Jump to content

'சுஜாதா என்கிற நான்... - சுஜாதாவின் மனைவியின் பேட்டி


Recommended Posts

'சுஜாதா என்கிற நான்...

 

sujatha%20leftt.jpg60 களின் மத்தியில் எழுதத்துவங்கி, இறக்கும் காலம் வரை எழுத்தில் மழுங்கல் இன்றி வாசகர்களை தன் எழுத்தினால் கட்டிப்போட்டவர் எழுத்தாளர் சுஜாதா. எழுத்து என்றால் இலக்கியம் என்ற வரையறைக்குள் சிக்காமல், நவீனத்தை தன் எழுத்திலும் சிந்தனையிலும் ஏற்றி, இளைய தலைமுறையினரின் ஆதர்ஷ எழுத்தாளராக திகழ்ந்தவர்.

இந்நிலையில் எழுத்தாளர் என்று மட்டும் வெகுஜன உலகில் அறியப்பட்ட சுஜாதா என்கிற ரங்கராஜனின் தனிப்பட்ட குணங்களை பகிர்ந்து கொள்கிறார் அவரது மனைவி சுஜாதா.

சுஜாதாவிற்கு முன், அவருடன், அவருக்குப்பின் என உங்களைப் பற்றி   மூன்று வார்த்தைகளில் சொல்லுங்களேன்.....

சுஜாதாவிற்கு முன்-களிமண் ...
அவருடன் -முதலில் சாது, பின் கொஞ்சம் தைரியம் ,பின் அனுசரிப்பு
இப்போது- தனிமை, வெறுமை ..பின் முதுமை.

சுஜாதாவின் எழுத்துக்களில் உங்களுக்குப்பிடித்த கதை?

அவரது ஒரு குறுநாவல். பெயர் நினைவில்லை. அது என்னை ரொம்ப ஈர்த்த நாவல். ஆனால் அது அவருக்கு பிடித்திருக்குமா என்பது தெரியாது. அவரைப் பொறுத்தவரையில் தனக்குள்ளேயே வாழ்ந்தவர். உணர்ச்சிகளை பெரும்பாலும் வெளியே காட்டாதவர். அவர் எழுதிய கதைகளைப் பொறுத்தவரை ஒரு கர்த்தாவாக மட்டுமே பேசுவார். விருப்பு வெறுப்புகளை நம்மிடம் பகிரந்துகொள்ளமாட்டார்.

அவர் உங்களிடம் பேசிய முதல் வார்த்தை நினைவிருக்கிறதா?

அவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தையைவிட என்னிடம் அவர் அணுகிய விதம்தான் அதிர்ச்சி ரகம். 'டி' என்ற வார்த்தையுடன் ஒருமையில் பேசினார். எனக்கு 'டி' போட்டு பேசுவது பிடிக்காது. வீட்டிலும் அப்படி யாரும் என்னிடம் பேசிப் பழக்கமில்லை. அதனால் உடனே அவரிடம் அப்படி அழைப்பது பிடிக்கவில்லை என்று சொன்னேன்.  சரி என்றவர், அதற்குப் பிறகு ஒருநாளும் என்னை அப்படி அழைத்தில்லை .

பெரும் எழுத்தாளர்... உங்களது பெயரையே புனைப்பெயராக சூட்டிக்கொண்டார். இது எப்போதாவது உங்களுக்கு பொறாமை ஏற்படுத்தியது உண்டா?

sujatha%20home%20550%2011.jpg

இல்லை!  நான் அப்படிப்பட்டவளும் அல்ல. என் தங்கை என்னைவிட அழகு. அவளை எல்லாரும் சிலாகித்து சொல்வார்கள். எனக்கு உள்ளுர அதில் சந்தோஷமே தவிர, பொறாமை இருக்காது. அதேபோல் அவருக்கு கிடைத்த பெருமைகள், புகழ் எல்லாம் எனக்கு சந்தோஷம் தந்ததே தவிர, பொறாமை ஏற்படுத்தியது இல்லை.

ஒருவகையில் வீட்டில் இரண்டு எழுத்தாளர் இருந்தால் வீண் சண்டைதான் வந்திருக்கும். அவரும் கூட இம்மாதிரி விஷயங்களில் கிட்டத்தட்ட என்னைப்போலதான். எந்த உணர்ச்சியையும் வெளிகாட்டியதில்லை. எதற்காகவும், என்றும் யார்மீதும் பொறாமைப்பட்டிருக்கமாட்டார்.

There is a woman behind every successful man என்பார்கள். அவர் எழுத்துப் பணியில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது? அவருக்கு நீங்கள் உதவியதுண்டா?

