Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக….

அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே
இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர்
பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட
மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர்
உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது
செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது

நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த
அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே!

எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர்
இம்மியளவும் இதயம் பயமறியா

வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து
ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள்
வாழ்ந்தார்கள் ஓர்கால் வரலாறெமக்குண்டு
தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில்
வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை
கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள்
என்று பெருமிதத்தோ டியம்புதற்குச் செய்திட்ட
நன்றி மறக்காது நமக்கும் எம் சந்ததிக்கும்    

இந்த உலகினிலே ஈழத் தமிழ் பெண்கள்
சொந்த மண் மீட்க தூக்கினர் தம் ஆயுதத்தை
அந்த மறம் போல அகிலம் முழுவதிலும்
எந்த இனப் பெண்ணிடமும்
இருக்கவில்லை நெஞ்சிலுரம்
என்றடித்துக் கூற எமக்குண்டு யோக்கியதை
 
தங்கை தமிழினியே தாருஜாச் சோதரியே
உங்கள் இறப்பெமது உள்ளத்தைத் தாக்கிடினும்
பெண்மைக்குதாரணமாய் பெருவீரம் காட்டிய உம்
வன்மையும் நெஞ்சுரமும் வரலாற்றில் நிலை நிற்கும்
ஆதலினால் எங்கள் அகம் நிறைந்து வாழ்ந்திடுவீர்
சாதலுக்கு அஞ்சா உம் சரித்திரத்தை நாம் மறவோம்.

தோற்று மனஞ்சோர்ந்து துயரடைந்து வீழ்ந்ததெல்லாம்
நேற்று, இனியும் நெடுங்காலம் நமக்குண்டு
ஆற்றலுண்டு மேலும் அறிவுண்டு வளமுண்டு
காற்றிலொன்றும் இன்னும் கரைந்தழிந்து போகவில்லை

எங்கள் தாய் மண்ணை ஈழத்தமிழகத்தை
பொங்கி யெழுந்து புதுப்பித்துப் போரழித்த
நாட்டை நமதாக்கி நமதுயிராம் தாயகத்தை
ஆட்டிப்படைக்கும் அயல்நாட்டான் வாய்மூட
வெற்றிக் கொடி நாட்டும் வேளை வந்தே தீரும்

எவன் என்ன சொன்னாலும் ஈழத்தாய் மண்ணதனை
மீட்கும் வரை தமிழன் விழி மூடப்போவதில்லை
இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாளில்
எங்கள் தமிழீழம் இனிதே உருவாகும்

 

அந்த நாள் தன்னில் தம் ஆருயிரை ஈந்திட்ட
சொந்தங்காள் உம்மைக் கை
தூக்கி வணங்குதற்காய்
ஆலயங்கள் கட்டி அதிலும்மைப் பூஜித்து
தெய்வங்களாக்கி சிரம் தாழ்த்தி நாம்பணிவோம்


இன்றுமது கல்லறைகள் இடித்துடைக்கப் பட்டாலும்
என்றும் எம் நெஞ்சில் இருப்பீர் எம் தேவதைகாள்
என்றுரைத்திவ் அஞ்சலியை இனிதே முடிக்கின்றேன்
நன்றே நடக்கும் நமக்கு.

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.. கரு..!

எமது வீரப் பெண்களைப் பற்றி எனக்கு எப்போதுமே ஒரு கர்வம் உண்டு!

எமது கலாச்சாரம் என்றுமே தனது மறு பாதியான பெண்களை ஒதுக்கி வைத்தது இல்லை!

கண்ணகியாகட்டும், மாதவியாகட்டும்,மணி மேகலையாகட்டும், பாண்டிமா தேவியாகட்டும்...அவர்களுக்கு உரிய மரியாதையும், கௌரவமும் என்றுமே உரிய முறையில் அவர்களுக்கு அளிக்கப்பட்டன!

எமது சமுதாயத்தில் தாய்க்காகவும், தங்கைகளுக்காகவும் தம்மை உருக்கியவர்கள் ...மெழுகுதிரியானவர்கள் ஏராளம் !

ஒரு தாயின் வார்த்தைக்காக.. தமது உயிரைக்கொடுக்க தயாராக இருப்பவர்களும் உண்டு!

தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்  என்னும் பழமொழி ஒரு நல்ல உதாரணம் என்பேன்!

 

தமிழினியின் ஆளுமையையும், அவரது இலக்கிய ஆர்வமும் என்னை மிகவும் கவர்ந்தவை!

அவரது கம்பீரத் தோற்றதுக்குள்ளும் ... பெண்மைக்கேயுரிய ஒரு கனிவும் மறைந்தே இருந்ததையும் நான் அவதானித்துள்ளேன்!

நான் கூட ... யாழில் ஏன் ஒருவரும் அவருக்காகக் கவிதை எழுதவில்லை என்ற ஆதங்கத்திலேயே இருந்தேன்!

இன்று நானே எனது கற்றுக்குட்டித் தமிழில் எழுதுவோம் என்றும்  எண்ணியிருந்தேன்!

உங்கள் கவிதை எனது ஆதங்கத்தை நிவர்த்தி செய்துள்ளது மட்டுமன்றி.. மிகவும் நன்றாகவும் வந்துள்ளது!

 

Edited by புங்கையூரன்
லகர,ளகர,ழகர பிரச்சனை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பாராட்டுக்கு எனது நன்றியைத் தெரிகிகிறேன் புங்கையூரன்!

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.