Jump to content

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?


Recommended Posts


தமிழ்த் தலைவர்கள் மூவரின் மறைவு
 
01-08-2016 09:35 AM
Comments - 0       Views - 3

article_1470024557-tri120.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 51)

முருகேசன் திருச்செல்வம் மறைவு

அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான 'ட்ரயல்-அட்-பார்' வழக்கில் ஆஜரானவர்களில் முன்னாள் மன்றாடியார் நாயகம் (சொலிஸிட்டர் ஜென்ரல்) முருகேசன் திருச்செல்வம் 1976 நவம்பர் 23 அன்று தனது 69 ஆவது வயதிலே காலமானார். சுதந்திர இலங்கையில் அமைச்சுப் பதவி வகித்த முதலாவது தமிழரான இவர், தனது மிதவாதப் போக்கினால் குறிப்பாக சிங்களத் தலைவர்களிடத்தில் பெரும் அபிமானம் பெற்றவராக விளங்கினார். அவருடைய அரசியல் நிலைப்பாடுகளோடு முரண்படுபவர்கள் கூட, அவருடைய சட்டத் திறன் பற்றி மாற்றுக் கருத்துக் கொண்டிருக்க முடியாது.

இலங்கையின் சட்ட வரலாற்றில் பெயர் குறிப்பிடத்தக்க தமிழ் வழக்கறிஞர்களுள் முருகேசன் திருச்செல்வமும் ஒருவர். இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டத்துறையில் முருகேசன் திருச்செல்வத்தின் கனிஷ்டராகப் பணியாற்றியிருக்கிறார். 22 நவம்பர் 1979 அன்று, முருகேசன் திருச்செல்வத்தின் மூன்றாவது நினைவு தினத்தில் உரையாற்றிய அன்றைய இளைஞர் விவகார அமைச்சரான ரணில் விக்கிரமசிங்க, 'திரு. முருகேசன் திருச்செல்வம் அவர்கள் உயிரோடிருந்திருந்தால் எங்கள் நாடு வேறொரு பாதையில் பயணித்திருக்கும். அனைத்துத் தரப்பிலும் நல்லெண்ணத்தை விதைப்பதனூடாக இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற அவர் திடசங்கற்பம் பூண்டிருந்தார். அவர் அனைத்து அரசியல்க் கட்சிகளோடும் நல்லுறவைக் கொண்டிருந்தார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜீ.ஜீயும் செல்வாவும்

சுதந்திர இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றின் மையப்புள்ளி ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றும் சா.ஜே.வே.செல்வநாயகம் என்ற இரு ஆளுமைகளாவர். 'இலங்கைத் தேசியம்' என்பதிலிருந்து விலகி, தமிழரின் தனிவழி அரசியலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ஜீ.ஜீ; தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் செல்வா. இந்த இரு அரசியல் ஆளுமைகள்தான் சுதந்திர இலங்கையின் தமிழ் அரசியலின் போக்கைத் தீர்மானித்தவர்கள். முன்பு ஒரே கட்சியில் இருந்து, பின்பு பிளவடைந்து இரு கட்சிகளாகி, பின்னர் காலத்தின் தேவை கருதி மீண்டும் கூட்டணி அமைத்து ஒன்றிணைந்தவர்கள். 'அரசியல்வாதிகள்' என்று, இன்று நாம் காணும் விம்பத்துக்குள் இவர்களை அடக்கிவிட முடியாது. இவர்கள் 'அரசியல் மேதகைகள்' (Statesmen). அவர்களின் அரசியல் கொள்கைகளில் நாம் முரண்படலாமேயன்றி அவர்களது அறிவிலோ, அரசியற் பண்பிலோ நாம் குறைகாண இயலாது. அதனாலேதான் அவர்கள் 'அரசியல்வாதிகள்' என்பதற்குப் பதிலாக 'அரசியல் மேதகைகள்' என்றறியப்படுதல் பொருத்தமாகிறது. இந்த இரு ஆளுமைகள் இரண்டரைமாத இடைவெளியில் காலமெய்தியமை, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாக அமைந்தது.

ஆசிய அரசியல் பரப்பில் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் கலாசாரம் மிகவும் அரிதானது. மேலைத்தேய அரசியல் பரப்பில் அரசியல்வாதிகள் அரசியலிலிருந்து ஓய்வு பெறுதல் என்பது சர்வசாதாரணமானதொன்று. அந்த அரசியல் கலாசாரம் ஆசியாவுக்கு ஏனோ, அதிலும் குறிப்பாக தெற்காசியாவிற்கு பெரிதாக வரவில்லை. ஜனநாயகத்தை நாம் ஏற்றாலும், மன்னர் காலத்தில், தன் மரணம் வரை மன்னர்கள் ஆண்டது போலவே பெரும்பாலும் எம்முடைய அரசியல் தலைமைகளும் தம் இறுதிவரை அரசியலில் செயற்பட்டுக் கொண்டே இருந்தார்கள். வெகு சிலரே அரசியலிலிருந்து முழுமையாக ஓய்வுபெற்று ஒதுங்கியவர்கள். அவ்வகையில் இந்த இருதலைவர்களும் தமது இறுதிமூச்சு வரை அரசியல் பரப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக சா.ஜே.வே. செல்வநாயகம் இறுதிவரை அரசியலில் செயற்படவே விரும்பினார் என அவருடைய சுயசரிதையில் பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் குறிப்பிடுகிறார்.

ஜீ.ஜீ. பொன்னம்பலம் மறைவு

ஜீ.ஜீ. பொன்னம்பலம் தனது இறுதிக் காலத்திலும் சில பல முக்கியமான அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான 'ட்ரயல்-அட்-பார்' உட்பட்ட அரசியல் வழக்குகளில் ஆஜராகியிருந்தார். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்துவேல் கருணாநிதிக்கு எதிரான 'சர்க்காரியா கமிஷன்' விசாரணையில் கருணாநிதி தரப்பில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆஜராகியிருந்தார். டெல்லி மத்திய அரசாங்கம் தமிழ்நாடு பற்றிய விசாரணையை மட்டும் பக்கச்சார்போடு நடத்துகிறது என்ற கடும் குற்றச்சாட்டை முன்வைத்த ஜீ.ஜீ. பொன்னம்பலம், 'சர்க்காரியா கமிஷன்' முன்பு டெல்லியின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். கருணாநிதிக்கெதிரான ஒவ்வொரு சாட்சியையும் தான் குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்தால் அவர்கள் பொய்யர்கள் என்று நான் நிரூபிப்பேன் எனச்சூளுரைத்தார். இவ்வழக்கிற்காக ஒரு சதம் பணம் கூட பெற மறுத்த ஜீ.ஜீக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமொன்றை மரீனா கடற்கரையில் நடத்திய முத்துவேல் கருணாநிதி 'சங்கத் தமிழ் இலக்கியம் உயர் நட்புக்கு வகுத்த இலக்கணத்தை ஜீ.ஜீ.பொன்னம்பலம் மாற்றியெழுதிவிட்டார்' என்று புகழாரம் சூட்டினார். அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகரும், இலங்கையின் பெருமைமிகு குற்றவியல் வழக்கறிஞர்களுள் ஒருவருமான ஜீ.ஜீ.பொன்னம்பலம் 1977 ஆம் ஆண்டு,  பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதி காலமானார். 

சா.ஜே.வே. செல்வநாயகம் மறைவு

மிக நீண்டகாலமாக 'பாகின்ஸன்ஸ்' நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சா.ஜே.வே.செல்வநாயகத்தின் உடல்நிலை நோயின் தீவிரத்தாலும், வயதின் மூப்பாலும் மோசமாகிக் கொண்டு வந்தது. நோயின் தீவிரத்தினால் நிற்க முடியாது அடிக்கடி விழவேண்டியதாக இருந்தது. இப்படி விழுவதை அவர் பகிடியாக 'இது சிறுகுழந்தை விழுவது போல விழுவது' என்று சொல்வார் எனச் செல்வநாயகத்தின் சுயசரிதையில் அதை எழுதிய அவரது மருமகன் பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் குறிப்பிடுகிறார். ஆனால் இப்படியாக ஒருமுறை கடுமையாக விழுந்ததில் மயக்கமுற்ற செல்வநாயகம் 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலமானார். தனது இறுதிக் காலத்தில் 'தமிழ் மக்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்' எனச் செல்வநாயகம் சொன்னதாக பலரும் குறிப்பிடுகின்றனர். இதனை நாம் விரக்தியின் வார்த்தைகளாகக் கூடக் கொள்ளலாம். இரண்டு தசாப்தங்களாக எத்தனையோ விட்டுக்கொடுப்புக்களுடன் முயற்சித்தும் தமிழ் மக்களுக்கேற்றதொரு அரசியல் தீர்வை பெறமுடியாமையின் விரக்தியாக இருக்கலாம், இல்லை‚ அவர் விரும்பிய அஹிம்சைக்கு மாறாக, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் எழுச்சி பெற்றமையினால் வந்த விரக்தியாக இருக்கலாம். எது எவ்வாறாயினும் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கடவுளின் கையிலே சமர்ப்பித்து அவர் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார். செல்வநாயகத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி நாடாளுமன்றத்தில் 1977 செப்டெம்பர் ஆறாம்; திகதி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆற்றிய உரையில் 'என்னுடைய சமுதாயத்திலோ, வேறெந்தச் சமுதாயத்திலோ செல்வநாயகம் என்னைக் கைவிட்டுவிட்டார் என்று சொன்ன ஒருவரைக்கூட நான் கண்டதில்லை' என்று குறிப்பிட்டார். 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் தோற்றபின்னும் டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கம் தொடர்வதற்கு செல்வநாயகம் வழங்கிய ஆதரவைக் குறித்து அவர் இதனைச் சொல்லியிருக்கலாம்.

அடுத்த தலைமை

இந்த மூன்று தலைவர்களினதும் அடுத்தடுத்த மறைவு தமிழ் மக்களைப் பெரிதும் பாதித்தது. ஏறத்தாழ நான்கு தசாப்தங்களாக தமிழ் மக்களின் முக்கிய பிரதிநிதிகளாக இருந்த ஜீ.ஜீயினதும், செல்வாவினதும் இழப்பு, தமிழ் அரசியல் பரப்பிலும் பெரிய வெற்றிடமொன்றை உருவாக்கியது. ஆயுதக் குழுக்களின் எழுச்சி தொடங்கியிருந்த காலப்பகுதியொன்றில் இந்த இடைவெளியை யார் நிரப்பப் போவது என்ற கேள்வி தொக்கி நின்றது. 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' முன்வைத்து தமிழர் அரசியல் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், அத்தீர்மானத்தின் பிதாமகர் உயிரிழந்தமை, அந்த தீர்மானத்தை முற்கொண்டு செல்லப்போவது யார் என்ற நிலையைத் தோற்றுவித்திருந்தது. செல்வநாயகத்தின் இறுதிக் காலத்தில் அவர் ஆலோசகராக இருக்க, அ.அமிர்தலிங்கமும் மு.சிவசிதம்பரமும் தேசிய அரசாங்கப் பேரவையில் (நாடாளுமன்றத்தில்) இல்லாத நிலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பேச்சாளராகச் செயற்பட்டவர் வி.என். நவரட்ணம் ஆவார். அ. அமிர்தலிங்கமும் மு.சிவசிதம்பரமும் களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். செல்வநாயகத்தின் மறைவுக்குப்பின் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தலைவராகப் பதவியேற்றதுடன் செல்வநாயகத்தின் 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு' எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஏகோபித்த மக்களாணையை பெற்றுக்கொள்ளத் திடசங்கற்பம் பூண்டார்.

மூழ்கும் கப்பல்

தலைவர்களின் மறைவினால் தமிழ் அரசியல் பரப்பு தளர்வுற்றிருக்க, தேசிய அரசியல் பரப்பில் நிறைய பரபரப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. 1976 ஒப்டோபரில் ரொணி டி மெல் மற்றும் பொனி ஜயசூரிய ஆகிய தேசிய அரசுப் பேரவை (நாடாளுமன்ற) உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகினார்கள். அவர்களைத் தொடர்ந்து நந்த எல்லாவல, பி.ஜீ. ஆரியதிலக்க, ரெனிசன் எதிரிசூரிய, ஏ.எம். ஜினதாச ஆகிய தேசிய அரசுப் பேரவை (நாடாளுமன்ற) உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகினார்கள். இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பேரிடியாக இருந்தது.

லங்கா சமசமாஜக் கட்சியானது ஆளும் ஐக்கிய முன்னணியிலிருந்து ஏலவே விலகிய நிலையில், 1977 பெப்ரவரியில் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணியிலிருந்து விலகியது. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமைச்சராகவிருந்த பீற்றர் கென்னமன் மற்றும் பிரதி அமைச்சராகவிருந்த பீ.வை.துடாவ ஆகியோர் அரசாங்கத்திலிருந்து விலகினர். அவர்களோடு  கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அரசு சபை (நாடாளுமன்ற) உறுப்பினர்களான எஸ்.ஏ.விக்ரமசிங்ஹ, எம்.ஜி.மென்டிஸ், சரத் முத்தெட்டுவேகம, ஏலியன் நாணயக்கார ஆகியோரும் அரசாங்கத்திலிருந்து விலகினர். அமைச்சராக இருந்த ரீ.பீ.சுபசிங்ஹவும் 1977 மார்ச் முதலாம் திகதி அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார். சிறிமாவின் அரசாங்கம் பிரபல்யம் இழந்திருந்தது. சிறிமாவும் தோழர்களும் காட்டிய 'சோசலிச மாயை' சாத்தியமாக்கப்படாததும் இதற்கொரு முக்கிய காரணம். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்த இவர்கள் குதித்து வெளியேறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

1977 பொதுத்தேர்தல் அறிவிப்பு

சிறிமா அரசாங்கத்துக்கு எதிர்ப்பு பல முனைகளிலும் வலுத்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற கோசம் முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. ஆனால் பிரதமர் சிறிமாவோ அதிகாரத்தைத் தக்க வைக்கவே முயன்றார். 1977 பெப்ரவரி 10 ஆம் திகதி பிரதமர் சிறிமாவோ நாடாளுமன்றத்தின் ஆயுளை 1977 மே 19 ஆம் திகதி வரை நீட்டித்தார். இந்நடவடிக்கையால் சினமுற்ற ஜே.ஆர். ஜெயவர்த்தன 1977 மே 22 ஆம் திகதிக்கு மேல் இந்த அரசாங்கம் நீடிக்குமானால் அத்தகைய சட்டவிரோத அரசாங்கத்தை மக்களைக் கொண்டு நான் தூக்கியெறிவேன் என்று சூளுரைத்தார்.

அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு வலுப்பெறவும் திடீரென 1977 மே 16 ஆம் திகதி பிரதமர் சிறிமாவோவின் ஆலோசனையின்படி ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ அன்று நள்ளிரவோட நாடாளுமன்றத்தைக் கலைக்க ஆணையிட்டார். அடுத்த பொதுத் தேர்தல் 1977 ஜுலை 21 ஆம் திகதி நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டதோடு, வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதித் திகதியாக 1977 ஜுன் ஆறாம் திகதி நிர்ணயிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்றம் 1977 ஓகஸ்ட் 26 இல் கூடும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தனது ஆட்சியைக் கைப்பற்றும் கனவு நனவாவதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதை ஜே.ஆர். ஜெயவர்த்தன உணர்ந்தார். ஐக்கிய தேசியக் கட்சி பலமானதொரு தேர்தல் பிரசாரத்திற்குத் தயாரானது. மறுபுறத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' அடிப்படையிலான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து மக்களாணையைக் கோரத் தயாரானது.

(அடுத்த வாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/178352/தம-ழ-த-தல-வர-கள-ம-வர-ன-மற-வ-#sthash.bxVKBiOE.dpuf
Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • Replies 196
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?  -என்.கே.அஷோக்பரன் இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க

1978ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்: வெற்றியை நோக்கி ஜே.ஆர்
 
09-08-2016 09:44 AM
Comments - 0       Views - 4

என்.கே.அஷோக்பரன் LLB (Hons) 

தமிழ் மக்களின்அபிலாஷைகள் என்ன? பகுதி - 52

தோல்விகளின் காரணம் என்ன என்று தேடிய ஜே.ஆர் 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த டட்லி சேனநாயக்கவின் மரணத்தைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவியேற்றதிலிருந்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வந்தார். 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த படுதோல்வியிலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டிய பெரும்பொறுப்பு ஜே.ஆரிடமிருந்தது. 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த தோல்வி வெட்கக்கேடானதொரு தோல்வியாகும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் அரசியலில் யாரென்றே தெரியாத புதுமுகங்களிடமெல்லாம் 2,500 இற்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்திலெல்லாம் தோல்வி கண்டிருந்தார்கள். 

 சுதந்திர இலங்கையில் 1952 தவிர ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த மற்றைய சந்தர்ப்பங்களில் எல்லாம் (1947, 1960 மார்ச், 1965) மிகச்சிறிய பெரும்பான்மையை, அல்லது கூட்டணியாட்சியையே அமைத்திருந்தது. 1952 ஆம் ஆண்டில் பெற்ற குறிப்பிடத்தக்க பெரும்பான்மையென்பது, “தேசபிதா” என்று கருதப்படும் டி.எஸ்.சேனநாயக்கவின் அகால மரணத்தோடு ஏற்பட்ட அனுதாப அலையின் விளைவுதான். மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1956 மற்றும் 1970 ஆகிய இரு சந்தர்ப்பங்களிலும் மாபெரும் எழுச்சிமிகு வெற்றியைப் பெற்றிருந்தது. அதுபோலவே ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் பாரதூரமான தோல்வியாக அவை அமைந்தன. 1956 இல் வெறும் எட்டு ஆசனங்களையும், 1960 ஜூலையில் 30 ஆசனங்களையும், 1970 இல் வெறும் 17 ஆசனங்களையும் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி மோசமான தோல்விகளைச் சந்தித்திருந்தது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்விகளைச் சந்தித்த போது கூட அவை கணிசமான ஆசனங்களைப் பெற்றிருந்தன. 1960 மார்ச்சில் 46 மற்றும் 1965 இல் 41 என தோல்வியிலும் சொல்லத்தக்க ஆசனங்களை சுதந்திரக்கட்சி பெற்றிருந்தது. ஜே.ஆர் இந்த வித்தியாசத்துக்கான காரணத்தை உன்னிப்பாக ஆராய்ந்ததாக ஜே.ஆரின் வாழ்க்கை வரலாற்று நூலிலே அதன் எழுத்தாளர் ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார்.  

அதிகார அரசியல் 

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசியல் எப்போதும் “அதிகார அரசியல்” சார்ந்ததாகவே இருந்தது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், அதனைத் தக்கவைப்பதுமே அரசியல் என்ற மாக்கியாவலியின் “இளவரசன்” பாணியிலான அரசியலை ஜே.ஆரில் காணலாம். ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கும் பின்னடைவுக்கும் சுதந்திரக் கட்சியின் எழுச்சிக்கும் காரணம் தேடிய ஜே.ஆருக்கு சில அடிப்படைகள் புலப்பட்டதாக ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார். இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ ஒரே தன்மையினதான வேட்பாளர்களையே களமிறக்கியிருந்தன. இரு கட்சிகளிலும் ஏறத்தாழ சம அளவிலான நிலவுடைமையாளர்களும் ஏனையோரும் இருந்தனர். அவ்வாறிருக்கையில் இரண்டு கட்சிகளுக்குமிடையிலான கொள்கை வேறுபாடு என்ன என்று கவனிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி “உள்ளவர்களின்” கட்சி என்ற வகையிலும், சுதந்திரக்கட்சி “இல்லாதவர்களின்” கட்சி என்ற வகையிலுமான பொது அபிப்பிராயம் உருவாகியிருப்பதை அவர் உணர்ந்தார். காலமாற்றத்துக்கேற்ப ஐக்கிய தேசியக் கட்சியும் மாறவேண்டும்; அதுவே ஆட்சியதிகாரத்தைப் பிடிப்பதற்கான வழி என ஜே.ஆர் உணர்ந்தார். 1970 இல் படுதோல்விக்குப் பின், வேறுவழியின்றி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை டட்லி சேனநாயக்க ஜே.ஆருக்கு வழங்கிய போது, தேசிய முக்கியத்துவம் மிக்க விடயங்களில் அரசாங்கத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயற்பட வேண்டும் என ஜே.ஆர் தனது முன்மொழிவைக் கட்சியின் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் முன்வைத்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு கட்சிக்குள் ஏற்பட்டதோடு, ஜே.ஆரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. இதன் தீவிரம் ஜே.ஆர் தன்னை கட்சியிலிருந்து நீக்காதிருக்க நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு பெறும் வரை சென்றது. ஜே.ஆரின் நோக்கம் சிறிமாவோ அரசாங்கத்தை ஆதரிப்பதல்ல! மாறாக, மக்களிடம் செல்வாக்கு மிக்க, தேசிய முக்கியத்துவம் மிக்க திட்டங்களை சிறிமாவோ அரசாங்கம் முன்னெடுக்கும் போது அதனால் வரும் மக்களின் அபிமானத்தின் பங்கை தாமும் பெறவேண்டும் என்பதே! அதாவது பெரும்பான்மை மக்கள் வெறுக்கும் காரியத்தை அரசாங்கம் செய்யும்போது அதனை எதிர்த்தல், பெரும்பான்மை மக்கள் விரும்பும் காரியத்தை அரசாங்கம் செய்யும் போது அதனை ஆதரித்து மக்களின் நன்மதிப்பைத் தாமும் பெறுதல். கட்சிக் கொள்கை என்பது ஜே.ஆரைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் பெறவில்லை. மாறாக மக்களின் அபிமானத்தை வெல்லுதல், ஆட்சியதிகாரத்தை எப்படியாவது கைப்பற்றுதல் என்ற பாணியிலேயே அவரது அரசியல் இருந்ததை நாம் உணரமுடியும். டட்லியின் மரணத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை அவர் ஏற்றபொழுது அவரது பார்வையானது “டட்லியிடமிருந்து எனக்குக் கிடைத்த இந்தப் பிணத்துக்கு உயிர் கொடுக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது” என்ற பாணியில் இருந்ததாக ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார்.  

மக்களின் அபிமானத்தை வெல்ல முயற்சி 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்ற நாளிலிருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன தான் விரும்பிய மாற்றங்களை கட்சியினுள் ஏற்படுத்தத் தொடங்கினார். “வீதிக்கிறங்குதல்”, “மக்களோடு மக்களாகப் போராடுதல்” என்பவை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த தலைவர்கள் பெரும்பான்மையானோருக்கு அந்நியமான விடயமாகவே இருந்தது. இந்த விடயத்தில் ஜே.ஆர் ஒரு விதிவிலக்கு! அரசியலுக்கு வந்த ஆரம்ப காலங்களிலிருந்தே “வீதிக்கிறங்குதல்”, “பாதயாத்திரை”, “சத்தியாக்கிரஹம்” போன்றவற்றை முன்னெடுப்பதில் ஜே.ஆர் மும்முரமாக இருந்தார். அத்தோடு பெரும்பான்மை வாக்குவங்கியைத் திருப்திப்படுத்தத்தக்க விடயங்களைச் செய்வதிலும் ஜே.ஆர் அக்கறையோடு இருந்தார். 1956 இல் “தனிச்சிங்களச் சட்டத்தை” கொண்டு வந்தது எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவாக இருக்கலாம். ஆனால் 1944 இலேயே இதற்கான முன்மொழிவைக் கொண்டு வந்திருந்தவர் ஜே.ஆர். இப்போது அவரைத் தடுக்க யாருமில்லை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அவர். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான “தேசிய தொழிலாளர் சங்கம்” 1970 தேர்தல் தோல்விக்குப் பின் செயலிழந்து போயிருந்தது. 1973 இல் கட்சித்தலைமைப் பதவியை ஏற்றதும் ஜே.ஆர் அதனை மீள இயங்கச் செய்வதில் மும்முரம் காட்டினார். ஆரம்ப காலங்களிலிருந்தே தொழிற்சங்கத்தை நடத்துவதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைகளுக்கு பெரும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இதற்கு மாற்றான சிந்தனையுடையவராக ஜே.ஆர் இருந்தார். அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், அதனைக் கொண்டு நடத்துவதற்கும் தொழிலாளர்களினது ஆதரவு அவசியம் என்பதை அவர் ஆரம்பத்திலிருந்து உணர்ந்திருந்தார்.  

பிரசார ஆயுதங்கள் 

சிறிமாவோவின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூடிய பொருளாதார முறையின் விளைவாக உணவுப் பொருட்களிலிருந்து, அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பலவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. பாண் வாங்குவதற்கு வரிசைகளில் நின்று மக்கள் அல்லற்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. இந்தத் தட்டுப்பாட்டை தனது முக்கிய பிரசார ஆயுதங்களுள் ஒன்றாக ஜே.ஆர் மாற்றினார். அடுத்ததாக சிறிமாவோவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலருக்கும் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன, இந்தக் குடும்ப ஆட்சிக்கெதிரான பிரசாரத்தையும் ஜே.ஆர் முன்னெடுத்தார். சிறிமாவோவின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது, இதனையும் தனக்குச் சாதகமாக்கி வேலையின்றித் தவித்த இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். தனது அமைச்சர்களின் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், முறைகேடுகள் பற்றியெல்லாம் சிறிமாவோ பாராமுகம் கொண்டிருந்தார். இதனையும் தனது பிரசாரத்தின் முக்கிய ஆயுதமாக ஜே.ஆர் கையிலெடுத்தார். பிரசார ஆயுதங்கள் கையிலிருந்தாலும் அதனை முற்கொண்டு செல்வதற்கான ஊடகங்கள் அரசாங்கத்தின் கைப்பிடிக்குள் இருந்தன. ஜே.ஆரின் உறவினரான எஸ்மண்ட் விக்ரமசிங்ஹவினதும் விஜேவர்த்தன குடும்பத்தினதும் நிறுவனமான “லேக் ஹவுஸ்” சிறிமாவோ ஆட்சியில் அரசுடமையாக்கப்பட்டிருந்தது. மற்றைய பத்திரிகை நிறுவனமான “ரைம்ஸ் குழுமம்” சிறிமாவோவின் புதல்வரான அநுர பண்டாரநாயக்கவின் கட்டுப்பாட்டிலிருந்தது. இன்னொரு பத்திரிகை நிறுவனமாக “சன் நிறுவனம்” அவசரகாலச் சட்டத்தின் கோரப்பிடியில் சிக்கியிருந்தது. இந்நிலையில் மக்களிடையே நேரடியாகச் செல்வதுதான் மிகப்பொருத்தமான பிரசார உத்தி என்பதை ஜே.ஆர் உணர்ந்திருந்தார்.  

கட்சிக்கு புத்துயிரூட்டிய ஜே.ஆர் 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதில் மும்முரம் காட்டிய ஜே.ஆர் நிறையப் புதியவர்களையும் இளைஞர்களையும் கட்சிக்குள் கொண்டு வந்தார், கட்சிக்குள் இருந்த பல இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் பல இளைஞர்கள் ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் களமிறக்கப்பட்டார்கள். இவர்களில் லலித் அதுலத்முதலி மற்றும் ஜே.ஆரின் உறவினரான ரணில் விக்ரமசிங்க ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஏற்கெனவே அரசியல் களத்திலிருந்த காமினி திசாநாயக்க, தஹம் விமலசேன, ரணசிங்க பிரேமதாஸ, றொனி டி மெல், நிஸ்ஸங்க விஜேரத்ன, விக்ரம வீரசூரிய, டிரோன் பெர்னான்டோ, நவீன் குணரத்ன ஆகியோருக்கும் ஜே.ஆர் முக்கியத்துவம் வழங்கினார்.  

1973 இலிருந்து ஜே.ஆர் முன்னெடுத்த மாற்றங்கள், நகர்த்திய காய்கள் எல்லாமே 1977 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்காகக் கொண்டேயிருந்தது. இதுவரை காலமும் செல்வந்தர்களாலேயே கட்சிக்கு நிதிவசதி தரப்பட்டது. இதனை மாற்ற நினைத்த ஜே.ஆர், ஒரு ரூபாய் அங்கத்துவத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, பொதுமக்களிடம் நிதி திரட்டியது மட்டுமல்லாமல், பெருமளவு மக்களைக் கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்த முறையின் மூலம் மட்டும் 1976 வரை ஏறத்தாழ 500,000 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 மே தின ஊர்வலத்தில் ஏறத்தாழ 300,000 பேர் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது ஜே.ஆரின் தேர்தல் வெற்றிக்கு ஆரூடம் சொல்வதாக இருந்தது.  

மாறிய களநிலமைகள் 

1977 தேர்தல் நெருங்கியபோது, இரு கட்சிகளினதும் கள நிலமைகள் மாறியிருந்தன. பணக்காரர்களினது கட்சி என்றறியப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்நாட்டின் ஏழை மக்களின் ஆதரவே அதிகமாக இருந்தது. முதலாளிகளின் கட்சி என்றறியப்பட்ட ஐக்கிய தேசிய கட்சிக்கு தொழிலாளர்களின் ஆதரவு கணிசமானளவில் இருந்தது. பெருங்கூட்டங்கள் நடத்துவதிலிருந்து மாறி அடிமட்டத் தொண்டர்களையும், மக்களையும் சந்திக்கும் “பொக்கற் கூட்டங்களை” அதிகளவில் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்தது. மறுபுறத்தில் சுதந்திரக் கட்சியோ குடும்ப ஆட்சியிலும், ஊழலிலும் சிக்கித் திணறியது. பிரதான ஊடகங்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு பெரும் பிரசாரங்களை முன்னெடுத்தது. பாரியளவிலான பொதுக்கூட்டங்களை, அரச போக்குவரத்துச் சேவை பேரூந்துகளில் மக்களைக் கொண்டுவந்து நடத்தியது.  

ஜே.ஆர் தான் செய்ய விரும்பிய மாற்றங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்தார். 1970 இல் படுதோல்வியடைந்திருந்த கட்சியை, தான் தலைமைப் பதவியேற்றதிலிருந்து நான்கு வருடங்களுக்குள் மக்களபிமானம் பெற்ற கட்சியாக மாற்றியிருந்தார். இதற்கு சிறிமாவோவின் அரசாங்கம் விட்ட தவறுகளும் முக்கிய காரணம், ஆனால் அதனைத் தனக்குச் சாத்தியமாக ஜே.ஆர் மாற்றியிருந்தார். 

தமிழர்களின் பிரச்சினை பற்றி ஐ.தே.க 

இலங்கையின் இனப்பிரச்சினை, “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை”த் தொடர்ந்து தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு கூறியது: 

“தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்கிறது. அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்று வழங்கப்படாமையானது தமிழ் மக்கள் தனிநாடு கோரும் ஒரு குழுவை ஆதரிக்கும் சூழலுக்கு இட்டுச்சென்றுள்ளது. நாடு முழுவதினதும் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையின் காரணத்திற்காக குறித்த பிரச்சினைகள் காலவிரயமின்றித் தீர்க்கப்பட வேண்டுமெனக் கட்சி கருதுகிறது. எமது கட்சி ஆட்சிக்கு வரும்போது பின்வரும் துறைகள் சார்ந்து அவர்கள் கொண்டுள்ள கவலையைத் தீர்ப்பதற்காக சகல சாத்தியமான வழிறைகளையும் முன்னெடுக்கும்: (1) கல்வி, (2) குடியேற்றம், (3) தமிழ் மொழியின் பயன்பாடு, (4) பொதுக் கூட்டுத்தாபனங்களில் வேலைவாய்ப்பு. நாங்கள் ஒரு சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டி, அதன் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம்.” 

ஜே.ஆரின் ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் பிரச்சினை பற்றித் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த இந்த விடயம் எவ்வளவு இனிப்பாக இருக்கிறது! ஆனால் தேர்தல் முடிந்த சிலகாலத்திலேயே, 1958 இற்குப் பின்னர் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு கொடிய இனக்கலவரத்துக்கு முகங்கொடுக்க வேண்டி வந்தது. யதார்த்தம் அவ்வளவு இனிப்பாக இருக்கவில்லை. 

(அடுத்த வாரம் தொடரும்) 

- See more at: http://www.tamilmirror.lk/178992/-ஆம-ஆண-ட-ப-த-த-த-ர-தல-வ-ற-ற-ய-ந-க-க-ஜ-ஆர-#sthash.xveo6Yev.dpuf
Link to post
Share on other sites
  • 2 weeks later...

1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலும் தமிழ் மக்களும்
 
15-08-2016 09:41 AM
Comments - 0       Views - 194

article_1471234538-Old.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 53)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சி பொருளாதார அபிவிருத்தியின் காரணமாக தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது அவசியம் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த வேளையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கலாசார, சமூக, பொருளாதார, தேசிய ரீதியிலான அமைப்புசார் சீர்திருத்தங்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் சகல மொழிப்பிரச்சினைகள் உள்ளிட்ட அமைப்புசார் சீர்திருத்தங்கள் பற்றி அரசாங்கத்துக்கு அறிவுறுத்தவும் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவும் அவை பற்றிய நடவடிக்கைகள் எடுப்பதற்குமான சகல தேசியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரச ஆலோசனைச் சபை அமைக்கப்படும் என்று கூறியது.

அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கிறன என்ற விடயத்தைக் கூட நேரடியாக அங்கீகரிக்கத் தயங்கியது. மாறாக 'அமைப்புசார் சீர்திருத்தங்கள்' பற்றியே அது பேசியது. அதன் ஒரு பகுதியாக சிறுபான்மையினர் எதிர்நோக்கும் மொழிப்பிரச்சினைகளையும் குறிப்பிட்டது. இந்த நாட்டில் மொழிப்பிரச்சினை காணப்பட்டது தமிழ்மொழி தொடர்பில் மட்டும்தான். அதனைக்கூடக் குறிப்பிட்டுக்கூறி அங்கீகரிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்பவில்லை.

'தோழர்களின்' நிலைப்பாடு

மறுபுறத்தில் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பை உருவாக்குவதில் சிறிமாவோடு இணைந்திருந்த 'தோழர்கள்' தற்போது அந்த மூழ்கும் கப்பலிலிருந்து விலகி, ஐக்கிய இடது முன்னணி என்ற பதாகையின் கீழ் தேர்தலைச் சந்தித்தனர். லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டான இந்த ஐக்கிய இடது முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'தேசிய சிறுபான்மை இனங்கள்' என்ற தலைப்பின் கீழ் 'அரசின் ஒற்றையாட்சித் தன்மை பேணப்படும் அதேவேளையில், பிராந்திய சுயாட்சி என்ற கொள்கையானது தேசிய கட்டமைப்பின் கீழ், மாவட்ட சபைகளினூடாக அமுல்படுத்தப்படும்.

ஏற்கெனவே உள்ள மொழியுரிமைகள் முற்றாக பேணப்படும் அதேவேளை, தமிழ்மொழி, தமிழ்பேசும் பிரதேசங்களில் நிர்வாக மொழியாக்கப்படுவதற்கு எமது அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். நிர்வாக ரீதியாக ஏலவே தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் முதலாவது குடியரசு அரசியல் யாப்புத் திருத்தப்படும். சிங்கள மொழிக்கு உத்தியோக பூர்வமொழி அந்தஸ்து வழங்கிய 'தனிச்சிங்களச்' சட்டத்துக்கும், சிங்கள மொழியின் அந்தஸ்துக்கும் எந்தவித குந்தகமுமின்றி, தமிழ் மொழி தேசிய மொழியாக அரசியலமைப்பு திருத்தமொன்றின் மூலம் ஆக்கப்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இனம், மதம் சாதி ரீதியான பாகுபாடு இல்லாதொழிக்கப்படும். இன, மத வெறுப்பைத் தூண்டுதல் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

'இருமொழி ஒரு நாடு; ஒருமொழி இரு நாடு' என்று 1956 இல் உரைத்த 'தோழர்கள்', தமது கொள்கையை மறந்துபோய், சிறிமாவோ பண்டாரநாயக்கவுடனான கூட்டின் விளைவாக, 1972 இல் 'தனிச்சிங்களச்' சட்டத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய முதலாவது குடியரசு யாப்பை உருவாக்கினர். இன்று அந்தக் கூட்டிலிருந்து விலகிய பின்புகூட 'தனிச்சிங்களச்' சட்டத்தை 1956 இல் அவர்கள் எதிர்த்தது போல, எதிர்க்கும் திராணியை, நேர்மையை இழந்து விட்டிருந்தார்கள். வாக்குவங்கி அரசியலுக்காக தமது கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டிருந்தார்கள் கற்றறிந்த தோழர்களான கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டீ. சில்வா உள்ளிட்டவர்கள்.

சிறிமாவின் திடீர்க் கரிசனை

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை பற்றி, தான் ஆட்சி செய்த ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாகக் கவலைகொள்ளாத சிறிமாவோ, தனது ஆட்சிக்காலம் இறுதியை எட்டிய காலப்பகுதியில் கரிசனை கொள்ளத் தொடங்கியிருந்தார். தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையானது, தனது ஆட்சியின் சிறப்புக்குக் கேடு என்பதோடு, வடக்கு - கிழக்கிற்கு அப்பால் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளின் அவசியப்பாடு அவர் இறங்கி வந்ததற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்.

1977 பெப்ரவரி 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் சிறிமாவோ தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு கூட்டத்துக்கு அழைத்திருந்தார். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதே கூட்டத்தின் நோக்கம். இங்கு உரையாற்றிய அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க 'தனிநாடு என்ற எண்ணத்தை அரசாங்கத்தால் கருத்திற் கொள்ள முடியாது. ஆனால் சிறுபான்மை மக்களின் நியாயமான கவலைகளை நாம் கவனத்திற் கொள்வோம்' என்றார். இதற்குப் பதிலளித்த சா.ஜே.வே. செல்வநாயகம் 'தனிநாடு என்ற கோரிக்கையில் சமரசத்துக்கு இடமில்லை. ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வெதனையும் இடைக்கால ஏற்பாடாக நாம் ஏற்றுக்கொள்வோம்' என்றார். கூட்டத்தின் பின்பு அரசாங்கம், 'சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயும் கூட்டம் சுமுகமாகவும் நட்புறவுடனும் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும்' என்று அறிவித்திருந்தது.

ஏழு வருடங்களாக தமிழ் மக்களின் இன்னல்கள் பற்றிப் பராமுகமாக இருந்த சிறிமாவோ அரசாங்கத்தின் இந்தத் திடீர் கரிசனையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்கள் இதனைத் தேர்தல் நேர கபட நாடகமாகவே கருதினர். குறிப்பாக 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' வழி நிற்பதற்கான அழுத்தத்தை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு தமிழ் இளைஞர்கள் வழங்கினர்.

ஆனாலும் 1977 மார்ச் 16 ஆம் திகதி நடந்த இரண்டாவது கூட்டத்திலும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கருத்துரைத்திருந்தனர். தமிழ்மொழியின் பயன்பாடு, அதிகாரப் பரவலாக்கம் பற்றி சிறிமாவோ இறங்கி வரத்தயாராக இருந்தார். அத்தோடு பல்கலைக்கழக அனுமதிகளின் தரப்படுத்தல் முறையை மாற்றியமைக்கவும் இசைந்தார். ஆனால் தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் சிறிமாவோவை நம்புவதற்குத் தயாராக இருக்கவில்லை. இது இரண்டு தசாப்தகால நம்பிக்கைத் துரோகங்களின் விளைவாக இருக்கலாம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் உறுதியாக இருந்த தமிழ்த் தலைமை

1977 மார்ச் 26 ஆம் திகதி திருகோணமலை இந்துக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மாநாட்டில் உரையாற்றிய சா.ஜே.வே. செல்வநாயகம் '1976 மே மாதம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் இந்த நாட்டிலுள்ள தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் பற்றி மாற்றியமைக்கப்பட முடியாத முடிவு ஒன்று எடுக்கப்பட்டு விட்டது. சிங்களத் தலைவர்களுக்கான எனது அறிவுரையானது, எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள்ƒ நாங்கள் கசப்புணர்வினைத் தவிர்த்துவிட்டு அமைதியாகப் பிரிவோம். இது இரு தேசங்களும் சமத்துவத்தின்பால் இணங்கிச்செல்ல பெரிதும் உதவும். தமிழ் மக்களுக்கு வேறு மாற்று வழியில்லை. இளைய தலைமுறையினரிடையே கசப்புணர்வு வளர்ந்து வருகிறது. அதனை இனியும் வளரவிடக் கூடாது. விட்டால் அது பெரும் முரண்பாட்டில் சென்று அந்நியத் தலையீட்டின் அவசியப்பாடு வரை செல்லும்.

