நவீனன் 1,007 Posted January 17, 2017 Author Share Posted January 17, 2017 (edited) பல்வேறு பகுதிகளுக்கும் பரவிய 1981 கலவரம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 75) என்.கே. அஷோக்பரன் LLB (Hons) களநிலவரஆய்வு யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக, 1981 மே 31 முதல் ஜூன் மூன்றாம் திகதி வரை, இடம்பெற்ற கொடூர வன்முறைகள் உலகின் பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பின. குறிப்பாக, ஆசியாவின் பெரும் நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டமையானது, உலகளவில் பரபரப்பான விடயமாகப் பார்க்கப்பட்டது. அதுவரை இலங்கை இனப்பிரச்சினை பற்றி, உலகின் கவனம் பெரிதாக ஈர்க்கப்படவில்லை, ஆனால், யாழ். நூலக எரிப்பு உட்பட யாழில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள், உலகின் பல முக்கிய ஊடகவியலாளர்களையும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் கல்வியியலாளர்களையும் அரசியல் பிரமுகர்களையும் யாழுக்கு அழைத்து வந்தன. அவர்கள், கலவர பூமியின் களநிலவரத்தைக் காண வந்தார்கள். இலண்டன் ‘நியு ஸ் ரேற்ஸ்மன்’ பத்திரிகையின் பிரான்ஸிஸ் வீன், சம்பவம் நடந்து ஆறு வார காலத்துக்குள் இலங்கைக்கு வந்தார். இந்தியாவில் அடைக்கலம் புகுந்த, பாகிஸ்தானிய ஊடகவியலாளரான சலமத் அலியும் இலங்கை வந்தார். இவர்கள், இலங்கையின் வடக்கே அரச ஆதரவுடன் நடத்தப்பட்ட, தமிழ் மக்கள் மீதான கொடும் வன்முறைகள் பற்றிய களநிலவரத்தைக் கண்டு, தமது பத்திரிகைகளில் எழுதினார்கள். 1981 ஜூலை 17 இல் இலண்டன் ‘நியு ஸ் ரேற்ஸ்மன்’ பத்திரிகையில் வௌிவந்த, 1981 யாழ். நூலக எரிப்பு மற்றும் வன்முறைகள் பற்றிய பிரான்ஸிஸ் வீனின் கட்டுரையில், ‘அங்கு கருகிப்போய்க்கிடந்த எச்சங்களைக் காணும்போது, இதயம் நொறுங்கிப்போயிருந்த, உள்ளூர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் ஒருவரைச் சந்தித்தேன். “சிங்களவர்கள் இந்த நூலகம் பற்றிப் பொறாமை கொண்டார்கள்” என்று அவர் சொன்னார். எனது விரிவுரைகளுக்கும் கற்பிக்கும் செயற்பாடுகளுக்கும் என்னைத் தயார்படுத்த நான் ஒவ்வொருநாளும் இங்கு வருவேன். இனி நான் கொழும்புக்குத்தான் போக வேண்டும், ஆனால், இங்கிருந்த பல நூல்கள் அங்கு கூட இல்லை” என்று பதிவுசெய்கிறார். இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் செல்போன், யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் தங்கியிருந்து, நடந்த சம்பவங்கள் பற்றியும் வளர்ந்துவரும் இனமுரண்பாடு பற்றியும் களநிலவர ஆய்வொன்றைச் செய்து, இங்கிலாந்தின் ‘கார்டியன், ‘நியூஸ் ரேற்ஸ்மன்’ மற்றும் இந்தியாவின் ‘இலஸ் ரேற்றட் வீக்லி ஒஃப் இன்டியா’ ஆகிய பத்திரிகைகளில் இதுபற்றிய கட்டுரைகளை எழுதினார். இதைவிட, ‘இந்தியா டுடே’யின் வெங்கட் நாராயணனும் இலங்கை வந்தார். டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்தும் புலமையாளர்கள் களநிலவரம் காண வந்தார்கள். இவ்வாறு, வௌிநாட்டினர் இலங்கைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்தமை ஒருபுறமிருக்க, தென்னிலங்கையிலிருந்தும் களநிலவரம் காண பல்வேறு தரப்பினரும், யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர். குறிப்பாக, இடது சாரிக் கட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ, கத்தோலிக்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், புலமையாளர்கள், புலமைக் குழுக்கள் ஆகியன, தன்னார்வ விஜயங்களை மேற்கொண்டு, களநிலரத்தை ஆராயந்தன. இந்த விஜயங்கள், நடந்துகொண்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை நாடுபூராகவும் கொண்டு சேர்க்கும் கைங்கரியத்தை, பேரினவாத சக்திகள் நடாத்திக் கொண்டிருந்தன. இன்னொரு கலவரத்துக்குத் தயாராகுதல் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், அன்றைய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின்போது, தான் ஆற்றிய இனவாத விஷம் கக்கும் உரையினைக் கொண்ட ‘ஹன்ஸார்ட்’ பிரதிகள் பல்லாயிரக்கணக்கானதை எடுப்பித்து, அதனை, நாடுமுழுவதும் பரப்புரை செய்யும் கைங்கரியத்தை ஜனாதிபதி ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்த சிறில் மத்யூ செய்தார். இந்தப் பிரதிகளைப் புத்தகோவில்கள், பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், அரசாங்க அலுவலகங்கள் என அனைத்து இடங்களுக்கும் கொண்டு போய்ச் சேர்ப்பித்தார். குறித்த, ‘ஹன்ஸார்ட்’ பிரதியுடன் கூடவே, தமிழர்களுக்குத் தனிநாடு கிடைத்தால் எத்தனை பௌத்த ஸ்தலங்கள் இல்லாது போகும் என்பதைக் குறிக்கும் ஒரு வரைபடமும் கூடவே அனுப்பி வைக்கப்பட்டது. இவையெல்லாம், அப்பாவிச் சிங்கள மக்களிடையே அச்சத்தையும் தமிழ் மக்கள் மீதான வெறுப்பையும் விதைத்து, அதனூடாக அவர்களைத் தமிழ் மக்கள் மீது, வன்முறைப் பாதையில் திசைதிருப்பும் காரியத்தின் அங்கமாக அமைந்தன. இத்தோடு, திடீரென நாடெங்கிலும் “சிங்கள மக்களே! தமிழர்களுக்கெதிராக எழுந்து கொள்ளுங்கள்!” என்ற வார்த்தைகளைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சிங்கள-பௌத்த மக்களைத் தமிழர் பிரதேசங்களில் குடியேற்றி, அங்குள்ள பௌத்த ஸ்தலங்களைப் பாதுகாக்குமாறு சிறில் மத்யூ அறைகூவல் விடுத்தார். இதற்குப் பௌத்த பிக்குகளின் ஆதரவும் இருந்ததாகச் சில அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சிங்கள மக்களிடையே அச்சத்தை விளைவிக்கும் இந்தக் கேவலமான சதித்திட்டம் வெற்றிபெறத் தொடங்கியதுதான், இலங்கை என்ற நாட்டின் துர்பாக்கியம். நாட்டின் ஏனைய பாகங்களிலும் கலவரம் சிறில் மத்யூ மற்றும் அரசாங்கத்திலிருந்த அவரது பேரினவாத சகாக்களின் பேச்சுக்கள் சிங்கள மக்களைத் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைப் பாதையில் திருப்பியது. இதனால் தூண்டப்பட்டவர்களும் பேரினவாத சக்திகளால் களத்திலிறக்கப்பட்ட காடையர் கூட்டமும் நாடு முழுவதிலும் ஆங்காங்கு, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டன. யாழ்ப்பாணத்தில் நடந்த வன்முறை போலவே, நாடெங்கிலும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதுடன் தமிழ் மக்களின் வீடுகள், கடைகள், வணிக மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன எல்லாம் தாக்கியழிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் இரத்தினபுரி மற்றும் மலையகத்தின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்புறத் தமிழ்க் கிராமங்களுக்குள் நுழைந்த பேரினவாத வெறியர்கள், அங்குள்ள மக்களைத் தாக்கியதுடன், அவர்களது சொத்துகளுக்கும் பெரும் சேதத்தினை விளைவித்தனர். 1981 ஆகஸ்ட்டில் மலையகத்தின் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் வசித்த ‘லைன்’ அறைகளுக்குள் நுழைந்த காடையர்கள், அங்கிருந்த அப்பாவி மக்களை வௌியே இழுத்துப்போட்டு அடித்ததுடன், அந்த, ‘லைன்’ அறைகளையும் உடைத்தனர். மலையகத்தில் மட்டும் ஏறத்தாழ 25,000 தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள், இந்த வன்முறைகளால்ப் பாதிக்கப்பட்டு, நிர்க்கதியாகி நின்றனர். மலையகப் பிரதேசங்களில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எதிராகக் கடுமையான வன்முறைத் தீ பரவியதால், அரசாங்கத்தில் அங்கம் வகித்த சௌமியமூர்த்தி தொண்டமான் பொறுமையிழந்தார். உடனடியாக, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவைச் சந்தித்து, தன்னுடைய கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். ஜே.ஆர் - தொண்டா சந்திப்பு ஆகஸ்ட், 17 ஆம் திகதி ஜனாதிபதி ஜே.ஆரை அவரது இல்லத்தில் வைத்துச் சந்தித்த சௌமியமூர்த்தி தொண்டானும் அவரது கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான எம்.எஸ்.செல்லச்சாமியும் “மலையக தோட்டப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகள் கடுமையாகப் பரவிவருகின்றன. பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. மக்கள் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். இதனை இந்த அரசாங்கத்தின் ஆதரவு சக்திகளைப் பின்புலமாகக் கொண்ட ‘ரௌடி’ கும்பல்கள்தான் செய்கின்றன என்பதற்கு எம்மிடம் ஆதாரமுண்டு. இவ்வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், அம்மக்களும் பதிலுக்கு வன்முறையைக் கையிலெடுப்பதன் மூலம், இந்த வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரும்” என்று கடும் தொனியில் நேரடியாகவே ஜே.ஆரிடம் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். தனது தந்திரோபாயச் செயற்பாடுகளுக்காக ‘நரி’ என்றறியப்பட்ட ஜே.ஆர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டதுடன், நிலைமையைத் தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகச் சொன்னார். அத்தோடு ஜே.ஆர் நின்றுவிடவில்லை, விரைவில் இந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மலையகப் பிரதேசங்களுக்கும் தொண்டமானுடன் விஜயமொன்றைச் செய்யவும் திட்டமிட்டார். இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில், இலங்கையில் நாடெங்கிலும் தமிழர்களுக்கெதிராக நடந்துகொண்டிருந்த வன்முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன்போது பேசிய, அன்றைய இந்திய வௌிவிவகார அமைச்சர் நரசிம்மராவ், “இலங்கையில் தற்போது இடம்பெற்ற கலவரங்களில் முக்கியமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே. குறிப்பாக, தோட்டத்தொழிலாளர்களே பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டார்கள். சில உயிரிழப்புக்களும் பல எரியூட்டல்கள், கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், பலரும் தங்கள் வீடுகளைவிட்டு வௌியேறியிருக்கிறார்கள். இலங்கையின் நிலைமை நிலையற்றதாக இருப்பதால், எத்தனை இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற உறுதியான தகவல்களைப் பெறமுடியவில்லை” என்று குறிப்பிட்டதுடன், “இது நிச்சயமாக இலங்கையின் உள்விவகாரம். ஆயினும் இங்குள்ளவர்கள் பலரும் அக்கறை கொள்வதுபோல, இந்திய அரசாங்கத்துக்கும் அக்கறையுண்டு. ஏனெனில், இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இந்திய வம்சாவளியினர் அல்லது இந்தியர்கள். ஆகவே, இலங்கை அரசாங்கம் உடனடியாக இந்த வன்முறைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நிலைமையைச் சுமுகமாக்கும் என்று நம்புகிறோம். எம்முடைய எண்ணத்தை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். இந்திய-இலங்கை பாரம்பரிய உறவுகளை, இது எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் குறிப்பிட விரும்புகிறேன்” என்றார். தமிழகப் பிரஜை இலங்கையில் தாக்கிக் கொலை இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த 42 தமிழர்களைக் கொண்ட குழுவொன்று கதிர்காமம் சென்று கொண்டிருந்த போது திஸ்ஸமஹாராம அருகிலே, காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான, தமிழகத்தின் திருவொற்றியூரைச் சேர்ந்த தனபதி என்பவர், காயங்களின் காரணமாக உயிரிழந்தார். தமிழ்நாட்டிலிருந்து வந்த சுற்றுலாப்பயணி, தமிழன் என்ற காரணத்துக்காக இலங்கையில் கொல்லப்பட்டமையானது தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலே அப்போது எம்.ஜி.ஆரின் ஆட்சி இடம்பெற்றுக் கொண்டிருந்தது. எதிர்க்கட்சியிலே இருந்த மு.கருணாநிதிக்கு, இலங்கையில் நடந்த இந்தத் தமிழகத்தைச் சேர்ந்தவரின் படுகொலை, மத்திய மாநில அரசுகளுக்கெதிரான போராட்ட ஆயுதமாக பயன்படுத்தத்தக்க வாய்ப்பாக அமைந்தது. தி.மு.கவினர் 1981 ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஆர்.டீ. சீதாபதி மற்றும் என்.வீ. என்சோமு ஆகியோர் தலைமையில், இலங்கையில் நடந்த குறித்த படுகொலையைக் கண்டித்து, இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தன்னுடைய கட்டுரையொன்றில் பேராசிரியர் அ .இராமசாமி குறிப்பிடுகிறார். இவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்படவே, தி.மு.க செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் 14 வரை, இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது. இதன் போது, ஏறத்தாழ 500 தி.மு.க செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். செம்டெம்பர் 15 ஆம் திகதி தி.மு.க தலைவர் மு.கருணாநிதியே நேரடியாகப் போராட்டக் களத்தில் குதித்தார். இதன்போது கைது செய்யப்பட்ட அவர், 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் இடம்பெற்றன. இது தமிழக அரசாங்கத்துக்கு மட்டுமல்லாது இந்திய அரசாங்கத்திற்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. 1981 செப்டெம்பர் 11 இல் இந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவில், இந்தியப் பிரஜை ஒருவர் இலங்கையில் கொல்லப்பட்ட விவகாரம் பற்றிப் பேச்செழுந்தபோது, அங்கு உரையாற்றிய இந்திய வௌிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ், குறித்த சம்பவதுக்காக இலங்கை ஜனாதிபதியும் இலங்கையின் வௌிவிவகார அமைச்சரும் தம்முடைய கண்டனத்தைப் பதிவு செய்திருப்பதாகவும் கொல்லப்பட்டவரின் உடலைத் தமிழகம் எடுத்து வருவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியதுடன், “இலங்கையில் நடப்பவை அவர்களது உள்நாட்டு விவகாரம் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை” என்பைதையும் மீள வலியுறுத்தினார். ஆனாலும் தாம் தமது அக்கறையை இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்துரைத்துள்ளதாகவும் கூறினார். சர்வதேச கவனம் யாழில் தொடங்கிய வன்முறைகள் நாடெங்கிலும் தமிழர்களைக் கடுமையாகப் பாதித்துக் கொண்டிருந்தமை, உலக நாடுகளின் கவனத்தை இலங்கை மீது ஈர்த்தது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் , தென்கொரியா, சீனா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல்வேறு பிரதிநிதிகள் இலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்தனர். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டமை, தமிழ்நாட்டிலும் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்தத் தாக்குதல்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டமை இந்தத் சீற்றத்துக்கு முக்கிய காரணம். தமிழகத்திலிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கல்யாணசுந்தரமும் காமராஜ் காங்கிரஸைச் சேர்ந்த தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரான நெடுமாறனும் கூட இலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்திருந்தார்கள். இத்தோடு இது நின்றுவிடவில்லை, தெற்கிலே இருந்தும் யாழ்ப்பாணத்துக்குச் சில முக்கிய அரசியல் தலைவர்கள் தமது விஜயத்தினை மேற்கொண்டார்கள். (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/189797/பல-வ-ற-பக-த-கள-க-க-ம-பரவ-ய-கலவரம-#sthash.cTXAwOHp.dpuf Edited January 17, 2017 by நவீனன் Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted January 23, 2017 Author Share Posted January 23, 2017 (edited) பேச்சுவார்த்தை எனும் தந்திரோபாயம் என்.கே. அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 76) யாழ்ப்பாணத்தில் 1981 மே 31 இல் தொடங்கிய யாழ். பொது நூலக எரிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களுக்கெதிரான கலவரம், ஆகஸ்ட் மாதத்தில் நாடெங்கிலும் பரவலடைந்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றியதோடு, நாட்டிலே பேரினவாத வெறியைக் கட்டவிழ்த்து விட்டிருந்த ஜே.ஆர் அரசாங்கத்துக்கு ஒரு சங்கட நிலை உருவாகிக்கொண்டிருந்தது. அந்நிலை, ஜே.ஆர் அரசாங்கம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு தற்காலிகமாகவேனும் சமரசமொன்றைச் செய்துகொள்ள வேண்டிய ஒரு சூழலை உருவாக்கியது. இலங்கையில் பொதுவாக்குரிமை (வயது வந்த சகலருக்கும் இன, மத, மொழி, சாதி, கல்வித்தகைமை, தொழில், பால் என எவ்வேறுபாடுமின்றி வாக்குரிமை) டொனமூர் அரசியலமைப்பின் படி 1931 இல் இலங்கையின் அன்றைய முக்கிய தலைவர்கள் பலரினதும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரித்தானியாவில் பொதுவாக்குரிமை கொண்டுவரப்பட்டு வெறும் மூன்று வருடங்களுக்குள் இலங்கையிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் பொதுவாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பொன்விழாவினை, அரசாங்கம் கொண்டாடியதன் ஓர் அம்சமாக பொதுநலவாயத்தின் தலைவியான எலிசபெத் மஹாராணியார், 1981 ஒக்டோபரில் விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்தார். இது எலிசபெத் மஹாராணியார், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பமாக அமையவிருந்தது. இந்தச் சூழலில், நாட்டில் ஏற்பட்டிருந்த கலவர நிலையையைக் கட்டுக்குள் கொண்டு வருவதுடன், தமிழ் மக்களின் எதிர்ப்பலையையும் தற்காலிகமாகவேனும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை, ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்துக்கு இருந்தது. தந்திரோபாயத்தில் வல்லவரான ஜே.ஆர், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடிவெடுத்தார். பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருதல் தமிழரின் தாயக பூமியில் கலவரத்தை நடத்தி, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து, இனவாத வெறியை நாடெங்கிலும் பரப்பிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவருவது சிக்கலான விடயமென்பதை ஜே.ஆர் அறிவார். ஆனால், பேச்சுவார்த்தைகளைத் தவிரவும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் வேறு வழியில்லை என்பதையும் ஜே.ஆர் புரிந்திருந்தார். ஒரு புறத்தில் தமிழ் இளைஞர்கள், ஆயுதக்குழுக்களாக இயங்கிக்கொண்டு வன்முறைப் பாதையில் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை’ நிறைவேற்ற பயணித்துக்கொண்டிருந்தனர். அதேபொழுது, அதே ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை’ நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிக்கொண்டு தேர்தலில் மக்கள் அங்கிகாரம் பெற்றவர்கள் எதையும் செய்ய முடியாத, இக்கட்டான சூழலில் சிக்கி, தமிழ் மக்களது, குறிப்பாக தமிழ் இளைஞர்களது விசனத்தை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் பேச்சுவார்த்தை என்பது தேர்தலில் மக்கள் அங்கிகாரத்தைப் பெற்றவர்கள், அரசியலை முன்கொண்டு செல்வதற்கு நிச்சயம் வழிவகைசெய்யும். ஆனால், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவது யார்? இதற்காக ஜே.ஆர் உடனடியாக அணுகியது, சா.ஜே.வே. செல்வநாயகத்தின் மருமகனும் இலங்கையில் குறிப்பிடத்தக்க அரசறிவியல் பேராசிரியர்களுள் ஒருவருமான ஏ.ஜே.வில்சனை என்பவரையாகும். அப்போது ஏ.ஜே. வில்சன் வெளிநாட்டிலிருந்தார். ஜே.ஆர் அவரோடு தொடர்புகொண்டு அவரை இலங்கைக்கு வரவழைத்ததோடு, அவரினூடாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவந்தார். பேச்சுவார்த்தைகள் தொடங்கின ஜனாதிபதி மாளிகையில் ஜே.ஆர், தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் மதியுரையாளராகக் கலந்துகொண்டார். நாட்டில் நிலவிய பதற்ற சூழலை உடனடியாக தணிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்ததால், அவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் அக்கறையோடு கலந்துகொண்டதாகவே பலரும் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, மே - ஜூன் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பொலிஸ் வன்முறை வெறிச்செயலை விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்; யாழ். வன்முறைக்கு காரணமான பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்; தொடர் வன்முறைகளைத் தடுக்க ஊர்காவற்படை அமைக்கப்பட வேண்டும்; வடக்கு மற்றும் கிழக்கில் 75சதவீதமான பொலிஸார் தமிழர்களாக இருக்க வேண்டும்; நிர்வாக அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளிடம் பரவலாக்கப்பட்டு, அவை வினைத்திறனுடன் அக்காரியத்தை ஆற்ற வழிசமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்தது. உண்மையில், இந்தக் கோரிக்கைகளில் நியாயமற்ற கோரிக்கை என்று சொல்வதற்கு எதுவுமில்லை. சர்வதேச விசாரணை என்பதைத் தவிர ஏனையவை தொடர்பில் ஜே.ஆர் அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. ஒருவேளை சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொண்டால், அது தெற்கிலே தன்னுடைய வாக்கு வங்கியைப் பாதிக்கும் என ஜே.ஆர் அச்சங்கொண்டிருக்கலாம். ஏனென்றால், தேர்தலைப் பற்றி யோசிக்க வேண்டிய தேவையும் ஜே.ஆருக்கு ஏற்பட்டிருந்தது. 1982 இல் நடப்பு நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவடைகிறது. ஆகவே, வாக்குவங்கி அரசியல் பற்றியும் ஜே.ஆர் அக்கறைப்பட வேண்டியது அவசியமாகியது. சர்வதேச விசாரணை தவிர ஏனையவற்றுக்குச் சாதகமான சமிக்ஞையை ஜே.ஆர் அரசாங்கம் வழங்கியது. 1981 ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முக்கியஸ்தர்கள் சந்தித்து, அண்மை மாதங்களில் நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதம், சொத்து அழிப்பு, இனமுரண்பாடு பற்றிப் பேசியதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்களைக் கொண்ட உயர் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் முரண்பாடுகள் பற்றிப் பேசவும், அமைதி வழியில் தீர்வுகாண்பதற்குமான செயற்பாடுகளை இக்குழு முன்னெடுக்கும் என்றும், அனைத்துத் தரப்பும் நாட்டிலே வன்முறையை முற்றாகத் தடுத்து நிறுத்த ஆதரவுதர வேண்டும் என்றும், இவற்றுக்கு மேலதிகமாக மாவட்ட அபிவிருத்தி சபைகள் முறையாகவும். திருப்தியாகவும் இயங்க ஆதரவு தருமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘தனிநாடு’ எனும் பகட்டாரவாரச் சொல்லாட்சி (rhetoric) இந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அநேகமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்தைமையினால், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படியான ‘தனிநாட்டுக்’ கோரிக்கையை ஒத்திவைக்க இணங்கியதுடன், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதை நிறுத்தவும், தொடர்ந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒத்தக்கொண்டதாக தனது நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகின்றார். அவர் தனது நூலில், இதனைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் (தமிழரசுக் கட்சிக் காலம் உட்பட்ட) 30 வருட அரசியலில் மிகக் கீழான நிலை என்று விமர்சிக்கிறார். தமிழ் மக்கள் வழங்கிய மக்களாணையை, சிங்கள ஏகாதிபத்தியத்திடமும் தமிழ் ‘பூர்சுவா’ அரசியலிடமும் சரணடையச் செய்துவிட்டார்கள் என்று காட்டமாக அவர் விமர்சிக்கிறார். ஆனால், இந்த இடத்தில் நாம் முக்கியமான ஒரு விடயத்தை நோக்க வேண்டும். ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ என்பது இயலாமையின், நம்பிக்கையீனத்தின் இறுதியில் பிறந்ததொன்றாகும். அது ,ஒரு பகட்டாரவாரச் சொல்லாட்சியாக (rhetoric) முன்வைக்கப்பட்ட ஓர் இலட்சியப் பொருளாகவே அன்றிருந்தது. ஆனால், அதனை அடைவதற்கான திட்டமோ, உபாயமொன்றோ தமிழ் தலைமைகளிடமோ, மக்களிடமோ இருக்கவில்லை. அதன் பின்னர், தேர்தலில் கூட, மக்களின் வாக்குகளைப் பெறத்தக்க பகட்டாரவாரச் சொல்லாட்சியாக ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும்’ ‘தனிநாட்டுக்’ கோரிக்கையையும் தமிழ்த் தலைமைகள் பயன்படுத்தினார்களேயன்றி, அதன் வழி பயணிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை என்பது அவர்களது நடவடிக்கைகளிலிருந்தே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ‘தனிநாடு’ ஸ்தாபிப்பதற்கான இரகசியத் திட்டம் தம்மிடம் இருக்கிறது என்று அவர்கள் கூறிக்கொண்டாலும், மறுபுறத்தில் அரசாங்கத்துடனான சமரசத் தீர்வுப் போக்கினை நோக்கியே அவா்கள் பயணித்தார்கள். இரகசியத் திட்டம், இரகசியமாகவே இருந்து வந்தது. ஆனால், சில இளைஞர் ஆயுதக் குழுக்கள் - ‘தனிநாடு’ என்ற நிலைப்பாட்டைத் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கினார்கள். இதுதான், தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மிகுந்த சங்கடத்தை வழங்கத் தொடங்கியிருந்தது. ஆரம்பத்தில் தமிழ் மக்களிடம் இந்த ஆயுதக் குழுக்கள் பெரும் ஆதரவினைப் பெறாவிட்டாலும், 1981 வன்முறைகள் தமிழ் மக்களை ஆயுதக் குழுக்களின்பால் திசைதிருப்பின என்ற வரலாற்றை யாரும் மறுக்க முடியாது. இந்தச் சூழலில் தம்முடைய அரசியலைத் தக்க வைக்க வேண்டிய தேவை தமிழ்த் தலைமைகளுக்கு இருந்தது. அரசியல் ரீதியாகப் பார்த்தால், அவர்கள் சிங்கள அரசியலுடன் மட்டுமல்ல, வளர்ந்து வரும் தமிழ் ஆயுதக் குழுக்களுடனும் மல்லுக்கட்டவேண்டிய அரசியல் இரட்டைப் போட்டி நிலையைச் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். ஆகவே, பேச்சுவார்த்தை மற்றும் அமைதிவழியில் ஏதாவது ஒரு சிறிய விடயத்தையேனும் சாதித்தால், அதனைக் கொண்டு இணக்கப்பாட்டு வழி அரசியல் மீது தமிழ் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம். இதனால், அவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், “தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பாதி வழி வருவதற்குத் தயாராக இருக்கிறது, மீதிப் பாதி வழி வர அரசாங்கம் தயாராக வேண்டும்” என்று கூறினார். மகாராணி வந்தார், சென்றார் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருந்த போதுதான், பிரித்தானிய எலிசபெத் மகாராணியாரின் இலங்கை விஜயம் நடைபெற்றது. இது இலங்கைக்கு எலிசபெத் மகாராணியார் விஜயம் செய்யும் இரண்டாவது தருணமாகும். 1981 ஒக்டோபர் இறுதியில் இலங்கை வந்த எலிசபெத் மகாராணியாருக்கு மிகப்பெரிய வரவேற்பை இலங்கை அரசாங்கம் அளித்தது. பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணியார், அநுராதபுரத்தின் மகாபோதி மரத்தைத் தரிசிக்கவும் கண்டி, தலதா மாளிகையைத் தரிசிக்கவும் விக்டோரியா அணைக்கட்டைப் பார்வையிட்டவும் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அரசின் பொலிஸ் படையின் வன்முறை, கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமிழர் பகுதிகள் மீது அவர் கண்பார்வை கூடப் படாத வகையில் அவரது விஜயம் அமைக்கப்பட்டது என்று தனது நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார். 1981 மே - ஜூன் வன்முறைகள் இலங்கைப் பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தின் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டதொரு வெறிச்செயல் என்பதை இலங்கை அரசாங்கமே ஒப்புக்கொண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான காமினி திசாநாயக்க இதனை ஒப்புக்கொண்டிருந்தார். “சில இழப்புக்களுக்கு பொலிஸாரே காரணம்... நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் இல்லம் பொலிஸாரினாலேயே எரிக்கப்பட்டது என்பதை நாம் மறுக்கவோ, இந்தக் கருத்துடன் முரண்படவோ இல்லை... நாம் பொலிஸாரின் இவ்வகை நடவடிக்கைகள் பற்றியும், அவர்களின் உளவியல் நிலை பற்றியும் அக்கறை கொண்டுள்ளோம்... பயங்கரமான சூழல் ஒன்று நிலவியது... பொலிஸாரை முகாமுக்குள் அடக்க முடியாது போனது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பிள்ளையையும் கிள்ளிவிடுவோம் தொட்டிலையும் ஆட்டிவிடுவோம் பிரித்தானிய மகாராணியாரின் விஜயத்தை வெற்றிகரமாக, எவ்வித அசம்பாவிதமும் இன்றி, நிறைவேற்றியிருந்தாலும், 1981 கலவரங்களால் இலங்கையின் பெயர் சர்வதேச அளவில் எதிர்மறையானதொரு நிலையை அடைந்திருந்தது. இதற்குப் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் செயற்பாடுகளும் முக்கிய காரணம். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளை சர்வதேசமெங்கும் அவர்கள் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். தமிழ் மக்களுக்கு உரிய நீதியையும் நியாயமான அரசியல்த் தீர்வையும் வழங்குவதனூடாக இலங்கை அரசாங்கம், இலங்கை மீதான எதிர்மறை விம்பத்தை சரிசெய்திருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாகக் குறுக்கு வழியான பிரசார வழிமுறையை இலங்கை அரசாங்கம் தேர்ந்தெடுத்தது. சர்வதேச அளவில் பிரபலமான மக்கள் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமொன்றுடன் பெருந்தொகையொன்றைச் செலவழித்து மேற்குலகில் இலங்கைக்கு சாதகமான பிரசாரத்தை முன்னெடுத்தது. இதற்காகப் பிரதமர் பிரேமதாசவும் பிரசாரத்தின் ஒருபகுதியாக லண்டனுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஒருபுறம், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை, மறுபுறம் சர்வதேச அளவில் பிரசார வியூகம், இன்னொருபுறத்தில் இலங்கையில் தனது பேரினவாத அமைச்சர்களைக் கொண்டு பேரினவாத அரசியலை முன்னெடுத்தல் - இது தான் ஜே.ஆர்! - See more at: http://www.tamilmirror.lk/190183/ப-ச-ச-வ-ர-த-த-என-ம-தந-த-ர-ப-யம-#sthash.DmD2lxGk.dpuf ( அடுத்த வாரம் தொடரும்) Edited January 23, 2017 by நவீனன் Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted January 30, 2017 Author Share Posted January 30, 2017 இணக்க வழியா, தனி வழியா? 30-01-2017 01:40 PM Comments - 0 Views - 138 என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 77) ஜே.ஆர் எனும் மாக்கியாவலியின் ‘இளவரசன்’ ஜே.ஆரின் தந்திரோபாயங்களும் இராஜதந்திரங்களும் அவரது அரசியலை ஆராய்பவர்களுக்கு மிகவும் சிக்கலைத் தரக்கூடியதாக இருந்தது. ஒரு விடயம் தொடர்பில் அவரது உண்மையான நிலைப்பாடு எது என்பதைத் தெரிந்துகொள்வது மிகக் கடினமானதொன்றாகவே இருக்கிறது. 1981ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்காது, இனவெறியைக் கக்கிக்கொண்டிருந்த அமைச்சர் சிறில் மத்யூ உள்ளிட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது, அவர்களைத் தொடர்ந்து அந்த இனவாதக் கைங்கரியத்தைச் செய்ய அனுமதித்துக்கொண்டு, அதேவேளை வன்முறையில் ஈடுபட்டவர்களை “இவர்கள் என்ன வகையான மிருகங்கள்?” எனப் பகிரங்கமாக ஒரு மேடையில் பேசக் கூடிய ஒன்றுக்கொன்று முரணான நடவடிக்கைகளைச் செய்தவர் ஜே.ஆர். 1981 செப்டெம்பர் நான்காம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜே.ஆர், “நான் கோபத்தைவிட, கவலையில் பேசுகிறேன். அண்மையில் வடக்கு, மத்தி, தெற்கு என நாடெங்கிலும் நடைபெற்ற சம்பவங்களானவை நாம் பின்பற்றும் போதிக்கும் மதமானது, அநேக மக்களிடையே செல்வாக்குச் செலுத்தவில்லை போலவே தெரிகிறது.எனது கட்சியினர் சிலரே, நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும், இடம்பெற்ற வன்முறையையும் கொலைகளையும் வன்புணர்வுகளையும், எரியூட்டுதல்களையும் ஊக்குவிக்கும் வகையில் பேசியமை கவலைதருகிறது. நான், தலைமையேற்றுள்ள கட்சி பற்றி நான் பெருமை கொள்ளத் தக்கதாக இருக்கவேண்டும். இல்லையென்றால், நான் தலைமைப்பதவியிலிருந்து ஒதுங்கிவிடுவதுதான் சிறந்தது. அதன் பின்னர், பல இனங்கள், பல மதங்கள், பல சாதிகள் கொண்ட இந்த நாட்டின் பிரச்சினைகளை, அப்பாவி மக்கள் மீது வன்முறைகொண்டுதான் தீர்க்க முடியும் என்று நினைப்பவர்கள் தலைமைப்பதவியை ஏற்றுக்கொள்ளலாம்” என்று பேசினார். இந்தக் கோபமும் கவலையும் உண்மையாக இருந்திருக்குமானால், ஜே.ஆர் குறிப்பிட்ட அதே அப்பாவி மக்களுக்கெதிராக வன்முறையைப் பயன்படுத்தியவர்கள், அதைத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா? அது நடக்காது போனதுதான், ஜே. ஆர் ஒரு வேஷதாரி என்பதை நிரூபிக்கிறது. குறைந்தபட்சம் வன்முறை வெறியையும் இனவாதத்தையும் தூண்டிக்கொண்டிருக்கும் சிறில் மத்யூ போன்ற அமைச்சர்களை, அமைச்சரவையிலிருந்தாவது நீக்கியிருக்கலாம் அல்லவா. அடுத்து வரவிருந்த தேர்தல்களும் பேரினவாத வாக்குவங்கியும் அதனைச் செய்வதிலிருந்து ஜே.ஆரைத் தடுத்திருக்கும். ஜே.ஆரின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் முரணானவை மட்டுமல்ல, குழப்பகரமானவையும் கூட. ஆனால், அவற்றுக்கிடையில் ஒரு தங்க நூலிழைத் தொடர்பு இருக்கிறது. அதுதான் அதிகாரத்தைத் தக்கவைத்தல். தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக எதனையும் செய்யத் தக்க சூத்திரதாரியாக ஜே.ஆர் இருந்தார். சுருங்கக்கூறின் நிக்கொலோ மாக்கியாவலியின் இளவரசனைப் போலவே அவர் நடந்து கொண்டார். சுதந்திரக் கட்சியின் யாழ். விஜயம் 1981 யாழ். வன்முறைகள், கலவரங்களைத் தொடர்ந்து பலதரப்பினரும் களநிலைவரத்தைக் காண, யாழ். ஏகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜே.ஆர் அரசாங்கத்துக்கு எதிரான இந்த வாய்ப்பைத் தமக்குச் சாதகமாகத் திருப்ப ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தவறவில்லை. 1977 பொதுத்தேர்தல் படுதோல்வியினால் துவண்டு போயிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எவ்வாறேனும் அத்தோல்வியிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளைத் தேடிக்கொண்டிருந்தது. 1981 நவம்பரில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான எஸ்.டீ. பண்டாரநாயக்கவும் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மருமகனும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் கணவருமான இலங்கையின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவும் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். அவர்கள் யாழில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தினர். உண்மையில் யாழ்ப்பாணத்தில் அவர்களுக்குச் சற்றே ஆரவாரமான வரவேற்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொங்கலும் தனித் தமிழீழப் பிரகடனமும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது. பேச்சளவில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கைகளுக்கு ஜே.ஆர் அரசாங்கம் இணங்கும் சமிக்ஞைகளை வழங்கியிருந்தாலும், நடைமுறையில் பெரும் முன்னேற்றம் எதுவும் இருக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களிடையே, குறிப்பாக தமிழ் இளைஞர்களிடையே தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீதான விசனம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணா வைகுந்தவாசன் என்ற தமிழர் விடுதலைச் செயற்பாட்டாளரின் தலைமையில், லண்டனில் இயங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தமிழர் அமைப்பொன்று 1982 ஜனவரி 14ஆம் திகதி பொங்கலன்று, தமிழீழ தனிநாட்டுப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்ற பகிரங்க அழைப்பொன்றை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குத் தனிநாட்டுப் பிரகடனத்துக்கான இந்த அழைப்பு பெரும் சங்கடத்தை உருவாக்கியது. அப்படியொரு காரியத்தைச் செய்வதற்கு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எந்த நிலையிலும் தயாராக இருக்கவில்லை. இந்நிலையில் குறித்த புலம்பெயர் அமைப்பின் அறிக்கையோடு தமக்கெந்தத் தொடர்புமில்லை என்று தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தெரிவித்தது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் எம்.சிவசிதம்பரம் ஆகியோர் இணைந்து விடுத்த அறிக்கையில், “இலங்கை வாழ் தமிழர்களின் தலைவிதியை இலங்கை வாழ் தமிழர்களே தீர்மானிக்க வேண்டும். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் சார்பாக முன்னெடுக்கும் அதிகாரம் எந்நபருக்கும் இல்லை” என்று குறிப்பிட்டதுடன், “இந்த, சிந்திக்காது எடுத்த முடிவானது, தமிழரின் பிரச்சினைகளுக்கு எந்த வகையிலும் முன்னேற்றமானதொரு தீர்வைத் தரப்போவதில்லை” என்றும் கூறினார்கள். மேலும், அந்த அறிக்கையில் இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், இதுபோன்ற அவசரகதியிலான தனிநாட்டுப் பிரகடனம் என்பது, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை பயக்கத்தக்க தீர்வல்ல என்பதை, தாம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டனர். பரபரப்பான நடவடிக்கைக்கு கிருஷ்ணா வைகுந்தவாசன் பெயர்போனவர். உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவமொன்றை, ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க தன்னுடைய ‘போரும் அமைதியும்’ (ஆங்கிலம்)என்ற நூலில் குறிப்பிடுகிறார். 