Jump to content

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார் .


Recommended Posts

21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்!

 

ராமேஸ்வரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

kalam-%20modi%201.jpg

மாரடைப்பால் காலமான அப்துல்கலாம் உடல், அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை ராமேஸ்வரம் பள்ளி வாசலில், அப்துல் கலாம் உடலுக்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து உடல் அடக்கம் செய்யப்படும் பேக்கரும்பு பகுதிக்கு ராணுவ வாகனத்தில் கலாம்  உடல் வந்தடைந்தது.

ragul%20anjali%281%29.jpg

அங்கு, அப்துல்கலாம் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், உதயகுமார் ஆகியோர் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

kalam-%20anjali%281%29.jpg

மேலும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, ஆந்திர முதல்வர் சந்திரபாயு நாயுடு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், கேரள ஆளுநர் சதாசிவம், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேம லதா, மைத்துனர் சுதீஷ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாமக இளைரஞணி தலைவர் அன்புமணி உள்பட முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

kalam-%20anjali%20final.jpg

இதைத்தொடர்ந்து, கலாம் உடலுக்கு முப்படை தளபதிகள் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், கலாமின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் பேக்கரும்பில் அப்துல்கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

http://www.vikatan.com/news/article.php?aid=50261

 

 

 

 

விடை பெற்றார் கலாம்...!

 

ராமேஸ்வரம்: லட்சக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருடன் விடை பெற்றார் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் இன்று ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தாெழுகைக்கு பின்னர், கலாமின் உடல் இறுதி ஊர்வலமாக ராணுவ வாகனத்தில் புறப்பட்டு, வழிநெடுக லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் சென்றது.

4.jpg

பள்ளிவாசல் வந்தது கலாம் உடல்...

நேற்று இரவு முழுவதும் கலாம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிறப்பு பிரார்த்தனைகளுக்கு பின் அவரது வீட்டின் அருகில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசலுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சிறப்பு தொழுகை நடைபெற்றது

6%281%29.jpg

கலாமின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது...

8%281%29.jpg

அங்கு தொழுகை முடிந்தபின் மீண்டும் ராணுவ வீரர்களிடம் கலாமின் உடல் ஒப்படைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தின் மூலம், ராமேஸ்வரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அடக்கத்தளத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வாகனம், ராம தீர்த்தம் தெற்கு, நகர் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக அடக்கத்தளத்திற்கு சென்றது.

மோடி, ராகுல் மதுரை வருகை...

அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து ராமேஸ்வரம் சென்றனர்.

பேக்கரும்பில் உடலுக்கு ராணுவ மரியாதை...

13.jpg

ராமேஸ்வரத்தில் இருந்து அடக்கம் செய்யப்பட உள்ள பேக்கரும்புக்கு அப்துல் கலாமின் உடல், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பின் அங்கு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

11.jpg

21 குண்டுகள் முழங்க விடை பெற்றார் கலாம்...

தலைவர்களின் இறுதி அஞ்சலியை தொடர்ந்து, ராணுவ வீரர்களின் 21 குண்டுகள் முழங்க நம்மை விட்டு பிரிந்து சென்றார் இளைஞர்களின் கனவு நாயகன்.

14.jpg

கலாமின் உடலை கடைசி முறையாக பார்ப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்திற்கு சோகத்துடனும், கண்ணீருடனும் வந்திருந்தனர்.

முன்னதாக...

கோடிக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட அப்துல் கலாம், கடந்த திங்கட்கிழமை மாலை மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்கிழமை காலை அசாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து விமானப்படை விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

7.jpg

டெல்லி பாலம் விமான நிலையத்தில் அப்துல் கலாமின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு அப்துல் கலாமின் உடல் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

9.jpg

இந்நிலையில், அப்துல் கலாமின் இறுதிச்சடங்கை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடத்த அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதைத்தொடர்ந்து, அப்துல் கலாமின் உடல் நேற்று காலை டெல்லியில் இருந்து சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் ராணுவ விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு,  அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.

3.jpg

அதன்பின், அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கடற்படைக்கு சொந்தமான வாகனத்தில், கலாம் உடல் ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மண்டபம் முதல் ராமேசுவரம் வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அப்துல் கலாமின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

5.jpg

இதை தொடர்ந்து, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கலாமின் உடல் வைக்கப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த 3 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சோகத்துடனும், கண்ணீருடனும் காத்திருந்தனர்.

உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு...

பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் இரவில் அப்துல் கலாமின் உடல், அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கலாமின் வீட்டினுள் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

http://www.vikatan.com/news/article.php?aid=50260

Link to comment
Share on other sites

 
 
 
smallbanner1.jpg

காலம் தந்த கலாம்!

ஊரும் பேரும் 1931-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15-ம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் கடைக்குட்டி மகனாக பிறந்தார். இவருக்கு முன்பு மூன்று அண்ணன்களும், ஓர் அக்காவும். ஆனால் இன்று அவர்களில் முகமது முத்து மீரான் தவிர கலாம் உள்பட அணைத்து நபர்களும் இறந்துவிட்டனர் என்பது காலத்தின் மிகப் பெரிய சோகம். கலாம் இறப்பை இந்த உலகமே துக்க தினமாக அனுசரித்து வரும் வேளையில் கலாமின் பால்ய வாழ்க்கை குறித்து வெளியே தெரியாத பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிந்தனர் அவருடைய உறவினர்கள்.

தாத்தாவின் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்தார் அப்துல் கலாமின் பேரன் சலீம். ‘‘ஆரம்ப பள்ளிப்படிப்பை இங்கு உள்ள அரசு பள்ளியில்தான் படித்தார். பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க ராமநாதபுரம் போனார். அப்போதுதான் முதல் முதலாக வெளி உலகத்தை பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார். அதற்கு மேல் கல்லூரி படிப்பு படிக்க திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சென்றார். அங்கு இளங்கலை இயற்பியல் பாடம் படித்தார். அவருக்கு படிக்க வசதி இல்லை அவரின் சகோதரி நகையை அடகு வைத்துக் கொடுத்த பணத்தில்தான் கல்லூரி படிப்பையே தொடர்ந்து படிக்க முடிந்தது இல்லை என்றால் இந்நேரம் ராமேஸ்வரத்தில் ஏதாவது சிறிய தொழில் செய்து, மிகச் சாதாரண ஆளாக இருந்து இருப்பேன் என்று அடிக்கடி சொல்லுவார்.

 

கலாம்... சாஸ்திரி!

கலாமும் சரி அவரது அப்பாவும் சரி இன்றும் இந்துக்கள் நிரம்பிய ராமேஸ்வரத்தில் மற்ற சமுதாயத்தினருடன் ரொம்ப இணக்கமாக இருந்தனர். இது காலம் கடந்த நட்பு. கலாம் ஊருக்கு வந்தால் அவரைப் பார்க்க அதிமாக வரும் நபர்கள் இங்கு இருக்கும் இந்துக்கள்தான். இந்துக்களும் முஸ்லிம்களும் உண்மையான அண்ணன், தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த ஒற்றுமையை கலாமின் சிறு வயதில் இருந்தே இருக்கிறது. இதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் இருக்கு கலாமின் தந்தையும் ராமேஸ்வரம் கோவிலின் தலைமை குருக்கள் பஷி லட்சுமண சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்கள். அது இன்றளவும் நீடித்தது. தாத்தா இஸ்லாமிய உடையுடனும் சாஸ்திரி மகன் இந்து அடையாளத்துடனும் அருகருகே அமர்ந்து இருப்பதைப் பார்த்த ஆசிரியர், கலாமை பின் இருக்கையில் சென்று அமரக் கூறுகிறார். ‘அந்த சமயத்தில் சாஸ்திரி மகன் கண்ணீர்விட்டு அழுத காட்சி தன் கண்ணைவிட்டு மறையவில்லை’ என்று கலாம் தாத்தா அவரது நூலில் எழுதி இருக்கிறார். பிறகு லட்சுமண சாஸ்திரி பள்ளிக்கு வந்து “குழந்தைகள் மனதில் இது போன்ற சமூக. மத வேற்றுமைகளைப் புகுத்தாதீர்கள்” என்று ஆசிரியரை கண்டித்த பிறகு அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக ஊருக்கு வரும் பொழுது சொல்லி இருக்கிறார் கலாம் தாத்தா.

