Jump to content

பேலியோ டயட்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பேலியோ டயட் - பகுதி 20. உடற்பயிற்சி என்னும் மூடநம்பிக்கை
By நியாண்டர் செல்வன்
First Published : 15 November 2015 10:00 AM IST

1970-80-களில், உடற்பயிற்சி செய்யாததால்தான் குண்டாக இருக்கிறோம் எனும் மூடநம்பிக்கை மக்களைப் பிடித்து ஆட்டத் துவங்கியது. மேலைநாடுகளில் டிரெட்மில், எக்ஸர்சைக்கிள் போன்ற உடற்பயிற்சிச் சாதனங்கள், மக்களிடையே இந்த டிரெண்டை பயன்படுத்தி விற்கப்பட்டன. உடல் இளைக்கிறேன் என புத்தாண்டு சமயம் சபதம் எடுக்கும் பலரும் செய்யும் முதல் வேலை, உடற்பயிற்சி நிலையங்களில் சென்று உறுப்பினர் ஆவதே.

புத்தாண்டு சமயத்தில்தான் பலருக்கும் தம் ஆரோக்கியம், உடல்நலன் பற்றிய கவலை பிறக்கும். புத்தாண்டு சபதமாக, எடைக் குறைப்பு என்னும் லட்சியத்தை மேற்கொள்வார்கள். இதைப் பயன்படுத்தி, மேலைநாடுகளில் பல உடற்பயிற்சி மையங்கள் புத்தாண்டு சமயம் நுழைவுக் கட்டணத்தை தள்ளுபடி செய்தும், சலுகைகள் அறிவித்தும் உறுப்பினர்களை ஈர்க்கும்.

1.jpg

இப்புத்தாண்டு சபதங்கள் எல்லாம் பிப்ரவரி மாதம் வரும்போது மக்களுக்கு மறந்துபோயிருக்கும். ஆரம்பகட்ட உற்சாகத்தில், தினமும் பல மைல்கள் நடந்தும், ஓடியும் உடற்பயிற்சி செய்துவிட்டு, அதன்பின் கைகால் சுளுக்கி, வலி எடுத்து, ஓடுவது என்றாலே அலுப்படைந்து, அதன்பின் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு, டயட்டையும் நிறுத்திவிட்டு, பழையபடி எடையை ஏற்றிகொள்வார்கள்.

மக்களிடையே பரவலாகப் பரவியிருக்கும் உடற்பயிற்சி குறித்த மாயைகள்

உடற்பயிற்சி செய்யாததால்தான் குண்டாகிறோம். அதனால் உடற்பயிற்சி செய்தால் எடை இறங்கிவிடும்.

ஆதிமனிதன், காட்டில் பல மைல்கள் ஓடியாடி வேட்டையாடியதால்தான் ஆரோக்கியமாக இருந்தான்.

நம் முன்னோர்கள் எல்லாம் ஒல்லியாக இருந்ததற்குக் காரணம், அவர்கள் காரில் போகாமல், நடந்தும் சைக்கிளில் போனதுமே.

இவை எல்லாம் உண்மையா? இல்லவே இல்லை. இந்த நம்பிக்கைகளின் பின்புலனையும், இதன் அறிவியல்ரீதியான தவறுகளையும் காண்போம்.

தவறான நம்பிக்கை 1

உடற்பயிற்சி செய்யாததால்தான் குண்டாகிறோம். அதனால் உடற்பயிற்சி செய்தால் எடை இறங்கிவிடும்.

மிதமான உடற்பயிற்சி மாரடைப்பை தடுக்கும், பிரஷரை தடுக்கும், சில வகை கேன்சர்களைக்கூட தடுக்கும், புத்துணர்வு அளிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், எடையைக் குறைக்க அது பொதுவாகப் பலனற்ற விஷயம்.

உதாரணமாக, ஒரு கேன் கோக்கில் உள்ள கலோரிகளை எரிக்க 35 நிமிடம் நடக்க வேண்டும்.

15 உருளைக்கிழங்கு சிப்ஸை எரிக்க 12 நிமிடம் அதிக வேக ஸ்கிப்பிங் செய்ய வேண்டும்.

1 சாக்லட் பாரை எரிக்க 52 நிமிடம் ஓட வேண்டும்.

ஆக, கலோரிகள் கணக்கின்படி பார்த்தால், நீங்கள் உடற்பயிற்சி செய்வதைவிட, தினம் உண்ணும் குப்பை உணவின் (Junk Food) அளவைக் குறைத்தால் போதும். தினம் ரெண்டு பாட்டில் கோக் குடித்து ஒரு மணி நேரம் நடப்பதைவிட, தினமும் கோக் குடிக்காமல் இருந்தாலே போதும், உடற்பயிற்சி அவசியமில்லை.

சரி, ‘நான் இரண்டையும் செய்கிறேன். கோக் குடிப்பதையும் நிறுத்துகிறேன். உடற்பயிற்சியும் செய்கிறேன். இரண்டையும் செய்தால் கூடுதல் நன்மையல்லவா?’ என்று கேட்கலாம்.

துரதிர்ஷ்டவசமாக, மனித உடல் இம்மாதிரி கணித அளவீடுகளின்படி இயங்குவதில்லை. உடற்பயிற்சி செய்யும் பலரும் உடற்பயிற்சி செய்யும்முன் ஒரு வாழைப்பழம், உடற்பயிற்சி செய்து முடித்தபின் காபி என எடுக்கிறார்கள்.

அமெரிக்காவில், உடற்பயிற்சி செய்பவர்களை குறிவைத்து எலக்ட்ரோலைட் நிரம்பிய பானங்கள் (Gatrorade, Powerade) விற்கப்படுகின்றன. நடுவே வெய்யில் அதிகரித்ததால் தாகம் எடுத்து இளநீர், ஜூஸ் எனப் பருகுவதும் உண்டு. அல்லது எந்தப் பானமும், சிற்றுண்டியும் எடுக்காமல் உடற்பயிற்சி செய்பவர்கள்கூட, அதனால் பசி அதிகரித்து வழக்கமாக உண்பதைவிடக் கூடுதலாக உண்பார்கள்.

என் அனுபவத்தில் சொல்வதனால், நான் காட்டுத்தனமாகத் தினமும் ஏழெட்டு கிலோமீட்டர் ஓடி உடற்பயிற்சி செய்த நாட்கள் உண்டு. 20 கி.மீ. தினமும் நடந்த நாட்களும் உண்டு. அப்படி ஓடிக் களைத்தபின், நாள் முழுக்க களைப்படைந்து சோபாவில் படுத்தபடி டிவி பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறேன்.

ஆக, உடற்பயிற்சியினால் எடை இறங்கும் என நினைப்பது மிக மிகத் தவறு. இதை ஒரு மூடநம்பிக்கை என்றுகூட சொல்லலாம். இது நான் சொல்லும் கூற்று மட்டும் அல்ல; அறிவியல் சொல்லும் கூற்றும் ஆகும்.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிஸினில் (British Journal of Sports Medicine) இது குறித்து வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றில், பிரிட்டிஷ் இதயவியல் நிபுணர் ஆஸிம் மல்ஹோத்ரா, உடற்பயிற்சிக் கலாசாரத்தை கடுமையாகச் சாடுகிறார். கீழே உள்ள லிங்க்கில் அந்தக் கட்டுரையை நீங்கள் படித்துப் பாருங்கள்.

URL: http://www.theguardian.com/society/2015/apr/22/obesity-owes-more-to-bad-diet-than-lack-of-exercise-say-doctors

கோக், பெப்ஸி மற்றும் பிற வகை சிப்ஸ், நொறுக்குத்தீனிகளை விற்கும் கம்பெனிகளும், அரசும், பிற அமைப்புகளும் சேர்ந்து, ‘உடற்பயிற்சி செய்யாததால்தான் நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள்’ என மக்களை நம்பவைத்துவிட்டன. கடந்த 30 ஆண்டுகளில், அமெரிக்கர்களின் உடற்பயிற்சி அளவுகள் அதிகரித்தே வந்துள்ளன. பலரும் உடற்பயிற்சி செய்கிறார்கள்; ஓடுகிறார்கள்; உடற்பயிற்சி மையங்களில் சேருகிறார்கள். ஆனால் இதனாலெல்லாம் குண்டாக இருக்கும் மக்களின் சதவிகிதம் என்னவோ குறைவதாகத் தெரியவில்லை. மக்களின் எடை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

மிதமான உடற்பயிற்சி இதயநலனுக்கு நல்லது. ஆனால், குண்டாக இருக்கும் யாரும் அதனால் ஒல்லியாக ஆகமாட்டார்கள். அதற்கு மிகக் கடுமையான அளவில் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அவ்வளவு கடுமையான பயிற்சிகளை செய்தால், மூட்டுவலி, விபத்துகள் போன்ற பல அபாயங்கள் நேரும்.

உதாரணமாக, நடிகர் கார்த்திக்கின் தந்தை முத்துராமன், 51 வயதில் ஊட்டியில் அதிகாலையில் ஓடுகையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். டெண்டுல்கர் கடும் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல கிரிக்கட் வீரர்களும், விளையாட்டு வீரர்களும் காயங்களுக்கு அதிநவீன மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டும், வலி நிவாரணி மருந்துகள் துணையுடனும்தான் விளையாடி வருகிறார்கள்.

ஆக, மிதமான உடற்பயிற்சியால் எடை இறங்காது. அதீத உடற்பயிற்சியால்தான் எடை இறங்கும். அதேசமயம், அதீத உடற்பயிற்சியானது உடலுக்கு ஆபத்தானது என்பதால் அதைச் செய்வது ரிஸ்க். அதிலும், மிக அதிக அளவில் குண்டாக இருப்பவர்கள், வயதானவர்கள் எனப் பலரும் உடற்பயிற்சி செய்யும்போது, சின்னதாகக் கால் வழுக்கினாலும், கீழே விழுந்து முதுகெலும்பு முறிந்து மரணம் வரை செல்லும் நிலை உருவாகும்.

ஆனால், இதை எல்லாம்விட முக்கியமாக ‘உடல் இளைக்கணும்னா பார்க்கில் ஓடு, ஜிம்மில் ஓடு’ என்று சொல்லி, குண்டாக இருப்பவர்களுக்குப் பலரும் தவறான அறிவுரை கூறி, அவர்கள் சோம்பேறிகள் என மறைமுகமாகச் சொல்லாமல் சொல்கிறார்கள். ஆக, உடற்பயிற்சி செய்யாமல் உடல் இளைக்க முடியாது என மனத்தை தளரவிட்டு, அவர்கள் மேலும் மேலும் சிப்ஸ், சோடா எனக் குடித்து மேலும் குண்டாகிறார்கள்.

ஆக, உடற்பயிற்சி முக்கியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதைச் செய்வதால் உடல் இளைக்கும் என்பது தவறான வழிகாட்டுதலாகும். உடல் எடையை இறக்க, டயட்டைவிடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.

தவறான நம்பிக்கை 2

ஆதிமனிதன், காட்டில் பல மைல்கள் ஓடியாடி வேட்டையாடியதால்தான் ஆரோக்கியமாக இருந்தான்.

ஆதிமனிதன், தினமும் காட்டில் ஓடியாடி உடல்பயிற்சி செய்தான் எனப் பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. ஏனெனில், காடுகளில் ஓட முடியாது. நான் சுற்றுலாவுக்காகப் பல தேசியப் பூங்காக்களில் உள்ள காடுகளுக்குச் சென்றுள்ளேன். அவற்றில் மரங்கள் அடர்த்தியாக இருக்கும். தரையில் முட்கள், கற்கள் இருக்கும். வருடத்தின் பல மாதங்கள் அவற்றில் பனி படர்ந்து இருக்கும். ஷூ, செருப்புகூட கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில், அதில் ஓடுவது மிக ஆபத்தான விஷயம். மேலும், ஆதிகாலத்தில் காட்டில் கை, கால் முறிந்தால் ஆம்புலன்ஸ், டாக்டர் என எதுவுமே கிடையாது. காட்டில் அப்படியே மரணமடைய வேண்டியதே.

ஆக, ஆதிமனிதன் ஓடிய சமயம் என்பது சிங்கம், புலி மாதிரி மிருகங்கள் துரத்தும்போதுதான். அல்லது எதாவது வேட்டையின்போது ஓரிரு நிமிடம் ஓடியிருக்கலாம். ஆனால், மனிதன் ஓடிப் பிடிக்கும் வகையான மிருகங்கள் என எவையும் காட்டில் இல்லை. மான், முயல், காட்டெருமை, யானை, குதிரை என பலவும் மனிதனைவிட வேகமாக ஓடக்கூடியவை. மனிதன் தூர இருந்து வேல் எறிந்தும், அம்புவிட்டும், குழிவெட்டியும், கண்ணி வைத்துமே வேட்டையாடினானே ஒழிய, ஓடியாடி வேட்டையாடவில்லை.

ஆதிமனிதன் மட்டுமின்றி, காடுகளில் வாழும் மான், புலி எதுவுமே ஜாக்கிங் போகாது. மான் மெதுவாக, நாள் முழுக்க நடந்தபடி புல்லை மேயும், அல்லது படுத்திருக்கும். புலி, சிங்கம் எல்லாமே அப்படித்தான். அவை வேகமெடுத்து ஓடுவது, இரையைத் தேடும் ஒரு சில நிமிடம்தான். புலி, வேட்டையின்போது மிக வேகமாக ஓடும். ஆனால், அதனால் 90 விநாடி மட்டுமே தொடர்ந்து ஓடமுடியும். 90 விநாடிகளுக்குப் புலியிடம் சிக்காமல் ஓடமுடிந்தால், நீங்கள் உயிர் தப்பிவிட முடியும். மாடு, ஆடு, மான், முயல், குரங்கு, குதிரை எதுவுமே ஜாகிங் போய் நீங்கள் பார்த்திருக்க முடியாது. அதேசமயம், அவை சோபாவில் படுத்து டிவியும் பார்க்காது.

ஆக, ஆதிமனிதன் உடற்பயிற்சி செய்யவும் இல்லை; சோம்பியும் இருக்கவில்லை. அவன் வாழ்க்கை முறை வேறு. ஆதிமனித ஆண்கள் என்ன செய்தார்கள்? வேட்டையாடினார்கள். நாள் முழுக்க கல்முனை ஈட்டியை ஏந்தியபடி, மெதுவாக மைல்கணக்கில் இரையைத் தேடி நடந்துசென்றார்கள். ஜாக்கிங் போகவில்லை, காட்டுத்தனமாக ஓடவில்லை. ஜிம்களில் நூற்றுக்கணக்கான கிலோக்களை தூக்குவது போன்று அவர்கள் செய்யவில்லை. அவர்கள் செய்தது மெதுவான, மிதமான வேலையே ஒழிய, கடும் உடற்பயிற்சி அல்ல.