1978 இல் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டமொன்றில், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீடாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு உரையாற்றத் தொடங்கினார். அவர், சில வரிகள் பேசிக்கொண்டிருந்த போதுதான், ஐ.நா காவலர்கள் நடைபெற்ற குழறுபடியை உணர்ந்துகொண்டு, அவரை உடனடியாக வெளியேற்றினார்கள். ஆகவே, இதுபோன்ற பரப்பான நடவடிக்கையைச் செய்தவர், தமிழீழ தனியரசுப் பிரகடனம் செய்ய விளைந்தமை பற்றி ஆச்சரியம் கொள்ள முடியாது. ஆனால், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மற்றும் அதனது நேச சக்திகளின் அழுத்தம் காரணமாக, ஜனவரி 14 ஆம் திகதி பொங்கலன்று, அதனைச் செய்வதைத் தவிர்க்க தமது அமைப்பு முடிவெடுத்துள்ளதாக கிருஷ்ணா வைகுந்தவாசன், ஜனவரி 10 ஆம் திகதி அளவில் அறிவித்தார். எது எவ்வாறாயினும் ஐக்கிய அமெரிக்காவிலிருந்த சில தமிழ் செயற்பாட்டாளர்கள், 1982 ஜனவரி 14 ஆம் திகதி ‘சுதந்திர தமிழீழம் - 1982’ என்பதன் பிரதிநிதிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு, தமிழீழ தனியரசுப் பிரகடனமொன்றை ஐக்கிய நாடுகள் சபையில் கையளித்திருந்தனர். தமிழீழப் பிரகடனத்தை ஜனவரி 14 ஆம் திகதி செய்வதை கிருஷ்ணா வைகுந்தவாசன் கைவிட்டிருப்பினும், அதனைச் செய்வதிலும் இடைக்கால தமிழீழ அரசாங்கத்தை ஸ்தாபிப்பதிலும் முனைப்போடு செயற்பட்டார். புலம்பெயர் குழுக்கள் சிலவும் இந்த வகையில் அக்கறையோடு செயற்பட்டன. ஆனால், இந்த விடயத்தில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அக்கறை காட்டவில்லை. இந்த நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்த இளையோர் தரப்பொன்று தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமைகள் மீது கடும் விசனம்கொண்டு தனிவழி செல்லத் தீர்மானித்தது. 1982 மே மாதம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினால் அவர்களது பத்திரிகையான சுதந்திரனில் இருந்து நீக்கப்பட்ட, அதனது ஆசிரியராக இருந்த கோவை மகேசன், அவரோடு எம்.கே.ஈழவேந்தன் உள்ளிட்ட சிலரும் சா.ஜே.வே.செல்வநாயகத்தின் மகனான சந்திரஹாசனின் தலைமையில் தமிழீழ விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றனர். தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆதரவினைத் தராத நிலையில், தமிழீழ விடுதலை முன்னணியானது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் மீது கரிசனை கொள்ளும் நிலைப்பாட்டிலிருந்தது. பிரபாகரன் - உமாமகேஸ்வரன் நாடுகடத்தல் விவகாரம் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நிலையைப் பொறுத்தவரை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பிளவுபட்ட காலப்பகுதி இது. வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்குமிடையேயான பிரிவின் காரணமாக உமா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (புளொட்) உருவாக்கியிருந்தார். இந்த இரு அமைப்பினரிடையேயும் வன்முறைத் தாக்குதல்கள் அவ்வப்போது நடந்து வந்தன. மே 19 ஆம் திகதி, தமிழ் நாட்டில் சென்னை, பாண்டி பஸாரில் உமா மகேஸ்வரன் மற்றும் பிரபாகரனிடையே துப்பாகிச் சூட்டுச் சமரொன்று நடந்தது. இதில் இருவரும் காயப்படவில்லையெனினும், இந்தச் சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே பிரபாகரன், தமிழகப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட, அங்கிருந்து தப்பிய உமா மகேஸ்வரன், சில தினங்களின் பின்பு தமிழகப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். இலங்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களாகக் கருதப்படும் பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு இலங்கைக்கு நாடுகடத்த வேண்டும் என ஜே.ஆர் தலைமையிலான இலங்கை அரசாங்கம், இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடம் கோரியிருந்தது. இந்தச் சூழ்நிலையில் பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் நாடு கடத்தப்பட்டு, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படக் கூடாது என்ற குரல் தமிழ்நாட்டில் வலுக்கத் தொடங்கியது. தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான நெடுமாறன் உள்ளிட்டோர் இதற்காகக் கடுமையாகக் களத்திலிறங்கிப் போராடினார்கள். அன்று தமிழக முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன். எம்.ஜி.ஆருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் மீதும் போராளிகள் மீதும் பெரும் அனுதாபமும் அக்கறையும் இருந்ததாக எம்.ஜி.ஆரின் அரசியல் பற்றி எழுதிய பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதேவேளை எம்.ஜி.ஆர் ஒரு வலிமையான தலைவரும் கூட. தான் நினைத்ததை யார் தடுத்தாலும், தயங்காது செய்யக்கூடிய வல்லமை அவரிடம் இருந்தது. இதேவேளை, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. கருணாநிதியும் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீதான அக்கறையாளராகவே தன்னைக் காட்டிக்கொண்டார். ஆகவே தமிழ்நாட்டு அரசியலின் இருபெரும் கட்சிகளும் குறித்த போராளிகள் இருவரும் இலங்கைக்கு நாடுகடத்தப்படக்கூடாது என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் ஆணித்தரமாக எடுத்துரைத்திருந்தனர். இந்த அழுத்தங்களின் விளைவாக, இலங்கை அரசாங்கத்தின் நாடுகடத்தல் கோரிக்கையை இந்திய அரசாங்கம் நிராகரித்தது. தமிழகத் தலைமைகள் வலிமையாகவும் உறுதியாகவும் நடந்துகொண்டால் இந்திய மத்திய அரசாங்கத்தை இலங்கை விவகாரத்திலும் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு சான்று. ஆனால், இந்த நிலையை நாம் இன்றைய காலத்திலிருந்து நோக்கும் போது, ‘ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன் - ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்” என்ற இரு வேறு களநிலைகளில் நோக்குதலும் அவசியமாகிறது. பிரபாகரன் - உமா மகேஸ்வரன் நாடு கடத்தல் விடயம் தொடர்பில், சந்திரஹாசன் தலைமையிலான தமிழீழ விடுதலை முன்னணியானது, அவர்கள் நாடுகடத்தப்படக் கூடாது என்று ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுத்தது. மறுபுறத்தில், ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்த விடயம் தொடர்பில் மௌனம் சாதித்திருந்தமையும் இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகிறது. (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/190699/இணக-க-வழ-ய-தன-வழ-ய-#sthash.onYOcLjD.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted February 7, 2017 Author Share Posted February 7, 2017 நாடாளுமன்றத் தேர்தலா? ஜனாதிபதித் தேர்தலா? 06-02-2017 01:38 PM Comments - 0 Views - 147 என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 78) ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதனூடாக இனப்பிரச்சினை தொடர்பில் சாதகமான தீர்வொன்றினைக் கண்டுவிட முடியும் என அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முழுமையான நம்பிக்கையோடு செயற்பட்டது. அதனால், ஜே.ஆர் அரசாங்கத்துக்கு முரணான விடயங்களில் ஈடுபடுவதையும் முடிந்தவரை தவிர்க்க நினைத்தது. கிருஷ்ணா வைகுந்தவாசனின் தமிழீழப் பிரகடன விடயத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதும் உமா மகேஸ்வரன் - பிரபாகரன் நாடு கடத்தல் விவகாரத்தில் அமைதி காத்ததும் தனிநாட்டுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இளைஞர் சக்திகளின் அழுத்தத்தை இலாவகமாகத் தவிர்த்து வந்ததும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை, ஜே.ஆர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை மூலமாக இணக்கப்பாடான தீர்வொன்றை எட்டிவிட திடசங்கற்பம் கொண்டமையையே எடுத்துக் காட்டுகிறது. ஆனால், ஜே. ஆரின் எண்ணப்பாடு வேறு விடயங்களில் தீவிரம் கொண்டிருந்தது. 1983 இறுதியளவில் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவுபெறுகிறது. ஆகவே, 1977 இல் வரலாறு காணாத 5/6 பெரும்பான்மை பெற்றுப் பதவிக்கு வந்த ஜே.ஆர் அரசாங்கம், மீண்டும் பொதுத் தேர்தலொன்றைச் சந்திக்க வேண்டிய சூழல் காத்திருந்தது. 1984 இல் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவுறுவதால், ஜனாதிபதித் தேர்தலுக்கான காலமும் வெகுதொலைவில் இல்லை. 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான முதலாவது தேர்தலாக அது அமையும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. குறைந்திருந்த செல்வாக்கு இந்த நிலையில், 1982 இன் தொடக்க காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் செல்வாக்கு, அவர்கள் 1977 இல் பெற்ற அளவிலான பெரும்பான்மைப் பலத்தை தக்க வைக்கத்தக்கதாக இருக்கவில்லை. குறிப்பாக, 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் கீழான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ், எந்தவொரு கட்சியும் இனி 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட வரலாறு காணாத பெரும்பான்மைப் பலத்தை பெற முடியாத நிலையே ஏற்பட்டது. இதை ஜே.ஆர் நன்குணர்ந்திருந்தார். நாட்டில் இடம்பெற்ற கலவரங்களும் வன்முறைகளும் சிறுபான்மை மக்களிடையேயான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கைப் பாதித்திருந்த அதேவேளையில், நாட்டிலே எழுந்திருந்த வன்முறைச் சூழலும் அதிகரித்து வந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளும் பெரும்பான்மை சிங்கள மக்களிடையேயான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கைப் பாதித்திருந்தன. அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்திருந்த திறந்த பொருளாதாரம் உள்ளிட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முன்னரிருந்த நிலையைவிட முன்னேற்றகரமான சூழலை ஏற்படுத்தியிருந்தாலும் அவர்கள் சொன்ன அளவுக்கு மூலதன உட்பாய்ச்சலை, இந்த ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவும் ஐக்கிய தேசியக் கட்சி மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைத்திருந்தது. சுதந்திரக் கட்சிக்குள் சிக்கல் இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது 1980 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டதில் பெரும் அரசியல் ரீதியிலான பின்னடைவைச் சந்தித்திருந்தது. அந்தப் பின்னடைவிலிருந்து கொஞ்சம் மீண்டுகொண்டிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜே.ஆருக்கும் பலமான போட்டியொன்றை வழங்கும் நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அன்று இருக்கவில்லை என்பதுதான் உண்மை. மேலும், உட்கட்சி முறுகல்களும் பிளவுகளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைக் கடுமையாகப் பாதித்திருந்தன. சிறிமாவின் அரசியல் அஞ்ஞாதவாசத்தைத் தொடர்ந்து, பண்டாரநாயக்க குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அத்தனகல்ல தொகுதியிலிருந்து அடுத்து யார் நியமிக்கப்படுவது என்பது தொடர்பில் சிறிமாவின் மகனான அநுர பண்டாரநாயக்கவுக்கும் சிறிமாவின் மகளான சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கும் பனிப்போரொன்று மூண்டிருந்தது. இருவரையும் தவிர்த்த தன்னுடைய நீண்டநாள் விசுவாசியான லக்ஷ்மன் ஜயக்கொடியை அத்தனகல்லை தொகுதியில் நியமித்ததனூடாக அந்தப் பிரச்சினையை சிறிமாவோ தீர்க்க விளைந்தார். மறுபுறத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கிய மைத்திரிபால சேனநாயக்க, சிறிமாவின் அஞ்ஞாதவாசத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவி தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தார். இந்த எண்ணத்தை, மைத்திரிபால சேனநாயக்கவின் மனைவியார் வெளிப்படுத்திய ஒலிப்பதிவை ஜே.ஆரின் முகவர்கள் சிறிமாவிடம் சேர்ப்பித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்த விளைந்ததாக ரஜீவ விஜேசிங்ஹ தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடுகிறார். இடதுசாரிக் கொள்கைச் சார்பு கொண்டதாகவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள், அநுர பண்டாரநாயக்க வலது சார்புடையவராக இருந்தார். சிறிமாவும் குறிப்பாக அவரது விசுவாசிகளும் இடது சார்பு கொண்டவர்களாகவே இருந்தார்கள். அநுர பண்டாரநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட இந்தக் கொள்கைச் சார்புகூட ஒரு காரணம் என்று ரஜீவ விஜேசிங்ஹ குறிப்பிடுகிறார். இதன் விளைவாக, மைத்திரிபால சேனநாயக்க மற்றும் அநுர பண்டாரநாயக்க ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தாம் ஒரு தனிக்குழுவாக இயங்கிக் கொண்டிருந்தது மட்டுமல்லாது, தம்மையே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றும் அடையாளப்படுத்திக் கொண்டார்கள். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிரந்தரமானது இதேவேளை, நாட்டில் தன்னுடைய ஆட்சியின் விளைவால் அதிகரித்து வந்த வன்முறையையும் எவ்வகையிலேனும் கட்டுப்படுத்த வேண்டிய நிலையும் ஜே. ஆருக்கு ஏற்பட்டது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் பேச்சுவார்த்தை மேசையில் வைத்து சமாளித்துக் கொண்டிருந்த ஜே.ஆருக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் இருந்தது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் பலம், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இல்லை என்பதை ஜே.ஆர் உணர்ந்திருக்க வேண்டும். தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டு வந்தது. 1982 மார்ச்சில் இலங்கைப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீதான தமிழ் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களைக் கண்டித்து, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அறிக்கையொன்றினை வௌியிட்டிருந்தார். அதில், ‘இரண்டு வகையாக தரப்பினர் யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஒருதரப்பு அரசியல் நோக்கம் கொண்டது. மற்றையது மிகப்பாரதூரமான குற்றவாளிகளைக் கொண்டது. அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைத் தமது குற்றங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல் நோக்கம் கொண்டவர்கள் தமது நோக்கத்தை அடைவதற்கு வன்முறையை வழிமுறையாகப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தனது நோக்கத்தை அமைதி வழியிலேயே அடைய முயல்கிறது’ என்று குறிப்பிட்டதை சச்சி பொன்னம்பலம் தனது நூலில் மேற்கோள் காட்டுகிறார். இந்தச் சூழலில் அதிகரித்து வரும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க, திடசங்கற்பம் கொண்டது ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம். 1979 இல் தற்காலிகமாக ஜே.ஆர் அரசாங்கம் அறிமுகப்படுத்திய ‘ட்ரேகோனியன்’ சட்டமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, அதன் தற்காலிக காலம் நிறைவுறும் நிலையை எட்டியிருந்தது. மீண்டும் அதனைத் தற்காலிகமாகச் சிலகாலத்துக்கு மட்டும் நீடிப்பதற்குப் பதிலாக ஜே.ஆர் அரசாங்கமானது, அதனை நிரந்தர சட்டமாக்கும் வகையில் 1982 மார்ச்சில் ஒரு திருத்தச் சட்டத்தை முன்வைத்தது. 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கப் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டம் மூலம், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கப் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் திருத்தப்பட்டது. 1979 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 29 ஆம் பிரிவு குறித்த சட்டம் மூன்று ஆண்டுகளுக்கே வலிதானது என்று குறிப்பிட்டது. 1982 ஆம் ஆண்டு திருத்தத்தின் கீழ், குறித்த 29 ஆம் பிரிவானது நீக்கப்பட்டதன் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டது. உலகின் மிகமோசமான, அடிப்படை மனித உரிமைகளை மீறும் சட்டங்களுள் ஒன்றாக இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் காணப்படுகிறது. 1984 இல் வெளியிடப்பட்ட சர்வதேச சட்டவியலாளர்கள் ஆணைக்குழுவின் அறிக்கையொன்றில், போல் சீகார்ட் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை, “நாகரிகமடைந்த நாடொன்றின் சட்டப்புத்தகத்தில் காணப்படக்கூடிய அசிங்கமான கறை” என்று விளிக்கிறார். ஜே. ஆரின் தேர்தல் வியூகம் இந்தப் பின்னணியில்தான் 1983 இல் வரவிருந்த நாடாளுமன்றத் தேர்தல், 1984 இல் வரவிருந்த ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றுக்கான வியூகமொன்றை அமைக்க வேண்டிய நிலையில் ஜே.ஆர் இருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சரிந்துவரும் செல்வாக்குக்கு, சிறிமாவின் அரசியல் அஞ்ஞாதவாச அதிர்ச்சியிலிருந்து மீண்டு எழுந்து கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட அனைத்து சூழ்நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, முதலில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்வதைவிட, முதலில் ஜனாதிபதித் தேர்தலைச் சந்திப்பதுதான் சாலப் பொருத்தமானது என ஜே.ஆரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் கருதினர். இதற்கு இன்னுமொரு காரணத்தையும் ரஜீவ விஜேசிங்ஹ குறிப்பிடுகிறார். முதலில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து ஒருவேளை ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெல்லுமானால், அவர்கள் சிறிவோவின் குடியியல் உரிமைகளை மீள அளிப்பார்கள். அந்த எழுச்சியோடு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆருக்கு எதிரான சிறிமாவோ போட்டியிடுவார். ஆகவே நாடாளுமன்றத் தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலிலும் தோல்வியடையக்கூடிய இரட்டை அபாயம் இருந்தது. ஆனால், ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்படுமானால், குடியியல் உரிமைகளை இழந்துள்ள சிறிமாவோவினால் அதில் போட்டியிட முடியாது. சிறிமாவோவைத் தவிர நாடுமுழுவதும் பிரபல்யமிக்க தலைவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இல்லை. ஆகவே, பலமான போட்டியில்லாத நிலையில் ஜே.ஆரினால் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும். ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் எழுச்சியோடு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்காது. ஆகவே, ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பே, 1982 இன் இறுதிப்பகுதியில் நடத்துவதற்கு ஜே.ஆர். ஜெயவர்த்தன தீர்மானித்தார். ஆனால், அரசியலமைப்பு ரீதியில் அந்த முடிவை நடைமுறைப்படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது. அரசியலமைப்புக்கான மூன்றாவது திருத்தம் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 31 ஆம் சரத்தின் மூன்றாம் பிரிவானது, ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்துக்குக் குறையாமலும் இரண்டு மாதத்துக்குக் கூடாத காலப்பகுதியிலும் நடத்தப்பட வேண்டும் என்று வழங்கியது. ஆகவே, ஜனாதிபதித் தேர்தலை ஜே.ஆர், தான் நினைத்த வேளையில் நடத்தவதற்கு முடியாத சூழல் இருந்தது. ஆனால், ஜே.ஆரிடம் வரலாறு காணாத 5/6 பெரும்பான்மைப் பலம் இருந்தது. ஆகவே, அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைச் செய்து, ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஜே.ஆர் முடிவெடுத்தார். ஜனாதிபதியொருவர் தன்னுடைய முதலாவது பதவிக்காலத்தின் நான்காண்டுகள் கடந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்துக்கான மக்களாணையை தேர்தல் மூலம் பெறுவதற்கான ஒரு பிரகடனமொன்றைச் செய்ய முடியும் என்ற திருத்தத்தை 1978 ஆம் ஆண்டின் குடியரசு யாப்புக்கான மூன்றாவது திருத்தமாக ஜே.ஆர் அரசாங்கம் முன்வைத்தது. இந்தத் திருத்தம் சிவில் உரிமைகள் இயக்கத்தினால் உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்பட்டது. மக்களின் உரிமையை இது பாதிப்பதாகச் சிவில் உரிமைகள் இயக்கம் தெரிவித்தது. உயர் நீதிமன்றானது, குறித்த திருத்த மசோதாவைப் பரிசீலித்த பின்னர், 2/3 பெரும்பான்மையோடு குறித்த திருத்தமானது நிறைவேற்றப்பட முடியும் என்று அறிவித்தது. இலங்கையில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான முதலாவது தேர்தலுக்கு ஜே.ஆர் தயாரானார். அவருக்கான போட்டியாளர் யார் என்று எதிர்க்கட்சிகள் தேடிக்கொண்டிருந்தன. (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/191079/ந-ட-ள-மன-றத-த-ர-தல-ஜன-த-பத-த-த-ர-தல-#sthash.v08ZCY4H.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted February 15, 2017 Author Share Posted February 15, 2017 “முகத்தில் குத்துவதுபோல் காட்டிக்கொண்டு வயிற்றிலடிக்க வேண்டும்” 13-02-2017 01:32 PM Comments - 0 Views - 205 - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 79) ஜே.ஆரைத் தந்திரோபாயத்தில் வல்லவர் என்றும், சூழ்ச்சித் திட்டங்களில் தேர்ந்தவர் என்றும் பலரும் கூறுவதுண்டு. இதை ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஆரே ஏற்றுக்கொண்டுள்ளார். “என்னைத் தந்திரோபாயம்மிக்கவன் என்றும் திட்டதாரி என்றும் அவர்கள் சொல்வதை நான் அறிவேன். திட்டங்களில்லாவிட்டால் எப்படித் தலைவனாக இருக்க முடியும்? அரசியலில் மட்டுமல்ல, யுத்தத்திலும் மனித விவகாரங்களிலும் இது அவசியம். இவ்வளவு ஏன், குத்துச்சண்டைப் போட்டியில் கூட சூழ்ச்சித் திட்டம் அவசியமாகிறது. நான் சிறுவயதில் குத்துச்சண்டை வீரனாக இருந்திருக்கிறேன். நீங்கள், முகத்தில் குத்துவது போல காட்டிக்கொண்டு வயிற்றிலடிக்க வேண்டும். ஆம்! நிச்சயமாகச் சூழ்ச்சித் திட்டங்கள் செய்யத்தான் வேண்டும்” என்று ஜே.ஆர் ஒரு சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டதை, தனது கட்டுரையொன்றில் கே.ரீ.ராஜசிங்கம் பதிவு செய்கிறார். ஜே.ஆர் யார் என்பதற்கு அவருடைய இந்த வாக்குமூலத்தைத் தவிர, வேறேதும் சான்றாதாரங்கள் தேவையில்லை. இத்தகைய ஜே.ஆருடன் தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் பேச்சுவார்த்தை எனும் பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஜே.வி.பியின் ஜனநாயகப் பிரவேசம் இதேவேளை, 1982 இன் ஆரம்பப் பகுதியில், இலங்கையின் தேர்தல் ஆணையாளர் புதிதாக மூன்று கட்சிகளுக்கான அங்கிகாரத்தை வழங்கியிருந்தார். இதில் குறிப்பிடத்தக்கது ரோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொண்டு அரசியல் கட்சியாகத் தன்னைப் பதிவு செய்து கொண்டமையாகும். சிறிமாவோவின் ஆட்சியில் பெரும் ஆயுதப் புரட்சியொன்றைச் செய்து, நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்ற ஆயுதக்குழுவை சிறிமாவோவின் அரசாங்கம், இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருந்தது. ‘ஜே.ஆர் அரசாங்கம்’ பதவிக்கு வந்ததும், ஜே.ஆர் அரசாங்கத்தின் ‘அரசியல் சகிப்புத்தன்மை’ என்ற கொள்கையின் கீழ், ரோஹண விஜேவீர உள்ளிட்ட ஜே.வி.பி போராளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். இப்போது அவர்கள் ஓர் அரசியல் கட்சியாகத் தம்மை பதிவுசெய்துகொண்டதன் மூலம், அடுத்த தேர்தலில் அவர்கள் போட்டியிடக் கூடும் என்று ஜே.ஆர் உணர்ந்திருந்தார். உண்மையில், ஜே.வி.பி புரட்சியை சிறிமாவோ ஆயுதம் கொண்டு அடக்கிய விதம், கிராமப்புற சிங்கள மக்களிடையே சிறிமாவோ அரசாங்கம் மீது அச்சத்தையும் அசூசையையும் ஏற்படுத்தியிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. நிச்சயமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கு விழப்போகும் வாக்குகளை ஜே.வி.பி உடைக்கப்போவதில்லை, மாறாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றான வாக்குவங்கியைத் தான் ஜே.வி.பி. உடைக்கும் என்பதை ஜே.ஆர் உணர்ந்திருக்கலாம். ஆகவே, ரோஹண விஜேவீர விடுதலை செய்யப்படவும் ஜே.வி.பியை ஒரு கட்சியாகப் பதிவுசெய்யவும் ஜே.ஆர் அரசாங்கம் வழிசமைத்தமைக்குப் பின்னால், தமக்கு எதிரான வாக்குகளைச் சிதைக்கும் சூழ்ச்சித் திட்டம் இருக்கலாம். ஏனெனில், ஜே. ஆரே ஒத்துக்கொண்டதைப் போல, அவர் ஒரு சூழ்ச்சிதாரி! ஆனால், ஜே.வி.பியின் இன்னொரு ஆயுதப் புரட்சியைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஜே.ஆருக்கு இன்னும் ஐந்து வருட காலங்களில் காத்திருந்தது என்பதை அன்று ஜே.ஆர் உணர்ந்திருக்க மாட்டார். குற்றவாளிகளைக் காப்பாற்ற ஒரு சட்டம் ஜே.ஆர் அரசாங்கம் பதவியேற்ற சில நாட்களிலேயே, 1977 ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற இனக்கலவரம், அதோடு ஒட்டிய வன்முறைகள் பற்றி விசாரிக்க முன்னாள் பிரதம நீதியரசர் மிலியானி க்ளோட் சன்சொனி தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணைக் குழு அறிக்கை 1980 நொவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலவரத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை, அரசாங்க அதிகாரிகள் பலரும் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்தமை பற்றி சன்சொனி ஆணைக்குழு அறிக்கையில் அடையாளம் காணப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த பொலிஸ் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஜே.ஆர் அரசாங்கம் எடுக்கவில்லை. மாறாக, இதில் சம்பந்தப்பட்ட சில பொலிஸ் அதிகாரிகள் பதவியுயர்வு பெற்றிருந்ததைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆகவே, ஜே.ஆர் அரசாங்கம், தான் நியமித்த விசாரணை ஆணைக்குழு தவறிழைத்தவர்கள் என அடையாளங்காட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு, அவர்களில் சிலருக்கு பதவியுயர்வும் அளித்திருந்தது. இத்தோடு இது நின்றுவிடவில்லை. 1982 மே மாதத்தில் ஜே.ஆர் அரசாங்கம் இன்னொரு கைங்கரியத்தையும் நிறைவேற்றியது. 1982 மே 20 ஆம் திகதி ஜே.ஆர் அரசாங்கம் பொறுப்பினின்று விடுவிக்கும் சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது (Indemnity Act). இந்தச் சட்டமானது, 1977 ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் 31 ஆம் வரை நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் எந்தவொரு அமைச்சர், பிரதி அமைச்சர், முப்படையினர், பொலிஸார் மற்றும் அமைச்சரின் நல்லெண்ண வழிகாட்டுதலின் பேரில் நடந்த எந்தவொரு நபர் மீதும் எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படுவதிலிருந்து விலக்களிக்கும் வகையில் அமைந்தது. சுருக்கமாக 1977 ஓகஸ்ட் இனக்கலவரத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதிலிருந்து சட்டரீதியான பாதுகாப்பொன்றை ஜே.ஆர் அரசாங்கம் வழங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்காத ஜே.ஆர் அரசாங்கம், பாதிப்புக்குக் காரணமாக இருந்தவர்கள் என சன்சொனி ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் இன்னொரு கரும்புள்ளியாகும். முதலாவது உலகத் தமிழீழ மாநாடு 1982 ஜூலை மாதம் ஐந்தாம் திகதி, முதலாவது உலகத் தமிழீழ மாநாடு ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலுமிருந்தும் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் பல்வேறு அமைப்புகளினதும் பிரதிநிதிகள், புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் தமிழ் அரசியல் தலைமைகளும் கலந்துகொண்டன. இலங்கையிலிருந்து தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். ஏற்கெனவே, 1982 ஜனவரியில் கிருஷ்ணா வைகுந்தவாசன் உள்ளிட்டோரின் தமிழீழப் பிரகடன முயற்சியை அமிர்தலிங்கமும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இம்மாநாட்டில் தமிழீழத்துக்கான இடைக்கால, தற்காலிக அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது. 1982, ஜனவரியில் தமிழீழப் பிரகடன முயற்சியை எதிர்த்தது போலவே அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், முதலாவது தமிழீழ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தமிழீழ இடைக்கால தற்காலிக அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் பிரேரணையையும் கடுமையாக எதிர்த்தார். இந்த விடயம் தொடர்பில் உரையாற்றிய அமிர்தலிங்கம் “நாம் எதிர்நோக்கியுள்ள பெரும் பொறுப்பை நாம் உணர்ந்துள்ளோம். நாம் செய்கின்ற காரியங்களில் நாம் பொறுப்பில்லாமல் செயற்பட முடியாது. எங்கள் மீது கல்லெறியும் முன்பு, எங்களுடைய இடத்தில் நின்று சிந்தித்துப் பாருங்கள். நாம் மனிதர்கள், தவறு இழைக்கக் கூடியவர்கள். மகாத்மா காந்திகூடத் தான் தவறிழைத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஏதாவதொரு கட்டத்தில் தமிழ் மக்களின் நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன் என்று நான் உணர்ந்தால், நான் தலைமைப் பதவியிலிருந்து இறங்கி, தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றவர் எவராயினும் அவரிடம் தலைமைப் பதவியை அளிக்கத் தயார்” என்று குறிப்பிட்டதுடன் தனித் தமிழீழத்தை ஸ்தாபிப்பதிலுள்ள சிக்கல்கள், சவால்கள் பற்றியும் பேசினார். இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் உயிர்களுக்கு தாமே பொறுப்பு என்று சொன்ன அமிர்தலிங்கம், மக்கள் இல்லாமல்ப் போனபின் விடுதலையைப் பெற்று என்ன இலாபம் என்றும் கேள்வி கேட்டார். அண்மையில் வெற்றிகரமாகப் பாகிஸ்தானிலிருந்த வங்கதேசம் (பங்களாதேஷ்) பிரிந்தமையைச் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், அந்த விடுதலைப் போரில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் பலியானதைக் குறிப்பிட்டு, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் மொத்தச் சனத்தொகையே அவ்வளவுதான் என்று கூறினார். மேலும், ஜே.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அவர் மீது கொண்ட காதலால் அல்ல; மாறாகத் தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பினால் என்று குறிப்பிட்டவர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அடிப்படையாகக் கொண்டு, வலுவான அதிகாரப் பரவலாக்கலை நோக்கித் தாம் பயணிப்பதாகத் தெரிவித்தார். நரகத்திற்குப் போவது யார்? தமிழீழ ஆதரவாளர்கள் நிறைந்த அந்தச் சபையில் இப்படி ஓர் உரையை ஆற்றுவது அமிர்தலிங்கத்துக்கு இலகுவாக இருக்கவில்லை. நிறைய எதிர்ப்புகள், கூக்குரல்களை அவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது. குறிப்பாக மாநாட்டில் கலந்துகொண்ட கிருஷ்ணா வைகுந்தவாசனைப் போன்றவர்கள் அமிர்தலிங்கத்துக்குக் கடுமையான சவாலைக் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் “ஜே.ஆரை நரகத்துக்குப் போ என்று அவரது முகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்” என்று சொன்னபோது, கோபமடைந்த அமிர்தலிங்கம் “அப்படிச் சொன்னால் நரகத்துக்குப் போகப்போவது ஜே.ஆர் அல்ல, தமிழ் மக்கள்தான் நகரத்துக்குப் போக வேண்டி வரும்” என்று பதிலளித்தார். இறுதியில் முதலாவது உலகத் தமிழீழ மாநாடு, தமிழீழ விடுதலைப் பேரவை என்ற ஒன்றை உருவாக்கி, சுதந்திர தமிழீழத்துக்கான சர்வதேச ஆதரவினைத் திரட்டும் பணியில் ஈடுபடும் தீர்மானமொன்றை நிறைவேற்றியது. தேர்தலுக்கு முன் ஒரு முகம், தேர்தலுக்குப் பின் இன்னொரு முகம் முதலாவது உலகத் தமிழீழ மாநாட்டில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பேசிய விடயங்களில் நிறைய யதார்த்தம் பொதிந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. தனித் தமிழீழம் ஒன்று உருவாக்கப்பட்டு, நிலைத்து நிற்பதற்கான எந்தவொரு அடிப்படைகளும் திட்டங்களும் இல்லாத நிலையில் அதற்கான அரசாங்கமொன்றை ஸ்தாபித்தல், இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வை மேலும் இன்னலுக்குள் தள்ளும் செயலாகவே அமையும். இதைவிடப் பேச்சுவார்த்தை மூலம், அதிகாரப் பரவலாக்கலை விஸ்தீரணப்படுத்தி, அதனூடாகத் தமிழ் மக்கள், தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள வழிசமைத்தல் ஒப்பீட்டளவில் சாத்தியமான, சிக்கல் குறைந்த தீர்வாக இருக்கிறது. ஆனால், இதில் பிரச்சினை எங்கே ஆரம்பமாகின்றது என்றால், இந்த யதார்த்தம் பற்றியும் சாத்தியமான தீர்வுகள் பற்றியும் அமிர்தலிங்கமோ, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோ தேர்தல் காலத்தில் எதுவுமே பேசவில்லை. மாறாகத் தேர்தலின்போது, தனிநாடு அமைப்பதற்கான மக்களாணையையே அவர்கள் கோரியிருந்தார்கள். தேர்தலின் போது ஒரு கதையையும் அதன் பின்னர் “யதார்த்தம், சாத்தியம்” என்று சொல்லும் இன்னொரு கதையையும் முன்வைக்கும் போதுதான் சிக்கலும் முரண்பாடுகளும் தோன்றுகின்றன. இந்த விடயத்தில் அன்றுமட்டுமல்ல, இன்றும் கூட தமிழ்த் தலைமைகள் இதே வழியில்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் விடயம். தாங்கள் உறுதியாக நம்பவதை மக்களிடம் கொண்டு செல்ல அவர்களுக்கு திராணி இருப்பதில்லை. மாறாகக் குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டிச் சோறூட்டுவதுபோல தனிநாட்டைக் (பின்னர் சமஷ்டியை) காட்டி வாக்குகள் பெற்றுவிட்டு, அதன் பின்னர் “சாத்தியமான, யதார்த்தமான, இணக்கப்பாடான” தீர்வு என்ற பாதையில் பயணிக்கிறார்கள். “சாத்தியமான, யதார்த்தமான, இணக்கப்பாடான” தீர்வு என்ற பாதையில் பயணிப்பது தவறேயில்லை. ஆனால், அதனை முற்கூட்டியே மக்களுக்குச் சொல்லி, அதற்கான மக்களாணையை மக்களிடம் பெறாமைதான் தவறாகிறது. இதனால்தான், தமிழ்த் தலைமைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தம்மை ஏமாற்றுவதாகத் தமிழ் மக்கள் உணர்கிறார்கள். தமிழ் அரசியல் பரப்பில் மாற்றுத் தீர்வுகள் பற்றிய கலந்துரையாடல் வலுவடையாமைக்கும் இது ஒரு காரணம். ஏனெனில் “சாத்தியமான, யதார்த்தமான, இணக்கப்பாடான” தீர்வு என்று நடைமுறையில் செயற்படும் தலைமைகள் கூட, வெளிப்படையாக அதனை ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றன. இந்த இரட்டைமுக அரசியல், இலங்கை தமிழ் அரசியலில் ஒரு சாபக்கேடாகவே மாறிவிட்டது என்பதுதான் உண்மை. (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/191468/-ம-கத-த-ல-க-த-த-வத-ப-ல-க-ட-ட-க-க-ண-ட-வய-ற-ற-லட-க-க-வ-ண-ட-ம-#sthash.z1a98QZg.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted February 21, 2017 Author Share Posted February 21, 2017 (edited) முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும் என்.