Ilamai

அந்தக் காலத்தில் இருந்தே இந்துக்கள் வீட்டில் போய் சாப்பிடும் பழக்கம் உடையவர் கலாம் தாத்தா. அதை குடியரசு தலைவர் ஆன பிறகும் கூட கடைப்பிடித்தவர். அதே போல இந்துக்கள் பல்வேறு நபர்களை வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து வைத்து அவரே பரிமாறுவார். இது அவருடைய பள்ளிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து இருக்கிறது. அதே போல பல்வேறு இடங்களில் தான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பேப்பர் போடும் வேலை செய்ததாகவும், அப்பொழுது எதுவும் தெரியாமல் எந்தவித குறிக்கோளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்ததாக சொல்வார்.

கலாம் தாத்தாவின் வளர்ச்சியில் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் சம்சுதீன் மற்றும் அவரது சகோதரியின் கணவர் ஜலாலுதீனும் முக்கியப் பங்கு ஆற்றி இருக்கிறார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நன்றி மறக்க கூடாது என்று அடிக்கடி சொல்லி தனது வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியத் தருணத்திலும் மறக்காமல் நினைவில் வைத்து இருந்தார்.

அறிவுரை சொன்ன ஆசிரியர்கள் அடுத்தபடியாக ஆசிரியர்களை பெரிய அளவில் மதித்து நடப்பார். அவரது வாழ்வில் வந்த போன பல்வேறு ஆசிரியர்களின் பெயர்களை மறக்காமல் குறிப்பிடுவார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு பிடித்த திண்டுக்கலை சேர்ந்த ஆசிரியர் சின்னத்துரையை சந்தித்து நீண்ட நேரம் பேசிட்டு வந்தார். சின்னத்துரை சார் திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்த பொழுது, கலாம் அவர்களுக்கு வகுப்பில் புரியாத பல்வேறு சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் சொல்லிக்கொடுத்து எளிமையாக புரிய வைப்பாராம். அந்த தியரிதான் பின்னாளில் அவருக்கு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் உயர் படிப்பு படிக்கும் பொழுது கை கொடுத்துது. அதோடு பல்வேறு கால கட்டங்களில் குழம்பிப் போய் எதை தேர்வு செய்வது என்று இருக்கும் பொழுது சின்னத்துரைக்கு கடிதம் எழுதிய சம்பவத்தையும் சொல்லி இருக்கிறார். பள்ளியில், கல்லூரியில் இவருக்கு அமைந்த ஆசிரியர்கள் சிறப்பானவர்களாகவும் வழிகாட்டியாகவும் இருந்து இருக்கிறார்கள்.

 

smallbanner3.jpg

அறிவியல் ஆலோசகராக.

நேருவுக்கு அடுத்து குழந்தைகளின் மனதை கொள்ளையடித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். ராமேஸ்வரத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து இந்தியாவில் முதல் குடிமகனான இவருக்கு பல முகங்கள்.

ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன் என்ன செய்து கொண்டு இருந்தார் கலாம்?

1974-ம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998-ம் ஆண்டில் நடந்த போக்ரான்2 அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் ஆகியோரை பின்பற்றினார் என்றும் கூறினர்.

 

பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் வருகை பேராசிரியராகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தராகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். பல்வேறு வெளிநாட்டு கல்வி நிலையங்கள் அவரை அழைத்தும், இந்தியாவிற்காகத் தான் தனது அறிவு பயன்பட வேண்டும் என்று அதனை மறுத்துவிட்டார்.

Vinyani

‘இந்தியா 2020’ என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார் கலாம். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்பட்டார் கலாம். கடந்த 2011-ம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, “நான் என்ன தர முடியும்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார் கலாம். கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, கருணை மனுக்களின் மீது முடிவேதும் எடுக்காமல் இருந்த காரணத்தால், குற்றவாளிகளின் மீதான நடவடிக்கைகள் கால தாமதம் ஆகியதற்காக, விமர்சிக்கப்பட்டார்.

கலாம் கணினி! 1998-ல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான டாக்டர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் “கலாம், ராஜூ ஸ்டென்ட்” என பெயரிடப்பட்டது. 2012-ல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி “கலாம், ராஜூ டேப்லெட்” என்று பெயரிடப்பட்டது. மேலும் நியூட்ரினோ திட்டம் குறித்து அப்துல் கலாம் தெளிவாக விளக்கி கூறியுள்ளார். அறிவியல் சார்ந்த அனுபவங்களை மாணவர்கள் மத்தியில் பறைசாற்றிக் கொண்டு இருக்கும் போது தான் அப்துல்கலாமின் மூச்சு நின்றது.

அறிவியல் ஆலோசகரான அப்துல்கலாமின் பயணம் முடிவடையவில்லை. அவர் விட்டு சென்றதை இன்றைய இளையதலைமுறையினர் தொடர வேண்டும். அவர் கண்ட கனவை நினைவாக்கும்.

 

 

smallbanner2.jpg

படிக்கும் காலத்தில் அவருக்கு விமானம் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால், எப்படி படிப்பது எங்கு படிப்பது என்று தெரியாமல் பின்னாளில் ஆறு ஏழு ஆண்டுகள் பல்வேறு படிப்புகள் படித்து முடித்து விருப்பப்பட்ட பாடத்தை படிக்க முடிந்தது. ஆனால் இன்றைய தலைமுறை மாறி இருக்கிறது. எங்கு படிப்பது எதைப்படிப்பது என்று ஆலோசனை சொல்ல இணையம் இருக்கு அதைவிட பல்வேறு நபர்கள் வழிகாட்ட இருக்கிறார்கள். அதனால் உங்கள் குறிக்கோள் எது என்பதை தீர்மானம் செய்து கொண்டு அந்த இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் என்று கலாமை சந்திக்க வரும் பல்வேறு இளைஞர்களுக்கு அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவைதான்” என்று சுருக்கமாகச் சொன்னார் சலீம்.

விஞ்ஞானி ஆகிறார் கலாம்!

MIT யில் பொறியியல் பட்டம் பெற்று வெளியே வந்த பின் கலாமிற்கு முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. இரண்டுமே அவர் தன் கனவுலகில் நினைத்தது போல வானவெளியில் சஞ்சரிக்கும் வாய்ப்புகள் தான். அதில் ஒன்று விமானப்படையில் வேலை, மற்றொன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் தொழில் மற்றும் வளர்ச்சிப் பிரிவு இயக்குனரகத்தில் பணி. இரண்டுக்குமான நேர்முகத்தேர்விற்கான அழைப்பு வந்திருந்தது ஒரே நேரத்தில் டெல்லியிலும், டேராடூனிலும். அதை எடுத்துக்கொண்டு தன் கனவுகளை நிஜமாக்க இந்தியாவின் இன்னொரு மூலைக்கு வண்டியேறினார்.

Parakum

பாதுகாப்பு இயக்குனரகத்தில் இருந்து நேர்முகத்தேர்வு முடிந்ததும் தேர்வு செய்யப்பட்டதாக கடிதம் வந்தது. முதுநிலை விஞ்ஞானியாக அடிப்படைச் சம்பளம் ரூ.250/-. விமானத்தை ஓட்டும் வாய்ப்பை இழந்துவிட்டோம் என்று வருந்தினாலும், அதை வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி அதனை ஏற்றுக்கொண்டு அதில் முனைப்புடன் செயலாற்ற களமிறங்கினார். அந்த வருடமே அவருக்கு சூப்பர் சோனிக் டார்கெட் விமானத்தை வடிமைக்கும் குழுவில் இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதனை திறம்பட நிறவேற்றிய பிறகு சுழற்சிக்குட்பட்ட சூழ்நிலையில் மனித உடல் இயக்கம், செங்குத்தாக விமானம் கிளம்பும் திட்டம், நவீன விமானி அறை வடிவமைப்பு போன்ற திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகு, விமான வடிவமைப்பு வளர்ச்சி அமைப்பு பெங்களூரில் தொடங்கப்பட்டதால அங்கு கலாமிற்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்தியா வெளியில் இருந்து ஆயுதங்கள் வாங்குவதைவிட அதை உள்நாட்டில் தயாரிப்பதில் முனைப்புடன் இருந்தது. தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஹோவர் ரக விமானங்களை உருவாக்கும் அணிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று அதன் அடுத்த கட்ட மாதிரியை தயாரிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார் கலாம்.

 

பார்க்க அல்ல; பறக்க!

அந்த அணிக்கு விமானத்தை உருவாக்குது பற்றிய அறிவு என்பது குறைவாக இருந்திருக்கிறது காரணம் அவர்கள் அந்த தொழில்நுட்பத்திற்கு புதியவர்கள் அதனால் அதன் ஆரம்பகட்டப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவேண்டிய பொறுப்பு கலாமிற்கு அதிகமாக இருந்தது. ஆனால், இந்தியாவின் பெயரை வளர்ச்சிப் பாதையில் எடுத்துப்போகக் கூடிய திட்டமென்பதால் அதீத கவனம் செலுத்தினார் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன். ஆனால், அந்த சமயத்தில் மூத்த விஞ்ஞானிகள் இவர்கள் அணியை எள்ளி நகையாடினர்.