ஆகவே இதனை அமைதியான முறையில் தீர்ப்பது அவசியம். சத்தியமே இறுதியில் வெல்லும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். பொறுமை எனும் யுத்தத்தில் நாம் வெற்றிபெறுவோம்' என்று குறிப்பிட்டார். நிலைமையின் தீவிரத்தை செல்வநாயகம் உணர்ந்திருந்தார். அதன் விளைவுதான் இந்த வார்த்தைகள். இந்தப் பிரிவு காலத்தின் தேவை. இதை அமைதியான முறையில் நடக்க நீங்கள் விடாவிட்டால் இளைஞர்கள் இரத்தம் சிந்தி இதனை அடைய எத்தனிப்பார்கள் என்பதே இந்த உரையின் உட்பொருள். இந்த உரை இடம்பெற்று 10 நாட்களிலேயே செல்வநாயகம் தனது வாழ்வின் இறுதியை எட்டிவிட்டார். தமிழ் இளைஞர்கள் அதிகம் நேசித்த 'தளபதியாக' இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரானார். 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு' மக்கள் அங்கீகாரம் பெறுவதே முன்செல்ல வேண்டிய வழி என்பதைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உணர்ந்தது.

ஐ.தே.க - த.ஐ.வி.கூ பேச்சுவார்த்தை

அதேவேளை அமிர்தலிங்கத்தைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அவர் அக்கறை கொள்ளவில்லை. அது மூழ்கிக் கொண்டிருந்த கப்பல் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர். ஆகவே தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியம் அதிகமிருந்த ஐக்கிய தேசியக் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது என்று அமிர்தலிங்கம் எண்ணினார். ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபக தலைவர்களுள் ஒருவரும், ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் நெருங்கிப் பழகியவருமான சௌமியமூர்த்தி தொண்டமான் இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றை கொழும்பு றோயல் கல்லூரிக்கு எதிரிலிருந்த தனது இல்லமொன்றில் ஏற்பாடு செய்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜே.ஆர் தலைமையில் எம்.டி. பண்டா மற்றும் எஸ்மண்ட் விக்ரமசிங்ஹ ஆகியோரும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் அமிர்தலிங்கம் தலைமையில் எம்.சிவசிதம்பரம் மற்றும் எஸ்.கதிரவேற்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர். முதலில் எதுவித கோரிக்கைகளையும் முன்வைக்காத தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், தற்போது நாம் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை; அதனை முன்வைக்க வேண்டிய நேரத்தில் நாம் முன்வைப்போம். தற்போது இந்த நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தைக் கொண்டு வரும் ஜே.ஆரின் முயற்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறினர். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் கோரிக்கைகளாக எதனை முன்வைப்பீர்கள் என்று ஜே.ஆர் கேட்டபோது, தமிழ் மொழியின் அந்தஸ்து, தமிழ் மக்களின் தொழில் வாய்ப்பு, திட்டமிட்ட குடியேற்றம், மொழிவாரித் தரப்படுத்தல், இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை ஆகிய பிரச்சினைகளுக்கான தீர்வினை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கோரினர். இதனை ஏற்றுக் கொண்டே ஐக்கிய தேசிய கட்சி இவற்றுக்கான தீர்வு பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருந்தது.

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி வடக்கு - கிழக்கிற்கு அப்பால் போட்டியிடப் போவதில்லை என்பதை ஐக்கிய தேசியக் கட்சி அறிந்திருந்தது. அதேவேளை வடக்கு - கிழக்கிற்கு அப்பால் கொழும்பு,

மலையகம் உள்ளிட்ட பலபிரதேசங்களிலும் கணிசமான அளவு தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்த வாக்குகளைக் கவர வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்தது. ஜே.ஆரைப் பொறுத்தவரை 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் என்பது வாழ்வா சாவா என்ற போராட்டம். அப்போது ஜே.ஆர் இளைஞரல்லƒ 1977 இல் அவருக்கு 70 வயது. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற இதுதான் தனக்கிருக்கும் இறுதி வாய்ப்பு என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். ஆக, அதனை அடைவதற்கு எந்தச் சமரசத்துக்கும் அவர் தயாராகவே இருந்தார்.

த. ஐ. வி. கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்

மறுபுறத்தில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான' அங்கீகாரத்தை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோரியது. 'தனது மொழியுரிமை, குடியுரிமை, மதவுரிமை என்பவற்றை இழந்து, தினம் தினம் தனது பாரம்பரிய தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களிடம் இழந்து கொண்டிருக்கும் ஒரு தேசத்துக்கு வேறு என்ன மாற்றுவழி இருக்கிறது? தரப்படுத்தலினால் தனது கல்வி வாய்ப்பை இழந்துள்ள, வேலைவாய்ப்பில் சமத்துவத்தை இழந்துள்ள ஒரு தேசத்துக்கு தற்போது வேறென்ன மாற்றுவழி இருக்கிறது? காடையர்களாலும், அரச பாதுகாப்புப் படையினராலும் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, கொல்லப்பட்டுக் கொண்டு, எதுவித உதவியுமின்றி நிர்க்கதியாக நிற்கும் தேசத்துக்கு வேறென்ன மாற்று வழியுண்டு? இருளிலே தனது அடையாளத்தை தேடிக்கொண்டு, விரக்தியின் விளிம்பிலே நிற்கும் தமிழ்த் தேசத்துக்கு வேறென்ன மாற்றுவழியுண்டு? ஒரே ஒரு மாற்றுவழிதான் இருக்கிறது. எமது முன்னோர் ஆண்ட மண்ணை இனி நாமே ஆள்வோம் என்ற இறுதியான, உறுதியான பிரகடனம்தான் அந்த ஒரே வழி. சிங்கள ஏகாதிபத்தியம் எமது தாய்மண்ணை விட்டு நீங்க வேண்டும்.

தமிழ்த் தேசத்தின் இந்தப் பிரகடனத்தை சிங்கள அரசுக்கு உணர்த்தும் ஒரு வழியாக, இந்த 1977 பொதுத் தேர்தலை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி காண்கிறது. ஆகவே நாம் தமிழ் தேசத்திடம் ஒரு சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சோசலிஸ தமிழீழ அரசை இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் அமைப்பதற்கான மக்களாணையைக் கோருகிறோம்' என்று தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது தமிழீழ அரசின் அமைப்பு, அதற்கான திட்டங்கள், கொள்கைகள் பற்றியெல்லாம் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் விரிவாக விளக்கியது.

தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த வண்ணமே அமைந்தன. ஐக்கிய தேசிய கட்சி வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்த அதேவேளை, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு தமிழ் மக்கள் தமது அமோக ஆதரவினை அளித்திருந்தார்கள்.

(அடுத்த வாரம் தொடரும்)

- See more at: http://www.tamilmirror.lk/179492#sthash.Y7glf7UB.dpuf
Link to post
Share on other sites
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்: 5/6 பெரும்பான்மை பெற்ற ஜே.ஆரும் அமிர்தலிங்கமும்
 
22-08-2016 09:46 AM
Comments - 0       Views - 172

article_1471839639-Juniu.jpgஎன்.கே. அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 54)

புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான மக்களாணை

ஐக்கிய தேசியக் கட்சி தனது 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'ஒரு சோசலிஸ ஜனநாயக சமூகத்தை உருவாக்கும் இலக்கின் நிமித்தமாக புதியதொரு அரசியலமைப்பொன்றை உருவாக்கவும் ஏற்றுக்கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும்' மக்களாணையை வேண்டியது. மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையானது அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அரசாங்கத்தின் அமைப்புமுறை பற்றியும் விளக்கப்பட்டிருந்தது. அத்தோடு புதிய அரசியலமைப்பின் ஊடாக அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் எனவும், ஒவ்வொரு குடிமகனினதும், அவர் சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, எந்த மதத்தை, இனத்தை, சாதியைச் சேர்ந்தவராக இருப்பினும், அவரது அடிப்படை மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் எனவும், ஊடக சுதந்திரமும் நீதித்துறையின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படுவதோடு அவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது சர்வவல்லமை படைத்த 'இளவரசன்' (மாக்கியாவலியின் இளவரசன்) கனவிற்கு ஜே.ஆர், மக்கள் அங்கீகாரம் பெற முனைந்தார். இதனை 'தர்மிஷ்ட' (தர்மத்தின்பாலான) அரசாங்கம் என்ற முகமூடிக்குள் மறைத்து மக்கள் முன் சமர்ப்பித்தார். பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் தமது வெற்றி தொடர்பில் ஜே.ஆர் உறுதியான நம்பிக்கையுடையவராக இருந்தார். பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும்போது, 'திருமதி பண்டாரநாயக்கவை நாம் இத்தேர்தலில் கட்டாயம் தோற்கடிப்போம். 100 க்கு 90 ஆசனங்களைக் கைப்பற்றி ஐக்கிய தேசிய கட்சி தனிக்கட்சி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும்' எனச் சூளுரைத்தார்.

பலத்துடன் களமிறங்கிய தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி

1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வடக்கு-கிழக்கில் பலமான எதிர்பார்ப்புடன் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி களமிறங்கியிருந்தது. சா.ஜே.வே.செல்வநாயகம் காலமாகியதன் பின்னர், அவரது தொகுதியான காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிடுவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டைத் தொகுதியில் தோல்வி கண்டிருந்தார். ஆனால் 1977 இல் காணப்பட்ட தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் எழுச்சி மிகு சூழலில் அவரால் வட்டுக்கோட்டைத் தொகுதியில் இலகுவாக வெற்றியீட்டக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் மறைந்த சா.ஜே.வே.செல்வநாயகம் வகித்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட அ.அமிர்தலிங்கம், மறைந்த சா.ஜே.வே.செல்வநாயகத்தின் தொகுதியான காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தார்.

1970 ஆம் ஆண்டு தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கே.ஜெயக்கொடி என்ற முன்னாள் மாவட்ட நீதிபதியிடம் தோல்விகண்டிருந்த 'உடுப்பிட்டிச் சிங்கம்' மு.சிவசிதம்பரம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் நல்லூர்த் தொகுதியில் களமிறங்கினார். உடுப்பிட்டி தொகுதியில் ரீ.ராசலிங்கம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாக களமிறங்கினார். 1970 தேர்தலில் மு.சிவசிதம்பரத்தின் தோல்விக்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக சாதிரீதியில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் இடதுசார்புக் கட்சிக்கு வாக்களித்தமையே என்று டீ.பீ.எஸ். ஜெயராஜ், மு.சிவசிதம்பரம் பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். ஆகவே, 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் உடுப்பிட்டி தொகுதியில் போட்டியிடுவதுதான் பொருத்தமானது எனக் கருதிய மு.சிவசிதம்பரம், நல்லூர் தொகுதியில் ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் இம்முறை களமிறங்கிய அருளம்பலத்தை எதிர்த்துக் களமிறங்கினார்.

யாழ்ப்பாணத் தொகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் எஸ்.யோகேஸ்வரன் என்ற சட்டத்தரணி களமிறக்கப்பட்டார். காங்கேசன்துறை சா.ஜே.வே. செல்வநாயகத்தின் தொகுதியாக இருந்தது போல, யாழ்ப்பாண தொகுதி ஜீ.ஜீ.பொன்னம்பலத்தினுடையதாக இருந்தது. ஜீ.ஜீ.யின் மறைவை அடுத்து அவரது மகனான குமார் பொன்னம்பலம் என்றறியப்பட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஜீனியர் யாழ்ப்பாணத் தொகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட விரும்பினார். இந்த வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. இதற்கு உட்கூட்டணிப்பூசல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. குமார் பொன்னம்பலம் என்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்ற சட்டத்தரணி, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தலைமைப்பதவிக்கு எதிர்காலத்தில் போட்டியாகிவிடக் கூடுமோ என்ற அச்சம், கூட்டணியில் பெரும்பான்மையாக இருந்த 'தமிழரசுக் கட்சிக்காரருக்கு' இருந்திருக்கலாம். இந்தக் கூட்டணி அமைந்ததன் முக்கிய நோக்கமே தமிழ்க் காங்கிரஸ் - தமிழரசுக் கட்சி என்ற இருபிரிவு அரசியலை விடுத்து, தமிழ் மக்களின் நன்மை கருதி ஒன்றிணைதலாகும். ஆனால் கூட்டணிக்குள் உட்பூசல் உருவாகியமையானது, அந்த ஆரோக்கியமான இலக்கைச் சிதைப்பதாகவே அமைந்தது. தனக்கான யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினால் நிராகரிக்கப்பட்டதன் பின், சுயேட்சை வேட்பாளராக யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட குமார் பொன்னம்பலம் தீர்மானித்தார். அதேவேளை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து சிறிமாவோ அரசாங்கத்தை ஆதரித்ததாக விலக்கப்பட்ட சி.எக்ஸ்.மாட்டீனும் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டார்.

கிளிநொச்சித் தொகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாக வீ.ஆனந்தசங்கரி, ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்ட அமைச்சர் சீ.குமாரசூரியரை எதிர்த்துக் களமிறங்கினார். சிறிமாவின் தமிழ் அரசியலுக்கான நம்பிக்கை நட்சத்திரமாக வளர்க்கப்பட்டவர் சீ.குமாரசூரியர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புத் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்தது. இந்தத் தொகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் சீ.ராஜதுரையும், தமிழரசுக் கட்சி சார்பில் காசி ஆனந்தனும் களமிறக்கப்பட்டனர். இரட்டை அங்கத்தவர் தொகுதியாதலால் இரண்டு ஆசனங்களைக் குறிவைத்து இருவர் களத்தில் இறக்கப்பட்டிருந்தனர். ஆனால் தனக்குப் போட்டியாக இன்னொருவரையும் தேர்தல் களத்தில் இறக்கியிருந்ததை சீ.ராஜதுரை விரும்பவில்லை. இதேவேளையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாக மூதூர் தொகுதியில் எஸ்.எம்.மக்கீனும், சம்மாந்துறை தொகுதியில் எச்.எல்.எம்.ஹஸ்ஸீமும், கல்முனைத் தொகுதியில் ஏ.எம்.சம்சுதீனும் களமிறங்கினர். திருகோணமலைத் தொகுதியில் இராஜவரோதயம் சம்பந்தன் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் களமிறங்கினார்.

வடக்கு - தெற்கு முரண்பாடு

'தனிநாட்டுக்கான' மக்களாணையை வேண்டி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி களமிறங்கியிருந்தது. இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களில் தேர்தல் பிரசாரங்களின் தன்மையும் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரங்களின் தன்மையும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இதற்குக் காரணம், இந்த மக்களின் பிரச்சினைகளின் முக்கியத்துவம் அடிப்படையில் வேறுபட்டிருந்தது. தெற்கிலே மூடிய பொருளாதார முறைக்கெதிரான, அடக்குமுறை, ஜனநாயக விரோதக் குடும்ப ஆட்சி மற்றும் வல்லாட்சிக்கு எதிரான பிரசாரங்கள் மக்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியினால் கொண்டு செல்லப்பட்டன. வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களில், தமிழ் மக்களுக்கு இனி இருக்கும் ஒரே வழி 'தனிநாடு' தான் என்ற பிரசாரம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இறுதிப்பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: 'சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் தமிழ்த்தேசம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். அத்தகைய முடிவை சிங்கள அரசாங்கத்துக்கும் முழு உலகத்துக்கும் பறைசாற்றுவதற்கான வழி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்தலாகும். இவ்வாறு வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் தமிழ்பேசும் பிரதிநிதிகள் இலங்கையின் தேசிய அரசுப் பேரவையில் (நாடாளுமன்றத்தில்) உறுப்பினர்களாக இருப்பதோடு, தமிழீழத்தின் தேசிய அரசுப் பேரவையினதும் அங்கத்தவர்களாக இருப்பார்கள். இந்தத் தமிழீழ தேசிய அரசுப் பேரவையானது தமிழீழ அரசின் அரசியலமைப்பை உருவாக்குவதோடு அதனை அமைதி வழியில் அல்லது நேரடிப் போராட்ட நடவடிக்கையினூடாக நடைமுறைக்குக் கொண்டுவரும்'.

வடக்கைப் பொறுத்தவரை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பெரும் எழுச்சியைக் கண்டது. ஆனால், கிழக்கு மாகாணத்தின் பல்லினத் தன்மை வடக்கைப் போல இலகுவானதொரு சவாலாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இருக்கவில்லை.

பொதுத்தேர்தலும் முடிவுகளும்

1977 ஜூலை 21 ஆம் திகதி பொத்துவில் தொகுதியைத் தவிர்ந்த ஏனைய தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. ஒரு வேட்பாளர் மரணமடைந்த காரணத்தினால் பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் செப்டம்பர் 12 அன்று நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு அதிகளவில் - 86.7மூ இடம்பெற்றிருந்தது. இது மாற்றத்தை மக்கள் வேண்டியதற்கான அறிகுறியாகவே இருந்தது. மொத்த வாக்குகளில் 50.9மூ வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்டதுடன், மொத்த ஆசனங்களில் 82மூ ஆசனங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. மொத்தமுள்ள 168 ஆசனங்களில் 140 ஆசனங்களைக் கைப்பற்றி ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சுதந்திர இலங்கையில் ஒரு தனிக் கட்சி பெற்ற அதிகூடிய 5/6 பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெறும் எட்டு ஆசனங்களைப் பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. சுயேட்சை வேட்பாளரொருவர் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொண்டார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களை வெற்றிகொண்டு, நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இடம்பெற்றது. இதன் விளைவாக சுதந்திர இலங்கையில் ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு வாய்த்தது.

கொழும்பு மாவட்டத்தை பொறுத்தவரையில், கொழும்பு மத்தி மூன்றங்கத்தவர் தொகுதியில் ஜாபிர் காதர் மற்றும் ஹலீம் இஷாக் ஆகியோர் வெற்றிபெற்றதைத் தவிர ஏனைய சகல தொகுதிகளிலும் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியினர் வெற்றியீட்டியிருந்தனர். இவர்களுள் ஜே.ஆர். ஜெயவர்த்தன கொழும்பு மேற்குத் தொகுதியிலும் ரணசிங்ஹ பிரேமதாஸ கொழும்பு மத்தி தொகுதியிலும் லலித் அத்துலத்முதலி ரத்மலானை தொகுதியிலும் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கம்பஹா மாவட்டத்தின் களனி தொகுதியில் சிறில் மத்தியூவும் பியகம தொகுதியில் ரணில் விக்ரமசிங்ஹவும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வெற்றியீட்டியிருந்தனர். நுவரெலிய - மஸ்கெலிய மூன்றங்கத்தவர் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட காமினி திசாநாயக்க வெற்றி பெற்றிருந்தார். அத்தோடு அதே தொகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சௌமியமூர்த்தி தொண்டமானும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட அநுர பண்டாரநாயக்கவும் வெற்றிபெற்றிருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வி அடைந்த நிலையிலும் தனது சொந்தத் தொகுதியான அத்தனகல்ல தொகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க வெற்றியீட்டியிருந்தார். கம்பஹா தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.டீ.பண்டாரநாயக்க வெற்றியீட்டியிருந்தார். தொம்பே தொகுதியில் போட்டியிட்டிருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க ஏறத்தாழ 2,500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.

வடமாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சகல தொகுதிகளிலும் வெற்றியீட்டியிருந்தது. நல்லூர் தொகுதியில் 89.42% வாக்குகள் பெற்று 'உடுப்பிட்டிச் சிங்கம்' மு.சிவசிதம்பரம் மாபெரும் வெற்றிபெற்றிருந்தார். காங்கேசன்துறைத் தொகுதியில் அ.அமிர்தலிங்கம் 85.41% வாக்குகளைப்பெற்று பெருவெற்றியீட்டியிருந்தார். மானிப்பாய் தொகுதியில் வி.தர்மலிங்கம் 83.99% வாக்குகளைப் பெற்று பெருவெற்றியீட்டியிருந்தார். யாழ்ப்பாணத் தொகுதியில் கடும் போட்டிக்கு மத்தியில் யோகேஸ்வரன் 56.6மூ வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார். அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டிருந்த குமார் பொன்னம்பலம் 34.7% வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலையில் கடும் போட்டிக்கு மத்தியில் இரா.சம்பந்தன் 51.76% வாக்குகள் பெற்று வெற்றியீட்டியிருந்தார். இருஅங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் போட்டியிட்ட சீ.ராஜதுரை கடுமையான போட்டிக்கு மத்தியில் 24.7% வாக்குகள் பெற்று வெற்றியீட்டியிருந்தார். அதே தொகுதியில் போட்டியிட்ட காசி ஆனந்தன் 20.8% வாக்குகள் பெற்று மூன்றாவதாகவே வந்தார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் கிழக்கில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் யாவரும் தோல்வி கண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இருவேறு பிரசாரங்களை முன்னெடுத்திருந்த ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் தாம் போட்டியிட்ட இடங்களில் பெருவெற்றியடைந்திருந்தன. இது இந்நாட்டின் இனப்பிளவு நிலையை தெளிவாக எடுத்துக் காட்டியதுடன், பிரிவினைக்கான தமிழ் மக்களின் அங்கீகாரமாகவும் அமைந்தது. இருகட்சிகளுக்கும் தாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இருந்தது.

(அடுத்த வாரம் தொடரும்)

- See more at: http://www.tamilmirror.lk/180118#sthash.ID2Pfuk9.dpuf
Link to post
Share on other sites
வன்முறையோடு தொடங்கிய ஜே.ஆரின் ஆட்சிக்காலம்
 
29-08-2016 09:54 AM
Comments - 0       Views - 190

article_1472444867-Old.jpgஎன்.கே. அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 55)

தேர்தல் முடிவுகள்

ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களைக் கைப்பற்றி 5ஃ6 பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் இரண்டாவது மிகப்பெருங்கட்சியாக உருவானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த 147 பேரில் வெறும் சிறிமாவோ பண்டாரநாயக்க, அநுர பண்டாரநாயக்க உட்பட எட்டுப் பேர் மட்டுமே வெற்றியீட்டியிருந்தனர். சிறிமாவோ ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களில் மைத்திரிபால சேனநாயக்கவைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்விகண்டிருந்தனர். சிறிமாவோ ஆட்சியில் பலம் வாய்ந்த அமைச்சர்களாக இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ஹெக்டர் கொப்பேகடுவ, ரீ.பீ.இலங்கரத்ன, பதியுதீன் முஹம்மட் போன்றவர்களும் தோல்வி கண்டிருந்தனர். சிறிமாவின் ஆட்சியில் ஒரே ஒரு தமிழ் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த செல்லையா குமாரசூரியரும் தோல்வி கண்டிருந்தார். இதைவிடவும் 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மஹாஜன எக்ஸத் பெரமுண (மக்கள் ஐக்கிய முன்னணி) ஆகியவற்றைச் சேர்ந்த 'தோழர்கள்' எவருமே வெற்றிபெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சௌமியமூர்த்தி தொண்டமான் வெற்றிபெற்றிருந்தார்.

புதிய பிரதமர் ஜே.ஆர்

1977 ஜுலை 22 இல், காபந்து பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தனது பதவி விலகலை ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவவிடம் சமர்ப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. பொதுவில் தேர்தல் தோல்வி நிச்சயமானதும், காபந்து பிரதமர் எதுவித தாமதமுமின்றி புதிய பிரதமருக்கு வழிவிட்டு பதவி விலகுவதுதான் மரபு. ஆயினும் ஜுலை 22 மாலையில் பிரதமர் சிறிமாவோ தன்னுடைய இராஜினாமைவை ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவவிடம் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து 1977 ஜுலை 23 இல், ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்த்தன இலங்கையின் பிரதம மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.

ஜே.ஆரின் அமைச்சரவை

1977 ஜுலை 23 லேயே, ஜே.ஆரின் அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சர் ஆகிய பொறுப்புக்களை ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். நிதியமைச்சராக றொனி டி மெல் பதவியேற்றுக் கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே தமிழரான கணபதிப்பிள்ளை வில்லியம் தேவநாயகம் (இவர் கிழக்கு மாகாணத்தின் கல்குடா தொகுதியில் வெற்றி பெற்றவர்) நீதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ரணசிங்ஹ பிரேமதாஸ உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சராகவும் தேசிய அரசுப் பேரவையின் தலைவராகவும் பதவியேற்றுக் கொண்டார். இதுவரை காலமும் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பிரதமரே இருந்து வந்தார். முதன்முறையாக பிரதமரல்லாது தனியான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஏ.ஸி.எஸ்.ஹமீட்

பதவியேற்றுக் கொண்டார். பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சராக மொன்டகியு ஜயவிக்ரமவும் வர்த்த அமைச்சராக லலித் அதுலத்முதலியும் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சராக நிஸ்ஸங்க

விஜேரத்னவும் பதவியேற்றுக் கொண்டனர். கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அமைச்சராக சிறில் மத்யூவும் நீர்ப்பாசனம், சக்தி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக காமினி திசாநாயக்கவும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக டீ.பீ.விஜயதுங்கவும் போக்குவரத்து அமைச்சராக எம்.எச்.முஹம்மத்தும்

பெருந்தோட்ட கைத்தொழில்

அமைச்சராக எம்.டீ.எச்.ஜெயவர்த்தனவும் பதவியேற்றுக் கொண்டனர். விமலா கன்னங்கர கப்பற்போக்குவரத்து, விமானப்போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதுடன், அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சராகவும் விளங்கினார். வின்சன்ட் பெரேரா நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆடைக் கைத்தொழில் அமைச்சராக விஜயபால மென்டிஸூம், உணவு மற்றும் கூட்டுறவு அமைச்சராக சிரிசேன பண்டார ஹேரத்தும், விவசாய மற்றும் காணி அமைச்சராக லயனல் சேனநாயக்கவும் தொழில் அமைச்சராக கப்டன் சீ.பி.ஜே.செனவிரத்னவும் கலாசார அலுவல்கள் அமைச்சராக ஈ.எல்.பீ.ஹூருல்லவும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக ஷெல்டன் ஜயசிங்ஹவும் பதவியேற்றுக் கொண்டனர்.

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜுலை 27 அன்று நடைபெற்றதுடன் மறுநாள் 28 ஆம் திகதி அன்று புதிதாக பதவியேற்கும் பிரதமர்கள் தலதா மாளிகை செல்லும் மரபொன்றின் தொடர்ச்சியாக, பிரதமர் ஜே.ஆர் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். தேரவாத பௌத்தத்தின் முக்கிய சின்னங்களுள் ஒன்றான தந்ததாது பாதுகாக்கப்படும் தலதா மாளிகைக்கு செல்வதானது, அடையாள ரீதியாக, தேரவாத பௌத்தம் மீதான தமது விசுவாசத்தை வெளிப்படுத்தும் அம்சமாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்முறைக் கொண்டாட்டம்

ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் வெற்றியை ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வன்முறைகொண்டு கொண்டாடத் தொடங்கினார்கள். கொழும்பிலும் தென்னிலங்கையின் வேறு சில பாகங்களிலும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. ஆங்காங்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். ஏழு ஆண்டுகளின் பின் வரலாறு காணாத பெரும்பான்மை பலத்தைக் கைப்பற்றிய வெறியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மீது ஐக்கிய தேசிய கட்சியின் காடையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். கண்டி, கேகாலை, கம்பஹா மற்றும் குருநாகலை மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சி காடையர்களின் கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றன. மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் பலரும் தமது வீடுகளிலிருந்து வெளியேறி வேறு புகலிடங்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாற்றுக்கட்சிக் காரர்களின் வியாபார நிலையங்கள்; தீக்கிரையாக்கப்பட்டன. சிறிமாவின் 'அவசரகால' வல்லாட்சியை மாற்றுவேன் என்று உறுதியளித்து மாபெரும் வெற்றியைத் தக்கவைத்த ஜே.ஆரின் ஆட்சியின் ஆரம்பமே வன்முறைத் தீயுடன் தொடங்கியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரையும் இடதுசாரிக் கட்சியினரையும் நோக்கி நடத்தப்பட்ட இந்த கொலைவெறித் தாக்குதல்கள், தமிழர்களை நோக்கித் திரும்ப ஒரு மாத காலம் கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம்

1971 இல் ஏறத்தாழ 68 சதவீத சிங்கள - பௌத்தர்களைக் கொண்டிருந்த இலங்கையில், இரு பெரும் 'தேசிய' கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளை தம்மிடையே பங்கிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், வடக்கு - கிழக்கை மையமாகக்கொண்ட, இலங்கை சனத்தொகையில் ஏறத்தாழ 11 சதவீதத்திற்கும் குறைவான இலங்கைத் தமிழர்களின் ஆதரவுபெற்ற ஒரு கட்சி இந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாவது என்பது அரிதிலும் அரிதான நிகழ்வே‚ அத்தகையதொரு அரிய சந்தர்ப்பம் 1977 பொதுத் தேர்தலின் பின்னர் அமைந்தது. 140 ஆசனங்களைப் பெற்று ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்த போது, இரண்டாவது பெரிய கட்சியாக 18 ஆசனங்களைப் பெற்ற தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியே காணப்பட்டது. 1977 ஜுலை 30 ஆம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு வவுனியாவில் கூடியது. சௌமியமூர்த்தி தொண்டமான் மலையகத்தில் தனியாக தனது சேவல் சின்னத்தில் களமிறங்கியிருந்தாலும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மூன்று ஸ்தாபக தலைவர்களில் ஒருவர். அம்மூவரில் அன்று உயிரோடிருந்தவர் அவர் மட்டுமே. மேலும், தனித்து போட்டியிட்டிருந்தாலும், 'வடக்கிலே உதயசூரியன் எழும்போது, மலையகத்தில் சேவல் கூவும்' என்ற பாணியிலான ஒன்றுக்கொன்று ஆதரவான பிரசாரத்தை இருதரப்பும் செய்திருந்தது. ஆகவே தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் குறித்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முன்மொழிந்தார். ஆனால் இதனை தொண்டமான் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் இலங்கை தொழிலாளர்

காங்கிரஸின் பிரதிநிதியாகவே

நாடாளுமன்றத்தில் செயற்பட விரும்புவதாக தொண்டமான் குறிப்பிட்டார். தமிழ் ஐக்கிய முன்னணி, 'தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக' மாறி 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' முன்வைத்ததிலிருந்து, தொண்டமான் அதிலிருந்து விலகியே செயற்பட்டார். வடக்கு-கிழக்கு தமிழர்களின் பிரச்சினையும் அதற்கான தீர்வுகளும் வேறுƒ மலையக மக்களின் பிரச்சினைகளும் அதற்கு அவர்கள் வேண்டும் தீர்வுகளும் வேறுƒ தனிநாடு அல்லது தமிழீழம் என்பது மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காது என்ற தனது நிலைப்பாட்டில் சௌமியமூர்த்தி தொண்டமான் உறுதியாக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியல்ல; அவர் வேண்டியது, மாறாக அமைச்சர் பதவியே என்பது ஏறத்தாழ ஒரு வருட காலத்தில் தெளிவானது.

சௌமியமூர்த்தி தொண்டமான், அமிர்தலிங்கத்தின் முன்மொழிவை நிராகரித்ததைத் தொடர்ந்து, நல்லூர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் (தேசிய அரசுப் பேரவை உறுப்பினர்) தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவருமான எம்.சிவசிதம்பரம் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை முன்மொழிந்தார். இதனை பட்டிருப்பு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பீ.கணேஷலிங்கம் வழிமொழிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுவினால் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். எம்.சிவசிதம்பரம் நாடாளுமன்றக் குழுவின் உப-தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' படி 'தனிநாடு பெறுவோம்' என்று வாக்குக்கேட்டவர்கள் இலங்கையின் நாடாளுமன்றத்திலே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப்போகிறார்கள் என்பது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்பால் ஈர்ப்புக் கொண்டிருந்த இளைஞர்களிடம் பெருமளவு சினத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியது. இளைஞர்கள் பலரும் இதற்கு பகிரங்கமாகவே தமது எதிர்ப்பினைப் பதிவு செய்தனர். கூட்டணித் தலைவர்களுக்கு இது பெரும் சிக்கலை உருவாக்கியது. உடனடியாக பகிரங்க அறிக்கையை வெளியிட்ட அவர்கள், நாடாளுமன்றத்தை எமது தனிநாட்டுக் கோரிக்கைக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச ஆதரவினைத் திரட்டும் களமாக நாம் பயன்படுத்த எண்ணுகிறோம் என்று கூறினார்கள்.

1977 ஓகஸ்ட் 4, புதிய நாடாளுமன்றம் (தேசிய அரசுப் பேரவை) கூடிய போது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் வீற்றிருந்தார். ஒரு தமிழர் அவ்வாசனத்தை அலங்கரிக்கும் முதல் தடவை அதுவாகும். ஆனால் அதனைக் கொண்டாடும் மனநிலையில் தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இருக்கவில்லை. நாடாளுமன்றத்தின் சபாநாயகராக அவைத் தலைவர் ரணசிங்ஹ பிரேமதாஸவினால் கோட்டே தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்ததிஸ்ஸ டீ அல்விஸ் முன்மொழியப்பட அதனை வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற மரபுகளின்படி எதிர்க்கட்சித் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வழிமொழிந்தார். சபாநாயகரை வரவேற்று உரையாற்றும் போது, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது தேசிய அரசுப் பேரவையைக் கொண்டு நடத்துவது தொடர்பில் சபாநாயகரோடு இணங்கிச்செயற்படுமென்றும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தமது நாடாளுமன்ற செயற்பாடுகளை தமிழ் மொழியிலேயே நடத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

ஆளுங்கட்சியாக ஜே.ஆர். தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியாக அமிர்தலிங்கம் தலைமையில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ஒரு சிங்கள-தமிழ் நேரெதிர் நிலை உருவானமையைப் போன்றதொரு எண்ணத்தைத் தோற்றுவித்தது. இதன் விளைவாக ஒரு மிகப்பெரும் இனக்கலவரத்தின் கோரத்தை தமிழ் மக்கள் சந்திக்க வேண்டி வந்தது. பச்சைக் கட்சியின் ஆட்சி, தமிழர்களுக்கு சிவப்பாக விடியத் தொடங்கியது.

(அடுத்த வாரமும் தொடரும்)

- See more at: http://www.tamilmirror.lk/180636/வன-ம-ற-ய-ட-த-டங-க-ய-ஜ-ஆர-ன-ஆட-ச-க-க-லம-#sthash.FlPA2diN.dpuf
Link to post
Share on other sites
  • 2 weeks later...
1977: மீண்டும் ஓர் இனக்கலவரம்
 
06-09-2016 10:06 AM
Comments - 0       Views - 172

article_1473136795-JR.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 56)

தலைதூக்கிய வன்முறை

ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 5/6 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததும் முதலில், முன்பு ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மீது ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வன்முறையைப் பிரயோகித்தனர். இயற்கையாகவே இந்த வன்முறைத் தீயின் அடுத்த இலக்காக தமிழ் மக்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது. இதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. வடக்கு - கிழக்கு தமிழர் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளெங்கும் ஜே.ஆரின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி வரலாறு காணாத வெற்றியையீட்டியிருந்தது. ஆனால் வடக்கு-கிழக்கு தமிழர் மண்ணில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பாரிய வெற்றியையீட்டியிருந்தது.

ஜே.ஆரின் வெற்றி எப்படி நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கொண்ட புதிய அரசியலமைப்புக்கும், நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கும் மக்களாணையை ஜே.ஆருக்குப் பெற்றுத்தந்ததோ, அதுபோலவே தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வெற்றியானது, 'தனிநாட்டுக்கான' அல்லது 'தமிழீழத்திற்கான' மக்களாணையை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள். இது ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் தென்னிலங்கைக்கும் பெரும் உறுத்தலாகவே இருந்தது. அமிர்தலிங்கம் இலங்கைப் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை ஏற்றிருப்பினும், எடுத்த எடுப்பில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்காது இணக்கப்பாட்டுக்கான தீர்வு ஒன்றை எதிர்பார்த்திருந்த போதிலும், வடக்கில் உதயமாகியிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களும் தனிநாட்டுக்காக அவை கொடுத்த அழுத்தமும் ஜே.ஆரின் அரசாங்கத்திற்கு உறுத்தலாகவே இருந்தன.

பொலிஸார் நடத்திய தாக்குதல்

இந்தத் தணல் உள்ளூர கொதித்துக் கொண்டிருந்த போது, 1977 ஆகஸ்ட் 12 மற்றும் 13 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் யாழ் றோட்டரிக் கழகம் ஒரு களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் சிலர் நுழைவுச்சீட்டு வாங்காது உள்நுழைய முற்பட்டதில் ஏற்பட்ட முரண்பாட்டில், அவர்கள் சிவில் உடையில் இருந்தமையினால் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டார்கள் என இந்த சம்பவம் பற்றி பதிவு செய்த பலரும் குறிப்பிடுகிறார்கள். இது பற்றி வோல்டர் ஷ்வாஸ் தன்னுடைய 'இலங்கைத் தமிழர்கள்' என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: '1977 கலவரமானது, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில், தேர்தலில் தோல்வி கண்டிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு விசுவாசமான பொலிஸார் சிலர் அங்கு இடம்பெற்ற களியாட்டமொன்றில் புகுந்து தமிழ் மக்களுக்கு கோபமூட்டும் வண்ணம் நடந்து கொண்டனர்' எனக்குறிப்பிடுகிறார். எது எவ்வாறாயினும், பொதுமக்களால் சிவில் உடையில் வந்து முரண்பாட்டில் ஈடுபட்ட பொலிஸார் தாக்கப்பட்டதற்குப் பின்னர், இதற்குப் பதிடியாக மறுநாள் பொலிஸார் பாதசாரிகளைக் கடுமையாகத் தாக்கினர். இது பற்றி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு உடனடியாக அறிவித்தும் எந்த உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மறுநாள் பொலிஸார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்களை மறித்தபோது, அவர்கள் அந்தப் பொலிஸாரின் மேல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இதற்குப் பதிலடியாக மறுநாள் களத்திலிறங்கிய பொலிஸார் கடைகளுக்குத் தீ வைத்ததுடன் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். பொலிஸாரின் இந்தக் கோர வெறியாட்டத்திற்கு நான்கு உயிர்கள் பலியானதுடன், ஏறத்தாழ 30 பேர் வரை காயமடைந்ததுடன், பெறுமதி வாய்ந்த சொத்துக்களும் சேதமாகின. இதற்கு மறுநாள் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் இறங்கிய பொலிஸ் உடையில் இல்லாத பொலிஸார், யாழ். சந்தைக் கட்டடத்தின் பெரும்பகுதியை தீக்கிரையாக்கினர். அத்தோடு அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் பலியாகினர்.

அமிர்தலிங்கம் பொலிஸாரால் தாக்கப்படுகிறார்

இந்த வன்முறைச் செய்தி கேட்ட எதிர்க்கட்சித் தலைவரும், யாழ். மாவட்ட காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சம்பவம் நடந்த ஸ்லத்திற்குச் சென்றார். அங்கு அவர் பொலிஸாரின் வசைச்சொல்லுக்கும் மிரட்டலுக்கும் ஆளானது மட்டுமல்லாது, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் தாக்குதலுக்கும் ஆளானார். இது பற்றி 1977 ஓகஸ்ட் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் (தேசிய அரசுப் பேரவையின்) ஒத்திவைப்புப் பிரேரணையின் கீழ் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், 'நான் பிரச்சினைக்குரிய சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றபோது, பொலிஸார் என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டினர். நான் இங்கு உங்கள் முன் உயிருடன் நிற்பது எனது அதிர்ஷ்டமேயன்றி வேறில்லை. அவர்கள் பொலிஸ் உடையில் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்குரிய தனிப்பட்ட அடையாள எண்களை அணிந்திருக்கவில்லை.

நீங்கள் ஏன் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொலைசெய்கிறீர்கள் என்று வினவியபோது, அந்தப் பொலிஸார் என்னைத் தூஷண வார்த்தைகளால் திட்டியதுடன், என் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டார்கள். நான் எனது அடையாளத்தை அங்கிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் கூறியபோது, அவரின் பின்னால் நின்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியின் பின்முனையினால் என்னைத் தாக்கினார்' என்று குறிப்பிட்டதுடன், பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவை நோக்கி, 'இந்த விதத்திலா நீங்கள் நாட்டை ஆள்கிறீர்கள்? நாங்கள் பொலிஸாரின் வன்முறையை எதிர்கொண்ட நிலையில் இருக்கிறோம்' என்று கேள்வியெழுப்பினார்.