ஆதிவாசிப் பெண்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் வாழ்க்கையும் நம் இந்தியக் கிராமப்புறப் பெண்கள் வாழ்க்கையும் ஒன்றே. அக்காலம் முதல் இன்றுவரை மாறாதது, வீட்டுக்குத் தண்ணீர் கொண்டுவரும் வேலை பெண்களுடையது என்பதே. மேட்டுக்குடி குடும்ப நிலை வேறு. ஆனால் ஆப்பிரிக்காவில், மைல் கணக்கில் தண்ணீர்க் குடங்களுடன் நடக்கும் பெண்களைக் காண்கிறோம்.

நான் சிறு வயதாக இருந்தபோது, குழாய்த் தண்ணீரெல்லாம் கிடையாது. அம்மா என்னை அழைத்துக்கொண்டு, தலையில்/இடுப்பில் ஒரு குடத்துடன், ஒரு மைல் தூரத்தில் உள்ள தோட்டத்துக்குச் சென்று பம்ப்செட்டில் தண்ணீர் பிடித்து வருவார். அதன்பின் தண்ணீர்க் குழாய் வந்தது. ஆனால், குழாயில் தண்ணி வராது. கைபம்பில்தான் அடிக்க வேண்டும். அதையும் அம்மாதான் செய்தார். நானும் கொஞ்சம் அடிப்பேன். சமையல், பிள்ளைகளைக் கவனிப்பது, சுள்ளி பொறுக்குவது, தண்ணீர் சேகரிப்பது என, அக்காலம் முதல் இக்காலம் வரை, பெண்கள் பணியில் பெரிதாக மாற்றம் இல்லை.

ஆக, மெதுவான வேகத்தில் நாளின் பெரும்பகுதியை வேலை செய்தே கழித்தார்கள் பழங்குடிகள். இது உடற்பயிற்சி அல்ல; வேலை. ஒரு மணி நேரம் ட்ரெட்மில்லில் காட்டுத்தனமாக ஓடி உடலை புண்ணாக்கிக்கொண்டு, சத்து பானங்களைக் குடித்துவிட்டு டிவி முன் சரியும் நாகரிக மனிதனின் உடற்பயிற்சி முறை, ஆதிமனித உடற்பயிற்சி முறைக்கு முற்றிலும் முரணானது

அதனால், நம் மரபணு சார்ந்த ஆதிமனித உடற்பயிற்சி முறை என்பது கீழ்க்காணும் வகையில் அமைய வேண்டும் –

வீட்டு வேலை செய்தல், பாத்திரம் கழுவுதல், சமையல் செய்தல், குழந்தைகளுடன் விளையாடுதல், வீட்டை கூட்டிப் பெருக்குதல் (இதையெல்லாம் ஆண்களும் செய்யலாம்).

மெதுவான, மிதமான வேகத்தில் தொலைதூரம் நடத்தல்.

மாலை நேரத்தில், குழந்தைகளுடன் பார்க், பீச்சில் விளையாடுதல். ஆதிமனிதர்கள், மாலையில் கூட்டமாக நடனம் ஆடுவதை சினிமாக்களில் பார்த்திருக்கலாம். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? மாலை நேரத்தில், டிவி முன் உட்கார்ந்து விடுகிறோம்.

வாலிபால், டென்னிஸ், கோல்ஃப், பேட்மின்டன், கிரிக்கெட் மாதிரி, வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக ஆடக்கூடிய விளையாட்டுகள்.

என் உடற்பயிற்சி முறை பின்வருமாறு அமைகிறது –

தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைகளைச் செய்வேன். உதாரணமாக, என் உணவை நானே தினம் சமைத்துக்கொள்வேன். பிற வீட்டு வேலைகளிலும் பங்கெடுப்பேன். தோட்டத்தில் புல் வெட்டுவேன். பனிக்காலத்தில், வீட்டில் தினமும் பனி படியும். அதை அகற்ற வேண்டும். அதுவே வாரம் மூன்று, நாலு மணி நேர வேலையாகவும் மாறிவிடும். கோடையில், குழந்தைகளுடன் மாலையில் பூங்காவுக்கு நடந்துசெல்வேன். மிதமான வேகம். சில சமயம், குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு நடப்பேன். வேலை நாட்களில் இது கிடையாது. உடற்பயிற்சி மையத்தில் உறுப்பினராக இருக்கிறேன். வாரம் ஒருநாள் அங்கே சென்று தண்டால், பஸ்கி மாதிரி உடல் எடையைப் பயன்படுத்திச் செய்யும் லேசான பயிற்சிகளைச் செய்வேன். குறைந்த எடைகளைத் தூக்குவேன். எப்படியும், வாரம் ஒரு மணி நேரத்துக்கு மேல் உடற்பயிற்சி நிலையம் செல்வதில்லை. இவற்றை தவிர்த்து வேறு எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை.

ஆக, நான் செய்யும் பயிற்சிகள் எல்லாமே பெரிய அளவிலான உடற்பயிற்சிகள் அல்ல. சாதாரண வீட்டு வேலைகள்தான். சராசரி அமெரிக்கர், தன் வீட்டில் செய்யும் வேலையைவிட அதிகமாக நான் செய்வதில்லை. அதேசமயம், சோம்பேறியாக டிவி முன் நாள்கணக்கில் அமர்ந்து நேரத்தைக் கழிப்பதும் இல்லை.

தவறான நம்பிக்கை 3

நம் முன்னோர்கள் எல்லாம், ஒல்லியாக இருந்ததற்குக் காரணம், அவர்கள் காரில் போகாமல் நடந்தும், சைக்கிளில் போனதுமே.

நம் தாத்தா பாட்டிக் காலத்தில் கார், ஸ்கூட்டர் இல்லை என்பது உண்மையே. ஆனால், அவர்கள் காலத்தில் குப்பை உணவுகளும் இல்லை; பலகாரம், இனிப்பு எல்லாம் தீபாவளி, பொங்கல் சமயத்தில்தான் சாப்பிட்டார்கள். இன்றைக்கும், உடல் உழைப்பில் ஈடுபட்டு வீட்டு வேலைகளைச் செய்துவரும் இல்லத்தரசிகள் பலருக்கும் உடல் பருமன் அதிகரித்திருப்பதைக் காண்கிறோம். அவர்களது உழைப்பு, அவர்களை உடல்பருமனிலிருந்து காக்கவில்லை. ஆக, இதுவும் தவறான நம்பிக்கையே.

2.jpg

பொதுவாக, இன்றைய வணிகமயமான விளையாட்டுகள், மனிதனின் உடல்நலத்தை முற்றிலும் சிதைப்பவையாகவே உள்ளன. இன்றைய விளையாட்டு வீரர்கள், உடல்நலன் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், போட்டி என்ற ரீதியில் ஜெயிக்க வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால், தினமும் மணிக்கணக்கில் கடும் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். கண்டகண்ட மருந்துகள், ஊக்க மருந்துகள், புரோட்டின் பவுடர் போன்றவற்றை எடுக்கிறார்கள். காயம் ஏற்பட்டால், வலி நிவாரணிகளைப் போட்டுக்கொண்டு ஆடுகிறார்கள். பல வீரர்களுக்கும் மூட்டுவலி, முதுகுவலி உள்ளிட்ட பல வலிகள் உள்ளன. இதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.

ஆக, இதெல்லாம் இயற்கையா, உடல்நலனுக்கு உகந்ததா என்றால் இல்லை. முன்பெல்லாம் அர்ஜுன ரணதுங்கா, இன்ஸமாம் உல் ஹக் மாதிரி குண்டாக இருந்தாலே கிரிக்கெட் ஆடமுடியும் என்ற நிலை இருந்தது. இன்று, கிரிக்கெட் விளையாட ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும். பந்தை பாய்ந்து பிடிக்க வேண்டும் என்பது போன்ற உடல் தகுதி விதிமுறைகள் வந்துவிட்டன. இதனால், பல விளையாட்டுகளிலும் உள்ளவர்கள், கடுமையான பளுதூக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு, சிக்ஸ்பேக் எனப்படும் கட்டுடலை வளர்க்க ஆர்வம் செலுத்துகிறார்கள். நடிகர்களும் சினிமாவில் நடிக்க ஆஜானுபாகுவான உடலைப் பெற ஆர்வம் செலுத்தி, பாடிபில்டிங் துறையில் ஈடுபடுகிறார்கள்.

பாடிபில்டிங் அளவுடன் செய்தால், அது ஒரு நல்ல கலை. ஆனால், மனித உடல் எவ்வளவு பளுவை தாங்கும் என்பதில் ஒரு வரைமுறை உள்ளது. நம் மூட்டுகள், முதுகெலும்புகள் 200 கிலோ எடையைத் தாங்கும் அளவில் படைக்கப்பட்டவை அல்ல. இவ்வளவு அதிக அளவிலான எடையை தூக்கும்போது, சின்னதாகத் தவறு நேர்ந்தாலும், அதனால் ஏற்படும் விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும்.

பல விளையாட்டுகளிலும், பணம் சம்பாதிப்பதற்காக பல கம்பெனிகள், புரோட்டின் பவுடர் (protein powder), க்ரியேட்டினின் (creatinine) போன்ற மருந்துகளை விற்கிறார்கள். இதற்காக, தினமும் மிக அதிக அளவில் புரதம் உண்ண பாடிபில்டர்கள் விரும்புகிறார்கள். கம்பெனிகள், புரத பவுடரை சாக்லேட்டில் கலந்து புரோட்டின் பார் (protein bar) என்ற பெயரில் விற்கிறார்கள். புரத பவுடர்களும், கெமிக்கல்கள், இனிப்புகள், சர்க்கரைகள், செயற்கை வைட்டமின்களுடன் உள்ள உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவே ஆகும்.

ஆக, உடற்பயிற்சித் துறை இன்று வணிகமயமாகி, உடல்நலனுக்கும் கெடுதல் எனும் வகையில் சென்றுகொண்டுள்ளது. இதை இயற்கையான முறையில், மிதமான அளவு எடையுடன் செய்தால் பிரச்னை இல்லை.

உடற்பயிற்சி என்னும் பெயரில், பன்னாட்டு கம்பெனிகள் தங்களது பொருள்களை விற்று கல்லா கட்டுவதையும், குப்பை உணவுகளைச் சந்தைப்படுத்தி மக்களை குண்டாக்கிவிட்டு, உடற்பயிற்சி செய்யவில்லை என மக்கள் மேலேயே பழி போடுவதையும் நாம் புரிந்துகொள்வது அவசியம்.

http://www.dinamani.com/junction/paleo-diet/2015/11/15/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-20.-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1/article3124778.ece

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பேலியோ டயட் பகுதி 21: உணவு அரசியல்!
By - நியாண்டர் செல்வன்
First Published : 22 November 2015 10:00 AM IST
புனிதமான தொழிலாக இருந்த மருத்துவத் துறை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குள் இருக்கிறது. சுயநல சக்திகள் அறிவியலை வைத்து மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. நிறுவனங்களின் நிதியுதவியுடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதால் இறுதியில் எது அறிவியல், எது அரசியல் என்று தெரியாமல் போய்விடுகிறது. உணவு அரசியல் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

நம் மருத்துவர்களை மட்டும் குறைகூற முடியாது. அமெரிக்க இதய அமைப்பு (American Heart Association) குறைந்த கொழுப்பு உணவைப் பரிந்துரைக்கிறது. அதற்குப் பதிலாக உயர்கொழுப்பு உணவை ஒரு மருத்துவர் பரிந்துரைத்தால் என்ன ஆகும்? தடுக்கி விழுந்தால் வழக்கு போடும் மனப்பான்மையுள்ள அமெரிக்க மக்கள், நாளை வேறொரு காரணத்தால் மாரடைப்பு வந்தாலும், மருத்துவர் மேல் வழக்கு போடுவார்கள், இல்லையா? அறிவியல் பின்புலன் இல்லாத நீதிபதிகள், ‘நீங்கள் ஏன் அமெரிக்க இதய அமைப்பு பரிந்துரைத்த டயட்டை கொடுக்கவில்லை?’ எனக் கேட்டு கோடிக்கணக்கான டாலர் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி தீர்ப்பளிப்பார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களும் அவர்களின் லாபியும் மருத்துவர்களை அணுகுவதை விட இதுபோன்ற அதிகாரபீடங்களை அணுகினாலே போதும் என்பதை எளிதில் உணர்ந்துவிட்டன. இதற்குச் சில உதாரணங்களை காண்போம்.

அமெரிக்க அரசின் புள்ளிவிவரத்தின்படி, 60% அமெரிக்கர்கள் அதிக எடையுடன் இருக்கிறார்கள். 25% அமெரிக்கர்கள் உடல் பருமனாக (Obesity) உள்ளார்கள். எனவே, இயல்பான எடையுடன் இருக்கும் அமெரிக்க மக்களின் சதவிகிதம் வெறும் 15% மட்டுமே!

மீதமுள்ள 85% பேரும் என்ன செய்வார்கள்? எடையைக் குறைக்க உடற்பயிற்சி நிலையங்களில் சேர்வார்கள், மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள், எடையைக் குறைக்கும் உணவுகளை (சீரியல்கள், புரோட்டீன் பார்கள்) நாடுவார்கள். நல்ல உடல்நிலையில் இருக்கும் பலரையும் கூடுதல் எடை, உடல் பருமன் என சொல்லியதால் ஏற்பட்ட விளைவு இது. இதன் அரசியல் மிகவும் மோசமானது.

men.jpg
இப்படத்தில் இருக்கும் ஆண்ட்ரூ ஹோவெல் எனும் படகுப்போட்டி வீரரின் பி.எம்.ஐ. 25.2. பி.எம்.ஐ அட்டவணைப்படி இவர் அதிக எடை கொண்டவர்.    

இப்படத்தில் இருக்கும் எம்மா மார்க்ஸ் எனும் பெண்ணின் பி.எம்.ஐ 30.2. பி.எம்.ஐ. அட்டவணைப்படி இவர் உடல் பருமன் நிலையில் உள்ளவர்.
 