Parakum

எப்படி இருந்தும் ரைட் சகோதரர்கள் வார்த்தையை மட்டும் மனதில் கொண்டு சிரத்தையுடன் ஒரு வருடத்திற்கு மேலாக உழைத்து மாதிரியை உருவாக்கி, அதற்கு சிவபெருமானின் வாகனமான ‘நந்தி’ என பெயர் சூட்டியபோது, தன் சக பொறியாளர்களிடம் கலாம் சொன்னார் ‘இது பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டது அல்ல; பறப்பதற்காக உருவாக்கப்பட்டது’ என்று. அதன் சோதனையோட்டத்தில் விமானத்தை இயக்கிய கலாமுடன் பயணித்தார் கிருஷ்ணமேனன். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மைல்கல் அது. ஆனால், பிற்காலத்தில் பல்வேறு சூழ்ச்சிகளால் அந்த விமானம் நமது ராணுவத்தால் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டது. அது கலாமிற்கு மிகவும் துன்பத்தை ஏற்படுத்தியது.

‘உண்மையத் தேடு; அது உன்னை பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும்’ என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு முன்பைவிட வேகமாக உழைக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தான் கலாமின் தொழிற்நுட்ப அறிவு பற்றிக்கேள்விப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வுக்குழு (INCOSPAR) அவரை ராக்கெட் இன்ஜினியர் நேர்முகத் தேர்விற்கு அழைத்திருந்தது. விக்ரம் சாராபாய்,எம்.ஜி.கே.மேனன்,அணுசக்தி கமிஷனின் துணைச் செயலாளர் ஃசாரப் ஆகியோர் கலாமை தேர்வு செய்தனர். ஒரு இளைஞன் தன்முனைப்புடன் இருந்தால் எப்படிப்பட்ட இடத்திற்கு காலம் அவனை இட்டுச் செல்லும் என்பதற்கு சரியான உதாரணம் கலாம்!

விண்ணில் பறந்த ரோகிணி!

அப்போது தும்பாவில் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டிருந்தது. அந்த சமயத்தில் நாஸா மையத்தில் ஆறு மாத பயிற்சி அழைப்பை ஏற்று, அங்கு பயிற்சி பெற்று திரும்பிய 1963ம் வருடத்திலேயே இந்தியா தனது முதல் ராக்கெடை ஏவியது. ’ராக்கெட்டை ஏவுதளத்தில் நிறுத்த பெரிய கருவிகள் எல்லாம் நம்மிடம் இல்லை அதனால் அதனை கைகளாலே தளத்தில் நிறுவிதான் ஏவினோம்’ அதன் நினைவுகளை இப்படி குறிப்பிட்டிருக்கிறார் கலாம். அந்த சமயத்தில்தான் கென்னடி கொல்லப்பட உலகத்தையே தனது அணுஆயுதங்களை வைத்து அமெரிக்கா மிரட்டிக்கொண்டிருந்தது.

Parakum

அதனால், இந்தியா அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி பயணிக்க வேண்டியிருந்தது. இந்தியா தான் ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னோடி என்பது வரலாறு அதற்குக்காரணம், திப்பு சுல்தான். ஆனால், அடுத்த 150 வருடங்களில் அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கி நாம் முன்னேறவில்லை. மற்ற நாடுகள் அதில் புதுப்புது பரிணாமத்தில் பின்னிகொண்டிருந்தன. ஜெர்மனியில் ஹிட்லர் வி2 ராக்கெட்டை வைத்து துவம்சம் பண்ணிக்கொண்டிருக்க, அப்போதுதான் பிரதமர் நேரு இந்தியாவிற்கான ராக்கெட் திட்டதிற்கு பிள்ளையார்சுழி போட, அவருக்கு தளபதியானார் சாராபாய். தயாரானது சவாலான பணி, உருவாக்கப்பட்டது திறமையான அணி.

அந்தக் கனவையே தங்கள் வாழ்நாள் லட்சியமாக்கிக் கொண்ட ஒரு குழு அங்கு வேலை செய்ய ஆரம்பித்தது. செயற்கைகோள், ராக்கெட் என எல்லாமே அங்கு தயாரிக்கப் பணிக்கப்பட்டன. கலாமிற்கு இதை எல்லாம் நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ‘அன்பைக் கலக்காமல் சமைக்கும் எந்த பண்டமும் சுவைக்காது’ என்ற வரிகளுகேற்ப எல்லோரோடும் கூட்டாகப் பயணிக்க ஆரம்பித்தது இந்தியக் கனவு. 1967-ல் பல இடைஞ்சல்களுக்குப் பிறகு விண்ணில் பாய்ந்தது ரோஹிணி ராக்கெட். இந்தியாவிற்கான முதல் முத்து.

விக்ரம் சாராபாய் விண்வெளிக் கழகம்!

’நல்லவர்கள் உலகத்தோடு ஒத்துப்போகிறார்கள், சில முரண்பட்ட மனிதர்கள் தான் உலகத்தை தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றியமைக்கப்பாடுபடுகிறார்கள். அவர்களால் தான் உலகம் இயக்கம் பெறுகிறது’ என்பது பெர்னாட்ஷாவின் வாக்கியம். அந்த மனிதன் தான் கலாம் அதேபோல காலமும் அவருக்கான தயாராக வைத்திருந்தது, அடுத்த சவாலை. ராக்கெட் உதவியுடன் விமானத்தை இயக்கும் தொழில்நுட்பம்(RAT0). இராணுவத்திற்கான பணி இது. அதற்கு விமானப்படை தலைமை அதிகாரி வி.எஸ்.நாராயணனுடன் இணைந்து செயல்பட்டார் கலாம்.

குண்டுவீச்சால் பாதிப்படைந்த தளங்கள், உயரமான தளங்களில் இருந்து ஏவுவதற்கு வசதியான RATO தயாரிப்பில் இருந்தபோது,அடுத்த பத்தாண்டுகளுக்கான விண்வெளி ஆய்வுத்திட்டம் வெளியிடப்பட்டது.அதே சமயத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தில் ஏவுகணைக்குழு அமைக்கப்பட்டது. 1962 மற்றும் 65 யுத்தக்களங்கள் இந்தியாவிற்கு அளித்த படிப்பினை அது. அப்போது தான் ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. அதிலும் நியமிக்கப்பட்டார் கலாம். அந்த திட்டத்திற்காக தன்னைப்போல அயராது உழைக்கும் தன்மை கொண்ட குழுவை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

ஒரு பக்கம் விமானத்திற்கான RATO திட்டமும், மறுபக்கம் ராக்கெட்டிற்கான SLV திட்டமும் கலாமின் மூளையில் இடது வலதாக ஆக்கிரமித்திருந்தன. இந்த நேரத்தில் தொலைக்கட்டளைக்கான ஒரு சாதனத்தை வடிவமைக்கும் பொறுப்பை சாராபாய் ஒப்படைத்தது ஒரு இளைஞரிடம். அவர் தான் பின்னாளில் இஸ்ரோ தலைமைப் பொறுப்பு வகித்த மாதவன் நாயர்.

Parakum

இப்படியாக ஒவ்வொரு தொழிற்நுட்பத்திலும் இந்தியா மெல்லமெல்ல முன்னேறவைத்த சாராபாய் 1971ல் மறைந்தது பெரும் இழப்பு. இருந்தபோதும் பணி தடைபெறாமல் இருக்க இடைக்காலத் தலைவர் பொறுப்பை ஏற்றார் சதீஷ் தவான். ராட்டோவும் இந்தியா வசமானது. அதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட பலகோடி ரூபாய் அன்னியச் செலவானி மிச்சப்படுத்தப்பட்டது. இந்த சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட விக்ரம்சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திட்ட மேலாளரான நியமிக்கப்பட்ட கலாமிற்கு தோள்கொடுத்தார் பிரம்ம பிரகாஷ், இவர் புகழ்பெற்ற உலோகவியல் நிபுணர்.