ஜே.ஆரின் ஆணவப்பதில்

ஜே.ஆரின் பதில் ஆரோக்கியமானதாக இருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பதில் உரையாற்றியிருந்த ஜே.ஆர் 'நீங்கள் தனிநாடு கோருகிறீர்கள். திருகோணமலை உங்கள் தனிநாட்டின் தலைநகர் என்கிறீர்கள். நீங்கள், வன்முறை வழியை நாம் வேண்டவில்லை. ஆனால் தேவையேற்படின், நேரம் வரும்போது வன்முறையைப் பயன்படுத்துவோம் என்கிறீர்கள். இதைக் கேட்டு மற்ற இலங்கையர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்கள் எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவார்கள்? நீங்கள் சண்டையிட விரும்பினால், இங்கு சண்டை நடக்கட்டும். நீங்கள் சமாதானத்தை விரும்பினால், இங்கு சமாதானம் இருக்கட்டும். இப்படித்தான் அவர்கள் பதில் சொல்வார்கள். இதை நான் சொல்லவில்லை, இலங்கை மக்கள் இதனைச் சொல்கிறார்கள்' என்று குறிப்பிட்டார். வன்முறையைத் தணித்து சமாதானம் விரும்பும் ஒரு தலைவரின் கருத்தாக நிச்சயம் இது அமைய முடியாது. மாறாக வன்முறையைத் தூண்டும் பாணியிலான நடத்தையையே ஜே.ஆரில் காணக்கூடியாக இருந்தது.

வன்முறையைத் தடுக்காதது ஏன்?

வன்முறையைத் தூண்டுவதற்கு ஜே.ஆருக்கு இருந்த நியாயங்கள் தான் என்ன? தேவைகள்தான் என்ன? 5ஃ6 தனிப்பெரும் பெரும்பான்மையைப் பெற்றிருந்த ஒரு பலம்மிக்க அரசாங்கத்தின் தலைவர் ஏன் சிறுபான்மை இனம் ஒன்றின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட, அல்லது அதற்குத் துணைபோக, அல்லது ஏற்பட்ட வன்முறைகளைத் தடுக்காதிருக்க வேண்டும்? இதற்குப் பல ஆய்வாளர்களும் பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள். சிலர், வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினதும், அதன் 'தனிநாட்டுக்' கோரிக்கையினதும் எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஜே.ஆருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இருந்ததாகவும் அது இவ்வன்முறைகளுக்கு முக்கிய காரணம் என்றும் கருதுகிறார்கள்.

ஆனால் தமிழ் மக்களின் 'தனிநாட்டுக்' கோரிக்கையின் எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின், அவர்களை மேலும் தாக்குவதன் மூலமும் அவர்களை மேலும் விரக்தியடையச் செய்வதன் மூலமும் சாதிக்க முடியுமா? அது தமிழ் மக்களை 'பிரிவினையை' நோக்கியல்லவா தள்ளிச்செல்லும். வடக்கு-கிழக்கில் எழுச்சியுற்ற தமிழ் இளைஞர் இயக்கங்களை வேரறுக்கும் நோக்கம் ஜே.ஆர் அரசாங்கத்திற்கு இருந்ததாகவும், அதன் ஒருபடியாக இவ்வன்முறைச் சம்பவம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள், ஆனால், இந்த வன்முறைகள் தமிழ் இளைஞர்களை மேலும் வன்முறைப் பாதைக்கு அழைத்துச் சென்றதே தவிர, அந்த இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதாக அமையவில்லை.

பரவத் தொடங்கிய வன்முறைத் தீ

ஆனால், இந்த வன்முறைச் சம்பவங்கள் இத்தோடு நின்றுவிடவில்லை. யாழ்ப்பாணத்தில் தொடங்கிய வன்முறைத் தீ வேகமாக மற்றப் பிரதேசங்களுக்கும் பரவத் தொடங்கியது. 1977 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கணிசமானளவு சிங்களவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அவர்கள் மீது தாக்குதலோ, தமிழ் இயக்கங்களால் பதில் தாக்குதல்களோ நடத்தப்படவில்லை.

ஆனால், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுக் கொண்டிருந்த சிங்கள மாணவர்கள் எந்த விதத் தாக்குதலுக்கும் ஆளாகாத போதும், தாக்குதல் அச்சம் காரணமாக பேரூந்துகளில் யாழ்ப்பாணத்தை விட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வெளியேற்றமானது, தமிழ் மக்கள் சிங்களவர்களைத் தாக்கியது போன்ற மாயத்தோற்றத்தை நாடெங்கிலும் பரவச் செய்தது. இதன் விளைவாக தமிழர் பெரும்பான்மையினரல்லாத பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படத் தொடங்கின. தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையின்படிதான் இந்த வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின போன்றதான ஒரு மாயை சிங்கள மக்களிடையே உருவாகியிருந்தது, அல்லது உருவாக்கப்பட்டிருந்தது. ஆகவே தனிநாடு வேண்டும் என்று தமிழ் மக்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வெளிப்படுத்தியிருந்த அவர்களது அரசியல் அபிலாஷையை

அடக்குவதற்கான ஒரு வழியாக தமிழ் மக்கள் மீதான வன்முறையை சிங்களப் பேரினவாதிகள் கையாளத் தொடங்கினார்கள்.

பாராமுகம் காட்டிய ஜே.ஆர் அரசாங்கம்

இதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆதரவளித்தது என்பதுதான் கசப்பான உண்மை. தமிழர்கள் சண்டையை விரும்பினால், நாம் சண்டைக்குத் தயாரென நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதன் ஊடாகச் சிங்கள மக்களை வன்முறைப் பாதையில் செல்ல ஜே.ஆர்

தூண்டியிருக்கிறார் என்பதுதான் நிதர்சனம். மேலும், வன்முறைகளை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் ஆரம்பித்திருந்தனர். அதை ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தடுக்கவில்லை. மேலும், நாடு முழுவதும் வன்முறைகள் பரவிய போதும், பொலிஸார் பராமுகமாகவே இருந்தனர்.

1977 காலப்பகுதியில் அநுராதபுரத்திலும் கணிசமானளவு தமிழர்கள் வசித்து வந்தார்கள். குறிப்பாக அநுராதபுரத்தில் அரச சேவையில் கணிசமானளவு தமிழர்கள் ஈடுபட்டிருந்தார்கள். 1977 வன்முறைத் தாக்குதல்கள் அநுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்களைக் கடுமையாகப் பாதித்தது. இந்தக் கலவரத்தில் அநுராதபுர வைத்தியசாலை தாக்கப்பட்ட அநுபவத்தை பதிவு செய்யும் அன்றைய அநுராதபுர வைத்தியசாலையில் வைத்தியராகக் கடைமையாற்றிய வைத்தியர் கே.என்.கே.விஜயவர்த்தன அநுராதபுர வைத்தியசாலைக்கு காடையர்கள் தீ வைத்ததையும் இந்த வன்முறைகள் ஏற்படும் என எதிர்பார்த்து தாம் வைத்தியசாலைக்கு மேலதிக பாதுகாப்புக் கோரியபோது அதனைச் செய்வதற்கு பொலிஸாரோ,

அமைச்சர்களோ தயாராக இருக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். அவரது கட்டுரையின் இறுதியில் 'காரணகாரியங்கள் எதுவாக இருப்பினும், உதவியற்ற, தம்மைத்தாமே பாதுகாக்க முடியாது, அப்பாவி மனிதர்களைத் தாக்குவதையும் கொலை செய்வதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது' என்கிறார்.

ஆனால் இந்த இனவாத வெறிக்கு வடக்கு-கிழக்கு தமிழகளுடன் மலையகத் தமிழர்களும் ஆளானார்கள். குறிப்பாக சிங்கள மக்கள் கணிசமானளவு வாழும் பிரதேசங்களில் வாழ்ந்த மலையகத் தமிழ் மக்கள், அவர்களும் தமிழர்கள் என்ற காரணத்தினால் பெரும் தாக்குதல்களை எதிர்கொண்டார்கள்.

(அடுத்த வாரம் தொடரும்)

- See more at: http://www.tamilmirror.lk/181246/-ம-ண-ட-ம-ஓர-இனக-கலவரம-#sthash.KgQwgTPZ.dpuf
Link to post
Share on other sites

1977 இனக்கலவரத்தின் விளைவுகள்
 
12-09-2016 09:30 AM
Comments - 0       Views - 8

article_1473653099-jrj.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 57)

இலங்கை முழுவதும் தமிழ் மக்கள் பாதிப்பு

1958 இனக்கலவரத்துக்கு பின்பு இலங்கையில் இடம்பெற்ற மிகப் பாரதூரமான இனக்கலவரம் 1977 இனக்கலவரமாகும். ஸ்ரீமாவோவின் கொடுமையான ஆட்சியிலிருந்து மாற்றம் கிடைக்காதா என்று நினைத்தவர்களுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி கொடூரமான மாற்றத்தைத் தந்தது. 1977 ஓகஸ்ட் 15-16 ஆம் திகதிகளிலிருந்து இரண்டு வார காலங்களுக்கு நீண்ட இந்தக் கலவரத்தில் இலங்கையின் பலபாகங்களிலும் வாழ்ந்த தமிழர்கள் உயிரிழப்புக்கள் உள்ளிட்ட பாரதூரமாக பாதிப்புக்களைச் சந்தித்தனர். இந்தக் கலவரம் எதிர்பார்க்கப்படாததல்ல என்று வோல்டர் ஷ்வார்ஸ் குறிப்பிடுகிறார்;. 'இலங்கையில் இனங்களுக்கிடையேயான உறவு கடும்சிக்கலான நிலையை அடைந்திருந்தது. அது எத்தகைய உரு எடுக்கும் என்பதுதான் கேள்வி' என்று அவர் எழுதினார். இனங்களுக்கிடையேயான முறுகல் நிலை இனக்கலவரம் என்ற உருவைப் பெற்றது.

'முன்பு இடம்பெற்றவை போன்று இது சிங்கள - தமிழ் மக்களிடையேயான இனக்கலவரம் அல்ல, மாறாக தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனவழிப்புத் தாக்குதல். சில சிங்கள மக்களும் இதில் பாதிப்படைந்திருந்தாலும், பெருமளவுக்கு உயிரிழப்புக்களையும் படுகாயங்களையும் கடும் பாதிப்புக்களையும் அடைந்தவர்கள் தமிழ் மக்களே! பரவலாக நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே! தமது வீடுகளையும் கடைகளையும் இழந்தவர்களில் பெருமளவானவர்கள் தமிழர்களே! மிகப் பெரும் இழப்பைச் சந்தித்தவர்கள் தமிழர்களே. ஏறத்தாழ 75இ000 பேரை அகதிகளாக்கிய 1977 இனக்கலவரத்தின் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே! இதில் இந்திய வம்சாவளி தமிழர்களும் உள்ளடக்கம்' இவ்வாறு 1977 கலவரம் பற்றி தனது 'தமிழருக்கெதிரான பயங்கரவாதத்திற்குப் பின்னால்: இலங்கையின் தேசியப் பிரச்சினை' (ஆங்கிலம்) என்ற நூலில் எட்மண்ட் சமரக்கொடி குறிப்பிடுகிறார்.

அக்கறையற்றிருந்த அரச இயந்திரம்

கலவரங்களைத் தடுக்க பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக இதுபோன்ற பாரதூரமான கலவரம் நாட்டில் ஏற்படும்போது அரசாங்கம் தாமதிக்காது உடனடியாக அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும். ஆனால் ஜே.ஆர் உடனடியாக அவரசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த விரும்பவில்லை; அது தமது கொள்கைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் விரோதமானது என்ற கருத்தினை முதலில் முன்வைத்தார். சிறிமாவோவின் ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதி அவசரகாலச் சட்டத்தின் கோரப்பிடியிலேயே கழிந்தது.

ஆகவே தாம் அதனைச் செய்யப்போவதில்லை என்று அவர் அதற்கு காரணம் கற்பித்தார். பின்னர் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அறிவித்தது. அத்தோடு அவசர காலநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் கலவரத்தில் ஈடுபட்டவர்களால் அது கவனத்திற்கொள்ளப்படவில்லை, ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்த வேண்டிய பொலிஸாரும் பராமுகமாக இருந்தனர். இதற்கு இராணுவமும் பொலிஸாரும் பெருமளவு சிங்களவர்களைக் கொண்டிருந்தமை முக்கிய காரணமாக இருக்கலாம் என தமது 'இலங்கை: பயங்கரத் தீவு' (ஆங்கிலம்) என்ற நூலில் ஈ.எம்.தோன்டனும் ஆர். நித்தியானந்தனும் குறிப்பிடுகிறார்கள். மேலும், பொலிஸ் மற்றும் இராணுவம் ஏறத்தாழ முற்றுமுழுதாக சிங்களவர்களையே கொண்டமைந்தது என்றும் இதற்கு 'தனிச்சிங்களச்' சட்டம் முக்கிய காரணம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கொழும்பு மாவட்டத்தில் வாழ்ந்துவந்த தமிழர்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். தமது வீடுகளை, வியாபார ஸ்தலங்களை தாக்குதல்களுக்கு இரையாக்கிவிட்டு நிர்க்கதியாக நின்ற இந்தத் தமிழ் மக்கள் கொழும்பில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள். பின்னர் கப்பலில் ஏற்றப்பட்டு வடமாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இலங்கை ஒரு நாடு; ஒரு தேசம் என்று சொல்வதில் இலங்கை அரசாங்கம் ஒரு போதும் பின்னின்றதில்லை, அதுபோல வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை ஒருபோதும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுமில்லை. ஆனால் கொழும்பிலே வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், கலவரத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நின்றபோது, அவர்களை கப்பலிலேற்றி வட மாகாணத்திற்கே இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்தது. இது வரலாற்றின் பிற்பகுதியில் கலவரங்கள் ஏற்பட்ட வேளைகளிலும் பின்பற்றப்பட்டது.

பாதிப்பைச் சந்திந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள்

இதேவேளை சிங்கள மக்கள் பரந்து வாழ்ந்த பகுதிகளில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்களும் இந்தக் கலவரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். காலங்காலமாக மலையகத்தில் வாழ்ந்து வந்த அம்மக்கள், இந்தக் கலவரத்தினால் நிர்க்கதியாக நின்றபோது அவர்களையும் வவுனியா மற்றும் திருகோணமலைக்கு இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்தது. இதைப்பற்றி பேனாடீன் சில்வா பின்வருமாறு எழுதுகிறார்: '1977 இனக்கலவரத்தின்போது ஒரு புதிய விடயம் முன்நிற்கிறது. இருவாரங்கள் நடந்த இந்தக் கலவரம் தமிழர் மற்றும் சிங்களவரிடையே பெரும் கசப்புணர்வைத் தோற்றுவித்துள்ளது. இம்முறை பெருமளவிலான தமிழர்கள் மீண்டும் மேல், மத்திய மற்றும் தென்மாகாணங்களிலுள்ள தமது வாழ்விடங்களுக்குத் திரும்ப விரும்பவில்லை; அல்லது அஞ்சுகிறார்கள். இலங்கைப் பிரஜாவுரிமை பெற்ற ஒரு சில இந்திய வம்சாவளியினர் கூட அதனை மறுதலித்துவிட்டு இந்தியா செல்ல முயலத்தொடங்குகிறார்கள், மற்றைய இந்திய வம்சாவளியினர் கூட சிங்களப் பிரதேசங்களைத் தவிர்த்து வடக்கு மற்றும் கிழக்கில் குடியேற விரும்புகிறார்கள். அங்குதான் தமக்குப் பாதுகாப்பு என்று அவர்கள் உணர்கிறார்கள்'.

ஓகஸ்ட் 29 ஆம் திகதி அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸ் இந்தக் கலவரத்தில் அதுவரை ஏறத்தாழ 112 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் 25,000 வீடற்றவர்களாக ஆக்கப்பட்டதாகவும் ஏறத்தாழ 1,000 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டதாகவும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் நாடுமுழுவதும் கலவரங்கள் தொடர்பில் கிட்டத்தட்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டு, ஏறத்தாழ 2,500 பேர் நாடுமுழுவதுமுள்ள சிறைகளில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது. அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் பத்திரிகை என்பதால் எண்ணிக்கைகள் குறைத்துக் காண்பிக்கப்பட்டதாகவும் உண்மையான பாதிப்பு இதைவிட அதிகம் எனவும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

1977 கலவரம் பற்றி பாதிரியார் திஸ்ஸ பாலசூரிய இப்படி குறிப்பிடுகிறார்: '1977 ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் பெருமளவான இலங்கையர்கள் துன்பம்தரும் நாட்களை எதிர்கொண்டனர், களவு, கொள்ளை, தீமூட்டல் மற்றும் சட்டவிரோத செயல்கள் அனைத்தும் பரவலாக நடைபெற்றன. காடையர்கள் அப்பாவிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தினர், இதனால் உயிர்கள் பலியானதோடு, மிகக்கொடூரமான காயங்களுக்கும் மக்கள் ஆளானார்கள். இவையெல்லாம் வெளிப்படையில் இனவாதத்தின் விளைவுகளே. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி ஏறத்தாழ 100 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ 50,000 பேர் தமது வாழ்விடங்களை இழந்து வடமாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீடுகள், வியாபார ஸ்தலங்கள் என்பன முதலில் கொள்ளையடிக்கப்பட்டு, பிறகு தீக்கிரையாக்கப்பட்டன. இனரீதியான பிரிவினை மக்களின் மனங்களுக்குள் மீண்டும் ஊடுருவி விட்டது. அப்பாவிக் குழந்தைகள் தமது தாயையோ, தந்தையையோ இழந்துள்ளனர். பல்லாயிரம் தோட்டத்தொழிலாளர்களும் இந்தப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்'.

சர்வதேச குரல்கள்

இதேவேளை இலங்கைத் தமிழர்களைக் கடுமையாகப் பாதித்த 1977 இனக்கலவரத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் குரல்கள் எழத்தொடங்கின. திராவிட முன்னேற்றக் கழகம் 1977 இனக்கலவரத்திற்கு எதிராக பொது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், தமிழக சட்டப்பேரவையில் 1977 கலவரத்தை கண்டிக்கும் தீர்மானமொன்றை நிறைவேற்றியதுடன், பாரதப் பிரதமரிடம் இந்த இனக்கலவரம் பற்றி விசாரிக்க இலங்கைக்கு ஓர் இந்தியக் கபினட் அமைச்சரை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டது. இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படும் வேளைகளில் தமிழ்நாட்டில் குரல்கள் எழுவது சகஜம். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இலங்கைவாழ் தமிழர்கள் மீது காட்டும் அக்கறையானது அவர்களது அரசியல் இலாபம் சார்ந்தது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இந்தக் கலவரம் மீது இந்தியாவினது மட்டுமல்ல உலகினது கவனமும் திரும்பியது. 1977 செப்டெம்பர் 27 அன்று லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் சேர்.ஜோன் ‡பொஸ்டர், டேவிட் அஸ்டர், லுயி ப்ளொம் கூப்பர், டிங்க்ள் ‡புட், றொபேட் பேர்லி, ஜேம்ஸ் போஸெட்,

மைக்கிள் ஸ்கொட் ஆகியோர் 'இனவெறிக்கு எதிரான விழிப்புணர்வு மேற்குலகத்தில் ஏற்பட்டுவரும் நிலையில், தமிழருக்கெதிராக இன ஒடுக்குமுறை தொடர்பில் நாம் பாராமுகமாக இருந்துவிட முடியாது. இதற்கெதிராக குரல் எழுப்ப வேண்டிய விசேட கடப்பாடு பிரித்தானியருக்கு உண்டு. ஏனெனில் பிரித்தானியாவே இம்மக்களை முப்பது வருடங்களுக்கு முன்பு அவர்களது அயலவர்களின் தயவில் விட்டுவிட்டு வந்தது. அம்மக்களுக்கு எமது அக்கறையும் ஆதரவும் தேவை' என்று குறிப்பிட்டார்கள்.

சன்சொனி ஆணைக்குழு

நிலைமை முற்றியிருந்த வேளையில் பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்னாள் பிரதம நீதியரசரான மிலானி க்ளோட் சன்சொனியைச் சந்தித்து, 1977 இனக்கலவரம் பற்றிய விசாரணைகளை தனிநபர் விசாரணை ஆணைக்குழுவாக இருந்த விசாரித்துத் தர வேண்டினார். விசாரணையின் முடிவுகளுக்கேற்ப நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனியைத் தேர்ந்தெடுத்தமைக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அவர் பறங்கியர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். அதாவது சிங்களவர் தரப்புக்கோ, தமிழர் தரப்புக்கோ பக்கம் சாராது அவர் நடுநிலையாக விசாரணைகளை மேற்கொள்வார் என்ற எண்ணத்திலேயாகும். ஆனால் உத்தியோகபூர்வமாக இந்த விசாரணை ஆணைக்குழு சற்று தாமதமாகவே அமைக்கப்பட்டது. 1977 நவம்பர் 9ம் திகதி அன்றைய ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ விசாரணை ஆணையாளர் சட்டத்தின் கீழ் 1977 ஓகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 15 வரை நாடுமுழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பற்றி விசாரிக்க முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனியை ஆணையாளராக நியமித்தார். இந்த ஆணைக்குழு நடைமுறையில் 'சன்சொனி ஆணைக்குழு' என்று அறியப்பட்டது. இந்த ஆணைக்குழு தன்னுடைய விசாரணைகளை 1978 பெப்ரவரி 8ம் திகதி ஆரம்பத்தது. மொத்தம் 298 அமர்வுகளின் பின்னர் 1979 ஒக்டோபர் 12ம் திகதி ஆணைக்குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டது.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை ஏற்றதும் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமானதொரு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், உண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி தமிழ் மக்களுக்கு முன்பிருந்ததை விட பாரதூரமான ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டிருந்தது. ஏறத்தாழ 19 வருடங்களின் பின் மீண்டும் ஓர் இனக்கலவரம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டது மட்டுமல்லாது, தமிழ் மக்களின் தீர்வு பற்றிய எந்தக் கரிசனமுமின்றி ஜே.ஆரின் ஆட்சி சென்று கொண்டிருந்தது. பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவைப் பொறுத்தவரையில் அவரது முதல் கரிசனையாக இருந்தது, புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை இலங்கையில் அறிமுகப்படுத்தலாகும். மற்றப்படி கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நீதி என்பது அன்றளவில் சன்சொனி ஆணைக்குழுவோடு நின்றுவிட்டது. சன்சொனி ஆணைக்குழுவின் அறிக்கை கூட நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது, ஜே.ஆர் அரசாங்கம் தமிழர்கள் மீது கொண்டிருந்த அக்கறைக்கு மிகப்பெரிய சான்றாகும்.

(அடுத்த வாரம் தொடரும்)

- See more at: http://www.tamilmirror.lk/181666/-இனக-கலவரத-த-ன-வ-ள-வ-கள-#sthash.dL6DQX1i.dpuf
Link to post
Share on other sites
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியும் புதிய அரசியலமைப்பும்
 
19-09-2016 10:03 AM
Comments - 0       Views - 4

article_1474259727-JRJaye.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ்மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -58)

சன்சொனி ஆணைக்குழு அறிக்கை 

1978 பெப்ரவரி எட்டு முதல் 1979 ஒக்டோபர் 12 வரை இடம்பெற்ற சன்சொனி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்பதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் உள்ளிட்டதாக 952 பேர் சாட்சியமளித்தனர். 275 பேர் சத்தியக்கடதாசி ஊடாக சாட்சியமளித்தனர்.  

சில நிறுவனங்கள் சட்டத்தரணிகளினூடாக தமது சாட்சியத்தைப் பதிவுசெய்தன. 277 பக்கங்களைக் கொண்டிருந்த சன்சொனி ஆணைக்குழுவின் அறிக்கையானது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். சன்சொனி ஆணைக்குழு அறிக்கை 1977 கலவரத்திற்கான அடிப்படைக்காரண கர்த்தாவாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைக் குறிப்பிடும் வகையில் அமைந்தது.  

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீது வளர்த்துவரும் வெறுப்புணர்வும் எதிர்ப்புணர்வும்தான் இந்தக் கலவரத்துக்கு அடிப்படை என்று சன்சொனி ஆணைக்குழு அறிக்கை குறிப்பிட்டது. மேலும், 1977 ஓகஸ்ட் 13 முதல் செப்டெம்பர் 15 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களினால் கடும் பாதிப்புக்களைச் சந்தித்த மக்களுக்கு அவர்களது பாதிப்புக்குரிய நட்டஈடு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என சன்சொனி ஆணைக்குழு தனது அறிக்கையில் பரிந்துரையை முன்வைத்தது.  

ஆனால், சன்சொனி ஆணைக்குழு பரிந்துரைத்த நட்டஈடு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவேயில்லை. ஜே.ஆர், சன்சொனி ஆணைக்குழுவை ஒரு கண்துடைப்பாகவே உருவாக்கியிருக்க வேண்டும் என்பதையே இது புலப்படுத்துகிறது.  

மறந்துபோன தேர்தல் வாக்குறுதி 

1977 இனக்கலவரம் தமிழ் மக்களின் 'தனிநாட்டுக்' கோரிக்கையை வலுப்படுத்தியது என்பதுதான் உண்மை. ஆயுதக்குழுக்கள் மீதான தமிழ் இளைஞர்களின் ஆர்வமும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. தமிழ் மக்களை அணைத்துச் செல்ல வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழ்மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டமையானது, பிரிவினைக்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்தது. ஐக்கியத் தேசியக் கட்சி தன்னுடைய தேர்தல் வாக்குறுதியிலிருந்தும் விலகிச் செயற்பட்டது என்பதுதான் நிதர்சனம்.  

தமிழ்மக்கள் இந்த நாட்டில் சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள், தாம் ஆட்சிக்கு வந்ததும் அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜே.ஆர் தலைமையிலான ஐக்கியத் தேசியக் கட்சித் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது, ஆனால், அதற்கு முற்றிலும் முரணான விடயங்களே உண்மையில் நடைபெற்றன.  

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் சந்தித்த இன்னல்களைவிடப் பாரதூரமான இன்னல்களை ஜே.ஆரின் ஆட்சி தொடங்கிய ஒரு மாதகாலத்திலேயே தமிழர்கள் அனுபவிக்க வேண்டி வந்தது.  

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி 

ஆனால், இவற்றைப்பற்றிச் சிந்திக்க ஜே.ஆருக்கு நேரம் இருந்திருக்க வாய்ப்பில்லை, அவர் தன்னுடைய 'கனவை' நனவாக்குவதில் முனைப்போடு இருந்தார். ஒரு பெருங்கலவரம் இருவார காலமளவுக்கு நடந்து ஓய்ந்திருந்த சில நாட்களிலேயே, 1977 செப்டெம்பர் 22ஆம் திகதி ஜே.ஆரின் 'கனவான' நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு தேசிய அரசுப் பேரவையில் முன்வைக்கப்பட்டது.   

1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பின் செல்லுபடித் தன்மை பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நிறையவே இருந்தன. ஆனால், அந்தச்சிக்கலுக்குள் போக ஜே.ஆர் முனையவில்லை. மாறாக 1972 ஆம் ஆண்டு அரசியல்யாப்புக்கு தனது 5{6 பெரும்பான்மை பலத்தைக்கொண்டு திருத்தங்களை முன்வைப்பதனூடாக தன்னுடைய நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதி 'கனவை' ஜே.ஆர் நிறைவேற்ற விளைந்தார்.  

1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பில் குறித்த யாப்பை திருத்துதல் அல்லது குறித்த அரசியல் யாப்புக்குப் பதிலாக புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பிலான ஏற்பாடுகள் காணப்பட்டன.  

இதன்படி முதலாம் குடியரசு யாப்புக்கு செய்யப்பட்ட இரண்டாவது திருத்தத்தினூடாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 1978 பெப்ரவரி 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திரதினத்தன்று இலங்கையின் முதலாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர் பதவியேற்பதற்கான அரசியலமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் பதவிக்காலம் 1978 பெப்ரவரி 4ஆம் திகதி முதல் 6 வருடங்களுக்கு நீடிப்பதாக அமைக்கப்பட்டது.  

புதிய அரசியலமைப்பு 

தொடர்ந்து அரசியலமைப்பை மாற்றியமைக்கும் தனது அடுத்தகட்ட நகர்வை ஜே.ஆர் முன்னெடுத்தார். 1977 ஒக்டோபர் 20ஆம் திகதி தேசிய அரசுப்பேரவையானது (நாடாளுமன்றம்) அரசியலமைப்பையும் வேறு எழுதப்பட்ட சட்டங்களையும் திருத்துவதற்கான ஒரு குழுவொன்றை அமைக்கவும் அதற்கான தவிசாளரை நியமிக்குமதிகாரத்தையும் சபாநாயகருக்கு வழங்கும் தீர்மானமொன்றை நிறைவேற்றியது.  

அரசியலமைப்பையும் சட்டங்களையும் திருத்துவதற்கான குறித்த குழுவானது 1977 நவம்பர் மூன்றாம் திகதி சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது. குறித்த குழுவின் தவிசாளராக பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிவிக்கப்பட்டதுடன், குழுவின் அங்கத்தவர்களாக ஐக்கிய தேசியக்கட்சியைச் சார்ந்த ரணசிங்ஹ பிரேமதாஸ, றொனி டிமெல், லலித் அதுலத் முதலி, காமினி திசாநாயக்க, கே.டபிள்யு.தேவநாயகம், எம்.எச்.எம்.நய்னாமரிக்கார் ஆகியோரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவும் மைத்ரிபால சேனநாயக்கவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த சௌமியமூர்த்தி தொண்டமானும் அறிவிக்கப்பட்டனர்.  

தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணி குறித்த குழுவில் அங்கத்துவம்பெற மறுத்துவிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏனெனில், ஐக்கியத் தேசியக் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்குமானால், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஆராய சர்வகட்சி மாநாடு கூட்டப்படும் என்று அறிவித்திருந்தது.  

ஆனால், தேர்தல் வெற்றியின் பின்பு சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதில் ஐக்கிய தேசிய கட்சி முனைப்புக் காட்டவில்லை. மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வு அரசியலமைப்பு திருத்தத்தினூடாக வழங்கப்படும் என்றும் அதற்கான நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்குமாறும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.  

ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை மீறியிருந்தமையால், நாடாளுமன்றக்குழுவில் அங்கம் வகிக்க ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த கோரிக்கையை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நிராகரித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.  

கொள்கை ரீதியில் இந்த நிராகரிப்பை தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணி நியாயப்படுத்தினும், இலங்கையின் இரண்டாவது குடியரசு யாப்பின் உருவாக்கத்திலும் தமிழர்களின் பிரதிநிதிகள் பங்குபற்றாத நிலை உருவாகியிருந்தமை இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு விடயமாகும்.  

முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கத்திலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்பு இருக்கவில்லை. அதுபோலவே, இரண்டாவது குடியரசு யாப்பு உருவாக்கத்திலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பங்கு பற்றாத சூழல் உருவாகியிருந்தது.  

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பங்கு பற்றியிருந்தால் மட்டும் தமிழ்மக்களுக்குரிய தீர்வுகள் கிடைத்திருக்கும் என்றும் சொல்லிவிடமுடியாது. எது எவ்வாறெனினும், சௌமியமூர்த்தி தொண்டமான் மிகுந்த முனைப்புடன் அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்கு பற்றியிருந்தார்.  

மொழிகள், குடியுரிமை, மனித உரிமைகள் தொடர்பில் குறித்த குழுவில் தனது நிலைப்பாட்டை தொண்டமான் சமர்ப்பித்திருந்தார். குறிப்பாக இலங்கையில் காணப்பட்ட பாரம்பரிய குடிமக்கள், பதிவுசெய்யப்பட்ட குடிமக்கள் என்ற வேறுபாடு இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முக்கியமாக முன்வைத்தார். 

1977 டிசெம்பர்  

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம், 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையிலிருந்து, ஆளுங்கட்சி வரிசைக்கு சென்றமர்ந்தார். இதன்பின் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்ததன்படி, ஏற்கெனவே மிகப்பெரும் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மைப்பலம் 141 ஆக அதிகரித்தது. 

1978 பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கைக்குடியரசின் இரண்டாவது ஜனாதிபதியாகவும் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் ஜே.ஆர் ஜெயவர்த்தன பதவியேற்றுக்கொண்டதுடன், இதற்கு முன்பதாக தேசிய அரசுப்பேரவை உறுப்பினர் பதவியை துறந்திருந்தார்.  

ஜே.ஆர் ஜெயவர்த்தன பாதுகாப்பு அமைச்சையும் திட்ட அமுலாக்கல் அமைச்சையும் தன்னகத்தே கொண்டிருந்தார். ஜே.ஆர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து ரணசிங்ஹ பிரேமதாஸ பிரதமராக நியமிக்கப்பட்டதுடன், உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சராகவும் தொடர்ந்தார். அத்துடன் அரசியலமைப்பையும் வேறு எழுதப்பட்ட சட்டங்களையும் திருத்துவதற்கான நாடாளுமன்றக் குழுவுக்கு புதிய தவிசாளராக பிரேமதாஸ சபாநாயகரால் நியமிக்கப்பட்டார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் மைத்திரிபால சேனநாயக்கவும் அரசியலமைப்பையும் வேறு எழுதப்பட்ட சட்டங்களையும் திருத்துவதற்கான நாடாளுமன்றக் குழுவில் அங்கத்தவர்களாக பங்கேற்றிருந்தார்கள். ஆரம்பத்தில் குறித்த குழுவானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியில் உருவாக்கப்பட்டிருந்த 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்புக்கு திருத்தங்களை முன்மொழியும் குழு என்ற எண்ணப்பாடே நிலவியது. அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதில் பங்குபற்றியது. ஆனால், காலவோட்டத்தில் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முற்றிலும் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் எண்ணம் புரியவந்ததும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் குறித்த குழுவில் பங்குபற்றுவதிலிருந்து விலகியது.  

1978 மே 19ஆம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கு எழுதிய கடிதத்தில் 'நாங்கள் உருவாக்கிய அரசியலமைப்புக்கு பதிலாக புதிய அரசியலமைப்பொன்றைக்கொண்டுவரும் இந்தச் செயற்பாட்டில் நாம் பங்குபற்றுவது அர்த்தமற்றதாகும்' என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்டிருந்ததுடன் குறித்த குழுவில் பங்குபற்றுவதிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகியது. ஏற்கெனவே பிரதான எதிர்க்கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணி குறித்த குழுவில் பங்குபற்றியிராத நிலையில், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் குறித்த குழுவிலிருந்து விலகியிருந்தது. இந்நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கிக்கொண்டிருந்த நாடாளுமன்றக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியினரும், தொண்டமானுமே காணப்பட்டனர். 1978 செப்டெம்பரில் தொண்டமானும் அரசாங்கத்துடன் இணைந்து கிராமப்புறக் கைத்தொழில் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டதை கருத்திற்கொண்டால், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு என்பது தனியே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஓர் அரசியலமைப்பு என்பது வெள்ளிடைமலை.  புதிய அரசியலமைப்புக்கான முயற்சியில் ஜே.ஆர் மும்முரமாக இருந்த வேளையில், தமிழ் மக்கள் தாம் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்தனர். இது ஏற்கெனவே ஆயுத வழியை நாடியிருந்த தமிழ் இளைஞர்களை மேலும் கிளர்ந்தெழச் செய்தது. 

(அடுத்த வாரம் தொடரும்) 

- See more at: http://www.tamilmirror.lk/182158/ந-ற-வ-ற-ற-அத-க-ரம-ள-ள-ஜன-த-பத-ய-ம-ப-த-ய-அரச-யலம-ப-ப-ம-#sthash.fXpxdfC5.dpuf
Link to post
Share on other sites
  • 2 weeks later...
ஆயுதப் போராட்டமும் புதிய அரசியலமைப்பும்
 
26-09-2016 09:47 AM
Comments - 0       Views - 24

article_1474863597-Ai.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 59)

ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள்

“துரோகி” முத்திரை என்பது இலங்கையில் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை புதியதொரு விடயமல்ல. இலங்கை அரசியலிலும் ஆயுதப் போராட்டத்திலும் மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள், மிக இலகுவாக துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டதுடன், அவர்கள் உயிர் வாழத் தகுதியற்றவர்களாக கருதப்பட்டு, ஆயுதம் கொண்டு கொல்லப்பட்டதும் வரலாறு. அல்ப்றட் துரையப்பாவில் ஆரம்பித்த இந்த கொலைக் கலாசாரம் முடிவின்றி தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. 1976-1977 காலப்பகுதியில் வடக்கு-கிழக்கில் அதிலும் குறிப்பாக வடக்கில் ஆயுதக் குழுக்களின் எழுச்சியை கட்டுப்படுத்துவதில் முன்னைய சிறிமாவோ அரசாங்கம் மட்டுமல்லாது, தொடர்ந்து வந்த ஜே.ஆர். அரசாங்கமும் தீவிரம் காட்டியது. அதன் விளைவாக வடக்கில் பொலிஸ் அணிகள் ஆயுதக் குழுக்களை சுற்றிவளைப்பதில் ஈவிரக்கமின்றி செயற்பட்டுக்கொண்டிருந்தன. இந்தத் தமிழ் இளைஞர்களின் ஆயுதக் குழுக்களை அடக்கும் பணியில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களான பத்மநாதன், பஸ்தியாம்பிள்ளை உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஆயுதக்குழுக்கள் தமக்கான அடிப்படைப் பொருளாதார வளத்தை வங்கிகளை கொள்ளையடிப்பதன் மூலம் பெற்றுக்கொண்டன. இந்த வங்கிக் கொள்ளை வழக்குகளை பொலிஸ் பரிசோதகர் பத்மநாதன் தலைமையிலான குழு விசாரித்துக்கொண்டிருந்தது. இந்தப் பொலிஸ் அதிகாரியை அன்றைய தமிழரசுக் கட்சியின் தளபதியாக’இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் துரோகி என்று பொதுவில் விமர்சித்திருந்தார். சில காலத்தின் பின்பு பொலிஸ் பரிசோதகரான பத்மநாதன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பமொன்றில் ஆயுதம் தாங்கிய இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சில காலம் பின்பு, 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரான குமார், வங்கிக் கொள்ளை வழக்கு விசாரணையில் மீள இணைந்துகொண்டதைத் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

1977ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வங்கிக் கொள்ளை வழக்கு விசாரணைக் குழுவிலிருந்த இன்னொருவரான பொலிஸ் கான்ஸ்டபிள் கருணாநிதியும் பொலிஸ் சாஜன்ட்களான சண்முகநாதன் என்ற ஒரே பெயரைக் கொண்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகள் பொலிஸ் திணைக்களத்தை ஆட்டம் காணச் செய்ததுடன், ஆயுதக்குழுக்களை இரும்புக்கரம் கொண்டேனும் அடக்கிவிட வேண்டும் என்று துடித்த இலங்கை அரசாங்கத்துக்கும் பேரிடியாக அமைந்தது. வடக்கில் ஆயுதக்குழுக்களை அடக்குவதில் மும்முரமாக இருந்த இன்னொரு பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளையாவார். குற்றப்புலனாய்வு பொலிஸ் பரிசோதகரான பஸ்தியாம்பிள்ளை ஆயுதக்குழுக்கள் பற்றிய விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருந்தார்.