உடல் பருமன், அதிக எடை என்பதைக் கணக்கிடும் பி.எம்.ஐ. (Body Mass Index, BMI) எனும் முறை 1830-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி பி.எம்.ஐ. 25-க்கும் அதிகமாக இருந்தால் ஒருவர் அதிக எடை, 30 என்றால் உடல் பருமன் என்று கூறப்பட்டது. ஆனால் பி.எம்.ஐ. அளவீடே அடிப்படையில் அறிவியல் ஆதாரம் அற்றது. இந்த முறை ஜோசியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆம், பி.எம்.ஐ. கணக்கீட்டு முறையை உருவாக்கிய க்விட்லட் (Adolphe Quetelet) என்பவர் ஒரு ஜோதிடர். கிரகங்களை வைத்து மனித எடையைக் கணிக்க முடியுமா என்று அறியவே பி.எம்.ஐ. கணக்கீட்டை உருவாக்கினார்.

BMI அளவை எப்படிக் கணக்கிடுவது?

பி.எம்.ஐ. = உடல் எடை / உயரம் (மீ.) * உயரம் (மீ.)

உங்கள் எடை 72 கிலோ. உயரம் 1.72 மீ. (172 செ.மீ)

எனில், உங்கள் பி.எம்.ஐ. = 24

 

பி.எம்.ஐ. அளவால் எவ்வித மருத்துவரீதியான பலனும் கிடையாது. பி.எம்.ஐ. சொல்கிறபடி சரியான எடையுடன் உள்ளவர் அதிக பி.எம்.ஐ. உள்ளவரை விடவும் அதிகநாள் உயிர்வாழ்வார் என்று எந்த ஓர் அறிவியல் ஆய்வும் கூறவில்லை. அறிவியல் கூறுவது என்னவென்றால், மிக ஒல்லியாக இருப்பவர்களும், மிக குண்டாக இருப்பவர்களும் அதிக அளவில் மரணமடைகிறார்கள் என்பதே. இதன்படி பி.எம்.ஐ. 35 என்கிற அளவை விட அதிகமாக உள்ளவர்களே அதிக அளவில் மரணம் அடைகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 10% மட்டுமே.

அறிவியல் இப்படி இருக்கிறது. ஆனால் மருத்துவப் பரிந்துரைகளோ வேறு மாதிரி உள்ளது. பி.எம்.ஐ. 25-ஐ தாண்டினால் ஆபத்து, 30 என்றால் பேராபத்து என ஊடகங்களும், அரசு அமைப்புகளும் மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றன. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அதிக எடை கொண்டவர் என்று நாம் கருத முடியுமா? ஆனால் பி.எம்.ஐ. அளவீடுகளின்படி அவர் அதிக எடை உடையவர்.

பி.எம்.ஐ.-க்கும் மரணத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த ஆய்வுகள், எவ்வித தெளிவான முடிவையும் அளிக்கவில்லை. 2004-ல் ஜாமா (JAMA) எனும் மருத்துவ ஆய்விதழில் வெளியான ஆய்வு, உடல் பருமனும், உடற்பயிற்சியின்மையும் ஆண்டுக்கு 4 லட்சம் மரணங்களை ஏற்படுத்துவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஆனால் அந்த ஆய்வு முடிவுகளை வெளியுலகில் கிடைக்கும் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டபோது நிலைமை தலைகீழாக இருந்தது.

உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் அமெரிக்க மக்கள் மரணமடைகிறார்கள் (2010- 2011 வருடப் புள்ளிவிவரம்). இதில் 75% பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த 75% பேரில் அதிக எடை மற்றும் உடல் பருமன் (பி.எம்.ஐ. 25-க்கு மேல்) என்று கூறப்படுபவர்கள் இயல்பான எடை என்று சொல்லக்கூடிய பி.எம்.ஐ. அளவு 25-க்குக் கீழ் இருப்பவர்களை விட அதிக ஆண்டு உயிர் வாழ்ந்துள்ளார்கள்.

இவர்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் சுமார் 6 லட்சம் மரணங்கள் ஆண்டுதோறும் அமெரிக்காவில் நிகழ்கின்றன. இந்த 6 லட்சம் மரணங்களில் அதிக அளவிலான மரணங்களுக்கு முக்கிய காரணங்களாக இருப்பவை – விபத்து மற்றும் புற்றுநோய். மூன்றாம், நான்காம் இடங்களில் தான் மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்றவை வருகின்றன. ஆக, இந்த 6 லட்சம் மரணங்களில் 4 லட்சம் மரணங்களுக்கு காரணம் உடல் பருமன் எனக் கூறுவது எப்படி என விவரமறிந்த விஞ்ஞானிகள் கேள்விகளை எழுப்பினாலும் ஊடகங்கள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. உடல் பருமனைக் கட்டுப்படுத்தினால் ஆண்டுக்கு 4 லட்சம் மரணங்களைத் தடுக்கலாம் எனப் பிரசாரம் செய்யப்பட்டது.

இதன்பின் நடந்ததுதான் காமெடி. இந்தச் செய்தியின் பரபரப்பு எல்லாம் அடங்கி ஒரு சில ஆண்டுகள் கழித்து சாவகாசமாக ‘4 லட்சம் என்பது தவறு. 2 லட்சமாக இருக்கலாம். அதையும்கூடத் தோராயமாகத்தான் சொல்ல முடியும்’ என ஒரு திருத்தத்தை தம் வலைத்தளத்தில், யார் கண்ணுக்கும் தென்படாத ஒரு பகுதியில் பதிப்பித்துவிட்டு இந்த ஆய்வை செய்த சி.டி.சி (center for disease control) எனும் அமைப்பு தன் பொறுப்பிலிருந்து நழுவிக்கொண்டது.

இது அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல 1990-களில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 1985-ல் அமெரிக்கச் சுகாதார மையம், பி.எம்.ஐ. அளவு 27.8 இருந்தால் ஒருவர் அதிக எடை கொண்டவர் எனக் கருதலாம் என நிர்ணயித்தது. இதன்படி ஐந்தடி ஏழு அங்குலம் (168 செ.மீ.) உயரம் உள்ள ஒருவர் 77 கிலோ எடை இருந்தால் அவர் இயல்பான எடை என்னும் வகையைச் சேர்ந்தவராகக் கருதப்படுவார். ஆனால் 1990-களில் திடீரென இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. பி.எம்.ஐ. 25-க்கு கீழே இருந்தால்தான் இயல்பான எடை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் சுமார் 3.7 கோடி அமெரிக்கர்கள் அதிக எடை கொண்டவர்கள் ஆனார்கள். அதாவது, இரவில் 77 கிலோ எடையுடன், பி.எம். ஐ அட்டவணைப்படி இயல்பான எடையுடன் உறங்கச் சென்றவர், அடுத்தநாள் காலையில் அதே 77 கிலோ எடையில் பி.எம்.ஐ. அட்டவணைப்படி அதிக எடை கொண்டவராக மாறினார்! (பழைய பி.எம்.ஐ. முறைப்படி 168 செ.மீ. உயரம் உள்ள ஒருவர் 77 கிலோ வரை எடை இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் புதிய முறைப்படி அவரது எடை 69 கிலோவுக்குள் இருக்கவேண்டும்.)

tablet.jpg
ஸ்டாடின்
 
இதனால் உண்டான விளைவுகள்? பி.எம்.ஐ. அட்டவணைப்படி அதிக எடை என்று முத்திரை குத்தப்பட்டவர்களை மருத்துவர்கள் உடற்பயிற்சி செய்யவும், உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கவும் பரிந்துரை செய்தார்கள். நோயாளிக்கு கொலஸ்டிரால் இருந்தால், கொலஸ்டிரால் மருந்தான ஸ்டாடின் பரிந்துரைக்கப்பட்டது. இதனால் அமெரிக்கர்களின் இன்சூரன்ஸ் கட்டணங்கள் உயர்ந்தன.

எதனால் இந்த பி.எம்.ஐ. அளவு குறைக்கப்பட்டது? இதுபோன்ற முடிவுகளை எடுப்பவர்கள் - அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமே. இவர்கள் அனைவரும் தங்களுடைய தேர்தல் நிதிக்கு மருந்து நிறுவனங்களையும் பிற உணவு நிறுவனங்களையுமே மிகவும் நம்பியிருக்கிறார்கள். மேலும் பி.எம்.ஐ. பரிந்துரைகளைச் செய்யும் மருத்துவ அமைப்புகள் பலவும் அந்த நிறுவனங்களிடம் நன்கொடை பெறுபவை. இவற்றில் பணிபுரியும் விஞ்ஞானிகள் பலரும் அந்த நிறுவனங்களிடம் நிதி பெற்று ஆராய்ச்சி செய்பவர்கள். அரசியல்வாதிகள் ‘விஞ்ஞானிகளே சொல்லிவிட்டார்கள்’ எனச் சொல்லி இதுபோன்ற முடிவுகளைச் சட்டமாக்கி விடுவார்கள். இது மருத்துவப் பாடப்புத்தகங்களிலும் இடம்பெறும். மருத்துவக்கல்லூரியில் ‘பி.எம்.ஐ. 25-க்கு கீழே இருந்தால்தான் இயல்பான எடை’ என்கிற பாடமே கற்றுத் தரப்படும். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிக எடை என்று முத்திரை குத்தப்பட்டவர் என்ன செய்வார்? நைக்கி ஷூவும், கெல்லாக்ஸ் சீரியலும், காடரேடும் வாங்குவார் (காடரேட் (Gatorade) என்பது நடைப்பயிற்சி, ஓட்டப்பந்தயம், ஜாக்கிங் மேற்கொள்ளும்போது பருகும் பானம். இந்தியாவிலும் விற்பனைக்கு உள்ளது. அமெரிக்காவில் இது இல்லாமல் யாரும் ஜாக்கிங் செல்ல மாட்டார்கள். http://www.gatorade.co.in/). பிறகு, வெயிட் வாட்சர்ஸ் (weight watchers) நிறுவனத்தின் எடைக்குறைப்புத் திட்டத்திலும் பணம் கட்டுவார்.

அதிகமோ, குறைவோ, எடைக்குறைப்பு நல்லதுதானே? அதனால் ஏதோ சில விஷயங்களை மிகைப்படுத்திச் சொன்னால்தான் என்னவாம் என்று கேட்கலாம்.

உடல் பருமனை மரணத்துக்குக் காரணமாக காட்டி மிகைப்படுத்துவதால் மக்கள் உடல்நலனை விட்டுவிட்டு வெயிட் வாட்சர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணம் கட்டி உடலை இளைக்க வைக்க மெனக்கெடுகிறார்கள். இந்தியாவிலும் இதுபோன்று உடலை இளைக்க வைக்க எத்தனை பேர் பணத்தையும் நேரத்தையும் இஷ்டத்துக்குச் செலவு செய்கிறார்கள்? ஒரு போலியான பயத்தை உண்டுபண்ணி எதற்காக அதைவைத்து நம் பணத்தையும் நேரத்தையும் பறிக்கவேண்டும்?

இதனால் சீரியல், ஓட்மீல் மாதிரியான உணவுகள் அதிகம் விற்பனையாகின்றன. எந்த வியாதியும் இல்லாமல், ஆனால் உடல் பருமனுடன் இருக்கும் சிலர் மருத்துவமனைக்குச் சென்று உடல் பருமனைக் குறைக்க அறுவைசிகிச்சையும் செய்து கொள்கிறார்கள். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உடல் பருமனாக இருப்பவர்களிடம் அதிகச் சந்தா தொகையை வசூலிக்கின்றன. மெக்டானல்ட்ஸ், கோகோ கோலா போன்ற நிறுவனங்களும் இதைப் பயன்படுத்தி ‘மாட்டிறைச்சி பர்கருக்குப் பதில் சிக்கன் பர்கரைச் சாப்பிடுங்கள், வழக்கமான கோக் வேண்டாம், கலோரி இல்லாத கோக்கைக் குடியுங்கள்’ என்று விளம்பரம் செய்து ஆரோக்கிய உணவு என்கிற பெயரில் குப்பை உணவுகளை விற்கின்றன. உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் பல்லாயிரம் கோடி டாலர்களைச் சந்தையில் ஈட்டுகின்றன. அமெரிக்காவில் இடி இடித்தால் இந்தியாவில் மழை வரும் எனும் கதையாக அங்கே நடக்கும் இந்தக் கூத்துக்கள் அனைத்தும் இந்தியாவிலும் நடக்கின்றன. உலகெங்கும் இந்த உடல் பருமன் வணிகம் களைகட்டுகிறது.

ஒருபக்கம் உடல் பருமனை உருவாக்கும் குப்பை உணவுகளை பன்னாட்டு நிறுவனங்கள் கூவிக்கூவி விற்கின்றன. இதனால் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு பன்னாட்டு உணவுகளுக்கு மாறுகிறார்கள். மறுபக்கம் இந்த உணவுகளால் ஏற்படும் உடல் பருமனைக் குறைக்க அதே பன்னாட்டு நிறுவனங்கள் ‘டயட் கோக் (Diet Coke), சப்வே சாண்ட்விச் (Subway Sandwich)’ போன்ற அதே குப்பை உணவுகளின் மறுவடிவங்களையும் விற்பனை செய்கின்றன. ஒரு நிறுவனத்தின் உணவுகளைக் கெடுதல் என்று அறிகிற மக்கள், அதேபோன்ற குப்பை உணவுகளை விற்கும் இன்னொரு நிறுவனத்தை நம்பி ஆரோக்கியம் என்கிற பெயரில் பணத்தை வீண் செய்கிறார்கள். இப்படிக் குப்பை உணவுகளால் வியாதிகள் வந்தபின் அவற்றைக் குணப்படுத்த மருந்துகளை நாடுகிறார்கள்.

subway.jpg
இந்தச் சூழலில், கற்பனையான வியாதிகளை புதிதாக உருவாக்கி கல்லா கட்டும் விந்தையை என்னவென்று நொந்துகொள்வது?

இப்படிக் கற்பனையாக கண்டுபிடிக்கபட்ட வியாதிகளில் ஒன்று உயர் கொலஸ்டிரால் என்பது. கொலஸ்டிரால் அளவு 200-ஐ தாண்டினால் ஆபத்து, மாரடைப்பு வரும் எனப் பீதியூட்டப்படுவதால் பலரும் அச்சமடைந்து கொலஸ்டிரால் கட்டுப்பாட்டு மருந்துகளை (ஸ்டாடின்) எடுத்துக்கொள்கிறார்கள்.