கே. அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 80) அர்த்தமற்றதாக நீண்டு சென்ற பேச்சுவார்த்தைகள் ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, மிகுந்த நல்லெண்ணத்துடனும் அதன்பாலாகத் தமக்கேற்றதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் முன்னெடுத்தன. ஏனென்றால், குறித்த பேச்சுவார்த்தைகளின் நிமித்தமாக அரசாங்கத்தோடு மிகுந்த இணக்கப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டிய சூழல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இருந்தது. புலம்பெயர் தமிழ் மக்களினது எதிர்ப்புக்கு மத்தியில் மட்டுமல்லாது, உள்நாட்டிலும், குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் எழுச்சிபெற்ற தமிழ் இளைஞர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அந்த எதிர்ப்பை எதிர்கொண்டு, தமது இணக்கப்பாட்டுக்கு எந்தப் பங்கமும் வராமல் ஒரு வருடகாலமளவுக்கு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நம்பிக்கையோடு ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டது. இந்த எதிர்ப்பு எந்த அளவுக்குச் சென்றதென்றால், தமிழ் இளைஞர்கள், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வாகனத்தைச் சூழ்ந்து நின்று அமிர்தலிங்கத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் எதிர்த்துக் குரலெழுப்பும் அளவுக்கு எதிர்ப்பு வலுத்தது. இத்தனைகளையும் தாண்டியும் பேச்சுவார்த்தையைத் தவிர வேறு வழியில்லை என்ற எண்ணப்பாட்டில்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பயணித்தது. ஆனால், நீண்ட இந்தப் பேச்சுவார்த்தைகள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கோ, தமிழ் மக்களுக்கோ எந்தவகையான சாதகமான பலனையும் தரவில்லை. வடக்கில் தமிழ் பேசும் பொலிஸாரின் எண்ணிக்கை அதிகரித்தமை உட்பட, சில விடயங்கள் நடந்தேறினாலும் தமிழ் மக்கள் வேண்டிய அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு பற்றி எந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களும் நிகழவில்லை. மாறாக, தமிழ் மக்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் எனும் இரும்புக் கரம் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருந்தது. ஜே.ஆரைப் பொறுத்தவரையில் அவரது கவனம் முழுவதும் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் மீதுதான் குவிந்திருந்தது. அது நடந்தேறும் வரை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தக்க அஸ்திரமாகவே ஜே.ஆர் இந்தப் பேச்சுவார்த்தைகளைக் கருதியிருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் வரையிலான ஜே. ஆரின் போக்கும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னான ஜே.ஆரின் போக்கும் இதையே சுட்டி நிற்கிறது. ஜனாதிபதித் தேர்தல் 1982 ஒக்டோபர் 20 ஆம் திகதி நடத்தப்படவிருந்தது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதியாக 1982 செப்டெம்பர் 17 அமைந்தது. ‘குட்டிமணி’ என்ற செல்வராஜா யோகசந்திரன் தமிழ் இளைஞர்களின் விருப்பம் தனித் தமிழீழமாக மாறியிருந்ததை அன்றைய சூழல் உணர்த்தி நின்றது. குறிப்பாக, அன்று தோன்றியிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சில இதனை அடைவதற்குரிய முறை ஆயுத வழியே என்று, அதன் வழி பிரயாணிக்கத் தொடங்கியிருந்தன. ஆங்காங்கே பொலிஸ் நிலையங்களும் பொலிஸாரும் தாக்கப்பட்டனர். இந்தச் சூழலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தா. திருநாவுக்கரசு, 1982 ஓகஸ்ட் முதலாம் திகதி காலமானார். இதனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு புதிய நியமனம் செய்யும் சந்தர்ப்பம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்டது. இதேவேளை, வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்ற கருத்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள் உருவானது. குட்டிமணியைத் தமிழ் மக்கள் சார்பில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அழுத்தமும் வலுப்பெறத் தொடங்கியது. யார் இந்த குட்டிமணி? ‘குட்டிமணி’ என்ற யுத்தப் பெயரால், இயக்கப் பெயரால் (nom de guerre) பரவலாக அறியப்பட்ட செல்வராஜா யோகசந்திரன் என்பவர், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) என்ற தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராவார். பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை எனக் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டிருந்த ஆயுதப் போராளியான குட்டிமணி, 1981 ஏப்ரல் முதலாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது, அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டார்.அவரோடு தங்கதுரை என்பவரும், தேவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்கள். பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு நடத்தப்பட்டது. வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் படி, கைதுசெய்யப்பட்ட குட்டிமணியும் ஜெகன் என்பவரும் பல மாதங்களுக்கு எந்த வெளியுலகத் தொடர்புமின்றி, சட்டத்தரணிகள் கூட அணுகமுடியாதபடி, தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். தடுத்து வைத்திருக்கப்பட்ட போது, சொல்லொணாச் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். குறித்த சித்திரவதைகள் பற்றிய விவரணங்கள் வழக்கின் சாட்சியப் பதிவுகளில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மனிதம் ஓர் அணுவிலேனும் இருக்குமாயினும்கூட இத்தகைய சித்திரவதைகளை இன்னொரு மனிதன் மேல் எந்த மனிதனும் பிரயோகிக்க மாட்டான். அத்தகைய மிகக் கர்ணகொடூரமான சித்திரவதைகளுக்கு குட்டிமணியும் ஜெகனும் முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக அந்தச் சாட்சிப்பதிவுகள் தெரிவிக்கின்றன. குட்டிமணி மற்றும் ஜெகனுக்கு எதிரான கொழும்பு உயர்நீதிமன்றில் நடந்த வழக்கில் 1982 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டபின், மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட முன்பதாக, குட்டிமணி ஏதேனும் தெரிவிக்க நீதிபதியினால் தரப்பட்ட வாய்ப்பில் குட்டிமணி தெரிவித்த விடயமானது, தமிழ் இளைஞர் மத்தியில் நீண்ட தாக்கம் செலுத்தியதொரு கூற்றாக அமைந்து. தன்னுடைய கூற்றிலே குட்டிமணி “நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. நான் ஒரு நிரபராதி. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட என்னை, அவர்கள் சித்திரவதை செய்து சில வாக்குமூலங்களில் கையெழுத்துப் பெற்று, அவை எனக்கெதிரான சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டு, நான் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறேன். இந்த நீதிமன்று இன்று வழங்கியுள்ள ஆணையைப் பற்றி, நான் என்னுடைய சில அடிப்படை எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்று இந்த வழக்கிலே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தமிழீழம் அமைக்கப்படுவதற்கான புதிய உத்வேகத்தையும் வளம்மிக்க உரத்தையும் ஊக்கத்தையும் வலுவான காரணங்களையும் வழங்கும். இன்னும் வேறும், தமிழ் இளைஞர்களும் இந்த நீதிமன்றின் முன் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் நிற்கவைக்கப்படுவார்கள். இது தொடருமானால், விதிக்கப்படும் தண்டனையானது தமிழர்களின் விடுதலைக்கான ஊக்கமாக அமையும். நான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய கண்கள், கண்பார்வையற்ற ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போதுதான் தமிழீழம் நிதர்சனமாவதை குட்டிமணி இந்தக் கண்களால் காணமுடியும். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தல் ஆனால், குட்டிமணியை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்ற கருத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஜே.ஆர் ஜெயவர்த்தன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைத் தனக்கு ஆதரவு தர வேண்டும் என அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திடம் வேண்டியிருந்தார். இது, அமிர்தலிங்கத்துக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியிருந்தது. அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை என்ற இணக்கவழியில் பயணித்துக் கொண்டிருந்தமைக்கே கடுமையான எதிர்ப்பினை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தித்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆரை வெளிப்படையாக ஆதரித்தல் என்பது சாத்தியமே இல்லை என்பதை அமிர்தலிங்கம் நிச்சயமாக அறிந்தும் உணர்ந்தும் இருக்கக்கூடும். ஆகவே, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தல் என்ற முடிவுக்கு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வந்திருந்தார். “ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரைக் களமிறக்கும் கேவலமான அரசியல் சித்து விளையாட்டினைச் செய்யத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தயாராக இல்லை. எங்கள் நோக்கம் நன்கறியப்பட்டதே. ஈழம் என்ற எமது இலக்கை நோக்கியே நாம் பயணிக்கிறோம்” என்று சொன்ன அமிர்தலிங்கம், “தமிழ் மக்கள், 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் குடியரசு யாப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதைவிட வேறு வழி எமக்கில்லை” என்று ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதற்கொரு வியாக்கியானத்தையும் முன்வைத்தார். முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழன் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்பது, ஏறத்தாழ ஜே.ஆரின் வெற்றிக்கு உறுதுணை செய்யக்கூடிய ஒன்றாகவே அமைந்தது. அன்றிருந்த சூழலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஜே.ஆருக்கு வெளிப்படையான ஆதரவினைத் தெரிவித்திருந்தால் தமிழ் மக்கள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் புறக்கணித்திருப்பார்களேயன்றி ஜே.ஆருக்கு வாக்களித்திருக்கும் நிலை இருக்கவில்லை. இந்த நிலையில், ஒரு தமிழனாகத் தமிழ் மக்கள் சார்பில், 1982 ஒக்டோபரில் நடைபெறவிருந்த இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த குமார் பொன்னம்பலம் முடிவெடுத்திருந்தார். அவர், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இரண்டு முக்கிய காரணங்களை முன்வைத்தார். முதலாவதாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது வடக்கு, கிழக்குக்கு அப்பால் வாழும் தமிழர்களிடம் தமிழீழம் என்ற தனிநாட்டுக்கான அங்கிகாரத்தையும் மக்களாணையையும் பெறத் தவறிவிட்டது, ஆகவே, அதனைப் பெற்றுக்கொள்ள இது ஒரு வாய்ப்பு. என்றும், இரண்டாவதாகத் தமிழர்களுக்கான தனிநாட்டுக்கான மக்களாணையை வடக்கு, கிழக்கில் பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இதுவரை அதற்காக எதுவும் செய்யவில்லை. அதனை ஓரமாக வைத்துவிட்டது. ஆகவே, இக்குறைகளை நிவர்த்தி செய்து, இலங்கை முழுவதிலும் வசிக்கும் தமிழ் மக்களிடம் தனிநாட்டுக்கான புதிய மக்களாணையைப் பெறத் தாம், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதியான 1982 செப்டெம்பர் 17 அன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களில் ஆறு பேரின் வேட்புமனுக்களைத் தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டிருந்தார். அந்தவகையில், இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்த்தனவும் சிறிமாவோவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக ஹெக்டர் கொப்பேகடுவவும் லங்கா சமசமாஜக் கட்சி சார்பாக கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வாவும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலமும் நவ சமசமாஜக் கட்சி சார்பில் வாசுதேவ நாணயக்காரவும் ஜே.வி.பி சார்பில் றோஹண விஜேவீரவும் வேட்பாளர்களாகக் களமிறங்கினார்கள். நாடாளுமன்ற உறுப்பினராகக் குட்டிமணி நியமனம் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு எடுத்த நிலையில், குட்டிமணியை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள் இருந்த கருத்தையும் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு இருந்தது. ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசின் மரணத்தின் காரணமாக வெற்றிடமான யாழ். வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, குட்டிமணியை நியமிக்க அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முடிவெடுத்தது. அந்தவகையில், 1982 ஒக்டோபர் 14 ஆம் திகதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வெற்றிடமான வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தமது கட்சி குட்டிமணி என்ற செல்வராஜா யோகசந்திரனை நியமிப்பதாகத் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தார். தேர்தல் ஆணையாளர் இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், 1982 ஒக்டோபர் 16 ஆம் திகதி, சிறைச்சாலைகள் ஆணையாளர், மரணதண்டனை விதிக்கப்பட்ட குட்டிமணியை நாடாளுமன்றம் சென்று, நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளச் சிறையிலியிருந்து வெளியே அனுமதிக்க முடியாது என்று அறிவித்தார். இதற்கெதிராகக் குட்டிமணி, தான் நாடாளுமன்றம் சென்று நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு அனுமதிகோரி மேன்முறையீட்டு நீதிமன்றை நாடினார். (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/191845/ம-தல-வத-ஜன-த-பத-த-ர-தல-ம-தம-ழர-அரச-யல-ம-#sthash.jVvLA17c.dpuf Edited February 21, 2017 by நவீனன் Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted February 28, 2017 Author Share Posted February 28, 2017 முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழ் அரசியலும் 27-02-2017 01:22 PM Comments - 0 Views - 176 - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 81) குட்டிமணியின் நாடாளுமன்ற நியமனம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் வெற்றிடமான வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு குட்டிமணி என்கிற செல்வராஜா யோகசந்திரனின் நியமனத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டாலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவரான குட்டிமணியை சிறையிலிருந்து நாடாளுமன்றம் சென்று பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் அனுமதிக்கவில்லை. இதற்கெதிராகக் குட்டிமணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியிருந்தார். குட்டிமணியின் மனுவினை எதிர்த்து சிறைச்சாலைகள் ஆணையாளர் சார்பில் ஆஜரான பிரதி மன்றாடியார் நாயகம், “குட்டிமணியை சிறைச்சாலையைவிட்டு நாடாளுமன்றம் செல்வதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிடும் அதிகாரம், மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை” என்ற பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்தார். இந்தப் பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குட்டிமணியின் மனுவினைத் தள்ளுபடி செய்தது. இதனால் குட்டிமணியினால் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள முடியாது போனது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரானவர் தெரிவுசெய்யப்பட்டு அல்லது நியமனம் செய்யப்பட்டு மூன்றுமாத காலத்துக்குள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விதியிருந்தது. குட்டிமணியினால் அவரது நியமனம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மூன்றுமாத காலத்துக்குள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்பட முடியாமையினால் அவர் மூன்று மாத காலம் நிறைவடைவதற்கு முன்னதாகத் தனது நியமனத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். குட்டிமணி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. உண்மையில், மரணதண்டனைக் கைதியான குட்டிமணி நாடாளுமன்ற உறுப்பினராவதில் சட்டக் குழப்பங்களும் சிக்கல்களும் நிறையவே இருந்தன. ஒரு சட்டத்தரணியான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இதனை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும், ஆனாலும், ஓர் அரசியல் சித்துவிளையாட்டாகவே அவர் இந்த நியமன முயற்சியைப் பார்த்தார் என்று அமிர்தலிங்கத்தை விமர்சிப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். குட்டிமணியை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், அதனைச் சமாளிக்கவே நடைமுறைச் சாத்தியமற்ற இந்த நியமனத்தை அவர் செய்ததாக விமர்சிப்பவர்களும் உளர். ஆனால், அமிர்தலிங்கத்தின் நடவடிக்கைக்கு சார்பாகக் கருத்துரைப்பவர்கள், தமிழர் ஒருவர் நிச்சயம் நடைமுறைச் சாத்தியத்தின்படி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்துவதானது, ஓர் அடையாள ரீதியிலான அம்சமாகவே அமையுமன்றி, அதனால் நேரடி விளைபயன் ஒன்றுமிருக்கப் போவதில்லை. மாறாக, ஏறத்தாழ ஒரு வருடமளவுக்குத் தொடர்ந்து ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற அதிக சாத்தியப்பாடுள்ள ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கு மறைமுகமாகவேனும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால், அதன் மூலம் ஜே.ஆர் அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு ஏதாவதொரு குறைந்தபட்சத் தீர்வையேனும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமிர்தலிங்கம் தரப்பு எண்ணியதால்தான் தமிழர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படவில்லை என்று தமது வாதத்தை முன்வைக்கிறார்கள். இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆகலாமா? எது எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம், தேர்தலில் போட்டியிடும் ஒரே தமிழராகக் களமிறங்கியிருந்தார். இந்த இடத்தில் இலங்கையில், குறிப்பாகத் தமிழர்களிடையே காணப்படும் பொதுவான, தவறான புரிதலொன்றைச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. அதாவது, இலங்கையில் தமிழர் அல்லது சிங்கள-பௌத்தரல்லாத சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது; அல்லது ஜனாதிபதியாக முடியாது என்ற நம்பிக்கை இலங்கையில் பரவலாகக் காணப்படுவதை அவதானிக்கலாம். இந்தத் தவறான நம்பிக்கை விதை கொண்டதற்கு இலங்கை அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தினைப் பற்றிய தவறான புரிதல் ஒரு காரணமாக இருக்கலாம். இலங்கைக் குடியரசானது, பௌத்தத்துக்கு முதன்மை இடத்தை வழங்குவதுடன், புத்தசாசனத்தைக் காப்பதும், வளர்ப்பதும் அதன் கடமையாகும். அதேவேளை, 10 மற்றும் 14(1)(e) சரத்துக்கள் மூலம் ஏனைய மதங்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தல் வேண்டும் என இலங்கை அரசியல் யாப்பின் ஒன்பதாவது சரத்து (2ம் அத்தியாயம்) குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் நோக்கும்போது, இலங்கையில் அரச மதமாக பௌத்தம் ஆகிறது, ஏனைய மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டாலும், அரசியல் அமைப்பின்படி, அவை தொடர்பில் அரசாங்கத்துக்கேதும் கடப்பாடோ, கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமையாகிறது. இந்தச் சரத்தை இலகுவாக நீக்கவோ திருத்தவோ முடியாதபடி அரசியலமைப்பு பாதுகாப்பையும் வழங்குகிறது. அதாவது இந்த ஒன்பதாவது சரத்தை மாற்ற, நீக்க வேண்டுமென்றால் வெறுமனே நாடாளுமன்றில் 3 இல் 2 பெரும்பான்மை மட்டும் போதாது, அத்துடன் சர்வசன வாக்களிப்பு ஒன்றின் மூலம் பெரும்பான்மை பெறப்பட்டு அதைச் ஜனாதிபதி 80 ஆம் சரத்தின்படி சான்றளிக்கும் பட்சத்திலேயே இச்சரத்தை மாற்றவோ, நீக்கவோ முடியும். இந்தச் சரத்துதான் இலங்கையில் பௌத்தரல்லாதவர் ஜனாதிபதியாக முடியுமா என்ற ஐயப்பாடு பலருக்கும் எழுவதற்குக் காரணமாக இருக்கும். நிச்சயமாக பௌத்தரல்லாத ஒருவர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் ஜனாதிபதியாக முடியும், அது தொடர்பில் எந்தக் கட்டுப்பாடுமில்லை. 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் கீழ் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டது முதல் கடைசியாக 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டது வரை சில தமிழர்களும் முஸ்லிம்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஆக அரசியலமைப்பில், பலரும் எண்ணுவதுபோன்ற, ஒரு தடையிருந்தால் எவ்வாறு இவர்களது வேட்புமனு ஏற்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள்? இந்தத் தர்க்கத்தைப் புரிந்தாலே அத்தகைய நம்பிக்கை பிழை என்பது தெரிந்துவிடும். ஆனால், இனவாரியாகப் பிளவுபட்ட இலங்கையின் வாக்குவங்கியைக் கருத்தில் கொள்ளும்போது, சிறுபான்மையினத்தவர் ஜனாதிபதியாவது வாக்கு வங்கியரசியலில் நடைமுறைச் சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், அதற்கு அரசியலமைப்பு ரீதியிலான தடை எதுவுமில்லை. ஜனாதிபதித் தேர்தல் நடைமுறை முதலாவது ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிய விவரங்களைக் காண்பதற்கு முன்பதாக, ஜனாதிபதித் தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது, ஜனாதிபதி எவ்வாறு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார் என்று பார்ப்பது சாலப் பொருத்தமாகும். இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசின் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் 94 ஆவது சரத்தும் அதன் உப பிரிவுகளும் நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றி விபரிக்கின்றது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒற்றைமாற்று (தனிமாற்று) வாக்கு முறைப்படி நடாத்தப்படும். இதன் பிரகாரம் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்குக் குறைவாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது முதலாவது மற்றும் இரண்டாவது விருப்பத்தெரிவுகளைக் குறித்து வாக்களிக்கலாம். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுமிடத்து மூன்றாவது விருப்பத்தெரிவையும் சேர்த்து வாக்களிக்கலாம். உதாரணமாக, அ,ஆ,இ என மூன்று நபர்கள் போட்டியிடுமிடத்து வாக்காளர்கள் தாம் விரும்பியவர்களுக்கு முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புவாக்குகளை விருப்ப வரிசையில் அளிக்கலாம். வாக்குகளின் எண்ணிக்கையில் முதலாவதாக முதன்மை விருப்பு வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். அதில் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக யார் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார். இலங்கையில் இதுவரை நடந்த சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் முதல்விருப்பெண்ணிக்கையிலேயே செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப்பெற்றே ஜனாதிபதிகள் தெரிவானார்கள். ஒருவேளை எந்த வேட்பாளரும் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 வீதம் அல்லது அதற்கு மேல் பெறாதவிடத்து, முதல் விருப்பு எண்ணிக்கையில் அதிக தொகை வாக்குகள் பெற்ற முதல் இருவர் தவிர்த்த ஏனையோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர். இதன் பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பெற்ற முதல் விருப்பு வாக்குச்சீட்டுக்களிலிருந்து, போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது இரண்டாம் விருப்பு வாக்கு இருந்தால் அது அவர்களது வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு எண்ணப்படும். மேலும், அதன் பின்னும் எஞ்சியுள்ள போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களின் வாக்குகளில் போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது மூன்றாம் விருப்பு வாக்கு இருந்தால் அவையும் அவர்களது வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்பட்டு பெரும்பான்மை (சாதாரண பெரும்பான்மை) வாக்குகள் பெறுபவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இம்முறையின் பின்னும் இருவரும் சம அளவான வாக்குகள் பெற்றிருந்தால் இருவரில் ஒருவருக்கு மேலதிக வாக்கு ஒன்று வழங்கப்படும். அந்த வாக்கு யாருக்கு வழங்கப்படும் என்பதை ஒரு ‘லொத்தர்’ (திருவுளச்சீட்டு) மூலம் தீர்மானிப்பார்கள். அந்த ஒரு வாக்கைப் பெற்றவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். இதுதான் 1978 இலிருந்து இலங்கையில் நடைமுறையிலிருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் படியிலான ஜனாதிபதித் தேர்தல் முறை. ஜே. ஆரை ஆதரித்த தொண்டா தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நேரடியான மற்றும் வெளிப்படையான ஆதரவினைப் பெற ஜே.ஆர் முயன்றிருந்தாலும் அதனை அவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜே.ஆருக்கு வெளிப்படையாக முழுமையான ஆதரவினைத் தந்தது. ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த சௌமியமூர்த்தி தொண்டமான் 1982 ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு முழுமையான ஆதரவினைத் தந்தார். இணக்க அரசியல் என்பதிலும், இணக்க அரசியலூடாகத் தன்னுடைய மக்களுக்குத் தேவையான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்பதிலும் சௌமியமூர்த்தி தொண்டான் தெளிவாக இருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் அதனது ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவவுடனும் தொண்டமானுக்கு ஓரளவு கசப்பான உறவே இருந்தது எனலாம். இதற்கு 1972 இல் பெருந்தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்டபோது நடைபெற்றவையும் ஒரு காரணமாக இருக்கலாம். பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது, ஹெக்டர் கொப்பேகடுவ “தொண்டமான் ஓர் இந்தியன்; அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்போம். இலங்கை விவகாரத்தில் என்ன செய்யவேண்டும் என்று அவர் சொல்லித்தர அனுமதிக்க முடியாது” என்று பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே, ஹெக்டர் கொப்பேகடுவவை ஆதரிப்பது என்பது சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு சுமுகமானதொன்றாக இருந்திராது. மேலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி போல, தேர்தலைப் புறக்கணிக்கும் அரசியல் செய்வதும் தொண்டமானின் அரசியல் பாணிக்கு உவப்பானதொன்றல்ல. எதிர்ப்பரசியல் மீது அவருக்குப் பெரிதான நாட்டம் ஒருபோதும் இருந்ததில்லை. எதிர்ப்பு என்பதைச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரு குறுங்கால நடவடிக்கையாகக் கைக்கொள்ளும் தொழிற்சங்கவாதியாகவே அவர் இருந்தாரேயன்றி, விடுதலைப் போராட்டம், உரிமைகளுக்கான நீண்டகால எதிர்ப்பரசியல் என்பவற்றின் மீது அவருக்கு நம்பிக்கையிருந்ததில்லை. ஆனாலும், தார்மீக ரீதியான ஆதரவினைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் அவ்வப்போது வழங்கியமையையும் மறுக்க முடியாது. தொண்டமான், ஜே.ஆருக்கு ஆதரவு வழங்கியமை, ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். மலையகப் பகுதிகளில் இடம்பெற்ற பிரசாரங்களின்போது, தொண்டமான் மீதான தனிநபர் தாக்குதல்களை கொப்பேகடுவ நிகழ்த்தினார். “எங்களது அரசாங்கம் தொண்டமானின் பெருந்தோட்ட சாம்ராச்சியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அப்போது அமைதியாக இருந்த தொண்டமான் இப்போது அமைச்சர் என்ற கோதாவில் பெரும் ஆட்டம் ஆடுகிறார். நான் ஜனாதிபதியானால், அவரிடம் எஞ்சியுள்ள பெருந்தோட்டங்களும் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவரை இந்நாட்டிலிருந்தும் வெளியேற்றுவோம்” என்று கொப்பேகடுவ ஆவேசம் காட்டினார். இது இவ்வாறிருக்க, ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் தமிழருக்கெதிரான அநீதிகளும் வன்முறைகளும் அதிகரித்திருந்த நிலையில், வடக்கு-கிழக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு சாதகமான அலையொன்று ஏற்பட்டிருந்தது. ( அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/192238/ம-தல-வத-ஜன-த-பத-த-ர-தல-ம-தம-ழ-அரச-யல-ம-#sthash.p12GlbXZ.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted March 6, 2017 Author Share Posted March 6, 2017 (edited) முதலாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் தெரிவு - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?- 82 குட்டிமணி என்று அறியப்பட்ட செல்வராஜா யோகசந்திரனை தமது கட்சியில் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமித்தமையை நியாயப்படுத்தி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது காந்திய சிந்தனையான அஹிம்சைக் கோட்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. மாறாக வெறுமனே வசதிக்காக அஹிம்சையை ஆதரிக்கவில்லை. குட்டிமணி ஏதேனும் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பின் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தன்னை அதிலிருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறது. அஹிம்சை மீதான எமது உறுதியான பற்றுறுதி மாறாத போதிலும், நாம் பின்வரும் விசேசத்துவம் மிக்க காரணங்களுக்காக குட்டிமணியை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கும் முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதலாவதாக, குட்டிமணியின் நியமனமானது நாடெங்கிலும் அவ்வப்போது அரசாங்க முகவர்களான பொலிஸாரினாலும் அரசாங்கப் படைகளினாலும் தமிழ் மக்கள் மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரசாங்க பயங்கரவாதத்துக்கு எதிரான எதிர்ப்புக்குரலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது. மேலும், எல்லா நியாயங்களுக்கும் முரணாக ஜூரி முறை வழக்காடலை நிராகரிக்கும், நீண்ட தடுத்துவைப்பை ஏற்படுத்தும், ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளும், அதற்காக தமிழ் இளைஞர்களைப் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கும் கொடூரச் சட்டமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானதொரு அடையாள நடவடிக்கையாக இந்நியமனத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது. அத்தோடு, குட்டிமணி மற்றும் ஜெகன் மீது விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான குரலாகவும் இந்நியமனத்தைப் பார்க்கிறோம். மேலும், ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதற்காக பனாகொடை இராணுவ முகாம், ஆனையிறவு இராணுவ முகாம் மற்றும் குருநகர் இராணுவ முகாம் ஆகியவற்றில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களுக்கு எதிரான குரலாகவும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்த நியமனத்தைக் காண்கிறது. மேலும், தமிழ் இளைஞர்கள் அனைவரையும் அரசியல் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கை எதிர்த்து அரசாங்கத்துக்கு நாம் வழங்கும் அழுத்தமாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இந்நியமனத்தைக் காண்கிறது’ என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அந்த அறிக்கையில் மேலும், 1971 ஜே.வி.பி கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பின்பு விடுதலை செய்யப்பட்டதைச் சுட்டிக் காட்டியதுடன் தமிழ் இளைஞர்கள் அதற்கு முரணான, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது. குட்டிமணியின் நாடாளுமன்ற நியமனத்துக்கான இந்த நியாயங்கள் ஒரு வலுவான அடையாளபூர்வ எதிர்ப்பை சுட்டிநிற்கிறது. இது வரவேற்கத்தக்கதொன்றே. ஆனால், குட்டிமணியை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நிறுத்தியிருக்குமானால், அது அடையாள எதிர்ப்பு என்பதற்கு, இன்னும் வலுச்சேர்த்திருப்பதுடன், தமிழ் மக்கள் மீது ஏவப்பட்டிருந்த அரசாங்க பயங்கரவாதத்துக்கு எதிரான தமிழ் மக்களின் ஏகோபித்த குரலைப் பதிவுசெய்வதற்கான வாய்ப்பாகவும் இருந்திருக்கும். ஆனால், அதனைச் செய்வதற்கு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தவறிவிட்டது. ஹெக்டர் கொப்பேகடுவ 1982 ஒக்டோபர், ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கான தெரிவு என்பது சிக்கலானாதாகவே இருந்தது. நிச்சயமாக தமிழ் மக்களுக்கெதிராக கலவரம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பெரும் அநீதிகளைக் கட்டவிழ்த்துவிட்ட ஜே.ஆரை ஆதரிப்பதென்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏற்புடைய தெரிவாக இருக்கவில்லை. பிரதான மாற்றாக இருந்த தெரிவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவ. ஹெக்டர் கொப்பேகடுவ 1970-1977 வரை சிறிமாவோ ஆட்சியில் விவசாய மற்றும் காணி அமைச்சராக இருந்தவர். சிறிமாவின் காலத்தில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற அத்தனை அநீதிகளையும் தமிழ் மக்கள் மறக்கவில்லை. ஆனால், சிறிமாவின் மானியக் கொள்கைகள், குறிப்பாக விவசாய மானியங்கள் வடக்கு-கிழக்கு விவசாயிகளிடையே பெரும் ஆதரவுபெற்ற ஒன்றாக இருந்தது. ஜே.ஆரின் ஆட்சியில் மானியங்கள் மற்றும் விவசாய உதவிகள் கணிசமாகக் குறைந்திருந்தன. இதனைத் தனக்குச் சாதகமான பிரசார யுக்தியாக ஹெக்டர் கொப்பேகடுவ கைக்கொண்டார். ஜே.ஆரின் ஆட்சியில் குறைக்கப்பட்ட மானியங்கள் மற்றும் விவசாய உதவிகளைத் தான், ஜனாதிபதியானால் மீள அறிமுகப்படுத்துவேன் என்று ஹெக்டர் கொப்பேகடுவ முழங்கினார். ஜே.ஆருக்கு எதிரான தமிழர்களின் அலையைத் தனக்குச் சாதகமாக்க ஹெக்டர் கொப்பேகடுவ திட்டமிட்டார். அதன்படி, தமிழ் மக்கள் பெரிதும் வெறுத்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அவர் முன்வைத்தார். தான் ஜனாதிபதியானால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். அத்தோடு 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பும் இல்லாதொழிக்கப்பட்டு, மீண்டும் 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று அவர் அறிவித்தார். இது பற்றிக் கூட்டமொன்றில் பேசும்போது, “ஒரு தனிநபரிடம் அதிகாரங்களைக் குவித்திருக்கும் இந்த அரசியலமைப்பு எங்களுக்கு தேவையில்லை. நாம் நாடாளுமன்ற அதிகாரமுறைக்கு மாறுவோம். இந்த அரசியலமைப்பின் கீழ் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் சுதந்திரமாகப் பேச முடியாது. அப்படிச் செய்தால் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இழக்கப்பட்டுவிடும். நாம் இந்த அரசியலமைப்பைக் கிழித்தெறிய வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார். அது மட்டுமல்லாது, வடக்கில் மட்டும் மூன்று நாள் சுற்றுப் பயணம் நடத்தி பதினான்கு கூட்டங்களில் அவர் பேசினார். வடக்கில் அவர் சென்ற இடத்திலெல்லாம் கொஞ்சம் எழுச்சியான வரவேற்புக் கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை. அது அவருக்கு ஆதரவான எழுச்சி என்பதை விட ஜே.ஆருக்கு எதிரான எழுச்சி என்பதுதான் உண்மை. ஜே.ஆருக்கு எதிராக மேடைகளில் கடுமையாக முழங்கினார் ஹெக்டர் கொப்பேகடுவ. “ஜே.ஆர் தன்னை நெப்போலியன் என்கிறார். ஆம், இது வோட்டர்லூ சமர். நான் வெலிங்டன் பிரபு. இந்த நெப்போலியனை அடித்து விரட்டப்போகும் வெலிங்டன் பிரபு” என்று மேடைகளில் அவர் கர்ஜித்தார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னுடைய வெளிப்படையான ஆதரவினை ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஜே. ஆர் வடக்கு-கிழக்கில் தனக்கு எதிரான அலை காணப்படுவதை ஜே.ஆர் அறிவார். அதனால் அவர் வடக்கு பற்றி, தேர்தலில் பெரும் அக்கறை கொள்ளவில்லை. மாறாக மலையகம் மீது அவர் அதிக கவனம் செலுத்தினார். சௌமியமூர்த்தி தொண்டமானின் வெளிப்படையான ஆதரவு ஜே.ஆருக்குப் பெரும் பலமாக அமைந்தது. வடக்கைப் பொறுத்தவரையில் ஒரேயொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மட்டுமே ஜே.ஆர் பங்குபற்றினார். 1977 தேர்தலுக்குப் பிறகு ஜே.ஆர் வடக்குக்கு விஜயம் செய்த முதல் தடவை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜே.ஆரின் ஐந்து வருட ஆட்சி, ஜே.ஆர் தொடர்பான தமிழர்களின் நிலைப்பாட்டில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. ஜே.ஆரின் யாழ் வருகையைப் புறக்கணித்துக் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும்படி தமிழீழ விடுதலை முன்னணியும் தமிழீழ மாணவர் பொது ஒன்றியமும் வடக்கு வாழ் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ‘தமிழர் நாம் வந்தாரை வரவேற்கும் பண்புடையவர்கள். ஆனால் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை நாம் வரவேற்கமாட்டோம்’ என்ற தொனியிலான கோசங்கள் ஆங்காங்கே ஒலித்தன. ஜே.