Jump to content

‘கி.பி அரவிந்தன்: ஒருகனவின் மீதி’ – நோர்வேயில் நடந்த நூல் அறிமுகமும் சிலகுறிப்புகளும் – ரூபன் சிவராஜா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘கி.பி அரவிந்தன்: ஒருகனவின் மீதி’ – நோர்வேயில் நடந்த நூல் அறிமுகமும் சிலகுறிப்புகளும் – ரூபன் சிவராஜா

SEP 20, 2015

ki-pi-book-norway (1)

‘கி.பி அரவிந்தன்:ஒருகனவின் மீதி’ எனும் நூல் ஈழப்போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர், சிந்தனையாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முகப் பரிமாணங்களையும் வகிபாகத்தினையும் கொண்டிருந்த கி.பி அரவிந்தன் அவர்களின் நினைவுகளைத் தாங்கி தமிழகத்தில் உருவாக்கம் பெற்றுள்ளது.

இந்நூல் புலம்பெயர் நாடுகளில் முதன்முறையாக நோர்வேயில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் 06-09-15 ஒஸ்லோவில் இதன் அறிமுகநிகழ்வு இடம்பெற்றது.

ஆயுதப் போராட்டத்தை முன்மொழிந்து, அதில் துணிந்து இறங்கிய முன்னோடிகளில் ஒருவராக, தமிழீழ விடுதலைக்கான கருத்தியல் ரீதியான, சிந்தனை ரீதியான பங்களிப்பாளராக, தமிழின் முக்கிய இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவராக என மூன்று பெரும் இயங்குதளங்களில் அரவிந்தனது வகிபாகத்தைக்  குறிப்பிடலாம்.

இம்மூன்று இயங்குதளங்களும் முறையே தாயகம், தமிழகம், புலம் என மூன்று வெவ்வேறு வாழ்விடங்களில், மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அமையப்பெற்றதாகும். அதற்கேற்றாற்போல், தாயகம், தமிழகம், புகல் நாடுகளில் வாழும் அவரோடு பழகிய, வெவ்வேறு காலகட்டங்களில் அவரோடு பணிபுரிந்த, அவரை அறிந்த தோழர்கள், எழுத்தாளுமைகள், கல்வியாளர்கள், இலக்கியகர்த்தாக்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டு ஆளுமைகளின் கட்டுரைகளும், நினைவுப் பகிர்வுகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

அரவிந்தன் எனும் ஆளுமையின் கணிசமான பரிமாணங்களைக் காத்திரமாகப் பதிவுசெய்துள்ளது இந்நூல்.  கட்டுரைகள் நேர்த்தியான முறையில் தொகுக்கப்பட்டு, நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தஎழுத்தாளரும் கவிஞருமான பா.செப்பிரகாசம், எழுத்தாளர் ரவிக்குமார் ஆகியோர் தொகுத்துள்ள இந்நூலினை,மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இக்குறிப்பினை எழுதியவரின் தலைமையில் இடம்பெற்ற நூல் அறிமுக அரங்கில் எழுத்தாளரும் கவிஞருமான பா.செயப்பிரகாசம், கவிஞர் இளவாலை விஜயேந்திரன், கவிஞர் சோதியா (சிவதாஸ் சிவபாலசிங்கம்), எழுத்தாளர் குணா கவியழகன் மற்றும் கி.பி அரவிந்தனின் உடன்பிறந்த சகோதரர் அல்போன்ஸ் கிறிஸ்தோபர்  ஆகியோர் கருத்துரைகளை ஆற்றியிருந்தனர்.

கிறிஸ்தோபர் பிரான்சிஸ்’எனும் இயற்பெயர் கொண்ட அரவிந்தன், ஈரோஸ் (ஈழ புரட்சிஅமைப்பு) அமைப்பின் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது‘சுந்தர்’என்ற பெயரில் அறியப்பட்டவர். ‘கி.பி.அரவிந்தன்’என்பது அவர் கவிஞராகத் தன்னை நிலைநிறுத்திய தறுவாயில் அவருடைய அடையாளப் பெயராகிப் போனது.

இந்நூலில் கிறிஸ்தோபர் பிரான்சிஸ்சைத் தரிசிக்க முடிகிறது. சுந்தரை அறிந்துகொள்ள முடிகிறது. கனவின் மீதியைச் சுமந்துநின்ற கி.பி.அரவிந்தன் என்ற ஆளுமையின் கணிசமானபரிமாணங்களும் வெளிப்படுகின்றன.

ki-pi-book-norway (2)ki-pi-book-norway (3)

ki-pi-book-norway (4)

பன்முகப் பரிமாணங்களில் இயங்கிய ஒருஆளுமை என்பதற்கு அப்பால் அவருடைய எளிமையும், கனிவுமிக்க உளப்பண்பாடும், பரந்த பார்வையும் அவரை தனித்துவமானதொரு ஆளுமையாக நிலைநிறுத்தக் காரணமாயிருந்தது என கருத்தாளர்கள் பலராலும் விதந்து பகிரப்பட்டது.