அவர் வெற்றிக்கு நான் காரணம் என்று நினைததில்லை. அவர் நினைத்தாரா என்பதும் தெரியவில்லை. காரணம் அவர் ரொம்ப private person. எதையும், எப்போதும் வெளியே சொல்லமாட்டார். கதை பற்றிய விஷயமும் அது போல்தான். என்ன எழுதுகிறார், எதை படமாக எடுக்கிறார்கள், எதையும் பகிர்ந்து கொள்ளமாட்டார்.

எழுத்தாளரின் மனைவி என்ற முறையில் அவரது எந்த படைப்பும் உங்கள் பார்வைக்குதான் முதலில் வந்திருக்கும். படித்துவிட்டு அதுபற்றி அவரிடம் விமர்சனம் செய்திருக்கிறீர்களா?

உண்மையில் என் சிந்தனையும், அவர் கதை சித்தரிப்பும் ஒத்துப்போனதில்லை. காரணம் கதைகளில் புதுமையான சிந்தனை இருக்க வேண்டும் என விரும்புபவர் அவர். நான் அப்படி இல்லை. மிகவும் பழமையான சிந்தனை கொண்டவள்.

sujatha%20home%20550%201.jpg

திருமணமான புதிதில் அவரது கதையை விமர்சனம் செய்ததுண்டு. பின்னாளில் அதைவிட்டுவிட்டேன். கரையெல்லாம் செண்பகப்பூ என்ற அவரது நாவலில், முதலில் அந்த கதையின் நாயகியான அந்த கிராமத்துப் பெண், நகரிலிருந்து வந்தவனுடன் ஓடிப் போவதாகத்தான் முடிவு வைத்தார்.

எனக்கு அது நெருடலாக இருந்தது. எந்த கிராமத்துப் பெண்ணும் அவ்வாறு செய்யமாட்டாள். முடிவு சரியில்லை என்றேன். அப்புறம் அந்த முடிவை மாற்றி எழுதினார். அது ஒன்றுதான் எனக்கு நினைவிருக்கிறது.

பெண் குழந்தை இல்லை என்று எப்போதாவது நீங்களோ, அவரோ எப்போதாவது ஏங்கியதுண்டா?

எனக்கு முதலில் பெண் குழந்தைதான் பிறந்தது. பிறந்து நாலு நாட்களில் இறந்துவிட்டது. இறந்த அந்தக் குழந்தையை எண்ணி வருந்தியதுண்டு. அவர் தனது சில கதைகளில் கற்பனையாக இதுபற்றி எழுதி தன் வருத்தத்தை போக்கிக்கொண்டார் என்றே நினைக்கிறேன்.

முதல் கோபம், முதல் சிரிப்பு, முதல் பிரிவு என அவருடனான உங்கள் மூன்று தருணங்கள் நினைவிருக்கிறதா?

அப்போது நாங்கள் டெல்லியில் வசித்து வந்தோம். இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன. ரொம்ப நாட்களாக என் உறவினர் ஒருவர் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இவரும் இந்த வாரம், அடுத்த வாரம் என்று தள்ளி போட்டுக்கொண்டே வந்தவர்,  ஒருநாள் நல்ல மூடு போல, 'வா... போய் வரலாம்!' என்றார். கிளம்பும் போதே மணி ஐந்து. அவர்கள் வீட்டிலேயே குழந்தைகள் சாப்பிட்டு விட்டன. நாங்கள் வேண்டாம் என்று சொல்லி கிளம்பிவிட்டோம்.

sujatha%20550%206.jpg

அப்போதே மணி ஒன்பது. ஸ்கூட்டர் கிடையாது. பஸ் அதிக நேரத்திற்குப் பின் வந்தது. நிறுத்தத்தில் இறங்கி நடந்தோம். பசி எரிச்சல், கோபத்தில் விறு விறு என்று இவர் முன்னாடி போக, இரண்டு குழந்தைகளும் தூங்கிப்போய் விட்டன. தூக்கிக்கொண்டு பின்னால் நான். அப்போது அவர் என் மீது காட்டிய கோபம் இன்னமும் பதறச் செய்கிறது.

முதல் பிரிவு, முதல் சிரிப்பு இரண்டும் ஒரே சம்பவத்தில் நடந்தது. கல்யாணம் முடிந்த ஐந்தாம் நாளே டெல்லி சென்றுவிட்டார். இது முதல் பிரிவு.

