பா கோதுமை வகைகளைப் பயிரிடச் சொல்லி விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. குட்டைக் கோதுமை வேகமாக வளர்ந்து மகசூல் கொடுக்கும் என்பதால் விவசாயிகளும் இந்தப் புதியவகை கோதுமையை அதிகம் பயிரிடுகிறார்கள். ஆக, சம்பா கோதுமை மாவு என பாக்கெட் லேபிலிள் இருந்தாலும் அதனுள் இருப்பது பாரம்பரிய எம்மெர் கோதுமையா அல்லது DDK 1009, DDK 1001 கோதுமை வகைகளா என எப்படிக் கண்டுபிடிப்பது? 9. பேலியோ டயட்டைப் பின்பற்றும் நோயாளிகள் கெடொசிஸ் எனும் நிலைக்கு சென்று விடுவார்கள். கெடொசிஸை நீண்டநாள் பின்பற்றினால் கிட்னியில் கற்கள் வரும், எடை இழப்பும், எலும்பு இழப்பும் நிகழும். கெடொ - அசிடோசிஸ் எனும் ஆபத்தான நிலைக்கும் நோயாளிகள் செல்வார்களா? - ஜி. ஸ்ரீதரன் முதலில் கெடொசிஸுக்கும், கெடொ - அசிடோசிஸுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் இரண்டும் ஒன்று ஆகிவிடாது. மணத்தக்காளி கீரையின் பெயரும், தக்காளியின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் இரண்டும் ஒன்று ஆகாது அல்லவா? அதேபோல. கெடொசிஸ் என்பது உடல், சர்க்கரையை (க்ளுகோஸ்) எரிபொருளாகக் கொண்டு இயங்காமல் கொழுப்பை (கீடோன்கள்) எரிபொருளாகக் கொண்டு இயங்குவதைக் குறிப்பது. மனித மூளை க்ளுகோஸில் இயங்குவதைக் காட்டிலும் கீடோனில் மிகச் சிறப்பான முறையில் செயல்படும். மூன்று நாளுக்கு மேல் உண்ணாவிரதம் இருக்கும் அனைவர் உடலும் கீடோனில்தான் இயங்குகிறது. சிங்கம், புலி என அசைவம் உண்ணும் மிருகங்கள், கெடொசிஸ் நிலையில்தான் இருக்கும். மிக வேகமாக ஓடும் மிருகம் என சிறுத்தையைக் கூறுகிறோம். அதன் உணவு முழுக்க முழுக்க புலால்தான். எனவே அதுவும் ஆயுள் முழுக்க கெடொசிஸில் இருக்கும் வாய்ப்பே அதிகம். அலாஸ்கா, கனடா பகுதிகளில் வாழும் எஸ்கிமோக்களும் வருடம் முழுக்க மாமிச உணவையே உண்பதால் அவர்களும் ஆண்டு முழுக்க கெடொசிஸ் நிலையில்தான் இருப்பார்கள் என அறியலாம். ஆக உணவு மூலம் கெடொசிஸ் நிலையை அடைவதாலும், நீண்டநால் கெடொசிஸில் இருப்பதாலும் நமக்குக் கெடுதல் எதுவும் கிடையாது. கெடொ - அசிடோசிஸ் என்பது சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உடலால் சுத்தமாக இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகும்போது கீடோன்கள் அதிக அளவில் ரத்தத்தில் தேங்குவதால் உருவாவது. இதனால் மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி, உடல் வலி ஏன் சில சமயம் மரணம்கூட நிகழலாம். பேலியோ உணவு முறையால் ஒருவருக்கு கெடொ – அசிடோசிஸ் நிலை ஏற்படாது. அது சர்க்கரை நோய் முற்றியபின் வருவது. தானிய உணவு, தென்னிந்திய உணவு போன்றவற்றை உண்பவர்களுக்கே பெரும்பாலும் கெடொ - அசிடோசிஸ் ஏற்படுவதைக் காண்கிறோம். முன்பே கூறியதுபோல இரு பெயர்களும் ஒன்றாக இருப்பதை வைத்து இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. பேலியோ உணவில் மாவுச்சத்தின் அளவு 20 கிராம் எனும் அளவுக்குக் குறைந்தால்தான் கெடொசிஸ் நிலை உண்டாகும். 