தமிழ்ச் சூழலில் வரலாற்று வகிபாகமுடைய ஆளுமையெனத் தயக்கமின்றிக் கூறக்கூடிய கி.பி. அரவிந்தன் அவர்கள் பற்றிய நெகிழ்வான நினைவுகள் இந்நிகழ்வில் பகிரப்பட்டமையும்,அவர் பற்றிய காத்திரமான பதிவுகளைக் கொண்ட  இந்நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமையும் அவருடைய நினைவுகளைப் போற்றுதல் என்பதற்கு அப்பால் தமிழ்ச் சமூகத்திற்குஅவசியமானது.

அவருடைய 45 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையென நோக்குமிடத்து, ஆயுதப் போராட்டத்தின் முன்னோடியாக 70களின் ஆரம்பத்திலிருந்து 70களின் இறுதிவரை தாயகத்தில் தலைமறைவு வாழ்க்கையுடன் கூடிய சிங்கள அடக்குமுறைக்கெதிரான போராட்டத்தையும் – தமிழீழத்தின் மாணவர் எழுச்சியின குறியீடாக விளங்கும் தியாகி.பொன் சிவகுமாரனோடு கைகோர்த்து களச்செயலாற்றிய காலகட்டத்தையும் உள்ளடக்கியது.

80களின் ஆரம்பத்திலிருந்து அதன் முடிவுவரை தமிழகத்தைத் தளமாகக் கொண்டு தமிழீழ விடுதலைக்கான அரசியல் மற்றும் ஊடக- இதழியல் பணிகள்.

பின்னர் 90களின் ஆரம்பத்திலிருந்து அவருடைய மறைவு நிகழும் வரையான இரண்டரைச் தசாப்தங்கள் – புலம்பெயர் சூழலில் ஒரு படைப்பிலக்கியவாதியாக, கவிஞராக, ஊடகவியலாளராக, சமூக பண்பாட்டுத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிய காலகட்டமாக அமைகின்றது.

அரசியல் விடுதலையை அவாவி நிற்கும் ஒரு சமூகத்தின் நலன் சார்ந்து பெரும் பிரக்ஞைபூர்வமான செயல் முனைப்புக் கொண்டிருந்தஅவர் தொலைநோக்குச் சிந்தனையும், வெளிப்படைத்தன்மைமிக்க உளப்பண்பாட்டினையும், முற்போக்கான உலகப்பார்வையும் கொண்டிருந்தார் என்பதை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அறிவர்.

“ஜனநாயகம், வெளிப்படை என்பவையே நமது அடிப்படைகளாக மாறவேண்டும். ஜனநாயகம் என நான் குறிப்பிடுவது, வெறும் தேர்தல் ஜனநாயகத்தை அல்ல, நமது உளப்பண்பாட்டினையே ஜனநாயகமாக்குதல்” என்பதாக அவருடைய  கூற்று ஒன்று உள்ளது. இது எத்தகையை ஆழம்மிக்க, கூர்மைமிக்க, அறிவுபூர்வமான கூற்று என்பதைப் புரிந்து கொள்வதன் மூலம் அவருடைய சிந்தனையையும் உளப்பண்பினையும் புரிந்து கொள்ளமுடியும்.

ஈழவிடுதலைப் போராட்டத்திற்குத் தமிழகத்தைப் பின்தளமாக்க அடித்தளமிட்டுச் செயலாற்றியவர்களில் கி.பி. அரவிந்தன் அவர்களின் வகிபாகம் காத்திரமானது என்பதை எவரும் மறுத்திடமுடியாது. குறிப்பாக இலக்கிய மற்றும் ஊடக மட்டங்களிலான தொடர்புகளைத் தனது இறுதிக் காலம் வரை இடையறாது பேணிவந்தவர். இன்னொரு வகையில் சொல்வதானால்,தமிழக மற்றும் தமிழீழ, அதிலும் குறிப்பாக புலம்பெயர் இலக்கியத்துறைகளுக்கிடையிலான ஒருபாலமாக அவர் திகழ்ந்தார் என்றால் அதுமிகையல்ல.