குறித்த விசாரணைகளில் கொடூரமான வழிகளைக் கையாண்டார் என்று பரவலான குற்றச்சாட்டை தமிழ்த் தரப்பிலிருந்து எதிர்கொண்டவர். 1978ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி அன்று, பொலிஸ் பரிசோதகர் பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான சிறு குழுவொன்று, மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசத்தில் காட்டுக்குள் தமிழ் இளைஞர் ஆயுதக்குழு ஒன்றினது பயிற்சி முகாமை சுற்றிவளைத்தது. இந்நிலையில் அங்கிருந்த தமிழ் இளைஞர் போராளியொருவர் பொலிஸாரின் ஆயுதத்தைப் பறித்து அதன் மூலம் தாக்குதல் நடத்தியதில் குற்றப்புலனாய்வு பொலிஸ் பரிசோதகர் பஸ்தியாம்பிள்ளை, உதவிப் பொலிஸ் பரிசோதகர் பேரம்பலம், பொலிஸ் கான்ஸ்டபிள் பாலசிங்கம் மற்றும் ஓட்டுனர் சிறிவர்த்தன ஆகியோர் கொல்லப்பட்டனர். ஆயுதக்குழுக்களை அடக்கும் முயற்சி தொடர்ந்து தோல்வியைச் சந்திப்பது அரசாங்கத்துக்கு பேரிடியாகவே அமைந்ததுடன், ஆயுதக் குழுக்களின் எழுச்சி பெரும் சவாலாக வளர்ந்து வருவதையும் அரசாங்கம் உணர்ந்தது.  

விடுதலைப்புலிகள்

இந்த நிலையில், ஒரு விடயத்தைக் குறிப்பிடுதல் அவசியமாகிறது. எழுச்சி கண்டுகொண்டிருந்த தமிழ் இளைஞர்களின் ஆயுதக்குழுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில் அரசாங்கம் காட்டிய அக்கறையையும் மும்முரத்தையும் இலங்கையிலுள்ள இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில், அதற்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதில் காட்டியிருந்தால், ஆயுதக்குழுக்களுக்கான தேவை தானாகவே இல்லாதுபோயிருக்கும். ஆனால், இலங்கை அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக ஆயுதக்குழுக்களைக் காரணங்காட்டி தமிழ் மக்கள் மீதான வெறுப்பை விதைப்பதில் பேரினவாத சக்திகள் போட்டிபோட்டுக்கொண்டு மும்முரம் காட்டின.  

இந்நிலையில், 1978ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதியிடப்பட்ட பாயும் புலிச்சின்னமும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரும் கொண்ட கடிதத் தலைப்பில், “கரிசனமுள்ளோருக்கு” என விழிக்கப்பட்டு ஒரு கடிதம் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமானது. இந்தக் கடிதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பின்வரும் கொலைகளுக்கு தாம் பொறுப்பேற்பதாக அறிவித்தது. 

அல்ப்றட் துரையப்பா (யாழ். நகரபிதா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வடபிராந்திய அமைப்பாளர்), என். நடராஜா (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கோப்பாய் அமைப்பாளர்), ஏ.கருணாநிதி (பொலிஸ்), சண்முகநாதன் (பொலிஸ்), சண்முகநாதன் (பொலிஸ்), தங்கராஜா (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அருளம்பலத்தின் செயலாளர்), பஸ்தியாம்பிள்ளை (பொலிஸ்), பேரம்பலம் (பொலிஸ்), பாலசிங்கம் (பொலிஸ்) மற்றும் சிறிவர்த்தன (பொலிஸ்). 

“எம்மைச் சுற்றிவளைக்க எமது பயிற்சி முகாமொன்றுக்கு வந்த பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான குழுவினரை தமிழீழ விடுதலைப்புலிகளான நாம் சுட்டுக்கொன்றோம். இந்தக் கொலைகளுக்கு வேறு அமைப்புக்களோ தனிநபர்களோ உரிமை கோர முடியாது. எம்மைத் தவிர இவற்றுக்கு உள்நாட்டிலோ வௌிநாட்டிலோ உரிமை கோருவோர் யாராயினும் அவர்களுக்கெதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்பு நடந்த எந்த வகையான கொள்ளைச் சம்பவத்துக்கும் நாங்கள் பொறுப்பல்ல” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இலங்கையில் இதுபோன்று ஓர் ஆயுதக்குழு தனது படுகொலைகளுக்கு பகிரங்கமாக உரிமைகோரியமை பெரும் பரபரப்பானது. இந்தக் கடிதம் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயர் பிரபலமடைந்தது. 1978ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைப் பொலிஸ், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட 38 பேரை பொலிஸாரால் தேடப்படுவோர் பட்டியலில் வௌியிட்டது. 

மேற்சொன்ன கடிதம் பற்றிய இன்னொரு செய்தியும் உண்டு. இலங்கை அரசியல் மற்றும் போராட்ட வரலாற்றை எழுதிய சிலர், குறித்த கடிதமானது அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அலுவலகத்திலேயே அமிர்தலிங்கத்துக்கு தெரியாமலே தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். ஏற்கெனவே தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களுக்குப் பின்னணியில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இருப்பதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில், இந்தச் செய்தி அந்த பேச்சுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது. ஆனால், இந்த செய்தியின் உண்மைத் தன்மை உறுதிசெய்யப்படவில்லை. 

அதிகரித்த இராணுவப் பிரசன்னம்

ஆயுதக் குழுக்களை அடக்க அரசாங்கம் எடுத்த முயற்சிகள் தோல்வி கண்ட நிலையில், வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை அதிகப்படுத்தியதுடன், 1978ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளையும் அதனையொத்த இயக்கங்களையும் ஓராண்டுக்குத் தடைசெய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், தமிழ் இளைஞர்களின் ஆயுதக் குழு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இருக்கவில்லை. இதுவரை வடக்கில் மட்டும் நடந்துகொண்டிருந்த தாக்குதல்கள் தெற்கை நோக்கி நகரத் தொடங்கின. 

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டது

இந்நிலையில், நாம் மீண்டும் அரசியல் களத்தை நோக்குதல் அவசியமாகிறது. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முயற்சியில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பங்கேற்க மறுத்திருந்த வேளையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குறித்த குழுவிலிருந்து விலகியிருந்த வேளையில், ஐக்கிய தேசிய கட்சியும் சௌமியமூர்த்தி தொண்டமானும் புதிய அரசியலமைப்பின் வரைவினை உருவாக்கும் நாடாளுமன்றக் குழுவில் மும்முரமாகச் செயற்பட்டனர். குறித்த நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணசிங்ஹ பிரேமதாஸ, 1978ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி புதிய அரசியலமைப்புக்கான வரைவினை தேசிய அரசுப் பேரவையில் (நாடாளுமன்றத்தில்) சமர்ப்பித்தார்.

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு திருத்தமொன்றை மேற்கொள்வதனூடாக புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதே ஜே.ஆரின் நோக்கம். நாடாளுமன்றத்தில் வரலாறு காணாத 5/6 பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு இதனைச் செய்வது மிக இலகுவாக இருந்தது. தமது பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு வெறும் ஆறு வார காலத்துக்குள் புதிய அரசியலமைப்பை தேசிய அரசுப் பேரவையில் நிறைவேற்றினர். 1978ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில், இறுதி வாசிப்பின்போது 137 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து, எதிராக ஒரு வாக்குமின்றி 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு நிறைவேற்றப்பட்டது.

1978ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி சபாநாயகர் ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதை உறுதிப்படுத்தினார். புதிய அரசியலமைப்பின் 172ஆவது சரத்து, புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் நாளை ஜனாதிபதி தீர்மானிப்பார் என்று வழங்கியது. அந்த வகையில், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, “ 1978ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும்” என்று அறிவித்தார். 1978ஆம் ஆண்டு செப்படெம்பர் மாதம் ஏழாம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புதிய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவந்ததுடன், புதிய அரசியலமைப்புக்கான தனது விசுவாசத்தை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதிவு செய்தார்.  

“எயார் சிலோன்” விமான தாக்குதல்

1978ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு கொண்டாட்ட மனநிலை தெற்கில் குறிப்பாக, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் காணப்பட்டது. இந்நிலையில் அதே தினம் இரத்மலானையில் அமைந்துள்ள கொழும்பு விமானநிலையத்தின் ஓடுபாதையில் நின்ற இலங்கையின் தேசிய விமானசேவையான “எயார் சிலோன்”ற்குச் சொந்தமான அவ்ரோ விமானமொன்று விடுதலைப்புலிகளால் வெடிக்கவைக்கப்பட்டது. கொண்டாட்ட மனநிலை ஒரேயடியாக மாறியிருந்தது. அச்சமும் பீதியும் பரவத்தொடங்கியது. இதன் விளைவாக தெற்கிலும் இராணுவம், பொலிஸ் பிரசன்னம் அதிகரித்ததுடன், ஆயுதக்குழுக்களுடன் தொடர்புள்ளோர் என்ற சந்தேகத்தில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்துவைக்கப்படுவதும் அதிகரித்தது. பல இடங்களிலும் பொலிஸ் சோதனைகள் நடத்தப்பட்டன என்று அசோக பண்டாரகே தன்னுடைய “இலங்கையின் பிரிவினைவாத பிரச்சினை: தீவிரவாதம், இனம், அரசியல், பொருளாதாரம் (ஆங்கிலம்)” என்ற நூலில் குறிப்பிடுகிறார். “அரசாங்கத்தின் இந்தக் கெடுபிடிகள் யாவும் தமிழ் மக்களை துன்பத்துக்குள்ளாக்கும் செயல்கள்” என, அமிர்தலிங்கம் தனது கண்டனத்தை பதிவுசெய்தார். 

1978ஆம் ஆண்டு யாப்பின் சட்டபூர்வத் தன்மை

1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பானது, 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்புக்கு திருத்தமொன்றைச் செய்ததனூடாக முன்வைக்கப்பட்டது. இந்த இரண்டு அரசியலமைப்பின் உருவாக்கத்திலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்பு இருக்கவில்லை. ஆகவே, ஆட்சியிலிருந்து பெரும்பான்மை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்களாகவே இவை இருந்தன. 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது சட்டபூர்வத் தன்மை பற்றி, தமிழ் அரசியல் தலைமைகள் கேள்வி எழுப்பியிருந்தன. ஏனெனில், அதற்கு முன்பு நடைமுறையிலிருந்த சோல்பரி அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு வழங்கியிருந்த எவ்வகையிலும், மாற்றப்படமுடியாது பாதுகாப்பு உரிமைகளை மீறி அது உருவாக்கப்பட்டதனால், அதன் சட்டபூர்வத் தன்மை பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. 1972ஆம் ஆண்டு யாப்புக்குத் திருத்தமாக 1978ஆம் ஆண்டு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால், 1972ஆம் ஆண்டு யாப்பிலிருந்த அதே சட்டபூர்வத் தன்மை பற்றிய கேள்வி, 1978ஆம் ஆண்டு யாப்புக்கும் பொருந்தும், என சிலர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால், இந்தக் கருத்துக்களோ, தமிழ் மக்களின் எதிர்ப்போ, 1978ஆம் ஆண்டு யாப்பு நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கவல்லதாக இருக்கவில்லை. 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பானது இலங்கையின் அரசியல் முறைமையில் முக்கிய சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஆனால், பேரினவாத அடிப்படைகளை அது மாற்றவில்லை.  

( அடுத்த வாரம் தொடரும் ) 

- See more at: http://www.tamilmirror.lk/182616/ஆய-தப-ப-ர-ட-டம-ம-ப-த-ய-அரச-யலம-ப-ப-ம-#sthash.Gu1F29mR.dpuf
Link to post
Share on other sites
1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் தமிழர்களும்
 
03-10-2016 10:23 AM
Comments - 0       Views - 5

article_1475470585-dcf.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 60)

புதிய யாப்பிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழர் அபிலாஷைகள்

அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது, அது, அந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கத்தக்கதான தூரதரிசனம் மிக்கதொன்றாக அமைவதே பொருத்தமானது. துரதிர்ஷ்டவசமாக, இலங்கையைப் பொறுத்தவரையில் சிறிமாவின் ஆட்சியில் உருவான முதலாவது குடியரசு அரசியலமைப்பும் ஜே.ஆரின் ஆட்சியில் உருவான இரண்டாவது குடியரசு அரசியலமைப்பும் இலங்கையின் முக்கிய அரசியல் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை. மாறாக, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே அது அமைந்தது. 1920 களில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கா, இலங்கைக்கு சமஷ்டி முறை அவசியம் என்று சொன்னபோது, தமிழ்த் தலைமைகள் அதனை முக்கியமாகக் கருதவில்லை என்பது உண்மை. ஆனால், சமஷ்டிக் கட்சியின் (தமிழரசுக் கட்சி) உருவாக்கத்திலிருந்து தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையின் அடிநாதமாக சமஷ்டி முறை இருந்திருக்கிறது. 20 வருடங்களுக்கும் மேலாக அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதன் விளைவுதான், தமிழர்களை தனிநாட்டுக் கோரிக்கையை நோக்கி நகர்த்தியது. ஆனாலும், புதிய அரசியல் யாப்பினூடாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வை வழங்கியிருக்குமாயின், தமிழ் மக்கள் தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்கொண்டு செல்ல வேண்டிய தேவையை இல்லாமற்செய்திருக்கலாம். ஆனால், அதனைச் செய்வதற்குப் பதிலாக, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூடக் கருத்திற்கொள்ளாத வகையிலேயே, இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் உதயமானது.

அதிகாரப் பகிர்வை வேண்டிய தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தூக்கியெறியுமாறு, இரண்டாவது குடியரசு யாப்பின் இரண்டாம் சரத்து அமைந்தது. இலங்கையை “சனநாயக சோசலிஸக் குடியரசாக” அறிவித்த இரண்டாவது குடியரசு யாப்பின் இரண்டாவது சரத்து, “இலங்கைக் குடியரசு, ஓர் ஒற்றையாட்சி அரசாகும்” என்று பிரகடனம் செய்தது. இதன் மூலம், சமஷ்டிக்கான மற்றும் நியாயமான அதிகாரப் பகிர்வுக்கான கதவுகளை இலங்கை அரசாங்கம் தாழிட்டுப் பூட்டியது. ஏனெனில், இரண்டாவது குடியரசு யாப்பின் 83 ஆவது சரத்தின்படி, மேற்குறிப்பிட்ட இரண்டாவது சரத்தை திருத்தவோ மாற்றவோ, நீக்கவோ வேண்டுமாயின், நாடாளுமன்றத்தின் இரண்டில் மூன்று பெரும்பான்மை அங்கிகாரம் மட்டுமல்லாது, ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் நாட்டு மக்களின் அங்கிகாரமும் பெறப்படவேண்டும். இன்றுவரை இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வை வழங்குவதற்கு, இந்தச் சரத்துக்கள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.

பௌத்தத்துக்கு முதலிடம்

இலங்கையை ஒற்றையாட்சி நாடாக அறிவித்தமை, தமிழர்களின் அபிலாஷைகளுக்கு விரோதமாக இருந்ததெனினும், வெளிப்படையாகப் பாரபட்சமானதல்ல என்று வாதிட முடியும். ஆனால், இரண்டாவது குடியரசு யாப்பின் ஒன்பதாம் சரத்தானது, “இலங்கைக் குடியரசானது பௌத்தத்துக்கு  முதன்மையிடத்தை வழங்குவதோடு, புத்தசாசனத்தைக் காப்பதும் வளர்ப்பதும், அரசின் கடமையாகும்” என்றும் பிரகடனம் செய்தது. இது முதலாவது குடியரசு அரசியலமைப்பின் தொடர்ச்சியாக அமைந்தது. மேலும், குறித்த ஒன்பதாம் சரத்தானது, ஏனைய மதங்களுக்கான உரிமைகள், அரசியலமைப்பின் பத்தாம் சரத்து மற்றும் பதின்நான்காம் சரத்தின் ஒன்று (உ) உபசரத்து ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிட்டது. சிந்திப்பதற்கான சுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் எனத் தலைப்பிடப்பட்டுள்ள பத்தாம் சரத்தானது, ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்தனை, மனச்சாட்சி, மதச் சுதந்திரத்தை வழங்குவதுடன், அவரது தெரிவான நம்பிக்கையை, மதத்தைச் சார்ந்திருக்கும், பின்பற்றும் சுதந்திரத்தை வழங்குகிறது. பதின்நான்காம் சரத்தும் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயத்திலேயே இடம்பெறுகிறது. பேச்சு, ஒன்றுகூடல், கூட்டம் நடத்தல் போன்ற சுதந்திரங்களை உறுதிப்படுத்தும் அச்சரத்தின் முதலாம் உபசரத்தின் (உ) பிரிவானது, ஒவ்வொரு குடிமகனும், தான் அல்லது தன்னுடன் இணைந்துகொண்ட மற்றவர்களுடன் கூடி, பொதுவாக அல்லது தனியாக தனது மதத்தைப் அல்லது தனது வழிபடும் நம்பிக்கையைப் பிரகடனம் செய்யவும், அதைப் பின்பற்றவும் அதை நடைமுறைப்படுத்தவும், அதைப் போதிக்கவும்  உரித்துடையவராகிறான் என்று குறிப்பிடுகிறது.

 இந்த அடிப்படையில் வைத்து நோக்கும் போது, இலங்கையில் அரச மதமாக பௌத்தம் ஆகிறது. ஏனைய மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டாலும், அரசியல் அமைப்பின் படி அவை தொடர்பில் அரசாங்கத்துக்கு ஏதும் கடப்பாடோ கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும் வளர்ப்பதும், அரசின் கடமையாக்கப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 70 சதவீதமளவுக்கு, பௌத்தர்களைக் கொண்டிருந்த அன்றைய இலங்கையில், அந்த பெரும்பான்மையினரின் மதமான பௌத்தத்துக்கு  முதலுரிமை கொடுக்கப்பட்டது பொருத்தமானதே என வாதிடுவோரும் உண்டு. அவர்கள், தமது நியாயத்தினை உரைக்கும் போது, குறித்த 9ஆம் சரத்தானது, பௌத்தத்துக்கு முதலுரிமை அளிப்பது மட்டுமின்றி, ஏனைய மதங்களின் உரிமைகள், அடிப்படை உரிமைகளின் கீழ் பாதுகாக்கப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறது. ஆகவே, ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்பட்டன, பாரபட்சம் காட்டப்பட்டது எனச் சொல்ல முடியாது என வாதிடுவர். மேலோட்டமாக இது சரியான கருத்தாகப்படினும், இரண்டாவது குடியரசு யாப்பின் ஏனைய சில சரத்துக்களோடு, சேர்த்துப் பார்க்கும் போது, எமக்கு வேறுபட்டதொரு சித்திரமே தென்படுகிறது.  

ஒன்பதாம் சரத்தின் மூலம், பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பானது, அதே சரத்தில், அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் பத்தாம் மற்றும் பதின்நான்காம் சரத்தின் ஒன்று (உ) உபபிரிவு ஆகியவற்றின் மூலமே மற்ற மதச் சுதந்திரத்தை அங்கிகரிக்கிறது. ஆனால், அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில், பதினைந்தாவது சரத்தின் ஏழாவது உபபிரிவானது தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும் விழுமியங்கள் தொடர்பில் பதின்நான்காம் சரத்திலுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவதை சட்டரீதியாக அரசாங்கமானது கட்டுப்படுத்தலாம் என்கிறது. ஆகவே, வெளிப்படையாக மேற்கூறிய தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும் விழுமியங்கள் ஆகிய காரணங்களைக் காட்டி, பதின்நான்காம் சரத்தின் ஒன்று (உ) உபபிரிவினால் தரப்பட்ட மதத்தைப் பின்பற்றும், போதிக்கும், நடைமுறைப்படுத்தும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தலாம். ஆகவே, பௌத்தத்தை பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமை என்று அறிவித்த அரசியலமைப்பு, சிறுபான்மையினரின் மதங்கள் தொடர்பில் அவ்வாறானதொரு கடப்பாட்டை உருவாக்கவில்லை என்பதுடன், தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும் விழுமியங்கள் ஆகிய காரணங்களுக்காக மதத்தைப் பின்பற்றும், போதிக்கும், நடைமுறைப்படுத்தும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம் என்றளவில்தான் சிறுபான்மையினரின் மதங்கள் வைக்கப்பட்டன. இது சிறுபான்மையினருக்கான வெளிப்படையான ஓரவஞ்சனையின்றி வேறென்னவாக இருக்கமுடியும்?

உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் மட்டும்

1956 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உத்தியோகபூர்வ மொழிச் சட்டம் (தனிச் சிங்களச் சட்டம்) இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களத்தை மட்டும் பிரகடனப்படுத்தியது. சுதந்திர இலங்கையின் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையானது, தமிழர்களை தனிநாட்டு கோரிக்கையை நோக்கி நடாத்திச் சென்றது. அதன் ஆரம்பப்புள்ளியாக, தனிச்சிங்களச் சட்டத்தைக் குறிப்பிடலாம். இந்த சிறுபான்மையினருக்கெதிரான பாரபட்சமுடைய இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும், தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும் என்ற கோரிக்கையை 1956 முதல் தமிழ்த் தலைமைகளும் அவர்களுக்கு மக்களாணை வழங்கிய தமிழ் மக்களும் முன்வைத்து வந்திருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து வந்த எந்தவொரு அரசாங்கமும் இதற்கொரு ஏற்புடைய தீர்வை வழங்கவில்லை.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தொடர்பிலே சில மிகக்குறைந்தளவிலான சமரசங்கள் முன்வைக்கப்பட்டாலும், இந்நாட்டின் பேசப்படும் இரண்டு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்க எந்த அரசாங்கமும் முன்வரவில்லை. 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பானது சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக அறிவித்ததனூடாக தனிச்சிங்களச் சட்டத்துக்கு அரசியல்யாப்பு அந்தஸ்த்தினை வழங்கியது. 1978  ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பும் அதன் தொடர்ச்சியாகவே அமைந்தது. இரண்டாவது குடியரசு யாப்பின் பதினெட்டாவது சரத்து இலங்கையின் உத்தியோகபூர்வமொழி சிங்களமாக இருக்கும் என்று பிரகடனம் செய்தது. அதேவேளை 19 ஆம் சரத்தானது இலங்கையின் தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கும் என்று கூறியது. நாடாளுமன்றத்திலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் அதன் உறுப்பினர்கள் தமது கடமைகளை இரண்டு தேசிய மொழிகளிலொன்றில் ஆற்றமுடியும் என்று 20 ஆம் சரத்து குறிப்பிட்டதுடன், 21 ஆம் சரத்தானது இரண்டு தேசிய மொழிகளிலொன்றில் கல்வியைப் பெற முடியும் என்று கூறியது.

இவை வெறும் அடிப்படையான விடயங்கள். ஏற்கெனவே நடைமுறையிலிருந்தவைதான். ஆனால் 22 ஆம் சரத்தின் முதலாவது உபபிரிவானது இலங்கையின் நிர்வாக மொழியாக உத்தியோகபூர்வ மொழியே இருக்கும் (அதாவது சிங்களம் மட்டும்) என்று குறிப்பிட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுப் பதிவுகளைச் செய்வதிலும், பொது நிறுவனங்களின் அன்றாட கொடுக்கல்வாங்கல்களிலும் நிர்வாக மொழியாக தமிழ் பயன்படுத்தப்படலாம் என்று கூறியது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிப் பயன்பாடு தொடர்பிலான இந்த விசேட ஏற்பாடுகள் கூட எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் 1958ஆம் ஆண்டு தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தினதும் அதன் பின்னரான டட்லி சேனநாயக்க ஆட்சியில் குறித்த சட்டத்தின் கீழ் உருவான தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டவொழுங்குகளினதும் தொடர்ச்சியே அன்றி தமிழ் மக்களுக்கு புதிதான தீர்வெதனையும் வழங்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

மேலும் 22 ஆம் சரத்தின் ஐந்தாவது உபபிரிவானது பொதுச் சேவை, நீதிச் சேவை, உள்ளூராட்சிச் சேவை, பொது நிறுவனம் அல்லது அரசாங்க அமைப்பொன்றிற்கு ஆட்களைச் சேர்ப்பது தொடர்பிலான பரீட்சைகள் இரண்டு தேசிய மொழிகளிலும் நடத்தப்படும் என்று குறிப்பிட்டது. ஆனால் சேவைக்குள் இணைக்கப்பட்டு நியாயமான காலத்தினுள் உத்தியோகபூர்வமொழியில் (சிங்களமொழி) தேர்ச்சி பெறுதல் அவசியல் என்று கூறியது. இதுவும் 1958ஆம் ஆண்டின் தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் தொடர்ச்சியே. உண்மையில் இலங்கையிலுள்ள பொது அல்லது அரசாங்க உத்தியோகத்தர்கள் சிங்களம், தமிழ் ஆகிய இருமொழித் தேர்ச்சியுடையவர்களாக இருப்பது சிறந்ததொரு விடயம்.

ஆனால் தமிழர்களைச் சிங்கள மொழியைக் கற்கக் கட்டாயப்படுத்தவதும் சிங்களவர்களுக்குத் தமிழ் மொழி கற்பது அவசியமில்லை என்ற பாரபட்ச நிலைப்பாடானது பிரச்சினைக்குரியது. அதாவது சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழி என்பதால், பொதுச் சேவைக்குள் தமிழ்மொழி மூலம் உட்சேர்க்கப்படுவோர், நியாயமான காலத்துள் சிங்கள மொழியைக் கற்றுத் தேறுதல் அவசியம் என்று அரசியல் யாப்பு கூறுகிறது. ஆனால், பொதுச் சேவைக்குள் சிங்களமொழி மூலம் உட்சேர்க்கப்படுவோர் தமிழ் மொழியைக் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் எதுவுமே கிடையாது. ஏனெனில், தமிழ் மொழி இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்கப்படவில்லை!  

இலங்கையின் மொழிப்பிரச்சினையை இலகுவாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் இருந்தும். ஸ்ரீீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமோ, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமோ அதுபற்றி எவ்வித அக்கறையுமில்லாது இருந்தன என்பதே வருந்தத்தக்க உண்மை. ஒரு மொழிதான் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கமுடியும், அது பெரும்பான்மையோரின் மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்ற வாதம் அறியாமையின் வௌிப்பாடே அன்றி வேறில்லை. இந்த வாதத்தினை இன்று முன்வைக்கும் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள், இந்தியாவை தமக்கு வசதியான உதாரணமாக முன்வைக்கிறார்கள்.  இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியானது 41 சதவீதம் இந்தியர்களின் மொழியான ஹிந்தியாகும், ஆகவே அதைப்போலவே பெரும்பான்மை இலங்கையர்களின் மொழியான சிங்களம் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக இருப்பதில் எந்தத் தவறுமில்லை என்பது அவர்களுடைய வாதம்.

ஆனால், இந்தியா பற்றிய இந்தக் கருத்து சரியானது அல்ல! இந்தியா என்பது ஓர் “அரைச்சமஷ்டி” அரசு. இந்தியாவினுடைய அரசியலமைப்பின் 343 ஆவது சரத்தானது இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழியாக தேவநகரி எழுத்துருவினாலான ஹிந்தி மொழியை பிரகடனப்படுத்தும் அதேவேளை, உத்தியோகபூர்வ மொழியாக ஆங்கிலத்தின் பயன்பாட்டின் தொடர்ச்சியையும் அங்கிகரிக்கிறது. அதேவேளை, இந்திய அரசியல் யாப்பின் 345 ஆவது சரத்தானது மாநிலங்கள் தமக்கான உத்தியோகபூர்வமொழியாக குறித்த மாநிலத்தில் பயன்பாட்டிலுள்ள மொழியொன்றையோ அல்லது ஹிந்தியையோ தீர்மானிக்க முடியும் என்றும் அவ்வாறு தீர்மானிக்கும் வரை ஆங்கிலமொழி அவற்றின் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும் என்றும் கூறுகிறது. ஆகவே, இந்தியாவை உதாரணமாகக் கொள்ளும்போது வெறுமனவே மத்திய அரசின் உத்தியோகபூர்வமொழி ஹிந்தி என்று சொல்வது ஏற்புடையதல்ல. மாறாக, மேற்கூறிய சரத்துக்களையும், இந்தியாவின் “அரைச்சமஷ்டி” முறையையும், பின்னர் உருவான மொழிவாரி மாநிலக் கட்டமைப்பையும் முழுமையாக வைத்து முழுச்சித்திரத்தையும் நாம் காண வேண்டும். உதாரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் உத்தியோகபூர்வ மொழி தமிழ். ஹிந்தியினுடைய அவசியப்பாடு தமிழ்நாட்டில் வசிப்போருக்கு பெரிதளவில் கிடையாது. மாநிலங்களின் உத்தியோகபூர்வ மொழிகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் இந்தியாவில் 23 உத்தியோகபூர்வமொழிகள் காணப்படுகின்றன என்பதுதான் உண்மை.

இந்தியாவைத் தாண்டிப் பல வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உத்தியோகபூர்வமொழிகளாக காணப்படுகின்றன. கனடா  - 2, தென்னாபிரிக்கா - 11, சிம்பாபே - 16,
கமரூன் - 2, கென்யா - 2, சிங்கப்பூர் - 4 என்பவை இவற்றுள் குறிப்பிடத்தக்க சில.  

சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழி என்ற ஜே.ஆரின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் சரத்துடன், தமிழும் உத்தியோகபூர்வ மொழி என்ற வாக்கியமும் சேர்க்கப்பட இன்னும் ஒன்பது வருடங்களானது, அதற்குள் தமிழர்கள் சந்தித்த இழப்புக்களும், வலிகளும் வார்த்தைகளால் வர்ணிக்கப்படமுடியாதவை.

(அடுத்த வாரம் தொடரும்...)

- See more at: http://www.tamilmirror.lk/183093/-ஆம-ஆண-ட-ன-இரண-ட-வத-க-ட-யரச-அரச-யல-ய-ப-ப-ம-தம-ழர-கள-ம-#sthash.iHoX1VaC.dpuf
Link to post
Share on other sites
நிறைவேற்று ஜனாதிபதியும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையும்
 
 

article_1476075560-sd.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -  61)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி 

இலங்கையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்துவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கனவாக இருந்தது. தான் பெற்றுக்கொண்ட 5/6 பெரும்பான்மைப் பலத்தைக்கொண்டு 1978 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பினூடாக அதனைச் சாத்தியப்படுத்தினார் ஜே.ஆர். 

 சுதந்திரம் முதல் இதுவரைகாலமும் இலங்கையின் ஆட்சியானது வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியிலேயே அமைந்தது. 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கூட வெஸ்ட்மினிஸ்டர் அடிப்படைகளில் பெரும் மாற்றமெதனையும் கொண்டுவரவில்லை. வெஸ்ட்மினிஸ்டர் மாதிரி என்பது பிரித்தானிய ஆட்சிமுறையைக் குறித்து நிற்கிறது. குறித்த அரசானது பெயரளவில் மகாராணியாரை அரசாங்கத்தின் தலைவராக கொண்டிருப்பினும் நிறைவேற்று அதிகாரங்கள் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையிடமே (கபினட்) காணப்பட்டது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடையவரை அரசாங்கத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரே சட்டவாக்கத்துறையின் தலைமையையும் நிர்வாகத்துறையின் தலைமையையும் ஏற்பார். அமைச்சரவையானது கூட்டுப்பொறுப்புடையதாக அமையும். இம்முறையானது அமெரிக்க முறையிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகும்.  

அமெரிக்க ஆட்சிமுறையில் சட்டவாக்கத்துறையானது இரு அவைகளைக் கொண்ட அமெரிக்க காங்கிரஸிடமும் நிர்வாகத் துறையானது ஜனாதிபதியிடமும் இவற்றிலிருந்து வேறுபட்ட நீதித்துறையையும் கொண்ட அமைப்பாகும். இது பிரான்ஸ் அரசறிவியலாளர் மொன்டெஸ்க்யுவின் அதிகாரப்பிரிவுக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்ததொன்றாகும். அதாவது, சட்ட, நிர்வாக, நீதித் துறைகள் என்பன வேறுபட்ட நபர்களின் கீழ் அமைந்ததுடன் ஒன்றையொன்று மட்டுப்படுத்தும் வகையில் ‘தடைகளையும் சமன்பாடுகளையும்’ (checks and balances) கொண்டனவாக அமைந்திருக்கும். 

இலங்கையின் ஆட்சிமுறையை மாற்றியமைத்து, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவரின் கீழ் நிர்வாகத்துறையைக் கொண்டுவரும் வகையில் புதிய அரசியலமைப்பை ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கியிருந்தார். இது வெஸ்ட்மினிஸ்டர் முறையிலிருந்து நீங்கி அமெரிக்க முறையையொத்த பலம்மிக்க ஜனாதிபதிமுறையை இலங்கையில் கொண்டு வரும் முயற்சியாக இருந்தது. ஆனால், ஜே.ஆர். ஜெயவர்த்தன இதனை முழுமையான அமெரிக்க மாதிரியில் வடிவமைக்கவில்லை. அவர் பிரதமர் என்ற பதவியும், கபினட் அமைச்சர்கள் என்ற பதவியும் தொடருமாறு இதனை வடிவமைத்தார். அதாவது அமெரிக்க மாதிரியில் காங்கிரஸிற்கும் நிர்வாகத்துறைக்குமிடையில் முழுமையான அதிகாரப் பிரிவுண்டு. அங்கு நிர்வாகத் துறையினர், சட்டவாக்கத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை; சட்டவாக்கத்துறையினர், நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை. ஆனால் பிரித்தானிய முறையில் நாடாளுமன்றத் தலைவரான பிரதமரே, நிர்வாகத்துறையின் தலைவராவார். பிரதமரால் நியமிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். ஆகவே பிரதமரும், அமைச்சர்களும் சட்டவாக்கம் மற்றும் நிர்வாகம் ஆகிய இருதுறைகளிலும் ஈடுபடுவார்கள்.

இந்த இரண்டு முறைகளிலொன்றை தெரிவதை விட, இரண்டிற்கும் இடைப்பட்டதொரு முறையை ஜே.ஆர் தெரிவு செய்தார். சட்டவாக்கத்துறையில் எந்தவித நேரடிப் பங்குபற்றுதலுமில்லாத மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியே நிர்வாகத் துறைத் தலைவராக இருப்பார். ஆயினும் அந்த ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சரவையில் சட்டவாக்கத்துறைத் தலைவரான பிரதமரும் ஜனாதிபதியால் அமைச்சர்களாக நியமிக்கப்படும் சட்டவாக்கத்துறை உறுப்பினர்களும் காணப்படுவார்கள். ஜே.ஆர் தேர்ந்தெடுத்த இந்த முறையானது முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்ள்ஸ் டி கோல், பிரான்ஸின் ஐந்தாவது சனநாயக அரசியலமைப்பினூடாக அறிமுகப்படுத்திய ஆட்சி முறையை பெரிதும் ஒத்தாக அமைந்திருந்தது.  

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை வைத்து அதனூடாக இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை மக்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை உருவாக்குதற்குப் பதிலாக, அன்றைய பிரதமரான அவரே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாகக் கருதப்பட்டு நேரடியாக அந்தப் பதவியை அடையும் வகையில் தனது பெரும்பான்மைப் பலத்தினூடாக சட்ட ஏற்பாடுகளைச் செய்து ஏலவே இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். அத்தோடு இலங்கையின் 2000 ஆண்டுக்கு மேற்பட்ட வரலாற்றில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசாங்கத் தலைவர்தான் என்று மார்தட்டிக்கொள்ளவும் செய்தார். 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று அவ்வப்போது தலைதூக்கிப் பார்க்கிறது. 2015 ஜனாதிபதித் தேர்தலில்கூட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது பற்றிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. இதற்குக் காரணம் ஜே.ஆர் வடிவமைத்திருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது, ஜனாதிபதியை அதிகாரத்தின் குவியமாக மாற்றியிருந்தது. இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைப் பற்றி குறிப்பிடுபவர்கள் ‘ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர எதனையும் சாதிக்கும் வல்லமை இலங்கையின் ஜனாதிபதிக்குண்டு’ என்று சொல்வார்கள். இதனை ஜே.ஆர்.ஜெயவர்த்தன குறிப்பிட்டிருந்தார் என்ற பரவலான கருத்தும் உண்டு. இந்த அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் மட்டுமே வந்ததல்ல; மாறாக 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பினூடாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்தியிருந்த இன்னொரு முக்கிய மாற்றமான தேர்தல் முறை மாற்றமும் இதற்குப் பங்களித்தது.  

புதிய தேர்தல் முறை 

இதுவரைகாலமும் இலங்கையில் தேர்தல்களானது தொகுதிவாரி முறையில் ‘முதலில் வருபவருக்கு வெற்றி’ என்ற அடிப்படையிலே நடத்தப்பட்டது. அதாவது இலங்கையானது தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் போட்டியிடுபவர்களில் எவர் அதிகளவு வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் அத்தொகுதியில் வெற்றிபெற்றவராவார். இதுவும் நாம் பிரித்தானியாவிலிருந்து பெற்றுக்கொண்ட ஒன்று என்பதுடன், இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தேர்தல் முறையாகும். இந்த முறையின் கீழ் தொகுதிகளில் பிரபல்யமானவர்கள், பெரும் கட்சிகளின் அபேட்சகர்கள், அந்தந்த தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம். ஆனால் இம்முறையின் கீழ் சிலவேளைகளில் குறித்த தொகுதியில் ஒட்டுமொத்த பெரும்பான்மையினர் விரும்பாத ஒருவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. உதாரணமாக ஒரு தொகுதியில் நால்வர் போட்டியிடும் நிலையில், ‘அ’ என்பவர் 20%, ‘ஆ’ என்பவர் 25%, ‘இ’ என்பவர் 30%, ‘ஈ’ என்பவர் 25% என்ற ரீதியில் வாக்குகளைப் பெற்றிருந்தால், அதிக வாக்குப்பெற்ற ‘இ’ வெற்றியாளராவார். ஆனால் அவரை தொகுதியின் 70% மக்கள் விரும்பியிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த முறையின் கீழ் பெரும்பான்மையினர் அதிகம் வாழும் பிரதேசங்களில் வாழ்ந்த சிறுபான்மையினருக்கு தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் வாய்ப்பு என்பது சூனியமாகத் தான் இருந்தது. குறிப்பாக கொழும்பு மற்றும் மலையகத்தின் நுவரெலிய தவிர்ந்த மற்றைய மாவட்டங்களிலும் தொகுதிகளிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வெற்றிபெறும் சாத்தியம் இருக்கவேயில்லை. சுருங்கக் கூறின் இந்தத் தொகுதிவாரி ‘முதலில் வருபவருக்கு வெற்றி’ முறையானது இலங்கையைப் பொறுத்தவரையில் இருகட்சி அரசியலுக்கு வலுச்சேர்த்ததேயன்றி சிறுகட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள் வெற்றிபெறக்கூடிய சாத்தியம் காணப்படவேயில்லை. ஒரு குறிப்பிட்ட தொகுதி சார்ந்து ஒரு சிறுகட்சியானது தனது செல்வாக்கை வளர்த்து, பெரும்கட்சியொன்றுடன் கூட்டணியமைத்து அத்தொகுதியில் போட்டியிட்டாலன்றி, பெரும்கட்சிகளுடன் நேரடியாகப் போட்டியிட்டு வெற்றிபெறும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் மூலம் புதிய தேர்தல் முறையாக ‘விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை’ ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்தினார்.  

இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் ஒரு குறித்த தொகுதியில் கட்சியொன்று பெற்றுக்கொண்ட வாக்கு விகிதத்திற்கேற்ப அதற்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. மிக எளிமையான உதாரணம் ஒன்றை முன் வைப்பதாயின் ஒரு குறித்த மாவட்டத்துக்கு 10 ஆசனங்கள் இருப்பின், அம்மாவட்டத்தில் ‘அ’ கட்சி 40% வாக்குகளையும் ‘ஆ’ கட்சி 30% வாக்குகளையும் ‘இ’ கட்சி 10% வாக்குகளையும் ‘ஈ’ கட்சி 20% வாக்குகளையும் பெற்றிருக்குமாயின், கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குவீதத்திற்கேற்ப முறையே ‘அ’ கட்சிக்கு நான்கு ஆசனங்களும், ‘ஆ’ கட்சிக்கு மூன்று ஆசனங்களும். ‘இ’ கட்சிக்கு ஓர் ஆசனமும் ‘ஈ’ கட்சிக்கு இரண்டு ஆசனங்களும் வழங்கப்படும். இம்முறையானது சிறுகட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் சாதகமானதாக அமைந்தது. இந்த முறையின் கீழ் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த தொகுதிகளுக்கு அப்பால் தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்த தொகுதிகளிலிருந்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பு உருவானது. இதைத் தவிரவும் இருபெரும் கட்சிகளைத் தவிர்த்து, ஏனைய கட்சிகளுக்கும் தாம் பெற்ற வாக்குவீதத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளத்தக்க வாய்ப்பு உருவானது. மேலும் இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் விருப்பு வாக்கு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது குறித்த தேர்தல் மாவட்டமொன்றில், குறித்த எண்ணிக்கையிலான அபேட்சகர்களை ஒரு கட்சி களமிறக்கும். வாக்களிப்பின் போது மக்கள் தமது விருப்பக்கட்சிக்கு வாக்களிப்பதுடன், அக்கட்சியில் குறித்த தொகுதியில் போட்டியிடும் அபேட்சகர்களுள் தமக்கு விருப்பமான அபேட்சகர்களில் அதிகபட்சம் மூவரும் தமது விருப்பு வாக்கினை அளிக்கலாம். இதன் மூலம் குறித்த தொகுதியில் கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்சிக்கான ஆசனங்களும் குறித்த கட்சியின் அபேட்சகர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கட்சி வென்ற ஆசனங்களுக்கான பிரதிநிதிகளும் தெரிவுசெய்யப்பட்டார்கள். இந்த விருப்புவாக்கு முறை மூலம் ‘இடைத் தேர்தல்’ என்ற நடைமுறை இல்லாதொழிக்கப்பட்டது. பதவியிலிருக்கும் ஒருவர் பதவி விலகினாலோ, உயிரிழந்தாலோ, அல்லது ஏதேனும் காரணத்தால் பதவியை இழந்தாலோ, கட்சியின் அபேட்சகர் பட்டியலில் அடுத்ததாக உள்ளவர் பதவியைப் பெறத்தக்கதாக இருந்ததால், ‘இடைத் தேர்தலுக்கான’ தேவை இல்லாதுபோனது. இதற்காகச் சொல்லப்பட்ட நியாயம் யாதெனின் இம்முறையின் கீழ் ஓர் அபேட்சகர் கட்சிசார்பிலேயே தெரிவு செய்யப்படுகிறார். அவர் அப்பதவியை இழக்கும் பட்சத்தில், அக்கட்சி வெற்றிபெற்ற அவ்வாசனத்தை அக்கட்சியின் பட்டியலில் அடுத்ததாக உள்ளவருக்கு வழங்குவதே பொருத்தமானது என்பதாகும். இம்முறையின் கீழ், கட்சிகளின் முக்கியத்துவமும் செல்வாக்கும் அதிகரித்தது என்பதுடன், தொகுதி ரீதியிலான தனிநபர் செல்வாக்கு அரசியலுக்கும் சுயேட்சை அரசியலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.  

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை

சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசித்த பிரதேசங்களுக்கப்பால் சிறுபான்மையினங்கள் சிறுபான்மையாக வாழ்ந்துகொண்டிருந்த பகுதிகளில் சிறுபான்மையின பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய சூழலை உருவாக்கியது. குறிப்பாக கொழும்பு, மற்றும் மலையகத்தின் பல பகுதிகளிலிருந்து தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் வெற்றிபெறுவதற்கு இம்முறை உதவியது. மேலும் வடக்கு-கிழக்கிலும் பெரும்பான்மைப் பலம் கொண்டு கட்சியைத் தாண்டி ஏனைய சிறுகட்சிகளும் தமக்கான ஆசனங்களை வெற்றிகொள்ளத்தக்க வாய்ப்பையும் உருவாக்கியது. இந்த வாக்களிப்பு முறையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்தியதற்கு சிறுபான்மைக் கட்சிகளுக்கும் சிறுகட்சிகளுக்கும் வாய்ப்பளித்தல் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. 1970 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அவர்களது கூட்டணியிலிருந்த ‘தோழர்களும்’ 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் மிகப்பெரும் பெரும்பான்மையைப் பெற்றிருந்தன. இத்தகைய பெரும் வெற்றிகள் அன்று நடைமுறையிலிருந்த தொகுதிவாரி ‘முதலில் வருபவருக்கு வெற்றி’ என்ற தேர்தல் முறையின் கீழ் மட்டுமே சாத்தியமானது. 1970 இல் நாடுதழுவிய ரீதியில் ஏறத்தாழ 49% வாக்குகளைப் பெற்றிருந்த ஐக்கிய முன்னணி 76.8% ஆசனங்களை வெற்றி கொண்டது.

1977 நாடுதழுவிய ரீதியில் ஏறத்தாழ 50.92% வாக்குகளைப் பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சி 83.3% ஆசனங்களை வெற்றிகொண்டது. ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் இருபெரும் கட்சிகளும் இணைந்தாலன்றி 1977 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பெற்றதைப் போன்றதொரு 5/6 பெரும்பான்மையைக் கொண்ட வரலாறு காணாத மாபெரும் வெற்றியை அடையவே முடியாது. ஆகவே, எதிர்காலத்தில் இதுபோன்றதொரு மாபெரும் பெரும்பான்மை ஏற்படக்கூடாது என்பதற்காக ஜே.ஆர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வந்தார் எனச் சொல்லும் அரசியல் ஆய்வாளர்களும் உண்டு. இதனால்தானோ ஜே.ஆர் அவரது ஆட்சிக்காலத்தில் மீண்டுமொரு நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்லாது, அவர் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பினூடாக அறிமுகப்படுத்திய இன்னொரு குறிப்பிடத்தக்க விடயமான ‘சர்வசன வாக்கெடுப்பின்மூலம்’ (இதனை ஒப்பங்கோடல் எனச் சொல்வதுமுண்டு) நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டித்தார். ஏனெனில், அவர் பெற்றிருந்த 5/6 பெரும்பான்மையை இழந்திருக்க விரும்பவில்லை ‘விகிதாசார பிரதிநிதித்துவ’ முறையின் கீழ் அத்தகைய பெரும்பான்மையொன்று மீண்டும் கிடைக்கப்போவதில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.  

‘விகிதாசாரப் பிரதிநிதித்துவ’ முறையானது வடக்கு-கிழக்கிற்கு அப்பாலுள்ள தமிழ் மக்கள் தமக்கான பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ள ஒரு வாய்பை உருவாக்கித்தந்தது என்பதுடன், வடக்கு-கிழக்கில் பெரும்பான்மைப் பலம் கொண்ட தமிழ்க்கட்சியைவிடவும் ஏனைய சிறுகட்சிகளும் ‘மாற்றுக்கருத்துடைய’ தமிழ்க் கட்சிகளும் எதிர்காலத்தில் தமக்கான பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ளத்தக்க வாய்ப்பை உருவாக்கியது.  

நாடாளுமன்றத்துக்கு நேரடியாக பொறுப்புக்கூறத் தேவையில்லாத இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் அதிகாரக்குவியம் சார்ந்த ஆபத்துகள் நிறையவிருப்பினும் சில நன்மைகளுக்கான வாய்ப்பும் இல்லாமல் இல்லை. ஒரு தனிநபராக முடிவெடுக்கத்தக்க அதிகாரமிருப்பதாலும் ஜனாதிபதியை பதவி நீக்கும் நடைமுறையானது கடினமானதாகவும் இருப்பதாலும், தன்னுடைய கட்சி மீது எப்போதும் ஜனாதிபதிக்கு செல்வாக்கு இருப்பதனாலும், நிறைவேற்று ஜனாதிபதியாக சில முடிவுகளை அவர் தைரியமாக எடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தது.  

இதனைப் பயன்படுத்தி இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை சாத்தியப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதனை ஜே.ஆர் முதல் மஹிந்த ராஜபக்ஷ வரை எவருமே செய்யவில்லை என்பதுதான் துரதிஷ்டவசமானது.  

(அடுத்த வாரம் தொடரும்)   

http://www.tamilmirror.lk/183610/ந-ற-வ-ற-ற-ஜன-த-பத-ய-ம-வ-க-த-ச-ரப-ப-ரத-ந-த-த-த-வ-ம-ற-ய-ம-

Link to post
Share on other sites
1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள்
 
 

article_1476676921-dcfs.jpgஎன்.கே.அஷோக்பரன்
 LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-62)

 

‘இலங்கைப்பிரஜை’

1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்திய மாற்றங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இன்னொரு விடயம், குடியுரிமை சம்பந்தப்பட்டதாகும். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினை நீண்டகால இழுபறிக்குட்பட்டிருந்தது. சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தம் எனும் “குதிரைப் பேரத்தில்” சிக்கி இழுபறிப்பட்ட இந்திய வம்சாவளி மக்களில், இந்தியாவுக்குத் திரும்பிச்செல்லத் தீர்மானிக்காது, இலங்கையில் இருக்கத் தீர்மானித்தவர்களில், இலங்கை அரசாங்கத்தால் பதிவுசெய்யப்பட்டவர்கள் “பதிவுசெய்யப்பட்ட பிரஜைகள்” என்று வகைப்படுத்தலின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இந்த நடைமுறை, “பரம்பரைக் குடிமக்கள்”, “பதிவுசெய்யப்பட்ட குடிமக்கள்” என்ற இருவகைப்பட்ட செயற்கைப் பிரிவினையை இலங்கையில் உண்டாக்கியிருந்தது. 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் 26ஆம் சரத்து இந்த செயற்கைப் பிரிவினைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவந்தது. 26ஆம் சரத்தின் முதலாம் உபபிரிவு இலங்கையின் “இலங்கைப் பிரஜை” என்ற ஒரு பிரஜாவுரிமை அந்தஸ்து மட்டுமே காணப்படும் என்று கூறியதுடன், இரண்டாம் உபபிரிவு, ஓர் இலங்கைக் குடிமகனானவர், அவர், பரம்பரைக் குடிமகனாக இருப்பினும் அல்லது பதிவுசெய்யப்பட்ட குடிமகனாக இருப்பினும், இலங்கைக் குடிமகன் என்றே விவரிக்கப்படுவார் என்று கூறியது. மூன்றாம் உபபிரிவானது, பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட முறையினடிப்படையில் எந்தப் பிரிவினையும் இலங்கைக் குடிமக்களிடையே எக்காரணம் நிமித்தமும் காணப்படாது என்றது.

இந்த 26ஆம் சரத்து, இலங்கையில், ஏற்கெனவே “பதிவுப் பிரஜைகளாக” வேறுபடுத்தப்பட்ட இலங்கைக் குடியுரிமையைப் பதிவு மூலம் பெற்றிருந்த இந்திய வம்சாவளி மக்களை அந்த வேறுபாட்டைக் களைந்து இலங்கைக் குடிமக்களாக அடையாளப்படுத்த உதவியது. ஆனால், இன்னமும் இலங்கைக் குடியுரிமையில்லாது நாடற்றவர்களாக இருந்த கணிசமானளவு இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்தச் சரத்து எந்தத் தீர்வையும் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு இந்திய வம்சாவளி மக்கள் என்று விழித்தல் கூட முறையானதோர் அடையாளப்படுத்தல் அல்ல; ஏனென்றால், 1978களில் வாழ்ந்து வந்த இம்மக்கள், இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பு இங்கு வந்தவர்கள். இரண்டாம் மூன்றாம் தலைமுறைகளானவை இலங்கை மண்ணிலே பிறந்து, இலங்கை மண்ணிலே வளர்ந்தவர்களைக் கொண்ட தலைமுறை. அவர்களை இலங்கையர்கள் என்று அடையாளப்படுத்துதலே முறையாகும்.

இந்தப் பிரஜாவுரிமை முரண்பாடுகள் முழுமையாகத் தீர்க்கப்பட 2003ஆம் ஆண்டுவரை இந்த மக்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. இந்த நாட்டில் சிறுபான்மையினங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் இதுதான். சில அடிப்படையுரிமைகளை வென்றெடுக்கவே, பல தசாப்தகாலங்கள் தொடர்ந்து ஏதாவதொரு வகையில் போராட வேண்டிய நிர்ப்பந்தம் சிறுபான்மையினங்களுக்கு தொடர்ந்திருக்கிறது. 

நீதித்துறை 

அரசியலமைப்பு ஒன்று, தனது குடிமக்களுக்கு வழங்கும் உரிமைகளானவை, அதனை உறுதிப்படுத்த ஒரு சுதந்திர நீதித்துறை இல்லாதவரை, எப்பயனுமற்ற ஒரு காற்று நிரம்பிய நீர்க்குமிழியைப் போன்றது என்று அமெரிக்காவின் ஏழாவது ஜனாதிபதியாக இருந்த அன்ட்ரூ ஜக்ஸன் கூறியிருந்தார். அரசாங்கமொன்றின் இயக்கத்துக்கு அவசியமான மூன்று முக்கிய இயந்திரங்களில் நீதித்துறையும் ஒன்று. மற்றைய இரு இயந்திரங்களான சட்டவாக்கத்துறையையும் நிர்வாகத்துறையையும் அரசியலமைப்பு எனும் மீயுயர் சட்டத்தின்படி இயங்கச் செய்யும் கடிவாளம் நீதித்துறையிடம்தான் இருக்கிறது. ஆனால், சுதந்திர நீதித்துறையை அரசியல் தலைமைகள் தமக்கெதிரான ஒரு சவாலாகவே பார்த்தனர். அதனால் நீதித்துறையின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தத்தக்க, நீதித்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கத்தக்க ஏற்பாடுகளை அரசியலமைப்பினூடாகக் கொண்டு வருவதில் அக்கறை காட்டினர்.

சிறிமாவோவின் ஆட்சியின் கீழ், முதலாம் குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பதாகவே, இங்கிலாந்தின் சட்டப் பிரபுக்களைக் கொண்ட பிரிவிக் கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையை இல்லாதொழித்தார். இலங்கையின் இறைமை உட்பட சில விடயங்கள் இதற்கு பிரசித்த காரணமாகச் சொல்லப்பட்டாலும், நீதித்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் உள்நோக்கம் அரசாகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு காணப்படுவது வௌ்ளிடைமலை. சிறிமாவோவின் ஆட்சியில், அவரின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகளை அப்படியே ஏற்றுக்கொள்ள ஜே.ஆர் அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை போலும்; அதனால் அதனை மாற்றியமைக்கும் நோக்கில் 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 163ஆம் சரத்து அமைந்தது. அச்சரத்தானது புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வர முன்பு, இலங்கையின் உயர்நீதிமன்றம் மற்றும் மேல்நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நீதிபதிகளாக இருந்தவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் என்று கூறியது. அதாவது, புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும்போது, ஏலவே பதவியிலிருந்த உயர்நீதிமன்ற மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகள் தமது பதவிகளை இழப்பார்கள், இதன் மூலம் தாம் விரும்பியவர்களை அத்தகைய பதவிகளுக்கு நியமிக்கும் வாய்ப்பு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் கிடைக்கும். 163ஆம் சரத்தின் படி, சிறிமாவின் ஆட்சியில் நீதிபதிகளாக இருந்தவர்கள் பதவியிழந்தார்கள். அவர்கள் அனைவரையும் மீள நியமிப்பதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன தயாராக இருக்கவில்லை.

அத்தோடு, புதிய பிரதம நீதியரசராக அன்று சிறந்ததொரு சிவில் வழக்கறிஞராக செயற்பட்டுக்கொண்டிருந்த நெவில் சமரக்கோனை நியமிக்க ஜே.ஆர். முடிவெடுத்தார். அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்ட சகல நீதிபதிகளும் புதிய அரசியலமைப்பின் கீழ் அவ்வரசியலமைப்பை பாதுகாக்கச் சத்தியப்பிரமாணம் செய்ததனூடாக, தனது புதிய அரசியலமைப்புக்கு எதிராக எந்த சட்டச்சவால்களும் நீதித்துறையினூடாக உருவாக முடியாதவாறு ஜே.ஆர். பார்த்துக்கொண்டார். ஜே.ஆரினால் நியமிக்கப்பட்டாலும் பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன், ஆரம்பம் முதலே அரசாங்கத்திலிருந்து தன்னை விலத்தியே வைத்திருந்ததுடன், அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை பகிரங்கமாக விமர்சிக்கவும் செய்தார். சில சந்தர்ப்பங்களில் ஜே.ஆருக்கு சிம்ம சொப்பனமாகக் கூட இருந்தார் என்று சொன்னால் மிகையில்லை. இதன் விளைவாகத் தான் நியமித்த பிரதம நீதியரசரையே பதவிநீக்க நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ஜே.ஆர் செல்ல வேண்டிய சூழல் உருவானது. 1984இல் நடந்த இந்தத் துரதிஷ்டவசமான சம்பவம் பற்றி நாம் பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஜே.ஆர் ஆரம்பித்து வைத்த நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் இந்தக் கலாசாரம், மஹிந்த ராஜபக்ஷவரை தொடர்ந்தது இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று.  

அரசியல் பழிவாங்கல் 

1970 முதல் 1977 வரையான சிறிமாவோவின் ஆட்சி, ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு இருண்டகாலம்தான். சிறிமாவினதும் அவரது தோழர்களினதும் கொள்கைகளும் நடவடிக்கைகளும், ஐக்கிய தேசியக் கட்சியினரையும் அவர்களது ஆதரவாளர்களையும் கடுமையாகப் பாதித்திருந்தது. 1977இல் வரலாறு காணாத வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றிருந்தது. ஆனால், சிறிமாவோவின் ஏழு வருடகால ஆட்சியில் அனுபவித்த துன்பங்களுக்குப் பழிவாங்கும் எண்ணம், ஐக்கிய தேசியக் கட்சியினரிடையே இருந்திருக்கலாம். 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 81ஆம் சரத்தானது, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்குதல் மற்றும் அவர்களது சிவில் உரிமைகளைக் களைதல் பற்றிக் கூறியது. நீதிபதிகளைக் கொண்டமைந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று, எவரேனுமொருவர் இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வர முன்பு அல்லது வந்த பின்பு செய்த அல்லது செய்யாது விட்ட விடயங்களுக்காக சிவில் உரிமைகளை இழக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யுமாயின், நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அங்கிகாரத்துடன் அவரது சிவில் உரிமைகள் பறிக்கப்படலாம்.

அத்துடன், அத்தகையவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராயின், நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அங்கிகாரத்துடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படலாம் என்று 81ஆம் சரத்து வழங்கியது. ஜே.ஆரின் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த இந்தச் சரத்தானது ஒரு “றிமோட் கொன்ட்ரோல் பொம்” போன்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தையும் பயன்படுத்தி, அரசியல் எதிரிகளைப் பழிவாங்கத்தக்க ஆயுதமாக இது வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, 1978ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிறிமாவுக்கெதிராக முறைகேடுகள் தொடர்பான விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சரத்தின் அறிமுகமானது சிறிமாவோ பண்டரநாயக்கவை குறிவைத்தமைந்தது என்பது ஊகிப்பதற்கு கடினமானதொன்றல்ல.  

தமிழர்களுக்கு என்ன?

தமிழர்களுக்கு இந்த அரசியலமைப்பு நிறைய விடயங்களைத் தந்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், ஜே.ஆர் அரசாங்கம் அதனை உதாசீனம் செய்துவிட்டது. இது பெரும்பான்மையோரின் அரசியலமைப்பாகவே அமைந்தது; ஜே.ஆரின் அரசியலமைப்பாகவே இருந்தது; ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பாகவே இருந்தது. தமிழர்களின் பிரதான பிரதிநிதியாக இருந்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்குபற்றுவதைப் புறக்கணித்திருந்தது. ஆனால், புதிய அரசியலமைப்பு மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தில் 1978 ஓகஸ்ட் மூன்றாம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்றத்தின் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. அறிமுகப்படுத்தப்படவிருந்த குறித்த அரசியலமைப்பு பற்றிய தமிழர்களின் நிலைப்பாட்டை அமிர்தலிங்கம் தனது நீண்ட உரையில் நாடாளுமன்றத்திற்கு எடுத்துரைத்தார்.

அவ்வுரையில், “நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பொன்றை உருவாக்கும் அதிகாரத்தை எந்தநாளும் பயன்படுத்துவதில்லை. அது நீண்ட காலத்துக்கொருமுறை செய்யப்படுவது. ஆனால், துரதிஷ்டவசமாக எமது நாட்டில் ஒவ்வோர் அரசாங்கமும் தமக்கென ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்றன” என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், இலங்கையின் அரசியலமைப்பு வரலாற்றையும் அதில் தமிழர் தரப்பு திருத்தங்களூடாக தமக்கான உரிமைகளைப் பெற எடுத்துக்கொண்ட முயற்சிகளின் வரலாற்றையும், இவை தொடர்பில் சா.ஜே.வே.செல்வநாயகம் முன்னராற்றிய உரைகளையும் மேற்கோள்காட்டிப் பேசியதுடன், அந்த முயற்சிகளின் தோல்வி எவ்வாறு தமிழ் மக்களை, தனிநாடு என்பதை நோக்கி நகர்த்திச் சென்றது என்பதையும், அதன் விளைவாக உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் முழுமையாக சபையில் விளக்கிப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டத்தையும் தானும் ஏனைய தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களும் கைது செய்யப்பட்டமையையும் அதன் பின்னர் நடந்த “ட்ரயல்-அட்-பார்” வழக்கையும் பற்றி அமிர்தலிங்கம் விரிவாக விளக்கினார். இந்த உரையின் போது இடைமறித்த பிரதமர் பிரேமதாஸ, “நாங்கள் உங்கள் கருத்தினை அறிய விரும்புகிறோம். அதனால் தான் உங்களை விவாதத்தில் பங்குகொள்ள அழைக்கிறோம்” என்றார். அத்துடன், மீண்டும் குறுக்கிட்ட பிரதமர் பிரேமதாஸ, “நீங்கள் உங்கள் கருத்தினை குறித்த மசோதாவுக்குத் திருத்தமாக முன்வைக்கிறீர்களா?” என்று கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “நாங்கள் திருத்தங்களை மேற்கொள்ள இங்கு வரவில்லை; நாங்கள் எங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்துவிட்டுச் செல்லவே இங்கு வந்தோம்” என்றார். இதற்குப் பதிலளித்த பிரேமதாஸ, “திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமானால், நீங்கள் செல்லாது சபையில் இருக்க வேண்டும்” என்றார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “பிரதமரவர்கள் ஒரு ஜனநாயகவாதி; இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளின் கருத்தினைக் கேட்டு, அதற்கேற்பதானே திருத்தங்களை முன்மொழிந்திருக்கிறார். ஆகவே, அவரே இந்தத் திருத்தங்களையும் முன்மொழியலாம்” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் ஆற்றிய நீண்ட உரையின்போது, அடிப்படை உரிமைகள் மீதான மட்டுப்பாடுகள் பற்றிய அதிருப்தியையும் பதிவு செய்தார். இவையனைத்தின் போதும் அரச தரப்பின் குரல், அவ்வாறானால் நீங்கள் திருத்தங்களை முன்வையுங்கள், குழுநிலைவாதங்களில் பங்குபற்றுங்கள் என்பதாக அமைந்தது. எப்படியாவது தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் இணைத்துவிட வேண்டும் என்பது ஆளுங்கட்சியின் நோக்கமாக இருந்தது. ஆனால், “அதற்காக நாம் இங்கு வரவில்லை; நான் எமது பார்வையைப் பதிவு செய்யவே இங்கு வந்திருக்கிறேன். எதைச் செய்வது என்பது உங்கள் அரசாங்கத்தின் பாற்பட்டது” என்பதே அமிர்தலிங்கத்தின் பதிலாக இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியின் பயன்பாடு பற்றி பேசும் போது, அமிர்தலிங்கம் “எமது மொரட்டுவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டிரோன் பெர்னாண்டோ தயாரித்த ஓர் அழகான திரைப்படத்தை நேற்றுக் காணும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. 1848 மாத்தளைப் புரட்சியின் போதான ஒரு வீரனின் கதை” என்று அவர் கூற, சபாநாயகர் “புரன் அப்பு” என்று அந்த வீரனின் பெயரை ஞாபகப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம், “ஆனால் ஒரு விடயம் உறுத்தலாக இருந்தது. அந்தப் படத்தில் முழுநாடும் சிங்கள தேசம் என்று விளிக்கப்பட்டது.

அங்கே இலங்கைத் தேசியவாதி யாரும் இல்லை. யாராலும் அதை மறுக்க முடியாது. நான் பிழை பிடிக்கவில்லை” என்று பேசும்போதே குறுக்கிட்ட ஓர் உறுப்பினர் “இது நடந்த போது தமிழர்கள், இலங்கைக்காகப் போராடவில்லை” என்று குறிப்பிட்டார். உடனே இதனை மறுதலிக்க குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேற்பிள்ளை “நாங்கள் (தமிழர்கள்) போராடிய போது நீங்கள், மலைகளுக்குள் ஒழிந்துகொண்டிருந்தீர்கள்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம் “நான் பிழை காணவில்லை; குற்றம் சொல்லவில்லை. அவ்வாறுதான் அது இருக்கவேண்டும். புரன் அப்பு சிங்கள தேசத்துக்காகப் போராடிய ஒரு வீரன்; அதற்காக நாம் அவரை கௌரவிக்கிறோம். அந்த கௌரவத்தை நாம் அவருக்கு மறுக்கவில்லை. ஆனால், நீங்கள் சிங்கள தேசம் என்பது போல, நாங்கள் தனியான தமிழ்த் தேசம் என்று சொன்னால் நீங்கள் கத்துகிறீர்கள். உங்களைப் போலவே நாங்களும், தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய யாழ்ப்பாண இராச்சிய அரசானான சங்கிலி மன்னனைப் பற்றிப் பெருமை கொள்கிறோம், வன்னி இராச்சியத்தின் அரசனான பண்டாரவன்னியனைப் பற்றி பெருமை கொள்கிறோம். இதில் என்ன தவறு?” என்று கேட்டார். உடனடியாக சபாநாயகர் “ஒரு தவறுமில்லை” என்று பதிலளித்தார். அமிர்தலிங்கம் தொடர்ந்தும் பேசினார். 

(அடுத்த வாரம் தொடரும்)   

http://www.tamilmirror.lk/184096/-ஆம-ஆண-ட-ன-இரண-ட-வத-க-ட-யரச-ய-ப-ப-ன-க-ற-ப-ப-டத-தக-க-ச-ல-அம-சங-கள-

Link to post
Share on other sitesவரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்ற அமிர்தலிங்கம் ஆற்றிய உரை
 
 

article_1477282912-sxd.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons) 

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 63)

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தில் 1978 ஓகஸ்ட் மூன்றாம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்றத்தின் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆற்றிய உரையின் தொடர்ச்சியில் அவர், “நான் உங்கள் முன் வாசித்த எமது “வட்டுக்கோட்டைத் தீர்மானமானது” நாம் எந்த அடிப்படைகளில் ஒரு சுயநிர்ணய உரிமையுடைய தனியான தேசம் என்பதை தௌிவாக விளக்கியது. இந்தச் சந்தர்ப்பத்தில் தனியான தேசமொன்றை உருவாக்கும் அடிப்படைகள் பற்றிய அரசியல் விஞ்ஞானப் பாடவிளக்கமொன்றை என்னால் இங்கு தரமுடியாது. சுருக்கமாகச் சொல்வதாயின் ஒரு பிராந்தியம் சார்ந்து வாழும் பொதுவான மொழி, மதம், பாரம்பரியம் மற்றும் கலாசாரம் கொண்ட அதேவேளை ஒரு தேசமாக வாழத் திடசங்கற்பம் பூண்ட மக்கள் கூட்டத்தை நாம் ஒரு தனித்தேசம் என வரையறை செய்யலாம். இப்போது இதை நாம் இந்த நாட்டுக்குப் பொருத்திப்பார்ப்போம். இங்கே இருவேறுபட்ட மொழிகளைப் பேசும், இருவேறுபட்ட மக்கள் கூட்டமுண்டு. அவர்கள் பெருமளவுக்கு இருவேறுபட்ட மதங்களைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் இருவேறுபட்ட பாரம்பரியத்தையும் கலாசாரத்தினையும் கொண்டுள்ளார்கள்.

அந்நியர்கள் அவர்களை ஒன்றாக ஆளும் வரை, இவ்விரு மக்கள் கூட்டத்தினரும் வரலாற்று ரீதியாக வெவ்வேறாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள். 1833 வரை நாம் வேறுபட்டே வாழ்ந்து வந்திருக்கிறோம். அந்நியர் எம்மை ஒன்றாக்கினார்கள். ஆங்கிலக் கல்வி எம்மை ஒன்றிணைத்தது. இதனால் எமது முன்னைய தலைவர்கள் எம்மை ஒரு தேசமாக எண்ணினார்கள். அவர்கள் “சிலோன்” தேசம் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். இங்கே கௌரவ உறுப்பினர் மெரில் காரியவசம் அவர்கள் தமிழர்கள் சுதந்திரத்துக்காகப் போராடவில்லை என்றார். ஆனால் இலங்கை தேசிய காங்கிரஸைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராக இருந்தவர் சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம்; அவர் ஒரு தமிழர். ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள் தமிழர்கள் சுதந்திரத்துக்காகப் போராடவில்லையென” என்று பேசினார். இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மெரில் காரியவசம், “நாம் அதைப்பற்றி பெருமைப்படுகிறோம். ஆனால், சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் இலங்கையர் யாவருக்குமாகப் போராடினார்; தமிழர்களுக்காக மட்டுமல்ல” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம்,
“சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம், சேர்.பொன்னம்பலம் இராமநாதன், சேர்.ஜேம்ஸ் பீரிஸ், எஃப்.ஆர்.சேனநாயக்க உட்பட பல தலைவர்கள் ஒன்றாக இணைந்தார்கள். ஆகவே தமிழர்கள் இலங்கையின் சுதந்திரத்துக்காகப் போராடவில்லை என்று மெரில் காரியவசம் போன்ற கௌரவ உறுப்பினர்கள் சொல்வதானது இரக்கமற்றது; நியாயமற்றது மற்றும் உண்மையற்றது. எமது முன்னைய தலைவர்கள் ஒரு பொதுத் தேசம் உருவானதாக எண்ணினார்கள்.

ஆனால் நான் வருத்தத்தோடு சொல்கிறேன், 1948 இன் பின் இடம்பெற்ற நிகழ்வுகள், இந்நாட்டில் இரண்டு தேசங்களும் வேறுபட்டே வாழ்கின்றன என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. இங்கு ஏற்பட்டிருக்கும் ஒரே ஒரு மாற்றமானது, ஒரு தேசமானது - அதாவது பெரும்பான்மை தேசமானது இந்நாட்டின் அதிகாரக் கட்டிலில் அமர்ந்துகொண்டது; சிறுபான்மைத் தேசமானது அதன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட தேசமாகிவிட்டது. கடந்த இரண்டு தசாப்தகாலமாக எமது போராட்டமானது எம்மிடமிருந்து ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பது சார்ந்ததாக உள்ளது” என்று பேசினார்.

இத்தோடு சபை ஒத்திவைக்கப்பட்டு மாலை 4.30 மணிக்குப் பிரதிச் சபாநாயகர் பாகீர் மார்க்கார் தலைமையில் கூடும் எனச் சபாநாயகர் அறிவித்தார்.  

மாலை, சபை பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் மெரில் காரியவசம் எழுந்து, தான் முன்னர் கூறியதொரு விடயம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாகவும் தான் சேர். பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் ஆகியோர் இலங்கைத் தேசத்துக்காக உழைத்தவர்கள்; வெறுமனே தமிழ் தேசத்துக்காக மட்டும் உழைத்தவர்கள் அல்ல என்றே கூறியதாகவும் இலங்கைத் தேசம் முழுவதற்குமாகப் போராடிய அவர்கள் மீது தான் அளப்பரிய மரியாதை கொண்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசத்தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், “தேநீர் இடைவேளைக்கு முன்பதாக நான் தேசம் என்பதன் வரைவிலக்கணம் பற்றியும், இலங்கையானது இரண்டு தேசங்களது வீடு என்பதையும், காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரமானது சுதேசிகளிடம் கைமாறியபோது பெரும்பான்மைத் தேசம் அவ்வதிகாரத்தைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததையும், சிறுபான்மைத் தேசம் அடிமைகளாக்கப்பட்டதையும் பற்றி எடுத்துரைத்திருந்தேன்.

சுதந்திர காலம் முதல் வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இயற்றிய சட்டங்களும், எடுத்த பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளும் இந்நாட்டில் சிறுபான்மையினர் அரசியல் அதிகாரம் மீதுகொண்டுள்ள பங்கைக் குறைப்பதாகவே அமைந்தது. நான் உங்கள் முன் வாசித்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் “வட்டுக்கோட்டைத் தீர்மானமானது” சுதந்திர காலம் முதல் இந்நாட்டில் சிறுபான்மையினருக்கெதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் பற்றியும், எடுக்கப்பட்ட நிர்வாக நடவடிக்கைகளைப் பற்றியும் தௌிவாக எடுத்துரைத்தது. இங்கே சமத்துவம் என்பது அர்த்தமற்ற பேச்சாகிவிட்டது. இலங்கையின் மிகமுக்கியமான வரலாற்றாசிரியர்களில் ஒருவரும், ஐக்கிய தேசியக் கட்சியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டவருமான பேராசிரியர் கே.எம்.டி சில்வா, அண்மையில் “இலங்கையில் பாகுபாடு” என்றொரு தனிக்கட்டுரையை எழுதியுள்ளார்.

இலங்கையில் சிங்கள பௌத்தர்களின் மேலாதிக்க அரசியலைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். நான் அவரது கட்டுரையிலிருந்து நேரடியாக மேற்கோள்காட்டுகிறேன்: ‘சிங்கள பௌத்தர்களானவர்கள் இலங்கை மக்களில் பெரும்பான்மையும் மேலாதிக்கமும் கொண்ட இனக்கூட்டமாவர்கள். அவர்களே எசமானர்களும், ஆட்சியாளர்களுமாவார்கள். பல நூற்றாண்டுகளின் பின் அவர்கள் ஆட்சியதிகாரத்தை மீண்டும் பெற்றுள்ளார்கள். அவர்கள் அதனை நன்கு அறிந்துள்ளார்கள்; சிலவேளைகளில் தேவைக்கதிகமாக அதனை அறிந்துள்ளார்கள்.

மனித இயந்திரமாக இந்நாட்டைக் கருதினால், அவர்களே இந்த நாட்டினை இயக்கும் ஒரே தனி வலுவாகிறார்கள். அவர்களின் விருப்பமும், அபிலாஷைகளுமே இந்நாட்டை இயக்குகிறது. மற்றைய எந்த அம்சமும் கணக்கிலெடுக்கப்படுவதில்லை...” என்று குறிப்பிட, இடையில் குறுக்கிட்ட நிதியமைச்சர் றொனி டி மெல், “இந்தத் தனிக்கட்டுரை எப்போது எழுதப்பட்டது” என்று கேள்வியெழுப்பினார். அவரின் கருத்து இது 1956 களில் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. அமிர்தலிங்கமோ, “இது அண்மைக்காலத்தில் எழுதப்பட்டது” என்றார். தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம், “நாம் இந்த நாட்டுக்கான அரசியலமைப்பொன்றைப் பற்றிக் கருத்திற்கொள்ளும் போது, ஒருதரப்பு மக்களினது அபிலாஷைகளை மட்டும் கருத்திற்கொள்ளுதல் கூடாது. அந்த மக்கள் கூட்டம் அரசியல் ரீதியில் மேலாதிக்கமுடையதாக இருக்கலாம்; அரசியல் ரீதியில் பலம் வாய்ந்ததாக இருக்கலாம்; தேர்தலைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையுடையதாக இருக்கலாம்.

ஆனால் அவர்களினுடைய நிலைப்பாட்டை அரசியல் சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இதனால்தான் இந்தப் பிரச்சினை வருகிறது. கடந்த 30 ஆண்டுகாலமாக பல்வேறு விடயங்களில் ஏற்பட்ட பிரச்சினை இது. முதலாவது பிரச்சினை குடியுரிமைப் பிரச்சினை. இந்நாட்டின் ஒரு பகுதிக் குடிமக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, வாக்குரிமை பறிக்கப்பட்டு, அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாததாக்கப்பட்டு அவர்களுக்குரித்தான பிரதிநிதித்துவம் பெரும்பான்மையினரின் கைக்குச் சென்றது. இந்நாட்டில் 70 சதவீதத்தினரின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் 80 சதவீதம் இருக்கிறார்கள்.

குடியுரிமைச் சட்டத்தினாலும் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத் திருத்தத்தினாலும் நிகழ்ந்த ஜனநாயகச் சிதைவு இது. இதன் பிறகு வந்தது மொழிச் சட்டங்கள். நான் எனது பேச்சில் தமிழ் மக்கள் தமது மொழியுரிமைகளுக்காக தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன்” என்று சொல்லும்போது குறுக்கிட்ட, றொனி டி மெல் “அந்தப் போராட்டத்தை இப்போது வென்றுவிட்டீர்கள்” என்று கூறினார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “இந்தப் புதிய அரசியலமைப்பு மசோதாவிலுள்ள ஏற்பாடுகள் கடந்த 22 வருடங்களாக இருந்த நிலையை விடச் சற்று முன்னேற்றகரமானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். புகழப்பட வேண்டியவற்றை புகழ்வது அவசியம் எனக் கருதுபவன் நான். ஆனால், நான் முன்னும் சொன்னது போல, இங்கு சமத்துவம் என்பது இன்னும் இல்லை” என்றார். இதன்போது குறுக்கிட்ட றொனி டி மெல், “இங்கு இனரீதியான பாகுபாடு ஏதுமில்லையே? இந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இனப்பாகுபாட்டுக்கு எதிரான சட்ட ஏற்பாடு மசோதாவிலுள்ளது” என்றார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “சோல்பரி அரசியலமைப்பின் 29 ஆம் சரத்து பாகுபாட்டுக்கு  எதிரான பாதுகாப்பாக இருந்தது. அதனால் விளைந்த பயன் என்ன? பாகுபாடு பெருகியது; பாகுபாடு கொண்டு நடத்தப்பட்டது; அவர்கள் தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்; ஏறத்தாழ பத்து லட்சம் மக்களின் குடியுரிமையைப் பறித்தார்கள். சட்டம் நிர்க்கதியற்று நின்றது. இப்போது இந்த மசோதாவில் கூடத் தமிழ்மொழியின் நியாயமான ஆனால், சமத்துவமற்ற பயன்பாடு பற்றிச் சில ஏற்பாடுகள் இருப்பினும் தமிழ் மொழியுரிமையைச் செயல்படுத்தத்தக்க அல்லது நடைமுறைப்படுத்தத்தக்க ஏற்பாடுகள் ஏதுமில்லை. உத்தியோகபூர்வ மொழி தவிர்ந்த ஏனைய மொழிமூலம் பொதுச்சேவையில் இணைபவர்கள் உத்தியோகபூர்வமொழியில் தேர்ச்சிபெறுதல் அவசியமாகும் என்று இந்த புதிய அரசியலமைப்பு மசோதா கூறுகிறது. தமிழ் மக்கள் நாட்டின் எப்பகுதியிலும் தமிழில் தமது வேலைகளைச் செய்துகொள்ள முடியும் என்ற ஏற்பாடு நிதர்சனமாக வேண்டுமென்றால் பொதுச்சேவையிலுள்ள அனைவரும் தமிழ் மொழி அறிவைப் பெறுதலும் கட்டாயமாக்கப்படுதல் வேண்டும்.

காலனித்தவ காலத்தில் கூட இரண்டு தேசிய மொழியறிவும் பொதுச்சேவையிலுள்ளோருக்கு அவசியமாகவிருந்தது” என்றார். இதன்போது குறுக்கிட்ட றொனி டி மெல், “நான் இரண்டு தமிழ் மொழிப் பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளேன்” என்றார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “அதுதான் நீங்கள் விதிவிலக்கு என்கிறேன். இங்கு தமிழ்மொழி கற்க வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகள் ஏதுமில்லை. அரசாங்கத்தின் கஷ்டம் எனக்கு விளங்குகிறது. 1966 இல் நாங்கள் அரசாங்கத்தில் இருந்தபோதுகூட சிங்கள பொதுச்சேவை உத்தியோகத்தர்களை தமிழ் கற்கச் சொல்லும் திராணி அவர்களிடம் இருக்கவில்லை. ஏன்? ஏனெனில் அவர்கள் எசமானர்கள்; ஆள்பவர்கள். அவர்களிடம் எப்படிக் கேட்பது? ஆனால், தமிழ்ப் பொதுச் சேவையாளரிடம் சிங்களம் கற்கச் சொல்லலாம்; அப்படிச் செய்யாவிட்டால் பணி நீக்கலாம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம், பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் படியான தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் பற்றியும் அதன் அவசியப்பாடு பற்றியும் அமுலாக்கத்தின் பின்னடைவு பற்றியும் வடக்கு- கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள் பற்றியும் காணியுரிமை பற்றியும் பேசினார். தொடர்ந்து மாவட்ட சபைகள், பிராந்திய சபைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றிய வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன. 