30, 40 கிராம் எனும் அளவில் மாவுச்சத்து இருந்தால் கெடொசிஸ் நிலைக்குச் செல்லமாட்டோம். கெடொசிஸில் தொடர்ந்து வருடக்கணக்கில் இருப்பது நம்மைப் போன்ற நகர்ப்புற மனிதர்களுக்குச் சாத்தியமில்லாத விஷயம். தீபாவளி, பொங்கல், பிறந்தநாள், சனி, ஞாயிறு என ஏதோ ஒரு காரணத்தை வைத்து ஒரு சின்ன இட்லியோ, தோசையோ, மாவுச்சத்து உள்ள பழமோ எதாவது வாய்க்குள் போனாலே அடுத்த வினாடி கெடொசிஸ் நிலை மறைந்துவிடும். மேலும், நாம் அன்றாடம் பல் துலக்கும் பற்பசையில் கூட கலோரிகளும், மாவுச்சத்தும் உள்ளன. மருந்து, மாத்திரைகளை எடுத்தால் அதில்கூட சுகர் கோட்டிங் (sugar coating) எனச் சொல்லி சர்க்கரையைக் கலந்தே கொடுக்கிறார்கள். இதெல்லாமே கெடொசிஸைக் கெடுக்கும் காரணிகளாகும். ஆண்டுக்கணக்கில் தினமும் 20 கிராமுக்கும் குறைவாக மாவுச்சத்து உள்ள உணவை உண்பது சுத்தமாக காய்கறிகளே விளையாத துருவப் பகுதி மக்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். 10. சைவ பேலியோ டயட் பற்றி கூறமுடியுமா? அசைவம் சாப்பிடாமல் இருப்பதால் பலன்கள் குறையுமா? - ராஜூ உங்களைப் போல பலரும் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்கள். அடுத்த வார அத்தியாயத்தில் சைவ பேலியோ டயட் குறித்து விளக்கமாக எழுதுகிறேன். (கேள்விகளை அனுப்பிய வாசகர்களுக்கு நன்றி. வாசகர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய நோய்களைக் குறிப்பிட்டு டயட் கேட்டுள்ளார்கள். அவர்களை, ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழுமத்தில் இணையும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.) (தொடரும்) http://www.dinamani.com/junction/paleo-diet/2015/09/06/பேலியோ-டயட்-பகுதி-10-கேள்வி-–-ப/article3012008.ece Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் கறுப்பி Posted October 22, 2015 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted October 22, 2015 பேலியோ டயட் பகுதி 11 - சைவ பேலியோ!By - நியாண்டர் செல்வன்First Published : 13 September 2015 10:00 AM ISTஉலகில் சைவ உணவு நெறிக்கொள்கையை முதலில் அறிமுகப்படுத்திய நாடு, இந்தியா. உலக வரலாற்றில் பதிவான முதல் சைவ உணவு நெறியாளர் என ஜைன தீர்த்தங்கரர் பார்சுவநாதரைக் குறிப்பிடலாம். அவர் 23-ம் ஜைன தீர்த்தங்கரர். வேத காலத்துக்கும் முந்தைய கிமு 9-ம் நூற்றாண்டில் பிறந்தவர். பார்சுவநாதர் காலத்துக்கு முன்பும் சைவ உணவு நெறியாளர்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் வரலாற்றில் பதிவாகவில்லை. ஆக 23-ம் ஜைன தீர்த்தங்கரரான பார்சுவநாதர் மற்றும் 24-ம் தீர்த்தங்கரரான மகாவீரர் ஆகிய இருவருமே இந்தியாவில் சைவ உணவு நெறி பரவியதற்கு முழுக் காரணம் என்று கூறலாம். கொல்லாமை, அகிம்சை, உயிர்களிடத்தில் கருணை போன்றவற்றை வாழ்க்கை நெறியாக மாற்றி, உலகமெங்கும் பரப்பிய மதம் என்று சமண மதத்தைக் குறிப்பிடமுடியும். சமணம் மெளரிய மன்னர்களின் அரசவம்ச மதமாகி, சைவ நெறி நாடெங்கும் பரவியது. புத்தரும் உயிர்ப்பலியைக் கண்டித்தார். இந்தியாவில் முதல்முதலாகப் பசுவதை தடைச் சட்டத்தைப் பிறப்பித்த மன்னர், அசோகர். இன்று உலகெங்கும் நனிசைவ இயக்கங்கள் பெருகி வருகிறது. அதற்கான வித்து, இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பார்சுவநாதராலும், மகாவீரராலும் இடப்பட்டது. (வீகன் என்று அழைக்கப்படும் நனி சைவத்தின் (சுத்த சைவம்) உணவுமுறையில் பால் பொருள்களை