ஸ்டாடின்கள், பல மருந்து நிறுவனங்களின் கற்பக விருட்சம். இவை கொலஸ்டிரால் அளவைக் குறைக்குமே ஒழிய மரணத்தைத் தடுக்காது. மேலும் இவற்றின் பின்விளைவுகள் ஏராளம். இந்திய ஜனத்தொகையில் சுமார் 8% பேர் ஸ்டாடின்களை உட்கொண்டுவருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்று ‘8% இந்தியர்கள் மட்டுமே ஸ்டாடினை உட்கொள்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் கூறுகிறது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24493771)

ஆனால் Open Journal of Endocrine and Metabolic Diseases எனும் அறிவியல் ஆய்விதழில் கட்டுரை எழுதிய மருத்துவப் பேராசிரியர்களான சுல்தான் மற்றும் ஹைம்ஸ் ஆகியோர் ஸ்டாடின்களைக் குறித்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்கள்:

ஸ்டாடின் விற்பனை சுமார் 200 கோடி டாலர் (சுமார் 12,000 கோடி ரூபாய்). மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய கறை, ஸ்டாடின்களே. கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களை நோயாளிகளாக்கி, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஸ்டாடின் மூலம் ஏற்படுத்தியது பன்னாட்டு மருந்து நிறுவனங்களே.

நாம் (மருத்துவர்கள்) மருந்து நிறுவனங்களின் பொய்களில் மயங்கி ஸ்டாடின்களின் பின்விளைவுகளைச் சரியாக ஆராயாமல் விட்டுவிட்டோம்.

ஸ்டாடின்களால் நன்மையடைபவர்கள் யார் என்றால், ஏற்கெனவே மாரடைப்பு வந்த நடுத்தர வயது ஆண்கள்தான். வேறு யாருக்கும் ஸ்டாடினால் நன்மை கிடையாது. ஆனால், மாரடைப்பு வந்த நடுத்தர வயது ஆண்களுக்குக்கூட ஸ்டாடின் அளிக்கும் நன்மை என்பது தினம் ஆஸ்பிரின் சாப்பிடுவதை விட குறைவான அளவு நன்மைதான்!

ஸ்டாடின் உட்கொள்பவர்களில் 10,000 பேரில்ஸ

* 307 பேருக்கு கண்புறை (cataract) வரும். ஸ்டாடின் பயன்படுத்துபவர்களுக்கு கண்புறை வரும் வாய்ப்பு 50% அதிகம்.

* 23 பேருக்கு சிறுநீரகம் பழுதடையும்.

* 40 பேருக்குச் சரிசெய்யவே முடியாத அளவு ஈரல் பழுதடையும்.

* பெண்களுக்கு அதிக அளவில் சர்க்கரை வியாதி வர காரணமாக ஸ்டாடின் அமையும்.

* வயதான பெண்கள் ஸ்டாடின் உட்கொண்டால் சர்க்கரை வியாதி வருவதற்கான சாத்தியக்கூறு 9% அதிகம்.

* பார்கின்சன் வியாதி வரும் வாய்ப்பும் ஸ்டாடினால் உண்டு.

* இதயத்தில் உள்ள சுவர்களில் சுண்ணாம்பு (calcium) படிய ஸ்டாடின்கள் காரணமாக உள்ளன. இது மாரடைப்பு வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

இந்த விளைவுகளால் ஸ்டாடின்கள் கொலஸ்டிராலைக் குறைக்கும் மருந்தே தவிர, இதய அடைப்பைத் தடுப்பதில் அவை துளியும் பயனற்றவை என்கிறது இந்த ஆய்வு.

மருந்து நிறுவனங்கள் உருவாக்கிய அடுத்தக் கற்பனை வியாதி - மன அழுத்தம். உலகில் மன அழுத்தம் அனைவருக்கும் வருவதுண்டு. ஆனால், இதையே ஒரு வணிகமாக்கி கோடிகளில் சம்பாதிக்கின்றன நிறுவனங்கள். மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளின் விற்பனை, உலக மருந்து விற்பனையில் முதல் பத்து இடங்களில் உள்ளது. ஏதோ தாங்க இயலாத சோகத்தைப் போக்க இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்று மட்டும் எண்ணவேண்டாம். சோகத்துக்கு மட்டுமல்ல, மாதவிலக்கு சமயங்களில் உண்டாகும் எரிச்சல், விவாகரத்து, பணிச்சுமையால் உண்டாகும் மன அழுத்தம் போன்றவற்றுக்கும் இந்த மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

சோகமோ, மன அழுத்தமோ ஏற்பட்டால் முன்பு நண்பர்கள், குடும்பம், தியானம், கோயில் என்று பலவழிகளில் அதைச் சரிசெய்யமுடியும். ஆனால், இன்று எல்லாவற்றுக்கும் மருந்தே தீர்வாக எடுத்துச் சொல்லப்படுகிறது. இதற்கு ஏராளமான பின்விளைவுகள் உண்டு.

உடல் பருமன், மன அழுத்தம் போன்றவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் இன்னொரு பிரச்னை, பாலியல் சார்ந்த பிரச்னைகள். ஆண்குறி எழுச்சியின்மை (erectile dysfunction) வியாதியும் மருந்து நிறுவனங்களின் கற்பக விருட்சம். வயகராவின் கதையையும் அதன் விற்பனை குறித்தும் நாம் அறிவோம். இந்த வியாதியாவது 40, 50 வயதில் ஆண்களுக்கு வரக்கூடிய ஒரு பிரச்னை. ஆனால் மானுட வரலாற்றில் இல்லாத புதுமையாக, பெண் பாலியல் ஆர்வமின்மை (female sexual dysfunction) எனும் வியாதியைக் கண்டுபிடித்துள்ளன மருந்து நிறுவனங்கள்.

பெண்களுக்குப் பொதுவாக கர்ப்பம், வயது முதிர்தல், மன அழுத்தம், பணிச்சுமை, ஹார்மோன் சமநிலை தவறுதல் போன்ற காரணங்களால் பாலியலில் ஈடுபாடு இல்லாமல் போக வாய்ப்புண்டு. இதைப் பயன்படுத்தி சந்தையில் இதற்கும் மாத்திரைகள் வந்துவிட்டன. மூன்றில் ஒரு பெண் இவ்வியாதியால் பாதிக்கப்படுவதாக மருந்து நிறுவனங்களால் நடத்தப்படும் ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் ஆண்டு முழுக்க உறவு கொள்ளாமல் சில மாதங்களே உறவில் ஈடுபடும். மனிதனால் ஆண்டு முழுவதும் உறவுகொள்ள முடியும் என்றாலும் இயற்கையாகச் சிலசமயம் அவனது பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டும், சில சமயம் குறைந்தும் காணப்படும். 45 வயதுக்கு பிறகு ஆண்களின் டெஸ்டெஸ்ட்ரோன் (testosterone) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஆண்குறி எழுச்சியின்மை, பாலியல் ஈடுபாடு குறைதல் போன்றவை ஏற்படுவது வழக்கம். ஆனால் எந்த வயதிலும், எந்தச் சமயத்திலும் விருப்பம் உண்டாகும்போது உறவுகொள்ள முடியாவிட்டால் அது நிச்சயம் வியாதிதான் என்கிற கண்ணோட்டம் இந்த நிறுவனங்களால் பரப்பப்பட்டுவிட்டது. மக்களும் அதற்காக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாட்டின் பத்திரிகைகளில்தான் இதுதொடர்பாக எத்தனை விளம்பரங்கள்!

உணவு, மருத்துவம், ஆரோக்கியம், உடற்பயிற்சி என அனைத்துமே பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட காலகட்டம் இது. எதை நம்புவது, யாரை நம்புவது என மக்கள் கடும் குழப்பத்தில் உள்ளதால்தான் மாயவலைகளில் சிக்கிகொண்டு பல லட்சம் ரூபாய்களை இழக்கிறார்கள். பேலியோ டயட்டை முன்னிறுத்தும் ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுவில் இதுபோல எடையைக் குறைக்க பன்னாட்டு நிறுவனத்திடம் ஒரு நண்பர் ரூ. 3 லட்சம் கட்டி ஏமாந்த கதை தெரியவந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். அந்த நிறுவனம், காலை உணவாக ஒரு புரோட்டீன் பவுடரைக் கொடுத்துள்ளது. அதை நீரில் கரைத்துக் குடிக்கவேண்டும். புரோட்டீன் உணவு எடுத்துக்கொண்டபோது எடை 10 கிலோ இறங்கியது. ஆனால் அதை நிறுத்தினால் மீண்டும் எடை ஏறியது. ஆயுளுக்கும் அந்த புரோட்டீன் பவுடரையே எடுத்துக்கொண்டு எத்தனை லட்சம் செலவு செய்வது என்று யோசித்து அதிலிருந்து விலகினார் நண்பர். பிறகு பேலியோ டயட்டைப் பின்பற்றி இப்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அதுபோன்ற நிறுவனங்களின் கைப்பிடிக்குள் சிக்கிக்கொண்டு ஏமாறுபவர்களை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/paleo-diet/2015/11/22/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-21-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/article3139806.ece

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பேலியோ டயட் பகுதி 22 - கு. சிவராமன் கட்டுரை: சில விளக்கங்கள்
By - நியாண்டர் செல்வன்
First Published : 29 November 2015 10:00 PM IST
எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் 1984 என்கிற நாவலை எழுதினார். அந்த நாவலில் எதிர்கால உலகை ஒரு சர்வாதிகார அமைப்பு கைப்பற்றி, போர் மூலமே அமைதி வரும் (war is peace), அடிமையாக இருப்பதன் மூலமே சுதந்தரம் கிடைக்கும் (slavery is freedom) அறியாமையே வலிமை (Ignorance is strength) என மக்களை நம்ப வைக்கும். ஊடகம், அறிவியல், அரசியல் அனைத்துமே அமைப்பின் கைப்பிடிக்குள் வந்துவிடுவதால் மக்களும் அவர்கள் சொல்வதை உண்மை என்றே நம்புவார்கள்.

இது கதையில் மட்டுமே சாத்தியம் என்றுதான் நம்புவோம். ஆனால், எத்தனையோ பெரிய விஞ்ஞானிகள், ஊடகங்கள், மருத்துவ அமைப்புகள் என எல்லாரும் சேர்ந்து கடந்த 50 ஆண்டுகளில் மக்களிடம் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த மாவுச்சத்து உள்ள உணவுகளை உண்ணவேண்டும், ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த உப்பை நிறுத்தவேண்டும், நெய் உடலுக்குக் கெடுதல், வனஸ்பதியே (margarine) உடலுக்கு நல்லது, தேங்காய் எண்ணெய் கெடுதல், சோயாபீன்ஸ் எண்ணெயே நல்லது என மக்களையும், மருத்துவர்களையும் நம்ப வைத்திருப்பதைக் கண்டால் ஜார்ஜ் ஆர்வெல் எழுதியது கற்பனையில் மட்டுமே நிகழும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

உதாரணமாக 2009-ல் வெளிவந்த இந்த ஆய்வுக்கட்டுரையை எடுத்துக்கொள்வோம். (இணைப்பு: http://newsroom.ucla.edu/releases/majority-of-hospitalized-heart-75668)

கலிபோர்னியப் பல்கலைக்கழக இதயநோய் மருத்துவ ஆய்வாளரான க்ரெக் பார்னியு தலைமையில் ஒரு குழு, மாரடைப்பு தொடர்பாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை ஆராய்ச்சி செய்தது. இதன் முடிவில், கலிபோர்னியப் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வு ஓர் அதிர்ச்சி தரும் உண்மையைக் கண்டறிந்தது. மாரடைப்பு வந்த நோயாளிகளில் 75% பேருக்கு கொலஸ்டிரால் மற்றும் கெட்ட கொழுப்பான எல்.டி.எல் கொலஸ்டிரால் அளவுகள், அரசு பரிந்துரைக்கும் அளவை விட குறைவாகவே இருப்பதாக இந்த ஆய்வு கூறியது.

இது சாதாரண ஆய்வல்ல. அமெரிக்க இதயநல சங்கத்தின் துணையுடன் 541 மருத்துவமனைகளில், மாரடைப்புக்காக சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த 1,36,000 நோயாளிகளை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு வெளிவந்தது. ஆனால் இதன் பலன்? கிணற்றில் போட்ட கல்! இந்த ஆய்வை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை என்பதுடன் அரசு அமைப்புகளும், ஆய்வுக்கு ஒத்துழைத்த அமெரிக்க இதயநல சங்கமும் இன்னமும் ‘கொலஸ்டிரால் ஆபத்தானது, கெட்ட கொலஸ்டிராலைக் குறையுங்கள்’ என்றே தொடர்ந்து கூறிவருகின்றன. இத்தகைய தவறான அறிவுரை சாதாரண மனிதர்களை மட்டுமல்ல, சர்வவல்லமை படைத்த அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் உயிரையே பறித்துள்ளது. அவர் 1950-களில் அமெரிக்க அதிபராக இருந்த ஐசன்ஹோவர் (Eisenhower).

isan.jpg
 
ஐசன்ஹோவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகே பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொலஸ்டிரால் பற்றிய விழிப்புணர்வு உண்டானது. ஐசன்ஹோவர் முன்னாள் படைத்தளபதி. அதிபரான பிறகும் தினசரி கடும் உடற்பயிற்சிகள் செய்து உடலை மிகக் கட்டுகோப்புடன் வைத்திருந்தவர். அவரது உடல் எடை 78 கிலோ. ஐந்தடி பத்து அங்குல உயரத்தில் இந்த எடைக்கான பி.எம்.ஐ 24.7. அதாவது அளவான எடை. அவர் குடும்பத்தில் மாரடைப்பு யாருக்கும் ஏற்பட்டதில்லை. ஹோவர், புகைப்பிடிப்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திவிட்டார். அவருக்கு மாரடைப்பு வரும்முன்பு இருந்த கொலஸ்டிரால் அளவு 165. இயல்பான கொலஸ்டிரால் அளவு என்பது 200க்குக் கீழ்.