மூன்று மாதத்திற்க்குப் பின் என் மாமனார் என்னை டெல்லி அழைத்துச் சென்றார். ஸ்டேஷன் வந்துவிட்டது. 'இவன் இருக்கானா பார்' என்றார். நானும் பார்த்தேன். பார்த்துவிட்டு, 'இல்லையேப்பா...' என்றேன். கடைசியில், இவர் என் கோச்சுக்கு எதிரேதான் அவ்வளவு நேரம் நின்றுகொண்டு இருந்திருக்கிறார். எனக்குத்தான் அடையாளம் தெரியவில்லை. பலமாக சிரித்தோம் எல்லோரும்.

பிரபலமான எழுத்தாளரின் மனைவி என்ற வகையில் உங்கள் சுயம் பறிபோனதாக என்றாவது நினைத்ததுண்டா?

sujatha%20right%201.jpgநிறைய சந்தர்ப்பங்களில் பொது நிகழ்ச்சி, வீட்டு விசேஷம், அவர் வீட்டு ஃபங்ஷன்....எங்கே போனாலும் சுஜாதா... சுஜாதா... சுஜாதா...தான். எனக்கு இது கூட வருத்தமில்லை. ஆனால் சில சொந்தக்காரர்கள், என்னவோ எனக்கு தெரியக்கூடாத ரகசியம் போல், நானும் இவருடன் இருக்கும்போது, என்னை தனியே அமரவைத்து, இவரை மாடிக்கு அழைத்துச் சென்று பேசும்போது அப்போது வருவது கோபமா..சுய பச்சாதாபமா, எரிச்சலா...இல்லை இவை எல்லாவற்றிலும் ஆன ஒரு கலவையா எனத் தெரியவில்லை?

ஒரு முறை இப்படி நடக்கப்போக, நான் எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். தன் தவறை உணர்ந்து அவர்களே அப்புறம் மன்னிப்பு கேட்டார்கள். ரகசியம் பேசட்டும். என்னை அழைக்க வேண்டாமே.

சுஜாதாவின் கதைகளில் அவருக்கு நிகழ்ந்த அனுபவம் அல்லது நீங்கள் அறிந்தவர் அல்லது அவருக்குத் தெரிந்தவர் இவர்களைப்பற்றி எழுதியது உண்டா?

நிறைய! ஆனால் அடையாளங்களை மாற்றி விடுவார். யாரைப்பற்றி எழுதுகிறார் என்று எனக்குத்தெரிந்து விடும். ஆனால் நான் கேட்க மாட்டேன். அவரது எழுத்தில் தலையீடு செய்வது எனக்கும் பிடிக்காது, அவருக்கும் பிடிக்காது.

உங்களை வைத்து ஏதாவது கதை எழுதியிருக்கிறாரா?

ம்…ஒரு சிறுகதை. 1964  அல்லது  65 என்று நினைக்கிறேன். புதிதாக கல்யாணமான பெண்; அவளை அழைத்துக்கொண்டு காவேரிக்கரைக்கு போவதாக ஆரம்பிக்கும் கதை. அதில் அந்தப்பெண் பாத்திரம் என்னை வைத்துத்தான் எழுதினார். கதையில் அது நடந்தது இங்கே பீச்சில்.


என்றாவது தனது எழுத்துப் பணியில் அவர் சலித்துக்கொண்டதுண்டா?

இல்லவே இல்லை! எழுத ஆரம்பித்துவிட்டால் அவருக்கு சாப்பாடு, தூக்கம் எதுவும் வேண்டாம். எழுதுவது , படிப்பது, இவை இருந்தால் போதும் அவருக்கு. சாகும் வரை எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது போலத்தான் நடந்தது.

உணவு விஷயங்களில் சுஜாதா எப்படி?

வெந்தயக்குழம்பு, கீரை மசியல், சுட்ட அப்பளம் அவருக்கு மிகவும் பிடித்தவை.

சுஜாதாவின் கண்ணாடி, அவரின் மேஜை,  புத்தக அலமாரி, அவருடைய பரிசுப் பொருட்கள் ஆகியவற்றுடன் குறிப்புகளும், கவிதைகளுமாக நிரம்பிக்கிடக்கின்றன அவரது டைரி.

sujatha%20home%20550%203.jpg


-
குப்பை பொறுக்கும்
சிறுமியின் கையில்
ஃப்ளாப்பி டிஸ்க்
-
கடை வாசலில்
உடையில்லாத பெண்கள்
பொம்மைகள்
-
பால் நிலாவில்
களங்கங்கள்
எறும்பு
-
வானத்தில் விமானத்திற்கு
'டாடா' காட்டும் சிறுமி.
-
மற்றவர் நினைவிருக்கும்
எனக்கு மட்டும்
மறந்து போன
பிறந்த நாள்.
           
சந்திப்பு: லதா ரகுநாதன்

http://www.vikatan.com/news/article.php?aid=52884

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.