அறவே தவிர்க்கப்படவேண்டும். விலங்கினங்களில் இருந்து பெறப்படும், தயிர், மோர், நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி மற்றும் தேன் என எந்த உணவுக்கும் இதில் இடமில்லை. காய்கறிகள், பழங்கள், கீரைகள், முழு தானியங்கள் போன்றவற்றை உண்ணவேண்டும்.) அதேசமயம் சமணம், பவுத்தம் ஆகியவை மன்னர்களின் மதமாக இருந்த சமயம், எளிய மக்களின் மதமாக அன்று இருந்த சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் காலப்போக்கில் ஒருங்கிணைந்து இந்து சமயமாக உருவெடுத்தன. இந்து, பவுத்தம், சமணம் ஆகிய மதங்கள் ஒன்றாக வளரும்போது ஒன்றின் கொள்கையை இன்னொன்று உள்வாங்கியே வளர்ந்தன. சமணத்திலும் இராமாயணம் உண்டு, இந்து சமயத்தில் புத்தர் ஒரு அவதாரமாகக் கருதப்படுகிறார். இன்றிருப்பதுபோல சைவம், அசைவம் என இறுகிய போட்டி மனப்பான்மை அன்றைய சைவர்கள், அசைவர்களிடையே இருக்கவில்லை. பேலியோலிதிக் காலம் (கற்காலம்) என்பது 26 லட்சம் ஆண்டுகள் பழமையானது. நாகரிகங்கள், தெய்வங்கள், பண்பாடுகள், நகர்ப்புறக் குடியிருப்புகள் ஆகியவை கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் உருவானவையே. புலால் உணவின் வரலாற்றுத் தொன்மையை ஆராய்ந்தால் அது வரலாற்றுக் காலத்தையும் தாண்டிச் செல்லும். சமீபத்திய சில ஆய்வுகளின்படி, இந்தியரில் 31% பேரே சைவ உணவு நெறியாளர்கள் என்றும் 69% இந்தியர்கள் புலால் உண்பவர்களே என்றும் கூறப்படுகிறது. இதைப் பண்டைய காலகட்டத்துடன் ஒப்பிட்டால், சிறிது வித்தியாசப்படலாம். மற்றபடி இந்தியாவில் மக்கள் சைவ உணவுநெறியைப் பெருமளவில் பின்பற்றிய காலகட்டம் என எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. பேலியோ டயட் என்பதே கற்கால மனிதனின் புலால் உணவு வழிமுறைதான் என்றாலும், நம் பண்பாட்டின் அடிப்படையில் சைவ பேலியோ டயட் என்பதை முதல்முறையாக அறிமுகப்படுத்தியது, ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழு தான். மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினரின் நம்பிக்கையை மதிக்க வேண்டியது நம் கடமை அல்லவா! வியப்பளிக்கும் வகையில் முட்டை கூட சேர்க்காத சைவ பேலியோ உணவுமுறையால், மருந்துகளால் குணமாகாத ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளை ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் உள்ள சிலர் வெற்றி கண்டார்கள். அவர்களின் அனுபவங்களை முதலில் பார்த்துவிடலாம். பொன். கிருஷ்ணசாமியின் சைவ பேலியோ அனுபவங்கள்: ‘பேலியோ டயட்டை 2014 நவம்பர் முதல் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். நான் முட்டை கூட உண்ணாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவன். எனவே அதே உணவுமுறையில்தான் என் பேலியோ டயட்டும் இருந்தது. அப்போது என் எடை 97 கிலோ (உயரம் 173 செ.மீ). கூடுதல் எடையோடு ரத்த அழுத்தமும் 10 வருடங்களாக பிரச்னை கொடுத்து வந்தது. காலையில் 5 மி.கி., இரவில் 2.5 மி.கி. என இந்தப் பத்து வருடங்களும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருந்தேன். நண்பர் கோகுல் ஜி-யின் பரிந்துரையின் பேரில் பேலியோ டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தேன். முதல் மாதத்தில் கிட்டத்தட்ட 10 கிலோவைக் (87.8) குறைத்தேன். அதுவும் முதல் 5 நாள்களில் 4 கிலோ வரை குறைந்தது. 