தனது பேச்சின் இறுதியில் அமிர்தலிங்கம் இவ்வாறு குறிப்பிடுகிறார். “புதிய அரசியலமைப்பினை வடிவமைப்பவர்களிடம் நான் எதிர்பார்ப்பது, அவர்கள் நாட்டின் நிதர்சனங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறான ஏற்பாடுகளைச் செய்வதுதான்; அதுதான் முக்கியமானதும் காலம் வேண்டி நிற்கிற விடயமுமாகும். இந்த நாட்டின் பழைய பிரச்சினையானது, தீக்கோழி போன்று அரசியல்வாதிகள் ஒரு பிரச்சினையுமில்லை என்று மண்ணுக்குள் தமது தலையைப் புதைத்துக்கொண்டு நிராகரிக்கும் பிரச்சினையானது, இந்நாட்டின் இரண்டு தேசங்களிடையேயான உடைந்துபோயுள்ள உறவேயாகும். ஆகவே இந்த இரண்டு தேசங்களும் சமத்துவத்துடன், சுதந்திரத்துடன், நட்புறவுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளை அரசியலமைப்பு வழங்காதாயின் அந்த அரசியலமைப்பை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது மக்களின் சுதந்திரத்துக்கும் விடுதலைக்குமாக உழைக்கத் திடசங்கற்பம் பூண்டுள்ள நாம் சொல்வது யாதெனின், நாம் முதலில் போர்த்துக்கேயரால் அடிமைப்படுத்தப்பட்டோம்; பின்பு ஒல்லாந்தர்களால் அடிமைப்படுத்தப்பட்டோம்; பின்பு பிரித்தானியர்களால் அடிமைப்படுத்தப்பட்டோம்; இன்று சுதந்திரத்தின் பெயரால் எமது சகோதரர்களான சிங்கள தேசத்தினால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.

எமக்கு எமது சுதந்திரம் வேண்டும்; எமது தாயகத்தில் எம்மை நாம் ஆள வேண்டும்; எங்கள் பிரதேசத்துக்குள் ஊடுருவல்களை நாம் விரும்பவில்லை; எமது எதிர்காலச் சந்ததி தனது தனித்தவ அடையாளத்தை இழந்து, இந்த நாட்டில் அழிந்தொழிந்து போவதை நாம் விரும்பவில்லை. இவற்றின் அடிப்படையில்தான் நாம் எமது கோரிக்கைகளை முன்வைக்கிறோம். எமது மக்கள், எமது கோரிக்கையை ஏற்று மக்களாணையைத் தந்திருக்கிறார்கள். அந்தப் பாதையில் தாம் நாம் செல்கின்றோம். சட்டம் எமக்கெதிராக இருக்கிறது; நாம் சிறைப்படுத்தப்படலாம்; அரசாங்கத்தின் அதிகாரபலம் எமக்கெதிராக இருக்கிறது; நாம் சுட்டுக்கொல்லப்படலாம்; நாம் தாக்கப்படலாம்; எமது இளைஞர்கள் மரணிக்கலாம்; ஆனால், நாம் முன்னோக்கிச் சென்று, எமது சுதந்திரத்தையும் எமது மக்கள் இந்நாட்டில் சுதந்திர குடிமக்களாக வாழும் உரிமையையும், தம்மைத்தாமே ஆளும் உரிமையையும் வென்றெடுக்க எண்ணம் கொண்டுள்ளோம். இந்த அடிப்படையில்தான் நாம் இந்த அரசியலமைப்பைப் பார்க்கிறோம். இதனால்தான் இந்த அரசியலமைப்பை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறோம். எமது கட்சியின் அடிப்படைக் கொள்கையிலிருந்து எம்மால் விலக முடியாது. இந்த அரசியலமைப்பை ஆக்கும் பணியில் நாம் பங்குபற்றப்போவதுமில்லை, இந்த மசோதா மீதான வாதப்பிரதிவாதங்களில் தொடர்ந்து கலந்துகொள்ளப் போவதுமில்லை. 

அமிர்தலிங்கத்தின் வரலாற்று முக்கியத்தவம்மிக்க இந்தப் பேச்சு, சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளின் எதிரொலியாக அமைந்தது என்றால் மிகையில்லை. இந்தப் பேச்சின் முக்கிய பகுதிகளை முழுமையாக இங்கு எடுத்து நோக்கியதன் காரணமும் இதுதான். இன்று வரை, இந்தப் பேச்சு நிகழ்த்தப்பட்டு 38 வருடங்கள் கடந்த நிலையிலும், இந்தப் பேச்சில் குறிப்பிட்ட விடயங்கள் பலவும் இன்றைய புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கும் பொருத்தமாக இருப்பதுதான் இந்தநாட்டில் சிறுபான்மை மக்களின் நிலையை உணர்த்திக் காட்டுவதாக இருக்கிறது. 

(அடுத்த வாரம் தொடரும் ) 

http://www.tamilmirror.lk/184579/வரல-ற-ற-ம-க-க-யத-த-வத-த-ப-ப-ற-ற-அம-ர-தல-ங-கம-ஆற-ற-ய-உர-

Link to post
Share on other sites
அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் சிறிமாவைத் தள்ளிய ஜே.ஆர்

 

article_1477886379-ccx.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)  

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 64)

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 81 ஆம் சரத்தானது நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்குதல் மற்றும் அவர்களது சிவில் உரிமைகளைக் களைதல் பற்றிக் கூறியது. நீதிபதிகளைக் கொண்டமைந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று எவரேனுமொருவர் இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வர முன்பு அல்லது வந்த பின்பு செய்த அல்லது செய்யாது விட்ட விடயங்களுக்காக சிவில் உரிமைகளை இழக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யுமாயின், நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அங்கிகாரத்துடன் அவரது சிவில் உரிமைகள் பறிக்கப்படலாம். அத்துடன், அத்தகையவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராயின் நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அங்கிகாரத்துடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படலாம் என்று 81 ஆம் சரத்து கூறியது. ஏற்கெனவே 1978 மார்ச் மாதத்திலே, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவைக் குறிவைத்து, முன்னைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ, குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவானது நீதிபதிகளைக் கொண்டதாக இருக்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கைக்கு இசைந்தாற் போல 1978 மார்ச் 20 ஆம் திகதி நீதியரசர் ஜே.ஜீ.ரீ.வீரரட்ண தலைமையில் நீதியரசர் எஸ்.சர்வானந்தா மற்றும் நீதியரசர் கே.ஸீ.ஈ.டி அல்விஸ் ஆகிய இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்களையும் மேலும் ஒரு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரையும் அங்கத்தவர்களாகக் கொண்ட, மே 1970 முதல் ஜூலை 1977 வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த அதிகாரத் துஷ்பிரயோகங்கள் பற்றிக் கண்டறிவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. 1978 ஓகஸ்ட் முதலாம் திகதி விசாரணைகளை ஆரம்பித்த இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கத் தொடங்கியது. இதன்படி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் விசாரணைக்குழு அமைக்கப்படுவதை வரவேற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க, குறித்த அழைப்பாணைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தடையுத்தரவு வேண்டி றிட் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.  

திருத்தத்தின் மேல் திருத்தம்  

மேன்முறையீட்டு நீதிமன்றமானது குறித்த றிட் மனுவை ஏற்றுக்கொண்டது. இதற்கான காரணம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைப்பதற்கான சட்டத்தில் ஒரு தொழில்நுட்ப வழு இருந்தமையாகும். குறித்த சட்டத்தை அவசர கதியில் நிறைவேற்றியிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது, அச்சட்டம் நிறைவேறிய 1978 பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை, ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு குறித்த சட்டம் வழங்கியிருக்கவில்லை. இந்தத் தொழில்நுட்ப வழு காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றமானது சிறிமாவின் குறித்த றிட் மனுவை ஏற்றுக்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் குறித்த தொழில்நுட்ப வழுவை ஏற்றுக்கொண்டதுடன் துரித கதியில் அதனைச் சரிசெய்வதற்கும் தயாரானது. இதன்படி 1978 நவம்பர் 10 ஆம் திகதி பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவினால் இரண்டு சட்டத் திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. முதலாவது அரசியலமைப்பின் 140 சரத்துக்கு திருத்தமொன்றை முன்வைத்தது.

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் 140 ஆவது சரத்தானது மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு றிட் உத்தரவுகளை வழங்கும் அதிகாரத்தை வழங்கியது. இந்த அதிகாரத்தில் சில மட்டுப்பாடுகளை இந்தத் திருத்தத்தினூடாகக் கொண்டுவர அரசாங்கம் எண்ணியது. அதாவது 140 ஆவது சரத்தானது றிட் உத்தரவுகளை வழங்கும் அதிகாரத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வழங்கியிருந்த நிலையில், சில சந்தர்ப்பங்களில் அவ்வதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றிடமன்றி, நாட்டின் மீயுயர் நீதிமன்றமான உயர் நீதிமன்றத்திடம் இருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்பியது. இதற்கு அரசாங்கம் சொன்ன காரணம், உயர் நீதிமன்ற நீதியரசர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட ஜனாதிபதி விசாரணைக்குழுக்களுக்கு எதிரான றிட் உத்தரவுகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிப்பது முறையல்ல என்பதாகும். இது எத்தனை தூரம் பொருத்தமான கருத்து என்பது விவாதத்துக்குரியது. ஆனால், எதனையும் நிறைவேற்றத்தக்க பெரும்பான்மைப் பலம் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிடம் அன்று இருந்தது. அடுத்ததாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைப்பதற்கான சட்டத்தில், 10 பெப்ரவரி 1978 இற்கு முன்னதான காலப்பகுதியில் நடந்தவை தொடர்பிலும் விசாரிப்பதற்கான அதிகாரத்தை வழங்கும் திருத்தத்தையும் பிரதமர் பிரேமதாஸ முன்வைத்தார். இத்திருத்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய சிறிமாவோ பண்டாரநாயக்க, “ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது அவசரகதியில் இத்திருத்தங்களை முன்வைக்கிறது. ஒரு நீதிமன்றத்தால் சட்டவிரோமானது என்று அறிவிக்கப்பட்ட ஒரு விசாரணைச் செயற்பாட்டை, சட்டபூர்வமாக்குவதற்காகவே இந்த அவசரம்” என்று கண்டித்துப் பேசியதுடன் இரண்டு மசோதாக்களுக்கும் எதிராக வாக்களித்தார். ஆனால் அவரது பேச்சும் எதிர்ப்பும் ஐக்கிய தேசியக் கட்சியின் 5/6 பெரும்பான்மைப் பலத்துக்கு முன்னால் அர்த்தமற்றதாகவே இருந்தது.  

தொடர்ந்தது விசாரணை  

குறித்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதுடன், குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழு நடவடிக்கைகள் மீளத் தொடர்ந்தன. 1980 மே ஏழாம் திகதி சிறிமாவோ, தான் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகப் போவதில்லை என்று அறிவித்தார். சிறிமாவோ ஆஜராகாத காரணத்தினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது தனது விசாரணையை ஒருதலைப்பட்சமாக கொண்டு நடத்தியது. 1980 ஓகஸ்ட் 25 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது அறிக்கையை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் சமர்ப்பித்தது. குறித்த அறிக்கையில் அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் முன்னாள் அமைச்சரும் சிறிமாவின் உறவினரும் சிறிமாவின் வலதுகரமாகத் திகழ்ந்தவருமான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும் குற்றமிழைத்தவர்களாகக் காணப்பட்டார்கள்.  

சிறிமாவோவுக்காகப் பரிந்துரை  

குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, 1980 செப்டம்பர் 24 ஆம் திகதி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, குறித்த அறிக்கையில் கண்டறியப்பட்ட விடயங்களை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.

இதன் அடுத்தபடி புதிய அரசியல் யாப்பின் 81 ஆம் சரத்தின் கீழான நடவடிக்கை என்பது வெட்டவெளிச்சமாகிய சூழலில், குறித்த நடவடிக்கைகளைத் தடுக்க பலதரப்புக்களும் ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்தன. இந்தச் சந்திப்புக்களில் பல முக்கியஸ்தர்களும் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக 81 ஆம் சரத்தின் கீழான நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்க்குமாறு ஜனாதிபதி ஜே.ஆரிடம் வேண்டினர். இப்படி வேண்டியவர்களில் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவருமான சேர்.ஜோன் கொத்தலாவல குறிப்பிடத்தக்கவர். சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்காக ஜே.ஆரிடம் அவர் பரிந்து பேசியிருந்தார். ஆனால் அக்கருமத்தை அவர் நிறைவு செய்ய முன்பே 1980 ஒக்டோபர் இரண்டாம் திகதி இயற்கை எய்தினார். 81 ஆம் சரத்தின் கீழான நடவடிக்கையைத் தடுக்கும் வலிமை சிறிமாவோவுக்காகப் பரிந்து பேசிய எவருக்கும் இருக்கவில்லை. ஜே.ஆர் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்ததன் படி 1980 ஒக்டோபர் ஆறாம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க ஆகியோரது குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.  

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு  

சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம், 1970 - 1977 காலப்பகுதியிலும் அதற்கு முன்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்த ஒவ்வொரு பொழுதிலும் தமிழர்களுக்கு இழைத்த அநீதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘தனிச்சிங்கள’ச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி; சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் எனும் ‘குதிரைப் பேரத்தை’க் கொண்டு வந்ததும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி; தரப்படுத்தல் எனும் அநீதியை இழைத்ததும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி; பௌத்தத்துக்கு முதலிடம் என முதலில் அறிவித்ததும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி; ஒட்டுமொத்தத்தில் இலங்கையில் ‘இனவாத, இன-மைய’ அரசியலைக் கட்டியெழுப்பியதிலும் தமிழர்களுக்கு அநீதியிழைத்தமையிலும் பண்டாரநாயக்க குடும்பத்தினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் பங்கு முக்கியமானது.

இதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத பங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குரியது என்பதும் மறுக்க முடியாதது. சிறிமாவோ பண்டாரநாயக்கவை பழிதீர்க்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்த நியாயங்களை விடத் தமிழர் தரப்புக்கு இருந்த, இருக்கின்ற நியாயங்கள் அதிகம். ஆகவே இந்தச் சூழலில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி சிறிமாவினதும், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவினதும் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஆதரவளித்திருக்கலாம். ஆனால், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அதனைச் செய்யவில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் குறித்த தீர்மானத்துக்கு எதிராகத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவரும் இலங்கைப் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சபையில் பேசினார். தாம் குறித்த தீர்மானத்தை எதிர்ப்பதாக அறிவித்த அவர், வெறுப்பையும் கசப்புணர்வையும் கைவிடுமாறு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வேண்டினார். முன்னாள் பிரதமர் சிறிமாவோவின் ஆட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியினரைவிட அதிக துன்பத்தை அனுபவித்தவர்கள் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரே என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், ஆனால் தாம் அதற்காகப் பழிவாங்கும் சந்தர்ப்பமாக இதனைக் கருதப்போவதில்லை என்றும், தாம் நியாயத்தின்படி நடக்கவே விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.  

நினைத்ததை நடத்திய ஜே.ஆர்  

இந்தப்பேச்சு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நியாயமான நிலைப்பாட்டை எடுத்துக் காட்டியதேயன்றி இந்தக் கைங்கரியம் நிறைவேறுவதை எவ்வகையிலும் மாற்றக்கூடியதாக இருக்கவில்லை. தமது பெரும்பான்மையைக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 139 ற்குப் 19 என்ற வாக்குகளின் அடிப்படையில் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்த்து வாக்களித்திருந்தன. குறித்த தீர்மானத்தின் படி சிறிமாவோ பண்டாரநாயக்கவினதும், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவினதும் குடியியல் உரிமைகள் ஏழு வருடங்களுக்கு பறிக்கப்பட்டன. தன்னுடைய அரசியல் எதிரிகளை மிக நுட்பமாக ஜே.ஆர் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்கு அனுப்பிவைத்தார். இத்தோடு இந்தக் கைங்கரியம் நின்றுவிடவில்லை. தேர்தல் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, இவ்வாறு குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டவர் வேறொரு வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரம் செய்வது கூட தடைசெய்யப்பட்டது. அவ்வாறு யாதேனும் வேட்பாளருக்காகப் பிரசாரம் செய்தால், குறித்த வேட்பாளர் தகுதியிழப்பார் என்றவாறு சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. முற்றாக சிறிமாவோ பண்டாரநாயக்கவை அரசியலிலிருந்து அந்நியப்படுத்துவதை சட்டரீதியாக ஜே.ஆர் செய்து முடித்தார். இதுபற்றி தன்னுடைய கட்டுரையொன்றில் கருத்துத் தெரிவித்த கலாநிதி ரஜீவ விஜேசிங்ஹ சிறிமாவுக்கிருந்த ஆளுமையும் ஜனவசியமும் ஜே.ஆருக்கு இருக்கவில்லை எனவும், அடுத்த தேர்தலில் சிறிமாவோ ஆட்சியைப் பிடிப்பதை எப்படியாவது தடுத்துவிடவே ஜே.ஆர் அவரது குடியியல் உரிமைகளைப் பறித்தார் என்றும் சாடுகிறார். இது எத்தனை தூரம் ஏற்புடைய கருத்து என்ற வாதம் ஒருபுறமிருக்க, நிச்சயமாக சிறிமாவோவுக்கு மக்களபிமானம் இருக்கவே செய்தது என்பதை மறுக்கமுடியாது. அதுவும் அனுதாப அலையில் வெற்றிபெறும் வல்லமை அவருக்கு இருந்தது. இதே அனுதாப அலை அரசியல் அவரது மகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குப் பின்னர் உதவியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே, சிறிமாவோ மீண்டும் தலையெடுப்பதை முற்றாகத் தவிர்ப்பதற்காகவே ஜே.ஆர் இதனைச் செய்திருக்கலாம். சிறிமாவோவின் குடியியல் உரிமைகளைப் பறித்தமை பற்றி சர்வதேச ஊடகங்கள் ஜே.ஆரிடம் கேள்வி கேட்ட போது, “அது எனது முடிவல்ல; இரவானது பகலைப் பின்பற்றி வருவதைப் போல, நாங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முடிவைப் பின்பற்றினோம். ஒருவருக்கு மரணதண்டனை வழங்கியமைக்காக நீங்கள் நீதிபதியைச் சாடுவீர்களா?” என்று பதிலளித்தார். தொடர்ந்தும் சிறிமாவோவுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது பற்றி கேட்டபோது, “அதை உங்களுக்கு, ஏன் வேறு எவருக்கும் சொல்ல மாட்டேன், இந்தச் சந்தர்ப்பத்தில், அவ்வாறு செய்வதற்கான எந்த எண்ணமும் என்னிடம் இல்லை. எனக்குத் தெரியாது, நாளை அல்லது மறுநாள் இந்த நிலைமை மாறலாம். யாருக்குத் தெரியும்? இது அரசியல் அல்ல; திருமதி. பண்டாரநாயக்கவுக்கு  எதிராக விசேடமாக விசாரணைக்குழு அமைக்கப்படவில்லை. இந்த விசாரணைக் குழுவினால் தீர்மானிக்கப்பட்ட ஏனையவர்களதும் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அப்படியிருக்கும் போது புனித பசு மட்டும் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்”? என்று அவரது வழக்கமான திமிருடன் பதிலளித்தார்.  

ஆனால், இந்தச் சூழலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எடுத்த நிலைப்பாடும் அவர்களது செயற்பாடும் பெரிதும் பாராட்டுக்குரியது. தமிழ் மக்களின் அரசியல் எவ்வளவு தூரம் உணர்ச்சிகளுக்கப்பால் கொள்கைவழி ஒழுங்கமைந்திருந்தது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.  

( அடுத்த வாரம் தொடரும்)    

http://www.tamilmirror.lk/185011/-அரச-யல-அஞ-ஞ-தவ-சத-த-க-க-ள-ச-ற-ம-வ-த-தள-ள-ய-ஜ-ஆர-

Link to post
Share on other sitesஜே.ஆரின் ஆட்சியில் தலைதூக்கிய இனவாதம்
 

article_1478491477-Untitle.jpgஎன்.கே. அஷோக்பரன் LLB (Hons) 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 65)

சிறிமாவும் இந்திராவும்  

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகளைப் பறித்து, அவரை ஏழாண்டு அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் செயலை வெற்றிகரமாக ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி செய்து முடித்திருந்தது. சிறிமாவுக்கு நடந்த ‘அநீதி’க்கு எதிரான முதற்குரல் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடமிருந்து வந்திருந்தது. இந்திரா காந்தியின் எதிர்ப்புக்கு அவரும் பெண், சிறிமாவோவும் பெண்; இருவரும் கணவனை இழந்தவர்கள், இந்திராகாந்தியும் இதுபோன்றதொரு அரசியல் பழிவாங்கலைச் சந்தித்தவர் என்று பலரும் ஊகித்த காரணங்களுக்கப்பால் அரசியல் காரணமும் இருந்தது. பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க ஆகியோரிடையே நல்லதொரு இணக்கப்பாடு இருந்தது.

இருவரது சோசலிஸ, அணிசாரக் கொள்கைச் சார்பு, இந்த உறவு பலப்படக் காரணமாக இருக்கலாம். நேருவின் அணிசேராக் கொள்கையின்பால் இலங்கையை இணைத்துக் கொண்டதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பங்கு முக்கியமானது. இதன் தொடர்ச்சியாக சிறிமாவோ தனது ஆட்சிக்காலத்தில் அணிசேரா நாடுகளின் மாநாட்டை இலங்கையிலும் நடத்தியிருந்தார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்ப காலங்களிலிருந்தே மேற்கு சார்புடைய கொள்கைகளை உடையதாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்ததுடன், முதலாளித்துவக் கட்சியாகவே இன்றும் அடையாளப்படுத்தப்படுகிறது. இதேவேளை 1977 இல் இந்தியப் பொதுத்தேர்தலில் இந்திராகாந்தி தோல்வியடைந்து, பெரும்பான்மை பெற்ற ஜனதாக் கட்சி, மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சியமைத்திருந்தது. இதே ஆண்டு இலங்கைப் பொதுத்தேர்தலில் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, வரலாறு காணாத வெற்றியைப் பெற்றிருந்தது.

இலங்கையின் தேர்தல் பிரசாரத்தின் போதுகூட ஜே.ஆர் ஜெயவர்த்தன, இந்தியாவில் பசுவும் கன்றும் தோற்றுவிட்டது (இந்திரா காந்தியினதும் சஞ்சய் காந்தியினதும் தோல்வியைச் சுட்டி) இலங்கையிலும் இது நடக்கும் என்று (சிறிமாவோ பண்டாரநாயக்கவையும் அநுர பண்டாரநாயக்கவையும் சுட்டி) பேசியிருந்தார். ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கும் மொரார்ஜி தேசாய்க்குமிடையில் நல்லதொரு புரிந்துணர்வு உருவாகியிருந்தது. இருநாட்டுத் தலைவர்களும் மற்றைய நாட்டுக்கு பரஸ்பரம் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.  

மொரார்ஜியும் ஜே.ஆரும்  

1978 ஒக்டோபரில் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன, இந்திய விஜயத்தை மேற்கொண்டு பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்திருந்தார். அதன்போது மொரார்ஜி தேசாயை இலங்கையின் சுதந்திர தினத்தில் விசேட அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார். 1979 பெப்ரவரியில் இலங்கை சுதந்திரதினத்தில் விசேட அதிதியாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அழைப்பின்பேரில் கலந்துகொள்ள இலங்கை வந்த அன்றைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய், இலங்கை நாடாளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தார். இலங்கைவந்த பாரதப் பிரதமர், இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், இதை ஜே.ஆர் ஜெயவர்த்தன மறுத்துவிட்டார்.

ஆனாலும் இது இருவரிடையேயான பரஸ்பரப் புரிந்துணர்வைப் பாதிக்கவில்லை. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என்ற பாரதப் பிரதமரின் அழைப்புப் பற்றிக் கருத்துத் தெரிவித்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், “தாம் உள்நாட்டுக்குள் சர்வகட்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டு அதன் மூலமான தீர்வொன்றையே விரும்புகின்றோம். ஆயினும் இந்தியாவின் மத்தியஸ்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்குமானால் அதுபற்றித் தமக்கேதும் ஆட்சேபனை இல்லை ” எனத் தெரிவித்தார்.  

இன்றைக்கு தொடர்ந்து ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் உள்நாட்டுப் பொறிமுறை மூலமே தீர்வு என்று ஒற்றைக்காலில் நிற்கின்றன. ஆனால், தமிழ்த் தலைவர்கள் இதனை அன்றே உறுதியாகச் சொல்லியிருந்தார்கள். அன்று, உள்நாட்டுப் பொறிமுறை மூலமான தீர்வையே தமிழ்த்தலைவர்களும் விரும்பினார்கள். அவர்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறையின் மேல் அன்று நம்பிக்கையும் இருந்தது. இத்தனைக்கும் இரண்டு தசாப்தகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருப்பினும் அவர்கள் அந்த நம்பிக்கையை இழக்கவில்லை. இன்று அந்தச் சூழல் இல்லாமல் போனதற்கு தமிழ்த்தலைமைகளையும் தமிழ் மக்களையும் இலங்கை அரசாங்கம் குற்றம்சொல்ல முடியாது. அன்று தமிழ்த்தலைவர்கள் காட்டிய நல்லெண்ணத்தையையும் தமிழ்த்தலைவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் இல்லாமல் செய்தது யார் என்ற கேள்வியை தமிழ்த் தலைமைகளையும் தமிழ் மக்களையும் சாடுவோரும் இலங்கை அரசாங்கமும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.  

ஜனதா கட்சியின் ஆட்சியில் உட்பூசல்களால் கவிழ்க்கப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்பட்டு, மீண்டும் 1980 ஜனவரியில் இந்திரா காந்தி பாரதப் பிரதமராகிறார். மொரார்ஜி தேசாயோடு இருந்த பரஸ்பர நட்புறவு ஜே. ஆருக்கு, இந்திரா காந்தியோடு இருக்கவில்லை. மறுபுறத்தில், இந்திரா காந்திக்கு சிறிமாவோ பண்டாரநாயக்கவோடு பரஸ்பர நல்லுறவு இருந்தது. ஆகவே, இந்திரா காந்தி, சிறிமாவோவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டதை கண்டித்தமைக்குப் பின்னால் இந்த அரசியல்ப் பின்னணி முக்கிய பங்கு வகித்திருக்கும் எனலாம். எது எவ்வாறெனினும், இவை ஜே.ஆரை அசைப்பதாக அமையவில்லை. தான் செய்ய நினைத்தவைகளை தயவு தாட்சண்யமின்றி தனது பெரும்பான்மைப் பலத்தைக்கொண்டு ஜே.ஆர். நடத்திக்கொண்டிருந்தார்.  

ஜே.ஆரின் பொருளாதார தாராளமயமாக்கல்  

சிறிமாவோவினதும் ‘தோழர்களினதும்’ ஆட்சியில் மூடப்பட்டு, அதனால் முடங்கிப்போயிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை திறந்த தாராளவாத பொருளாதார முறைக்கு மாற்றுவதில் ஜே.ஆர் ஆட்சிப்படியேறிய நாள் முதலே அக்கறை காட்டினார். உடனடியாகத் திறந்த வர்த்தக வலையங்களை உருவாக்கி, முதலீட்டினை ஈர்க்கும் செயற்பாடுகளைத் துரிதகதியில் ஆரம்பித்திருந்தார். இதேவேளை, டட்லி சேனநாயக்கவின் கனவுத் திட்டமான மகாவலி அபிவிருத்தியை துரித கதியில் மேற்கொண்டு செல்வதிலும் முனைப்புக் காட்டினார். மேற்குலகுடனான ஜே.ஆரினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் நட்புறவு இந்தத் திட்டங்களுக்கு நிதிவசதிகளைப் பெற்றுத்தந்தது. மகாவலி அபிவிருத்திக்கென தனி அமைச்சு அமைக்கப்பட்டு, அது காமினி திசாநாயக்கவின் பொறுப்பில் விடப்பட்டது. ஜே.ஆரின் இந்த முயற்சியின் விளைவாகவே விக்டோரியா, கொத்மலை, மாதுறு ஓயா, ரன்தெனிகலை நீர்த்தேக்கங்களும் அணைகளும் உருவாயின. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் இவற்றின் பங்கு அளப்பரியது.  

தலைதூக்கிய இனவாதம்  

ஒருபுறத்தில் அடைபட்டுக் கிடந்த பொருளாதாரக் கதவுகளை திறந்துவிட்ட ஜே.ஆர், மறுபுறத்தில் தனது அரசாங்கத்துக்குள் இருந்து வந்த இனவெறியைக் கண்டுகொள்ளவில்லை. தமிழ் மக்கள் மீது இனவெறுப்பைக் கட்டவிழ்த்து விடும் முகமாக அமைச்சர் சிறில் மத்யூ, வடமாகாணத்தில் தமிழர்கள் அங்குள்ள பௌத்த புனித ஸ்தலங்களை அழித்தொழிப்பதாக நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். பௌத்தம் என்பது இலங்கை அரசியல் தலைவர்களுக்கு பெரும்பான்மை மக்களை மந்தைகளாக மேய்கக்கூடியதொரு உணர்வுபூர்வமான ஆயுதமாக பயன்பட்டது என்பதுதான் உண்மை.  

 நாட்டிலே எப்போது சிறுபான்மையினத்தவர் மீது இனவெறியைத் தூண்டிவிடவேண்டுமானாலும் அதற்குப் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் பௌத்த பிக்குகளையும் மறைமுகமாகப் பயன்படுத்துவது இலங்கை அரசியலில் சர்வசாதாரணமாகிவிட்டது.  

சிறில் மத்யூ உள்ளிட்ட இனவாதிகளின் ஆட்டம்  

அமைச்சர் சிறில் மத்யூ உள்ளிட்ட பேரினவாதிகளின் இனவெறி இத்துடன் நின்றுவிடவில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகளுள் முக்கியமானது பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பிலான தரப்படுத்தல் முறையாகும். இந்தத் தரப்படுத்தல் முறையினால் திறமையும் கடின உழைப்புமிருந்தும் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டது. தாம் ஆட்சிக்கு வந்தால் தரப்படுத்தலை இல்லாதொழிப்போம் என்று சொன்ன ஐக்கிய தேசியக் கட்சி, 1977 இல் ஆட்சியமைத்ததன் பின் சிறிமாவோ அறிமுகப்படுத்திய தரப்படுத்தல் முறையை இல்லாதொழித்தது.

அதற்குப் பதிலாக பல்கலைக்கழக அனுமதிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததுடன், பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கு சிறப்புரிமைகள் சிலதை வழங்கும் புதுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் பின் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் எண்ணிக்கை சற்றே அதிகரித்திருந்தது. பல்கலைக்கழக அனுமதி பெற்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையானது சிங்களப் பேரினவாதிகளைக் கோபம் கொள்ளச் செய்தது. அத்தகைய பேரினவாதிகளின் குரலாக அமைச்சர் சிறில் மத்யூ போன்றவர்கள் பேசத்தொடங்கினார்கள். தமிழ்ப் பரீட்சகர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிக புள்ளிகளை அள்ளி வழங்குவதன் மூலம் அவர்களை அதிகளவில் பல்கலைக்கழகம் அனுப்புகிறார்கள் என்ற கருத்தை மீண்டும் பரப்புரை செய்தார்கள். சிறிமாவோவின் ஆட்சியில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதே ஆதாரமற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அவ்வாறு நடப்பதற்கு சாத்தியமேயில்லை எனப் பல நடுநிலையாளர்கள் ஆதாரபூர்வமாக இந்தக் குற்றச்சாட்டினை மறுத்திருந்தார்கள். ஆயினும், இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் பெரும்பான்மை மக்களிடம் இலகுவாகப் பரப்பப்படக் கூடியதாகவும் அவர்களை நம்பவைக்கக் கூடியதாகவும் இருந்தமையினால், மீண்டும் சிறில் மத்யூ உள்ளிட்டோர் இந்த பொய்ப்பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் சிறில் மத்யூ, நாடாளுமன்றத்தில் முன்வைத்தபோது, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சிவசிதம்பரம் கொதித்தெழுந்தார். “நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், நேர்மையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் பரீட்சகர்கள் நேர்மையற்ற முறையில் தமிழ் மாணவர்களுக்கு அதிக புள்ளிகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஒரு நாளைக்கு 18 - 19 மணித்தியாலங்கள் செலவழித்து கஷ்டப்பட்டு படித்துப் புள்ளிகள் பெறும் மாணவர்களை நோகடிக்கும், இழிவுசெய்யும் கருத்துக்கள் இவை” என்று உறுதியாகப் பதிலுரைத்தார்.

ஆனால், சிறில் மத்யூ உள்ளிட்ட சிங்களப் பேரினவாதிகளின் பிரசாரம் இறுதியில் வெற்றிகண்டது. சிறிமாவின் தரப்படுத்தல் முறையை இல்லாதொழித்த ஐக்கிய தேசியக் கட்சி, மாவட்டக் கோட்டா முறையை அறிமுகப்படுத்தியது. இதன்படி பல்கலைக்கழக மொத்த அனுமதியில் 30 சதவீதம் மட்டுமே தேசியளவில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் 55 சதவீதம் மாவட்ட சனத்தொகையின் அடிப்படையில் மாவட்ட கோட்டாக்களாகவும் மீதி 15 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் எனும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சிறிமாவின் மொழிவாரித் தரப்படுத்தலளவுக்கு தமிழ் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும், தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை இம்முறையும் பாதிக்கவே செய்தது.  

இத்தோடு, சிறில் மத்யூ உள்ளிட்ட பேரினவாதிகளின் செயற்பாடுகள் நின்றுவிடவில்லை. இலங்கை ஒரு சிங்கள - பௌத்த நாடு என்பதை அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் சிறில் மத்யூ, “இலங்கை ஒரு காலத்தில் ‘சிங்ஹலே’ என்றே அழைக்கப்பட்டது. இது பௌத்த நாடு. இந்த விடயத்தை எவரும் மறுக்கமுடியாது. எந்த ஆட்சியாளர்களும் இந்தக் கருத்தை மறக்கவும் முடியாது. அப்படி எந்த ஆட்சியாளராவது இதனை மறந்தால் அவர்களால் 24 மணிநேரத்துக்கு மேலாக ஆட்சியில் நீடிக்க முடியாது. கண்டிய ஒப்பந்தத்தின்படி இலங்கையானது சிங்களவர்களுக்கான பௌத்தநாடு என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது” என்று பேசினார். இத்தகைய மிகப்பாரதூரமான இனவாதவெறியைக் கக்கியவர்கள் இவர்கள்.  

சிங்கள - பௌத்த மக்களிடம் உணர்ச்சிகரப் பிரசாரங்கள் மூலம் இந்த இனவெறியை பரப்பினார்கள். இதற்காக சிறில் மத்யூ, “சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுக” என்ற புத்தகத்தையும் எழுதினார். இந்த இனவாதம் கக்கும் விஷச்செடிகளை ஜே.ஆர் தனது அமைச்சரவையில் வைத்திருந்தார். சிங்கள - பௌத்த தீவிரவாத சக்திகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக ஜே.ஆர் இவர்களைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்கு ஜே.ஆர் கொடுத்த விலை மிகப்பெரியது. இந்தநாட்டு, மக்களின் அமைதி, நிம்மதி, உதிரம், உயிர் எனப் பெரும் விலையை, இந்த இனவாதம் பலியெடுத்த காலம் வெகுதொலைவில் இருக்கவில்லை.  

1983 இல் ‘கறுப்பு ஜூலை’ எனும் திட்டமிட்ட இனவழிப்பை முன்னின்று செய்தவர்கள் எனக்குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களின் சிறில் மத்யூ முக்கியமானவர். ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் கறுப்புப் பக்கங்கள் மெதுவாகத் திறக்கத் தொடங்கின.  

( அடுத்த வாரம் தொடரும்)    

http://www.tamilmirror.lk/185493/ஜ-ஆர-ன-ஆட-ச-ய-ல-தல-த-க-க-ய-இனவ-தம-

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நவீனன் said:

1979 பெப்ரவரியில் இலங்கை சுதந்திரதினத்தில் விசேட அதிதியாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அழைப்பின்பேரில் கலந்துகொள்ள இலங்கை வந்த அன்றைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய், இலங்கை நாடாளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தார். இலங்கைவந்த பாரதப் பிரதமர், இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், இதை ஜே.ஆர் ஜெயவர்த்தன மறுத்துவிட்டார்.

ஆனாலும் இது இருவரிடையேயான பரஸ்பரப் புரிந்துணர்வைப் பாதிக்கவில்லை. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என்ற பாரதப் பிரதமரின் அழைப்புப் பற்றிக் கருத்துத் தெரிவித்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், “தாம் உள்நாட்டுக்குள் சர்வகட்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டு அதன் மூலமான தீர்வொன்றையே விரும்புகின்றோம். ஆயினும் இந்தியாவின் மத்தியஸ்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்குமானால் அதுபற்றித் தமக்கேதும் ஆட்சேபனை இல்லை ” எனத் தெரிவித்தார்.  

 இன்றைய சிறிலங்காவின்  ஆட்சியாளர்கள்.....  இந்தியாவுக்கு சென்று சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.....தோல்வி கண்ட சிறிலங்காவின் ராஜதந்திரம்...

Link to post
Share on other sites
  • 2 weeks later...
வந்தாரை வரவேற்கும் பண்பில் சிறந்து விளங்கிய ஜே.ஆர்
 
15-11-2016 09:49 AM
Comments - 0       Views - 22

 

article_1479183786-dd.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ்மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 66)

பலரும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவை ‘ஆசியாவின் நரி’ என்று விளிப்பதுண்டு. ராஜதந்திர நகர்வுகளை அரசியலில் முன்னெடுப்பதில் ஜே.ஆருக்கு தனிப்பெயர் இருந்தது. எந்தவொரு விடயத்தையும் வெட்டொன்று துண்டிரண்டு என்று நேரடியாக அதிரடியாக ஜே.ஆர் அணுகுவதில்லை. ஆங்கிலத்தில் ‘schemer’ என்று ஒரு வார்த்தையுண்டு. ஒரு விடயம் சார்ந்து இரகசியமாக, திரைக்குப் பின் திட்டமிட்டுக் காய்நகர்த்துபவர் என்ற பொருள்படும் வார்த்தையது. இது ஜே.ஆருக்கு மிகப்பொருத்தமானது எனலாம். தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான அழுத்தத்தை தொடர்ந்து வழங்கி வந்த சூழலில் ஜே.ஆர் தனது புதிய காய்நகர்த்தலாக மாவட்ட அமைச்சர்கள் என்ற ஒன்றை அறிமுகப்படுத்த விளைந்தார். 1978 ஆரம்பப்பகுதியில் ஜே.ஆர் முதன்முறையாக 24 மாவட்டங்களுக்கும் மாவட்டத்துக்கு தலா ஓர் அமைச்சர் வீதம் மாவட்ட அமைச்சர்களை நியமிக்கும் தனது திட்டத்தை முன்வைத்ததாகத் தெரிகிறது. இது பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானிடமும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திடமும் ஜே.ஆர் பேசியிருந்தார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று மாவட்ட அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஜே.ஆர் தயாராக இருந்தார். அத்தோடு மாவட்ட அமைச்சர் பதவிகளை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் தொடர்ந்து எதிர்க்கட்சியில் நீடித்திருக்கவும் ஜே.ஆர் சம்மதித்தார்.   