இந்த சமயத்தில் இந்திய விண்வெளி திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த கவாரிக்கர், ஆராவமுதன், ஈஸ்வரதாஸ், சி.எஸ்.குப்தா ஆகியோரைவிடவும் சிறப்பாக செயல்பட்டதால் இந்த பணி தனக்கு கொடுக்கப்பட்டதாக எந்த இடத்திலும் தற்பெருமை கொள்ளவில்லை கலாம். விஞ்ஞான வளர்ச்சியில் மட்டுமில்லாமல் மனிதநேயத்தோடும் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் அது இதுதான். போலியோ பாதிப்பால் ஊனமுற்ற குழந்தைகள் பயன்படுத்தும் அதிகஎடி வாய்ந்த உலோக கருவிகளால், அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் கடுமையாக உளைச்சல் அடைந்ததை கண்டு, ராக்கெட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எடை குறைவான இருந்தும் வலுவான உலோகத்தை கொண்டு கருவிகளை வடிமைத்ததால் இன்று அவர்கள் கஷ்டப்படாமல் நடமாடமுடிகிறது.

 

தோல்விகள்... தொடர்ச்சியான தோல்விகள்!

ஒவ்வொரு கட்ட பாய்ச்சலுக்குப் பிறகும் ஓய்வில்லாமல் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டிய சூழல் அந்த அணிக்கு இருந்தது. எஸ்.எல்.வி-3 திட்டப்பணிகள் மொத்தம் 10 லட்சம் உதிரிப்பாகங்கள் அடக்கம். இப்போது போல கணிணி அந்த காலகட்டத்தில் பெரிய வளர்ச்சி இல்லை. அதனால அவற்றை நாம் தான் சரி பார்க்க வேண்டும், அந்த அளவிற்கு துல்லியமான திட்டம் வகுக்க வேண்டும், அதன் உலோகங்கள், எரிபொருட்கள் என எல்லாவற்றிலும் நம் கவனம் இருக்க வேண்டும் என்று சவால் நிறைந்த அந்த பணிக்கு இன்னும் கொஞ்சம் தன்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் கலாமிற்கு ஏற்பட்டது. 1972ல் பல்வேறு மாறுதல்களுடன் இந்த திட்டத்திற்கான நிதி கையெழுத்தானது. எல்லாம் சரிவர இராணுவ ஒழுங்கோடு நடந்து 1975ல் இறுதி மாதிரி உருவாக்கப்பட்டது.

பல்வேறு கோணங்களில் ஆய்வுபடுத்திப்பார்த்து கடைசியாக அதனை ஏவுவதற்கு 1978 என்று நாள்குறித்து அதனை அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

Parakum

அதன் பின்னர் தனது வழிகாட்டியாக இருந்த மைத்துனர் மரணம், தந்தையின் மரணம், தாயின் மரணம், வீட்டு நினைப்பு என அடுத்தடுத்து பல விஷயங்கள் மனதை வாட்டினாலும் எதனையும் பொருட்படுத்தாது உறுதியுடன் செயல்பட ஆரம்பித்தார். ராக்கெட் தொழில் நுட்பத்தை தாறுமாறாக கற்றுத்தேர்தவர் வன் பிரான் அவரை இந்தியா அழைத்துவந்து ஆலோசனை கேட்டனர். அவர் சொன்ன ஆலோசனைகளைக் கேட்டறிந்து இன்னமும் வேகத்தில் பயணிக்க ஆரம்பித்த இந்திய விஞ்ஞானிகள் குழு தங்களுக்கான காலக்கெடுவையும் நெருங்கிவிட்டார்கள்.

ராக்கெட்டை ஏவும் நேரம் எதோ கோளாறு காரணமாக ஒரு சிலிண்டர் கலன் வெடித்துச்சிதற, அடுத்த கட்டத்தில் அதை விட சிறப்பாக பணியாற்ற காயத்தை மறந்து உழைக்க ஆரம்பித்தனர். திட்டமிட்டதைவிட ஓர் ஆண்டு கழித்து 1979-ல் ஏவப்பட்ட போது, இருந்த மகிழ்ச்சி, அதன் இரண்டாம் கட்டத்தை எட்டும் போது வானில் வெடித்துச்சிதறி கடலில் விழுவதைப் பார்த்தபோது நொறுங்கிப்போயிருந்தது. கோபம்... விரக்தி... ஏமாற்றம்... அழுகை... வலி... என அங்கிருந்த சூழல் மிகவும் வித்தியாசமானது. கலாம் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். அதற்கு முன்பான அவரது தோல்விகள் அலசப்பட்டன. காயப்படுத்தப்பட்டார்.

எரிபொருள் கலனில் சரியான அழுத்தம் இல்லாததே பிரச்சினைக்குக் காரணம் என்று ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டபோது, அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக அந்தக்கூட்டத்தில் அறிவித்தார் கலாம்.

பத்மபூஷன் கலாம்!

1980 ஜூலை 18 மீண்டும் தயாரானது எஸ்.எல்.வி-3. நாடு முழுவதில் இருந்தும் ஏகப்பட்ட தவறான கண்ணோட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இருந்தும் தளர்ச்சி அடையாமல், காலை 8.03மணித்துளிகளில்...

விண்ணில் சீறிப்பாய்ந்தது ரோஹிணி. கலாம் வெளியே வந்ததும் சகாக்கள் தோளில் தூக்கி வைத்துக்கொண்டாட ஆரம்பித்தார்கள். தேசமே உற்சாகத்தில் மிதந்தது. நாட்டின் எல்லாப் பக்கத்தில் இருந்தும் கலாமிற்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்க, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆராவாரம் செய்தனர். பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த பின்பு அந்த பதவியில் இருந்துவிலகி, வளிமண்டல இயக்கவியல் மற்றும் வடிவமைப்புக் குழு இயக்குனராக பொறுப்பேற்றார் கலாம். 1981-ல் பத்ம பூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அடுத்து அவர் இஸ்ரோவுக்கும், பாதுகாப்பு அமைச்சகத்தின் வளர்ச்சி குழுமத்துக்கும் பணி செய்ய அழைப்பு வந்து, அதில் சின்ன போரே வெடித்தது. பிறகு பாதுகாப்பு வளர்ச்சி நிறுவனத்திற்கு பணிக்கு வந்த கலாமிற்கு மிகப்பெரிய வேலை காத்திருந்தது அதுதான் ஏவுகணைகள் வடிவமைப்பது. பிருத்வி, ஆகாஷ், நாக், திரிஷூல் என திட்டபணிகள் முடிவு செய்யப்பட்டது.

Parakum

இந்தியா அறிவியல் வளர்ச்சியான நாடு என்று சக நாடுகள் ஒத்துக்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட ஒரு விஷயம் இது. இங்கு கவனிக்கப்பட வேண்டியவை இரண்டு ஒன்று இதனால் வெளிநாடுகளின் அச்சுறுத்தல், இரண்டாவது நமக்குத் தேவையான பொருட்களை நாமே தயாரிக்க வேண்டிய நிர்பந்தம். செய்தார் கலாம்... 1985 பல்வேறு கட்டங்களைத் தாண்டி திரிஷூல் ஏவுகணை சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்தது. அடுத்து அக்னி, அடுத்து பிரித்வி என வரிசையாக களம் இறக்கப்பட்டது.

இந்தியா ஒரு இறவா சரித்திரத்தைப் படைத்த தருணத்தில் 60 வயதை எட்டியிருந்தார் கலாம். ஓய்வுக்குப் பிறகு பள்ளி ஒன்றை ஆரம்பிக்க எண்ணி இருந்தவரை இந்திய அரசு பணியில் இருந்து விடுவிக்கவில்லை. காரணம் நாட்டிற்கு அவரது சேவை இன்னும் தேவையாக இருந்தது. அன்றில் இருந்து அவர் மரணித்த நொடி வரை ஓய்வு என்ற ஒரு சொல்லை அவர் பயன்படுத்தி இருக்கவில்லை. அதனால் தான் நேசித்த வேலையைவிட்டு விருப்ப ஓய்வு கொடுத்து செல்லாதவரை, காலம் அவருக்கு விரும்பி ஓய்வு எடுக்க அழைத்துக்கொண்டது.

அந்தக் கனவையே தங்கள் வாழ்நாள் லட்சியமாக்கிக் கொண்ட ஒரு குழு அங்கு வேலை செய்ய ஆரம்பித்தது. செயற்கைகோள், ராக்கெட் என எல்லாமே அங்கு தயாரிக்கப் பணிக்கப்பட்டன. கலாமிற்கு இதை எல்லாம் நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ‘அன்பைக் கலக்காமல் சமைக்கும் எந்த பண்டமும் சுவைக்காது’ என்ற வரிகளுகேற்ப எல்லோரோடும் கூட்டாகப் பயணிக்க ஆரம்பித்தது இந்தியக் கனவு. 1967-ல் பல இடைஞ்சல்களுக்குப் பிறகு விண்ணில் பாய்ந்தது ரோஹிணி ராக்கெட். இந்தியாவிற்கான முதல் முத்து.

 

 

 

smallbanner4.jpg

பயணங்கள்!

இந்திய ஜனாதிபதியாக இருப்பவர்கள் அடிக்கடி வெளிநாடுகளில் பயணம் செய்வதும், இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தவும் ஜனாதிபதிகள் வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வது உண்டு. அப்துல் கலாம் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தார். அந்த வகையில் தமது பதவி காலத்தில் 7 முறை 17 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

5 ஆண்டுகால பதவி காலத்தில் 47 நாட்கள் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். முதல் வெளிநாட்டு பயணம் ஜனாதிபதி ஆனபின்னர் முதல் முதலாக கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு கலாம் சென்றார். தான் பயணித்த சிறப்பு விமானத்துக்கு தஞ்சாவூர் என்று பெயர் சூட்டச் செய்துள்ளார் கலாம். இந்த தஞ்சாவூர் விமானம் ஜனாதிபதி, பிரதமரின் வெளிநாட்டுப்பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

போயிங் 747 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் 435 பேர் பயணம் செய்ய முடியும். இதில், குடியரசுத் தலைவர்பிரதமருக்கு தனி படுக்கை வசதிகள், உடன்வரும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு முதல் வகுப்புப் பகுதியும்மற்ற அதிகாரிகளுக்குத் தனிப்பகுதியும், அத்துடன் மாடியும் கொண்ட இந்த விமானம் ஒரு குட்டி அரண்மனைபோல காட்சி தருகிறது.

Payanam

விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கலாம், மாதந்தோறும் ஒருமுறை வானொலி மூலம் மக்களுடன் பேசமுடிவு செய்துள்ளேன் என்றார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி விமான நிலையத்தில் பட்டத்து இளவரசர் ஷேக் கலிபாபின் சையத்அல் நஹியாவும் அனைத்து அமைச்சர்களும் டாக்டர் அப்துல் கலாமை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

தென் ஆப்ரிக்கா பயணம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தென் ஆப்ரிக்காவிற்கு சென்ற முதல் ஜனாதிபதி என்ற பெயரை அப்துல்கலாம் பெற்றார். 2004ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தென் ஆப்ரிக்கா சென்றார். அவருக்கு டர்பன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்க அதிபர் தபோ மெபெகிமற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் கலாமை வரவேற்றனர்.

 

பின்னர் கேப்டவுனில் இந்தியத் தூதர் எஸ்.எஸ். முகர்ஜி வழங்கிய விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலாம் நிருபர்களிடம் பேசுகையில், ஐரோப்பிய நாடுகள் நூறாண்டுகளுக்கும் மேலாக ஒருவருடன் ஒருவர் போரிட்டு வந்தன. இன்று அவை இணைந்து யூனியனை உருவாக்கியதோடு, ஒரே கரன்சியையும் பயன்படுத்தும் அளவுக்கு நெருங்கிவிட்டன. அதேபோல ஒருநாள் இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பான நாடுகளாக மாறும் என்று கூறினார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, தீவிரவாதத்தை எதிர்ப்பது, இராக் போரின் விளைவுகள், தென்மண்டலநாடுகளிடையே ஒத்துழைப்பு, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் நடைபெறும் அமைதி முயற்சிகள் குறித்துகலாம், மெபெகியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தென் ஆப்பிரிக்கா நாடாளுமன்றத்திலும் கலாம் உரையாற்றினார். 4 நாள் தென் ஆப்ரிக்க பயணத்தின்போது ஜோகன்ஸ்பர்க் மற்றும் டர்பன் நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் கலாம் பேசினார்.

Payanam

நெல்சன் மண்டேலாவுடன் சந்திப்பு தென் ஆப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலாவை ஜேகானஸ்பர்க்கில் ஜனாதிபதி அப்துல் கலாம் சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். இச் சந்திப்பின்போது, நெல்சன் மண்டேலா குழந்தைகள் நிதிக்கு இந்தியாவின் சார்பில் ரூ. 70 லட்சம் வழங்குவதாக கலாம் அறிவித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய மண்டேலா, தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் பங்குமகத்தானது என்றார். கலாம் பேசுகையில், மண்டேலா ஒரு மகத்தான ஆத்மா. எனது இந்தப் பயணத்தில் நான் மறக்கவே முடியாத ஒருநிகழ்ச்சி இந்த மாமனிதரை சந்தித்தது தான்.

அவரது லாங் வாக் டூ பிரிடம் (விடுதலைக்கான நீண்ட பயணம்) என்ற நூலை படித்தது முதல் அவரைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தேன். அவரைப் பார்த்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. மண்டேலாவின் எழுத்துக்கள் தென் ஆப்ரிக்காவில் விடுதலைத் தீயை மூட்டியிருக்கின்றன.

சிறையில் இருந்துகொண்டே எப்படி எழுதினீர்கள் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு மண்டேலா, நான் நன்றாக டீ போடுவேன் என்று அங்-குள்ள அதிகாரிகளிடம் கூறுவேன். தினமும் டீ போட்டுத் தருகிறேன் என்றும் அவர்களிடம் சொல்வேன். இது அவர்களுடைய கோபத்தைக் குறைத்தது.

அதனால் இரவு முழுவதும் எழுத வாய்ப்புக் கிடைத்து என்று கூறினார். மண்டேலா என்னிடம், நீங்கள் காந்தியை எங்களுக்கு தந்தீர்கள். நாங்கள் மகாத்மாவாக அவரைத் திருப்பித்தந்தோம் என்று கூறியதாக கலாம் தெரிவித்தார். ராபன் தீவில் மண்டேலா 27 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த சிறிய அறை கொண்ட சிறைச்சாலையையும் கலாம் பார்வையிட்டார்.

பின்னர் டர்பனில் வெள்ளைக்காரர்களால் மகாத்மா காந்தி ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்ட ரயில்நிலையத்தையும் அப்துல் கலாம் பார்வையிட்டார். 111 ஆண்டுகளுக்கு முன் கருப்பு மனிதர் என்று சொல்லி காந்தியடிகளுக்கு நேர்ந்த அந்த அவமதிப்பு தான் அவரை பிற்காலத்தில் பெரும் சுதந்திரப் போராட்ட வீரராகமாற்றியது. மகாத்மாவின் நினைவைப் போற்றும் வகையில் அந்த ரயில் நிலையத்தில் நினைவகமும் வைக்கப்பட்டுள்ளது. அந்தநினைவிடத்தை கலாம் , உணர்ச்சிவசப்பட்டவராய் சுற்றி வந்தார்.

சிங்கப்பூர் பயணம் கலாம் தமது பதவி காலத்தில் சிங்கப்பூருக்கு கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Payanam

சிங்கப்பூர் பயணத்தில் தம்முடன் விமானத்தில் பயணித்த நிருபர்களுடன் அப்துல் கலாம் பேசினார். அது ஒரு பேட்டிபோல இல்லை, ஆசிரியர், மாணவர்களுக்கு போதனை செய்வது போல மிக அருமையாக அமைந்தத தாக நிருபர்கள் தெரிவித்தனர். அப்துல் கலாம் பேசி முடித்ததும், அனைத்து நிருபர்களையும் கேள்விகள் கேட்கச் செய்து அவர்களது சந்தேகங்களை போக்கினார்.

உலக அளவில் தீவிரவாதம் பெரும்அச்சுறுத்தலாக மாறி வருகிறது. தீவிரவாதத்தை ஒழிக்க 3 அம்சத் திட்டம் ஒன்றை நான் வகுத்துள்ளேன். மதங்களை ஆன்மீக சக்தியாக மாற்றுதல், வறுமை ஒழிப்புமற்றும் பயனுள்ள கல்வித் திட்டம். இந்த மூன்றையும் நாம் கடைப்பிடித்தால் தீவிரவாதம் படிப்படியாக ஒழிந்து விடும். வறுமையை ஒழிக்காமல் நாம் எதையும் சாதிக்க டியாது. வறுமை நீடிக்கும் வரை தீவிரவாதம் ஒழியாது. இதற்கு உலகஅளவில் ஒருங்கிணைந்த தீர்வு காணப்பட வேண்டும். உலகில் அணு ஆயுத யுத்தம் வெடிக்கும் என்று நான் கருதவில்லை.