15 நாள்களில் ரத்த அழுத்தத்துக்காக எடுத்துவந்த மாத்திரைகளை அடியோடு நிறுத்தினேன். இன்றுவரை அதே நிலைமைதான். சைவ பேலியோ டயட்டால் இந்தளவு பலன் இருக்குமா என்று பலருக்கும் ஆச்சர்யம்'. என்னுடைய டயட் இதுதான்: காலையில் 5.30 மணிக்கு ஒரு டம்ளர் பால் 7.30 மணிக்கு 100 எண்ணிக்கைகள் கொண்ட பாதாம். தானியம் சாப்பிடக்கூடாது என்பதால் காலையில் தோசை, இட்லியைத் தவிர்த்து நட்ஸ் சாப்பிட்டேன். மதியம் - கீரைப்பொரியல் அல்லது வெஜிடபிள் சாலட். கூடுதலாக ஒரு கப் தயிர். மாலை வேளையில் சில சமயங்களில் மட்டும் சர்க்கரை இல்லாத காபி. இரவில் வெஜிடபிள் சூப் கட்டாயம் உண்டு. கூடவே பனீர் மஞ்சூரியன். காலிஃபிளவர் மஞ்சூரியன் அல்லது காய்கறி பொரியலையும் (கேரட், வெண்டைக்காய், புடலை) அவ்வப்போது சேர்த்துக்கொள்வேன். இரவு வேளையில் பனீரைத் தினமும் எடுத்துக்கொண்டேன். சமையலுக்கு நல்லெண்ணைய் மற்றும் நெய் பயன்படுத்தினோம். 6 நாள்கள் தீவிரமாக பேலியோ டயட்டைக் கடைப்பிடிப்பேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு கப் சாதம் சாப்பிடுவேன். அமாவாசை, கிருத்திகை தினத்தன்றும் அதேபோல ஒரு கப் சாதம். இந்த உணவுமுறையால் தூக்கம் வருமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால் டயட்டின் முதல் வெற்றியே நல்ல தூக்கம்தான். பேலியோ டயட் என்றால் இவ்வளவுதானே, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆரம்பித்தால் சரியாக வராது. ஆரம்பத்தில் நிறைய கேள்விகள், சந்தேகங்கள் எழும். எனவே பேலியோ டயட் ஃபேஸ்புக் குழுமத்திடம் ஆலோசனைகள் பெற்று டயட்டைப் பின்தொடர்வது நல்லது. குழுவைச் சேர்ந்த நண்பர் சிவராம் ஜெகதீசன் சொன்ன அறிவுரையின் பேரில் இப்போது உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்துள்ளேன். எனக்கே நம்பமுடியவில்லை. எடைக்குறைப்பு, உடற்பயிற்சி எல்லாம் சேர்த்து 10 வயது குறைந்ததுபோல தோற்றம் அடைந்துள்ளேன். முதலில் என்னால் வாக்கிங் போகவே முடியாது. பிறகு ஒரு கிலோ மீட்டர் தூரத்தை 14.2 நிமிடங்களில் கடந்தேன். இப்போது 9.5 நிமிடங்களில் ஒரு கிலோ மீட்டரைக் கடக்கமுடியும். பேலியோ டயட்டால் வாழ்க்கை குதூகலமாக உள்ளது. சரியான மனநிலையுடனும் சுறுசுறுப்பாகவும் உள்ளேன். தற்போது ஒத்த கருத்துடைய பேலியோ நண்பர்கள் வாட்ஸாப் குழு ஒன்றைத் தொடங்கி டயட் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறோம். என்.சொக்கன் - பொன்.கிருஷ்ணசாமி எழுத்தாளர் என். சொக்கனும் சைவ பேலியோ டயட்டைப் பின்பற்றுபவர். அவரிடம் ஒரு மினி பேட்டி: பேலியோ டயட்டுக்கு எப்படி வந்தீர்கள்? வெண்பா எழுதிவந்தேன் வேடிக்கை அல்ல, நிஜமாகதான். க்ரீன் டீயைப் பாராட்டி நான் ஒரு வெண்பா எழுத, அதைப் படித்த நண்பர் ஒருவர் என்னை உடல்நலத்தில் அக்கறையுள்ளவன் என்று நினைத்து பேலியோ குழுமத்துக்கு அழைத்துவந்தார். கொஞ்சம் சந்தேகத்துடன் உள்ளே நுழைந்து அங்குள்ள விவரங்களை வாசிக்கத் தொடங்கினேன். ஒவ்வொன்றாக முயன்று பார்த்து எனக்குப் பிடித்தவற்றை, இயன்றவற்றைப் பின்பற்றத் தொடங்கினேன். பேலியோ டயட்டில் என்ன சாப்பிட்டீர்கள்? பேலியோ பெரும்பாலும் மாமிச டயட்டாகவே அறியப்பட்டிருந்தாலும், முட்டை, மாமிசம் சாப்பிடாத நானும் அதனை ஓரளவு மாற்றிப் பயன்படுத்திக்கொள்ள இயன்றது. புரதக்குறைபாட்டைமட்டும் சரி செய்ய இயலவில்லை. எடைக்குறைப்புக்காக நான் தொடர்ந்து சாப்பிட்டவை: புல்லட் ப்ரூஃப் காஃபி, ஊறவைத்த பாதாம், காய்கறிக் கூட்டு/ பொரியல்/ கீரை, பனீர், சீஸ், வால்நட், முந்திரி, தயிர், நெய், கொய்யாக்காய், ஃப்ளாக்ஸ் சீட் தூள், நீர்த்த காய்கறி சூப், தேங்காய் அதிகமுள்ள முற்றிய இளநீர், எப்போதாவது க்ரீன் டீ. பேலியோவில் எடைக்குறைப்பு நேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே பழமான அவகோடா எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. வேர்க்கடலை பேலியோவில் இல்லை என்றாலும் விரும்பி எடுத்துக்கொண்டேன். எடைக் குறைப்பைத் தாண்டி வேறு நன்மைகள் ஏதாவது? முக்கியமாகக் களைப்பு இல்லாமல் நாள்முழுக்கச் சுறுசுறுப்பாகப் பணியாற்ற இயன்றது, அடுத்து, இடுப்பளவு, எடை குறைந்தது. ஆனால் தொப்பை குறையவில்லை, அதற்கான உடற்பயிற்சிகளைக் கண்டறியவேண்டும். சுற்றுப்பயணம் செய்யும்போதும் உறவினர் வீடுகளுக்குச் செல்லும்போதும் ஏற்படும் சிரமங்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? ஊர் சுற்றும்போது முந்திரி அல்லது பாதாம் வறுத்து எடுத்துச் சென்றுவிடுவேன், அப்புறம் இருக்கவே இருக்கின்றன தயிர் பாக்கெட், சர்க்கரை போடாத காபி, இளநீர் போன்றவை. உறவினர்களிடமும் இதையே சொல்லிவிடுகிறேன், 'கொஞ்சம் பொரியல், கூட்டு எக்ஸ்ட்ராவா கொடுங்க' என்று முன்னாலேயே சொல்லிவிட்டால் மகிழ்ச்சியோடு செய்கிறார்கள். ***சைவ பேலியோ டயட்டில் என்ன சாப்பிடலாம்? காலை உணவு: 100 பாதாம் பருப்புகள் (வறுத்தது அல்லது நீரில் 12 மணிநேரம் ஊற வைத்தது). பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் பட்டர் டீ உட்கொள்ளலாம். மதிய உணவு: பேலியோ காய்கறிகளில் ஏதாவது ஒன்று, 1/2 கிலோ. நன்றாக நெய் விட்டு வதக்கலாம். தேங்காய் சேர்த்துக்கொள்ளலாம். இரவு: பனீர் மஞ்சூரியன், பனீர் டிக்கா சைவ பேலியோ டயட்டால் நல்ல கொலஸ்டிரால் எனப்படும் எச்டிஎல் அதிகரிக்கும், உடல் எடை குறையும், ரத்த அழுத்தம் சீராகும், சர்க்கரை வியாதி கட்டுக்குள் வரும். சைவ பேலியோ டயட்டின் சவால்கள் மனிதனின் ஆரோக்கியம், புலாலில் மட்டுமே கிடைக்கும் சிலவகை வைட்டமின்கள், மினரல்களை நம்பியுள்ளது. சைவ உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு அசைவர்களுக்கு வராத சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அவற்றை எப்படிச் சமாளிப்பது? பார்க்கலாம். புரதம் சைவர்களின் முதல் சவாலே புரதம்தான். இந்திய அரசு அளிக்கும் புள்ளிவிவரப்படி 30% இந்தியர்கள் புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த முப்பது சதவிகிதத்தில் 46% பேர் பள்ளிக் குழந்தைகள். இவர்கள் எல்லாருமே சைவர்கள் எனச் சொல்லமுடியாது. இந்தியாவில், அசைவராலுமே முட்டை, இறைச்சி போன்ற புரதம் மிகுந்த உணவுகளை அன்றாடம் உண்ண முடியாது. எனவே புரதக் குறைபாடு இந்தியா முழுவதையும் பாதிக்கும் விஷயம் என்பதை மனத்தில் கொள்ளவேண்டும். மற்ற வைட்டமின்களை போல புரதத்தை உடலால் தேக்கி வைக்க
Recommended Posts