கட்சித்தாவலும் “துரோகியும்”

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ‘செக்’ வைப்பதற்கு ஜே.ஆர் பல வழிகளிலும் முயற்சித்துக்கொண்டார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சார்பில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் கனகரத்னம் 1977 டிசம்பர் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைவதாக அறிவித்தார். இதனைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பெருந்துரோகமாகக் கருதியது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மயில்வாகனம் கனகரத்னத்தை ‘துரோகி’ என்று பகிரங்கமாகக் கூறினார். ஜே.ஆரைப் பொறுத்தவரையில் தனது அரசாங்கத்தில் இணைவதற்கு யார் தயாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. இந்தச் சூழலில் 1978 ஜனவரி 27 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அவரது இல்லத்தில் வைத்து இரண்டு இளைஞர்களால் சுடப்பட்டார். தலைக்கு வைக்கப்பட்ட குறி, தோளில் பட்டமையால் அவரது உயிருக்கு உடனடி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் அரசியல் களத்தைப் பரபரப்பாக்கியது. ஆளுங்கட்சியினர் குறித்த கொலைமுயற்சிக்காக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைச் சாடும் வகையில் பேசினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டச் சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய வீரவன்னி சமரவீர, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், மயில்வாகனம் கனகரத்னத்தை ‘துரோகி’ என விளித்தமைக்கும் இளைஞர்களிருவர் அவரைச் சுட்டமைக்குமிடையில் தொடர்பொன்றைச் சுட்டிப் பேசினார். இதற்கெதிரான தனது ஆட்சேபனையைப் பதிவுசெய்த அமிர்தலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் அவருடைய இந்தக் கருத்தை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஆளுங்கட்சியினர் ஒன்றாகக் குறித்த கொலை முயற்சியை அமிர்தலிங்கம் கண்டிக்க வேண்டும் எனக் குரலெழுப்பத் தொடங்கினர். உங்களது குரல்கள் என்னையோ எனது கட்சியினரையோ அச்சப்படுத்தாது என்று அமிர்தலிங்கம் சொன்னபோதிலும், குறித்த கொலைமுயற்சியைத் தாம் கண்டிப்பதாகவும் பேசினார். இந்தச் சம்பவங்கள் நடந்து சிலகாலத்தில்தான் ஜே.ஆர் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை மாவட்ட அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ள அழைத்திருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாடு

இந்த நிலையில் 1978 ஜூலை 29 ஆம் திகதி புத்தூரின், ஆவரங்காலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பதவிகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதுவரை காலமும் அ. அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால முறையைப் பின்பற்றி இணைத்தலைவர்களாக இருந்தார்கள். இந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைவராக எம்.சிவசிதம்பரமும் செயலாளர் நாயகமாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால், இந்த மாநாடு சுமுகமான முறையில் இடம்பெறவில்லை. மாறாக மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது. மாநாட்டில் பெருமளவில் பங்குபற்றியிருந்த இளைஞர்கள் தமது தலைமைகள் மற்றும் பிரதிநிதிகள் மீதான அதிருப்தியையும் கோபத்தையும் கடுமையாக வௌிக்காட்டினார்கள். குறிப்பாக ஜே.ஆரின் ‘மாவட்ட அமைச்சர்கள்’ பதவிகளைப் பெறுவதற்கான அழைப்புப் பற்றி கசிந்திருந்த தகவலும் தனிநாட்டை ஸ்தாபிப்பது, அதற்கான அரசியலமைப்பை வரைவது பற்றித் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மெத்தனம் காட்டியமையும் இளைஞர்களது கோபத்திற்கும் அதிருப்திக்கும் காரணம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. இந்த மாநாட்டில் தனிநாட்டுக்கான கோசத்தை எழுப்பிய இளைஞர்கள், உங்களால் முடியாவிட்டால் எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள் என்று குரலெழுப்பினார்கள். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களை துரோகிகள் என்று விழித்த சில இளைஞர்கள், அவர்களை உடனடியாக தமது பதவிகளை ராஜினாமாச் செய்துவிட்டு, தனிநாட்டைப் பிரகடனப்படுத்துமாறு கோசமிட்டார்கள். இளைஞர்களின் குரல்கள் உணர்ச்சிப்பிளம்பாகக் கிளம்பியது என்பதே பொருத்தமான கூற்றாகும். மேலும் இளைஞர்களினால் தனிநாட்டுக்கான ஒரு தேசிய அவை அமைக்கப்பட்டு தனிநாட்டுக்கான அரசியலமைப்பு வரையப்பட வேண்டும் என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதனை தந்திரோபாய ரீதியில் கையாண்ட தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைமைகள், குறித்த தீர்மானத்தில் ‘தேவையேற்படும் பட்சத்தில், குறித்த நேரத்தில், குறித்த அவை உருவாக்கப்படும்’ என்ற வாசகத்தையும் இணைத்துக்கொண்டனர்.

இந்த மாநாட்டின் பின்னர், மாவட்ட அமைச்சர்கள் பதவியை ஏற்றுக்கொள்வதானது தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு சாத்தியமானதொன்றாக இருக்கவில்லை. ஏனென்றால், அதனை ஏற்றுக்கொண்டால் தமிழ் மக்களின், குறிப்பாக தமிழ் இளைஞர்களின் எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என்பதை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனாலும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஜே.ஆரிடம் 5 மாவட்ட அமைச்சர்கள் பதவிகளை வேண்டியதாகவும் ஆனால் ஜே.ஆர் 3 மாவட்ட அமைச்சர் பதவிகளை மட்டுமே வழங்கத்தயாராகவிருந்ததாகவும் ஒரு செய்தியுமுண்டு. எது எவ்வாறாயினும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மாவட்ட அமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

அமைச்சரானார் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானை தன்னுடைய அமைச்சரவையில் இணைத்துக்கொள்வதில் ஜே.ஆர் ஆர்வம்காட்டினார். இது பற்றி அவர் தொண்டமானோடு பேசிய போது, ‘நீங்கள் அழைத்தால் நான் வருகிறேன். ஆனால் சில நிபந்தனைகளுண்டு’ என்று தொண்டமான் தெரிவித்திருந்தார். தன்னுடைய மக்களுக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவர்களது தொழிலுரிமைகளை மேம்படுத்துதல் என்பன எனக்கு முக்கியமானது. இந்தக் கொள்கைகளை சமரசம் செய்யாது அமைச்சரவையில் தொடர்வதானால் அதற்கு தான் தயார் என்று சௌமியமூர்த்தி தொண்டமான் ஜே.ஆரிடம் தெரிவித்திருந்தார். இதனை ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிறைவேற்றுக்குழுவில் தொண்டமான் குறித்த முன்மொழிவை முன்வைத்து அதற்கான ஏகமனதான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். அமைச்சரவையில் இணைவதுதான் சரியான வழி என்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல்குழு ஏற்றுக்கொண்டிருந்தது. சௌமியமூர்த்தி தொண்டமானைப் பொறுத்தவரையில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டில் தௌிவாக இருந்தார். இந்திய வம்சாவளி தமிழ் மக்களினதும், இலங்கை தமிழ் மக்களினதும் பிரச்சினைகள் அடிப்படையில் வேறுபட்டது; அவற்றுக்கான தீர்வும் அதனை அடைவதற்கான வழிகளும் வேறுபட்டவை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்தில் அவர் பங்குபற்றி மூன்று தலைவர்களுள் ஒருவராகப் பதவிவகித்திருப்பினும் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குப்’ பின் அவர் அதிலிருந்து விலகித் தனி வழியேதான் செயற்பட்டார். ‘தனிநாடு’ என்பது தமது பிரச்சினைக்கு தீர்வல்ல என்பது அவருடைய மிகத்தௌிவான நிலைப்பாடு. மேலும் போராட்டம், எதிர்ப்பரசியல் ஆகியவற்றிலும் அவர் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவரது அரசியலிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். இதன் வழியேதான் ஜே.ஆரின் அமைச்சரவையில் இணையும் அவரது முடிவும் அமைந்தது. 1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி கிராமப்புற கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராக சௌமியமூர்த்தி தொண்டமான் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டதும் இலங்கை ‘சிங்கள-பௌத்த’ மரபுப்படி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடங்களின் பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றார். அத்தோடு புத்தரின் தந்ததாது இருப்பதாகச் சொல்லப்படும் தலதா மாளிகைக்குச் சென்று அங்கும் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் பின் பேசிய அவர் இந்துக்கள் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகக் காண்பதாகவும் இந்துக்களுக்கு பௌத்தம் அந்நிய மதமல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மாவட்ட அமைச்சர்கள் நியமனம்

1978 ஒக்டோபர் 5ம் திகதி ஜே.ஆர் முதல்கட்ட மாவட்ட அமைச்சர்களை நியமித்திருந்தார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மாவட்ட அமைச்சுப் பதவிகளை ஏற்காத போதிலும் அவர்களுக்கு அளிப்பதாகச் சொன்ன நியமனங்களை மேற்கொள்ளாது அவர்கள் இணைவதற்கான கால அவகாசத்தை வழங்கியிருந்தார். ஆயினும் தமிழ் ஐக்கிய முன்னணி மாவட்ட அமைச்சுக்களை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லாத நிலையில் ஜே.ஆர் வடக்கு-கிழக்கில் ஒரு தமிழ், இரண்டு முஸ்லிம், நான்கு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட அமைச்சர்களாக நியமித்தார். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்திருந்த மயில்வாகனம் கனகரத்னம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். யு.பி.விஜேக்கோன் யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் ஏ.ஆர்.மன்சூர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் ஜீ.டீ.மஹிந்தசோம வவுனியா மாவட்டத்துக்கும் எம்.ஈ.எச்.மஹ்ரூப் மன்னார் மாவட்டத்துக்கும் எச்.ஜீ.பி.நெல்சன் திருக்கோணமலை மாவட்டத்துக்கும் பி.தயாரத்ன அம்பாறை மாவட்டத்துக்கும் மாவட்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டார்கள். அத்தோடு இந்த நியமனங்களுடன் தன்னுடைய உறவினரும் முதன் முதலாக நாடாளுமன்றம் நுழைந்திருந்த மிக இளைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் ஷிரான் விக்ரமசிங்ஹவை 1978 ஒக்டோபர் 5ம் திகதி இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சராக நியமித்து அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்.

இன்னுமொரு கட்சித்தாவல்

1979 மார்ச் 23 ஆம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லையா ராஜதுரை (சீ.ராஜதுரை) அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார். சீ.ராஜதுரைக்கும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கும் இடைமிடையில் நீண்டகாலமாக பனிப்போர் நடந்துகொண்டிருந்ததைப் பலரும் அறிவார்கள். இருவரும் தமிழரசுக் கட்சியினதும் பின்னர் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியினதும் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள். வடக்கின் தளபதி அமிர்தலிங்கம் என்றால் கிழக்கின் தளபதியாக ராஜதுரையிருந்தார். இதுகூட இந்தப் பனிப்போருக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அமிர்தலிங்கம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு தலைவராகியதிலிருந்து, தான் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படுவதாக சீ.ராஜதுரை உணர்ந்திருக்கலாம். இந்தப் பனிப்போரின் உச்சகட்டமாக 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு பலநபர் தேர்தல் தொகுதியாக அமைந்ததால் அந்தத் தொகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் சீ.ராஜதுரை களமிறங்க, சீ.ராஜதுரையின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழரசுக் கட்சி சார்பில் கவிஞர்.காசி ஆனந்தனை அமிர்தலிங்கம் களமிறக்கியிருந்தார். இதனை தனக்கெதிரான வௌிப்படையான சதியாகவே சீ.ராஜதுரை எடுத்துக்கொண்டார். தேர்தலில் ராஜதுரை வென்று, காசிஆனந்தன் வென்றிராத பின்பும்கூட, கட்சிச் செயற்பாடுகளிலிருந்து சீ.ராஜதுரை சற்றே விலகி நின்றதுடன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளிலும் பங்குபற்றத் தொடங்கியிருந்தார். இதன் விளைவாக இவருக்கெதிராக கட்சியிலிருந்து விளக்கங்கோரப்பட்டபோதும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்தப் பின்புலத்தில்தான் ராஜதுரையின் அரசாங்கத்துடனான சங்கமம் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்த சீ.ராஜதுரை 1979 ஏப்ரல் 5ம் திகதி பிராந்திய அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். கட்சிதாவி வந்தவர்களை அமைச்சுப் பதவி வழங்கி வரவேற்று கௌரவிக்கும் புதிய அரசியல் பண்பில் ஜே.ஆர் ஒரு மைல்கல்லை நிலைநாட்டினார் என்றால் அது மிகையல்ல.

 ( அடுத்த வாரம் தொடரும்) 

- See more at: http://www.tamilmirror.lk/186057/வந-த-ர-வரவ-ற-க-ம-பண-ப-ல-ச-றந-த-வ-ளங-க-ய-ஜ-ஆர-#sthash.Qe9MM1uP.dpuf
Link to post
Share on other sites
பயங்கரவாத தடுப்புச் சட்டம்
 
22-11-2016 09:15 PM
Comments - 0       Views - 14

article_1479829631-sd.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)  

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 67)

அறிமுகமாகியது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்  

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சி ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக மாறிக்கொண்டிருந்தது. 1977 - 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த ஆயுதக் குழுக்களின் தாக்குதல் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்றன.  

குறிப்பாக, வடக்கில் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் மீது கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறின. இவற்றில் பல தாக்குதல்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாகப் பொறுப்பேற்ற அறிக்கை 1978 ஏப்ரல் 25 ஆம் திகதி வெளியானதன் பின்னர், ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதனையொத்த ஆயுதக் குழுக்களையும் தடை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் 1978 மே மாதம் நிறைவேற்றியது. அத்துடன், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட 38 பேரை பொலிஸாரால் தேடப்படுவோர் பட்டியலில் வெளியிட்டிருந்தது.  

இதன் பின்னர், பொலிஸாரும் இராணுவத்தினரும் வடக்கு, கிழக்கில் குவிக்கப்பட்டபோதும், இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளைக் குறைக்க முடியவில்லை. 1978 செப்டெம்பர் ஏழாம் திகதி, இரத்மலானையில் உள்ள கொழும்பு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் தேசிய விமானசேவையான ‘எயார் சிலோன்’ க்குச் சொந்தமான அவ்ரோ விமானமொன்று விடுதலைப்புலிகளால் வெடிக்கவைக்கப்பட்டது.  

இந்தத் தாக்குதல் அரசாங்கத்தைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியதுடன், ஆயுதக் குழுக்களுக்கு எதிராக, உடனடி அதிரடி நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருந்தது. உடனடியாகப் பொலிஸ் மற்றும் இராணுவக் கெடுபிடிகள் நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் பல இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது.  

இதன் தொடர்ச்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்யும் சட்டத்துக்கு மாற்றாக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் 1979 ஜூலை மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.  

எதேச்சாதிகாரக் கைது, தடுத்து வைத்தலுக்கு எதிரான சுதந்திரம்  

பல இளைஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், அரசியல் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட்டப் பலரும் சந்தேகம் என்ற ஒரே காரண நிமித்தம், வேறு எந்த அடிப்படைச் சாட்சிகளினது தேவையின்றிக் கைது செய்யப்படவும் காலஎல்லையின்றித் தடுத்து வைக்கப்படவும் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் அவசர காலச் சட்டமும் ஏறத்தாழ மூன்று தசாப்தகாலத்துக்கும் மேலாக  எதேச்சாதிகாரத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியது.  

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 13 ஆவது சரத்தானது எதேச்சாதிகாரமான கைது, தடுத்துவைத்தல் மற்றும் தண்டனை என்பவற்றுக்கு எதிரான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. சுருங்கக் கூறின், ஒருவர் சட்டப்படியன்றி வேறு எக்காரணம் நிமித்தமும் கைது செய்யப்படவோ, தடுத்துவைக்கப்படவோ, தண்டனைக்குள்ளாக்கப்படவோ முடியாது. அப்படிச் செய்வதானது அந்நபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.  

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் மனித உரிமைகள் பற்றிய அத்தியாயத்தில் இந்தச் சரத்து உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், அதே அத்தியாயத்தின் 15(7) சரத்தானது தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொதுச் சுகாதாரம் மற்றும் ஒழுக்கம், மற்றவர்களது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல், ஒரு ஜனநாயக சமூகத்தில் பொதுநலன் நோக்கிலான, நியாயமான தேவைப்பாடுகள் ஆகிய காரணங்களுக்காக 13 ஆம் சரத்து வழங்கிய அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்படலாம் என்கிறது. இந்தப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நோக்க வேண்டும்.  

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் உருவாக்கத்தின் காரணகாரியத்தை விளக்கும் முன்னுரையில், ‘இலங்கையில் அரசாங்கத்தை மாற்றுவதற்கு முனையும் சில தரப்புகள் அல்லது தனிநபர் குழுக்கள் அல்லது அமைப்புகள் வன்முறையை அல்லது குற்றமிழைத்தலை, அதற்கான வழிமுறையாகக் கைக்கொள்கின்றன’ என்று குறிப்பிடுவதுடன், குறித்த மனக்குறைகள் அரசியலமைப்பு ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. ஆகவே, அரசியல் காரணங்களுக்காக வன்முறை வழியைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டு வருவதாக வியாக்கியானம் தந்தது.  

பல பயங்கரமான எதேச்சாதிகார பலத்தை ஆளும் அரசாங்கத்துக்கு வழங்கிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் முக்கிய கூறுகள் சிலவற்றைப் பற்றி ஆராய்தல் அவசியமாகிறது.  

நிர்வாகத்துறையின் கையில் எதேச்சாதிகாரம்  

இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டமானது, நபரொருவரைக் கைது செய்யும் நடைமுறை, கைது செய்த பின் நீதிமன்றில் ஆஜர் செய்யவேண்டிய நடைமுறை என்பன பற்றிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.  

இதன்படி கைதுசெய்யப்படும் நபரொருவரை 24 மணிநேரத்துக்குள் பொலிஸார் நீதவான் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். மேலும், விசாரணை செய்யக் காலம் வேண்டுமெனில் நீதிவான் உத்தரவுக்கமைய மேலும் 24 மணிநேரம் தடுத்து வைக்கப்படலாம்.  

ஆகவே, கைது செய்யப்படும் நபரொருவர் எக்காரணம் கொண்டும் எதுவித குற்றச்சாட்டக்களுமின்றி 48 மணிநேரத்துக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட முடியாது. இதற்கு விலக்காகக் குறித்த நபரொருவர் குற்றமொன்றோடு சம்பந்தப்பட்டுள்ளார் என்று சந்தேகிக்க அல்லது நம்ப அமைச்சருக்கு உரிய காரணங்கள் உண்டெனின், அந்நபரைக் கைது செய்யவும் அமைச்சரின் உத்தரவுப்படி ஒரு முறைக்கு அதிகபட்சம் 3 மாதம் என்ற அடிப்படையில் அதிக பட்சம் 18 மாதங்கள் வரை தொடர்ந்து தடுத்து வைக்க முடியும் என்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஒன்பதாவது சரத்து அமைச்சருக்கு (அதாவது நிர்வாகத்துறைக்கு) அதிகாரத்தை வழங்கியது.  

அதுமட்டுமல்ல, அந்நபரை எங்கு, எந்தச் சூழலின் கீழ் தடுத்து வைப்பது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அமைச்சருக்கு அதே சரத்து வழங்கியது. அத்தோடு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 10 ஆவது சரத்தானது, ஒன்பதாவது சரத்தின் கீழமைந்த அமைச்சரொருவரின் உத்தரவானது, எந்த நீதிமன்றத்தின் முன்பும் கேள்விக்குட்படுத்தப்பட முடியாது என்று குறிப்பிட்டது. ஆகவே, நீதித் துறையின் தலையீடின்றி நபரொருவரை அமைச்சரின் எண்ணத்தின்படி கைது செய்யவும், அதிக பட்சம் 18 மாதங்கள் வரை அமைச்சர் எண்ணும் இடமொன்றில் தடுத்து வைக்கவும் கூடிய பயங்கரமானதொரு எதேச்சாதிகாரத்தை நிர்வாகத்துறைக்கு, இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வழங்கியது.  

இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தோடு அவசரகாலச் சட்டமும் இணைந்தபின் நிலைமை இன்னும் மோசமடைந்தது. அவசர காலச் சட்டத்தின் கீழ், அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போது, நபரொருவரைக் கைது செய்து எல்லையின்றிய காலம் தடுத்து வைக்கும் அதிகாரமானது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டது.  

 அத்தோடு அவசரகாலச் சட்ட ஒழுங்குகளின் கீழ் கைது செய்யப்படும் நபரொருவரைப் பொலிஸ் மா அதிபர் தீர்மானிக்கும் இடமொன்றில், அவரது வழிகாட்டலின் படி தடுத்து வைக்க முடியும் என்ற ஏற்பாடும் காணப்பட்டது. ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசர காலச்சட்டமும் தனிநபர்களைக் கைது செய்து, தடுத்து வைக்கும் அதிகாரத்தை நிர்வாகத் துறைக்கு வழங்கியது.  

 தடுத்து வைக்கும் இடங்களையும் தீர்மானிக்கும் பலம் அமைச்சருக்கு இருந்தமையினால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலரும், தடுப்புக் காவல் சிறைகளில் அல்லாமல், இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதாகப் பரவலான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.  

பொலிஸாரிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம்   

இலங்கையின் சான்றுக் கட்டளைச் சட்டமானது பிரித்தானியரால் இலங்கைக்கு வழங்கப்பட்ட முக்கிய சட்டங்களுள் குறிப்பிடத்தக்கதாகும். இன்றுவரை, சில புதிய சேர்க்கைகளுடனும் மாற்றங்களுடனும் ஆனால், அடிப்படைகளில் மாற்றமின்றிச் சான்றுக் கட்டளைச் சட்டம் நடைமுறையிலிருக்கிறது.  

இந்தச் சான்றுக் கட்டளைச் சட்டத்தின் 25(1) சரத்தானது நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமொன்றை அந்நபருக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது என்றும், 26 ஆம் சரத்தானது, பொலிஸாரின் காவலில் உள்ள நபரொருவர், நீதிவானின் முன்னிலையில் அன்றி, பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமொன்றை அந்நபருக்கெதிராகப் பயன்படுத்த முடியாது என்றும் வழங்குகிறது. இதன் சுருக்கம், நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி அவருக்கெதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது.  

ஒப்புதல் வாக்குமூலமானது, நீதிவானின் முன்பு வழங்கப்படின் மட்டுமே அதனை வழங்கிய நபருக்கெதிராகப் பயன்படுத்த முடியும். பொலிஸார் முறையற்ற வழிகளில் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்; அதனைப் பயன்படுத்தி அந்த ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவரைக் குற்றவாளியாகக் காண்பது பாதுகாப்பானதல்ல என்பது சான்றுக் கட்டளைச் சட்டத்தின், இந்த ஏற்பாடுகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.  

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, சான்றுக் கட்டளைச் சட்டத்தின் இந்த ஏற்பாடுகளுக்கும் விதிவிலக்கினை ஏற்படுத்தியது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 17 ஆம் சரத்து, சான்றுக் கட்டளைச் சட்டத்தின் 25, 26 மற்றும் 30 ஆவது சரத்துக்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பற்றிய விடயங்களில் செல்லுபடியாகாது என்று வழங்கியதுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 16 ஆம் சரத்தானது, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அதற்கு மேற்பட்ட தரமுடைய ஒரு பொலிஸ் அதிகாரியிடம் நபரொருவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகும் என்ற வகையிலான ஏற்பாட்டை வழங்கியது.  

இதையொத்த ஏற்பாடொன்று, அவசரகாலச் சட்ட ஒழுங்குகளின் கீழும் காணப்பட்டது. ஆகவே, பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட ஒழுங்குகளின் கீழ் நபரொருவரை அவர் உதவிப் பொலிஸ் அத்யட்சகர் அல்லது அதற்கு மேற்பட்ட தரமுடைய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளியாகக் காணப்பட முடியும்.  

மேலும், குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது ஏதேனும் தூண்டுதல், அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டதெனில், பொதுவாகச் சான்றுக் கட்டளைச் சட்டத்தின் 24 ஆம் சரத்தின் கீழ் அத்தகைய ரீதியில் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகாது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதியின் படி பெறப்பட்டது என்பதை நிரூபிக்கும் பொறுப்பை குறித்த நபரிடம் சாற்றுகிறது.  

ஆகவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதியின் படி பெறப்படவில்லை என நிரூபிக்கும் பொறுப்பு பொலிஸாருக்கில்லை. மாறாக, அப்படிப் பெறப்பட்டதென்று குறித்த நபர் தெரிவிப்பாராயின், அதனை நிரூபிக்கும் பொறுப்பு அவர் வசம் சாற்றப்பட்டது.  

‘ட்ரேகோனியன்’ சட்டம்  

 மிகக் கொடுமையான சட்டங்களைச் சுட்ட ஆங்கிலத்தின் ‘ட்ரேகோனியன் லோ’ (Draconian Law   ) என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுவது வழமை. கிரேக்கத்தில் வாழ்ந்த ‘ட்ரேகோ’ என்ற நபர், எதென்ஸ் நகரின் சட்டங்களைக் கோவைப்படுத்தப் பணிக்கப்பட்டார். வழக்கத்தில் மட்டுமிருந்த பழைய சட்டங்களையெல்லாம் அவர் கோவைப்படுத்தியதில், மிகச் சிறு குற்றங்களுக்கெல்லாம் கடும் தண்டனையான மரணதண்டனை விதிக்கப்பட்டது. உதாரணமாக, ஓர் அப்பிளைத் திருடியவனுக்கும் மரண தண்டனை என்றவாறு அமைந்தது. அவர் கோவைப்படுத்திய சட்டங்கள் மிகக் கடுமையாக, கொடுமையாக இருந்ததால், அதனை ‘இரத்தத்தில் எழுதிய சட்டங்கள்’ என்று குறிப்பிடுவதுமுண்டு.  

ஆகவே, கொடுமையான சட்டங்களை ‘ட்ரேகோனியன்’ சட்டங்கள் என விளிக்கும் வழக்கம் ஏற்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது சர்வ நிச்சயமாக ‘ட்ரேகோனியன்’ சட்டம் தான். அதனால்தான், கால தசாப்தங்களாகவே சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்களும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சிவில் ஆர்வலர்களும் புத்திசீவிகளும் இந்தக் கொடுமையான, மனித உரிமைகளை மீறும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், எந்நபரையும் நீதிமன்றின் தலையீடின்றியே பலகாலம் தடுத்து வைக்கக்கூடிய பெரும்பலத்தைத் தரும் இச்சட்டத்தை, இல்லாதொழிக்கும் விருப்பம் இதுவரை எந்த அரசாங்கத்துக்கும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.  

மரண தண்டனை கிடையாது  

இத்தனை கொடுமைகள் நிறைந்த இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் உண்டு. அதாவது, பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரொருவருக்கு, குற்றவியல் சட்டத்தின் கீழ் மரணதண்டனைதான் வழங்கப்பட வேண்டுமெனினும் அவருக்கு ஆயுள் தண்டனையே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூன்றாம் சரத்து குறிப்பிடுகிறது. அதாவது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எத்தகைய பாரிய குற்றத்துக்கும் மரண தண்டனை கிடையாது; உச்சபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாகும். இதன் கீழ் தண்டனை பெறும் யாரும் அரசியல் ரீதியாகத் ‘தியாகி’களாகக் காணப்பட்டு விடக்கூடாது என்பதே இந்த ஏற்பாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிறைவேற்றுக் குழுவின் தவிசாளராக இருந்த சூரிய விக்ரமசிங்ஹ தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்க அதிககாலம் தேவைப்படவில்லை.  

(அடுத்த வாரம் தொடரும்)      

- See more at: http://www.tamilmirror.lk/186716/பயங-கரவ-த-தட-ப-ப-ச-சட-டம-#sthash.pf9j42om.dpuf
Link to post
Share on other sites
ஓர் இருண்ட காலத்தின் தொடக்கம்
 
28-11-2016 09:03 AM
Comments - 0       Views - 3

article_1480304103-aas.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 68)

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்  

1979 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமானது, பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்களென நிர்வாகத்துறை கருதும் நபர்கள் மீது, அரசாங்கத்தின் இரும்புக்கரம் பாயத்தக்கவாறு நிர்வாகத்துறையின்பால் அதீத அதிகாரத்தைக் குவித்தது.  

இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றிக் கருத்தரைக்கும் போது, ‘இலங்கை: அதிகரிக்கும் பிழைகளின் சோகம் (ஆங்கிலம்)’ என்ற தனது நூலில் ‘சட்டவாட்சியின் கீழ் இயங்கும் எந்தவொரு சுதந்திர, ஜனநாயக நாட்டிலும் அமுலிலுள்ள எந்தச் சட்டமும் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு ஒப்பான அதிகாரங்களைக் கொண்டமையவில்லை. எந்தவொரு நாகரீக நாட்டிலும் குறித்த சட்டமிருக்குமானால் அது சட்டப்புத்தகத்தில் காணப்படும் அசிங்கமான கரும்புள்ளியாகும்’ என்று சர்வதேச சட்டவியலாளர் ஆணைக்குழுவின் அறிக்கையில் (1984) குறிப்பிட்டிருந்ததை போல் சீக்ஹார்ட் மேற்கோள் காட்டுகிறார்.  

ஆரம்பத்தில் தற்காலிக ஏற்பாடாகவே ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தியபோது, வெறும் மூன்று ஆண்டுகளுக்கான தற்காலிக நடவடிக்கையாகவே இதனைக் கொண்டுவந்தனர். ஆனால், அது அவ்வாறாக அமையவில்லை. 1982 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டது. இதன்மூலம் தன்னுடைய குடிமக்களையே ‘பயங்கரவாதத்தின்’ பெயரால் ஒடுக்கியாளும் எதேச்சாதிகாரத்தை இலங்கையின் ஆளும் அரசாங்கம் பெற்றுக்கொண்டது.  

எதிர்த்து வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விட்டபோது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதனை எதிர்த்து வாக்களித்திருந்தது. பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி குறித்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை. மாறாகக் குறித்த சட்டமூலத்தினை எதிர்த்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. 

 பயங்கரவாதத் தடைச்சட்டத்தோடு அவசரகால நிலையும் அறிமுகமானது. இவை அரசாங்கத்தின் எதேச்சாதிகாரப் பலத்தை அதிகரித்ததுடன், அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் வழிசமைத்தது. ஒரு புறத்தில் இதனைத் தேசிய பாதுகாப்புக்கான அவசியப்பாடு எனத் தெற்கு நியாயப்படுத்தியது. மறுபுறத்தில், வடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள் இதனைத் தமக்கு எதிரான ஒடுக்குமுறையாகவே பார்த்தனர். ஏனெனில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அறிமுகத்தோடு வடக்கில் இராணுவக் குவிப்பு அதிகரித்ததுடன், கெடுபிடிகளும் கடுமையாகின.  

புலம்பெயர் தமிழர்கள் 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அறிமுகத்துக்கும் அதிரடியாக அதிகரித்த கெடுபிடிகளுக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் மட்டும் காரணமல்ல; மாறாகச் சர்வதேச அரங்கில் புலம்பெயர் தமிழர்களின் சில நடவடிக்கைகளும் காரணமாக இருக்கலாம் எனக் கருத்துரைக்கும் அரசியல் ஆய்வாளர்களும் உண்டு.  

1970 களிலிருந்தே புலம்பெயர் தமிழ் மக்கள் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவினைத் தரத்தொடங்கி விட்டதாகவும் காலவோட்டத்தில் பிரிவினைக்கான போருக்குப் புலம்பெயர் தமிழர் குழுக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆதரவு தரத்தொடங்கியதாகவும் 2010 நவம்பரில் ‘ஒல்கொட் நினைவுப் பேருரை’ ஆற்றிய இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவராகக் கடமையாற்றிய ரவினாத ஆரியசிங்ஹ குறிப்பிட்டிருந்தார். 

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படியான தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுப்பதில் அன்று மேலைத்தேசங்களில் புலம்பெயர்ந்திருந்த தமிழர்கள் ஆர்வம் காட்டினர். ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, பலரும் சிறிமாவின் ஆட்சியின் கீழான இருள்சூழ் காலத்திலிருந்து மாற்றமொன்றை எதிர்பார்த்தனர். 

ஆனால், ஜே.ஆர் அரசாங்கம் பதவிக்கு வந்து வெறும் ஒரு மாத காலத்துக்குள்ளாகவே, தமிழ் மக்களுக்கு எதிரான மிகப்பெரும் இனக்கலவரம் நடந்திருந்த நிலையிலும் புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்திலும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் ஓரங்கட்டப்பட்ட நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஜே.ஆர் அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படியாகத் தனிநாட்டுக் கோரிக்கை குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்களிடையே வலுவடையத் தொடங்கியது.  

மசசூஸட்ஸ் பிரகடனம் 

குறிப்பாக, ஐக்கிய அமெரிக்காவில் இருந்த புலம்பெயர் தமிழ் மக்கள், இதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வகையில் ஒரு காரியத்தைச் செய்வித்தனர். 1979 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி, மசசூஸட்ஸ் மாநில ஆளுநர் எட்வேர்ட் ஜே. கிங் 1979 மே 22 ஆம் திகதியை ‘ஈழத் தமிழர் தினமாகப்’ பிரகடனம் செய்து வைத்தார். குறித்த பிரகடனத்தில், ‘ஆதி காலத்தில், வேறுபட்ட மொழிகள், கலாசாரம், மதம் மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட பூகோளப் பிராந்தியங்களைக் கொண்ட சிங்களவர், தமிழர் என்ற இரண்டு தேசங்கள் இலங்கையில் காணப்பட்டன. ஆனால், சுதந்திரத்தின் பின்னர் இந்த இரண்டு தேசங்களும் ஒற்றையாட்சி அரசாங்கக் கட்டமைப்புக்குள் அடக்கப்பட்டன. இதன் விளைவாகத் தமிழர்கள் சிறுபான்மையினமாக அடக்குமுறைகளுக்குள்ளாக வேண்டி ஏற்பட்டது’ என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் பிரகடன நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவரான
எம். சிவசிதம்பரம் அமெரிக்கா சென்றிருந்தார்.  

மசசூஸட்ஸ் மாநில ஆளுநர் குறித்த பிரகடனத்தைச் செய்ததுடன், அப்பிரகடனத்தின் நகலொன்றை எம். சிவசிதம்பரத்திடம் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. இத்தோடு, இந்தச் செயற்பாடு நின்றுவிடவில்லை. 1981 இல் மசசூஸட்ஸ் மாநில சட்டசபையின் கீழவையில், இலங்கையில் மனிதாபிமானமற்ற அநீதியைச் சந்திக்கும் தமிழ்மக்களின் நிலையைச் சரிசெய்யும் வண்ணம் அமெரிக்க ஜனாதிபதிக்கும் அமெரிக்க காங்கிரஸுக்கும் (நாடாளுமன்றம்) அழுத்தம் தரும் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.  

இதன் பின்னணியில், மசசூஸட்ஸ் மாநிலத்தின் பொஸ்டன் நகரில் இயங்கிய செல்வாக்குமிகு புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் காணப்பட்டது. உண்மையில், இத்தகைய தீர்மானங்கள் அமெரிக்காவின் ஒரு மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படுவதால் எந்தவிதமான பயனும் விளையப் போவதில்லை. ஏனெனில், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை என்பது முற்றுமுழுதாக அமெரிக்க மத்திய அரசாங்கத்திடமுள்ள அதிகாரமாகும்.  

ஜே.ஆர் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்க மத்திய அரசாங்கத்துக்கும் மிகநெருங்கிய உறவு இருந்தது. ஜே.ஆரின் அமெரிக்க சார்பின் காரணமாக, அவரை ‘யங்கி டிக்கி’ என ஹாஸ்யமாக அழைப்போரும் உண்டு. ஆகவே, மசசூஸட்ஸ் மாநிலத்தின் தீர்மானம் எதனையும் மாற்றிவிடாது, ஆனால், இதற்கு அடையாள ரீதியிலான மதிப்பு இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.  

இது, கிட்டத்தட்ட இந்தியாவின் தமிழ்நாடு மாநில சட்டப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானமொன்றை நிறைவேற்றுவதைப் போன்றது. அடையாள ரீதியிலான அழுத்தம் என்பதைத் தாண்டி, நேரடிப் பயன் எதுவும் விளையப் போவதில்லை. ஆனால், இத்தகைய அழுத்தம் கூட இலங்கையரசாங்கத்தின் மீதான ஒரு கறைதான். 

அவசரகால நிலையின் பயங்கரம் 

இலங்கையில் தமிழர்களிடையே விடுதலைக்கான வேட்கை ஒன்று உருவாகுமானால், அதனை ஒடுக்கப்படும் ஓர் இனக்கூட்டத்தின் இனவிடுதலைக்கான போராட்டமாக அன்றி, பயங்கரவாதமாகச் சித்தரிப்பதே இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாக அமையும் என்பதோடு, பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது என்ற பெயரில், தமிழ் இளைஞர் இயக்கங்களை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அவசியம் என்ற காரணங்களுக்காக, தேசிய பாதுகாப்பு எனும் பதாகையின் கீழ் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.  

பயங்கரவாதத் தடுப்புச் சட்ட அறிமுகமும் அவசரகால நிலைப் பிரகடனமும் அரசாங்கப் படைகளுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்கியது. தமிழ் இளைஞர்களின் ஆயுதக் குழுக்கள் ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறியப்படவேண்டும் என்பதில் ஜே.ஆர் ஜெயவர்த்தன உறுதியாக இருந்தார் எனத் தன்னுடைய ‘இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும் (ஆங்கிலம்)’ என்ற நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.  

அவசரகால நிலைப் பிரகடனம் செய்யப்பட்டு சில நாட்களிலேயே வடக்கில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் காணாமல் போவதும் ஆரம்பமாகத் தொடங்கின. சர்வதேச மன்னிப்புச் சபையின் 1982 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 1979 ஜூலையில் வடக்கில் பரமேஸ்வரன், இராஜேஸ்வரன், ராஜாக்கிளி, பாலேந்திரன் ஆகிய நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் போயுள்ளார்கள். அவர்கள் உடல்கள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும், அதே தினம் கைது செய்யப்பட்ட இந்திரராஜா என்ற இளைஞர், மறுநாள் படுகாயங்களுடன் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதற்கு மறுதினம் உயிரிழந்துள்ளார். அவரது மரண விசாரணை அறிக்கையில் ‘பொலிஸாரால் தாக்கப்பட்டதற்கான சான்றுகளுண்டு’ என்று நீதவான் குறிப்பிட்டுள்ளதை தனது நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.  

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினதும் அவசரகால நிலையினதும் பயங்கரத்தை சர்வதேச மன்னிப்புச் சபையின் 1980 ஆம் ஆண்டு அறிக்கையானது ‘அவசரகால நிலைப் பிரகடனத்தின் பின்னர் எதேச்சாதிகாரமான கைதுகளும் தடுத்துவைப்பும் தொடர்ந்து இடம்பெற்றதுடன் சித்திரவதையும் திட்டமிட்டுக் கையாளப்பட்டது.....

அவசரகால நிலையின் கீழ் கைது செய்யப்பட்ட ஆறு இளைஞர்கள் பொலிஸாரின் பிடியில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மூவரின் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சித்திரவதைக்கு எதிரான, எதேச்சாதிகாரக் கைதுக்கும் தடுத்து  வைப்புக்கும் எதிரான மனித உரிமைகள் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுச் சில மாதங்களிலேயே கடுமையாக மீறப்பட்டுள்ளது’ என்று பதிவு செய்கிறது. 

தமிழர்களுக்கு எதிரான விசமப் பிரசாரம் 

ஒருபுறத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்ததுடன், மறுபுறத்தில் சிங்கள மக்களிடையே தமிழ் மக்களுக்கெதிரான இனத்துவேசப் பிரசாரம் அரசாங்கத்தின் ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அமைச்சர் சிறில் மத்யு இந்தப் பிரசாரத்தின் பிதாமகராக இருந்தார். 

 1979 இல் சிறில் மத்யுவின் ‘சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுக!’ என்ற துண்டுப் பிரசுரமும் ‘புலி என்பது யார்?’ என்று தலைப்பிட்ட இன்னொரு துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டது. இவை சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தைப் பற்றிய பிரசாரத்தை முன்னெடுத்ததுடன், தமிழினத்தின் மீதான வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் விதைப்பதாக அமைந்தது.  

இத்தகைய பிரசாரங்கள் இலங்கையில் சிங்கள மக்கள், அப்பாவித் தமிழ்மக்கள் மீது சந்தேகமும் நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொள்ளும் நிலையை உருவாக்கின. இந்த வெறுப்பு வெறுமனே வடக்கு-கிழக்கு வாழ் தமிழர்கள் மீது மட்டுமல்லாது, இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டது. சிறில் மத்யு போன்றவர்கள், இலங்கையின் மொத்த வியாபாரத் துறையை இந்திய வம்சாவளித் தமிழர்கள் முழுமையாகக் கைப்பற்றி விட்டார்கள் என்ற விசமப் பிரசாரத்தினை முன்னெடுத்தார்கள்.  