ஆர் வடக்கு மக்களுக்குச் சுருக்கமான செய்தியைச் சொன்னார். “நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். ஆனால், கட்டாயம் சென்று வாக்களியுங்கள். அது மக்கள் இறைமையைக் காப்பாற்றுவதற்கு அவசியமானது. தேர்தலைப் புறக்கணிக்காதீர்கள்” என்றார். இது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தலைப் புறக்கணிக்கும் அழைப்புக்கு எதிர்மாறானதாக அமைந்தது. தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிப்பதானது ஜே.ஆருக்கு சாதகமாகவே அமையும் என்பதை ஜே.ஆர் அறிவார். தமிழ் மக்களிடம் தான் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம் என்று சொன்னால், அவர்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்று ஜே.ஆர் எண்ணியிருக்கலாம். அதுதான் ஜே.ஆர்! ஆனால், தமிழ் மக்கள் வித்தியாசமானவர்கள் என்பதை அவர் உணரத்தவறி விட்டார். 1982 ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி என்ற தொனிப்பொருளை ஜே.ஆர் முன்னிலைப்படுத்தினார். ஐந்து வருட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளையும் முன்னேற்றங்களையும் தனது ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் முன்னிறுத்த ஜே.ஆர் தவறவில்லை. இதே கருத்தைத்தான் தனிப்பட ஒவ்வொரு குடிமகனுக்கும் கடிதமாக எழுதினார். நாட்டின் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்கும் தனக்கு வாக்களிக்குமாறு ஜே.ஆர் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டார். றோஹண விஜேவீர மறுபுறத்தில் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா, ஜே.ஆரின் எதேச்சாதிகாரத்துக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டார். ஜே.ஆரை ஒரு மோசமான சர்வாதிகாரியாக அவர் சித்தரித்தார். கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா ஒரு பழுத்த இடதுசாரித் தலைவராக இருந்தாலும் இடதுசாரி அரசியல்தளம் இப்போது லங்கா சமசமாஜக் கட்சியிடமிருந்து றோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வீ.பியிடம் மாறியிருந்தது. பெரும் இளைஞர் படையொன்றை நாடெங்கிலும் ஜே.வீ.பி கொண்டிருந்தது. இத்தனை வருடங்களில் லங்கா சமசமாஜக் கட்சியோ, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியோ சாதிக்கமுடியாததை ஜே.வீ.பி சாதித்திருந்தது. 1982 ஜனாதிபதித் தேர்தலில் புதிதாக பதிவுசெய்யப்பட்ட கட்சியான ஜே.வீ.பி (மக்கள் விடுதலை முன்னணி) சார்பில் களமிறங்கியிருந்த றோஹண விஜேவீர, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான கட்சிகளுக்கெதிரான மாற்றாக ஜே.வீ.பியை முன்வைத்து, தனது பிரசாரத்தை முன்னெடுத்தார். “‘ஐக்கிய தேசியக் கட்சி இந்தநாட்டை 19 வருடங்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 16 வருடங்களும் ஆட்சி செய்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து இந்தக் கட்சிகள் வெகுசனங்களை ஏமாற்றியிருக்கின்றன. இரண்டின் ஆட்சியும் அநீதியும் அநியாயமும் இலஞ்சமும் ஊழலும் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. அவற்றின் ஆட்சியில் சாமான்யர்களுக்கான நீதி மறுக்கப்பட்டது. நான் ஜனாதிபதியானால் இந்த நிலையை மாற்றுவேன்” என்று அவர் முழங்கினார். கிராமப்புற சிங்கள இளைஞர்களிடையே மீண்டும் ஓர் எழுச்சியை றோஹண விஜேவீர விதைத்துக்கொண்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளின் நேரடிப் பயன்கள் மக்களை உடனடியாகச் சென்றடையாத வேளையில், மக்களிடம் எழுந்திருந்த அதிருப்தியை றோஹண விஜேவீரவும் ஜே.வீ.பியும் நன்றாக அறுவடை செய்துகொண்டிருந்தது. குமார் பொன்னம்பலம் இவை இவ்வாறிருக்க, மறுபுறத்தில் ஒரே தமிழனாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியிருந்த குமார் பொன்னம்பலம் தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தித் தனது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவைக் குமார் பொன்னம்பலம் கடுமையாக விமர்சித்தார். தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தல் என்பது ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு ஆதரவாகவே அமையும். ஆகவே, ஜே.ஆரின் நலனுக்காகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மறைமுகமாக செயற்படுகிறது என்று குமார் பொன்னம்பலம் தனது குற்றச்சாட்டினை முன்வைத்தார். ( அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/192737/ம-தல-வத-ஜன-த-பத-த-ர-தல-ல-தம-ழர-கள-ன-த-ர-வ-#sthash.kMnzigkf.dpuf Edited March 6, 2017 by நவீனன் Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted March 13, 2017 Author Share Posted March 13, 2017 1982 ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் மக்களது எதிர்ப்பை காட்ட ஒரு வாய்ப்பு 13-03-2017 02:08 PM Comments - 0 Views - 152 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 83) என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழரசியலின் இருபெரும் பாசறைகள் இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில், வடக்கு,கிழக்கைப் பொறுத்தவரை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற இருபெரும் பாசறைகள் உருவாகியிருந்தமையை நாமறிவோம். காலத்தின் தேவை கருதி, 1972 இல் அப்பாசறைகளின் பெரும் தலைமைகளாக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலமும் சா.ஜே.வே.செல்வநாயகமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்ற ‘கூட்டணியில்’ ஒன்றிணைந்தனர். இது தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில் புரட்சிகரமான, புதிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. தமக்குள் பிரிவுகள் இருக்கும்போது, தமிழர்களின் ஒருமித்த குரல் பலவீனமடையும் என்பதை அந்தத் தலைமைகள் உணர்ந்திருக்கலாம். ஆகவே, தமிழர்களுக்கான ஒருமித்த பலமான குரலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அவர்கள் உருவாக்கினார்கள். ஆனால், இதன் உருவாக்கம் அந்தப் பெரும் தலைமைகளின் அந்திமகாலத்தில் உருவானது. இந்தக் கூட்டணியை முழுமையாக வழிநடத்த காலம் அவர்களை அனுமதிக்கவில்லை. அடுத்தடுத்து இயற்கையெய்திய அந்தத் தலைமைகளுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சி சார்பிலான தலைமையை அமிர்தலிங்கமும் தமிழ் காங்கிரஸ் சார்பிலான தலைமையை எம்.சிவசிதம்பரமும் கூட்டணிக்குள் ஏற்றுக்கொண்டனர். இந்தத் தலைமைகளுக்கும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் வாரிசான குமார் பொன்னம்பலத்துக்குமிடையில் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருந்தமை வௌ்ளிடைமலை. குமார் பொன்னம்பலத்தைத் தமது தலைமைப் பதவிக்கான சவாலாக இவர்கள் கண்டிருக்கலாம். எதையும் வௌிப்படையாகவும் துணிவாகவும் தான் எடுக்கின்ற முடிவு எதுவானாலும் அதனைப் பசப்பு வார்த்தைகள் இன்றி, நடிப்புகள், புரட்டுகள் இல்லாமல் நேரடியாகவே சொல்லவும் செய்யவும் கூடியவராகக் குமார் பொன்னம்பலம் இருந்தார். இவருடைய இந்தத் தன்மைதான், இவரது உயிர் பறிக்கப்படுவதற்கும் காரணமானது என்றால் மிகையில்லை. அதேபோல், இந்த நேர்மைதான் அவருக்கு அரசியலில் எந்த வெற்றிகளையும் பெற்றுத்தரவில்லை என்ற துரதிஷ்டத்தையும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியதாகிறது. 1977 தேர்தலில் குமார் பொன்னம்பலத்தை அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் ஓரங்கட்டினார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் மறைவுக்குப் பின் வெற்றிடமாக இருந்த யாழ்ப்பாணத் தொகுதியை குமார் பொன்னம்பலத்துக்கு வழங்குவதில் எந்தத் தடையும் இருந்திருக்க முடியாது. புதியதாக ஒருவரை அங்கு களமிறக்குவதைவிட, குமார் பொன்னம்பலத்தை அங்கே களமிறக்குவது எந்த வகையில் குறைபாடான ஒன்றல்ல; ஆனால், அமிர்தலிங்கமும் எம்.சிவசிதம்பரமும் யாழ்ப்பாணத் தொகுதியை குமார் பொன்னம்பலத்துக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை. வேறெந்தத் தொகுதியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதை ஏற்றுக்கொள்ளக் குமார் பொன்னம்பலம் தயாராக இருக்கவில்லை. நியாயமான காரணங்களின்றி யாழ்ப்பாணத் தொகுதியில் தான், போட்டியிடுவது மறுக்கப்பட்டதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் பின்னர் குமார் பொன்னம்பலம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து வௌியேறி, மீண்டும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸுக்கு உயிரூட்டுகிறார். மீண்டும் தமிழ் அரசியல் இரண்டு பாசறைகளாகப் பிரிகிறது. இம்முறை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் விடுதலைக் கூட்டணி என்ற இரண்டு பாசறைகள். இதன் தொடர்ச்சியாகத்தான் 1982 ஜனாதிபதித் தேர்தலில் குமார் பொன்னம்பலம் களமிறங்கியமையைப் பார்க்க வேண்டியதாகிறது. ஜனாதிபதித் தேர்தலும் குமார் பொன்னம்பலமும் 1982 ஓகஸ்ட் முதலாம் திகதி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் வௌியிட்டிருந்த அறிக்கையில், ‘தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பாகக் களமிறங்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலை நாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைப் பறைசாற்றத்தக்க மக்களாணையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்ற வேண்டுகோளை முன்வைக்கிறார்.ஆனால், இதனைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஏற்றுக்கொள்ளவில்லை. ஓகஸ்ட் நான்காம் திகதி நடந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான குமார் பொன்னம்பலத்தை ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சி சார்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் களமிறக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் “இது ஓர் அரசியல் நாடகம்; குமார் பொன்னம்பலம் தன் தனிப்பட்ட பெருமைக்காக தேர்தலில் போட்டியிடுகிறார். உண்மையில், அவர் களமிறங்குவதானது ஜே.ஆருக்கு சாதகமானது. ஜே.ஆருக்கு எதிரான வாக்குகள் மற்றைய பிரதான வேட்பாளருக்குப் போகாமல் சிதறடையச் செய்வதற்கான முயற்சி” என்ற தொனியில் விமர்சித்தார். குமார் பொன்னம்பலம் தேர்தலில் போட்டியிடுவது ஜே.ஆருக்கே மறைமுகமாகச் சாதகமானது என்ற அமிர்தலிங்கத்தின் தர்க்கம் சரியென்றால், அதேதர்க்கத்தின்படி, அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரியதும் மறைமுகமாக ஜே.ஆருக்கே சாதகமானதாகிறது. ஏனென்றால், தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிப்பது கூட, ஜே.ஆருக்கு எதிரான வாக்குகள், ஜே.ஆருக்கு மாற்றான வேட்பாளர்களுக்குச் செல்வதைத் தடுக்கிறது! குமார் பொன்னம்பலத்தின் கோரிக்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தன்னுடைய நிலைப்பாட்டினைக் காரண காரியங்களுடன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குமார் பொன்னம்பலம் மிகத் தௌிவாக விளக்கியிருந்தார். ‘தமிழ் மக்களின் இறைமை’ என்பது குமார் பொன்னம்பலம் முன்னிறுத்திய தொனிப்பொருளாக இருந்தது. 1971 இல் சிறிமாவோவின் ஆட்சியில் முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்ட போது, அது ‘சுதந்திரம் மற்றும் இறைமையுள்ள இலங்கையை’ ஸ்தாபித்தமையானது தமிழர்களின் இறைமையை கேள்விக்குள்ளாக்கியது என்று குறிப்பிட்ட அவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கவில்லை. ஆகவே, தமிழர்களின் ஆதரவின்றி, சம்மதமின்றி இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் வாதிட்டாலும் பின்னர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், “இலங்கைக் குடியரசுக்கு விசுவாசமாக இருப்போம்” என்று 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுத்தமையானது, கூட்டணியினரின் மேற்சொன்ன வாதத்தைத் தோற்கடிப்பதாக இருக்கிறது என்று குமார் பொன்னம்பலம் சுட்டிக் காட்டினார். மேலும், இதே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, 1977 பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசத்தின் இறைமையையும் சுயநிர்ணயத்தையும் முன்னெடுக்கத் தனிநாட்டுக்கான மக்களாணையைக் கோரியது. 1972 இல் ‘இலங்கையர்’ என்ற ஒன்றுபட்ட இறைமையின் கீழ் தமிழர் இறைமையைத் தொலைக்க வைத்தவர்கள் 1977 இல் மீண்டும் ‘தமிழர் இறைமையை’ நிலைநாட்ட மக்காளாணை கோரினார்கள். அப்படியானால் 1972 இல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தமிழர்களுக்கு செய்தது பெருந்துரோகமில்லையா? என்று குமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பினார். 1971- 1972 இல் தாம் இழைத்த தவறையும் தமது கொள்கைக்கே தாம் செய்த துரோகத்தையும் உணர்ந்துகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 1978 இன் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்கத்தை முற்றாகப் புறக்கணித்தது. ஆனால், மீண்டும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் கீழும் குறித்த அரசியலமைப்புக்கு விசுவாசமாகவும் குறித்த அரசியலமைப்பைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தொடர்கிறார்களே என்று குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். தாம் குறித்த அரசியலமைப்புகளின் கீழ் உறுதிமொழி எடுத்தமையை நியாயப்படுத்த, “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், லங்கா சமசமாஜக் கட்சியானது, சோல்பரி அரசியலமைப்பை ஏற்காத போதும், அதன் அங்கத்தவர்கள் அவ்வரசியலமைப்பின் கீழ் உறுதிமொழியை ஏற்றமையைச் சுட்டிக்காட்டித் தமது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்கள்” என்று குறிப்பிட்ட குமார் பொன்னம்பலம், “ஜோன் தவறிழைத்தான்; ராமையா தவறிழைத்தான்; நான் ஏன் தவறிழைக்கக்கூடாது? என்ற ரீதியிலான அர்த்தமற்ற நியாயப்படுத்தல் இதுவாகும்” என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அத்துடன், “லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை என்ற ஒற்றையரசை ஏற்றுக்கொண்ட கட்சி. அவர்கள் உறுதிமொழி எடுத்தமையினால் பெரும் முரண்பாடுகள் ஏதுமில்லை. ஆனால், இங்கு இரண்டு அரசுகள் உண்டு. ஈழம் எனும் தனியரசை ஸ்தாபிப்போம் என்று சொன்னவர்கள் இலங்கையரசின் அரசியலமைப்பை ஏற்று, அதன் கீழ் உறுதிமொழியெடுத்தமை தவறு” என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், “1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் ஐந்தாம் சரத்தானது, இலங்கையின் ஆள்புலமானது 24 நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியது என்கிறது. அப்படியானால் 24 மாவட்டங்களும் சேர்ந்ததுதானே இலங்கை? அப்படியானால் வடக்கு,கிழக்கிலுள்ள மாவட்டங்களிலுள்ள பெரும்பான்மை மக்கள் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பினை உருவாக்க, அல்லது ஏற்க அல்லது நடைமுறைப்படுத்த எந்தவித மக்களாணையையும் வழங்கவில்லையே. அப்படியானால், இம்மாவட்ட மக்கள் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பதற்கு ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமல்லவா? இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயமல்லவா” என்று அவர் கேள்வியெழுப்பினார். “இலங்கையின் அரசியலானது எந்தவித ஜனநாயக அடிப்படையுமின்றி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதாவது தமிழ் மக்களின் அனுமதியின்றி, இலங்கையின் அரசியலானது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜனாதிபதித் தேர்தலானது தமிழ் மக்கள் தங்களுடைய மக்களாணையை வழங்குதற்கு ஓர் அரிய சந்தர்ப்பமாகும். தமிழ் வேட்பாளருக்கு தமது வாக்கினை அளிப்பதன் மூலம் தமிழ் மக்கள் தாம் தம்மீது தமது விருப்பமின்றித் திணிக்கப்பட்ட அரசியலமைப்பை நிராகரிக்கும் மக்களாணையை வழங்க முடியும்” என்று குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். அத்தோடு, “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியே தமிழர்களின் பெரும்பலம் கொண்ட கட்சியென்பதனால், அவர்களை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அவர் மீள வலியுறுத்தியதுடன், வடக்கு, கிழக்கு தமிழர்களின் 90 சதவீத ஆதரவு இருக்கிறது என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சொல்கிறது; அப்படியானால் அந்த ஆதரவுடனும் ஏனைய வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் ஆதரவுடனும் மேலும் மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடனும் தமிழ் பேசும் மக்கள் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பை நிராகரிக்கிறார்கள் என்ற உறுதியான மக்களாணையைப் பெற இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கோரினார். முத்தாய்ப்பாக, “இது தமிழர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவது பற்றிய விடயமல்ல; மாறாக தமிழ் என்ற அடையாளம் பற்றிய முக்கியமான கேள்வி” என்று குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். குமார் பொன்னம்பலம், மற்றும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகிய இருவரின் அரசியல் வழிமுறைகள் வேறுபட்டிருந்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது. குமார், கொள்கை வழியில் உறுதியாக இருந்தார். அதுதொடர்பில் எந்தச் சமரசத்துக்கும் அவர் தயாராக இருக்கவில்லை. தமிழர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை முதலில் உறுதிசெய்து கொள்ளவேண்டும்; அதுவே முதன்மையானது என்று அவர் கருதினார். அவரைப் பொறுத்தவரையில், அரசியல் சமரசங்களெல்லாம் இரண்டாம் பட்சமாகவே இருந்தது. அமிர்தலிங்கத்தைப் பொறுத்தவரையில், தனிநாட,இ தனியரசு என்பது தொடர்பில் அவர் எவ்வளவு தூரம் உறுதியுடன் இருந்தார் என்பது சந்தேகத்துக்குரியது. இலங்கை அரசாங்கத்துடன் சமரசம் செய்து, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்ற அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக்கொள்ளும் சமரசத் தீர்வு என்ற பாதையிலேயே அவர் பயணித்தார். இந்த அரசியல் முரண்பாடு, தமிழர் அரசியலில் இன்று வரை தொடர்கிறது. தமிழ் மக்கள் கூட, இந்த விடயத்தில் தௌிவானதொரு முடிவினை வழங்கமுடியாத நிலையில் இருக்கிறார்கள். காரணம், சமரச அரசியலைக் கடைப்பிடிப்பவர்கள் கூடத் தேர்தல் காலத்தில் சமரச அரசியலுக்கு மக்களாணையைக் கோருவதில்லை. மாறாகத் தேர்தலின்போது, அடிப்படையான கொள்கையையே மக்கள் முன்கொண்டு செல்கிறார்கள். தேர்தலுக்குப்பின், அதிலிருந்து விலகி சமரச முகமூடியை அணிந்து கொள்கிறார்கள். அன்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பொதுத் தேர்தலின்போது, தமிழீழம் அமைக்க மக்களாணையைக் கேட்டது. தேர்தலின் பின்னர் மாவட்ட அபிவிருத்திச் சபைகளூடான அதிகாரப் பரவலாக்கல் பற்றியும் சமரச வழித் தீர்வு பற்றியுமே அது கவனம் செலுத்தியது. இதையொத்த நிலையே இன்றும் தொடர்கிறது. இது, சரிபிழை என்ற இரட்டைப்படை நிலைகளில் பார்க்கப்படக்கூடியதொன்றல்ல; ஆனாலும், தமது உண்மையான எண்ணப்பாடுகளையும் நிலைப்பாடுகளையும் தமிழ் மக்களின் முன்னிலையில் சமர்ப்பித்து, மக்களை அதனை ஏற்றுக்கொள்ளச் செய்யும் திராணி, தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லாதிருந்ததனை இது சுட்டி நிற்கிறது. (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/193136/-ஜன-த-பத-த-த-ர-தல-தம-ழ-மக-களத-எத-ர-ப-ப-க-ட-ட-ஒர-வ-ய-ப-ப-#sthash.2TAypMOT.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted March 21, 2017 Author Share Posted March 21, 2017 1982 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 20-03-2017 12:42 PM Comments - 0 Views - 159 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 84) - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) வெற்றியை நோக்கி ஜே.ஆர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாகவே அவசரப்பட்டு, அரசியல் யாப்புக்குத் திருத்தத்தைக் கொண்டுவந்து, ஜனாதிபதித் தேர்தலை ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்கூட்டி நடத்த விளைந்ததே, அதில் அவருக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்று அவர் கருதியதனால் ஆகும். ஜே.ஆருக்குப் போட்டிதரக் கூடிய சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் ஜே.ஆர் அரசாங்கத்தினால் தள்ளப்பட்டிருந்தார். இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவோ, ஜே.வி.பி சார்பில் போட்டியிட்ட ரோஹண விஜேவீரவோ, ஏனைய வேட்பாளர்களான கலாநிதி. கொல்வின் ஆர்.டீ.சில்வாவோ, குமார் பொன்னம்பலமோ, வாசுதேவ நாணயக்காரவோ தனக்குப் போட்டியில்லை என்பதை ஜே.ஆர் நன்கறிவார். உண்மையில் தன்னை எதிர்த்து அறுவர் போட்டியிடுவது, அதிலும் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கும் முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்தனியே போட்டியிடுவது தனக்குச் சாதகமானது என்பதையும் ஜே.ஆர் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார். எதிர்த்தரப்பு வாக்குகள் சிதறுவது தனக்குப் பலம் என்று அவர் அறிவார். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் முறையைப் பொறுத்தவரை, அதில் வெற்றிபெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர் பெறவேண்டியது அவசியமாக இருந்தது. ஆகவே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வகையிலேயே அவர் தனது பிரசாரத்தை முடுக்கிவிட்டிருந்தார். நிச்சயமான ஐக்கிய தேசியக் கட்சி வாக்குவங்கிகளில் அதிக கவனம் செலுத்தினார். பொருளாதார அபிவிருத்தி, அபிவிருத்தியை நோக்கிய எதிர்காலம் என்ற தொனிப்பொருட்களை மக்கள் முன் கொண்டு சென்றார். கனகச்சிதமான முறையில் தன்னுடைய தேர்தல்ப் பிரசாரத்தை முன்னெடுத்தார். இனப்பிரச்சினை, அதன் தீர்வு இது பற்றியெல்லாம் அவர் அலட்டிக்கொள்ளவே இல்லை. தன்னுடைய நிச்சயமான வாக்கு வங்கியை பாதிக்கும் எந்த விசயத்தையும் அவர் செய்ய விரும்பவில்லை. காலம் ஒத்துழைக்கவில்லை ஏறத்தாழ ஒரு வருட காலமளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குமிடையே பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றாலும் அவற்றால் எந்தச் சாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை. இதைப் பற்றி தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடும் இலங்கையின் குறிப்பிடத்தக்க முக்கிய பத்திரிகை ஆசிரியர்களுள் ஒருவரான மேவின் டீ சில்வா, ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மிகத் திறமையான அரசியல்வாதிகள். ஆனால், நேரம் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டது என்றே சொல்லவேண்டும். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தேர்தலைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியதும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கோ, தமிழர்களுக்கோ தீர்வு வழங்குவது என்பதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாத விடயமாகிப் போய்விட்டது. எந்த (சிங்கள) ஜனாதிபதியோ, பிரதமரோ, தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழ்த் தரப்புக்கு சலுகைகளை வழங்க முன்வரமாட்டார்கள். அதுவும் குறிப்பாக வரலாற்று ரீதியில் சிக்கல்கள் நிறைந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பிலான சலுகைகளை வழங்குவது என்பது, அதுவும் பகிரங்கமாக வழங்குவது நடைமுறைச் சாத்தியமற்றது’ என்று இலங்கையின் இன- மைய வாக்கு வங்கி அரசியலின் அசிங்கமான யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டுகிறார். இதன் விளைவாகத்தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் இது, குமார் பொன்னம்பலத்துக்கும் செல்வநாயகம், சந்திரஹாசனுக்கும் ஓர் இடைவெளியை உருவாக்கித் தந்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். ஜே.ஆரின் பிரசார வியூகம் ஜே.ஆரின் வெற்றிபற்றி எவருமே சந்தேகம் கொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது உண்மை, ஆனால், அந்த அதிருப்தி ஜே.ஆரைத் தோற்கடிக்கப் போதுமானதாக இருக்கவில்லை அல்லது, அந்த அதிருப்தியை ஜே.ஆரைத் தோற்கடிக்கும் சக்தியாக மாற்றும் இயலுமை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இருக்கவில்லை. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், இந்தத் தேர்தலானது ஜே.ஆருக்கு எதிராகத் தமது எதிர்ப்பைப் பதிவுசெய்தல் என்ற ஒரு கோணத்திலும் குமார் பொன்னம்பலம் வேண்டியது போல, தனிநாட்டுக்கான மக்களாணை என்ற இன்னொரு கோணத்திலும் அணுகப்படவேண்டியதாகவே இருந்தது. ஆனால், தமிழர் பிரதேசங்களிலும், ஜே.ஆரின் வாக்குவங்கி அவ்வளவு மோசமானதாக இருக்கவில்லை. அதுபோல, ஹெக்டர் கொப்பேகடுவவுக்கும் குறிப்பிடத்தக்க ஆதரவு தமிழர் பிரதேசங்களில் இருந்தது. அரசமயமாக்கல், விவசாய மானியங்கள், அரிசி மானியங்கள் உள்ளிட்ட சிறிமாவின் சோசலிஸக் கொள்கைகள் மீது நாட்டம் கொண்ட மக்கள், ஹெக்டர் கொப்பேகடுவவை ஆதரித்தார்கள். இதனைத் தமது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய கருவியாகக் கையாண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர், தமது ஆட்சியில் அரிசி பகிர்ந்தளிப்புக்கான பங்கீட்டு அட்டையை ஒத்த மாதிரி அட்டைகளை அச்சிட்டு அதை மக்களுக்கு வழங்கி, தமது வேட்பாளரான ஹெக்டர் கொப்பேகடுவ வெற்றி பெற்றால் மீண்டும் மானியங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரசாரம் செய்தார்கள். மறுபுறத்தில் தனிநாட்டுக்கான மக்களாணை என்ற குமார் பொன்னம்பலத்தின் கோரிக்கைக்கும் தமிழர் பிரதேசங்களில் ஆதரவு அலை இருந்தது. ஆனால், தமிழரிடையேயான கட்சிப் பாசறைப் பிளவுகள் குமார் பொன்னம்பலத்துக்கு எதிராக இருந்தமையையும் மறுக்க முடியாது. குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்கள் குமார் பொன்னம்பலத்தின் நிலைப்பாட்டை ஆதரித்தாலும், குமார் பொன்னம்பலத்தை ஆதரிக்கத் தயாராக இருக்கவில்லை. இதுதான் கள யதார்த்தம்; ஆனால் தமிழ் மக்களிடையே குமார் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தார் என்பதை மறுக்க முடியாது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தேர்தலைப் புறக்கணித்தல் என்ற முடிவில் தொடர்ந்தும் உறுதியாக இருந்தது. தேர்தல் முடிவுகள் இந்தச் சூழலில் 1982 ஒப்டோபர் 16 ஆம் திகதி தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வந்தன. 1982 ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 6,985 வாக்களிப்பு நிலையங்களில் நடத்தப்பட்ட வாக்களிப்பில், 81,45,015 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 66,02,617 பேர் வாக்களித்திருந்தனர், அதாவது வாக்களிப்பு வீதம் ஏறத்தாழ 81 சதவீதமாக இருந்தது. 1982 ஒக்டோபர் 22 ஆம் திகதி கொழும்பு நகர மண்டபத்திலிருந்து தேர்தல் ஆணையாளரினால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன செல்லுபடியான மொத்த வாக்குகளான 65,22,147 வாக்குகளில் 52.91 சதவீதமான 34,50,811 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளரான ஹெக்டர் கொப்பேகடுவ 39.07 சதவீதமான 25,48,438 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஜே.வி.பி வேட்பாளரான ரோஹண விஜேவீர 2,73,428 வாக்குகளையும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வேட்பாளரும் ஒரேயொரு தமிழ் வேட்பாளருமான குமார் பொன்னம்பலம் 1,73,934 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். மேலும், கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா 58,531 வாக்குகளையும் வாசுதேவ நாணயக்கார 17,005 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். தேர்தல் மாவட்ட முடிவுகளைப் பார்க்கும் போது, ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு அதிகூடிய பெரும்பான்மையாக 63.10 சதவீத வாக்குகள் நுவரெலிய மாவட்டத்தில் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சௌமியமூர்த்தி தொண்டமானின் ஆதரவுக்கு இது நடந்திருக்காது என்பதை ஜே.ஆர் நன்கறிவார். இதேவேளை ஜே.ஆர் ஒரு தேர்தல் மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட அதி குறைந்த வாக்குவீதமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 20.54 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. ஏனைய எல்லா மாவட்டங்களிலும் ஜே.ஆர் 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வீதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தமையுடன், மொத்தம் 22 தேர்தல் மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வீதத்தை ஜே.ஆர் பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஹெக்டர் கொப்பேகடுவவைப் பொறுத்தவரையில் அவர் எந்தமாவட்டத்திலும் பெரும்பான்மையைப் பெறவில்லை. அத்துடன் களுத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெற்ற 44 சதவீத வாக்குகளே ஒரு மாவட்டத்தில் அவர் பெற்றுக்கொண்ட அதிக வாக்குவீதமாகும். வேறெந்த மாவட்டத்திலும் ஜே.ஆரை விட அதிக வாக்குகள் பெறமுடியாத ஹெக்டர் கொப்பேகடுவ, யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 35.46 சதவீத வாக்குகள் பெற்று, ஜே.ஆரை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தார். ரோஹண விஜேவீர, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை விட ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் எட்டு சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வீதத்தையே பெற்றுக்கொண்டார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மட்டும் 14.6 சதவீத வாக்கு வீதத்தைப் பெற்றுக்கொண்டார். மறுபுறத்தில், குமார் பொன்னம்பலத்தைப் பொறுத்தவரை, அவர் மொத்தமாக நாடுமுழுவதும் 1,73,934 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தார். அவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட மொத்தச் செல்லுபடியான வாக்குகளான 2,18,003 வாக்குகளில் 40.03 சதவீதமான 87,263 வாக்குகளைப் பெற்று குமார் பொன்னம்பலம் யாழ். மாவட்டத்தில் முதன்மை இடத்தைப் பெற்றிருந்தார். இரண்டாவது இடத்தை 77,300 வாக்குகளைப் பெற்று ஹெக்டர் கொப்பேகடுவவும், மூன்றாவது இடத்தை 44,780 வாக்குகளைப் பெற்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் பெற்றுக்கொண்டனர். மேலும் வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரை குமார் பொன்னம்பலம் 16.29 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 40.05 சதவீத வாக்குகளைப் பெற்று ஜே.ஆர் முதலிடத்தையும், 39.22 சதவீத வாக்குகளைப் பெற்று குமார் பொன்னம்பலம் இரண்டாவது இடத்த பெற்றிருந்தனர். தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிய குமார் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் புறக்கணிப்புக் கோரிக்கையை மீறித் தமிழ் மக்கள் கணிசமானளவில் தேர்தலில் வாக்களித்ததுடன், குமார் பொன்னம்பலத்துக்கும் கணிசமானளவில் தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகிறது. மொத்தம் 4,93,705 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைப் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் 2,28,613 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அதாவது ஏறத்தாழ 46.31 சதவீதமானோர் தேசிய ரீதியிலான 81 சதவீத வாக்களிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில், இது பெருமளவு குறைவாயினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் கிட்டத்தட்ட தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்றளவிலிருந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் புறக்கணிப்புக்கோரிக்கையை மீறி 46.31சதவீதக வாக்காளர்கள் வாக்களித்திருந்தமையானது, தமிழ் மக்கள் கட்சி விசுவாசத்துக்கு அப்பால் அரசியலில் செயற்பட வல்லவர்கள் என்பதையும் பறைசாற்றி நின்றது. குமார் பொன்னம்பலம் என்ற ஆளுமை தமிழ் மக்களிடையே இந்தத் தேர்தல் மூலம் வலுவூன்றியதுடன், இலங்கைத் தமிழ் அரசியலில் தவிர்க்க முடியாததொரு ஆளுமையாக உருவெடுத்தார். சில விமர்சகர்கள், இது தமிழ் அரசியலில் புதிதாக எழுந்திருந்த ‘ஏகத்துவத்தை’ அல்லது ‘ஒற்றுமை’யை சிதைத்து மீண்டும், இருபாசறை நிலையைத் தோற்றுவிக்கும் என்று தமது விமர்சனத்தை முன்வைத்தார்கள். ஆனால், எந்தக் கடைக்கும், எதிர்க்கடை தேவை என்பது மறுக்கமுடியாத தேவையாகும். அரசியல் ரீதியான ‘தடைகள் மற்றும் சமன்பாடுகளுக்கும்’ (checks and balances), மீளாய்வுக்கும் (scrutiny) இது அவசியமாகிறது. ஏகத்துவம் என்ற பதாகையின் கீழ், தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஏகபோக தனியுரிமையை ஒரு தரப்பு வைத்திருப்பதை விட, அத்தரப்பை தடைகளுக்கும் சமன்பாடுகளுக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தத்தக்க மறுதரப்பு ஒன்று இருப்பதே ஜனநாயக அரசியல் சூழலுக்கு வளம் சேர்ப்பதாக இருக்கும். இத்தகைய வளர்ச்சியாகவே நாம் குமார் பொன்னம்பலத்தின் எழுச்சியைப் பார்க்க வேண்டும். குமார் பொன்னம்பலம் பெற்றுக் கொண்ட தேர்தல் முடிவுகள் பற்றி அமரசிங்கம் தன்னுடைய கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் பெற்றுக்கொண்ட வாக்குகளின்படி, அவர் தமிழ் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்து விட்டார். இந்தச் சக்தியை படுகொலையன்றி வேறெவ்வகையிலும் இல்லாதொழிக்க முடியாது’. 1982 ஒக்டோபர் 23 ஆம் திகதி ‘ட்ரிப்யூன்’ இதழில் அமரசிங்கம் இதனை எழுதியிருந்தார். இன்றிருந்து பார்க்கும் பொழுது, இவை எத்தகைய தீர்க்கதரிசன வார்த்தைகள் என்பது புரிகிறது. குமார் பொன்னம்பலம் தனது அரசியல் வாழ்வில் ஒரு பொழுதும் நாடாளுமன்றத்துக்கோ, எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்துக்கோ தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவில்லை. ஆனால், தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் அவர் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகவும் குறிப்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் பேரினவாத அரசியல் தலைவர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்திருக்கிறார். அந்தச் சக்தியை, அன்று அமரசிங்கம் குறிப்பிட்டது போல, படுகொலையால் அன்றி வேறெவ்வகையிலும் யாராலும் அடக்க முடியவில்லை. (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/193403/-ஜன-த-பத-த-ர-தல-ம-ட-வ-கள-#sthash.yNeSzSpO.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted March 27, 2017 Author Share Posted March 27, 2017 ஜே.ஆர் வழி, குறுக்கு வழி 27-03-2017 06:47 PM Comments - 0 Views - 9 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 85) - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) பெரிதாக இனிக்காத வெற்றி 1982 ஆம் ஆண்டின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றமை ஜே.ஆரின் திட்டத்தின் முதற்படி, வெற்றிகரமாக நிறைவேறியதையே குறிக்கிறது. முதலில் வரவேண்டியதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பதிலாக, தனது பதவிக்காலம் முடிய முன்பே ஜனாதிபதித் தேர்தலை நடத்தவதற்காக, அரசியலமைப்பில் திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்து, ஜனாதிபதித் தேர்தலை நடத்தி, அதில் வெற்றியும் பெற்றிருந்தார் ஜே.ஆர்.ஜெயவர்தன. ஆனால், இந்த வெற்றி அவர் பெரும் மகிழ்ச்சி கொள்ளத்தக்கதொரு மாபெரும் வெற்றியல்ல. 52.91 சதவீத வாக்குகளையே ஜே.