அவருக்கு 64-வது வயதில் (அதிபராக இருந்தபோது) முதல் மாரடைப்பு ஏற்பட்டது. கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன ஐசன்ஹோவர் முதல் மாரடைப்புக்குப் பிறகு உணவில் இருந்த கொழுப்புக்களைச் சுத்தமாக குறைத்தார். கலோரிகளைக் குறைத்தார். வெண்ணெய்க்குப் பதில் சோயாபீன் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகளை உண்டார். முழுக்கொழுப்பு உள்ள பாலை தவிர்த்தார். காலை உணவாக ஆம்லெட் உண்பதை நிறுத்தி, கொழுப்பு நீக்கிய பால் மற்றும் சீரியல்களுக்கு மாறினார்.

கொழுப்பு குறைந்த உணவுகளுக்கு மாறியதும் ஐசன்ஹோவரின் எடையும், கொலஸ்டிரால் அளவும் அதிகமாயின. அவர் எடை 78-ல் இருந்து 80 ஆனதும் வெறுத்துப் போனார். காலை உணவாக சில பழங்களை மட்டும் உட்கொண்டார். மேலும் அதிகமாக உடற்பயிற்சி செய்தார். கொலஸ்டிரால் அளவு மேலும் ஏறியது. வெறுத்துப்போய் மதியமும் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட ஆரம்பித்தார். 165 ஆக இருந்த கொலஸ்டிரால் அளவு இப்படிக் கொழுப்பு குறைந்த உணவுகளை உண்ணத் தொடங்கியதும் 259 ஆக மாறியது.

கொழுப்பு குறைந்த உணவு, கலோரிகளைக் குறைத்தல், உடற்பயிற்சி மூலம் கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்த முயற்சி எனக் கடுமையாகப் போராடியும் ஹோவருக்குத் தோல்வியே கிடைத்தது. இறுதியில் மாரடைப்பால் அவர் காலமானார்.

முதல் மாரடைப்புக்குப் பிறகு ஹோவர் தனது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டது பற்றி அமெரிக்க நாளிதழ்களில் நிறைய செய்திகள் வெளியாகின. அந்தக் காலகட்டத்தில்தான் அமெரிக்க இதயநல சங்கம் கொலஸ்டிராலைக் குறைக்க மக்களுக்கு கொழுப்பு குறைந்த உணவுகளை உண்ணவும், கொழுப்பு நீக்கிய பாலைப் பருகவும், நெய்க்குப் பதிலாக சோயாபீன் எண்ணெயை உட்கொள்ளவும், கலோரிகளைக் குறைக்கவும் பரிந்துரைத்தது. அதாவது ஐசன்ஹோவர் என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடித்தாரோ அதே வழிமுறைகள் மக்களுக்கு வேதமாகப் பரிந்துரைக்கப்பட்டன. சீரியல் நிறுவனங்களான கெல்லாக்ஸ் முதலியவை அதன்பின் ‘இதயத்துக்கு நன்மை அளிப்பது’ என்கிற முத்திரையுடன் உலா வந்தன. உணவில் கொழுப்பைக் குறைக்கவேண்டும் என்று பெருமளவில் பிரசாரம் செய்யப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர், படைத்தளபதி, நல்ல உடல்நலனுடன் இருந்த ஐசன்ஹோவருக்கே மாரடைப்பு என்றால் நம்முடைய நிலைமை என்ன ஆகும் என்கிற பீதி அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டது. எனவே மாரடைப்பையும், கொலஸ்டிராலையும் தடுக்க ஐசன்ஹோவர் கையாண்ட வழிமுறைகளை மக்களும் பின்பற்றத் தொடங்கினார்கள்.

மருத்துவம் தொடர்புடைய அமைப்புகளின் தவறான அறிவுரைகளால் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை குணமாகக்கூடிய வியாதிகள் என்கிற உண்மையை பலரும் அறியாமல் உள்ளார்கள். வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்துள்ளார்கள். மருந்து, மாத்திரைகள் உதவியுடன் மட்டுமே உயிர்வாழ முடியும் என்கிற நம்பிக்கையில் அவர்கள் ரொட்டி, ஜாமை தின்றுவிட்டு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதைக் காணும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

உணவியல் நிபுணர்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளார்கள். எடைக் குறைப்புக்கான டயட்டைப் பரிந்துரைக்கும் டயட்டிசியன்களின் சங்கங்கள் பலவுமே கோக், பெப்ஸி, மெக்டானல்ட்ஸ் அளிக்கும் நிதியுதவியை நம்பியே உள்ளன.

mc-donald.jpg

மெக்டானல்ட்ஸ் நிதியுதவியுடன் நடக்கும் கலிபோர்னிய டயட்டிசியன்கள் சங்க மாநாடு!

coco.jpg

உணவியல் துறை நிபுணர்களின் மாநாட்டின் பிரதான புரவலர், கோகோ கோலா நிறுவனம்!
 
சமீபத்தில் கோகோ கோலா நிறுவனம் பிரபல உணவியல் நிபுணர்கள் பலருக்கும் பணம் கொடுத்த தகவல் அம்பலமானது. அந்த உணவியல் நிபுணர்கள் ‘சிறிய கேன் கோக்கைச் சிற்றுண்டியாகப் பருகலாம்’ எனப் பரிந்துரை செய்தவர்கள். அதன்பின் பணம் வாங்கியது அம்பலமானவுடன் ‘பணம் வாங்கியதால் இப்படி எழுதவில்லை’ என்றார்கள். கோக்கும் ‘கோக் குடிக்கச் சொன்னதற்காகப் பணம் கொடுக்கவில்லை. அவர்களை ஊக்கப்படுத்தவே நிதியுதவி செய்தோம்’ என முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்து அறிக்கை வெளியிட்டது. ஆனால், இதெல்லாம் பெரிய ஊடகங்களில் செய்தியாக வரவில்லை. அதனால் மக்கள் கவனத்துக்கும் வராமல் போய்விட்டது. கோக் மட்டும் ஆண்டுக்கு 10 கோடி டாலரை (600 கோடி ரூபாய்) இதுபோன்ற டயட் அமைப்புகளுக்கு நிதியுதவியாக அளிக்கிறது. (இணைப்பு: http://observer.com/2015/10/here-are-the-people-coca-cola-has-paid-to-manufacture-health-claims/)

இவர்கள் வெறுமனே தமக்குச் சாதகமாக அறிவியலை வளைப்பதுடன் நிற்பதில்லை. உண்மையைச் சொல்ல முனைபவர்களைக் கடுமையாகத் தண்டிக்கிறார்கள். ஊடகங்களில் அவர்கள் வசைபாடப்படுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய டிவியின் சமையல் நிகழ்ச்சியில் நடுவராகப் பணிபுரியும் பீட்டர் இவான்ஸ் எனும் சமையற்கலை நிபுணர், பேலியோ டயட் பற்றி தொலைக்காட்சியில் பேசினார். தன் வலைத்தளத்திலும் எழுதினார். அவ்வளவுதான்.

ஆஸ்திரேலிய டயட் சங்கம் அவர் மேல் ஒரு யுத்தத்தை நடத்தியது. ஒரு சமையல் கலைஞரை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற மருத்துவர்கள் அனைவரும் அந்தத் தொலைக்காட்சிக்கு கடிதம் எழுதினார்கள். அவரது வேலையைப் பறிக்க சொல்லி கோரிக்கை விடுத்தார்கள். அடுத்ததாக, பேலியோவைப் பின்பற்றும் ஆஸ்திரேலியர்கள் களத்தில் குதித்தார்கள். ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வமான டயட் சங்கம், நெஸ்லே மற்றும் கோக், பெப்ஸியின் நிதியுதவியில் நடத்தப்படுவதை அம்பலப்படுத்தினார்கள். இருப்பினும், இன்றும் ஆஸ்திரேலியாவில் பேலியோவுக்கான எதிரான போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகின்றன. பேலியோ இயக்கத்தை முளையிலேயே நசுக்கும் முயற்சிகள் மருந்து நிறுவனங்கள் மற்றும் அவர்கள் நிதியுதவியில் நடக்கும் அதிகாரபூர்வ அமைப்புகளால் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்தும் மருந்தான ஸ்டாடின், ஆஸ்திரேலியாவில் பணம் காய்ச்சி மரமாக இருப்பதும் பேலியோ இயக்கம் அதன் அஸ்திவாரத்தை அசைப்பதுமே இதற்குக் காரணம்.

இந்தியாவில் டயட் சங்கங்களின் ஆதிக்கம் வலுவாக இல்லை. மேலும், நம் மக்களும் ஊடகங்களும் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் என மாற்று மருத்துவமுறைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் என்பதும் நமக்கு மிகவும் நம்பிக்கையளிக்கிறது. குறிப்பாக பேலியோ பற்றிய ஒரு தொடரை எழுத முதல்முறையாக வாய்ப்பளித்த தினமணி, பேலியோ குறித்த கட்டுரைகளை எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்திய புதிய தலைமுறை, மல்லிகை மகள், விகடன், குங்குமம், குங்குமம் டாக்டர், தினகரன் போன்ற தமிழ்நாட்டு ஊடகங்களும் மிகுந்த பாராட்டுக்குரியவை.

*ஆனந்த விகடன் வார இதழில் பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன் விகடன் வாசகர்களுக்கு பேலியோவை அறிமுகப்படுத்தி ஒரு நல்ல கட்டுரையை எழுதியுள்ளார். அதோடு அவர் சில சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார். பேலியோ டயட் பற்றி அவர் எழுதியிருப்பதாவது:

இணையம் வழியாக நம் ஊரில் ‘GM Diet’, ‘Paleo Diet’  என்ற மெலியவைக்கும் சில அதிரடி உணவுப் பழக்கங்கள் பிரபலமாகிவருகின்றன. இந்த இரண்டு டயட்கள் மூலமும் தடாலடியாக மெலிந்து நம்மைப் பொறாமைப்பட வைப்பவர்கள் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி என்ன அவை? ‘GM Diet’, என்பது அதிகமான மரக்கறி வழி; ‘Paleo Diet’ அதிகமான புலால் வழி.

ஆதி மனிதன் உணவு என ‘Paleo Diet’ முன்னிறுத்தப்படுகிறது. 'வேளாண் சமூகமாக மாறுவதற்கு முன்னர், வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் நாம் இப்போதுபோல தானியங்களைச் சாப்பிடவில்லை. புலாலை அதிகமாகவும் எப்போதாவது கொஞ்சமாக தானியங்களையும் காய்கறிகளையும் சாப்பிட்டோம். அதனால்‘Paleo Diet’ மூலம் கொஞ்ச காலத்துக்கு அதிகமாக இறைச்சி, முழு முட்டை, கொழுப்பு நீக்காத பால், பாதாம், முந்திரி போன்ற விதைகள்... ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டும் மெலிந்து ஆரோக்கியமாக இருக்கலாம். இதுதான் ஆதிமனிதனின் முதல் உணவும் மற்றும் ஆரோக்கிய உணவும்’ என்றுகூட விளக்குகிறார்கள்.

'குறைந்தபட்சம் 65 - 70 தலைமுறைகளாக வேளாண் உணவுப்பிடிக்கு மாறிவிட்ட நாம், மீண்டும் ஆதித் தாத்தாவின் சாப்பாட்டுக்கு அடுத்த மெனுவிலேயே மாறிச்செல்வது எல்லோருக்கும் சரியாக இருக்குமா?’ என்ற கேள்வி வந்தாலும், கொழுப்பு அரசியல் (Cholesterol Politics) குறித்த அவர்களின் புரிதல் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

'கொலஸ்ட்ரால் பூச்சாண்டியைப் பார்த்துப் பயப்படாதீர்கள். கெட்ட கொழுப்பு என நம்மைப் பயமுறுத்துவதற்காகக் காட்டப்படும் லோ டென்சிட்டி கொலஸ்ட்ரால்தான் ஒவ்வொரு நாளும் ரத்தக் குழாய்க்குள் உண்டாகும் காயத்தை ஆற்றுகிறது. நாம் நினைப்பதுபோல் கொலஸ்ட்ரால் தீவிரவாதி அல்ல; சீர்திருத்தவாதி’ என விளக்கம் தருகிறார்கள். அதேசமயம் 'அதிகமான வெப்பத்தில் எண்ணெயில் வேகவைத்தும் வறுத்தும், பார்பக்யூவில் வேகவைத்தும் செய்யப்படும் புலாலில் உருவாகும் Polycyclic aromatic hydrocarbons and Heterocyclic aromatic amines மூலம் உண்டாகும் உயிர் பிழைக் கேடுகள், கெட்ட கொழுப்பின் மூலம் ரத்தக்குழாய் உட்சுவரில் ஏற்கெனவே அதிகமாகப் பூசப்பட்டுள்ள கொழுப்பு அடைப்பின் மீது ( Atherosclerosis) இறைச்சிக் கொழுப்பாகப் போய்ச் சேராதா?’ எனும் கேள்விக்குத் தெளிவான விளக்கம் இல்லை.

பெரிதும் பிழைபடாத, சற்றே ஆரோக்கியமான உடம்புக்கு, எடை குறைக்க மேலும் நலம் அடைய மட்டுமே மேற்கண்ட டயட்கள் உதவக் கூடும். ஏற்கெனவே சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, புற்று முதலான பாரம்பர்ய வாழ்வியல் நோய்களின் பிடியில் உள்ளவர்கள் அல்லது அதற்கான காத்திருப்பு மரபு பட்டியலில் உள்ளவர்கள், குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி இத்தகைய பயிற்சிக்குள் நுழைவதே நலம். (நன்றி – ஆனந்த விகடன்)

என்று பேலியோ டயட் பற்றி எழுதியுள்ளார் கு. சிவராமன். அதில், ‘புலாலில் உருவாகும் உயிர் பிழைக் கேடுகள், கெட்ட கொழுப்பின் மூலம் ரத்தக்குழாய் உட்சுவரில் ஏற்கெனவே அதிகமாகப் பூசப்பட்டுள்ள கொழுப்பு அடைப்பின் மீது இறைச்சிக் கொழுப்பாகப் போய்ச் சேராதா?’ என்கிற முக்கிய கேள்வியை எழுப்புகிறார். இதுபோன்ற அவருடைய சந்தேகங்களுக்கு நான் பதில் கூற விரும்புகிறேன்.