அது ஒரு அச்சுறுத்தலே அல்ல என்பதும் எனது கருத்து தெரிவித்தார். இதற்கிடையே சிங்கப்பூர் சென்றடைந்த அப்துல் கலாக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூர்அமைச்சர் லிம்பூங் ஹெங் மற்றும் அதிகாரிகள் கலாமை வரவேற்றனர். தனது 3 நாள் சிங்கப்பூர் பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் எஸ்.ஆர். நாதன் மற்றும் பிரதமர் உள்ளிட்டோரை கலாம்சந்தித்தார்.

பின்னர் 3ம் தேதி அவர் பிலிப்பைன்ஸ் சென்றார். தலைநகர் மணிலா விமான நிலையத்தில் அப்துல்கலாமுக்கு சிவப்பு கம்பள விரிப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி நோலிட் டி காஸ்ட்ரோ விமான நிலையத்தில் அப்துல்கலாமை வரவேற்றார். ஜனாதிபதி மாளிகையில் முறைப்படி அப்துல்கலாமுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியா, மகபகல் அர்ரோயோவை அப்துல்கலாம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மணிலாவில் இந்தியாவை சேர்ந்த 50 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்கள் சார்பில் அப்துல்கலாமுக்கு வரவேற்பு அளித்தனர். மணிலாவில் உள்ள நர்சு பயிற்சி கல்லூரியையும் அவர் பார்வையிட்டார்.

Payanam

ஐரோப்பிய யூனியன் பயணம் ஜனாதிபதி அப்துல் கலாம், 2007ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி பிரான்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளில் நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். ஸ்டிராஸ்பர்க் நகருக்கு முதலில் கலாம் சென்றார்.

அங்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 25ம் தேதி கலாம் உரையாற்றினார். ஐரோப்பிய நாடாளுமன்ற வரலாற்றில் இந்திய ஜனாதிபதி ஒருவர் உரையாற்றியது அதுதான் முதல் முறை. தமது உரையின்போது தேசங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமை குறித்து கலாம் பேசினார். பின்னர் 26ம் தேதி கிரீஸ் தலைநகர் ஏதென்ஸுக்கு அவர் செல்றார். 21 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரீஸ் நாட்டுக்கு சென்ற இந்தியத் தலைவர் என்ற பெயரை அவர் பெற்றார். இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கலாமுக்கு கிரீஸ் அதிபர் டாக்டர் கரோலஸ் பபோலியஸ் அரசு முறையிலான வரவேற்பு அளித்தார். கிரீஸ் நாடாளுமன்றத்தில் கலாமுக்கு தங்கப் பதக்கமும் அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.. தனது பயணத்தின் ஒரு பகுதியாக மன நலம் குன்றிய சிறார்களுக்கான மறு வாழ்வு இல்லத்திற்கும் கலாம் சென்று குழந்தைகளுடன் உரையாடினார்.

 

டாக்டர் பட்டம் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி அப்துல் கலாமுக்கு சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கலாம் ஆற்றிய பணிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் அவர் ஆற்றிய பணிகள், இந்திய -சிங்கப்பூர் உறவை மேம்படுத்த அவர் முக்கிய பங்காற்றியது ஆகியவற்றை கெளரவிக்கும் வகையில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலாமுக்கு, சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

அமெரிக்க பயணம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியபின்னர் பல்வேறு நாடுகளுக்கு அப்துல்கலாம் பயணம் மேற்கொண்டார். புளோரிடா மாகாணத்தில் அரை ஏக்கர் நிலத்தில் 800 பவுண்டு (சுமார் ரூ.75 ஆயிரம்) செலவில் மகாத்மா காந்தி சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. காந்தியின் வாழ்க்கை பயணத்தை பல படிகளில் சித்திரக்கும் வகையில் சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

Payanam

கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி அமெரிக்கா சென்ற அப்துல் கலாம் புளோரிடா மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த 7 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை, அவர் திறந்து வைத்தார்.

புத்தக வெளியீடு அமெரிக்காவின் வர்ஜீனியாவிலுள்ள தலைநகர இந்திய அமெரிக்கர்கள்' சார்பில் டாக்டர் கலாம் எழுதிய 'Squaring the Circle' என்ற புத்தகத்தின் வெளியீடு 2013ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி நடைபெற்றது. இதில் அப்துல் கலாம் நேரில் கலந்து கொண்டார்.

சோதனையால் சர்ச்சை 2011ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நியூ யார்க்கின் கென்னெடி விமான நிலையத்தில் விமானம் ஏறும் போது அப்துல் கலாம் தனி நபர் சோதனைக்கு உட்பட்டார். அமெரிக்க பாதுகாப்பு நெறி முறைகளின் கீழ் பாதுகாப்பு சோதனை நடை முறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட முக்கிய பிரமுகர்கள் வகையின் கீழ் அவர் வரவில்லை என்று "தனித் திரையிடப்பட்ட" சோதனைக்குட்பட்டார். இதற்கு விமான குழுவிலிருந்து எதிர்ப்பு இருந்த போதிலும், சோதனை நடத்தினர். இரண்டு மாதங்களுக்குப் பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்தியா இதற்கு பதிலடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அச்சுறுத்தியது. இந்தியா சார்பில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தும், பதிலாக அமெரிக்க அரசு சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கலாமிற்கு ஒரு கடிதம் அனுப்பியது.

சோதனைகளில் ஒத்துழைப்பு நான் யார் தெரியுமா’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை . ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூவை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியபின்னரும் அப்துல் கலாம் பல வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். வெளிநாடுகளுக்கான பயணச் செலவை அந்த நாடுகளில் நடைபெற்ற விழா ஏற்பாட்டர்களே செய்தனர். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மத்திய அரசு சார்பில் அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு செலவழிக்கவில்லை.

 

 

 

smallbanner5.jpg

ஜனாதிபதியான கலாம்!

மக்களில் ஜனாதிபதியாக கருதப்பட்ட முன்னள் ஜனாதிபதி அப்துல் கலாமை இழந்து நிற்கிறார்கள் இந்திய மக்கள். கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த 2002 - 2007 காலகட்டம் இந்தியாவின் பொற்காலம் என கூறலாம். ஜானாதிபதிகளே உரித்தான இரும்பு திரையை உடைத்து, மக்களால் எளிதில் அனுகக்கூடியவராக இருந்தார் கலாம்.

 

மாணவர்களில் எதிர்காலம் குறித்து கலாம் காட்டிய அக்கறையும், ஆர்வமும் மக்கள் பிரநிதிகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. 2002ம் ஆண்டு இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் கலாம் பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதிகளாக இருந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசேயின் வரிசையில், இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ விருதை பெற்று ஜனாதிபதியானவர் அப்துல் கலாம்.

Janathipathi

ஜனாதிபதியின் வீடான ராஷ்டரபதி பவனுக்கு வரும் தனது நண்பர்கள், உறவினர்களில் போக்குவரத்து மற்றும் தங்கும் செலவுக்கு அரசு கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட எடுக்காமல் தனது சொந்த காசை செலவு செய்தவர் தான் கலாம். ஜனாதிபதியாக இருந்த போது 20ம்க்கும் மேற்பட்ட கருணை மனுக்கள் அவரது முடிக்கு வந்தன. அவற்றில் ஒரே ஒருவருக்கு மட்டுமே கலாம் மரண தன்டனை வழங்கினார். தூக்கு தண்டனை குறித்து முடிவு எடுக்கும் போது பெரும் வலியை உணர்ந்ததாக வருத்தப்பட்டுள்ளார். மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் கலாம் உறுதியாக இருந்தார்.

உள்நாட்டு பாதுகாப்பு, நோயில்லா ஆரோக்கியான தேசத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதியான உடன் அறிமுக உரையில் கலாம் பேசினார். விஞ்ஞானியாக இருந்த கலாமுக்கு ஜனாதிபதியான பிறகும் அறிவியல் ஆர்வம் சற்றும் குறையவில்லை. ஷகோய் ஜெட் விமானம், நீர்முழ்கி கப்பல் போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகளில் பயணம் செய்து அசத்தினார். நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் கலாம் பெற்றார்.

2007ம் ஆண்டு மீண்டும் இரண்டம் முறையாக ஜனாதிபதியாக கலாம் முயற்சி செய்தார். முதல் முறை கலாமை ஆதரித்த காங்கிரஸ் கட்சி இம்முறை ஆதரிக்க மறுத்துவிட்டது. பி.ஜே.பியின் கூட்டணி கட்சிகளான சிவசேனா உள்ளிட்ட கட்சிகளுக்கும் கலாமை ஆதரிக்க முன்வரவில்லை. அதனால் தானாகவே போட்டியில் இருந்து கலாம் விலகினார்.