அவருடைய மறைவினை அறிந்த மறுகணமே, சென்னையிலும் மதுரையிலும் வேறுபல இடங்களிலும் அவருக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் அவருடைய தமிழகத் தோழமைகளால் நடாத்தப்பட்டது. சில இலக்கியமாத இதழ்கள் அவருடைய நினைவுக்கான சிறப்பிதழ்களை வெளியிட்டன. தமிழகம் அவரை வாஞ்சையோடு தாங்கிக் கொண்டது என்பதன் வெளிப்பாடே இவை.

ki-pi-book-norway (5)ki-pi-book-norway (9)ki-pi-book-norway (6)

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட முன்னோடியான அவர், அறப்போராட்டத்தினுடைய தோல்வி, ஆயுதப் போராட்டத்தினுடைய தோற்றம், வளர்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி எனஅனைத்துக் காலகட்டங்களினதும் சாட்சியமாக  இருந்திருக்கின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் காலத்தேவை கருதிய அடிப்படைகளில் தனது பங்களிப்பினை வழங்கி வந்திருக்கின்றார். தமிழர்களின் விடுதலை அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களிலும் மற்றும் இலக்கியப் பரப்பிலும் அவரது வகிபாகத்தினைத் தனிமனித சம்பவங்களாகச் சுருக்கிவிட முடியாது. அவருடைய 45 ஆண்டுகாலபொதுவாழ்விற்குள் தமிழர்களுடைய வாழ்வியல் இருக்கின்றது. கடந்துவந்த அரசியல் பாதை இருக்கின்றது. இலக்கியம் இருக்கின்றது. பண்பாடு இருக்கின்றது.

நூல் அறிமுக அரங்கில் கவிஞர் இளவாலை விஜயேந்திரன் தனது கருத்துகளைப் பகிர்ந்தபோது, ஆயுதப்போராட்ட முன்னோடியாக அவருடைய அர்ப்பணிப்புமிக்க பங்களிப்புத் தொடர்பாகத் தான் நேரில் அறிந்த பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“அவருடைய இலக்கிய ஆளுமை மிகஆழமானது. அதுமட்டுமல்லாமல் அவர்  ஒரு சிறந்த விமர்சகராகவும், எப்பொழுதும் தீவிரமான வாசகராகவும் இருந்தார். கி.பி அரவிந்தனின் இந்தஆளுமைகளை நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே நன்கறிவர்” என கவிஞர்  விஜயேந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் அவருடன் ஏற்பட்ட பழக்கம், அவரோடு பழகிய அனுவபங்கள், அதன் ஊடாக அவரிடம் கண்டுகொண்ட தோழமையும் எளிமையும் நிறைந்த பண்பு பற்றியும் பகிர்ந்தார். கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருப்பவர்களுடனும் அரசியல், இலக்கியம், சமூகம் சார்ந்து நாகரீகமாகவும் ஆக்கபூர்வமாகவும் உரையாடுகின்ற, உறவினைப் பேணுகின்ற, இணைந்து பணியாற்றும் உயர்ந்த விழுமியங்களைக் கொண்டிருந்த அவரது உளப்பண்பாடு சார்ந்தும் விஜயேந்திரன் விதந்துரைத்தார்.

சகபடைப்பாளிகளை, இளைய எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு களமமைத்துக்  கொடுப்பதிலும் ஆக்கபூர்வமான உந்துதலை வழங்குவதிலும் அவர் முன்னுதாரணமாக விளங்கினார்.

“அரசியல் முரண்பாடுகளைக் கடந்து ஏதோவொரு தளத்தில் இணைந்து பணியாற்ற முடியுமென்ற யதார்த்தத்தை வேறெவரிடமும் பார்க்க சுந்தரிடம் அதிகம் உணர்ந்தேன்” என்பதுவிஜயேந்திரனின் கூற்றாகவிருந்தது. அவரோடு நெருங்கிப் பழகிய, அவரை ஆழமாக அறிந்த, அவர் மதிப்புவைத்திருந்த  இன்னும் சிலஆளுமைகளின் பகிர்வுகள் வெளிவந்திருந்தால் இந்நூல் மேலும்முழுமைபெற்றிருக்குமெனவும் சுட்டிக்காட்டினார்.

ஆரம்பகாலத்தில், சிறிலங்காவின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டச் செயற்பாடுகளை கி.பி அரவிந்தன் எவ்வாறு முன்னெடுத்தார், அதனால் அவரும் குடும்பத்தினரும் எவ்வாறான சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்து என்பது பற்றிய, பரவலாக வெளியில் அறியப்படாத தகவல்களைச் சகோதரர் அல்போன்ஸ் கிறிஸ்தோபர் பகிர்ந்துகொண்டார்.

ki-pi-book-norway (7)ki-pi-book-norway (8)ki-pi-book-norway (10)ki-pi-book-norway (11)

வீரியமானதொரு பேனாப் போராளி கி.பி. அரவிந்தன் எனக் குறிப்பிட்டகவிஞர்  சோதியா, ஒருமுறை பழகிய அனுபவமும் நினைவுகளுமே பல நாட்கள், பல மாதங்கள் பழகிய அனுவபங்களாகவும் நினைவுகளாகவும் விரிந்து நிற்கின்றன.  எல்லா மனிதர்களுக்கும் இத்தகைய ஆளுமை வாய்ப்பதில்லை. கனிவுடன் பலரைத் தம்வசப்படுத்துவது, தமது கருத்துகளால் ஆகர்சித்துக் கொள்ளும் ஆளுமை பலருக்கு இருப்பதில்லை. ஆனால் கி.பி. அரவிந்தன் அத்தகைய ஆளுமையைக் கொண்டிருந்தார்  எனக் கூறினார்.