பேலியோ டயட்டைப் பின்பற்ற இருக்கும் ஒவ்வொருவரிடமும் ‘எண்ணெயில் பொறித்த மாமிசம், உயர்வெப்பத்தில் சமைக்கும் மாமிசத்தை உண்ணவேண்டாம்’ என்று வலியுறுத்துகிறோம். பேலியோ டயட்டில் இருக்கும் பலரும் செலவு பார்க்காமல், ஸ்லோகுக்கர் எனப்படும் மெதுவாக இறைச்சியை வேக வைக்கும் குக்கரை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இதன் விலை இந்தியாவில் சுமார் ஐயாயிரம் ரூபாய். அமெரிக்காவில் ஐநூறு ரூபாய் மாத்திரமே. (ஸ்லோகுக்கர் என்பது மிகக் குறைந்த வெப்பத்தில் ஏழெட்டு மணிநேரம் சமைக்கும் தன்மை கொண்டது. இதில் வேகும் இறைச்சி மிக மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.) ஸ்லோகுக்கரை வாங்கமுடியாதவர்களும் சாதாரண குக்கரில் மிதவெப்பத்திலேயே இறைச்சியை சமைக்கிறார்கள். அல்லது வாணலியில் மிதவெப்பத்தில் வைத்து சமையல் செய்கிறார்கள். ஆக பேலியோ சமையல் முறை என்பது மித வெப்பத்தில் சமைப்பதே ஒழிய உயர்வெப்பத்தில் சமைப்பது அல்ல. உயர்வெப்பத்தினால் உணவுகளில் உருவாகும் உயிர் பிழைக் கேடுகள் பேலியோ சமையல்முறையில் உருவாக வாய்ப்புகள் இல்லை.

பொதுவாக இந்திய சமையல்முறையில் இறைச்சியை எண்ணெயில் பொறித்து சிக்கன் 65, சிக்கன் லாலிபாப் போன்ற உணவுவகைகள் சமைக்கப்படுகின்றன. இதனால்தான் கு. சிவராமன் அதுபோல எழுதியிருக்கலாம். இந்த விஷயத்தில் புலால் உணவில் பழம் தின்று கொட்டை போட்டவர்களான அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய மக்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க உணவகங்களில் ஸ்டேக் எனும் மாட்டுக்கறியை அல்லது பர்கர் போன்றவற்றை ஆர்டர் செய்தால், ‘ரேர் (Rare), மீடியம் (Medium), மீடியம் ரேர் (medium rare) அல்லது வெல் டன் (well done) இதில் எந்த பதம்?’ எனக் கேட்பார்கள்.

rare.jpg
 
ரேர் முறையில் இறைச்சியை வாணலியில் ஒரு சில நிமிடமே வேகவைப்பார்கள். இறைச்சியின் மேலே பழுப்பு நிறமாகவும் உள்ளே சிவப்பு நிறம் இன்னும் இருக்க இறைச்சியின் உட்புறம் சூடே இறங்காமல் இருக்கும். அதாவது கிட்டத்தட்ட பச்சை இறைச்சியே ரேர் வகையாகும்.

பச்சை இறைச்சியை உண்ணவேண்டாம் என அமெரிக்க அரசு தம் மக்களை எச்சரித்து வந்தாலும் யாரும் அதைக் கேட்பதில்லை. நவீனப் பண்ணை முறையில் விளைவிக்கப்படும் மாடு, பன்றி, ஆடு போன்றவற்றில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அமெரிக்க அரசு எச்சரிக்கிறது. இயற்கையான புல்லுணவு மாமிசத்தை ரேர் முறையில் உண்டால் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் அதுபோன்ற பச்சை மாமிசம் கிடைப்பது சிரமம் என்பதால் பேலியோவில் ரேர் முறையில் சமைக்கப்படும் மாமிசம் பரிந்துரைக்கப்படுவதில்லை.

அடுத்தப் பதமான மீடியம் ரேரில் இறைச்சியின் மையப்பகுதி சிவப்பாகவும் சூடாகவும் இருக்கும். அதற்கு அடுத்த மீடியம் பதத்தில் இறைச்சியின் மையப் பகுதி வெந்து இளஞ்சிவப்பு நிறத்தில் (pink) காணப்படும். வெல் டன் பதத்தில் முழுக்கப் பழுப்பு நிறமாகவே இறைச்சியின் மையப்பகுதியும் காணப்படும். இளஞ்சிவப்பு நிறத்தை உள்ளே காணமுடியாது. விவரம் அறிந்த சமையற்கலை நிபுணர்கள் ‘வெல் டன்’ என்றாலே முகத்தைச் சுழிப்பார்கள். ஏனெனில் இப்பதத்தில் இறைச்சியில் உள்ள ஜூஸ்கள் எல்லாமே கருகி, சுவை அடிபட்டுப் போய்விடும் என்பார்கள். விவரம் அறிந்தவர்கள் மீடியம் அல்லது மீடியம் ரேர் பதத்தில் மட்டுமே மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கறியை உண்பார்கள். இதையும் தாண்டி இறைச்சி கருகும் அளவு சமைத்தால், இறைச்சியில் உள்ள மூலச்சத்துக்கள் பலவும் உயர்வெப்பத்தில் அழிந்து, அதில் உயிர் பிழைக் கேடுகள் ஏற்படுகின்றன. அத்தகைய சமையல் முறையே ஆபத்தானதாகும். காரணம் கொழுப்பின் ஒரு வகையான பாலிகொழுப்பே ஆகும்.

கொழுப்புகளில் மூன்று வகைகள் உண்டு. நிறைவுற்ற கொழுப்பு (saturated fat), மோனோ வகைக் கொழுப்பு (monosaturated fat), பாலி வகைக் கொழுப்பு (polyunsaturated fat).

இதில் நிறைவுற்ற கொழுப்பு மிக உயர்வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டது. உதாரணம் நெய். நெய் கருகி உயிர் பிழைக் கேடுகள் ஏற்படவேண்டுமென்றால் நாம் நெய்யை 252 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் கொதிக்க வைக்கவேண்டும். நிறைவுற்ற வகைக் கொழுப்பு இதயத்துக்கு மிக நலன் அளிப்பது. தேங்காய் எண்ணெய், நெய், புலால், முட்டை போன்றவற்றில் நிறைவுற்ற கொழுப்பு உண்டு.

அடுத்தவகையான மோனோ கொழுப்பு மிதமான வெப்பத்தையே தாங்கும் தன்மை கொண்டது. இவற்றை குறைந்த அளவில்தான் சூடுபடுத்தவேண்டும். உதாரணம் பன்றிக்கொழுப்பு, ஆலிவ் எண்ணெய், பாதாம் போன்றவை. பாதாமை கருகவிடக் கூடாது. ஆலிவ் எண்ணெயை முடிந்தவரை பச்சையாகப் பயன்படுத்தலாமே தவிர உயர்வெப்பத்தில் சமைக்கப் பயன்படுத்தக் கூடாது.

பாலி வகைக் கொழுப்புகள், சுத்தமாக வெப்பத்தைத் தாங்கும் தன்மையற்றவை. இவை சோயாபீன்ஸ், ஆழி விதை, பூசணி விதை, சூரியகாந்தி எண்ணெய், மீன் எண்ணெய் போன்றவற்றில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவையும் குறைந்த அளவே வெப்பத்தைத் தாங்கக்கூடியவை. ஆனால், செயற்கையாக ஹைட்ரஜனேற்றம் மூலம் சூரியகாந்தி, சோயாபீன் எண்ணெய்களின் பாலி கொழுப்பு அணுக்களில் மாற்றம் செய்து அவற்றை நெய்க்குச் சமமாக வெப்பத்தைத் தாங்கும் சக்தியைத் தந்துவிடுகிறார்கள். இவையே மாரடைப்புக்கும் காரணமாகின்றன. இன்றைய மருத்துவ அமைப்புகள் பரிந்துரைக்கும் சமையல் எண்ணெய்கள் அனைத்துமே (கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சஃபோலா, கனோலா) பாலி கொழுப்புகள் நிரம்பியவையே.

கடலுணவுக்குப் பெயர் பெற்ற ஜப்பானில், அந்த ஊர் மக்கள் பெருமளவில் மீன்களைப் பச்சையாகவே உண்பார்கள். மீனைப் பச்சையாக உண்ணும் சூஷி எனும் உணவு, கடலுணவுக்கு புகழ்பெற்ற ஜப்பானின் தேசிய உணவாகும்.

சில நாள்களுக்கு முன்பு பார்த்த ஓர் ஆவணப்படத்தில், தஹிதி எனும் தீவுவாசிகள் மீனைப் பச்சையாக உண்பதைக் கண்டேன். அவர்கள் மீனை எலுமிச்சம்பழச்சாற்றில் சிறிது நேரம் ஊறவைத்து உண்கிறார்கள். எஸ்கிமோக்களும் மீனைப் பச்சையாக உண்பவர்களே. பச்சையாக இறைச்சியை உண்பதாலேயே அவர்கள் எஸ்கிமோ என அழைக்கப்படுகிறார்கள். எஸ்கிமோ மொழியில் எஸ்கிமோ என்கிற வார்த்தைக்கு பச்சை இறைச்சியை உண்பவர் என்றே அர்த்தம்.

sushi.jpg
ஜப்பானின் தேசிய உணவு, சூஷி
 
நோய்த்தொற்று, சுகாதாரக் காரணங்களால் பச்சை மீனை உண்பதை பேலியோவில் பரிந்துரைப்பதில்லை. எனினும் அதை எண்ணெயில் பொறிப்பது, உயர்வெப்பத்தில் சமைப்பது, கருகவிடுவது ஆகியவற்றைத் தவிர்க்கச் சொல்கிறோம். உயர்வெப்பத்தில் சமைப்பது, பொறிப்பது எல்லாமே நவீன மனிதனின் சமையல்முறைகள். பேலியோ டயட்டில் இவற்றுக்கு இடமில்லை. பழங்குடிகளைப் போலவே சமைத்து உண்ணும்படி வலியுறுத்துவதே முன்னோர் உணவு வழிமுறையாகும்.

அடுத்ததாக, ‘குறைந்தபட்சம் 65 - 70 தலைமுறைகளாக வேளாண் உணவுப்பிடிக்கு மாறிவிட்ட நாம், மீண்டும் ஆதித் தாத்தாவின் சாப்பாட்டுக்கு அடுத்த மெனுவிலேயே மாறிச்செல்வது எல்லோருக்கும் சரியாக இருக்குமா?’ என்றும் சந்தேகம் எழுப்புகிறார் கு. சிவராமன்.

மதுவின் வரலாற்றை ஆராயும் விஞ்ஞானிகள் தானியத்தின் வரலாறும் மதுவின் வரலாறும் ஒன்றே எனக் கூறுகிறார்கள். அதாவது பார்லி, அரிசி போன்றவற்றைப் பயிர் செய்த சில காலத்திலேயே மனிதன் அதிலிருந்து மதுவைப் பிழிந்து எடுத்து உண்ண கற்றுக்கொண்டான். நம் சங்க இலக்கியங்களை எடுத்தால் அதில் போற்றப்படும் உணவுகள் புலால் மற்றும் அரிசி. அதற்குச் சமமான இடம் கள்ளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 70 தலைமுறைகளில் நம் உடல் தானியத்துக்குப் பழகிவிட்டது என்பது உண்மையானால் நம் உடல் அதே 70 தலைமுறைகளில் மதுவுக்கும் பழகியிருக்கவேண்டும் அல்லவா? மது நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத தன்மையுடயதாக இந்நேரம் மாறியிருக்கவேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை! மது 10,000 ஆண்டுகளுக்கு முன்பு உயிர்கொல்லியாக இருந்ததைப் போன்றே இன்றும் உயிர்கொல்லியாகவே உள்ளது.

மனிதன் பாலை உண்ணத் தொடங்கியது 4000 ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் அந்தப் பாலே இன்னமும் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துவதாகவே உள்ளது. உதாரணமாக 90% சீனர்களுக்கு, பால் உண்பதால் ஏற்படும் லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளது. ஆக, சில தலைமுறைகளில் மனிதர்களின் மரபணுக்களில் பெரிய அளவு மாற்றம் வந்துவிடும் என்பது உண்மை அல்ல.

65-70 தலைமுறை என்பது சராசரி 67 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இன்றைய மனிதனுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவு தொன்மையானதாகத் தெரிந்தாலும், மனித இனத்தின் வரலாறு 75,000 தலைமுறைகள் என்பதை ஒப்பிட்டால் (ஒரு தலைமுறை என்பது பொதுவாக 33 ஆண்டுகள். 25 லட்சம் ஆண்டுகளை 33 ஆண்டுகளால் வகுத்தால் கிடைப்பது 75,000 தலைமுறை) அந்த 70 தலைமுறை என்பது ஒன்றுமே இல்லை எனத் தெரியவரும். கடந்த 10,000 ஆண்டுகளில் நம் ஜீன் அமைப்பை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதில் 1%க்கும் குறைவான மாற்றமே ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். நம் மரபணுக்கள் இன்னமும் தானியத்துக்கும் இனிப்புகளுக்கும், சர்க்கரைக்கும் பழகவில்லை என்பதே உண்மை.

நாம் என்னதான் ஏ.சி. அலுவலகத்தில் அமர்ந்து ‘நான் நகரவாசி’ என்றாலும் நம் மரபணுக்களைப் பொறுத்தவரை நாம் இன்னமும் குகையில் வேல்கம்புடன் அமர்ந்திருக்கும் ஆதிவாசியே. தினமும் மூன்று வேளை உண்பது, ஏராளமான உணவு கிடைப்பது போன்ற மாற்றங்களுக்கே அது இன்னமும் பழகவில்லை. நம் உடலைப் பொறுத்தவரை அது அடுத்த குளிர்காலத்தில் வரவிருக்கும் பஞ்சத்துக்காக நம் உடலில் கொழுப்பைச் சேமித்து வைத்துக்கொண்டிருக்கிறது. நம் வீட்டில் மூட்டை அரிசி இருப்பதும், பசுமைப் புரட்சி நிகழ்ந்ததால் உணவுப் பஞ்சம் இனி வர வாய்ப்பில்லை என்பதும் அதற்குத் தெரியாது. ஏனெனில் நம் மரபணு 25 லட்சம் ஆண்டுகளாக தினமும் ஒருவேளை உணவு, நீண்ட நெடிய உணவற்ற குளிர்கால மாதங்கள், புலால் உணவை உண்பது போன்ற பழக்கங்களால் இழைக்கபட்டு உருவாக்கப்பட்டது. 75,000 தலைமுறை மாற்றங்களை வெறும் 70 தலைமுறைகள் மாற்றிவிடும் எனக் கூறமுடியாது.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/paleo-diet/2015/11/29/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-22---%E0%AE%95%E0%AF%81.-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/article3151328.ece

Link to comment
Share on other sites

 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பேலியோ டயட் பகுதி 23: சோதனை மேல் சோதனை!
By - நியாண்டர் செல்வன்
First Published : 13 December 2015 10:00 AM IST
வட துருவப் பகுதியில் வசிக்கும் எஸ்கிமோ மக்களை ஆராய, 1903-ம் வருடம் அங்கே சென்று, ஐந்து வருடங்கள் ஆய்வு செய்தார் வில்ஜாமுர் ஸ்டெபன்சன் (Vilhjalmur Stefansson). ஸ்டெபன்சன் திரும்பி வந்து தன் அனுபவங்களைச் சொன்னபோது யாரும் அதை நம்பவில்லை. அங்கு தங்கிய ஐந்து வருடமும் தான் வெறும் மீன் மற்றும் நீரை உட்கொண்டே வாழ்ந்தேன். மீனை மட்டுமே உண்ட தனக்கும், எஸ்கிமோக்களுக்கும் ஸ்கர்வி வரவே இல்லை. அந்த ஐந்து வருடங்களில், தான் அடைந்த உடல்நலமும், ஆரோக்கியமும் தன் ஆயுளில் வேறு எந்தக் காலகட்டத்திலும் அடைந்ததில்லை என்று எழுதினார் ஸ்டெபன்சன்.