ஆர் பெற்றிருந்தார். அதேவேளை, அவரது பிரதான போட்டியாளராக இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேகடுவ 39.07 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஹெக்டர் கொப்பேகடுவ என்பவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மிகச் சிறந்த தெரிவு என்று சொல்வதற்குமில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டிருந்தார். அச்சூழலில், அவரது வாரிசுகளான அநுர பண்டாரநாயக்கவும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் சிறிமாவோவின் அஞ்ஞாதவாசத்தால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப, அதிகாரப் போட்டியில் இறங்கியிருந்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் என்று அடையாளப்படுத்தக் கூடிய மைத்ரிபால சேனநாயக்கவும் இந்த அதிகாரப் போட்டிக்குள் சங்கமித்திருந்தார். இச்சூழலில் இவர்களைத் தவிர்த்து சிறிமாவோவால் களமிறக்கப்பட்டவர்தான் ஹெக்டர் கொப்பேகடுவ. ஆகவே அவர், 39.07 சதவீத வாக்குகள் பெற்றமையானது மிகப்பெரியதொரு அடைவாகும். ஜே.ஆர் 52.91 சதவீத வாக்குகள் பெற்றார் என்பது நாணயத்தின் ஒரு பக்கம். அவருக்கு எதிராக 47.09 சதவீத மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அந்த நாணயத்தின் மறுபக்கமாகும். இந்தத் தேர்தலில், இந்த நாட்டு மக்கள் ஏறத்தாழ ஐந்து வருட ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் கொண்டிருந்த அதிருப்தியையும் பதிவு செய்திருந்தார்கள் என்பதும் மறுக்கமுடியாது. ஆகவேதான், இந்தத் தேர்தல் வெற்றியென்பது ஜே.ஆரைப் பொறுத்தவரையில் பெரிதாக மெச்சிக்கொள்ளத்தக்கதொன்று என்று சொல்ல முடியாது. ஆனால், ஜே.ஆரைப் பொறுத்தவரையில் அவர் நினைத்த காரியம் நடந்தேறிவிட்டது; அவரது தந்திரோபாய நகர்வு வெற்றியளித்துவிட்டது. அவருக்கு அது போதுமானதாக இருந்தது. அடுத்தகட்ட நகர்வுக்கு அவர் தயாராகிவிட்டிருந்தார். ஜே.ஆரின் அடுத்த கட்ட நகர்வு ஜனாதிபதித் தேர்தலில் வென்றாகிவிட்டாயிற்று. 1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவுக்கு வருகிறது. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு காணாத 5/6 பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றிருந்தது. இன்றைய சூழலில், அதுவும் தான் அறிமுகப்படுத்தியிருந்த 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் கீழமைந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் 5/6 பெரும்பான்மையை மீண்டும் பெறுவது சாத்தியமில்லை என்பதை ஜே.ஆர் நன்கறிந்திருந்தார். ஒரே கட்சி நாடாளுமன்றத்தில் 5/ 6 பெரும்பான்மையைக் கொண்டிருப்பது என்பது அந்தக் கட்சி ஏறத்தாழ ஒரு நாட்டின் சர்வாதிகாரியாகச் செயற்படக்கூடிய வாய்ப்பை அளிக்கும். அதுவும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதியானவர் அதிகாரங்களின் குவியமாக வடிவமைக்கப்பட்டிருந்தார். அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வைத்துப்பார்த்தால், உலகின் ஏனைய நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளைவிட 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ், ஜே.ஆர் உருவாக்கியிருந்த ஜனாதிபதியே, உலகில் பலம்மிக்க ஜனநாயக ஜனாதிபதியாக இருந்தார் என்று சில அரசறிவியல் அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். ஆகவே, இத்தகைய அதிகார பலத்தை இழப்பதற்கு ஜே.ஆர் தயாராக இருக்கவில்லை. இந்த 5/6 பெரும்பான்மையைத் தக்கவைக்க ஜே.ஆர் ஒரு தந்திரோபாய நடவடிக்கையை முன்னெடுத்தார். அந்தத் தந்திரோபாயம் யாதெனில், மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போகாது அரசியலமைப்பில் மாற்றமொன்றைக் கொண்டுவந்து, சர்வசன வாக்கெடுப்பொன்றின் மூலம் அதற்கு அங்கிகாரத்தைப் பெற்று, நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீட்டித்தலாகும். சர்வசன வாக்கெடுப்பொன்றில் 50 சதவீதத்துக்கும் அதிகமான அங்கிகாரத்தைப் பெற்றாலே போதுமானது. ஜே.ஆரினால் அதனைப் பெற்றுக்கொள்வது சாத்தியம் என்பதை நடந்துமுடிந்திருந்த ஜனாதிபதித் தேர்தல் நிரூபித்திருந்தது. ஆகவே, 50 சதவீதத்துக்கும் அதிகமான அங்கிகாரத்தை மட்டும் பெற்று நாடாளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் இந்தத் தந்திரோபாயத்தை நிறைவேற்ற ஜே.ஆர். விளைந்தார். இது கணநேரத்தில் ஜே.ஆரின் சிந்தையில் திடீரென்று உதித்த விடயமாக இருக்கமுடியாது. ஏனென்றால், இதற்கான சில அடிப்படைகள் ஏலவே நிறைவேற்றப்பட்டிருந்தன. 1978 ஆம் ஆண்டின், இரண்டாவது குடியரசு யாப்பு, சர்வசனவாக்கெடுப்பு என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. அது நடத்தப்படுவதற்கான முறைகள் பற்றிக் குறிப்பிடும் சர்வசனவாக்கெடுப்புச் சட்டமானது, 1981லேயே நாடாளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆகவே, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போதே இதற்கான திட்டம் விதைக்கப்பட்டுவிட்டது என்றும் சொல்லலாம். தலையசைத்த ஐ.தே.கவினர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் இந்தத் திட்டம் ஜே.ஆரின் அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினாலும் அங்கிகரிக்கப்பட்டது. 1982 ஒக்டோபர் 28 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு முன்வைக்கப்பட்டது. மீண்டும் பொதுத் தேர்தலின்றித் தமது பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதை பதவியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிப்பதற்கு ஜனநாயகத்தின் தாற்ப ரியத்தை மதித்தல் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்கமுடியாது. பதவியா? ஜனநாயகம் எனும் தாற்பரியமா என்றால், நடைமுறைச் சூழலில் பதவியே முக்கியத்துவம் பெறுகிறது. ஆகவே, இந்தத் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 1983 ஓகஸ்ட்டில் நிறைவு பெறும் இந்தப் நாடாளுமன்றத்தின் ஆயுளை இன்னொரு பதவிக்காலத்துக்கு, அதாவது 1989 ஓகஸ்ட் வரை நீட்டிப்பதற்கு அமைச்சரவையும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழுவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழுவும் அங்கிகாரம் வழங்கியிருந்தது. ஆனால், இந்த நகர்வுக்குள் இன்னொரு குறிப்பிடத்தக்க விடயத்தையும் ஜே.ஆர் உள்ளடக்கியிருந்தார். அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் திகதியிடப்படாத பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிடம் கையளிக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனை முன்வைக்கப்பட்டது. தேவையேற்படின் குறித்த கடிதங்களுக்கு திகதியிடப்பட்டு வலுவளிக்கும் எண்ணம் இருப்பதாக ஜே.ஆர் தெரிவித்திருந்தார். இந்த நிபந்தனையும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினால் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜே.ஆர் ஜனநாயக தார்ப்பரியத்துக்கு எதிராக, குறுக்கு வழியில் அதிகாரத்தைத் தக்க வைக்க விளைகிறார் என்ற விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன. ஒரு சர்வாதிகாரியாக ஜே.ஆர் மாறுவதாக எதிர்க்கட்சிகள் சாடின. ஜே.ஆர் இவை எதனையும் பொருட்படுத்தவில்லை. அமைச்சரவையின் அங்கிகாரம் பெறப்பட்டதும், நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் குறித்த முயற்சியானது, அரசியலமைப்புக்கான நான்காவது திருத்தமாக, அவசர மசோதாவாக அன்றைய பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. குறித்த நான்காவது திருத்தமானது, முதலாவது நாடாளுமன்றம் பற்றிக் குறிப்பிடும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 161 ஆம் சரத்திலே, முதலாவது நாடாளுமன்றமானது, முன்னரே கலைக்கப்பட்டாலன்றி 1989 ஓகஸ்ட் நான்காம் திகதி வரை தொடரும் என்ற விடயத்தை சேர்ப்பதாக அமைந்தது. அரசியலமைப்புக்கான இந்த நான்காம் திருத்தத்தை நாடாளுமன்றத்திலே முன்வைத்து உரையாற்றிய பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, 1982 ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலிலே, இந்த நாட்டின் மக்கள் 1977 ஜூலைக்குப் பின்னர் ஒரு சுபீட்சமான, நீதியும் சுதந்திரமும் மிக்க சமூகத்தை கட்டியெழுப்ப எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் முயற்சிகள் தொடர்பில் தமது தொடர் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே இலங்கை மக்களின் முன்னேற்றத்துக்கும், முற்செல்லுகைக்கும், அவர்களது அபிலாஷைகள் நிஜமாவதற்கும் அத்தியாவசியமான இந்த முயற்சிகள் தொடர்வதற்கு ஸ்திரத்தன்மை அவசியமாகும். அந்த ஸ்திரத்தன்மைக்கு இன்னொரு பதவிக்காலம் அவசியமாகிறது. அதன் பொருட்டே அரசியலமைப்புக்கு இந்த நான்காம் திருத்தம் முன்வைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். உயர் நீதிமன்றின் தீர்மானம் குறித்த திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதுடன், சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் இலங்கை மக்களின் அங்கிகாரத்தைப் பெற்று, அதன் மூலம் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நிறைவேற்றுவதே ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது. நாடாளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையுடன் குறித்த திருத்த மசோதாவை நிறைவேற்றுவது ஒரு பிரச்சினையே இல்லை. சர்வசனவாக்கெடுப்பு, கொஞ்சம் சவாலானது எனினும், ஜனாதிபதித் தேர்தலில் 52.91 சதவீத வாக்குகள் பெற்றுக்கொண்ட நிலையில், 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை சர்வசனவாக்கெடுப்பில் பெறுவதும் பெரும் சவாலாக இருக்காது என்ற நம்பிக்கையில்தான் ஜே.ஆர் இக்கைங்கரியத்தை முன்னெடுத்தார். அன்றைய 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 122 ஆம் சரத்தின் கீழ், குறித்த அவசர மசோதாவின் அரசியலமைப்பு பொருத்தப்பாட்டினை அறிய ஜனாதிபதியினால் உயர் நீதிமன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அரசியலமைப்பின் அதே சரத்தின் கீழ், உயர் நீதிமன்றானது குறித்த மசோதா பற்றிய தன்னுடைய தீர்மானத்தை 24 மணித்தியாலங்களுக்குள் அல்லது மூன்று நாட்களுக்கு மேற்படாத, ஜனாதிபதி குறிப்பிடும் காலவரையறைக்குள் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கும் கடப்பாட்டைக் கொண்டிருந்தது. ஆகவே இந்த அரசியலமைப்புக்கான நான்காவது திருத்தமானது, உயர் நீதிமன்றின் விசேட தீர்மானத்துக்காக வந்தபொழுது, உயர் நீதிமன்றின் முன் ஆஜரான அன்றைய சட்ட மா அதிபர் சிவா பசுபதி, “அரசியலமைப்புக்கான குறித்த திருத்தமானது நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடனும் அத்தோடு இலங்கை மக்களால் சர்வசனவாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் நிறைவேற்றப்படுமானால், அதன் மீது உயர் நீதிமன்றத்துக்கு சட்ட அதிகாரம் (jurisdiction) இல்லை” என்று வாதிட்டார். இந்த வாதம் முன்வைக்கப்பட்ட போது, குறுக்கிட்ட அன்றைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன், “உயர் நீதிமன்றத்துக்கு அவ்வாறு சட்ட அதிகாரம் இல்லையெனில், இது உயர்நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டது ஏன்” என்று வினாவினார். அதற்குப் பதிலளித்த சட்ட மா அதிபர் சிவா பசுபதி, “அரசியலமைப்பின் 122 ஆவது சரத்தின் கீழ் இது உயர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியம்” என்று கூறினார். அதன்போது, “நான் என்னதான் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்” என்று பிரதம நீதியரசர் கேள்வியெழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த சட்ட மா அதிபர் சிவா பசுபதி, “உயர் நீதிமன்றானது, அதற்கு சட்ட அதிகாரம் இல்லை” என்று கூற வேண்டும் என்று தனது வாதத்தை முன்வைத்தார். தனது கட்டுரையொன்றில் இந்த உரையாடலை மேற்கோள் காட்டும் கலாநிதி ராஜன் ஹூல், இதனைத் ‘தேசத்தின் முக்கியத்துவம்மிக்க விடயம், ஒரு கறுப்பு நகைச்சுவை விளையாட்டாக மாறிவிட்டது’ என்று கருத்துரைக்கிறார். குறித்த அரசியலமைப்புக்கான நான்காம் சரத்தினை எதிர்த்து சீ.வீ. விவேகானந்தன் சார்பில் சட்டத்தரணி எஸ்.கனகரட்ணமும் தன்னுடைய சார்பில் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும் வாதிட்டனர். தேர்தலை நடத்தாது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை இவ்வாறு நீடித்தலானது, அரசியலமைப்பின் செயற்பாட்டுக்கு குந்தகமாக அமையும் ஒரு விடயமாகும். அரசியலமைப்பின் செயற்பாட்டை தடுக்கும் எந்த சட்டத்தையும் நாடாளுமன்றம் உருவாக்காது என்று அரசியலமைப்பின் 75 ஆம் சரத்து குறிப்பிடுகிறது. ஆகவே நாடாளுமன்றத்தினால் அரசியலமைப்பின் செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் நான்காம் சீர்திருத்தத்தை நிறைவேற்றும் அதிகாரம் இல்லை என்று பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க வாதிட்டார். ஏழு நீதியரசர்கள் இந்த விடயத்தை ஆராயும் அமர்வில் இருந்தார்கள். அவர்களிடையே இந்த விடயம் தொடர்பில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இறுதியில் உயர்நீதிமன்றமானது 4:3 என்ற பெரும்பான்மையில் நான்காம் திருத்தத்துக்கான பச்சைச் சமிக்ஞையை வழங்கியது. (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/193828/ஜ-ஆர-வழ-க-ற-க-க-வழ-#sthash.GLUvqfjs.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted April 5, 2017 Author Share Posted April 5, 2017 விளக்கா? பானையா? 03-04-2017 06:25 PM Comments - 0 Views - 187 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 86) - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) ஜனநாயகத்தை ஆங்கிலத்தில் ‘டெமோக்ரசி (Democracy) என்பார்கள். ‘டெமோக்ரசி’ என்ற ஆங்கிலச் சொல்லானது ‘டெமோஸ்’ (Demos) மற்றும் ‘கிரட்டோஸ்’ (Kratos) என்ற இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது என்பார்கள். ‘டெமோஸ்’ என்பதற்கு மக்கள் என்றும் ‘கிரட்டோஸ்’ என்பதற்கு அதிகாரம் என்றும் பொருள் என்பார்கள். ‘மக்கள் அதிகாரம்’ அதாவது தம்மைத் தாமே ஆளும் அதிகாரமானது, தனிநபர்களிடமோ, ஒரு குழுவினரிடமோ அன்றி மக்களிடமே இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. சுருங்கக் கூறின், ஐக்கிய அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் குறிப்பிட்டது போல, “மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சியே ஜனநாயகமாகும்”. இந்த, ஜனநாயகம் அல்லது மக்களாட்சி என்ற கருப்பொருள் கிரேக்கத்தின் நகர அரசுகளில் நடைமுறையில் இருந்தது என்று அரசறிவியல் மற்றும் வரலாற்றறிஞர்கள் சான்றுரைப்பார்கள். கிரேக்க நகர அரசுகளில், அந்த நகரங்களில் வாழ்ந்த மக்கள், நகரின் மையத்தில் ஒன்றுகூடி தாம் சார்ந்த முடிவுகளைத் தாமே நேரடியாக எடுத்தார்கள். இதனை அரசறிவியலாளர்கள் ‘நேரடி ஜனநாயகம்’ என்று வகைப்படுத்துவர். அதாவது, ஒரு ஜனநாயக அரசின் அங்கமான மக்கள் அனைவரும், நேரடியாக ஆட்சியில் பங்குபற்றித் தம்மைப் பற்றிய தீர்மானங்களை தாமே எடுக்கின்ற நடைமுறையாகும். இதையொத்த நடைமுறையை இந்தியக் கிராமங்களின் பஞ்சாயத்துகளில் நாம் காணலாம். ஆனால், அவற்றின் ஜனநாயகத்தன்மை, சமத்துவம் பற்றிய விமர்சனங்கள் பலதுமுண்டு என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகிறது. ஆனால், பண்டைய கிரேக்க, ரோமானிய நகர அரசுகளில் இந்த நேரடி ஜனநாயக முறை வினைத்திறனாக இயங்கியது எனச் சில அரசறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். குறைந்தளவிலான மக்களைக் கொண்ட நகர அரசுகளில் இவை சாத்தியமாக இருந்தன. இந்த நேரடி ஜனநாயக முறையின் முக்கியத்துவத்தை கிரேக்க அறிஞர்களான ப்ளேட்டோ மற்றும் அரிஸ்டோட்டில் ஆகியோரின் கருத்துகளிலும் நாம் காணலாம். ஆனால், காலவோட்டத்தில் நகர அரசுகள் இல்லாது போயின. மக்கள் தொகைப் பெருக்கமும் ஜனநாயகத்திலிருந்து முடியாட்சி நோக்கி நகர்ந்த மாற்றமும் பெரும் சாம்ராச்சியங்களின் உருவாக்கமும் இந்த நேரடி ஜனநாயகத்தை மட்டுமல்லாது ஜனநாயகத்தையே முடிவுக்குக் கொண்டு வந்தது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை, மீண்டும் ஜனநாயகத்தின் மீட்சி, ‘ப்ரெஞ்சுப் புரட்சி’யோடு ஆரம்பமானது எனலாம். சர்வாதிகார முடியாட்சியை ‘ப்ரெஞ்சுப் புரட்சி’ முடிவுக்குக் கொண்டுவந்ததோடு, அதிலிருந்து ஜனநாயக அரசுகளின் மீளெழுச்சி ஜரோப்பாவில் ஆரம்பமானது. நவீன தாராளவாத, ஜனநாயக அரசுகளின் ஆரம்பமாக ‘ப்ரெஞ்சுப் புரட்சி’யைப் பல அரசறிவியலாளர்களும் குறிப்பிடுவர். ‘ப்ரெஞ்சுப் புரட்சி’யோடு பெரும் சாமராச்சியங்களாக இருந்தவை ஜனநாயகத்தை நோக்கி நகரத்தொடங்கிய போது, பெரும் மக்கள் தொகையையும் அகண்ட நிலப்பரப்பினையும் கொண்ட அத்தேசங்கள், நேரடி ஜனநாயகத்தைப் பின்பற்றுவதென்பது நடைமுறைச் சாத்தியம் அற்றதாகியது. ஆகவே, பிரதிநிதித்துவ ஜனநாயக முறை முக்கியத்துவம் பெற்றது. பிரதிநிதித்துவ ஜனநாயக முறையின் முக்கியத்துவத்தோடுதான் அரசியல் கட்சிகளுக்கான தேவையும் உருவானது எனலாம். பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது மக்கள் தாம் நேரடியாக ஜனநாயக செயற்பாட்டில் பங்குபற்றுவதற்குப் பதிலாக, தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அதனூடாக அரசியல் செயற்பாட்டில் பங்குபெறுதலாகும். ஆங்கிலேயர்கள் மூலம் இலங்கையில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை தொடர்கிறது. நாடாளுமன்றின் ஆயுளை நீடிக்க சர்வசன வாக்கெடுப்பு 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் குடியரசு அரசியல் யாப்பினூடாக நேரடி ஜனநாயகத்தின் பண்பினைக் கொண்ட சர்வசன வாக்கெடுப்பு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வசன வாக்கெடுப்பு (அல்லது மக்கள் தீர்ப்பு, அல்லது ஒப்பங்கோடல்) என்பது பிரதிநிதித்துவ ஜனநாயக முறையைக் கொண்டுள்ள நாடுகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் தொடர்பாக மக்களின் நேரடி அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளும் வழிமுறையாகும். 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் குடியரசு அரசியலமைப்பின் 4 ஆம் சரத்தானது ‘சட்டவாக்க அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தினாலும், மக்கள் தீர்ப்பொன்றின்போது மக்களாலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்’ எனக் குறிப்பிடுகிறது. இந்தச் சரத்தின் மூலம், நேரடி ஜனநாயகத்தின் பண்பினைக் கொண்ட சர்வசன வாக்கெடுப்பானது, மக்கள் நேரடியாக சட்டவாக்க அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு வழிமுறையாக, அரசியலமைப்பு ரீதியில் அங்கிகரிக்கப்பட்டது. இந்தச் சர்வசன வாக்கெடுப்பு நடைமுறையைப் பயன்படுத்தியே 1977 ஆம் ஆண்டில் 5/6 பெரும்பான்மையைத் தான் பெற்றிருந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன நீடிக்க விரும்பினார். அரசியலமைப்புக்கு 4 ஆம் திருத்தத்தை முன்வைப்பதனூடாக அவர் இதனைச் செய்ய விளைந்தார். அதற்கு உயர்நீதிமன்றமும் 4:3 என்ற பெரும்பான்மையில் பச்சைச் சமிக்ஞையை வழங்கியிருந்த நிலையில், குறித்த அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. எதிர்ப்பும், ஆதரவும் அரசியலமைப்புக்கான 4 ஆம் திருத்த மசோதா மீதான விவாதத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்ட நிலைப்பாட்டினை எடுத்திருந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மகனான அநுர பண்டாரநாயக்க, லக்ஷ்மன் ஜயக்கொடி மற்றும் ஆனந்த திசாநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்கும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சியை எதிர்த்த வேளையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் என்ற அந்தஸ்தில் பார்க்கப்பட்ட மைத்திரிபால சேனநாயக்க குறித்த முயற்சியை தார்மீக ரீதியில் தன்னால் எதிர்க்க முடியாது என்று பேசினார். ஏனெனில், “1970-1977 காலப்பகுதியில் சிறிமாவோவின் ஆட்சியில், தான் அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பது தொடர்பான யோசனைக்கு ஆதரவாகத் தான் பேசியதாகவும் செயற்பட்டதாகவும் தற்போது அதற்கு மாற்றாகச் செயற்படுவதானது சுயமுரண்பாடாக அமையும்” என்று அவர் பேசியதுடன் குறித்த மசோதாவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தார். மறுபுறத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்கும் முடிவை எதிர்ப்பதாக அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அறிவித்தார். அரசியலமைப்பின் 4 ஆம் திருத்தம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, அதற்கு ஆதரவாக 142 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான சரத் முத்தெட்டுவேகமவும் என வெறும் நான்கு பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். “நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பதை நாம் எதிர்க்கிறோம்” என்று அறிவித்த அ. அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரும் வாக்கெடுப்பு நடந்தவேளையில் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. ஜே.ஆரின் வல்லாட்சி இப்போது வந்து விட்டது குறித்த திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது ஜே.ஆருக்கு ஒரு சவாலே இல்லை. தேவைக்கு அதிகமாகவே நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இருந்தது. ஆனால், சர்வசன வாக்கெடுப்பில் வெற்றிபெறுவது என்பதுதான் இதைவிடச் சவாலானது என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஏனெனில், சர்வசன வாக்கெடுப்பைப் பொறுத்தவரையில், பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 2/3 வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்குகொண்டால் சாதாரண பெரும்பான்மை போதுமானது, 2/3 வாக்காளர்களுக்கு குறைவானவர்களே வாக்களிப்பில் பங்குகொண்டால், பெறப்பட்ட பெரும்பான்மையானது குறைந்தபட்சம் மொத்த வாக்காளர்களின் 1/3 அளவினைக் கொண்டதாக இருக்கவேண்டியதாக இருந்தது. ஆகவே, வாக்காளர்கள் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவுக்கு வாக்காளர்கள் குறித்த சர்வசன வாக்கெடுப்பில் கலந்துகொள்வதும் முக்கியமாக இருந்தது. அன்றைய சூழலில், இலங்கை மக்களிடையே கம்யூனிஸ்ட் கட்சியானது முன்பிருந்தளவுக்கு மக்களாதரவினைக் கொண்டிருக்காவிட்டாலும், அவர்களது பிரசுரமான ‘அத்த’ (உண்மை) பத்திரிகை பெரும்பான்மைச் சிங்கள மக்களிடம் பிரபல்யம்மிக்க பத்திரிகையாக இருந்தது. குறிப்பாக, அரசாங்கத்தை விமர்சிக்கும் பிரதான ஊடகமாக அது காணப்பட்டது. குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கு முதல் நாள் இரவு கம்யூனிஸ்ட் கட்சியின் ‘அத்த’ பத்திரிகை அரசாங்கத்தினால் மூடப்பட்டது. மசோதா சமர்ப்பிக்கப்படவிருந்த நாளின் பத்திரிகை, ‘ஜே.ஆரின் வல்லாட்சி இப்போது வந்துவிட்டது’ என்ற தலைப்போடு அச்சாகி விநியோகத்துக்குத் தயாராக இருந்த பொழுதில்தான் குறித்த பத்திரிகை அரசாங்கத்தினால் மூடப்பட்டது. இதனைப் பற்றி மறுநாள் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரே ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்த, சரத் முத்தெட்டுவேகம நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த இராஜங்க அமைச்சராக இருந்த ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ், “குறித்த பத்திரிகையானது பாதுகாப்புக்கும் பொது ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிப்பதாக, குறித்த அதிகாரமுடையவர் கருதியதால் குறித்த பத்திரிகை மூடப்பட்டது” என்று பதிலை முன்வைத்தார். அதன்பின்னர் பேசிய பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ, “குறித்த பத்திரிகையானது அவசரகாலச் சட்டத்தின் கீழ்தான் மூடப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம வாக்களித்திருக்கிறார். ஆகவே, அவ்வாறு வாக்களித்ததன் மூலம் குறித்த பத்திரிகையை மூடியதற்கும் அவர் அங்கிகாரம் வழங்கியிருக்கிறார்” என்று புதுமையானதொரு தர்க்கத்தை முன்வைத்தார். இனி ஜே.ஆர் ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான ஒரு முதல் சமிக்ஞையாகவே இந்தச் சம்பவம் தென்பட்டது. வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான வாக்களிப்பு குறித்த மசோதா தேவைப்பட்ட 2/3 பெரும்பான்மைக்கு அதிகமாகவே ஆதரவினைப் பெற்றிருந்த நிலையில், குறித்த திருத்தத்துக்கு சர்வசன வாக்கெடுப்பு ஒன்றினூடாக மக்கள் அங்கிகாரத்தைப் பெறும் அடுத்த கட்ட நகர்வுக்கு ஜே.ஆர் தயாரானார். 1982 நொவம்பர் 14 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தேர்தல்கள் ஆணையாளருக்கு 1982 டிசெம்பர் 22 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சர்வசன வாக்கெடுப்பினை நடத்துமாறு உத்தரவிட்டார். அரசியலமைப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ள 4 ஆம் திருத்தத்தின்படி, முதலாவது நாடாளுமன்றத்தின் ஆயுளை 1989 ஓகஸ்ட் நான்காம் திகதி வரை நீட்டிப்பதை அங்கிகரிக்கிறீர்களா? என்ற கேள்வியைக் கொண்டமைந்த வாக்குச்சீட்டில் மக்கள் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற இரண்டு தெரிவுகளில் ஒன்றுக்கு புள்ளடியிட வேண்டும். இந்த இரண்டு தெரிவுகளுக்கும் தனித்தனிச் சின்னமும் வழங்கப்பட்டது. சின்னங்களுக்கே வாக்களித்துப் பழகிவிட்ட மக்களுக்கு, சின்னமில்லாத தேர்தல், அதுவும் வாசித்து விடையளிக்க வேண்டிய கேள்வியைக் கொண்டமைந்த தேர்தல் கடினமானதாக இருக்கலாம் என்று சிந்தித்ததாலோ என்னவோ, ‘ஆம்’ என்று நாடாளுமன்ற ஆயுளை நீட்டிப்பதற்கு அங்கிகாரம் வழங்க ‘விளக்கு’ சின்னமும், ‘இல்லை’ என்று அதனை எதிர்க்க ‘பானை’ சின்னமும் தேர்தல் ஆணையாளரால் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டித்தல், அதன் ஜனநாயக விளைவுகள், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், வல்லாட்சிக்கான வாய்ப்புகள் பற்றியெல்லாம் மிகப் பரந்த விவாதமொன்றை உருவாக்கியிருக்க வேண்டியதொரு சர்வசன வாக்கெடுப்பானது துரதிஷ்டவசமாக ‘விளக்கா’, ‘பானையா’ என்ற குறுகிற வட்டத்துக்குள் சிக்குண்டுவிட்டது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது ஆதரவாளர்களையும் பொது மக்களையும் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்க விளக்குக்கு வாக்களிக்கக் கோரிய அதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இடதுசாரிக் கட்சிகளும் குறித்த முயற்சிக்கு எதிராகப் பானைக்கு வாக்களிக்கக் கோரினர். அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு இந்தச் சர்வசன வாக்கெடுப்பு தொடர்பிலான பிரசாரங்களில் பங்குபெற அனுமதி கிடைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. “பானைக்கு வாக்களிப்பது என்பது எந்தவோரு கட்சிக்கு ஆதரவானதோ, எதிரானதோ வாக்களிப்பு அல்ல. அது 1931 ஆம் ஆண்டு முதல் நீங்கள் அனுபவித்துவரும் உங்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான வாக்களிப்பாகும்” என்று சிறிமாவோ பண்டாரநாயக்க தனது பிரசாரக் கூட்டங்களில் பேசினார். நக்ஸலைட் சதி இந்தச் சர்வசன வாக்கெடுப்பை வெற்றிகொள்வதற்காக ‘ஆசியாவின் நரி’ என்றறியப்பட்ட ஜே.ஆர் இன்னொரு தகிடுதத்தத்தை ஏலவே ஆடத்தொடங்கியிருந்தார். இம்முறை, ‘நக்ஸலைட் சதி’ என்ற பேரில் ஜே.ஆர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் மக்களின் அனுதாபத்தைச் சம்பாதிக்கும் தந்திரோபாயம் முன்னெடுக்கப்பட்டது. (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/194297/வ-ளக-க-ப-ன-ய-#sthash.3aki8zHn.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted April 11, 2017 Author Share Posted April 11, 2017 அச்சத்தை விதைக்கும் பிரசார உத்தி 10-04-2017 01:11 PM Comments - 0 Views - 193 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 87) - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) ஜனநாயகமா, வல்லாட்சியா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றாலும், நாடாளுமன்றத்தின் ஆயுளை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீட்டிப்பதற்கான சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெறுதல் என்பது ஜனாதிபதித் தேர்தலைவிட பெரும் சவாலானது என்பதை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும் நன்கு உணர்ந்திருந்தன. ஆகவே, சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெற்றுவிடத் தம்மாலான சகல கைங்கரியங்களையும் ஆற்றுவதற்கு ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் தயாரானது. ஒருபுறத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க, “மக்கள் தமது வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காகவேனும் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்க விளையும் இந்த முயற்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” என்று பிரசாரத்தை முன்னெடுத்த வேளையில், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தான் மக்களின் வாக்குரிமையை மதிப்பதாகத் தனது பிரசாரத்தை முன்னெடுத்தார். அவர் தனது பிரசாரப் பேச்சுகளில், “1970-1977 வரை சிறிமாவோவின் ஆட்சிக்காலத்தில், மக்களின் அனுமதியோ, மக்களாணையோ இன்றி சிறிமாவோ எதேச்சாதிகார முறையில் நாடாளுமன்றத்தின் ஆயுளை இரண்டு வருடங்கள் நீட்டித்திருந்தார். ஆனால், நான் அதுபோல எதேச்சாதிகார முறையில் நடக்கவில்லை. மாறாக நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பதற்கு இலங்கையிலுள்ள சகல மக்களினதும் மக்களாணையைக் கோரியிருக்கிறேன்” என்று கூறினார். பொதுத் தேர்தலுக்குப் போகாமல், அரசியலமைப்புக்குத் திருத்தமொன்றைக் கொண்டு வந்து, சர்வசனவாக்கெடுப்பு என்றொரு குறுக்குவழியைப் பயன்படுத்தி ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கமானது நாடாளுமன்றத்தின் ஆயுளை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீடிக்க முயற்சிப்பது, அவர்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள வரலாறு காணாத பெரும், பெரும்பான்மைப் பலத்தைத் தக்கவைக்கவே என்பது மக்களுக்கு தெரியாமலோ, புரியாமலோ இல்லை. பல ஊடகவியலாளர்களும் அரசியல் விமர்சகர்களும் இதனைச் சுட்டிக்காட்டினார்கள். மேலும் சிலர் இதிலுள்ள பெரும் ஆபத்தையும் சுட்டிக் காட்டினார்கள். அதாவது, பெரும் அதிகார பலத்தைக் கொண்டு, அரசியலமைப்புக்குத் திருத்தங்களைச் செய்து, அந்தப் பெரும் அதிகார பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதானது, இலங்கையில் ஜனநாயகத்தைப் பலமிழக்கச்செய்து, வல்லாட்சியை உருவாக்கிவிடும் என்பது பல விமர்சகர்களினதும் கருத்து. ஆனால், ஜே.ஆரை ஆதரித்தவர்களோ, ஜே.ஆர் ஜனநாயக வழியிலேயே செயற்படுவதாகவும் அதனால்தான் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்க மக்களிடம் மக்களாணையைக் கோரி சர்வசனவாக்கெடுப்புக்கு சென்றுள்ளதாகவும் ஆகவே, வல்லாட்சி என்பதெல்லாம் இதிலில்லை என்றும் ஜே.ஆரின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார்கள். நக்ஸலைட் சதி எது எவ்வாறாயினும், ஜே.ஆரோ, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமோ இந்தச் சர்வசனவாக்கெடுப்பை இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை. எவ்வாறேனும் போதிய பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கில் பல தகிடுதத்தங்களை அரங்கேற்றத் தயாரானார்கள். அதன் முதல்படி “நக்ஸலைட் சதி” என்ற பெயரில் அரங்கேறியது. 1982 ஒக்டோபர் 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய கல்வி அமைச்சரும், ஜே.ஆரின் நெருங்கிய உறவினருமான ரணில் விக்ரமசிங்க, நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹெக்டர் கொப்பேகடுவ வென்றிருப்பாரேயானால், அதனைத் தொடர்ந்து பெரும் “நக்ஸலைட் சதி” ஒன்று முன்னெடுக்கப்பட்டு, நாட்டில் பல அதிரடி மாற்றங்களை அரங்கேற்றத் தயாரானதாகத் தங்களுக்கு அறியக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார். ஹெக்டர் கொப்பேகடுவ வென்றிருந்தால், அவர் தேர்தலுக்கு முன் சொன்னது போல சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் மீள அளிக்கப்பட்டிருக்க மாட்டாது எனவும், சிறிமாவோவின் மருமகனும், இடதுசாரிச் சார்புடையவருமான விஜய குமாரணதுங்க பிரதமராக நியமிக்கப்படுவதுடன், இலங்கை இராணுவமும் படைகளும் அவர்களுக்குச் சார்பானவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் அத்தோடு சிறிமாவோ பண்டாரநாயக்கவைப் படுகொலை செய்வதற்கான திட்டமொன்றும் இருந்ததாகவும் குறிப்பிட்டார். ரணில் விக்ரமசிங்கவின் இந்தப் பேச்சுப் பற்றி, தன்னுடைய கட்டுரையொன்றில் கருத்துரைக்கும் கலாநிதி ராஜன் ஹூல், இது எந்த அடிப்படையுமில்லாமல், அவசர கதியில் முன்வைக்கப்பட்ட கருத்து என்கிறார். ரணில் விக்ரமசிங்க அடிப்படையும் முழுமையுமற்ற இந்தத் தகவல்களை வதந்தி வகையில், தன்னுடைய பாடசாலை நண்பனான அநுர பண்டாரநாயக்கவிடமிருந்து அறிந்திருக்கலாம் என்றும், அநுர பண்டாரநாயக்கவுக்கும் விஜய குமாரணதுங்கவுக்கும் இருந்த பதவிச் சண்டையும் அநுரவின் ஐ.தே.க மற்றும் வலதுசார்பு நிலையும் விஜயவின் இடதுசார்பு நிலையும் எல்லாம் இந்த வதந்திகள் சதியாக பார்க்கப்பட காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். நாடாளுமன்றத்தில் இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் ஜயக்கொடி எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதனை மறுத்துப் பேசிய அமைச்சர் காமினி திசாநாயக்க, “உங்கள் தலைவியின் மகளின் கணவரான விஜய குமாரதுங்கதான் நக்ஸலைட்டுகளின் தலைவர். உங்கள் தலைவியின் மகள் (சந்திரிகா பண்டாரநாயக்க) தான் அவரின் உதவியாளர். அதற்கு மேலதிகமாகக் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, பிரசாரத்தை முன்னெடுத்த ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழுதான் ஜனாதிபதியைப் படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்தது. நக்ஸலைட்டுகள் யாரென்று அறிய உங்களுக்கு விருப்பம் என்றால், உங்களுடைய வீட்டுக்குள்ளேயே தேடுங்கள்” என்று முழங்கினார். அச்சத்தை விதைத்தல் ரணில் விக்ரமசிங்க மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த “நக்ஸலைட் சதி” என்ற விடயத்துக்கு ஜனாதிபதி ஜே.ஆர் மேலும் தூபமிடும் கருத்துகளை முன்வைத்தார். 1982 நவம்பர் மூன்றாம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெளியிட்ட அறிக்கையொன்றில், தான் இந்த நக்ஸலைட் சதி பற்றி ஒக்டோபர் 21 ஆம் திகதியே அறிந்திருந்ததாகவும், அந்தத் திட்டத்தின் படி தன்னையும் தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் சிலரையும், அநுர பண்டாரநாயக்கவையும் இலங்கைப் படைகளின் தளபதிகளையும் கொல்வதற்கும் சிறிமாவோ பண்டாரநாயக்கவை சிறைப்பிடிக்கவும் சிலர் சதி செய்ததாகக் குறிப்பிட்டார். மேலும் பொதுத் தேர்தலுக்கு செல்வதில் உள்ள ஆபத்தானது, அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி, சில ரவுடிகள் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்து விடுவார்கள் எனவும், அவர்கள் ஜனநாயக அமைப்பைப் பலவீனப்படுத்தி, தமது “நக்ஸலைட் சதியை” பலப்படுத்தி, அடுத்த தேர்தலில் தமது “நக்ஸலைட்” அரசாங்கத்தை உருவாக்கிவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டார். அரசியல் பிரசார உத்திகளில் அச்சத்தை விதைத்தல் (fearmongering / scaremongering) என்றொரு உத்தியுண்டு. அதாவது மக்களிடையே திட்டமிட்டு, அச்சத் தந்திரோபாய (scare tactics) ரீதியில் பொது அச்சத்தை விளைவிப்பதனூடாக, அவர்களிடையே உளவியல் ரீதியான தாக்கத்தை விளைவித்து, அதன் மூலம் தாம் அடைய நினைப்பதை அடைந்து கொள்ளும் உத்தி அது. சுருங்கச் சொல்வதாயின், மக்களிடையே அநாவசியமான பெரும் அச்சத்தை விளைவித்து, அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் உத்தியாகும். இந்த உத்தியானது வரலாற்றுக் காலத்திலிருந்து அரசர்கள் முதல் பலராலும் பயன்படுத்தப்பட்டதொரு உத்தியாகும். நவீன உலகில் அடல்ப் ஹிட்லர் முதல், டொனால்ட் ட்ரம்ப் வரை இதே உத்தியினை தமது அரசியல் அடைவுகளுக்காகப் பயன்படுத்தியிருந்தார்கள். “நக்ஸலைட் சதி” பிரசாரத்தின் ஊடாக ஜே.