«இந்நூல் அருமையானதொரு ஆவணம். இந்நூலில் இந்தஆளுமைவாதியின் சகல பரிமாணங்களும், சகல கோணங்களும் பதியம் பெற்றுள்ளன.

ஆயுதம் தாங்கிய ஒருபோராளி–பின்னர் பேனாவை வரித்துக் கொண்டு, ஒரு இலக்கியவாதியாக–ஒரு ஊடகராக– எழுத்தாளராக– சமூகச் செயற்பாட்டாளராகப் பரிமாணம் பெற்று இவ்வளவு உயரத்திற்குப் பேசப்பட்டிருந்த ஒரு ஆளுமையைப் பற்றியநூல் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது” என்று தனதுஉரையில் கவிஞர் சோதியா மேலும் தெரிவித்தார்.

அவருடைய கூர்மையான சமூகப்பார்வை தான் அவரை ஒரு உன்னதமான மனிதனாக, பண்பாளனாக உருவாக்கியது என்பதை அவருடைய கருத்துகளிலிலிருந்து உணர்ந்து கொண்டதாகவும், சமாதான காலத்தில் வன்னிக்கு அவர் பயணித்திருந்தபோது தொடங்கிய நட்பு, அவர் நோயுற்று மரணத்தறுவாயில் உத்தரித்த நாட்கள் வரை நீடித்தது எனத் தனக்கும் அவருக்குமான பந்தத்தினைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் குணா கவியழகன்.

ஸ்கைப் காணொலித் தொழில்நுட்பம் மூலம் உரையாற்றிய கவியழகன் மேலும் கூறுகையில், “மிடுக்கில்லாத குரல் – இருந்தாலும் அந்தக் குரலில் ஒருகனிவிருக்கும். அவருடைய தோற்றம் ஒருஆளுமையை வெளிப்படுத்தும் தோற்றம் கிடையாது–ஆனாலும் முகத்தில் ஒரு அன்பு பொதித்திருக்கும். அவரின் வாழ்க்கை ஒரு உன்னதமான வாழ்க்கையாகத் தான் இருந்தது–ஆனாலும் அந்த வாழ்க்கையில் மிகுந்த எளிமை குடியிருந்தது.” என்றார்.

அவருடைய உளப்பண்பும், சிந்தனையும் தான் என்னை அவரோடு தன்னை ஒட்டவைத்தது எனவும், 2009இற்குப் பின்னர் அவர் அடைந்த மனஉத்தரிப்புச் சொல்லி மாளாது என்றும் தெரிவித்தார். ஆரம்பகாலப் போராளியாக இருந்த ஒருவர், தன்னுடைய வாழ்காலத்திலேயே–தன்னுடைய மக்கள் ஒரு அரசியல் கையறு நிலைக்குள் தள்ளப்பட்ட அந்த வலியைச் சுமந்து கொண்டு சாகநேர்ந்தது ஒரு மாபெரும் உத்தரிப்பு. அது அசாதாரணமானது அல்ல எனவும் கவியழகன் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

இந்நூலின் தொகுப்பாளர்களில் ஒருவரான எழுத்தாளரும் கவிஞருமான பா.செயப்பிரகாசம் அவர்கள் நூல் உருவாக்க முயற்சி, கட்டுரைகள் தொகுக்கப்பட்ட முறைமை பற்றிக் கூறுகையில் மணற்கேணி,காக்கைச் சிறகினிலே, உயிரெழுத்து ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் அவ்விதழ்களிடம் அனுமதி பெற்று மீள்பதிப்புச் செய்யப்பட்டதோடு, பதிதாகப் பலரிடமிருந்து கேட்டுப்பெற்ற கட்டுரைகளும், நினைவுப் பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

“ஒருபோராளி என்ற சொல்லுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டவராகவே கி.பி.அரவிந்தன் எக்காலத்திலும் இருந்தார்” என்ற வகையில்,அத்தகைய போராளியின் நினைவுகளைத் தாங்கிய இந்நூலினைப் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தமை மகிழ்ச்சிக்குரியது என்பதோடு, அதனையொரு காலக்கடனாகத் தாம் கருதுவதாகவும் செயப்பிரகாசம் குறிப்பிட்டார்.

–  ரூபன் சிவராஜா

http://www.puthinappalakai.net/2015/09/20/news/9847

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.