இப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் எழுதியதால் அவரை பரிசோதனைக்கு உட்படுத்த அன்றைய விஞ்ஞானிகள் முடிவெடுத்தார்கள். 1928-ம் ஆண்டு ஸ்டெபன்சன் ஒரு ஆண்டு முழுக்க இறைச்சியும், நீரும் மட்டுமே உண்ணும் சோதனைக்கு உட்பட முன்வந்தார். அன்று இறைச்சி மட்டுமே உண்டால் வைட்டமின் சி குறைபாடு வந்து இறந்துவிட வாய்ப்புண்டு என நம்பப்பட்டது.

மருத்துவமனையில் ஸ்டெபன்சனும் அவரது நண்பரும் நுழையும்போது அவருடைய நண்பர்கள் பலர் அங்கே வந்து ‘இந்த விஷப்பரிட்சையில் இறங்கவேண்டாம்’ என வலியுறுத்தினார்கள். ஆனால், ஸ்டெபன்சன் அசரவில்லை. பரிசோதனைக் காலமான ஒரு வருடமும் எந்தச் சிக்கலுமின்றி கழிந்தது. அந்த ஒரு வருடமும் இறைச்சி மற்றும் நீரை மட்டும் உண்ட இருவரும் மிக ஆரோக்கியமாகவே இருந்தார்கள். நடுவே ஒரே ஒருமுறை ‘கொழுப்பில்லாத இறைச்சியை உண்டால் என்ன ஆகும்’ என்பதைச் சோதிக்க ஸ்டெபன்சனுக்கு ஆய்வாளர்களின் வற்புறுத்தலால் கொழுப்பில்லாத இறைச்சி வழங்கப்பட்டது. அதனால் ஸ்டெபன்சனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. எஸ்கிமோக்கள் கொழுப்புள்ள இறைச்சியையே உண்பார்கள் என்ற ஸ்டெபன்சன், அதன்பின் கொழுப்பு நிரம்பிய இறைச்சியையே சாப்பிட்டார். அதனால் அவருடைய உடல் உபாதை மாயமாக மறைந்தது.

இந்த ஆய்வை முன்வைத்து பல கட்டுரைகள் மருத்துவ இதழ்களில் பிரசுரிக்கப்பட்டன. ஸ்டெபன்சன் அதன்பின் ஆயுள் முழுக்க இதே டயட்டைப் பின்பற்றி நோய்நொடியின்றி வாழ்ந்து தன் 82-வது வயதில் மரணமடைந்தார். அவர் ‘Not by bread alone’ என்று ஒரு நூலை எழுதினார். ‘பஞ்சம் வந்து இறைச்சி கிடைக்கவில்லை என்றால் மட்டுமே எஸ்கிமோக்கள் காய்கனிகளை உண்பார்கள். அவர்களைப் போன்ற ஆரோக்கியமான மனிதர்களை நான் பார்த்தது இல்லை.’ என்று தன் நூலில் அவர் எழுதியுள்ளார்.

Not_by_Bread_Alone_Blog.jpg
 
சுமார் 50 ஆண்டுகள் கழித்து ஜார்ஜ் மான் எனும் மருத்துவர் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். மசாயி எனும் கென்ய பழங்குடியினரைக் கண்டார். மசாயிகள், மாடுகளை வளர்ப்பவர்கள். மசாயி போர்வீரன், தினமும் மூன்று முதல் ஐந்து லிட்டர் பாலைக் குடிப்பான். மாடுகளைக் கொல்லும் காலகட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 கிலோ முதல் 4 கிலோ மாட்டிறைச்சி உண்ணப்படும். மசாயிகள் காய்கனிகள், பழங்கள் எதையுமே அதிகம் உண்ணமாட்டார்கள். அவை மாடுகளுக்கு மட்டுமே ஏற்ற உணவு என அவர்கள் கருதினார்கள் என்கிறார் ஜார்ஜ் மான். கென்யாவில் இருக்கும் சம்புரு எனும் இன்னொரு பழங்குடியை ஆராய்ந்த ஜெரால்டு ஷேபர் எனும் மருத்துவர், சம்புருக்கள் மசாயியை மிஞ்சும் வண்ணம் தினமும் இரண்டு முதல் ஏழு லிட்டர் பாலையும் அரை கிலோ வெண்ணெயையும் உண்பதாகக் கூறுகிறார். சம்புருக்களும், மசாயிகளும் மிக ஒல்லியாக, ஆரோக்கியமாக இருக்கும் பழங்குடியினர்.

இந்த ஆய்வுகள் எல்லாமே மருத்துவ ஆய்விதழ்களில் பதிப்பிக்கப்பட்டும், நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகளை நடத்தியவர்களும் புகழ் பெற்ற மருத்துவர்கள். இருந்தும் இன்றைய மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இவை எதுவுமே சொல்லிக்கொடுக்கப்படுவது கிடையாது. அவர்கள் படிப்பதெல்லாம் கொலஸ்டிராலால் இதயத்துக்கு ஆபத்து என்கிற 1970களின் பழுதடைந்த அறிவியல் கோட்பாட்டையே.

கொலஸ்டிராலால் உடல் பருமன் அடையும், மாரடைப்பு ஏற்படும் என்கிற அச்சுறுத்தலுக்கு வேட்டு வைக்கும் வகையில் எஸ்கிமோக்கள், மசாயிகள் போன்றோரது உணவுமுறையைப் பற்றிய ஆய்வுகள் வெளிவந்தபிறகு உடனே நிலைமை மாறவில்லை. அமெரிக்க உணவுமுறையை நிர்ணயிக்கும் பொறுப்பில் இருந்தவர்களுக்கு ஆப்பிரிக்கா, வடதுருவம் போன்ற பகுதிகளில் இருந்து வந்த இத்தகைய ஆய்வுகளை என்ன செய்வது என்கிற குழப்பமே ஏற்பட்டது. அதனால் அதை ஒழித்துக்கட்டும் வேலைகள் நடந்தன.

அவர்கள் காடுகளில் நீண்ட தூரம் ஓடியாடி வேட்டையாடுகிறார்கள் என்று சொல்லி ஆய்வுகளை ஒதுக்கினார்கள். நகர்ப்புறங்களில் அதைவிட அதிகமணிநேரம் உழைக்கும் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் ஆகியோருக்கும் வியாதிகள் வருவது சுட்டிக்காட்டப்பட்டது. உடனே அதற்குக் காரணம், மது, சிகரெட் என்றார்கள். மது, சிகரெட் பழக்கம் இல்லாத தொழிலாளரும் வியாதியால் பாதிப்படைவதைச் சுட்டிக்காட்டியபோது, இதற்குக் காரணம் பழங்குடியினரின் மரபணுக்கள் என்றார்கள்.

மரபணுக் கோட்பாட்டை நிரூபிக்க விஞ்ஞானிகள் சிலர் ஆப்பிரிக்க காடுகளுக்குச் சென்று மசாயிகளை ஆராய்ந்தார்கள். நகர்ப்புறங்களில் வாழும் மசாயிகளை ஆராய்ந்தபோது அவர்களுக்கும் நகர்ப்புற மக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது தெரியவந்தது. ஏனெனில் நகர்ப்புற மசாயிகள், நகர்ப்புற உணவுகளையே (ரொட்டி, சாண்ட்விச், பர்கர்) சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்கள். ஆனால் காடுகளில் இயற்கையான உணவை உண்டு (இறைச்சி, பால்) வாழ்ந்த மசாயிகள் ஆரோக்கியமாக இருந்தார்கள். இதற்கு எந்தச் சரியான விளக்கமும் இதுவரை உணவியல் துறை விஞ்ஞானிகளால் கொடுக்கப்படவில்லை. காட்டுவாசி உதாரணமெல்லாம் நகர்ப்புற மக்களுக்குப் பொருந்தாது என்பது போன்ற நம்பிக்கையையே கொண்டிருக்கிறார்கள்.

eskimo.jpg
19-ம் நூற்றாண்டின் எஸ்கிமோ பெண்
 
இதனிடையே பிரான்சு, இத்தாலி, கிரேக்கம் போன்ற நாடுகளில் நகர்ப்புற மக்கள் அதிக அளவில் கொழுப்புணவை உண்டும் ஆரோக்கியமாகவே உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்தன. இதனால் அமெரிக்க உணவியல் நிபுணர்கள் குழம்பிப் போனார்கள். குறிப்பாக பிரெஞ்சுக்காரர்கள் மாட்டிறைச்சி, முட்டை, பேகன் எனப்படும் பன்றி வயிற்றுக்கறி, ஃபோயி கிராஸ் எனப்படும் வாத்து ஈரல், ஏராளமான சீஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துவந்தார்கள். இவர்களுக்கு எல்லாம் ஏன் மாரடைப்பு வரவில்லை என்பதை விளக்கமுடியாமல் திணறிய உணவியல் நிபுணர்கள், ‘பிரெஞ்சு மக்கள் ஒயின் குடிக்கிறார்கள். ஒயின் குடிப்பது இதயத்துக்கு நல்லது’ என்று சொல்லி சமாளித்தார்கள். உடனே உலகெங்கும் ஒயின் குடிப்பது நல்லது என்பது போல செய்தி பரவி, குடிக்காமல் இருந்த பலரும் ஒயினைக் குடிக்க ஆரம்பித்த கொடுமையும் நடந்தது.

அதன்பின் ஸ்விட்சர்லாந்து, நார்வே, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளில் மக்கள் கொழுப்புணவை உண்டும் மாரடைப்பு விகிதம் அமெரிக்காவை விட குறைவாக இருந்த ஆய்வுகளும் தொடர்ந்து வெளிவந்தன. உணவியல் நிபுணர்களும் சளைக்காமல் ‘நார்வேயில் மீன் சாப்பிடுகிறார்கள், கிரேக்கத்தில் ஆலிவ் ஆயில் சாப்பிடுகிறார்கள். இதனால்தான் அங்கே மாரடைப்பு குறைவு’ என்றெல்லாம் சொல்லி உலகெங்கும் மீன் மாத்திரை, ஆலிவ் ஆயில் ஆகியவற்றின் விற்பனை பரவ வழிவகுத்தார்கள்.

உடல்பருமனுடன் அமெரிக்காவில் புற்றுநோய் விகிதமும் அதிகமாகிக்கொண்டிருந்தது. 1970களில் 1 லட்சம் பேரில் 400 பேருக்குப் புற்றுநோய் இருந்தது. அதில் 200 பேர் மரணமடைகிறார்கள் என்றும் புள்ளிவிவரங்கள் கூறின. புற்றுநோய் வந்தவர்களில் சரிபாதி பேர் பிழைப்பதில்லை எனும் நிலையில் புற்றுநோய் ஏன் வருகிறது, அதற்கான தீர்வு என்ன என்பதைச் சொல்ல முடியாமல் விஞ்ஞானிகள் குழம்பினார்கள். சிகரெட்டால் புற்றுநோய் வரும் என்பதை ஒப்புக்கொள்ள அவர்களுக்கு 1964-ம் ஆண்டு தான் மனம் வந்தது. அதற்குள் பல லட்சம் பேர் சிகரெட் பிடித்து உயிரை விட்டிருந்தார்கள். இதன்பின், அதிகரிக்கும் புற்றுநோய்க்கும் இறைச்சிதான் காரணமாக இருக்கும் என்ற கருத்தாக்கம் விஞ்ஞானிகளிடையே இருந்தது. இதைப் பரப்பியவர், கியோ கோரி.

கியோ கோரி 1976-ல் ஜப்பான் சென்றார். அங்கே புற்றுநோய் விகிதம் மிகக் குறைவாக உள்ளதைக் கண்டார். அதன்பின் அமெரிக்காவில் குடியேறி வாழும் ஜப்பானியர்களையும் கவனித்தார். அமெரிக்கர்களுக்குச் சமமான அளவில் அவர்களுக்கும் புற்றுநோய் இருந்தது. இதை அவர் அமெரிக்க அரசின் செனட்டர் (எம்.பி) ஜார்ஜ் மெக்கவர்னிடம் சொன்னார். மெக்கவர்ன்-னின் கமிட்டி அப்போதுதான் ‘கொழுப்பால் மாரடைப்பு வரும்’ என்றொரு அறிக்கையைத் தாக்கல் செய்ய இருந்தது. காரணம், கொழுப்பு நல்லதா, கெட்டதா என்கிற பெரிய சர்ச்சை அன்றைய அமெரிக்க விஞ்ஞானிகளிடையே இருந்தது. இதைத் தீர்க்க அமெரிக்க அரசின் ஒரு கமிட்டி, செனட்டர் ஜார்ஜ் மெக்கவர்ன் தலைமையில் அமைக்கப்பட்டது. மெக்கவர்ன், குறைகொழுப்பு, சைவ டயட்டைப் பின்பற்றியவர். இரு தரப்பு விஞ்ஞானிகளிடமும் கருத்து கேட்டு, ‘இறைச்சி, முட்டை, கொழுப்பு ஆகியவை உடலுக்குக் கெடுதல். கொழுப்பு குறைவான உணவே உடலுக்கு நல்லது’ எனப் பரிந்துரைத்தார். காவல்துறை ஒருவனைக் கைது செய்தால் அவன் மேல் ஸ்டேஷனில் நிலுவையில் இருக்கும் எல்லா வழக்குகளையும் சுமத்துவதுபோல ‘புற்றுநோய்க்கும் இறைச்சியே காரணம்’ என அறிக்கையில் எழுதி தாக்கல் செய்துவிட்டார் மெக்கவர்ன்.