ஆரும் இதே பயத்தை விதைக்கும் தந்திரோபாயத்தையே முன்னெடுத்தார். நக்சலைட்டுகள் என்ற சொல்லானது இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் மாக்ஸிஸ பயங்கரவாதக் குழுவைச் சார்ந்தவர்களைக் குறிக்கிறது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நக்சல்பரி என்ற கிராமத்தில் அந்தப் பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டதால் “நக்ஸல்” என்ற பெயரைப் பெற்றது. இது 1969 காலப்பகுதியில் உருவானது. இந்தப் பயங்கரவாத இயக்கத்தை இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு செயற்பட்டதுடன், நக்ஸலைட்டுகளுக்கு எதிரான பிரசாரமும் மும்முரமாக இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டது. மேலும், 1982 காலப்பகுதியானது உலகளவில் மாக்ஸிஸத்துக்கு எதிராகப் பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட காலம் எனலாம். பிரித்தானியாவில் “இரும்புப் பெண்மணி” மார்க்ரட் தட்சர் பிரதமராகவும் அமெரிக்காவில் றொனால்ட் றீகன் ஜனாதிபதியாகவும் இருந்த காலப்பகுதி இது. இவ்விருவரும் தீவிர மாக்ஸிஸ, கம்யுனிஸ எதிர்ப்பாளர்கள். ஆகவே உலகளவில் மாக்ஸிஸத்துக்கும் அதனால் விளைந்த பஞ்சம், படுகொலைகள் என்பற்றுக்கும் எதிராகக் கடும்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தப் பின்புலத்தில்தான் இலங்கையிலும் ஜே.ஆர் அரசாங்கத்தினால் “நக்ஸல் சதி” என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். 1982 நவம்பர் 14 ஆம் திகதி வெளியான “த சண்டே டைம்ஸ்” பத்திரிகையில், நாடாளுமன்ற ஹன்ஸாட் மேற்கோள்காட்டப்பட்டு, எட்டு முக்கிய நக்ஸலைட்டுகள் என விஜய குமாரதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரட்ணசிரி விக்ரமநாயக்க, ஹெக்டர் கொப்பேகடுவ, ரீ.பீ.இலங்கரட்ண, கே.பீ.சில்வா, ஜீ.எஸ்.பீ.ரணவீர (அத்த பத்திரிகையின் ஆசிரியர்), மற்றும் ஜனதாச நியதபால ஆகியோரது பெயர்களும் படங்களும் பிரசுரமானது. கைதுகளும் தடுத்து வைப்புகளும் வெறும் பிரசாரத்தோடு இது நிற்கவில்லை. இதனை அடுத்த கட்டத்துக்கு ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நகர்த்திச் சென்றது. நவம்பர் 14 ஆம் திகதி வன்முறையைத் திட்டமிட்டவர்கள் எனப் பலரும் கைது செய்யப்பட்டார்கள். அன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவும் தடுத்து வைக்கப்பட்டார். நவம்பர் 19 ஆம் திகதி “நக்ஸலைட்” என்ற சந்தேகத்தின் பெயரில் விஜய குமாரதுங்க அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். ஆனால் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. 1982 நவம்பரில் ரட்ணசிறி விக்ரமநாயக்க உட்பட 11 பேருக்கெதிராக 1980 ஆம் ஆண்டு (ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்) பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்த, மற்றும் வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டமை என்ற குற்றங்கள் தொடர்பில் குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபரினால் கொழும்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையே இந்தப் “பொது மற்றும் தனியார் சொத்துகளுக்குப் பாதிப்பினை ஏற்படுத்த, மற்றும் வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்ட” குற்றமாகும். கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை மேலும், ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை எதிர்த்து கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்த ஹெக்டர் கொப்பேகடுவவுக்கும் அரசாங்கத் தரப்பிலிருந்து கடும் அழுத்தம் தரப்பட்டது. அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டார். “நக்ஸல் சதி” என்பது பெரும் பிரசாரமாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. பெரும்பாலான ஊடகங்களும் அரசாங்கத்தின் இந்தப் பிரசாரத்துக்குத் துணைபோனதாக இடதுசாரிகள் குற்றம் சுமத்தினார்கள். இடதுசாரிகள் நாட்டைக் கைப்பற்றச் சதி செய்கிறார்கள் என்ற பெரும் பீதி மக்களிடம் விதைக்கப்பட்டது. அந்தச் சதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான வைரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களுக்குப் பங்கிருப்பதாகவும் காட்டப்பட்டது. இதன் மூலம், அச்சத்தை விதைத்தேனும் சர்வசனவாக்குரிமையில் வென்றிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டதை நாம் அவதானிக்கலாம். சிவில் சமூகத்தினர் சிலரும், சமூக ஆர்வலர்கள் சிலரும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இந்த விசமப் பிரசாரத்தைக் கண்டித்தாலும் அரசாங்கத்தின் பிரசாரப் பலத்துக்கு முன்னால் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இந்தப் பிரசாரத்தோடு மட்டும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நின்றுவிடவில்லை. அவர்கள் சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெறுவதற்கு எதனையும் செய்வதற்குத் தயாராகவே இருந்தார்கள். முழு அரச இயந்திரத்தையும் தமது பிரசாரத்துக்காகப் பயன்படுத்தியதாக பல அரசியல் விமர்சகர்களும் ஆய்வாளர்களும் கருத்துரைக்கிறார்கள். பொலிஸாரும் காடையர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கெதிராகக் களத்தில் இறக்கப்பட்டார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டு, பல தஸ்தாவேஜூகள் கைப்பற்றப்பட்டன. அச்சகங்கள் பல மூடப்பட்டன. சில பத்திரிகைகளும் மூடப்பட்டன. அரசாங்கத்துக்குச் சார்பான பிரசாரம் தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் ஆயுட்கால நீட்டிப்புக்கு எதிரான பிரசாரத்துக்கு என்னென்ன வழிகளிலெல்லாம் முட்டுக்கட்டையிட முடியுமோ, அத்தனை வழிகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. ஏன் அந்த அமைதி? நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சிக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக்கட்சிகளும் ஒன்றிணைந்து பிரசாரத்தை முன்னெடுத்த நிலையில், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதை எதிர்த்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அவர்களோடு சேர்ந்து அதனை எதிர்க்காமல், அமைதி வழியில் பயணித்தார்கள். ஏன் அந்த அமைதி? ( அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/194609/அச-சத-த-வ-த-க-க-ம-ப-ரச-ர-உத-த-#sthash.PCnaJHsy.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted April 18, 2017 Author Share Posted April 18, 2017 தமிழ்த் தலைமையின் மௌனமும் ஜே. ஆரின் வெற்றியும் 17-04-2017 08:32 PM Comments - 0 Views - 164 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 88) - என்.கே. அஷோக்பரன் LLB (Hons) தமிழ்த் தரப்பின் மௌனம் தன்னையும், ஆளும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரையும் கொல்வதற்கான ‘நக்ஸலைட் சதி’ ஒன்றிருக்கிறது என்று பெரும் பிரசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அதன் காரணமாக அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து, பொலிஸ் மற்றும் படைகள் என ஒட்டுமொத்த அரசாங்க இயந்திரத்தினையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கான சர்வசன வாக்கெடுப்பில் வெல்வதற்கான சகல கைங்கரியங்களையும் தகிடுதத்தங்களையும் முன்னெடுத்தது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு ஆதரவான பிரசாரம், அதாவது விளக்குச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்ற பிரசாரம் அரசாங்க இயந்திரத்தின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டது. அவ்வேளையில், அதற்கு மாற்றான எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை அரசாங்க இயந்திரத்தின் துணை கொண்டு முடக்கும் வேலைகளும் நடைபெற்றன. பத்திரிகைகள், அச்சகங்கள் மூடப்பட்டன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்; தடுத்து வைக்கப்பட்டார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டார்கள். இப்படியாக நாடே பதற்றமானதொரு சூழலினை எதிர்கொண்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் ஆயுள்காலத்தினை நீட்டிப்பதை நாம் எதிர்க்கிறோம் என்று அறிவித்ததோடு தம்பணி நிறைவுற்றதைப் போல, எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மௌனம் காத்தது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு எதிரான எவ்வித செயல்துடிப்புமிக்க பிரசாரத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முன்னெடுக்கவில்லை என்பதுடன், அத்தகைய பிரசாரத்தை முன்னெடுத்த ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்துகூடச் செயற்படவில்லை. 1982 நவம்பர் நான்காம் திகதி கூடிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுவானது, தாம் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்ததுடன் நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவடைவதுடன் தாம் தமது பதவிகளைவிட்டு விலகுவதாகவும் முடிவெடுத்தது. அதன்படி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் இந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியும்போதான தமது பதவிவிலகல் கடிதங்களை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திடம் கையளித்தனர். இது மட்டும்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிக்கும் இந்தச் சர்வசனவாக்கெடுப்பு தொடர்பில் செய்த ஒரே செயல்துடிப்புமிக்க விடயம். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இந்த மௌனத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சர்வசனவாக்கெடுப்பில் தமக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்போவதில்லை என்று தனக்கு உறுதியளித்திருப்பதாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பகிரங்கமாகவே கூறியிருந்தார். இதன் மூலம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தமக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என்ற செய்தியைத் தமிழ் மக்களுக்கு அவர் வழங்க எண்ணியிருக்கலாம். ஜே.ஆரின் இந்தப் பகிரங்க அறிவிப்புக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை மௌனத்தையே பதிலாகத் தந்தது. இந்த அமைதியையும் மௌனத்தையும் தமிழ்த் தலைமையின் பெரும் இராஜதந்திர நகர்வாகச் சிலர் வியாக்கியானம் செய்கின்றனர். நடைமுறை விடயங்களையும் சாத்தியக் கூறுகளையும் கணிக்கும்போது, ஏற்கெனவே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தமையினால் 1988 வரை நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக ஜே.ஆரே தொடரப்போவது நிச்சயம். மேலும், முழு அரசாங்க இயந்திரமும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவே இயங்குகிறது. ஆகவே, இந்தச் சர்வசன வாக்கெடுப்பிலும் ஜே.ஆர் வெற்றி பெறப்போவது ஏறத்தாழ உறுதியான விசயம். தமிழ் மக்களது பிரச்சினை சார்ந்து ஏதேனும் முன்னேற்றகரமான அடைவுகள் பெறப்பட வேண்டுமாயின் அது நிச்சயம் ஆளும் அரசாங்கத்தின் இசைவின்றி அடையப்பெறப்பட முடியாது. ஆகவே, அடுத்த ஆறு வருடங்களுக்கு நிச்சயமாகப் பெரும்பான்மைப் பலத்தோடும், நிறைவேற்று அதிகாரத்தோடும் பதவியில் இருக்கப்போகும் ஓர் அரசாங்கத்தை முழுமையாக எதிர்ப்பதிலும், இணக்கப்பாடான ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதனூடாகத் தமிழ் மக்களுக்குப் பொருத்தப்பாடானதொரு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்த்தலைமை எண்ணியிருக்கலாம். அதேவேளை, தமது நிலைப்பாட்டை உறுதிசெய்ய நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடையும்போது, பதவிவிலகும் தீர்மானத்தையும் எடுத்திருக்கலாம். ஆகவே, இந்த இராஜதந்திர நகர்வு சரியானது என்பது ஒருசாராரின் வியாக்கியானம். மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இந்த அமைதியை விமர்சிப்பவர்கள், இதனைக் ‘கள்ள மௌனம்’ என்று விமர்சிக்கிறார்கள். தனிநாட்டுக்கான மக்களாணையைக் கோரி அதில் வெற்றிபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அதனை அடைவதற்கான எந்த முன்னோக்கிய நகர்வுகளையும் முன்னெடுக்காத நிலையில், மாவட்ட அபிவிருத்திச் சபைகள், மற்றும் ஒற்றையாட்சிக்குள்ளான அதிகாரப் பகிர்வு என்று அரசாங்கத்திடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. மேடைகளில் தாயகம், தேசியம், விடுதலை என்று பேசியவர்கள் இன்று ஆளும் அரசாங்கத்துக்கு ஆதரவாக மௌனம் காக்கிறார்கள் என்ற கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். தமிழ்த் தலைமைகள் எவ்வாறு நடந்து கொண்டாலும் வடக்கு,கிழக்கு தமிழ் வாக்காளர்கள் தமது நிலைப்பாட்டை மீண்டும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தத் தவறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சர்வசன வாக்கெடுப்பு முடிவுகள் பெரும் பரபரப்புகளுக்கு மத்தியிலும், இலங்கை வரலாற்றில் அவசரகாலச் சட்டம் நடைமுறையிலுள்ளபோது நடைபெற்ற முதலாவது தேர்தல் என்ற பெருமையோடும், 1982 டிசெம்பர் 22 ஆம் திகதி இலங்கையின் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீட்டிப்பதற்கான சர்வசனவாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தமாக பதிவுசெய்யப்பட்டிருந்த 8,145,015 வாக்காளர்களில் 5,768,662 வாக்காளர்கள், அதாவது ஏறத்தாழ 70.82%ஆனோர் குறித்த சர்வசன வாக்கெடுப்பில் வாக்களித்திருந்தனர். அதில் 5,747,206 (99.63%) வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாகக் காணப்பட்டன. வாக்களிப்பு முடிவுகளின் படி, நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை 1989 ஓகஸ்ட் நான்காம் திகதி வரை நீட்டிப்பதற்கு ஆதரவாக 3,141,223 வாக்குகள், அதாவது 54.66% வாக்குகளும் அதற்கு எதிராக 2,605,983 வாக்குகள், அதாவது 45.34% வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இந்த முடிவுகளின் மூலம், ஏறத்தாழ ஆறு வருடங்களுக்கு ஏறத்தாழ வல்லாட்சியொன்றை முன்னெடுக்கத்தக்க பெரும் பலம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் வழங்கப்பட்டது என்று சொல்லலாம். இந்த சர்வசன வாக்கெடுப்பு முடிவுகளைத் தேர்தல் மாவட்டங்கள் அடிப்படையில் பார்த்தால், திகாமடுல்ல மாவட்டம் தவிர்ந்த ஏனைய வடக்கு,கிழக்கு மாவட்டங்களில் மட்டுமே ஆளும் அரசாங்கத்தினால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவே, தமிழர் தாயகம் என்று அடையாளப்படுத்தப்படும் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் ஏகோபித்து, அரசாங்கத்துக்கு எதிரான தமது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதியாகப் பறைசாற்றியிருந்தார்கள். இந்தச் சர்வசன வாக்கெடுப்பில், 493,705 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், 290,849 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அதில் 265,534 வாக்காளர்கள், அதாவது 91.29%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு எதிராகவும் 25,315 வாக்காளர்கள், அதாவது வெறும் 8.7%ஆனோர் மட்டுமே நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். 119, 093 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வன்னித் தேர்தல் மாவட்டத்தில், 74,954 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அதில் 48,968 வாக்காளர்கள், அதாவது 65.33%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பதற்கு எதிராகவும் 25,986 வாக்காளர்கள், அதாவது 34.66%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். 133,646 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில், 91,338 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். 51,909 வாக்காளர்கள், அதாவது 56.83%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு எதிராகவும் 39,429 வாக்காளர்கள், அதாவது 43.16%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். 172,480 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 120,453 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அதில் 72,971 வாக்காளர்கள், அதாவது 60.58%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு எதிராகவும் 47,482 வாக்காளர்கள், அதாவது 39.42%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். ஆகவே, திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் தவிர்ந்த வடக்கு,கிழக்கு நிலப்பரப்பின் அறுதிப் பெரும்பான்மை ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கதுக்கு எதிராகவே அமைந்தது. தமது தலைமைகள் எத்தகைய அமைதி காத்தாலும், அவர்கள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டினை எடுத்தாலும், தமிழ் மக்கள் தம்முடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தார்கள். அந்தச் செய்தியை மீண்டும் இந்த சர்வசனவாக்கெடுப்பிலும் உறுதிபட தென்னிலங்கைக்கும் உலகத்துக்கும் மீண்டும் எடுத்துரைத்திருந்தார்கள். அன்று, அந்தத் தெளிவு தமிழ் மக்களிடம் நிறையவே இருந்தது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், ஜே.ஆருக்கும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிராக இத்தகையதொரு உறுதியான நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் எடுத்தமையானது ஜே.ஆருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் விளைவுகளை தமிழ் மக்கள் சந்திக்க நீண்ட காலம் எடுக்கவில்லை. மாபெரும் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்தால், அது எத்தகைய பயங்கரமான வல்லாட்சியை உருவாக்கும், எத்தகைய அடக்குமுறைகளை தமக்கு எதிரான அப்பாவி மக்கள் மீது பிரயோகிக்கும் என்பதை உலகம் கண்டுகொள்ள ஏறத்தாழ ஏழு மாதங்களே தேவைப்பட்டன. இலங்கை வரலாற்றில் பல இரத்தக்கறை படிந்த கறுப்புப் பக்கங்களின், மிகக் கருகிய பக்கங்கள் எழுதப்படத் தயாராக இருந்தன. அதற்கான ஆரம்ப அறிகுறிகள் சர்வசன வாக்கெடுப்பு இடம்பெற்ற காலப்பகுதியிலேயே வடக்கில் தெரியத்தொடங்கியிருந்தன. கத்தோலிக்க பாதிரியார்கள் கைது 1982 நவம்பர் 14 ஆம் திகதி கத்தோலிக்க பாதிரியார்களான சிங்கராயர் மற்றும் சின்னராசா ஆகியோர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குருநகர் இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர். 1982 ஒக்டோபர் 29 ஆம் திகதி, சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இவர்கள் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கத்தோலிக்க பாதிரியார்கள் கைது செய்யப்பட்டமையானது யாழ். கத்தோலிக்க மக்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் பெரும் எதிர்ப்புணர்வையும் எழுச்சியையும் உருவாக்கியிருந்தது. மாணவர்கள், கத்தோலிக்க மதகுருமார் என்போர் குறித்த கைதுகளுக்கெதிராக தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். யாழ். மறைமாவட்ட ஆயரும் குறித்த கைதுகளுக்கெதிராகத் தனது கடுமையான கண்டனத்தை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் தெரிவித்திருந்தார். ஆனால் ஜே.ஆரோ, ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமோ இதனைப் பொருட்படுத்தவில்லை. 1982 டிசெம்பர் 15 ஆம் திகதி, கைதுகள் நடந்து ஒரு மாதம் கடந்திருந்த பொழுதில், வவுனியா புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஏறத்தாழ 500 பேர் கூடி, குறித்த கைதுகளுக்கெதிராக இறைவழிபாட்டையும் அதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டமொன்றையும் முன்னெடுத்த வேளை, அங்கு தேவாலயத்துக்குள் நுழைந்த பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியதுடன், அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட மக்கள் மீது கடுமையான தாக்குதலையும் நடத்தி குறித்த கூட்டத்தைக் கலைத்தனர். இதேவேளை, 1982 நவம்பர் 18 ஆம் திகதி, குறித்த, சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரபல எழுத்தாளராக இருந்த நிர்மலா நித்தியானந்தன் கைது செய்யப்பட்டு, குருநகர் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட முதல் பெண் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த பதற்றம்மிகு சூழலில்தான், தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான தமது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் தெரிவித்திருந்தார்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகிறது. அரசியலமைப்புக்கான ஐந்தாவது திருத்தம் மேலும், இந்தச் சர்வசன வாக்கெடுப்பு முடிவுகளைத் தேர்தல் தொகுதி ரீதியில் ஆராய்ந்தால், மொத்தமிருந்த 168 தொகுதிகளில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 48 தொகுதிகளில் தோல்வியடைந்தது எனலாம், அதாவது பெரும்பான்மையைப் பெறத் தவறியது. இது அந்தந்தத் தொகுதிகளுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்கு வேட்டு வைப்பதாக அமைந்தது. இதன்படி 1983 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் அமைச்சர், ஆறு பிரதி அமைச்சர்கள், இரண்டு மாவட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தனர். அவர்களின் பதவி விலகலுக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கான நியமனத்தினை குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் செய்ய முடியும். ஆனால், ஜே.ஆரின் திட்டம் வேறாக இருந்தது. அவர் இடைத்தேர்தலுக்குச் செல்ல விரும்பினார். ஆனால், 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பினூடாக ஜே.ஆர் அறிமுகப்படுத்தியிருந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ, விருப்புவாக்கு தேர்தல் முறையின் கீழ் இடைத் தேர்தலுக்கான அவசியப்பாடு இருக்கவில்லை. ஆனால், இம்முறையின் கீழ் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆகவே, இடைத் தேர்தல் ஒன்றை நடத்துவதானால், அரசியலமைப்புக்கு ஒரு திருத்தத்தை முன்வைக்க வேண்டியது அவசியமானது. ஒரு கட்சியின் செயலாளர் குறித்த வெற்றிடங்களை நிரப்பத் தவறும் பட்சத்தில், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக அரசியலமைப்புக்கு ஐந்தாவது திருத்தம் முன்வைக்கப்பட்டது. அரசியலமைப்புக்கான ஐந்தாவது திருத்தம், நாடாளுமன்றத்தில் 122-0 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில், ஓர் எதிர்ப்பு வாக்குகூட இன்றி நிறைவேற்றப்பட்டது. மைத்ரிபால சேனநாயக்க, எஸ்.டீ.பண்டாரநாயக்க மற்றும் ஹாலிம் இஷாக் ஆகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது, நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. அவர்களைத் தவிர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்த போதும் அவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. பிரதான எதிர்க்கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பின்போது நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்புக்கு ஐந்தாவது திருத்தத்தை முன்வைத்ததனூடாக இடைத் தேர்தல் நடத்துவதற்கான சட்ட ஏற்பாட்டை ஜே.ஆர் அரசாங்கம் உருவாக்கியது. மாக்கியாவலியின் ‘இளவரசன்’ புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு வெறும் ஐந்து வருடங்களுக்குள்ளாகவே அது ஐந்து முறை திருத்தப்பட்டுவிட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன், இது ஜே.ஆர் கொண்டிருந்த ஒப்பற்ற அதிகார பலத்தையும் சுட்டிக்காட்டி நிற்கின்றது. தான் நினைத்ததைச் செய்வதற்கு அரசியலமைப்பு தடையாக இருப்பின் அதனை மாற்றியமைக்கத்தக்க பெரும் அதிகாரபலம் அவரிடம் குவிந்து கிடந்தது. இடதுசாரிகள் விமர்சித்தது போலவே “ஜே.ஆரின் சர்வாதிகாரம்” இலங்கையில் ஆரம்பமாகியிருந்தது! மாக்கியாவலியின் இளவரசனாக அவர் உருவாகியிருந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/194946/தம-ழ-த-தல-ம-ய-ன-ம-னம-ம-ஜ-ஆர-ன-வ-ற-ற-ய-ம-#sthash.ps62SSQu.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted April 24, 2017 Author Share Posted April 24, 2017 (edited) கைதுகளும் மாணவர் மற்றும் இளைஞர் எழுச்சியும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 89) - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாகவும் அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலும் 1982 நவம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கத்தோலிக்க குருவானவர்களான சிங்கராயர் மற்றும் சின்னராசா மற்றும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி எம். நித்தியானந்தன் மற்றும் அவரது மனைவியும் எழுத்தாளருமான நிர்மலா நித்தியானந்தன் ஆகியோர் தொடர்ந்தும் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டார்கள். அவர்கள் தமது சட்டத்தரணிகளைக் கூட சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. வெளியுலகத் தொடர்பேதுமின்றி, அவர்கள் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், கத்தோலிக்க குருவானவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கடும் கண்டனமும் யாழ். மாவட்ட ஆயரிடமிருந்து அவர்களை விடுதலை செய்வதற்கான அழுத்தமும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு வழங்கப்பட்டன. ஆனால், இந்த அழுத்தங்களும் கண்டனமும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இதைவிடவும் மாணவர்கள் உள்ளிட்ட பல இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். யாழில் வீதிக்கு இறங்கிய மாணவர்கள், இளைஞர்கள் இந்தச் சூழலில்தான் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் மாணவர்களிடையே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கும் அரச பயங்கரவாதத்துக்கும் எதிராக பெரும் எழுச்சியொன்று ஏற்பட்டது. 1983 ஜனவரி 26 ஆம் திகதி பெரும்தொகையான இளைஞர்களும் மாணவர்களும் யாழ். நகர வீதிகளில் இறங்கி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கோசத்துடன் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள். வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடப்படவிருந்த இலங்கையின் சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கவும், அன்று ஹர்த்தால் நடவடிக்கையை முன்னெடுக்கவும் சில இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்தன. தமிழ் மக்களுக்கு எதிரான பாகுபாடு, அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராக பெப்ரவரி நான்காம் திகதி ஹர்த்தால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடச் சில தமிழ்த் தலைமைகளும் அழைப்பு விடுத்தன. அதனடிப்படையில் 1983, பெப்ரவரி நான்காம் திகதி ஹர்த்தால், வேலைநிறுத்தப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. பெரியண்ணன் அரவணைப்பில் பலம்பெற்ற ஆயுதக் குழுக்கள் மறுபுறத்தில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும் விரிவடையத் தொடங்கியிருந்தன. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறத் தொடங்கியிருந்தது. அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனமும் தமிழ் அரசியல் தலைமைகள் எதனையும் சாதித்திராத விரக்தியும் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் கட்டவிழ்த்துவிட்டிருந்த வன்முறைகளும் கைதுகளும் தமிழ் மக்கள், இந்த ஆயுதக் குழுக்கள் மீது அனுதாபமும் நம்பிக்கையும் கொள்ளத் தொடங்கக் காரணமானது. 1981 மற்றும் 1982 இல் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பொலிஸார் மீது உட்பட சில தாக்குதல்களையும் வங்கிக் கொள்ளைகளையும் நிகழ்த்தியிருந்தனர் என்பதுடன் வட மாகாணத்தில் அவர்களது நடவடிக்கைகள் பெருமளவு அதிகரித்திருந்தன. இந்தத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் அடைக்கலம் என்பவற்றை இந்திய அரசாங்கம் வழங்கிக்கொண்டிருந்தது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே முன்வைத்தார்கள். இதில் உண்மையில்லாமலும் இல்லை. தமிழ் இளைஞர் ஆயுதக் குழு உறுப்பினர்கள் பலரும் பதுங்குவதற்கும் காயமடைந்தபோது மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கும் கடல்மார்க்கமாக பாக்குநீரிணையைக் கடந்து தமிழகத்துக்குச் செல்வது வழமையாகவே இருந்தது. மேலும், தமிழகத்திலும் மற்றும் சில பிரதேசங்களிலும் தமிழ் இளைஞர், ஆயுதக் குழுக்களின் பயிற்சி முகாம்கள் இருந்தமை பற்றி இலங்கையின் இனமோதல் பற்றிய பல நூல்களிலும் குறிப்புகள் இருக்கின்றன. ஆகவே, இந்தியாவின் மறைமுக உதவியுடன் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பலமடையத் தொடங்கின என்பதுடன், அவை தமிழ் மக்களிடையே முக்கியத்துவம் மிக்க சக்தியாகவும் உருவாகத் தொடங்கியிருந்தன. இடைத்தேர்தலுக்குத் தயாரான ஜே.ஆர் யாழ்ப்பாணமும் வடக்கு,கிழக்கும் கொதித்துக் கொண்டிருந்த நிலையில், ஜே.ஆர். ஜெயவர்த்தன இடைத் தேர்தலுக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கும் தயாரானார். நாடாளுமன்றத்தின் ஆயுளை நீடிப்பதற்கான சர்வசன வாக்கெடுப்பில், ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிராத தொகுதிகளுக்குப் பொறுப்பாகவிருந்தோர் உள்ளிட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1983 பெப்ரவரி 10 ஆம் திகதி பதவிவிலகினர். அவர்களுக்கு மாற்றானவர்களை நியமிப்பதற்குப் பதிலாக, இடைத் தேர்தலொன்றுக்குச் செல்ல ஜே.ஆர் விரும்பினார். 1978 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய இரண்டாம் குடியரசு யாப்பில், இடைத் தேர்தலொன்றுக்கான ஏற்பாடுகள் இருக்கவில்லை. ஆகவே, அந்த ஏற்பாட்டை அரசியலமைப்புக்கான ஐந்தாவது திருத்தமாகக் கொண்டுவந்து, 1983 பெப்ரவரி 25 ஆம் திகதி நிறைவேற்றினார். மீண்டும் தேர்தல்களுக்கு இலங்கை தயாரானது. தங்கதுரை நீதிமன்றில் உரைத்தவை 1983 பெப்ரவரி 24 ஆம் திகதி தமிழீழ விடுதலை இயங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான தங்கதுரை என்றறியப்பட்ட நடராசா தங்கவேல் உள்ளிட்டோர் மீதான வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்படவிருந்தது. வழக்கின் தீர்ப்புக்கு முன்பதாகத் தனது கருத்தை தெரிவிக்க வழங்கப்பட்ட வாய்ப்பின்போது, தங்கதுரை கூறியவை இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதாகவும் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தியதன், அல்லது விடுதலை கோரியதன் காரண காரியங்களை விளக்குவதாகவும் அமைந்தது. ஆகவே, தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன என்ற தேடலில், தங்கதுரை நீதிமன்றில் உரைத்தவற்றிலிருந்து சில முக்கிய கருத்துகளை உற்று நோக்குதல் முக்கியமானதாகிறது. “வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாம்தரப் பிரஜைகளாக்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே. இதன் விளைவே தமிழ்த் தலைவர்கள், தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும் தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புகளையும் மீறித் திட்டமிட்ட முறையில், சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விசயங்கள் அல்ல; இக்காலகட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும் உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன? நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ். செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீ லங்காவின் ஏவல் இராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல. இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின் வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன? காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில இலட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்” என்று சொன்ன தங்கதுரை, சுதந்திர இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்த அடக்குமுறையை விளங்கப்படுத்தியிருந்தார். மேலும், “நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதேவேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை, அர்த்தசாமத்தில் இராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?” என்று கேள்வியெழுப்பிய தங்கதுரை, “பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை. ஆக்கிரமிப்புகள் வேறுபட்ட அதிகார அமைப்புகளினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை. இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம், குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று” என்று தம்முடைய விடுதலைக் கோரிக்கைக்கான நியாயத்தை முன்வைக்கிறார். மேலும், “இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது இலட்சியம் மட்டுமல்ல, இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும் தமக்கு உண்டான அரசியல், பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவர். எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை. எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கிகரித்திருப்பின் இந்நிலை இத்தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கிகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த 35 ஆண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கு, அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவிதையை ஊன்றி வளர்த்துள்ளீர்கள். ஆனால், சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது, தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்குத் தமிழினத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்” என்று பெரும்பான்மை மக்களிடையே இன மைய அரசியலைத் தூண்டும் இலங்கையின் அரசியல் கலாசாரம் மீதான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அத்துடன், “உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட, இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத, மீதி எந்தச் சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே” என்று தமிழ் மக்கள் வேண்டுவது விடுதலைதான் என்ற தன்னுடைய கருத்தையும் முன்வைத்தார். தங்கதுரை உள்ளிட்ட ஆறுபேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகங்களில் வகுப்புத்தடை 1983 பெப்ரவரி 24 ஆம் திகதி கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, பேராதனை, களனி மற்றும் ருஹூணு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் வகுப்புத்தடை போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அதற்கான காரணமென்ன? (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/195312/க-த-கள-ம-ம-ணவர-மற-ற-ம-இள-ஞர-எழ-ச-ச-ய-ம-#sthash.wow4bN09.dpuf Edited April 24, 2017 by நவீனன் Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted May 8, 2017 Author Share Posted May 8, 2017 பலம் பெறத் தொடங்கிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் 01-05-2017 06:02 PM Comments - 0 Views - 156 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 90) - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் 1983 பெப்ரவரி 24 ஆம் திகதி பேராதனை, களனி மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், ஏற்கெனவே கொழும்பு மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் முன்னெடுத்து வந்த, வகுப்பு பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கொழும்பு மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனும் தமது வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் தம்மில் ஒருவர் பாதிக்கப்படும் போது, அதற்காக இணைந்து குரல்கொடுப்பது புதுமையல்ல. ஆனால், இந்த நிலைமை மாறுவதற்கு நீண்ட காலம் எடுக்கவில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் நிலைமை தலைகீழான வரலாறும் பல்கலைக்கழகங்களில் எழுதப்பட்டது என்பதுதான் மறுக்கப்பட முடியாத உண்மை. பலம்பெற்ற தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் 1983 ஆம் ஆண்டு என்பது இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில், இலங்கை வாழ் தமிழர் வரலாற்றில், இவ்வளவும் ஏன்? இலங்கை வரலாற்றிலேயே மறக்கப்பட முடியாத ஒரு வருடம். இலங்கை வாழ் தமிழர்களின் எதிர்கால அரசியலை, போராட்டத்தை, தலைவிதியை நிர்ணயித்த வருடம் என்று சொன்னால் கூட மிகையாகாது. தமிழ் அரசியல் தலைமைகளின் தோல்வி; தமிழ் அரசியல் தலைமைகளின் இணக்கப் போக்கை உதாசீனம் செய்த இலங்கை அரசாங்கத் தலைமைகளின் மெத்தனப்போக்கு; தமிழ் மக்களின் அபிலாஷைகள் மீது அவர்கள் காட்டிய பராமுகம்; தமிழ் மக்களுக்கு எதிராக இந்த நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அடக்குமுறைகள்; வன்கொடுமைகள் எல்லாம் ஒன்றிணைந்து தமிழ் இளைஞர்களை ஆயுதவழியில் விடுதலையை நோக்கிச் செல்ல வைத்ததுடன், தமிழ் மக்கள் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க அல்லது அதன் மீது அனுதாபம் கொள்ள வேண்டிய நிலைக்குச் செல்லவேண்டிய சூழலையும் உருவாக்கியது. இந்த இடத்தில், வடக்கு-கிழக்கில் பலம்பெற்றுக் கொண்டிருந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றிக் குறிப்பிடுதல் அவசியமாகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு புதிய ஆயுதங்களுடனும் அதிகரித்து வந்த நிதிப்பலத்துடனும் பலம்பெற்றுக் கொண்டு வந்தது. விடுதலைப் புலிகள் பற்றி யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த டபிள்யூ.