தன்னுடைய அமைச்சரினதும் கட்சி ஆதரவாளர்களினதும் இத்தகைய பிரசாரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது இருந்ததன் மூலம், இத்தகைய விசம நடவடிக்கைகளுக்கு ஜே.ஆர் மறைமுகமாகவேனும் ஆதரவு தந்தார் என்பதுதான் யதார்த்தம்.  

வரலாற்றுத் தவறு 

சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்ட முயற்சிகள் எடுக்கப்படும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தலுக்கு முன்பதான வாக்குறுதி இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்தோடு, புதிய அரசியலமைப்பும் தமிழ் மக்கள் வேண்டிய மொழியுரிமையையோ, சமத்துவத்தையோ, அதிகாரப் பகிர்வையோ வழங்கவில்லை. மாறாக, சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டுவதாகவே அமைந்தது. 

 இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழ் மக்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கத் தொடங்கியிருந்தது. இதனை நியாயப்படுத்த, தமிழ் இளைஞர்கள் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தமை தவறு என்று பலர் சொல்வார்கள். ஆனால், சுதந்திர இலங்கையின் வரலாற்றை நாங்கள் மீட்டுப் பார்த்தால், சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கியதன் மூலம் இனப்பிரச்சினையைத் தோற்றுவித்தது இலங்கை அரசாங்கம் என்பதை மறுக்கமுடியாது.  

அந்தப் பிரச்சினையைக் கூட தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்குவதன் மூலம் எந்தவொரு சிக்கலுமின்றி தீர்த்திருக்க முடியும். 1956 இல் தமிழ்த் தலைமைகள் வேண்டியதும் மொழிச் சமத்துவத்தைத்தான். ஆனால், அதனைச் செய்வதற்கு தொடர்ந்து வந்த எல்லா அரசாங்கங்களும் தவறிவிட்டன. 

 தொடர்ந்தும் மொழிப் பிரச்சினை காரணமாகத் தமிழ் மக்களின் வேலைவாய்ப்புக்கள் பறிக்கப்பட்டு,  மொழிவாரி தரப்படுத்தல் அறிமுகப்படுத்தி தமிழ் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டு,  பௌத்தம் மட்டும் முதன்மை மதமாக்கப்பட்டு,  இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அம்மக்களை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சி எடுக்கப்பட்டு,  தமிழ் மக்களுக்கெதிராகக் கலவரம் என்ற பேரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு அவர்களது இருப்புகள் அழிக்கப்பட்டு,  தமிழ் மக்கள் இந்நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகளாக உணரச் செய்யப்பட்டதன் விளைவுதான் தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்கச்செய்தது என்பதை மறந்துவிடக்கூடாது.  

தமிழ்த் தலைமைகள் ஒவ்வொருமுறையும் விட்டுக்கொடுப்புகளுக்கும் சமரசங்களுக்கும் தயாராகவே இருந்தனர். ஆனால், அந்தச் சமரசங்கள் மறுக்கப்பட்ட நிலையில்தான் தனிவழி அரசியலையும் பிரிவினையையும் கோர வேண்டிய தேவை தமிழ்த் தலைமைகளுக்கு ஏற்பட்டது.  

ஆகவே, இந்த வரலாற்றை மறந்துவிட்டு, ஆயுதப் போராட்டத்தை அணுகுதல் என்பது அரசியல் அபத்தமாகும். இவை ஆயுதப் போராட்டத்துக்கான நியாயப்படுத்தல் அல்ல; மாறாக வரலாறு கோடிட்டுக்காட்டி நிற்கும் நிதர்சனங்கள்.  

( அடுத்த வாரம் தொடரும்)     

- See more at: http://www.tamilmirror.lk/187015/ஓர-இர-ண-ட-க-லத-த-ன-த-டக-கம-#sthash.6j7ZsUjg.dpuf
Link to post
Share on other sites
  • 2 weeks later...
இராணுவத்தின் கோரப்பிடியில் யாழ்ப்பாணம்
 
05-12-2016 11:05 AM
Comments - 0       Views - 12

article_1481177449-arrest-new.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 69)   

 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றியதன் நோக்கம், வடக்கில் தமிழ் இளைஞர்களிடையே உருவாகியுள்ள ஆயுதக்குழுக்களை எவ்வகையிலேனும் வேரறுத்துவிட வேண்டும் என்பதே. இதற்காகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றிய கையோடு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சகலவிதமான பயங்கரவாதங்களையும் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் பொறுப்பை இலங்கை இராணுவத்தின் ஆளணிப் பிரதானியாகவிருந்த பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவிடம் ஒப்படைத்தார்.   

இதற்காக, யாழ்ப்பாணம் முழுவதற்குமான இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டதுடன், அரச வளங்கள் யாவும் அவருக்கு வழங்கப்படும் என்று உறுதிமொழியும் வழங்கப்பட்டது. அத்தோடு பயங்கரவாதத்தை வேரறுக்கும் இப்பணியானது 1979 டிசெம்பர் 31 க்குள் முடிக்கப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.   

சுருங்கக் கூறின் இலங்கை அரசாங்கம் ‘பயங்கரவாதிகள்’ என்று அடையாளம் கண்டுகொள்ளும் எவரையும் அடக்கி, ஒடுக்கத் திறந்த அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தப் பொறுப்பை அன்று இராணுவத் தளபதியாகவிருந்த மேஜர் ஜென்ரல் டெனிஸ் பெரேராவைத் தவிர்த்து, நேரடியாகத் தன் நம்பிக்கைக்குரிய இராணுவ அதிகாரியான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவிடம் ஒப்படைத்ததாக ‘1979 ஒப்பரேஷன் யாழ்ப்பாணம்’ பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் கலாநிதி ராஜன் ஹூல் குறிப்பிடுகிறார்.   

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை களமிறக்கி, தமிழ் இளைஞர் குழுக்களை அடக்குவது என்பது ஓர் இராணுவத்தைக் கலந்தாலோசிக்காமல் அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்ட முடிவு என ஓர் இராணுவ அதிகாரி குறிப்பிட்டதையும் கலாநிதி ஹூல் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.   
வடமாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் வன்முறைச் செயல்கள் அதிகரித்து வந்தமை உண்மை. ஆங்காங்கே ‘துரோகிகள்’ படுகொலை செய்யப்படுவதும், வங்கிக்கொள்ளைகளில் ஈடுபடுவதும் இந்த ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளாக அமைந்தன. 
ஆனால், 1979 காலப்பகுதியில் இது கட்டுமீறிய நிலையில் இருக்கவில்லை. வழமையான முறையின்படி ஜனாதிபதியானவர், யாழ்ப்பாணத்தின் நிலைபற்றிய அறிக்கையை இராணுவத்தளபதியிடம் கோரியிருக்க வேண்டும். 
அவ்வாறு கோரும் பட்சத்தில் இராணுவத்தளபதி, உரிய கட்டளைத் தளபதிகளோடும், இராணுவ அதிகாரிகளோடும் கலந்தாலோசித்து ஓர் அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார்.   

குறித்த அறிக்கையில் குறித்த நிலை பற்றி இராணுவத்தின் மதிப்பீடும் இராணுவத்தால் செய்யக்கூடியவை, செய்யமுடியாதவை பற்றிய பரிந்துரைகளும் காணப்படும். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை கட்டளையாக இராணுவத்தளபதிக்கு வழங்குவார். இராணுவம் அக்கட்டளையை நிறைவேற்றும். ஆனால் ‘1979 ஒப்பரேஷன் யாழ்ப்பாணம்’ விடயத்தில் இந்த வழமையான நடைமுறை பின்பற்றப்படவில்லை. மாறாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தற்துணிபின்படி இராணுவத்தளபதியை மீறிஇ நேரடியாக இராணுவத்தின் ஆளணிப் பிரதானியாகவிருந்த பிரிகேடியர்.திஸ்ஸ வீரதுங்கவிடம் இப்பொறுப்பிளை ஒப்படைத்தார் என்று ஓர் இராணுவ அதிகாரி குறிப்பிட்டதை தன்னுடைய கட்டுரையில் கலாநிதி. ஹூல் கோடி காட்டுகிறார்.  

ஆகவே இரண்டு தசாப்த காலத்துக்கும் மேற்பட்ட இனமுறுகல் நிலையால் விளைந்த தமிழ் இளைஞர்களின் வன்முறைப் பாதையை எதிர்கொள்ள அதைவிஞ்சியதொரு வன்முறைப் பாதையை இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தேர்ந்தெடுத்தார். அவரிடம் சமரசம் வேண்டி எதிர்பார்த்திருந்த தமிழ்த் தலைமைகளுக்கான தன்னுடைய இந்த நடவடிக்கையின் மூலம் சொல்லமால் சொல்லிவிட்டார் ஜே.ஆர்.
 ‘தர்மிஷ்ட’ அரசை ஸ்தாபிப்பேன் என்று சொல்லி ஆட்சிப்படி ஏறிய ஜே.ஆர், தமிழ் மக்களுக்கு வழங்கியதோ ‘வன்முறை’ ஆட்சியைத்தான்.   

பூப்பறிக்க கோடரியெடுத்த அரசாங்கம்  

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை நோக்க வேண்டும். அன்று, யாழில் செயற்பட்ட இந்த ஆயுதக் குழுக்களில் இயங்கிய இளைஞர்களின் தொகை மிகச் சொற்பமே. இதனை அடக்குவதற்கு இராணுவத்தையும் முற்றுமுழுதான அரச வளங்களையும் யாழ்ப்பாணத்தில் களமிறக்கியதனூடாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தார். இந்த குழுக்களின் தோற்றத்தின்போது, அவை வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெறவில்லை. மாறாக, மக்கள் கூட இக்குழுக்களை அச்சத்துடன் அணுகிய சந்தர்ப்பங்களே அதிகம்.  

இந்த இளைஞர் குழுக்களின் உருவாக்கம் கூட, அரசாங்கம் தமிழர்கள் வேண்டிய அரசியல் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்காததனால் ஏற்பட்டதே! ஆகவே அரசாங்கமானது நியாயமான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்க முன்வந்திருக்குமாயின், இந்த ஆயுதக்குழுக்கள் தம்மை நிலைநாட்டிக்கொள்ள ஒரு காரணம் இருந்திருக்காது என்பதுடன், தமிழ் மக்களும் இந்த ஆயுதக் குழுக்கள் மீது அனுதாபம் கொள்ளவும், ஆதரவு வழங்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. அரசியல் சமரசங்களுக்குத் தமிழ்த் தலைமைகள் அன்று மட்டுமல்ல, இன்றும் கூடத் தயாராகவே இருக்கின்றன.  

 இன்று பேசப்படும் ‘மென்வலு’ என்பது இன்றையதொரு புத்துருவாக்கமல்ல; தமிழ்த் தலைமைகளிடம் எப்போதுமே இருந்து வந்துள்ள சமரச அரசியலின் இன்னொரு வகைதான் இது. ஆனால், தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழ்த் தலைமைகளின் இந்தச் சமரச முயற்சிகளை உதாசீனம் செய்ததன் விளைவுதான் மூன்று தசாப்த பேரழிவுக்குக் காரணம். தனது நடவடிக்கையின் நீண்டகால விளைவுகள் பற்றி ஜே.ஆர் சிந்திக்காது நடந்துகொண்டார் என்பதுதான் நிதர்சனம்.   

அவசரகால நிலைப் பிரகடனமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் நிர்வாகத்துறைக்குத் தந்த கட்டற்ற அதிகாரங்கள் வடக்கில் இலங்கைப் படைகள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட வழிசமைத்தது. யாழ். நகரம் பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவின் தலைமையில் இராணுவத்தின் முழுமையான பிடிக்குள் சிக்கவைக்கப்பட்டது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பேரில் இளைஞர்கள் இரவோடிரவாக கைது செய்யப்பட்டார்கள். இதிலே பலரது உயிரற்ற உடல்களே திரும்பக்கிடைத்தன.   

சிலர், ‘காணாமல்போனவர்கள்’ ஆனார்கள். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்கள், எந்தக் குற்றச்சாட்டுமின்றி காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டார்கள். இந்த அநீதியைத் தட்டிக் கேட்க சட்டத்தில் இடமிருக்கவில்லை, இராணுவத்துக்கும், அரசாங்கத்துக்கும் அந்தச் சட்டப் ‘பாதுகாப்பை’ அவசர கால நிலையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் வழங்கியது. இராணுவத்தின் இந்த அதிபயங்கர நடவடிக்கை தமிழ் மக்கள் மனதில் அச்சத்தை மட்டுமல்ல, அந்நியத்தன்மையையும் விதைத்தது. இலங்கை அரசாங்கத்தை ‘சிங்கள அரசாங்கமாக’ தமிழ் மக்கள் முடிவெடுக்கும் நிலைக்கு வந்திருந்தார்கள். அந்தச் சிங்கள அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கினார்கள்.  

 ஒரு மக்கட்கூட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியொடுக்குவதன் மூலம் அம்மக்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஒரு போதும் வெல்ல முடியாது. மாறாக அம்மக்களின் வெறுப்பையும் எதிர்ப்புணர்வையுமே சம்பாதிக்க முடியும். வடக்கில் இராணுவத்தைக் களமிறக்கியதன் மூலம் ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்ததுடன், பிரிவினைதான் தீர்வு, வேறு வழியில்லை என்பதைத் தமிழ் மக்கள் உணரக்கூடிய நிலைக்கு அவர்களைத் தள்ளியது.   

சொல் ஒன்று; செயல் வேறு  

வடக்கில் தொடங்கிய இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கியது. இந்தப் பதற்ற நிலையைக் குறைக்கும் வகையில் பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவும் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் இணைந்து அறிக்கையொன்றை வௌியிட்டனர். அந்த அறிக்கையில் மக்களை அமைதிகொள்ளுமாறும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சில சமூக விரோத சக்திகள் இன்றைய நிலையைத் தமக்கு சாதகமாக்கத் துடிப்பதாகவும் இதற்கு இடமளிக்கக்கூடாது எனவும், நாம் இனநல்லுறவைப் பாதுகாக்கவும் அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பளிக்கவும் உறுதிபூண்டுள்ளோம் எனவும் இலங்கையைப் பீடித்துள்ள பிரச்சினையை அமைதி வழியில் இணக்கப்பாட்டுடன் தீர்க்க முடியும் எனத் தாம் கருதுவதாகவும் ஆகவே, எவரையும் வன்முறை வழியை நாட வேண்டாம் என்றும் நாகரிகமுள்ள மனிதர் என்ற வகையில் எம்முடைய மதங்கள் காட்டும் வழியில் அமைதியான முறையில் பிரச்சினை நாம் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் இராஜதந்திரத்தில் ஜே.ஆர் வல்லவர் என்பதாலோ என்னவோ அவர் ‘ஆசியாவின் நரி’ என்று அறியப்படுகிறார். இருநூறு இளைஞர்கள் கூட இயங்காத, மிகச் சிறிய ஆயுதக்குழுக்களை அடக்க, கட்டற்ற சுதந்திரத்துடன் இராணுவத்தைக் களத்தில் இறக்கிவிட்டு, மறுபுறத்திலே அமைதிவழியில் பிரச்சினையைத் தீர்க்கலாம் எனத் தன்னுடைய பிரதமரை, எதிர்க்கட்சித் தலைவரோடு இணைந்து அறிக்கைவிடச் செய்யும் ஜே.ஆரின் ‘நரித்தனம்’ வியப்புக்குரியது. 

இராணுவமயமாக்கம்  

‘தர்மிஷ்ட’ அரசை ஸ்தாபிக்கும் நோக்கம் உண்மையாக இருந்திருந்தால், இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் எண்ணம் உண்மையிலேயே இருந்திருந்தால், தான் தேர்தலுக்கு முன் வாக்குறுதியளித்திருந்ததன்படி ஜே.ஆர் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றை நேர்மையாக, நல்லெண்ணத்துடன் உருவாக்கி அதன் அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி, தன்னுடைய வரலாறுகாணாத பெரும்பான்மைப் பலத்தினைக் கொண்டு, இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கலாம்.   

ஜே.ஆர் அதனைச் செய்யவில்லை. இராணுவ வழியை அவர் நாடினார். யாழ்ப்பாணம் இராணுவ மயமானது. பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க யாழ். மாவட்டமேகியதும் சிவில் நிர்வாகத்தின் அடையாளமாக விளங்கிய ஜே.ஆர் நியமித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் யோகேந்திரா துரைசாமியை அவரது அரச இல்லத்திலிருந்து வௌியேற்றியதுடன், அவ்வில்லம் பின்னர் சித்ரவதைக்கூடமாகப் பயன்படுத்தப்பட்டதாக கலாநிதி ஹூல் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். 

கைதுகள், தடுத்து வைப்புக்கள், சித்ரவதைகள், உயிர்க்கொலைகள் என யாழில் ஆறு மாத இராணுவ வன்கொடுமையை தமிழ் மக்கள் சந்திக்க வேண்டி வந்தது. ஆறு மாத முடிவில் பிரிகேடியர்.   
திஸ்ஸ வீரதுங்க ஜனாதிபதிக்கு ‘வடக்கில் பயங்கரவாதம் முற்றாக துடைத்தெறியப்பட்டுவிட்டது’ என்று கருத்துப்பட 70 பக்க அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். ஆனால், அந்த அறிக்கையோ, அதன் உள்ளடக்கமோ வௌியிடப்படவில்லை. திஸ்ஸ வீரதுங்கவின் ‘ஒப்பரேஷன்’ முடிவுக்கு வந்தாலும் தமிழ் மக்கள் இராணுவத்தினதும் அரச இயந்திரத்தினதும் கையால் அனுபவிக்கப் போகும் சித்ரவதைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் இது ஓர் ஆரம்பமாக மட்டுமே இருந்தது. 

ஓர் இருண்ட யுகத்தின் ஆரம்பம்

பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவின் ‘யாழ். ஒப்பரேஷன்’ பற்றி பின்னொருநாளில் பத்திரிகை ஒன்றுக்குக் கருத்துரைத்த மேஜர் ஜென்ரல் எச்.வீ. அதுக்கோரல, ‘அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படும் சூழலை யாழ்ப்பாணம் இந்தக் காலப்பகுதியில் எதிர்கொண்டது. இந்த ‘ஒப்பரேஷன்’ மூலம் நிறைய விடயங்கள் அடையப்பெறப்பட்டன. இராணுவம் அரசியல் மயமாக்கப்பட்டது. அரசியல் தளபதிகள் உருவானார்கள். இராணுவத் தளபதியின் அதிகாரங்கள் அரசியல் தளபதிகளால் கைக்கொள்ளப்பட்டு, அப்பாவி மக்கள் மீது அரச பயங்கரவாதமும் சித்ரவதையும் கட்டவிழ்த்துவிடப்பட்டது’ என்று குறிப்பிட்டார். 

திஸ்ஸ வீரதுங்கவின் ‘ஒப்பரேஷன்’ நிறைவுற்றதும், இராணுவத்தளபதியினால் யாழ். மாவட்டத்துக்குப்  பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் மேஜர் ஜெனரல் அத்துக்கோரல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.   
இராணுவ பலத்தைக் கொண்டு அச்சத்தை விளைவித்தால் தமிழ் இளைஞர்களின் எழுச்சியை அடக்கிவிடலாம் என்று ஜே.ஆர் எண்ணியிருக்கலாம். ஆனால், வடக்கின் இராணுவ மயமாக்கல் அதற்கு நேர்மாறான விளைவுகளையே தோற்றுவித்தது. இந்த இராணுவ மயமாக்கத்தின் விளைவாக தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் பெரும் மக்கள் ஆதரவோ, அரசியல் ஆதரவோ இல்லாதிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. தமிழ்த் தலைமைகளும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆயுதக் குழுக்களின் பக்கம் சாயத் தொடங்கினார்கள். 

உண்மையில் அரசாங்கத்தின் இந்த இராணுவ நடவடிக்கை அரசாங்கத்தின் மீதும், அமைதி வழி மீதுமான தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்தது என்பதுடன், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் மீது, தமிழ் மக்களுக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் உருவாக்கியது.   

எதிர்ப்புத் தெரிவித்த இடதுசாரிகள்  

வடக்கில் அரசாங்கம் நிகழ்த்திய மேஜர் ஜெனரல் அத்துக்கோரல குறிப்பிடுவது போல, ‘அரச பயங்கரவாதத்துக்ற்கு’ தெற்கில் 
ஜே.வீ.பி (மக்கள் விடுதலை முன்னணி) மற்றும் அதனுடன் இணைந்து ஏனைய நான்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் முன்வைத்தன. 

1979 செப்டெம்பர் 24 அன்று அவை இணைந்து வௌியிட்ட அறிக்கையொன்றில், கட்டாய பொதுச் சேவை சட்டமூலம் மீளப் பெறப்பட வேண்டும் என்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் அவசரகால நிலைப் பிரகடனமும் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்றும் வடக்கின் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இவ்வறிக்கையில் ஜே.வீ.பி சார்பில் உபதிஸ்ஸ கமனநாயக்கவும் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் பேனார்ட் சொய்ஸாவும் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் டி.டபிள்யூ.சுபசிங்ஹவும் நவ சமசமாஜக் கட்சி சார்பில் வாசுதேவ நாணயக்காரவும் புரட்சிகர மாக்ஸிஸ்ட் கட்சி சார்பில் பாலா தம்புவும் கையொப்பமிட்டிருந்தனர். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து 1979 ஒக்டோபர் இரண்டாம் திகதி கொழும்பில் மக்கள் எழுச்சியொன்றையும் நடத்தியிருந்தனர். ஆனால், இவையெல்லாம் ஜே.ஆரை அசைத்துக்கூடப் பார்க்கவில்லை.  

( அடுத்த வாரமும் தொடரும்)  

- See more at: http://www.tamilmirror.lk/187673/இர-ண-வத-த-ன-க-ரப-ப-ட-ய-ல-ய-ழ-ப-ப-ணம-#sthash.64zX8gCC.dpuf
Link to post
Share on other sites
மாவட்ட அபிவிருத்தி சபைகள்
 
13-12-2016 10:56 AM
Comments - 0       Views - 2

article_1481782685-Amir.jpg- என்.கே.அஷோக்பரன் LLB (Hons) 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 70)

இராணுவக் கெடுபிடியும் அரசியல் தீர்வும்  

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினதும் அவசரகாலச் சட்டத்தினதும் கோரத்தன்மை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வந்தது. இது தமிழ் மக்களின் வாழ்வைப் பெரும் அவலமாக மாற்றியது என்று சொன்னால் அது மிகைப்படுத்தலல்ல.   

பாதுகாப்பு அமைச்சானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கையிலே இருந்தபோதும் 1983 இலே ‘தேசிய பாதுகாப்பு அமைச்சு’ என்று தனி அமைச்சொன்றை உருவாக்கி, அதற்கு லலித் அதுலத்முதலியை அமைச்சராக நியமித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பான அதிகாரங்களை அந்த அமைச்சுக்கு வழங்கியதன் மூலம், தமிழ் மக்களை அடக்கியொடுக்கும் செயற்பாட்டை ஜே.ஆர் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் நடத்திக் காட்டியது. இந்த வரலாற்றை நாம் எதிர்வரும் அத்தியாயங்களில் விவரமாகக் காண்போம்.  

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் அவசரகால நிலைப் பிரகடனமும் ஜே.ஆர் அரசாங்கத்துக்கு இனப்பிரச்சினைத் தீர்வு நடவடிக்கை தொடர்பான அரசியல் நகர்வொன்றை செய்யவேண்டிய சூழலைத் தோற்றுவித்தது. அரசியல்த் தீர்வை ஆயுதவழியில் இன்றி, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் வழியில் தேடுங்கள் என்பதே அரசாங்கத்தின் வாய்ப்பாட்டாக இருந்தது.   

ஆகவே, இராணுவத்தைக் களமிறக்கி வடக்கிலே தமிழ் ஆயுதக் குழுக்களை அடக்கும் அதேவேளையில், அரசியல் ரீதியில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான காய்நகர்த்தல்களையும் ஜே.ஆர் அரசாங்கம் செய்தது.
ஏற்கெனவே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 1978 அக்டோபர் மாதத்தில் மாவட்ட அமைச்சர் என்ற புதிய பதவியை அறிமுகப்படுத்தியிருந்தார். மாவட்ட அமைச்சுப் பதவிகளைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் வழங்கத் தயாராக இருந்தபோதும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அதனை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   
தற்போது, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடுத்த கட்ட முன்மொழிவாக, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்ற கருவினை முன்வைத்தார். இது, ஜே.ஆரால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதொரு எண்ணக்கருவல்ல; மாறாக பிரதமர் டட்லி சேனநாயக்க காலத்திலேயே பேசப்பட்ட மாவட்ட சபைகள் என்பதன் அடிப்படையில் அமைந்ததுதான்.   

ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழு  

இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ், விசாரணை ஆணைக்குழு ஒன்றினை 1979 ஆகஸ்ட்டில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன நியமித்தார். இந்த விசாரணை ஆணைக்குழுவின் நோக்கமானது, இலங்கையின் உள்ளூராட்சி முறையை ஆராய்வதுடன், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஸ்தாபித்தல், அதன் அமைப்பு, அதிகாரங்கள், இயங்குமுறை உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விரிவானதொரு அறிக்கையை அளிப்பதாக இருந்தது.   

இந்த ஆணைக்குழுவுக்கு விக்டர் தென்னக்கோன், ஏ.சீ.எம்.அமீர், பேராசிரியர் ஏ.ஜே.வில்சன், கலாநிதி நீலன் திருச்செல்வம், என்.ஜீ.பீ.பண்டிதரட்ண, எம்.ஆர்.தாஸிம், கலாநிதிஜே.ஏ.எல்.குரே, கணபதிப்பிள்ளை நவரட்ணராஜா, பேராசிரியர் கே.எம். டி சில்வா மற்றும் எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்.   

வில்சனும் நீலனும்  

இலங்கையில் தமிழர் அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரையில், சுதந்திரத்துக்குப்  பின்னரான முக்கிய தமிழ்த் தலைமைகளாக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலமாகட்டும் சா.ஜே.வே.செல்வநாயகமாகட்டும் அவர்கள் கொழும்பைத் தளமாகக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்களது நிரந்தர வாசஸ்தலம் கொழும்பாகவே இருந்தது. அத்துடன், கொழும்பு மைய அரசியல் சக்திகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் அவர்கள் பெரும்பாலும் நேரடியாக ஈடுபட்டார்கள்.   

செல்வநாயகம் பிற்காலத்தில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் முருகேசன் திருச்செல்வத்தை ஈடுபடச் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் காலத்தில் இந்நிலை சற்று மாற்றம் பெற்றிருந்தது.   

தனது முன்னைய தலைவர்கள் போலல்லாது அமிர்தலிங்கம், வடக்கை - யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டே செயற்பட்டார். இந்நிலையில், அரசாங்கத்துடனான முக்கிய பேச்சுவார்த்தைகள் சில தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் சா.ஜே.வே.செல்வநாயகத்தின் மருமகனும் இலங்கையின் முன்னணி அரசியல் விஞ்ஞானப் பேராசிரியருமான ஏ.ஜே.வில்சனினாலும் முருகேசன் திருச்செல்வத்தின் மகனும் இலங்கையில் குறிப்பிடத்தக்க சட்ட அறிஞர்களில் ஒருவருமான நீலன் திருச்செல்வத்தினாலுமே முன்னெடுக்கப்பட்டதாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றிய தன்னுடைய கட்டுரையொன்றில் கலாநிதி ரஜீவ விஜேசிங்ஹ குறிப்பிடுகிறார்.   

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அமைத்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பில் ஆராயும் இந்த விசாரணை ஆணைக்குழுவில், தமிழ் ஐக்கிய முன்னணியின் நலன்களைக் கவனித்துக்கொள்ள இருவர் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்று சொன்னால் அது தவறாகாது.  

 இதுகூட, ஜே.ஆரின் தந்திரம்தான் எனச் சொல்லும் அரசியல் ஆய்வாளர்களும் உளர். சமூகத்தில் மதிப்பு மிகுந்த, அதேவேளை மென்போக்குடைய அல்லது மிதவாதப்போக்குடைய தமிழ் புத்திஜீவிகளைத் தீர்வுத்திட்டம் ஆக்கும் பணியில் இணைத்துக்கொண்டு, அந்தக் குழுவினால் பல சமரசங்களுக்குப் பின் உருவாக்கப்படும் திட்டத்தைத் தமிழ் மக்கள் முன்னும், சர்வதேசம் முன்னும் தமிழ் புத்திஜீவிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டமாக முன்னிறுத்தி, அதனை எதிர்ப்போரைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தாம் எண்ணிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உபாயமே இது என்பது சிலரின் விமர்சனம்.   
எது எவ்வாறிருப்பினும், சமரசங்கள் எதுவுமின்றி எந்தவொரு தீர்வும் எட்டப்பட முடியாது என்பதுதான் யதார்த்தம். இரு எதிர் தீவிர எல்லைகளில் நின்று கொண்டு, தீர்வினைப் பெற முடியாது. மாறாகத் தீர்வு என்பது இரு எதிர் தீவிர எல்லைகளின் நடுவிலுள்ள ஏதோ ஒரு புள்ளியில்தான் அமையமுடியும் என்பதுதான் யதார்த்தமானது. ஆனால், அதற்கான சமரசத்தில் நாம் எதனை விட்டுக்கொடுக்கிறோம் என்பதும் முக்கியமானது. அடிப்படைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, அலங்காரமான தீர்வுகளைப் பெறுவது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.   

ஆணைக்குழுவின் செயற்பாடு  

1979 ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவானது தனது பணிகளை 1980 பெப்ரவரியில் நிறைவு செய்தது. 1980 ஆகஸ்ட் எட்டாம் திகதி பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவினால் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த மசோதாவுக்கு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ஆதரவும் இருந்தது. இதற்கு பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் முக்கிய காரணகர்த்தா ஆவார்.  

மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அமைப்பதற்கான இந்த முயற்சியில் பேராசிரியர் ஏ.ஜே.வில்சனின் பங்கு பெரியது. இதுபற்றி அவரது ‘இலங்கையின் உடைவு: தமிழ், சிங்களப் பிரச்சினை (ஆங்கிலம்)’ என்ற நூலில் பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றி ஆராயும் செயற்பாட்டில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை இணங்கச் செய்ததில் பேராசிரியர் ஏ.ஜே.வில்சனின் பங்கு முக்கியமானது.   

இந்த ஆணைக்குழுவுக்குத் தலைவராக பேராசிரியர் ஏ.ஜே.வில்சனையே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன நியமிக்க விரும்பியதாகவும் ஆனால், மறைந்த சா.ஜே.வே.செல்வநாயகத்தின் உறவினன் என்பது சிக்கலைத் தோற்றுவிக்கும் என அவர் கூறியதாகவும் அவர் எண்ணியது போலவே அமைச்சரவையில் அந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி தன்னிடம் வருத்தத்துடன் தெரிவித்ததாகவும் அதற்கு மாற்றாக இரண்டு தலைமைகளை நியமிக்கும் எண்ணம் முன்வைக்கப்பட்டபோதும் விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ் அதற்கு இடமில்லை என்பதனால் ஒரு குறித்த முன்னாள் சிவில் சேவை உத்தியோகத்தரை நியமிக்கும் முன்மொழிவு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால், குறித்த அந்நபர் இந்த ஆணைக்குழுவுக்கு  தலைமையேற்றால், தமிழ் ஐக்கிய முன்னணி இதில் பங்குபற்றாது என அறிவித்தமையினால், அவருக்கு மாற்றாக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் விக்டர் தென்னக்கோனை நியமிக்க 
ஜே.ஆர்.ஜெயவர்த்தன முடிவெடுத்ததாகவும் ஏ.ஜே.வில்சன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.  

 மேலும், விக்டர் தென்னக்கோனைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் முன்னாள் பிரதமர் சிறிமாவோவினால் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டவர். மேலும், அவர் தனக்கும் உறவினர். ஆகவே, அவர் பொருத்தமானவர் என ஜே.ஆர் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் பேராசிரியர் ஏ. ஜே.வில்சன் குறிப்பிடுகிறார். விக்டர் தென்னக்கோனின் நியமனத்தை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ஏற்றுக்கொண்டது.   

அதைத் தொடர்ந்து, பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் ஆணைக்குழுவில் ஓர் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். ஆணைக்குழுவின் கலந்தாய்வுகளும் சிக்கலற்றதாக இருக்கவில்லை என்றும் என்.ஜீ.பீ.பண்டிதரட்ண போன்றோர் முறையானதொரு தீர்வு எட்டப்படுவதற்கு முட்டுக்கட்டையாக ஆணைக்குழுவுக்குள் இருந்ததாகவும் ஏ.சீ.எம்.அமீர் மற்றும் எம்.ஏ.அஸீஸ் ஆகியோரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் பேராசிரியர் 
ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார்.  

 ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆணைக்குழு இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுத்திட்டத்தை வகுப்பதில் அதன் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் விக்டர் தென்னக்கோனே பெருந்தடையாக இருந்ததாக பேராசிரியர் ஏ.ஜே.விலசன் குறிப்பிடுகிறார். ‘இரண்டாம் பட்சமான சட்டவாக்க அதிகாரப் பிரிவினைக்கும் நிர்வாக அதிகாரப் பகிர்வுக்குமான ஜனாதிபதி ஆணைக்குழு’ என்ற பெயரை ‘அபிவிருத்தி சபைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு’ என்று சுருக்கியதில் ஆரம்பித்த அவரது கைங்கரியம், இறுதி வரை தொடர்ந்ததாக பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் விவரிக்கிறார்.   

தமிழ் மக்களின் எதிர்ப்பு  

குறித்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மசோதா, 1980 ஆகஸ்ட் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. ஆனால், இதனைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆதரித்தமையானது கூட்டணி ஆதரவாளர்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை.   

இதன் பின்னர், வவுனியாவில் நடைபெற்ற தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கூட்டமொன்றில், அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், பெரும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கூட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வௌியே நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் குறித்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எதிர்க்க வேண்டுமென சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். 

 கூட்டத்தில் நீண்ட உரையொன்றை ஆற்றிய அமிர்தலிங்கம், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். தமிழ் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தத்தான் போகிறது என்றும் இதனை ஏற்றுச் செயற்படுவதன் மூலம் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்த முடியும் என்ற தொனிப்பட அமிர்தலிங்கம் பேசினார். இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையை தீயிட்டுக் கொழுத்தி, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கும் அதனை ஆதரிக்கும் அமிர்தலிங்கத்துக்கும் எதிரான தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.   
ஆனால், அமிர்தலிங்கமும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. அடுத்து, நடைபெறவிருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலைச் சந்திக்க அவர்கள் தயாரானார்கள்.  

வில்சனின் நம்பிக்கையும் நம்பிக்கையிழப்பும்  

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தனதும் சா.ஜே.வே.செல்வநாயகத்தினதும் உறவினர்கள் உட்படப் பலரும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை நம்ப வேண்டாம். ‘மாக்கியவல்லி’யனான ஜே.ஆர் ஒருபோதும் தனது வாக்குறுதியை நிறைவேற்றப்போவதில்லை என்று தனக்குப் பலர் கூறியதாகவும் ஆயினும், இறுதி வரைதான் ஜே.ஆர் மீது நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் ஆனால், கடைசியில் ஜே.ஆரினுடைய நடவடிக்கைகளை அலசிப் பார்க்கையில், இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை முறைப்படி நடைமுறைப்படுத்தும் எண்ணம் ஜே.ஆருக்கு இருக்கவில்லை என்பது புலனானதாகவும் பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் வருத்தத்தோடு கூறுகிறார்.   

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அரசியல் களத்தில் அணைத்து வைத்திருக்கத்தக்க ஒரு கைங்கரியமாக அவர் இதனைக் கைக்கொண்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். எது எவ்வாறாயினும், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்பது தமிழ்-சிங்கள இனமுரண்பாட்டை அமைதி வழியில் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கான ஓர் ஆரம்பம் என்பது பேராசிரியர் ஏ.ஜே.வில்சனின் கருத்து.   

காத்திருந்தது கொடூரம்  

மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 ஜூன் நான்காம் திகதி நடத்தப்படத் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தேர்தலும் அதன் பிரச்சாரத்தின்போது, நடந்த சம்பவங்களும் தமிழர்களிடையே ஆறாத ரணங்களை உருவாக்கியது. ஓர் இனத்தின் பெருஞ்சொத்தை அழிக்கும் செயற்பாடு அரசாங்கக் கைக்கூலிகளினால் அமைச்சர்களின் முன்னிலையில் நடத்திமுடிக்கப்பட்ட கொடூரமும் இதன்போதுதான் நிகழ்ந்தது.  

- See more at: http://www.tamilmirror.lk/188061/ம-வட-ட-அப-வ-ர-த-த-சப-கள-#sthash.cKZh9Ano.dpuf
Link to post
Share on other sites
மாவட்ட அபிவிருத்தி சபைகளும் அரசியல் தீர்வும்
 
19-12-2016 11:04 AM
Comments - 0       Views - 10

article_1482212918-Jr-Gami.jpg

- என்.கே.அஷோக்பரன் LLB (Hons)
 
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 71)

 

நல்லெண்ணமா, சாணக்கியமா?  

1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்தின் மூலம், இலங்கை முழுவதுக்கும் மாவட்ட சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கையில் நிலவிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வொன்றைக் கோரிநின்ற தமிழ் மக்களுக்கு, தீர்வு வழங்கும் பொருட்டே ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.   

பெரும்பாலும் பொருளாதார அபிவிருத்தி மைய நோக்குடையதான உள்ளூராட்சி மன்றுகளின் வடிவிலேதான் இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் காணப்பட்டன. ஆனால், டொனமூர் ஆணைக்குழுவின் காலத்திலிருந்து அதிகாரப் பகிர்வுக்கான குரல் சிறுபான்மை இனங்களிடையே இருந்து ஒலித்துக் கொண்டிருந்தாலும், அதனால் விளைந்த பயன் ஏதுமிருக்கவில்லை. மாவட்ட சபைகள் என்ற திட்டத்தைப்பற்றி டட்லி சேனநாயக்க அரசாங்கம் பேசியிருந்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.   

ஆகவே, இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பில், குறைந்தளவிலேனுமொரு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் விடயம் இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளாகும். இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளினால் தமிழ் மக்கள் வேண்டிய சுயநிர்ணயமும் அதிகாரப் பகிர்வும் கிடைத்துவிட்டதா என்று கேட்டால், அதற்கான பதில் எதிர்மறையானதுதான். ஏனெனில், 1980 ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் தனிநாடு பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.   

இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை 1956 இல் அல்லது குறைந்தபட்சம் 1965 இல் ஆயினும் அறிமுகப்படுத்தியிருந்தால் அது தமிழ் மக்களைத் திருப்தி செய்திருக்கக்கூடும். ஆனால், சுமுகமான, குறைந்தபட்சத் தீர்வுகளில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, அஹிம்சை வழியில் இணக்க அரசியலை விரும்பிய தமிழ்த் தலைமைகளே நம்பிக்கையிழந்து, தனிநாடுதான் தீர்வு என்று தீர்மானித்துவிட்ட பின்னர், அதை முன்னிறுத்தித் தமிழ் இளைஞர்கள் சிலர் ஆயுதங்கள் ஏந்திவிட்ட பின்னர், இத்தகைய குறைந்த பட்சத் தீர்வொன்றை முன்வைத்தமையானது, ஜே.ஆரின் சாணக்கிய சூதாட்டமேயன்றி, நல்லெண்ணம் என்று எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியும்?   

அதேவேளை, மறுபுறத்தில் தமிழ் மக்களுக்கு எந்தவொரு குறைந்த பட்சத் தீர்வையும் கூட, இதுவரை வந்த எந்த அரசாங்கமும் அரசியல் தலைமையும் தந்திராத பட்சத்தில், குறைந்த பட்சம் மாவட்ட அபிவிருத்திச் சபைகளையேனும் வழங்க முன்வந்த ஜே.ஆர் பாராட்டுக்குரியவர் அல்லவா என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கலாம்.   

இங்கு ஜே.ஆர் தீர்வு தந்தார்; யாரும் இதுவரை தர முன்வராத தீர்வைத் த