 

http://www.vikatan.com/news/special/apj/index.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...! அரிய பொக்கிஷம் , அமைதியாகி விட்டது...!!

Link to comment
Share on other sites

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?- அரியத் தகவல்கள்

 

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது  பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.

abd.jpg

அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வரும். வெளிநாடுகளில் இருந்தும் ஏகப்பட்ட பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கும். அவற்றையெல்லாம் அப்துல் கலாம் போட்டோ எடுத்து வைத்து வகைப்படுத்துவார். பின்னர் அப்படியே அதனை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி விடுவார். ஒரு பொருளை கூட திரும்பி பார்த்ததது இல்லை. ஒரு பென்சிலை கூட தனக்கு என்று எடுத்து கொண்டது இல்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் அன்பளிப்புகளை மறுத்தால், அந்த நாடுகளை அவமானப்படுத்துவது போல் அமைந்து விடும் என்பதால்தான் பரிசுபொருட்களை அப்துல்கலாம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ரமலான் மாதங்களில் குடியரசுத் தலைவர் 'இப்தார்' விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு.  கடந்த 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம். அப்போது நாயரை அழைத்த அப்துல் கலாம், இப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும்? என்று கேள்வி கேட்டார். நான் 22 லட்ச ரூபாய் செலவழிப்போம் என்றேன். ஏற்கனவே இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்? அந்த 22 லட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடுவோம். அந்த தொகைக்கு இணையாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய சொன்னார். பின்னர் தனியாக என்னை அழைத்து ஒரு லட்ச ரூபாய்க்கும் செக் அளித்து இதையும் சேர்த்து 23 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என அப்துல்கலாம் கூறிய போது, மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமையடைந்தேன். கலாம் இஸ்லாமியர்தான் என்றாலும் அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த வரை குடியரசு தலைவர் மாளிகையில் 'இப்தார்' விருந்து அளிக்கப்பட்டதில்லை.

அப்துல் கலாம் 'யெஸ் சார்' வகை அதிகாரிகளை பக்கத்தில் வைத்து கொண்டதில்லை. ஒரு முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் நின்ற என்னை பார்த்து மிஸ்டர். நாயர் நான் சொல்வது சரியா? என்று வினா எழுப்பினார். அது சரியாக இருக்காது என்றும் அதற்கான காரணங்களையும் நான் அடுக்கி கூறினேன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பிரமிப்பு. ராஷ்டிரபதியின் கருத்துக்கு சாதாரண அதிகாரி எதிர் கருத்து சொல்வதும் அதனை அவர் அனுமதிப்பதையும் கண்டு நீதிபதி அசந்தே போனார்.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்தனர். அவர்கள் டெல்லியை சுற்றிபார்க்க ஒரு பஸ் அமர்த்தி தரப்பட்டது. அந்த பேருந்துக்கான கட்டணத்தை அப்துல் கலாம் வழங்கி விட்டார். இவர்களில் யாருக்கும் எந்த சமயத்திலும் அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்தப்படவில்லை. கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவு செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது. அந்த தொகையை கலாம் தனது கையில் இருந்து செலுத்தி விட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை.

அப்துல் கலாமின் 5 ஆண்டு காலம் முடிந்த பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் ஊழியர்கள் அவரை சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவரை சந்தித்தேன். என்ன மிஸ்டர் . நாயர் உங்கள் மனைவியை காணோம்? என்று கலாம் கேள்வி கேட்டார். எனது மனைவி ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து வீட்டில் இருக்கிறார் என்றேன். அடுத்த நாள் எனது வீட்டை சுற்றி ஒரே போலீஸ். என்னவென்று பார்த்தால் கலாம் எனது மனைவியை பார்க்க வீட்டுக்கே வந்து விட்டார். ஒரு குடியரசுத் தலைவர் சாதாரண ஊழியரின் மனைவியை சந்தித்து பேசுகிறாரே என்று நான் வியந்து போனேன்.

இவ்வாறு முன்னாள் குடியரசுத் தலைவர் பற்றி பி.எம். நாயர் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=50753

Link to comment
Share on other sites

ஜனாதிபதி மாளிகை: குரங்குகள் வாங்கும் பென்சன்!

 

-முனைவர் எம். சஞ்சயன்

அந்த அலுவலகம் பிரம்மாண்டமானதாக, குடைந்து வைத்ததுபோல குறைவான வெளிச்சத்தில் இருந்தது. kalam%20in%20office.jpgஇடுப்பளவு உயரத்தில் இருந்து சீலிங் வரைக்கும் நீண்ட பிரெஞ்சு ஜன்னல்கள். பெரும்பாலான ஜன்னல்கள் வேலைப்பாடுகள் செய்த வெல்வெட் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டு டெல்லியின் சூரியனும், வெக்கையும் உள்ளே வராமல் தடுத்தன. புறாக்கள் ஜன்னல் விளிம்புகளில் உட்கார்ந்து சத்தமிட்டன. அண்மையில் இருந்த மரங்களிலும், கட்டடங்களிலும் குரங்குகள் நிறைய சஞ்சரித்தன. இயற்கையான வனப்பிரதேசச் சூழல் யன்னல்களை அங்காங்கே கறைபட வைத்திருந்தது. எந்த மனிதனுக்கு

இந்த யன்னல்களை கழுவும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் யோசித்தேன். அதுவரை ஒரு பெண் பணியாளரைக்கூட நான் காணவில்லை. அந்த அறையில் எதை எடுத்தாலும் அது பிரம்மாண்டமானதாகவே இருந்தது. பிரம்மாண்டமான சோபாக்கள், தடிப்பான கம்பள விரிப்புகள், ராட்சத தொங்கு விளக்குகள். அவருடைய மெய்க்காவலர்கள்கூட திடகாத்திரமாகவும், பாரமாகவும் இருந்தார்கள்.

பென்னம் பெரிய கதவுகள் வழியாக வந்துபோகும் மிலிட்டரி உடையணிந்த உதவியாளர்கள்கூட கனமான ஆகிருதிகளுடன் காணப்பட்டார்கள். எல்லாமே பெரியதாக இருந்தது, ஒரு மேசையின் முன் உட்கார்ந்து கம்ப்யூட்டர் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதரைத் தவிர. அவருடைய சிறிய உடலில் இருந்து சன்னமாகத்தான் குரல் எழும்பியது. அந்த அறையின் பரப்புக்குள், அவர் குரலை கேட்க வேண்டுமென்றால் சுற்றிவர கடுமையான மௌனம் தேவை. ஆனால் அந்தப் புறாக்கள் அவர் பேசுவதை மூழ்கடித்தன.'எல்' எழுத்துப்போல உயர்ந்த மரத்தில் வடிவமைக்கப்பட்ட அவருடைய தொன்மையான மேசை, ஒரு தூரத்து மூலையில் தள்ளப்பட்டு, இந்த ஆடம்பரங்களுக்கு மன்னிப்பு கேட்பதுபோல காட்சியளித்தது.

அப்துல் கலாம் ஆட்சி செலுத்துவது போலவே இல்லை. இந்தப்பெரிய படாடோபங்களில் அவர் சங்கடப்படுவது போலவே தோற்றமளித்தார். ஒரு கல்விக் கூடத்திலோ, ஒரு பல்கலைக் கழகத்திலோ அவர் இன்னும் கூடுதலான சௌகரியத்துடன் தன்னை உணர்ந்திருப்பார் என்று எனக்குப்பட்டது. என்னையும் ஒரு மாணவர் போலவே அவர் வரவேற்றார்.

நான் பிபிசி குழுவுடன் கடந்த ஒரு மாத காலமாக, விவரணப்படம் ஒன்று எடுப்பதற்காக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அலைந்திருந்தேன். உலக அழகி ஐஸ்வர்யராயின் பேட்டி அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்ததால், மூன்று மாதம் முன்பாகவே ஒழுங்கு செய்திருந்த ஜனாதிபதியின் பேட்டியிலும் கடைசி நிமிடங்களில் சிறு மாறுதல் செய்யவேண்டி நேர்ந்தது. ஒரு நாட்டின் ஜனாதிபதியிலும் பார்க்க ஒரு நடிகை பிஸியாக இருந்ததை கண்டு பிபிசி டீம் அதிசயித்தது. நாளைய பேட்டியே கடைசி. அத்துடன் வந்த காரியம் முடிந்து, நான் மறுபடியும் வாஷிங்டனுக்குப் பயணமாகி விடுவேன்.