பீ.ராஜகுரு கூறியதை டேவிட் செல்போர்ன் பின்வருமாறு பதிவு செய்கிறார்: “ஸ்டேலிங் சப்-மெஷின் துப்பாக்கிகள், தன்னியக்க ரைபிள்கள், 303 இலக்க ஆயுதங்கள் எல்லாம் விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள். இவற்றில் சில தாக்குதல்களிலும் சுற்றி வளைப்புகளிலும் அவர்களால் கைப்பற்றப்பட்டவை. ஆனால், ஏனையவை சாதாரணமாக இங்கு கிடைக்கப் பெறுபவை இல்லை. அவர்களுக்கான நிதி, வெளிநாட்டில் வாழும் தமிழர்களால் திரட்டப்படுகிறது. அவர்கள் சுத்தமான கெரில்லாப் பயங்கரவாதிகள். அவர்களை அடக்குவது கடினமாகிறது என்பதுடன் அவர்களுடைய திறன்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது” என்கிறார். இதேபோல இலங்கை இராணுவத்தின் படைகளின் தலைமை அதிகாரியாக இருந்த திஸ்ஸ வீரதுங்க, விடுதலைப் புலிகள் பற்றிச் சொன்னவற்றையும் டேவிட் செல்போர்ன் பின்வருமாறு பதிவு செய்கிறார்: “நேர்மையாகச் சொல்வதானால் நாங்கள் அவர்களை விட முன்னிலையில் இல்லை. யாழ்ப்பாணத்தில் படையினர் ஒரு தீப்பெட்டியோ, பற்பசையோ வாங்க வேண்டுமானால் கூட பெரும் பார ஊர்தியில் படையோடு செல்லவேண்டியுள்ளது. தாக்குதலின் ஆரம்பம் பயங்கரவாதிகளின் கையிலேயே உள்ளது. அவர்களே நேரத்தையும் இடத்தையும் தீர்மானிக்கிறார்கள். எங்களால் பதிலடிதான் கொடுக்க முடிகிறது. எங்களின் அச்சம் ஆழமாகிறது. காரணம் விடுதலைப் புலிகளுக்கான அரசியல் பயிற்சி வழங்குவதென்பது பிரித்தானியாவிலிருந்து இணைப்பூக்கம் செய்யப்படுகிறது. இதற்கு மேற்காசிய தொடர்புமுண்டு. யாழ்ப்பாணத்திலுள்ள 16 பொலிஸ் நிலையங்களில் ஒன்பது மூடப்பட்டுவிட்டன” என்றார். இவற்றைச் சுட்டிக் காட்டிய டேவிட் செல்போர், விடுதலைப் புலிகளை அடக்குவதில் பொலிஸாரும் இராணுவமும் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம், விடுதலைப் புலிகளுக்கு அவர்களுடைய சமூகம் பாதுகாப்பளிப்பதாகும் என்றும் குறிப்பிடுகிறார். உண்மையில், இது குறிப்பிடப்பட்டாக வேண்டியதொரு விடயம். தமிழ் இளைஞர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை, அரச இயந்திரம் அடக்கியொடுக்குவதற்கு ஏறத்தாழ மூன்று தசாப்தகாலம் தேவைப்பட்டிருக்கிறதென்றால், அதற்கு அந்தப் போராளிகளுக்கு அவர்கள் போராடிய சமூகமும் அம்மக்களும் அளித்த ஆதரவும் பாதுகாப்பும்தான் காரணம். பயங்கரவாதிகளுக்கு அந்த மக்கள் ஆதரவளித்தார்கள் என்று அவர்களைக் குற்றம் சுமத்துவதைவிட, பயங்கரவாதிகள் உருவாகுவதற்கும் அதை அந்தச் சமூகத்தின் சாதாரண மக்கள் ஆதரிப்பதற்கும் என்ன காரணம் என்று தேடினால் மட்டுமே, இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான மூல காரணங்களை உணர்ந்து, அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம், நீடித்து நிலைக்கத்தக்க சமாதானத்தை உருவாக்க முடியும் என்பதை இலங்கை அரசாங்கமும் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் முகம் இந்த நிலையில், 1983 மார்ச் 7 முதல் 15 வரை இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில், அணிசேரா நாடுகளின் ஏழாவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் தேசிய விடுதலைக்கான தமிழ் மக்களின் போராட்டம் என்ற தலைப்பிடப்பட்ட குறிப்பாணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. “உலக தேசங்களின் சமூகத்துக்கு, இலங்கை தன்னை பௌத்தத்தின் கொள்கைகளான அமைதி மற்றும் தர்மத்தைப் பின்பற்றும், அதியுன்னத அரசியல் தத்துவமான சோசலிஸ ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும், நடுநிலையான அணிசாரா பாதையை முன்னெடுக்கும் சொர்க்கபுரித் தீவாகக் காட்டிக்கொள்கிறது. இதற்கு முரண்படும் வகையில், இந்த அரசியல் முகமூடிக்குள் யதார்த்தமான உண்மைகளான, இனரீதியான அடக்குமுறை, அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல்கள், பொலிஸினதும், இராணுவத்தினதும் மிருகத்தனமான வன்கொடுமை, இனவழிப்பு முயற்சி என்பன ஒளிந்திருக்கின்றன. இலங்கையின் ஆளும் மேல்தட்டு வர்க்கமானது, சுதந்திரம் பெற்றது முதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு இசைவான சர்வாதிகார அரசியல் திட்டமொன்றினூடாக, தமது அரசியல் அதிகாரத்தை தேசிய பேரினவாதம், மத வெறித்தனம் போன்ற சித்தாந்தங்களினூடாகவும் மற்றும் நிதர்சனத்தில் தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட, விசமத்தனமான, கொள்கைரீதியிலான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலமும் தக்கவைத்து வருகிறது. சர்வதேச மனிதநேய அமைப்புகளால் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை போன்ற சர்வாதிகார ஆட்சி கொண்ட ஒரு நாடானது, உலகப் பேரவையொன்றில் ஜனநாயகத்தையும் தர்மத்தையும் தூக்கிப்பிடித்தபடி நடைபயில்வது ஒரு சோகமான முரண்பாடு. எமது நோக்கமானது, இந்தப் போலித்தனத்தை அம்பலப்படுத்தி, உங்கள் முன் உண்மையான கதையை முன்வைப்பதாகும். எங்கள் மக்களின் பெரும் துன்பமும் வீரம்மிகு போராட்டமும் நிறைந்த உண்மைக் கதை. தமது சுயமரியாதைக்கும் விடுதலைக்குமாகப் போராடுவதைவிட, அவர்களுக்கு வேறு வழியில்லை. இல்லையெனில் அவர்கள் அடிமைத்தனத்துக்குள்ளும் மெதுவான மரணத்துக்குள்ளும் தள்ளப்பட்டு விடுவார்கள்” எனத் தமது தரப்பின் நியாயப்பாடுகளை விடுதலைப் புலிகள் உலக அரங்கில் எழுத்து மூலம் முன்வைத்தார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியலின் அடுத்த கட்டப் பாய்ச்சலாக இதனைக் கருதலாம். அந்தக் குறிப்பாணையில் ‘ஆயுதப் போராட்டமும் விடுதலைப் புலிகள் இயக்கமும்’ என்ற தலைப்பின் கீழ் தமது ஆயுதப் போராட்டத்தின் காரண காரியங்களை அவர்கள் இவ்வாறு விவரித்தார்கள்: “தேசிய விடுதலைக்கான போராட்டத்திலே, ஜனநாயக ஆர்ப்பாட்டங்கள் தோல்வி கண்ட நிலையிலே, அமைதி வழியிலே மக்களைப் போராடச் செய்வதற்கான தார்மீகப் பலம் தீர்ந்துவிட்ட நிலையிலே, எழுபதுகளிலே தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் உதயமானது. காட்டுமிராண்டித்தனமான அரச பயங்கரவாதத்துக்கு எதிராகத் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதப் புரட்சியைத் தவிர வேறு வழிகள் எமது மக்களுக்கு இல்லாது போன நிலையில்தான் ஆயுதப் போராட்டம் பிரபல்யமான போராட்ட வடிவமாக எழுச்சிபெற்றது. ஆகவே, ஆயுதப் போராட்டமென்பது தாங்கமுடியாத தேசிய அடக்குமுறை வரலாற்றின் உருவாக்கம். அது அடக்குமுறைக்குள்ளான எமது மக்களின் அரசியல் போராட்டத்தின் விரிவாக்கமும், தொடர்ச்சியும், முன்னகர்வுமாகும். புரட்சிகர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் எமது இந்த விடுதலை இயக்கமானது மிகக்கவனமாகவும் எச்சரிக்கையுடனும் எமது போராட்டத்துக்கான குறிப்பிட்ட உறுதியான நியமங்களை ஆராய்ந்தறிந்த பின்பும், தேசிய விடுதலையை முன்னெடுப்பதற்கு எமது மக்களுக்கு தீர்மானமான போராட்டமொன்றைத் தவிர வேறு தெரிவில்லை; வரலாற்று நிலையை முழுமையாக உணர்ந்த பின்புமே எங்களால் உருவாக்கப்பட்டது. எமது முழுமையான உபாயமானது தேசியப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டம் என்பவற்றை ஒருங்கிணைப்பதுடன், வெகுசனங்களின் முற்போக்கு நாட்டுப்பற்று உணர்வையும் சோசலிஷ புரட்சிக்கும், தேசிய விடுதலைக்குமான உழைக்கும் வர்க்கத்தின் மனச்சாட்சியையும் ஒன்றிணைப்பதாக அமைகிறது. எமது விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டமானது, தமிழ் வெகுசனத்தின் பெரும் பகுதிகளால் ஆதரிக்கப்படுகிறது. எமது புரட்சிகர அரசியல் திட்டமானது ஏகாதிபத்திய மேலாதிக்கம் கொண்ட இலங்கை அரசிலிருந்து அரசியல் விடுதலை கோரும் எமது மக்களின் உறுதியான அரசியல் அபிலாஷையை வெளிப்படுத்துவதே மக்கள் எம்மை ஆதரிப்பதற்கான காரணமாகும்.” விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் போராட்ட சக்தியாக மட்டுமன்றி, அரசியல் சக்தியாகவும் தம்மை முன்னிறுத்தத் தொடங்கியிருந்தார்கள். இதேவேளை மறுபுறத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) உள்ளிட்ட வேறு சில தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களும் கூடத் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தன. தமிழ்த் தலைமைகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறத்தொடங்கிய ஆயுதக் குழுக்கள் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் இந்த எழுச்சி, இலங்கை அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் பெரும் சவாலாக மாறத் தொடங்கியிருந்தது. இந்த ஆயுதக்குழுக்களை வளர்த்து விட்டதில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்களே தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் ஆரம்பகாலத்தில் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் இன்றுவரை முன்வைத்து வருகிறார்கள். இளைஞர்கள் ஆயுதக் குழுக்களாக செயற்படுவதை ஆரம்பத்திலே அவர்கள் ஆதரித்திருந்தாலும், அந்த ஆயுதக்குழுக்களின் வளர்ச்சியும் எழுச்சியும் அந்த ஆயுதக்குழுக்களுக்கு அதிகரித்து வந்த மக்களாதரவும் தமிழ்த் தலைமைகளின் இருப்பையும், அவர்களது அரசியலையும் நேரடியாகப் பாதிக்கத் தொடங்கியது. தம்முடைய அரசியலுக்கு ஓர் இணைத்துணையாக இந்த இளைஞர்களும் ஆயுதக் குழுக்களும் இருக்கக்கூடும் என்று தமிழ்த் தலைமைகள் எண்ணியிருக்கலாம். ஆனால், தமிழரின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் மாறத்தொடங்கியதானது, தமிழ் அரசியல் தலைமைகளுக்குப் பெரும் சிக்கலையும் சங்கடத்தையும் தோற்றுவித்தது. தமிழ் அரசியல் தலைமைகளும், ஆயுதக் குழுக்களும் முரண்பாடான நிலைப்பாடுகளை எடுத்தபோது இருதரப்பிடையே இருந்த முறுகல்நிலை அடுத்தகட்டத்தை அடைந்தது. அதன் விளைவாகத் தமிழ்த் தலைவர்கள் பலரினதும் உயிர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகின. உள்ளூராட்சித் தேர்தலும் முரண்பாடுகளும் இந்தச் சந்தர்ப்பத்தில்தான், நாடாளுமன்றத்துக்கான இடைத் தேர்தல்களோடு, உள்ளூராட்சித் தேர்தல்களையும் நடத்த அரசாங்கம் தீர்மானித்தது. 1983 மே 18 ஆம் திகதி இடைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடத்தப்படவிருந்தன. இதற்காக வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தன. இந்த இடத்தில்தான் தமிழ்த் தலைமைகளுக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மிக வெளிப்படையான அரசியல் நிலைப்பாடு சார்ந்த பிளவொன்று உருவானது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், குறித்த உள்ளூராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்கக் கோரியது. ஆனால், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோ உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தது. மேலும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட வெகு சிலர் முன்வந்தனர். தமது நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மீது, ஒரு போதும் இந்த ஆயுதக்குழுக்கள் தயவு தாட்சண்யம் காட்டியதில்லை. ஆகவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் நிலைப்பாட்டுக்கும், விருப்பத்துக்கும் மாறாகச் செயற்பட்டதற்கான விளைவுகள் பாரதூரமானதாக இருந்தன. ( அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/195948#sthash.et8YuEmb.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted May 16, 2017 Author Share Posted May 16, 2017 (edited) 1983 ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்: இராணுவத்தின் வெறியாட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 91) - என்.கே. அஷோக்பரன் LLB (Hons) 1983 மே 18 ஆம் திகதி இடைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடத்தப்படவிருந்த நிலையில், குறித்த உள்ளூராட்சித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்திருந்ததோடு, தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அறிவித்தது. இந்த நிலையில், யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட முன்வந்த கே.வி.இரட்ணசிங்கம், எஸ்.எஸ். முத்தையா மற்றும் வல்வெட்டித் துறையில் போட்டியிட இருந்த இன்னொருவர் ஆகிய மூவரும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் 1983 ஏப்ரல் 29 ஆம் திகதி சுடப்பட்டார்கள். அவர்கள் சுடப்பட்டதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தேர்தலைப் புறக்கணிக்கும் அறிவிப்பை மீறியமையினாலேயே இந்த மரணங்கள் சம்பவித்தன என்று ஒரு துண்டுச்சீட்டில் எழுதப்பட்டிருந்த செய்தியையும் விட்டுச் சென்றிருந்தார்கள். இந்தச் சம்பவம் யாழ். மாவட்டத்தில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியதுடன், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் குறித்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதை பெரும் சவாலாக மாற்றியிருந்தது. இந்தச் சம்பவங்களின் பின் ஐக்கிய தேசியக் கட்சியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸூம் வட மாகாணத்தில் குறித்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தது. தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பு எவ்வாறாக இருப்பினும், குறித்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் உறுதியாக இருந்தார்கள். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுடன், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியான முரண்பாட்டு நிலை ஒன்று உருவாகியிருந்தது. ஆனால், வலிமை மிகுந்த தலைவராக அறியப்பட்ட அமிர்தலிங்கம், ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு, அவை தான் வளர்த்துவிட்டதாகப் பரவலாக நம்பப்பட்ட தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களாக இருப்பினும், அஞ்சுபவராக இருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மும்முரமான தேர்தல் பிரசாரத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஈடுபட்டிருந்தது. இருதரப்பிடையேயும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த தீ பற்றியெரிய அதிக நாட்கள் தேவைப்படவில்லை. முதல் முறுகல் 1983 மே எட்டாம் திகதி, யாழ்ப்பாணத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாபெரும் பிரசாரக் கூட்டமொன்று அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அதனிடையே ஆயுதங்களுடன் நுழைந்த சில விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி, கூட்டத்தைக் கலைத்ததுடன், அமிர்தலிங்கத்துக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினார்கள். அங்கு வந்திருந்த ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பின் இளைஞன் ஒருவன், அமிர்தலிங்கத்தை பார்த்து “30 வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேள்வியெழுப்பியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றி, தன்னுடைய நூலில் எம். ஆர். நாராயண் சுவாமி குறிப்பிடுகிறார். அதன் பின்னர், குறித்த கூட்டத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமிர்தலிங்கத்தினுடைய வாகனத்திலேறி, அதனைக் கடத்திக் கொண்டு சென்ற அந்த ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள், அந்த வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து, வாகனத்தின் சக்கரங்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தி, வாகனத்தை ஒரு சுடலை அருகே விட்டுச் சென்றதாகவும் குறித்த நூலில் எம். ஆர். நாராயண் சுவாமி பதிவு செய்கிறார். முடிவு தமிழ்மக்கள் கையில் ஆனால், இதனைக் கண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கலங்கவில்லை. தேர்தலில் போட்டியிடும் முடிவிலிருந்தும் அவரும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் மாறவில்லை. “நாங்கள் ஆயுதங்களைக் கண்டு அஞ்சவில்லை; மக்களின் முடிவு எதுவோ, அதனை ஏற்றுக் கொள்ள நாம் தயார்” என்பதே அமிர்தலிங்கத்தினது நிலைப்பாடாக இருந்தது. தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளான தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களின் விரக்தியின் விளைவாக உண்டான கோபத்தின் பிரதிநிதிகளாக அடையாளம் காணப்படக் கூடிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த இந்த வெளிப்படையான முறுகல், தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றின் முக்கிய திருப்புமுனைகளில் ஒன்று. இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கப் போகும் முடிவானது, தமிழ் மக்கள் தெரிவு செய்யும் பாதையையும் சேர்த்தே தீர்மானிப்பதாக அமைந்தது. வடக்கில் களமிறங்கிய இராணுவம் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட இருந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நாளிலிருந்தே, வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலின் போது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் தாக்குதல்கள் நிகழ்த்தப்படலாம். அதிலும் குறிப்பாக தேர்தலைப் புறக்கணிக்கக் கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், தேர்தல் நடைபெறும் வாக்குச் சாவடிகளின் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதை இலங்கையின் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உணர்ந்திருந்தது. அதன் விளைவாகத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக இராணுவத்தைக் களமிறக்கியிருந்தது. இதற்காக அநுராதபுர இராணுவ முகாமிலிருந்து மேலதிக படைகள் யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டிருந்தன. வழமையைப் போலல்லாது, வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு வாக்குப் பெட்டிக்கும் தலா ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா மூன்று இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். ஆனால், இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட அலட்சியத்துடனே நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பை முழுமையாக வழங்குவதற்குத் தேவையான போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் வசதிகளைக் கூட, தமக்குப் பெற்றுத்தரவில்லை என்றும் அன்று இந்த வாக்குச்சாவடிகளுக்குப் பாதுகாப்பு வழங்கிய இராணுவத்தின் படைக் குழுவொன்றுக்குத் தலைமை தாங்கியவரும், 2009 இல் இறுதி யுத்தத்தின் போது, வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று, யுத்த வெற்றியை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்ததாகச் சொல்லும் இலங்கை இராணுவத்தின் 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தன்னுடைய ‘நந்திக் கடலுக்கான பாதை’ (ஆங்கிலம்) என்ற நூலில் குறிப்பிடுகிறார். வாக்குச் சாவடி மீது தாக்குதல் தேர்தல் தினத்தன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் வாக்குச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பலரும் எதிர்பார்த்தது போலவே, யாழ்ப்பாணத்தின் கந்தர்மடம் எனுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மீது, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் கைக்குண்டு ஒன்றை வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஓர் இராணுவவீரர் துப்பாக்கிச் சூட்டுக்கிரையானார். அங்கிருந்த மற்ற இரு இராணுவ வீரர்களும் சில பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்திய போதும், அங்கு தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பினர் அங்கிருந்து தப்பிச் செல்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை. இராணுவத்தின் வெறியாட்டம் இராணுப்படை வீரன் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டமையானது யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டிருந்த ஏனைய இராணுவ வீரர்களை வெறி கொள்ளச் செய்தது. அவர்களது வெறி ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள் மீது வெளிப்பட்டிருந்தால் கூட அதில் ஏதோ நியாயம் இருக்கிறது என்று சொல்லலாம். அது போராடும் ஆயுதம் தாங்கிய இருதரப்புக்கு இடையான யுத்தம்; ஆனால், இலங்கை இராணுவத்தின் வெறி அப்பாவித் தமிழ் மக்களை நோக்கித் திரும்பியதுதான் மிகக் கொடுமையான விசயம். தேர்தல் முடிவடைந்து, வாக்குப் பெட்டிகளை யாழ். மத்திய கல்லூரிக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்த்த பின், கலைந்த இலங்கை இராணுவத்தின் படைகள், யாழ்ப்பாண நகரை நோக்கி விரைந்தன. யாழ். நகருக்குள் வெறித்தனமாக நுழைந்த இராணுவத்தினர், வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் வாகனங்களுக்கும் நெருப்பு வைத்தனர். இந்தக் கோர ஆட்டத்தில் ஏறத்தாழ 64 வீடுகளும் கட்டடங்களும் அழிக்கப்பட்டன. ஏறத்தாழ மூன்று மினி பஸ்கள், ஆறு கார்கள், மூன்று மோட்டார் வண்டிகள், 36 சைக்கிள்கள் அழிக்கப்பட்டன. கட்டுப்பாடின்றி அப்பாவித் தமிழ் மக்கள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்திய இலங்கை இராணுவ வீரர்களை உடனடியாகக் கட்டுப்படுத்தும் இயலுமை அங்கிருந்த கட்டளையிடும் அதிகாரிகளுக்கு இருக்கவில்லை. பல மணிநேரங்களின் பின்னரே குறித்த வெறியாட்டம் நடத்திய இராணுவ வீரர்களை முகாம்களுக்குள் கொண்டுவர இராணுவத்தின் கட்டளை அதிகாரிகளால் முடிந்தது. நியாயங்களும் அநியாயங்களும் தன்னுடைய சக இராணுவீரன் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதற்காக சினங்கொண்ட இலங்கை இராணுவ வீரர்கள் சட்டவிரோதமான முறையில் தனியார் சொத்துகளை அழித்தபோது, அதனைக் கண்ட தனக்கு ஒரு வித திருப்தி உணர்வு ஏற்பட்டது என்று மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். அதன் பின்னர், இது தவறு; இப்படி நடக்க விட்டிருக்கக் கூடாது. இதற்குக் காரணமான வீரர்களை அதிரடியாக இலங்கை இராணுவம் விசாரணை நடத்தி இராணுவத்திலிருந்து வெளியேற்றியது என்று ஆயிரம் நியாயங்களை பக்கம் பக்கமாகச் சொன்னாலும் தமிழ் மக்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள், இலங்கை இராணுவத்தையும் இலங்கை அரசாங்கத்தையும் ஏன் வெறுத்தார்கள் என்பதன் காரணம், மேஜர் ஜெனரல் அப்பாவி மக்களின் சொத்துகள் அழித்தொழிக்கப்பட்டபோது, தனக்கு திருப்தி உணர்வொன்று வந்ததாகச் சொன்ன சொற்களில் அடங்கியிருக்கிறது. ஒரு மக்கள் கூட்டத்தின் துன்பத்தில் நீங்கள் திருப்தி கண்டால், நீங்கள் ஒரு ‘சேடிஸ்ட்’ (மற்றவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்). உங்களை அம்மக்கள் வெறுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தன்னுடைய அதே நூலிலே ரோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) இலங்கை இராணுவ வீரர்கள் மீது மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர்கள் மீது கூடத் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடுகிறார். தன் பிள்ளையை இராணுவத்துக்கு அனுப்பியதற்காக ஜே.வி.பி, ஓர் இராணுவ வீரனின் தந்தையைக் கொன்றதாகக் குறிப்பிடுகிறார். ஜே.வி.பி இராணுவ வீரர்களையும் அவர்களது பெற்றோர்களையும் கொன்றபோது, ஒரு சக இராணுவ வீரனைக் கொன்ற கோபத்தை இலங்கை இராணுவம் அப்பாவி சிங்கள மக்கள் மீதும், அவர்களது சொத்துகள் மீதும் காட்டவில்லையே! ஜே.வி.பிக்கும் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் இடையில் வித்தியாசம் காணத்தெரிந்த இலங்கை இராணுவத்துக்கு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது ஏன்? இதற்கு இனவெறி என்பதைத் தாண்டி வேறொரு வியாக்கியானமும் இருந்ததாக கருதுவது கடினம். தமது சக இராணுவ வீரனைக் கொன்ற ஆயுததாரிகள் மீது, அந்த அமைப்பினர் மீது இராணுவம் தாக்குதலை மேற்கொண்டிருந்தால், அது முற்றிலும் நியாயப்படுத்தத் தக்கதொன்று. ஆனால், யாழ். நகருக்குள் நுழைந்து அப்பாவித் தமிழ் மக்களின் சொத்துகளை அழித்தொழித்ததுடன், ஓர் அப்பாவிக் குடிமகனின் உயிரையும் பறித்த இலங்கை இராணுவத்தின் இந்த வெறியாட்டத்துக்கு எந்த நியாயங்களும் சொல்லப்பட முடியாது. தமிழ் மக்களின் முடிவு தமிழ் மக்கள் ஏன் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை ஆதரித்தார்கள் என்ற கேள்வி இலங்கை அரசியல் அரங்கிலும், சர்வதேசத்திலும் முன்வைக்கப்படும் ஒரு கேள்வியாகும். தமிழ் மக்கள் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை ஆதரித்தார்கள் என்பதைவிட, அந்த ஆயுதக் குழுக்களை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதுதான் பொருத்தமான கருத்தாக இருக்கும். உள்ளூராட்சித் தேர்தலின் வாக்களிப்பு வீதமும் தமிழ் மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ தமக்கான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டிருந்ததையே சுட்டிக் காட்டி நின்றது. (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/196248#sthash.LhjOBB9s.dpuf Edited May 16, 2017 by நவீனன் Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted May 18, 2017 Author Share Posted May 18, 2017 1983: முளைவிடத் தொடங்கிய இனவெறித் தாக்குதல்கள் 15-05-2017 07:24 PM Comments - 0 Views - 177 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 92) என்.கே.அஷோக்பரன் LLB (Hons) அரசியல் தலைமை எதிர் ஆயுதத் தலைமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, 1983 மே மாதத்தில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று மேற்கொண்ட அறிவிப்பை மீறியும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குறித்த தேர்தலில் போட்டியிட்டது. இந்நிலைமையானது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் நேரெதிர் நிலைகளில் நிறுத்தியது. வெளிப்படையான இந்த மோதலுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டிய கடப்பாட்டில் தமிழ் மக்கள் இருந்தார்கள். தமிழ் மக்கள் அளிக்கப் போகும் பதிலே, தமிழர் அரசியலின் போக்கைத் தீர்மானிப்பதாக அமையவிருந்தது. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இருந்தவர்கள் பின்வாங்கிய நிலையில், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்ட நிலையில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி களம் கண்டது. அரசியல் ரீதியில் நிச்சயமாக இது அமிர்தலிங்கத்துக்குப் பெரும் சவாலான ஒரு நிலை. தேர்தலைப் புறக்கணிப்பது என்பது வேறு விடயம்; ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அறிவிப்புக்கு அல்லது அச்சுறுத்தலுக்குப் பின் தேர்தலிலிருந்து விலகுவதும், தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் வேறானதாகும். பழுத்த அரசியல் தலைவரான அமிர்தலிங்கம், அதனை நிச்சயமாகச் செய்திருக்க வாய்ப்பில்லை. இங்கு, தமிழரின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி யார் என்ற பெரும் கேள்விதான் முன்னிலை பெறுகிறது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு, குறிப்பாக பலம்பெற்று வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தேர்தலைப் புறக்கணிப்பது, அதனூடாக இலங்கை அரசாங்கத்தை எதிர்ப்பது மட்டும்தான் நோக்கமாக இருந்திருந்தால் நிச்சயமாக அமிர்தலிங்கத்துடனான பேச்சுவார்த்தைகளினூடாக அதனை அடைந்திருக்கலாம். ஆனால், இது தமிழர்களின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி யாரென்ற ஒருவித போட்டியாக மாறிவிட்டிருந்தது கண்கூடு. தமிழர் அரசியல் தலைமைகளால் இதுவரை எதனையும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியும் கோபமும் அவர்களைத் தாண்டி, தமிழ் மக்களின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆயுதமேந்திய சக்திகளாக தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் உருவாகக் காரணமாயின. இந்த மாற்றத்தை அங்கிகரிப்பதா, நிராகரிப்பதா என்ற கேள்வி தமிழ் மக்கள் முன் தொக்கி நின்றது. அமிரின் நிலைப்பாடு அமிர்தலிங்கம் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். “தமிழீழத் தனியரசை ஸ்தாபிப்பதற்காகப் போராடும் தமிழ் இளைஞர்களின் வீரதீரத்தை எண்ணி பெருமைப்படுகிறேன்” என்று அமிர்தலிங்கம் கூறினார். ஆனால், “அதேவேளை அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தை உதாரணம்காட்டிய அமிர்தலிங்கம், “அயர்லாந்துப் புரட்சி இராணுவமானது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அதேவேளை, வட அயர்லாந்தில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டிருந்தனர்” என்பதைச் சுட்டிக்காட்டிய அதேவேளை, “அயர்லாந்து புரட்சி இராணுவத்துக்குச் சார்பான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரொருவர், அயர்லாந்து விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தமையையும் அவர் சுட்டிக்காட்டினார். போராட்டத்துக்குச் சமாந்தரமாக ஜனநாயக அரசியல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அமிர்தலிங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அவசியப்பாட்டை மறுக்கவில்லை அல்லது அதனை மறுக்கும் நிலையில் அவர் இருக்கவில்லை. ஆனால், தமிழ் மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்திகளாக ஆயுதக் குழுக்கள் மாறிவிடக் கூடாது. அல்லது தமிழ் மக்களின் அரசியல் அடையாளமாக ஆயுதக் குழுக்கள் மட்டும் ஆகிவிடக் கூடாது; மாறாக, பலமான ஜனநாயக ரீதியான அரசியல் சக்தி தமிழ் மக்களிடம் இருக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது, அது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். தமிழ் மக்களின் முடிவு ஆனால், 1983 மே உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வேறானதொரு முடிவை வழங்கியிருந்தார்கள். வடக்கைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ 90% ஆன மக்கள் உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு மொத்த வாக்காளரில் வெறும் 2% வாக்குகளே கிடைத்திருந்தன. யாழ்ப்பாணத்தில் 10% வாக்குகளே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்தது. ஏறத்தாழ ஒரு வருடம் முன்பு நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் அண்ணளவாக 80% வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தலில் அண்ணளவாக வெறும் 10% வாக்குப்பதிவே இடம்பெற்றிருந்தமை ஒரு தடாலடியான மாற்றமாகும். தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கு, தமிழ் மக்களின் அங்கிகாரமாக இதனைக் கருதலாம். அதேவேளை, சில விமர்சகர்கள் ஆயுதங்களுக்கு அஞ்சியே தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை; ஆகவே இது தமிழ் மக்களின் சுயாதீன முடிவல்ல என்றும் கருத்துரைப்பர். ஆனால், ஏறத்தாழ ஒரு வருட காலத்துள் 80% இருந்து 10% ஆக வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைந்தமையானது, வெறுமனே ஆயுத அச்சுறுத்தலால் மட்டும் அடையப்பெறக்கூடியதொன்றல்ல; ஏனெனில் அன்று அத்தனை இலட்சம் மக்களை ஆயுதங்களால் கட்டுப்படுத்தும் அளவுக்கு ஆயுதக்குழுக்கள் அளவிலும் பலத்திலும் பெரிதாக இருக்கவில்லை. ஆகவே, தமிழ் அரசியல் தலைமைகளின் மீதான தமிழ் மக்களின் விரக்தியும் நம்பிக்கையீனமும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் மீதான அனுதாபமும் நம்பிக்கையும் தமிழ் மக்களின் இந்த மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த முடிவு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை நிச்சயம் ஆட்டிப் போடும் ஒன்றாக இருந்திருக்கும். ஏனென்றால், இந்தத் தேர்தல் முடிவு தமிழ் மக்களின் ‘ஏக அரசியல் சக்தி’ என்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் விம்பத்தை நொறுக்குவதாக அமைந்தது. தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல தெற்கிலும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வலுவை இது சிதைப்பதாக அமைந்தது. 1983 ஜூலை ஒன்பதில், ‘லண்டன் டெய்லி ரெலிக்ராப்’ பத்திரிகைக்கு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அளித்த பேட்டியொன்றில், “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பயனற்றது; அவர்கள், அவர்களது உயிர்களுக்கு அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு ஒன்றைச் சொல்வார்கள், வேறொருவருக்கு வேறொன்றைச் சொல்வார்கள். நான் அவர்களுக்காக வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். ஜே.