அந்த அறிக்கை மேல் விவாதம் நடந்தது. ‘இதற்கு என்ன ஆதாரம்?’ என ஒரு விஞ்ஞானி வினவ, ‘ஆதாரத்தைத் தேடுவதற்கான நேரம் இல்லை. மக்களுக்கு நாம் ஒரு பரிந்துரையைச் செய்யவேண்டும். ஏனெனில் உடல் பருமனும், புற்றுநோயும் மக்களைப் பிடித்து வாட்டி வருகின்றன. அதனால் மக்கள், கொழுப்பு குறைந்த உணவை உண்ணவேண்டும் எனப் பரிந்துரை செய்வோம். அது உண்மையா, பொய்யா என்பதைப் பரிசோதனை மூலம் சாவகாசமாகப் கண்டுபிடிக்கலாம்’ என்றார் மெக்கவர்ன்.

மெக்கவர்ன்-னின் அறிக்கையே அமெரிக்க அரசின் அதிகாரபூர்வமான டயட் அறிவுரையாக ஏற்கப்பட்டது. (இணைப்பு: http://zerodisease.com/archive/Dietary_Goals_For_The_United_States.pdf) அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன், அமெரிக்க டயாபடிஸ் அசோசியேஷன் போன்ற அமைப்புகள் அதையே அதிகாரபூர்வமான டயட்டாக அறிவித்தன. அமெரிக்க புற்றுநோய் மையம், அமெரிக்க சுகாதார மையம் போன்றவை, கொழுப்பால் புற்றுநோய் உண்டாகும் என மக்களை எச்சரித்தன. அமெரிக்காவே சொல்கிறது என்பதால் உலகநாடுகளும் அதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டுன.

ஆனால், இப்படிப் புற்றுநோய் வரும் என்று சொன்னால் மட்டும் போதாது அல்லவா? அதை நிரூபிக்க ஆதாரம் வேண்டுமே? இதற்காக ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1987-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு வெளியானது. இது 10 ஆண்டுகளாக, 90,000 செவிலியர்களைக் கொண்டு அவர்களது உணவை ஆராய்ந்து நிகழ்த்தப்பட்ட ஆய்வாகும். ‘செவிலியர்கள் எந்தளவுக்கு அதிகமாக கொழுப்பை உண்கிறார்களோ அந்தளவுக்கு குறைவான விகிதத்திலேயே அவர்களுக்கு மார்பகப் புற்றுநோயின் பாதிப்பு உண்டாகிறது’ என்று ஆய்வின் முடிவு வெளியானது.

ஆய்வின் முடிவு தலைகீழாக வந்தவுடன் அதிர்ச்சியடைந்த அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தலைவர் பீட்டர் க்ரீன்வால்ட், எலிகளை வைத்து மிகக் குறைந்த காலகட்டத்தில் ஒரு ஆராய்ச்சியை நிகழ்த்தினார். கொழுப்புணவை உண்பதால் எலிகளுக்குப் புற்றுநோய் ஏற்படும் என்று நிருபித்தார். ஆனால் இந்த ஆய்வில் எலிகளுக்கு கொடுக்கப்பட்டது கனோலா, வனஸ்பதி போன்ற ரீஃபைண்ட் ஆயில் வகைக் கொழுப்பாகும். இப்படி ஒரு மோசடியான ஆய்வை நடத்திவிட்டு, மருத்துவ இதழ்களில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வைக் கடுமையாக விமரிசித்து கட்டுரை எழுதினார்.

நிறைவுற்ற கொழுப்பால் புற்றுநோய் உண்டாகும் என்கிற அமெரிக்க அரசின் அறிவுரையைப் பல ஆய்வுகள் கேள்வி கேட்டன. ‘ஒரு பிரச்னையை முடிக்க அதன் தலையில் கல்லைத் தூக்கிப் போடு அல்லது கமிட்டியைத் தூக்கிப் போடு’ என்பார்கள். அதேபோல ‘இதை எல்லாம் ஆராய்கிறோம். கமிட்டி அமைக்கிறோம். தேசிய புற்றுநோய் சங்க விஞ்ஞானிகளே இதை ஆராய்வார்கள்’ எனச் சொல்லி அமெரிக்க புற்றுநோய் நிறுவனம் தப்பித்துக் கொண்டது. இத்தகைய ஆய்வுகளை முடிக்க ஏழெட்டு ஆண்டுகள் ஆகும் என்கிற நிலையில் உடனுக்குடன் எதையும் நிரூபிக்க முடியாமல் தாமதமானது. ஆனால், அமெரிக்க புற்றுநோய் நிறுவனம், கொழுப்புணவால் புற்றுநோய் வரும் என்கிற பிரசாரத்தை மட்டும் தொடர்ந்து செய்து வந்தது.

1977-ல், ‘கொழுப்பால் மாரடைப்பும் புற்றுநோயும் வரும்’ என்கிற அறிக்கையைப் பரிந்துரை செய்தபோது புற்றுநோய்க்கும், நிறைவுற்ற கொழுப்புக்கும் இடையே உள்ள தொடர்பை நிரூபிக்கும் ஓர் ஆய்வும் அமெரிக்க அரசிடம் இல்லை. 2011-ல், தேசிய புற்றுநோய் சங்க உணவியல் துறை இயக்குநரான ஆர்தர் ஷாட்ஸ்கினுக்குப் புற்றுநோய் வந்தது. ‘நெய்/வெண்ணெய் சாப்பிடவேண்டாம். வனஸ்பதி, கனோலா சாப்பிடுங்கள்’ என்று மக்களுக்குச் சொன்ன அறிவுரையை அவரும் பின்பற்றியவர். புகை, மது என எப்பழக்கமும் இன்றி ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்த ஷாட்ஸ்கினுக்குப் புற்றுநோய் வந்தபோது மருத்துவ உலகமே அதிர்ச்சியடைந்தது. இதற்குப் பிறகுதான் அமெரிக்க புற்றுநோய் சங்கம் ‘சர்க்கரை, மாவுச்சத்து போன்றவை புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம்’ என்று சொல்லத் தொடங்கியுள்ளது.

பிறகு, ஆர்தர் ஷாட்ஸ்கின் உடல்நலம் காரணமாகப் பதவி விலகினார். அவர் கடைசியாக அளித்த பேட்டியில், ‘அமெரிக்க புற்றுநோய் சங்கத்தில் பலரும் இப்போது மாவுச்சத்தும், சர்க்கரையும்தான் புற்றுநோய்க்கு காரணம் என்கிறார்கள். ஆனால் எனக்கு இன்னமும் அதில் நம்பிக்கை வரவில்லை’ என்றார். ஆயுள் முழுக்க நம்பிய கொள்கையைக் கடைசிகாலத்தில் கைவிடுவது பலருக்கும் சாத்தியமில்லை.

அதன்பின் 2012-ல், புற்றுநோய் சங்க உணவியல் துறையின் புதிய இயக்குநராகப் பதவியேற்ற ராபர்ட் ஹூவர் ‘புற்றுநோய்க்கும் கொழுப்புக்கும் இடையே உள்ள தொடர்பை எங்களால் நிரூபிக்க முடியவில்லை’ என ஒப்புக்கொண்டார். அதன்பின் அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு ‘புற்றுநோய்க்கும் கொழுப்புணவுக்கும் இடையே தொடர்புள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது’ என்பதாக மாறியது. ஆனால் முதலில் பரிந்துரை செய்த 1977ம் வருடம் முதல் நிலைப்பாடு மாறிய 2012-ம் வருடம் வரை உலகெங்கும் பலகோடி மக்கள் இந்த முட்டாள்த்தனமான, அறிவியல் ஆதாரமற்ற பரிந்துரையை நம்பி தம் வாழ்க்கையை பறிகொடுத்துள்ளார்கள். 1977-ல் ஒரு அரசியல்வாதி செய்த தவறு உலகெங்கும் பலகோடி மக்களைப் பலிவாங்கிய கொடுமையை என்னவென்று சொல்வது?

ஆனால், ஆர்தர் ஷாட்ஸ்கின்-னைப் போல தனது பரிந்துரையைத் தானே பின்பற்றும் தவறை விஞ்ஞானிகள் சிலர் செய்யவில்லை. அதில் முக்கியமானவர், ஆன்சல் கீஸ்.

Ancel-Keys.jpg

 ஆன்சல் கீஸைப் பற்றி முந்தைய அத்தியாயம் ஒன்றில் பார்த்துள்ளோம். குறைந்தகொழுப்பு டயட்டுகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர், கீஸ். இரண்டாம் உலகப்போர் சமயம் அமெரிக்க வீரர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்துடன் உணவுப்பொருள்கள் தயாரிக்கும் கமிட்டியின் தலைவராக இருந்தார். அவர் வடிவமைத்த உணவு ரேஷன், வீரர்களுக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவற்றை கே ரேஷன் என அவரது பெயரின் முதல் எழுத்தால் அழைத்தார்கள். இதனால் கீஸின் புகழ் நாடெங்கும் பரவியது. இந்தச் சூழலில் ‘மாரடைப்புக்கு காரணம் கொழுப்பே’ என்ற ஏழுநாடுகளின் ஆய்வு ஒன்றை கீஸ் உருவாக்கினார். 22 நாடுகளை வைத்து செய்யப்பட்ட அந்த ஆய்வில் மாரடைப்புக்கும் கொழுப்புக்கும் எத்தொடர்பும் கிடைக்கவில்லை. அதனால் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி அந்த 22 நாடுகளில் இருந்து வெறும் 7 நாடுகளை மட்டும் தேர்ந்தெடுத்து, கொழுப்பால் மாரடைப்பு ஏற்படும் என்று சொல்லி ஆய்வைப் பதிப்பித்தார் கீஸ்.

இத்தனை பெரிய விஞ்ஞானி சொல்லிவிட்டாரே என டைம் பத்திரிக்கை ‘மிஸ்டர் கொலஸ்டிரால்’ என அவருக்கு அடைமொழி கொடுத்து, அவரது புகைப்படத்தை அட்டையில் வைத்து ‘கொலஸ்டிரால் ஆபத்து’ என கவர்ஸ்டோரி வெளியிட்டது. அந்தக் காலகட்டத்தில் கீஸுக்கு எதிராகப் பல விஞ்ஞானிகள் வாதாடினார்கள். ஆனால் கீஸ் பிடிவாதகாரர். ஒருவர் தன்னை எதிர்ப்பது தெரிந்தால் அதைத் தனிப்பட்ட முறையிலான தாக்குதலாக எடுத்துக்கொள்வார். அவரைப் பொறுத்தவரை அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், அவரது ஆய்வைத் தவறு என்று கூறுவதும் ஒன்றே. கீஸின் ஆய்வு தவறானது என்று பின்னாளைய விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டாலும் அன்று கீஸிடம் யாரும் ஒரு கேள்விகூட எழுப்பவில்லை.

தேசிய அளவில் கீஸுக்கு இருந்த நற்பெயர், பிரபலம் ஆகியவை பிற விஞ்ஞானிகளுக்கு இல்லை. பல மருத்துவ அமைப்புகளின் தலைவராக கீஸ் இருந்தார். அவரை எதிர்த்தவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனத் திட்டி அறிக்கை வெளியிட்டார். இதனால் அவர்களுக்கான நிதியுதவிகள், ஆய்வு செய்தற்கான உதவித்தொகைகள் ஆகியவை நிறுத்தப்பட்டன. கீஸ் சொன்னதை ஆதரித்து வெளியிடும் ஆய்வறிக்கைகளுக்கே நிதியுதவி கிடைக்கும் என்கிற நிலை உருவானது. இப்படி ஒரு தனிமனிதரின் ஈகோ மற்றும் முரட்டுப்பிடிவாதம் ஆகியவை அறிவியல் துறையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டது. பலருடைய உடல்நலம் கெடவும், தவறான மருத்துவப் பரிந்துரைகள் பரவவும் கீஸ், செனட்டர் மெக்கவர்ன் போன்ற இருவருடைய தவறான முடிவுகளும், ஈகோவுமே காரணமாக இருந்தன.

ஆனால், கொலஸ்டிரால் மோசம் என ஊருக்கே உபதேசம் செய்த கீஸ், கடைசிவரை தினமும் மாட்டிறைச்சியையும், பன்றிக்கொழுப்பையும், முட்டையையும் உண்டுவந்தார். 1904-ல் பிறந்த கீஸ், தன் இளம்வயதில் காலை உணவாக முட்டை, பேகனை (பன்றிவயிற்றுக்கறி) சாப்பிட்டவர். இந்த உணவுப் பழக்கத்தை அவரால் கடைசிவரை கைவிடமுடியவில்லை. ஆனால் நகைமுரணாக கொலஸ்டிரால் ஆபத்து என கீஸின் கட்டுரையைப் பதிப்பித்த டைம் இதழ், அட்டைப் படத்தில் முட்டை மற்றும் பேகன் படத்தை வைத்து அக்கட்டுரையை வெளியிட்டது. அதுவே கீஸின் விருப்ப உணவாக கடைசிவரை இருந்தது. அதாவது எந்த உணவை மக்களைச் சாப்பிடவேண்டாம் என்றாரோ அதையே கடைசிவரை கீஸ் உண்டுவந்தார். சீரியல், ஓட்ஸ் போன்ற ‘ஆரோக்கிய உணவுகளை’ அவர் மக்களுக்குப் பரிந்துரைத்தபோதும் கடைசிவரை அவர் அதைத் தொடவே இல்லை.

பேட்டி ஒன்றில், ‘நீங்கள் ஏன் சீரியலையும் பாலையும் காலை உணவாக எடுப்பதில்லை’ என கீஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு கீஸ் ‘அந்தக் கூழை குடிப்பதா? எனக்கு குமட்டிக்கொண்டு வரும்’ என்றார். இப்படி ஆரோக்கிய உணவைக் கடைசிவரை உண்டுவந்த கீஸ், அதன் பலனாக உடல்பருமனின்றி ஒல்லியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து தன் 101-வது வயதில் மரணமடைந்தார்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/paleo-diet/2015/12/13/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-23-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/article3174099.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.