பிபிசி குழுவில் நாங்கள் எட்டுப்பேர் இருந்தோம். எல்லாமே வெள்ளைக்கார முகங்கள், என்னுடையதை தவிர்த்து. பல பாதுகாப்பு அரண்களை தாண்டி, பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே வந்துவிட்ட எங்களை ஒரு வரவேற்பு அறையில் உட்காரவைத்திருந்தார்கள். அதுவே ஒரு ஜனாதிபதிக்கு தகுதியான கம்பீரத்தோடு இருந்தது. எங்கள் குழுவின் தலைவர், விவரணப் படக் கலையில் புகழ்பெற்ற பட்டி ஸ்மித் என்பவர். ஜனாதிபதியைப் பார்க்க உள்ளே போகவேண்டிய நேரம் வந்ததும் இரண்டு பாதுகாவலர்களும், ஓர் உயர் அதிகாரியும் எங்களை அழைத்துச் சென்றார்கள். நான் மட்டுமே ஜனாதிபதியிடம் கைகுலுக்கினேன். மற்றவர்கள் காமிராவுக்கு பின்னே நின்று கொண்டார்கள். எங்களை அழைத்து வந்த அதிகாரியின்
முகத்தில் ஆச்சரியத்திலும் பார்க்க ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

பாதுகாவலர் படக்கென்று திரும்பி,  தன் நேரம் வீணாகிவிட்டது என்பதை அப்பட்டமாகக் காட்டியபடி மறைந்துபோனார். ஜனாதிபதி என்னை சஞ்சயன் என்று உரிமையுடன் அழைத்தார்; நான் பதிலுக்கு ‘மிஸ்டர் பிரெசிடென்ட்’ என்றேன். எங்கள் சம்பாசணை தொழில் நுட்பம், இந்தியாவின் எதிர்காலம், சாதாரண மக்களின் அன்றாட சந்தோசம் இவற்றையெல்லாம் தொட்டது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் சிருஷ்டிகர்த்தாவான ஒரு ஜனாதிபதியின் சிந்தனைகள் கவித்துவமாகவே இருந்தது என்னை வியப்பிலாழ்த்தியது.

"இங்கே பாருங்கள் சஞ்சயன், நான் நூறு கோடி மக்களைச் சிரிக்கவைக்க விரும்புகிறேன். உங்களுக்குப் புரிகிறதா? நூறுகோடி மக்கள் சிரிக்கவேண்டும். இது முடியும்."-  அவர் அதை சொன்னவிதம், அறிவை மீறிய ஒரு தேவவாக்கு போல என் காதுகளில் விழுந்தது. என் தலை என்னையறிமால் அசைந்தது.

அவர் தன் கனவை சொல்ல ஆரம்பித்தார். "இந்தியாவைத் தொடுக்கவேண்டும். முக்கோண வடிவமான இந்தியாவை குறுக்கறுத்து ஆயிரம் புதுச்சாலைகள் ஓடவேண்டும்; இணையம் மூலமும், சாட்டிலைட் மூலமும் இந்தியா முழுவதையும் இணைக்கவேண்டும். ஒவ்வொரு நூறு கிராமத்துக்கும் ஓர் இணைய செர்வர். அதிலிருந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்னஞ்சல், இணைய தள வசதிகள். ஒரு புதிய EDUSAT என்ற செயற்கைகோளை விண்வெளியில் நிறுவுவதற்கான ராக்கெட் ஒன்று விரைவிலேயே ஏவப்படும். உலகத்திலேயே கல்விக்காக முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சாட்டிலைட் இதுவாகவே இருக்கும். இதிலிருந்து லட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களுக்கு கல்வி அறிவுப் போதனைகள் ஒலிபரப்பாகும்..." என்ற கலாம்,  'ignited minds' என்றார்.

இளம் மனங்களில் ஒரு தீ பற்றவேண்டும். வெளியே வரத் துடிக்கும் இந்திய இளைஞர்களின் உச்சமான திறமைகளை விடுவிக்கவேண்டும். இந்த அரிய மனிதர், சந்தேகமில்லாமல் தன் பரிவான உள்ளத்தில் கனவுகள் காணும் ஒரு நம்பிக்கைக்காரர்.

rashtrapathi%20bhavan%20300.jpg


தேநீரும் பிஸ்கட்டும் பரிமாறினார்கள். தேநீரை சிறிய பீங்கான் கிண்ணத்தில் பருகியபடி, ஜனாதிபதி தன் மாளிகையைப் பற்றி சொன்னார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் காலத்து கட்டடக் கலைஞர்களால் நிர்மாணிக்கப்பட்ட அந்த மாளிகையின் முதல் வைஸ்ராய் எர்வின்; கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன். என்றென்றைக்கும் அடக்கியாளலாம் என்ற எண்ணத்தில் பிரிட்டிஷார் எழுப்பிய மாளிகையில், அவர்கள் 17 வருடங்கள் மட்டுமே ஆட்சி செலுத்தினர்.

ஜனாதிபதி பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு இன்னொன்று புலப்பட்டது. இந்த கண்ணைப் பறிக்கும் சோடனைகளும், அலங்கார தூண்களும், மாளிகையும் அப்துல் கலாமின் மாபெரும் கனவுகளை தாங்குவதற்கு போதாத ஒரு சிறு குடிசையாகவே எனக்கு அப்போது தோன்றியது.

நான் விடை பெறுமுன் கேட்டேன். "மிகுந்த அழகுணர்வோடு பராமரிக்கப்படும் உங்கள் தோட்டத்துக்கு போவீர்களா? குரங்குகள் தொல்லைப் படுத்துவதில்லையா?"

"ஓ, குரங்குகள், அவை பெரிதாக என்னை தொந்திரவு செய்வதில்லை." -இப்படிச் சொல்லியவாறே தன் மேசையில் பதித்த சிவப்பு பொத்தானை ஜனாதிபதி அழுத்தினார். அந்தப் பொத்தானை அவருடைய மேசையில் ஒருவித ஒளிவு மறைவுமின்றி ஒட்டி வைத்திருந்தார்கள். அதிலே இருந்து தாறுமாறாக சென்ற வயர்கள் மேசையின் ஓரத்தில் ஸ்டேப்பிள் செய்யப்பட்டிருந்தன. ஒரு விண்வெளி விஞ்ஞானியும், மாபெரும் நாட்டின் ஜனாதிபதியுமான அவருடைய மேசையிலே ஓடும் வயர்களை மறைத்து வைப்பது அவ்வளவு கடினமான காரியமா என்று என்னை யோசிக்க வைத்தது.

"இந்தக் குரங்குகள் எங்களைத் தொந்திரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள சில உபாயங்கள் உண்டு" என்றார். அப்பொழுது ஜனாதிபதி எழுதிய இரண்டு புத்தகங்களை அவருடைய உதவியாளர் கொண்டு வந்து கொடுத்தார். ஆங்கிலப் புத்தகத்தில் கையப்பமிட்டு என்னிடம் தந்தார். மற்றது தமிழ் புத்தகம். அதில் தமிழில் கையெழுத்து வைத்து, "இதை எழுத்தாளரான உங்கள் அப்பாவிடம் கொடுங்கள்!" என்றார்.

monkey%20600.jpg

நான் விட்ட இடத்தைப் பிடித்துக்கொண்டு என்ன உபாயங்கள்? என்றேன். "காவல்கார குரங்குகள். எங்களுக்கு ஓயாது தொல்லை தரும் சிறிய குரங்குகளுக்கு பெயர் லங்கர். பெரிய குரங்குகளின் பெயர் மக்காக்கி. பயிற்சி கொடுத்த மக்காக்கி குரங்குகளை சங்கிலியில் கட்டி, காவல்காரர்கள் சுற்றிலும் உலாத்துவார்கள். இவற்றைக்கண்டதும் சிறிய குரங்குகள் ஓடிவிடும், கிட்ட வராது".

என் முகத்தில் தோன்றிய ஆச்சரியத்தை என்னால் மறைக்கமுடியவில்லை. 

‘காவல் காக்கும் பெரிய குரங்குகளுக்கு சம்பளம் உண்டா?’ என்றேன், பாதி நகையுடன்,  "நிச்சயமாக. ராஷ்டிரபதி பவன் ஊழியர்களின் பட்டியலில் அவற்றின் பெயர்களும் உண்டே...!"- உலகத்தின் ஆகப்பெரிய ஜனநாயகத்தின் அதிபதி என்னுடைய முழங்கையை பிடித்து தன் அற்புதமான தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.

கருணையே உருவான அந்த நல்ல மனிதருக்கு என்னுடைய மனக்கிலேசம் எப்படியோ தெரிந்துவிட்டது. "அவை ஓய்வு பெற்றபிறகு அவைக்கு பென்சனும் இருக்கிறது" என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=50812

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.