ஆர், ‘ஆசியாவின் நரி’ என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதேவேளை தமிழ் அரசியல் தலைமைகளின் வீழ்ச்சியும், ஆயுதக் குழுக்களின் எழுச்சியும், தமிழர் ஜனநாயக அரசியலின் வலுவைச் சிதைத்தமையையும் நாம் மறுக்க முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் ஜனநாயக அரசியல் இதுவரை எதைச் சாதித்தது என்ற கேள்வியெழுவதையும் தவிர்க்க முடியாது. தமிழ் மக்கள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை நோக்கித் தமது ஆதரவை நகர்த்தியதில் இந்த கேள்வியின் முக்கியத்துவம் அதிகம் என்பதும் மறுக்கப்பட முடியாதது. இடைத்தேர்தல் முடிவு உள்ளூராட்சித் தேர்தல்களுடன், நாடாளுமன்றத்தில் வெற்றிடமாகிய 18 ஆசனங்களுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. இந்த இடைத் தேர்தல்களில் 14 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சியும் மூன்று ஆசனங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஓர் ஆசனத்தை மஹஜன எக்ஸத் பெரமுண சார்பில் போட்டியிட்ட தினேஷ் குணவர்த்தனவும் வென்றிருந்தனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இனவெறி தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சியும் ஆங்காங்கே அவர்கள் நடத்திய தாக்குதல்களும் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு சார்பாக அமையும் விதத்திலான தமிழ் மக்களின் தேர்தல் புறக்கணிப்பும் எல்லாம் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பையும் இனவெறியையும் பேரினவாதிகளிடையே அதிகரித்திருந்தது. தேர்தல்கள் முடிந்த பின்னர், 1983 மே மாதத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த சிங்கள மாணவர்கள் சிலரால், தமிழ் மாணவர்களும் தமிழ் விரிவுரையாளர்களும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். “உங்களைப் போன்ற தகப்பன் பெயர் தெரியாதவர்களுக்கு பல்கலைக்கழகமும் கிடையாது; ஈழமும் கிடையாது” என்று துவேசப் பேச்சுகளால் தமிழ் மாணவர்கள் மீது வசைமாரி பொழியப்பட்டது. மாணவர்கள் என்ற ஒன்றுபட்ட அடையாளத்தைக் கூட இனவெறியும், இனத்துவேசமும் பிளவுபடுத்தியிருந்தது. இந்தத் தாக்குதல்களின் விளைவாக பேராதனை பல்கலைக்கழகத்தில், குறிப்பாக பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த தமிழ் மாணவர்கள், பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறித் தமது வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர். தாக்குதலுக்குள்ளான தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாகவும் இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் வகுப்புப் பகிஷ்கரிப்பில் தமிழ் மாணவர்கள் ஈடுபட்டார்கள். 1983 ஜூன் மாதத்தில் அவர்கள் மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பிய போதும், மீண்டும் தாக்குதல்கள் நடைபெற்றன. தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள் இருவர் பல்கலையிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்துச் சிங்கள மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் வகுப்புப் பகிஷ்கரிப்பு நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்கள் இனரீதியில் பிளவுபட்டமையை இது தெளிவாக வெளிக்காட்டியது. இது அடுத்த மாதத்தில் நாட்டில் நடைபெறவிருந்த அவலங்களுக்கான சமிக்ஞை ஒலியாக இருந்தது. நாட்டில் எங்கிருந்தாலும், தமிழ் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற உணர்வை அடுத்தடுத்து அப்பாவித் தமிழ் மக்கள் மீது இராணுவம் உட்பட, பேரினவாத சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் கோடிகாட்டி நின்றன. வவுனியாவில் வன்முறை இந்த நிலையில், 1983 ஜூன் முதலாம் திகதி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான புளொட் இயக்கத்தால் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) விமானப்படை வாகனம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விமானப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வவுனியாவில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் ஆரம்பமாயின. மரணித்த விமானப் படையினரின் பிரேதங்கள் அவர்களது சொந்தக் கிராமங்களான மினுவாங்கொடை மற்றும் கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, அங்கும் தமிழ் மக்கள் மீது இனவெறித்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அங்கிருந்து அருகருகான பிரதேசங்களுக்கும் இவை பரவின. திருகோணமலையில் இனவெறித் தாக்குதல்கள் இந்தச் சூழலில், திருகோணமலையில் சிங்கள-தமிழ் இன உறவு மிகமோசமான நிலையை எட்டியிருந்தது. திருகோணமலையில் தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் ஆங்காங்கு தொடர்ச்சியாக இடம்பெறத் தொடங்கின. திருகோணமலையில் தமிழ் மக்கள் மீதான, சிங்கள மக்களின் இனவெறித் தாக்குலுக்குக் காரணம், தமிழ் மக்கள் தம்மை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டு, தமிழீழ அரசை ஸ்தாபித்து விடுவார்கள் என்ற அச்சம்தான் என ‘இலங்கையின் தாங்கொணாத் துயர்’ (ஆங்கிலம்) என்ற தனது நூலில் ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார். ஆனால், இது பற்றித் தனது ‘தமிழர்களுக்கெதிரான அரசு’ (ஆங்கிலம்) என்ற நூலில் நான்ஸி மறே, கிழக்கில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. மகாவலி அபிவிருத்தி திட்டத்தினால் தமிழர்கள் அல்ல; மாறாக சிங்களவர்களே நன்மையடைய வேண்டும் என்பதாக இது அமைந்தது. சிங்கள மேலாதிக்கம் கொண்ட சில பிரதேசங்கள் கிழக்கில் உருவாகின. இவை தம்மை விரிவாக்கிக்கொள்ள, தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தின என்று குறிப்பிடுகிறார். காரண காரியங்கள் எதுவானாலும், ஜூன் மாதத்தில் திருகோணமலையில் ஆரம்பமான தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள், இரண்டு மாதங்களுக்கு அதிகமாக நீண்டதுடன், கால ஓட்டத்துடன் அதன் உக்கிரமும் அதிகரித்தது. இந்த வன்முறைகள் பொலிஸாராலும் இராணுவப் படையினரின் ஆதரவுடனும் நடந்தன எனப் பலரும் பதிவு செய்கிறார்கள். வவுனியா, பேராதனை, திருகோணமலை ஆகிய இடங்களில் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் தலையெடுக்கத் தொடங்கியிருந்த நிலையில், வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வேட்டையை இராணுவம் மும்முரமாக முன்னெடுத்தது. நீர்வேலி வங்கிக்கொள்ளை, கந்தர்மடம் வாக்குச்சாவடித் தாக்குதல் ஆகியவற்றை முன்னின்று நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தரான சீலன் என்றறியப்பட்ட சார்ள்ஸ் அன்டனியை இராணுவம் தேடிக்கொண்டிருந்தது. (அடுத்த வாரம் தொடரும்) - See more at: http://www.tamilmirror.lk/196702/-ம-ள-வ-டத-த-டங-க-ய-இனவ-ற-த-த-க-க-தல-கள-#sthash.mwxmXath.dpuf Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted May 23, 2017 Author Share Posted May 23, 2017 1983: பெரும் இனக்கலவரத்துக்கான முஸ்தீபுகள் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 93) இலங்கையின் போராட்ட வரலாற்றை எழுதுவதோ, போராட்டத்தின் முக்கிய சம்பவங்கள், தாக்குதல்கள் பற்றி விவரிப்பதோ இந்தத் தொடரின் நோக்கமல்ல. மாறாக, இலங்கையின் அரசியல் வரலாற்றை உற்று நோக்குவதனூடாக இலங்கையின் இனப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயல்வதுடன், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதை அடையாளம் கண்டு கொள்வதற்கான தேடலே இது. ஆனால், இந்தத் தேடலில், அரசியலிலும் இலங்கை மக்களின் வாழ்க்கையிலும் முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்திய சில சம்பவங்களை முழுவதுமாகப் புரிந்துகொள்வதற்கு, அதன் பின்னணியையும் அதனோடு தொடர்புடைய போராட்டக் காரணிகளையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது. அந்தவகையில், இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள்மீது, நாடு தழுவிய ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறிக் கலவரமான ‘1983 கறுப்பு ஜூலை’ கலவரத்தினுடைய பின்னணியை முழுமையாக விளங்கிக் கொள்வது, இலங்கை அரசியல் வரலாற்றையும் இனப்பிரச்சினை வரலாற்றையும் புரிந்துகொள்வதற்கு மிக அவசியமானதாகும். திருகோணமலையில் தொடங்கிய வன்முறைகள் வவுனியா, திருகோணமலை, பேராதனை எனத் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் 1983 ஜூன் மாதத்திலேயே, அப்பாவித் தமிழ் மக்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் ஆரம்பமாகியிருந்தன. திருகோணமலையில் நிலைமை தீவிரமாகிக் கொண்டிருந்தது. வைத்தியர் எஸ்.ஏ. தர்மலிங்கம் தலைமையிலான தமிழீழ விடுதலை முன்னணி (TELF), திருகோணமலையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவெறித் தாக்குதல்களுக்கு எதிராகக் குரலெழுப்பினார்கள். 1983 ஜூன் 30 ஆம் திகதியளவில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா (அன்றைய சோவியத் ஒன்றியம்), கியூபா, லிபியா, ஈராக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச தூதரகங்களுக்கு, திருகோணமலையில் தமிழர்கள் சந்தித்த இனவெறித் தாக்குதல் பற்றித் தந்தியடித்தார்கள். அதில், ‘திருகோணமலையில் தமிழ் மக்கள் படுபயங்கரமான சூழலை எதிர்கொள்வதாகவும், அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பினும் கொலை, கொள்ளை, தீவைப்புகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் இனவெறி மிகுந்த பாதுகாப்புப் படைகளே இதன் பின்னணியில் இருப்பதாகவும் ஆகவே, நட்பு நாடுகளை உடனடியாக இதில் தலையிட்டுத் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோருகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தோடு, தமிழீழ விடுதலை முன்னணி, 1983 ஜூலை முதலாம் திகதி, திருகோணமலையில் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து, ஹர்த்தால் போராட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், வடக்கில் தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) என்ற அமைப்பு யாழ்தேவி ரயில், அரசுக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தபாற் கந்தோர்கள் உட்பட அரச அலுவலகங்கள் ஆகியவற்றுக்குத் தீவைத்துத் தாக்குதல் நடத்தியது. இது, அரசுக்குப் பெரும் பொருள் இழப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக 1983 ஜூலை இரண்டாம் திகதி, தமிழீழ விடுதலை முன்னணியின் சார்புடையதாகக் கருதப்பட்ட ‘சற்றடே ரிவ்யு’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் ‘சுதந்திரன்’ என்ற தமிழ்ப் பத்திரிகையையும் அரசாங்கம் உடனடியாக மூடி, சீல் வைத்தது. அத்துடன், ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியரும் தமிழீழ விடுதலை முன்னணியின் (TELF) செயலாளருமான கோவை மகேசனும் தமிழீழ விடுதலை முன்னணியின் தலைவரான வைத்தியர் எஸ்.ஏ.தர்மலிங்கமும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக இராணுவ முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டார்கள். உண்மையில், யாழ்தேவி, பஸ்கள் மற்றும் அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தமைக்கும் தமிழீழ விடுதலை முன்னணி என்ற வைத்தியர் எஸ்.ஏ. தர்மலிங்கம் தலைமையிலான அமைப்புக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. கொன்று புதைப்பதற்கான அனுமதி வடக்கு-கிழக்கில், குறிப்பாக திருகோணமலையில், அப்பாவித் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் முளைவிட்டெழத் தொடங்கியிருந்த பொழுதில், அதனைத் தடுப்பதற்கு வினைதிறனான அதிரடி நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத அரசாங்கம், 1983 ஜூலை மூன்றாம் திகதி, பாரதூரமான அவசரகாலச் சட்ட ஒழுங்கு ஒன்றைப் பிரகடனம் செய்தது. 1983 ஜூலை மூன்றாம் திகதி பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச் சட்டவொழுங்கு 15A ஆனது, பாதுகாப்புப் படைகளுக்கு, அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை உடனடியாகப் புதைக்கவோ, எரிக்கவோ அனுமதி தந்தது. அதாவது, இலங்கையின் பாதுகாப்புப் படைகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டால், அவரது அடையாளத்தை அறியாமலும், மரணவிசாரணை நடத்தப்படாமலும், உடனடியாகப் பாதுகாப்புப் படைகளால் அந்தவுடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடிய அதிகாரத்தை, இந்த அவசரகாலப் பிரகடனம் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கியது. இந்தச் சட்ட ஒழுங்கு, இலங்கைப் படைகளுக்கு ஏறத்தாழக் கொல்வதற்கான அனுமதியை (License to Kill) வழங்கியதற்குச் சமனாகும். யாரையும் கொன்று புதைத்தோ, எரித்தோ விட்டுச் செல்லத்தக்க பயங்கரம் மிக்க பலம் இது. இதனால்தான் தமிழ்த் தலைமைகளும் பல்வேறு தரப்பினரும் இதனை ‘அரசாங்க பயங்கரவாதம்’ என்று விளித்தார்கள். இதுபற்றி, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கருத்தை, 1983 ஜூலை ஏழாம் திகதி, இங்கிலாந்தின் ‘காடியன் பத்திரிகை’ மேற்கொள் காட்டியிருந்தது. அதில், “ஜே.ஆர், ஆயுதங்களைப் பயன்படுத்தும் தேவையெழும்போது, அதனைப் பயன்படுத்தியதற்காக அரச படைகளை இனிச் சட்டத்தைக் கொண்டு துன்புறுத்த முடியாது என்பதை, இந்தப் புதிய சட்டம் உறுதி செய்கிறது. நூற்றுக்கணக்கான உடல்கள், பெரும் புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன” என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை 1983 ஜூலை, ஆறாம் திகதி சர்வதேச மன்னிப்புச் சபை, 1983 வருட ஆரம்பத்தில் இலங்கையில் மேற்கொண்டிருந்த கள ஆய்வு பற்றிய அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. 1983 பெப்ரவரி இறுதியிலே, அதாவது குறித்த அறிக்கை தயாரான புதிதிலேயே, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு அதை அனுப்பி வைத்து, குறித்த அறிக்கை பற்றி, கலந்துரையாட நேரமொன்றை சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டிருந்தபோதும், 1983 ஏப்ரலில், குறித்த அறிக்கை பற்றிக் கலந்துரையாட முடியாது என்று இலங்கை அரசாங்கம், சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஜூலை ஆறாம் திகதி, சர்வதேச மன்னிப்புச் சபை, தனது அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான, கடுமையான விமர்சனத்தை அந்த அறிக்கை முன்வைத்தது. சிறுபான்மையான தமிழர்களையும் எதிர்க்கட்சியினரையும் விசாரணையின்றித் தடுத்து வைக்கவும், அவர்களைச் சித்திரவதைக்குட்படுத்தவும் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டு இருந்தது. அத்துடன், அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ், நீண்டகாலத்துக்கு வெளியுலகத் தொடர்பின்றி, இராணுவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டித்திருந்ததுடன், இலங்கைப் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளால் நடைமுறையில் கையாளப்பட்ட சித்திரவதை முறைகளையும் விவரித்தது. மேலும், தமிழ்க் குடிமக்கள் அரச படைகளாலும், பெரும்பான்மை சிங்கள சமூகத்தைச் சார்ந்தவர்களாலும் தாக்குதல்களுக்கு உள்ளாவதுடன் கொலை செய்யப்படுவதாகவும் அதற்கு எதிரான கடுமையான கண்டனத்தையும் சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் முன்வைத்திருந்தது. தமிழ் அப்பாவிகள் சிலர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களையும் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த சம்பவங்களைக் கொலையென நீதிவானால் தீர்மானிக்கப்பட்டிருந்தும், மேலதிக நடவடிக்கைகள் எவையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என்பதையும் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. இத்தோடு குறித்த அறிக்கையில், நபரொருவர் கைது செய்யப்படும்போது, கைதுக்கான காரணத்தை அவருக்கு அறிவிக்க வேண்டும்; அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அவரது உறவினர்களுக்கு அறியத்தருவதுடன், அவர் சட்டத்தரணிகளை அணுக அனுமதிக்க வேண்டும்; சித்திரவதை பற்றி விசாரிக்க சுயாதீனப் பொறிமுறையொன்றை உருவாக்குதல்; பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான விசேட சான்றுகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகளுக்குப் பதிலாக, சாதாரண சான்றுக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளையே நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 12 பரிந்துரைகளை முன்வைத்தது. இந்த அறிக்கை வெளிவந்ததும், அதற்கு உடனடியாகப் பதிலளித்த இலங்கை அரசாங்கம், சகல குற்றச்சாட்டுகளையும் பொய் என நிராகரித்தது. ஆனால், சில நபர்கள், வெளியுலகத் தொடர்பின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டது. தமிழர்களைப் பற்றி யோசிக்க முடியாது தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகள் தலையெடுக்கத் தொடங்கியிருந்த இந்த வேளையில், 1983 ஜூலை 11 ஆம் திகதி லண்டன் ‘டெய்லி ரெலிகிராப்’ பத்திரிகைக்கு இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஒரு குறுஞ்செவ்வியை அளித்திருந்தார். அந்தப் பேட்டியில், அவர் சொன்ன ஒரு விடயம், அவரது இனவாத முகத்தைத் தோலுரித்துக் காட்டியது மட்டுமல்லாது, தமிழ் மக்களுக்குப் பெரும் ஆபத்துக் காத்திருக்கின்றது என்பதை உணர்த்தும் சமிக்ஞையாகவும் இருந்தது. அந்தக் குறுஞ்செவ்வியில் “யாழ்ப்பாண மக்களின் (தமிழ் மக்களின்) அபிப்பிராயத்தைப் பற்றி, இப்போது நான் கவலைப்படவில்லை; நாம் அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றியோ யோசிக்க முடியாது; வடக்கின் மீது எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு இங்குள்ள சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்”. அப்பட்டமான இனவெறி நிறைந்த, சுயலாப அரசியலின் விளைவாக, எழுந்த சொற்களே இவை; வேறென்னவாக இருக்க முடியும்? ஒரு கணம் ஆசுவாசப்படுத்தி யோசிக்க வேண்டும். பல்லினங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டின் ஜனாதிபதி, தன்னுடைய நாட்டில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சிறுபான்மை மக்கள் மீது அழுத்தம் கூடினால், தன்னுடைய பெரும்பான்மையினர் சந்தோஷப்படுவார்கள் என்று பகிரங்கமாகச் சொல்வது, எத்தகையதொரு வெளிப்படையான, பாரதூரமான இனவெறி? பின்னிருந்து நோக்கும்போது, ஆங்காங்கே தமிழ் மக்களுக்கெதிராகப் பயங்கர வன்முறைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த பொழுதில், அப்போது இடம்பெற்றுக்கொண்டிருந்த இலங்கை அரசாங்கத்தின் செய்கைகள், நடத்தைகள், அறிக்கைகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு இதைவிடப் பெரிய ஆபத்துக் காத்திருக்கிறது என்பதைச் சொல்லும் அபாய எச்சரிக்கையாகவே தென்படுகிறது. ஆனால், தமிழ் மக்கள் இதனை உணர்ந்திருந்தாலும், வெளிப்படையான இனவெறியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கத் தொடங்கிய ஓர் அரசாங்கத்துக்கு எதிராக, உடனடியாக எதைத்தான் செய்திருக்க முடியும்? இந்த நிலையில், 1983 ஜூலை ஒன்பதாம் திகதி கூடிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொதுக்குழு, அந்த ஆண்டுக்கான மாநாட்டை, ஜூலை 21 ஆம் திகதி மன்னாரில் நடத்தத் தீர்மானித்தது. தமிழ்ப் பிரதேசங்களில் பதற்றமான சூழல் ஆரம்பித்திருந்த நிலையில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இந்த முடிவை எடுத்திருந்தது. அத்தோடு, 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பையும் சர்வசன வாக்கெடுப்பொன்றினூடாக நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டித்தததையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எதிர்த்திருந்தது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவுபெறவிருந்த தினத்தில், பதவி விலகுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னர் தீர்மானித்திருந்தது. அந்த வகையில் 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நாடாளுமன்றமானது 1978 ஆம் ஆண்டு, இரண்டாம் குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்படாமல் விட்டிருந்தால், அத்தோடு நாடாளுமன்றத்தின் ஆயுள் நீட்டிக்கப்படாவிட்டிருந்தால், 1983 ஜூலை 21 ஆம் திகதி அதன் பதவிக்காலம் முடிவடையவிருந்தது (1972 ஆம் ஆண்டு யாப்பின் கீழ் நாடாளுமன்றப் பதவிக்காலம் ஆறு வருடங்கள்). ஆகவே, அந்தத் தினத்தில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வீ.என்.நவரட்ணம் அறிவித்தார். இந்தச் சூழலில் வடக்கில் இராணும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை அடக்குவதற்கு, குறிப்பாக இராணுவம் மீது தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை இலக்கு வைப்பதில் தீவிரம் காட்டியது. ஆனால், மரபு வழி யுத்தத்துக்குப் பழக்கப்பட்டிருந்த இராணுவத்துக்கு, விடுதலைப் புலிகளை அடக்குவது இலகுவாக இருக்கவில்லை. இந்த விடயத்தை, இலங்கை யுத்தம் பற்றிய தமது நூல்களில் பல்வேறு இராணுவ அதிகாரிகளும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்திய அமைதி காக்கும் படையின் அதிகாரிகள் கூட, இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் தோல்வி கண்டதன் முக்கிய காரணங்களுள் ஒன்றாக இதனையே குறிப்பிடுகிறார்கள். (அடுத்த வாரம் தொடரும்) http://www.tamilmirror.lk/13-சிறப்பு-கட்டுரைகள்/-ப-ர-ம-இனக-கலவரத-த-க-க-ன-ம-ஸ-த-ப-கள-/91-197074 Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted May 31, 2017 Author Share Posted May 31, 2017 1983: கறுப்பு ஜூலையின் தொடக்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 94) இந்தியாவின் கண்டனம் 1983 ஜூலை மாத ஆரம்பப் பகுதி; அவசரகாலச் சட்டம் நடைமுறையிலிருந்தது. எந்த நபரையும் எந்தப் பொறுப்புக் கூறலுமின்றி, விசாரணைகளுமின்றி ‘கொன்று புதைக்கும்’ அதிகாரம் இலங்கைப் படைகளுக்கு அவசரகாலச் சட்ட ஒழுங்கு 15A-யின் கீழ் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு நியாயம் சொன்ன, இராஜாங்க அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், “வடக்கிலுள்ள படைகளினதும் பொலிஸாரினதும் மனவுறுதி மிகக் குறைவாக உள்ளது. அவர்களுக்குப் பலமூட்ட இந்தச் சட்ட ஒழுங்கு அவசியம்” என்ற தொனியின் தனது நியாயத்தை முன்வைத்தார். இதனால், வடக்கில் பல தமிழ் இளைஞர்கள் ஈவிரக்கமின்றி இலங்கை இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டும், சுட்டும் கொல்லப்பட்டதாக ‘இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்’ (ஆங்கிலம்) என்ற தனது நூலில், சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார். ‘சபாரட்ணம் பழனிவேல் என்ற தமிழ் இளைஞர், இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை இராணுவ முகாமுக்குள் இழுத்தச் செல்லப்பட்டு, அங்கு சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அதன் பின்னர், அவரது உடலின் மீது இராணுவ கனரக ஊர்தியை ஏற்றி, உடல் நசுக்கப்பட்டது’ என்ற சம்பவத்தை சச்சி பொன்னம்பலம் தனது நூலில் விபரிக்கிறார். இந்தக் கொடுங்கோன்மைச் சட்ட ஒழுங்கின் படுபயங்கரத்தை இந்தச் சம்பவம் சுட்டி நிற்கிறது. இந்தச் சட்டவொழுங்கு அரசாங்க வர்த்தமானியில் வெளிவந்தவுடனேயே இந்தியா இதற்கெதிரான கண்டனத்தை முன்வைத்திருந்தது. இந்திய உயர்ஸ்தானிகரை அழைத்து, இந்தச் சட்டவொழுங்கு தொடர்பிலான நியாயங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த ஏ.ஸீ.எஸ்.ஹமீத் தெரிவித்திருந்தார். ஆனால், இதனை இந்தியா ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த ஷங்கர் பாஜ்பாய், இலங்கை அரசாங்கத்தின் இந்தத் தீவிர நடவடிக்கை பற்றிய கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பில் அவரைச் சந்தித்திருந்த இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பேனார்ட் திலகரத்ன, “இது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடா? அல்லது மத்திய அரசின் நிலைப்பாடா?” என்று கேள்வி கேட்டதுடன் “இது எங்கள் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும்” என்றும் தெரிவித்திருந்தார். இது பற்றி ஜே.ஆரும் “இது எங்கள் நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும், தேவையில்லாத, ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலைப்பாட்டில், ஜே.ஆர் தலைமையிலான இலங்கை அரசாங்கம் உறுதியாக இருந்தது. இது பற்றிய கேள்வி நாடாளுமன்றத்தில் எழும்பிய போது, அதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட், “நாங்கள் அணிசாரா நாடுகளின், ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாத அதியுன்னத கொள்கையை மதிக்கிறோம். எங்கள் சிறந்த அயலவர், இதனை மதித்து நடந்துகொள்வார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியிருந்தார். இத்தோடு, இலங்கை அரசாங்கம் இதனை விட்டுவிடவில்லை. ஜே.ஆரின் பணிப்புரையின்படி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டினால் தமது அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையிலான இந்திய அரசின் கண்டனத்துக்கு எதிரான இலங்கை அரசின் கண்டனத்தை எடுத்துரைத்ததோடு, இது இருநாட்டு உறவினைப் பாதிக்கும் என்றும் எச்சரித்திருந்தார். இதன் பின், தமது நிலைப்பாட்டை இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பேனார்ட் திலகரத்னவுக்கு தெளிவுபடுத்திய இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷங்கர் பாஜ்பாய், “கொல்லப்பட்ட உடல்களை மரணவிசாரணையின்றிப் புதைக்கும் அல்லது எரிக்கும் அதிகாரத்தை படைகளுக்கு தந்த இலங்கையின் அவசரகால சட்டவொழுங்குகள் பற்றிய தனது கவலையையே இந்தியா வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுவரும் நிலையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். ஏனெனில், இது எமது நாட்டிலும் விளைவுகளை ஏற்படுத்தலாம்” இவை, மிகக் கண்ணியமான இராஜதந்திர வார்த்தைகளில் சொல்லப்பட்டு, தெளிவுபடுத்தப்பட்டது. நிர்க்கதியான நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி குறித்த சட்டவொழுங்கு தந்த அதிகாரத்தின் கீழ், பலபேர் எந்த விசாரணையுமின்றி, ஈவிரக்கமின்றி அரச படைகளினால் கொலை செய்யப்பட்டார்கள். இந்தச் சூழலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஏதாவது செய்தாக வேண்டிய சூழலை எதிர்கொண்டது. இது அவர்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்றுவிட்ட ஒரு விடயமாகவே அனைவராலும் பார்க்கப்பட்டது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் தமது தனிவழியில் பயணித்தன. இலங்கை அரசாங்கம் அந்த ஆயுதக் குழுக்களை ‘பயங்கரவாதிகள்’ என்று அடையாளப்படுத்தி, அவர்களை முற்றாக வேட்டையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, “அபெண்டிசைட்டீஸ் நோயாளி ஒருவர் குணமாக வேண்டுமென்றால், அபெண்டிக்ஸ் முற்றாக வெட்டி நீக்கப்பட வேண்டும்” என்றார். அதாவது, பயங்கரவாதிகள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்பதே, தமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதை ஜே.ஆர் தெளிவாகக் குறிப்பிட்டார். இதற்கு, நடுவில் ஆங்காங்கே இனக்கலவரங்கள் தலைதூக்கின. தமிழ் மக்களின் உயிரும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிக் கொண்டிருந்தது. தமிழ் மக்களுக்கான அடிப்படைப் பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் கேள்விக்குறியாகின. நிர்க்கதியான நிலையில் தமிழினம் நின்று கொண்டிருந்தது. இதே நிர்க்கதியான நிலைதான் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும். “தமிழர்களின் உயிர்களைப் பற்றியோ, அவர்களது அரசியல் அபிப்பிராயம் பற்றியோ நாம் யோசிக்க முடியாது” என்று இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, இங்கிலாந்தின் “த டெலிகிராப்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பற்றியும் இவ்வாறு சொல்லியிருந்தார். “அவர்கள் பயங்கரவாதிகளின் சார்பில் பேசினார்கள். அதெல்லாம் இப்போது முடிவுக்கு வரவேண்டும். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் இருக்கும் வரை, அரசியல் விவகாரங்களில் அதன் உறுப்பினர்களோடு நாம் கலந்துரையாடுவோம். ஆனால், பயங்கரவாத விடயங்களை நாம் பார்த்துக்கொள்வோம், அவர்களுக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் மீது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கொண்டிருந்த செல்வாக்குக் குறைந்துவிட்டது என்ற அபிப்பிராயம் ஜே.ஆரினால் இதற்கு முன்பும் சில தடவைகள் மறைமுகமாக முன்வைக்கப்பட்டிருந்தது. உள்ளூராட்சித் தேர்தலை வடக்கில் ஏறத்தாழ 90 சதவீதமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவிப்புக்குச் சார்பாகப் பகிஷ்கரித்திருந்தமையானது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவே அமைந்தது. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்களாலும், இலங்கை அரசாங்கத்தாலும் பொருட்படுத்தப்படாத ஒரு நிலையை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியிருந்தது எனலாம். ஆகவே, இந்தச் சூழலில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அச்சம்மிகு சூழல் தொடர்பிலும், தமது கட்சியை முன்கொண்டு செல்வது தொடர்பிலும் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் 1983 ஜூலை ஒன்பதாம் திகதி கூடிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொதுக்குழு, தமது மாநாட்டை ஜூலை 21 ஆம் திகதி மன்னாரில் நடத்தத் தீர்மானித்தது. மாவட்ட அபிவிருத்திச் சபையின் முடிவு இதேவேளை, 1983 ஜூலை 15 ஆம் திகதி, யாழ். மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ‘பொட்டர்’ நடராஜா, தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். “எந்த அதிகாரமும் நிதியும் இல்லாத ஒரு சபையின் தலைவராக இருந்து என்ன பயன்?” என்பது ‘பொட்டர்’ நடராஜாவின் கேள்வியாக இருந்தது. இந்தக் கேள்வியில் நிறைய நியாயங்கள் இருந்தன. ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, அதிகாரப் பரவலாக்கல் வழிமுறையாக முன்வைத்தது. நல்லெண்ணத்தோடு இதனை ஜே.ஆர் அரசாங்கம் செய்திருக்குமாயின், குறித்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வினைதிறனுடன் இயங்குவதற்குரிய ஏற்பாடுகளையும் தங்குதடையின்றிச் செய்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. வெறும் காகிதங்களுக்குள் மட்டும் அடங்கிய தீர்வைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. ‘பொட்டர்’ நடராஜாவின் பதவி விலகல் என்பது, வரலாற்றினைப் பார்க்கும்போது, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான சாவுமணியாக, மாவட்ட அபிவிருந்திச் சபைகளின் முடிவை சமிக்ஞை செய்தது என்று சொன்னால் அது மிகையல்ல. மாவட்ட அபிவிருத்தி சபைகள் தொடர்பில் பெரும் நம்பிக்கையோடிருந்த சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு ‘பொட்டர்’ நடராஜாவின் பதவி விலகல் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. தொண்டமான், “இந்த பதவி விலகல் துரதிர்ஷ்டவசமானது. இது மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்” என்று தனது எண்ணத்தை வெளியிட்டிருந்தார். சீலனின் முடிவும் ஓர் இனக்கலவரத்தின் தொடக்கமும் 1983 ஜூலை 15 ஆம் திகதி, இலங்கை இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான சீலன் என்றறியப்பட்ட சார்ள்ஸ் அன்டனியை இலக்கு வைத்து, நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தது. இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், சார்ள்ஸ் அன்டனி இருந்த இடத்தை அறிந்துகொண்ட இராணுவம், அங்கு விரைந்தது. இந்தச் சம்பவத்தை, ‘இலங்கையில் புலிகள்’ (ஆங்கிலம்) என்ற தனது நூலில், எம்.ஆர்.நாராயன் சுவாமி விவரிக்கிறார். ‘இராணுவ வருகையைக் கண்டுகொண்ட சார்ள்ஸ் அன்டனியும், உடனிருந்த இரு சகாக்களும் துவிச்சக்கர வண்டியில் தப்பிச் செல்ல முயலுகையில், இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியது. துவிச்சக்கர வண்டியில் செல்லமுடியாத நிலையில், வயல் வெளியினூடாக ஓடித்தப்பிக்க முயல்கின்றனர். ஏற்கெனவே, சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலின்போது, முழங்காலில் காயமடைந்திருந்த சார்ள்ஸ் அன்டனியினால் தொடர்ந்து ஓட முடியாத நிலையில், தனது சாகாக்களிடம், தன்னால் இந்த நிலையில், கடும் வலியோடு தொடர்ந்து ஓடுவது சாத்தியமில்லை என்றும், தனக்கு இராணுவத்திடம் உயிரோடு அகப்பட விருப்பமில்லை என்றும், தன்னைச் சுட்டுக் கொன்று விட்டு, தனது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தப்பிக்குமாறு சார்ள்ஸ் அன்டனி வேண்டியதாகவும் அதன்படி, அவரது சகாக்கள், அவரது விருப்பப்படி அவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பித்தனர்’ இவ்வாறு, தனது நூலில் எம்.ஆர்.நாராயன் சுவாமி பதிவு செய்கிறார். உள்ளூராட்சித் தேர்தலின் போது, கந்தர்மடத் தாக்குதல் உட்பட விடுதலைப் புலிகளின் பல தாக்குதல்களை முன்னின்று நடத்திய சார்ள்ஸ் அன்டனியின் முடிவானது, இலங்கை இராணுவத்துக்குப் பெரும் மகிழ்ச்சியையும், விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் பெரும் அதிர்ச்சியையும் பேரிழப்பையும் தந்திருந்தது. இந்தச் சம்பவத்தை இராணுவத்தின் பெரும் வெற்றியாக ஊடகங்கள் பறைசாற்றின. சீலன் என்றறியப்பட்ட சார்ள்ஸ் அன்டனி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் மட்டுமல்லாது, அவ்வமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மிக நெருங்கிய நண்பனும் கூட. இந்த இழப்புக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து நிச்சயம் பதிலடி வரும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தப் பதிலடி நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பும் தயாரானது. அந்தப் பதிலடி நடவடிக்கை நேரடியாக பிரபாகரனாலேயே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதாக நாராயன் சுவாமி குறிப்பிடுகிறார். இந்தப் பதிலடி நடவடிக்கையின் விளைவே நாடுதழுவிய 1983 ‘கறுப்பு ஜூலை’ என்றறியப்படும் தமிழ் மக்களுக்கெதிரான மாபெரும் இனக்கலவரத்துக்கான “அறுநிலை” (breaking point) என்று பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தப் பதிலடித்தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், இலங்கை அரசியல் பரப்பில் நிறைய விடயங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. (அடுத்த வாரம் தொடரும்) http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/1983--கறுப்பு-ஜூலையின்-தொடக்கம்/91-197494 Quote Link to post Share on other sites
நவீனன் 1,007 Posted June 6, 2017 Author Share Posted June 6, 2017 சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கான ஜே.ஆரின் அழைப்பும் தமிழ்த் தலைமையின் மறுப்பும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 95) யார் காரணம்? 1983 மே மாத இறுதி முதலே, தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கே நடைபெறத் தொடங்கியிருந்தன. 1983 ஜூலை மாதமளவில் அது மிகுந்த அளவில் அதிகரித்திருந்தது. இதேவேளை, வடக்கு-கிழக்கில் (குறிப்பாக வடக்கில்) தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும் தாக்குதல்களும் கணிசமாகப் பெருகியிருந்தன. பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம் என்ற போர்வையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் கொடுங்கோன்மைச் சட்டங்களை நிறைவேற்றி, அதனூடாக அரச படைகளுக்கு வரம்பிலாத அதிகார பலத்தை வழங்கியிருந்தது. பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது என்னமோ அப்பாவித் தமிழ் மக்கள்தான். தமிழ் மக்களின் துயர்நிலை கண்டு, அதற்கு ஏதும் செய்ய இயலாத நிலையில், தமிழ்த் தலைமைகள் நின்று கொண்டிருந்தன என்பதுதான் உண்மை. தமிழ் மக்கள் ஆயுதவழிசென்ற தமிழ் இளைஞர்களை ஆதரித்தார்கள் என்று குற்றம் சுமத்துபவர்கள், அல்லது தமிழ் மக்கள் ஏன் ஆயுதவழிப் போராட்டத்தை ஆதரித்தார்கள் என்று கேள்வியெழுப்புபவர்கள் முதலில் இலங்கை இனப்பிரச்சினையின் வரலாற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரத்துக்குப் பின்னர், இலங்கையில் இனப்பிரச்சினை பூதாகரமாகக் கிளம்பத் தொடங்கியது, 1956 ஆம் ஆண்டு, ‘தனிச்சிங்களச் சட்டம்’ என்ற அடக்குமுறைச் சட்டத்தோடு என்று கூறலாம். அன்றிலிருந்து தமிழ்த் தலைமைகள் அஹிம்சை வழியில், ஜனநாயக வழியில் இனப்பிரச்சினைக்குக் குறைந்தபட்சத் தீர்வையேனும் பெற்றுக்கொள்ளவே முயற்சித்துக் கொண்டிருந்தன. அத்தனை முயற்சிகளும் 20 வருடங்களாக அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களினால் உதாசீனப்படுத்தப்பட்டு, ஏமாற்றப்பட்டு, தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களும் நிர்க்கதியான நிலையை அடைந்தபோதுதான், 1976 இல் ‘தனிநாடு என்பதே இன
Recommended Posts